Thursday, 4 October 2012
T20 கிரிக்கெட் – மீசை ஒட்டிய குழந்தைகளும் குழந்தைகளாய் நடிக்கும் பெரியவர்களும்
இலங்கையில் நடந்து வரும் T20 உலகக்கோப்பையும் பிற ஐ.சி.சி ஆட்டத்தொடர்களைப் போல ஒரு நீண்ட கொட்டாவியாக உள்ளது. மட்டமான இரட்டை வேகம் கொண்ட ஆடுதளங்கள், ஆர்வமற்ற பார்வையாளர்கள், மாலை நேர மழை, பல ஏற்றத்தாழ்வான அர்த்தமற்ற ஆட்டங்கள்.
இங்கிலாந்து - மே.இ தீவுகள், பாகிஸ்தான் – தெ.ஆ ஆகிய ஆட்டங்கள் விறுவிறுப்பாக இருந்தன. ஆனால் தரமாக இல்லை. ஒரு அணி மட்டமாக ஆட அடுத்து வரும் அணி முட்டாள்தனமாக ஆட, ஒரு அணி தயக்கமாய் ஆட, அடுத்து வரும் அணி சோம்பலாய் ஆட ஒரு செயற்கையான விதத்தில் தான் மேற்சொன்ன விறுவிறுப்புத் தன்மை கூட ஏற்பட்டது.
கிரிக்கெட்டில் பந்துக்கும் மட்டைக்கும் இடையே சமமான போட்டி வேண்டும் என்று மேதாவித்தனமாக பேசப்பட்டாலும் T20 உண்மையில் கிரிக்கெட்டின் போர்வையில் வரும் எளிய பொழுதுபோக்கு வடிவம் மட்டுமே. மக்கள் நாலு மற்றும் ஆறுகள் பறப்பதை பார்க்க, அணிகள் 200க்கு மேல் ஸ்கோர்களை விரட்டும் சாகசங்களை வியக்கத் தான் வருகிறார்கள். T20 பார்வையாளர்கள் கேரளாவில் கதகளி பயிலவரும் வெள்ளைக்காரர்களைப் போன்று தான் – அவர்களுக்கு பந்தும் மட்டையும் அல்ல, அட்டகாசமான வர்ணங்களும் நாடகீயமான நிகழ்வுகளும் படோபமான ஒருங்கிணைப்பும் தான் முக்கியம். ஆனால் ஐ.சி.சி இவ்விசயங்களில் எல்லாம் சொதப்பியுள்ளது.
முதலில் ஆடுதளங்களை எடுத்துக் கொள்வோம். இலங்கையில் முன்னர் மிக தட்டையான ஆடுதளங்கள் ஒருநாள் ஆட்டங்களுக்கு உருவாக்கப்பட்டன. டெஸ்டுகளில் முரளிதரனின் பயன்பாட்டுக்கு ஏற்ற சுழல்-ஆடுதளங்கள் செய்யப்பட்டன. முரளியின் ஓய்வுக்குப் பின் சமீபமாக இலங்கை தனது ஆடுதளங்களை புதிதாக மாற்றி அமைத்தன. இந்த ஆடுதளங்கள் நல்ல துள்ளலுடன் ஸ்விங்குடன் ஆனால் குறைவான வேகத்துடன் இருந்தன. அஜந்தா மெண்டிஸ் காயமுற்றும் ஆட்டநிலையை இழந்தும் இருந்த நிலையில் இலங்கை நான்கு மித வேகப்பந்து வீச்சாளர்களை தொடர்ந்து களமிறக்க துவங்கியது. இலங்கை அணியின் ஆட்டமுறைக்கு அணி அமைப்புக்கும் இந்த ஆடுதளங்கள் நிச்சயம் உதவின. அதனாலே இந்த T20 உலகக்கோப்பை மாறுபட்டதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதாவது ஆடுதளங்கள் மெதுவாக இருந்தாலும் வேக வீச்சாளர்களை ஆதரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த