Wednesday, 8 August 2012

இன்று நாம் என்னவெல்லாம் செய்ய வேண்டி வருகிறது பாருங்கள்!



ரோஹித் ஷர்மா 16 வயதுக்கு உட்பட்டோருக்கான அணியில் ஆடிக் கொண்டிருந்த போது ஒருநாள் பயிற்சி முகாமுக்கு அவசர அவசரமாக ரயிலில் பயணித்து தாமதமாக வந்தார். அவரது பயிற்சியாளருக்கு பயங்கர கோபம் வந்து கத்தி விட்டார்: அவசரத்தில் ரோஹித் தனது மட்டை உள்ளிட்ட பொருட்களை எடுத்த வர மறந்து விட்டார். இது தான் ரோஹித் ஷர்மா என்று கூற வரவில்லை. இது தான் அவர் குறித்த பொது பிம்பம்.



அவரது கொழுத்த சரீரம், இரண்டு லட்டுக்களை பதுக்கியது போன்ற முக அமைப்பு, சோம்பலான நடை, சோம்பலான புன்னகை, சோம்பலான அழகான மட்டையாட்டம் எல்லாமே இந்த பிம்பத்துக்கு வலு சேர்க்கின்றன. ஆக ரோஹித் ஷர்மா இந்தியாவின் மிகத்திறமையான ஆக சோம்பலான மட்டையாளராக அடையாளப்படுத்தப் பட்டார். அவர் மீது பெரும் எதிர்பார்ப்புகள் கொண்டிருந்தவர்களும் திறமையான சோம்பேறிகளை பொதுவாக வெறுக்கும் மனநிலையாளர்களும் அவரை சேர்ந்து கண்டிக்க துவங்கி விட்டனர். ராகுல் ஷர்மா மீது மயக்கமருந்து குற்றச்சாட்டு உள்ள நிலையில் அவரிடம் கேள்வி கேட்க வந்த நிருபர் ஒருவரை ரோஹித் ஷர்மா தடுத்து பவ்யமாக திருப்பி அனுப்பியதாக ஒரு தகவல் வருகிறது. பின்னவர் எப்படி தன் அணி மீது பொறுப்புணர்வுடன் இருக்கிறார் என்று நிறுவவே இது சொல்லப்படுகிறது. அதற்கு ஒரு வாசகர் இப்படி பதில் உள்ளிடுகிறார்: ”ரோஹித் ஷர்மாவுக்கு ஏற்ற வேலை வாட்ச்மேன் வேலை என்பது இதனால் தெரியவருகிறது”.

இப்படி கடும் துவேசத்துடன் மீடியாவும் பொதுமக்களும் நடந்து கொள்வது இன்று ஒரு வலுவான போக்காகவே உள்ளது. ஒரு படம் தோல்வியடைந்தால் அதை மலம் என்று அழைக்கிறோம். இந்தியர்கள் அதிகமாய் பார்த்து அலசும் கிரிக்கெட்டும் சினிமாவும் இன்று இப்படியான மலிவான அபிப்ராயங்களைத் தான் உருவாக்குகின்றன. நாம் நிஜமாகவே அதிகமாக எதிர்பார்த்து ஏமாற்றமடைந்து அதனால் கோபமாக எதிர்வினையாற்றுகிறோமா? இதற்கான வாய்ப்பு மிகக் குறைவு தான். உண்மையில் சினிமாவோ கிரிக்கெட்டோ அரசியலோ, அதை ஊன்றி கவனிப்பவர்கள் பெரும் ஏமாற்றங்களையோ பெரும் மன-எழுச்சிகளையோ நொடிக்கொரு தரம் தாம் ஒரு சகாப்தத்தின் திருப்பத்தில் நிற்பதான கிளர்ச்சி நிலையையோ அடைவதில்லை.

