Wednesday, 28 November 2012

நல்ல மாணவர்களும் கெட்ட மாணவர்களும்




பொதுவாக கல்லூரியில் சில வகுப்புகள் பாடமெடுக்க கடுமையானவை என சொல்வார்கள்.
நான் படிக்கும் போது வரலாறு துறைக்கு போக ஆசிரியர்கள் பயப்படுவார்கள். பின்னர் ஆசிரியராக சேர்ந்த பிறகு அது பொருளாதாரம், கார்ப்பரேட் செக்ரடிஷிப் போன்றவையாக இருந்தது. இத்துறை மாணவர்கள் சொன்னால் கேட்க மாட்டார்கள், கூச்சலிடுவார்கள், கவனிக்க மாட்டார்கள், பண்பற்று நடந்து கொள்ளுவார்கள் என சக ஆசிரியர்கள் சதா நீளமான புகார் பட்டியல் வைத்திருப்பார்கள். இந்த வகுப்புகளை விட நல்ல வகுப்புகளுக்கு போவதையே விரும்புவார்கள்
.
எனக்கும் புத்திசாலியான பண்பான மாணவர்கள் உள்ள வகுப்புகளோ பிடித்தது. டைம்டேபிளில் எனக்கு அம்மாதிரி வகுப்புகள் கிடைக்கும் படி பார்த்துக் கொண்டேன். கடந்த மூன்று வருடங்களில் அவ்வகுப்புகளில் என பல இனிமையான அனுபவங்கள் ஆசிரியனாக வாய்த்துள்ளன. முன்னால் மட்டமான வகுப்புக்கு போவது நினைத்தாலே மனதுக்குள் கலவரமாக கசப்பாக இருக்கும். ஏதோ தண்டனை என நினைத்துக் கொள்வேன். ஆனாலும் ஒரு கட்டத்தில் இந்த நிலைப்பாடு மாறியது.
எனக்கு எல்லா வகுப்புகளும் ஒன்று தான் என தோன்ற ஆரம்பித்தது. மாணவர்கள் தம் அறிவு/பண்பாட்டு நிலையை தாண்டி ஒரே மாதிரியானவர்கள் தாம். அவர்களின் மனப்புள்ளியை தொட்டு விட்டால் நாம் பேசுவதை கவனிப்பார்கள். பரிவாக மரியாதையாக நடந்து கொண்டால் நம்மை திரும்ப மதிப்பார்கள். நட்பு பாராட்டினால் நண்பர்கள் ஆவார்கள். இதில் நல்ல மாணவன் கெட்ட மாணவன் எல்லாம் இல்லை.
படிக்கும் படிக்காத வகுப்புகள் எனக்கு ஒன்றாக தோன்ற ஆரம்பித்தது தான் நான் பின்னால் சொன்ன மாற்றம். வகுப்புக்கு ஏற்றபடி நான் பேசுவதும் நடந்து கொள்வதும் நுட்பமான வகையில் வேறுபட்டிருக்கும். ஆனால் நான் தொடர்ந்து உரையாடுவது முகமற்ற ஒரு மக்கள் கூட்டத்துடன் தான் என்கிற உணர்வு எனக்கு இப்போதெல்லாம் வகுப்பில் ஏற்படுகிறது. அவர்களுக்கு என் மொழியும் உணர்வுகளும் அபிப்ராயங்களும் புரியும். அவர்களுக்கு தேவையானதை சொன்னால் கவனிப்பார்கள். பின்னால் மறந்து விடுவார்கள் அல்லது நினைவில் வைப்பார்கள். ஆனால் உரையாடுவதை தவிர ஒன்றுமே பொருட்டல்ல என்ற நிலைக்கு வந்து விட்டேன்.
மாணவர்களை திருத்துவதில் மாற்றி அமைப்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. நான் கவனிக்கும் மாணவர்கள் முதிர்ச்சியானவர்களாக புத்திசாலிகளாகவே எப்போதும் படுகிறார்கள். அவர்களுக்கு நான் அதனால் அறிவுரை சொல்வது இல்லை. அவர்களுக்கு நான் பொறுப்பெடுப்பதில்லை. அவர்களே அவர்களுக்கு பொறுப்பு. அதனால் எனக்கு எந்த மாணவர் இடத்தும் ஏமாற்றம் இல்லை. நான் வகுப்பில் இதுவரை ஒருவரிடம் கூட கத்தினதில்லை. கோபம் என்பது ஆசிரியரின் இயலாமையில் இருந்து தோன்றுவது. வகுப்பில் ஏதாவது ஆசிரியர் கத்துவது பார்த்தால் எனக்கு அவரிடத்து தான் பரிதாபம் தோன்றும்.
இம்முறை புதுக்கல்லூரியிலும் ஒரு குறிப்பிட்ட துறையை குறிப்பிட்ட ஒரு சக ஆசிரியர் அம்மாணவர்கள் ரொம்ப சேட்டைக்காரர்கள் என்றார்கள். நான் புன்னகைத்தேன். உண்மையில் எனக்கு இதுவரை கூச்சலிடும் ஒழுக்கமற்ற வகுப்புகளால் பிரச்சனையே வந்ததில்லை. நான் அவர்களை கையாள சின்ன உத்திகள் சில வைத்துள்ளேன்.
நாய்ப் பயிற்சியில் ஒன்று சொல்வார்கள். நாயிடம் ஆணை கொடுக்கும் போது நிமிர்ந்து நின்று வலுவான குரலில் சொல்ல வேண்டும் என்று. கொஞ்சம் தயங்கினால் தன்னம்பிக்கை இன்றி கட்டளையிட்டால் நாய் எளிதில் நம் அச்சத்தை கிரகித்து விடும். நாயைப் பொறுத்த மட்டில் ஒன்றில் நீங்கள் அதன் எஜமானன் அல்லது அது உங்களுக்கு எஜமானன். அதற்கு சமத்துவம் எல்லாம் புரியாது. அதனால் உடல்மொழி ரொம்ப முக்கியம். வகுப்பிலும் இதுவே உண்மை.
மெல்ல புன்னகைத்து நாணிக் கோணி தயங்கிப் பேசும் வாத்தியார்களை மாணவர்கள் பார்த்தமட்டிலும் ஆதிக்கம் பண்ண துவங்கி விடுவார்கள். சீண்டி சத்தம் போட்டு பூனை எலியுடன் போல் விளையாடுவார்கள். ஆசிரியருக்கு கோபம் மிக மிக மாணவர்களுக்கு அதிக உற்சாகம் பிறக்கும். அவர்கள் மேலும் மேலும் சீண்டுவார்கள். ஆசிரியர் மிரட்டுவார்; அறிவுரை சொல்லுவார். இதெல்லாம் கேட்க மாணவர்களுக்கு பொழுதுபோக்காக இருக்கும். இது ஒரு மாணவனாக என் தனிப்பட்ட அனுபவம்.
ஆக நான் முதலில் வகுப்பில் நுழைந்ததும் சிரிக்கவோ மாணவர்களின் கண்களில் பார்க்கவோ பதற்றத்தை காட்டவோ மாட்டேன். ஒன்றுமே நடக்காதது போல் நுழைந்து யாருமே பொருட்டில்லை என்கிற பாவனையில் புத்தகத்தை எடுப்பேன். முகத்தை கடுகடுவென்று வைத்துக் கொள்வேன். யாராவது பேசுவது பார்த்தால் “பேசாதே” என்று கத்தவோ ஸ்ஸ் புஸ் என்று குரலெழுப்பவோ மாட்டேன். எழுப்பி விடுவேன் அல்லது வெளியே நிற்க வைப்பேன். கொஞ்ச நேரத்தில் திரும்ப அனுமதிப்பேன். ஆனால் வகுப்பு தொடர்ந்து கூச்சலிடுகிறதென்றால் அதை என் குறைபாடாக நினைத்து ஆத்திரப்பட மாட்டேன். 80 பேர் கொண்ட வகுப்பில் நாற்பது பேரை வெளியே அனுப்ப தயங்க மாட்டேன். அப்போதும் அடங்க மாட்டார்கள் என்றால் அவர்களின் துறை ஆசிரியர்கள் நடமாடும் பகுதியாய் பார்த்து நிற்க வைப்பேன். எப்போதும் பத்து பேரை வெளியே அனுப்பும் போது வேறு பத்து பேரை மன்னித்து உள்ளே சேர்த்துக் கொள்வேன். இது ஒரு சுழற்சி முறையில் நடந்து கொண்டே இருக்கும். பெரும்பாலும் எழுந்திரு, வெளியே போ கூட சொல்ல மாட்டே. சைகை தான். இதுவும் முக்கியம். வகுப்பில் வெளியே அனுப்புவது எழுந்து நிற்க வைப்பது எல்லாம் பண்ணிக் கொண்டே வகுப்பெடுத்துக் கொண்டு இருப்பேன். நீங்கள் சத்தம் போடுவதெல்லாம் எனக்கு பொருட்டல்ல என்பது நான் அவர்களுக்கு மறைமுகமாக சொல்லும் சேதி.
அடுத்து வகுப்பில் இடையிடையே பிரேக் கொடுத்து அப்போது நேரடியாக மாணவர்களிடம் சென்று அவர்களது குடும்பம் பற்றி விசாரிப்பேன். பாடத்தில் ஏதாவது திரும்ப சொல்ல வேண்டுமா எனக் கேட்பேன். ஆங்கில இலக்கணம் என்றால் பல மாணவர்களுக்கு பயிற்சி கேள்விகளுக்கு விடை தெரியாமல் இருக்கும். அவர்கள் பிறர் முன்னிலையில் கூச்சம் காரணமாக சந்தேகம் கேட்க மாட்டார்கள். அவர்கள் ஒவ்வொருவருக்கு தனித்தனியாக சொல்லித் தந்து விடையும் எழுதிக் கொடுப்பேன். எவ்வளவு மட்டமான மாணவனாக இருந்தாலும் அவமானப்படுத்த மாட்டேன். சில பேருக்கு என்ன சொல்லிக் கொடுத்தாலும் புரியாது. அவர்களுக்கு விடை மட்டும் சொல்லித் தந்து உதவி செய்வேன். நாம் அவர்களை கண்டிக்காமல் உதவி செய்கிறோம் என்பதே அவர்களுக்கு வெகுவாக பிடித்துப் போகும்.
தண்டனை அளித்த மாணவர்களிடம் சென்று அறிவுரை எல்லாம் சொல்ல மாட்டேன். அவர்களை புன்னகையோடு அணுகி நட்பார்ந்த முறையில் பேசுவேன். சிலர் மன்னிப்பு கேட்பார்கள். அசட்டையாக கேட்பது போல விட்டு விடுவேன். வெளியே பார்க்கும் போதும் நான் வகுப்பில் சேட்டை பண்ணும் மாணவர்களிடம் தான் அதிக நட்போடு பழகுவேன். ஆனால் அதே மாணவர்களை அடுத்த வகுப்பில் பேசி கூச்சலிடும் போது தயவு பார்க்காமல் வெளியே அனுப்பி விடுவேன். சார் நம்மை தண்டித்தாலும் அவருக்கு நம்மை பிடிக்கும் என்கிற சித்திரம் அவர்களுக்கு ஏற்படும். நம் மீது வெறுப்பு தோன்றாது. இதுவரை நான் வகுப்பில் அதிகம் தண்டித்த மாணவர்கள் தான் என்னிடம் அதிக பிரியமாக இருந்திருக்கிறார்கள்.
முக்கியமாக, மாணவர்களிடம் நியாய உணர்வு அதிகம். தவறுக்கு தண்டனையை தயக்கமின்றி ஏற்பார்கள். தண்டிக்காத ஆசிரியர்களை அசடு என்றும் நினைப்பார்கள். தண்டனை என்பது வெறும் சடங்கு தான். முதிர்ச்சியற்ற கலவர வகுப்புகளில் உள்ள மாணவர்களுக்கு இந்த சடங்கு முக்கியம். இந்த சடங்கு வழி தான் நாம் அவர்களை நெருங்குகிறோம்.
எல்லா வகுப்பிலும் தொடர்ந்து பேசிக் கொண்டே இருப்பவர்கள் இருப்பார்கள். சின்ன வகுப்பென்றால் யாரையும் வெளியே அனுப்ப மாட்டேன். ஓரளவுக்கு மேல் நிற்க வைத்தும் அவர்களை கட்டுப்படுத்த முடியாமல் போகும் போது குறிப்பிட்ட மாணவரிடம் சென்று தனிப்பட்ட முறையில் பேசுவேன். ஏன் பேசுறீங்க என்றோ அமைதியா இரேன் என்றோ கெஞ்ச மாட்டேன். அவர்கள் அப்பா அம்மா பற்றி விசாரிப்பேன். நான் கவனித்ததில் மத்திய கீழ்மத்திய மாணவர்களிடம் குடும்பம் பற்றி விசாரித்ததும் நம்மிடம் ஒரு கூச்சம் வந்து விடும் அவர்களுக்கு. பிறகு நம் முன்னிலையில் பேச தயங்குவார்கள். எளிதில் நெருங்கி விடுவார்கள்.
இறுதியாக ஒருங்கிணைந்த பாணியில் கூச்சலிடும் மாணவர்கள் இருக்கிறார்கள். ஒரு பக்கம் கட்டுப்படுத்தினால் இன்னொரு பக்கம் கூச்சல் எழும். நம்மை மிகவும் களைத்துப் போக வைப்பார்கள். இவர்களிடம் ரொம்ப லகுவாக நடந்து கொள்வேன். இனிமையாக நடந்து கொள்வேன். அவர்களுக்கு தேவையானபடி வகுப்பெடுப்பேன். சில வகுப்புகளில் நம்மிடம் நெருங்கி விடுவார்கள். இவர்களின் பிரச்சனை தொடர்ந்து பிற ஆசிரியர்கள் மட்டம் தட்டி அந்நியப்படுத்துவது தான். அவர்களை சமமாக நடத்தி அக்கறை காட்டினால் நெருங்கி பண்பாகி விடுவார்கள். இப்படியான மாணவர்கள் பொதுவாக பிடித்த ஆசிரியர்களிடம் பாச மழை பொழிவார்கள். ஆசிரியர்கள் தாம் தம் எல்லை அறிந்து நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லையென்றி விதூஷகன் ஆக்கி விடுவார்கள்.
இன்னொரு விசயம் நம் ஈகோ. மாணவர்கள் நாம் பாடமெடுக்கும் போது பேசினால் நம்மை மதிக்கவில்லை என்று ஆத்திரம் பொங்கும். இது உண்மையல்ல. நாம் பேசுவது அவர்களுக்கு புரியாமலோ ஆர்வம் ஏற்படுத்தாமலோ இருக்கலாம். எழுபது எண்பது பேருக்கு புரியும்படி ஆர்வமூட்டும் படி பாடமெடுப்பது சாத்தியம் அல்ல. பாடம் கசப்பான மருந்து தான். ஓரளவுக்கு மேல் அதனை சுவையாக்கவும் கூடாது. ஆக, சிலர் தூங்கினால் கொட்டாவி விட்டால் பராக்கு பார்த்தால் கொஞ்சம் முணுமுணுத்தால் பொருட்படுத்த மாட்டேன். அவர்களை கவனிப்பதாகவே காட்டிக் கொள்ள மாட்டேன்.
குறிப்பாக யாராவது நாம் பேசும் போது சிரித்தால் நம்மை கேலி பண்ணுவதாக தவறாக நினைத்துக் கொண்டு ஆத்திரப்படுவோம். பொதுவாக ஆசிரியர்களுக்கு ஆகப்பெரிய குற்றமாக படுவது வகுப்பில் மாணவர்கள் தமக்குள் சிரிப்பது தான். நாம் மகத்தான காரியங்களை பேசிக் கொண்டிருக்கும் போது அவர்களுக்கு இன்னும் சுவாரஸ்யமான தகவல்கள் தமக்குள் பரிமாற வேண்டி இருக்கலாம். தனிப்பட்ட ஜோக்குகளை சொல்ல நேரலாம். இது ஒன்றும் குற்றமல்ல.
ஒரு வகுப்பில் நாற்பது நிமிடங்கள் உரையில் 15 நிமிடங்கள் தாம் ஆதாரமானதாக இருக்கும். பெரும்பாலும் சொன்னதையே திரும்ப சொல்லி ஆதாரம் காட்டி நிறுவிக் கொண்டிருப்போம். ஒருவர் வகுப்பில் கொஞ்ச மட்டுமே கவனித்து தேவையானதை கிரகித்துக் கொள்ளலாம். சிலருக்கு தொடர்ந்து கவனிக்கும் திறன் அடிப்படையில் இருக்காது. அவர்களை எல்லாம் என்னை மட்டுமே கேள் என துன்புறுத்துவது கூடாது. ஆக நான் பேசுவதை முழுமையாக கேட்க விரும்பினால் கேட்கலாம், இல்லை கவனம் சிதறினாலும் பரவாயில்லை. அதிகம் தொந்தரவில்லாமல் கவனம் சிதற விடுபவரை நான் பொருட்படுத்துவதில்லை.
எழுபது பேர் நிசப்தமாக நம்மை கவனிப்பது போல் சில வகுப்புகளில் ஒரு தோற்றம் எழும். அது சில வகுப்புகளின் பண்பாடு. ஆர்வம் இல்லையென்றாலும் கவனிப்பது போல் மாணவர்கள் நடிப்பார்கள். பல ஆசிரியர்களுக்கு தம் உரையை எழுத்து விடாமல் மாணவர்கள் உள்வாங்குவதாய் ஒரு கிளுகிளுப்பு தோன்றும். அமைதியான வகுப்பில் இயல்பாகவே ஆசிரியருக்கு ஒரு நிறைவைத் தரும். ஆனால் இது வெறும் போலித் தோற்றமே.
எப்போதும் 70 இல் 25 பேர் தான் கவனிப்பார்கள். அவர்களில் 15 பேருக்கு என்னமோ பேசுகிறார் என்கிற அளவில் தான் புரியும். பத்து பேருக்கு சில விசயங்கள் தெளிவாக புரியும். ஐந்து பேருக்கு பெரும்பாலும் புரியும். சில வகுப்புகளில் இந்த ஐந்து ஒன்றாகக் கூட இருக்கலாம். நல்ல குரல் வளம், சரளமான மொழி, தெளிவான வெளிப்பாடு, நாடகியமான தன்னம்பிக்கையான உடல்மொழி கொண்ட ஆசிரியர்கள் ஒன்றும் புரியாத மாணவர்களை கூட ஆர்வமாக பார்க்க வைப்பார்கள். அவர்களுக்கு இந்த ஆசிரியர் குறித்து நல்ல அபிப்ராயம் இருக்கும். ஆனால் என்ன சொன்னார் என்று கேட்டால் தெரிந்திருக்காது.
வகுப்பில் எல்லாரையும் ஈர்ப்பதை விட எல்லாருக்கும் முழுமையாக புரிய வேண்டும் என எதிர்பார்ப்பதை விட அங்குள்ள மனங்களுடன் ஒரு தொடர்புநிலையை நம் பேச்சில் தக்க வைப்பது, நமது பேச்சின் ஆதார தொனியை மனதில் பதிக்க வைப்பது ஆகியவை மிகுந்த உத்வேகம் தரும் காரியங்கள். ஒரு கட்டுரையாக எழுதுவதை காட்டிலும் நேரடியாக நூற்றுக்கணக்கான் இளம் மனங்களுடன் தொடர்புறுத்துவது அதிக மன எழுச்சி தருவது. உண்மையில் மனிதர்களுடன் தொடர்ந்து பேசுவதும் அதற்கான ஒரு வெளியை எளிதாக பெறுவதும் ஆசிரிய வேலையில் தான் சாத்தியம். நம்மில் மிகச்சிலருக்குத் தான் அந்த பாக்கியம் வாய்க்கிறது.
எத்தனை பேர் தம் கருத்துக்களை யாரிடமாவது பகிர தவிக்கிறார்கள். இன்று மிகப்பெரிய தனிமை நம்மை சூழும் நிலையில் வகுப்புகள் நம்மை மனிதர்களில் ஒரு மனிதராக உணர வைக்கின்றன. இதனாலேயே மூன்று மணிநேரங்கள் தொடர்ந்து வகுப்புகளில் பேசியும் நான் களைப்பாக உணர்ந்ததில்லை. ஏனென்றால் வேறெங்கும் நம் குரலை கவனிக்க செவிகள் இல்லை. தனிமை தானே நம்மை எளிதில் களைக்க வைக்கிறது.
இந்த காரணங்களால் தான் எனக்கு நல்ல மாணவர்கள் - கெட்ட மாணவர்கள் என்கிற எதிர்நிலை போலியாக தோன்றுகிறது. எல்லா வகுப்புகளில் இருப்பதும் ஒரே முகங்கள் தாம். அவர்களின் குரலாக மாறி அவர்களோடு உரையாடுவது ஒரு மகத்துவமான அனுபவம். ஒருமுறை கல்வியில் ஒதுக்கீடு பற்றி விவாதம் வந்தது. அப்போது குலக்கல்வி முறையை எதிர்த்து திராவிடர் கழகம் போராடியது, அந்த முறையை கொண்டு வராமல் போன ஏமாற்றத்தில் ராஜாஜி ராஜினாமா செய்தது பற்றி சொன்னேன். பிறகு “குலக்கல்வி முறை இருந்திருந்தால் நீங்கள் எல்லாம் இன்று கல்லூரிக்கு வந்து இந்த வகுப்பில் அமர்ந்து கொண்டிருக்க மாட்டீர்கள்” என்றேன். அப்போது மாணவர்களின் முகங்களில் தென்பட்ட பல்வேறு பாவனைகளை கண்ணில் கடந்து போன நிழல், வெளிச்சங்களை என்னால் மறக்க முடியாது. இது தான் ஆக முக்கியமான அம்சம். மனிதர்களோடு அவர்களின் ஆதார வாழ்க்கைப் பிரச்சனை பற்றி அணுக்கமாக உரையாட வேறு எங்குமே வாய்ப்போ வெளியோ இல்லை. வாசக-எழுத்தாள உறவை விட உக்கிரமானதாக ஆசிரிய-மாணவ உறவு அங்கு மாறுகிறது.
Read More

