Tuesday, 14 August 2012
ஒரு நீண்ட நகைச்சுவைப் படம் முடிவுக்கு வருகிறது
கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்தின் தலைமையிலான தேர்வுக்குழுவின் பணிக்காலம் ஒரு முடிவுக்கு வருகிறது. தமது இறுதித் தேர்வான நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் மற்றும் T20 ஆட்டங்கள் மற்றும் T20 உலகக்கோப்பைக்கான அணிகளிலும் சில அதர்க்கமான மற்றும் விளக்கவே முடியாத தேர்வுகளை செய்து விட்டு அவர் விடைபெறும் போது நமக்கு ஒரு நீண்ட நகைச்சுவை படத்தை பார்த்த நிறைவு ஏற்படுவதை தவிர்க்க முடியாது. இப்படங்களிலும் இது போல் நிறைவில் ஒரு நகைச்சுவை இருக்கும்; எல்லாரும் சிரிப்பது போல் காட்சியை உறைய வைத்து முடிப்பார்கள்.
இம்முறை ஸ்ரீகாந்த் பியுஷ் சாவ்லாவை திடீரென்று டெஸ்ட் அணியில் தேர்வு செய்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினது போதாது என்று வாழ்க்கையில் எல்லாவற்றிலும் ஏதாவது தர்க்கம் இருக்கும் என்று நம்புபவர்களை வயிற்றை புரட்ட செய்துள்ளார். இம்முறையும் அவர் பத்திரிகையாளர்களிடம் விரிவாக உரையாடவில்லை. தேர்வு பற்றி விளக்க நேரமெல்லாம் இல்லை என்று முனகி விட்டு இடத்தை காலி செய்திருக்கிறார். இதற்கு முன் ஒரு தடவை தனது தேர்வுக்குழப்படி பற்றி கேள்வி கேட்ட நிருபர் ஒருவரிடம் “என்ன பாஸ் என்னை எரிச்சல்படுத்துகிறார்களா? என்னாலும் திருப்பி இது போல் பேச முடியும் என்ன!” என்று கத்த இந்த அதர்க்கமான பதில் புரியாமல் அந்த நிருபர் தலை கிறுகிறுத்திருக்கிறார். பொதுவாக ஸ்ரீகாந்த் பேசும் போது அவரது மூளை வேலை செய்வதை நிறுத்தி விடும். மூளை வேலை செய்யும் போது அவர் பேச மாட்டார். ஆனால் சிக்கல் அவர் பொதுவாக பேசுவதை நிறுத்தவே மாட்டார் என்பது.
பியுஷ் சாவ்லாவுக்கு வருவோம். அவர் கடந்த சில ஆண்டுகளாக மோசமான ஆட்டநிலையில் இருக்கிறார். அவருக்கு கால்சுழல் பந்து போடவே வராது. கூக்ளி மட்டும் தான். கடந்த ஐபிஎல்லிலும் அவர் சரியாக ஆடவில்லை. ஒரு டெஸ்ட் மேட்ச் முன்னர் இங்கிலந்துக்கு எதிராக ஆடினார். அதில் அவர் பந்து வீசிய போது அவரது ஒரு பந்தைக் கூட பீட்டர்சன் ஆப் பக்கம் அடிக்கவில்லை. ஒரு கால்சுழல் பந்துவீச்சாளருக்கு இதை விட அவமானம் வேறில்லை. ஆனால் தனது குறைவான திறமையை நன்றாக பிரயோகிக்க தெரிந்தவர் தான் சாவ்லா. அவரை போன உலகக்கோப்பையில் இது போல் ஸ்ரீகாந்த் அதிரடியாக தேர்ந்த போது எல்லாரும் விக்கித்து போனார்கள். சாவ்லாவின் பிரச்சனை அவரால் நெருக்கடியை கையாளத் தெரியவில்லை என்பது. சாவ்லாவை போன்றவர்கள் தாம் மே.தீவுகளின் பிஷுவும், தெ.ஆவின் தாஹிரும். ஆனாலும் இருவருக்கும் ஒரு வேட்டை மிருகத்தின் ஆளுமை உள்ளது; சாவ்லா முணுக்கென்றால் பதுங்குகிற ஒரு முயல். அவரால் மக்கள் எதிர்பார்ப்பின் பெரும் வெளிச்சத்தின் முன் உறையாமல் இருக்க முடியாது. எல்லா முயல்களும் எக்காலத்திலும் அப்படித்தான்.
