Tuesday, 30 October 2012

சின்மயி சர்ச்சை: “அவங்கள் எல்லாம் இவங்க ஏன் தட்டிக் கேட்கலை?”




சின்மயி விவராகத்துக்குள் போகும் முன், யார் பக்கம் தவறு என்று நியாயம் தேடும் முன் இன்று இணையத்தில் வசை எழுதுபவது சரியா, இவர்கள் எல்லாம் எந்த மரபில் இருந்து வருகிறார்கள் என்று கேட்க வேண்டும்.
வசை எனும் கலாச்சாரம்
மாறி மாறி சாதிப்பெயரால் திட்டுவது, பாலியல் வக்கிரங்களால் ஒடுக்குவது என்பது நம் அன்றாட பண்பாட்டில் ஆழமாக உள்ளது. குழந்தைகளை, நண்பர்களை, அரசியல் தலைவர்களை கெட்ட வார்த்தைகால் அன்னியோன்யமாய் சகஜமாய் குறிக்கும் கலாச்சாரம் நமக்கு உண்டு. எனக்குத் தெரிந்து கேரளாவில் வசை பாடும் பண்பாட்டுச் சடங்கு ஒன்று உள்ளது. கொடுங்களூர் பகவதி அம்மன் கோயிலில் வருடந்தோறும் பரணி அல்லது பூரப்பாட்டு என்கிற பெயரில் இது நடந்து வருகிறது. மக்கள் கூட்டங்கூட்டமாக பயணித்து கோயிலுக்கு சென்று பகவதி முன்னிலையில் சரளமாக முடிவற்று கெட்ட வார்த்தைகளால் மாறி மாறி திட்டி போட்டியிடுவார்கள். இது மணிக்கணக்காக நடக்கும். பகவதியை விரசமான சொற்களால் அசிங்கப்படுத்தி அதன் வழி வழிபடுவதே நோக்கம். நம்மூர் கானா பாடல்கள் போன்று கற்பனாபூர்வமாக அந்த இடத்தில் தோன்றும் வக்கிரப் பாடல்களும் மரபுவழி வந்த பாடல்களும் உண்டு. இப்போது கேரள அரசு பூரப்பாட்டுக்கு தடை விதித்துள்ளது. ஏர்.ஆர்.ரகுமான் யோதா எனும் ஒரு படத்தில் இப்படியான ஒரு பூரப்பாட்டுக்கு இசையமைத்துள்ளார். இதைக் கேட்பவர்களுக்கு நம்முடைய இணையவெளி சச்சரவுகள் எந்தளவுக்கு இவற்றை ஒத்துள்ளன என புரியும். இணைய பயனர்களும் இவர்களைப் போன்றே கொள்கைப்பிடிப்பு என்ற பாவனையில் வசைமாரி பொழிகிறார்கள். இரண்டும் ஒரு சடங்கைப் போல மக்களின் கூட்டங்கூட்டமான பங்களிப்புடன் நிகழ்கிறது. தடைக்குப் பின் பூரப்பாட்டுக்கு நேர்வது போன்றே சின்மயி விவகாரத்திற்குப் பின் நாம் காவலர்கள் கண்காணிக்கிறார்கள் என்கிற பிரக்ஞையுடன் இணைய வசை சடங்கை செய்யப்போகிறோம்.
இணையத்தில் ராஜன் லீக்ஸ் செந்தில் போன்றவர்கள் ஆபாசமான மொழியில் சின்மயியை கேலி செய்த பக்கங்கள் இன்று இணையத்தில் படிக்கக் கிடைக்கின்றன. படிக்கிற யாரும் ராஜன் செய்தது குற்றம் என்று ஒப்புக் கொள்வார்கள். சினம்யியோ ஜெயலலிதாவோ யார் கூறும் கருத்துக்களுக்காகவும் அவர்களை ஆபாசமாய் பழிப்பது நியாயமல்ல. இன்னொரு கேள்வி: வசவுப் பண்பாடு நம் சமூகத்தில் ஏற்கனவே வலுவாக உள்ள பட்சத்தில் அதை இணைய உரையாடலுக்கு அரசியல் விமர்சனத்துக்கு ஒருவர் நீட்டிப்பது சரிதானே என்பது.
இல்லை என்பதே பதில். ஏனென்றால் இணையம் என்னதான் கட்டற்ற சுதந்திரம் தந்தாலும் அது தனிவெளி அல்ல. பொதுவெளி. அங்கு நாம் கண்ணியமாகவே இருந்தாக வேண்டும்.
ஏன் தனிவெளி இல்லை? இணையம் மட்டுமல்ல தொலைதொடர்பு கட்டுமீறிய வளர்ச்சியை அடைந்து வரும் சூழலில் நுண்பேசி குறுங்செய்திகள் கூட இன்று தவறான சித்தரிப்புகளுக்கும் சச்சரவுகளுக்கும் இட்டுச் செல்கின்றன. இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் பீட்டர்ஸன் தன் அணித்தலைவர் ஸ்டுராஸை குறித்து அனுப்பிய அவதூறான குறுஞ்செய்தி மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பியதை அறிவோம். அதை விடுங்கள். இன்று நீங்கள் நுண்பேசியில் என்ன நேரடியாக கூட ஒரு பரிச்சயமானவரைப் பற்றி கோபமாக பேசினால் கூட அது நிமிடங்கள் பலபேருக்கு போய் சேர்ந்து விடுகிறது. ஒரு இலக்கிய பத்திரிகையில் ஒரு எழுத்தாள நண்பர் வேலை கேட்டு தொந்தரவு செய்தார். அவரது அப்பாவை அழைத்து ஆசிரியரிடம் கெஞ்ச வைத்து உணர்ச்சி மிரட்டல் கூட கொடுத்துப் பார்த்தார். ஆனால் பத்திரிகை ஆசிரியர் தொடர்ந்து மறுத்து வந்தார். என்னவென்று விசாரித்தால் ”அவருக்கு வேலை கொடுத்தால் என் அலுவலகத்தில் நடப்பதை பண்பலை வானொலி போல் நேரலை செய்து கொண்டே இருப்பார். அதனால் வரும் பிரச்சனைகளை சரி செய்யவே எனக்கு நேரம் சரியாக இருக்கும்” என்றார் அவர். எப்படியான பீதிச் சூழலில் பத்திரிகை ஆசிரியர்களே இருக்கிறார்கள் பாருங்கள்.
தொலைதொடர்பு வெளியில் என்ன பிரச்சனை என்றால் அது ஏதோ ஒரு அந்தரங்கமான வெளி போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறது. உண்மையில் பிறந்தநாள் விழாவுக்கு நிர்வாண ஆடையணிந்த ராஜாவின் நிலைமை தான் அதில் பங்கெடுக்கும் எல்லாருக்கும். ஒவ்வொரு சிறு அசைவையும் சொல்லையும் யாரோ எங்கிருந்தோ கவனித்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஆக வசைபாடுவது சரியா தவறா என்பது முக்கியமல்ல. அதை நாம் எங்கு செய்கிறோம் என்பது தான் முக்கியம். வசையை நாம் மீண்டும் அணுக்கமான குழு வெளிகளில் வைத்துக் கொள்வது தான் பாதுகாப்பானது. அதாவது மின் அணு சாதனங்கள் அண்டாத எந்த இடங்களிலும் நின்று கொண்டு யாரை வேண்டுமானாலும் சாதிப்பெயர் சொல்லி பாலியல் உறுப்புகளை குறிப்பிட்டு திட்டிக் கொள்ளுங்கள். அது உங்கள் உரிமை. அதாவது உங்கள் உரிமை உங்கள் மூக்கு என் மூக்கு நுனியை தொடாதவரை தான். “நாயே செருப்பால் அடிப்பேன்” கலாச்சாரத்துக்குள்ளே நாம் இருக்கலாம். அது நம் சமூக இயல்பாகவும் இருக்கட்டுமே. ஆனால் தனிவெளி என்ன பொதுவெளி என்ன என்கிற பிரக்ஞையுடன் இருப்போம்.  
“அவங்கள் எல்லாம் இவங்க ஏன் தட்டிக் கேட்கலை?”
இந்த கேள்வி முக்கியம். சின்மயியின் அம்மா பத்மஹாசினி ஒரு எளிய ஆனால் அவசியமான வினாவை கீழே எழுப்புகிறார் பாருங்கள்:
”சின்மயி சாதி பத்தி பெருமையாப் பேசித் தம்பட்டம் அடிச்சதா சொல்றாங்க. சாதிப்பெருமை பேசுற, ‘இந்த சாதிக்காறன்னு’ சொல்லி போஸ்டர் அடிச்சுக்கிற ஆட்கள் இங்கேதானே இருக்காங்க. அவங்கள் எல்லாம் இவங்க ஏன் தட்டிக் கேட்கலை?” (நன்றி விகடன்).
இந்த கேள்வி நமக்குள்ளே பலமுறை எழுந்திருக்கிறது. “அவங்க எல்லாம்” என்று பத்மஹாசன் குறிப்பிடுவது மேல்மத்திய, மத்திய சாதிகளைத் தான். அண்ணா தமிழகத்து சாதிச் சிக்கல் குறித்த உரையாடலை “தமிழ்தேசியம்” என்கிற ஒரு குடையின் கீழ் கொண்டு வந்து அதை முளையிலே கிள்ளி விட்டார் என்பது தான் உண்மை. இன்னும் கொஞ்சம் பின்னால் போனோம் என்றால் பெரியார் இந்த உரையாடலை பிராமணர் versus மத்திய சாதிகள் என்று ஒற்றைபட்டையாக்கினார். பெரியாருக்கு முன் தெலுங்கர், கன்னடர், மலையாளிகள் தமிழர்களுடன் ஒன்றிணைந்த ஜஸ்டிஸ் கட்சி இந்த முரண் எதிர்வை துவங்கி வைத்தது. பெரியார் இதை மாபெரும் மக்கள் இயக்கமாக வளர்த்தெடுத்தார். பெரியார் சமரசமற்ற தலைவர் என்பதால் இந்த இயக்கத்தினால் நமக்கு பல முக்கியமான பயன்கள் கிடைத்தன. பெரியார் மத்திய சாதிகளை திராவிடம் என்ற பிராந்திய அடையாளத்தின் கீழ் இணைத்ததற்கு சாதி கடந்த அரசியல் காரணங்களும் அன்று இருந்தன. அன்று தமிழகம், கர்நாடகம், ஆந்திராவை இணைத்து ஒரே மாநிலமாக்க மத்திய காங்கிரஸ் அரசு திட்டமிட்டது. இந்தியை வலியுறுத்துவதன் மூலம் பிராந்திய சக்திகளை ஒடுக்கப் பார்த்தது. அதனால் அன்று தற்காலிகமாக மத்திய சாதிகள் கீழ்த்தட்டு சாதிகளை ஒடுக்கும் கொடுமைகளை மறந்து நாம் பிராமணர் versus மத்திய சாதிகள் என்ற முரண் எதிர்வின் கீழ் இணைந்தோம்.

