அசோகமித்திரனிடம் வன்முறை இல்லை என்று சுந்தரரமசாமி ஒருமுறை கூறினார். வன்முறை என்று அவர் சொன்னது அடிதடியோ ரத்தமோ அல்ல; தமிழ் பின்நவீனத்துவ எழுத்தில் பார்க்கும் மிகை-ஆர்வமான ஒழுக்கமீறலையோ கூட அல்ல. நமது தினசரி கலாச்சாரத்தில், மனம் சிந்தனையாக செயலாக மறைமுகமாக வெளிப்படும் விதத்தில் உள்ள வன்மத்தை சொன்னார்.
வாழ்வின் தீமையை பேசும் எழுத்தில் எல்லாம் இந்த வன்மம் உண்டு தான். நவீன இலக்கியத்தில் இதை இரண்டு விதங்களில் உக்கிரமாக கொண்டு வந்தார்கள். ஒன்று நாடகீயமாக. அதாவது பாத்திரங்களின் மனமோதல்களை சித்தரிப்பதன் வழி.
அடுத்து அறிவார்ந்தும் உணர்வுரீதியாகவும் ஒரு உன்னத நிலையில் இயங்கும் சாமான்யமற்ற மனிதர்களைப் பேசுவதன் மூலம். சு.ராவின் “ஜெ.ஜெ சில குறிப்புகளில்” வரும் ஜெ.ஜெ இப்படியான சாமான்யமற்ற பாத்திரத்துக்கு நல்ல உதாரணம். அவரது பிற பாத்திரங்கள் எளிய கணக்குப்பிள்ளையாக, கடிதம் எழுதும் பெண்ணாக, ஊனமுற்றவனாக இருந்தாலும் ஒரு பெரும் சமூக அழுத்தத்துடன் தான் மூர்க்கமாக மோதிக் கொண்டிருப்பார்கள். அது சமூகமோ வரலாறோ காலமோ அறிவியலோ ஆக இருக்கலாம். எந்த ஒரு மேற்கண்ட இயக்கமும் ஒரு அதிகார ஆற்றலாக செயல்பட்டு அவனை நசுக்க பார்க்கும். இந்த மீபொருண்மை வன்மத்தை தான் சு.ரா குறிப்பிட்டார்.
அசோகமித்திரனிடம் வன்முறை உண்டா? உண்டு. ஆனால் அது ஒரு செயலற்ற சாமான்ய மனிதனின் சிந்தனை பலமற்ற சன்னமான மூர்க்கம். ஒரு கொசு கடிப்பது போன்ற, பேருந்தில் காலை யாரோ மிதிப்பது போன்ற, ஒரே கேள்வியை திரும்பத்திரும்ப கேட்டு அழுவது போன்ற வன்முறை. அவரது கதைகளில் நாம் காணும் ஒவ்வொன்று அன்றாட அவஸ்தையிலும் ஒரு தனிமனிதன் மேல் காலத்தால் பிரயோகிக்கப்படுகிற இந்த வன்மம் உண்டு. எப்போதும் அவன் இந்த வன்முறைக்கு நேரடியாக எதிர்வினை ஆற்றுவது இல்லை. கலகமாகவோ அறிவார்த்தமாகவோ கவித்துவமாகவோ இப்படி எதிர்வினை செய்வது மிகையானது, செயற்கையானது என்பதே அசோகமித்திரனின் நிலைப்பாடு.