இம்மூன்றையும் குறித்து கருத்து சொல்பவர்களை மீடியாவை நுகர்பவர்கள் என்று சொல்லலாம். இவர்கள் தாம் இன்றைய காலகட்டத்தின் அசலான பிரதிநிதிகள். ஒரு கலாச்சார/அரசியல் நிகழ்வு அவர்களுக்கு கொண்டாட்டத்துக்கான கொந்தளிப்புக்கான ஒரு சாக்காக சந்தர்ப்பமாக இருக்க வேண்டும். அப்படி தோதுபடவில்லை என்றால் முதல் ஐந்து நிமிடத்திலேயே எழுந்து வந்து கருத்து சொல்ல ஆரம்பித்து விடுவார்கள். அடுத்து இவர்கள் எளிய சராசரி பிரச்சனைகளை எல்லாம் சீரியஸாக எடுத்து பேசத் துவங்குவார்கள். தேர்தலில் திமுக தோல்வியடைந்த வேளையில் ஒரு “வளர்ந்த” தமிழ்க்கவிஞரை பார்க்கப் போயிருந்தேன். தான் கடந்த இரண்டு நாட்களாக தன் நண்பர்களுடன் இரவுபகலாக மதுவருந்தி தி.மு.க வீழ்ச்சியை கொண்டாடியதாக சொன்னார். இன்னமும் கொண்டாட்டம் முடியவில்லை என்றார். எனக்கு ஒரு சந்தேகம் ஏற்பட்டது. தேர்தல் தோல்வி என்பது ஒரு கட்சிக்கு தண்டனையா அல்லது ஓய்வுக் காலமா? ஏனென்றால் ஊழல் பண்ணும் பெரும் நன்மைகள் ஏதும் பண்ணாத அரசுகள் கூட சில வேளை தேர்தலில் தக்க வைத்துக் கொள்கின்றனவே? ஒரு தேர்தல் முடிவால் மக்களுக்கு நீதி கிடைத்து விடுமா? திமுகவை விட மேலானதாக அதிமுக இருக்கும் என்று அவ்வளவு நம்பிக்கையா? இதெல்லாம், மேற்சொன்ன கவிஞரையும் சேர்த்து, சாமான்யர்களுக்கு கூட தெரிந்தது தான். ஆனால் நாம் தினமும் தீபாவளி கொண்டாடுகிற மனநிலையில் இருக்கிறோம்; நமது தினங்கள் ஒவ்வொன்றும் மகத்தான/மகா கொடூரமான கணங்களால் நிரம்பி இருப்பதாக நம்பத் தலைப்படுகிறோம்.

மூன்றாவதாக எல்லாமே பெயரளவில் பார்க்கப் படுகிற இக்காலத்தில் மனிதர்கள், அதாவது சாமான்ய மனிதர்கள் கூட, தமது பிம்பம் குறித்து அக்கறையாக இருக்க வேண்டியுள்ளது. தகவல் பரிமாற்றத்தின் அபரித வசதிகள் மனிதர்களை அறிந்து கொள்ளும் அக்கறையை மிகவும் குறைத்து விட்டது. உதாரணமாக நீங்கள் இணையத்தில் திடீரென்று சம்மந்தமில்லாத ஆட்களால் திட்டப்படுவீர்கள். திட்டிக் கொண்டிருந்தவர்கள் ஏன் திட்டுகிறார்கள் என்று புரிந்து கொள்ளும் முன்பே அவர்கள் பனி போல் மறைந்து விடுவார்கள். திட்டுவதற்கு முன்பும் அவர் யாரோ நீங்கள் யாரோ; திட்டியதற்கு பின்னும் அவர் யாரோ நீங்கள் யாரோ. தாம் காட்டும் வெறுப்புக்கான பாத்தியதையை கொஞ்சம் கூட எடுத்துக் கொள்ள மனிதர்கள் தயாராக இல்லை. இப்போது நாம் ரோஹித் ஷர்மாவின் கதைக்கு திரும்புவோம். அவர் கடந்த பத்து ஆட்டங்களாக 17.33 சராசரியில் தான் ஓட்டங்கள் எடுத்துள்ளார். இதொன்றும் மகாகுற்றம் அல்ல.. ஆனால் அவர் மிகத்திறமையான சோம்பேறி என்ற பெயரில் விமர்சிக்கப்படுகிறார். அதனால் தான் அவரால் தொடர்ச்சியாக உயர்ந்த ஸ்கோர்களை எடுக்க முடியவில்லை என்று சொல்லப்படுகிறது. அவருக்கு அளிக்கப்படும் தொடர் வாய்ப்புகள் பிற இளைஞர்களின் வாய்ப்புகளை பறிப்பதாக சொல்லப்படுகிறது. சற்று முன்னால் தான் ரோஹித் ஷர்மா மே.தீவுகளில் தொடர்ந்து நன்றாக ஆடி ஆட்டங்களை தன்னந்தனியாக ஆடி வென்று தந்தார் என்பதை மறந்து விடுகிறோம். எத்தனையோ நல்ல மட்டையாளர்கள் இதற்கு முன்னரும் இது போல் ஓட்டங்களை எடுக்க தொடர்ந்து பல ஆட்டங்கள் திணறி உள்ளதை மறந்து விடுகிறோம்.