ஆடுதளங்களில் பந்து எந்தளவுக்கு அதிக வேகமாக மட்டையை நோக்கி வருகிறதோ அந்தளவுக்கு அடித்தாடுவது எளிதாகும் என உணர்ந்த தோனி உமேஷ் யாதவ் மற்றும் ராகுல் ஷர்மாவை விலக்கி பாலாஜி மற்றும் சாவ்லாவை அணியில் எடுத்துக் கொண்டார். இந்திய அணி T20 உலகக்கோப்பைக்கு முன் இலங்கைக்கு எதிராய் இதே மண்ணில் ஒருநாள் தொடர் ஆடிய போது முதல் பத்து ஓவர்களில் வேகவீச்சு மூலம் அதிக விக்கெட் வீழ்த்தும் அணியே வெல்லும் வாய்ப்பு இருந்தது. பந்து கிட்டத்தட்ட சுழலவே இல்லை. T20 உலகக்கோப்பை துவங்கி ஒருவாரத்தில் இயன் சேப்பல் ஒரு பத்திரிகை பத்தியில் இந்த உலகக்கோப்பையில் ஆடுதளங்கள் இங்கிலாந்தில் உள்ளவை போல் உள்ளதால் வெள்ளை அணிகளுக்குத் தான் வெற்றி வாய்ப்பு அதிகம் என்றார். ஆனால் அவர் அப்பத்தியை எழுதிய அன்றே இந்திய சுழலர்கள் இங்கிலாந்தை 80 சொச்சத்துக்கு முறியடித்தனர். அன்றைய பந்தின் சுழல் வர்ணனையாளர்கள், நிபுணர்கள் மட்டுமல்ல இந்திய அணித்தலைவரையே ஆச்சரியப்படுத்தியிருக்கக் கூடும். ஆனால் அதற்குப் பின்னான ஆட்டங்களில் சுழலர்கள் எதிர்பார்த்த பாதிப்பை ஏற்படுத்தவில்லை. இந்த ஆடுதளங்கள் உண்மையில் அனைவரின் ஊகங்களையும் பொய்யாக்கி உள்ளன.
பந்து சுழலாததற்கும் அதிகம் ஸ்விங் ஆகாததற்கும் இப்போது மழைக்காலம் என்பது முக்கிய காரணம். ஆடுதளம் போதுமான வெயிலைப் பெறவில்லை. மேலும் இந்தியாவைப் போன்று இலங்கையில் அதிக மைதானங்கள் இல்லை. கதாநாயகிகள் விஜயகாந்தின் பெரிய இடுப்பை சுற்றி சுற்றி ஆடுவது போல பிரேமதாசா, பள்ளிக்கலே, ஹம்பன்தோட்டா போன்ற மைதானங்களில் தான் அணிகள் மாறி மாறி ஆடுகின்றன. விளைவாக ஆடுதளங்கள் புற்களை இழந்து வேகம் குறைந்து மட்டையாளனுக்கோ பந்துவீச்சாளனுக்கோ சாதகமற்றவையாக மாறுகின்றன. தற்போதைய நிலையில் வேகவீச்சாளர்களை தேர்வதா சுழலர்களால் அணியை வலுப்படுத்தவா என அணிகள் குழம்பி உள்ளன. புதிரான ஒரு பெண்ணை ஐந்து பேர் பந்தயம் வைத்து ஈர்க்க முயல்வது போல் T20 உலகக்கோப்பை தொடர்கிறது.
இந்த ஆடுதளங்களில் வெல்ல இரண்டு பண்புகளில் ஒன்று வேண்டும். முன் தீர்மானங்கள் இன்றி சுதந்திரமாக ஆடத் தெரிய வேண்டும். வாட்சன், தில்ஷான், மெக்கல்லம் போன்று. அல்லது மந்தமான ஆடுதளங்களில் ஆடும் நிபுணத்துவம் வேண்டும். மஹிளா ஜெயவர்த்தனே, சங்கக்கரா போன்ற நுட்பமான கலைஞர்கள் இதில் தேர்ந்தவர்கள்.