Tuesday, 27 November 2012

இந்தியர்களின் விதிக் கோட்பாடும் கிரிக்கெட்டின் DRS சர்ச்சையும்


இந்திய அணி வீரர்கள் ஏன் DRS தொழில்நுட்பத்தை தவிர்க்கிறார்கள் என்பது அனைவருக்கும் பெருங்குழப்பதை ஏற்படுத்துகிறது.
சில வருடங்களுக்கு முன்னர் இலங்கையில் டெஸ்டு தொடர் ஒன்றை இழந்தோம். அப்போது DRS பயன்படுத்தப்பட்ட போது பல எல்.பி.டபிள்யோ முடிவுகள் இந்தியாவுக்கு எதிராக போனதாக சொல்லப்படுகிறது.
இந்தியாவின் தரப்பில் இருந்து சொல்லப்படுகிற காரணம் இத்தொழில்நுட்பம் துல்லியமானது அல்ல, இதில் தவறுகள் நேரலாம் என்பது. மறுதரப்பில் இருந்து DRS தொழில்நுட்பம் பொதுவாக நடுவர்களின் மோசமான தவறுகளை குறைக்க உதவுகிறதே, சின்ன குறைகளுக்காக நாம் பெரிய பயன்களை விட்டுத் தர வேண்டுமா என்று ஒரு தர்க்கம் வைக்கப்படுகிறது.
DRSஐ ஆதரிக்கும் தரப்பினர் இருவகை. ஒன்று முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ரவிசாஸ்திரி போன்று நடுவர்களின் படுமோசமான சொதப்பல்களை தவிர்க்க இது உதவும் என வலியுறுத்துபவர்கள். நடுவர்களும் தம் பங்குக்கு சில வேளை குச்சிகளுக்கு வெளியே விழும், மேலே எழும், மட்டை உள்விளிம்பில் படும் பந்துகளுக்கு எல்லாம் எல்.பி.டபிள்யோ கொடுக்கிறார்கள். இதை நேரடியாக சில நொடிகளுக்குள் அவசரமாக பார்க்கையில் நமக்கு புலப்படாது. ஆனால் டிவியில் மெதுவாக காட்சிகள் பெரிதுபடுத்தப்பட்டு திரும்பத் திரும்ப காட்டப்படுகையில் அசட்டுத் தவறுகளாக பார்வையாளர்களுக்கு நிச்சயம் படுகின்றன. சமீக காலத்தில் இதனால் கிரிக்கெட் வீரர்களை விட கடுமையான மீடியா கண்காணிப்புக்கும் கண்டனத்துக்கும் அதனாலான அழுத்தத்துக்கும் உள்ளாகுபவர்கள் நடுவர்களே. மேலும் ஒரு நடுவரின் உயரம் பொறுத்தும் எல்.பி.டபிள்யோ முடிவுகள் மாறுபடும். ஏனென்றால் பந்தின் உயரம் பார்க்கும் ஆளின் உயரத்தை பொறுத்து மாறுபட்டு தெரியும்.
இன்னொரு தரப்பினர் அறிவியலை விளையாட்டில் பயன்படுத்துவது அவசியம் என நம்புபவர்கள். இவர்கள் அறிவியல் தொழில்நுட்பம் அப்பழுக்கற்றது என நம்புபவர்கள். ஆனால் DRS தொழில்நுட்பம் உண்மையிலேயே முழுமையானதா, அது தவறு செய்யாதா? இந்த கேள்வி முக்கியம்.