சாவ்லா போன்ற ஒருவர் மீது தேர்வாளரோ அணித்தலைவரோ நம்பிக்கை வைப்பதில் தவறில்லை. ஆனால் எங்கிருந்தோ திடீரென்று அவரை கொண்டு வருவது தான் தவறு. ஒரு உலகக்கோப்பை தயாராவதற்கு நமக்கு நான்கு வருடங்கள் உள்ளன. இக்காலத்தில் நம் இரு வருடங்களாவது ஒரு வீரருக்கு வாய்ப்பளித்து தயாரிக்க முடியும். ஆனால் போன உலகக்கோப்பைக்கு முன் ஒரே ஒரு தொடரில் தான் சாவ்லா தேர்ந்தெடுக்கப்பட்டு உலகக் கோப்பைக்காக தயாராக்கப் பட்டார். இப்போது ஸ்ரீகாந்த் அவரை தன் மாந்திரிக தொப்பிக்குள் இருந்து சட்டென்று மீண்டு இழுத்தெடுத்து ஒரு டெஸ்ட் போட்டிக்கு அனுப்புகிறார். இதுவரை இரண்டாம் நிலை சுழலராக உருவாக்கப்பட்ட அமித் மிஷ்ரா, ராகுல் ஷர்மாவின் நிலை தான் என்ன? இவர்கள் இருவரையும் விட சாவ்லா எவ்விதத்தில் மேலானவர்?
ஸ்ரீகாந்தின் தேர்வுகள் எப்போதும் இப்படியாகத் தான் இருந்திருக்கின்றன. அவர் உள்ளுணர்வின் அடிப்படையில் ஆட்களை தேர்ந்தெடுக்கும் சூதாட்ட மனநிலை கொண்டவர். 2011 உலகக்கோப்பையின் போது இந்திய அணியின் கணிசமானவர்கள் பாதி ஆரோக்கியத்துடன் ஆட்டத்தகுதியுடன் தான் இருந்தனர். இது குறித்து ஒரு பரவலான கவலை அப்போது இருந்தது நினைவிருக்கலாம். பின்னர் தோனியே சொன்னது போல் ஒரு துருபிடித்த பழைய காரைக் கொண்டு ஒரு வழியாக கோப்பையை வென்று சாதனை செய்தோம். அதே சூதாட்ட அணுகுமுறை அதற்கு அடுத்து வந்த இங்கிலாந்து தொடரில் கைகொடுக்கவில்லை. இந்தியாவின் இரண்டு முக்கிய பந்து வீச்சாளர்களான ஹர்பஜனும், சஹீர்கானும் காயம் காரணமாக பாதி தொடரில் விலக இந்தியா பெரும் வீழ்ச்சியை சந்தித்தது. தோல்வியை விட இவ்வளவு மோசமான தயாரிப்புடன், உடல்தகுதி இல்லாத வீரர்களை ஒரு பயணத்துக்கு அனுப்பும் அணுகுமுறை கடுமையாக விமர்சிக்கப்பட்டது. ஆனால் ஸ்ரீகாந்த அதெற்கெல்லாம் அசந்து விடவில்லை. எந்தவித ஆட்டத்தயாரிப்பும் இன்றி இந்தியாவுக்கு ஆடும் கனவுகளை எல்லாம் இழந்து ஒரு புனிதப் பயணம் மேற்கொண்டிருந்த ஆர்.பி சிங்கை பாதியில் அழைத்து இங்கிலாந்துக்கு அனுப்பி வைத்தார். தொப்பையும் ஊளைச்சதையுமாக மூச்சு வாங்கியபடி 120 கி.மீ வேகத்தில் அவர் இங்கிலாந்தில் பந்து வீசுவது பார்க்க வேடிக்கையாகவும் வேதனையாகவும் இருந்தது. தேர்வின் போது ஸ்ரீகாந்த் ஆர்.பி சிங்கின் அப்போதைய ஆட்டநிலையையோ தயாரிப்பையோ பற்றி அக்கறை கொள்ளவில்லை. இதற்கு முன்பான இங்கிலாந்து தொடரில் (பல ஆண்டுகளுக்கு முன்பு) ஆர்.பி சிங் நன்றாக பந்து வீசியிருக்கிறாராம். உண்மையில் இங்கிலாந்தில் நமது சிறந்த பந்து வீச்சாளர் கபில் தேவ் தான். அவர் இப்போதும் கூட ஒன்றும் மோசமான வீச்சாளர் அல்ல.