முதலில் சொல்ல காரணத்தினாலேயே இலங்கையில் பலவீத ஊகங்களுடன் தீர்மானங்களுடன் வந்திறங்கிய அணிகளை விட எளிமையான சுதந்திரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆஸ்திரேலியா நன்றாக ஆடி வருகிறது. அவர்கள் இந்தியாவைப் போல் பந்து சுழல வேண்டும் என்றோ ஸ்விங் ஆக வேண்டும் என்றோ எதிர்பார்க்கவில்லை. இங்கிலாந்து அல்லது தென்னாப்பிரிக்காவை போல பந்து சுழன்று விடுமோ என்று அஞ்சவில்லை. நேராக கூர்மையாக பந்து வீசினார்கள். நீளங்களை சாமர்த்தியமாய் மாற்றினார்கள். மட்டையாடும் போது முழுமையாக வலுவாக அடித்தார்கள்; முடியாத போது ஒற்றை ஓட்டங்கள் தாராளமாக எடுத்தார்கள். உண்மையில் தெருக்கிரிக்கெட்டில் நாம் பிரயோகிக்கும் இந்த அடிமட்ட எளிமை T20க்கு மிக உகந்தது. இதே ஆஸி அணி கடந்த இங்கிலாந்து பயணத்தில் ஒருநாள் ஆட்டங்களில் திணறினார்கள். பாகிஸ்தானுக்கு எதிராக துபாயில் ஆடிய ஆட்டங்களிலும் அவர்கள் நன்றாக ஆடும் வங்கதேசத்தின் தரத்தில் தான் ஆடினார்கள். ஆனால் T20யில் நிலைத்து ஆடும் நுட்பங்களைப் பற்றி அவர்களுக்கு கவலையில்லை. விடலைப்பருவத்தில் காதலிப்பது போல அசட்டுத்தனங்களைக் கூட ஆத்மார்த்தமாய் தயக்கமின்றி தன்னம்பிக்கையுடன் செய்கிறார்கள். அவர்கள் தம் கிரிக்கெட்டை ஒரு ஈரக்கனவைப் போல அவ்வளவு ரசிக்கிறார்கள். நாமும் அவர்களை ரசிக்கிறோம்.
இந்த T20 உலகக்கோப்பையை மேலும் சுவாரஸ்யமாக ஆர்ப்பட்டமாக ஆக்க ஐ.சி.சி இதை கோடையில் நடத்தியிருக்க வேண்டும். அல்லது இலங்கையில் மட்டும் எனாமல் வங்கதேசம், (பாக்கிஸ்தானுக்கு பதில்) துபாய் ஆசிய என வேறுநாடுகளில் பகிர்ந்து ஆட்டங்களை நடத்தியிருக்கலாம். (96 உலகக்கோப்பையில் போல.)
அடுத்து இந்த ஆட்டங்களின் முதல் பகுதியில் அப்கானிஸ்தான், வங்கதேசம், அயர்லாந்து போன்ற அணிகளை உயர்மட்ட அணிகளுடன் மோத வைக்கும் சடங்குகளை நிறுத்த வேண்டும். அப்கானிஸ்தான் என்னதான் போராடினாலும் அவர்கள் ஒரு சர்வதேச அணியை கொட்டாவி விட வைத்து மட்டுமே கவனமிழக்கச் செய்து தோற்கடிக்க முடியும். சூப்பர் 8க்கு தேர்வாகப் போகிறவர்கள் யாரென்பது ஆட்ட்டத்தொடருக்கு முன்பே ஒரு குழந்தை கூட கணிக்கும் நிலையில் வைப்பது இன்றைய அவசர பொழுதுபோக்கு உலகில் அபத்தமான செயல். இது போதாது என்று இந்த சடங்கு ஆட்டங்களுக்கு முன்பு ஒவ்வொரு அணிக்கும் பயிற்சி ஆட்டங்கள் வேறு நடத்தப்பட்டன. ஆக துவங்கி பத்துநாட்கள் உருண்ட பின்னரும் உலகக்கோப்பை துவங்கவே இல்லை. ஐசிசிக்கு இன்று தேவை கிரிக்கெட்டை இதயத்துடிப்பை எகிற வைக்கும் ஒரு நுகர்வுப்பொருளாக சந்தைப்படுத்தத் தெரிந்த லலித்மோடி போன்ற வியாபாரிகள். ஐ.சி.சியின் தற்போதைய நிர்வாகிகள் கிரிக்கெட்டை தங்களது சம்பிரதாய அணுகுமுறை கொண்டு அழித்து வருகிறார்கள். T20 ஒரு நவீன வெகுமக்கள் வடிவம் என்றாலும் அதை இங்கிலாந்தில் நீளமான அங்கிகள் பாவாடைகளுக்கு உள்ளே குடைகளுக்கு கீழே அமர்ந்து ஒற்றை ஓட்டத்திற்கு பந்து உருண்டு வர பறந்தெழும் புறாக்களின் சிறகடிப்புகளுக்கு ஏற்ப கைதட்டி மெத்தனமாக ரசிக்கும் கனவான்களின் காலத்துக்கு பின்னுக்கு உருட்டி செல்ல முடியும் என்பதை ஐசிசி இந்த உலகக்கோப்பை மூலம் மீண்டும் ஒருமுறை நிரூபித்து உள்ளது. இவர்கள் நவீன கிரிக்கெட்டை நிர்வகிப்பது என்பது எழுபது வயது தாத்தாவுக்கு பதினான்கு வயதுப் பெண்ணை மணமுடித்துக் கொடுப்பது போல பொருத்தமற்றது, அதனாலேயே தீங்கானது. காங்கிரஸ் தன் செயல்திறன் இன்மையால் அந்நியமுதலீட்டுக்கு நாட்டை விற்பது போல எதிர்காலத்தில் ஐ.சி.சி தன் அம்மி மிதித்து அருந்ததி பார்க்கும் கற்கால நிர்வாகம் மூலம் தனியார் franchiseகளுக்கு கிரிக்கெட்டை தாரை வார்த்து விடும்.