அவரது பாத்திரங்கள் அற்பமான அபத்தமான வழிகளில் தம் வன்முறையை காட்டுகிறார்கள். அது ஒரு ஓட்டல் பணியாளன் பூட்டப்பட்ட அறைக்குள் ஒரு “பூனையை” அடிப்பதோ ஒரு ஸ்டுடியோ பணியாளன் ஒரு நட்சத்திர நடிகனை காரணமின்றி தாக்குவதோ (”வெறி”) ஆகலாம். இந்த அபத்தமான வன்முறை உலகம் முழுக்க நவீனத்துவ புனைவின் ஒரு முக்கிய அம்சமே. ஒரு சிறந்த உதாரணமாக காம்யுவின் “அந்நியனை” சொல்லலாம். இதில் மெர்சால்ட் என்பவன் தன் அம்மா இறந்து போனதற்கோ தன் காதலியை பிரிவதற்கோ எந்த வருத்தத்தையும் இழப்பையும் உணராதவன். ஆனால் அவனே ஒரு கடற்கரையில் வெயிலின் உக்கிரம் தாளாமல் தன்னை எவ்விதத்தில் சீண்டாத ஒரு அரபியை சுட்டுக் கொல்கிறான். பிறகு அவனுக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது. அப்போதும் அவன் தான் குற்றம் செய்வதாகவே உணர்வதில்லை. மெர்சால்டிடம் நாம் காண்பது சமூகத்திடம் இருந்து தத்துவார்த்தமாக விலகுபவனின் அபத்தம். அசோகமித்தினிடம் நாம் காண்பது எந்த தத்துவசார்போ ஆன்மீக வலுவோ இல்லாதவனின் அபத்தமான வன்முறை.
இன்னும் ஆதாரமான ஒரு வேறுபாடு அசோகமித்திரன் மனித இயல்பிலும் வாழ்வின் போக்கிலும் உள்ள இந்த அபத்தத்தை ஏற்கிறார் என்பது. அவரது புனைவுலகில் எவ்வளவு தான் கீழ்மையில் வாழ்ந்தாலும் மனிதன் தனது மேம்பட்ட தன்மையை அங்கு தக்க வைக்கவே செய்கிறான். அவன் புகார் செய்வதோ சமூகத்தை எதிர்த்து நிராகரிப்பதோ இல்லை. காரணமற்ற அன்பும் வெறுப்பும் அவரது கதைகளில் பரவலாக வருகின்றன. அவரது பாத்திரங்கள் வாழ்வின் அநீதியை துயரத்தை கீழ்மையை ஒரு புன்னகையுடன் ஏற்கிறார்கள். அதில் எந்த மேன்மையும் உண்டு என்று அல்ல. வாழ்வது ஆனது அதனளவில் எந்த சிந்தனையையும் கோருவதில்லை; அநேகமானவர்களுக்கு அதற்கான அவகாசங்கள் இருப்பதில்லை என்பதால்.
இந்த ‘ஏற்பு’ தான் அசோகமித்திரனை சு.ரா வகை நவீனத்துவாதிகளிடம் இருந்து வேறுபடுத்துகிறது. உதாரணமாக சு.ராவின் கதையில் ஒரு பிணியாளி தன் படுக்கை அருகே தனக்கும் உலகுக்குமான ஒரே தொடர்பான ஜன்னல் நிரந்தரமாக மூடப்பட்டால் தனக்கு “மூச்சு முட்டுகிறது” என்று கத்தி எதிர்ப்பான். ஆனால் அசோகமித்திரன் இதே கதையை எழுதினால் அவன் தனது ஜன்னல் மூடப்பட்டு விட்ட அவலத்தை உணர்ச்சியற்ற குரலில் சொல்லி விட்டு, அதன் விளைவாக தன் வாழ்வில் ஏற்படும் ஒரு அபத்த வன்முறையை ஒரு கரிப்பான புன்னகையுடன் சித்தரித்து அந்த இழப்பை அவன் கடந்து செல்வதை சித்தரிப்பார். அசோகமித்திரனின் பாத்திரத்துக்கு மருந்துகளும், வசதியின்மையும், நாவின் சுவையின்மையும், தன்னை பராமரிப்பவரின் அவஸ்தைகளும் தான் நிஜமாக இருக்கும். தனிமையை உணரவே அவனுக்கு அவகாசமிருக்காது; அப்படி உணர்ந்தாலும் “பார் எவ்வளவு தனிமையாக இருக்கிறேன்” என்று சொல்லிக் கொள்ள மாட்டான். அசோகமித்திரன் எப்போதும் வன்முறையை எதிர்கொள்வதை அல்ல, அதை சிந்தனையின்றி ஏற்பவனின் வலியை தான் சொல்கிறார். அவனே பின்னர் தனது இந்த வலியை தாங்க முடியாத நிலையில் மற்றொருவரிடம் வன்மமாக தர்க்கமற்ற முறையில் வெளிப்படுத்துவதையும் காட்டுகிறார். அசோகமித்திரன் வன்முறையை எப்போதும் அவலம் கொண்டு தான் அடிக்கோடு இடுகிறார்.