மிக நம்பகத்தன்மை கொண்டவராக அறியப்பட்ட ராகுல் திராவிட் இரண்டு ஆஸ்திரேலிய பயணங்களில் ரோஹித் ஷர்மா போலத் தான் ஆடினார். அதற்கு வெகுமுன்னர் 1999இல் உலகக் கோப்பையில் மிக அதிகமாக ஓட்டமெடுத்ததற்காக விருது வென்ற பின் அவர் தொடர்ந்து சில மாதங்கள் மிக மோசமான ஆட்டநிலையில் திணறினார். கங்குலி அவரை பந்து வீச வைத்து அணியில் ஒரு வீச்சாளராக தக்க வைத்தார். திராவிட் கடுமையாக உழைப்பவர் தான். உக்கிரமாக மனதை குவிப்பவர் தான். ஆனால் ஆட்டநிலையை இழந்த போது ஓட்டங்களை எப்படி எடுப்பதென்றே அவர் மறந்து விட்டார்; அவருக்கு தெரிந்த எந்த வித்தையும் உதவவில்லை. இக்கட்டங்களில் எல்லாம் ராகுல் திராவிடின் தொழில்நுட்பம் பற்றிக் கூட கேள்விகள் எழுப்பப்பட்டு பரிந்துரைகள் வைக்கப்பட்டன. சச்சின் சின்னப் பையனாக தனக்கு சொந்தமாக ஒரு மட்டை வாங்குவதற்காக தனது பயிற்சியாளர் அச்சிரேக்கருடன் கடைக்கு சென்றார். அப்போது அவர் தனது உடலமைப்புக்கு சற்று பெரிதான கனமான மட்டை ஒன்றை தேர்ந்து எடுத்தார். அச்சிரேக்கர் அதை வைத்து விட்டு மெலிதான ஒன்றை எடுக்க சச்சினை வற்புறுத்தினார். ஆனால் சச்சின் விடாப்பிடியாக அது தான் வேண்டுமென்றார். அச்சிரேக்கர் அதற்கு மேல் வலியுறுத்தவில்லை. பின்னர் அந்த மட்டை கொண்டு ஆயிரமாயிரம் ஓட்டங்கள் எடுத்த நிலையில், தனது அணித்தலைமையின் பிந்திய காலகட்டத்தில் சச்சின் சட்டென்று தன் ஆட்டநிலையை (form) இழந்தார். அதை மீட்க அவர் போராடிய கட்டத்தில் பல விமர்சகர்கள் சச்சின் மெலிதான மட்டையை கொண்டு ஆட வேண்டும் என்று கோரினர். இதே போல் விரேந்திர சேவாக் தொடர்ந்து உள்வரும் பந்துக்கு இரையாகிக் கொண்டிருந்த போது அவரது மட்டையாட்ட தொழில்நுட்பத்தை மாற்ற வேண்டும் என்று பேசினர். லக்ஷ்மண் ஸ்லிப்பில் பிடி கொடுத்து வெளியேறும் போது அவர் போதுமான அளவுக்கு காலை முன்னகர்த்துவது இல்லை என்று பார்க்கும் நாம் ஒவ்வொருவருக்கும் தோன்றியது.

உண்மையில் லக்ஷ்மண இவ்விசயத்தில் ரோஹித் ஷர்மாவுக்கு மிக இணக்கமாக வரக்கூடியவர். லக்ஷ்மணைப் பார்க்கும் போதெல்லாம் இவர் இன்னும் அதிகமாக உழைத்திருந்தால் இன்னும் பெரிதாய் சாதித்திருப்பார் என்று மீண்டும் மீண்டும் தோன்றும். ஆனால் இதை ஒரு மயக்கவழு (fallacy) என்று நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஒருமுறை இந்திய அணி சேப்பாக்கில் பயிற்சி நடந்து கொண்டிருந்த போது நண்பர்களுடன் சென்றிருந்தேன். தொலைவில் இருந்து பார்த்த படியே வலைப்பயிற்சியில் லக்ஷ்மணின் உடல்மொழியைப் பார்த்து “ரொம்ப சோம்பேறி பார்” என்று நண்பர்கள் திரும்பத் திரும்ப கூறினார்கள். ஆனால் உண்மையில் லக்ஷ்மண் இதைக் கூறும் இவர்கள் எல்லாரையும் விட கடுமையாக உழைக்கக் கூடியவர்; அதனால் தான் அவர் இந்தியாவை பிரதிநுத்துவப்படுத்தி பதினைந்து வருடங்களுக்கு மேலாக அணியில் நிலைத்து உள்ளார். நாம் வெளியே இருந்து அவரைப் பார்த்து விமர்சிக்கிறோம்; நாம் புரிந்து கொள்ளும் இந்த சின்ன விசயம் கூட இவனுக்கு தெரியாதா என்று நினைக்கிறோம். இங்கு தான் தவறு நேர்கிறது. பத்து வயதில் இருந்தே கிரிக்கெட்டை வாழ்க்கையாக வரித்தவர்களுக்கு அது குறித்து கணிசமான அனுபவ/தகவல் அறிவு இருக்கும். சச்சினுக்கு பாரமான மட்டை எப்படி ஒரு இடையூறாக இருக்கப் போகிறது என்பது அச்சின்ன வயதில் அச்சிரேக்கருடன் கடையில் இருக்கும் போதே தெரியும். ஆனால் சின்னச் சின்ன எதிர்மறைகளை ஏற்றுக் கொண்டு தானே முக்கியமான முடிவுகளை எப்போதுமே எடுக்கிறோம். சேவாகுக்கும் லக்ஷ்மணுக்கு அப்படியே. அவர்களின் தொழிநுட்ப குறைகள் தாம் அவர்களுக்கு ஷாட்களை அடிக்கும் பெரும் சுதந்திரத்தை, நேரத்தை, நளினத்தை அளிக்கிறது என்று தெரியும். மிக தொழில்நுட்ப வலு கொண்ட மட்டையாளன் ஓட்டமெடுக்காமல் தோல்வியடைவதில்லையா? இன்று விமர்சிக்கிறோம் என்ற பெயரில் எல்லாவற்றையும் அவசரமாக ஒற்றைபட்டையாக பார்க்கத் துவங்குகிறோம்.

அசட்டையாக தோன்றுவது சிலரின் இயல்பு. அவர்கள் அன்றாட விசயங்களில் அக்கறை காட்ட மறுக்கும் போது அவர்கள் வேண்டுமென்றே அசட்டையாக இருப்பதாக நமக்குத் தோன்றும். ஆனால் தத்தமது வேலையை பொறுத்த மட்டில் யாரும், குறிப்பாக தொழில்முறை கலைஞர்கள், வேண்டுமென்றே அசட்டையாக சோம்பேறியாக இருப்பதில்லை. பொதுவாக ஒழுக்கம், கட்டுப்பாடு, மனக்குவிப்பு, உழைப்பு ஆகியவை தன்னம்பிக்கையில் இருந்து தான் பிறக்கின்றன. தன்னம்பிக்கை ஒரு தெளிவைத் தருகிறது. உங்களுக்கு என்ன செய்ய முடியும் என்று தெரிந்தால் அதற்கு மேல் நீங்கள் உழைப்பதற்கு வேறு எந்த ஊக்கமும் தேவையில்லை. ஒரு கலைஞர் குடிகாரராக பெண்மோகியாக இருந்து செத்துப் போனால் அவர் “சீரழிந்த மனிதராக” இரங்கல் குறிப்புகளில் எழுதப்படுவார். ராஜமார்த்தாண்டன் குறித்து ஜெயமோகன் எழுதியுள்ள நீண்ட இரங்கல் கட்டுரைகளை உதாரணமாக எடுக்கலாம். ராஜமார்த்தாண்டனை தனிப்பட்டு அறிந்தவர்களும் அவரது எழுத்துக்களை படித்தவர்களும் அவர் தன்னால் முடிந்த வேலையை செய்து விட்டுத் தான் உயிர்நீத்தார் என்று புரிந்து கொள்வார்கள். ஒரு போலியான சட்டகத்துள்ள நடைமுறையில் இல்லாத விழுமியங்கள் கொண்டு ஆணியடிக்க மாட்டார்கள். ஒவ்வொரு மனிதனுக்கும் அவனுக்கேயான திறமையும் மன-அமைப்பும் உள்ளது. அது அவனது வாழ்க்கைப் போக்கை அணுகுமுறையை தீர்மானிக்கிறது. நவீன கவிஞரான கலாப்பிரியா தீவிர எம்.ஜி.ஆர் ரசிகரென்றால் அது “சீரழிவா?”. அவர் எம்.ஜி.ஆர் ரசிகராக இல்லாமல் தினமும் பிரம்மராஜனின் உலக இலக்கிய கவிஞர்களின் மொழிபெயர்ப்பு தொகுப்பை வரிக்கு வரி வாசித்திருந்தால், லக்கான், தெரிதா, நீட்சே எல்லாம் கரைத்து குடித்து விட்டு விட்டத்தை பார்த்து அமர்ந்திருந்தால் இன்னும் மேலான கவிஞராக இருந்திருப்பாரா? விக்கிரமாதித்யன் சொல்வது போல் மனுஷ்யபுத்திரன் சின்ன கவிதைகள் மட்டுமே எழுதியிருந்தால் மேம்பட்டு போயிருப்பாரா? யார் வாழ்க்கையை இங்கு யார் தீர்மானிப்பது? உண்மையில் நமக்குக் கொடுக்கப்பட்ட கோப்பை நீரை முடிந்தளவுக்கு குடித்து விட்டுத் தான் உலகில் இருந்து விடை பெறுகிறோம். எந்தளவுக்கு குடித்தோம் என்பது நம் உரிமை மற்றும் சுதந்திரம். மனித வாழ்வின் அழகே இந்த “சீரழிவதற்கான” சுதந்திரம் தான்.