ஆனால் பெரியார் தமிழ் மொழியின் அருமைபெருமைகளை நினைவுகூர்ந்து சிலாகிக்கும் வகை அரசியல் தலைவர் அல்ல. அவர் ஒரு நடைமுறைவாதி. பண்பாட்டுப் பெருமைகள் நடைமுறை பிரச்சனைகளை தீர்க்காது என அவருக்கு தெரியும். அதனால் தான் அவர் தமிழ் ஒரு காட்டுமிராண்டி மொழி என்றும் அது சமூக முன்னேற்றத்திற்கு உதவாது என்றும் கூறினார். அவரது இந்த நிலைப்பாட்டை நாம் ஆங்கிலேய ஆட்சி தொடர வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்த, சுதந்திர போராட்டத்தை எதிர்த்த ஜஸ்டிஸ் கட்சியின் வரலாற்றோடு நாம் பொருத்திப் பார்க்க வேண்டும். பிராந்திய அடையாளங்களை தக்க வைக்க ஆங்கிலம் பொதுமொழியாக இருக்க வேண்டும் என அவர்கள் வேண்டினார்கள். ஜஸ்டிஸ் கட்சியினர் முழுக்க தமிழர்கள் அல்ல என்றும் நாம் இங்கு நினைவில் கொள்ள வேண்டும். ஆனால் பெரியாருடன் இந்த மொழி மற்றும் பண்பாட்டு பெருமித விசயத்தில் அண்ணா முரண்பட்டார். அவர் அனைத்து மதங்கள், சாதிகள் சேர்ந்தவர்களையும் தமிழர் எனும் அடையாளம் கீழ் ஒருங்கிணைக்க விரும்பினார். ஏனெனில் வேறுபாடுகளை தவிர்க்கும் சமரசப் போக்கு தான் தன் கட்சியின் நிலைப்பாட்டுக்கும் உதவும் என அவர் அறிந்திருந்தார். ஆக இந்த தமிழ்தேசிய அரசியலின் விளைவாக மத்திய சாதிகள் தமக்கு கீழுள்ளோரை ஒடுக்குவதை நாம் கடந்து ஐம்பது வருடங்களுக்கு மேலாக கண்டும் காணாமல் விட்டு வருகிறோம். தமிழகத்தில் பிராமனர்கள் மட்டுமே சாதி ஒடுக்குமுறை செய்வதாய் இன்றும் தொடர்ந்து வலியுறுத்த முயல்கிறோம்.
ஜஸ்டிஸ் கட்சியினரும் பெரியாரும் ஒரு காலத்தில் இப்படியான ஒற்றைபட்டை சித்திரத்தை முன்வைத்ததற்கும் ஒரு சமூக அரசியல் தேவை இருந்தது. அது இன்று இல்லை.
சின்மயி இடஒதுக்கீட்டுக்கு எதிரானவர் என்ற குற்றச்சாட்டு அவரது டிவிட்டர் வசனங்களில் இருந்து வருகிறது. என் தனிப்பட்ட வாழ்வில் பிரமாணரல்லாத எத்தனையோ மத்திய சாதியினர் இட ஒதுக்கீட்டு எதிராக பேசியதை கேட்டுள்ளேன். அதாவது இவர்கள் ஒரு காலத்தில் தாழ்த்தப்பட்டவர்களாக இருந்து பின்னர் கடும் உழைப்பு மற்றும் பிற காரணிகளால் முன்னேறி மேற்தட்டை அடைந்தவர்கள். இன்று அவர்கள் தமக்கு கீழ் உள்ள சமூகத்தினர் இடஒதுக்கீடு பெறுவதை எதிர்க்கிறார்கள். நான் சொல்ல விரும்புவது இடஒதுக்கீடு எதிர்ப்பு விவகாரத்தில் சின்மயி உள்ளிட்ட பிராமணர்களுடன் உயர் மத்திய, மத்திய சாதிகளும் நிச்சயம் கைகோர்க்கிறார்கள் என்பது தான். மீண்டும் இந்த பிரச்சனையை பிராமணர் versus தாழ்த்தப்பட்டவர் என்று பார்த்தோமானால் நம்மை விட முட்டாள் வேறு யாரும் இருக்க முடியாது.
பிராந்திய அரசியலுக்கு நெருக்கடி வந்த போது பெரியார் திராவிடவாதத்தை முன்னெடுத்தார். ஆனால் இப்போது வடநாட்டவர் × தென்னாட்டவர் என்கிற முரண் அரசியல் பிராந்திய சமூகங்களில் வளர்ச்சியால் மெல்ல மெல்ல சமகாலத்தேவையை இழந்து வருகிறது. அதனால் தான் இன்றைய தமிழ்தேசிய வாதிகள் ஈழத்தமிழர் பிரச்சனையை முன்னெடுத்து அதைக் கொண்டு சாதி கடந்த ஒரு தமிழ்தேசிய சமூகத்தை கட்டமைக்க முயல்கிறார்கள். தமது எதிரிகளாக சிங்களவர்களையும் வடநாட்டினரையும் வெளிநாட்டு காங்கிரஸ் தலைவியையும் முன் வைக்கிறார்கள். ஆனால் விடுதலைப்புலிகளின் வெள்ளாள, இந்துத்துவ அரசியலை கேள்விக்குள்ளாக்கும் போது அவர்கள் “நம்மைப் பிரிக்கப் பார்க்கிறார்கள்” என கூச்சலிடுகிறார்கள். ராஜன்லீக்ஸ் கூட அவரது பிளாக்பதிவு பொன்றில் இதே தொனியில் உள்சாதிய அரசியலை பேசுவதை தவிர்க்க வேண்டுகிறார். இது ஒரு போர்த்தந்திரம் மட்டுமே. பொதுவாக உள்நாட்டுக் குழப்பங்கள் விளையும் போது சர்வாதிகாரிகள் வெளிநாட்டு பொதுவிரோதியை கட்டமைப்பு உள்விரோதங்களை முடக்கி ஒற்றுமை உருவாக்கப் பார்ப்பார்கள். ஒரு பிரச்சனையை பேசாமல் தவிர்ப்பது அதை தக்க வைக்கத் தான். இவ்விவகாரத்தில் ராஜன், சரவணகுமாரும் ஒரே ஆதிக்க சாதிய அரசியலை தான் பேசுகிறார்கள்.
ராஜன் உள்ளிட்டோர் தமிழ்தேசியவாதி என்கிற அடையாளத்தில் நின்று தான் சின்மையியின் மேல்சாதிய மனநிலை எதிர்ப்பதாய் கூறுகிறார்கள். தமிழ்தேசியவாதிகள் என்பவர்கள் தமிழகத்தின் வேறு சாதிய (தமது மத்திய சாதிகளின் ஆதிக்க நோக்கம் உட்பட்ட) கோளாறுகளை பொதுவில் விவாதிக்க வேண்டிய சூழல் இன்று தேவையிருக்கும் போது அவர்கள் மீண்டும் ஒரு ”அகண்ட தமிழ்பாரத” ஒற்றை அடையாளத்தை நிறுவி தப்பிக்க பார்க்கிறார்கள். ஆனால் பெரியாரின் சித்தாந்த கட்டமைப்பை போல் அல்லாமல் இது போலியாக உள்ளது. உங்கள் சொந்த மாநில மக்கள் போலீசால் சுட்டுக் கொல்லப்படும் போது, தாமிர பரணியில் மிதித்து கொல்லப்பட்ட போது, எரித்து அழிக்கப்பட்ட போது பேரணி நடத்தாத நீங்கள் இலங்கைத் தமிழர்களுக்காக ராப்பகலாக பிரச்சார வேலைகளில் ஈடுபடுவது கண்ணீர் வடிப்பது முகநூல் போராட்டங்கள் நடத்துவது இணைய கையெழுத்து இயக்கம் நடத்துவது மத்திய சாதி பாசாங்கு இல்லாமல் வேறு என்ன? ஈழத்தமிழர்களுக்கு நடந்தது மிகப்பெரிய அநீதி என்றாலும் அதை முன்னிட்டு இங்கு நிகழ்வது ஒரு பெரும் போலி மத்திய சாதி இயக்கம் மட்டுமே. ஐம்பது வருடங்களுக்கு முன் திராவிட இனப்போருக்காக சமூகங்கள் ஒன்று திரண்டது போல் இம்முறை நிகழவில்லை. பொதுமக்கள் தமிழ்தேசியவாதத்தை முழுக்க நிராகரித்து விட்டார்கள் என்பதை தேர்தல் முடிவுகளில் துல்லியமாகத் தெரிந்தது.
ஆக “அவங்கள் எல்லாம் இவங்க ஏன் தட்டிக் கேட்கலை?”. ஏனென்றால் அவங்க தானே இவங்க. பிராமணியம் என்பது சாதி மனநிலை அல்ல அனைத்து சாதியினருக்குள்ளும் இருக்கும் மனநிலை என்று தமிழவன் ஒருமுறை சொன்னதை நினைவுபடுத்துகிறேன். என்னைப் பொறுத்தவரை சின்மயியும் ராஜன் லீக்ஸும் சரிசமமாக மீனவர், பறையர், பள்ளர் என பல தாழ்த்தப்பட்ட சமூகங்களுக்கும் எதிரானவர்களே. ஒரே வித்தியாசம் ராஜன் லீக்ஸ் போன்றவர்கள் தமிழ்தேசிய அடையாளம் மூலம் அந்த குறுகின மனப்பான்மையை கடந்து செல்வதாக பாவனை செய்கிறார்கள் என்பது தான்.
நாம் நமது சாதிய அடையாளங்களால் பிளவுபட்டு தான் இருக்க வேண்டுமா என கேட்கலாம். முதலில் சாதிய பிளவுகளை ஏற்றுக் கொண்டு நமக்குள் உள்ள தீமைகளை எதிர்கொள்ள முன்வர வேண்டும்.
இந்தியர்கள் சுதந்திரம் கிடைத்த பின்னரும் கூட அதனை ஏற்றுக் கொள்ளும் மனநிலைக்கு வரவில்லை என தனது “பண்டைய இந்தியா” நூலில் எழுதுகிறார் ரோமிலா தாப்பர். காரணம் அவர்களின் சாதியம். இந்தியா அப்போதும் இப்போதும் நூற்றுக்கணப்பான சாதிகளின் இனங்களின் நூறுநூறு இந்தியாக்களாக தான் இருந்து வருகிறது. பி.ஜெ.பியின் அகண்ட பாரதம் அளவுக்கு நம்மவர்களின் தமிழ்தேசியமும் ஒரு பிரிவினரின் ஆதிக்கவாத அஜெண்டாவை கொண்டது தான்; இரண்டுமே போலியான கனவுகள் தாம். இந்திய சமூகம் ஒரு ஏணி என்றால் ஒவ்வொரு சமூகமும் படிகள். ஒன்றை ஒன்று மிதித்து தானே நம் சமுதாயங்கள் மேலே போகின்றன. ஐக்கிய சமூதாய லட்சியாவாதம் ஒரு விழுமியம் மட்டுமே. நாம் வெளிப்படையாக நம் சார்பை முன்வைத்து கண்ணியமான சாமர்த்தியமான முறையில் போராடி முன்னேற வேண்டும். இந்தியர்கள் வரலாற்று ரீதியாக சகிப்புத்தன்மை மிக்கவர்கள் என்பதால் சிதறுண்டு விட மாட்டோம்.
மத்திய சாதிகளை ஒருங்கிணைக்கும் முயற்சிகள் இனி வேறு சாதிகளை ஒடுக்கும் ஒரு சமுதாய தீமையாக பார்க்கப்பட வேண்டும். அது ஈழத்தமிழரை முன்னிட்டே நடந்தாலும் சரி! அதுவே இனி நடைமுறை நிதர்சனம். அதற்கு ஒரு உதாரணம் பார்ப்போம்.
இதுவரை ஐநூறுக்கு மேல் தமிழர்கள் இலங்கை ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். தமிழர்கள் மத்திய அமைச்சரவையில் இருந்தார்கள்; கூட்டணிக் குடுமியை கையில் வைத்திருந்தார்கள். ஆனாலும் இலங்கை மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவோ கொலைகளை தடுக்கவோ நம்மால் முடியவில்லை. ஆனால் கேரள மீனவர்கள் இருவரை சுட்டுக் கொன்றதற்கு இத்தாலிய கப்பற்படை அதிகாரிகளை கைது செய்து வழக்கு தொடுத்திருக்கிறாகள். இத்தாலி மட்டும் நமக்கு பகை நாடா? இல்லை. கேரள அரசியல்வாதிகள் இதை மீனவ சாதியின் பிரச்சனையாக கருதவில்லை. கேரள சமூகமும் மீடியாவும் இது ஒட்டுமொத்த சமூக அநீதியாக பார்த்து எதிர்த்தது. ஏ.கெ ஆண்டனி சோனியாவுக்கு நெருக்கமானவர் தான். ஆனால் அவர் கடுமையாக இந்த கொலைகளை எதிர்த்தார். அந்தளவுக்கு அவருக்கு நெருக்கடி வழங்க கேரள சமூகத்தால் முடிந்தது. நம்மால் ஏன் முடியவில்லை? சாதிய மனநிலை தான் காரணம். மீனவர்கள் இறந்தால் அது ஒரு குறிப்பிட்ட சாதியின் இழப்பாகத் தான் பொதுநீரோட்ட சமூகத்தால் இங்கு பார்க்கப்படுகிறது. கூடங்குளம் போராட்டம் கூட மீனவ சமூகத்தினரை ஒருங்கிணைத்து தானே வலுவாக நடத்துகிறார்கள். இப்போராட்டத்தில் அவர்களை தவிர பிற ஆதிக்க சமூகத்தினரின் நேரடியாக பெரும் எண்ணிக்கையில் கலந்து கொள்கிறார்களா? இல்லை. மீனவர்கள் இறந்ததற்கு பதில் ஐநூறு முக்குலத்தோர் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தால் இப்பிரச்சனையின் அரசியல் பரிமாணமே வேறாக இருந்திருக்கும். இங்கு பெரும் போராட்டங்கள் வெடித்திருக்கும். இது தான் தமிழகத்தின் நிதர்சனம்.
கேரளா நம்மை விட சாதியம் வேரூன்றிய சமூகம் தான். ஆனால் அங்கு இடதுசாரி இயக்கங்கள் பல வருடங்களாக வலுவாக செயல்படும் பாரம்பரியம் உள்ளது. கம்யூனிஸம் எனும் தத்துவம் அம்மக்களை ஒருங்கிணைக்கிறது. திராவிட அரசியலுக்கு இந்த ஒருங்கிணைக்கும் வலு இல்லை. இங்கு கம்யூனிஸமும் பலவீனமாக இருந்து வந்துள்ளது. இதையும் கடந்து அவர்களால் ஒரு அரசியல் ஒருங்கிணைவை பொதுப்பிரச்சனைகளில் ஏற்படுத்த முடிந்திருக்கிறது. அங்கு கொக்கோகோலாவுக்கும் இயற்கை சீரழிவுக்கும் எதிராக மக்கள் இயக்கமாக இணைந்து போராடியதை போல் ஒரு எழுச்சியை நாம் இங்கு கற்பனை செய்ய முடியாது. கூடங்குளம் கேரளாவில் நிகழ்ந்திருந்தால் அது தேசிய கவனத்தை ஈர்த்திருக்கும். பிரச்சனை என்றால் அடுத்த சாதிக்குத் தானே என்கிற மனப்பான்மை நமக்குள் வலுவாக உள்ளது. நமது பிரச்சனைகளுக்கு அடிப்படை திராவிட கட்சிகளின் சமசரமும் ஊழலும் மட்டுமல்ல மேற்சொன்ன சாதிய மனநிலையும் தான். தமிழர்களை சாதி கடந்து ஒருங்கிணைக்க எந்த சித்தாந்த சக்தியாலும் இன்று வரை இயன்றதில்லை. அனைத்து சமூக மக்களும் மெல்ல மெல்ல படிப்பறிவு பெற்று வரும் நிலையில் நமது சமூக கட்டமைப்பு சிறுக சிறுக குலைந்து வருகிறது. இனி அறுபதுகளில் நிகழ்ந்த அளவுக்கு கூட ஒரு மக்கள் எழுச்சி இங்கு எளிதில் சாத்தியப்படாது.
இந்த பின்புலத்தில் இருந்து பார்க்கும் போது மீனவர் கொலைகளை ஒரு “தமிழர்” பிரச்சனையாக தமிழ்தேசிய கொள்கையாக்கமாக மாற்றுவது எப்படி தோல்வியடைந்தது என நமக்கு புரிகிறது. அப்படிச் செய்வது பிரச்சனையில் இருந்து நம்மை திசைதிருப்பவே செய்கிறது. இலங்கை ராணுவம் சுடும் போது ஜெயலலிதாவை கிளர்ந்தெழுந்து மத்திய அரசை கேள்வி கேட்கவும் தனது காவலர்படையினர் அதே மக்களை கூடங்குளத்தில் தாக்கும் போது அமைதி காக்கவும் வைக்கிறது. ஏனெனில் முதலாவது “தமிழர்” மீதான தாக்குதல். இரண்டாவது “மீனவர்” மீதான தாக்குதல். கட்சிகளும் அமைப்புகளும் இரண்டு விசயங்களை அணுகுவதும் இவ்வாறான குழப்பத்தோடு தான்.
இன்னும் ஆழமாக யோசித்தால் இந்த இரட்டை மனநிலை ஒற்றை செயற்திட்டத்தோடு வரும் எல்லா குழுவினருக்கும் பொதுவானது எனப் புரியும். தமிழ்தேசியவாதிகள், திராவிட கட்சியினர், இந்துத்துவாவாதிகள், அன்னா ஹசாரேவின் ஊழல் ஒழிப்பு கட்சியினர் என பலரும் தனிப்பிரச்சனைகளை மூடி மறைக்க ஆவேசப்படுவார்கள். பொதுவான ஒரு இலக்கை முன்வைத்து அதை அடைவதற்கு உள்சிக்கல்களை நாம் மறக்க வேண்டும் என கோருவார்கள். ஊழலுக்கு காரணம் அரசியல்வாதிகள் மட்டும் என்பார்கள். கார்ப்பரேட்டுகளை எதிர்க்க மாட்டார்கள். கார்ப்பரேட்டுகளை மட்டுமே எதிர்ப்பவர்கள் தமது கட்சியின் சாதியத்தை கண்டுகொள்ள மாட்டார்கள். மொழி,இன அரசியலை மட்டுமே பேசுகிறவர்களின் கண்ணுக்கு வேறு மக்கள் பிரச்சனைகளே தெரியாது. சமூகப்பிரச்சனைகளுக்கு தீர்வு காண நாம் இந்த ஒற்றை செயற்திட்டக்காரர்களை எதிர்க்க வேண்டும். இன்று சின்மயியின் பார்ப்பனியத்தை எதிர்க்கிறோம் என்ற பெயரில் கிளம்பியிருப்பவர்கள் மீண்டும் பிராமணர் × பிராமணரல்லாதோர் என்கிற ஒற்றை கட்டமைப்பைக் கொண்டு மீண்டும் அசலான பிரச்சனைகளை மூடி மறைக்கப் பார்க்கிறார்கள்.
மலையாளிகளைப் போல் அல்லாது நாம் பிளவுபட்டவர்களக இருப்பதற்கு சாதியம் மட்டுமல்ல சாதியத்தை வசதியாக வாழ வைக்கும் போலி சாதிய எதிர்ப்பரசியலான பிராந்திய அடையாள அரசியலும் தான் பிரதான காரணம். நமக்குத் தேவை பிராந்திய அடையாள அரசியலை கடந்த கம்யூனிஸத்தைப் போன்ற ஒரு மனவிரிவைத் தரும் ஒரு பண்பாட்டு அரசியல் இயக்கம்.
இங்கு வசைபாடுவது யார்?
சின்மயியை ஆவேசமாக எதிர்ப்பவர்களை தமிழ்தேசியவாதிகள், சுதந்திர இணைய பயனர்கள் என இரண்டாக பிரிக்கலாம். இரண்டாமவர்கள் ராஜன், செந்திலுக்கு எதிராக போலியான குற்றங்கள் சுமத்தப்பட்டு சிறையில் தள்ளப்பட்டதை தான் எதிர்க்கிறார்கள். கிட்டத்தட்ட அனைவருமே ராஜனின் வக்கிரத்தை கண்டிக்கிறார்கள். ஆனால் இதன் பொருட்டு தன் இணைய சுதந்திரம் பறிபோகுமோ என இவர்கள் அனைவருக்கும் உள்ளூர பயம் வந்திருக்கிறது.
இணையத்தை நாம் பயன்படுத்த துவங்கிய காலத்தில் இருந்தே அந்தளவு அவதூறும் வசவுகளும் தினசரி தோன்றி வந்துள்ளது. இதையெல்லாம் செய்வது யாரென்று பார்த்தால் பொதுமக்கள் அல்ல. அறிவுஜீவிகள், எழுத்தாளர்கள், மற்றும் அரசியல் ஆர்வலர்கள் தாம் அதிகமாக சர்ச்சைகளை இங்கு கிளப்பியவர்கள். தர்க்கரீதியாக சிந்திக்கவும் மொழியை சரளமாக பயன்படுத்தவும் தெரிந்தவர்கள் இணையவெளியில் ஒருசேர சச்சரவுகளில் ஈடுபட்ட போது நம்மிடையே இவ்வளவு கீழ்மையா என்ற வியப்பு வாசகர்களுக்கு ஏற்பட்டது. இரண்டு விசயங்களை இந்த அவதூறு கேளிக்கைகள் உணர்த்துகின்றன.
ஒன்று, இதுவரை நம் சமூகத்தில் வன்மத்தை, காழ்ப்புணர்வை, பரஸ்பர வெறுப்பை காட்டுவதற்கு சாத்தியப்பாடோ வெளியோ இருந்ததில்லை. ஏனென்றால் தமிழர்கள் நாம் வெளியே கண்ணியமாக இருக்க விரும்புபவர்கள். உணர்ச்சிகரமானவர்கள். மிக சீரியசானவர்கள். முதன்முதலாக இணையத்தை பார்த்த போது ஒரு பெரும் மூத்திர சந்தாக நாம் நினைத்து மழைநடனம் போட்டத்தில் ஒன்றும் வியப்பில்லை. இணைய செயல்பாடு நமக்கு ஒரு கொடுங்களூர் பூரப்பாட்டு ஆக ஆனது.
அடுத்து, இதுவரை குறுகின மனப்பான்மையுடன் ஒற்றை செயல்திட்டத்துடன் இயங்கி வந்த குழுக்களான சிறுபத்திரிகையாளர்கள், அறிவுஜீவுகள், தமிழ்தேசியவாதிகள், திராவிட அரசியல் அபிமானிகள், சாதிய அபிமானிகள், வலதுசாரிகள் ஆகியோர் தான் மிக அதிகமாக சர்ச்சை என்ற பெயரில் அவதூறு பரப்புபவர்கள். இவர்களின் பிரச்சனை தங்களது எளிய கொள்கையை கடந்து எந்த சமூக அரசியல் பிரச்சனைகளிலும் ஈடுபடவோ விவாதிக்கவோ மாட்டார்கள் என்பது. மே 17 இயக்கத்தினர் ஊழல் பற்றியோ, காஷ்மீர் முஸ்லீம்கள் பற்றியோ, கார்ப்பரேட் ஆதிக்கம் பற்றியோ கவலைப்பட மாட்டார்கள். மாவீரர் தினம் பற்றி ஆவேசமாக சர்ச்சை செய்வார்கள். ஆனால் பரமக்குடியில் இறந்தவர்களின் தினம் அவர்களுக்கு முக்கியமாய் இராது. இப்படியே ஒவ்வொரு ஒற்றை செயல்திட்ட வீரர்களும் இன்று இயங்குகிறார்கள்.
நமது இலக்கியவாதிகளும் இப்படி ஒற்றைபட்டையானவர்களே. நமது சிறுபத்திரிகை இயக்கம் வசைகள் மற்றும் சர்ச்சைகள் வழியே வளர்ந்ததாக ஜெயமோகன் கூறுகிறார். இன்று அவை தொகுப்புகளாக படிக்கக் கிடைக்கின்றன. உண்மையில் இவர்கள் அவற்றின் வழி எந்த ஒரு பெரும் கண்டுபிடிப்பை நிகழ்த்தவோ உண்மையின் வெளிச்சத்தை கண்டடையவோ இல்லை என்பதை நாம் வாசித்து அறிந்து கொள்ள இயல்கிறது. எளிய சாதிய காழ்ப்புகளும் இடதுசாரிகள் திராவிட கட்சிகள் மீதான வெறுப்பும் தத்துவப் பிடிப்பில்லாத எளிய கருத்துகளும் தான் இன்று அவற்றில் இருந்து எஞ்சுகின்றன. சர்ச்சைகள் அர்த்தபூர்வமாக அமைய அவற்றுக்கு தத்துவ அமைப்பின் சார்பு வேண்டும். சார்த்தரின் சிமன் டி பூவரின் கருத்தாக்கங்கள் அவ்வாறே வளர்ந்து வந்தன. அல்லது சமூக அரசியல் ஈடுபாடு வேண்டும். மக்களோடு தம்மை அடையாளப்படுத்த வேண்டும். இவை ஏதும் இன்றி அறுபதுகளில் இருந்து ரெண்டாயிரத்து பத்துவரை நம் தமிழ் சிறுபத்திரிகை சர்ச்சைகள் வெறும் தனிநபர் மற்றும் இயக்க தாக்குதல்கள் மட்டுமாகவே இருந்து வருகின்றன. ஒரு தனிப்பட்ட உதாரணம் சொல்கிறேன். எனது முகநூல் பக்கத்தில் ஒருமுறை சிறுபத்திரிகைக்காரர்களை பொதுவாக கேலி செய்து எழுதினேன். சிபிச்செல்வன் எனும் ஒரு சிறுபத்திரிகைக்காரர் தோன்றி என்னை கடுமையாக திட்டினார். நான் அவரது கமெண்டை அழித்து விட்டு இன்னொரு பகடி எழுதினார். அவர் விடாமல் என்னை அவதூறு செய்து கொண்டே இருந்தார். என் முகநூல் தகவலில் பேராசிரியர் என்று இருப்பதை பார்த்து “உங்களைப் போன்ற பேராசிரியர்களுக்கு எங்கள் சிறுபத்திரிகைகளைப் பற்றி என்ன தெரியும்” என்று கோபமாக திட்டிக் கொண்டே இருந்தார். நான் கடந்த நான்கு வருடங்களில் நான்கு நூல்களும் நூற்றுக்கணக்கான பக்கங்களும் தமிழில் எழுதியிருக்கிறேன் என்பதை அறியும் பொறுமை கூட அவருக்கு இல்லை. எங்கிருந்தோ வந்தார், வசை பாடினார், சென்றார். அதாவது அவர் மாலேலா பற்றியோ முகேஷ் அம்பானி பற்றியோ நீங்கள் நிலைத்தகவல் எழுதினார் தோன்றமாட்டார். அலாவுதீன் விளக்கு போல சிறுபத்திரிகையாளர்களைப் பற்றி குறிப்பிட்டால் மட்டுமே சட்டென்று காற்றில் இருந்து தோன்றி எதிர்ப்பார். வேறு எதைப்பற்றியும் இவர்களுக்கு அக்கறை இல்லையா எனும் வியப்பு ஏற்படுகிறது. எப்படி ஒரு மனிதனால் வெறும் சிறுபத்திரிகை இயக்கம் பற்றி மட்டுமே அக்கறைக்கப்பட்டு எதிர்வினையாற்றி இருக்க முடிகிறது?
இப்படி ஒற்றை செயல்திட்டத்துடன் இருப்பது இந்திய சாதிய மனநிலையின் ஒரு வெளிப்பாடு தான். சிறுபத்திரிகை நடத்துபவன் அதைப் பற்றி மட்டுமே கவலைப்படுவது, நாம் தமிழர் இயக்கத்தினர் மாவீரர் தினம் பற்றி மட்டுமே பேசுவது எனபதே நெசவாளி நெசவு மட்டுமே செய்ய வேண்டும், பொற்கொல்லன் தங்கத்தை மட்டும் உருக்க வேண்டும் என்கிற பண்பாட்டு மனநிலையில் இருந்து தான் ஏற்படுகிறது. மனுதர்மத்தை எதிர்ப்பவர்கள் முதலில் இந்த ஒற்றை செயல்திட்ட மனநிலையை எதிர்க்க வேண்டும். இன்று இணைய வெளியில் தோன்றும் இது போன்ற ஒற்றைசெயல் திட்ட வீரர்களின் விவாதங்கள் ஆழமற்றவையாய் பயனற்றவையாய் இருப்பதற்கு இதுவே காரணம்.
வினவும் அ.மார்க்ஸும் எழுதியது போல இவர்கள் தமது சமூக அக்கறைகளை கொண்டு சராசரி நபரான சின்மயியிடம் ஏன் காட்ட வேண்டும்? மீனவர்கள் மீனைக் கொல்லுவது நியாயமா என நீங்கள் காஞ்சி சங்கராச்சாரியரிடம் கேட்டு விவாதிக்கலாம். சாதி ஒதுக்கீடு குறித்து பொன்.ராதாகிருஷ்ணனை சீண்டிப் பார்க்கலாம். இம்மாதிரி விசயங்களுக்கு எல்லாம் அதிகாரபூர்வ பிரதிநிதிகள் இருக்கும் போது ஏன் நாம் எப்போதும் கனிமொழி, குஷ்பு, சின்மயி என மென்மையான இலக்குகளை சினிமா நட்சத்திரங்களை தேடுகிறோம்? ஏனென்றால் நமக்கு அசலான பிரச்சனைகளில் எப்போதும் ஈடுபாடில்லை. மேலும், எம்.ஜி.ஆரை அரசியலுக்கு இழுத்த அண்ணாயிசத்தின் ஒரு நீண்ட வரலாறும் இதன் பின் உள்ளது.
இன்று ராஜன்லீக்ஸை ஆதரிப்பவர்கள் பயப்படுவது போல இணைய சுதந்திரம் எளிதில் பறி போவப் போவதில்லை. அதற்காக இந்த வழக்கின் காரணமாக இணையத்து வசைபாடிகள் திருந்தி விடப் போவதும் இல்லை. இதே போன்று நட்சத்திரங்களை அவதூறு பேசிக் கொண்டும், பிரச்சனைகளை நேரடியாக சந்திக்கும் துணிவற்றும், இணையத்தில் தாம் அறிவு சுதந்திரத்தோடு இயங்குவதான பாசாங்குடனும் நாம் தொடர்ந்து கொண்டு தான் இருக்கப் போகிறோம். கொஞ்ச நாள் பம்மி விட்டு வொய்ய்ங் என்று சிறகடித்து கிளம்பி விடுவார்கள். ராஜன் உள்ளிட்டோரை போலீஸும் பத்திரிகைகளும் கையாண்ட விதத்தின் நியாயத்தை அலசாமல் நாம் இதை விட கொடுமையான சமூக அவலங்களை நேரடியாக ஆழமாக அறிய முயல வேண்டும்.
ராஜன், செந்தில் போன்றோர் செய்தது குற்றம் தான். அதை சட்டரீதியாக எதிர்கொள்ள முடியாது என்று அறிந்தே காவல்துறை பொய்வழக்குகளை போட்டு ஊடகங்களில் திரித்து செய்து வெளியிட்டு அவர்களை துன்புறுத்தி வதைக்கிறது. எல்லாக் காலங்களிலும் அதிகார வர்க்கம் இவ்வாறு தான் செயல்பட்டு வருகிறது. ஆனால் நாம் ராஜனை முன்னிட்டு அதிகார துஷ்பிரயோகம் பற்றின ஒரு விவாதத்தை ஆரம்பிக்கலாமா என்பதே கேள்வி. அதிகார வர்க்கத்தால் நசுக்கப்படும் கார்ப்பரேட் எதிர்ப்பாளர்கள், அணு உலை போராளிகள், சாதிய கலவரங்களில் திட்டமிட்டு கொல்லப்பட்ட மக்கள் என ஏராளம் அசல் அரசியல் தியாகிகள் ஏற்கனவே இருக்கிறார்கள். அவர்களின் பீடத்தில் வெறும் அவதூறுக்காக பாலியல் வக்கிரத்துக்காக கைதானவரை நாம் வைத்து வழிபட வேண்டாம்.
சின்மயி×ராஜன் லீக்ஸ் சர்ச்சைக்கு விஜய்×அஜித் ரசிகர் சச்சரவு அளவுக்குத் தான் முக்கியத்துவம் உள்ளது. நாம் இந்த சர்ச்சை வழி நம் சமூகத்தின் போலி அரசியல் போராளிகளை மீண்டும் ஒருமுறை கண்டுகொண்டோம் என்பதே இதன் ஒரே பயன்.
Read More