இத்தொழில் நுட்பம் பெரும்பாலும் எல்.பி.டபிள்யு முடிவை சீர்தூக்கவே பயன்படுகிறது. நடுவரின் முடிவை மறுபரிசீலனை செய்ய மட்டையாளனுக்கு வாய்ப்புகளை அளிக்கிறது. DRS மூன்று பகுதிகளைக் கொண்டது.
1)   ஸ்நின்னோ மீட்டர் – இது கேட்சின் போது பந்து நிஜமாகவே மட்டையை தொட்டதா என அறிய பயன்படுகிறது. மைக்ரோபோன் மூலம் மிக துல்லிய ஓசைகளை பெருக்கி பந்து மட்டை பக்கத்தில் வருவதில் இருந்து கடந்து செல்வது வரையிலான தொலைவில் ஏற்படும் ஓசையை கண்டறிந்து முடிவை சொல்லுகிறது. ஆனால் இது முழுமையாக ஏற்கத்தக்கது அல்ல. மிக நுண்மையான விளிம்பு படுதல்களை (edge) நாம் அறுதியிட்டு கூறவே முடியாது. பந்து தொடாதது கண்ணுக்கு உறுதியாக தெரியும் பட்சத்திலும் அவ்வேளையும் வேறாதவது ஓசை எழுந்தால் ஸ்நிக்கோ தவறாக கூறலாமில்லையா? ஆனால் அப்பட்டமான விளிம்பு படுதல்களை நடுவர் காணாமல் விடும் போதும் அல்லது ஓரளவு சந்தேகமுள்ள முடிவுகளை உறுதி செய்யவும் ஸ்னிக்கோ உதவலாம். கடந்த உலகக் கோப்பையில் ஆஸி-பாக் ஆட்டத்தில் ரிக்கி பாண்டிங் பந்து மட்டை விளிம்பு பட்டும் நடுவர் கவனிக்காததால் வெளியேற மறுத்தார். “அம்பயர் சொல்லவில்லை என்றால் நான் வெளியேற மாட்டேன், எனக்கே நான் அவுட் என்று தெரிந்தாலும் கூட” என அவர் பிற்பாடு நியாயப்படுத்தக் கூட செய்தார். ஆனால் அந்த ஆட்டத்தில் DRS மூலம் இத்தவறு கண்டுபிடிக்கப்பட்டு அவர் உடனே வெளியேற்றப்பட்டார்.
2)   ஹாட்ஸ்பாட். இதுவும் பந்து மட்டை விளிம்பை உரசியதா என அறியத்தான்.
3)   ஹாக் ஐ. இது பந்தின் உயரத்தையும், அது எந்த திசையில் பயணிக்கும் என ஊகிக்கவும் பயன்படுகிறது. உண்மையில் இந்த திசை மற்றும் உயரத்தை கணிப்பது தான் நடுவர்களுக்கு மிகவும் சிரமம். இவ்விசயங்கள் அவர்கள் குச்சிக்கு நேரே நின்று பார்க்கும் போது ஒருவாறாகவும் பக்கவாட்டில் நிற்கும் பந்து வீச்சாளனுக்கு வேறு விதமாகவும் தெரியும். அதனால் தான் பந்து வெளியே போகிறது அல்லது ரொம்ப உயரத்தில் இருக்கிறது என நடுவர் அவுட் கொடுக்க மறுக்கும் போது வீச்சாளர்கள் ஏற்க தயங்குகிறார்கள்.

இவ்விசயத்தில் தொழில்நுட்பத்தை ஒன்றில் நாம் கேள்வியின்றி நம்பலாம்; ஏற்கலாம். அல்லது நம் ஊகத்தின் படி அது சரியாக உள்ளதா என ஆராயலாம். டி.வியில் ஒரு பார்வையாளன் பார்க்கிற போது ஹாக் ஐ பல சமயங்களில் அவனை ஆச்சரியப்படுத்துகிறது. வெளியே போவதாய் நாம் நினைக்கும் பந்துகள் உண்மையில் ஆப் குச்சியை தொடும் என்றோ, நடுக்குச்சியை தொடும் என நாம் நினைத்த பந்துகள் வெளியே போகும் என்றோ ஹாக் ஐ சொல்லக் கூடும். முக்கியமாக ஆப் அல்லது கால் குச்சியை பந்து லேசாக தொடுகிறது என ஹாக் ஐ சொல்லிற்று என்றால் நடுவர் மட்டையாளருக்கு அவுட் கொடுத்து விடுவார். இந்த தொழில்நுட்பத்தின் துல்லியம் உறுதியாகாத பட்சத்தில் இப்படியான மில்லிமீட்டர் கணக்குப்படியான முடிவுகள் படு அநியாயமாக நமக்குத் தெரிகின்றன. அதாவது நமக்கு தெளிவாக தெரிகிற முடிவுகளைக் கூட ஹாக் ஐ மறுக்கக் கூடும்.

DRSக்கு இந்தியர்கள் மட்டுமே முழுமையாக எதிர்ப்பு தெரிவிப்பது. இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, இலங்கை ஆகிய நாடுகள் தமக்குள் ஆடும் போது தாராளமாக இதை பயன்படுத்துகின்றன. சமீபமாக பாகிஸ்தானும் இங்கிலாந்தும் ஆடிய டெஸ்ட் தொடரில் பெரும்பாலான DRS முடிவுகள் இங்கிலாந்துக்கு எதிராக சென்றன. இம்முடிவுகள் சரியானவை அல்ல எனவும் இங்கிலாந்து ஆதரவாளர்களில் ஒரு தரப்பினர் கூறுகின்றனர். ஆனால் இம்முடிவுகளை அதிகம் பயன்படுத்தின் பாகிஸ்தானின் அஜ்மல் 2011 இந்தியாவுக்கு எதிரான உலகக்கோப்பை ஆட்டத்தில் DRS முடிவுகள் தன் அணிக்கு எதிராக அநியாயமாக அமைந்ததாக குற்றம் சாட்டினார். DRSஐ பொறுத்தவரையில் வீரர்கள் தமக்கு சாதகமாக அமையாத போதெல்லாம் அதனை மறுக்கிறார்கள். அதாவது துல்லியமான அறிவியல் தொழில்நுட்பம் என நம்பி அதனை ஏற்ற ஒரு நாட்டின் வீரரே அதனை எதிர்க்கும் உதாரணத்தை இங்கு நாம் காண்கிறோம்.

கடந்த உலகக் கோப்பையில் இந்தியா கட்டாயமாக DRSஐ ஏற்க நேர்ந்தது. அப்போது இங்கிலாந்துக்கு எதிரான ஒரு ஆட்டத்தில் முக்கிய முடிவு ஒன்று DRS காரணமாக இந்தியாவுக்கு எதிராக ஆனது. அப்போது எல்.பி.டபிள்யோவுக்கு பந்து குச்சியில் இருந்து 2.5 மீட்டருக்குள் இருக்க வேண்டும் என ஒரு விதி இருந்தது. அதன் காரணமாக முடிவு எடுக்கப்பட தோனி இதனை கண்டித்து பேசினார். பின்னர் அந்த விதி மாற்றப்பட்டது. இவ்வாறு இந்தியாவுக்கு சில எதிர்மறை அனுபவங்கள் இருப்பதால் தோனியின் அணி DRSஐ எதிர்ப்பதாக சொல்லப்படுகிறது. எனக்கு இன்னொரு காரணமும் தோன்றுகிறது.

DRSஐ ஆதரிப்பது என்பது அறிவியலின் கரார்த்தனத்தை ஆதரிப்பாகும். கிரிக்கெட் போன்ற ஒரு ஆட்டத்தில் தொடர்ச்சியாக அதிர்ஷ்டம் ஏறி இறங்கிக் கொண்டிருக்கும். கிரிக்கெட் சந்தர்ப்பவசங்களின் ஆட்டம் எனவும் அறியப்படுகிறது. இந்தியர்களுக்கு இந்த ஆட்டம் பிரியமானதற்கு அது நமது மரபான விதிக்கோட்பாட்டுக்கு நெருக்கமாக இருப்பதும் காரணம்.

இந்தியர்கள் ஒரு துயரம் நிகழ்ந்ததென்றால் அது கண்காணாத ஒரு சக்தியின் விளையாட்டு என நம்ப தலைப்படுவார்கள். கிரிக்கெட்டில் இந்த சந்தர்பங்களின் கூட்டிணைவு ஒரு பெரும் நாடகமாக நம் முன் விரிகிறது. காரண காரிய கதையாடலாக அல்லாமல் காரணமே இன்றி எதிர்பாராமல் ஒரு பந்து அற்புதமாக அடிக்கப்படுவது, திடீரேன திரும்பும் ஒரு பந்து விக்கெட்டை வீழ்த்துவது, வெற்றி தோல்வி சாத்தியங்கள் தொடர்ச்சியாக தத்தளிப்பது நம் பாரம்பரிய மனதுக்கு பெரும் கிளர்ச்சியை தருகிறது. கிரிக்கெட்டை நாம் இந்திய வாழ்வின் பிரதிபலிப்பாகத் தான் காண்கிறோம். இங்கு எதுவுமோ எதிர்பார்த்தது போல் திட்டமிட்டது போல் நடப்பது இல்லை அல்லவா! இந்திய கிரிக்கெட் வீரர்களும் இதே போன்று ஒரு ஆட்டத்தில் அதிர்ஷ்டத்தின் பங்கை DRS பறித்து விடுவதாக அஞ்சுவதாய் ஊகிக்கிறேன். நாள் நன்றாக இருந்தால் இந்திய மட்டையாளன் அவுட் ஆனால் கூட நடுவர் கொடுக்க மாட்டார்; அதே போல் நடுவர் முடிவுகள் தவறாக அமைந்து இந்தியாவுக்கு சாதகமாக விக்கெட்டுகள் விழலாம். ஒரு கராறான அறிவியல் முடிவு கிரிக்கெட்டில் அதிர்ஷ்டத்துக்கான இடத்தை பெருமளவில் குறைத்து விடுகிறது. இது தோனியையும் அவரது வீரர்களையும் ஒரு ஐரோப்பிய மனநிலையில் ஆடத் வற்புறுத்துகிறது. என்ன நடந்தாலும் போராடிக் கொண்டே இருப்பது தான் வெற்றியை விட முக்கியம் என்பதே ஐரோப்பிய மனநிலை. ஆனால் ஒரு கிரிக்கெட் ஆட்டத்தின் வெற்றிக்காக பிரம்மாண்ட பூஜைகள் செய்யப்படும், சோதிடர்கள் மீடியாவில் ஆருடம் சொல்லும் ஒரு கலாச்சாரத்தில் அதிர்ஷ்டம் என்பது, சந்தர்ப்பவசம் என்பது தன்னம்பிக்கையை உத்வேகத்தை தரும் ஒன்றாகவும் தோல்வியை கேள்வியின்றி ஏற்பதற்கான சமாதானமாகவும் உள்ளது. இங்கு அதிர்ஷ்டத்தை மறுக்கும் காரியம் இந்திய வீரர்களை கொஞ்சம் பதற்றப்படுத்துகிறது என நினைக்கிறேன்.