இன்னும் கொஞ்சம் பின்னால் போனோம் என்றால் இந்தியாவில் தெ.ஆ அணி சுற்றுப்பயணம் செய்த போது முதல் டெஸ்டில் உடற்தகுதி இல்லாத ல்க்ஷ்மணை தேர்வு செய்து, ஒரு மட்டையாளன் குறைவாகவும் ஒரு பந்துவீச்சாளர் அதிகமாகவும் ஒரு சமநிலை அற்ற அணியை சீக்கா தேர்வு செய்ய கடைசி நேரத்தில் லக்ஷ்மண் காயமுற அப்போது அருகில் இருந்த ரோஹித் ஷர்மாவை அவரசமாய் அவருக்கு பதில் அனுப்ப அவரும் ஆட்டம் அன்று காலை கால்பந்தாட்டம் ஆடும் போது காயமுற இந்திய அணி ஒரு மட்டையாளன் குறைகிறது என்று சாஹாவை அணியில் எடுத்து இரு விக்கெட் கீப்பர்களுடன் ஆடியது நினைவு வரும். இப்படியான ஒரு குழப்படி உலகில் வேறெந்த அணிக்கும் நிகழ்ந்ததில்லை. இப்படியே நாம் பின்னால் சென்று கொண்டிருந்தால் ஸ்ரீகாந்த் எத்தனையோ தகிடுதித்தங்களை ஒரு வழமையாகவே செய்து கொண்டு வந்துள்ளது தெரியும். தமிழ்சினிமாவில் பிரேக் இல்லை என்று தெரிந்தும் அதை ஆவேசமாக மீண்டும் மீண்டும் மிதித்தபடி கதாநாயகிகள் காரை ஓட்டுவது போல் ஸ்ரீகாந்தின் பயணம் மிக சாகசமானதாகவும் பொழுதுபோக்கு மிக்கதாகவும் அமைந்துள்ளது புரியும். என்ன யாரும் காப்பாற்ற வரப் போவதில்லை என்று அவருக்கு தெரியும். சீக்காவின் கார் மோதினால் அடுத்தவர்களுக்கு தான் ஆபத்து என்பதால் தன்னை யாரும் காப்பாற்ற வேண்டியதில்லை என்றும் அவருக்கு தெரியும்.
திரும்பத் திரும்ப அபத்தங்களை செய்து செய்து இப்போதெல்லாம் ஸ்ரீகாந்தின் தேர்வுகள் ஒரு விமர்சனத்தை கடந்த நிலையை அடைந்து விட்டது. மீடியா அவரது தேர்வுகளை வெறுமனே அறிவித்து விட்டு நின்று கொள்கிறது. யாராவது சூடேறி விமர்சிக்கக் கிளம்பினால் அவர் ஸ்ரீகாந்தைப் போன்றே வேடிக்கையாக தோன்ற துவங்கி விடுகிறார். என்னதான் ஸ்ரீகாந்த ஒன்றிரண்டு அசட்டுத்தனங்கள் செய்தாலும் இந்திய அணி கடந்த சில வருடங்களாய் நிலைத்த ஒன்றாக இருப்பதால் நன்றாக ஆடி விடுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளதால் பார்வையாளர்களும் ஸ்ரீகாந்தை தவிர்த்து கிரிக்கெட்டை பார்க்க பழகி விட்டார்கள். சரி போகட்டும் ஸ்ரீகாந்தின் சாதனைகள் என்று, சீரியசான சாதனைகள் என்று, எவற்றை சொல்லலாம்?
முன்பு இந்திய தேர்வாளர்களுக்கு அணித்தலைவருக்கு தொடர்ந்து ஒரு அதிகாரப் போட்டி இருந்தவாறு இருக்கும். தேர்வாளர்கள் எப்படியெல்லாம் அணித்தலைவரை வெறுப்பேற்றலாம் என்று யோசித்து யோசித்து வேலை செய்வார்கள். உதாரணமாக சச்சினின் தலைமைப் பொறுப்பு இவ்வளவு தலைவலியாய் அமைந்ததற்கும் அவர் ஒருகட்டத்தில் வேண்டாவெறுப்பாக தலைவராக இயங்கி பின் ராஜினாமா செய்ததற்கும் அவர் காலத்து தேர்வாளர்களின் அதிகார மமதை கூடிய நடத்தை தான் என்கிறார்கள். சச்சினின் தலைமையிலான மே.இ தீவு பயணத்தின் போது ஸ்ரீநாத் காயப்பட்டார். இந்திய அணித்தலைமை ஒரு ஆப்சுழலரை அனுப்பும்படி தொலைபேசியில் தேர்வாளர்களிடம் வேண்டினார்கள். சச்சின் ஹைதராபாதை சேர்ந்த கன்வல்ஜித் சிங்கை கேட்டார். கன்வல்ஜித் மிகத் திறமையான சுழலர். அனுபவஸ்தர். பந்தை நன்றாக சுழற்றுபவர், நல்ல பவுன்ஸ் பெறுபவர். ஆனால் அவருக்கு பதில் நோயல் டேவிட் என்பவை தேர்வாளர்கள் அனுப்பினார்கள். நோயல் டேவின் நியுசிலாந்து அணியின் ஆல்ரவுண்டர்களைப் போன்றவர். அவர் பந்து வீச்சு, மட்டையாட்டம், களத்தடுப்பு என எதையும் செய்வார், என்ன எதையும் உருப்படியாக செய்ய மாட்டார். அவரை வைத்து என்ன பண்ணுவது என்று சச்சினும் அப்போதைய பயிற்சியாளரும் குழம்பிப் போனார்கள். என்னவானாலும் சச்சின் கேட்டதை நாம் கொடுக்கக் கூடாது என்பதே தேர்வாளர்களின் நிலைப்பாடாக இருந்தது. இதைப் போன்றே அசாரும் மோங்கியாவும் வேண்டுமென்றே மோசமாக ஆடுகிறார்கள் (அதாவது சூதாட்டத்தில் ஈடுபடுகிறார்கள்) என்ற சந்தேகம் சச்சினுக்கு இருந்தது. அதனால் அவர்களை நீக்க வேண்டும் என்று அவர் வற்புறுத்தினார். அக்காலத்தில் அசார் படுமோசமான் ஆட்டநிலையில் இருந்ததால் ஒரே ஒரு தொடருக்கு மட்டும் அவரை நீக்கி விட்டு உடனே திரும்ப கொண்டு வந்தார்கள். அணிக்குள் சச்சினுக்கு நிகரான ஒரு அதிகார வட்டத்தை நிலைக்க வைத்து அவருக்கு நெருக்கடி அளிப்பதே தேர்வாளர்களின் உத்தேசம். சச்சின் ராஜினாமா செய்தார். பின்னர் ராஜ்சிங் துங்கர்பூர் வற்புறுத்தி அவரை மீண்டும் தலைவராக்கினார். ஒரே பேரம் தான். அசார் மீண்டும் தேர்வாகக் கூடாது. அந்த நிபந்தனை பின்னர் மீறப்பட்டதும் சச்சின் உடனே அணியில் இருந்து மீண்டும் ராஜினாமா செய்தார்.
