BSNL broadband தொடர்பை துண்டிப்பதற்காக விசாரித்தால் தொலைபேசியை எடுத்துச் சென்று BSNL அலுவலகத்தில் கொடுத்து ஒரு closure விண்ணப்பம் கொடுத்தால் போதும் என்றார்கள். ஆக தொலைபேசியை சுமந்து கொண்டு போனேன்.
அங்கு சொன்னார்கள்: “போனை மட்டுமே நாங்க வாங்குவோம். விண்ணப்பம் நீங்க தரமணி BSNLக்கு போய்த் தான் கொடுக்கணும்”. சரி தான் என்று கிண்டியில் இருந்து தரமணிக்கு போனேன். அங்கு சொன்னார்கள் முதலில் பில் தொகையை கட்டி விடுங்கள் என்று. சரி கட்டுகிறேன் என்றால் பில் இன்னும் வரவில்லை. இரண்டு நாள் கழித்து பில் வந்ததும் வந்து கட்டி விட்டு போனை கிண்டி கிளைக்கு கொண்டு கொடுங்க என்று. இது கூட பரவாயில்லை, அங்கு கவுண்டரில் இருக்கும் மாமி “இப்பிடி போனை தூக்கீட்டு எல்லாம் அலையாதீங்க“ என்று நக்கல் வேறு பண்ணுகிறார். இப்பிடித் தான் சென்னைப் பல்கலைக்கழகத்தில் PhDவிண்ணப்பிப்பது சம்மந்தமாய் விசாரித்தால் கீழ்த்தளத்தில் ஒரு இடத்துக்கு அனுப்பினார்கள். அங்கு சென்றால் இங்கில்லை மேலே D32 என்று ஏதோ ஒரு அறைக்கு போக சொன்னார்கள். அதை விசாரித்து நெருங்கும் முன் ஒரு பரோபகாரி வந்து PhD தானே இப்பிடியே திரும்பி கீழே ஸ்டெப்ஸ் தெரியும் இறங்கிப் போங்க என்று நன்றாக தன்னம்பிக்கை தெரிய சொன்னார். சரி என்று ஒரு தூசு மண்டிய அவ்வழியே ஏதோ கல்கி நாவல் ஒற்றன் போல் இறங்கி சென்றால் இதோ முதலில் நான் போன அதே இடம் வருகிறது. “உள்ளே போய் என்ன சார் யார்கிட்ட கேட்டாலும் உங்க கிட்டயே அனுப்பிறாங்க. ஆனால் நீங்க PhD இங்க இல்லேண்ணு அடம் பிடிக்கிறீங்க“ என்று அழாத குறையாக கேட்டேன். அவர் “இங்க நாங்க அட்மிஷனுக்கு பிறகான விசயங்களை தான் பார்ப்போம். ரெஜிஸ்டிரேஷன் வரை முதல் மாடிக்கு தான் போகணும். உங்களை மாதிரி நிறைய பேரை இப்படி தப்பா வழி சொல்லி இங்கே அனுப்பீடறானுங்க. என்ன செய்ய?”. பிறகு மீண்டும் மலையேறி சரியான அலுவலகத்தை தேடிக் கண்டுபிடித்தால் அதன் வாயிலில் PhD சம்மந்தப்பட்ட எந்த அறிவிப்போ சிறு குறிப்போ கூட இல்லை. பல்கலைக்கழக உள்வட்டங்களில் மட்டும் தான் இந்த அலுவலக மார்க்கம் ரகசிய தகவலாக உலவுகிறது போலும். வெளியே யாரிடம் கேட்டாலும் கீழ்த்தளத்துக்கு அனுப்பி விடுகிறார்கள்.
இப்பிடி அரசாங்க விசயங்கள் எதுவென்றாலும் வால் ஓரிடத்திலும் தலை ஓரிடத்திலும் இருக்கிறது. அறிவிப்புப் பலகைகள் வால் இடத்தில் இருப்பது தான் விவகாரமே!
No comments :
Post a Comment