அடுத்து DRS  ஒருநாள் போட்டிகளை விட டெஸ்டில் தான் அதிக முக்கியமாக தேவைப்படுகிறது. DRSஐ இந்தியா மறுத்த காலத்தில் இந்திய டெஸ்ட் வீரர்களில் பலரும் வயதானவர்களாக இருந்தார்கள். இக்காலகட்டத்தில் இந்திய வீரர்களில் பெரும்பாலும் பவுல்ட் அல்லது எல்.பி.டபிள்யோ முறையில் தான் வெளியேறினார்கள். ஏனென்றால் வயதாகும் போது பொதுவாக உடலின் மறிவினைத் திறன் (reflexes) குறைந்து போகிறது. கைகால்களின் இயக்கம் மந்தமாகிறது. பந்தின் நீளத்தை முன்கூட்டி கவனிக்கும் பார்வைத் திறனும் குறைகிறது. விளைவாக இந்திய மட்டையாளர்கள் பந்தை மட்டையால் சிலநொடிகள் தாமதாக சந்திக்கும் அல்லது முற்றிலும் சந்திக்கவே தவறும் சந்தர்ப்பங்கள் ஏராளமாக நிகழும். கடந்த இலங்கை, இங்கிலாந்து, ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர்களில் நாம் தோல்வியுற்றதற்கு நம் வயதான மட்டையாளர்கள் சரியான நேரத்தில் பந்தை சந்திக்க தவறியது காரணம். இத்தொடர்களில் நமது ஏராளமான விக்கெட்டுகள் போல்ட் மற்றும் எல்.பி.டபிள்யு முறையில் தான் வீழ்ந்தன. இந்தியாவில் நடக்கும் ஆட்டங்களில் மெத்தமான தாழ்வான ஆடுதளங்களிலும் எல்.பி.டபிள்யு வாய்ப்புகள் அதிகம். போல்ட் ஆகாத பட்சத்தில் பேடில் பந்து பட்டதென்றால் அதிர்ஷ்டம் உள்ள பட்சத்தில் நடுவர் அவுட் கொடுக்க மாட்டார். இந்த சின்ன வாய்ப்புகள் நமது மூத்த வீரர்களுக்கு நிச்சயம் தேவையாக இருந்தது. DRS இந்த சந்தர்ப்பவச தப்பிக்கும் வாய்ப்பை இந்திய மட்டையாளர்களுக்கு மறுக்கிறது. சுழலர்களுக்கு அதிகமாக எல்.பி.டபிள்யு ஆகும் சச்சின் டெண்டுல்கள் DRSஐ கடுமையாக் எதிர்த்ததற்கு இது ஒரு காரணமாக இருக்கலாம். ஏனென்றால் இலங்கையில் நடந்த டெஸ்டுகளில் அவர் பல முறை பேடில் பந்து பட்டு வெளியேறினார். பின்னர் இன்னும் வயதாகிய நிலையில் அவர் தற்போது தொடர்ந்து போல்ட் ஆகிய வெளியேறுகிறார். இப்போது DRS இன்மை கூட அவரை காப்பாற்ற முடியவில்லை. ஆனால் DRSஐ போலன்றி அதிர்ஷ்டம் குருடானது அல்லவா! அது எப்போதும் சச்சினுக்கு ஆதரவாக திரும்பலாம்.

இப்படி ஆரம்பித்த DRS எதிர்ப்பு ஒரு கட்டத்தில் நமது கிரிக்கெட் வாரியத்தின் கொள்கை நிலைப்பாடாகவே மாறியது. ஆனால் தற்போது நடந்து வரும் இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தொடரில் பல நடுவர் முடிவுகள் இந்தியாவுக்கு எதிராக அமைந்தன. இதனால் தோனி மீடியா உரையாடலின் போது மறைமுகமாக நடுவர்களை கேலி செய்தார். தான் ஒரு டெஸ்டை வெல்ல 20க்கும் மேல் விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டி வருகிறது என்றார். இந்தியாவின் DRS எதிர்ப்பு கண்மூடித்தனமாக மாறி வருவதாக பலரும் கருத்து தெரிவிக்கிறார்கள். ஆனால் தோனி ஒரு மரபார்ந்த இந்தியர். அவர் கிரிக்கெட்டை அறிவியலாக பார்க்க போவதில்லை. இந்த இழுபறி இன்னும் கொஞ்ச நாள் தொடரத் தான் போகிறது.
Read More

Saturday, 24 November 2012

கூட்டங்களை நிகழ்ச்சிகளை எப்படி ஜனநாயகபூர்வமாக்குவது?



இப்போது இலக்கிய பொது கூட்டங்கள் மற்றும் நிகழ்ச்சி நடக்கும் அரங்குகள் கட்டாய வதை முகாம்கள் போல இருக்கின்றன. பிடிக்கவில்லை என்றால் எழுந்து வீட்டுக்குத் தான் போக  வேண்டும். இவ்வளவு தூரம் வந்து விட்டு என்ற சலிப்பில் பலரும் அப்படியே அமர்ந்து விடுகிறார்கள்.


மூடப்பட்ட அரங்குகள் சிறைக்கூடங்கள் போல் தோன்றுகின்றன. எனக்கு பல சமயங்களில் உள்ளே போனதும் மாட்டிக் கொண்டு விட்ட உணர்வு தோன்றும். மனிதனை தொடர்ந்து மணிக்கணக்காக ஓரிடத்தில் அமர வைப்பது ஒரு சர்வாதிகார நடவடிக்கை தானே!

இதை ஒட்டி எனக்கு சில கோரிக்கைகள் உள்ளன. அவை கீழே:


  •  நம்மூர் இலக்கிய கூட்டங்கள், நாடகங்களை ஒரு பெரிய திறந்த வெளியில் நடத்த வேண்டும். 

  • ஓரிடத்தில் கூட்டம் நடக்க பக்கத்தில் பார், புட் கோர்ட், நீச்சல் குளம், லவுஞ்ச், WiFi தொடர்பு எல்லாம் இருக்க வேண்டும். 

  • கூட சின்னதாய் ஒரு தியான அறையும் வைக்கலாம். அங்கு எந்த சத்தமும் வராது. 

  • பார்வையாளர்கள் விருப்பப்படி அமர்வதும் எழுந்து போய் வேறு வேலை பார்ப்பதுமாக இருக்கலாம். 

  • கூட்டங்கள் சலிப்பாகும் போது, மூச்சு முட்டும் போது, அல்லது நமக்கே பேசும் ஆசை வரும் போது ஒரு வெளிப்பாடாக இது அமையும். 
  • கூட்டங்களில் மொக்கையானவர்களை முதலிலும் சிறந்த பேச்சாளர்களையும் கடைசியிலும் பேச வைக்கும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களின் தந்திரத்தை இதன் மூலம் ஒருங்கிணைக்கலாம்.


சில எச்சரிக்கைகள்:


  • குடிப்பவர்களுக்கு நீச்சல் குளத்தில் அனுமதி இல்லை. 

  • கூட்டம் நடக்கும் ஹாலுக்குள்ளும் ஓரளவுக்கு மேல் குடித்தவர்களுக்கு இடம் இல்லை.

  • லவுஞ்சில் புகைப்பவர்களுக்கு தனி இடம்.

  • வெளியே பேசும் இரைச்சல் கூட்டம் நடக்கும் ஹாலில் கேட்காதபடி அமைப்பு வேண்டும்.

  • கண்டிப்பாக உள்ளே கூட்டம் பிடிக்காதவர்கள் வெளியே தனியே ஒரு கூட்டம் போட்டு “அன்புள்ள மதிப்புற்குரிய” என்று பேச்சு நிகழ்த்தக் கூடாது.

  • நீச்சல் குளத்தில் இருந்து சொட்ட சொட்ட கூட்டத்துக்குள் நுழையக் கூடாது. அதே போன்று சாப்பாடு, சரக்கையும் கொண்டு போகக் கூடாது.

  • கூட்டத்தில் பேச இருப்பவர்களுக்கு குடிக்கவோ நீந்தவோ உரிமை இல்லை.

  • கூட்டத்தை நேரலையாக டிவியில் வெளியே காட்டக் கூடாது.


இது ஜனநாயக பூர்வமாகவும் இருக்கும். வசதி உள்ள இடம் கிடைக்காதவர்கள் கடற்கரை போன்ற திறந்த வெளிகளில் நடத்தலாம். லவுஞ்ச், நீச்சல் குளம், புட் கோர்ட் எல்லாம் தேவை இல்லை.


Read More

Wednesday, 21 November 2012

கசாபின் தூக்குத்தண்டனையை முன்வைத்து




- மும்பை தாக்குதல் குற்றவாளி கசாப் அவசர அவசரமாக தூக்கிக் கொல்லப்பட்ட நிலையில் ஊடகங்களில் மனித உரிமைக்கான குரல்கள் மிக பலவீனமாக ஒலித்தன. அவர்களின் வாதமான மனித உயிரைப் பறிக்கும் உயிர் அரசுக்கு இல்லை என்பது பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் மீடியாக்காரர்களுக்கு ஏற்கும்படியாய் இல்லை. தாக்குதலில் இறந்த நூற்றுக்கணக்கான பேர்களின் குடும்பத்துக்கு இதனால் நியாயம் கிடைக்கும் எனும் ஒரு அசட்டு வாதம் தூக்குத்தண்டனை ஆதரவாளர்களால் வைக்கப்படுகிறது. கசாப் எனும் ஒரு தனிநபர் இறப்பதால் யாருக்கும் லாபமோ நஷ்டமோ இல்லை. இந்த உலகில் நமக்கு சம்மந்தமில்லாமல் பறிபோகும் எத்தனையோ உயிர்களில் ஒன்று தான் கசாபினுடையதும். இவ்விசயத்தில் நியாயம் என்பதன் பொருளை தவறாகவே புரிந்து கொள்கிறோம்.


-

- நியாயம் என்பது ஒருவருக்கு இழைக்கப்படும் அநீதியில் இருந்து மீட்சியும் பிரதிபலனும் அளிக்கக் கூடியது. உதாரணமாக தர்மபுரி ஜாதி வெறித் தாக்குதலில் நூற்றுக்கணக்கான் தலித்துகளின் பணமும் தங்க நகைகளும் கலவரக்காரர்களால் கொள்ளையடிக்கப்பட்டன. அவை மீட்கப்பட்டு தரப்பட்டால் அது நியாயம். கலவரக்காரர்களுக்கு சிறைத் தண்டனை அளிக்கப்பட்டால் அது தலித் மக்களுக்கு இந்த அரசின் மீது நம்பிக்கை ஏற்படுத்தும்; அடுத்து இதே போன்று வன்முறை நிகழ்வதை தடுக்கும். ஆனால் ஆ.மார்க்ஸ் சொல்வது போல கசாபை போன்றவர்கள் போர்முனைக்கு தன் உயிரை துச்சமாக மதித்து செல்லும் படைவீரனை போன்றவர்கள். அவர்களை தண்டனை எனும் பெயரில் கொல்லுவது அவர்களை தம் சமூகத்தில் தியாகியாக்கவும் புனிதப்படுத்தவுமே உதவும். இன்னும் முக்கியமாக கசாபின் மரண தண்டனை புவிசார் தீவிரவாதிகளிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தாது என்பதற்கு மற்றொரு காரணமும் உண்டு.

-

- தீவிரவாதத் தாக்குதல்களில் கசாப் போன்றவர்களின் முக்கியத்துவம் ஆகக் குறைவானது. கசாபை ஏவியவர்கள் அவன் உயிருடன் திரும்பக் கூடாது என்றே விரும்பினார்கள். தீவிரவாத அமைப்பில் கசாபை ஒத்தவர்கள் படிநிலையின் கீழே இருப்பவர்கள். அவர்களின் அழிவு இவ்வமைப்புகளுக்கு பொருட்டல்ல. இது போன்று இயக்கங்களுக்காக உயிர்த்தியாகம் பண்ணுபவர்கள் தொடர்ந்து புறப்பட்டுக் கொண்டே இருப்பார்கள். கல்வியும் பொருளாதார வளர்ச்சியும் குறைவான பிரதேசங்களில் இத்தகைய பகடைக்காய்களுக்கு எந்த பஞ்சமும் இராது. பாகிஸ்தானில் சுதந்திரமாக இயங்கும் ஹனீப் போன்ற தீவிரவாத தலைவர்களை நீதியின் முன் கொண்டு வந்து தண்டனை வழங்க முடிந்தால் அது அவ்வியக்கங்களை நிச்சயம் தளர்வடைய வைக்கும். இந்தியாவின் ஒரெ அனுகூலம் இவ்விசயத்தில் கசாபின் அடையாளத்தை பாகிஸ்தானியர் என நிறுவ முடிந்ததே. பாகிஸ்தானுக்கு கசாப் தொடர்ந்து ஒரு சங்கடமாகவே இருந்திருப்பான். அவனை கொல்லாமல் சிறைத்தண்டனை அளித்திருந்தால் இந்தியா பலவீனமான நாடாக அல்ல, நாகரிகமான முதிர்ச்சியான ஒரு தேசமாக தன்னை முன்னிறுத்தியிருக்க முடியும். கசாபை மன்னிப்பதன் மூலம் அரசியல் ரீதியாகவும் நமக்கு லாபமே அதிகம் இருக்கக் கூடும்.

