கழிப்பறைக் கதவை
மூக்கால்
தள்ளித் திறந்து
பார்த்து விட்டுப் போகிறது
நாய்.
எப்போதும்
இந்த தன்னம்பிக்கை
எவ்வளவு தான்
சமாதானப்படுத்தினாலும்
தன் கோபத்தை, எரிச்சலை
விட்டு அமைதியாக
மறுக்கிறது நாய்.
வருத்தப்படுகையில் கவனிக்கையில் யோசிக்கையில்
தோன்றும்
அதன் முகச்சுருக்கங்கள்
ஒவ்வொரு தடவை எண்ணும் போதும்
மாறுபடுகின்றன.
ஒரு அரசியல் விவாதத்தில் டி.வி ஒருங்கிணைப்பாளனைப் போல
தன் கோபத்தின் மீது ஆவேசத்தின் மீது தர்க்கத்தின் மீது
அபார கட்டுப்பாடுண்டு
அதற்கு
ஒரு பிரச்சனை என்பது
அதைத் தான் பிரச்சனை என்று
கருதும் வரையில் தான்.
கோபப்பட்டு கொந்தளிக்க துவங்கிய பின்
பிரச்சனை முக்கியமே அல்ல
பல சமயங்களில்
அது நாலா பக்கமும் ஓடிக் குரைக்கும் முன்
பிரச்சனை முடிந்தே போகிறது
அப்போது தான்
அதன் முகச்சுருக்கங்கள் ஒவ்வொன்றாய்
அதிகமாகின்றன.
பிறகு அது
களைத்து படுத்தபடி
தன் முகச்சுருக்கங்களைப் பற்றி
கவலைப்பட ஆரம்பிக்கிறது.
என் நாய் சரியாய்
தூங்குவதே இல்லை
என மருத்துவரிடம் காண்பித்தேன்.
அவர் ஒரு இருட்டறையில் கிடத்தி
போர்வையை போர்த்தினதும்
உடனே கண்ணை மூடியது.
டாக்டர் சுட்டினார்,
“பாருங்கள் நன்றாக தூங்குகிறது”.
ஒரு சிறு சலனம்,
கண் விழித்து பாய எத்தனித்தது.
டி.வி விவாதத்தில் ஒருவர்
சற்று உணர்ச்சிவசப்பட்டு
குரலை உயர்த்தி விட்டார்
என அதற்கு
புரிய வைக்க முடியவில்லை.
முறுக்கப்பட்ட நாண் போல்
அதன் உடல் அதிர
வாயை மூடியவாறே உறுமிக் கொண்டிருந்தது.
நரம்புகளை அமைதிப்படுத்த
மருந்தூட்டி விட்டு
நாங்கள் முன்னறைக்கு வந்து டி.வி பார்த்தோம்.
நான்கு பேர் மாறி மாறி
குதறிக் கொண்டிருந்தார்கள்
அவர்களை “அப்படியே இருங்கள்” என்று
நிறுத்தி விட்டு “விளம்பர இடைவேளை” சொன்னார்கள்.
“காவல் நாய். அதனால் தான் எப்போதும் பதற்றம்”,
மருத்துவர் சொன்னார்.
நான் கேட்டேன்
“டாக்டர் காவல் நாய்க்கும் வேட்டை நாய்க்கும் என்ன வித்தியாசம்?”
“இலக்கு தொலைவில் இருந்தால் வேட்டை நாய்
அருகில் என்றால் காவல் நாய்”,
என்றார் அவர்.
டி.வி விவாதம் துவங்கியது
விட்ட இடத்தில் இருந்து.
இடது பக்கம் இருப்பவர்
வலது பக்கம் இருப்பவரை தாக்கினார்
ஆனால் வலது பக்கம் இருப்பவர்
இடதுபக்க ஆளை ஆதரித்தார்
ஒருங்கிணைப்பாளர்
எங்களைப் போல் அல்லாது
எந்த குழப்பமும் இன்றி இருந்தார்;
இன்னும் இன்னும்
எதுவரை போகும் என்று
அவர் முயன்று கொண்டிருந்தார்
ஒரு கொலைக்களத்தில் இருந்து அகல விரும்பாத கொலைகாரனைப் போல்.
மின்னும் கண்களுடன்
அப்போது
நாய்
மெல்லிய தடுமாற்றத்துடன்
இருட்டில் இருந்து வெளியேறி
வாசலை அடைந்தது.
எங்களை சில நொடிகள் பார்த்து விட்டு
சட்டென்று கண்களை மூடி
படுத்தது.
முகத்தில்
ஒரு சுருக்கம் கூட
இல்லை.
நிகழ்ச்சி முடிவுற்றது.
அடுத்த விவாதம்
ஆரம்பிக்கும் முன்னான இடைவேளை.
“எவ்வளவு அழகாக தூங்குகிறது பாருங்கள்”,
டாக்டர் சொன்னார்.
நான் ஆமோதித்தேன்.
No comments :
Post a Comment