இந்த பண்பை நாம் அவரது “வெறி” சிறுகதையில் நுணுக்கமாக பார்க்கலாம். இக்கதை த.மு.எ.சகாரரகளால் எளிதில் கொண்டாடக் கூடிய வகையான “அதிகார வர்க்கத்தால் சுரண்டப்படும் பாட்டாளி வர்க்கம் தன் எதிர்ப்பை காட்டுவதை” சொல்லும் கதை தான். ஆனால் அசோகமித்திரன் நமது கோபத்துக்கு எந்த கருத்தியல் பின்புலமும் இருப்பதில்லை என்று சொல்லுமிடத்தில் அவர்களிடம் இருந்து வேறுபடுகிறார். உழைக்கும் வர்க்கம் தமக்குள் உணரும் நட்பு கூட வர்க்க போதம் அல்ல ஒரு அபத்தமான அன்பு என்கிறார்.
“வெறியில்” கதைசொல்லி ஒரு ஸ்டுடியோவில் கீழ்நிலை பணியாளனாக இருக்கிறான். தருண் முகர்ஜி எனும் ஒரு பத்திரிகை புகைப்பட கலைஞனை ஒரு நாள் தெரியாமல் உள்ளே போக அனுமதித்து அதனால் நிர்வாகத்திடம் திட்டு வாங்குகிறான். ஆனால் அதனால் அவனுக்கு முகர்ஜி மீது கோபம் ஏற்படுவதில்லை. முகர்ஜிக்கும் தன்னால் திட்டு வாங்கின அவன் மீது பிரத்யேக பரிவேதும் இல்லை. அவன் மன்னிப்பு கேட்பதும் இல்லை. ஆனால் அடுத்தமுறை ஸ்டுடியோவுக்குள் நுழையும் போது கதைசொல்லிக்கு எந்த பிரச்சனையும் ஏற்படாமல் பார்த்துக் கொள்கிறான். இப்படி எந்த ஒரு பரஸ்பர ஆதரவோ அன்போ தேவைப்படாத ஒருவித தற்செயலான உறவற்ற உறவு அவர்களுக்குள் உருவாகிறது. அவன் தருண் முகர்ஜியை பார்க்க அவன் வீட்டுக்கு இருமுறை செல்கிறான். இருமுறையுமே தற்செயலாகத் தான். ஒருமுறை குழாய் ரிப்பேர்க்காரனை தேடியும், மற்றொரு முறை எலக்டிரிசியனை தேடியும் முகர்ஜியின் வீட்டுப் பக்கம் செல்ல நேரும் போது சென்று சந்திக்கிறான். மௌனி, நகுலன் ஆகியோர் கதைகளில் நண்பர்கள் சந்திப்பதன் முகமாகவே சந்திப்பார்கள். ஆனால் அசோகமித்திரன் இங்கு மேற்கண்டவர்களிடம் மாறுபட்டு எவ்வளவு கூர்மையாக மனித சந்திப்புகளின் சாதாரணத்தன்மையை காட்டுகிறார் பாருங்கள்.