Tuesday, 23 October 2012

பெண் உயரதிகாரிகளும் வீட்டு மனைவி மனப்பான்மையும்


கடந்த வாரம் ஒரு கல்லூரியின் துறைத்தலைவர் வேலைக்கு ஆண் பேராசிரியர்களை குறிப்பாக தேடிக் கொண்டிருந்தார். ஏற்கனவே ஒரு பெண் விண்ணப்பித்திருப்பதாகவும், ஆனால் அவரை வேலைக்கு எடுக்க தயக்கமாக உள்ளதாகவும் கூறினார். காரணம் விசாரித்தால் பெண்கள் ரொம்ப அரசியல் பண்ணுகிறார்கள் என்று விநோதமான காரணம் ஒன்றை கூறினார். பின்னர் நான் வேலைக்கு சேர்ந்த இடத்திலும் இன்னும் சில ஆண் பேராசிரியர்களை குறிப்பாய் தேடுவதாகவும் சொல்லி என்னை பரிந்துரைக்க கேட்டார்கள். இது இப்போது ஒரு பாணியாக உருவெடுக்கிறதா? பெண்கள் வேலையிடங்களில் அதிகம் தொல்லை தருகிறார்களா?



பெண்களிடத்து ஒற்றுமை இல்லை என்பதை கவனித்திருக்கிறேன். அதாவது பத்து ஆண்கள் சகஜமாக சேர்ந்து பணியாற்றுவார்கள். கருத்துவேறுபாடுகள், பரஸ்பர வெறுப்பு இருந்தாலும் பொருட்படுத்த மாட்டார்கள். ஆனால் பெண்கள் பத்தை மூன்று நான்கு பிரிவுகளாக்கி பரஸ்பரம் ஜென்மப் பகை பாராட்டுவார்கள். இதற்கு உயிரியல் பின்னணி ஒன்று உள்ளதை அறிவோம். அதைப் பற்றி பிறகு பேசலாம்.

பொதுவாக அமர்ந்து செய்யும் மேஜை வேலைகளுக்கு பெண்களை அமர்த்தவே நிர்வாகங்கள் விரும்புகின்றன. பெண்கள் பொறுமையானவர்கள், கனிவானவர்கள் என்கிற பொதுப்புத்தி காரணமாய் கல்வித்துறையிலும் அவர்கள் கணிசமாக அமர்த்தப்படுகிறார்கள். நாம் இங்கு இரண்டு கேள்விகளை கேட்க வேண்டும்.

ஒன்று பெண்கள் இருக்கும் இடங்களில் சண்டை சச்சரவுகள் எளிதில் மூள்கின்றன. பொதுவாக பெண் உயரதிகாரிகள் கொடுங்கோலர்களாக இருப்பதாக உலகம் முழுக்க இன்று புகார் எழுகிறது. இதைப் பெண்களே ஏற்றுக் கொள்கிறார்கள். பெண்கள் பெண் மேலதிகாரிகளிடத்து விட ஆண்களின் கீழ் தான் வேலை பார்க்க விரும்புகிறார்கள். பெண் உயரதிகாரிகள் பெண் ஊழியர்களை கீழ்த்தரமாய் நடத்துவதாய், தொடர்ந்து நெருக்கடி கொடுப்பதாய், அவர்களுக்கு பதவியுயர்வு மறுப்பதாய் சர்வதேச அளவில் செய்யப்பட்ட ஆயுவுகள் கூறுகின்றன. இதற்கும் பெண்கள் பொதுவாக குழுக்களுக்குள் பரஸ்பரம் பகைமை பாராட்டுபவர்களாய் இருப்பதற்கும் தொடர்பு உண்டா? இந்த கேள்விகளை பரிசீலிப்போம்.

பெண்கள் அரசியல் தலைமைக்கு வரும் போது எளிதில் சகிப்புத்தன்மை அற்றவர்களாக, பண்பற்றவர்களாக மாறிப் போவதற்கு நம் நாட்டிலேயே ஜெயலலிதா, மம்தா பேனர்ஜி, மாயாவதி என உதாரணங்கள் பார்க்கிறோம். பெண் மேலதிகாரிகளின் இந்த மனப்பான்மைக்கு ஆய்வாளர்கள் ராணித்தேனீ நோய்க்குறி (queen bee syndrome) என்று பெயரிட்டிருக்கிறார்கள். அதாவது இன்றும் வேலையிடங்களில் ஆண்களின் ஆதிக்கம் தான் அதிகம். பெண்கள் உயர்பதவிகளுக்கு வருவதற்கும் ஆண்களை சார்ந்திருக்க வேண்டி உள்ளது. அதனால் ஒரு பெண் உயரதிகாரி நிலைமைக்கு வருவதற்கு கடுமையாக போராட அதிக திறமை படைத்தவராக இருக்க வேண்டும். மேல் பதவியை எட்டியதும் அவர்களுக்கு பாதுகாப்பின்மை மனநிலை ஏற்படுகிறது. கீழிருக்கும் பிற பெண்களை அவர்கள் போட்டியாளர்களாக நினைக்கிறார்கள். அதனால் அவர்களை தொடர்ந்து மட்டம் தட்டி நெருக்கடி அளித்து வளர்ந்து விடாதபடி பார்த்துக் கொள்கிறார்கள். கேலப் வாக்களிப்பு ஆய்வின் படி 32% பெண்கள் ஆண் மேலதிகாரியின் கீழ் வேலை பார்க்கத் தான் விரும்புகிறார்கள். பெண் மேலதிகாரிகளை ஏற்கும் பெண்கள் 23% தான். ஒரு தேனீக் கூட்டுக்குள் ஒரே ஒரு ராணித்தேனீயும் அதற்குக் கீழ் எண்ணற்ற அடிமை ஆண் தேனீக்களும் இருப்பது போல் தான் இருக்க வேண்டும் என பெண் உயரதிகாரிகள் நினைக்கிறார்கள். இது தான் சமூக உளவியலாளர்களின் கணிப்பு.

ஆனால் இந்த கணிப்பு பிரச்சனையின் ஒரு பக்கத்தை மட்டுமே பரிசீலிக்கிறது. போட்டியும் பாதுகாப்பின்மையும் மனிதர்களை கசப்பானவர்களாக வன்மமானவர்களாக மாற்றும் என்பது உண்மை தான். ஆனால் பெண்ணதிகாரிகளின் சர்வாதிகார மனநிலைக்கு இது மட்டும் காரணம் அல்ல. முக்கியமாக இந்த கணிப்பு மேலோட்டமாக இருக்கிறது. பிரச்சனை உண்மையில் ஆழமானது.

பொதுவாக தமக்கு கீழுள்ள பெண்களை ஊக்குவித்து மேலே கொண்டு வரும் பெண் உயரதிகாரிகளை பார்த்துள்ளேன். ஒரு குழுவை மிகத்திறமையாக வழிநடத்தும் பண்பாக பெண் உயரதிகாரிகளும் சமமாக உள்ளார்கள். ஆக நாம் பெண் உயரதிகாரிகளின் பிரச்சனையை பொதுமைப்படுத்தல் ஆகாது. சில பெண்கள் முழுக்க சகிப்புத் தன்மை அற்றவர்களாக வன்மம் மிக்கவர்களாக ஆகி தனக்கு கீழுள்ளவர்களை பழிவாங்கும் போக்கில் வேட்டையாடுகிறார்கள். இது பல அலுவலகங்களில் நடக்கிறது. இன்னொரு புறம் பல பெண்கள் தமது சகிப்பின்மை, பதற்றத்தை கடந்து சிறந்த உயரதிகாரிகளாக் உருவெடுக்கிறார்கள். இதுவும் நடக்கிறது தான். முதலில் மோசமான உயரதிகாரிகளின் உளவியலை பார்ப்போம். இறுதியில் நல்ல பெண் உயரதிகாரிகளின் மன-அமைப்பை அலசுவோம்.


சகிப்பின்மை, பதற்றம், தொடர்ந்த வன்மம் ஆகியவை பொதுவான பெண் பண்புகளாக உள்ளன. இது உண்மையில் பெண்கள் பற்றிய பொதுபிம்பத்துக்கு மாறாக உள்ளது. பெண் பொறுமையின் உறைவிடம், அன்பின் உருவானவள் என்பதெல்லாம் ஆண்களின் பகற்கனவு மட்டுமே. பெண்கள் அவர்களுக்கான மனச்சிக்கல்களை கொண்டவர்கள். இவை தான் அவர்களின் வேலையிடத்து நடவடிக்கைகளுக்கு அடிப்படை காரணம். சில உதாரணங்களைப் பார்ப்போம்.

பெண்கள் அழகான பெண்களை வெறுக்கிறார்கள். ஆண்கள் அழகான ஆண்களை வெறுப்பது குறைவு. அதை விட பல மடங்கு அதிகமாய். ஆண்களுக்கு பொதுவாய் பிற ஆண்களின் அந்தஸ்தும் அதிகாரமும் தான் பொறாமையை வயிற்றெரிச்சலை கிளப்புகிறது. ஆனால் பெண்களுக்கு உடல் தோற்றம் பற்றின பிரக்ஞை அதிகம். அவர்களை உடல் அடையாளம் சஞ்சலப்படுத்துகிறது. என் மனைவியின் அலுவலகத்தில் ஒரு பெண் கவர்ச்சியாக ஆடை அணிந்து வரும் ஒரே காரணத்துக்காக சக பெண் ஊழியர்களை அவளை தனிமைப்படுத்தி பகைமை பாராட்டி நிர்வாகத்திடம் தொடர்ந்து புகார் அளித்து வேலையை ராஜினாமா செய்யும் நிலைமைக்கு கொண்டு போனார்கள். அந்த பெண்ணுக்கு ஒரு கட்டத்தில் மன-அழுத்தம் முற்றி அலுவலகத்திலெயே மயக்கம் போட்டு விழுந்து விட்டாள். பள்ளிகளில் கல்லூரிகளில் காதலை அதிக ஆவேசத்துடன் எதிர்ப்பவர்கள் பெண் ஆசிரியர்களாகவே இருக்கிறார்கள். அவர்களின் கண்கள் சதா எந்த ஆண் விழிகள் எந்த பெண்ணுடலை தீண்டுகிறது என்பதை கவனித்தபடியே உள்ளன. பெண்கள் நவீனமாய் ஆடையணிவதை பெண் ஆசிரியர்கள் உக்கிரமாய் எதிர்க்கிறார்கள். இதற்குக் காரணம் சக பெண்ணுடல் மீதான (ஆணின் பாலியல் ஒடுக்குமுறைக்கு எதிரான) பெண்ணின் அக்கறையா அல்லது பாலியல் பொறாமையா என்கிற விவாதத்துக்குள் இப்போது செல்ல வேண்டாம். பெண்கள் பாலியல் நெருக்கடி மற்றும் பதற்றம் மிக்கவர்களாக இருக்கிறார்கள். பாலியலை சுதந்திரமாக வெளிப்படுத்தும் உடல்களை அஞ்சுகிறார்கள்.

சுதந்திரமான பாலியலை ஆண்களும், குறிப்பாக வலதுசாரி ஆண்கள், எதிர்க்கிறார்களே, அது ஏன் என்ற கேள்வியும் வருகிறது. அதற்குக் காரணம் அவர்களுக்குள் உள்ள பெண்மை தான். இந்த பெண்மையை நாம் வேறு பெயரால் அழைக்க வேண்டும்.

பெண்களின் இந்த ஒழுக்கப் போலீஸ் மனநிலைக்கும் குடும்ப அமைப்புக்கும் ஒரு தொடர்புள்ளது. பல்லாயிரம் ஆண்டுகளாக பெண்கள் குடும்பத்தை நிர்வகிப்பவர்களாக இருந்து வந்துள்ளதால் குடும்ப கட்டமைப்பின் பாதுகாப்பு அவர்களுக்கு அதிமுக்கியமாய் இருந்துள்ளது. வேட்டையாடியும் வேலை செய்தும் குடும்பத்துக்கு பொருள் கொண்டு வரும் ஆணை அவர்கள் தக்க வைத்தாக வேண்டும். பிற பெண்களை அவர்கள் போட்டியாளர்களாக நினைப்பது இங்கிருந்து துவங்கி இருக்க வேண்டும். அடுத்து நவீன காலத்தில் பெண்கள் வேலைக்கு வரும் போது அவர்கள் வேலை இடத்தை ஒரு குடும்பமாக பாவிக்கிறார்கள். அங்கு அவர்கள் முழுமையான அதிகாரத்தை ஸ்தாபிக்க, கட்டுபாட்டை நிறுவ முயல்கிறார்கள். பிற பெண் போட்டியாளர்களை ஒழித்துக் கட்ட வேண்டும் என்கிற தூண்டுதல் இயல்பாகவே ஏற்படுகிறது.

பொதுவாக பெண்களை வேலைக்கு வைப்பதில் உள்ள அனுகூலம் அவர்கள் எதையும் கவனத்துடன் அக்கறையும் சின்ன சின்ன தகவல்களில் ஆர்வம் காட்டி செய்வார்கள் என்பது. சுருக்கமாக அவர்கள் ஆண்களை விட பொறுப்பானவர்கள். இது உண்மையே. ஆனால் பிரச்சனை பெண்கள் இந்த சின்ன விசயங்களின் மீதான பொறுப்புணர்வை பல சமயங்களில் மிகைப்படுத்தி பதற்றமாகிறார்கள் என்பது. குழந்தையின் சட்டைக்காலரில் உள்ள அழுக்கைப் பற்றி இடிந்தகரை அணு உலை அளவுக்கு கவலைப்படும் பெண்களை பார்த்திருக்கிறேன். ஒழுங்கில் சின்னதாய் குலைவு ஏற்பட்டாலே பெண்கள் மிகவும் பதற்றமாவார்கள். அனைத்தும் மிக ஒழுங்காக கட்டுப்பாடாக இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பார்கள். இதை ஒரு பள்ளிக்கூட ஆசிரிய மனநிலை எனலாம்.

பொதுவாக பள்ளிக்கூட ஆசிரியர்கள் மாணவர்களை முழுக்க கட்டுப்படுத்தலாம் எனும் கற்பனையோடு இருப்பார்கள். குழந்தை என்பது அவர்களுக்கு ஒரு இயந்திரம். அதை தொடர்ந்து முறுக்கேற்றி சரி பார்த்துக் கொண்டே இருப்பார்கள். பல ஆசிரியர்கள் வகுப்புகளில் கட்டுபாட்டை இழந்து கத்துவது, மாணவர்களை பெருங்குற்றம் இழைத்தது போன்று தண்டிப்பது எதற்கென்று பார்த்தோமானால் ஒரு சின்ன விசயமாக இருக்கும். பெண்கள் மேலதிகாரியனதும் இந்த “பள்ளி ஆசிரியர் மனநிலையை” அலுவலகத்துக்கு கொண்டு வருவார்கள். பல சமயங்களில் ஒரு அலுலகத்தில் பீதிச் சூழலை ஏதாவது அற்பக் காரணத்துக்காக ஏற்படுத்துவார்கள். நிலநடுக்கம் வந்தது போல் ஊழியர்கள் கையை பிசைந்தபடி நிற்பார்கள். சர்வாதிகார பெண் மேலதிகாரிகள் இது போன்ற பீதிச் சூழல்களில் திளைக்கக் கூடியவர்கள். அவர்கள் தமக்கு மேல் கூரை பற்றி எரியும் போது உள்ளூர அமைதியை உணர்கிறார்கள்.