-

- கசாபை மன்னித்தால் அவனைப் போன்ற மேலும் பல தீவிரவாதிகள் முளைத்து வந்து மக்களை கொல்லுவார்கள் என புதிய தலைமுறை டிவியில் ஒரு தமிழக வக்கீல் ஆவேசமாக அறிவித்தார். இது தீவிரவாத நடவடிக்கைகளின் செயல்பாட்டு முறை பற்றின அறியாமையை தான் காட்டுகின்றன. கசாப் என்பவர் தன் விருப்பப்படி ஒரு துப்பாக்கி தூக்கி வந்து மக்களை சுட்டுக் கொண்டவரல்ல. அவர் ஒரு பிரம்மாண்டமான புவிசார் தீவிரவாத திட்டத்தின் சிறு புள்ளி, அவ்வளவே. மும்பையில் நம் மீது இவ்வளவு அப்பட்டமான தாக்குதல் நிகழ்த்தப்பட்டதற்கு நம் தண்டனை முறைகள் மென்மையானவை என்பது காரணமல்ல. நிஜமான காரணங்கள் இவை:

-

- அமெரிக்காவின் தீவிரவாதத்துக்கு எதிரான போர் எனும் பெயரிலான அரபுலகத்தின் மீதான தாக்குதல்களை இந்தியா தொடர்ந்து ஆதரித்து வந்தமை. மும்பையில் உள்ள யூதர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு இந்த தாக்குதலில் கொல்லப்பட்டார்கள். ஏன்? மும்பை தாக்குதல் புவிசார் அரசியல் கதையாடலின் ஒரு நீட்சி. அதை இந்திய இஸ்லாமிய பயங்கரவாதம் எனப் பார்ப்பதோ, வெறுமனே இந்துக்களின் மீதான பழிவாங்கலாக காண்பதோ வெறும் எளிமைப்படுத்தல்கள் தாம்.

-

- இந்தியாவில் தொடர்ந்து இஸ்லாமியர் உள்ளிட்ட சிறுபான்மையினர் பல்வேறு வகைகளில் அந்நியப்படுத்தப்பட்டு ஒடுக்கப்படுகின்றனர். கிறித்துவர்கள் அல்லது தலித்துகள் போன்று இஸ்லாமியர் வன்முறையின் வாங்கும் முனையிலே இருக்காமல் இருப்பதற்கு இங்கு இந்து-முஸ்லீம் பகைக்கு ஒரு நீண்ட வரலாறு (அதுவும் பிரித்தானியரின் புவிசார் காலனிய அரசியலின் விளைவாக) இருப்பதும், உலகம் முழுக்க இஸ்லாமியர் சகோதர உணர்வின் கீழ் ஒன்றிணைந்து மேற்குலக அடக்குமுறைக்கு எதிராக ஆயுதம் ஏந்தி போராடுவதும் முக்கிய காரணங்கள். எளிய இஸ்லாமிய மக்கள் மீது திட்டமிட்ட தாக்குதல்களை இந்துத்துவா கட்சிகள் 90களின் துவக்கத்தில் இருந்து ரெண்டாயிரம் வரை நிகழ்த்தி வந்தது நிச்சயம் இங்கு தீவிரவாதத்துக்கு வளமான ஒரு சூழலை உருவாக்கி உள்ளதை மறுக்காத வேலையிலும் இந்தியா முழுக்க நடத்தப்பட் குண்டுவெடிப்புகள், சத்ரபதி சிவாஜி ரயில்நிலைய மற்றும் தாஜ் ஓட்டல் தாக்குதல்களை நாம் இந்து தீவிரவாதத்தின் எதிர்விளைவாக மட்டுமே காணக் கூடாது.

-

- முதலில் ஆர்.எஸ்.எஸ், பஜ்ரங்தள் ஆகியற்றின் இந்துத்துவா வன்முறைகளை கண்டிப்பதும் பழிவாங்குவதும் உண்மையில் இத்தாக்குதல்களின் பிரதான நோக்கங்கள் அல்ல. அவ்வாறு இருந்தால் இங்கு பெரும்பாலான இந்துக்கள் கூடும் விழா தலங்களில் அத்தாக்குதல்கள் நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால் மாறாக அனைத்து தாக்குதல்களும் எல்லா மத மக்களும் அழியும் படி சந்தைகள், உணவகங்கள், பொதுமக்கள் கூடும் இடங்களில் தான் நடத்தப்பட்டிருக்கின்றன. ஒரு காலத்தில் நக்ஸல்பாரி போராளிகள் நிலச்சுவன்தார்கள், போலீஸ், அரசியல்வாதிகளை குறிவைத்து கொன்றதை நாம் இந்த வகை தீவிரவாத தாக்குதல்களுடன் ஒப்பிட்டு பார்க்க வேண்டும். இதுவரை எத்தனை முறை பா.ஜ.கா மாநாடுகள் தாக்கப்பட்டிருக்கின்றன, எத்தனை பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்? இந்த தாக்குதல்கள் இந்தியாவில் இஸ்லாமியரின் அரசியல் எதிரிகளை குறிப்பாக முன்வைத்து நடத்தப்பட்டவை அல்ல. மாறாக சரிபாதி இஸ்லாமியர் இத்தாக்குதல்களில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

-

- தாஜ் ஹோட்டலிலிலும் சத்ரபதி ரயில்நிலையத்திலும் தாக்குதல்கள் நடத்தப்பட்டதற்கு அவை உலகின் கவனத்தை எளிதில் கவரும் என்பது முக்கிய காரணம். அது போலவே மும்பைத் தாக்குதலின் போது செல்வாக்கும் பணமும் படைத்தவர்களை கொல்வதும் லஷ்கர் போன்ற இயக்கங்களின் நோக்கமாக இருந்துள்ளது. அதிக எண்ணிக்கையில் முக்கியமான நபர்களை கொல்வதனால் பெரும் மீடியா கவனமும் உலக அங்கீகாரமும் தமக்கு கிடைக்கும் என இந்த இயக்கங்களுக்கு தெரியும்.

-

- இந்த புவிசார் தீவிரவாத இயக்கங்களுக்கு காஷ்மீர், பாபர் மசூதி கலவரத்தை விட இஸ்ரேல்-பாலஸ்தீனிய மோதல்கள் முக்கியம். அதே போன்றே அமெரிக்காவுக்கு அரபு/இஸ்லாமிய நாடுகளுடனான தொடர் சச்சரவுகளும் போர்களும். இந்தியாவின் அப்பாவி முஸ்லீம்களின் பாதுகாவலர்கள் எனும் பிம்பம் அவர்களுக்கு பாகிஸ்தானிய அரசியல் பரப்பில் தம்மை தக்க வைப்பதற்கு அவசியம். இந்த காரணத்தினாலேயே இவ்வகை தீவிரவாதத்தை இஸ்லாமிய தீவிரவாதம் என குறிப்பிடுவதில் நியாயமோ உண்மையோ இல்லை. உண்மையில் இத்தாக்குதல்கள் இந்திய இஸ்லாமிய மக்களின் போர் அல்ல. இந்திய இஸ்லாமியர்களுக்கு நம்மைப் போன்றே வேறு உருப்படியான வேலைகள் உள்ளன. அவர்கள் சமரசத்தின் வழி தம் இருப்பை நீட்டிக்கும் இந்திய மனநிலையை வலுவாக கொண்டவர்களே.

-

- புவிசார் அரபுலக தீவிரவாதத்திற்கு இங்குள்ள மக்களை இரையாக்கியதில் மதவாத சக்திகளுக்கு நிச்சயம் பங்குள்ளது. ஆனால் அதே வேளை நம் மக்களை வெறும் கூலிகளாக, பயன்பாட்டுக்குப் பின் தூக்கி வீசும் பொருட்களாக உலக தீவிரவாத இயக்கங்கள் மாற்றி வருகின்றன என்பதே உண்மை. உலகுதழுவிய சகோதரத்துவம் வெறும் மாயை. ஜப்பானியர், சீனர், இந்தியர், பாகிஸ்தானியர் என ஆசியர்களுக்கு பொதுவாக பெரும் இயக்கங்களுக்கு அடிமையாக தம்மை மாற்றிக் கொண்டு உயிர்மாய்க்கும் பண்பாட்டு மனநிலை உள்ளது. இங்கு குடும்பங்களில் ஒரு குழந்தை தன்னிலை அற்றதாக வளர்க்க்கப்படுவதில் இருந்தே இந்த அடிமை மனநிலை துவங்குகிறது. தீவிரவாத, மதவாத, கோட்பாடுசார் இயக்கங்களை இம்மனிதர்களை எளிதில் பயன்படுத்திக் கொள்கின்றன.

-

- இப்படியாக பயன்பாட்டுக்குப் பின் தூக்கி வீசப்பட்ட ஒரு குப்பை பொருள் தான் கசாப். அவரை முழுமையாக அழிப்பதன் வழி நாம் ஒரு பிரச்சனைக்கு தீர்வு காண்பதாக நம்மையே ஏமாற்றிக் கொள்கிறோம். இங்கு இஸ்லாமியர் உள்ளிட்ட சிறுபான்மையினர் மையநீரோட்டத்தில் வரவேற்கப்பட்டு பாதுகாக்கப்படும் வரை, நமது காவல்துறை மற்றும் உளவுத்துறைகள் மேலும் வலுப்படுத்தப்படும் வரை இது போன்ற ஏராளமான மக்கள் அர்த்தமேயற்ற காரியங்களுக்காக பலியாக்கப்படுவதை தவிர்க்க முடியாது.

-

- நமது மீடியா தொடர்ந்து கசாபை ஒரு சாத்தானாக சித்தரித்ததில் வெற்றி கண்டதன் விளைவாகவே இன்று அவரது தூக்குதண்டனையை கொண்டாடும் மனநிலைக்கு பொதுமக்கள் தள்ளப்பட்டிருக்கிறார்கள். கசாப் நாம் எல்லோரையும் போன்று ஒரு எளிய ஆன்மா. வீழ்ந்த ஆன்மா. அவர் இந்தியாவுக்கு எதிராக ஒரு போரை நிகழ்த்துவதாக கருதி இங்கு வந்தவர். எப்படி போரில் கொலை கொலையாகாதோ அது போன்றே அவர் இங்கு அழித்த நூற்றுக்கணக்கான மும்பை பொதுமக்களும் அவருக்கு வெறும் இலக்கை நோக்கிய தடைகளே. போர் மனநிலை மனிதனின் அடிப்படையான அற உணர்வை மழுங்கச் செய்வது. கசாபை விட அதிகமான எதிரிகளை போரில் கொன்ற ராணுவ வீரர்கள் இருக்கிறார்கள். நூற்றுக்கும் மேற்பட்ட குற்றவாளிகளை என்கவுண்டர் செய்த போலீஸ் அதிகாரிகள் இருக்கிறார்கள். அவர்கள் யாரும் குற்றவுணர்வு அடையவோ தாம் அறம் பிழைத்ததாக ஒப்புக் கொள்ளவோ மாட்டார்கள். தூக்குக் கயிற்றின் முன் நிற்கும் அந்நொடி வரை கசாபும் அவ்வாறே தன்னை ஒரு இனத்தின் தியாகியாக மட்டுமே கருதியிருப்பார், கொலைகாரனாக அல்ல. வன்முறையும், அதற்கான நியாயப்படுத்தல்களும் இத்தகைய முரடுதட்டின கொலைக்கருவிகளை உருவாக்குகின்றன.

-

- உண்மையில், நாம் இவர்களுக்காக பரிதாபப்பட வேண்டும். இவர்கள் மனிதர்களாக மேனிலை அடைவதற்கான சந்தர்பங்களை வழங்க வேண்டும். முக்கியமாக இப்படியான நியாயப்படுத்தல்கள் சமூகத்தின் பல்வேறு தரப்புகளில் உருவாவதை எதிர்த்து போராட வேண்டும். தண்டனையின் பேரில் ஒரு மனித உயிரை மாய்ப்பது அறமற்றது என்பது மட்டுமல்ல, அதனால் சமூகத்திற்கு எந்த பயனும் இருப்பதில்லை என்பதே இங்கு கவனிக்க வேண்டியது. சிலரை சிறையில் தள்ளி கொல்வதனால் நாம் மிக பாதுகாப்பாக இருப்பதாக நினைப்பதும் அபத்தமே. நாம் வாழும் சமூகத்தில் கசாபை விட ஆபத்தானவர்கள் பலர் எட்டினால் தொடும் தொலைவிலே இருக்கிறார்கள். அவர்கள் கசாபை விட நாகரிகமானவர்களாக தளுக்காக நியாயம் பேசத் தெரிந்தவர்களாக கசாபுகளை உருவாக்குபவர்களக இருக்கிறார்கள் என்பதே வித்தியாசம்.