இந்த தற்செயலான நட்பும் சந்திப்புகளும் தான் அவனுக்கு முகர்ஜியின் கடுமையான வறிய வாழ்க்கைச் சூழலையும் அவனது வாழ்வில் காதலும் திருமணமும் குழந்தையின் பிறப்பும் மரணமும் எப்படி அசந்தர்பமாக அனர்த்தமாக நிகழ்ந்து முடிகிறது என்பதையும் காட்டுகின்றன. முதல்முறை அவர் முகர்ஜியை பார்க்கும் போது அவன் ஒரு அழுக்கான உணவகத்தின் மேல்-அறையில் எந்த அடிப்படை வசதியும் அற்று வாழ்ந்து வருவதை பார்க்கிறான். அவன் அப்போது தன் நண்பனிடம் “உடனே நீ வேறு இடம் பார்த்து மாறி விடு” என்கிறார். அதற்கு முகர்ஜி “பதினைந்து ரூபாய் வாடகையில் இதைவிட வேறு எங்கு இடம் கிடைத்தாலும் அடுத்த நிமிடம் போய் விட தயார்” என்கிறான். தான் எடுக்கும் படங்களின் நெகட்டிவை கழுவுவதற்கு வெளியே செலவு செய்ய கட்டுப்படி ஆகாததால் அவன் அந்த புறாக்கூண்டு அறைக்குள் ஒரு சின்ன பெட்டி செய்து வைத்திருக்கிறான். அந்த பெட்டி தான் அவனது “இருட்டறை”. அங்கு ஒரு மனிதனால் கைகாலை மடித்து கூட ஒழுங்காய் இருக்க முடியாது. இதில் கழுவும் ரசாயனங்களின் நெடி வேறு புரட்டுகிறது. அங்கிருந்து வெளியே வரும் கதை சொல்லி தன் நண்பன் எப்படி ஏதாவதொரு வியாதி தொற்றி அரசு ஆஸ்பத்திரியில் கிடந்து அவஸ்தைப் படாமல் தப்பித்து வருகிறான் என்று வியக்கும் அளவுக்கு அவலமான வாழ்க்கைத்தரம் முகர்ஜியினுடையது.
இரண்டாம் முறை முகர்ஜியை பார்க்கும் போது அவனுக்கு ரகசியமாய் மணமாகி விட்டதாய் தெரிய வருகிறது. தன்னிடம் ஏன் தகவல் சொல்லவில்லை என்று அவன் முகர்ஜியை கடிகிறான். அவன் தனது காதலியுடன் தெருவில் போகும் போது அவளது சகோதரன் தன்னை செருப்பால் அடித்ததாய், பின்னர் இருவரும் ஓடிப் போய் கல்யாணம் பண்ணிக் கொண்டதாக, இந்த அமளியில் யாருக்கும் ஒழுங்காய் அறிவிக்க முடியாமல் போய் விட்டதாக வருத்தத்துடன் சொல்கிறான். முகர்ஜி தனக்கு ஒரு குழந்தை பிறந்துள்ளது என்றும் சொல்கிறான். ஆனால் அவன் சொல்லாமல் விட்ட ஒன்று உள்ளது. அது அவனது குழந்தைக்கு இரவு உடம்பு முடியாமல் போய் விடுகிறது. ஒரு பெண் மருத்துவரிடம் எடுத்துப் போகிறார்கள். அவள் மிகவும் எரிச்சலுடன் நடந்து கொள்கிறாள். வேண்டாவெறுப்பாக அவள் எழுதித் தரும் மருந்து குழந்தைகள் உட்கொள்ளவே கூடாது; வளர்ந்தவர்களுக்கே குறைவாக தர வேண்டிய அளவு வீரியமிக்க மருந்தை அக்குழந்தைக்கு தந்ததால் அது மேலும் நலமில்லாமல் ஆகி ஜுரத்தில் கொதிக்கிறது. அடுத்த நாள் காலை அதை வேறு ஆஸ்பத்திரிக்கு எடுத்துப் போக