Wednesday, 24 June 2009

மாமிக்கு ஏன் மீசை? ஊன வகைமாதிரியின் அபத்தங்கள்



ஊனத்தைவிட சுவாரஸ்யம் ( ‘நான் கடவுளை’ என்னால அந்த ஊனக் கொடுமைகளை பார்க்கவே முடியலே’ என்றபடி முழுக்க சின்னக் கலக்கத்துடன் பார்ப்பது) அது பற்றிய விசாரிப்புகள். சுந்தர ராமசாமி ஒரு உரையாடலில் கண்களை நேராக நோக்கியபடி கேட்டார்: "உங்கள் ஊனம் பற்றி மன சங்கடங்கள், துயரங்கள் உண்டா?" நான் அவர் தாடியைப் பார்த்தபடி சொன்னேன், "எனக்கு யார் முன்னாடியும் தடுக்கி விழப் பிடிக்காது, அவ்வளவுதான்". வடக்கு உஸ்மான் சாலை டீக்கடை மலையாளி கல்லாக்காரர் போண்டாவில் கண்வைத்தபடியே "போ...லியோ தானே, வீட்டிலே ஊசி போடல்லியோ?" என்றதற்கு ஆமாம் சொல்ல என் பெற்றோரை சில்லறை உதிர்த்தபடி வைதார். நான் வண்டியில் போகையில் விறுவிறுப்புக்காக எல்லைக் கோடுகள், சிவப்பு விளக்குகளை மீற வழக்கமாய் போக்குவரத்துக் காவல் மாமாக்களின் "ஏற்கனவே ஒரு காலு போச்சு .... " வகை விசாரிப்புகள்.
என் ஊனம் பற்றின குற்றஉணர்வு என் அம்மாவுக்குள் ஒரு அடைகாக்கும் மிகை கவனிப்பு மனநிலையை 25 வருடங்களாய்த் தக்க வைத்துள்ளது. மனைவிக்கு தீராத புதிர்: " நீ எப்பவாவது ஆரோக்கியமா இருந்தா எப்படி இருக்கும்ணு யோசிச்சதில்லையா, ஊனமாயிட்டோம்னு எந்த ஏமாற்றமும் இல்லை? ".
மாமனிதர்களும் போண்டாக்காரர்களும் ஒரு சேர ஊனம் பற்றி ஒரு தட்டையான வகைமாதிரியை கொண்டிருக்கிறார்கள். அவர்கள் நினைப்பது போல் ஊனர்கள் சகஜர்களிடமிருந்து விலகி தனி உலகில் வாழ்வதில்லை. உண்மையில் இரு சாராரும் வாழ்வில் ஒரே தளத்தில் தான் சந்தித்து கொள்கிறார்கள். ஊனம் கொண்டவர்கள் இரண்டு மடங்கு முயன்று வெற்றி பெற வேண்டியுள்ளதாய் கூறுவதும் அபத்தமே. உதாரணமாய் உலகின் மிக வெற்றிகரமான முன்னாள் சுழல்பந்து வீச்சாளர் வி.எஸ் சந்திரசேகருக்கு இடது கை போலியோவால் சொத்தை. அவர் மட்டையாட்டத்தை தேர்வு செய்யாமல் வலதுகை சுழல்பந்தை எழுத்துக் கொண்டது ஒரு பிரக்ஞபூர்வ முடிவல்ல. அவருக்கு சுழல்பந்தே பிடித்திருந்தது, மட்டையாடவில்லையே என்று எந்த ஏமாற்றமும் இல்லை. சூரியன் தெரியும் திசையில் கொடி வளைவது போல் ஊனனின் மனமும் வளர்ந்து வருகிறது. அவனது தேவைகளும் விருப்பங்களும் மிக நுட்பமாய் தகவமைகின்றன. சந்திரா தனக்கு ஊனம் என்று குட்டிக்கரணம் எல்லாம் அடிக்க வில்லை, சாதாரணமாய் சுழற்றியே முன்னணி வீரர் ஆனார்.
காட்பாதர் நாவலில் விட்டோ கார்லியோனே சொல்வது போல் "கேட்க வேண்டிய முறைப்படி கேட்டால் எல்லாருக்கும் புரியும், மறுக்க மாட்டார்கள்". நுட்பமாய் மனிதர்களை கவனிக்கும் ஒரு ஊனனுக்கு இதன் பொருள் புரியும். மனிதர்கள் மேல் கொஞ்சம் பரிகாசமும் நிறைய கவலையுமே அவனுக்கு. "ஒவ்வொரு சகஜ மனிதனுக்கும் ஒவ்வொரு ஊனம்" என்றெல்லாம் அவன் சுயசமாதானம் செய்வதில்லை. அவன் மேலும் விரிவான தளத்தில், ஒரு பெரும் நிர்வாணக் கடற்கரையில் மனிதர்களை சந்திக்கிறான்.
இங்கு ஒன்று தெளிவாகிறது: ஊனத்தை வெளியே இருந்து பார்ப்பவர்களுக்கு தூரப்பார்வை (‘அச்சச்சோ பாவம்’) அல்லது கிட்டப் பார்வை (‘அப்பா என்ன விகாரம்’).
உள்ளே இருந்து பார்ப்பவருக்கு?
திருவல்லிக்கேணி பைக்ராப்ட்ஸ் சாலையில் நண்பனுடன் நடைபாதையில் புத்தகம் பொறுக்கிக் கொண்டிருந்தேன். ஒரு ஒற்றைகாலன் பிச்சைக்காரன் கோலில் விந்தியபடி வந்தான். முகம் திருப்பி உதாசீ£னத்தவரிடம் எல்லாம் கெஞ்சியபடி நண்பனிடம் வந்து சேர்ந்தான். அவன் சில்லறை போட்டான். நான் பிச்சையை ஆதரிக்கலாமா கூடாதா என்று குழப்பத்தில் பாக்கெட்டில் கைவிட போது அவன் என்னைத் தவிர்த்து பக்கத்து நபரிடம் "ஐயா சாமி". திகைத்தபடி திரும்பினால் நண்பன் சொன்னான் "பாவம்ல".
நம் சமூக மனம் திரைப்பட சித்தரிப்புகளில் மேலும் தெளிவாய் தெரிவது. "அஞ்சலியில்" மணி மூளைவளர்ச்சி பாப்பாவை "கடவுள் அனுப்பின குழந்தை" என்றார். இப்படி மிகை நேர்மறை வெளிச்சத்தில் காட்டுவது ஊனக் குறைபாட்டை சமன் செய்து சமூக மடிப்பில் ஏற்கச் செய்யவே. ஓட்டிசம் (autism) எனும் மூளைச்சிதைவு பிறவி நோயாளிகளில் மிகச் சிலர் சாவண்ட் எனும் அதிநினைவுத்திறனுடன், கணிதத்திறனுடன் இருப்பர் (ஒருவர் ஐன்ஸ்டனின் சூத்திரத்தில் கணிதப்பிழை கண்டுபிடித்தார்). படித்த புத்தகத்தை ஒரு வார்த்தை விடாமல் அவர்களால் ஒப்பிக்க முடியும். இந்த நாள் 2080-இல் என்ன கிழமை என்றால் நொடியில் சொல்வார்கள். ஹாலிவுட்டில் ஓட்டிச சாவண்டை முக்கிய பாத்திரமாய் பயன்படுத்தின குறிப்பிடும்படியான ஆரம்ப கால படம் மழைமனிதன் (பாலாவின் "பிதாமகனில்" இப்படத்தின் பாதிப்பு ஏராளம்). டஸ்டின் ஹாப்மேன் தான் சாவண்டு. ஒரு நாள் படிக்க புத்தகம் இல்லாமல் போக தொலைபேசி டைரக்டரியை உட்கார்ந்து படிக்கிறார். மறுநாள் உணவகப் பணிப்பெண்ணின் மார்புப் பட்டையில் பெயர் பார்த்து உடனே டஸ்டின் அவளது தொலைபேசி எண்ணை ஒப்பிக்க அவள் கலவரமாகிறாள். மற்றொரு விபரீதத் திறமையாக கலைந்த சீட்டுக்களை பார்த்தால் ஆட்டத்தின் போது யாரிடம் எதுவென துல்லியமாய் சொல்கிறார். இதை பயன்படுத்தி இவரது தம்பி (டாம் குறூஸ்) ஒரு ஆட்டத்தில் கோடிகள் சம்பாதிக்க ஒருங்கிணைப்பாளர்கள் குழம்புகிறார்கள். இதைத் தொடர்ந்து பல படங்களில் ஓட்டிச நபர்கள் பிரபலமானார்கள். ஆனால் ஊடகங்கள் சுவாரஸ்யத்துக்காக அனைத்து குறைவளர்ச்சி மூளைக்காரர்களையும் சாவண்டுகளாகக் காட்ட ஆரம்பித்தன. 1998-இல் வெளியான "பாதரசம் உயருது" படத்தில் இரண்டு அதிகணினிகளால் கண்டுபிடிக்க முடியாத திஙிமியின் 2 பில்லியன் மதிப்பு ரகசிய சேதி சங்கேதக் குறியை சிமன் எனும் ஒரு 8 வயதுப் பையன் கண்டுபிடித்து விடுவான். எப்படி? அவன் ஒரு சாவண்டு என்பதால். இந்த உண்மைக்கு புறம்பான விபரீத சித்தரிப்புகளால் இந்த குறைமூளை மனிதர்கள் பற்றி ஒரு மிகை எதிர்பார்ப்பு அமெரிக்காவில் உருவாகி உள்ளது. ஸ்டுவார்ட் முரேய் எனும் ஒரு ஓட்டிச குழந்தையின் தகப்பன் சொல்கிறார்: "என் குழந்தையை பார்த்தால் எல்லோரும் கேட்பது ‘அவன் சாவண்டா’ என்றே. ‘இல்லை’ என்றால் முகம் சுளிக்கிறார்கள்." ஒரு மலையாளப் படத்தில் மோகன்லால் சொல்லுவார், "மாமி மீசை வைத்தால் மாமா ஆக முடியாது". மாமிக்கு மீசை ஒட்டுவதில் சமூகம் குறியாய் இருப்பது தாம் ஒருபடி மேலே எனும் உயர்வு மனப்பான்மையால் (அல்லது தாழ்வு மனப்பான்மை) தான்.
தமிழின் பிற படங்களிலும் சமச்சீரற்ற சித்தரிப்புகள் தான் கிடைக்கின்றன. ஊனர்கள் கொடூரர்களாக (எம்.ஜி.ஆர் பட மொட்டை, முகத்தழும்பு வில்லன்கள்), வஞ்சகர்களாக (‘காதல்’ சித்தப்பா), புணரப் பெண் கிடைக்காதவனாக ( "நான் கடவுள்" விகார முகத்தவன்), நாய் மாதிரி நன்றி மிக்கவர்களாக (ரன்), துரோகம் அறியாத தோழமையின் உச்சமாக (சுப்பிரமணியபுரம்), பாரமான மூட்டையை எளிதாய் தூக்கும், பெண்டாட்டியை அடிப்பவனை திருப்பி மடக்கி அடிக்கும் ஆண் ஒத்த பெண்ணாக (மொழி) தீமை நன்மை எனும் இருவேறு துருவங்களில் காட்டப்பட்டு விட்டார்கள். நடுத்தர சம்பளத்துக்கு நாற்காலி தேய்க்கும் குமஸ்தாவாக அல்லது தோசை மாவுக்கடை வைத்திருப்பவராக இவர்கள் ஏன் வருவதில்லை?
ஊனர்களின் பால் முழுமனிதர்களுக்கு ஒரு சிறு அன்னியம், புரியாமை உள்ளது. அன்னியர்களை தொலைவிலிருந்து கவனிப்பதால் அவர்களை படு சிலாகிப்பாகவோ அல்லது மிகை வெறுப்பு \ அருவருப்புடனோ நேரிடுகிறோம். நேர்மறை உதாரணமாய் மேற்குலகம் கிழக்கத்தேய மதம், கலாச்சாரம் மீது கொண்டுள்ள சிலாக்கியத்தை சொல்லலாம். எதிர்மறை? இஸ்லாமியர்கள் மீதான பிம்பம். ஒருமுறை ஆர்.எஸ்.எஸ் அனுதாபியான ஒரு நட்சத்திர எழுத்தாளர் இஸ்லாமியர்கள் இயல்பிலேயே வன்முறையாளர்கள் என்று விடாப்பிடியாய் என்னிடம் வாதிட்டார். இந்த விலகல் காரணத்தினால் ஒரு ஊனனை வில்லனாக்குவதில் ஒரு குறியீட்டு காட்சிபூர்வ வசதி உள்ளது. இயக்குனர்களை குறை சொல்ல முடியாது. மிகையான நேர்மறை சித்தரிப்பு தலித்துகள் விசயத்திலும் நடக்கிறது ("தசாவதாரம்" பூவராகன்).
நான் பார்த்ததில் ஊனம் எனும் நிலைப்பாடை நுட்பமாய் சித்தரிக்கும், தீவிரமாய் அலசும் படம் "குட்டைகளுக்கு மேலாய் மீண்டும் தாவுதல்" (Jumping over Puddles Again) எனும் ஷெக் நாட்டுப் படம். இயக்குனர் கேரல் கெச்சயினா (1924—2004). ஒரு குதிரை லாயக்காரனுக்கு ஆடம் என்று படு வாண்டான பையன். லாயக்காரன் மொடக் குடிகாரன். அவன் கனவு சுதந்திர தினத்தன்று நடக்கும் கோலாகல குதிரை அணிவகுப்பில் கலந்து கொள்வது. குடியால் அவ்வாய்ப்பு பறி போகிறது. ஆடமுக்கு குதிரை பயில ஆசை. தகப்பன் ‘நீ அதற்கு இன்னும் உயரம் வளர வேண்டும்’ என்று புறக்கணிக்கிறான். ஒரு நாள் சேட்டையின் விளைவாய் குளிர்நீரில் குதிக்கப் போய் ஆடமுக்கு போலியோ ஜுரம் வருகிறது. கால்கள் வாதத்தால் சுவாதீனம் இழக்கின்றன. மருத்துவர்கள் அவனுக்கு காலீப்பர் எனும் கம்பிக் கருவியை காலில் மாட்டுகின்றனர். ஆனால் அவனுக்கு ஊன உணர்வோ, கூச்சமோ இல்லை. ஒரு நாள் இப்படி சக்கர நாற்காலியில் ஆஸ்பத்திரி முற்றத்தில் இருக்கையில் எதிர்வீட்டுச் சுவரில் அமர்ந்து சில சிறுவர்கள் வம்புக்கிழுக்க பாய்ந்து எழுந்து தடுமாறி விழுகிறான். ஊருக்கு திரும்பிய பின்னும் முன்-ஊன ஆர்ப்பாட்ட வாழ்க்கை முறையை ஆடம் விடுவதாயில்லை. சக நண்பர்களும் அவனை மாறுபாடின்றி ஏற்றுக் கொள்கின்றனர். ஆட்டம், சேட்டை, ஊர்வம்பு என்று வாழ்வு தொடர்கிறது. தோஸ்துகளின் எண்ணிக்கை முன்னை விட அதிகமாகிறது அவனுக்கு. ஒரு செல்வந்த நண்பனின் அப்பாவின் குதிரை வண்டியை கடத்திக் கொண்டு வந்து அதை தெறித்து ஓட விட்டு கலாட்டா செய்ய, வண்டிக்கு சொந்தக்கார சீமான் ‘கால் போனாலும் இவனுக்கெல்லாம் சேட்டை குறையவில்லையே’ என்று புலம்புகிறார். குதிரை ஓட்டும் ஆசை இன்னும் தீரவில்லை. அப்பாவுக்கு தெரியாமல் இரவில் குதிரை மீது நண்பர்கள் உதவியுடன் ஏறி ஓட்டுகிறான். இந்த தீரம் பிடித்துப் போய் லாடம் செய்பவன் ஒருவன் இவனுக்கு ஊனக்காலை ஊன்றி குதிரை மீது வசதியாய் ஏறிட கால்தட்டு ஒன்றை அமைத்து தருகிறான். இனிமேல் ஆடமுக்கு குதிரை ஏற யார் உதவியும் தேவையில்லை. சுதந்திர தினம் நெருங்கி வருகிறது. அவனது ரகசிய பயிற்சி நண்பர்களின் உற்சாகத்துடன் ஒவ்வொரு இரவிலும் தொடர்கிறது. அத்தினம் வருகிறது. அப்பா குடியும் கனவுமாக அணிவகுப்பில் காத்திருக்க ஒரு குதிரையில் ஆடம் சீறிக் கடந்து செல்கிறான். ஆச்சரியத்தில் முழுக்க கண்கள் திறக்கிறார் அப்பா. குதிரை பாயும் வேகத்தில் வழியில் நின்ற ஒரு முதிய சீமான் தடுமாறி, வைய வாய் திறந்து, பின் வியந்து உறைகிறார். அவர் வேறு யாருமில்லை முன்பு ‘கால் போனாலும் இவனுக்கெல்லாம்’ என்றவர் தான்.
இந்த படம் முடிந்த பின் அடூர் கோபால கிருஷ்ணன் மேடையில் சொன்னார்: "இப்படம் கேட்பதெல்லாம் ஊனம் என்றால் என்ன என்பதைத் தான்".
ஊனம் என்ற ஒன்று இல்லை என்பதே இப்படம் சொல்வது.
amailto:abilashchandran70@gmail.com
Read More

Thursday, 18 June 2009

பலூன் மனிதர்களும் பலிச் சடங்குகளும்: தீவிர‌வாத‌த்தின் நாவுக‌ள்

2001-இக்குப் பின் தில்லி, மும்பை, அகமதாபாத், பங்களூர், ஜெய்பூர், காஷ்மீர், வாரணாசி, ஹைதராபாத் ஆகிய இடங்களில் நடந்த குண்டு வெடிப்பு உட்பட தீவிரவாதத் தாக்குதல்களில் 700க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டு விட்டனர். இந்தத் தாக்குதல்களில் இரண்டு முக்கிய குணாதிசயங்களைக் காணலாம்: (i) பொதுமக்கள் குறிவைக்கப்பட்டது; (ii) இவற்றின் லட்சிய உள்ளீடற்ற குறியீட்டுத்தன்மை. காட்சிபூர்வ, வெளிப்பாட்டு வன்முறை.
இந்தச் செய்திகளை ஊடகங்களில் கேட்ட, பார்த்த பெரும்பாலானோர் "அப்பாவிப் பொதுமக்களைக் கொன்று இவர்களுக்கு என்ன கிடைக்கிறது. பெரிய படிப்பெல்லாம் படித்து விட்டு ஏன் குண்டு வைக்கிறார்கள். வேலை செய்து பிழைத்தால் என்ன?" என்பது போன்ற கேள்விகளைக் கேட்க நினைத்ததில் ஆச்சரியம் இல்லை. இவை முக்கியமான கேள்விகள். இவற்றுக்கு நேரடி பதில்கள் இல்லை. ஏனெனில் உலகமயமாக்கலின் சில மறைமுக விளைவுகள் இவை.
ராண்டு கார்ப்பரேசன் அறிக்கைப்படி உலகமயமாக்கலுக்குப் பின் 1990--96 கட்டத்தில் 50,000 பொதுமக்கள் அழிக்கப்பட்டனர். 1968 லிருந்து 89 வரையிலான வருடாந்திர தீவிரவாதக் கொலைகளின் எண்ணிக்கையான 1673-உடன் ஒப்பிடுகையில் இது 162% அதிகரிப்பு. 1996க்குப் பிறகு இப்போது கொலை சதவீதம் 200ஐத் தாண்டி விட்டது. குறிப்பாய், 1980கள் போலல்லாது இப்போது அரசுகள் அல்ல சம்மந்தமற்ற பொதுமக்களே உலகமெங்கும் பலியாகின்றனர். காரணம்? நாடு சார்ந்த ஆட்சி எல்லைகளுக்குள் தீவிரவாதம் இப்போது இயங்குவதில்லை. எண்பதுகளில் போன்று உள்ளூர் அரசு எந்திரத்தை, அதிகார அமைப்புகளைத் தகர்த்து உள்ளூர்ப் பிரச்சினைகளைத் தீர்ப்பதல்ல இன்றைய தீவிரவாத நோக்கம். சர்வதேச அரசியல் பிரச்சினைகளுக்கு எதிரான நிலைப்பாட்டைக் காட்ட, எதிர்ப்பு தெரிவிக்க தேமேவெனத் திரியும் மக்களைத் தாக்குவதே இன்றைய தீவிரவாதிகளின் பாணி.
கூட்டில் ஊன்பெருக்கி வம்சம் வளர்ப்பதே ஒரே முனைப்பாய்க் கொண்டு வாழும் உலக நாடுகளின் பட்டுப்புழுக் குடிமக்களை அல்கொய்தா போன்ற சர்வதேச தீவிரவாத அதிகார முகவர் ஒருங்கிணைப்புகள் தங்கள் வளர்ச்சி, வலிமை நிறுவும் சூதாட்டத்தில் மௌனப் பகடைகள் ஆக்கி வருகின்றனர். இதுவே இந்த நூற்றாண்டின் பெரும் துன்பியல் வரலாறு.
தேசியம் கடந்த வன்முறை:
. இந்திய நகரங்களில் வெடிகுண்டுத் தாக்குதலுக்கு நம்மூர் தீவிரவாதிகள் அனுப்பிய மின்னஞ்சல் மிரட்ட முயல்வது போல் பழிவாங்குதல் நோக்கம் என்றால், அரிந்தம் சவுத்திரி சொல்வது போல், நக்சலைட் பாணியில் மோடி, மற்றும் அவரது அனுமார் பரிவாரைத் தான் குறிவைத்துத் தாக்கியிருக்க வேண்டும். அப்படிச் செய்யவில்லை என்பதும், பதிலாக குஜராத், காஷ்மீரில் என்ன நடக்கிறதென்றே கவலைப்படாத, சாப்பாட்டு மேஜைக்கும் கழிப்பறைக்கும் இடையே வாழ்கிற, அல்லது மூன்று வேளை உணவுக்கே உத்தரவாதமில்லாத பொதுமக்களே பலி கொடுக்கப்பட்டார்கள் என்பது, இவர்களது சிரத்தை உள்ளூர் வட்டத்துள் தவளைத்தாவல் செய்வதல்ல என்பதைக் காட்டுகிறது. உள்ளூர்ப் பிரச்சினைக்கான பதில் என வெளிப்படையாக போலியாகக் காட்டிக் கொண்டு, உண்மையில் சர்வதேச அடிப்படைவாத தட்டையான கொள்கைகளுடன், தீவிரவாத உரிமம்வழங்கும் முகவர் மையங்களான அல்கொய்தா போன்றவற்றுடன் செயலளவில் இணைவதும், இசுலாமிய அடிப்படைவாத உலகத்தில் பிரபலமடைவதுமே இந்த இந்தியத் தீவிரவாதிகளின் தேசிய எல்லை கடந்த தாக்குதல் நோக்கம். உலகமயமாக்க தீவிரவாதத்தின் தேசிய அடையாளம் கடந்த வன்முறைக்கு மற்றொரு உதாரணம் அகமது ஷா மசூது எனப்படும் அப்கானிய பாதுகாப்பு அமைச்சரின் படுகொலை. அல்கொய்தா இவரை வதிக்கப் பயன்படுத்தியது அப்கானியர்களை அல்ல. லண்டனில் வழங்கப்பட்ட பெல்ஜிய போலிக் கடவுச்சீட்டுகள் கொண்ட அல்ஜீரியர்களை.
பிற்போக்கு ச் சிந்தனையும், நவீனத் தொழில்நுட்ப பயன்பாடும்:
சர்வதேசத் தீவிரவாதிகளுக்கு இவர்கள் அடிப்படைவாதிகளானாலும், அதி நவீனத் தொழில் நுட்பங்களை, தகவல் தொடர்பு வசதிகளைப் பயன்படுத்துவதில் எந்தக் கூச்சமுமில்லை. இதுவே தொண்ணூறுகளுக்குப் பின்னான தீவிரவாதக் கூட்டமைப்பின் அசுர வளர்ச்சிக்குக் காரணம். அல்கொய்தா, முஜாகதீன் தீவிரவாதிகள் ஒன்றும் மலைவாசிகள் அல்ல, தொழில் நுட்பப் படிப்புகள் மெத்த படித்த மேல்தட்டு, உயர்மத்திய தட்டைச் சேர்ந்தவர்கள் என்பதை நினைவிற் கொள்வோம். அறிவு பெரும் அதிகாரமல்லவா! உலகெங்குமான ஜிகாத் தீவிரவாதக் குழுக்களுக்குப் பணம், திட்டமிடல், பயிற்சி, அறிவுரை என்று பலதரப்பட்ட ஆதரவுகளை சர்வதேசத் தீவிரவாதக் கூட்டமைப்புகளான முஜாகதீன், அல் கொய்தா தருகின்றன. தகவல் பரிமாற, தொடர்பு கொள்ள சாட்டிலைட் இணையத் தளங்கள், இணைய அரட்டை அறைகள் ஆகியவை பயன்படுகின்றன. இங்கிலாந்தில் வெடிப்பதற்காய் குண்டுகள் தயாரிக்க கபீல் அகமது எனும் பொறியியலாளர் இணையத் தளங்களில் உள்ள தகவல்களைத் தான் பயன்படுத்தினார். (உதாரணத்துக்கு எளிய முறையில் வெடிகுண்டு செய்முறைக் குறிப்புகள் சொல்லும் இந்த இணையத்தளத்தைப் பாருங்கள்: http://www.bombshock.com/archives/homemade_bombs/high_order/how_to_make_dynamite.html). தீவிரவாத ஒருங்கிணைப்போர் குழுக்கள் தங்கள் திட்டங்களை விவரிக்க பயணம் செய்ய, ஒரே இடத்தில் குழும வேண்டிய அவசியம் இன்று இல்லை; கணினி முன் இருந்து கொண்டோ அல்லது மடியில் லாப்டாப்பை வைத்து விமானத்தில் பறந்து கொண்டோ ஒரு பெரும் வெடிகுண்டு வரிசையைத் திட்டமிடும் பிரம்மாண்ட தீவிரவாத சங்கிலித் தொடரின் உள்ளூர்க் கண்ணியாக ஒருவர் இருக்கலாம். உலகத் தீவிரவாதத்தை வேரறுக்க இதனாலேயே மிகச்சிரமமாய் உள்ளது. 1980-இல் முழுக்க தேச ஆதரவை நம்பியிருந்த தனித் தீவிரவாதக் குழுக்கள், உலகமயமாக்கலுக்குப் பின் அல்கொய்தா போன்ற உரிமை அதிகார முகவர் ஒருங்கிணைப்புகளாக மாறி தேசமற்ற வலைஅமைப்புகள் மற்றும் சர்வதேச மதவாதம் ஆகியன பயன்படுத்தி அசுரவளர்ச்சி கண்டுள்ளன.
குறியீட்டு வன்முறை:
தீவிரவாதிகள் ரயில், சந்தை, பொதுக் கேளிக்கை தலங்கள், வழிபாட்டிடங்களில் நிகழ்த்தும் வன்முறை உள் நாட்டை ஒரேயடியாய் அழிவுக்கு இட்டுச் சென்று, சரணடைய வைக்க அல்ல. பொருள், உயிர்ச்சேதங்களையும் தாண்டி தேசம் தொடர்ந்து நடை போடுகிறது. குண்டு வெடித்த அடுத்த நாள் நகர மக்கள் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு வேறு வழியின்றித் திரும்புகின்றனர். ஊடகங்கள் அவர்களது வீரத்தை, சமநிலையைப் போற்றிப் பாடுகின்றன. ஆனாலும் தீவிரவாதிகள் சளைக்காமல் குண்டுகள் வெடிப்பதன் காரணம், முக்கியமாய், இவ்வன்முறை பலி சடங்கு போன்று குறியீட்டு ரீதியானது என்பதாலே. பூசாரி குருதி தெறிக்கக் கோழியை அறுத்து பலி தருவது போல், அல்லது அதற்கு பதிலீடாக சாத்வீக கோவில்களில் செம்பூக்களும், செந்தூரமும் படைக்கப்படுவது போல் சின்னதும், பெரிதுமாக குண்டுகள் சிதற இந்தியாவில் நரபலி தரப்படுகிறது. இதனால் காஷ்மீர், அப்கானிஸ்தான், ஈராக்கில் அப்பாவி இஸ்லாமிய பிரஜைகள் பயனடையவோ, புஷ்டியாகவோ போவதில்லை என்றாலும், சர்வதேசத் தீவிரவாதிகளின் உலகில், உலக வர்த்தக மைய அழிப்பு போல், இவை ஒரு முக்கிய குறியீட்டு நிகழ்வுகளாய்க் காணப்படும். நம் உலகம் ஒரு பெரும் குருதி பலி வெளியாக இவ்வாறு மாற்றப்பட்டுகிறது. இந்தத் தீவிரவாதப் போர்கள் போர்களல்ல, காட்சிபூர்வ மிரட்டல்கள், பதில் மிரட்டல்கள். அல்கொய்தா, முஜாகதீன்களுக்குக் குட்டி பி.பி.ஓக்களான இந்திய முஜாகதீன் போன்றவை காட்டும் டிரெயிலர்கள்; எதிர்காலத்தில் இதன் வேலை வரலாற்றுப் பட்டியலில் இடம்பெறப் போகும் முதல் சில வரிகள்.
காவல்துறையால் கொல்லப்பட்ட ஆட்டிப்பின் கணினியிலிருந்து, பிபிஸி, சி.என்.என், ஐ.பி.என் ஆகிய செய்தி ஊடகங்களின் தொலைபேசி எண்கள் கிடைத்தன. ஆட்டிப்பின் கூட்டாளி ஆட்டிப்புக்குத் தொடர்ச்சியான குண்டுவெடிப்புகளின் மூலம் உலகப் புகழ் பெறும் ஆவேச வெறி இருந்ததாய்ச் சொல்லியுள்ளதைக் கவனியுங்கள். எதிர்காலத்தில் உலகமே கவனிக்கும் ஒரு வேண்டப்பட்ட தீவிரவாதியாக பி.பி.சியில் பேட்டி தரும் கனவு அவனுக்கு இருந்திருக்க வேண்டும். அதே போன்றே ஆட்டிப் ஒவ்வொரு முறையும் மின்னஞ்சல் அனுப்பும் போது மீண்டும் மீண்டும் அதைச் செப்பனிட்டு சிறப்பான மிரட்டலாக்க முயன்றதும், மின்னஞ்சலுக்காய் ஆர்வத்துடன் இயக்கச்சின்னம் உருவாக்கியதும் காட்சிபூர்வ மிரட்டல் தீவிரவாதத்துக்கு முக்கியமான தகவல்கள்.
இவற்றைத் திரும்பத் திரும்ப ஒளிபரப்பி நம் காட்சி ஊடகங்கள் நம் தனிமனித வெளியைச் சித்திரவதை முகாமாக்கும். நமது அகவெளியை உணர்வதிர்ச்சிக் கோளாறு நோயாளியின் பெரும் மனவெளியாக மாற்றும். உலகமயமாக்கலில் நாம் ஊடகத் தீவிரவாதத்தின் தாக்குதல்களிலிருந்து ஒரு போதும் தப்புவதே இல்லை.
இந்திய குண்டு வெடிப்புகளில் மேலும் சில பின்நவீனத்துவ தீவிரவாத அம்சங்களைக் காணலாம்: முன்கூட்டிய மிரட்டல் (மின்னஞ்சல் சவால்கள்), இதைத் தொடர்ந்த மனோதத்துவ போர்முறை (இஸ்லாமிய இனப்படுகொலைகளின் தண்டனையை இந்தியர்கள் இன்னும் பல தலைமுறைகளுக்கு அனுபவிக்கப் போகிறார்கள்), அறியப்படாத பின்னணியிலிருந்து தாக்குதல்கள் (அடுக்குமாடிக் கட்டிடத்தில் சராசரி கல்லூரி மாணவர்கள், பொறியியலாளர்களாகப் பின்னணி), எதிர்பாராத மாயாவித் தாக்குதல்கள் (தீவிரவாத சக்திகளின் பிடியிலிருந்து தில்லியை முழுக்க விடுவித்து விட்டோம் என்று காக்கிகள் மார்தட்டும் போது, சாதாரணமாய் பைக்கில் இருவர் வந்து கூட்டமான இடத்தில் குண்டு போட்டுச் செல்வது). நாட்டின் இண்டு இடுக்குகளிலெல்லாம் முளைத்து வந்து தாக்கும் ஒருவித சர்வவியாபகத் தன்மை பின்நவீனத்துவ தீவிரவாதத்தின் ஆகப்பெரிய அச்சுறுத்தல்.
அதிகார எல்லைகள் மாய உண்மைகள்:
ஒரு அர்த்தத்தில் உலகமயமாக்கலுக்குப் பின் பிரஜை--தேச உறவுகள் மெல்லத் தேய்ந்து அழிந்து வருகின்றன. இதற்கு ஒரு காரணமான தகவல் தொழில் நுட்ப வளர்ச்சி ஒருபுறம், வர்த்தகம், அறிவுத்துறைகளில் பெரும் வளர்ச்சியை மாயம் போல் நிகழ்த்திக் காட்டினாலும், தேசியம், தேசிய ஆட்சி எல்லைகள் கடந்த தீவிரவாத்தையும் உருவாக்கியுள்ளது. பாதுகாப்பு பற்றிய சம்பிரதாயக் கருத்தாக்கம் உறுதியான அதிகார எல்லைகளை, அது சார்ந்த எதிரியை முன்தீர்மானிக்கிறது. உதாரணமாய், ஆட்சி எல்லைக்கு அப்பாலிருந்து தாக்கி நாட்டைக் கைப்பற்ற விழைபவனே எதிரி. உலகமயமாக்கல் காலத்தில் ஆட்சியெல்லைகள் மறைந்து, உலகம் சுருங்கி விட்டபின், இந்த சம்பிரதாய 'எதிரி' மறைந்து விட்டான். இந்தப் பழங்கருத்தாக்கம் பின்நவீன தீவிரவாதத்தை சமாளிக்க உதவாது. தீவிரவாத கட்டுப்படுத்தலுக்கு ஊடகங்கள் பரிந்துரைக்கும் காவல் விசாரணைக் குழுக்களின் உள்நாட்டு ஒருங்கிணைப்பு, தகவல் பரிமாற்றம் மட்டும் போதாது. இவை பூனைக்கு மணி கட்டும் சாகசங்கள் மட்டுமே.
என்ன செய்யலாம்?
ஆட்சி எல்லை கடந்த தீவிரவாதத்தை ஆட்சி எல்லை கடந்து போய் சர்வதேச ராணுவ ஒருங்கிணைப்பு மூலம் கட்டுப்படுத்துவது சர்வதேச அளவில் ஒரு பிரபல மார்க்கம். தீவிரவாத முகாம்களோ, ஆதரவு சக்திகளோ இயங்கும் நாடுகளுக்கு சலுகைகள் கொடுத்து, தனியார் (இந்தியா)--நாடு (பிற நாடு) கூட்டுறவு அமைத்து தீவிரவாதிகளின் பொருளாதரவை, வளர்ச்சியை ஓரளவு கட்டுப்படுத்தலாம். அதாவது நம் வீட்டுத் திருடனை பக்கத்து வீட்டில் போய்ப் பிடிப்பது. இது எங்கு சிக்கலாகிறதென்றால், திருடன் அயல்வீட்டுக்காரனின் உறவுக்காரனாயிருக்கும் பட்சத்தில். இங்குதான் உலக அரசியல் செல்வாக்கும், ராணுவ பலமும் அவசியமாகிறது. வங்கதேசத்தில் தீவிரவாத முகாம்கள் நடப்பதாய் அறை கூவுவதை விட்டு விட்டு, இந்தியா அத்தேசத்திற்கு பொருளாதாரச் சலுகைகள், வர்த்தக ஆதரவுகள் தந்து, அவர்களின் ஆட்சி எல்லைகளுக்குள் அமெரிக்க பாணியில் இயங்க முயலலாம். ஆனால் விளைவுகள் அடிப்படை மனித அறத்துக்கு எதிரானவை.
தீவிரவாத முறியடிப்புப் போரின் மற்றொரு பக்கத்தையும் கவனிப்போம். மனித நேயமற்ற படுகொலைகளும், ஆக்கிரமிப்புகளும், சித்திரவதை முகாம்களுமே வாழ்வெல்லை கடந்த தனியார்--நாடு கூட்டுத் தீவிரவாத முறியடிப்புப் போர்களின் வரலாறு. இந்தியா எதிர்காலத்தில் உலக அரசியலில் அமெரிக்கா போல் ஒரு டினோசராக உருவாகும் பட்சத்தில், நம் ஒவ்வொருவரின் கைகளிலும் கழுவினால் மறையாத அப்பாவிகளின் குருதிக் கறை படியும் வாய்ப்புள்ளது. தீவிரவாத எதிர்ப்பில், பலவீனர்களின், ஏழை அப்பாவிகளின் மரண ஓலங்களும், அடக்குமுறைத் திமிறல்களும் நமது போர் பண்டமாற்றாக வேண்டாம்! சாத்தானோடு உணவருந்தும் போது, இருப்பதிலேயே நீளமான கரண்டியைப் பயன்படுத்துவோம்.
நகோரி, ஆட்டிப்பைப் போன்று பிற்போக்குக் கொள்கைகளும், அதிநவீனத் தொழில் நுட்பமும் தெரிந்த உலகமயமாக்கத் தீவிரவாதி முகமற்ற, மண்ணில் எங்கும் பிடிப்பற்ற ஒரு வெற்று மனிதன். காற்றூதிய பலூன் பொம்மை. பின்நவீனத்துவ மனிதனின் பூதாகாரமாய் வளர்ந்த சிதைந்த நிழல்கள் இவர்கள். பாதரசம் போல் உருண்டோடும் நம் ஒவ்வொருவரையும் போல் இவர்களும் பரிதாபத்துக்குரியவர்களே.
Read More

எதிர்கால வல்லரசின் 50 மில்லியன் பட்டினியாளர்கள்

நான் அந்த அறிக்கையைப் பற்றிப் படித்ததும் திடுக்கிடவில்லை. நீங்களும் மாட்டீர்கள் என்று நம்புகிறேன். இந்திய மக்களின் பட்டினி நிலை பற்றிய ஐ.எஃப்.பி.ஐ. எனும் அமெரிக்க ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆய்வறிக்கை முடிவுகள் நாம் உள்ளூர அறிந்து வைத்திருந்தது தான்:
இந்தியாவின் ஐம்பது மில்லியன் பட்டினியாளர்கள்.
பசிப்பட்டியலில் மத்திய பிரதேச மாநிலம் பஞ்சடைத்த கண்களுடன் ஊடகங்களில் வலம் வரும் எத்தியோப்பியாவை முந்தியுள்ளது. குழந்தை ஊட்டச்சத்துப் பட்டியலில் பஞ்சாப் மாநிலம், கெபோன், ஹொந்தாரஸ், வியட்னாம் போன்ற ஆப்பிரிக்க தேசங்களுக்கு வெகு கீழே உள்ளது மிகக்குறைந்த வறுமை சதவீதம் (6.16%) கொண்டுள்ளதாய் சொல்லப்படும், சிறப்பு செயல்பாட்டு மாநிலமாய் விருதளித்துக் கொண்டாடப்பட்ட பஞ்சாப். ஒரேயடியாய் தலை குனிய வேண்டாம். யு.என்.ஒ.டி.சி.யின் உலக போதை மருந்து அறிக்கைப்படி போதை மருந்துப் போக்குவரத்தில் பஞ்சாப் 'முதலிடத்தில்' உள்ளது. தலித்துகளுக்கு மத உரிமை மறுத்து, தங்கள் மத நூலான குரு கிராந்த் சாகிப்பை தீண்டத்தகாதவர்களிடமிருந்து பாதுகாப்பதிலும் பஞ்சாபியர்கள் பேர் பெற்றவர்கள்தாம்.
பிற மாநிலங்களோடு ஒப்பிடுகையில் பிஞ்சு சிசுக்களின் மரணங்களும், அரைவயிற்றுக் கனல் வயிறுகளும் தமிழ் நாடு, கேரளாவில் அதிகம்.
இங்கு உணவுப் போதாமை பற்றி ஒரு சிறு குறிப்பு.
உணவு ஆற்றலை கலோரி எனும் unit கொண்டு அளக்கிறோம். உதாரணமாய் ஒரு இட்லி 80 கலோரிகள். ஒரு மனிதனுக்கு தினசரி 1200--1800 கலோரிகள் வரை தேவைப்படுகிறது. நம் நாட்டில் ஐம்பது மில்லியன் மக்கள் சராசரியாய் 600 கலோரிகள் மட்டுமே பெறுகின்றனர். எத்தனை இட்லிகள், கணக்கிடுங்கள்!
இந்தியாவின் 12 மாநிலங்கள் மக்களை அரைப்பட்டினியாய் வைத்துள்ளன. முதல் வில்லன் மத்திய பிரதேசம்தான். ஹரியானா, அஸ்ஸாம் பற்றியும் குறிப்பிட வேண்டும். உணவுப்போதாமையைப் பொறுத்தமட்டில் 25 துணை சஹாரா நாடுகளைவிட, தெற்காசியாவை விட கீழே தான் உள்ளோம். இத்தனையும் வல்லரசு நாடாக இந்தியா மல்லுக் கட்டி நிற்கும்போது. ரொம்ப விசனப்பட வேண்டாம். போட்டியில் வங்கதேசத்தைச் சற்று முந்தி விட்டோம். ஏனென்றால் இந்தியாவின் உணவு உற்பத்தி அதிகம்.
பிரதமரின் பொருளாதார அறிவுரைக் குழு உறுப்பினரான ஜி.கே. சத்தா இந்த நிலைக்குக் காரணமாய் இந்தியாவின் அடித்தட்டு மக்களை உதாசீனப்படுத்தும் பொருளாதாரக் கொள்கைகளைச் சாடியுள்ளார். உண்மை! ஜி.டி.பி. வளர்ச்சி மத்திய, உயர்மத்திய, உயர்தட்டு மக்களின் முகம் மட்டுமே. பஞ்சத்தில் வயிறு வீங்கின குழந்தை மாதிரி இந்தியா வளர்ந்து வளர்ந்து ஒருபக்கம் மட்டும் வீங்கிப் போய் விட்டது. சமீபத்தில் அசுர பொருளாதார வளர்ச்சி கண்டுள்ள குஜராத், சட்டீஸ்கர்கு, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் கீழ்த்தட்டு மக்களின் பட்டினி நிலை சிறந்த உதாரணம்.
நமது அரசாங்கம் தொழிற்பயிற்சி, அடிப்படை, உயர் கல்வி உடைய மத்திய, உயர் மத்திய வர்க்க இளைஞர்களுக்கு உற்பத்தி, சேவை தொழில் நிறுவனங்களில் வேலை வாங்கித் தருவதன் மூலம் வறுமையை ஒழித்துவிடலாம் என்று நம்புகிறது. இதுதான் பிரதமர் ம.மோ. சிங்கின் 'வறுமைப் போர்' திட்டம்.
மேற்கூறிய தகுதிகள் இல்லாத, விவசாய, கூலி வேலை செய்வோரின் மீது அக்கறை அதிகமாகும் போது இந்திய அரசியல்வாதிகள் தொழிலதிபர்களிடம் விவசாய நிலத்தைக் கொடுத்து வாங்கி நாடகம் போட்டு முடித்து ஏ.ஸி அறையில் தூங்கப் போய்விடுவார்கள். குறைந்த பட்ச கூலி நியமனம் செய்து, ஆனால் அதில் பாதி மட்டும் நொடிந்த மக்களுக்குக் கொடுத்து வயிற்றில் அடிப்பார்கள்.
இந்தியாவில் 17 மில்லியன் குடும்பங்கள் சொந்த நிலங்கள் ஏதும் அற்றவை. 800 மில்லியன் கிராமவாசிகளுக்கு 400 மில்லியன் ஏக்கர் விவசாய நிலம் என்ற விகிதாச்சார அவலம் நிலவுகிறது. மிச்ச மக்கள் எங்கே போவார்கள்? அவர்கள் நிலம் எங்கே? நமது இந்திய நகரங்கள் புற்று நோய் போல் அவர்களின் வாழ்வாதாரத்தை வளர்ச்சி என்னும் பெயரில் சுரண்டி விட்டன. சிங்கூரை எடுத்துக் கொள்வோம். கார்த் தொழிற்சாலைக்கு 1000 ஏக்கர் நிலம் எதற்கு? டாட்டாவுக்கு ரியல் எஸ்டேட் கனவுகள் இருந்தனவா? இந்திய விவசாய நிலக்கொள்ளையைப் பொறுத்த மட்டில் இந்தக் கேள்விகள் ஆராயப்பட வேண்டியவை.
இந்தியா நகரங்களை மட்டுமே நோக்கி வளர்கிறது. நகரங்கள் உச்சபட்ச ஆடம்பரங்களுடன் வாழ்வதற்கான மனிதக் கனவின் தூல வடிவம். கலிபோர்னியாவோ, சிங்காரச் சென்னையோ எல்லா பணக்கார நகரங்களும் சளைக்காமல் ஏழைகளை உற்பத்தி செய்கின்றன. ஒருவித கழிவுப் பொருள் போல.
பிளேட்டோ நினைவுக்கு வருகிறார். நகரங்களில் ஏழை--பணக்கார பிளவு நிகழ்வதைத் தவிர்க்க முடியாது என்றார் அவர். ஏனென்றால் நகரம் ஒரு போட்டிக்களம். வரிசையில் பிந்தியவர்கள் சாக்கடை வாசிகளாவது முகம் திருப்பிக் கொண்டே நாம் மறைமுகமாய் அங்கீகரிக்கும் உண்மை. நகரங்களின் வளர்ச்சி மீதே நம் உச்சபட்ச கவனம் இருப்பதால், கைவிடப்பட்ட கிராமவாசிகள் நகரம் நோக்கிக் குவிய இந்தப் பொருளாதார ஏற்றத்தாழ்வு விகிதாச்சாரம் மேலும் வீங்குகிறது.
பிளேட்டோ அடுத்து ஒன்று சொன்னார். இவ்வாறு நகரம் ஏற்றத்தாழ்வின் உச்சத்தை அடைந்து, கர்ப்பிணியின் பத்து மாத வயிறு போல் ஆகும் போது, ஏழைகள் வெகுண்டெழுந்து புரட்சி செய்து, ஆட்சியைக் கைப்பற்றுவார்கள் என்றார். மீண்டும் சக்கரம் அடுத்து ஒரு சுற்று சுற்றி வரும்போது, மற்றொரு புரட்சி காத்திருக்கும்.
இதோடு முழுக்க ஒத்துப் போக முடியவில்லை. ஆனாலும் பங்களூருவில் ஐ.டி. வர்க்கத்தினர் மீது பொது மக்கள் ஏக காண்டில் இருப்பதாய் அவுட்லுக் எக்ஸ்பிரஸ் கட்டுரை ஒன்று சொல்கிறது. ஐ.டியினரின் குடி, கும்மாள கலாச்சாரம், அவர்கள் மனை நிலங்களின் விலையை, வீட்டு வாடகையை, விலைவாசியை எகிற விட்டது, குடும்பத்துக்குள்ளே ஒருவர் ஐ.டி.க்காரர் மற்றவர் சாதா குமாஸ்தாவாக இருப்பதனால் ஏற்படும் சமனிலை இழப்பு, சச்சரவு, சூழல் மாசுபடுவது, போக்குவரத்து நெரிசல் என பங்களூருவின் பூர்வகுடிகள் கடுப்பாகி புகார்களை அடுக்குகின்றனர். அங்கு ஐ.டி. கனவான்கள் மீது பரவலான எதிர்ப்பு அலை இவ்வாறு உருவெடுத்துள்ளது. சில மளிகைக்கடை மாமாக்கள் தக்காளி, வெங்காயம்கூட ஐ.டி. மக்கள் என்றால் இரட்டை விலை சொல்லுகிறார்களாம். மறுத்தால், 'லட்சம் லட்சமாய் சம்பாதிக்கிறாயே, கொடுத்தால் என்ன?' என்கிறார்களாம். இது வெறும் வயிற்றெரிச்சல் அல்ல! இக்கேள்வியை ஞாபகத்தில் வையுங்கள்.
உணவு மிகுதியால் ஏற்படுவது சர்க்கரை நொய். இந்தியாவில் 40 மில்லியன் சர்க்கரை நோயாளிகள். அதே நிலத்தில் அருகருகே 50 மில்லியன் பட்டினியாளர்கள். இந்த முரணை மாற்ற?
நாம் ஜகத்தை அழிக்க வேண்டாம். நம்மிடம் அமெரிக்க ராணுவம் இல்லை.
காந்தி சொன்ன மாதிரி நகரங்களை அழிக்கலாம்.
நம்மால் அதுவும் முடியாது! உலகச் சந்தை நுகர்வோர் அடிமைகளுக்கு நகரங்களை விட்டால் வேறு போக்கிடம் ஏது.
Read More

செக்ஸ் யாருக்கு சொந்தம்? - ஊனம் -- வன்முறை -- அடையாளப் பட்டிகள்

நீ ஒரு ஆணா?" அம்மா திட்டி முடித்த பின் கடைசியாய்க் கேட்டாள்.
குழந்தை பெற, தாலி அணிய மறுக்கும் மனைவியை அடித்து உதைத்து வன்கொடுமை செய்யாதது, சமையலில் ஆர்வம் காட்டுவது போன்றவை என் குற்றங்கள். வன்முறை செய்யாத நான் அம்மாவின் கண்ணோட்டப்படி பெண்ணன்.
மன்னிக்க வேண்டும். இப்படியே பழகிவிட்டது. ஒருமுறை எல்டாம்ஸ் சாலையில் ஒரு வசதிபடைத்த நல்லவர் என்னைக் கட்டி வைத்து நையப்புடைக்க ஆசைப்பட்டார். அதற்கு காரணம் நேர்மாறானது. என் வண்டியில் அவரது கார் மோதிவிட எனக்குள் கிடக்கும் ஆண்சிங்கத்தைச் சற்று தட்டி எழுப்பி "ஏய் கண் தெரியாதா" என்று கத்திவிட்டேன். ஒரு அரை உடம்புக்காரன் கத்தினது அந்த 'முழுமனிதரின்' அகங்காரத்தைச் சீண்டிவிட்டது. உடனே என் குரல்வளையைப் பிடித்துவிட்டார். நற நறவெனப் பல்லைக் கடித்து "என்ன சொன்னே தேவடியா மவனே" என்றார். பரபரப்பான சாலை. அருகே ஆட்டோ நிறுத்தம். சுற்றிலும் வேடிக்கை பார்க்கும் கூட்டம். பைக்கின் பின்னால் குத்திட்டிருந்து பார்த்த ஒரு மெக்கானிக் கடை சிறுவனை ஏவினார்: "டே ஒரு கம்பி எடுத்து வா. இவனே கட்டி வைத்து குத்தப் போறேன்". ஆட்டோ ஓட்டுனர் ஒருவர் தாடியைச் சொறிந்து என்னைப் பார்த்துச் சொன்னார், "தம்பீ நீ ஓடிப்போயிரு". குரல்வளையை விட்டால் தானே. எப்படியோ அவரிடமிருந்து திமிறி தப்பி வண்டியைக் கிளப்புகையில் கூட்டத்திலிருந்து ஒருவர் வெளிப்பட்டு குறுக்கிட்டார்: "என்னாப்பா எங்க போறே, பிரச்சினையைப் பேசி முடிச்சிட்டு அப்பால போலாம்!"
இதை நினைத்து அடுத்த பல நாட்கள் எனக்குள் ஆண்சிங்கம் குமுறியது தான்! தில்லியில் செரிபிரல் பால்சி எனும் நரம்பு நோயால் உடல் செயலிழந்த நபர் ஒருவருக்கு நேர்ந்ததைக் கேள்விப்படும் வரை. சாலை நடுவே அவரது நான்கு சக்கர வண்டி மக்கர் செய்து நின்றுவிட, போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இளகின மனம் படைத்த பொதுமக்கள் இவரைச் சூழ்ந்து அடித்துப் பின்னிவிட்டார்கள். எனக்குள் ஞானம் கனிந்தது. அதாவது, road rage எனப்படும் சாலை வன்முறை முழு உடல் மனிதர்களுக்கான தனிச் சலுகை! என் நாலுகால் வண்டியை தினசரி யாராவது மோதாமல் செல்வதில்லை. அந்த வண்டிக்காரர்களிடம் எனக்குள் உறுமும் புலி ஒரு பூனையாக சிறுத்துக் கேட்கும் "அண்ணா, தயவு செஞ்சு என் வண்டியை மோதாதீங்க!"
என் நண்பன் சொல்வது போல், ஒற்றைக்காலுக்கு போனஸ் போல் எனக்கு இரண்டு காதலிகள் இருந்தனர். இரண்டாவது பெண்ணின் அம்மாவுக்கு அவளது தேர்வு பெரும்புதிராய்த் தோன்றியது.
"ஏன் இவனைப் போய் ... ரொம்ப அழகாய் இருப்பானோ"
"அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. ரொம்ப சுமார்"
"பிறகு ஏன் .. ?"
சாதி, மொழி, பொருளாதார விசயங்களில் சமரசம் செய்யத் தயாராயிருந்தவருக்கு ஊனத்தைப் பொறுத்தமட்டில் மட்டும் மனத்தடை இருந்தது. அவர் மறைமுகமாய்க் கேட்க நினைத்தது என் அம்மா கேட்டதைத் தான்:
"அவனெல்லாம் ஒரு ஆணா?"
திருமணத்திற்குப் பிறகு நானும் மனைவியும் திருவல்லிக்கேணியில் ஒரு புறாக்கூண்டு ஒண்டுக்குடித்தனத்தில் நான்காவது மாடியில் வசித்தோம். மாமியாருக்கு ஒரு நாள் என் ஆண்மையை சோதிக்கும் உத்தேசம் எழுந்தது. குளிர்பதனப்பெட்டி, பீரோ, இன்ன பிற பரிசுப்பொருட்களை லாரியில் கொண்டு வந்தவர் என்னைக் கீழே அழைத்தார். ஓரமாய் அரும்பிய புன்னகை. "வா வந்து சாமானை எல்லாம் கொண்டு போய் மாடியில் வை". கொஞ்ச நேரத்தில் சுதாரித்து, கூலியாட்கள் கொண்டு சமாளித்தேன்.
ஊனம் -- பாலியல் உரிமை -- குழந்தைமை
பலதரப்பட்ட பெற்றோர் மற்றும் உடல் ஊனமுற்ற; மனவளர்ச்சி குன்றின குழந்தைகளிடம் மேற்கொண்ட தீவிர ஆய்வின் முடிவில் நாசெக்கும் பிறரும் (1994) கண்டறிந்த உண்மை இது:
நம் சமூகத்தில் முதியவர்களைப் போன்று ஊனமுற்றவர்கள், மூளைக்குறைபாடு உடையவர்களும் பாலியல் தன்மை இல்லாதவர்களாய், குழந்தைத்தனமானவர்களாய்க் கருதப்படுகின்றனர். அவர்கள் பெற்றோர்களால் வளர்ந்த பின்னும் குழந்தைத்தனமான ஆடைகள் அணிய ஊக்குவிக்கப்பட்டு, பாலுறவுக் கல்வி மறுக்கப்பட்டு வளர்க்கப்படுகின்றனர். இந்த போன்சாய் மனிதர்கள் பாலியல் விழிப்புணர்வற்று, எதிர்பாலினத்தை நேர்கொள்ளும் தன்னம்பிக்கை இல்லாமல் பெற்றோர்கள் கையில் தோற்பாவைகளாய் வாழ்ந்து வீணாகின்றனர். இது பெற்றோர்களும், சமூகமும் இவர்களுக்கு ஏற்படுத்தும் இரண்டாம் ஊனம். கொலே (1988) எனும் ஆய்வாளர் இந்தக் கொடுமையை 'மதலையாக்கல்' என்கிறார். திருமணத்தில் விருப்பமற்ற பெண்கள் சமுகத்துக்காகத் துறவு வேடம் பூண்டு தங்கள் பாலியலை மறைப்பது போல், பெற்றோர்கள், உடலுறவுக்குத் தோதானவர்கள் அல்லர் எனத் தாம் கருதும் மூளை, உடல் குறைபாடுடைய குழந்தைகளின் பாலியலை மழுங்கடித்து அவர்களை மழலைப்படுத்துகின்றனர். இது குழந்தைகளை உடலுறவு நடவடிக்கைகளிலிருந்து விலக்கும், அதன் மூலம் பாலியல் சிக்கல்களைத் தவிர்க்கும், நீட்டித்த பால்யம் கொண்டு உடலுறவு இழப்பை ஈடுசெய்ய, நியாயப்படுத்த எடுக்கும் முயற்சியே.
இவ்வாறு சமூக ஊனம் கொண்ட, செரிபிரல் பால்சி நோயாளியான ஒரு 40 வயதுக்காரர் பற்றி நைட் எனும் ஆய்வாளர் சொல்கிறார்:
'செரிபிரல் பால்சி நோயாளியான ஒரு 40 வயது நபர் என்னிடம் பாலியல் ஆலோசனைக்காக வந்தார். ஏன் ஆலோசனைக்காக வரத் தோன்றியது என்று கேட்டதற்கு, "செக்ஸ் பற்றித் தெரிந்து கொள்வதற்கு எனக்குத் தகுந்த வயது வந்துவிட்டது" என்றார். கல்லூரிப் படிப்பு முடித்து, முழு நேர வேலையில் இருக்கும் அவர் தன் பெற்றோரிடமிருந்து விலகி கடந்த 3 வருடங்களாகத் தனியே வசித்து வந்தார். அவரது பாலியல் அறிவு தனக்கொரு ஆண்குறி உள்ளது என்ற அளவிலே இருந்தது. பெண் உடலமைப்பு பற்றி அவருக்கு ஏதும் தெரிந்திருக்கவில்லை. குறியிலிருந்து "பிசுபிசுப்பான வெள்ளைத் திரவம் வெளியாவதுண்டா" என்ற கேள்விக்கு "ஆமாம், அது எனது செரிபிரல் பால்சி தொடர்பானது தானே?" என்று பதிலுரைத்தார்.'
மைய நரம்பு மண்டல சேதத்தால் கை, கால்கள் செயலிழந்தவர்கள், மூளையில் சில பகுதிகள் விபத்தில், அல்லது பிறப்பில் சேதமடைந்த மனிதர்களை மலடாக்குவது பெற்றோர் அல்லது காப்பாளர்களின் மற்றொரு பாதுகாப்பு உத்தி. ஆனால் உண்மையில் இவர்கள் உடலுறவில் ஈடுபட்டு, இன்புறும் திறன் பெற்றவர்கள். பிறப்புறுப்புகளில் கிளர்ச்சி உணர்வற்றவர்களின் உதடுகள், முகச்சருமம், கேசம், மார்புகள் ஆகிய பகுதிகள் கூடுதல் பாலுணர்வுத் தூண்டுதல் பெறுகின்றன. இவ்வாறு உடல் செயலிழந்த பெண்களில் 60% பேர் கர்ப்பம் தரிக்கின்றனர். முதுகுத்தட சேதத்தால் ஆண்குறி பாதிக்கப்பட்டவர்கள் விரைப்பைப் பெற, சில உத்திகள், கருவிகள் உள்ளன. பிறப்பிலிருந்தே பார்வையற்றவர்கள், காது கேளாத, வாய் பேசாதாருக்கு அறிவியல் முறைப்படி கலவிக்கல்வி அறிவித்து செயல்படச் செய்ய முடியும். டவுன் சிண்டுரோம் போன்ற மூளைசேத\ வளர்ச்சிக் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட நபர்களுக்குக் குழந்தைகளை வளர்த்தும், ஆளாக்கும் திறன் இல்லாததால் அவர்களை மலடாக்குவது உசிதம் என்பது சற்று சிக்கலான சர்ச்சை தான். சில பெற்றோர் இதற்கு குழந்தைகளின் மாதவிடாய் சமாளிக்க முடியாத நிலையை காரணம் சொல்கிறார்கள். இவர்களுக்குப் பிறக்கும் குழந்தையின் உடல் நலம் பற்றிய கேள்வியும் உள்ளது. ஆனால் இப்பிரச்சினை மேலும் ஆழமானது.
மன, உடல் நலம் குன்றியவர்களுக்கும் அடிப்படை மனித உரிமைகள் உண்டு என்பதை நாம் பல நேரங்களில் மறந்துவிடுகிறோம். நம் நாட்டில் வயதுக்கு வராத பன்னிரண்டு வயதுக்காரர்களிலிருந்து முதிர்ந்த மனிதர்கள் வரை ஊனர்கள்; கருக்குழாய்கள் துண்டித்தல், கருப்பைகள் அகற்றுவது எனப் பலவிதங்களில் தங்கள் பாலியல் உரிமைகள் பறிக்கப்பட்டு மலடாகி வருகின்றனர். கொலைகாரர்கள், கற்பழிப்பாளர்கள், கொள்ளையர்கள், மது, போதை மருந்துப் பழக்க நோயாளிகள் ஆகியோருக்குக் கூட வழங்கப்பட்டுள்ள குழந்தைப்பேறு உரிமை மனவளர்ச்சி குன்றியவர்களுக்கு மட்டும் ஏன் மறுக்கப்படுகிறது? மூளை வளர்ச்சி குன்றிய சந்ததியினரின் பரம்பரை உருவாவதைத் தடுப்பது உத்தேசம் என்று ஏற்றுக் கொள்ளப்பட்டால் நாளை இனத்தேர்வு சிகிச்சைக்கு அது வித்திடும் வாய்ப்பு உள்ளது. எதிர்காலத்தில் இதன் அடுத்த கட்டமாக ஆதிக்க சக்திகள் தலித்துகளை, அல்லது பிற விளிம்பு நிலை மக்களை இல்லாமலாக்கும் பொருட்டு அவர்களை மலடாக்குவது நிகழலாம் இல்லையா?
கனடாவில் 1928 முதல் 1972 வரை மலடாக்கல் சட்டம் அமலில் இருந்தது. மூவாயிரம் ஊனர்கள் (ஆண்களும் பெண்களும்) இதன் மூலம் உறுப்புகள் அகற்றப்பட்டு மலடாகினர். குடிகார அம்மாவால் கைவிடப்பட்ட லெய்லானி மியூயர் எனும் பெண் தனது 11 வது வயதில் மூளை வளர்ச்சி அற்ற குழந்தை எனத் தவறுதலாய் முத்திரை குத்தப்பட்டு மூளை வளர்ச்சியற்ற குழந்தைகளுக்கான பயிற்சிப் பள்ளியில் சேர்க்கப்பட்டாள். அங்கு வழக்கம் போல் பொய்யான பெயரில் நடந்த அறுவை சிகிச்சையில் அவளது கருக்குழாய்கள் அகற்றப்பட்டன. பத்து வருடங்களுக்குப் பின் வெளியேறி, மணமுடித்து இயல்பான வாழ்க்கைக்குத் திரும்பின மியூயருக்கு தான் ஏன் கருத்தரிக்கவில்லை என்பது, பாவம் புரியவில்லை. அவரை ஒரு மருத்துவர் சோதித்து, அவரது "உடலின் உட்புறம் கசாப்புக் கடையில் மாட்டியது போலுள்ளது" என உண்மையை வெளிப்படுத்தும் வரை. வழக்குத் தொடுத்து ஆறு வருடங்கள் போராடிய பின் 7,50,000 டாலர்கள் நஷ்ட ஈடாகப் பெற்றார். இவரைத் தொடர்ந்து இதே போல் அனுமதியின்றி மலடாக்கப்பட்ட மேலும் 700 பேர் வழக்குத் தொடர கனடா அரசு திக்குமுக்காடி விட்டது. எம்மா பக், மட்டில்டா போன்ற பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான நிலையில், மந்த புத்திக்காரர்கள் எனப் போலியாக அறிவிக்கப்பட்டு அறுவை சிகிச்சை மூலம் கருக்குழாய்கள் அகற்றப்பட்டனர். தீர்ப்பு வழங்கின நீதிபதி இப்பெண்களின் பாலியல் ஒழுக்கமின்மையை மலடாக்கல் அறுவை சிகிச்சைக்கான முக்கிய காரணமாகவும் குறிப்பிட்டதை நாம் கவனிக்க வேண்டும். உலக நாடுகளில் குறிப்பாய் அமெரிக்காவில் பல பாலியல் தொழிலாளிகள், கறுப்பின மக்கள் இவ்வாறு மலடாக்கப்பட்ட அவலம் நடந்துள்ளது. அமெரிக்காவில் 1907--1963 காலகட்டத்தில் மட்டும் 60,000 (பெரும்பாலும் பெண்கள்) பேர் மலடாக்கப்பட்டனர். ஹிட்லர் ஜெர்மனியில் தன் இனச் சுத்திகரிப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாய் செவிடர்களைப் பிடித்து மலடாக்கினான். மலடாக்கல் போக்கின் சமூகக் காரணம் இனத் தேர்வு.
இரண்டு வருடங்களுக்கு முன் அமெரிக்காவில் கெ.இ.ஜெ எனும் பெண் ஒரு கார் விபத்தில் மூளை பாதிக்கப்பட்டு அடுப்பை இயக்குவது போன்ற அடிப்படை வீட்டு வேலைகள் செய்வதற்கான திறனை இழந்தார். இவரால் கருத்தடை மருந்துகளை, உபகரணங்களைப் பயன்படுத்தவும் முடியாது. இந்தக் காரணங்களைச் சுட்டிக் காட்டி, இவரைக் கவனிக்கும் அத்தை ஒருவர் கெ.இ.ஜெ வுக்கு அறுவை சிகிச்சை செய்து மலடாக்க முடிவு செய்தார். ஆனால் கெ.இ.ஜெவுக்குக் குழந்தை பெறக் கொள்ளை ஆசை. தனக்கு நடக்க இருக்கும் மலடாக்கல் அறுவை சிகிசையைத் தடுக்கக் கோரி சிகாகோ நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடுத்தார். கெ.இ.ஜெவால் பிறர் உதவி, கண்காணிப்பு இன்றிக் குழந்தை வளர்க்க முடியாது. ஆனாலும் நீதிமன்றம் மலடாக்கலை நிராகரித்து அவருக்கு சாதகமாகத் தீர்ப்பளித்துள்ளது. இவரது பாலியல் உரிமையைக் காப்பாற்றியுள்ளது. இந்த மனித நேயத் தீர்ப்பை மனித உரிமை ஆர்வலர்கள் ஒருசேர வரவேற்றனர்.
ஆனாலும் இந்தியாவில் மூளை வளர்ச்சி குன்றினோருக்கு இப்போதும் கால்நடைகள் நிலைதான். என் பக்கத்து வீட்டில் டவுன் சிண்டுரோமால் பாதிக்கப்பட்ட சுந்தரி என்னும் 12 வயதுக் குழந்தை இருக்கிறாள். துறுதுறுப்பான, எப்போதும் இசை தேவைப்படுகிற, கூர்மையாய் பிறரை அவதானிக்கக் கூடிய ஆனால் பேச்சுக் குறைபாடுடைய குழந்தை. அவள் விரைவில் மலடாக்கப்பட உள்ளாள். அவளுக்கு மாதவிடாயின் போது பேட் மாற்றத் தெரியாதாம்! இதனால் அவள் கர்ப்பப் பையை அகற்றினால் உசிதம் என்பது அவள் அம்மாவின் வாதம். எனக்கென்னவோ குழந்தை எதிர்காலத்தில் கருவுறும் பயம் தான் உண்மையான காரணம் எனப் படுகிறது. தொடர்ச்சியாய் சமூகத்தால் கண்காணிக்கப்பட வேண்டிய வன்முறைக் குற்றவாளிகளும், நாள் தோறும் குடும்பத்தால் போஷிக்கப்பட்டு, காப்பாற்றப்படும் உதவாக்கரை ஊர்சுற்றிப் பிள்ளைகளும் (என் குடும்பத்திலே மூன்று பேர் இருக்கிறார்கள்) வாழையடி வாழையாய் வாழும் நம்மூரில் மூளை சேதமான, உடல் குறைபாடுடைய எளிய மனிதர்கள் வாழ்ந்தால் என்ன கேடு? முழுமையான மனிதர்களின் கண்காணிப்பும், ஆதரவும் தேவைப்படும் இந்த முழுமை அற்ற மனிதர்களை அடியோடு சுவடின்றி அழிக்க வேண்டிய அவசியம் என்ன? பன்னிரண்டு வயதுக்காரரை மலடாக்க அமெரிக்காவில் நீதிமன்ற அனுமதி வேண்டும். மனித உரிமை மீறல் அன்றாட வழக்கமாகிவிட்ட நமக்கு அதெல்லாம் எதற்கு?
எங்கள் பூனைக்கு இன்றோடு 5 மாதங்கள் வயதாகிறது. அடுத்த வாரம் அதன் கர்ப்பப் பையை அகற்றப் போகிறோம். ஏற்கனவே கருத்தரித்திருந்தாலும் (போன வாரம்தான் பெரிய ஆண்பூனையுடன் ஆர்ப்பாட்டமாய்க் கூடியது), 20% வளர்ச்சிதான் இருக்கும், பையோடு எடுத்து விடலாம், கவலைப்பட வேண்டாம் என்று கால் நடை மருத்துவர் என்னை ஆசுவாசப்படுத்தியுள்ளார். இனப்பெருக்க வாய்ப்பளித்தால் எங்கள் பூனை ஒரே வருடத்தில் 80 குட்டிகளுக்கு மேல் இட்டு, ஏற்கனவே உணவின்றித் திரியும் அனாதைப் பூனைகளின் எண்ணிக்கை அதிகரித்துவிடும். நகரத்தில் மனிதனுக்கே இடமில்லை. பிறகு பூனைகள் எங்கே போவது சொல்லுங்கள்! மேலும் மலடாக்கப்பட்ட பெண் பூனைக்கு மார்பகப் புற்று நோய் வாய்ப்பு 80% குறைவு. அது மட்டுமல்ல மலட்டுப் பூனை வீட்டோடு அடங்கிக் கிடக்கும். அடிக்கடி காமச்சூடேறி ஆண் பூனைக்காகக் கத்தி ஓலமிட வேண்டியிருக்காது. பாலியல் அழுத்தங்கள் இல்லாமல் பூனை அமைதி சொரூபிணியாக ஏறத்தாழ ஒரு ஸ்ரீ ஸ்ரீ ஆனந்தாவாக எப்போதும் வீற்றிருக்கும். ஒரு குழந்தை போல் பழகும். இப்படி எத்தனையோ வசதிகள். எங்கள் பூனை கொடுத்து வைத்த பூனை!
Read More

பருத்து நிமிர்ந்த மார்புகளும், கட்டுடலும்:ஆய்வுக்களமாகும் நவீனப் பெண்

மார்புகளைப் பற்றிப் பேசுமுன், சில முடிவுகளுக்கு வருவோம். இயற்கை பரிணாமத் தேர்வின் விளைவுதான் இன்றைய மனிதன். பெண் மார்புகள் கூட. பரிணாமத்துக்கு தாவணி, பிரா, பர்தா, காவித்தீவிரவாதிகள், பத்வா, வெங்காயம் பற்றியெல்லாம் கவலையில்லை. அதன் அக்கறை தக்கவைத்தல் மட்டுமே: ஒரு இனம் தன்னை அழியாமல் காத்துக் கொள்ள சூழல் விடுக்கும் சவால்களை சமாளிப்பதற்கான திறனும், மாற்றங்களுக்கு எற்ப தகவமைத்துக் கொள்ளும் தன்மையும் வேண்டும். ஒரு இனத்தின் இது போன்ற குணாம்சங்களைத் தொடர்ந்து தேர்ந்து வம்சாவளியாகக் கடத்தி விடும் பொறுப்பு பரிணாமத்தினுடையது. இவ்வாறு நான் இப்போது கணினியோடு உரையாடுவதற்கு, அதில் துழாவி தினசரி இரை தேடுவதெனப் பலவற்றுக்கும் பரிணாமமே பொறுப்பு. இந்த நூற்றாண்டுகளின் வளர்ச்சிப் பாதையில் நம்மை நடத்தி வந்துள்ள பரிணாமம், உணவிலிருந்து இனப்பெருக்கத் துணை வரை (கலாச்சார மொழியில் மனைவி/கணவன்) விலாவரியாய் ஆராய்ந்து செய்ய அவகாசமில்லாத முடிவுகளை எடுக்கச் சில சமிக்ஞைகளை ஏற்று பயன்படுத்தச் சொல்லித் தந்துள்ளது. நமக்கு ஏன் பொதுவாய் இனிப்பு மோகம் உள்ளது, ஏன் தமிழர்களுக்கு குறிப்பாய் தாராளமாய் மார் கொண்ட பெண்கள் மேல் அளப்பரிய பாசம் (மந்திரா, குஷ்பு, நமீதா) போன்ற பல வினோத மனோபாவங்களுக்கு இந்தச் சமிக்ஞை பழக்கம்தான் காரணம். இந்தச் சமிக்ஞைகள் பற்றித் தொடர்ந்து யோசிக்குமுன் ஒரு சின்ன வேண்டுகோள்:
பாலியல் ஒழுக்க காவல் பூதங்களும், கண், வாய், காதுகளைப் பொத்துவதிலேயே எப்போதும் கவனமாயுள்ள மதக் குரங்குகளும் இங்கேயே நின்று கொள்ளலாம். விலா எலும்பு பெண் தோற்றச்சிறப்பு, பிரம்மாவின் ஆசன வாய் மகப்பேறு என அவர்களுக்கு விவாதிக்க ஏராளமான திவ்ய விவகாரங்கள் உள்ளன.
சரி, பெண்களுக்கு ஏன் பருத்த மார்புகள் என்ற கேள்வியை ஏன் கேட்க வேண்டும்?
1) பாலூட்டிகளில் மனித இனத்துக்குத் தான்விகிதப்படி மிகப்பெரிய மார்புகள். இது ஏன்?2) மார்பு எனும் பாலூட்டும் உறுப்பை அதன் அடிப்படைச் செயல்பாட்டைத் தவிர, பருமனாய், துவளாமல் மேலெழுந்து கச்சிதமாய் இருக்கும்படி ஆண் எதிர்பார்ப்பது ஏன்? பொது இடங்களில் சதா தங்கள் மார்புகள் கண்காணிக்கப்படுவதை, பரிசீலனைக்கு உள்ளாவதை உணர்ந்து கூச்சமுறும் பெண்கள் கேட்க வேண்டிய கேள்வி இது. இதற்கான பதில் ஆண்களைப் புரிய பயன்படும்.3) வரலாற்றில் பெண்ணுடல் மீதான கவனம் எப்போதுமில்லாத அவல நிலையை அடைந்துள்ளது. பிளாஸ்டிக் அறுவையாளர்களிடம் மாட்டி, நமது வெற்றிப் பெண்கள் இயல்பான உடலமைப்பை இழந்து தங்களுக்குத் தாங்களே அந்நியமாகும் பெரும் அவலம் உலகமெங்கும் நிகழ்கிறது. லிப்போ சக்ஷன் (உடல் கொழுப்பை உறுஞ்சி எடுத்து உடலுறுப்பை வடிவாக்குவது), முகச்சுருக்கத்துக்கு பொட்டாக்ஸ் ஊசி, டக்கப் அறுவை சிகிச்சை (தொங்கும் மார்பை கட்டுக்கோப்பாக்க) எனப் பெண்ணுடலை சோதனைக்கூட கின்னி பிக்கைப் போல் அறுத்து, குழாயால் உறிஞ்சி பிளாஸ்டிக் அறுவை விற்பன்னர்கள் உலகம்பூரா கோடிக்கணக்கில் பணம் ஈட்டுகின்றனர். இது ஆணின் விருப்பத்திற்கேற்ப உடலை வடிவமைக்கும் ஆதிக்கவாதச் செயல்தான்.
ஒப்பிடுகையில் பெண்களைப் போன்று ஆண்கள் தங்கள் உடலை அறுத்து, இஞ்சு, இஞ்சாய் உறுப்புகளை வடிவமைத்து, பட்டினி கிடந்து, ஒல்லியாகும் மாத்திரை விழுங்கி சிறு நீரகத்தைப் பாழ்செய்து சுயவதை புரிவதில்லைதான். நமது புதுமைப்பெண் ஆணிடம் தன்னைப் புணர்ச்சிக்குத் தயாராய்க் காட்ட ஆணைவிட அதிகமாய் சிரத்தை எடுப்பதும், அத்தகைய ஒரு பிம்பத்தை அவள் மேல் ஊடகங்கள் வணிக ஆதாயத்துக்காகத் திணிப்பதும் இந்தப் பெண்விடுதலை நூற்றாண்டின் மாபெரும் நகைமுரணே. சமூகத்தின் எத்தனையோ வார்ப்புகளில் விழுந்து, ஊடகங்கள் தொடர்ந்து உற்பத்தி செய்யும் கவர்ச்சிப் பாவை பிம்பங்களில் தானும் ஒரு பிம்பமாய்த் தொலைந்து நவீனப் பெண், சுயத்தன்மை, ஆளுமை, அறிவுத்திறனின் அடையாளங்களை இழக்கிறாள். மார்புகள் சமகாலப் பெண் பிம்பத்தின் ஒரு முக்கிய அடையாளம்.
மார்புகளின் வடிவம் பற்றிய தீவிர பிரக்ஞை பூனை கழுத்து மணி போல் நவீனப்பெண்ணுக்குள் விடாமல் ஒரு கண்காணிப்புக் குரலாக ஒலிக்கிறது. இந்தக் குரல் யாருடையது?
மூன்றாவது கேள்வியிலிருந்து நம் விசாரணையை ஆரம்பிக்கலாம்.
அக்குரல் ஆணுடையதுதான். ஆண்கள் பெண்களுக்குப் பூட்டிய ஆகப்பெரிய விலங்குகளில் மிகச் சூட்சுமமானதும் தந்திரமானதும் பிராதான். பிரா அணிவதன் பயன் என்ன? பிரா அணிவதால் தொய்வுற்ற மார்புகள் உறுதி பெற்று நிமிரும் என்றும், இவ்வாறு இதை அணியாதோரின் மார்புகள் துவண்டு தொங்கிப் போகும் என்றும் இரு வினோதமான பொய்கள் படித்த பட்டதாரிப் பெண்கள் மத்தியிலும்கூட நிலவுகிறது. பத்தாம் வகுப்பில் என் நண்பனான சரவணன் ஜட்டி அணியாமல் இருந்தால் குறி வளரும் என்றொரு கட்டுக்கதையை நம்பி சுதந்திரமாய்ச் சில காலம் திரிந்ததைப் போன்ற அபத்தம் இது. அடுத்து இந்த நவீன நாரீமணிகள் கவனத்துக்கு: பல நாடுகளிலாய்ச் செய்யப்பட்ட ஆய்வுகளின் முடிவில் தெரிய வந்தது 70 இலிருந்து 100 % பெண்கள் சரியாய்ப் பொருந்தாத பிரா அணிந்து அவதியுறுகின்றனர் என்றே. இவ்வாறு பொருந்தாத பிராவினால் தொள்வலி, கழுத்துவலி எனப் பல உபாதைகள் வேறு. பிரான்சில் 250 பெண்களைக் கொண்டு ஒரு ஆய்வு செய்யப்பட்டது. இந்தப் பெண்களிடம் ஒரு வருடத்திற்கு பிரா அணிவதில்லை என்றும், தொடர்ந்து உடற்பயிற்சி செய்வதாகவும் ஒப்பந்தம். வருட முடிவில் நடத்தப்பட்ட ஆய்வில், பலரும் பிரா இல்லாமலே அதிக வசதியாய் உணர்வதாய், அவர்களின் மார்புகள் மேலும் உறுதியாய், மெலெழுந்தபடியாய் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. நமக்கு இதுவரை சொல்லப்பட்ட விளக்கத்துக்கு மாறான இத்தகவல் ஒரு நிதர்சன உண்மையைச் சொல்கிறது. பிராவின் நோக்கம் ஆரோக்கியம் அல்ல, வர்த்தக/ஆணாதிக்க அழகியல் தான். பிரா கணுக்ககளை மறைத்தாலும், அது கூர்மையான, மேலெழுந்த, பருமனில் கச்சிதமான ஒரு மார்பு வடிவத் தோற்றம் தருகிறது. சுருக்கமாய்ச் சொல்வதானால் பிரா மார்பை மறைப்பதகற்காக அல்ல, மேலும் அழகுபடுத்துவதற்கானது. பிரா ஒழுக்கவியலாளனின் தேர்வல்ல. மாறாக, பெண்ணுடலை குழந்தை உற்பத்தி ஆலையாகக் காணும் சராசரி ஆணின் தேர்வு. அடுத்து முதல் கேள்விக்குச் செல்வோம். பருமனான முலைகள்? ஆரம்பத்தில் சமிக்ஞைகள் பற்றிச் சொன்னதை நினைவு படுத்துங்கள். சாலையில் பச்சை விளக்கு போல் இந்த நூற்றாண்டிலும் மனிதனின் ஆழ்மனம் துணையைக் கண்டதும் சில சமிக்ஞைகள் தருகிறது. துணைத்தேர்வைப் பொறுத்த வரையில் பெண்ணின் மார்பு, இடை, புட்டம் போன்ற சில அடிப்படைக் கூறுகள் பெரும்பான்மையான ஆண்களுக்குப் பச்சை விளக்குகள். இவை மறைக்கப்படும் போது உதடுகள், கண்கள், கூந்தல் ஆகியவை கவனத்துக்குள்ளாகின்றன. இந்த உடலுறுப்புகள் துணையின் உடல் நலன், கலாச்சாரம், பணவசதி ஆகியன பற்றிய சமிக்ஞைகளை அளிக்கின்றன. முலையின் பருமன் அதில் நிறைந்துள்ள கொழுப்புத் திசுக்களால் ஏற்படுவது. தொப்பை போல் மார்புகளும் கொழுப்பின் சேமிப்பறைகள். மகப்பேறின் போது பொதுவாய் உடல் கொழுப்பை நிறைய சேமிக்கிறது. இதனால் மார்புகள் பெரிதாகின்றன. ஆதிகாலத்தில் குழந்தையைப் பேணுவதில் ஈடுபட்டிருக்கும் பெண்ணுக்கு வேட்டையாடி உணவு சேகரிக்க முடியாதாகையால், இந்தக் கொழுப்புத் திரட்சியைத்தான் உடல் சக்தியாக மாற்றிப் பயன்படுத்திக் கொண்டிருக்கும். இருந்தாலும் ரொம்ப நாள் இந்த சேமிப்பைச் செலவழித்தால் தாயின் உடல் மெலிவதுடன், அடுத்த மகப்பேறுக்கான காலமும் தள்ளிப் போகும். இதனால் ஒரு ஆதிமானுடச் சமூகத்தில் மக்கள் தொகை சமனிலை இழந்துவிடும். இதைத் தவிர்க்க இத்தகைய முலைபருத்த தாய்மார்களை கவனமாய் உணவு தந்து முன்வரலாற்று ஆண்சமூகம் பேணியிருக்க வேண்டும். இப்படி முலைப் பருமனின் வசதி கருதி பரிணாமம் இத்தகைய மார்புகளைப் பெண்களுக்கு அளித்திருக்கலாம் என்று சில ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
உடலில் கொழுப்புத் திரட்சிகள் கொண்டுள்ள பெண்தான் குழந்தையைப் பெற்று வளர்க்க சக்தியுள்ள வலிமையான பெண். இதனால் பருத்த மார் கொண்ட பெண் வம்சாவளி நீட்டிக்க வேண்டும் ஆணுக்குப் பிடித்தமானவளாய் உள்ளாள். பருத்த முலைகள் இவ்வாறு பரிணாமம் தரும் பச்சை விளக்குகள் என்பது மற்றொரு சாரார் கருத்து. ஆனால் இக்கருத்தில் ஒரு அப்பட்டமான முரண் உள்ளது.
குழந்தைப் பேற்றுக்குப் பின் பெண் மீண்டும் கருத்தரிப்புக்குத் தயாராக ஒன்றரை வருடங்களாவது ஆகும். அவ்வாறு கருத்தரிக்காத பெண்ணை ஆண் நெருங்குவதில் பயனில்லை. குழந்தைப் பேணலில் ஈடுபட்டுள்ள பெண்ணுக்குப் பரிணாமம் ஏன் இந்தப் பருத்த கவர்ச்சி உறுப்புகளை அளித்து ஆணைக் குழப்ப வேண்டும்?
இங்குதான் இயற்கை ஆணுக்கு மற்றொரு குறிப்பைத் தருகிறது. மகப்பேற்றுக்குப் பின் அதிகமாய் கொழுப்பு சேருவதால் மார்புகள் துவண்டு தொங்கிப் போகின்றன. தொங்கும் மார்புகளை சமிக்ஞையாய் ஏற்று ஆண் குழந்தைபேணலில் ஈடுபட்டுள்ள, கருத்தரிக்கத் தயாரல்லாத பெண்ணைத் தொந்தரவு செய்வதைத் தவிர்க்கலாம். இப்போது துணைத் தேடலுக்கான துல்லியமான அளவுகோல் ஏறத்தாழத் தயாராகிவிட்டது: கச்சிதமாய்ப் பருத்து, வடிவாய், துவளாமல் மெலெழுந்த மார்புகள் கொண்ட பெண்தான் ஏற்ற பெண். இதிலும் ஒரு சிக்கல் உள்ளது. பொதுவான கொழுப்பு சேர்க்கை, வயதாகுதல் ஆகிய பல மகப்பேறு தவிர்த்த காரணங்களினாலும் மார்புகள் தொங்கிப் போகும். ஆனால் இந்தப் பெண்கள் புணர்ச்சிக்குத் தயாராய் இருந்தாலும், இவர்களின் வீங்கின உறுப்புகள் மாறான செய்திகளைத் தரலாம் (அதாவது தயாரில்லை என). இதற்காகத்தான் பிரா எனும் மார்புவிலங்கும், 'டக்-அப்' அறுவை சிகிச்சையும்.
நூற்றாண்டுகளின் வரலாற்றில் புணர்ச்சித் துணைக்கான அளவுகோலில் பல மாற்றங்கள் ஏற்பட்டாலும், உடல் நலத்தைக் குறிப்புணர்த்தும் சில உடலியல் அம்சங்கள் இன்னும் மாறவில்லை. ஒரு உதாரணம் தருகிறேன்.
என் அலுவலகத்தில் மெடிக்கல் டிரான்கிரிப்ஷன் துறையில் பயிற்சி அளிக்கும் ஒரு ஆறரை அடி உயர இளம் மருத்துவர் உள்ளார். மற்றபடி சுமாரான தோற்றம் கொண்ட இந்த இளைஞரைப் பார்த்து ஏக்கப் பெருமூச்சு விடாத பெண்கள் என் துறையில் இல்லை. இதைவிட வினோதமான சம்பவத்தைக் கண்ணுற்றேன். ஆழ்வார்பேட்டையில் ஒரு ஈபப்ளிஷிங் பி.பி.ஓவுக்கு வேலை விஷயமாய்ப் போய் வரவேற்பறையில் காத்திருந்தேன். அமைதியான குளிரூட்டப்பட்ட அறையில் எதிரில் அழகிய, பெரிய கண்களுடைய பெண் வரவேற்பாளர். அப்போது கடிதம் ஒன்றை ஒப்படைப்பதற்காக மற்றொரு நிறுவனத்திலிருந்து ஒரு உயரமான கடைநிலை உதவியாளன் வந்திருந்தான். அவனைப் பார்த்து தன்னிலை மறந்து இவள் ஒரு பார்வை விட்டாள் பாருங்கள், இந்தப் பிறவியில் நான் மறக்க மாட்டேன். இருவருக்கும் கல்வி, அந்தஸ்தில் எம்பித் தாவினாலும் எட்டாது, ஆனாலும் இவன் தன் உயரத்தால் அந்தப் பெரிய பள்ளத்தாக்கைக்கூட நொடியில் தாண்டிவிட்டான். அந்தக் கறுத்த கடைநிலை உதவியாளனின் உயரம் அப்பெண்ணின் ஆழ்மனத்தில் உள்ள பாலியல் சேர்க்கைப் படிவத்தில், 'வலிமை' என்னும் கட்டத்தில் பெரிதாய் ஒரு டிக் குறியை வரைந்திருக்க வேண்டும். உடனே பச்சை விளக்கு எரிந்து விட்டது.
Read More

கள்ள உறவும், நவீனப் பெண்ணுரிமையும்

திருமணத்தின் அவசியம் என்ன? பதில்களில் முக்கியமாய்ப் படுவது: (1) புணர்ச்சி; (2) குழந்தை பெற்று, பேணி, வளர்த்து, ஆளாக்கி ... மின்சாரக் கொள்ளி போட; (3) சமூக அந்தஸ்து. நண்பர் ஹமீம் முஸ்தபா 12 வருடங்களுக்கு முன் அவரது புத்தகக் கடையில் ஒரு முன்னிரவில் இலக்கியக்கூட்டத்தின் போது, சில மன்மத ரகசியங்களைக் காதோடு காதாக அலசும் போது, சற்று சத்தமாகச் சொன்னார்: 'செக்ஸுக்கு திருமணம் என்னும் லைசன்ஸ் கட்டாயம் இல்லை எனில் யாரும் கல்யாணம் செய்ய மாட்டார்கள்'.
எனக்கு பிற்பாடு தோன்றியது. திருமணத்திற்குப் பின் 'கள்ளக்காதல்' எனப்படும் வடிகால் இருப்பதால்தான் பல குடும்பங்கள் நிலைக்கின்றன. இந்த 'கள்ளக்காதல்' பல விதங்களில் இருக்கலாம். வாய்ப்புக் கிடைத்தால் வழியாத, கடலை போடாத, வேலி தாண்டாதவர்கள் எத்தனை பேர்?
அடுத்து திருமணம் என்றொரு எளிய சடங்கு இல்லை என்றால் பல பேருக்கு ஜோடியே கிடைக்காமல் போகலாம். எந்தத் திறமையோ உழைப்போ செலுத்தாமல் வெற்றி பெறும் ஒரே ஆட்டம் திருமணம்தான். குறைந்த பட்ச சம்பாத்தியமோ, குடும்பப் பின்னணியோ, குழந்தை உற்பத்தித் தகுதியை நிலை நாட்டும் அடிப்படை உடலமைப்போ போதும். இந்திய வாழ்வில் மன உறுதிக்கு அடுத்த படியாய் திருமணம் ரொம்ப அவசியம்.
நீட்சே குடியாட்சி பற்றி சொன்னது இல்லத்தரச, அரசிகளுக்கும் பொருந்தும். கல்யாண வாழ்வு பலவீனர்களுக்கான பலவீன அமைப்பு. இதன் அடி நாதமான அச்சமும் அவ நம்பிக்கையும், ஆத்திரம், பாசாங்கு என, பக்கமேளத்துக்குக் காரணமாகிறது. ஆனாலும் மற்றொரு கோணத்தில் இது நம் பாதுகாப்பற்ற தினசரி வாழ்வை போஷித்து, பாதுகாக்கிறது.
எனக்கு திருமணத்தோடான பிரச்சினை அது இயற்கைக்கு விரோதமானது என்பதே. இயற்கையைப் பொறுத்த மட்டில் நிலைப்பாட்டுக்கு, சந்ததிக்குப் போராடுவதே மானிட வாழ்வின் முக்கிய இலக்கு. நமது கல்யாண 'சௌபாக்கிய' குடும்ப, குமாஸ்தா வாழ்க்கை இந்தப் போராட்டத்தை இல்லாமல் மழுங்கடித்துவிடுகிறது. அதோடு 'கள்ளக்காதல்' இயற்கையைப் பொறுத்தமட்டில் 'நல்ல காதல்' தான். நமது ஜீன் குட்டையை வேறுபட்டதாய்த் தக்கவைக்க, பலதுணை உறவே சிறந்தது. இதற்கான இயற்கை விழைவை பிற மிருக இனங்களின் மீதான ஆராய்ச்சிகள் நிரூபித்துள்ளன. குறிப்பாய் சிறுத்தை இனத்தில் ஆண் அடக்குமுறையை, அதன் மூலம் உடலுறவுக் கட்டுப்பாட்டை, தவிர்க்க, பெண்கள் தங்கள் ஆட்சி எல்லைப் பரப்புக்குள் ஆண்களைத் தற்காலிகமாய்ப் புணர்ச்சிக்கு மட்டும் அனுமதிக்கும் பழக்கத்தை ஆராய்ச்சியாளர்கள் பதிவு செய்துள்ளதைச் சொல்லலாம். இது ஒரு அருமையான கண்டுபிடிப்பு. ஒரு விதக் காட்டுயிர் பெண்ணியவாதம் உள்ளதைச் சொல்கிறது. முக்கியமாய் பெண்சிறுத்தைகள் தங்கள் குட்டிகள் மாறுபட்ட ஆண்களினுடையதாய் இருப்பதையே விரும்புகின்றன. ஏனென்றால் இதன் மூலம் சந்ததியினருக்குச் சிறந்த உடல் நலம் வாய்க்கிறது. சரி, நாம் இந்த வானத்துப் பறவைகள் விதைப்பதில்லை வாழ்விலிருந்து ரொம்பவே விலகி வந்துவிட்டோம். ஆனாலும் நமது இன்றைய சூழலிலும் கள்ளக்காதலுக்குப் பயன்பாடுகள் இருக்கிறது.
முக்கியமாய் திருமணத்தைத் தக்க வைப்பதற்கு.
பல தளங்களில் பெண்கள் சரி நிகராய்ப் போட்டியிடத் தொடங்கியுள்ள இந்தக் காலகட்டத்தில் அவர்கள் மீதான பல தரப்பட்ட புகார்கள் பாலுறவுத் தகுதி பற்றியனவே. இரவில் பெண்கள் வெளியே நடப்பது அதிகப்பிரசங்கித்தனம் என்பதிலிருந்து, விவாகரத்து எண்ணிக்கை அதிகரிப்பு, ஒழுக்க மீறல், ஆண் விபச்சாரம், கள்ளத்தொடர்புகள் வரை. ஆண் விபச்சாரம் பற்றி சன் டீவி பரபரப்பு நினைவிருக்கலாம். தினத்தந்தி வகை வீட்டுப் பெண்களின் கள்ள உறவுக்கு பிறகு வருவோம். மாநகர உயர்மத்திய, உயர்த்தட்டு புத்துலக வேலைபார்க்கும் பெண்களிடையே இப்போது பிரபலமாய்ப் பேசப்படுவது emotional infedility எனப்படும் உணர்வு ரீதியான கள்ள உறவு. இவ்வகை மாநகரக் குடும்பங்களில் கணவன் மனைவிகள் நண்பன் நண்பிகள், அடக்கப்பட்ட, பகிரமுடியாத உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கான கருவிகளாய் அங்கீகரிக்கப்பட்டு வருகின்றனர். அதாவது திருமணத்துக்குப் பிறகும் பழைய நட்புகளைத் தொடர்வதை, பழைய கணவர்கள் போல் நவீன கணவர்கள் எதிர்ப்பதில்லை. காரணம், இன்றைய சம்பாதிக்கும் பெண் தனது பலவித மானசீக, உடல் தேவைகளை வாய், கண், மூக்கு மூடி, தவிர்க்கத் தயாராய் இல்லை. அவசர, பதற்ற நகர வாழ்வில் ஒருவரை ஒருவர் ஆற அமரக் கவனிக்க முடியாமல் போகையில், அல்லது சலிப்பு தட்டும்போது இந்த நண்பர்கள், உணர்வுபூர்வ கள்ளக்காதலர்கள் பயன்படுகின்றனர். (இந்த வகைப்படாத பின்-திருமண, 'நல்ல' சம்பிரதாய நட்புகளும் நிச்சயம் உள்ளன.)
நவீனப் பெண் அடக்க விரும்பாத தேவைகளில் ஒன்று உடலுறவு. விடிகாலை முயக்கத்தின் மருத்துவப் பயன்பாடுகள், அதனால் தவிர்க்க முடிகிற நோய்கள் என்றொரு நீண்ட பட்டியலை சமீபத்தில் பத்திரிகை ஒன்றில் படித்தேன். பரிணாமப் பார்வையில் உடலுறவு மானிட இயக்கத்தின் ஒரு முக்கிய நோக்கம். ஆனால் புள்ளிவிவரப்படி இந்தியத் திருமண ஜோடிகளின் உடலுறவுக் கணக்கு மாதத்தில் சில முறைகளே. இத்தோடு ஒட்டுறவில்லாமல் வாழும் லட்சக்கணக்கான ஜோடிகளையும் சேர்த்துக் கணக்கிட்டால் நம் சமூகம் எத்தகையதொரு தந்தூரி அடுப்பில் வேகிறது என்பது புரியும்.
ஏஞ்சலினா லெவின் என்பவர் இங்கிலாந்தின் உயர்பதவி வகிக்கும், அல்லது சுயதொழில் புரியும் நூற்றுக்கணக்கான பெண்களிடம் திருமணத்துக்குப் பின்பான பிற ஆண் பாலுறவு பற்றி ஆய்வு செய்து சில புதிய, முக்கியமான போக்குகளை வெளியிட்டுள்ளார். இவர் உரையாடிய பெண்களில் பலருக்கு இவ்வகை உறவுகள் அவர்களது வேலையிடங்களில் வெற்றிகரமாய்ச் செயலாற்றவும், குடும்பத்தைத் தக்கவைக்கவும் பயன்படுகின்றன. இவர்கள் சமூகத்தில் திருமணமான பெண்களில் 60 சதவீதத்தினர். பொதுவாய் நிறுவனங்களில் கூட வேலைபார்க்கும் நபர்களிடம் இயல்பாய் திருமணத்துக்குப் பின் பலருக்கும் ஈர்ப்பும், அதன் விளைவாய் கள்ளக்காதலும் உருவாவதாய்ச் சொல்லப்படுவதை மறுக்கிறது இந்த ஆராய்ச்சி. பல வேலை பார்க்கும் பெண்கள் நிறுவன உறவுகளை தவிர்க்கிறார்கள். காரணம், இது அவர்கள் வேலை வளர்ச்சியை பாதிக்கும்.
பொதுவாய் நம்பப்படுவது போல் குடும்ப நண்பர்களை அணுகுவதையும் பல திருமணமானவர்கள் தவிர்க்கிறார்கள். அடுத்து கவனிக்க வேண்டியது, உடலுறவை இவர்கள் தங்கள் உரிமை என நம்புவதால், பெரும்பாலானோருக்கு 'கள்ள' உறவால் குற்ற உணர்வேதும் இல்லை.
மற்றொரு ஜெர்மானிய ஆய்வு, 60 வயதுக்கு மேற்பட்ட பெண்களில் மூவரில் ஒருவர் 'கள்ள' உறவுகளில் நாட்டம் காட்டுவதாய்க் கூறுகிறது. ஏஞ்சலினா பேட்டி கண்ட 52 வயது குடும்பப் பெண் ஒருவர் 27 வருட திருமண வாழ்வுக்குப் பிறகு ஒரு நாள் வெளியே புதுக் காதலன் தேட முடிவு செய்தார். . "என் கணவர் நல்லவர்தான். ஆனால் படுக்கையில் ஒன்றுக்கும் உதவாதவர். எத்தனையோ வருடங்கள் முயக்கத்தின் போது மல்லாந்து கிடந்து இங்கிலாந்தைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தேன்" என்கிறார். ஒரு நாள், இணையத்தில் காதலனுக்காக விளம்பரம் கொடுத்தார். குவிந்த விண்ணப்பங்களில் பொறுக்கியெடுத்த காதலருடன் உறவு சில மாதங்கள் நீடித்தது. ஆனால் தனக்கு இந்த உறவு தோதில்லை என்று பட, முறித்துவிட்டார். ஆனால் முக்கியமாய் எந்த விசனமும் இல்லை. மற்றொரு 49 வயதுப் பெண்ணுக்கு 15 வயது மூத்த ஆர்வமற்ற கணவன். இவர் காதலனைத் தேட, திருமணமான பெண்களுக்கான ஒரு டேட்டிங் ஏஜென்சியை அணுகினார். அவர்கள் தேர்தெடுத்துத் தந்த மூன்று நபர்களுடன் 6 மாதங்கள் பழகி ஒருவரைத் தேர்ந்தெடுத்தார். ஆனால் உறவில் உணர்ச்சிகரமாய் ஒன்றுவதை உணர்ந்ததும், இவரும் முறித்துக் கொண்டார். இந்த ஜோடி ரத்தப் பரிசோதனை செய்து தங்களுக்குப் பால்வினை நோய் எதுவுமில்லை என உறுதி செய்து கொண்ட பின்னர் மட்டுமே உறையில்லாத உறவுக்குத் தயாராகி உள்ளனர். இந்தப் பெண் கள்ளத்தொடர்புக்குப் பின் கணவனுடனான சச்சரவுகள் குறைந்துள்ளதாய், கணவனை மேலும் எளிதாய்த் தாங்கிக்கொள்ள முடிவதாய்ச் சொல்கிறார். இவர் வாழ்வு பலதுணை உறவால் ஸ்திரப்பட்டிருப்பதாய்க் கருதுகிறார். தற்காலத் தீர்வுதான் என்றாலும் இது வசதியான, நடைமுறைக்குதவும் தீர்வு என்று விளக்குகிறார். இந்தப் பெண்கள் பலதுணை உறவை அணுகும் முறை 'தர்க்கரீதியானது', 'புத்திசாலித்தனமானது' என வர்ணிக்கும் மேரி எனும் பெண், இவ்வகை உறவுகள் சுயநம்பிக்கையை, உடலழகு மீதான கவனத்தை அதிகரிப்பதைக் குறிப்பிடுகிறார்.
இந்தியாவில் பெரும்பாலான மணவாழ்வுகள் சில மணி நேரங்கள், நாட்கள், மாதங்கள் அல்லது வருடங்களில் செத்துப்போய்விடுகின்றன. சமரச திருமணங்கள், பரஸ்பர விருப்பமின்மை, அவசரம், முதிர்ச்சியின்மை, பொருளாதார நெருக்கடி போன்று பல காரணங்கள். பிறகு நடப்பது ஒரு பாசாங்கு நாடகமே. உதாரணமாய், என்னோடு பணிபுரியும் பெண் ஒருவருடைய கணவன் அவரிடம் பேசுவதே இல்லை. இந்த ஈடுபாடில்லாத மணவாழ்வில் அவர்களுக்கு இரண்டாவதாய் ஒரு குழந்தை பிறக்கப் போகிறது. பெரும்பாலான நேரங்களில் இந்தப் பாசாங்கு நாடகத்தின் மற்றொரு அங்கமாய் மட்டுமே கள்ள உறவுகள் இருக்கின்றன.
நம்மூரில் கணவன்-மனைவி அறிவோடு கள்ளக் காதல் வருடக்கணக்கில் நடந்தும், சிதையாமல் தொடர்ந்து செயல்படும் பல குடும்பங்கள் உள்ளன. மீரா நாயர் காபரே நாட்டியப் பெண்கள் பற்றிய 'இந்தியன் காப்ரே' ஆவணப்படத்தில் இத்தகையதொரு 'பொறுத்துப் போகும்' குடும்பத்தைப் பதிவு செய்துள்ளார். என் நிஜவாழ்வில் கண்கூடாகப் பார்த்திருக்கிறேன். என் சித்திக்குத் தன் கணவனின் நண்பனோடு 'கள்ளத்' தொடர்பு இருந்தது. இது தெரிந்திருந்தும், கணவன் மனைவி பிரியவில்லை. குடும்பம் நிலைத்தது. ஊர்வாய் ஓயாமல் வம்பு பேசியும், தன் சக ஊழியரான இந்த நண்பரோடு சித்தப்பா நெருக்கமாகவே இருந்தார். முடிவாய் இருவரும் மதுபோதையில் சேர்ந்து பைக்கில் செல்லும் போது விபத்தில் இணைந்தே இறந்தனர்.
மாறாய், கள்ளத் தொடர்பு விளைவான வன்முறைகளையும் நம் சமூகத்தில் ஏகத்துக்குக் காணலாம். மாலைமலரில் வேலைசெய்யும் போது, கணிசமான கள்ளத்தொடர்பு-பிரச்சினை-கொலை செய்திகளைக் கண்ணெரியப் படித்து எழுதியிருக்கிறேன். திருவல்லிக்கேணி ஐஸ்ஹவுஸ் பகுதியில் வாழ்ந்த போது பக்கத்துத் தெருவில் ஒரு விபரீத சம்பவம் நடந்தது. 55 வயதுக்கு மேற்பட்ட தன் மனைவியை 20 வருடங்களாகக் கள்ளத் தொடர்பில் ஈடுபட்டதிற்காக வயதான கணவன் வெட்டிக் கொன்றார்.
அன்று எழுந்த பல கேள்விகளுக்கு விடை இல்லை. இத்தனை வருடங்கள் ஏன் பொறுத்தார், 30 வருடங்கள் வளர்த்தெடுத்த குடும்ப வாழ்வு ஒரே நாளில் திடீரென ஏன் அழிய வேண்டும் அல்லது இந்நாள் வரை இந்த வன்முறை வெடிக்கக் காத்திருந்ததா?
இந்த இருவகை நபர்களும் ஒருவிதத்தில் ஒருவர்தான் எனப்படுகிறது
Read More

பிற்போக்கின் அரசியலும் மில்லியன் ஆண்டுகளும்

தீபாவளி சிறப்பு நிகழ்ச்சி ஒன்றில் தொலைக்காட்சியில் மனுஷ்யபுத்திரனின் கேள்விக்கு பதிலளித்த ஐயா பெரியார்தாசன் இன்றைய இளைஞர்கள் முற்போக்காளர்கள் என்று ஆர்த்துரைத்தார். இதைக் கேட்ட எனக்குப் பூரித்துப் போனது.
எனக்குத் திராவிட இயக்க முற்போக்கு சிந்தனைகளில் ஆழ்ந்த ஈடுபாடு சிறு குழந்தைப்பருவத்திலே ஆரம்பித்து விட்டது. காரணம் அப்பா ஒரு தீவிர தி.மு.ககாரர். ஒரு சின்ன பெரியார் தாசர். அம்மா அடிக்கடி சொல்வாள். தொட்டிலில் என்னை போட்டு விட்டு கைவேலையாய் போகும்போது, அப்பாவை பார்த்துக்கொள்ள சொன்னால், "பெரியார் பெரியார்" என்று சொல்லியே தொட்டிலை ஆட்டுவாராம். டாக்டர் கலைஞரை நள்ளிரவில் உள்ளே போட்ட போது, அப்பா உணவுத் தட்டை தூக்கி வீசி விட்டு உண்ணாவிரதம் இருந்தார். எம்.ஜி.ஆரை டீ.வியில் பார்த்தால் தாரை தாரையாய் கண்ணீர் விடுவார். தந்தைப் பெரியார் பற்றி பேச ஆரம்பித்தாலே நாக்கு தழுதழுத்து அரைமணி நேரம் பேச முடியாமல் தவிப்பார். இப்படியான ஒரு திராவிட அபிமான பாரம்பரியத்தில் வளர்ந்ததால் அடிக்கடி இப்போது வரை ஒரு இறைமறுப்பு இந்தனையாளனாகவே இருக்கிறேன். எந்த அளவுக்கென்றால் "கடவுள்" என்று பேச ஆரம்பித்தாலே எனக்கு கொட்டாவி வந்து விடும்.
என் தாத்தா மைவள்ளி (வட்டப்பெயர்) நாராயணன் தந்தைப் பெரியாருடன் கைகுலுக்கி பேசியுள்ளதாக என் அப்பா வீட்டுச் சுவர்களில் எழுதி வைக்காத குறைதான். உங்களைப் போலவே நானும் அதை நம்பவில்லை.
இப்படியான முற்போக்கு திராவிட சிந்தனை பாரம்பரியத்தில் வாழையடி வாழையாய் தோன்றின எனக்கு ஒரு பெரிய தடையாய் அமைந்துள்ளது என் பெயர்தான். "தமிழ்மகன்" என்றோ "தமிழ்ச்செல்வன்" என்றோ வைத்திருக்கலாம். இவ்விசயத்தில் அப்பாவை ஒருக்காலும் மன்னிக்க மாட்டேன்.
ஐயா பெ.தா அவர்கள் குறிப்பிட்டது போல் ஒரு "முற்போக்குப் பயிரான" என் அப்பாவுக்கு தந்தைப் பெரியாரின் பெண்ணிய சிந்தனையோடு மட்டும் உடன்பாடில்லை. புரூஸ்லியின் சிந்தனையோடு ஓரளவு ஒத்து வருவார். சாப்பாட்டில் உப்பு காரம் இருந்தாலோ, சில நேரம் இல்லாவிட்டாலும் கூட, பிற்போக்குப் பயிரான என் அம்மாவின் மூக்கில் ஒரு குத்துவிடுவார். இப்படியான தொடர்தாக்குதல்களினால் அம்மாவின் பிற்போக்கு மூக்கின் எலும்பு ஒரு நாள் நொறுங்கியே விட்டது. ஆனாலும் திருந்திய பாடில்லை.
ஐயா பெ.தா அவர்கள் (என்னைப் போன்ற) முற்போக்காளர்களே இன்றைய தலைமுறையில் அதிகமாய் இருப்பதாய் கூறியது கேட்க நிச்சயம் பெருமிதமாய் இருந்தது. ஆனாலும் சமீபமாய் நவீன இளைஞர்களிடம் பழமைவாதம் பரவலாய் காணப்படுவதாய் புள்ளிவிவரங்கள் சொல்லுவது மிகுந்த வருத்தமளிக்கிறது. உதாரணமாய், பாண்ட், சட்டையிலிருந்து நாய்க்குட்டிக்கான உணவு வரை வெளி நாட்டிலிருந்து இறக்குமதி செய்யும் இளையதலைமுறை மிகவும் பிற்போக்காக திருமணம் போன்ற சடங்குகளை இன்னும் பின்பற்றுகிறார்கள். அன்று தரகர்கள் செய்த இந்த பல்பார்த்து ஆள்பிடிக்கும் வேலையை matrimonial.com போன்ற இணையதளங்கள் பட்டவர்த்தமாய் செய்து கோடிகள் குவிக்கின்றன. சாதி, உபசாதி, ஜாதக பொருத்தம் என பல வித மூட நம்பிக்கைகளைத் தொடர்ந்து பின்னர் தான் மணமக்கள் ஒருவர் முகத்தை மற்றவர் பார்த்து முடிவு செய்கிறார்கள். எந்த அளவுக்கு அதிகமாய் படித்து சம்பாதிக்கிறார்களோ, நைட் கிளப், டேட்டிங் என்று ஆட்டம் போடுகிறார்களோ அந்த அளவுக்கு கட்டுப்பெட்டித்தனமாய் பிற்போக்கு சடங்குகளில் நம்பிக்கை கொண்டுள்ளார்கள். ஒரு பிரபலமான உதாரணம் தருகிறேன்: ஜாதக பொருத்தமின்மைக்கு பரிகாரமாக நடிகர் அபிஷேக் பச்சனை மணமுடிக்குமுன் சர்வதேச திரைத்தாரகை ஐஸ்வர்யா ராய் ஒரு மரத்துக்கு மாலையிட்டு திருமணம் செய்தார். இல்லாவிட்டால் திருமணத்துக்குப் பின் அபிஷேக்கின் உயிருக்கு ஆபத்தாம். இன்னும் நாம் திருமணம் என்ற பெயரில் பெண்ணுக்கு மூக்கணாங்கயிறு கட்டும் பழக்கத்தை விட்டபாடில்லை. என் மனைவியை நான் மூக்கணாங்கயிறு அணிய வற்புறுத்தவில்லை என்பதால் என் மூன்று பால்யகால நண்பர்கள் (நரேந்திர மோடியின் வழிபாட்டாளர்கள்) இப்போது வரை என்னிடம் பேச மறுத்து வருகிறார்கள். இவர்களில் ஒருவன் இஸ்ரேலில் மென்பொருள் வல்லுநன். மற்றுமிருவர் பிரபல எம்.என்.சிகளில் மேலாளர்கள்.
இதில் முற்போக்குக் குடும்பங்களிருந்து வரும் பெண்கள் நிலைமைதான் ரொம்ப பாவம். என் அலுவலகத் தோழி கயல்விழியின் அப்பா தி.காவில் 20 வருடங்களாய் முற்போக்குத் தொண்டாற்றுபவர். அவர் பெண்ணுக்கு அவர் ஜாதகம் இயற்றாததால் வரனுக்காக பெரியாய் திடலிலுள்ள கட்சியின் திருமண மையத்தைதான் நம்பி இருந்தார். இரண்டு வருடங்களாய் அலைகழிக்கப்பட்டு, ஏதும் அமையாமல் நொந்து போனார். சுயமரியாதையை விட்டு அவர் பழமைவாதிகளின் வரன் தேடும் இணையதளங்களில் இப்போது பதிவு செய்துள்ளார். அங்கும் 'இறை நம்பிக்கை' இல்லை என்று தெரிவிக்கும் பையன்கள் கூட ஜாதகப் பொருத்த விசயத்தில் விடாப்பிடியாய் உள்ளார்கள். நம்மூரில் ரேசன் அட்டைக்கு அடுத்தபடியாய், ஜாதகம் இல்லையென்றால் அணுவும் நகராது என்னும் நிலை உள்ளது. ஜாதகம் இல்லாத பெண்களுக்கு மணமாகும் தகுதி இல்லை. அதுவும் திராவிட நிறம் வேறு என்றால் சொல்லவே வேண்டாம்!
இன்றைய நவீன இளைஞர்களிடம் காணப்படும் மற்றொரு மனநோய் மாட்டுப்பெண்ணை வீட்டுப் பெண்ணாகவே வைத்துக் கொள்வதற்கான தீவிரம். பொறியியல் படிப்பு முடித்து விட்டு கணவனின் வற்புறுத்தலால் வேலைக்குப் போகாமல் வீட்டை நாலுமுறை பெருக்கி, கிடைக்கிற பொருளை எல்லாம் எடுத்து துடைத்து வைத்து, இத்தனைக்குப் பிறகும் நேரம் மீதமிருப்பதால், டீ.வியில் குடும்பத்தொடர்கள் பார்த்துக் கொண்டே தூங்கி தங்கள் திறமைகளை வீணடித்துக் கொண்டிருக்கிறார்கள். என் அலுவலக வேலைப்பிரிவை பொறுத்த மட்டிலுமே கடந்த 6 மாதங்களில் 4 பெண்கள் கணவனின் வற்புறுத்தலால் வேலையை விட்டுள்ளனர். இதைப் போன்றே இரண்டாவதாய் குழந்தை பெற்று குலதெய்வ பெயரிட்டு மக்கள் தொகையை எகிற விடும் உயர் நோக்குடன் மேலும் பல பெண்கள் வேலையை விடுகிறார்கள். இங்கும் ஆண் குழந்தை பெறுவதற்கான ஆணின் பேராசைதான் தூண்டுதல். இப்படியான 'குடும்ப' வற்புறுத்தலால் என அலுவக தோழி சுகன்யா வீட்டிலிருந்து வேலை பார்க்கும் வாய்ப்பை சமீபமாய் பெற்றுக் கொண்டார். ஆனால் வீட்டில் அவர் அலுவலக வேலையோடு சேர்த்து சமையல், பெருக்கி, துடைப்பது, தினமும் வடை பாயச சாப்பாடு சமைப்பது என அடிமாடாக இரட்டை வேலை செய்ய வேண்டியதாகி விட்டது. அதை விட கொடுமை அவரது மாமனார் அவரை அலுவலக வேலையை ஒரேயடியாய் துறந்து விடுமாறு தொடர்ந்து மிரட்டி வருவது. "சம்பாத்தியம் புருஷலட்சணம்" என்று என் மாமியார் அடிக்கடி காதுபட சொல்லுவார் ( நான் என் மனைவியை விட குறைவாக சம்பாதிப்பதனால்). இந்த தர்க்கப்படி எங்கே தங்கள் லட்சணம் பறிபோய் விடுமோ என பல திருமணமான, ஆகாத இளைஞர்கள் ஒருவித பதற்றத்தில் உள்ளார்கள். இதனால் ஒரு முக்கிய முன்-திருமண கோரிக்கையாக "கல்யாணத்துப் பிறகு வீட்டோடு குடும்பத்தை பார்த்துக் கொள்ள வேண்டும், வேலைக்குப் போகக் கூடாது" என்று பரவலாய் வலியுறுத்தப்படுகிறது. பின்-திருமண பழுது சரி செய்யும் நடவடிக்கையாக வேலைக்குப் போகும் மாட்டை கொம்பைப் பிடித்து கொட்டகையில் அடைப்பது பல குடும்பங்களில் உறவினர்களின் பேராதரவுடன் நடக்கிறது. என் மனைவியின் மேலாளர் ஒரு பெண். சந்தியா. மாதம் ஐம்பதினாயிரம் சம்பாதிக்கிறார். வேலை பார்க்கும் நிறுவனத்தின் பாதி பங்கு வேறு உள்ளது. ஆனாலும் இவரது கணவனும், மாமனார் மாமியாரும் வேலையை விடும்படி தினசரி மனவதை செய்கின்றனர். கணவனுடன் 2 வருடங்களாய் சுமூக உறவில்லை. பேச்சு வார்த்தைக்கு முயன்றால் " நீ வேலையை விடு, எல்லாம் தானாய் சரியாகி விடும்" எனபது அவரது ஒரே பதில். இவருக்கு 6 வயதில் ஒரு மகள். இந்த வேலையை விடும் நெருக்கடியை மேலும் தீவிரப்படுத்துவதற்க்காக மாமனார் மாமியார் பேரக்குழந்தையை கவனிக்காமல் உதாசீனிக்கிறார்கள், ஒருவித மறைமுக மிரட்டல் என. ஒரு நாள் வழக்கம் போல் மதியம் பள்ளி விட்டு வந்த குழந்தைக்கு 102 டிகிரி ஜுரம். வீட்டில் யாரும் மருந்து தரவோ, பொருட்படுத்தவோயில்லை. மாலை 7 மணிக்கு வீட்டுக்கு வந்த இவரிடம் மாமியார் ரிமோட்டால் டீ.வி சானலை மாற்றிக் கொண்டே சொல்கிறார்: "கொழந்தைக்கு ஜுரம் போல, என்னன்று போய் பாரு". இவரது கணவர் ஹைதராபாதில் சத்யம் நிறுவனத்தில் பொறியியலாளர். மனைவியை விட சற்று குறைவாய் சம்பளம்.
இந்தியாவின் 18 நகரங்களில் இந்தியா டுடே நடத்திய சர்வே பெரும்பாலான இந்திய இளைஞர்கள் சம்பிரதாய குடுமிகள், பிற்போக்காளர்கள் என்று சொல்லுகிறது. இதில் தமிழ் இளைஞர்களும் விதிவிலக்கல்ல. ஆகப்பெரும் கொடுமை 70 சதவீதத்தினர் மதவெறியர்கள் என்பது. இவர்கள் எதற்காகவும் தங்கள் மதத்தை மட்டும் விட்டுக் கொடுக்க தயாரில்லை என தெரிவித்துள்ளனர். எனக்குத் தெரிந்தே நரேந்திர மோடி ஜி தான் இந்தியாவின் தேசத்தந்தை என நம்பும் பலர் இருக்கிறார்கள். இத்தகைய இளைஞர்களை ஆதிக்க சாதியர்கள், ஆதிக்க சாதி ஆதரவாளர்கள் என் இருவகையாய் பிரிக்கலாம். உதாரணமாய், என் அலுவலக மொட்டை மாடி திறந்த வெளி 'உணவறையில்' யாரும் அசைவம் (ஆரிய உணவை சைவ உணவென்பதால் நமது புலால் உணவை பௌத்த உணவென்று அழைக்க வேண்டும் எனும் நண்பர் ஹமீம் முஸ்தபாவின் உயர்கருத்தை வழிமொழிந்து இனிமேல் அவ்வாறே குறிப்பிடுவோம்) தின்னக்கூடாது என்றொரு எழுதப்படாத சட்டம் உள்ளது. ஆதிக்கசாதி ஆரியர்களுக்கு பௌத்த உணவு (அசைவ) மணம் என்றால் குமட்டிக் கொண்டு வருமாம். ஆரிய கலாச்சாரம்தான் லட்சியம் என்று கொண்டுள்ள ஆரிய ஆதரவாளர்களும், நாங்கள் ஆசையாய் பொரித்த கருவாடு, வறுத்த நண்டு என்று கொண்டு வந்து கடித்தால் முறைத்துப் பார்ப்பது மட்டும் இல்லாமல் விலகிப் போயும் அமர்கிறார்கள். தீண்டாமை ஒழிந்து விட்டதென்று யார் சொன்னது? ஆரியர்களை குஷிப்படுத்துவதெற்கென்றே எங்கள் காண்டீனில் சைவ உணவு மட்டுமே தந்து, பிறந்ததிலிருந்தே மீன் மணம் இல்லாமல் சோறிறங்காத என்னைப் போன்ற பல பௌத்த பிரியர்களை காயப் போடுகிறார்கள். மற்றொரு அலுவலக சாதிக் கொடுமையை பற்றிச் சொல்லுகிறேன். நான் பொதுவாய் சாதி வித்தியாசம் பாராமல் ஆரியர்களிடம் கூட சகஜமாக பழகக்கூடியவன். அப்படி ஒரு நாள் அல்வா சாப்பிடுவதற்காக என் கூடப் பணிபுரியும் ஒரு ஆரியப்பெண்ணிடம் கரண்டி வாங்கினேன். பிறகு நன்றாக அலம்பி உணவு நேரத்தில் திருப்பிக் கொடுத்தேன். ஆனால் அவள் அதை பயன்படுத்தாமல் வெறும் கையாலே உருட்டி விழுங்க ஆரம்பித்தாள். நான் சொன்னேன்: " நன்றாக சோப்புப் போடு அலம்பி விட்டேன் தேவி (மோடிக்கு பயந்து பெயரை மாற்றியுள்ளேன்) நீ அதை பயன்படுத்தலாம்". நான் தொடர்ச்சியாய் வற்புறுத்தியும் அவள் நான் எச்சில் படுத்தி அலம்பிய கரண்டியை மீண்டும் வாயில் வைக்க மறுத்து விட்டாள். என் முன்னே தூக்கி வீசாமல் இருந்தாளே என்று ஆறுதல் சொல்லிக் கொண்டேன். ஆனாலும் ஐயா, எனக்கு பல இரவுகள் இந்த நுட்பமான "ஒத்திப் போவை" நினைத்து தூக்கம் வரவில்லை. இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். ஆனால் மிக அபாயகரமானது சொந்த சாதியர்களை மேல் நிலையிலும், ஆதரவு சாதிகளை சற்று அடுத்தபடியாயும் உயர்பதவிகள் தந்து அலுவலக மேலாண்மை வட்டத்துள் ஒரு சக்கர வியூகத்தை ஆரியர்கள் அமைத்து வருவது. வெகு சீக்கிரத்தில் ஒரு ரதயாத்திரை நடத்தும் அளவுக்கு என் மேலாளரான நாமக்காரர் ஆரியர்களை அதிகமாய் பணியில் அமர்த்தி அரசியல் செய்கிறார். நான் குறிப்பிட விரும்புவது இந்த வெறியர்கள் எல்லாரும் 25 வயதுக்கு உட்பட்டவர்கள் என்பதே.
நாம, பூணூல் சக்திகளின் இந்த ஆட்டத்தைப் பார்த்தால் என் ரத்தம் கொதிக்கிறது ஐயா! எங்கல் அலுவலக முகப்பில் ஒரு பிள்ளையார் சிலை வைத்திருக்கிறார்கல். தேச, இன எல்லைகள் தாண்டி சேவை செய்யும் பி.பி.ஓ நிறுவனம், ஆனால் முகப்பிலேயே பிற்போக்கின் அடையாளம். பார்க்கும் போதெல்ல்லாம் என் நரம்புகள் புடைக்கின்றன. உடைத்து நொறுக்கலாம் என்று போனால், அட, பிளாஸ்டிக் பொம்மை.
சமீபத்தில் நடத்தப்பட்ட ஜெ.டபிள்யூ.டி சக்ரா எனும் ஒரு ஆய்வு சென்னை இளைஞர்கள் பழமைவாதிகள், அச்சம் மிகுந்தவர்கள் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது. மிகவும் முற்போக்கானவர்களையே பிற்போக்காய் செயல்பட வைக்கும் சூழல் இங்கு நிலவுகிறது. திருமணத்துக்கு முன்பே நானும் என் மனைவியும் மிகவும் நவீனமாய், முற்போக்காய் சேர்ந்து வாழ ஆரம்பித்து விட்டோம். ஆனால் என் மாமியார் போலீசில் பிடித்துக் குடுப்பேன் என் மிரட்டியதால், திருமணம் செய்ய வேண்டிய நெருக்கடி ஏற்பட்டது. பதிவாளர் அலுவலகத்துக்குப் போய் திருமணத்தை சுளுவில் முடித்து விடலாம் என்று பார்த்தால், சட்டம் மாறியது தெரிய வந்தது. போலித்திருமணங்களை தடுக்க நிலுவையில் இருந்த அச்சட்டம், மறைமுகமாய் பழமைவாதிகளுக்கு ஆதரவாய் செயல்பட்டது. ஏதாவது கோவிலிலோ, மண்டபத்திலோ மணமுடித்து விட்டு ஆதாரம் தந்தால் பதியலாமாம். மண்டபத்திற்கு என்னிடம் வசதி இல்லை. மனசாட்சி இடம் தராவிட்டாலும், ஒரு சின்ன கோவிலாய் ஏற்பாடு செய்தேன். ஆனால் அங்கும் பழமைவாதிகள் ஒரு ஆப்பு வைத்திருந்தார்கள். திருமணம் கோவிலில் பதிவு செய்வதற்கு மாமியார்/மாமனார் கையெழுத்திட வேண்டுமாம். என் மாமியார் திருமணத்துக்கு வருவாரா மாட்டாரா என்று கடைசி நேரம் வரை திகிலாகவே இருந்தது. ஒருவழியாய் அவர் ஒருமணி நேரத்துக்கு முன் விஜயமாகி திருமணத்தை 20-20 கிரிக்கெட் போல் முடித்து வைத்தார். இந்த சட்டக் குளறுபடி சாதிப் படிநிலையை, பழமைவாதத்தை மேலும் வலுவாக்கவே பயனபடுகிறது.
இதையெல்லாம் கடந்து, தமிழ் நாட்டுக்கு ஒரு நீண்ட திராவிட அரசியல் பாரம்பரியம் உண்டு. நமது திறமிக்க தலைவர்களின் சீரிய வழிகாட்டுதல் இருந்தும், சாலை ஓரங்களிலும் மத்தியிலுமாய் அவர்கள் சிலைகளாய் வேறு நின்று முற்போக்கு சிந்தனைகளை நினைவுபடுத்துயும் கூட, நாம் ஏன் இப்படி பிற்போக்கு மந்தைகளாய் உள்ளோம்? இதை தமிழகத்தை செவ்வனே ஆண்டு வரும் திராவிட அரசுகளின் கையாலாகாத்தனம் என்று பழி சொல்லும் சில அன்னிய சக்திகள் உள்ளன. அவர்களுக்கு நான் கூற விரும்புவது: மனிதன் குரங்கிலிருந்து பரிணமிக்க பல மில்லியன் வருடங்கள் ஆனது. அப்படியிருக்க பழமைவாதியிலிருந்து அவன் சில பத்து ஆண்டுகளுக்குள்ளாகவே முற்போக்குவாதியாக வேண்டும் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்! அதற்குள் எப்படி நம் அரசுகள் அவனை சங்க கால சிறப்புக்கு கொண்டு செல்ல முடியும். நாம் மேலும் பொறுமைசாலிகள் என்பதை நிரூபிக்க வேண்டும்.
நமது பிற்போக்கு நிலைக்கு எரிக் புரோம் எனும் ஜென்மானிய தத்துவ, மனவியலாளரின் சிந்தனையில் பதில் உள்ளது. என் நண்பன் ஜோர்ஜ் ஒரு நாய் பயிற்சியாளன் மற்றும் கால்நடை மருத்துவன். அவன் நாய்கள் பற்றி ஒன்று சொன்னான். நாய்கள் சமூகத்துக்குள் கண்டிப்பான ஒரு படிநிலை உண்டு. அதாவது தலைவனுக்கு கீழே வலிமை குன்றின நாய்கள். அதற்கும் கீழே நோஞ்சான்கள், குட்டிகள், இப்படி. ஆனால் இன்றைய பல நவீன குடும்பங்களில் நாய்கள் குடும்ப உறுப்பினருக்கான சமஅந்தஸ்துடன் வளர்க்கப்படுகின்றன. இதனால் யார் முதலாளி \ கூட்டத்தலைவன் என்ற குழப்பம் நாய்க்கு ஏற்படுகிறது. தொடர்ந்து தலைவன் இல்லாத பிரஜை பதற்றம் கொள்கிறது. சில நாய்கள் தங்களை தலைவன் என்று சுயமாய் முடி அணிந்து உங்களை அடக்கி ஆள முயலும். சில நாய்கள் மாறாய் ஒருவித இறுக்கத்துடன் ஆர்வமற்று காணப்படும். சொன்ன பேச்சை கேட்காத, சாப்பாட்டை பறித்து ஓடும் நாய்கள் உண்மையில் மனிதனை பிரஜை என்று கருதுபவை. மற்றவை தான் என்னவென்ற குழப்பத்தில் இருப்பவை. இந்த படிநிலை பதற்றமும், அடக்குமுறை குணமும் தொழில்மயமாக்கலின் பின்னான நவீன சமூகத்தில் காவல் மிருக நிலையிருந்து செல்லப்பிராணியாக பதவி உயவு பெற்றதில் நாய்க்கு கிடைத்த அபரிதமான சுதந்திரத்தினால்தான் ஏற்பட்டது. புரோம் தனது "சுதந்திரம் மீதான பயம்" என்னும் நூலில் இவ்விசயத்தை மனித வரலாற்றை முன்வைத்து விளக்குகிறார். முன்-தொழில்மய சமூகத்தில் மனிதன் மிகச்சட்டதிட்டமான புறாக்கூண்டு சமூக அமைப்புக்குள் வாழ்ந்தான். சமூகம் வரையறுத்தது போன்றே எளிதாய் வாழ்ந்து முடித்தான். தன் அடையாளம் என்னவென்ற கவலை அவனுக்கு இல்லை. அது ஏற்கனவே முடிவாகி இருந்தது. தொழிமயமாக்கலுக்குப் பின், முதலாளித்துவத்தின் எழுச்சியின் போது, அவனது அடையாளம் மாறியது. உற்பத்தியில் பங்களிக்கும் பணியாளன், மற்றும் உற்பத்திப் பொருளை நுகர வேண்டிய நுகர்வோனாக ஒரு புது அடையாளப்பட்டி அவன் கழுத்தில் மாட்டப்பட்டது. சமூக அமைப்பும் வெகுவாக தளர்ந்தது. மனிதன் தனிமனிதன் ஆனான். மேற்கில் மறுமலர்ச்சி காலகட்டத்தில் வாழ்வின் மையத்தில் சர்வாதிகாரியாக வீற்றிருந்த கடவுளின் இடம் கேள்விக்குறியானது. லூதர், கால்வின் போன்றோர் ஆன்மீகப் பாதையில் தனிமனிதனின் பங்கு பற்றி வாதிட்டனர். அதோடு அவன் தலையில் "சுதந்திரம்" எனும் ஒரு முள்கிரீடமும் வைக்கப்பட்டது. தன் விதியை அவனே தீர்மானிக்கும், அதற்கு அவனையே பொறுப்பாக்கும் பேஜாரான சுதந்திரம். முந்தைய சட்டதிட்டங்களும், நம்பிக்கைகளும், பிம்பங்களும் இருந்த இடத்தில் இப்போது பெரிய வெற்றிடம் இருந்தது. காலுக்கு கீழே நிலம் நகர்ந்து எங்கும் அந்தரம் ஆகிவிட்டது போலிருந்தது அவனுக்கு. அவனுக்கு முன் இரண்டு வழிகள் இருந்தன. வெற்றிடத்தில் புதிதாய் ஒரு சமூக ஒழுங்கு முறையை தனிமனித நிலையிலிருந்து உருவாக்குவது. இரண்டாவது, எஞ்சின பழைய அமைப்புகளுக்குள் ஓடி ஒளிவது. தனிமை, ஸ்திரமின்மை, பொறுப்பின் பதற்றம் அவனை கடுமையாய் அழுத்தியது. பலரும் ஓடி ஒளிந்தனர். ஏதாவது ஒரு வசதியான முகமூடியை மாட்டிக் கொண்டனர். நமது முந்தைய தலைமுறைக்கு தலைவர்களில், அரசியல் மாற்றத்தின் நன்மையில் நம்பிக்கை இருந்தது. அவர்கள் சித்தாந்தங்களை முகங்களில் மாட்டியிருந்தனர். நமது முந்தைய தலைமுறையில் தலைவர்களின் பெயரை குழந்தைகளுக்கு ஆசையாய் சூட்டினார்கள், நேரு, இந்திரா என. இப்போது வாஜ்பாய், லல்லு என பெயர் வைக்கும் தைரியம் உண்டா? நவீனத் தனிமனிதனுக்கு பொருள் நுகர்வதிலும், கேளிக்கையிலும் மட்டும் நம்பிக்கை மீதமிருக்கிறது. அவன் ஊடகங்கள் கட்டி எழுப்பும் கேளிக்கை நட்சத்திர பிம்பங்கள் பின்னிருந்து எட்டிப் பார்க்கிறான்.
இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளில் உலகமயமாக்கல் கொண்டு வந்துள்ள கருத்தியல், அரசியல் சுதந்திரம் ஒரு நிலஅதிர்வு போல் சமாளிக்க முடியாததாக உள்ளது. அரசியல் சுதந்திரம் பொருளாதார சுயசார்பு தந்து பெண்களை பெருமளவில் விடுவித்துள்ளது. இது ஆண்களை தகிடுதித்தாட வைத்துள்ளதால், அவர்கள் பெண்கள் மீதான் தங்கள் பிடியை மேலும் வன்மமாக்கியுள்ளனர். விளைவுகள்: ஒழுக்கப் போலீஸ், தொலைக்காட்சி சேனல்கள் மீதான பாலியல் கெடுபிடி, கருத்தடை மாத்திரை மீதான எதிர்ப்பலை, பல்கலை, கல்லூரி ஆடைக்கட்டுப்பாடு போன்றவை. இரவுப்பணியின் போது சில பி.பி.ஓ பெண்கள் பரிதாபமாய் கொல்லப்பட்ட போது மக்களின் கவனம் பாலியல் பாதுகாப்பில் குவிந்திருந்ததை கவனியுங்கள். இப்போதும் கூட பி.பி.ஓக்கள் மீதான குற்றச்சாட்டு பாலியல் ஒழுக்கம் பற்றியதே. இது நவீன இந்திய ஆணின் பதற்றம். கருத்தியல் சுதந்திரம் பலவித புது கலாச்சாரங்கள், பழக்கங்கள், கருத்துக்களை நம் பரிசீலனைக்கு கொண்டு வருகிறது. ஒரு விதத்தில் நம் சிந்தனை, கலாச்சார தளத்தை இது விரிவு செய்தாலும், நமது காலங்காலமான சில அடிப்படைகளை மறுபரிசீலனை செய்யும் கட்டாயமும் ஏற்படுகிறது. பாதுகாப்பு இழந்ததாய் பதறுகிறோம். மீண்டும் பழைய மரபுகள், நம்பிக்கைகளில் போய் ஒளிந்து கொள்வோம். இது ஒருவித இடத்தை தக்கவைப்பதற்கான முயற்சி. ஐ.டி படித்த என் தோழி அபர்ணா உடல் பருமனுக்காக சிகிச்சை எடுத்து வந்தாள். அவள் ஐயர். சோறு, கூட்டு, சப்பாத்தி என எதிலும் நெய் வடியாவிட்டால் இறங்காது. நெய் அவள் உடல் பருமனுக்கு முக்கிய காரணம் என சுட்டிக்காட்டிய போது, அவள் கடுமையாக மறுத்தாள். நெய் புத்தி கூர்மைக்கு சிறந்ததாம். அவள் சாதியில் பலர் விஞ்ஞானி, பொறியியலாளர் என்று உயர் பதவிகளில் இருப்பதற்கு நெய் தான் காரணமாம். அவளது வாதத்தின் அபத்தம் அவளுக்கு புரியாமலில்லை. ஆனாலும் தனது சம்பிரதாய அடையாளம் ஒன்றையே அவள் பெரிதும் நம்பி, ஒட்டிக் கொண்டிருப்பதால், இதுபோல் அவளுக்கு முன்னோர்கள் வழங்கின மூட நம்பிக்கைகள், அபத்த பெருமைகளை எல்லாம் வாங்கி தலைமேல் தூக்கி கொண்டாட வேண்டியுள்ளது. இது ஒரு வசதி. மாற்றத்தை நேருக்கு நேர் ச்ந்திக்கும் திராணி இல்லாததன் விளைவு. இப்படி மாற்றம் கண்டு பதறும் மனிதன் புரியும் எதிவினைகளை புரோம் வகைப்படுத்துகிறார்: சர்வாதிகார வகை, எந்திரமனித உடன்படு முறை மற்றும் அழிவுசார் முறை. சர்வாதிகார எதிர்வினைக்கு ஹிட்லர் சிறந்த எடுத்துக்காட்டு. இத்தகைய மனிதர்கள் தங்கள் அடையாளம் சார்ந்த குறைபாட்டை பிறரை அடக்கி ஆள்வதன் மூலம் நிறைவு செய்யப் முயல்வார்கள். இரண்டாவதான எந்திரமனித உடன்படு வகை மனிதர்கள் அபர்ணா வகை. மத்திய, உயர்மத்திய வகுப்புகளை சேர்ந்தவர்கள். மூன்றாவது வகை மனிதர்கள் பிறிதை அழிப்பது மூலம் தங்கள் இருப்பை பத்திரப்படுத்த முயல்பவர்கள். சமீபத்திய பஜ்ரங்தள், எம்.என்.எஸ் மற்றும் இந்து இஸ்லாம் போன்ற மதம்சார் தீவிரவாத நடவடிக்கைகள், பழமைவாத செயல்களில் ஈடுபடுபவர்கள், துணை நிற்பவர்களை நாம் இந்த பிரிவுகளுக்குள் அடக்கலாம். நாசி ஜெர்மனிக்கும் தற்போதைய இந்தியாவுக்கும் ஒற்றுமைகள் உள்ளன. முதலாம் உலகப்போருக்குப் பின் ஜெர்மன் பாதுகாப்பற்றதாய் உணர்ந்தது. மக்கள் நம்பிக்கை அற்றிருந்தனர். ஹிட்லர் தன் மக்களிடம் யூதர்கள் மீது இனவெறியையும், ஆரிய சுய அபிமானத்தையும் வளர்த்தெடுத்தான். அதன் மூலம் சர்வாதிகாரியானான். இன்றைய இந்தியாவில் மக்களிடம் மாநில, மொழி, மதம் வாரியான சுய அபிமானம் முதலாம் வகை மனிதர்களால் வளர்த்தெடுக்கப்படுகிறது. மோடி, அத்வானி, தாக்ரே நமது சமகால ஹிட்லர்கள். மொழி, மத, மாநில ரீதியான கலவரங்களில் மூன்றாவது வகை மனிதர்கள் செலுத்தப்படுகிறார்கள். ஹைடெக் தீவிரவாத்தை முன்னெடுத்துப் போவது இரண்டாவது மற்றும் மூன்றாவது வகைகள்: லெப்டனண்டு கர்னல், காவி சாமியார், மென்பொருள் பொறியாளர் என மேதாவிப் படை.
இப்படியாக, தமிழக மக்களின் பழமைப்போக்கிற்கு திராவிட கட்சி அரசுகள் பொறுப்பல்ல. மேலும், தமிழர்கள் சிறந்த பகுத்தறிவாளர்களாய் பரிணமிக்கும் பொருட்டு, மேலும் பல சிலைகளை நிறுவ வேண்டியுள்ளது; வீட்டுக்கு வீடு இலவச டி.விக்கள் வினியோகிக்க வேண்டியுள்ளது. பல சாலைகள், சந்து, பொந்துகளுக்கும் தலைவர்களின் திருநாமங்களை சூட்டியாக வேண்டும். ஆகையால் மக்களின் பரிணாமத்துக்கு போதுமான கால அவகாசம் அளித்து திராவிட கட்சிகளையே இன்னும் பல மில்லியன் ஆண்டுகள் ஆட்சியில் அமர்த்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்
Read More