Read More

Monday, 19 November 2012

ஏன் எழுத்தாளர்களைப் பார்த்தால் பயப்படுகிறேன்?



எனக்கு எழுத்தாளர்களை பார்த்தாலே குலை நடுங்கும். ஏன் என விளக்கி விடுகிறேன்.



1. அவர்கள் நம்மிடம் பேச ஆரம்பித்தால் கழுத்தில் ரத்தம் வரும் வரை விடமாட்டார்கள்.


2. எழுத்தாளனாக போஸ் கொடுத்தபடி பஞ்ச் வசனம் பேசுவார்கள்.


3. வேறு யாரிடமோ சொல்ல வேண்டியதைக் கூட நம்மிடம் சொல்லுவார்கள்.


4. தம் கவிதை, கதைகளின் பொருள் என்ன என விடாமல் வியாக்கியானிப்பார்கள் அல்லது தன் ஆளுமையை பிரஸ்தாபிப்பார்கள்.




5. இதனிடையே மறந்து கூட காப்பி தண்ணி தரமாட்டார்கள்.


6. நீங்கள் வீட்டுக்குள் நுழைந்ததுமே ஒரு சந்தேகப் பார்வை பார்த்து “வாங்க” என்பார்கள். போகும் போது அதே பார்வையில் “வாங்க” என்பார்கள்.


7. எதிர்க்கலாச்சார்வாதிகள் இருக்கிறார்கள். அவர்களிடம் போனால் “நான் ஒரு வாரமாக் மூணு வேளையும் குடிக்கிறேன்” என்று சொல்லி மந்தஹசிப்பார்கள். பிறகு நான் ஒரு பொறுக்கி, உதவாக்கரை, ஒன்றும் சாதிக்காதவன், ஆனாலும் மகத்தானவன் என சொல்லி விட்டு உங்கள் கண்களை உற்றுப் பார்ப்பார்கள்.


8. நீங்கள் இடையே புகுந்து ஏதாவது சொல்லி விட்டால், “நானும் அதாங்க சொல்றேன்” என்று தான் சொல்லி வந்ததையே தொடர்வார்.


8. சுருக்கமாக மேடை நாடகத்தில் ஒரே ஒரு பார்வையாளனாக இருக்கும் நிலை ஏற்படும்.




நான் சந்தித்ததில் தேவதேவனும் மனுஷ்யபுத்திரனும் விதிவிலக்கு. தேவதேவனுடன் ஒரு கேம்பில் ஒரே அறையில் இரண்டு நாள் இருந்தேன். அவர் ஒரு சொல் கூட சொல்லவில்லை. மனுஷ் இலக்கியம் பேச மாட்டார், ரொம்ப நோண்டினால் ஒழிய. சு.ராவையும் குறிப்பிட வேண்டும். அவருக்கு நீங்க மிக அணுக்கமானால் ஒழிய இலக்கிய சங்கதிகளை வெளியே எடுக்க மாட்டார். உங்கள் பின்னணி, தொழில் வேலை படிப்பு விபரங்களை விசாரித்து அது குறித்து ரொம்ப சாதாரணமாக உரையாடிக் கொண்டிருப்பார். 8 மணிக்கு சன் செய்திகள் ஆரம்பித்ததும் உங்களிடம் தெரிவித்து விட்டு அதை போட்டு பார்ப்பார். சரியாக உங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரம் முடிந்ததும் “எனக்கு வேற வேலை” இருக்கு என விடைபெறுவார். முக்கியமாக அவர் உங்களை ஒரு ரத்தம், சதை எலும்பு உள்ள ஒரு வழக்கமான மனிதராக பாவிப்பார். தன்னையும் அப்படியே.


எல்லாவற்றையும் விட முக்கியம் சு.ராவிடம் பேசும் போது உங்களுக்கு ஒரு எழுத்தாளனிடம் உரையாடும் உணர்வே ஏற்படாது. அது எவ்வளவு பெரிய காரியம் இல்லையா?
Read More

Saturday, 17 November 2012

இந்தியா-இங்கிலாந்து டெஸ்டு 1: ஆடுதளத்தின் விந்தை



இந்த டெஸ்டுக்கான ஆடுதளம் எவ்வளவோ சர்ச்சைகளை அதில் அணிகள் ஆடும் முன்னரே தோற்றுவித்தது. அதிகப்படியாக சுழலை ஆதரிக்கும், சீக்கிரம் நொறுங்கி ஆடுவதே சிரமமாகும் என்றெல்லாம் இங்கிலாந்து ஆதரவாளர்கள் பயந்தார்கள்.
ஏனென்றால் ஆடுதளம் சமீபமாக புதிதாக அமைக்கப்பட்ட ஒன்று. அதிகமாக மணலும் குறைவாக களிமண்ணும் போட்டு தளத்தை தயாரித்ததால் அது எளிதில் சுழலும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் புதிதாக தயாரிக்கப்பட்டது என்பதால் ஆடுதளம் மிக மெத்தனமாகவும் இருந்தது. இதில் ஒரு சிக்கல் மட்டையாடுவது, விக்கெட் எடுப்பது இரண்டுமே சிரமம் என்பது.

இந்த ஆடுதளத்தில் சில புள்ளிகளில் பந்து பட்டால் மணல் பெயர பந்து எகிறி சுழலுகிறது. ஓவருக்கு ஒன்றிரண்டு முறை இது நிகழ்கிறது. அதாவதூ பந்து தொடர்ச்சியாக ஒரேவித சுழல் மற்றும் துள்ளலை கொண்டிருப்பதில்லை. அதனால் ஒரேயடியாக அடித்தாடுவதோ தடுத்தாடுவதே ஆபத்தானது. இந்தியாவின் சேவாக், காம்பிர், சச்சின், கோலி ஆகியோர் இப்படித்தான் முழுமையான தாக்கியாடும் அணுகுமுறையால் ஆட்டமிழந்தார்கள்.

இங்கிலாந்து மட்டையாடிய போது அவர்கள் முழுமையாக தடுத்தாடிய போதெல்லாம் ஆட்டமிழந்ததை பார்த்தோம். பீட்டர்ஸன், டுரோட், காம்ப்டன் ஆகியோர் போன்று. ஆனால் பெல் ஒரேயடியாக அடித்தாட பார்த்து ஆட்டமிழந்தார். ஒரு இடைத்தரமான மட்டையாட்டம் தான் உசிதம். இந்தியாவின் புஜாரா, இங்கிலாந்தின் குக் ஆகியோர் இதற்கு நல்ல உதாரணம்.

குக் இன்று மிக அழகாக ஆடினார். அவரது வலிமை வெட்டி ஆடும் ஷாட்கள். அவர் விரட்டும் நீளத்தில் வரும் பந்துகளை தவிர்த்து பின்னங்காலில் காத்திருந்தார். முன்னங்காலில் அவரது தடுப்பாட்டம் உறுதியாக இருந்தது. முதல் இன்னிங்ஸில் அவரை முன்னங்காலில் விரட்ட வைத்து வெளியேற்றினார்கள். முன்னங்காலில் ஆடுவது குக்கின் பலவீனமாக கருதப்படுகிறது. ஆனால் இரண்டாம் இன்னிங்ஸில் அவர் அஷ்வினை அற்புதமாக முன்னங்காலில் கவர் பகுதியில் நான்கு ஓட்டங்களுக்கு விரட்டினார். அது ஒரு வலுவான செய்தியாக அமைந்தது. அதற்கு பின் முன்னங்காலில் அவருக்கு பொறி அமைக்க அஷ்வின் அதிகம் முயல்வில்லை. குக்கின் சிறப்பு என்னவென்றால் அவர் அடித்தாடுவது என்று முன்கூட்டி முடிவெடுத்து இயங்குவதில்லை. பெரும்பாலான பந்துகளுக்கு மதிப்பதிளித்து ஆடி தேவையான போது மட்டுமே நல்ல நீள, முழுநீள பந்துகளை தாக்குகிறார். அதுவும் வீச்சாளர்களை குறைநீளத்துக்கு வீச தூண்டும் விதம் மட்டுமே இதை உத்தியாக பயன்படுத்துகிறார்.


ஒரு உதாரணம் பார்ப்போம். ஓஜ்ஜா முழுநீளத்தில் பந்தை உள்ளே கொண்டு வந்து அவரை எல்.பி.டபுள்யு ஆக்கப் பார்த்தார். அதைத் தவிர்ப்பதற்காக குக் மீண்டும் மீண்டும் அவரை ஸ்வீப் செய்து நான்கு அடித்தார். ஓஜ்ஜா ஆப் குச்சிக்கு வெளியே போட்டால் அவர் வெட்டி ஆடினார்.

ஓஜ்ஜாவுக்கு உள்ள பிரச்சனை ஆடுதளம் மெத்தனமாக உள்ளதே. அதனால் மட்டையாளர்கள் பந்து எகிறாது என்ற நம்பிக்கையில் ஸ்வீப் செய்யலாம். பன்னங்காலில் காத்திருந்து வெட்டலாம். அந்தளவுக்கு நேரம் உள்ளது. மேலும் எல்லா பந்துகளை இத்தளத்தில் சுழல்வதும் இல்லை. வேகவீச்சாளர்களும் வழமையான ஸ்விங்கோ ரிவர்ஸ் ஸ்விங்கோ கிடையாது. ஆனாலும் நல்ல சுழலர்கள் இருவர் இருப்பதாலும் இந்தியர்கள் தன்னம்பிக்கையாக சுழலை மட்டையாடுவார்கள் என்பதாலும் இந்த முதல் டெஸ்டை இதுவரை இந்தியா ஆதிக்கம் செலுத்தியது.

இந்த ஆடுதளம் மட்டையாளம், வீச்சாளர் இருவரையும் காத்திருந்து ஆட நிர்பந்திக்கிறது. நாளை யார் அதிக பொறுமையுடன் இருக்கிறார்களோ அவர்கள் மேலெழுவார்கள். பொறுத்திருந்து பார்ப்போம்.
Read More