முகர்ஜியிடம் பணம் போதுமானதாக இல்லை. இருக்கிற கொஞ்சம் காசும் அவன் அன்று அவசரமாக சத்யன் குமார் என்கிற நட்சத்திர நடிகரை படம் எடுக்க வேண்டியதற்காக அலைந்ததில் பயணச் செலவாக கழிந்து விட்டது. அந்த நடிகரை தேடி அவன் ஸ்டுடியோவில் காத்திருக்கும் போது தான் கதைசொல்லியை அங்கு சந்திக்கிறான். அவன் தன் குழந்தையின் நிலைமையை பற்றி ஒன்றுமே சொல்வதில்லை. சத்யன் குமாரை போனில் திரும்பத் திரும்ப அழைக்கிறான். அவர் குளியறையில் உள்ளதாய் நாள் முழுக்க மாறி மாறி அவரே பொய்க் குரலில் சொல்கிறார். கதைசொல்லி தருண்முகர்ஜிக்கு படமெடுக்க வாய்ப்பு வாங்குவதற்காக முயன்று தோல்வி அடைகிறார். அன்று மாலை சத்யன் குமார் ஒரு நிகழ்ச்சிக்கு செல்கிறான்; ஆனால் அங்கும் அவன் தன் பிரத்யேக புகைக்கபடக்காரர்களைத் தவிர வேறு எவரையும் அனுமதிக்கவில்லை. ஒருநாள் முழுக்க காத்திருந்து பணத்தையும் இழந்து முகர்ஜி வீட்டுக்கு சென்றால் குழந்தை இறக்கும் தறுவாயில் இருக்கிறது. மனைவியிடம் காலையில் இருக்கிற பணத்தை கொண்டு ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்ல கேட்டிருந்தான். அவள் தனியே வெளியே போக பயந்து செல்லவில்லை. இப்போது ஒரு அரசு ஆஸ்பத்திரிக்கு எடுத்துக் கொண்டு ஓடுகிறான். அங்கே செலைன் இல்லை என்று அவனை வாங்கி வர அனுப்புகிறார்கள். ஜுரத்திற்கு வைக்க அங்கு ஐஸும் அப்போது இல்லை. முகர்ஜியின் மனைவி தான் ஈரத்துணியை வைத்து வைத்து எடுக்கிறாள். அப்போது இருந்த செவிலி அக்கறையின்றி நடந்து கொள்கிறாள். செலைன் தாமதமாக கிடைத்ததால் குழந்தையின் நிலைமை இன்னும் மோசமாகி விடிகாலை இறந்து விடுகிறது. அப்போது கதைசொல்லி தனது வீட்டில் மின்சாரம் பியூஸ் போனதால் அதை சரிசெய்ய ஆள் தேடி முகர்ஜி தன் மனைவியுடன் குடி இருக்கும் புது வீட்டுப் பக்கம் வருகிறான். அப்போது தான் சத்யன் குமாரை நாடி அவன் வந்த நாளில் நிகழ்ந்த இந்த சம்பவங்கள் எல்லாம் அவனுக்கு தெரியவருகின்றன.
முகர்ஜியின் குழந்தை இறந்ததற்கு யார் தான், எது தான் காரணம்?
அசிரத்தையாக மருந்து அளித்த பெண் மருத்துவரா? முகர்ஜி கடன் வாங்கியாவது தன் குழந்தையை அடுத்தநாள் வேறு மருத்துவரிடம் கொண்டு செல்லாமல் நடிகரை படமெடுக்கும் அவசர வேலையில் மூழ்கிப் போனதா? அவனது மனைவி வெளியே செல்ல தயங்கி குழந்தையை வீட்டிலேயே வைத்திருந்ததா? அரசு மருத்துவமனையில் செலைன் இல்லாமல் போனதா? ஐஸ் இல்லாமல் இருந்ததா? செவிலி அக்கறையின்று நடந்ததா?