இப்படியான பெண்கள் சின்ன சின்ன ஒழுக்கப்பிசகுகள் ஒரு வேலையின் பெரிய இலக்கை பாதிப்பதில்லை என்பதை உணர்வதில்லை. வேலையிடத்தில் தவறு நேர்வது இயல்புதான், தவறிழைத்தவரை ஒரு சட்டைக்காலரைப் போல போட்டு தேய் தேயென்று தேய்க்க வேண்டியதில்லை என்று புரிந்து கொள்வதில்லை. பல மாதிரியான மனிதர்கள் ஒரு வேலைக்குழுவில் இருப்பார்கள். அவர்கள் இயந்திரத்தனமாக துல்லியமாக இயங்க வைப்பது சாத்தியமல்ல. அவரவர் கோணலுடன் தனித்துவ பாணியுடன் வேலை பார்த்தாலும் இறுதியில் இலக்கை எப்படியும் எட்டி விட முடியும் என்ற உண்மையை ஏற்பதில்லை. மருமகள் சமையலை சதா குற்றம் கண்டுபிடிக்கும் மாமியார் போல பெண் உயரதிகாரிகள் நீதிவான் மனநிலையில் எப்போதும் இருக்கிறார்கள். வேலைக்காரி பெருக்கி விட்டுப் போன தரையை மீண்டும் ஒருமுறை பெருக்கி திருப்தி அடையும் வீட்டு மனைவி போல் அவர்கள் அனைத்து வேலைகளை தம்மால் மட்டுமே சரியாக செய்ய முடியும் என விடாப்பிடியாய் நம்புகிறார்கள். அற்பமான காரியங்களை மிகைப்படுத்தி அனைத்தையும் கட்டுப்படுத்தும் ஆவேசம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். பொதுவாக சுத்தம் செய்யும் பொருட்கள் பற்றிய விளம்பரங்கள் (தரை துடைக்கும் லோஷனில் இருந்து துணி துவைக்கும் பொடி வரை) ஏதோ பாக்டீரியாவால் குடும்பமே அழிந்துபடும் எனும் பீதியை பெண் வாடிக்கையாளரிடத்து உருவாக்குவதைப் பாருங்கள். பெண்கள் ஒரு அலுவலகத்தில் நுழைந்ததும் அங்குள்ள மாறுபட்ட ஊழியர்களை பாக்டீரியாக்களாக நினைக்கிறார்கள். அவர்கள் மனதில் ஒரு மூடி டார்மெக்ஸ் ஊற்றி அவர்களை அழித்து இடத்தை சுத்தமாக்கும் கற்பனை தோன்றுகிறது. பெண்களின் சர்வாதிகாரமும் சகிப்பின்மையும் வீட்டு மனைவியின் கட்டுப்பாட்டு வெறியில் இருந்து தோன்றுகிறது. இது ஒரு அடிப்படையான உளவியல்/உயிரியல் பிரச்சனை.

பெண்கள் உயரதிகாரிகளாக இருக்க தகுதியானவர்களா என்ற கேள்விக்கே இங்கு இடமில்லை. ஒரு ஊழியனாக நான் ஆண்களின் கீழ் வேலை பார்க்க விரும்புவேன் என்றாலும் நான் ஒரு நிறுவனம் நடத்தினால் நிர்வாகப் பொறுப்பை ஒரு பெண்ணை நம்பித் தான் ஒப்படைப்பேன். தொண்ணூறு சதவீதம் பெண்கள் கராறாக அக்கறையாக எந்த வேலையையும் செய்து முடிக்கக் கூடியவர்கள். ஆக இந்த பிரச்சனைக்கு தீர்வு உள்ளதா என யோசிக்க வேண்டி உள்ளது.

ஒரு கலாச்சார அளவில் பெண்கள் குடும்பப் பொறுப்புகளில் இருந்து மெல்ல மெல்ல விலகி சமூகப் பொறுப்புகளை ஏற்பவர்களாக மாறும் போது அவர்கள் மேற்சொன்ன பள்ளி ஆசிரியர் மனநிலையில் இருந்து விலகக் கூடும். நிர்வாகம் என்பது தனிமனிதர்களை அவர்கள் போக்கில் பணி செய்ய அனுமதித்து இலக்கை எட்டச் செய்யும் உத்தி என்பதை அவர்கள் புரிந்து கொள்ளக் கூடும். தமக்குப் தொழிலில் போட்டி பெண்கள் அல்ல ஆண்கள் தாம் எனும் முடிவுக்கு அவர்கள் வரக் கூடும். தோற்றத்தை விட அதிகாரமும் அந்தஸ்துமே முக்கியம், பாலியல் அச்சுறுத்தல் வெறும் கற்பிதம் என அவர்கள் உணரக் கூடும். நிஜமான பெண் விடுதலை என்றால் பெண்கள் ஆண்களிடம் இருந்து விடுபடுவதல்ல; பெண்கள் தம் மிகுதியான “பெண்மை” மனநிலையில் இருந்து கொஞ்சம் வெளியேறி கொஞ்சம் ஆண்மையை வரிப்பது தான். இங்கிருந்து நாம் ஒரு உளவியல் தீர்வுக்கு செல்வோம்.

பெண்மை என்பது மனநிலை மற்றும் பௌதீகமாக பெண்கள் சம்மந்தப்பட்டது மட்டும் அல்ல. “குடும்ப மனைவி மனப்பான்மை” பல ஆண்களிடம் இருப்பதை காண்கிறோம். சச்சின் அணித்தலைவராக இருந்த போது அப்படித் தான் இருந்தார். அவர் பதினோரு பேரின் வேலையையும் தன் பாணியில் தானே செய்ய நினைத்தார். செயற்கையான பதற்றத்தை உருவாக்கினார். தோனி அமைதியாக சற்று விலகல் மனநிலையுடன் அணியை சுலபமாக கட்டுப்படுத்துகிறார். அவரது நிர்வாகத்தின் சிறப்பு கீழிருப்போர் அவரது அதிகாரத்தின் கடுமையை உணர்வதில்லை என்பது. சச்சினிடம் பெண்மை மிகுதி. தோனியிடம் ஆண்மையும் பெண்மையும் சமநிலையில் இருக்கிறது. இந்த் சமநிலை குலையும் போது மனிதன் தன்னம்பிக்கையை அமைதியை இழக்கிறான், நெருக்கடிக்குள்ளாகி பலவீனமாகிறான். ஆண்கள் எந்தளவு தமக்குள் ஆண்மையை மிகுதியாக விடக் கூடாதோ பெண்களும் அதுபோல் பெண்மை அதிகமாக அனுமதிப்பது ஆகாது. அதிகாரத்தில் இருக்கும் பெண்கள் ஆண்களைப் போல் நடக்க முயல்கிறார்கள் என்பது பொய். அவர்கள் மிகுதியான பெண்மையுடன் இயங்குகிறார்கள், “பெண்மை” என்பது நாம் கற்பனாவாதமாய் புரிந்து கொள்வது போல் அத்தனை சாதகமானது அல்ல என்பதே உண்மை.

பெண்கள் முதலில் முழுக்க ”பெண்ணாவதில்” இருந்து தம்மை பாதுகாக்க வேண்டும். அதற்கு அவர்கள் நவீன விழுமியங்களை ஏற்க வேண்டும். சுதந்திர சிந்தனை கொண்ட பெண்களை நிர்வாகங்கள் உயர்பதவிகளில் அமர்த்துவது மேற்குறிப்பிட்ட பிரச்சனையின் தீவிரத்தை குறைக்க உதவும். ஒரு பக்கம் ஏற்கனவே வேலையில் உள்ள சர்வாதிகார பெண் உயரதிகாரிகளுக்கு பக்குவம் ஏற்படுத்தும்படியான மேலாண்மை பட்டறைகளை நிர்வாகங்கள் நடத்த வேண்டும். கீழுள்ள ஆண் பெண்களை கனிவாக நடத்தி அடிப்படை மரியாதை நல்கியே கூட கட்டுப்படுத்த முடியும் என்பதை கற்பிக்க வேண்டும். இந்த அடிப்படை அறத்தை நிறுவன விதிகளில் ஒன்றாக வலியுறுத்த வேண்டும். பெண்களை வேலைக்கு தேர்வு செய்யும் போது அவர்களுக்கு உளவியல் தேர்வு வைத்து அவர்களது ஆளுமையை அளவிடுவதும் உதவும்.

ஆண்கள் உலகை ஆண்டதால் தான் இத்தனை போர்கள், வன்முறை, உயிரிழப்புகள் என்று பெண்ணியவாதிகள் இதுவரை பேசி வந்தார்கள். ஆனால் இப்போது பெண்கள் விடுதலை பெற்று ஒரு சின்ன அளவில் உயரதிகாரி நிலையை அடையும் போது பிற பெண்கள் அவர்களிடம் இருந்து தலைதெறிக்க ஓடித் தப்ப பார்க்கிறார்கள். இன்று இந்தியாவை ஆளும் ஒரு பெண் மிகக் குரூரமாக ஈழப்போரை நடத்தி லட்சோபலட்சம் மக்கள் கொன்று அதைப் பற்றி எந்த அக்கறையும் குற்றவுணர்வும் இன்றி இருக்கிறார். ஜெயலலிதா இங்கு அவிழ்த்து விட்ட சர்வாதிகாரத்தை, இரக்கமின்மையை பார்த்தோம். ஆக ஆண்மை அளவுக்கு பெண்மையும் ஆபத்தானது தான்.

இனி இந்த உலக சமூகத்துக்கு ஆண்மையும் பெண்மையும் மிகாதவர்கள் தேவைப்படுகிறார்கள். அவர்களால் தான் மற்றொரு உலகப்போரை தடுக்கவும் மானுட அறத்தை தக்க வைக்கவும் முடியும்.

Read More

Thursday, 11 October 2012

கல்லூரியில் இறுதி நாள்




நேற்று தான் அந்த நாள். முதல் கல்லூரி வேலையில் இருந்து வேண்டாவெறுப்பாக விலகும் நாள்.
மாணவர்களிடம் இறுதி வகுப்பு முடிந்து மணியடித்த பின்பான இறுதி சில நொடிகளில் தான் இனி வரமாட்டேன் என சொன்னேன். குரலை வறட்சியாக்கிக் கொண்டு மனதை சமநிலைப்படுத்திக் கொண்டு கண்களை வேறு திசையில் வைத்துக் கொண்டு சொன்னேன். அவர்கள் பெரும்பாலும் “ஏன் சார் போறீங்க?” என்று தான் கவலையாக கேட்டார்கள். “போக வேண்டிய நிலைமை” என்று மட்டும் தான் சொல்ல முடிந்தது. எனக்கு மிகவும் பிடித்தமான வகுப்புகளை விட்டு இறுதியாக பிரியும் போது ஒரு விபத்தை சந்திக்கும் முன்னான அந்த சில நொடிகளை போலத் தான் இருந்தது.
“நீங்க போகாதீங்க. இருங்க” என மாணவர்கள் உருக்கமாக வந்து சொன்னார்கள். ஆசிரிய வேலை என்பது வெறும் ஒரு பணி அல்ல, அது ஒரு பந்தம் என எனக்கு புரிந்தது. கல்வியையும் சார்பையும் கடந்து ஒரு பாத்தியதை அது. பொதுவாக நான் மாணவர்களிடம் உணர்ச்சிகரமாக உறவாடுவதில்லை. ஒரு ஆரோக்கியமான இடைவெளி வைத்துக் கொள்வேன். அதையும் மீறி சிலர் நெருக்கமாகும் போது நண்பர்களாக்கிக் கொள்வேன். அவர்களையும் பிறரிடம் நண்பன் என்றே அறிமுகப்படுத்துவேன். இவ்வளவு அன்பைப் பெற உண்மையில் என்ன தான் செய்தேன் என நேற்று வியந்தேன். உண்மையில் அன்பைப் பெற நாம் அன்பை நேரடியாக தர வேண்டியதே இல்லை. வேறு எத்தனையோ கண்காணா முறைகளில் அன்பு செலுத்தப்பட்டு வாங்கப்படுகிறது. அதனாலே அன்பு நம்மை நெகிழவும் கோபாவேசம் கொள்ளவும் வைக்கிறது.
மாணவர்கள் தங்கள் சக்திக்கு மீறின பரிசுகளை கொண்டு வந்து தந்தார்கள். எனக்கு வாழ்வில் கிடைத்த மிக உயர்ந்த பரிசுகளாக அவற்றை நினைக்கிறேன். ஒரு மாணவி நீண்ட நாலுபக்க கடிதம் ஒன்றை பரிசுடன் இணைத்திருந்தாள். பரிசை விட எழுத்து பெரிது; அதன் வழி அவளது இதயத்தை பறித்து தருவதாகவே நினைத்துக் கொண்டேன்.
ராஜினாமா கொடுத்த பின்னான இந்த ஒரு மாதமும் நான் மிக இயல்பாக இருக்க முயன்றேன். ஆனால் இறுதி இரு நாட்கள் மனம் மிகவும் சோர்வுற்றுப் போனது. தொடர்ந்து எதிலும் அது தங்கவில்லை. எதையெதையோ யோசித்து எதையும் சரியாய் கவனிக்காமல் இருந்தேன். துக்கத்தை மறைக்க முயன்றதாலோ ஏனோ அது என்னை மிகவும் பாதித்தது. போகும் வழியில் வண்டி பெட்ரோல் இன்றி நின்று விட்டது. பெட்ரோல் காலியானதை கூட கவனிக்க முடியாதபடி மனம் கலங்கிப் போயிருந்தது.
கல்லூரி போன்ற எந்த நிறுவனத்தின் கீழுள்ள வேலையும் எனது அசலான அடையாளமல்ல என நிஜமாக நம்பினேன். அதனாலே இந்த வேலை மாற்றத்தை சகஜமாக எடுத்துக் கொள்ள முயன்றேன். எந்த வேலையும் ஒன்று தான், அற்பமானது தான் என எனக்குள்ளே மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டேன். ஆனால் அடிப்படையில் நான் மனிதன்; மனிதர்களுடனான உறவு மிகவும் முக்கியமானது, ஆசிரிய வேலை என்பது மனித உறவுகளின் பெரும் வலைப்பின்னலின் மையத்தில் இருப்பது என்பதை என்பதை புரிந்து கொள்ள தவறி விட்டேன்.
மனிதர்களைப் பிரிவது என்பது விபத்தில் ஒரு அங்கத்தை இழப்பது போல; கோமாவில் சில நாட்களை, மாதங்களை மறப்பது போல. அதற்கு நிவர்த்தியே இல்லை.
இறுதி நாள் அன்று எனக்கு அக்கல்லூரியில் எனது முதல் வேலை நாள் நினைவு வந்தது. ஏற்கனவே நான் படித்த கல்லூரியில் நான் ஊனமுற்றவன் என்று காரணம் காட்டி வேலை மறுத்த நிலையில் நான் இக்கல்லூரிக்கு சென்று துறைத்தலைவர் திருமதி.ரோஸலிண்டை பார்த்தேன். அவரிடம் ஒன்றே ஒன்று சொன்னேன்: “எனக்கு வேலை அனுபவம் இல்லை; ஆனால் மிகுந்த விருப்பமும் பற்றும் இவ்வேலையில் உள்ளது. ஒரு வாய்ப்பு தாருங்கள்”. அவர் என் கண்களை மட்டுமே புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்தார். பிறகு ஒரு வகுப்புக்கு சென்று பாடமெடுக்க சொன்னார். வகுப்பு முடியும் தறுவாயில் அவர் வந்து இறுதி பெஞ்சில் அமர்ந்து கவனித்தார். சில ஆலோசனைகள் சொன்னார். அடுத்து சில வகுப்புகளுக்கு போக சொன்னார். இவ்வாறு நான் வேலை கேட்டுப் போன அன்றே என் முதல் வேலை நாளும் துவங்கியது. அன்று day order 1. நேற்று நான் வேலையில் இருந்து பிரியும் போதும் day order 1 தான். அன்று போன அதே வகுப்புகளுக்கு திரும்பவும் போய் வந்த போது ஏதோ முதல் நாள் கல்லூரியில் இருப்பது போல இருந்தது.
ஒரு மாணவன் ஒரு சிறு பரிசை கையில் வைத்து அழுத்தி விட்டு என்னை ஏன் பிடிக்கும் என்பதற்கு ஒரு காரணம் சொன்னான்: “நீங்க மட்டும் தான் எங்களைப் பார்த்து கத்த மாட்டீங்க. எப்பவும் அமைதியா வகுப்பில் நடந்துப்பீங்க”. இதை நான் என்றுமே பொருட்டாகவே நினைத்ததில்லை; மேலும் மற்றவர்கள் மாணவர்களை கடிந்து கொள்வார்கள் என்றும் எனக்குத் தெரியாது. கடிந்து கொள்வது கூட அன்பால் அக்கறையால் இருக்கலாம். ஆனால் ஒருவருக்கு நம்மை ஏன் பிடிக்கிறது என்பது இது போல் விநோதமான பல காரணங்கள் இருக்கக் கூடும். அந்த பட்டியலில் நாம் முக்கியமாக கருதுபவை இருக்காமல் போகலாம்.
எனக்கு மாணவர்களை பிடிப்பதற்கு இதுவும் ஒரு காரணம். அவர்கள் அன்புக்கு மரியாதைக்கு ஏங்குகிறார்கள். அதை வெளியே சொல்ல நம்மைப் போல் அவர்களுக்கு எந்த தயக்கமும் இல்லை.
Read More

Monday, 8 October 2012

மிஷ்கினின் “முகமூடி”: நன்மை தீமையின் எதிர்தரப்பு அல்ல



Non-telegraphic Fighting
மிஷ்கினின் “சித்திரம் பேசுதடி” படத்தில் சண்டைக்காட்சிகள் சற்று விநோதமாய் இருந்ததை கவனித்திருப்பீர்கள். முதல் சண்டை ஒரு கழிப்பறையில். நரேன் தன்னை நோக்கி வரும் எதிரிகளிடம் எந்த எதிர்வினையையும் உடல்மொழியில் காட்டாமல் சட்டென்று அசட்டையாக அடித்து விட்டு இடையே தன் ஷூ லேஸை வேறு கட்டுவார்.
“அஞ்சாதேயில்” ஆஸ்பத்திரியில் கிடக்கும் ரௌடியை கொல்ல வரும் கொலைகாரர்களை நோக்கி துப்பாக்கி ஏந்தி நடுங்கி நிற்கும் நரேன் “சரி வாங்கடா” என்று துப்பாக்கியை உதறிவிட்டு அசையாது ஒரே இடத்தில் நின்று கைகளாலே படுவேகமாக சண்டையிடுவார். இந்த சண்டையிலும் மிஷ்கினின் நாயகனிடம் தனித்து தெரியும் ஒரு பண்பு அவரது அசராத உடல்மொழி. தான் நிற்கும் பாணி அல்லது கையை ஓங்கும் விதம் கொண்டு தனது திட்டம் என்ன என்பதை அவர் எதிரிக்கு தெரிவிக்கவே மாட்டார். உண்மையில் அவருக்கு திட்டமே இல்லை. எதிரியின் ஒவ்வொரு அசைவுக்கும் ஏற்ப அவர் வளைந்து கொடுத்து அடிப்பார்.
”முகமூடியில்” முதல் சண்டைக் காட்சி ஒரு குங் பூ போட்டித் தொடரில் வருகிறது. அதில் நீலத் தலைக்கட்டு அணிந்தவன் எவ்வித குறிப்பிட்ட நிலையமைதியும் கொள்ளாமல் நிதானமாக நிற்கிறான். ஆனால் எதிராளி சின்ன பதற்றத்துடன் வேகமான காலாட்டத்துடன் அவனை நோக்கி முன்னேறுகிறான். அவனது காலாட்டத்தைக் கொண்டு அவனது நோக்கம், திட்டம் ஆகியவற்றை ஊகித்து நீலத் தலைக்கட்டுக்காரன் எளிதில் அவன் இயங்கும் வேகத்தை பயன்படுத்தி அவனையே வீழ்த்தி கோப்பையை வெல்கிறான். இந்த போட்டி ஆரம்பிக்கும் முன்னே ஜீவாவின் குங் பூ ஆசான் நீலத் தலைக்கட்டு தான் வெல்லப் போகிறான் என்று எளிதில் கணித்து விடுகிறார். “அது எப்படி sparring (விளையாட்டு மோதல்) ஆரம்பிக்கவே இல்லையே மாஸ்டர்” என்று அவரது மாணவன் வினவ அவர் “ஸ்பேரிங் முடிஞ்சிருச்சு. அவனோட stanceஐ (நிலையமைதி) பாரு” என்று சுட்டுகிறார். இப்படியான சண்டை முறையை புரூஸ் லீ non-telegraphic fighting என்கிறார். அதாவது தன் உத்தேசத்தை இறுதி நொடி வரை தெரிவிக்காது தாக்குவது. மாஸ்டர் சொல்லுவது non-telegraphic நிலையமைதி கொண்டுள்ள நீலத் தலைக்கட்டுக்காரன் முன் தீர்மானம் இன்றி அமைதியுடன், தன்னை வெளிப்படுத்தாது உள்ளதால் அவனுக்கு அனுகூலம் அதிகம்; அவனது வெற்றி அங்கேயே தீர்மானமாகி விட்டது என்பது.
மேலும் மேற்சொன்ன மிஷ்கின் பட சண்டைக்காட்சிகளில் நாயகன் முன்னே பின்னே தாவியோ ஆவேசமாய் ஓடி வந்து உதைத்தோ நாம் காணமுடியாது. முடிந்தவரை நின்ற நிலையில் தனது உடலின் மையக்கோடு எனப்படும் ஒரு கற்பனைக் கோட்டை பாதுகாத்தபடி சண்டையிடுவதை காணலாம். இது புரூஸ் லீ பயின்ற விங் சுன் குங் பூ தன் அடிப்படை விதியாக கொண்டுள்ளது. இதனாலேயே விங் சுன்னில் எந்த ஒரு கோணத்தில் இருந்து வரும் தாக்குதலையும் தடுப்பது சுலபமாகிறது. விங் சுன்னில் நம்மைச் சுற்றி ஒரு கற்பனை சதுரம் வரைந்து கொள்ள வேண்டும்; அதை நான்கு கட்டங்களாக பிரிக்க வேண்டும் – இடது மேல் கட்டம், வலது மேல் கட்டம், இடது கீழ் கட்டம், வலது கீழ் கட்டம். இந்நான்கையும் பாதுகாப்பதே பிரதான அக்கறை. சண்டையின் போது இந்த சதுர விளிம்பைத் தாண்டி குத்தவோ உதைக்கவோ கூடாது. விங் சுன்னில் (மிஷ்கினின் சண்டைக்காட்சிகளிலும்) நாம் காணும் அளவான அசைவுகளுக்கு இதுவே காரணம். மிஷ்கினின் முதல் படம் தற்காப்புக் கலை படம் அல்ல. ஆனால் தன் ஆரம்பப் படம் தொட்டே தமிழில் இம்மாதிரியான சண்டை முறையை அறிமுகம் செய்து வந்துள்ளார். இதன்வழி மிஷ்கின் இந்திய சினிமா சண்டைக் காட்சியமைப்பிற்கு புது வண்ணமும் அணுகுமுறையும் அளித்துள்ளார்.
இதே போன்று எதிரியை தன் அருகாமைக்கு வரும்படி தூண்டி இழுத்து தாக்குவதும் விங் சுன்னில் முக்கியம். இந்த உத்தியும் மிக்‌ஷ்கினின் படங்களில் அற்புதமாக சித்திரிக்கப்பட்டுள்ளதை காணலாம். குறிப்பாக மேற்சொன்ன போட்டி சண்டையில் நீல தலைக்கட்டிக்காரன் தன் எதிராளியை முதலில் உதைத்து நிலைகுலைய வைப்பார். சரி இனி பக்கத்தில் போய் தாக்கலாம் என்று எதிராளி நெருங்கி வருவான். இதை எதிர்பார்த்திருந்த நீல தலைக்கட்டுக்காரர் நெஞ்சில் படபடவென சைக்கிள் பெடல் சுற்றுவது போல விங் சுன் பாணியில் குத்தி சாய்க்கிறார். விங் சுன்னில் உதையை விட குத்து தான் வலிமையான ஆயுதம். ஆக எதிராளியை அருகே தந்திரமாக வரவழைக்க வேண்டும். அதைத் தான் இவரும் செய்கிறார். மேற்சொன்ன இந்த சண்டை யுக்தி Enter the Dragonஇல் வரும் முதல் சண்டைக் காட்சியை ஒத்துள்ளது. காப்பி என்று சொல்லவில்லை. தூண்டுதல் எனலாம். அவர் அணிந்திருக்கும் கறுப்பு ஆடை கூட லீ அப்படத்தில் அணிவதே. அதை விட முக்கியமாய் இடது காலை சற்றே மடித்து முன் எம்பி குதிகாலில் ஊன்றியபடி பின்னங்காலை நேராக வைத்து நிற்கும் நிலையமைதி நாம் புரூஸ் லீயிடம் பொதுவாக காண்பது தான். ஆனால் முகமூடி படத்தின் இச்சண்டைக் காட்சியில் ஒரு சின்ன தவறு உள்ளது. இந்நிலையமைதியின் அனுகூலம் அது எந்நேரமும் பின்னே சென்று ஒரு உதையை தவிர்க்கவோ முன்னே போய் வளைத்து நிற்கும் காலைக் கொண்டு தலைப்பகுதியில் ஒரு உதையை கொடுக்கவோ எளிதாக அனுமதிக்கிறது என்பது.

ஆனால் இக்காட்சியில் சண்டையிடுபவர் இடது காலில் முன்னே ஊன்றியபடி நின்றாலும் அதனைக் கொண்டு உதைக்காமல் சிரமப்பட்டு வளைந்து வலது காலால் உதைக்கிறார். இப்படத்தின் சண்டைக் காட்சி அமைப்பாளர் டோனி லுங் சு ஹுங் “இப்மேன்” போன்ற பிரபல படங்களுக்கு காட்சி அமைத்தவர். நாம் இதற்கு முன் பிரதானமாக குங் பூ சண்டைகளை பார்த்தது “ஆறாம் அறிவில்” தான். அச்சண்டைகள் எவ்வளவு மிகையானவை என்பதை நாம் ”முகமூடியுடன்” ஒப்பிட்டு அறிந்து கொள்ளலாம். டோனி லுங் முடிந்தவரை எதார்த்தமாக சண்டைகளை அமைத்துள்ளார். நமது அழுகாச்சி எதார்த்தவாத படங்களில் கூட சண்டைகளில் மனிதர்கள் அந்தரத்தில் பறப்பார்கள். முகமூடியில் சண்டைகள் ஆர்வமூட்டுவதற்கு இந்த எதார்த்தமும் டோனி லுங் கொண்டு வந்துள்ள வேகமும் காரணம். அர்ஜுனின் சண்டைகளில் கூட அசைவுகள் நாம் அரைத்துக்கத்தில் பார்க்கும் வேகத்தில் தான் இருக்கும். ஆனால் முகமூடியில் சண்டைகள் கண்ணிமைத்தால் தவறிப் போகும் வேகத்தை கொண்டுள்ளன. டோனி யுங் கற்பனாபூர்வமாக புத்திசாலித்தனமாக சண்டைகளை சித்தரித்துள்ளார். ஆனால் Enter the Dragon அல்லது குங் பூ ஹஸில் போன்ற படங்களில் நாம் காணும் நளினம் இப்படத்தின் சண்டைகளில் இல்லை. அதற்கு ஒரு முக்கியமான காரணம் நமது படத்துறையில் சண்டைப் பயிற்சி பெற்ற நடிகர்கள் அநேகமாக இல்லை என்பது. புரூஸ் லீயும் ஸ்டீபன் சௌவ்வும் மட்டுமல்ல அவர்களின் படங்களில் நடித்த சண்டை நடிகர்கள் அனைவருமே வருடக்கணக்காய் குங் பூ பழகியவர்கள். அங்கு சண்டைப்படம் எடுப்பது போல் இங்கு எடுப்பது கிட்டத்தட்ட இயலாத காரியம். இங்கு மாதக்கணக்காய் முக்கிய நடிகர்களுக்கு அரிச்சுவடியில் இருந்து கற்றுத்தர வேண்டும். “முகமூடி” சண்டைகளின் முக்கிய பலவீனம் இது தான். உதாரணமாக ஜீவாவை எடுத்துக் கொள்வோம். அவருக்கு ஏற்கனவே குங் பூ பயிற்சி உள்ளதாக விஜய் டி.வி பேட்டியில் சொல்கிறார்கள். ஆனால் அதே பேட்டியில் ஜீவா விங் சுன்னின் பிதாமகர் புரூஸ் லீ என்று சொல்கிறார். அவருக்கு விங் சுன்னை ஒரு பயிற்சி முறையாக ஒழுங்குபடுத்தி உலகம் முழுக்க போட்டிகள், பள்ளிகள் மூலம் பிரபலப்படுத்தியது இப்மேன் என்று தெரியவில்லை. படத்தில் ஒரு காட்சியில் ஜீவா காற்றில் குத்தி பயிற்சி எடுப்பது வருகிறது. தற்காப்புக்கலையில் முதலில் இதைத் தான் சொல்லித் தருவார்கள். இந்த பயிற்சியில் கூர்மை தான் பிரதானம். காற்றில் ஒரே புள்ளியில் இரு கைகளால் தொடர்ந்து குத்த வேண்டும். நான்கு நாள் பயிற்சி எடுத்தவர்களாலே கண்ணை மூடிக் கொண்டு இதை சாதிக்க முடியும். ஆனால் ஜீவா குத்தும் போது ஒரு கை மேற்கேயும் இன்னொரு கை கிழக்கேயும் போகிறது. ஜீவாவுக்கு விஷயம் தெரியுமோ இல்லையோ இவ்வளவு தான் நுட்பமான விபரங்களில் ஆர்வம். நரேன் தன் சீடர்களுக்கு பயிற்சி அளிக்கும் ஒரு காட்சி வருகிறது. அப்போது அவரது அசைவுகள் நடுக்கமாக “சங்கமம்” படத்தில் விந்தியா நாட்டியம் ஆடுவது போல் உள்ளது. ஆனால் முக்கியமான சண்டைக்காட்சிகளில் இருவரும் ஓரளவு நன்றாகவே செய்துள்ளார்கள். இதற்கு நாம் டோனி லுங்ஙை தான் பாராட்ட வேண்டும். இன்னொன்று படத்தொகுப்பு. வெட்டி வெட்டி ஒட்டுவதன் மூலம் நடிகர்களின் சண்டை தத்தளிப்புகளை மறைத்து விடுகிறார்கள். ஆனால் இதுவே ஒரு குறையாகவும் உள்ளது. புரூஸ் லீ உள்ளிட்ட சிறந்த சண்டை நடிகர்களின் படங்களில் நம்மை பெரிதும் கவர்வது நீண்ட வெட்டுகள் இல்லாத சண்டைகள். வெட்டி ஒட்டப்பட்ட சண்டைகள் சிறிது நேரம் பிரமிக்க வைத்தாலும் நம்மை பெரிதாய் கவர்ந்து மனதில் தங்குவதில்லை – ஏனெனில் அவற்றில் எதார்த்தம் இல்லை.
ஜீத் கூன் டு: எளிமையும் நுட்பமும்
மேற்சொன்ன நீலத் தலைக்கட்டு வீரனுடன் ஜீவா மோதும் காட்சி ஒன்று வருகிறது. இச்சண்டையில் டோனி லுங் இன்னொரு படி போய் புரூஸ் லீயின் ஜீத் கூன் டு சண்டைத்தத்துவத்தின் சில உத்திகளை பயன்படுத்துகிறார். ஜீத் கூன் டூவில் ஆர்ப்பட்டமான சிக்கலான உத்திகளை விட நடைமுறையில் உதவும் எளிய அடவுகளே முக்கியம். உதாரணமாக தெருச்சண்டையில் ஒருவர் நம் கையைப் பற்றுகிறார் என்றால் ஜூடோ ஸ்டைலில் அவரைச் சுற்றி வளைத்து தூக்கி எறியவெல்லாம் வேண்டியதில்லை. அவரது காலை சட்டென்று மிதித்து அவர் சீர்குலைந்து தன்னெழுச்சியாக கீழே குனிகையில் முழங்காலால் மிதிக்கலாம். அதே போல் ஒருவர் குத்த வந்தால் சட்டென்று வலப்பக்கம் விலகி நின்று குத்தை தவிர்த்து அதே வேளையில் அவரது விலாவிலும் குத்தலாம். இதை சந்தையில் நடக்கும் மற்றொரு சண்டைக்காட்சியில் ஜீவா செய்கிறார்:


கீழ் வரும் மற்றொருகாட்சியில் ஜீவா தன்னை உதைக்கும் எதிராளியை சற்று விலகி நின்று எளிதில் தடுப்பதை பாருங்கள். இதன் மூலம் எதிராளியை விசையை உள்ளே வர அனுமதித்து உதையை பலவீனமாக்குகிறார் ஜீவா.

ஜீவாவின் வலது கை/காலுக்கு உதைப்பவரின் கால்களுக்கு இடையிலுமான ஒரு திறப்பு இருப்பதை பாருங்கள். கற்பனையில் ஒரு அம்பு இழுங்கள். புரூஸ் லீ இந்த சந்தர்ப்பத்தில் என்ன செய்வார்? விதைப்பையில் உதை, அல்லது வலது காலை மடித்து அமர்ந்து விதைப்பையில் ஒரு குத்து. ஆனால் டோனி லுங் நளினம், நாகரிகம் கருதி இப்படியான உத்திகளை மட்டும் இப்படத்தில் தவிர்த்து விட்டார் எனலாம்.
ஒரு அங்குலக் குத்து
ஜீவாவின் ஆசானான சந்துருவுக்கும் வில்லன் அங்குசாமிக்கும் இடையிலான சண்டை மிக அழகாக வந்துள்ளது. சந்துருவாக வரும் செல்வா ஜீவாவை விட லகுவாக வேகமாக கூர்மையாக சண்டையிடுகிறார். குறிப்பாக இச்சண்டையில் விங் சுன் குங் பூவின் முக்கிய அடவான ஒட்டும் கரங்கள் முறையை (sticking hands) பார்க்கலாம். ஒட்டும் கரங்கள் என்பது மிக அருகாமையில் நின்று குத்துவது. குத்தியபடியே தனது தற்காப்பை தக்க வைப்பது. இதில் நிபுணத்துவம் உள்ளவர் மீது எந்த திசையில் இருந்து குத்தினாலும் படாது. அது மட்டுமல்ல இப்பெயர் குறிப்பது போல எதிராளியின் கைகளை தம் கைகளோடு ஒட்ட வைப்பது போல் கட்டுப்படுத்த இதில் முடியும். இச்சண்டைக் காட்சியிலும் இறுதிச் சண்டைக் காட்சியிலும் புரூஸ் லீ பிரபலப்படுத்திய ஒரு அங்குலக் குத்து வருகிறது. குத்தும் போது முழங்கை, தோள், இடுப்பு ஆகிய பகுதிகள் ஒரே தருணத்தில் பொருந்தி முன்னேகுவதன் மூலம் ஒரு அங்குல அண்மையில் இருந்து பெரும் விசையுடன் குத்துவதே இந்த பாணி. புரூஸ் லீ இதன் மூலம் பலரை நிஜவாழ்க்கை செயல்விளக்கங்களின் போது பறக்க விட்டிருக்கிறார். ஒரு அங்குலக் குத்தின் போது முதலில் முன்னங்கை சற்று வளைந்தபடி இருக்க வேண்டும். இலக்கை தொடும் அக்குறிப்பிட்ட நொடியில் சட்டென்று நிமிர வேண்டும். இப்படத்தின் கிளைமேக்ஸ் காட்சி சண்டையில் வரும் ஒரு அங்குலக் குத்தை கூர்ந்து கவனிப்பவர்கள் ஜீவாவின் முன்னங்கை சரியான நிலையில் இருப்பதை காணலாம். டோனி லுங் இப்படியான சின்ன சின்ன விசயங்களில் கூட மிகுந்த கவனம் காட்டி இருக்கிறார்.

நேர்கோட்டுக் குத்தின் ஆற்றலும் அறிவியலும்
படத்தில் வரும் குத்துகளின் போது முஷ்டியின் அமைப்பில் ஒரு வேறுபாட்டை தொடர்ந்து நாம் காணலாம். அதாவது பொதுவாக நாம் குத்தும் போது முஷ்டி பக்கவாட்டில் இருக்கும். ஆனால் கீழ்வரும் படத்தில் ஜீவாவின் முஷ்டி நேர்கோட்டில் இருப்பதை பாருங்கள். இது தான் விங் சுன்னின் நேர்கோட்டு குத்து (straight-line punch).