Friday, 16 November 2012

சந்தர்ப்பம்




எனக்கு புது வேலை கிடைத்திருந்தது. அந்த செய்தி எந்த மகிழ்ச்சியையும் ஏற்படுத்தவில்லை.. மர்ம ஸ்தானத்தில் சின்னதாய் புண் வந்தது போல இருந்தது. அப்போதைய வேலையில் ஓரளவு அதிருப்தி இருந்தது; அதேவேளை புதிய வேலை முழுக்க திருப்திகரமாகவும் இல்லை. ஆனாலும் அந்த சந்தர்பத்தை பயன்படுத்திக் கொள்ளும் விருப்பம் என்னை ஆட்கொண்டது.
அது என்னை செலுத்தியது. ஒரு பாலுறுப்பை போல அது என்னை தூண்டியது. சில நாட்கள் யோசிப்பது போல் பாவனை செய்து விட்டு ராஜினாமா கடிதத்தை கொடுத்தேன்.
ராஜினாமா கடிதம் கொடுக்கும் போது என் துறைத்தலைவர் ஆச்சரியப்பட்டதாய் மிகையாக காட்டிக் கொண்டார். நானும் அவரது ஆச்சரியத்தை ஏற்றுக் கொள்வதாய் முகத்தை வைத்துக் கொண்டேன்.
நான் அடுத்து சேரப் போகும் இடம் பற்றி விசாரித்தார். சம்பள உயர்வு இருக்குமா என்று கேட்டார். நான் உண்மை சொல்லவா பொய் சொல்லவா என்று யோசித்தேன். அவருக்கு நான் அங்கிருந்து விலகுவதற்கு வலுவான லௌகீக காரணம் ஒன்று தேவைப்பட்டது. அதை நான் நல்கினால் திருப்தி உறுவார். அதனால் சம்பள உயர்வு மிகக்குறைவுதான் என பொய் சொன்னேன். அதிக பணமும் வராது. மேலும் புதிய அலுவலகம் தற்போதையதை விட மேலானதும் அல்ல. வீட்டிலிருந்து தொலைவும் அதிகம். ஒவ்வொன்றாக சொல்லிக் கொண்டு போக அவர் நெற்றி சுளித்தார். “பிறகு நீங்கள் ஏன் அங்கே போக வேண்டும்?”. அந்த கேள்வியின் பொருள் “நீ இங்கிருந்து போவதை விரும்புகிறேன் தான். ஆனால் தோதான காரணத்தை ஏன் தரமறுக்கிறாய்? எப்போதும் போல் எரிச்சல்படுத்துகிறாய்?”. நான் சர்வமும் தெரிந்தது போல ஒரு புன்னகை பூத்தேன்.
பொய் சொன்னேன், “புதிய வேலை மேலும் வசதியாக இருக்கிறது. சம்பளமும் திருப்தியாக உள்ளது. அதனால் தான் மேடம்”. அவர் புதிய வேலையில் சம்பளம் ஒன்றும் திருப்தியாய் இல்லையே, பயணமும் அதிகம், என்னை ஏன் எரிச்சல் படுத்துகிறாய் என்றார். நான் புதிய வேலை ரொம்ப வசதியானது. சம்பளமும் அதிகம் தான் என்று திரும்பத் திரும்ப அதே பொய்யை சொல்லிக் கொண்டு இருந்தேன். என் துறைத்தலைவருக்கு யார் மாற்றுயோசனை சொன்னாலும் தான் சொன்னதையே அது அபத்தமாக இருந்தாலும் திரும்பத் திரும்ப சொல்லும் பழக்கம் இருந்தது. இப்போது நான் அதையே என்னையறியாது செய்து கொண்டிருந்தேன்.
இப்படி நாங்கள் சன்மியூசிக்கில் வி.ஜெ வீட்டுமனைவி ஷைலஜாவிடம் “ஓ நீங்களா சாப்டீங்களா மேடம்!” என்கிற ரீதியில் தனக்குப் பிடித்த பாடல் பற்றி உரையாடுவது போல் இருவேறு உலகங்களில் இருந்து பரஸ்பரம் எந்த அக்கறையும் இன்று நாங்கள் இருவரும் பேசிக் கொண்டிருந்தோம். கேட்ட பாடலுக்கு மாறாக வேறு பாடலைத் தான் டி.வியில் போடுவார்கள். எனது துறைத்தலைவர் விசயத்தில் அந்தளவுக்கு அநியாயம் இல்லை. எங்கள் உரையாடல் அனர்த்தமாய் முடிந்தாலும் என் ராஜினாமாவை ஏற்றுக் கொள்வதாய் சம்மதித்தார்.
நான் இருக்கையில் போய் அமர்ந்தேன். ஏன் புது வேலைக்கு போகிறேன் என்றோ ஏன் என் துறைத்தலைவருக்கு என்னை பிடிக்காமல் போயிற்று என்றோ இரண்டுக்கும் ஏதாவது சம்மந்தம் உண்டா என்றோ எனக்கு புரியவில்லை. கொஞ்ச நேரம் கடந்த கால சம்பவங்கள் ஏக்கத்துடன் கசப்புடன் மனதில் ஓடின. கழிப்பறையில் தலைவாரும் போது “அவருக்கு என் மூஞ்சி பிடிக்கவில்லை” என்று நினைத்துக் கொண்டேன். ஆம் அது தான் உண்மை. ஆனால் அதை ஒரு காரணமாக சொல்ல முடியாதே!
அடுத்து நிர்வாகக்குழுவுடன் சந்திப்பு. நிர்வாகக் குழு என்னை ராஜினாமாவை மறுபரிசீலனை செய்ய கேட்பார்கள் என்று கொஞ்சம் பயந்தேன். அவர்கள் எனக்கு சம்பள உயர்வு போன்ற தீர்வுகளை முன் வைக்கலாம். துறைத்தலைவரால் எனக்கு பிரச்சனை வராது என உறுதிப் படுத்தலாம். சொல்லப்போனால் அவர்கள் தீர்வுகளை பற்றி பேசினால் அதனை எதிர்கொள்ள என்னிடம் வலுவான எந்த காரணங்களும் இல்லை. அதனால் என்னை ஏதாவது பேசி குழப்பி விடுவார்களோ என்று பயந்தேன். திரும்பவும் அந்த கல்லூரியிலேயே தங்க நேர்ந்தால் என் நிலை அப்படியே தொடரலாம் அல்லது சீரழியலாம். ஆனாலும் அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி என்ன நடக்கிறது என்று பார்த்து விட விரும்பினேன். ஒருவிதத்தில் என்னை ஒருமுகப்படுத்த அது அப்போது பயன்பட்டது.
ராஜிமானாமா பற்றி தெரிய வந்த நண்பர்கள் இந்த சந்தர்பத்தில் நான் துறைத்தலைவர் பற்றின எனக்கு வருத்தங்களை முழுக்க நிர்வாகத்திடம் கொட்டி அவருக்கு ஒரு பாடம் புகட்ட வேண்டும் என்று வற்புறுத்தினர். ஆனால் அப்போது நான் மனதளவில் களைப்பாக இருந்ததால் அதை வீண்வேலை என்று தவிர்த்து விட்டேன்.
நான் யாரிடமும் துறைத்தலைவர் உடனான தகராறு தான் காரணம் என வெளிப்படையாக கூறவில்லை. நிர்வாகத்திடம் கூட “சில சொல்ல விரும்பாத காரணங்களால் நான் இங்கு மகிழ்ச்சியாக இல்லை என்பதால் விலக விரும்புகிறேன்” என்று அசமஞ்சமாய் குழைந்தபடியே கூறினேன். இதற்கு மேல் கேட்காதீர்கள் என்று நான் கெஞ்சுவது போலவே இருந்தது.
நல்ல வேளை நிர்வாகம் எந்த ஒரு தீர்வையும் முன்வைக்கவில்லை. என்னை தங்கும்படி கேட்கவும் இல்லை. எனக்கு நிம்மதியாக இருந்தது. நிர்வாகக் குழுத் தலைவர் இரண்டு விசயங்களைச் சொன்னார். ஒன்று, அற்ப தகராறுகளுக்காக நான் அக்கல்லூரியை விட்டு விலக எந்த அவசியமும் இல்லை. அது போதுமான காரணம் அல்ல. இரண்டு, நான் அக்கல்லூரியை விட்டு விலகுவதால் நிர்வாகத்துக்கோ கல்லூரிக்கோ என் துறைக்கோ மாணவர்களுக்கோ எந்த பாரித்த இழப்பும் கிடையாது. நான் ஒன்றுமே அல்ல. துடைத்து வைத்த இடத்தில் தூசு அமர்வது போல் என் இடத்தில் இன்னொருவர் வரப் போகிறார்கள். கடைசி உதாரணத்தை சொல்லும் போது நிர்வாகக் குழுத் தலைவர் தன் அழகான சிவப்பான பரிசுத்தமான கையால் மேஜையை தடவிக் காண்பித்தார். அந்த மேஜையில் தூசே இல்லை என்ற தகவல் மட்டுமே என் மனதில் பதிந்தது.
நான் கொஞ்ச நேரம் அவர்கள் என்னை கல்லூரியில் தங்கும்படி சொல்கிறார்களா அல்லது போகக் கேட்கிறார்களா என புரியாமல் நின்றேன். இரண்டும் எனக்கு உவப்பானது இல்லை. ஆனால் இரண்டுக்கும் நான் “புரிகிறது புரிகிறது” என்று தலையாட்டி வைத்தேன். அதற்குப் பின் கிளம்பு என் தலையாட்டி வைத்தார்கள். ஆனால் வெளியே வந்ததும் எந்த குழப்பமும் இல்லை. பெரிய பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்ட நிம்மதி மட்டும் தான்.
புரளியை விரும்புகிறவர்களுக்கு இனிப்பான சேதிகள் பிடிக்காது. அதே காரணத்தினாலே சக பேராசிரியர்களிடம் நிர்வாகம் கூறியதில் இனிப்பான பாதியை மட்டும் வெளிப்படுத்தினேன்: நிர்வாகம் என்னை தங்கும்படி கேட்டுக் கொண்டதாகவும் நான் தான் விடாப்பிடியாய் மறுத்ததாகவும். அவர்களும் என்னிடம் இரண்டு ஆலோசனைகள் கூறினர். ஒன்று, நான் துறைத்தலைவரைப் பற்றிய கடும் புகார்களை சொல்லி அவரது முகத்திரையை கிழித்திருக்க வேண்டும். அமைதியாக இருந்ததற்காக என்னை கண்டித்தனர். இரண்டு, தற்போதைக்கு கல்லூரியில் இருந்து விலக எனக்கு எந்த அவசியமும் இல்லை என்பதால் நான் கடிதத்தை திரும்ப பெற வேண்டும். நான் “சரி தான் சரி தான்” என தலையாட்டி விட்டு வந்தேன்.
நான் சில நேரம் அக்கல்லூரியின் உள்நபர் போன்றும் சிலநேரம் வெளியாள் மாதிரியும் மாறி மாறி உணர்ந்தேன். வகுப்புக்கு சென்றால் நான் பொருட்டல்ல என்று கூறிய நிர்வாகத்தை பழிவாங்கும் விதமாய் பாடம் எடுக்காமல் வகுப்பை ஓட்ட தோன்றியது. ஆனால் சிறிது நேரத்தில் மிகுந்த ஆர்வத்துடன் பாடமெடுக்க துவங்கி விடுவேன். நான் ராஜினாமா செய்து விட்டவனா அல்லது அக்கல்லூரியின் முழுமையான ஆசிரியனா என குழப்பமாக இருந்தது. ராஜினாமா காலத்தில் இருப்பதால் நான் பாதி ஆசிரியன் மட்டும் தான். என் துறைத்தலைவர் என்னை அப்படியே நடத்தினார். அவர் துறை சம்மந்தப்பட்ட கூட்டங்களில் என்னை மட்டும் அழைக்கவில்லை; என்னிடம் எந்த கல்லூரி சார்ந்த அறிக்கைகளும் வரவில்லை. வகுப்பில் மாணவர்களின் பார்வையிலும் என் இருப்பு குறித்து சிறிது ஐயம் இருப்பதாக தோன்றியது.
துறைத்தலைவர் என்னை வழக்கம் போல் வதைத்துக் கொண்டே தான் இருந்தார். சுருக்கென்று குத்தும் படியாய் பேசினார். சின்ன சின்ன குற்றங்களை கண்டுபிடித்து கண்டித்தார். முமகன் கூறினால் எதையாவது கேட்டால் பாராமுகமாக இருந்து என்னை “ராஜாதி ராஜ” பாடும் அரண்மனை சேவகன போல் உணரச் செய்தார். எனது உபரி வகுப்புகளை துண்டித்து அதிக வருமானம் வர முடியாது செய்தார். துறையின் வேலைகள் எதிலும் என்னை பங்கெடுக்க விடாமல் பண்ணினார். நான் அங்கு இருந்தேன். ஆனால் அங்கு இல்லை. அவரைத் தொடர்ந்து பிறரும் என்னிடம் விலகல் பாராட்ட துவங்கினர்.
துறைத்தலைவர் தொடர்ந்து என்னை ஒரு குழந்தைத்தொழிலாளியைப் போல ஏவினார். கூட்டமான பேருந்தில் நெரிசலான உடல்களுக்கு இடையே மாட்டிக் கொண்ட கன்னியாஸ்திரியைப் போல நான் நெளிந்து கொண்டிருந்தேன். மாணவர்கள் என்னிடம் பேச துறைக்கு வந்தால் அவர்கள் முன்னிலையிலே என்னை வெளியே சென்று பேச சொல்லி அவமதித்தார். என் மர நாற்காலியை மாற்றி வலைப்பின்னல் கிழிந்த துருபிடித்த நாற்காலி ஒன்றைப் போட்டார். அது நான் அமர்ந்ததும் தஞ்சாவூர் பொம்மை போல் சாயும். ஆனால் விழ விடாது. சிலவேளை இடது பக்கம், சில வேளை வலப்பக்கம். இது கூட என் தவறு தானோ என்று எனக்கு தோன்ற ஆரம்பித்தது. முன்னே சாய்ந்தால் குசு விடுவது போல் ஓசை எழும். பின்னால் சாய்ந்தால் பற்கள் நறுநறுவென கடிபடுவது போல கேட்கும். இதனால் யாராவது என்னிடம் பேச வந்தால் எழுந்து நின்று விடுவேன். ஏதோ மரியாதைக்கு என்று அவர்கள் நினைத்துக் கொண்டால் பரவாயில்லை என்று பொறுத்துக் கொண்டேன்.
ஒரு நாள் என் மேஜையில் துறையின் அலுவலக ஆவணக் கோப்புகள் பூந்தொட்டி சாக்கட்டி டப்பா உள்ளிட்ட பொருட்களை அடுக்கி வைத்தனர். எனக்கு மேஜையும் இல்லாமல் ஆயிற்று. என் பையை ஓரமாக வைத்து விட்டு ஓய்வு நேரத்தில் யார் இருக்கை பக்கமாவது நின்று பேசிக் கொண்டிருப்பேன். அல்லது வெளியே போய் நிற்பேன்.
கால் வலிக்கும் போது காலியாக உள்ள ஒரே நாற்காலியான துறைத்தலைவரின் மேஜைக்கு முன்பான நாற்காலியில் சென்று அமர்வேன். அவர் வந்ததும் நான் அங்கில்லாதது போல் பாவிப்பார். நான் என் மேஜையை காலி செய்து தரக் கேட்பேன். அவர் என்ன புதுபாஷையில் உளறுகிறாய் என்பது போல பார்ப்பார். நான் எழுந்து வெளியே போவேன்.
பிறகு துறைத்தலைவர் எனக்கு ஒதுக்கப்பட்ட வகுப்புகளின் இண்டெர்னல் மதிப்பெண்களை திருத்தத் துவங்கினார். அவர் விருப்பத்துக்கு அவற்றை மாற்றினார். நான் குறைவாக போட்டிருந்தால் அதிகமாக்கினார். அதிகமாக போட்டிருந்தால் குறைத்தார். சில வகுப்புகளுக்கு சராசரியாக பத்துக்கு நான்கு ஐந்து மதிப்பெண் போட்டிருந்தேன். ஒரே போன்ற மதிப்பெண்ணை ஏன் திரும்பத் திரும்ப போட்டுள்ளாய் என்று கத்தினார். மாற்றுகிறேன் என்று முன்வந்தால் “அதெல்லாம் வேண்டாம் நான் பார்த்துக் கொள்கிறேன்” என்று இன்னும் அரை அங்குலம் என் மூக்கை நறுக்கினார். ஒரு பிரச்சனை அல்லது தேவை என்று என்னிடம் வந்த மாணவர்களை தன்னிடம் அழைத்து பஞ்சாயத்து நடத்தினார். அவர்கள் என் பக்கமும் அவர் பக்கமுமாய் பார்த்து முழித்தனர்.
இதெல்லாம் ராஜினாமா காலத்தில் நேரக் கூடியது தான் என்று சமாதானம் பண்ணிக் கொண்டேன். துறைத்தலைவரின் ஏச்சுபேச்சுகளை எல்லாம் நிச்சலமாய் பணிவாய் ஏற்றுக் கொண்டேன். அதற்கு ஒரு காரணம் எனக்கு இருந்தது. துறைத்தலைவர் நான் ராஜினாமாவுக்கு நம்பத்தகுந்த காரணத்தை வழங்காததால் என் மீது எரிச்சலாக இருந்தார். யார் கேட்டாலும் உண்மைக் காரணம் அதுவல்ல என்று புரியும் அளவுக்கு என் காரணம் அவ்வளவு பலவீனமாக இருந்தது. ஒரு பூமராங் போல் அக்காரணம் திரும்ப தன்னையே தாக்க உத்தேசிக்கிறது என்று அவர் புரிந்து கொண்டார். அதனால் அவர் என்னை சீண்டியபடியே இருந்தார். நான் என் கட்டுபாட்டை இழந்து அவரைப் பழித்து நேராகவோ அல்லது துறை சக-ஊழியர்களிடமோ பேச வேண்டும் என்று எதிர்பார்த்தார். அதை பயன்படுத்தி தன்னை பாதிக்கப்பட்டவராக அவரால் சித்தரிக்க முடியும்.
உண்மையில் எங்களது இருவரின் நியாயமும் அவ்வளவு நடுக்கமானதாய் இருந்தது; சஞ்சலம் கொண்ட மனதை போல் அது யார் பக்கமும் சாயக் கூடியதாய் இருந்தது. என் வார்த்தைகளையோ எதிர்வினையையோ அவர் பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கக் கூடாது என்று நான் பிடிவாதமாய் இருந்தேன்.

