Tuesday, 21 August 2012
மூன்றாவது நபர்
நான் உன்னிடம்
ஒரு எதிரியாக
முழுமையாக ஒப்புக் கொண்ட போது
உன்னிடம் பேச வார்த்தைகளே
இருக்கவில்லை
உன்னிடம் காட்ட
உணர்ச்சிகளே இல்லை
எதிரியை இவ்வளவு
நெருக்கமாய் பார்ப்பதைப் போல்
திக்குமுக்காட செய்வது
வேறொன்று இல்லை என்கிறாய்
புணர்ச்சியின் போது
சட்டென்று ஒளியின் பிம்பம் விழுவது போல்
நீ என்னை அவ்வளவு
சந்தேகமாய் பார்க்கிறாய்.
என்னிடம் பேச நினைத்தது அத்தனையும்
வேறொருவருக்கானது
என்று உணர்கிறாய்
ஒரு குழந்தையின் பழுதான பொம்மைகளைப் போல
உனது ஆயுதங்களை மறைக்கிறாய்
உனது கூர்நகங்கள் நெகிழ்ந்து
என் மயிர்க்கால்களை மிருதுவாக ஸ்பரிசிக்க
நான்
ஒரு பனிப்பிரதேசத்தை போல விரிசல் காண்கிறேன்.
பிறகு
என் கையை பிடித்துக் கொண்டு
விறுவிறுவென்று
என்னை அழைத்துச் சென்று நிறுத்துகிறாய்
துலங்கும் ஒரு கண்ணாடி முன்பு
நான் சொன்னேன்
“இந்த கண்ணாடி ஒரு குறியீடு
இந்த கண்ணாடி காட்டுவது
என்னை அல்ல
உனது பிம்பத்தை தான்”
நீ சொன்னாய்
”நான் அதைப் பார்க்க
உன்னை அழைத்து வரவில்லை”
அப்போது சட்டென்று நீ
என் கையை விடுத்து
விலகிச் செல்கிறாய்
காலதாமதித்த ஒரு பனித்திரையைப் போல.
உற்றுப் பார்க்க
அக்கண்ணாடியில் மூவர் இருப்பது
புலப்படுகிறது
நீ என்னை தனியே விட்டுப் போன
பின் இத்தனைக் காலமும்
நான் இங்கெயே தான்
நிற்கிறேன்
அந்த மூன்றாவது நபரின்
அடையாளம் தேடியபடி.
ஒருநாள் எதேச்சையாய்
நீ
கடந்து சென்ற போது கேட்டேன்
மூன்றாவது நபர் யாரென்று
கண்ணாடியை பார்ப்பவன் முதலாவது ஆள் என்றாய்
கண்ணாடியில் பார்க்கப்படுபவன் இரண்டாவது ஆள் என்றாய்
கண்ணாடியை குறியீடாய் பார்ப்பவன் மூன்றாவது ஆள்
ஒரு எதிரியை
இவ்வளவு பக்கத்தில் வந்து
அறிந்து விட்ட
உன்னை
மூன்றாவது நபரைக் கொண்டல்லாவது
வேறு எப்படி கொல்வது என்றாய்.
Share This
Subscribe to:
Post Comments
(
Atom
)
தேசாந்திரி தொடரின் ஆரம்பத்தில் குட்டி குட்டியாக வந்த கவிதைகளை படித்தேன். நன்றாகவும் எளிமையாகவும் இருந்தன. மற்றபடி பெரிய கவிதைகளை நான் படிப்பதில்லை. கவிதை எழுதுபவர்கள் லூசு என எனக்கு ஒரு எண்ணம். அவர்களைப் பார்த்தால் எனக்கு பயம். அலர்ஜி. உங்களைச் சொல்லவில்லை.
ReplyDeleteநான் உன்னிடம் ஒரு எதிரியாக முழுமையாக ஒப்புக் கொண்ட போது உன்னிடம் பேச வார்த்தைகளே இருக்கவில்லை
ReplyDeleteஉறவுகளில் எப்போதுமே 'ஒப்பு கொள்ளுதலும்' 'பணிதலும்'இருந்தால் ஒழிய அந்த உறவு தடங்கல் இன்றி நீடிப்பதற்கான சாத்தியங்கள் குறைவு.ஆனாலும் வெளிப்படையாக/உண்மையைக் காட்டுதல் ஒரு ரிஸ்க்கான விஷயம் தான். உயிர் பிழைத்தவன் மீணடும் ஒரு சாகசத்தில் மாட்டி கொள்ளவது போல தான்.
நன்றி கோவை மு சரளா
ReplyDeleteஆம் சாய்ராம்!
ReplyDelete