வழமையான குத்தில் (அதாவது மரபான குத்துச்சண்டையில் நாம் பார்க்கும் reverse punch) நமது பெருவிரல் மற்றும் சுட்டு விரலின் கணுக்கள் தாம் தாக்க பயன்படுவன. ஒருமுறை உங்கள் பாணியில் காற்றில் குத்தி பாருங்கள். முஷ்டியின் அழுத்தம் பெரு மற்றும் நடுவிரல் கணுக்களில் தான் இருக்கும். ஆனால் இந்த reverse punch பாணியில் உங்கள் கைக்கு நிலைப்பு மற்றும் சமநிலை இராது. ஏனென்றால் அறிவியல்படி நேர்கோட்டில் முஷ்டி இருக்கையில் தான் நமது நமது முழங்கை உடலின் புவியீர்ப்புக் கோட்டின் ஒழுங்குக்கு வருகிறது. இதனால் குத்தும் போது கை தனியாக உதறாமல் உடலின் மொத்த பளுவும் அதில் பாய்ந்து அபாரமான ஆற்றல் கிடைக்கிறது. மேலும் கையின் மேல் இரு விரல்களை விட கீழ் மூன்று விரல்களைத் தாம் முழங்கை அதிக வலுவுடன் தாங்குகிறது என்கிறது அறிவியல். இதனால் தான் விங் சுன்னில் குத்தும் பாணி வேறாக நேர்கோட்டில் இருப்பதுடன் விங் சுன் தாக்குவதற்கு கீழ்மூன்று விரல் கணுக்களை பயன்படுத்துகிறது. இந்த நுட்பமான விபரம் கூட இப்படத்தின் சில காட்சிகளில் கவனமாக கொண்டு வரப்பட்டுள்ளது.
ஒரு கராத்தே குழப்பம்
நம்மூரில் கராத்தே தான் அதிக பிரபலம். யார் பெல்ட் கட்டி ஊ ஹா என்று பயின்றாலும் கராத்தே என்று நினைப்பார்கள். “முகமூடியில்” இந்த பொதுப்புத்தி குறித்த நக்கல் பட இடங்களில் வருகிறது. கராத்தே ஜப்பானிய வடிவம். குங் பூ சீனாவில் தோன்றியது. குங் பூ சீனாவில் இருந்து ஜப்பானுக்கு சென்றது (குங் பூவே இந்தியாவில் இருந்து சீனாவுக்கு சென்றது என்றும் கூறுகிறார்கள்). ஆனால் இம்மூன்றில் கடைசியாக தோன்றிய கராத்தே தான் அதிக பிரபலமானது. இரண்டாம் உலகப்போரின் போது ஜப்பானில் சென்று முகாமிட்ட அமெரிக்க ராணுவ வீரர்கள் மூலம் அமெரிக்காவுக்கும் அங்கிருந்து ஐரோப்பா எங்கும் கராத்தே பரவியது. அறுபதுகளில் கராத்தேவின் ஆதார வடிவமான குங் பூவை அது ஏதோ சீன உணவு என்கிற வகையில் தான் அமெரிக்கர்கள் அறிந்து வைத்திருந்தார்கள் என்கிறார் புரூஸ் லீ. மேலும் சீனர்கள் வேற்றினத்தவர்களுக்கு குங் பூ சொல்லித்தர மறுத்ததால் அது ஒரு மியூசியப் பொருள் போல மாறியது. குங் பூவை உலகமெங்கும் பிரபலப்படுத்தியதில் புரூஸ் லீக்கும் கிக் பாக்ஸ்ங் எனப்படும் அமெரிக்காவில் பிரபலமான சண்டைப் போட்டிகளுக்கும் முக்கிய பங்குண்டு.
கராத்தேவுக்கும் குங் பூவுக்கும் பிரதான வேறு பாடு என்ன? தற்காப்புக்கலைகளை மென்மை, வன்மை என்று பிரிக்கிறார்கள். குங் பூ மென்வகை. அது மனதை தியான நிலையில் திரட்டுவதன் மூலம் அபாரமான ஆற்றலை வெளிப்படுத்த முடியும் என வலியுறுத்துகிறது. அதாவது தசை வலு அல்ல உள்ளார்ந்த மன ஆற்றல் தான் முக்கியம் என்கிறது. அடுத்து தாக்குதலின் போது எவ்வித முன் தீர்மானமும் இன்றி இருக்கும் படி வலியிறுத்துகிறது குங் பூ. கராத்தே ஒரு எதிரி மூர்க்கமாக குத்தும் போது அதே அவேசத்துடன் அதைத் தடுத்து குத்த கூறும். ஆனால் குங் பூ அவனது குத்துக்கு வழி விட்டு அவன் தன் சமநிலையை இழக்கும் தருணத்தில் தாக்க அறிவுறுத்தும். அப்போது அவனது முன் நோக்கிய திணிவு வேகம் (momentum) நமது குத்தின் வலிமையை இரட்டிப்பாக மாற்றும். உலகக்கோப்பையின் போது ஷோயப் அக்தரை சேவாக் மேல் வெட்டின் மூலம் அவரது வேகத்தைக் கொண்டே சிக்ஸர் அடித்ததைப் போன்றது இந்த யுக்தி.
யின் யாங் தத்துவமும் தீமை பற்றிய புரிதலும்
இன்னொரு புறம் இந்த யுக்தி யின்-யாங் தத்துவத்தின் சாரத்தை சித்தரிக்கிறது. யின் என்பது இருண்மை, நெகிழ்வற்றது, தீமை என எதிர்மறை பண்புகளை குறிக்கிறது. யாங் வெளிச்சத்தை, நெகிழ்வை, நன்மையை குறிக்கிறது. சீன தத்துவம் நன்மை தீமை இரண்டும் வேறுவேறல்ல; ஒன்று இல்லாமல் இன்னொன்றை நாம் அறியவோ அடையவோ முடியாது என்கிறது. தீமையை உறிஞ்சி தான் நன்மை வளர்கிறது. ஆக தீமையை அழிக்க நினைப்பவர்கள் தோற்பார்கள். தீமையை செரித்து வளர்பவர்கள் மட்டுமே அதைக் கடந்து நன்மையை அடைவார்கள். அதனால் தான் வாழ்வை எதிர்ப்பதை விட நெகிழ்வுத்தன்மையுடன் இருப்பது முக்கியம் என்கிறது யின்–யாங் தத்துவம்.
தீமை மேலெழும் சந்தர்ப்பம் வரும் போது அதனை ஏற்று அமைதி காத்து விட்டு தீமை வீழும் சந்தப்ர்பம் வரும் போது மட்டும் அதனை எதிர்கொண்டு முறியடிக்க வேண்டும். வாழ்வில் நமது பங்கு பங்கெடுப்பது மட்டுமே; வாழ்வை யாரும் கட்டுப்படுத்துவதோ மாற்றியமைப்பதோ இல்லை என்பது ஒரு ஜென் அணுகுமுறை. இதே போல் குங் பூவிலும் எதிராளி முன்னேகி தாக்கையில் அவனை தடுப்பது நமக்கு ஊறு விளைவிக்கவே செய்யும். தீமையை நாம் அனுமதிப்பது போல் எதிராளியையும் முன்வர அனுமதிக்கிறோம். தீமையை உண்டு செரிப்பது போல் எதிராளியை அவனது வலிமையை கொண்டே வீழ்த்துவோம் என்கிறது குங் பூ. ஒரு குங் பூ நிபுணன் வாலியை போன்றவன். எதிரில் நிற்பவனின் பாதி வலு அவனுக்கு வந்து விடும். சண்டையின் போது அவனும் எதிராளியும் வேறு வேறல்ல. புரூஸ் லீயுடன் சண்டையிடும் போது நமது கரங்களையும் சேர்த்து அவர் கட்டுப்படுத்துவார் என்பார் அவரது சீடரான ஜெஸ்ஸி குளோவர். எதிரியை தன் பகுதியாக மாற்றி ஏற்பவனுக்கு இரண்டல்ல, நான்கு கரங்கள்!
ஒரு தற்காப்புக்கலை படமாக முகமூடியின் முக்கியத்துவம்
பொதுவாக தமிழ் சினிமாவில் கராத்தே, குங் பூ போன்ற சண்டைக்கலைகளின் பாதிப்பு நேரடியாகவும் மறைமுகமாகவும் இருந்துள்ளது. ஆனால் மிஷ்கினிடம் மட்டுமே குங் பூ கலையின் தத்துவம் அதன் நுட்பங்களுடன் புரிதலுடன் வெளிப்படுகிறது. அவரது சமீபத்திய “முகமூடி” இதற்கு முழுமையான உதாரணமாக உள்ளது. புரூஸ் லீயின் ஜீத் கூன் டு சண்டைத் தத்துவம் பற்றின அவதானிப்புகள் படமெங்கும் வருகின்றன. இப்படத்தை புரூஸ் லீ மீதான ஒரு homage என்றே சொல்லலாம். தமிழில் இதை செய்யத் தகுதியான ஒரே இயக்குநராகவும் மிஷ்கின் இருக்கிறார். இதுவரையிலான மிஷ்கினின் படங்களின் சண்டைக் காட்சிகளில் நாம் பார்த்த புரூஸ் லீ பாதிப்பு வெறும் விநோதத்துக்காக மணிரத்னம் பாணி முயற்சிகள் அல்ல என்பதை முகமூடி தெளிவாகவே காட்டி விடுகிறது.
“முகமூடி” ஒருவகை தமிழ் பேட்மேன் என்று தான் ஊடகங்களில் பொதுவாக சித்தரிக்கப்பட்டது. படத்தின் திரைக்கதை பாணி பெரிதும் பேட்மேனை நினைவு படுத்துகிறது தான். வில்லனான அங்குசாமியின் (நரேன்) பாத்திரம் கூட ஹீத் லெட்ஜரின் ஜோக்கரை நினைவுபடுத்துகிறது. இது இப்படத்தின் ஒரு இழை மட்டும் தான். இன்னொரு பக்கம் இப்படம் புரூஸ் லீயின் Fist of Fury, Enter the Dragon போன்ற தற்காப்புக்கலை படங்களின் பாதிப்பையும் வலுவாக கொண்டுள்ளது. ஒரு மாஸ்டரின் கீழ் குங் பூ பயிலும் இரு மாணவர்கள். ஒருவர் தீமையை நோக்கியும் மற்றவன் நன்மையை நோக்கியும் செல்கிறான். மாஸ்டரை தீய குங் பூ வீரன் கொல்கிறான். அவனை பழிவாங்க நல்ல வீரன் முனைகிறான். அவன் கொல்லப்பட தற்போது அவனது மாணவன் தன் ஆசானின் மரணத்துக்கு பழி வாங்க கிளம்புகிறான். இந்த பழிவாங்கும் பாணி சூப்பர் மேன், ஸ்பைடர் மேன், பேட் மேன் போன்ற அமெரிக்க சூப்பர்ஹீரோ படங்களில் இருந்து ஒருவிதத்தில் முழுக்க முரண்படுகிறது.
அமெரிக்க சூப்பர்ஹீரோவும் கர்த்தரும்
அமெரிக்க சூப்பர் ஹீரோ சமூகத்துக்காக தன் அற்புத ஆற்றலை, அதனால் வரும் அதிகாரத்தை மிகுந்த பொறுப்புணர்வுடன் சமூக நலனுக்காக செலுத்துபவன். அவன் ஒரு தியாகி, காவலன், முகமூடி அணிந்த ஒரு கர்த்தர். “மிகுந்த ஆற்றலுடன் மிகுந்த பொறுப்புணர்வுடன் கூடவே வருகிறது” எனும் ஸ்பைடர் மேன் பட வரி இப்படங்களின் ஆதாரப் புள்ளி. (கர்த்தர் தன்னை இறைவனின் மகன் என்று உணர்கிறார். ஆனால் இந்த அறிதலின் ஆற்றல் அவரை உலகின் பாவத்தை மொத்தமாக சிலுவை வடிவில் சுமக்க வைக்கவும் செய்கிறது.)
ஆனால் ஒரு ஆசிய சமூகத்தில் ஒரு தனிமனிதன் தன்னை சமூக பொறுப்பாளனாக அல்லாமல் தன் குடும்பத்தின் பகுதியாக உணரத் தான் வாய்ப்பு அதிகம். இந்தியா சீனா போன்ற சமூகங்கள் இனக்குழு உணர்வுகளும், படிநிலை பிரக்ஞையும் மிக்க மக்களைக் கொண்டது. சம-உரிமை வலுவான கருத்தியலாக நிறுவப்பட்ட அமெரிக்காவில் போன்று இங்கு முழுமையான தேசியவாத உணர்வை மக்கள் அடைவது சிரமம். இங்கு மனிதன் தன்னை ஒரு மொத்த தேசிய சமூகத்துடன் அல்லாமல் ஒரு குழு (சாதிய இன) அடையாளத்துடன் மட்டுமே தன்னை எளிதில் உணர்கிறான். அதனால் தான் புரூஸ் லீ தனது படங்களில் ஒரு சமூக நோக்குக்காக வில்லனோடு மோதுவது இல்லை. தங்கை, ஆசான் போன்றவர்களின் கொலைகளுக்கு பழிவாங்குவது தான் முதன்மை உத்தேசம். Enter the Dragonஇல் இது தெளிவாக வரும். இப்படம் ஒரு ஹாலிவுட்-சீன் கூட்டுத் தயாரிப்பு என்பதால் மயக்கமருந்து கடத்தும் மாபியா தலைவனான ஹேனை பிடிக்க ஒரு தார்மீக கடமையுடன் சி.ஐ.ஏ புரூஸ் லீயை நியமிக்கிறது. ஆனால் புரூஸ் லீக்கு சட்டபூர்வமான குற்றங்கள் எல்லாம் ரெண்டாம் பட்சம் தான். வில்லனான ஹேன் தன் தங்கையின் மரணத்துக்கு காரணமானவன், தான் பயின்ற ஷாவொலின் கோயிலுக்கு அவமரியாதை ஏற்படுத்தியன். அதனால் தான் அவனை கொல்ல வேண்டும் என நினைக்கிறார். இறுதிக் காட்சியில் வில்லனைக் கொல்லும் முன் லீ இவை இரண்டையும் தான் அவனது குற்றங்களாக அறிவிக்கிறார், அவனது சட்டபுறம்பான செயல்களை அல்ல.
இந்த ஆசிய மனப்பான்மையை உணர்ந்து தான் மிஷ்கினும் தனது நாயகனை குடும்பத்துக்காக பழிவாங்குபவனாக சித்தரிக்கிறார். ஜீவா தன் நண்பனைக் கொன்றதற்காக வில்லனை அழிக்க முதலில் முடிவெடுக்கிறார். அதற்கடுத்து தன் ஆசானைக் கொன்றதற்காக. இருமுறை குழந்தைகளை காப்பாற்றுவதற்காக, தன் எதிர்கால மாமனாரின் உயிரை பாதுகாப்பதற்காக சண்டையிடுகிறார். பல முதிய தம்பதிகள் கொடூரமாக வில்லனால் கொல்லப்படுவது பற்றி, அவர்களின் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்படுவதற்காக ஜீவா அக்கறைப் படுவதாக படத்தில் எங்குமே இல்லை. இது தான் ஆசிய சூப்பர் மேன். அவன் இப்படி மட்டுமே நம் இந்திய திருநாட்டில் இருக்க முடியும். இதை ஒரு குறையாக நான் கூறவில்லை. ஆக இங்கு ஒட்டுமொத்த சமூகநீதிக்காக இயங்கும் ஒரு அதிநாயகனை காட்டுவதும் எதார்த்தமாக இருக்காது தான்.
குங் பூ கலாச்சாரமும் இந்தியாவும்
“முகமூடியில்” குங் பூ படங்களின் தாக்கத்தை குறிப்பிட்டேன். சுவாரஸ்யமாக குங் பூ பாணி காட்சிகள் தாம் படத்தின் பிரதான வலுவாக உள்ளன. அதாவது குங் பூ என்றது சண்டைக் காட்சிகளை மட்டும் உத்தேசித்து அல்ல. புரூஸ் லீயின் வாழ்க்கை, அவரது நம்பிக்கைகள், தத்துவம் ஆகியவற்றை சித்தரிக்கும் பகுதிகள் படத்தில் ஆழம் மிக்கவையாக படைப்பூக்கம் கொண்டவையாக வந்துள்ளன. மாறாக படத்தின் இன்னொரு பகுதியான ஹாலிவுட் மோஸ்தர் பேட்மேன் கதையோட்டம் குழந்தைத்தனமாக ஏதோ ஜெட்டெக்ஸ் பார்ப்பது போல் உள்ளது. ஆக இப்படத்தை ஒரு தற்காப்புக்கலை படமாக பார்ப்பதே உசிதம்.
“முகமூடியின்” இரண்டாவது சண்டைக்காட்சி ஜீவா தன் ஆசானை அவமானப்படுத்திய டிராகன் குங் பூ பள்ளியின் பிரதான மாணவனை எதிர்கொள்ளும் காட்சி. இப்படம் முழுக்க ஆசான மீதான் குங் பூ மாணவர்களின் அபரிதமான மரியாதை மற்றும் பாசம் நெகிழ்ச்சியாக சித்தரிக்கப்பட்டுள்ளது. ஒரு காவல் நிலையக் காட்சியில் தங்கள் ஆசானை இன்ஸ்பெக்டர் அறைவதைக் கண்டு மாணவர்கள் கொதித்து எழுகின்றனர். அவர்கள் தங்கள் நிலைமறந்து போலீசாரிடம் மோதி சாய்கிறார்கள். இத்தகைய அபரித மரியாதையை பொதுவாக இங்கு சென்னையில் உள்ள தற்காப்புக்கலை மாணவர்களின் நடவடிக்கைகளிலேயே நாம் காணுறலாம். தற்காப்புக்கலை பள்ளிகள் ஒரு நீட்டிக்கப்பட்ட குடும்பமாகவே இயங்குகிறது. பள்ளிக்குள் ஒரு திட்டவட்டமான படிநிலை தக்கவைக்கப்படும். சில மாதங்கள் பயிற்சியிலேயே உங்களுக்கு ஆசானுக்கும், மூத்த வீரர்களுக்கும் கீழ்ப்படிவது, மரியதை செலுத்துவது என்பவை இரண்டாம் குணமாகி விடும். இன்று ஜனநாயகபூர்வமாகி விட்ட குடும்பங்கள், பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் எங்கும் இவ்வளவு வலுவாக படிநிலை பாவிக்கப்படுவதில்லை. படிநிலைக்கு பணிவது மனிதனின் ஆதார குணம் என்பதால் தற்காப்புக்கலை பயில்பவர்களுக்கு ஆசானைப் பணிதல் மற்றும் வழிபடுதல் என்பது தன்னிச்சையாகவே வருகிறது. குங் பூ என்பது வெறும் சண்டைக்கலை மட்டுமே அல்ல. அது வாழவும் கற்றுத் தருகிறது. சீனாவில் குழந்தைகளை பண்படுத்துவதற்காக குங் பூ பள்ளிக்குத் தான் அனுப்புவார்கள். ஆக ஒரு குங் பூ ஆசான் வாழ்வின் ஆசானாகவும் இருக்கிறார். இப்படத்தில் ஜீவாவுக்கும் அவரது அப்பாவுக்கு இடையே நல்லுறவே இல்லை. ஆக ஆசான் அவரது அப்பா ஸ்தானத்துக்கு எளிதில் வந்து விடுகிறார்.
ஜீவா தன் ஆசானுக்காக எதிரிப் பள்ளியின் குங் பூ வீரருடன் சண்டை போடுகிறார். இதில் எதார்த்தம் உள்ளதா? சென்னையில் அவ்வளவாய் இல்லை. இங்கு தற்காப்புக் கலை ஒரு விளையாட்டு என்கிற ரீதியில் தான் பழகப்படுகிறது. பெரும்பாலான பள்ளிகள் குழந்தைகளை தான் பிரதானமாக பயிற்றுவிக்கின்றன. சீனாவில் போல் நமது பண்பாட்டில் தற்காப்புக்கலை பயில்வது பிரதனமாக இல்லை. இங்கு ஆங்கிலேயரின் வருகைக்குப் பின், குறிப்பாக வெடிமருந்து பயன்பாடு அதிகரித்த சூழ்லில் சிலம்ப வரிசை, வர்மக்கலை, களரிப்பயிற்று, மல்யுத்தம் போன்ற கலைகள் மவுசை இழந்தன. ஆனால் சீனாவில் காலனிய ஆட்சி நிலவிய போதும் கூட துப்பாக்கி தடை செய்யப்பட்டிருந்தது. ஆங்கிலேயக் காவலர்கள் கூட லத்தி மட்டும் தான் பயன்படுத்தினர். அதனால் அங்கு குங் பூ உள்ளிட்ட சண்டைக்கலைகள் தழைத்தன. இந்தியாவில் போர்வீரர்கள் மட்டுமே சண்டைக்கலைகள் பயின்றார்கள். ஆனால் சீனாவில் துறவிகள் பிரதானமாக குங் பூ பயின்றதுடன் அதனை விரிவுபடுத்த பல கிளைகளாக வளர்த்தார்கள். இத்துறவிகள் மஞ்சூரிய கொடுங்கோல் ஆட்சியின் போது புரட்சியாளர்களுக்கு அடைக்கலம் அளித்து குங் பூவும் கற்றுக் கொடுத்தனர். ஆக அங்கு பொதுமக்களும் சகஜமாக குங் பூ பழகினர். அங்கு தயிர்விற்பவன், விவசாயி, கறிவெட்டுபவன் கூட குங் பூ நிபுணனான எளிதில் இருப்பான். இது போன்ற பரவலால் குங் பூ சீன கலாச்சாரத்தில் பிரதான இடம் பெற்றது. குங் பூ என்றாலே சீனமொழியில் சண்டை என்றல்ல நிபுணத்துவம் என்றே பொருள். எந்த துறையில் நிபுணத்தும பெற்றவனையும் குங் பூ கலைஞன் எனலாம்.
குங் பூவுக்கு பல்வேறு வகைப்பாடுகள் இருந்ததாலும், பரவலாக அவை பயிலப்பட்டதாலும் எது சிறந்தது என்கிற போட்டி அடிக்கடி ஏற்பட்டது. விளைவாக ஹாங்காங்கில் குங் பூ கலைஞர்களிடையே மோதல்கள் நடப்பது ஒரு அன்றாட நிகழ்வு என்கிறார் புரூஸ் லீ. விடிகாலையில் மக்கள் பொதுவிடங்களில் குங் பூ பழகிக் கொண்டிருப்பார்கள். அப்போது வழியே செல்லும் வேறுபாணியை சேர்ந்த குங் பூ கலைஞர்கள் அவர்களை சீண்டி சண்டைக்கு இழுப்பார்கள். ஹாங்காங்கில் பொதுவிடத்தில் பயிற்சி செய்தால் சண்டை சவால்களை தவிர்க்கவே முடியாது என்கிறார் லீ. இன்னொரு பக்கம் வெவ்வேறு பாணிகளைச் சேர்ந்த குங் பூ பள்ளி மாணவர்கள் சதா பரஸ்பரம் மோதிக் கொள்வார்கள். இச்சண்டைகள் பெரும்பாலும் மொட்டைமாடிகளில் நடைபெறும். பொதுவாக இளைய மாணவர்களை தான் கோதாவில் இறக்குவார்கள். இவற்றில் தோல்வி அடைந்தால் அவர்களால் நிம்மதியாக தொடர்ந்து பயில முடியாது. தோற்றவர்களை அவர்களின் சீனியர்கள் வேறு தமக்கு அவமானம் ஏற்படுத்தியதற்காக அடித்து துவைத்து விடுவார்கள். அதனால் இளைய வீரர்கள் கடும் நெருக்கடியில் இருப்பார்கள். அதைப் போன்று அக்காலத்தில் சீனாவில் ஆசான்கள் வணிகர்களுக்கு காவல் அளித்து வருமானம் பெற்றார்கள். இதனால் இந்த ஆசான்களை தோற்கடித்து காவல் பணம் வாங்க எதிரிப்பள்ளிகளைச் சேர்ந்தவர்கள் விடாமல் முயல்வார்கள். தொடர்ந்து சவால் விட்டுக் கொண்டு இருப்பார்கள். ஆனால் அவ்வளவு எளிதாக ஆசானை அவர்கள் நெருங்க முடியாது. மொத்த பள்ளியும் ஆசானை பாதுகாக்கும். ஜூனியர், சீனியர் மாணவர்கள் அனைவரும் வீழ்ந்த பின்னரே ஆசானுடன் அவர்கள் மோத முடியும். ஆக குங் பூ பள்ளிகளுக்கு இடையேயான மோதல் என்பது சீனாவில் ஒரு அன்றாட நிகழ்வாக அந்தஸ்து போட்டியாக இருந்தது. பல சீன தற்காப்புப் படங்களில் வில்லன் ஒரு தற்காப்புக்கலை பள்ளியின் பிரதான மாணவனாகவோ ஆசானாகவோ இருப்பது இதனால் தான். “முகமூடியிலும்” இரு குங் பூ பள்ளிகளுக்கு இடையிலான மோதல் தான் பிரதானமாக வருகிறது. ஆனால் மிஷ்கின் காட்டுவது இந்திய எதார்த்தம் அல்ல, சீன எதார்த்தம். சீனப் பண்பாடு, சீன குங் பூ வரலாறு.
“முகமூடியில் ”புரூஸ் லீயின் வாழ்க்கை சித்தரிப்பு
இப்படத்தில் ஜீவாவின் ஆசான் சந்துரு தனது மாணவர்களிடம் இருந்து கட்டணம் பெற மாட்டார். புரூஸ் லீ அமெரிக்காவில் இருந்த ஆரம்ப காலத்தில் இவ்வாறு தான் இருந்தார். அவர் பல மாணவர்களுக்கு இலவசமாகத் தான் கற்றுத் தந்தார். அதனால் அவர் தனது அன்றாடத் தேவைகளுக்கு ஒரு உணவகத்தில் மேசை துடைக்கும் பணி செய்ய வேண்டி வந்தது. இந்த அவலம் அவருக்கு பெரும் மனச்சோர்வை ஏற்படுத்தியது. இதை உணர்ந்த அவரது மாணவர்கள் தாமாக முன் வந்து கட்டணம் செலுத்தி புரூஸ் லீக்கு உதவினர். அவரது குங் பூ பள்ளிக்கூட கட்டிடத்துக்கு வாடகை செலுத்துவதற்காக. மேலும் அவர்களாகவே புதிய மாணவர்களை கொண்டு வந்து சேர்த்து தம் ஆசானுக்கு அப்பள்ளி மூலமாக போதுமான வருமானம் வரும்படி ஏற்பாடு செய்தனர். இப்படத்திலும் ஜீவா தன் ஆசானின் பள்ளி வாடகை செலுத்தாததால் மூடப்படும் நிலை வரும் அதைத் தடுக்க புதிய மாணவர்களை சேர்க்கும் முயற்சியில் ஈடுபடுகிறார். அவர் அதற்காக மீன்சந்தையில் ஒரு குங் பூ செயல்விளக்கம் தருகிறார். புரூஸ் லீயும் இது போல பொதுவிடங்களில் பல செயல்விளக்கங்கள் செய்து தான் தன் பள்ளிக்கு மாணவர்களை சேர்த்தார். “முகமூடியில்” ஜீவா குங் பூவுக்கு சவால் விடும் ஒரு ரௌடியை அவர் எளிதில் வீழ்த்தி அந்த பகுதி மக்களை ஈர்க்கிறார். விளைவாக அவரது ஆசானின் பள்ளியில் புதிதாக பல மாணவர்கள் சேர்கிறார்கள். புரூஸ் லீயும் இது போல் பல சவால்களை செயல்விளக்கங்களின் போது எதிர்கொண்டுள்ளார். ஆனால் அவர் ஜீவாவைப் போன்று முழுமூச்சோடு சண்டையிடாமல் எதிராளியை திக்குமுக்காட வைத்தபடியே இன்னொரு பக்கம் இடைவிடாது குங் பூ பள்ளி பார்வையாளர்களுக்கு விளக்குவார். இப்படத்தில் ஜீவாவின் ஆசான் தன் மாணவர்களை குங் பூ போட்டிகளில் கலந்து கொள்ள அனுமதிக்க மாட்டார். மாறாக புரூஸ் லீ தன் மாணவர்களை போட்டிகளில் கலந்து கொண்டு பல போட்டித் தொடர்களை வெல்ல உதவியுள்ளார். ஆனாலும் புரூஸ் லீ சண்டைக்கலையை ஒரு போட்டியாக மாற்றுவதை ஆதரிக்கவில்லை. சண்டைக்கலை என்பது தெருச்சண்டையின் போது நடைமுறைரீதியாக ஒருவருக்கு பயன்பட வேண்டுமே அன்றி போட்டியில் கோப்பைகள் வெல்வதற்கு அல்ல என்று அவர் கூறினார். போட்டி வளையத்தில் தன்னம்பிக்கையோடு இயங்கும் கலைஞர்களால் ஒரு தெருச்சண்டையின் எதிர்பாராத தாக்குதல்களுக்கு தாக்குப்பிடிப்பது சிரமம் என்றார். முதன்முதலில் வில்லனுடன் மோதும் போது ஜீவாவை அவன் ஒரு புதுமையான அடவு மூலம் முறியடிக்கிறான். அடுத்த நாள் அவன் இந்த அடவை நினைவில் இருந்து தன் நண்பனுடன் பயின்று கொண்டிருப்பதை காட்டுகிறார்கள். இந்த அடவை தான் கற்பித்ததே இல்லையே என்று வியக்கும் ஆசான் பதற்றமாகி ஜீவாவிடம் விசாரிக்கிறார். புரூஸ் லீ எந்த ஒரு புதிய வகை தற்காப்புக்கலையின் உத்திகளை பார்த்தாலும் அவற்றை நினைவில் வைத்து உடனடியாக திரும்ப செய்து காட்டும் அபார திறன் கொண்டவராக இருந்தார். பலரும் வருடக்கணக்காய் பயின்று கற்ற அடவுகளை லீ தனது அவதானிக்கும் திறனால் எளிதில் உள்வாங்கி கற்று விடுவார். மற்றொரு காட்சியில் ஜீவா ஒரு ஒர்க்‌ஷாப்பில் காத்து நிற்கும் தன் காதலியை ஈர்ப்பதற்காக பெரும் பொய்கள் சொல்லி அநியாயத்துக்கு பந்தா பண்ணுவார். புரூஸ் லீயும் இது போல் பெண்கள் அருகாமையில் இருந்தால் அவர்களை ஈர்ப்பதற்காக பல அட்டகாசங்கள் செய்பவராக இருந்தார். குங் பூ பயிற்சியின் போது ஏதாவது ஒரு பெண் கடந்து போனால் கவன ஈர்ப்புக்காக தன்னோடு பயிலும் மாணவனை உதைத்து அடித்து துவைத்து விடுவார். இப்படி படம் முழுக்க நாம் புரூஸ் லீயின் வாழ்க்கைக்கதையின் பல அம்சங்களை காண முடிகிறது. இதனால் தான் ஆரம்பத்தில் இப்படத்தில் புரூஸ் லீ வெறும் பெயராக மட்டும் இல்லை. நீரின் ஆழத்தில் கத்தி போல் லீயின் ஆன்மா இப்படத்தின் மையத்தில் தொடர்ந்து ஒளிர்ந்தபடி கிடக்கிறது.
தீமையை கடத்தல்
படத்தின் இறுதி இரு சண்டைக்காட்சிகள் மிக நுட்பமாக உருவாக்கப்பட்டுள்ளன. ஒன்று ஜீவாவின் ஆசானும் நரேனும் மோதும் காட்சி. இக்காட்சியில் ஆசான் முதலில் நரேனை குறுந்தொலைவு குத்துகள் மூலம் சுலபத்தில் வீழ்த்துகிறார். அப்போது நரேன் ஒரு தந்திரம் செய்கிறார். அவரது ஆசானை எப்படி கொன்றார் என்கிற கதையை கூறுகிறார். இது ஜீவாவின் ஆசானை கொதிப்படைய செய்கிறது. ஆவேசத்தில் அவர் தன் கட்டுப்பாடை இழக்கிறார். சமநிலையற்று தாக்கும் அவரை நரேன் எளிதில் வீழ்த்தி கொல்கிறார். இரண்டாவது இறுதி சண்டை ஜீவாவுக்கு நரேனுக்கும். தனது ஆசான் கற்றுக்கொடுத்த வித்தையை பயன்படுத்தி ஜீவா தொங்கும் குறுகின மரப்பாலத்தில் கண்ணை மூடி நிற்கிறார். அவர் மனமும் சூழலும் ஒன்றுகிறது. நரேன் அவரது பாலத்தை அசைத்துப் பார்க்கிறார். ஆனால் ஜீவா அந்த ஆட்டத்துக்கு எளிதில் ஈடுகொடுத்து சமநிலையிழக்காமல் நிற்கிறார். அடுத்து நரேன் அவரை தாக்க அவர் புயலுக்கு வளையும் மூங்கில் போல் வளைந்து கொடுத்து அடிகளை தவற செய்கிறார். இவற்றை அவர் கண்ணை மூடிக் கொண்டே செய்கிறார். சண்டையின் இந்த இடம் மிக அழகானது. புரூஸ் லீ தான் பயின்ற விங் சுன் குங் பூவின் ஒரு முக்கிய உத்தியான ஒட்டும் கரங்களை (sticking hands) கண்ணை மூடிக் கொண்டே எளிதில் பயில்வார். அது மட்டுமல்ல கண்ணைக்கட்டிக் கொண்டே எதிராளியின் அசைவுகளை ஊகித்து தாக்கி வெல்வார். லீயின் இந்த அற்புதத்திறன் உடலும் மனமும் ஒன்றாகும் தியான நிலையினால் சாத்தியமானது. இக்காட்சி இந்த அற்புத தருணத்தை சித்தரிக்கிறது. பூரணமான சமநிலை கொண்டவனை யாராலும் சாய்க்க முடியாது. நரேனின் பலவீனம் அவன் சமநிலை அற்றவன் என்பது. அதனாலே அவன் இறுதியில் ஜீவாவிடம் வீழ்கிறான்.
தொங்கும் பாலத்தில் இருவரும் நின்று சண்டையிடும் காட்சி சற்றும் துருத்தாத ஒரு அபூர்வமான குறியீடு. இக்காட்சி படத்தை பலமடங்கு உயரத்துக்கு கொண்டு போய் விடுகிறது. சமீபத்தில் நான் பார்த்த எந்தவொரு படத்திலும் இவ்வளவு பெரும் மனவெழுச்சியை வேறெந்த காட்சியும் தந்ததில்லை. காரணம் தமிழ் சினிமாவில் கிளைமாக்ஸ் எப்போதுமே உறவு சார்ந்த ஒரு உணர்வுநிலை உச்சத்தை நோக்கியே செதுக்கப்படுகிறது. ஆனால் மிஷ்கினின் கிளைமேக்ஸ் ஒரு ஆன்மீக உச்சத்துக்கு செல்கிறது. பாலா மதக்கருத்துக்களையும், செல்வராகவன் உளவியலையும் பேசும் போது மிஷ்கின் மட்டுமே எளிய வாழ்வின் ஆன்மீகத்தை தொட்டுணர்த்துகிறார். தமிழ் சினிமாவில் அவருக்குள்ள தனித்த இடம் இதனால் தான் உறுதியாகிறது.
ஜீவாவின் ஆசான் “எதிரியை அவனது பலவீனம் அறிந்து தான் முறியடிக்க வேண்டும்” என்று ஓரிடத்தில் சொல்வார். இது புரூஸ் லீயின் மேற்கோள். இன்னும் சொல்வதானால் இந்த வாக்கியம் Enter the Dragon புரூஸ் லீயின் ஷாவொலின் மடாலய தலைமை பிக்கு அவரிடம் கூறும் அறிவுரையில் இருந்து தூண்டுதல் பெற்றது. தலைமை குரு சொல்கிறார்: “எதிரி வலிமையானவன். அவனை வலிமையில் நீ வெல்லப் போவதில்லை. அவனது பலவீனம் அறிந்து மட்டுமே வீழ்த்த முடியும். அவனது பலவீனம் அவன் தன்னைச் சுற்றி பல பாவனைகளை, பிம்பங்களை தோற்றுவித்து அவற்றிற்கு இடையே பதுங்கி உள்ளான் என்பது. அவனது பிம்பங்களை நொறுக்கினால் அவனை எளிதில் நீ முறியடிக்கலாம்”. இந்த வசனத்தின் அடிப்படையில் தான் அப்படத்தில் மிக பிரபலமான இறுதி கண்ணாடி அறைச் சண்டை வருகிறது. புரூஸ் லீயின் பட வில்லன் ஹேன் அடிப்படையில் சாரமற்ற பொத்தையான மனிதன். அவனது ஆழமின்மையை வெளிப்படுத்தியதும் வீழ்ந்து விடுகிறான். “முகமூடியில்” வில்லனான அங்குசாமி அற்புதமான சண்டை நிபுணன் தான். ஆனால் அவன் ஆன்ம நிறைவற்றவன். உளவியல் கோளாறினால் தோன்றும் கண்மூடித்தன வன்முறையை தன் வலிமையாக கொண்டுள்ளவன். அவனால் உறுதியான தளத்தில் நின்று தான் சண்டையிட முடியும். தள்ளாடும் தொங்கும் ஏணியில் நிற்கும் போது தனது உள்ளார்ந்த தடுமாற்றம் அவனுக்கு வெளிப்படையாக தெரிய ஆரம்பிக்கிறது. அவன் இறுதியில் தன் தோல்வியை தானே உணர்ந்து தன்னிலும் மேம்பட்ட மனமுதிர்ச்சி பெற்ற நாயகனை வணங்கிய கீழே விழுந்து தன் மரணத்தை ஏற்கிறான். இப்படியான ஒரு குறியீட்டு சண்டைக்காட்சி மட்டுமல்ல இவ்வளவு பக்குவமான ஒரு வில்லனைக் கூட இதுவரை யாரும் தமிழில் சிருஷ்டித்ததில்லை. பேட்மேனில் ஜோக்கர் கூட இறுதி தருணம் வரை ஒரு மனநோயாளி மட்டும் தான். ஸ்பைடர் மேனில் வில்லன்கள் அதிகார ஆசையால் பாவம் செய்து ஆன்மாவை “சாத்தானுக்கு பணயம்” வைத்த நரகவாசிகள். இப்படி அமெரிக்க சூப்பர்ஹீரோ பட வில்லன்கள் ஒற்றைபட்டையாக இருக்கையில் மிஷ்கின் இங்கு முக்கியமான வகையில் வேறுபடுகிறார். அவரது வில்லன் தனது அத்தனை தீமைகளையும் ஒரு கலைஞனின் நுண்ணுணர்வு கொண்டு தன் மரணத்துக்கு முந்தைய இறுதி நொடியில் கடக்கிறான். யின்–யாங் தத்துவம் சொல்வது போல் தீமை நன்மைக்கு எதிர்தரப்பு அல்ல. தீமை நன்மையாகவும் நன்மை தீமையாகவும் இவ்வுலகில் தொடர்ந்து மாறியபடி இருக்கிறது. அங்குசாமி தன் மரண நிமிடங்களில் ஒரு நாயகனாகவே மாறிப் போகிறான். 