இந்த T20 உலகக்கோப்பை சற்று சலிப்பாக இருப்பதற்கு இறுதியான காரணம் மட்டையாளர்களும் தான். இவ்வடிவம் தோன்றின புதிதில் மட்டையாளர்கள் கன்னிமையின் களங்கமின்மையின் தூய்மை மற்றும் ஆவேசத்துடன் ஆடினார்கள். ஒரு எதிர்பாராத் தன்மை இருந்தது. இருபது ஓவர்கள் தாக்கி ஆட முயன்றதால் தொடர்ந்து ஆட்டம் விறுவிறுப்பாக இருந்தது. பந்து வீச்சாளர்கள் மிரண்டு போயிருந்தார்கள். ஆனால் அவர்கள் மெல்ல மெல்ல புதிய திறன்களை வளர்த்தெடுத்தார்கள்; சாமர்த்தியமாக தந்திரமாக யோசிக்கத் துவங்கினார்கள். பலவிதமாய் மெதுவான பந்துகளை வீச வேகவீச்சாளர்கள் கற்றனர். மிக சமீபமாக இர்பான் பதான் கால்பக்க குச்சிக்கு வெளியே விழுந்து உள்ளே வந்து நடுக்குச்சியை வீழ்த்தும் ஷேர்வார்னை நினைவுறுத்தும் சுழல்பந்தைக் கூட நியூசீலாந்துக்கு எதிரான T20யில் வீசினார். இன்னொரு பக்கம் மட்டையாளர்கள் 50 ஓவர் கிரிக்கெட்டை போல T20யை பிரித்துக் கொண்டார்கள். முதல் ஆறு பவர்பிளே ஓவர்களில் கொஞ்சம் நிதானமான அதிரடி ஆட்டம். ஆறில் இருந்து பதினைந்து வரும் வெறும் ஒற்றை இரட்டை ஓட்டங்கள். இறுதி ஐந்து ஓவர்களில் கண்மூடித்தனமான அடித்தாட்டம். இந்த சூத்திரம் ஒருவித இறுக்கத்தை இந்த வடிவத்துக்கு கொண்டு வந்துவிட்டது. முதல் ஆறு மற்றும் இறுதி ஐந்து ஓவர்களில் நடப்பதை வைத்து ஒரு T20 ஆட்டத்தை நீங்கள் இன்று எளிதில் கணித்து விட முடியும். பல அணிகள் தமது சிறந்த மட்டையாளர்களை 6, 7வது வரிசையில் இறக்குகிறார்கள். பதினைந்து ஓவர்களுக்குள் விக்கெட் விழக்கூடாது என்று அவ்வளவு கவனமாக இருக்கத் துவங்கி விட்டார்கள். விளைவாக ஒரு ரோஸ் டெய்லர், தோனி அல்லது டிவில்லியர்ஸ் களமிறங்கும் போது ஓவர்கள் மீதமிருப்பதில்லை. தோனியின் 110க்கு குறைவான ஸ்டிரைக் ரேட்டும் அதனால் இந்தியா பல ஆட்டங்களில் பின்னடைவை பெற்றதும் இந்த தற்போதைய தயக்க மனநிலைக்கு சிறந்த உதாரணம். தோனியின் கீழ் சென்னை சூப்பர் கிங்ஸ் கூட அவ்வளவு விறைப்பாகத் தான் ஆடுகிறார்கள். இந்திய அணி பல சமயங்களில் மூன்று விக்கெட்டுகள் இழந்த நிலையில் 6 ரன்கள் சராசரியில் ஒரு T20 ஆட்டத்தை நிறைவு செய்வது டெஸ்ட் ஆட்ட அதிகவனத்தினால் தான். 19வது ஓவரில் கூட தோனிக்கு ஒரு பந்து அடிப்பதற்கு உகந்தது எனத் தோன்றாவிட்டால் அதை பவ்யமாக கவர் பக்திக்கு விரட்டி ஒற்றை ஓட்டமெடுப்பார். 20வது ஓவரின் இறுதிப் பந்தில் தான் அவர் எல்லா தயக்கத்தையும் துறந்து விக்கெட் போனால் போகட்டும் என்று ஆவேசமாக ஆடுவார். கெ.ஸ் ரவிக்குமார் தனது படங்களின் இறுதிக்காட்சியில் முகம் காட்டுவது போல அதனால் எதிர்விளைவோ பயனோ இருப்பதில்லை.