பொதுவாழ்வின், சமூக அமைப்புகளின் ஊழலா, தனிமனித அசிரத்தையா, பெற்றோர்களின் சமயோஜிதமற்ற முடிவுகளா, அல்லது இந்தியர்கள் நாம் பொதுவாக நம்பத் தலைப்படுவது போல் விதியா? இவை எதுவுமே அல்ல சம்பவங்கள் அவ்வாறு அமைந்து விட்டன என்கிறார் அசோகமித்திரன். இந்த இடத்தில் உங்களுக்கு சுஜாதாவின் “நகரம்” நினைவுக்கு வரும். அதில் நகரம் எனும் ஒரு அமைப்பு மனிதனை எப்படி தனிமைப்படுத்துகிறது, அந்நியப்படுத்துகிறது என்று காட்டியிருப்பார். எந்த ஒரு அமைப்பின் சீரழிவும், அது மனிதனுக்காக அன்றி, புற்றுநோய் வந்த உடல் போல், வைரஸ் தொற்றின கருவி போல் தனக்காக மட்டும் செயல்பட துவங்குவதில் தான் இருக்கிறது. ஜெயமோகன் “ஒன்றுமில்லை” என்றொரு கதையில் நவின மருத்துவம் எப்படி மனிதனை ஒரு எளிய நோய்க்கூறைக் காட்டி சிகிச்சை என்கிற பெயரில் மரணத்தை நோக்கி தள்ளுகிறது என்று சித்தரித்திருப்பார். அசோகமித்திரனின் பாத்திரம் தன்னை சூழ்ந்துள்ள சீரழிவில் தானும் ஒரு பகுதி தான், இதையெல்லாம் எதிர்ப்பதில் விமர்சிப்பதில் அர்த்தமில்லை என்கிறான். “இந்த ஊழலை எல்லாம் நோண்டி வெளியே கொண்டு வந்து போராட வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் எவ்வளவு காலம் போராட முடியும்? மேலும் அதனால் என் போன குழந்தை திரும்பி வருமா?” என்று கேட்கிறான் முகர்ஜி. சுஜாதாவையும் ஜெயமோகனையும் போலன்றி அசோகமித்திரன் வாழ்வின் அத்தனை தீமைகளுக்கும் தனிமனிதர்களோ அமைப்போ அல்ல இவை அத்தனையையும் உள்ளடக்கிய வாழ்வின் பிரம்மாண்டமாக பிரவாகம் தான் என்கிறார். இதை எப்படி எதிர்கொள்வது என்று தெரியாமல் திக்கிட்டு நிற்கிறான். அவனது பிரமிப்பு தான் அவனை செயலற்றவனாக எதிர்க்க திராணியற்றவனாக மாற்றுகிறது. “நீ என்னிடமோ பக்கத்து வீட்டாரிடமோ கடன் வாங்கி குழந்தையை காப்பாற்றி இருக்கலாமே” என்று கதைசொல்லி கேட்க முகர்ஜி “நான் என்னென்னமோ செய்து குழந்தையை காப்பாற்றி இருக்கலாம். ஆனால் அந்த தருணத்தில் எனக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை.” என்கிறான். இந்த நாட்டில் ஒவ்வொரு சாமான்யனும் ஏகப்பட்ட சீரழிவுகள், அநியாயங்களுக்கு மத்தியில் இப்படித் தான் கேள்வியே கேட்காமல் வாழ்கிறான். ஒன்றும் செய்யாமல் இருப்பது கூட அவனுக்கான நியாயம் தான். ஒரு குழந்தையை புதைத்து விட்டு வந்து அவன் எந்த கேள்வியும் இன்றி வாழ்வை விட்ட இடத்தில் இருந்து நாளை அவன் தொடரக் கூடும்.