பூச்சிகள் நம்மை எப்படித் தோற்கடித்தன மற்றும் நம்மிடம் எப்படித் தோற்றன?

எங்களது BPO நிறுவனத்தின் சென்னைக் கிளைக்கு வருகை அளித்த பரங்கி முதலாளியிடம் ஒரு விசித்திரம்: மின் கொசுமட்டையைக் கொண்டு காற்றில் துழாவியபடியே நுழைந்தார். அவரிடம் கொசு பற்றின சிறு கவலை சதா இருந்தது. இந்தியாவில் இருந்த சில வாரங்களில் எங்கு சென்றாலும் வெடிகுண்டு போலீஸ் மாதிரி மட்டையால் சோதித்த பின்னரே நகர்ந்தார். சாலையில் நடக்கும் போது அம்மட்டையால் ஒரு கண்காணா எதிரியுடன் காற்றில் போராடினார். ஒருமுறை அவர் ஒரு ஆட்டோவுக்குள் மட்டையைத் துழாவிட இரண்டு கொசுக்கள் நிஜமாகவே வெளியேறின. மும்பை குண்டு வெடிப்பு வாரத்தின் போது ஷாப்பிங் போகத் தயங்காதவர், அவசரமாக மலேரியா தடுப்பு மாத்திரைகளைத் தேடி வாங்கி முழுங்கினார். சம்பள உயர்வு பற்றி விசாரித்தால் செவிடாகி விடும் முதலாளி, எங்கள் கை, முகத்தில் கொசுக்கடி காயங்கள் கண்ணுற்றால் 'வெயிலில் வாடின பயிருக்காக நானும் வாடினேன்' அளவுக்கு உருகி பரிவாய் விசாரிப்பார். அன்றாட கவலைகளுக்கு மத்தியில் மூன்றாம் உலக நாட்டுக்காரர்கள் கொசுவைப் பொருட்படுத்தவில்லை. ஆனால் மனித இனத்தின் மிகப்பெரிய உயிர்க்கொல்லி கொசுதான்.
உலக சுகாதார நிறுவன அறிக்கைப்படி உலகம் பூரா வருடத்துக்கு 300-500 மில்லியன் பேர் மலேரியா நோயால் பாதிக்கப்படுகின்றனர். இவர்களில் 1.5-2.6 மில்லியன் மக்கள் வருடத்திற்கு சாகின்றனர். ஆப்பிரிக்காவில் ஒரு மணி நேரத்துக்கு 250 குழந்தைகளை கொசுக்கள் கொல்லுகின்றன. இலங்கையில் ராஜபக்ச அரசு புலிகளுக்கு அடுத்தபடியாய் கொசுக்களைப் பற்றித்தான் கவலைபட வேண்டும். அங்கு வருடத்துக்கு ஒரு மில்லியனுக்கு மேல் மக்கள் மலேரியாவால் பாதிக்கப்படுகின்றனர். எய்ட்ஸை விட இரண்டு மடங்கு அதிக உயிர்களைக் குடிக்கிறது கொசு.
இக்கட்டுரை கொசுவைப் பற்றினதல்ல. கொசு போன்ற எளிய பூச்சிகளிடம், சிங்கம், யானை போன்றவற்றை அடக்கி சர்க்கஸ் சொல்லித் தந்த மனிதன் தொடர்ச்சியாய்த் தோற்றதும், பின்னர் புத்திசாலித்தனமாய் வென்றதும் பற்றியது.
1995-இல் உலக சுகாதார நிறுவன சார்பில் உலகம் பூரா DDT கொசு மருந்து தெளித்து மலேரியாவை ஒழிக்கும் திட்டம் பரவலாக அறிமுகப்படுத்தப்பட்டது. அத்திட்டம் மிகப்பெரும் வெற்றி பெற்றது. 36 நாடுகளில் மலேரியா வேரோடு ஒழிக்கப்பட்டது. பிற நாடுகளில் மலேரியா பாதிப்பு குறிப்பிடும்படியாகக் குறைந்தது. ஆனால் இக்கொசுத்தடுப்புப் போர் ஒரு நாள் கடும் தோல்வி அடைந்தது. 1969-இல் மனிதனைத் தாக்கும் அனோபலஸ் கொசு (3000 கொசு வகைகளில் ஒருசில மட்டுமே கடிப்பவை) DDT மற்றும் பிற மலிவனான மருந்துகளுக்கு எதிரான தடுப்பு சக்தியைப் பெற்றது. DDTக்கு பதிலாக பயன்படுத்தின மலேதியான் பலனளிப்பதாக இருந்தாலும் முன்னதை விட இதற்கான செலவு 5 மடங்கு அதிகம். கொசு இம்மருந்துக்கும் நெஞ்சு விடைத்துக் காட்ட புரோபக்ளஸ் என்ற மருந்தைப் பயன்படுத்தினோம்; இதனால் செலவு 20 மடங்கு அதிகமாகியது. சட்டைப்பை ஓட்டையானதும் உலக சுகாதார நிறுவனம் பின்வாங்கியது; தள்ளி நின்று ஏழை நாடுகளுக்கு மலேரியாவுக்கு எதிரான ஆதரவை வழங்கியது. கொசுவை முழுமையாக அழிக்கும் மருந்தை நாம் இன்னும் கண்டு பிடிக்கவில்லை. தாலிபான் நாடுகளில் குண்டு வீசுவதை விட சிரமமும் சிக்கலுமானதாகவே இன்று வரை இது இருக்கிறது.
கழிவுப் பொருட்களின் ஈரத்தை உறிஞ்சி விட்டு உங்கள் உணவில் அமர்ந்து ருசி பார்க்கும் வீட்டு ஈ டைபாய்டு போன்ற பல கொடிய வியாதிகளைப் பரப்புவது. அமெரிக்க தொழிலதிபர் ஹென்றி போர்டு மலிவு விலை மோட்டார் வாகனங்களை பெருமளவில் உற்பத்தி செய்து சந்தையில் அறிமுகம் செய்யும் வரை அந்நாட்டு மக்கள் பெரும்பாலானோரின் வீடுகளில் குதிரை லாயங்கள் இருந்தன. அங்கு குவிந்த சாணியில்தான் 90% ஈக்கள் முட்டையிட்டு வம்சாவளி பெருக்கின. போர்டின் கார்கள் குதிரைப் பயன்பாட்டைக் குறைத்து, லாயங்களை இல்லாமல் செய்ய ஈக்களின் மக்கள் தொகையும் பெருமளவில் அடிவாங்கியது. ஆனாலும் முழுக்க அழியவில்லை. அவை பரப்பும் தொற்று வியாதிகளும் எளிய மக்களின் இறப்பு விகிதத்தை உயர்த்தின. கொசு மருந்தாகப் பயன்பட்டு வந்த DDTயைத் தண்ணீருடன் சிறிதளவு கலந்து தெளித்தாலே 6 மாதங்களுக்கு ஈக்கள் சுவரில் அமர்ந்த மட்டிலேயே செத்து விழும் என்று கண்டு பிடிக்கப்பட்டது. தாமஸ் டஸ்லப் எனும் அறிவியலாளர் தனது ‘DDT’ எனும் நூலில் இம்மருந்தை "ஈக்களுக்கு எதிரான அணுகுண்டு" என்று அறிவித்தார். ஆனால் அவர் பரிணாமத்தின் ஆற்றலை கணக்கில் கொள்ளவில்லை. 1945-இல் 0.18 mg DDTக்கே சுருண்டு விழுந்த ஈயை சீண்டுவதற்கே 1951-இல் 125 mg DDT தேவையானது. அதாவது ஆறே வருடங்களில் மருந்தின் தேவையளது 700 மடங்கு எகிறி விட்டது. ஈக்களின் DDTக்கு எதிரான சக்தியை ஆய்வு செய்ய அறிவியலாளர்கள் DDT ரசாயனம் சுவர்கள், தரை, கூரை எங்கும் திட்டுத்திட்டாகப் பூசப்பட்ட கூண்டுகளில் ஈக்களைக் கூட்டம் கூட்டமாக வளர்த்தார்கள். இந்த ஈக்கள் கலப்படமில்லாத, சுத்தமான DDT மீதே அலுங்காமல் நடக்கும் அளவுக்கு எதிர்ப்பு சக்தியை 1000 மடங்கு வளர்த்துக் கொண்டன. எப்படி? ஈ உடம்பினுள் உள்ள உணவுச் செரிமானப் பொருள் ஒன்று சந்தர்ப்பவசமாக DDT-உடன் எதிர்வினையாற்றி அதை சாதுவான DDE ஆக்கியது. DDT ஈக்கு விஷம் என்றால், DDE ஆக மாற்றப்பட்ட பின் அந்த ரசாயனம் ஈக்கு நீலகண்ட அமுது; மனிதனுக்கும், பிற விலங்குகளுக்கும் கடும் விஷம். கொசு, ஈ சேர்த்து இவ்வாறு DDTக்கு எதிரான தடுப்பு சக்தியை வளர்த்து தப்பித்த பூச்சிகளின் எண்ணிக்கை ஒன்று ரெண்டல்ல, 500.
DDT முறையின் தோல்வியை நாம் அறிவியலின் வீழ்ச்சியாகக் கொள்ளக் கூடாது. வாழ்க்கைப் போக்கு மற்றும் உடலமைப்பில் பரிணாமத்தின் பாதிப்பை சரிவரப் புரிந்து கொள்ளாது, பூச்சிகளின் உயிரியல் வாழ்வை நுட்பமாய்க் கவனிக்காமல் அவற்றை அழிக்கும் திட்ட நடவடிக்கைகளைப் பத்தாம்பசலியாக மேற்கொண்டதன் விளைவே பூச்சி மருந்துகளின் தோல்வி. வெற்றிகரமாகப் பயன்பட்ட பூச்சி மருந்துகள்கூட பல சமயங்களில் கடுமையான எதிர்விளைவுகளை ஏற்படுத்தின. உதாரணமாய், மருந்து பயன்பாடால் ஒரு பூச்சி இனம் அழிந்தால், அவ்வினத்தால் அதுவரை புசிக்கப்பட்டு வந்த வேறு எளிய பூச்சிகள் எண்ணிக்கையில் பெருகி பயிர்களை அழித்த அவலம் மெக்சிக்கோவில் ஒரு முறை நிகழ்ந்தது. இதனால் அப்பகுதியில் பருத்தி விவசாயம் சாத்தியமற்ற நிலையில் கைவிடப்பட்டது. இன்று சந்தையில் கிடைக்கும் அனைத்து காய்கறிகளிலும் புற்று நோய் ஏற்படுத்தும் ரசாயனங்கள் கலந்துள்ளன. கண்மூடித்தன அறிவியல் முயற்சிகளின் இத்தகைய அபத்தங்கள் நம்மை திரும்ப முடியாத புதிர்ப்பாதையின் எல்லையில் நிறுத்திவிட்டது.
பூச்சிகளின் புத்திசாலித்தனத்தை நாம் குறைவாகவே மதிப்பிடுகிறோம். இதற்கு நல்ல உதாரணம், சோளவேர்ப்புழுக்கள் அமெரிக்க விவசாயிகளின் புழு-ஒழிப்பு முறையை சாமர்த்தியமாகத் தோற்கடித்த சம்பவம். சோளவேர்ப்புழுக்களில் இருவகை: வடக்கத்திய சோளவேர்ப்புழுக்கள், மேற்கத்திய சோளவேர்ப்புழுக்கள். ஒருவகை வண்டுகளால் இவற்றின் முட்டைகள் சோளக்கதிர் வயல்களில் மழைக்காலத்தில் இடப்படுகின்றன. மழைக்காலம் முழுக்க பொரியாமல் ஆழ்தூக்கத்தில் இம்முட்டைகள் காத்திருக்கும். வசந்த கால ஆரம்பத்தில் ஏற்கனவே பயிர் செய்யப்பட்டிருந்த சோளக்கதிர்கள் கொழித்து தயாராக இருக்கும். அப்போது வெளிப்படும் ஆயிரக்கணக்கான சோளவேர்ப்புழுக்கள் வேர்களை உண்டு சில நாட்களிலேயே ஒரு பெரும் வயலை இவை அழித்து விடும். தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் இப்புழுக்கள் அமெரிக்காவின் பெரும்பகுதி சோளவயல்களை நாசப்படுத்தி பொருளாதாரத்தை கடுமையாக பாதித்தன. அறுவடை முடிந்து, அடுத்த முறைக்கான பயிர் விதைக்கும் முன், இப்புழுக்களின் முட்டைகளை முழுக்க தேடி அழிப்பது சாத்தியம் இல்லை. பூச்சியியல் ஆய்வாளர்கள் இவ்வழிவைத் தடுக்க வழி தேடும் போது, இப்புழுக்களின் விசித்திர உணவுப்பழக்கம் கவனத்தில் வந்தது. அதாவது, இந்த சோளவேர்ப்புழுக்கள் சோளவேர்களைத் தவிர வேறெதையும் உண்ணாது. சோளவேர்கள் அருகில் கிடைக்காத பட்சத்தில் அதிகம் நகர்ந்து உணவு தேடும் ஆற்றல் இல்லாத இவை இறந்து போகும். இம்முட்டைகளை இட்ட பின் கோடைமுடிவில் இதன் பெற்றோர்கள் அனைத்தும் இறந்து போகும். இப்படி நோவாவின் கப்பல் போல் ஒரு பிரதேசத்து வண்டு இனத்தின் உயிரியல் ஆதார மொத்தமும் இம்முட்டைகள் மட்டுமே. இவை பொரிந்து வண்டுகளாக வளராவிட்டால் அவ்வினமே ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தில் அழிந்துவிடும். இரண்டாம் முறையாக சோளத்தையே விதைக்காமல் வேறு பயிர் விதைத்தால் (சுழற்சி முறை) சோளவேர்ப்புழுக்களை அழித்துவிடலாம் என்று ஒரு திட்டத்தை பூச்சியியல் நிபுணர்கள் பரிந்துரைத்தனர். இந்தச் சுழற்சி முறை மகத்தான வெற்றியாக அமைந்து, ஒரு நூற்றாண்டுக் காலம் சோளவேர்ப்புழுக்களிடம் இருந்து விவசாயிகளைக் காப்பாற்றியது.
ஆனால் 21-ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் சோளவேர்ப்புழுக்களின் மறுவரவு நிகழ்ந்தது. மூன்றாம் முறை பயிரடப்படும் சோளக்கதிர்கள் வேர்கள் அரிக்கப்பட்டு சரிந்தன. விவசாயம் பெரு வீழ்ச்சி கண்டது. மெதுவாக இதன் காரணம் பூச்சியியலாளர்களுக்குப் புரிய வந்தது. இந்தத் தலைமுறையின் வடக்கத்திய சோளவேர்ப்புழு முட்டைகள் முதல் வசந்த பருவத்தில் பொரிந்து மாட்டிக் கொள்ளாமல் சமர்த்தாய் இரண்டு வருடங்கள் காத்திருந்து இரண்டாம் மழைக்காலத்தில் சோளம் பயிராகும் போது பொரிந்து வெளிவந்து வேர்களை அரித்தன. மேற்கத்திய சோளவேர்ப்புழுக்கள் சுழற்சித் திட்டத்தை முறியடிக்க வேறொரு உபாயம் பயன்படுத்தின. இவற்றின் தாய் வண்டுகள் சோளக்கதிர்களின் வேர்களில் முட்டையிடாமல், இரண்டாம் முறையாக பயிராகும் சோயா பயிர்களின் வேர்களில் முட்டைகளை பதுக்கின. இவை அடுத்த வசந்தத்தில் பொரியும் போது சோளவேர்கள் தயாராக இருந்தன. இப்படியாக இரண்டு இஞ்சு புழுக்கள் நமது சுழற்சித் திட்டத்தை அனாயாசமாகத் தோற்கடித்தன.
பூச்சிகளுடனான இந்த மூளைப் போரில் மனிதன் கண்ட முக்கியமான வெற்றி தசைகளைக் குடைந்து தின்னும் திருகாணிப்புழு ஈக்களுக்கு எதிரானது. இம்முறை பூச்சியியலாளர்கள் இவற்றை நேரடியாகத் தாக்காமல், இவை உலகில் தோன்றவே விடாமல் செய்ய ஒரு திட்டம் தீட்டினர்: காங்கிரசுக்குச் செல்லமான கட்டாயக் கருத்தடைத் திட்டம்.
திருகாணிப்புழு ஈக்கள் புளோ ஈக்கள் எனப்படும் அழுகின தசையைப் புசித்து உலகை சுத்தப்படுத்தும் வெட்டியான் பூச்சிக் குடும்பத்தை சேர்ந்தவை. புளூபாட்டில், கிரீன்பாட்டில் ஈக்கள் தங்கள் முட்டைகளை இறந்த பறவை, பூச்சிகளின் சடலங்களில் இட, அவை புழுக்களாகப் பொரிந்து தசைப்பகுதிகளை காலி செய்யும். ஒரு அடிப்படை பொதுவிளக்க மெய்ம்மைப்படி (hypothetically) மூன்று இவ்வகைப் பூச்சிகள் சேர்ந்து ஒரு குதிரையின் சடலத்தை ஒரு சிங்கம் புசிக்கும் அதே வேகத்தில் தின்றுவிட முடியும். இந்த வெட்டியான் பூச்சிகளின் புழுக்கள் மனித, மிருக உடல்களின் புண்களில் குடியேறி அழுகின தசைகளை மட்டுமே தின்னும், உயிருள்ள செல்களைத் தீண்டாது. முதல் உலகப் போரில் உடல் உறுப்புகளின் அழுகின பகுதிகளை அகற்ற இப்புழுக்களை மருத்துவர்கள் பயன்படுத்தினர். அழுகின செல்களை மட்டுமே தின்பதோடு இவை ஒருவித நுண்ணுயிர்க்கொல்லி திரவத்தையும் (அலண்டோனின்) சுரந்து நோயாளியைக் காப்பாற்றின. நவீன நுண்ணுயிர்க்கொல்லி மருந்துகளுக்கு தற்போது நுண்ணுயிர்கள் எதிர்ப்புசக்தியைப் பெற்று விட்டமையால் இன்றைய மருத்துவர்கள் மத்தியில் இந்த வெட்டியான்புழு சிகிச்சை மீண்டும் பிரபலமாகி உள்ளது.
திருகாணிப்புழுக்கள் சாத்வீக புளோ ஈ குடும்பத்தில் பரிணாப்போக்கில் ஏற்பட்ட ஒரு விபரீத விபத்து: இவை உயிருள்ள பிராணிகளின் ரத்தத்தை உறிஞ்சி, தசைகளை உண்டு வாழும் ஒட்டுயிர்கள். திருகாணிப்புழு ஈக்கள் அரிதாகவே மனிதனைத் தாக்கும். ஆனால் தாக்குதல் விளைவுகள் கடுமையான வலி, தீவிர உடல் உபாதைகள், மற்றும் மரணத்தைக் கூட ஏற்படுத்தத்தக்கவை. உதாரணம் 1: டெக்சாஸில் பிராங்கிளின் எனும் விவசாயி சைனஸ் கோளாறு உடையவர். ஒரு நாள் இவர் தூங்கும்போது திருகாணிப்புழு ஈ மூக்கில் நுழைந்து முட்டைகள் இட்டது. இதனால் இவருக்கு பின்னர் கடுமையான தலைவலி, மயக்கம் ஏற்பட்டது. கடுமையான ஜுரத்தினால் பித்து நிலைக்குத் தள்ளப்பட்டார். ஒன்பதாவது நாளில் இவரது மூக்கிலிருந்து 380 திருகாணிப்புழுக்கள் விழுந்தன. உதாரணம் 2: தனிமையில் வாழ்ந்த அமெரிக்க மூதாட்டி ஒருவர் அடிபட்டுக் கீழே விழுந்து உதவி செய்ய ஆளின்றிக் கிடந்தார். இவரது புழைக்குள் திருகாணிப்புழுக்கள் நுழைந்து தொப்புள் பகுதியில் பெருகி செல்களை அரித்தன. இறுதியில் மருத்துவ பலன் இன்றி இறந்தார்.
திருகாணிப்புழுக்கள் கால்நடைகளைத்தான் அதிகப்படியாய் சேதம் செய்கின்றன. கால்நடைக்கு மிகச்சிறிய புண் ஏற்பட்டிருந்தாலும் கூட ரத்த மணம் பிடித்து வரும் திருகாணிப்புழு ஈக்கள் அங்கு முட்டையிட்டு புறப்படும். முட்டையிட்டிருப்பது அறிந்ததும் அடுத்து பல திருகாணிப்புழு ஈக் குழுக்கள் வருகை தந்து அதே புண்ணில் முட்டைகளைக் குவிக்கும். லட்சக்கணக்கான கால்நடைகளின் கண்ணுக்குத் தெரியாத புண்களைத் தேடி தினசரி சுத்தம் செய்து மருந்திடுவது கால்நடை வளர்ப்பாளர்களுக்கு நடைமுறை ரீதியாய் சாத்தியமல்ல. இப்பூச்சிகள் குறைந்த எண்ணிக்கையில் ஒரு பிரதேசம் முழுக்க அங்கொன்று இங்கொன்றாய்ப் பரவி இருக்கும் என்பதால் பூச்சி மருந்து அடிப்பதும் உதவாது. அமெரிக்க விவசாய ஆய்வு சேவையின் பூச்சியியல் ஆய்வுக்கிளை தலைவரான நிப்ளிங் இப்பிரச்சினையைத் தீர்க்க, திருகாணிப்புழு ஈக்களின் வாழ்வு முறையை நுட்பமாகக் கவனித்து ஒரு அபூர்வத் தகவலைக் கண்டுபிடித்தார். இத்தகவல் அடிப்படையில் அவர் முன்வைத்த நூதன பூச்சி அழிப்புத் திட்டம் குறைந்த செலவில் பெரும் வெற்றி பெற்றது.
மனிதனைப் போலவே திருகாணிப்புழு ஈக்களுக்கும் லிங்கம் உண்டு. அவை ஆயுளில் 900 முட்டையிடும். ஆனால் பெண் ஈ வாழ்வில் ஒருமுறைதான் கூடும். ஒரே கூடலில் எப்படி 900 முட்டைகள்? திருகாணிப்புழு ஈக்கள் விந்து விசயத்தில் மனிதனை விட சிக்கனமானவை. ஒரு குழந்தைக்காக ஆணின் சுக்கிலத்தில் கோடிக்கணக்கான விந்தணுக்களை வீணடிக்கிறோம். ஆனால் இந்த ஈக்கள் ஆணிடமிருந்து ஒருமுறை பெற்ற விந்தணுக்களை ஸ்பெர்மதீக்கா எனும் உறுப்புப் பையில் சேகரித்து வைக்கும்; ஒவ்வொரு முட்டைக்கும் ஒன்று என வெளிப்படுத்தி அனைத்து விந்தணுக்களையும் இவ்வாறு பயன்படுத்தும். இதனால் பெண் திருகாணிப்புழு ஈக்களுக்கு ஆயுளுக்கு சில கணங்கள் மட்டுமே காதலும், கூடலும் அவசியப்படும். ஒரு முறை புணர்ந்த பின் மீண்டும் பாலியல் ஈடுபாடு தோன்றாது இந்தக் கற்பின் கனலிகளுக்கு. ஆய்வாளர் நிப்ளிங் இந்தக் குறிப்பிட்ட குணாதிசயத்தை முன்னிறுத்தி தன் திட்டத்தை உருவாக்கினார். அவரை இதற்குத் தூண்டிய கேள்வி: பெண் ஈக்களை முதலில் புணரும் ஆண்கள் மலடாக இருந்தால் என்னவாகும்? நிச்சயம் முழுவளர்ச்சியற்ற முட்டைகள் உருவாகும். உண்மை அறியாத பெண் ஈ சரிவர கருத்தரிக்க உதவாத மலட்டு விந்தை வாழ்நாளெல்லாம் சிறிதுசிறிதாகப் பயன்படுத்தி, பொரியாத முட்டைகளை இடும். அதன் வம்சாவளி இதனால் அழியும். இப்படி அனைத்து திருகாணிப்புழு ஈக்களுக்கும் நிகழ்ந்தால், அவ்வினமே அழியும். இந்த வாய்ப்பை சாத்தியமாக்க நிப்ளின் தன் ஆய்வுக்கூடத்தில் மில்லியன் கணக்கில் திருகாணிப்புழு ஈக்களை வளர்த்தார். அவற்றை பீட்டா கதிரியக்கம் மூலம் மலடாக்கினார். கால்நடை பண்ணைகள் உள்ள பிரதேசங்களில் இந்த மலட்டு ஆண்களை ஹெலிகாப்டர் மூலம் கீழே விட்டார். இவை வீரியமுள்ள ஆண் பூச்சிகளுடன் போட்டியிட்டு பெண்களை ஏமாற்றி நிறைய வளர்ச்சியற்ற முட்டைகளை இட வைத்தன. ஆறே மாதத்தில் இச்சோதனை நிகழ்ந்த பிரதேசங்களில் திருகாணிப்புழு ஈக்கள் முற்றிலுமாய் அழிந்தன. எந்தப் பூச்சி மருந்தாலும் இதுவரை நிகழ்த்த முடியாத சாதனை இந்த இன அழித்தொழிப்பு.
ஆனால் ஆட்டம் இன்னும் முடிவடையவில்லை என்பதை அறிவியலாளர்கள் நன்கு அறிவர். மனிதனின் குறுக்கிடலுக்கு இயற்கை பரிணாம வழியில் மீண்டும் பதிலடி தரலாம். நவீன வாழ்வு எனும் இயற்கைக்கு எதிரான போராட்டத்துக்கு பூச்சிகளுடனான இம்மனித மோதல் ஒரு எளிய அத்தியாயம் மட்டுமே. ஒளியின் வேகத்தில் பயணிக்கத் துடிக்கும் மனித இனத்துக்கு இனி வெள்ளைக் கொடி காட்டி இயற்கையுடன் இயைந்து வாழ்தல் ஒரு மீள்பயணமாக மட்டுமே அமையும். அம்புப்படுக்கையில் இருந்து பீஷ்மரைத் தட்டி எழுப்பி சிகண்டிக்கு மணம் முடித்து வைப்பது ரொம்பவே பேஜாரானது.
Read More