நன்றி: உயிர்மை, அக்டோபர் 2012 
Read More

Saturday, 6 October 2012

முதியவர்கள் மட்டும் எழுதும் பத்திரிகை



தமிழில் முதியவர்கள் மட்டும் எழுதும் பத்திரிகைகள் இருக்கின்றன. அதில் ஒருவர் தோன்றி “பாருங்க பாரதியார் ஜாதிவெறியர்” என்று கண்டுபிடிப்பார்.
இன்னொருவர் புதுமைப்பித்தன் என்றொரு இளைஞர் நன்றாக எழுதி வருகிறார் என்று சொல்வார். இன்னொருவர் “ஆ.மாதவையாவின் நாவலில் சமகால வாழ்வு” என்றொரு கட்டுரை எழுதுவார். வரலாறு தோன்றியதற்கு முந்தின காலகட்டத்தில் ஆரம்பிக்கும் சில வாழ்க்கைக்கதை தொடர்களும் இருக்கும். அஜீரணம் ஏற்படக்கூடாது என்பதற்காக பிரதி எப்படி பிரதியை முழுங்குகிறது என்றொருவர் நூல் சுற்றுவார். அந்த சிடுக்கை அவிழ்த்து முடிக்கும் போது ஏப்பம் வந்து விடும். அப்புறம் காணாமல் போன பாய் முடையும் கலைஞர்கள், பவர்ஸ்டாரின் படக்காட்சிகளில் ஒடுக்கப்பட்ட மக்களின் குரல் போன்ற போராளி எழுத்துக்களும் இருக்கும். இத்தகைய பத்திரிகைகள் நம் சமூகத்தில் முதியவர்கள் எப்படி கூட்டுக்குடும்பங்களின் அழிவின் காரணமாக கைவிடப்பட்டு தனிமைப்படுத்தப்படுகிறார்கள் என்பதற்கான தகுந்த உதாரணமாக விளங்குகின்றன. என்னவொரு கொடுமை பாருங்கள்!
Read More

Thursday, 4 October 2012

T20 கிரிக்கெட் – மீசை ஒட்டிய குழந்தைகளும் குழந்தைகளாய் நடிக்கும் பெரியவர்களும்




இலங்கையில் நடந்து வரும் T20 உலகக்கோப்பையும் பிற ஐ.சி.சி ஆட்டத்தொடர்களைப் போல ஒரு நீண்ட கொட்டாவியாக உள்ளது. மட்டமான இரட்டை வேகம் கொண்ட ஆடுதளங்கள், ஆர்வமற்ற பார்வையாளர்கள், மாலை நேர மழை, பல ஏற்றத்தாழ்வான அர்த்தமற்ற ஆட்டங்கள்.
இங்கிலாந்து - மே.இ தீவுகள், பாகிஸ்தான் – தெ.ஆ ஆகிய ஆட்டங்கள் விறுவிறுப்பாக இருந்தன. ஆனால் தரமாக இல்லை. ஒரு அணி மட்டமாக ஆட அடுத்து வரும் அணி முட்டாள்தனமாக ஆட, ஒரு அணி தயக்கமாய் ஆட, அடுத்து வரும் அணி சோம்பலாய் ஆட ஒரு செயற்கையான விதத்தில் தான் மேற்சொன்ன விறுவிறுப்புத் தன்மை கூட ஏற்பட்டது.


கிரிக்கெட்டில் பந்துக்கும் மட்டைக்கும் இடையே சமமான போட்டி வேண்டும் என்று மேதாவித்தனமாக பேசப்பட்டாலும் T20 உண்மையில் கிரிக்கெட்டின் போர்வையில் வரும் எளிய பொழுதுபோக்கு வடிவம் மட்டுமே. மக்கள் நாலு மற்றும் ஆறுகள் பறப்பதை பார்க்க, அணிகள் 200க்கு மேல் ஸ்கோர்களை விரட்டும் சாகசங்களை வியக்கத் தான் வருகிறார்கள். T20 பார்வையாளர்கள் கேரளாவில் கதகளி பயிலவரும் வெள்ளைக்காரர்களைப் போன்று தான் – அவர்களுக்கு பந்தும் மட்டையும் அல்ல, அட்டகாசமான வர்ணங்களும் நாடகீயமான நிகழ்வுகளும் படோபமான ஒருங்கிணைப்பும் தான் முக்கியம். ஆனால் ஐ.சி.சி இவ்விசயங்களில் எல்லாம் சொதப்பியுள்ளது.