பாகிஸ்தான், ஆஸ்திரேலியா தவிர பிற அணிகள் பலவும் தோனியின் வழியில் T20யை மைலாப்பூர் மதியவேளை இலவச கச்சேரி போல் ஆக்கி விட்டன. ஒருநாள் கிரிக்கெட்டை அதன் மரபான இறுக்கத்தில் இருந்து மூர்ச்சை தெளிவிக்க இரண்டாவது பவர்பிளே அறிமுகப்படுத்தினார்கள். அது இறுதியில் மட்டையாளர்களுக்கு அல்லாமல் பந்து வீச்சாளர்களுக்கே பயன்பட்டது. இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் பவர்பிளே இல்லாத போது ஓவருக்கு பத்து ஓட்டங்கள் எடுப்பது கூட எளிதாக இருக்கிறது. ஆனால் 35-40 ஓவர்களுக்குள் கட்டாய பவர்பிளே துவங்கியதும் ஓட்டமெடுப்பது சிரமமாகி விக்கெட்டுகள் சாய்கின்றன.
சமீபமாக நம்மூர் ஆட்கள் அமெரிக்காவில் இருந்தபடி இணைய காணொளி சேட் வழி மந்திரம் சொல்லி தர்ப்பணம் பண்ணும் செயல் நிரூபிப்பது போல சாணி தட்டுவதற்கு கூட முன்னேற்றம் என்ற பெயரில் அறிவியலை பயன்படுத்த முடியும். இறுக்கமான மனநிலை அதே போல் தொடரும் போது விதிகளை மாற்றுவது T20 கிரிக்கெட்டுக்கும் இதே போல பயன்படாது. சிறந்த T20 ஆட்டங்களை முதிர்ச்சியற்ற புதிய வீரர்கள் ஆடும் போது மட்டுமே நாம் காண முடியும். பத்தொன்பது வயதானவர்களுக்கான உலகக்கோப்பை போல T20 ஆட்டங்களுக்கும் வயது நிர்ணயிப்பது ஒருவேளை பயன்படலாம். T20யை வயதானவர்கள் கூட திறமையாக ஆடலாம் என்பதை ஹஸ்ஸி, காலிஸ் போன்ற மட்டையாளர்கள் நிச்சயம் நிரூபித்துள்ளனர். ஆனால் அது ஒய் திஸ் கொலவெறியை ஏசுதாஸ் பாடுவது போல நெருடலாகவே இருக்கும். நான் பரிந்துரைப்பது நட்சத்திர மதிப்பு கிரிக்கெட் தீர்மானங்களை வழிநடத்தும் காலத்தில் நடைமுறை சாத்தியமில்லாததாக இருக்கலாம்.. ஆனால் உண்மையில் வயதானவர்களை குழந்தைகளாக நடிக்க வைப்பதை விட குழந்தைகளுக்கு மீசை ஒட்டி பேச வைப்பது இன்னும் எதார்த்தமாக இருக்கும்.
சச்சின் முதல் T20 உலகக்கோப்பையிலேயே புரிந்து கொண்டது போல ஆழமான புரிதல், உறுதியான தொழில்நுட்பம், 20 வருட அனுபவம் ஆகியவை T20க்கு தேவையற்ற களைப்பூட்டும் பாரம் மட்டுமே. அவரைப் போன்று தோனி, காலிஸ், ஹஸ்ஸிக்கள், தாம் எவ்வளவு சிறந்த கலைஞர்களாக இருந்தாலும், விலகி நின்றிருந்தால் இது போன்ற ஆட்டத்தொடர்கள் எதிர்பாராத் தன்மையுடன் இன்னும் விறுவிறுப்பாக இருந்திருக்கும். பலசமயங்களில் குழந்தைகள் ஆடுகிறார்கள், நாம் தள்ளி நின்று பார்ப்போமே என்று ஏற்கவும் ஒரு பக்குவம் வேண்டும்.
Share This
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment