Monday, 8 October 2012

மிஷ்கினின் “முகமூடி”: நன்மை தீமையின் எதிர்தரப்பு அல்ல



Non-telegraphic Fighting
மிஷ்கினின் “சித்திரம் பேசுதடி” படத்தில் சண்டைக்காட்சிகள் சற்று விநோதமாய் இருந்ததை கவனித்திருப்பீர்கள். முதல் சண்டை ஒரு கழிப்பறையில். நரேன் தன்னை நோக்கி வரும் எதிரிகளிடம் எந்த எதிர்வினையையும் உடல்மொழியில் காட்டாமல் சட்டென்று அசட்டையாக அடித்து விட்டு இடையே தன் ஷூ லேஸை வேறு கட்டுவார்.
“அஞ்சாதேயில்” ஆஸ்பத்திரியில் கிடக்கும் ரௌடியை கொல்ல வரும் கொலைகாரர்களை நோக்கி துப்பாக்கி ஏந்தி நடுங்கி நிற்கும் நரேன் “சரி வாங்கடா” என்று துப்பாக்கியை உதறிவிட்டு அசையாது ஒரே இடத்தில் நின்று கைகளாலே படுவேகமாக சண்டையிடுவார். இந்த சண்டையிலும் மிஷ்கினின் நாயகனிடம் தனித்து தெரியும் ஒரு பண்பு அவரது அசராத உடல்மொழி. தான் நிற்கும் பாணி அல்லது கையை ஓங்கும் விதம் கொண்டு தனது திட்டம் என்ன என்பதை அவர் எதிரிக்கு தெரிவிக்கவே மாட்டார். உண்மையில் அவருக்கு திட்டமே இல்லை. எதிரியின் ஒவ்வொரு அசைவுக்கும் ஏற்ப அவர் வளைந்து கொடுத்து அடிப்பார்.
”முகமூடியில்” முதல் சண்டைக் காட்சி ஒரு குங் பூ போட்டித் தொடரில் வருகிறது. அதில் நீலத் தலைக்கட்டு அணிந்தவன் எவ்வித குறிப்பிட்ட நிலையமைதியும் கொள்ளாமல் நிதானமாக நிற்கிறான். ஆனால் எதிராளி சின்ன பதற்றத்துடன் வேகமான காலாட்டத்துடன் அவனை நோக்கி முன்னேறுகிறான். அவனது காலாட்டத்தைக் கொண்டு அவனது நோக்கம், திட்டம் ஆகியவற்றை ஊகித்து நீலத் தலைக்கட்டுக்காரன் எளிதில் அவன் இயங்கும் வேகத்தை பயன்படுத்தி அவனையே வீழ்த்தி கோப்பையை வெல்கிறான். இந்த போட்டி ஆரம்பிக்கும் முன்னே ஜீவாவின் குங் பூ ஆசான் நீலத் தலைக்கட்டு தான் வெல்லப் போகிறான் என்று எளிதில் கணித்து விடுகிறார். “அது எப்படி sparring (விளையாட்டு மோதல்) ஆரம்பிக்கவே இல்லையே மாஸ்டர்” என்று அவரது மாணவன் வினவ அவர் “ஸ்பேரிங் முடிஞ்சிருச்சு. அவனோட stanceஐ (நிலையமைதி) பாரு” என்று சுட்டுகிறார். இப்படியான சண்டை முறையை புரூஸ் லீ non-telegraphic fighting என்கிறார். அதாவது தன் உத்தேசத்தை இறுதி நொடி வரை தெரிவிக்காது தாக்குவது. மாஸ்டர் சொல்லுவது non-telegraphic நிலையமைதி கொண்டுள்ள நீலத் தலைக்கட்டுக்காரன் முன் தீர்மானம் இன்றி அமைதியுடன், தன்னை வெளிப்படுத்தாது உள்ளதால் அவனுக்கு அனுகூலம் அதிகம்; அவனது வெற்றி அங்கேயே தீர்மானமாகி விட்டது என்பது.
மேலும் மேற்சொன்ன மிஷ்கின் பட சண்டைக்காட்சிகளில் நாயகன் முன்னே பின்னே தாவியோ ஆவேசமாய் ஓடி வந்து உதைத்தோ நாம் காணமுடியாது. முடிந்தவரை நின்ற நிலையில் தனது உடலின் மையக்கோடு எனப்படும் ஒரு கற்பனைக் கோட்டை பாதுகாத்தபடி சண்டையிடுவதை காணலாம். இது புரூஸ் லீ பயின்ற விங் சுன் குங் பூ தன் அடிப்படை விதியாக கொண்டுள்ளது. இதனாலேயே விங் சுன்னில் எந்த ஒரு கோணத்தில் இருந்து வரும் தாக்குதலையும் தடுப்பது சுலபமாகிறது. விங் சுன்னில் நம்மைச் சுற்றி ஒரு கற்பனை சதுரம் வரைந்து கொள்ள வேண்டும்; அதை நான்கு கட்டங்களாக பிரிக்க வேண்டும் – இடது மேல் கட்டம், வலது மேல் கட்டம், இடது கீழ் கட்டம், வலது கீழ் கட்டம். இந்நான்கையும் பாதுகாப்பதே பிரதான அக்கறை. சண்டையின் போது இந்த சதுர விளிம்பைத் தாண்டி குத்தவோ உதைக்கவோ கூடாது. விங் சுன்னில் (மிஷ்கினின் சண்டைக்காட்சிகளிலும்) நாம் காணும் அளவான அசைவுகளுக்கு இதுவே காரணம். மிஷ்கினின் முதல் படம் தற்காப்புக் கலை படம் அல்ல. ஆனால் தன் ஆரம்பப் படம் தொட்டே தமிழில் இம்மாதிரியான சண்டை முறையை அறிமுகம் செய்து வந்துள்ளார். இதன்வழி மிஷ்கின் இந்திய சினிமா சண்டைக் காட்சியமைப்பிற்கு புது வண்ணமும் அணுகுமுறையும் அளித்துள்ளார்.
இதே போன்று எதிரியை தன் அருகாமைக்கு வரும்படி தூண்டி இழுத்து தாக்குவதும் விங் சுன்னில் முக்கியம். இந்த உத்தியும் மிக்‌ஷ்கினின் படங்களில் அற்புதமாக சித்திரிக்கப்பட்டுள்ளதை காணலாம். குறிப்பாக மேற்சொன்ன போட்டி சண்டையில் நீல தலைக்கட்டிக்காரன் தன் எதிராளியை முதலில் உதைத்து நிலைகுலைய வைப்பார். சரி இனி பக்கத்தில் போய் தாக்கலாம் என்று எதிராளி நெருங்கி வருவான். இதை எதிர்பார்த்திருந்த நீல தலைக்கட்டுக்காரர் நெஞ்சில் படபடவென சைக்கிள் பெடல் சுற்றுவது போல விங் சுன் பாணியில் குத்தி சாய்க்கிறார். விங் சுன்னில் உதையை விட குத்து தான் வலிமையான ஆயுதம். ஆக எதிராளியை அருகே தந்திரமாக வரவழைக்க வேண்டும். அதைத் தான் இவரும் செய்கிறார். மேற்சொன்ன இந்த சண்டை யுக்தி Enter the Dragonஇல் வரும் முதல் சண்டைக் காட்சியை ஒத்துள்ளது. காப்பி என்று சொல்லவில்லை. தூண்டுதல் எனலாம். அவர் அணிந்திருக்கும் கறுப்பு ஆடை கூட லீ அப்படத்தில் அணிவதே. அதை விட முக்கியமாய் இடது காலை சற்றே மடித்து முன் எம்பி குதிகாலில் ஊன்றியபடி பின்னங்காலை நேராக வைத்து நிற்கும் நிலையமைதி நாம் புரூஸ் லீயிடம் பொதுவாக காண்பது தான். ஆனால் முகமூடி படத்தின் இச்சண்டைக் காட்சியில் ஒரு சின்ன தவறு உள்ளது. இந்நிலையமைதியின் அனுகூலம் அது எந்நேரமும் பின்னே சென்று ஒரு உதையை தவிர்க்கவோ முன்னே போய் வளைத்து நிற்கும் காலைக் கொண்டு தலைப்பகுதியில் ஒரு உதையை கொடுக்கவோ எளிதாக அனுமதிக்கிறது என்பது.

ஆனால் இக்காட்சியில் சண்டையிடுபவர் இடது காலில் முன்னே ஊன்றியபடி நின்றாலும் அதனைக் கொண்டு உதைக்காமல் சிரமப்பட்டு வளைந்து வலது காலால் உதைக்கிறார். இப்படத்தின் சண்டைக் காட்சி அமைப்பாளர் டோனி லுங் சு ஹுங் “இப்மேன்” போன்ற பிரபல படங்களுக்கு காட்சி அமைத்தவர். நாம் இதற்கு முன் பிரதானமாக குங் பூ சண்டைகளை பார்த்தது “ஆறாம் அறிவில்” தான். அச்சண்டைகள் எவ்வளவு மிகையானவை என்பதை நாம் ”முகமூடியுடன்” ஒப்பிட்டு அறிந்து கொள்ளலாம். டோனி லுங் முடிந்தவரை எதார்த்தமாக சண்டைகளை அமைத்துள்ளார். நமது அழுகாச்சி எதார்த்தவாத படங்களில் கூட சண்டைகளில் மனிதர்கள் அந்தரத்தில் பறப்பார்கள். முகமூடியில் சண்டைகள் ஆர்வமூட்டுவதற்கு இந்த எதார்த்தமும் டோனி லுங் கொண்டு வந்துள்ள வேகமும் காரணம். அர்ஜுனின் சண்டைகளில் கூட அசைவுகள் நாம் அரைத்துக்கத்தில் பார்க்கும் வேகத்தில் தான் இருக்கும். ஆனால் முகமூடியில் சண்டைகள் கண்ணிமைத்தால் தவறிப் போகும் வேகத்தை கொண்டுள்ளன. டோனி யுங் கற்பனாபூர்வமாக புத்திசாலித்தனமாக சண்டைகளை சித்தரித்துள்ளார். ஆனால் Enter the Dragon அல்லது குங் பூ ஹஸில் போன்ற படங்களில் நாம் காணும் நளினம் இப்படத்தின் சண்டைகளில் இல்லை. அதற்கு ஒரு முக்கியமான காரணம் நமது படத்துறையில் சண்டைப் பயிற்சி பெற்ற நடிகர்கள் அநேகமாக இல்லை என்பது. புரூஸ் லீயும் ஸ்டீபன் சௌவ்வும் மட்டுமல்ல அவர்களின் படங்களில் நடித்த சண்டை நடிகர்கள் அனைவருமே வருடக்கணக்காய் குங் பூ பழகியவர்கள். அங்கு சண்டைப்படம் எடுப்பது போல் இங்கு எடுப்பது கிட்டத்தட்ட இயலாத காரியம். இங்கு மாதக்கணக்காய் முக்கிய நடிகர்களுக்கு அரிச்சுவடியில் இருந்து கற்றுத்தர வேண்டும். “முகமூடி” சண்டைகளின் முக்கிய பலவீனம் இது தான். உதாரணமாக ஜீவாவை எடுத்துக் கொள்வோம். அவருக்கு ஏற்கனவே குங் பூ பயிற்சி உள்ளதாக விஜய் டி.வி பேட்டியில் சொல்கிறார்கள். ஆனால் அதே பேட்டியில் ஜீவா விங் சுன்னின் பிதாமகர் புரூஸ் லீ என்று சொல்கிறார். அவருக்கு விங் சுன்னை ஒரு பயிற்சி முறையாக ஒழுங்குபடுத்தி உலகம் முழுக்க போட்டிகள், பள்ளிகள் மூலம் பிரபலப்படுத்தியது இப்மேன் என்று தெரியவில்லை. படத்தில் ஒரு காட்சியில் ஜீவா காற்றில் குத்தி பயிற்சி எடுப்பது வருகிறது. தற்காப்புக்கலையில் முதலில் இதைத் தான் சொல்லித் தருவார்கள். இந்த பயிற்சியில் கூர்மை தான் பிரதானம். காற்றில் ஒரே புள்ளியில் இரு கைகளால் தொடர்ந்து குத்த வேண்டும். நான்கு நாள் பயிற்சி எடுத்தவர்களாலே கண்ணை மூடிக் கொண்டு இதை சாதிக்க முடியும். ஆனால் ஜீவா குத்தும் போது ஒரு கை மேற்கேயும் இன்னொரு கை கிழக்கேயும் போகிறது. ஜீவாவுக்கு விஷயம் தெரியுமோ இல்லையோ இவ்வளவு தான் நுட்பமான விபரங்களில் ஆர்வம். நரேன் தன் சீடர்களுக்கு பயிற்சி அளிக்கும் ஒரு காட்சி வருகிறது. அப்போது அவரது அசைவுகள் நடுக்கமாக “சங்கமம்” படத்தில் விந்தியா நாட்டியம் ஆடுவது போல் உள்ளது. ஆனால் முக்கியமான சண்டைக்காட்சிகளில் இருவரும் ஓரளவு நன்றாகவே செய்துள்ளார்கள். இதற்கு நாம் டோனி லுங்ஙை தான் பாராட்ட வேண்டும். இன்னொன்று படத்தொகுப்பு. வெட்டி வெட்டி ஒட்டுவதன் மூலம் நடிகர்களின் சண்டை தத்தளிப்புகளை மறைத்து விடுகிறார்கள். ஆனால் இதுவே ஒரு குறையாகவும் உள்ளது. புரூஸ் லீ உள்ளிட்ட சிறந்த சண்டை நடிகர்களின் படங்களில் நம்மை பெரிதும் கவர்வது நீண்ட வெட்டுகள் இல்லாத சண்டைகள். வெட்டி ஒட்டப்பட்ட சண்டைகள் சிறிது நேரம் பிரமிக்க வைத்தாலும் நம்மை பெரிதாய் கவர்ந்து மனதில் தங்குவதில்லை – ஏனெனில் அவற்றில் எதார்த்தம் இல்லை.
ஜீத் கூன் டு: எளிமையும் நுட்பமும்
மேற்சொன்ன நீலத் தலைக்கட்டு வீரனுடன் ஜீவா மோதும் காட்சி ஒன்று வருகிறது. இச்சண்டையில் டோனி லுங் இன்னொரு படி போய் புரூஸ் லீயின் ஜீத் கூன் டு சண்டைத்தத்துவத்தின் சில உத்திகளை பயன்படுத்துகிறார். ஜீத் கூன் டூவில் ஆர்ப்பட்டமான சிக்கலான உத்திகளை விட நடைமுறையில் உதவும் எளிய அடவுகளே முக்கியம். உதாரணமாக தெருச்சண்டையில் ஒருவர் நம் கையைப் பற்றுகிறார் என்றால் ஜூடோ ஸ்டைலில் அவரைச் சுற்றி வளைத்து தூக்கி எறியவெல்லாம் வேண்டியதில்லை. அவரது காலை சட்டென்று மிதித்து அவர் சீர்குலைந்து தன்னெழுச்சியாக கீழே குனிகையில் முழங்காலால் மிதிக்கலாம். அதே போல் ஒருவர் குத்த வந்தால் சட்டென்று வலப்பக்கம் விலகி நின்று குத்தை தவிர்த்து அதே வேளையில் அவரது விலாவிலும் குத்தலாம். இதை சந்தையில் நடக்கும் மற்றொரு சண்டைக்காட்சியில் ஜீவா செய்கிறார்:


கீழ் வரும் மற்றொருகாட்சியில் ஜீவா தன்னை உதைக்கும் எதிராளியை சற்று விலகி நின்று எளிதில் தடுப்பதை பாருங்கள். இதன் மூலம் எதிராளியை விசையை உள்ளே வர அனுமதித்து உதையை பலவீனமாக்குகிறார் ஜீவா.