கதைசொல்லி இந்த அநீதிக்கு இழப்புக்கு எப்படி எதிர்வினை பண்ணுகிறான் என்பது தான் கதையின் முக்கிய சுவாரஸ்யம். குழந்தையின் மரணத்துக்கு மிகவும் மறைமுகமாக, மிகவும் சன்னமாக தொடர்புடைய சத்யன் குமாரை அவன் அடிக்கிறான். அவன் அப்படி அடிக்கக் கூடியவன் என்று ஸ்டுடியோவில் யாரும் எதிர்பார்க்கவில்லை. அவனே கூட தான் அப்படி அடிக்கக் கூடும் என்று எதிர்பார்க்கவில்லை. ஒரு அடி அடித்து விட்டு அதை விரும்பியது போல், ஒரு பயின்ற வன்முறையாளன் போல், அடுத்த அடிக்கு தயாராக கையை ஓங்குகிறான். அப்போது பிறர் அவனை பிடித்து காவலர்துறையிடம் ஒப்படைக்கிறார்கள். ”ஒரு நட்சத்திர நடிகனை அடித்தால் என்ன ஆகும் என்று பாடம் கற்பிப்பதற்காக” அவனுக்கு தண்டனையும் கிடைக்க செய்கிறார்கள். ஆனால் அவன் ஏன் தாக்கினான் என்று யாரும் அக்கறை கொள்ளவில்லை. அது தான் அமைப்பில் உள்ள அந்நியமாதல். ஏனென்றால் கதைசொல்லிக்கு நோக்கமே கிடையாது. இருட்டில் சத்தம் வரும் போது காற்றை நோக்கி கையை வீசுவது போன்றது தான் அவனது செய்கை.
குழந்தையின் மரணத்தோடு நேரடியாக தொடர்புடைய மருத்துவரையோ செவிலியையோ அவன் ஏன் தாக்க முனையவில்லை என்பது தான் முக்கிய கேள்வி. சொல்லப்போனால் அவர்களை தாக்கி விட்டு அவன் எளிதில் தப்பித்திருக்க முடியும்; வேலையையும் தக்க வைத்திருக்கலாம். சித்தாந்தங்களும் ஒழுக்க விழுமியங்களும் அறிவியல் தர்க்கமும் இந்த கேள்விக்கு பற்பல விடைகள் வைத்திருக்கின்றன. ஆனால் மனிதனின் பிரச்சனை அவன் அன்பு அல்லது வெறுப்பின் வழி தன்னை திறந்து கொண்டு வெளிப்படுத்தும் போது மேற்சொன்ன எதுவுமே அவனுக்கு துணையாக வருவதில்லை என்பது. அதனாலேயே “வெறி” கதைசொல்லியின் வன்மம் சுந்தரராமசாமியின் மீபொருண்மை வன்முறையும் அல்ல, மேலாண்மை பொன்னுசாமியின் வர்க்க எதிர்ப்பும் அல்ல. ஏனெனில் இந்திய வாழ்வில் இவை இரண்டுமே இல்லை.
இங்கு உள்ளது ஒன்று மட்டுமே: அபத்தம்.
நன்றி: அமிர்தா
Subscribe to:
Post Comments
(
Atom
)
அசோகமித்திரன் பற்றி நினைக்கும் போது இரண்டு விஷயங்களை தான் எப்போதும் நினைத்துக்கொள்வேன்.வாழ்க்கை அபத்தமானது.ஆகையால் எல்லா வாழ்க்கை நிலைகளும் மதிக்கத்தக்கதே.இந்த வாக்கியத்தை நினைத்துக்கொள்ளும் போது அந்நியன் நாவல் பற்றி நினைக்காமல் இருக்கமுடிந்ததில்லை.இந்த கட்டுரையை படிக்கும் போது அசோகமித்திரனின் வண்ணங்கள் சிறுகதையும் நினைவுக்கு வந்தது.
ReplyDeleteமிக சிறப்பான கட்டுரை.
அவர் சமீபத்தில் காலச்சுவடு இதழில் எழுதிய இழப்பு யாருக்கு என்ற கட்டுரையின் தொனி முற்றிலும் வித்யாசமாக இருந்தது.