அவசர பூப்பெய்தலும், விவாகரத்தும்: வனத்திலிருந்து நாகரிகம் வரை

இன்றைய நவீன சமூகத்தின் பழங்குடி மனப்பான்மைக்கு இனப்பெருக்க சடங்குகள் நல்ல உதாரணம். உய்வின் ஆதாரமாக குழந்தைப்பேறு இருந்த காலம் இப்போது இல்லை. ஆனாலும் பெண்ணின் மதிப்பு பொருளாதாரச் செல்வாக்கினாலோ, கல்வி அல்லது வேலையின் அந்தஸ்தினாலோ இன்றும் அமைவதில்லை: கருப்பையின் வளமையே பெண்மையின் அளவுகோல். உண்டாகியிருக்கும் பெண்ணைப் போல் அலுவலக வளர்ச்சி ஏணியில் உயரும் பெண் வளைகாப்பு அணிவிக்கப்பட்டு கொண்டாடப்படுவதுண்டா சொல்லுங்கள்? இனப்பெருக்க சடங்கின் உச்சபட்ச வக்கிரம் மஞ்சள் நீராட்டு விழா எனும் "என் மகள் தயாராக இருக்கிறாங்கோ" என்னும் அதிகார பூர்வ அறிவிப்பு. மேட்லி சப்வே துவக்கத்தின் இடதுபுறமாய் பெரிய விளம்பரப் பலகை. அதில் கலைஞர் உள்ளிட்ட முற்போக்குத் தலைவர்கள் படங்கள் படிநிலை பொறுத்து சிறிசும் பெரிசுமாய் போக்குவரத்து நெரிசலில் புன்னகைக்க முயலும். ஏதோ அரசியல் கூட்டம் போல என்று முதலில் புழுதியில் மூக்கைத் திருகியபடி கருதுவீர்கள். ஆனால் கீழ்க் கோடியில் பால் வடியும் ஒரு பாப்பா முகம் தெரியும்: பூப்பெய்தல் கொண்டாட்டமாம். இந்த இனப்பெருக்க ஆரவாரத்தின் மற்றொரு கோடி இதே பெண்கள் மீதான அடக்குமுறை: மாதவிடாயின் போது ஒத்தி வைக்கப்படுவது. எனது மனைவியின் மாமா சென்னையில் மாதம் ஒரு லட்சம் சம்பாதிக்கும் மென்பொருள் பொறியியலாளர். இவரது வீட்டில் பெண்குழந்தைகளை மாதவிடாயின் போது தனியறைகளில் முடக்குவது மாதாமாத வாடிக்கை. இந்தக் கொடுமையில் உட்படும் இரு பெண்களில் ஒருத்தி சி.ஏ பட்டதாரி, மற்றொருத்தி பொறியியல் படிக்கிறாள்.
கடந்த 50 வருடங்களில் உலகம் பூரா பெண் குழந்தைகள் சற்று முன்னதாகவே பூப்பெய்தி வருகிறார்கள். பெற்றோர்கள் பெண் குழந்தைகளின் ஆரோக்கியத்துக்கு அவர்களது பிறப்புறுப்புகளை விட அதிக முக்கியத்துவம் அளிக்கும் இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளில் இது பற்றின ஆய்வு முடிவுகள் பலத்த சர்ச்சையை ஏற்படுத்தின. பூப்பெய்தலை சாதனையாகக் கொண்டாடும் நமது இந்தியப் பெற்றோர்களிடத்தில் இத்தகவல் சிறு அதிர்வலையைக் கூட ஏற்படுத்தவில்லை.
தேவைக்கதிகமான சத்துணவு மற்றும் உடலுழைப்பின்மை மட்டுமே இதற்கு காரணம், இதுவொரு நவீன உணவுக்கலாச்சார எதிர்வினை என்றே நாம் அசட்டையாக எடுத்துக் கொண்டோம். காலம் முந்தி பருவமடைவதற்கு வேறு பல முக்கியமான காரணங்கள் உள்ளன. இவற்றில் சில பெற்றோர்கள் ஆராய வேண்டியவை. உதாரணமாய் மூளையில் காயம் அல்லது கட்டி, தைராய்டு சுரப்பி, கருப்பையில் கோளாறு போன்றவை பூப்பெய்தலை விரைவுபடுத்தலாம். நுகர்வுப் பொருட்களிலும், விவசாயத்திலும் பயன்படுத்தப்படும் பல்வேறு ரசாயனப் பொருட்கள் முந்திப் பூப்பெய்தலுக்கு காரணமாக கருதப்படுகின்றன. இவ்விசயத்தில் கோல்பர்ன் மற்றும் பலரின் (1996) ‘நமது திருடப்பட்ட எதிர்காலம்’ என்ற ஆய்வு முக்கியமானது. 2000த்தில் கொலோன் மற்றும் பலர் பியர்ட்டொ ரிக்காவில் உள்ள மிகச்சிறு வயதிலேயே மார்பு முளைத்த பெண்களிடத்து ஒரு பரபரப்பான ஆய்வை மேற்கொண்டனர். இந்தப் பெண்களின் வயதுக்கு மீறின மார்புத் தோற்றத்துக்கு இவர்களது ரத்தத்தில் கலந்துள்ள தாலேட்ஸ் எனும் ரசாயனப் பொருள் தான் காரணம் என்று இந்த ஆய்வாளர்கள் கண்டறிந்தனர். இந்த ரசாயனம் விளையாட்டுப் பொருட்கள், அலங்காரப் பொருட்களில் மற்றும் தயார் உணவு உறைகளில் பயன்படுவது. சமீபமாய் பிளவுண்ட் மற்றும் பலர் குழந்தைப்பேறு பருவத்தை அடைந்த பல பெண்களிடத்து இந்த தாலேட்ஸ் காணப்படுவதைக் கண்டுபிடித்துள்ளனர். இதனால் இவர்களின் சந்ததியினரும் சீக்கிரமே பூப்பெய்துவார்கள்.
காலம் முந்தின பூப்பெய்தலின் பிரச்சினைகளை பொதுத் தளத்தில் நாம் இன்னும் விவாதிக்கவோ ஆராயவோ இல்லை. 7 அல்லது 8 வயதில் ஒரு குழந்தை பருவமடையும் அறிகுறிகளை வெளிப்படுத்துவது இயல்புதான். இந்த வயது வரம்புக்கு முந்தின பூப்பெய்தல் பிரச்சினைக்குரியது. இது குழந்தைகளுக்கு மன உளைச்சல், பதற்றம், மாற்றம் பற்றின அச்சம் ஆகியவற்றை ஏற்படுத்தும். அவற்றை சமாளிக்க அவர்களுக்குத் தெரியாது. அடுத்து பருவம் முந்தின ருதுவாதலால் ஒரு குழந்தை தனது இயல்பான வளர்ச்சியை அடையாமல் குள்ளமாகி விடும்.
நாம் மனதளவில் இன்னும் பழங்குடிகளாகவே உள்ளோம் என்பதற்கு பாலியல் சடங்கு உதாரணங்கள் என்று பார்த்தோம். முந்தின பூப்பெய்தலுக்குப் பொறுப்பு நமக்குள் விழிப்பாக உள்ள நுட்பமான பழங்குடி மனநிலை என்கின்றன பரிணாம மனவியல் ஆய்வுகள். புரூஸ் எல்லிஸ் மற்றும் டிதர்* (2008) பெரும்பாலும் விவாகரத்தால் பெற்றோர் பிரிந்த 70 ஜோடிகள் உள்ளடக்கிய 90 குடும்பங்களில் ஒரு ஆய்வு நடத்தினர். இவர்கள் கண்டுபிடிப்பு: விவாகரத்தான பெற்றோரின் பெண் குழந்தைகள் சீக்கிரமாகவே பூப்பெய்தி விடுகிறார்கள். விவாகரத்தின் போது இளைய பெண் குழந்தைக்கு 5 வயதும், மூத்தவளுக்கு 12 வயதும் சராசரியாக உள்ள குடும்பங்களை புரூசும், டிதரும் குறிப்பாய் ஆராய்ந்தனர். விவாகரத்தில் தந்தை குடும்பத்தை விட்டுப் பிரியும் போது இரண்டாவது பெண்ணுக்கு அப்பாவின் நெருக்கம் தனது வளர்ச்சிப் பிராயத்தின் கால்வாசிக் காலத்தில் மட்டுமே கிடைத்திருக்கும். அப்பாவின் பிரியமும் பாதுகாப்பும் இரண்டாவது பெண் குழந்தைக்கு அதிகம் தேவைப்படும் காலகட்டத்தில் அவர் இருக்க மாட்டார். இதனால் இளையாளுக்கு அக்காளை விட ஒரு வருடம் முந்தியே முதல் மாதவிடாய் வந்து விடுகிறது.
விவாகரத்துக்கு முன் அப்பா குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த, போதை பழக்கங்கள் கொண்டிருந்த அல்லது விவாகரத்துக்குப் பின் அம்மாவுக்கு கள்ளத்தொடர்புகள் இருக்கும் குடும்பத்துக் குழந்தைகளிடத்து இந்த முன்னதாகப் பூப்படையும் போக்கு அதிகம் காணப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் நிலையற்ற குடும்பங்களில் இக்குழந்தைகள் சந்திக்கும் நெருக்கடி. பிரமோன்கள் எனும் உடலில் சுரக்கும் ஒருவித ரசாயனம் மூலம் வீட்டில் புழங்கும் அன்னிய ஆண்கள் பற்றின சமிக்ஞைகள் குழந்தையின் ஆழ்மனதுக்குப் போய்விடும் என்கின்றனர் ஆய்வாளர்கள். இதன் பின்னணி என்ன?
இந்தக் காரணத்துக்குப் போகும் முன் நம் உடல் இன்னும் நவீனச் சூழலுக்கு வந்து சேரவில்லை, கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னான மரவுரிச் சூழலில்தான் இன்னும் வாழுகிறது என்பதைப் புரிந்தாக வேண்டும். வனவாசிகளாய் நாம் இருந்த கட்டத்தில் ஆண்துணை இழந்த குடும்பம் நிர்கதி ஆனது. அதன் அங்கத்தினர்கள், குறிப்பாய் குழந்தைகள், இந்தப் பாதுகாப்பற்ற நிலையில் தங்கள் வாழ்நாள் நிச்சயம் குறைவு என்று உள்ளூர அஞ்சினர். இக்குடும்பங்களின் குறை-ஆயுள் பெண் குழந்தைகளுக்கு சீக்கிரம் இனவிருத்தி நிலை அடைந்து சந்ததியினரைப் பிறப்பிக்கும் நெருக்கடி ஏற்பட்டது. மனிதன் சந்ததிகள் மூலம் சங்கிலித்தொடராக மரபணுக்களை நீட்டித்து மட்டுமே தன் நிலைப்பை அடைய முடியும் (தாடி வளர்த்த ஸ்ரீஸ்ரீக்கள், கேசம் வளர்த்த பாபாக்கள் தவிர்த்து); இது அவனது அடிப்படை உயிரியல் உந்துதலும் கூட. மேற்சொன்ன பெண் குழந்தைகள் இக்காரணத்தினால் முன்கூட்டியே பூப்பெய்தினர். நவீன சமூகத்து விவாகரத்துக் குடும்பங்களில் இத்தகைய உயிர் ஆபத்துகள் இல்லை என்றாலும், பாதுகாப்பின்மையும், அது சார்ந்த நெருக்கடியும் இன்றும் தொடர்கின்றன. இதனால் இவ்வாறு நெருக்கடிக்கு உட்படும் பெண் குழந்தைகள் இன்றும் அவசரமாய் ருதுவடைகின்றனர். இந்த உந்துதல் உயிரியல் ரீதியிலானது; இதை மனதளவில் நாம் உணர முடியாது. ஆனால் நெருக்கடியான நிலையில் ஏற்படும் முந்தின பூப்படைதலுக்கு எதிர்மறை விளைவுகளே அதிகம். இக்குழந்தைகளுக்குக் கடுமையான மன-உளைச்சல் ஏற்படுகிறது. இவர்கள் பாலியல் சுரண்டல்களில் இருந்து, கேலி கிண்டல் மற்றும் சகவயது நண்பர்களின் வன்முறையிலிருந்து தங்களைப் பாதுகாக்க, போராட வேண்டி வரும்.
மூன்றாம் உலக நாடுகளின் நெருக்கடி மிகுந்த குடும்பங்களில் இருந்து வளர்ந்த நாடுகளுக்குத் தத்து எடுக்கப்படும் குழந்தைகள் மிகச்சீக்கிரமாகவே ருதுவடைவதை மற்றொரு ஆய்வு கூறுகிறது. இது புரூஸ்-டிதரின் ஆய்வு முடிவை வலுவாக்குகிறது.
முன்னதான ருதுவாதலுக்கான பலவிதக் காரணிகளில் ஒன்று மட்டுமே ஸ்திரமற்ற குடும்பச்சூழல் மற்றும் பெற்றோர்களுக்கு இடையிலான உறவு நிலை. உடைந்த குடும்பங்களில் மன-உளைச்சலுக்கு உள்ளாக்கப்பட்டு, செய்யாத தவறுக்காக சூழல் மற்றும் பரிணாமத்தின் வாதையை மேலும் உடல் ரீதியாகவும் அனுபவிக்கும் பல லட்சம் குழந்தைகளின் சித்திரம் டி.எஸ் எலியட்டின் இந்த வரிகளை நினைவுபடுத்துகின்றன:
" சுவரில் அறையப்பட்டு நான் நெளிந்து வளையும் போது
என் அத்தனை நாட்கள், வழிகளின் கைப்பிடி நுனிகளை
துப்புவதை எப்படித் துவங்க?
நான் எப்படி ஊகிக்க? "
("ஆல்பிரட் புருபுரோக்கின் காதற் பாடல்", வரிகள் 55-58)
* மேலும் படிக்க: Tither, J.M., & Ellis, B.J. (2008). Impact of fathers on daughters' age at menarche: A
genetically- and environmentally-controlled sibling study. Developmental Psychology, 44,
1409-1420.
Read More

முத்துக்குமரன்: காங்கிரசைக் கடித்த கயிற்றரவு

ஒசாமாவுக்கும் பிரபாகரனுக்கும் ஒரு ஒற்றுமை: இரண்டு பேரையும் வளர்த்து விட்டவர்களே இப்போது கொல்லத் துடிக்கிறார்கள்.

விடுதலைப் புலிகள் இயக்கம் இலங்கையில் நிலைபெறும் முன்னர் இந்தியாவில் சிலகாலம் ஒளிவில் இருந்தார் பிரபாகரன். அப்போது தமிழக போலீசிடம் ஒரு சில்லறை கேசில் மாட்டிக் கொண்டார். பிடிபட்டது பெரிய மீன் என்பதை அறிந்த, அப்போது மத்தியில் இருந்த காங்கிரஸ் அரசு அவரை சிங்கள அரசுக்குக் கொடுக்காமல் கையில் துருப்புச் சீட்டாகக் கொண்டு ஒரு ரம்மி விளையாடிப் பார்க்க முடிவு செய்தது. இலங்கைக்குத் தலைவலி கொடுக்கும் நோக்கத்துடன் விடுதலைப்புலி இயக்கத்துக்கான ராணுவப்பயிற்சியை தில்லியில் இந்திய ராணுவ அதிகாரிகள் மூலம் அளித்து, பொருளுதவி செய்து, பிரபாகரனுக்குப் பாதுகாப்பு அளித்து காங்கிரஸ் கட்சி நெட்டி முறித்து சுற்றிப் போட்டு, இன்றைய மாபெரும் ஈழ நரபலிக்கு வித்திட்டது. அமெரிக்கா அப்கானிஸ்தானில் பொம்மை அரசு நடத்துவது போல் நேரடியாக அல்லாவிட்டாலும் மறைமுகமாக இலங்கை அரசை புலிகளைக் காட்டி மிரட்டிக் கட்டுப்படுத்தலாம் என இந்திய அரசு அப்போது கனாக் கண்டிருக்கலாம். ஆனால் பயிற்சிக்குப் பின் இலங்கை திரும்பின பிரபாகரன் காங்கிரஸ் அரசு விரித்த சீட்டுக்கட்டில் ஒன்றாக அமர மறுத்ததுமே இருவருக்குமான உறவு கசந்துவிட்டது. உடனே காங்கிரஸ் கூச்சமின்றி சிங்கள ஆதரவு பல்டி அடித்தது. வன்முறையாளனைவிட சஞ்சல புத்திக்காரன்தான் அதிக அபாயமானவன். இலங்கை அரசு இன்றும் கூட இந்தியா என்றால் ஒட்டி உரசாது; எட்டி நின்றுதான் விரல் கோர்க்கும்.