முதலில் ஆடுதளங்களை எடுத்துக் கொள்வோம். இலங்கையில் முன்னர் மிக தட்டையான ஆடுதளங்கள் ஒருநாள் ஆட்டங்களுக்கு உருவாக்கப்பட்டன. டெஸ்டுகளில் முரளிதரனின் பயன்பாட்டுக்கு ஏற்ற சுழல்-ஆடுதளங்கள் செய்யப்பட்டன. முரளியின் ஓய்வுக்குப் பின் சமீபமாக இலங்கை தனது ஆடுதளங்களை புதிதாக மாற்றி அமைத்தன. இந்த ஆடுதளங்கள் நல்ல துள்ளலுடன் ஸ்விங்குடன் ஆனால் குறைவான வேகத்துடன் இருந்தன. அஜந்தா மெண்டிஸ் காயமுற்றும் ஆட்டநிலையை இழந்தும் இருந்த நிலையில் இலங்கை நான்கு மித வேகப்பந்து வீச்சாளர்களை தொடர்ந்து களமிறக்க துவங்கியது. இலங்கை அணியின் ஆட்டமுறைக்கு அணி அமைப்புக்கும் இந்த ஆடுதளங்கள் நிச்சயம் உதவின. அதனாலே இந்த T20 உலகக்கோப்பை மாறுபட்டதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதாவது ஆடுதளங்கள் மெதுவாக இருந்தாலும் வேக வீச்சாளர்களை ஆதரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த ஆடுதளங்களில் பந்து எந்தளவுக்கு அதிக வேகமாக மட்டையை நோக்கி வருகிறதோ அந்தளவுக்கு அடித்தாடுவது எளிதாகும் என உணர்ந்த தோனி உமேஷ் யாதவ் மற்றும் ராகுல் ஷர்மாவை விலக்கி பாலாஜி மற்றும் சாவ்லாவை அணியில் எடுத்துக் கொண்டார். இந்திய அணி T20 உலகக்கோப்பைக்கு முன் இலங்கைக்கு எதிராய் இதே மண்ணில் ஒருநாள் தொடர் ஆடிய போது முதல் பத்து ஓவர்களில் வேகவீச்சு மூலம் அதிக விக்கெட் வீழ்த்தும் அணியே வெல்லும் வாய்ப்பு இருந்தது. பந்து கிட்டத்தட்ட சுழலவே இல்லை. T20 உலகக்கோப்பை துவங்கி ஒருவாரத்தில் இயன் சேப்பல் ஒரு பத்திரிகை பத்தியில் இந்த உலகக்கோப்பையில் ஆடுதளங்கள் இங்கிலாந்தில் உள்ளவை போல் உள்ளதால் வெள்ளை அணிகளுக்குத் தான் வெற்றி வாய்ப்பு அதிகம் என்றார். ஆனால் அவர் அப்பத்தியை எழுதிய அன்றே இந்திய சுழலர்கள் இங்கிலாந்தை 80 சொச்சத்துக்கு முறியடித்தனர். அன்றைய பந்தின் சுழல் வர்ணனையாளர்கள், நிபுணர்கள் மட்டுமல்ல இந்திய அணித்தலைவரையே ஆச்சரியப்படுத்தியிருக்கக் கூடும். ஆனால் அதற்குப் பின்னான ஆட்டங்களில் சுழலர்கள் எதிர்பார்த்த பாதிப்பை ஏற்படுத்தவில்லை. இந்த ஆடுதளங்கள் உண்மையில் அனைவரின் ஊகங்களையும் பொய்யாக்கி உள்ளன.

பந்து சுழலாததற்கும் அதிகம் ஸ்விங் ஆகாததற்கும் இப்போது மழைக்காலம் என்பது முக்கிய காரணம். ஆடுதளம் போதுமான வெயிலைப் பெறவில்லை. மேலும் இந்தியாவைப் போன்று இலங்கையில் அதிக மைதானங்கள் இல்லை. கதாநாயகிகள் விஜயகாந்தின் பெரிய இடுப்பை சுற்றி சுற்றி ஆடுவது போல பிரேமதாசா, பள்ளிக்கலே, ஹம்பன்தோட்டா போன்ற மைதானங்களில் தான் அணிகள் மாறி மாறி ஆடுகின்றன. விளைவாக ஆடுதளங்கள் புற்களை இழந்து வேகம் குறைந்து மட்டையாளனுக்கோ பந்துவீச்சாளனுக்கோ சாதகமற்றவையாக மாறுகின்றன. தற்போதைய நிலையில் வேகவீச்சாளர்களை தேர்வதா சுழலர்களால் அணியை வலுப்படுத்தவா என அணிகள் குழம்பி உள்ளன. புதிரான ஒரு பெண்ணை ஐந்து பேர் பந்தயம் வைத்து ஈர்க்க முயல்வது போல் T20 உலகக்கோப்பை தொடர்கிறது.

இந்த ஆடுதளங்களில் வெல்ல இரண்டு பண்புகளில் ஒன்று வேண்டும். முன் தீர்மானங்கள் இன்றி சுதந்திரமாக ஆடத் தெரிய வேண்டும். வாட்சன், தில்ஷான், மெக்கல்லம் போன்று. அல்லது மந்தமான ஆடுதளங்களில் ஆடும் நிபுணத்துவம் வேண்டும். மஹிளா ஜெயவர்த்தனே, சங்கக்கரா போன்ற நுட்பமான கலைஞர்கள் இதில் தேர்ந்தவர்கள்.

முதலில் சொல்ல காரணத்தினாலேயே இலங்கையில் பலவீத ஊகங்களுடன் தீர்மானங்களுடன் வந்திறங்கிய அணிகளை விட எளிமையான சுதந்திரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆஸ்திரேலியா நன்றாக ஆடி வருகிறது. அவர்கள் இந்தியாவைப் போல் பந்து சுழல வேண்டும் என்றோ ஸ்விங் ஆக வேண்டும் என்றோ எதிர்பார்க்கவில்லை. இங்கிலாந்து அல்லது தென்னாப்பிரிக்காவை போல பந்து சுழன்று விடுமோ என்று அஞ்சவில்லை. நேராக கூர்மையாக பந்து வீசினார்கள். நீளங்களை சாமர்த்தியமாய் மாற்றினார்கள். மட்டையாடும் போது முழுமையாக வலுவாக அடித்தார்கள்; முடியாத போது ஒற்றை ஓட்டங்கள் தாராளமாக எடுத்தார்கள். உண்மையில் தெருக்கிரிக்கெட்டில் நாம் பிரயோகிக்கும் இந்த அடிமட்ட எளிமை T20க்கு மிக உகந்தது. இதே ஆஸி அணி கடந்த இங்கிலாந்து பயணத்தில் ஒருநாள் ஆட்டங்களில் திணறினார்கள். பாகிஸ்தானுக்கு எதிராக துபாயில் ஆடிய ஆட்டங்களிலும் அவர்கள் நன்றாக ஆடும் வங்கதேசத்தின் தரத்தில் தான் ஆடினார்கள். ஆனால் T20யில் நிலைத்து ஆடும் நுட்பங்களைப் பற்றி அவர்களுக்கு கவலையில்லை. விடலைப்பருவத்தில் காதலிப்பது போல அசட்டுத்தனங்களைக் கூட ஆத்மார்த்தமாய் தயக்கமின்றி தன்னம்பிக்கையுடன் செய்கிறார்கள். அவர்கள் தம் கிரிக்கெட்டை ஒரு ஈரக்கனவைப் போல அவ்வளவு ரசிக்கிறார்கள். நாமும் அவர்களை ரசிக்கிறோம்.

இந்த T20 உலகக்கோப்பையை மேலும் சுவாரஸ்யமாக ஆர்ப்பட்டமாக ஆக்க ஐ.சி.சி இதை கோடையில் நடத்தியிருக்க வேண்டும். அல்லது இலங்கையில் மட்டும் எனாமல் வங்கதேசம், (பாக்கிஸ்தானுக்கு பதில்) துபாய் ஆசிய என வேறுநாடுகளில் பகிர்ந்து ஆட்டங்களை நடத்தியிருக்கலாம். (96 உலகக்கோப்பையில் போல.)

அடுத்து இந்த ஆட்டங்களின் முதல் பகுதியில் அப்கானிஸ்தான், வங்கதேசம், அயர்லாந்து போன்ற அணிகளை உயர்மட்ட அணிகளுடன் மோத வைக்கும் சடங்குகளை நிறுத்த வேண்டும். அப்கானிஸ்தான் என்னதான் போராடினாலும் அவர்கள் ஒரு சர்வதேச அணியை கொட்டாவி விட வைத்து மட்டுமே கவனமிழக்கச் செய்து தோற்கடிக்க முடியும். சூப்பர் 8க்கு தேர்வாகப் போகிறவர்கள் யாரென்பது ஆட்ட்டத்தொடருக்கு முன்பே ஒரு குழந்தை கூட கணிக்கும் நிலையில் வைப்பது இன்றைய அவசர பொழுதுபோக்கு உலகில் அபத்தமான செயல். இது போதாது என்று இந்த சடங்கு ஆட்டங்களுக்கு முன்பு ஒவ்வொரு அணிக்கும் பயிற்சி ஆட்டங்கள் வேறு நடத்தப்பட்டன. ஆக துவங்கி பத்துநாட்கள் உருண்ட பின்னரும் உலகக்கோப்பை துவங்கவே இல்லை. ஐசிசிக்கு இன்று தேவை கிரிக்கெட்டை இதயத்துடிப்பை எகிற வைக்கும் ஒரு நுகர்வுப்பொருளாக சந்தைப்படுத்தத் தெரிந்த லலித்மோடி போன்ற வியாபாரிகள். ஐ.சி.சியின் தற்போதைய நிர்வாகிகள் கிரிக்கெட்டை தங்களது சம்பிரதாய அணுகுமுறை கொண்டு அழித்து வருகிறார்கள். T20 ஒரு நவீன வெகுமக்கள் வடிவம் என்றாலும் அதை இங்கிலாந்தில் நீளமான அங்கிகள் பாவாடைகளுக்கு உள்ளே குடைகளுக்கு கீழே அமர்ந்து ஒற்றை ஓட்டத்திற்கு பந்து உருண்டு வர பறந்தெழும் புறாக்களின் சிறகடிப்புகளுக்கு ஏற்ப கைதட்டி மெத்தனமாக ரசிக்கும் கனவான்களின் காலத்துக்கு பின்னுக்கு உருட்டி செல்ல முடியும் என்பதை ஐசிசி இந்த உலகக்கோப்பை மூலம் மீண்டும் ஒருமுறை நிரூபித்து உள்ளது. இவர்கள் நவீன கிரிக்கெட்டை நிர்வகிப்பது என்பது எழுபது வயது தாத்தாவுக்கு பதினான்கு வயதுப் பெண்ணை மணமுடித்துக் கொடுப்பது போல பொருத்தமற்றது, அதனாலேயே தீங்கானது. காங்கிரஸ் தன் செயல்திறன் இன்மையால் அந்நியமுதலீட்டுக்கு நாட்டை விற்பது போல எதிர்காலத்தில் ஐ.சி.சி தன் அம்மி மிதித்து அருந்ததி பார்க்கும் கற்கால நிர்வாகம் மூலம் தனியார் franchiseகளுக்கு கிரிக்கெட்டை தாரை வார்த்து விடும்.

இந்த T20 உலகக்கோப்பை சற்று சலிப்பாக இருப்பதற்கு இறுதியான காரணம் மட்டையாளர்களும் தான். இவ்வடிவம் தோன்றின புதிதில் மட்டையாளர்கள் கன்னிமையின் களங்கமின்மையின் தூய்மை மற்றும் ஆவேசத்துடன் ஆடினார்கள். ஒரு எதிர்பாராத் தன்மை இருந்தது. இருபது ஓவர்கள் தாக்கி ஆட முயன்றதால் தொடர்ந்து ஆட்டம் விறுவிறுப்பாக இருந்தது. பந்து வீச்சாளர்கள் மிரண்டு போயிருந்தார்கள். ஆனால் அவர்கள் மெல்ல மெல்ல புதிய திறன்களை வளர்த்தெடுத்தார்கள்; சாமர்த்தியமாக தந்திரமாக யோசிக்கத் துவங்கினார்கள். பலவிதமாய் மெதுவான பந்துகளை வீச வேகவீச்சாளர்கள் கற்றனர். மிக சமீபமாக இர்பான் பதான் கால்பக்க குச்சிக்கு வெளியே விழுந்து உள்ளே வந்து நடுக்குச்சியை வீழ்த்தும் ஷேர்வார்னை நினைவுறுத்தும் சுழல்பந்தைக் கூட நியூசீலாந்துக்கு எதிரான T20யில் வீசினார். இன்னொரு பக்கம் மட்டையாளர்கள் 50 ஓவர் கிரிக்கெட்டை போல T20யை பிரித்துக் கொண்டார்கள். முதல் ஆறு பவர்பிளே ஓவர்களில் கொஞ்சம் நிதானமான அதிரடி ஆட்டம். ஆறில் இருந்து பதினைந்து வரும் வெறும் ஒற்றை இரட்டை ஓட்டங்கள். இறுதி ஐந்து ஓவர்களில் கண்மூடித்தனமான அடித்தாட்டம். இந்த சூத்திரம் ஒருவித இறுக்கத்தை இந்த வடிவத்துக்கு கொண்டு வந்துவிட்டது. முதல் ஆறு மற்றும் இறுதி ஐந்து ஓவர்களில் நடப்பதை வைத்து ஒரு T20 ஆட்டத்தை நீங்கள் இன்று எளிதில் கணித்து விட முடியும். பல அணிகள் தமது சிறந்த மட்டையாளர்களை 6, 7வது வரிசையில் இறக்குகிறார்கள். பதினைந்து ஓவர்களுக்குள் விக்கெட் விழக்கூடாது என்று அவ்வளவு கவனமாக இருக்கத் துவங்கி விட்டார்கள். விளைவாக ஒரு ரோஸ் டெய்லர், தோனி அல்லது டிவில்லியர்ஸ் களமிறங்கும் போது ஓவர்கள் மீதமிருப்பதில்லை. தோனியின் 110க்கு குறைவான ஸ்டிரைக் ரேட்டும் அதனால் இந்தியா பல ஆட்டங்களில் பின்னடைவை பெற்றதும் இந்த தற்போதைய தயக்க மனநிலைக்கு சிறந்த உதாரணம். தோனியின் கீழ் சென்னை சூப்பர் கிங்ஸ் கூட அவ்வளவு விறைப்பாகத் தான் ஆடுகிறார்கள். இந்திய அணி பல சமயங்களில் மூன்று விக்கெட்டுகள் இழந்த நிலையில் 6 ரன்கள் சராசரியில் ஒரு T20 ஆட்டத்தை நிறைவு செய்வது டெஸ்ட் ஆட்ட அதிகவனத்தினால் தான். 19வது ஓவரில் கூட தோனிக்கு ஒரு பந்து அடிப்பதற்கு உகந்தது எனத் தோன்றாவிட்டால் அதை பவ்யமாக கவர் பக்திக்கு விரட்டி ஒற்றை ஓட்டமெடுப்பார். 20வது ஓவரின் இறுதிப் பந்தில் தான் அவர் எல்லா தயக்கத்தையும் துறந்து விக்கெட் போனால் போகட்டும் என்று ஆவேசமாக ஆடுவார். கெ.ஸ் ரவிக்குமார் தனது படங்களின் இறுதிக்காட்சியில் முகம் காட்டுவது போல அதனால் எதிர்விளைவோ பயனோ இருப்பதில்லை.

பாகிஸ்தான், ஆஸ்திரேலியா தவிர பிற அணிகள் பலவும் தோனியின் வழியில் T20யை மைலாப்பூர் மதியவேளை இலவச கச்சேரி போல் ஆக்கி விட்டன. ஒருநாள் கிரிக்கெட்டை அதன் மரபான இறுக்கத்தில் இருந்து மூர்ச்சை தெளிவிக்க இரண்டாவது பவர்பிளே அறிமுகப்படுத்தினார்கள். அது இறுதியில் மட்டையாளர்களுக்கு அல்லாமல் பந்து வீச்சாளர்களுக்கே பயன்பட்டது. இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் பவர்பிளே இல்லாத போது ஓவருக்கு பத்து ஓட்டங்கள் எடுப்பது கூட எளிதாக இருக்கிறது. ஆனால் 35-40 ஓவர்களுக்குள் கட்டாய பவர்பிளே துவங்கியதும் ஓட்டமெடுப்பது சிரமமாகி விக்கெட்டுகள் சாய்கின்றன.

சமீபமாக நம்மூர் ஆட்கள் அமெரிக்காவில் இருந்தபடி இணைய காணொளி சேட் வழி மந்திரம் சொல்லி தர்ப்பணம் பண்ணும் செயல் நிரூபிப்பது போல சாணி தட்டுவதற்கு கூட முன்னேற்றம் என்ற பெயரில் அறிவியலை பயன்படுத்த முடியும். இறுக்கமான மனநிலை அதே போல் தொடரும் போது விதிகளை மாற்றுவது T20 கிரிக்கெட்டுக்கும் இதே போல பயன்படாது. சிறந்த T20 ஆட்டங்களை முதிர்ச்சியற்ற புதிய வீரர்கள் ஆடும் போது மட்டுமே நாம் காண முடியும். பத்தொன்பது வயதானவர்களுக்கான உலகக்கோப்பை போல T20 ஆட்டங்களுக்கும் வயது நிர்ணயிப்பது ஒருவேளை பயன்படலாம். T20யை வயதானவர்கள் கூட திறமையாக ஆடலாம் என்பதை ஹஸ்ஸி, காலிஸ் போன்ற மட்டையாளர்கள் நிச்சயம் நிரூபித்துள்ளனர். ஆனால் அது ஒய் திஸ் கொலவெறியை ஏசுதாஸ் பாடுவது போல நெருடலாகவே இருக்கும். நான் பரிந்துரைப்பது நட்சத்திர மதிப்பு கிரிக்கெட் தீர்மானங்களை வழிநடத்தும் காலத்தில் நடைமுறை சாத்தியமில்லாததாக இருக்கலாம்.. ஆனால் உண்மையில் வயதானவர்களை குழந்தைகளாக நடிக்க வைப்பதை விட குழந்தைகளுக்கு மீசை ஒட்டி பேச வைப்பது இன்னும் எதார்த்தமாக இருக்கும்.

சச்சின் முதல் T20 உலகக்கோப்பையிலேயே புரிந்து கொண்டது போல ஆழமான புரிதல், உறுதியான தொழில்நுட்பம், 20 வருட அனுபவம் ஆகியவை T20க்கு தேவையற்ற களைப்பூட்டும் பாரம் மட்டுமே. அவரைப் போன்று தோனி, காலிஸ், ஹஸ்ஸிக்கள், தாம் எவ்வளவு சிறந்த கலைஞர்களாக இருந்தாலும், விலகி நின்றிருந்தால் இது போன்ற ஆட்டத்தொடர்கள் எதிர்பாராத் தன்மையுடன் இன்னும் விறுவிறுப்பாக இருந்திருக்கும். பலசமயங்களில் குழந்தைகள் ஆடுகிறார்கள், நாம் தள்ளி நின்று பார்ப்போமே என்று ஏற்கவும் ஒரு பக்குவம் வேண்டும்.

Read More

Contact Us

So you think we’re the right folks for the job? Please get in touch with us, we promise we won't bite!



Designed By Blogger Templates