ரோஹித் ஷர்மா 84 ஒருநாள் ஆட்டங்களில் 31.26 சராசரியில் ஓட்டங்களை எடுத்துள்ளார். இரண்டு சதங்களும் 12 அரை சதங்களும் அடித்துள்ளார். 40ஆவது ஓவருக்கு மேல் அதிகம் ஆடுதளத்துக்கு வருபவருக்கு இது ஒன்றும் மோசமான சராசரி அல்ல. முன்னாள் மட்டையாளர் ஆகாஷ் சோப்ரா ரோஹித்துக்கு பொறுமை இல்லை என்கிறார். பொறுமை இல்லாதவர் எப்படி 2 சதங்கள் அடித்தார்? இதே ஆகாஷ் சோப்ரா முன்னர் பாகிஸ்தான் டெஸ்ட் தொடரில் தொடர்ந்து உள்வரும் பந்துக்கு வீழ்ந்து கொண்டிருந்தார். பின்னர் ஐ.பி.எல்லின் போது அவர் ரிக்கி பாண்டிங்கிடம் ஆலோசனை கேட்ட போது ”உனக்கு அப்படி ஒரு குறை இருந்தால் அதை உடனடியாக சரி செய்ய வேண்டும்” என்றார். ஏன் சோப்ராவால் தன் குறையை சரி செய்து இந்திய அணிக்கு மீள முடியவில்லை? ஏனென்றால் வாழ்க்கை அவ்வளவு எளிதானது இல்லை. ரோஹித் ஷர்மா கடந்த சில ஆட்டங்களில் பத்து சொச்சம் சராசரியில் ஓட்டம் எடுத்து வருவதால் அவர் மீது அப்படி ஒரு நெருக்கடி மீடியா மற்றும் பொதுமக்களின் விமர்சனத்தால் ஏற்பட்டிருந்தது. நடந்து வரும் இலங்கைக்கு எதிரான தொடரில் நாலாவது ஆட்டத்தில் அவர் களமிறங்கிய போது என் மனம் ரோஹித்தை நோக்கி நேராக ஆடு நேராக ஆடு என்று இறைஞ்சியது. அவர் எப்படியெல்லாமோ ஆடி பத்து பந்துகளுக்கு தாக்குப் பிடித்தார். பின்னர் என்னாலும் முடியும் பார் என்று ஒரு வானுயர ஷாட் அடித்தார்; அது களத்தடுப்பாளர்களுக்கு வெகுஅருகில் சென்று வீழ்ந்தது. பிறகு கொஞ்சம் நிதானித்தார். பின்னர் பிரதீப்பின் வேகமான முழுநீள பந்து ஒன்றை கால்பக்கம் ஆடும் போது நிலைகுலைந்ததால் எல்.பி.டபிள்யு ஆனார். அப்போது அவரது தலை உடலுக்கு சீராக இல்லாம சாய்ந்து இருப்பதை கவனித்தேன். பந்தை அவர் தொட முடியாததற்கு அதுவும் காரணம். எனக்கு ரோஹித்தின் போதாமை மீது எரிச்சல் ஏற்பட்டது. பார், தலையை நேராக வைத்துக் கொள்ள வேண்டும் என்று சொல்லத் தோன்றியது. பிறகு உணர்ந்தேன் “ரோஹித்துக்கு அது தெரியாதா” என்று. வாழ்வில் எத்தனையோ தருணங்களில், ஆஸ்பத்திரிகளில், வேலையில், விபத்து நடுவில் தெரிந்தே எவ்வளவோ தவறுகளை தவிர்க்க முடியாமல் செய்கிறோம்; அப்போதெல்லாம் நம் மூளை ஸ்தம்பித்து விடுகிறது. வாழ்வின் ஆகச்சிறந்த மற்றும் ஆக மோசமான முடிவுகளை அதிக யோசிக்காமல் தான் எடுக்கிறோம். ஒரு கிரிக்கெட்டர் மட்டும் எப்படி வேறாக இருக்க முடியும். நம் சாலைகளில் எத்தனையோ பாதசாரிகள் பத்திரமாக கடந்து போகிறார்கள். சிலர் மட்டும் வாகனங்கள் முன்னே மாட்டி “எருமை மாடு சாவு கிராக்கி” என்று திட்டு வாங்குகிறார்கள். ரோஹித் ஷர்மாவின் நிலைமையும் கிட்டத்தட்ட இது போலத் தான்.