இந்த அவலநிலைமை தோனிக்கு இல்லை. அவர் ஒரு வெற்றிகரமான தலைவர் என்பதும் அவருக்கு உதவுகிறது தான். இருந்தும் தோனியுடன் முடிந்தவரை ஒரு இணக்கமான உறவை இந்த தேர்வுக்குழுவினர் மேற்கொண்டனர் என்பது பாராட்டத்தக்கது. ரவீந்திர ஜடேஜா, ரெய்னா போன்றோரின் தொடர்ந்த தேர்வுகள் தோனியின் விருப்பத்தின் படி நடந்தன என்பது கண்கூடு. சில வீரர்கள் அணித்தலைவரின் விருப்பம் மற்றும் நம்பிக்கையின் படி அமைய வேண்டும் என்பது அவசியம். எந்த அணியும் ஒரு தலைவரின் எதிர்பார்ப்புகள் மற்றும் தரிசனத்தின் படி தான் உருவாகின்றது. அப்போது சில வீரர்களின் அருகாமை தலைவரின் தன்னம்பிக்கைக்கும் அணிக்குள் அவரது அதிகார நிலையை தக்க வைப்பதற்கும் உதவும். இவ்விசயத்தை சீக்கா நன்கு உணர்ந்து கொண்டுள்ளார். ஆஸ்திரேலிய பயணத்தின் போது விரேந்திர சேவாக் கலகம் செய்ததால் அவர் பின்னர் ஆசியக் கோப்பையில் நீக்கப் பட்டார். சேவாக் போன்ற ஒரு வீரரை நீக்குவது எவ்வளவு உறுதியான வலுவான முடிவு என்று யோசியுங்கள். இக்கட்டத்தில் தேர்வாளர்கள் தோனியை ஆதரித்தது ஒரு முக்கியமான முடிவு. இதே உத்தேசத்தில் தான் சேவாக்கின் ஆதரவாளராக சில கட்டங்களில் மீடியாவில் தோனியை விமர்சித்து பேசின காம்பிரை உதவித்தலைவர் ஆக்காமல் அப்பொறுப்பை கோலிக்கு கொடுத்தார்கள். இரண்டு முடிவுகளும் நிச்சயம் நல்ல விளைவுகளை தந்துள்ளன. தோனிக்கும் சீக்காவுக்குமான இணக்கத்துக்கு இருவரும் CSKகாரர்கள் என்ற காரணமும் உதவியிருக்கும் தான்.
இன்று இந்திய அணியில் உள்ள முக்கியமான இளைய வீரர்கள் இதற்கு முன்னர் தேர்வாளர் தலைவராக இருந்த வெங்சார்க்கரால் கவனிக்கப்பட்டு அணிக்கு கொண்டு வரப்பட்டவர்கள். பிறர் ஐபிஎல்லில் தொடர்ந்து ஆகர்சித்து அந்த அழுத்தத்தினால் அணிக்குள் வந்தவர்கள். ஸ்ரீகாந்தாக யாரையும் புதிதாக கண்டுபிடித்து அணிக்கு கொண்டு வரவில்லை. அப்படி அவர் நம்பிக்கை வைத்த புதியவர்களான அபினவ் முகுந்த், உனக்தத் போன்றவர்கள் சோபிக்கவில்லை. ஆனால் ஸ்ரீகாந்த ஒரு நிலைத்த அணியை உருவாக்கும் விசயத்தில் கணிசமான சாமர்த்தியத்தை காட்டியுள்ளார். குறிப்பிட்ட நம்பிக்கையூட்டும் வீரர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பளிக்கும் அவரது விடாப்பிடியான தேர்வு முறை பரவலாக கண்டிக்கப்பட்டாலும் அது பெரிதும் பயனளித்து உள்ளது என்றே கூற வேண்டும். குறிப்பாக அவர் ரெய்னா, கோலி ஆகியோரில் நம்பிக்கை வைத்து தொடர்ந்து வாய்ப்பளித்தது, யுவ்ராஜ் சிங்கை 2011 உலகக்கோப்பையின் முக்கிய துருப்புச்சீட்டாக நம்பி தேர்வு செய்தது ஆகியன் பாராட்டத்தக்கவை.
ஸ்ரீகாந்த் தனது தேர்வுக்காலத்தை துவங்கி முடிக்கும் போது பெருமளவு லாபத்தை ஈட்டவோ நட்டத்தை உருவாக்கவோ இல்லை என சொல்லலாம். ஆவேசமாக சூதாடும் ஒருவனைப் போல் அவர் தன் கையிருப்பை சிலவேளை இழந்தும் சிலவேளை மீட்டும் உள்ளார். இறுதியில் பூஜ்யமே எஞ்சியதே என்றாலும் ஆரம்பத்திலும் அதுவே இருந்தது என்பதால் நாம் அவரை மன்னித்து விடலாம் தானே. 1983க்கு பிறகு ஒரு உலககோப்பையை வென்ற, டெஸ்ட் மற்றும் ஒருநாள் தரவரிசையில் முதலாவது இடத்துக்கு இந்திய அணியை கொண்டு வந்த பெருமைகளும் தன்னை சாரும் தானே என அவர் கோரினாலும் நாம் கொஞ்ச பெருந்தன்மையுடன் அதை ஏற்றுக் கொள்ளத் தான் வேண்டும். அவர் தேர்வாளராக இருந்தும் இதையெல்லாம் நடக்க விட்டிருக்கிறார் இல்லையா!
Share This
Subscribe to:
Post Comments
(
Atom
)
நல்லதொரு அலசல்...
ReplyDeleteவிளக்கம் அருமை...
தொடர வாழ்த்துக்கள்... நன்றி...
Sir,
ReplyDeleteஉங்களின் நெடுநாள் வாசகன் நான். ஆனால் இந்த பதிவின் மூலமே கமென்ட் இட வந்துள்ளேன். அதற்க்கு ஒரு காரணமும் இருக்கிறது.
உங்களின் வழக்கமான பதிவு போலில்லாமல் எனக்கென்னமோ ஒரு நீதிபதி விவாதங்களை கேட்கும்முன்னரே தீர்ப்பை எழுதி விட்டு அதன் பின்னர் விசாரிப்பதைப்போல இந்த பதிவு தெரிகிறது.
ஸ்ரீகாந்தை கிண்டலடிக்க / அவமானப்படுத்த சில குறிப்பிட்ட விஷயங்களை மட்டுமே எடுத்துக்கொண்டு பெரும்பாலான மற்ற விஷயங்களை (அறியாமையில்?) விட்டு விட்டு எழுதப்பட்டு இருக்கிறது இந்த பதிவு.
ஒரு சாம்பிளுக்கு மட்டும் இரண்டு விஷயங்களை இங்கே பொதுவில் சொல்கிறேன்:
//நோயல் டேவிட் என்பவை தேர்வாளர்கள் அனுப்பினார்கள். நோயல் டேவின் நியுசிலாந்து அணியின் ஆல்ரவுண்டர்களைப் போன்றவர். அவர் பந்து வீச்சு, மட்டையாட்டம், களத்தடுப்பு என எதையும் செய்வார், என்ன எதையும் உருப்படியாக செய்ய மாட்டார். அவரை வைத்து என்ன பண்ணுவது என்று சச்சினும் அப்போதைய பயிற்சியாளரும் குழம்பிப் போனார்கள். என்னவானாலும் சச்சின் கேட்டதை நாம் கொடுக்கக் கூடாது என்பதே தேர்வாளர்களின் நிலைப்பாடாக இருந்தது//
இவ்வளவு எழுதிய நீங்கள் அடுத்து என்ன நடந்தது என்பதையும் எழுத வேண்டியது தானே? நோயால் டேவிட் தான் பந்துவீசிய முதல் ஆட்டத்தில் அதிக விக்கெட் எடுத்த (அப்போதைய) இந்திய ரெக்கார்டை உருவாக்கினார். கண்வால்ஜித் சிங்க் (அப்போது அவரது வயது முப்பத்தி ஏழு என்பதையும் மறந்து விட்டு) வேறெந்த வாய்ப்பும் கொடுக்கப்படாமல் நான்கு வருடம் கழித்து ரிட்டையர் ஆனார்.
சச்சின் கேட்டதை தேர்வாளர்கள் கொடுத்ததையும் நாம் சமீர் திகே என்பவறின் முதல் ஒரு நாள் ஆட்டத்தில் (மூன்றாம் நிலை வீரராக களமிறங்கி முப்பது பந்துகளில் அடித்து ஆடி மூன்று ரன்கள் எடுத்தவர் அவர்) பார்த்தது நினைவிருக்கலாம்.
//தோனிக்கும் சீக்காவுக்குமான இணக்கத்துக்கு இருவரும் CSKகாரர்கள் என்ற காரணமும் உதவியிருக்கும் தான்.//
உங்களுக்கு எந்த அளவுக்கு விஷயம் தெரியும் என்பது எனக்கு தெரியவில்லை. உங்களின் சோர்ஸ் மீடியா / பத்திரிக்கைகளே மாட்டும் என்றால் ஐயம் சாரி, தவறான தகவல். டோனி கேப்டன் ஆன முதல் ஒன்றரை வருடம் அவர் சீக்காவிடம் முகம் கொடுத்து பேசுவதையும் தவிர்த்தார். இதுதான் உண்மை. இருவரிடமும் எந்தவிதாமான இணக்கமும் கிடையாது.
ஓரிரு விஷயங்களில் வேண்டுமென்றால் கோட்டா பாலிடிக்ஸில் Srikkanth விட்டு கொடுத்திருக்கலாம். (பை தி வே, கோட்டா பாலிடிக்ஸ் உங்களுக்கு தெரிந்திருக்கும் என்றே நம்புகிறேன்). ஆனால் அதற்காக இந்தியாவை ஒரு சீரான இடத்திற்கு கொண்டுவந்த ஒருவரை உதாசீனப்படுத்திவிடுவது தவறே.
தவறாக எது கூறி இருந்தாலும் உங்கள் வாசக அன்பனை மன்னிப்பீர்கள் என்றே நம்புகிறேன்.
King Viswa உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.
ReplyDeleteஇன்றைய இந்து பத்திரிகையில் மக்ரந்த் வைகங்கர் சீக்காவின் தேர்வுக்குழுவினரை கடுமையாக கண்டித்து எழுதியிருக்கிறார். எப்படி அவர்கள் அதர்க்கமாகவும் தொலைநோக்கு இன்றியும் செயல்பட்டுள்ளார்கள் என்று விம்ர்சித்துள்ளார்.
நோயல் டேவிச் மே.இ தீவுகளில் சாதாரணமாகத் தான் வீசினார். அவர் தன் களத்தடுப்புக்காகத் தான் அப்போது அதிகம் பாராட்டப்பட்டார். கன்வல்ஜித் அவரை விட பலமடங்கு மேலானவர். அவர் முப்பது வயதுக்கு மேல் தான் மாநில அணியிலே ஆட ஆரம்பித்தார். ஹர்பஜனை விட சிறந்தவர் என்பதே என் கருத்து.
நன்றி திண்டுக்கல் தனபாலன்
ReplyDelete//இன்றைய இந்து பத்திரிகையில் மக்ரந்த் வைகங்கர் சீக்காவின் தேர்வுக்குழுவினரை கடுமையாக கண்டித்து எழுதியிருக்கிறார்.//
ReplyDeleteஅவங்களை விடுங்க சார். தமிழ் நாட்டுக்காரன் என்றாலே அவர்களுக்கு இளப்பம தான். சமீபத்தில் நம்ம அபினவ் முகுந்த் இந்திய டீமிற்கு கேப்டனாக தேர்வு செய்யப்பட்டது குறித்து அவர்கள் எழுதியதை பார்த்தீர்கள் தானே? போன சீரிஸில் முகுந்த் சரியாக ஆட வில்லை. சொல்லப்போனால் கேப்டன் புஜாரா தவிர அனைவருமே சொதப்பினார்கள். அப்படியிருக்க இவரை மட்டும் குற்றம் கண்டுபிடித்து எழுதுவார்கள்.
சீஎக்க மேல் எனக்கு மரியாதை உண்டு. தனிப்பட்ட முறையில் அவர் கஷ்டப்பட்டதை எல்லாம் ஃபர்ஸ்ட் ஹான்ட் ஆகவே தெரியும்.
எந்தவிதமான ஆதரவும் இல்லாமல், மீடியாக்களின் முழு எதிர்ப்பை பெற்று, அவர் இவ்வளவு வருடம் போராடியதே பெரிய விஷயம் சார். டோனி இவர் போன் காலை அட்டென்ட் செய்யாமல் ஒரு ஆறு மாதம் தவிர்த்து கொடுமை படுத்தினார். கோட்டா பாலிடிக்ஸில் இவர் எப்படி பியுஷ் சாவ்லாவை எதிர்க்க முடியும்? அங்கே வோட்டுக்கள் தானே கணக்கு?
அப்படியிருக்க against all odds. இவர் தன்னுடைய பணியை திறமையாகவே செய்தார் என்று நான் நம்புகிறேன்.