இங்கு நாம் கவனிக்க வேண்டியது ராஜீவ் படுகொலைக்கு முன்பே புலிகள் - காங்கிரஸ் உறவு கசக்க ஆரம்பித்தது என்பதும், அப்பகைக்குக் கொள்கை ரீதியான முகாந்திரம் ஏதும் இல்லை என்பதும். மேலும் காங்கிரஸ் அரசு தற்போது சிங்களர்களுக்கு வழங்கி வரும் ராணுவ உதவியை ஒரு காலத்தில் புலிகளுக்கும் சிறிய அளவில் வழங்கியுள்ளது, இன்றைய இலங்கை இனச் சண்டைக்கு சகுனி வேலை பார்த்து பகடை உருட்டினதே காங்கிரஸ்தான், அதனால் ராஜீவ் கொலைக்கு காங்கிரசும் பொறுப்பாகும் என்பதையும், பிரபாகரன் என்றால் உடனே ‘இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசி’விட்டதாக இருமி, கண்ணில் தண்ணீர் வரும்படி கர்ஜிக்கும் தமிழக காங்கிரஸ் தலைவர்கள் ஒரு நொடி நினைத்துவிட்டு மறந்துவிட வேண்டும்.

முத்துக்குமரன் மக்கள் எழுச்சி இயக்கம் எனும் கட்சி தற்போது சிவகங்கையில் மத்திய அமைச்சர் பா.சிதம்பரத்துக்கு எதிராகப் போட்டியிட வேட்பாளரை நிறுத்தி உள்ளது. இந்த முறை நாடாளுமன்றத் தேர்தலில் ஈழப் பிரச்சினை காரணமாய் தமிழகத்தில் கடுமையாக அடி வாங்கப் போகிறோம் என்பது காங்கிரசுக்குக் கடுமையான கிலி ஏற்படுத்தி உள்ளது. ஒரு மத்திய அமைச்சர் நேற்று முளைத்த ஒரு பல்லி மிட்டாய் இயக்கத்தைப் பொருட்படுத்தலாமா? ஆனால் "குண்டூசி வைக்கக்கூட இடம் தரமாட்டேன். ஆனால் பெண்டாட்டி முந்தானையைப் பிடித்து இழுப்பேன்" என்று துரியோதனன் முரண்டு பிடித்தது போல் மேற்சொன்ன எழுச்சி இயக்கத்தை பிரச்சாரம் செய்ய விடாமல், நோட்டீஸ் அடிக்க விடாமல் போலீஸ் மற்றும் குண்டர்கள் கொண்டு ஒடுக்குவதில் பா.சிதம்பரம் மும்முரமாக உள்ளார்.

முத்துக்குமரன் கட்சி பிரச்சாரம் செய்ய அனுமதி கோரிய போது போலீஸ் துணை ஆய்வாளர் விதித்த விதிமுறைகள் விசித்திரமானவை: " நீங்கள் காங்கிரசுக்கு எதிராகப் பேசக்கூடாது, முத்துக்குமரனைப் பற்றிக் குறிப்பிடவே கூடாது, பா.சிதம்பரத்தைப் பெயர் சொல்லி அழைக்கக் கூடாது (அதற்கெல்லாம் ஜேவுக்கு மட்டும்தான் உரிமை), மீறினால் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பெயிலில் வரமுடியாதபடி உள்ளே தள்ளிவிடுவோம்". பிரச்சார நோட்டீசுக்கான அனுமதிக்கு விண்ணப்பித்த போதும் முழு எண்களில் இருந்தால்தான் அனுமதி, அல்லாவிட்டால் மொத்த நோட்டீஸ் கட்டுகளும் அழிக்கப்படும் என்றது போலீஸ். போலீஸை சாந்தி செய்தால்கூட பிரசுரம் செய்ய அச்சகத்தார் தயாரில்லை. ஏனெனில் கடந்த மாதம் சிவகங்கைப் பகுதி அச்சகத்தார் மொத்தம் பேரையும் கூட்டின போலீஸ் உயர் அதிகாரிகள் "முத்துக்குமரன் சம்மந்தமாய் எந்தத் துண்டும் பிரசுரம் ஆகக் கூடாது, இல்லாவிட்டால்..." என்று தொப்பையைப் பெருக்கிக் காட்டி பயமுறுத்தி உள்ளனர். பரவாயில்லை! மக்களிடமே நேரடியாகப் பேசுவோம் என்று எழுச்சிக் கட்சியினர் நேரடிப் பிரச்சாரத்தில் இறங்கினால் ஒரு லாரி முழுக்க காங்கிரஸ் அபிமான ரவுடிகள் அவர்களை நாள்முழுக்கப் பின்தொடர்ந்துள்ளனர்.

ஒரு நாள் ஆலங்குடியில் அனுமதி வாங்கின பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொள்ள முத்துக்குமரன் கட்சியினர் 12 பேர் செல்ல, அவர்களைச் சூழ்ந்த ஐம்பதுக்கும் மேற்பட்ட காங்கிரஸ் தொண்டர்கள் "ஓத்த தேவடியாப்..." என்று வசை பொழிந்தபடி கல்லெடுத்து வீசினர். காவலுக்கு நின்ற போலீசாரோ கற்பனையில் கோமணம் இழுத்து கதர் நூற்றபடி அகிம்சைப் போராட்டம் நடத்தினர். காங்கிரசார் நேரடியாய்த் தாக்க ஆரம்பித்த போதுதான் போலீஸ் தலையிட்டது. நிற்க. நீங்கள் நினைப்பது போல் வன்முறையில் ஈடுபட்ட காங்கிரஸ் குண்டர்களைக் கைது செய்யவில்லை. மாறாக, முத்துக்குமரன் கட்சியினரிடம் " நீங்கள் வாகனத்தில் இருந்து இறங்கி வந்து பிரச்சாரம் செய்தது தவறு, வேட்பாளர் இன்றி வந்தது குற்றம்" நொள்ளை சொல்லி அவர்களைக் கலைந்து போகச் சொன்னார்கள். என்ன, தெலுங்கு சினிமா போல் உள்ளதா? பிறகும் நகைச்சுவை போதவில்லை என்று தோன்ற, போலீசார், ஐம்பதுக்கும் மேற்பட்ட காங்கிரசாரைத் தாக்கினதாக 12 மு.கு கட்சியினர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்தது. கைது செய்து அவர்களை உள்ளே தள்ளியது. மு.கு கட்சி அமைப்பினர் உண்ணா நிலைப் போராட்டம் மேற்கொண்ட பின்பு தான் இவர்கள் வெளியே விடப்பட்டனர்.
"அரசியல் சாக்கடை" என்று வேட்டி நுனி தூக்கி நடப்பவரை பயந்தாங்கொள்ளி மத்திய வர்க்கம் என்று விமர்சிப்பவர்கள், படித்த இளைஞர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்று கோருபவர்கள் பத்தாம்பசலிகள். இன்றைய நிலைமையில் பெரிய கட்சியினரை எதிர்த்து தேர்தலில் நிற்கும் ஆகிருதி கொண்டவர்கள் தமிழக வக்கீல்கள் மட்டுமே. போலீசார் மற்றும் குண்டர் படையை நேரிட சோற்றுப் பொதி கல்லூரி மாணவர்களும், மாத-வருமான லட்சிய மாமாக்களும் உள்ளடக்கின எளிய மனிதர்களின் கூட்டமைப்பால் முடியாது. இக்கட்சியின் அமைப்பாளர் ஒருவர் என் நண்பரிடம் மேற்சொன்ன தகவல்கள் தொடர்பான பல அதிர்ச்சியூட்டும் அனுபவங்களைச் சொல்லிப் புலம்பியிருக்கிறார். நான் பிறகு அவரிடம் அலைபேசியில் தொடர்பு கொண்ட போது அந்த அமைப்பாளர் "போலீஸ் உளவாளியோ" என்ற அச்சத்தில் தயங்கினபடி பல் கிட்டிக்க "அதாவது ... ங்க" என்று துண்டுத் துண்டாய்ப் பேசினார். அந்த அளவுக்கு நெருக்கடிக்கு உள்ளாகி உள்ளார்.
ஈழத்தமிழர்களுக்காக முத்துக்குமரன் உயிர்த்தியாகம் செய்யும் முன், 'எதிர்காலத்தில் உன் பெயர் முதலில் போற்றப்பட்டு பிறகு அதைச் சொல்வதே தடை செய்யப்படும்' என்ற உண்மையை காலன் ஏறி வந்த எருமை அவர் காதில் கிசுகிசுத்திருந்தால், தமிழ்ச்சிந்தனையின் அபத்தம் அவருக்கு விளங்கியிருக்கும். ஒரு வேளை இறுதியாய்ப் புன்னகைத்திருப்பார். கரிப்பான புன்னகை.
Read More

ம‌னித‌ன் எனும் யோசிக்கும் க‌ணினி

பால்யத்தில் பள்ளிக்கூடத்துக்கு என்னை அனுப்பும் தயாரிப்புகளில் ஒன்றாய் அம்மா வெந்நீரில் குளிப்பாட்டுவாள். சொம்பு நீர் சருமத்தில் பட்டதுமே நான் பள்ளிக்குப் போக மறுத்து ஓலமிடுவேன். இன்றும் வெந்நீரில் குளிப்பது எனக்குக் கசப்பானது. எழுத்தாளர் தமிழ்நதி ஈழத்து நினைவுகளைக் கிளர்த்தும் தமிழ்ப்பாடல்கள் சிலவற்றைப் பற்றி தனது வலைப்பூவில் குறிப்பிட்டுள்ளார் (http://tamilnathy.blogspot.com/). பத்து வருடங்களுக்கு முன் எனது இளங்கலையின் போது கல்லூரியில் வந்து பேசின ஜெயமோகன் ஒரு பேருந்துப் பயணத்தில் ஒருவித பிளாஸ்டிக் வாசனை தன்னை இனம்புரியாத பரபரப்புக்கு உள்ளாக்கியதைக் குறிப்பிட்டார்: அது அவரது கல்லூரிக்காலத்தில் பயன்படுத்திய பஸ் பாஸின் வாசனை; நினைவுப் புதிர்ப்பாதையின் மறந்து போன வாசலுக்கு அவ்வாசனை அவரை விரல் பற்றி அழைத்துச் சென்றது. இதுவே படைப்பாக்க உந்துதலின் ஆதாரம் என்றார் ஜெயன். ‘நூற்றாண்டுகாலத் தனிமையின்’ கருவுக்கான தூண்டுதலை மார்க்வெஸ் தன் அம்மாவுடன் வீட்டை விற்க சொந்த ஊருக்குச் செல்லும் பயணமே அளிக்கிறது (‘கதை சொல்ல வாழ்கிறேன்’). இந்நாவலில் தனது நினைவுகளை அவர் வெறுமனே அசை போடவோ, வம்சாவளி சாதனைகள் பீற்றவோ இல்லை என்பது வேறு விசயம். ஆனால் எளிய நினைவு மீட்டலில் இருந்து பெரும் நாவல் உருவாக்கம் வரை துவக்கப் புள்ளியாகும் மனதின் இந்த புதிரான போக்கு தற்செயல் அல்ல. அதற்கு ஒரு நடைமுறைக் காரணம் உள்ளது. நினைவில் மீட்டு செயல்படும் திறன் உய்வுக்கான ஒரு தானியங்கி நுண் அமைப்பு.
மனித வரலாற்றில் வேட்டையாடி-சேகரிப்பாளர்களாக, சிறு இனக்குழுக்களாக நாம் திரிந்த காலம்தான் அதிகம். மிகச் சமீபமாக (சுமார் 250 வருடங்களாக) அதிவேகத்தில் தற்போதைய பிரமாண்ட நாகரிகமும், அறிவியல் வளர்ச்சியும் ஏற்பட்டது. இந்த 100, 000 வருட மனித வரலாற்றை ஒரு வருடமாகச் சுருக்கினால் இந்த சமீப வளர்ச்சி ஒரு நாளில் அடங்கும்; ஒரு நாளாக சுருக்கினால் இது வெறும் 3.6 நிமிடங்கள் மட்டுமே என்கிறார் ‘சயிண்டிபிக் அமெரிக்கன்’ பத்திரிகையின் பத்தியாளரும், உளவியலாளருமான மைக்கேல் ஷெர்மர். இந்தக் குறுகின கால அளவில் மாற்றத்திற்கு நமது பிரக்ஞை மனம் தயார் ஆனது போல் ஆழ்மனம் தகவமையவில்லை. 100, 000 ஆண்டுகளுக்கு முன்னதான சூழ்நிலைகளுக்கான எதிர்வினைகள்தான் ஆழ்மனதில் இன்னமும் உள்ளது. இருட்டில் மனிதன் இன்றும் அஞ்சுவதற்கும், ஒரு நகரப் பூனை அதே இருட்டில் நிம்மதியாய் உணர்வதற்கும் இதுவே காரணம். முன்வரலாற்றுக் காலத்தில் ஆபத்திலிருந்து தப்பிக்க இந்தத் தானியங்கி நுண் மன அமைப்புதான் பயன்பட்டது. காமம், சாதியுணர்வு, போர் சார்ந்த மனித விசித்திரங்கள் பலவற்றுக்கும் இந்த மரவுரி தரித்த ஆழ்மனம் ஒரு காரணம். தமிழச்சியின் ‘வனப்பேச்சி’ கவிதைகளில் வனப்பேச்சி நகரத்துக்கு வந்து புரியாமல் தத்தளிப்பாள். அந்த வனப்பேச்சிதான் நம் மனம்.
‘பம்மல் கெ. சம்மந்தம்’ படத்தின் ஆரம்பக் காட்சியில் சினேகாவை திருமண மண்டபத்திலிருந்து கடத்திச் செல்லும் அப்பாஸ் கமலின் வண்டியில் ஏறி சாவி தேடுவார். அப்போது கமல் வந்து " நம்ம வண்டிக்கு ஏதுடா சாவி" என்றபடி இரண்டு மின்கம்பிகளை இணைப்பார்; வண்டி கிளம்பும். சாவி பிரக்ஞை என்றால், மின்கம்பிகள் ஆழ்மனம். நம் வண்டிக்கு சாவியும், இணைப்பதற்கான மின்கம்பிகளும் உண்டு.
நமது அன்றாட செயல்பாட்டுக்கான பல உத்தரவுகளை பிரக்ஞை மனம் உணரும் முன்னரே ஆழ்மனம் அளித்துவிடுகிறது என்று ஆய்வாளர்கள் சமீபமாய்க் கண்டு பிடித்துள்ளனர். கனவுகளிலும், படைப்பாக்கம், காமம் போன்று பிரக்ஞை வழுவும் நிலைகளில் மட்டுமே ஆழ்மனம் விழிக்கிறது என்று மட்டுமே இதுவரை கருதி வந்துள்ளோம். இது உண்மை அல்ல. சிலசமயம் பிரக்ஞை மனத்தின் அளவுக்கு சுதந்திரமாக ஆழ்மனம் செயல்படுகிறது. ஆழ்மனம் அற்புத விளக்கினுள் வாழும் பிசாசு மட்டுமல்ல. பட்டப்பகலில் நம் கரம் பற்றியவாறு புலப்படாமல் அது நம் கூடவே நடந்து வருகிறது. அடிக்கடி நம்மை நடத்திக் கொண்டும் போகிறது.
நெதர்லாந்தைச் சேர்ந்த சில உளவியலாளர்கள் கல்லூரி இளங்கலை மாணவர்கள் உள்ளடங்கின ஒரு குழுவை சிற்றறை ஒன்றில் அமர வைத்து வினாப்பட்டியல்கள் நிரப்பச் செய்தார்கள். அவ்வறையில் ஒரு வாளித் தண்ணீரில் எலுமிச்சை வாசம் கொண்ட துப்புரவு சோப்பு திரவத்தைக் கலந்து மறைத்து வைத்தனர். அறையில் எலுமிச்சை சோப்பின் சன்னமான வாசனை பரவியிருந்தது. வினாப்பட்டியலைப் பூர்த்தி செய்யும் இடைவேளையில் அவர்களுக்கு எளிதில் நொறுங்கக்கூடிய பிஸ்கட்டுகள் வழங்கப்பட்டன. பிறகு இதே போன்று ஒரு குழுவை வாசனை வாளி நீர் இல்லாமல் சிற்றறையில் அமர வைத்து வினாப்பட்டியல்கள் நிரப்பக் கேட்டு, இடைவேளையில் நொறுங்கும் பிஸ்கட்டுகள் அளித்தனர். இரு குழுவினரையும் வீடியோவில் ரகசியமாய்ப் படம் பிடித்தனர். முதற்குழுவினர் இரண்டாம் குழுவினரை விட மும்மடங்கு மும்முரமாய் நொறுங்கின பிஸ்கட் துணுக்குகளை சுத்தம் செய்தனர். இதற்கு அக்குழுவினரை அவர்களை அறியாது தூண்டியது எலுமிச்சை சோப் வாசனை.
பிரிட்டிஷ் கொலொம்பியா பல்கலையின் உளவியலாளர் மார்க் ஷெல்லர் இது தொடர்பான மற்றொரு ஆய்வு செய்தார். கறுப்பர்கள் மீது நேர்மறை உணர்வு கொண்ட வெள்ளையர்கள் சிலரை இருட்டறைக்கு அழைத்துச் சென்றனர்; அவர்களுக்கு அங்கு அமர்ந்துள்ள சில கறுப்பர்களைக் காட்டினர். எவ்வுணர்ச்சியும் வெளிக்காட்டாத அக்கறுப்பர்கள் வன்ம உணர்வுடன் முறைப்பதாக வெள்ளையர்கள் கூறினர். இருட்டுக்கும் வன்மத்துக்குமான தொடர்பை இங்கு ஏற்படுத்தியது வெள்ளையர்களின் ஆழ்மனம்தான். இருட்டில் விழித்த மனதின் கண்கள்.
நார்த்து வெஸ்டர்ன் யூனிவர்சிட்டியில் மற்றொரு சுவாரஸ்யமான ஆய்வு. மாணவர்களிடம் அவர்கள் கடந்த காலத்தில் செய்த நன்மை (உதவி) \ தீமையைப் (துரோகம்) பற்றி எழுதச் சொன்னார்கள். எழுதிய பின் பிரதிபலனாக அவர்களுக்கு பென்சில் மற்றும் கிருமித்தடை திரவம் (டெட்டால் போன்று) தோய்த்த கைத்துண்டு தந்து அவற்றிலிருந்து ஒன்றைத் தேர்வு செய்யச் சொன்னார்கள். தீமை நினைவை மீட்டினவர்கள் கைத்துண்டைத் தேர்வு செய்தனர். மேலும் இதனால் துடைத்த பிறகு இம்மாணவர்கள் அடுத்து தங்களது சகமாணவர்களின் பள்ளி வேலைகளைப் பகிர்ந்து கொள்ள ஆர்வம் காட்டவில்லை. இந்தக் கைத்துண்டு சமாச்சாரத்துக்கு நம்மூர் உதாரணம் திருப்பதி உண்டியலுக்கு வரும் கோடிகள் மதிப்புள்ள தங்கக்கட்டிகள்.
இந்தக் கடைசித் தகவல் முக்கியமானது. இதையே உளவியலாளர்கள் ‘பிரைமிங்’ என்கிறார்கள். தயாராதல் என்று இதற்கு ஏறத்தாழ பொருள்படும். பிரைமிங் வார்த்தையின் பிற அர்த்தங்கள் இந்தக் கருத்தாக்கத்தை மேலும் விளங்கப் பயன்படும்: 'துப்பாக்கியில் வெடிமருந்து திணிப்பு'; 'முற்சாயமாகப் பயன்படும் கலவை'. அலுவலகத்தில் ஒரு குழுவை குறிப்பிட்ட விதங்களில் செயல்பட வைக்க ‘அர்ப்பணிப்பு’, ‘விசுவாசம்’, ‘ஒத்துழைப்பு’ போன்ற வார்த்தைகளை மேலாளர்கள் அடிக்கடி பயன்படுத்துவார்கள் ("உங்கள் ஒத்துழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு இருந்தால்தான் இந்த வேலை நடக்கும்"). இது போன்ற பிரயோகங்கள் ஆழ்மனதில் இருந்தவாறே ஊழியர்களின் செயல்திறனை அதிகப்படுத்துவது நிரூபணமாகியுள்ளது. அடுத்த முறை உங்கள் மேலாளர் ‘ஒத்துழைப்பு’ எனும் போது கவனியுங்கள்.
அன்றாட வாழ்வுக்கான பல முடிவுகளை நாம் அரை நொடிக்கும் குறைவான நேரத்தில் செய்ய வேண்டியுள்ளது. ஆற அமர யோசிக்கும் அவகாசம் நமக்குப் பெரும்பாலும் இருப்பது இல்லை (எளிய உதாரணம் போக்குவரத்து நெருக்கடியில் வாகனம் ஓட்டுவது). இந்த அவசர முடிவுகளைச் சமாளிக்க நமக்குள் ஒரு மென்பொருளாகப் பயன்படுவது நம் ஆழ்மனமே. இசை கேட்பதற்கான ஒரு பிளேயரை (உ.தா. VLC, Real Player) உங்கள் கணினியில் இன்ஸ்டால் செய்தபின், எந்த எம்.பி 3 கோப்பை ஓட விட்டாலும் அது உங்கள் கணினியில் உள்ள பிளேயரில் அதன்பாட்டுக்குத் திறப்பது போன்று, வாசனை, காட்சி, ஒலிகள் போன்ற பல நுண்குறிப்புகளைக் கொண்டு மரபணுக்களில் உள்ள சமிக்ஞைகள் மற்றும் பழம் நினைவுகளின் அனுபவங்களின் விளைவுகளை கருத்திற்கொண்டு மனம் சட்சட்டென்று உத்தரவுகள் இடுகின்றன. இப்படி உருவேற்றுதலின் (பிரைமிங்) மற்றொரு எல்லைதான் தீவிரவாத மனநிலை. தன் பங்குச் சேமிப்புப் பணத்தை குடும்பக்கணக்கிற்கு மாற்றக் கோரும் அஜ்மலால், இந்தியக் குழந்தைகளின் நெற்றிப்பொட்டில் பட்டென்று சுட முடிந்தது மனத்தில் ஏற்கனவே நிறுவப்பட்ட மென்பொருள் அதன் பாட்டுக்கு ஓடினதால்தான். மனிதன் ஒரு அரைக்கணினி, யோசிக்கும் எந்திரன்.
நமது தலையின் முன்பக்கத்து மூளைப் பகுதி கார்டெக்ஸ் எனப்படும். இதன் பரப்பு தான் "நான்" எனும் பிரக்ஞை ஆரம்பிக்கும் வெளிமனம். ஆழ்மனம் இதற்குக் கீழுள்ள வெண்டுரல் பெலிடம் எனும் பகுதி. பின்னிருக்கையில் அமர்ந்திருந்து துப்பாக்கி முனையில் கார்ப் பயணியைக் கடத்திச் செல்லும் பாணியில் மட்டுமே ஆழ்மனம் வெளிமனதை சதா சூசகமாய்க் கட்டுப்படுத்தும் என்பதெல்லாம் ஆ.மாதவனின் ‘கிருஷ்ணப்பருந்து’ காலத்தில் பெருமூச்சுடன் நாம் நம்பின பழைய சேதி. ஓட்டுனர் இருக்கையை அடிக்கடி ஆழ்மனமும் ஆக்கிரமிக்கும் என்று தற்போது ஆய்வுகள் நிறுவியுள்ளன. ‘சயின்ஸ்’ இதழில் இது சம்மந்தமாக ஒரு ஆய்வு பிரசுரமானது. பிரஞ்சு மற்றும் பிரித்தானிய நரம்பியல் நிபுணர்கள் 18 பேர் கொண்ட குழுவை ஒரு கணினி ஆட்டம் ஆட வைத்தனர். இதன் விதிகளில் ஒன்று பணத்தின் படம் திரையில் தோன்றினால் தரப்பட்டுள்ள கைப்பிடியை அழுத்த வேண்டும்; எத்தனை அதிகமாய் அழுத்துகிறார்களோ அவ்வளவு காசு கிடைக்கும். ஆட்டத்தின் போது பிரித்தானிய பவுண்டு, பென்னி நாணயங்கள் நொடியில் பளிச்சிட்டு மறைந்தன. ஆட்ட முடிவில் நிபுணர்கள் இரண்டு தகவல்களை அவதானித்தனர். ஒன்று, பவுண்டு எனும் அதிக மதிப்புள்ள நாணயம் தோன்றிட குழுவினர் பென்னி நாணயத்துக்கானதை விட அதிகமாய் அழுத்தியுள்ளனர். அடுத்து, குழுவினரின் மூளையை இமேஜிங் முறையில் படமெடுத்துப் பார்க்க இவ்வாறு அழுத்துகையில் வெண்டுரல் பெலிடம் பகுதி அதிக விழிப்பாக இருந்தது தெரிய வந்தது. அதாவது அந்த நொடி நேர முடிவுகளை ஆழ்மனமே எடுத்துள்ளது.
ஆழ்மனம் இப்படி வெளிமனத்தின் கட்டுப்பாட்டு அறைக்குக் கூரை பிரித்து இறங்குவதன் காரணம் என்ன? வேட்டையாளி-சேகரிப்பாளனாகத் திரிந்த காலத்தில் இந்தக் கீழ்மனம் தான் ஆபத்துகளிருந்து தப்பிக்கும், இனப்பெருக்கம் செய்யும் உய்வுக்கு அவசியமான அன்றாட முடிவுகளை எடுத்து வந்தது. கார்டெக்ஸ் எனும் முன்மூளை பின்னால்தான் உருவாகி நமக்காக யோசிக்க ஆரம்பித்தது. நவீன யுகத்திலும் ரொம்ப அவசியமான நேரத்தில் நமக்குக் கைகொடுப்பது இந்தப் பழங்குடி மூளைதான்!
Read More

Contact Us

So you think we’re the right folks for the job? Please get in touch with us, we promise we won't bite!



Designed By Blogger Templates