ரோஹித் ஷர்மாவின் பிரச்சனைகள் உண்மையில் இரண்டு. கடவுள் அவருக்கு அபரிதமான திறமை அளித்திருக்கிறார். சொல்வதானால் சச்சினுக்கு பிறகு இவ்வளவு தாராள திறமையுடன் வேறொருவர் தோன்றவில்லை. கவுதம் கம்பீர் சொல்வது போல் இந்தியாவின் எதிர்காலம் ரோஹித்தின் தோள்களில் இருக்கலாம். அப்படி இல்லாமலும் போகலாம். இரண்டும் அவரது தவறு அல்ல. பொதுவாக சிறு குழந்தைகள் திறமை இருப்பவர்களாக அடையாளம் காணப்பட்டு பள்ளிகளில் வீடுகளில் வேட்டையாடப்படும் அவலங்களை பார்த்திருக்கிறோம். வேலை பார்க்கும் நிறுவனங்களிலும் திறமையில்லாத சராசரிகளை விட திறமையான அக்கறையற்றவர்களே அதிகம் கண்டனத்துக்கு உள்ளாவார்கள். உழைப்பாளிகளும் சோம்பேறிகளும் ஒருமித்தே உலகில் வெற்றிகரமாக வாழ்கிறார்கள் என்று நம்ப நாம் மறுக்கிறோம். “உழைப்பால் வெற்றி கண்டவர்” என்பது ஒரு நவீன தொன்மம் மட்டுமே. கூட்டிக்கழித்தால் வாழ்க்கை சமானமாகவே எல்லோருக்கு வருகிறது.