ஜீவாவின் வலது கை/காலுக்கு உதைப்பவரின் கால்களுக்கு இடையிலுமான ஒரு திறப்பு இருப்பதை பாருங்கள். கற்பனையில் ஒரு அம்பு இழுங்கள். புரூஸ் லீ இந்த சந்தர்ப்பத்தில் என்ன செய்வார்? விதைப்பையில் உதை, அல்லது வலது காலை மடித்து அமர்ந்து விதைப்பையில் ஒரு குத்து. ஆனால் டோனி லுங் நளினம், நாகரிகம் கருதி இப்படியான உத்திகளை மட்டும் இப்படத்தில் தவிர்த்து விட்டார் எனலாம்.
ஒரு அங்குலக் குத்து
ஜீவாவின் ஆசானான சந்துருவுக்கும் வில்லன் அங்குசாமிக்கும் இடையிலான சண்டை மிக அழகாக வந்துள்ளது. சந்துருவாக வரும் செல்வா ஜீவாவை விட லகுவாக வேகமாக கூர்மையாக சண்டையிடுகிறார். குறிப்பாக இச்சண்டையில் விங் சுன் குங் பூவின் முக்கிய அடவான ஒட்டும் கரங்கள் முறையை (sticking hands) பார்க்கலாம். ஒட்டும் கரங்கள் என்பது மிக அருகாமையில் நின்று குத்துவது. குத்தியபடியே தனது தற்காப்பை தக்க வைப்பது. இதில் நிபுணத்துவம் உள்ளவர் மீது எந்த திசையில் இருந்து குத்தினாலும் படாது. அது மட்டுமல்ல இப்பெயர் குறிப்பது போல எதிராளியின் கைகளை தம் கைகளோடு ஒட்ட வைப்பது போல் கட்டுப்படுத்த இதில் முடியும். இச்சண்டைக் காட்சியிலும் இறுதிச் சண்டைக் காட்சியிலும் புரூஸ் லீ பிரபலப்படுத்திய ஒரு அங்குலக் குத்து வருகிறது. குத்தும் போது முழங்கை, தோள், இடுப்பு ஆகிய பகுதிகள் ஒரே தருணத்தில் பொருந்தி முன்னேகுவதன் மூலம் ஒரு அங்குல அண்மையில் இருந்து பெரும் விசையுடன் குத்துவதே இந்த பாணி. புரூஸ் லீ இதன் மூலம் பலரை நிஜவாழ்க்கை செயல்விளக்கங்களின் போது பறக்க விட்டிருக்கிறார். ஒரு அங்குலக் குத்தின் போது முதலில் முன்னங்கை சற்று வளைந்தபடி இருக்க வேண்டும். இலக்கை தொடும் அக்குறிப்பிட்ட நொடியில் சட்டென்று நிமிர வேண்டும். இப்படத்தின் கிளைமேக்ஸ் காட்சி சண்டையில் வரும் ஒரு அங்குலக் குத்தை கூர்ந்து கவனிப்பவர்கள் ஜீவாவின் முன்னங்கை சரியான நிலையில் இருப்பதை காணலாம். டோனி லுங் இப்படியான சின்ன சின்ன விசயங்களில் கூட மிகுந்த கவனம் காட்டி இருக்கிறார்.

நேர்கோட்டுக் குத்தின் ஆற்றலும் அறிவியலும்
படத்தில் வரும் குத்துகளின் போது முஷ்டியின் அமைப்பில் ஒரு வேறுபாட்டை தொடர்ந்து நாம் காணலாம். அதாவது பொதுவாக நாம் குத்தும் போது முஷ்டி பக்கவாட்டில் இருக்கும். ஆனால் கீழ்வரும் படத்தில் ஜீவாவின் முஷ்டி நேர்கோட்டில் இருப்பதை பாருங்கள். இது தான் விங் சுன்னின் நேர்கோட்டு குத்து (straight-line punch).

வழமையான குத்தில் (அதாவது மரபான குத்துச்சண்டையில் நாம் பார்க்கும் reverse punch) நமது பெருவிரல் மற்றும் சுட்டு விரலின் கணுக்கள் தாம் தாக்க பயன்படுவன. ஒருமுறை உங்கள் பாணியில் காற்றில் குத்தி பாருங்கள். முஷ்டியின் அழுத்தம் பெரு மற்றும் நடுவிரல் கணுக்களில் தான் இருக்கும். ஆனால் இந்த reverse punch பாணியில் உங்கள் கைக்கு நிலைப்பு மற்றும் சமநிலை இராது. ஏனென்றால் அறிவியல்படி நேர்கோட்டில் முஷ்டி இருக்கையில் தான் நமது நமது முழங்கை உடலின் புவியீர்ப்புக் கோட்டின் ஒழுங்குக்கு வருகிறது. இதனால் குத்தும் போது கை தனியாக உதறாமல் உடலின் மொத்த பளுவும் அதில் பாய்ந்து அபாரமான ஆற்றல் கிடைக்கிறது. மேலும் கையின் மேல் இரு விரல்களை விட கீழ் மூன்று விரல்களைத் தாம் முழங்கை அதிக வலுவுடன் தாங்குகிறது என்கிறது அறிவியல். இதனால் தான் விங் சுன்னில் குத்தும் பாணி வேறாக நேர்கோட்டில் இருப்பதுடன் விங் சுன் தாக்குவதற்கு கீழ்மூன்று விரல் கணுக்களை பயன்படுத்துகிறது. இந்த நுட்பமான விபரம் கூட இப்படத்தின் சில காட்சிகளில் கவனமாக கொண்டு வரப்பட்டுள்ளது.
ஒரு கராத்தே குழப்பம்
நம்மூரில் கராத்தே தான் அதிக பிரபலம். யார் பெல்ட் கட்டி ஊ ஹா என்று பயின்றாலும் கராத்தே என்று நினைப்பார்கள். “முகமூடியில்” இந்த பொதுப்புத்தி குறித்த நக்கல் பட இடங்களில் வருகிறது. கராத்தே ஜப்பானிய வடிவம். குங் பூ சீனாவில் தோன்றியது. குங் பூ சீனாவில் இருந்து ஜப்பானுக்கு சென்றது (குங் பூவே இந்தியாவில் இருந்து சீனாவுக்கு சென்றது என்றும் கூறுகிறார்கள்). ஆனால் இம்மூன்றில் கடைசியாக தோன்றிய கராத்தே தான் அதிக பிரபலமானது. இரண்டாம் உலகப்போரின் போது ஜப்பானில் சென்று முகாமிட்ட அமெரிக்க ராணுவ வீரர்கள் மூலம் அமெரிக்காவுக்கும் அங்கிருந்து ஐரோப்பா எங்கும் கராத்தே பரவியது. அறுபதுகளில் கராத்தேவின் ஆதார வடிவமான குங் பூவை அது ஏதோ சீன உணவு என்கிற வகையில் தான் அமெரிக்கர்கள் அறிந்து வைத்திருந்தார்கள் என்கிறார் புரூஸ் லீ. மேலும் சீனர்கள் வேற்றினத்தவர்களுக்கு குங் பூ சொல்லித்தர மறுத்ததால் அது ஒரு மியூசியப் பொருள் போல மாறியது. குங் பூவை உலகமெங்கும் பிரபலப்படுத்தியதில் புரூஸ் லீக்கும் கிக் பாக்ஸ்ங் எனப்படும் அமெரிக்காவில் பிரபலமான சண்டைப் போட்டிகளுக்கும் முக்கிய பங்குண்டு.
கராத்தேவுக்கும் குங் பூவுக்கும் பிரதான வேறு பாடு என்ன? தற்காப்புக்கலைகளை மென்மை, வன்மை என்று பிரிக்கிறார்கள். குங் பூ மென்வகை. அது மனதை தியான நிலையில் திரட்டுவதன் மூலம் அபாரமான ஆற்றலை வெளிப்படுத்த முடியும் என வலியுறுத்துகிறது. அதாவது தசை வலு அல்ல உள்ளார்ந்த மன ஆற்றல் தான் முக்கியம் என்கிறது. அடுத்து தாக்குதலின் போது எவ்வித முன் தீர்மானமும் இன்றி இருக்கும் படி வலியிறுத்துகிறது குங் பூ. கராத்தே ஒரு எதிரி மூர்க்கமாக குத்தும் போது அதே அவேசத்துடன் அதைத் தடுத்து குத்த கூறும். ஆனால் குங் பூ அவனது குத்துக்கு வழி விட்டு அவன் தன் சமநிலையை இழக்கும் தருணத்தில் தாக்க அறிவுறுத்தும். அப்போது அவனது முன் நோக்கிய திணிவு வேகம் (momentum) நமது குத்தின் வலிமையை இரட்டிப்பாக மாற்றும். உலகக்கோப்பையின் போது ஷோயப் அக்தரை சேவாக் மேல் வெட்டின் மூலம் அவரது வேகத்தைக் கொண்டே சிக்ஸர் அடித்ததைப் போன்றது இந்த யுக்தி.
யின் யாங் தத்துவமும் தீமை பற்றிய புரிதலும்
இன்னொரு புறம் இந்த யுக்தி யின்-யாங் தத்துவத்தின் சாரத்தை சித்தரிக்கிறது. யின் என்பது இருண்மை, நெகிழ்வற்றது, தீமை என எதிர்மறை பண்புகளை குறிக்கிறது. யாங் வெளிச்சத்தை, நெகிழ்வை, நன்மையை குறிக்கிறது. சீன தத்துவம் நன்மை தீமை இரண்டும் வேறுவேறல்ல; ஒன்று இல்லாமல் இன்னொன்றை நாம் அறியவோ அடையவோ முடியாது என்கிறது. தீமையை உறிஞ்சி தான் நன்மை வளர்கிறது. ஆக தீமையை அழிக்க நினைப்பவர்கள் தோற்பார்கள். தீமையை செரித்து வளர்பவர்கள் மட்டுமே அதைக் கடந்து நன்மையை அடைவார்கள். அதனால் தான் வாழ்வை எதிர்ப்பதை விட நெகிழ்வுத்தன்மையுடன் இருப்பது முக்கியம் என்கிறது யின்–யாங் தத்துவம்.
தீமை மேலெழும் சந்தர்ப்பம் வரும் போது அதனை ஏற்று அமைதி காத்து விட்டு தீமை வீழும் சந்தப்ர்பம் வரும் போது மட்டும் அதனை எதிர்கொண்டு முறியடிக்க வேண்டும். வாழ்வில் நமது பங்கு பங்கெடுப்பது மட்டுமே; வாழ்வை யாரும் கட்டுப்படுத்துவதோ மாற்றியமைப்பதோ இல்லை என்பது ஒரு ஜென் அணுகுமுறை. இதே போல் குங் பூவிலும் எதிராளி முன்னேகி தாக்கையில் அவனை தடுப்பது நமக்கு ஊறு விளைவிக்கவே செய்யும். தீமையை நாம் அனுமதிப்பது போல் எதிராளியையும் முன்வர அனுமதிக்கிறோம். தீமையை உண்டு செரிப்பது போல் எதிராளியை அவனது வலிமையை கொண்டே வீழ்த்துவோம் என்கிறது குங் பூ. ஒரு குங் பூ நிபுணன் வாலியை போன்றவன். எதிரில் நிற்பவனின் பாதி வலு அவனுக்கு வந்து விடும். சண்டையின் போது அவனும் எதிராளியும் வேறு வேறல்ல. புரூஸ் லீயுடன் சண்டையிடும் போது நமது கரங்களையும் சேர்த்து அவர் கட்டுப்படுத்துவார் என்பார் அவரது சீடரான ஜெஸ்ஸி குளோவர். எதிரியை தன் பகுதியாக மாற்றி ஏற்பவனுக்கு இரண்டல்ல, நான்கு கரங்கள்!
ஒரு தற்காப்புக்கலை படமாக முகமூடியின் முக்கியத்துவம்
பொதுவாக தமிழ் சினிமாவில் கராத்தே, குங் பூ போன்ற சண்டைக்கலைகளின் பாதிப்பு நேரடியாகவும் மறைமுகமாகவும் இருந்துள்ளது. ஆனால் மிஷ்கினிடம் மட்டுமே குங் பூ கலையின் தத்துவம் அதன் நுட்பங்களுடன் புரிதலுடன் வெளிப்படுகிறது. அவரது சமீபத்திய “முகமூடி” இதற்கு முழுமையான உதாரணமாக உள்ளது. புரூஸ் லீயின் ஜீத் கூன் டு சண்டைத் தத்துவம் பற்றின அவதானிப்புகள் படமெங்கும் வருகின்றன. இப்படத்தை புரூஸ் லீ மீதான ஒரு homage என்றே சொல்லலாம். தமிழில் இதை செய்யத் தகுதியான ஒரே இயக்குநராகவும் மிஷ்கின் இருக்கிறார். இதுவரையிலான மிஷ்கினின் படங்களின் சண்டைக் காட்சிகளில் நாம் பார்த்த புரூஸ் லீ பாதிப்பு வெறும் விநோதத்துக்காக மணிரத்னம் பாணி முயற்சிகள் அல்ல என்பதை முகமூடி தெளிவாகவே காட்டி விடுகிறது.
“முகமூடி” ஒருவகை தமிழ் பேட்மேன் என்று தான் ஊடகங்களில் பொதுவாக சித்தரிக்கப்பட்டது. படத்தின் திரைக்கதை பாணி பெரிதும் பேட்மேனை நினைவு படுத்துகிறது தான். வில்லனான அங்குசாமியின் (நரேன்) பாத்திரம் கூட ஹீத் லெட்ஜரின் ஜோக்கரை நினைவுபடுத்துகிறது. இது இப்படத்தின் ஒரு இழை மட்டும் தான். இன்னொரு பக்கம் இப்படம் புரூஸ் லீயின் Fist of Fury, Enter the Dragon போன்ற தற்காப்புக்கலை படங்களின் பாதிப்பையும் வலுவாக கொண்டுள்ளது. ஒரு மாஸ்டரின் கீழ் குங் பூ பயிலும் இரு மாணவர்கள். ஒருவர் தீமையை நோக்கியும் மற்றவன் நன்மையை நோக்கியும் செல்கிறான். மாஸ்டரை தீய குங் பூ வீரன் கொல்கிறான். அவனை பழிவாங்க நல்ல வீரன் முனைகிறான். அவன் கொல்லப்பட தற்போது அவனது மாணவன் தன் ஆசானின் மரணத்துக்கு பழி வாங்க கிளம்புகிறான். இந்த பழிவாங்கும் பாணி சூப்பர் மேன், ஸ்பைடர் மேன், பேட் மேன் போன்ற அமெரிக்க சூப்பர்ஹீரோ படங்களில் இருந்து ஒருவிதத்தில் முழுக்க முரண்படுகிறது.
அமெரிக்க சூப்பர்ஹீரோவும் கர்த்தரும்
அமெரிக்க சூப்பர் ஹீரோ சமூகத்துக்காக தன் அற்புத ஆற்றலை, அதனால் வரும் அதிகாரத்தை மிகுந்த பொறுப்புணர்வுடன் சமூக நலனுக்காக செலுத்துபவன். அவன் ஒரு தியாகி, காவலன், முகமூடி அணிந்த ஒரு கர்த்தர். “மிகுந்த ஆற்றலுடன் மிகுந்த பொறுப்புணர்வுடன் கூடவே வருகிறது” எனும் ஸ்பைடர் மேன் பட வரி இப்படங்களின் ஆதாரப் புள்ளி. (கர்த்தர் தன்னை இறைவனின் மகன் என்று உணர்கிறார். ஆனால் இந்த அறிதலின் ஆற்றல் அவரை உலகின் பாவத்தை மொத்தமாக சிலுவை வடிவில் சுமக்க வைக்கவும் செய்கிறது.)
ஆனால் ஒரு ஆசிய சமூகத்தில் ஒரு தனிமனிதன் தன்னை சமூக பொறுப்பாளனாக அல்லாமல் தன் குடும்பத்தின் பகுதியாக உணரத் தான் வாய்ப்பு அதிகம். இந்தியா சீனா போன்ற சமூகங்கள் இனக்குழு உணர்வுகளும், படிநிலை பிரக்ஞையும் மிக்க மக்களைக் கொண்டது. சம-உரிமை வலுவான கருத்தியலாக நிறுவப்பட்ட அமெரிக்காவில் போன்று இங்கு முழுமையான தேசியவாத உணர்வை மக்கள் அடைவது சிரமம். இங்கு மனிதன் தன்னை ஒரு மொத்த தேசிய சமூகத்துடன் அல்லாமல் ஒரு குழு (சாதிய இன) அடையாளத்துடன் மட்டுமே தன்னை எளிதில் உணர்கிறான். அதனால் தான் புரூஸ் லீ தனது படங்களில் ஒரு சமூக நோக்குக்காக வில்லனோடு மோதுவது இல்லை. தங்கை, ஆசான் போன்றவர்களின் கொலைகளுக்கு பழிவாங்குவது தான் முதன்மை உத்தேசம். Enter the Dragonஇல் இது தெளிவாக வரும். இப்படம் ஒரு ஹாலிவுட்-சீன் கூட்டுத் தயாரிப்பு என்பதால் மயக்கமருந்து கடத்தும் மாபியா தலைவனான ஹேனை பிடிக்க ஒரு தார்மீக கடமையுடன் சி.ஐ.ஏ புரூஸ் லீயை நியமிக்கிறது. ஆனால் புரூஸ் லீக்கு சட்டபூர்வமான குற்றங்கள் எல்லாம் ரெண்டாம் பட்சம் தான். வில்லனான ஹேன் தன் தங்கையின் மரணத்துக்கு காரணமானவன், தான் பயின்ற ஷாவொலின் கோயிலுக்கு அவமரியாதை ஏற்படுத்தியன். அதனால் தான் அவனை கொல்ல வேண்டும் என நினைக்கிறார். இறுதிக் காட்சியில் வில்லனைக் கொல்லும் முன் லீ இவை இரண்டையும் தான் அவனது குற்றங்களாக அறிவிக்கிறார், அவனது சட்டபுறம்பான செயல்களை அல்ல.
இந்த ஆசிய மனப்பான்மையை உணர்ந்து தான் மிஷ்கினும் தனது நாயகனை குடும்பத்துக்காக பழிவாங்குபவனாக சித்தரிக்கிறார். ஜீவா தன் நண்பனைக் கொன்றதற்காக வில்லனை அழிக்க முதலில் முடிவெடுக்கிறார். அதற்கடுத்து தன் ஆசானைக் கொன்றதற்காக. இருமுறை குழந்தைகளை காப்பாற்றுவதற்காக, தன் எதிர்கால மாமனாரின் உயிரை பாதுகாப்பதற்காக சண்டையிடுகிறார். பல முதிய தம்பதிகள் கொடூரமாக வில்லனால் கொல்லப்படுவது பற்றி, அவர்களின் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்படுவதற்காக ஜீவா அக்கறைப் படுவதாக படத்தில் எங்குமே இல்லை. இது தான் ஆசிய சூப்பர் மேன். அவன் இப்படி மட்டுமே நம் இந்திய திருநாட்டில் இருக்க முடியும். இதை ஒரு குறையாக நான் கூறவில்லை. ஆக இங்கு ஒட்டுமொத்த சமூகநீதிக்காக இயங்கும் ஒரு அதிநாயகனை காட்டுவதும் எதார்த்தமாக இருக்காது தான்.
குங் பூ கலாச்சாரமும் இந்தியாவும்
“முகமூடியில்” குங் பூ படங்களின் தாக்கத்தை குறிப்பிட்டேன். சுவாரஸ்யமாக குங் பூ பாணி காட்சிகள் தாம் படத்தின் பிரதான வலுவாக உள்ளன. அதாவது குங் பூ என்றது சண்டைக் காட்சிகளை மட்டும் உத்தேசித்து அல்ல. புரூஸ் லீயின் வாழ்க்கை, அவரது நம்பிக்கைகள், தத்துவம் ஆகியவற்றை சித்தரிக்கும் பகுதிகள் படத்தில் ஆழம் மிக்கவையாக படைப்பூக்கம் கொண்டவையாக வந்துள்ளன. மாறாக படத்தின் இன்னொரு பகுதியான ஹாலிவுட் மோஸ்தர் பேட்மேன் கதையோட்டம் குழந்தைத்தனமாக ஏதோ ஜெட்டெக்ஸ் பார்ப்பது போல் உள்ளது. ஆக இப்படத்தை ஒரு தற்காப்புக்கலை படமாக பார்ப்பதே உசிதம்.
“முகமூடியின்” இரண்டாவது சண்டைக்காட்சி ஜீவா தன் ஆசானை அவமானப்படுத்திய டிராகன் குங் பூ பள்ளியின் பிரதான மாணவனை எதிர்கொள்ளும் காட்சி. இப்படம் முழுக்க ஆசான மீதான் குங் பூ மாணவர்களின் அபரிதமான மரியாதை மற்றும் பாசம் நெகிழ்ச்சியாக சித்தரிக்கப்பட்டுள்ளது. ஒரு காவல் நிலையக் காட்சியில் தங்கள் ஆசானை இன்ஸ்பெக்டர் அறைவதைக் கண்டு மாணவர்கள் கொதித்து எழுகின்றனர். அவர்கள் தங்கள் நிலைமறந்து போலீசாரிடம் மோதி சாய்கிறார்கள். இத்தகைய அபரித மரியாதையை பொதுவாக இங்கு சென்னையில் உள்ள தற்காப்புக்கலை மாணவர்களின் நடவடிக்கைகளிலேயே நாம் காணுறலாம். தற்காப்புக்கலை பள்ளிகள் ஒரு நீட்டிக்கப்பட்ட குடும்பமாகவே இயங்குகிறது. பள்ளிக்குள் ஒரு திட்டவட்டமான படிநிலை தக்கவைக்கப்படும். சில மாதங்கள் பயிற்சியிலேயே உங்களுக்கு ஆசானுக்கும், மூத்த வீரர்களுக்கும் கீழ்ப்படிவது, மரியதை செலுத்துவது என்பவை இரண்டாம் குணமாகி விடும். இன்று ஜனநாயகபூர்வமாகி விட்ட குடும்பங்கள், பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் எங்கும் இவ்வளவு வலுவாக படிநிலை பாவிக்கப்படுவதில்லை. படிநிலைக்கு பணிவது மனிதனின் ஆதார குணம் என்பதால் தற்காப்புக்கலை பயில்பவர்களுக்கு ஆசானைப் பணிதல் மற்றும் வழிபடுதல் என்பது தன்னிச்சையாகவே வருகிறது. குங் பூ என்பது வெறும் சண்டைக்கலை மட்டுமே அல்ல. அது வாழவும் கற்றுத் தருகிறது. சீனாவில் குழந்தைகளை பண்படுத்துவதற்காக குங் பூ பள்ளிக்குத் தான் அனுப்புவார்கள். ஆக ஒரு குங் பூ ஆசான் வாழ்வின் ஆசானாகவும் இருக்கிறார். இப்படத்தில் ஜீவாவுக்கும் அவரது அப்பாவுக்கு இடையே நல்லுறவே இல்லை. ஆக ஆசான் அவரது அப்பா ஸ்தானத்துக்கு எளிதில் வந்து விடுகிறார்.
ஜீவா தன் ஆசானுக்காக எதிரிப் பள்ளியின் குங் பூ வீரருடன் சண்டை போடுகிறார். இதில் எதார்த்தம் உள்ளதா? சென்னையில் அவ்வளவாய் இல்லை. இங்கு தற்காப்புக் கலை ஒரு விளையாட்டு என்கிற ரீதியில் தான் பழகப்படுகிறது. பெரும்பாலான பள்ளிகள் குழந்தைகளை தான் பிரதானமாக பயிற்றுவிக்கின்றன. சீனாவில் போல் நமது பண்பாட்டில் தற்காப்புக்கலை பயில்வது பிரதனமாக இல்லை. இங்கு ஆங்கிலேயரின் வருகைக்குப் பின், குறிப்பாக வெடிமருந்து பயன்பாடு அதிகரித்த சூழ்லில் சிலம்ப வரிசை, வர்மக்கலை, களரிப்பயிற்று, மல்யுத்தம் போன்ற கலைகள் மவுசை இழந்தன. ஆனால் சீனாவில் காலனிய ஆட்சி நிலவிய போதும் கூட துப்பாக்கி தடை செய்யப்பட்டிருந்தது. ஆங்கிலேயக் காவலர்கள் கூட லத்தி மட்டும் தான் பயன்படுத்தினர். அதனால் அங்கு குங் பூ உள்ளிட்ட சண்டைக்கலைகள் தழைத்தன. இந்தியாவில் போர்வீரர்கள் மட்டுமே சண்டைக்கலைகள் பயின்றார்கள். ஆனால் சீனாவில் துறவிகள் பிரதானமாக குங் பூ பயின்றதுடன் அதனை விரிவுபடுத்த பல கிளைகளாக வளர்த்தார்கள். இத்துறவிகள் மஞ்சூரிய கொடுங்கோல் ஆட்சியின் போது புரட்சியாளர்களுக்கு அடைக்கலம் அளித்து குங் பூவும் கற்றுக் கொடுத்தனர். ஆக அங்கு பொதுமக்களும் சகஜமாக குங் பூ பழகினர். அங்கு தயிர்விற்பவன், விவசாயி, கறிவெட்டுபவன் கூட குங் பூ நிபுணனான எளிதில் இருப்பான். இது போன்ற பரவலால் குங் பூ சீன கலாச்சாரத்தில் பிரதான இடம் பெற்றது. குங் பூ என்றாலே சீனமொழியில் சண்டை என்றல்ல நிபுணத்துவம் என்றே பொருள். எந்த துறையில் நிபுணத்தும பெற்றவனையும் குங் பூ கலைஞன் எனலாம்.
குங் பூவுக்கு பல்வேறு வகைப்பாடுகள் இருந்ததாலும், பரவலாக அவை பயிலப்பட்டதாலும் எது சிறந்தது என்கிற போட்டி அடிக்கடி ஏற்பட்டது. விளைவாக ஹாங்காங்கில் குங் பூ கலைஞர்களிடையே மோதல்கள் நடப்பது ஒரு அன்றாட நிகழ்வு என்கிறார் புரூஸ் லீ. விடிகாலையில் மக்கள் பொதுவிடங்களில் குங் பூ பழகிக் கொண்டிருப்பார்கள். அப்போது வழியே செல்லும் வேறுபாணியை சேர்ந்த குங் பூ கலைஞர்கள் அவர்களை சீண்டி சண்டைக்கு இழுப்பார்கள். ஹாங்காங்கில் பொதுவிடத்தில் பயிற்சி செய்தால் சண்டை சவால்களை தவிர்க்கவே முடியாது என்கிறார் லீ. இன்னொரு பக்கம் வெவ்வேறு பாணிகளைச் சேர்ந்த குங் பூ பள்ளி மாணவர்கள் சதா பரஸ்பரம் மோதிக் கொள்வார்கள். இச்சண்டைகள் பெரும்பாலும் மொட்டைமாடிகளில் நடைபெறும். பொதுவாக இளைய மாணவர்களை தான் கோதாவில் இறக்குவார்கள். இவற்றில் தோல்வி அடைந்தால் அவர்களால் நிம்மதியாக தொடர்ந்து பயில முடியாது. தோற்றவர்களை அவர்களின் சீனியர்கள் வேறு தமக்கு அவமானம் ஏற்படுத்தியதற்காக அடித்து துவைத்து விடுவார்கள். அதனால் இளைய வீரர்கள் கடும் நெருக்கடியில் இருப்பார்கள். அதைப் போன்று அக்காலத்தில் சீனாவில் ஆசான்கள் வணிகர்களுக்கு காவல் அளித்து வருமானம் பெற்றார்கள். இதனால் இந்த ஆசான்களை தோற்கடித்து காவல் பணம் வாங்க எதிரிப்பள்ளிகளைச் சேர்ந்தவர்கள் விடாமல் முயல்வார்கள். தொடர்ந்து சவால் விட்டுக் கொண்டு இருப்பார்கள். ஆனால் அவ்வளவு எளிதாக ஆசானை அவர்கள் நெருங்க முடியாது. மொத்த பள்ளியும் ஆசானை பாதுகாக்கும். ஜூனியர், சீனியர் மாணவர்கள் அனைவரும் வீழ்ந்த பின்னரே ஆசானுடன் அவர்கள் மோத முடியும். ஆக குங் பூ பள்ளிகளுக்கு இடையேயான மோதல் என்பது சீனாவில் ஒரு அன்றாட நிகழ்வாக அந்தஸ்து போட்டியாக இருந்தது. பல சீன தற்காப்புப் படங்களில் வில்லன் ஒரு தற்காப்புக்கலை பள்ளியின் பிரதான மாணவனாகவோ ஆசானாகவோ இருப்பது இதனால் தான். “முகமூடியிலும்” இரு குங் பூ பள்ளிகளுக்கு இடையிலான மோதல் தான் பிரதானமாக வருகிறது. ஆனால் மிஷ்கின் காட்டுவது இந்திய எதார்த்தம் அல்ல, சீன எதார்த்தம். சீனப் பண்பாடு, சீன குங் பூ வரலாறு.
“முகமூடியில் ”புரூஸ் லீயின் வாழ்க்கை சித்தரிப்பு
இப்படத்தில் ஜீவாவின் ஆசான் சந்துரு தனது மாணவர்களிடம் இருந்து கட்டணம் பெற மாட்டார். புரூஸ் லீ அமெரிக்காவில் இருந்த ஆரம்ப காலத்தில் இவ்வாறு தான் இருந்தார். அவர் பல மாணவர்களுக்கு இலவசமாகத் தான் கற்றுத் தந்தார். அதனால் அவர் தனது அன்றாடத் தேவைகளுக்கு ஒரு உணவகத்தில் மேசை துடைக்கும் பணி செய்ய வேண்டி வந்தது. இந்த அவலம் அவருக்கு பெரும் மனச்சோர்வை ஏற்படுத்தியது. இதை உணர்ந்த அவரது மாணவர்கள் தாமாக முன் வந்து கட்டணம் செலுத்தி புரூஸ் லீக்கு உதவினர். அவரது குங் பூ பள்ளிக்கூட கட்டிடத்துக்கு வாடகை செலுத்துவதற்காக. மேலும் அவர்களாகவே புதிய மாணவர்களை கொண்டு வந்து சேர்த்து தம் ஆசானுக்கு அப்பள்ளி மூலமாக போதுமான வருமானம் வரும்படி ஏற்பாடு செய்தனர். இப்படத்திலும் ஜீவா தன் ஆசானின் பள்ளி வாடகை செலுத்தாததால் மூடப்படும் நிலை வரும் அதைத் தடுக்க புதிய மாணவர்களை சேர்க்கும் முயற்சியில் ஈடுபடுகிறார். அவர் அதற்காக மீன்சந்தையில் ஒரு குங் பூ செயல்விளக்கம் தருகிறார். புரூஸ் லீயும் இது போல பொதுவிடங்களில் பல செயல்விளக்கங்கள் செய்து தான் தன் பள்ளிக்கு மாணவர்களை சேர்த்தார். “முகமூடியில்” ஜீவா குங் பூவுக்கு சவால் விடும் ஒரு ரௌடியை அவர் எளிதில் வீழ்த்தி அந்த பகுதி மக்களை ஈர்க்கிறார். விளைவாக அவரது ஆசானின் பள்ளியில் புதிதாக பல மாணவர்கள் சேர்கிறார்கள். புரூஸ் லீயும் இது போல் பல சவால்களை செயல்விளக்கங்களின் போது எதிர்கொண்டுள்ளார். ஆனால் அவர் ஜீவாவைப் போன்று முழுமூச்சோடு சண்டையிடாமல் எதிராளியை திக்குமுக்காட வைத்தபடியே இன்னொரு பக்கம் இடைவிடாது குங் பூ பள்ளி பார்வையாளர்களுக்கு விளக்குவார். இப்படத்தில் ஜீவாவின் ஆசான் தன் மாணவர்களை குங் பூ போட்டிகளில் கலந்து கொள்ள அனுமதிக்க மாட்டார். மாறாக புரூஸ் லீ தன் மாணவர்களை போட்டிகளில் கலந்து கொண்டு பல போட்டித் தொடர்களை வெல்ல உதவியுள்ளார். ஆனாலும் புரூஸ் லீ சண்டைக்கலையை ஒரு போட்டியாக மாற்றுவதை ஆதரிக்கவில்லை. சண்டைக்கலை என்பது தெருச்சண்டையின் போது நடைமுறைரீதியாக ஒருவருக்கு பயன்பட வேண்டுமே அன்றி போட்டியில் கோப்பைகள் வெல்வதற்கு அல்ல என்று அவர் கூறினார். போட்டி வளையத்தில் தன்னம்பிக்கையோடு இயங்கும் கலைஞர்களால் ஒரு தெருச்சண்டையின் எதிர்பாராத தாக்குதல்களுக்கு தாக்குப்பிடிப்பது சிரமம் என்றார். முதன்முதலில் வில்லனுடன் மோதும் போது ஜீவாவை அவன் ஒரு புதுமையான அடவு மூலம் முறியடிக்கிறான். அடுத்த நாள் அவன் இந்த அடவை நினைவில் இருந்து தன் நண்பனுடன் பயின்று கொண்டிருப்பதை காட்டுகிறார்கள். இந்த அடவை தான் கற்பித்ததே இல்லையே என்று வியக்கும் ஆசான் பதற்றமாகி ஜீவாவிடம் விசாரிக்கிறார். புரூஸ் லீ எந்த ஒரு புதிய வகை தற்காப்புக்கலையின் உத்திகளை பார்த்தாலும் அவற்றை நினைவில் வைத்து உடனடியாக திரும்ப செய்து காட்டும் அபார திறன் கொண்டவராக இருந்தார். பலரும் வருடக்கணக்காய் பயின்று கற்ற அடவுகளை லீ தனது அவதானிக்கும் திறனால் எளிதில் உள்வாங்கி கற்று விடுவார். மற்றொரு காட்சியில் ஜீவா ஒரு ஒர்க்‌ஷாப்பில் காத்து நிற்கும் தன் காதலியை ஈர்ப்பதற்காக பெரும் பொய்கள் சொல்லி அநியாயத்துக்கு பந்தா பண்ணுவார். புரூஸ் லீயும் இது போல் பெண்கள் அருகாமையில் இருந்தால் அவர்களை ஈர்ப்பதற்காக பல அட்டகாசங்கள் செய்பவராக இருந்தார். குங் பூ பயிற்சியின் போது ஏதாவது ஒரு பெண் கடந்து போனால் கவன ஈர்ப்புக்காக தன்னோடு பயிலும் மாணவனை உதைத்து அடித்து துவைத்து விடுவார். இப்படி படம் முழுக்க நாம் புரூஸ் லீயின் வாழ்க்கைக்கதையின் பல அம்சங்களை காண முடிகிறது. இதனால் தான் ஆரம்பத்தில் இப்படத்தில் புரூஸ் லீ வெறும் பெயராக மட்டும் இல்லை. நீரின் ஆழத்தில் கத்தி போல் லீயின் ஆன்மா இப்படத்தின் மையத்தில் தொடர்ந்து ஒளிர்ந்தபடி கிடக்கிறது.
தீமையை கடத்தல்
படத்தின் இறுதி இரு சண்டைக்காட்சிகள் மிக நுட்பமாக உருவாக்கப்பட்டுள்ளன. ஒன்று ஜீவாவின் ஆசானும் நரேனும் மோதும் காட்சி. இக்காட்சியில் ஆசான் முதலில் நரேனை குறுந்தொலைவு குத்துகள் மூலம் சுலபத்தில் வீழ்த்துகிறார். அப்போது நரேன் ஒரு தந்திரம் செய்கிறார். அவரது ஆசானை எப்படி கொன்றார் என்கிற கதையை கூறுகிறார். இது ஜீவாவின் ஆசானை கொதிப்படைய செய்கிறது. ஆவேசத்தில் அவர் தன் கட்டுப்பாடை இழக்கிறார். சமநிலையற்று தாக்கும் அவரை நரேன் எளிதில் வீழ்த்தி கொல்கிறார். இரண்டாவது இறுதி சண்டை ஜீவாவுக்கு நரேனுக்கும். தனது ஆசான் கற்றுக்கொடுத்த வித்தையை பயன்படுத்தி ஜீவா தொங்கும் குறுகின மரப்பாலத்தில் கண்ணை மூடி நிற்கிறார். அவர் மனமும் சூழலும் ஒன்றுகிறது. நரேன் அவரது பாலத்தை அசைத்துப் பார்க்கிறார். ஆனால் ஜீவா அந்த ஆட்டத்துக்கு எளிதில் ஈடுகொடுத்து சமநிலையிழக்காமல் நிற்கிறார். அடுத்து நரேன் அவரை தாக்க அவர் புயலுக்கு வளையும் மூங்கில் போல் வளைந்து கொடுத்து அடிகளை தவற செய்கிறார். இவற்றை அவர் கண்ணை மூடிக் கொண்டே செய்கிறார். சண்டையின் இந்த இடம் மிக அழகானது. புரூஸ் லீ தான் பயின்ற விங் சுன் குங் பூவின் ஒரு முக்கிய உத்தியான ஒட்டும் கரங்களை (sticking hands) கண்ணை மூடிக் கொண்டே எளிதில் பயில்வார். அது மட்டுமல்ல கண்ணைக்கட்டிக் கொண்டே எதிராளியின் அசைவுகளை ஊகித்து தாக்கி வெல்வார். லீயின் இந்த அற்புதத்திறன் உடலும் மனமும் ஒன்றாகும் தியான நிலையினால் சாத்தியமானது. இக்காட்சி இந்த அற்புத தருணத்தை சித்தரிக்கிறது. பூரணமான சமநிலை கொண்டவனை யாராலும் சாய்க்க முடியாது. நரேனின் பலவீனம் அவன் சமநிலை அற்றவன் என்பது. அதனாலே அவன் இறுதியில் ஜீவாவிடம் வீழ்கிறான்.
தொங்கும் பாலத்தில் இருவரும் நின்று சண்டையிடும் காட்சி சற்றும் துருத்தாத ஒரு அபூர்வமான குறியீடு. இக்காட்சி படத்தை பலமடங்கு உயரத்துக்கு கொண்டு போய் விடுகிறது. சமீபத்தில் நான் பார்த்த எந்தவொரு படத்திலும் இவ்வளவு பெரும் மனவெழுச்சியை வேறெந்த காட்சியும் தந்ததில்லை. காரணம் தமிழ் சினிமாவில் கிளைமாக்ஸ் எப்போதுமே உறவு சார்ந்த ஒரு உணர்வுநிலை உச்சத்தை நோக்கியே செதுக்கப்படுகிறது. ஆனால் மிஷ்கினின் கிளைமேக்ஸ் ஒரு ஆன்மீக உச்சத்துக்கு செல்கிறது. பாலா மதக்கருத்துக்களையும், செல்வராகவன் உளவியலையும் பேசும் போது மிஷ்கின் மட்டுமே எளிய வாழ்வின் ஆன்மீகத்தை தொட்டுணர்த்துகிறார். தமிழ் சினிமாவில் அவருக்குள்ள தனித்த இடம் இதனால் தான் உறுதியாகிறது.
ஜீவாவின் ஆசான் “எதிரியை அவனது பலவீனம் அறிந்து தான் முறியடிக்க வேண்டும்” என்று ஓரிடத்தில் சொல்வார். இது புரூஸ் லீயின் மேற்கோள். இன்னும் சொல்வதானால் இந்த வாக்கியம் Enter the Dragon புரூஸ் லீயின் ஷாவொலின் மடாலய தலைமை பிக்கு அவரிடம் கூறும் அறிவுரையில் இருந்து தூண்டுதல் பெற்றது. தலைமை குரு சொல்கிறார்: “எதிரி வலிமையானவன். அவனை வலிமையில் நீ வெல்லப் போவதில்லை. அவனது பலவீனம் அறிந்து மட்டுமே வீழ்த்த முடியும். அவனது பலவீனம் அவன் தன்னைச் சுற்றி பல பாவனைகளை, பிம்பங்களை தோற்றுவித்து அவற்றிற்கு இடையே பதுங்கி உள்ளான் என்பது. அவனது பிம்பங்களை நொறுக்கினால் அவனை எளிதில் நீ முறியடிக்கலாம்”. இந்த வசனத்தின் அடிப்படையில் தான் அப்படத்தில் மிக பிரபலமான இறுதி கண்ணாடி அறைச் சண்டை வருகிறது. புரூஸ் லீயின் பட வில்லன் ஹேன் அடிப்படையில் சாரமற்ற பொத்தையான மனிதன். அவனது ஆழமின்மையை வெளிப்படுத்தியதும் வீழ்ந்து விடுகிறான். “முகமூடியில்” வில்லனான அங்குசாமி அற்புதமான சண்டை நிபுணன் தான். ஆனால் அவன் ஆன்ம நிறைவற்றவன். உளவியல் கோளாறினால் தோன்றும் கண்மூடித்தன வன்முறையை தன் வலிமையாக கொண்டுள்ளவன். அவனால் உறுதியான தளத்தில் நின்று தான் சண்டையிட முடியும். தள்ளாடும் தொங்கும் ஏணியில் நிற்கும் போது தனது உள்ளார்ந்த தடுமாற்றம் அவனுக்கு வெளிப்படையாக தெரிய ஆரம்பிக்கிறது. அவன் இறுதியில் தன் தோல்வியை தானே உணர்ந்து தன்னிலும் மேம்பட்ட மனமுதிர்ச்சி பெற்ற நாயகனை வணங்கிய கீழே விழுந்து தன் மரணத்தை ஏற்கிறான். இப்படியான ஒரு குறியீட்டு சண்டைக்காட்சி மட்டுமல்ல இவ்வளவு பக்குவமான ஒரு வில்லனைக் கூட இதுவரை யாரும் தமிழில் சிருஷ்டித்ததில்லை. பேட்மேனில் ஜோக்கர் கூட இறுதி தருணம் வரை ஒரு மனநோயாளி மட்டும் தான். ஸ்பைடர் மேனில் வில்லன்கள் அதிகார ஆசையால் பாவம் செய்து ஆன்மாவை “சாத்தானுக்கு பணயம்” வைத்த நரகவாசிகள். இப்படி அமெரிக்க சூப்பர்ஹீரோ பட வில்லன்கள் ஒற்றைபட்டையாக இருக்கையில் மிஷ்கின் இங்கு முக்கியமான வகையில் வேறுபடுகிறார். அவரது வில்லன் தனது அத்தனை தீமைகளையும் ஒரு கலைஞனின் நுண்ணுணர்வு கொண்டு தன் மரணத்துக்கு முந்தைய இறுதி நொடியில் கடக்கிறான். யின்–யாங் தத்துவம் சொல்வது போல் தீமை நன்மைக்கு எதிர்தரப்பு அல்ல. தீமை நன்மையாகவும் நன்மை தீமையாகவும் இவ்வுலகில் தொடர்ந்து மாறியபடி இருக்கிறது. அங்குசாமி தன் மரண நிமிடங்களில் ஒரு நாயகனாகவே மாறிப் போகிறான். 

நன்றி: உயிர்மை, அக்டோபர் 2012 
Share This

6 comments :

  1. இந்தப் படத்துக்கு யாரும் இவ்வளவு தத்துவமாக விமர்சனம் எழுதவில்லை. லேட்டாக வந்தாலும் இணையத்தில் படித்த முகமூடி விமர்சனங்களில் இது வித்யாசமாக இருந்தது.

    ReplyDelete
  2. நல்ல அலசல்... (நீண்ட நாட்களுக்குப்பின்)

    ReplyDelete
  3. நன்றி திண்டுக்கல் தனபாலன்

    ReplyDelete
  4. Sub Text and Symbolism can easily replace logic and reasoning.

    Is that your point.

    Climax - Even If I accept your observation regarding Naren's character Arc, Why would they have to fight in the Bridge in the first place, The Climax is rip off from Spider Man 1, I wonder why the great director Mysskin one of a kind in tamil cinema ( Courtesy you) had the ability to pen such depthful characeters but was not able to think of a decent climax.

    ReplyDelete
  5. Travis Bickle
    தர்க்கமும் எதார்த்தமும் ஆரம்பநிலை புரிதலுக்கு. ஆனால் அடுத்த ஆழமான நிலைக்கு குறியீடும் உபபிரதியும் தான் உதவும். நான் படங்களில் தர்க்கத்தை குறித்து அதிகம் கவலைப்படுவதில்லை.
    அடுத்து, பாலக் காட்சி ஸ்பைடர் மேனில் இருந்து உருவப்பட்டதாய் நினைக்கவில்லை. அதற்கு படத்தில் ஒரு பொருள் உள்ளது. என் படத்தில் அதை விளக்கி உள்ளேன்.

    ReplyDelete

Contact Us

So you think we’re the right folks for the job? Please get in touch with us, we promise we won't bite!



Designed By Blogger Templates