அபரிதமான திறமையுடன் இருப்பதே இவ்வளவு பெரிய எதிர்பார்ப்புகளும் பெரும் கண்டனங்களும் ரோஹித்தை நோக்கி கட்டுவிக்கப்பட காரணம். தனது திறமையை அவரால் மறைக்க முடியாது. ஆனால் அவர் வேறொன்றை செய்யலாம். தனது பிம்பத்தை சீர்படுத்தலாம். தனது சுயசரிதையில் ஆண்டிரூ பிளிண்டாப் ஒரு சுவாரஸ்யமான சம்பவத்தை குறிப்பிடுகிறார். இங்கிலாந்து அணியில் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிதில் அவர் ஒருநாள் குடித்து விட்டு இரைவதை அப்போதைய பயிற்சியாளர் பிளட்சர் பார்த்து விடுகிறார். பிளிண்டாப் ஒரு போக்கிரி என்ற எண்ணம் அவருக்குள் உருவாகி விடுகிறது. அதற்குப் பின் சின்ன சின்ன தவறுகளுக்கெல்லாம் பிளிண்டாப் பதில் சொல்ல வேண்டி வருகிறது. இயல்பான நடத்தை விபரங்கள் கூட அவரது எதிர்மறை பிம்பத்தை வலுப்படுத்த உதவுகிறது. பின்னர் அணியில் இருந்து நீக்கப்பட்ட பிளிண்டாப் வெற்றிகரமான் ஆட்டக்காரர் ஆவது மட்டுமில்லாமல் மிக தீவிரமான பொறுப்பான நபராக தன் பிம்பத்தை மறுகட்டமைத்தார். தனது மட்டையை ரயில்வே நிலையத்தில் மறந்து விட்டு பயிற்சிக்கு வருகிற ஒரு இளைஞனால் இன்று சச்சினின் வாரிசு என்று அறியப்படுகிற நிலைக்கு வளர முடிந்திருக்கிறது. அவர் தனது விளையாட்டில் போதுமான உழைப்பும் அக்கறையும் செலுத்தாமல் இது நடந்திருக்காது. அவர் இது போன்றே தொடர்ந்தும் “அசட்டையாக” இருக்கலாம். ஆனால் உடல் எடையை குறைத்து, ஆடுகளத்தில் துறுதுறுப்பாக இயங்குவது போல் பாவித்து, முகத்தில் சில தீவிர தமிழ் இலக்கியவாதிகளின் “ஆழ்ந்த சோகத்தை” கொண்டு வந்து தன்னை பொறுப்பானவராக காட்டிக் கொள்ள துவங்க வேண்டும். அவர் தனது சிறந்த ஆட்டநிலைக்கு விரைவில் திரும்பக் கூடும். ஆனால் எதிர்காலத்தில் அடுத்தவர்களின் கசப்புணர்வுகள் ஏமாற்றங்கள் தொடர்ந்து தன் மீது சுமத்தப்படுவதை, நெருக்கடிக்கு உள்ளாக்கப்படுவதை தவிர்ப்பதற்கு வேறு ஒருவராக அவர் நடிக்கத் துவங்க வேண்டும்.

இன்று நாம் என்னவெல்லாம் செய்ய வேண்டி வருகிறது பாருங்கள்!

Share This

3 comments :

  1. இவ்வளவு தகவல்களா.....? பாராட்டுக்கள்...

    ReplyDelete
  2. நன்றி திண்டுக்கல் தனபாலன்

    ReplyDelete
  3. ’நண்டு’ரோகித் என வடஇந்திய சேனல்கள்தான் அவரை முதலில் வர்ணிக்கத் துவங்கின. விக்கெட்டுகளுக்கு இடையிலான அவரது ஓட்டம் பரிதாபமாக இருந்ததும், களத்தடுப்பில் காட்டிய மெத்தன உடல்மொழியும், ஐம்பது ரன்களைக் கடந்ததும் வருகிற வேர்த்திரைப்பும் காரணமாக இருக்கலாம். இன்று அக்ரசிவ் ஆன அணி இமேஜ் கொண்ட இந்திய அணியின் ரசிகர்களுக்கு முகத்தில் கொஞ்சம் ஆக்ரோசம் இருந்தால்தான் ஆயிற்று.

    சச்சினுக்குப் பிறகு குறைவான பலவீனங்கள் கொண்ட, தொழில்நுட்பம் மற்றும் ஆட்டநேர்த்தியுடையவராகக் கருதப்படும் ரோஹித் சர்மாவிடம் ஒரு கிரிக்கெட் ரசிகன் கொஞ்சம் அதிகமாகவே எதிர்பார்ப்பதிலும் தப்பில்லை.

    ரோஹித்திற்கு தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்படும்போது சிறப்பாக விளையாடி வரும் ரஹானே,மனோஜ் திவாரி, முரளி விஜய் போன்றோர்கள் காத்திருக்க வேண்டியிருக்கிறதே என்ற ஆதங்கத்திற்கும் பதில் சொல்லியாகவேண்டி இருக்கிறது.

    இந்தச் சமயத்தில் அவர் கொஞ்சம் பொறுப்பான ஆல்-ரவுண்டர் பாத்திரத்தை ஏற்று நடிக்க வேண்டும்.

    ReplyDelete

Contact Us

So you think we’re the right folks for the job? Please get in touch with us, we promise we won't bite!



Designed By Blogger Templates