அப்போது தான் என் நண்பன் தேசிங்கு ராஜாவிடம் இருந்து அந்த குறுஞ்செய்தி வந்தது.
அவன் என்னை கடுமையாக திட்டி எழுதியிருந்தான். அவனுக்கும் எனக்கும் எந்த பகையும் இல்லை. அவனது அந்த நீண்ட செய்தியின் பெரும்பகுதி எனக்கு புரியவும் இல்லை. இறுதியாக என் கைகால்கள் வெட்டி முண்டமாக்க போவதாக மிரட்டியிருந்தான். வேறு யாருக்காவது அனுப்ப வேண்டியதை மாற்றி எனக்கு அனுப்பி விட்டானோ என குழப்பமாக இருந்தது.
தேசிங்கு ராஜா எங்கள் கல்லூரியில் தமிழ்த்துறையில் வேலை பார்த்தான். நான் அவ்வளவு அன்னியோன்யம் கிடையாது என்றாலும் மணிக்கணக்காய் பரஸ்பரம் பேசும் நண்பர்களாக இருந்தோம். எங்களுக்குள் உரசலோ சச்சரவோ வந்ததில்லை. பிறகு அவனுக்கு ஒருநாள் அந்த விபத்து நேர்ந்தது.
தெருவில் வரும் போது ஆள்மாறி அவனது கழுத்தை யாரோ பின்னிருந்து கத்தியால் அறுத்து விட்டார்கள். ஆழமான காயம் ஒன்றும் இல்லை. ஆனால் நரம்புகள் பாதிக்கப்பட்டு அவனது முகம் கோணி விட்டது. ஒரு பக்கம் முகம் தளர்ந்தது. சாதாரணமாய் பேசிக் கொண்டிருக்கும் போது திடீரென்று கண்ணீர் கொட்டும். அவனால் அதை கட்டுப்படுத்தவே முடியாது. இறுதியாய் அவனைப் பற்றி எனக்கு இருந்த மனப்பிம்பம் அவ்வாறு கைகுட்டையால் கண்களை ஒற்றிக் கொண்டிருந்த முகம் தான். பாதி புன்னகைத்து மீறி உறைந்து போகிற முகம் தான்.
தன் தோற்றம் குறித்த கவலை இருந்தாலும் அவன் தனது மருத்துவ நிலையால் அதிகம் கவலைப்படவில்லை. எல்லாம் சரியாகி விடும் என்றான். பிறகு ஒருநாள் ஒரு நிர்வாகக் கூட்டத்தின் போது ஆசிரியர்களை குற்றம் சாட்டி பேசிய போது உணர்ச்சிவசப்பட்டு எதிர்த்து கத்தினான். எங்களுக்கெல்லாம் வியப்பாக இருந்தது. அவன் அப்படியெல்லாம் வார்த்தையை விடக் கூடியவன் அல்ல. அவனுக்கும் முதல்வருக்கும் வார்த்தை மோதல் ஏற்பட்டது. நிர்வாகத்தின் தவறுகளை பட்டியலிட்டு சர்ச்சித்தான். நிர்வாகக் குழு அவனை பின்னால் அழைத்து சமாதானம் பேசியது. அப்போது அவன் முரண்பட்டே பேசினான்.
தேசிங்குராஜாவின் அணுகுமுறை எங்களுக்கு எல்லாம் கவலை ஏற்படுத்தியது. வேலை பயம் காரணமாய் நாங்கள் யாரும் அவனுக்கு வெளிப்படையாய் ஆதரவு தெரிவிக்கவில்லை. மேலும் அவன் எதற்கு சண்டை போடுகிறான் என்றே எங்களுக்கு தெளிவாக விளங்கவில்லை. அவனால் வேலையையும் அப்படி எளிதாய் விட்டு விட முடியாது. அவனது குடும்பம் அவன் சம்பளத்தை மட்டுமே நம்பியுள்ளது.
அவனுக்கு ஆறுமாதக் குழந்தை உள்ளது. அப்பாவுக்கு புற்றுநோய், அம்மாவுக்கு அல்செமெயர்ஸ். இருவரும் அவனுடம் தங்கி சிகிச்சை எடுத்து வந்தனர். ஊரில் அவனுக்கு நிறைய கடன் உள்ளது. எங்கள் எல்லோரையும் விட அவனுக்கு அந்த வேலை மிக அவசியமானது. ஆனால் தேசிங்குராஜா கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. அவன் திடீரென ஆதிக்க வர்க்கத்துக்கு எதிராக கிளர்ந்தெழுந்தான். நிர்வாகம் அவனை எச்சரித்து அனுப்பியது. ஆனால் அடுத்த வாரமே ஒரு சின்னப் பிரச்சனைக்கு எதிர்வினையாற்றும் விதமாய் அவன் வேலையில் இருந்து ராஜினாமா செய்தான். நான் அதற்குப் பிறகு அவனை பார்க்கவில்லை.
நான் தேசிங்குராஜாவை போனில் அழைக்க முயன்றேன். அவன் எடுக்கவில்லை. ஆனாலும் நிலைமையை தெளிவுபடுத்தும் பொருட்டு நான் அவனைத் தேடி வீட்டுக்கு சென்றேன். அதே வீட்டில் தான் இருந்தான். கலைந்த தலையுடன் கொட்டாவி விட்டபடி கதவைத் திறந்தான். என்னைப் பார்த்ததும் சிறிது புரியாமல் யோசித்து விட்டு உள்ளே அழைத்தான்.
அவனைத் தவிர வீடு காலியாக இருந்தது. ஊருக்கு போயிருப்பார்கள் என்று நினைத்துக் கொண்டேன். அழுக்குத்துணிகள் சோபா தரை மேஜை என அங்கங்கே கிடந்தன. சிறுபத்திரிகைகள் இந்து பத்திரிகை தாள்கள் சிதறிக் கிடந்தன. சாப்பிட்ட தட்டுகள் ஊசிப் போய் ஓரமாய் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அந்த வீச்சத்துடன் சேர்த்து நீண்ட நாட்களாய் சுத்தம் செய்யப்படாத வீட்டின் வாடையும் கலந்து அடித்தது. பகல்வேளையிலும் அடுக்களையில் ஒரு விளக்கு எரிந்தபடி இருந்தது. டி.வி சத்தமின்றி ஓடியது. ஏதோ இந்திச் சானலில் முடி உதிர்வதை தவிர்ப்பதற்கான நிகழ்ச்சி. எட்டினால் தொட்டுவிடும் அளவுக்கு காற்றாடியில் இருந்து சிலந்தி வலை ஒன்று தொங்கியது.
முகத்தை சீரியஸாக வைத்தபடி அவனது குறுஞ்செய்தியைப் பற்றி விசாரித்தேன். அவனிடம் உருப்படியான பதில்கள் ஏதும் இல்லை. மூர்க்கமாக என்னை பழிகூறிக் கொண்டிருந்தான்.
அவனுக்கு நான் நிறைய துரோகம் இழைத்து விட்டதாக கூறினான். உண்மையிலேயே அவன் அதை நம்பி விட்டிருந்ததாகவே எனக்கு தோன்றியது. எனக்கு அப்படி எந்த உத்தேசமும் இல்லை என்று திரும்பத் திரும்ப விளக்கினேன். கொஞ்ச நேரத்தில் அவனை அமைதிப் படுத்தினேன். ஆனாலும் தன் பக்கமே நியாயமிருப்பதாய் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்தான். எனக்கு அவன் மீது இரக்கம் தோன்றியது.
அவனது புகார்கள் முழுக்க கற்பனையானவை என்று என்னால் புரிய வைக்க முடியவில்லை. அவன் குற்றம் சாட்டியது போல நான் அவனைப் பற்றி பிறரிடம் தவறாக பேசியிருக்கவோ அவன் ராஜினாமாவுக்கு நான் மகிழ்ந்திருக்கவோ இல்லை. ஏனென்றால் நான் அவனைப் பற்றி சமீபமாய் பேசுவது போக யோசிக்கவே இல்லை. இதை அவனிடம் கூற முடியாது. ஏனெனில் அது தான் அவனது அடுத்தக் குற்றச்சாட்டே. நான் அவனிடம் எந்தவிட அன்போ அக்கறையோ பாராட்டவில்லை. ஆனால் சிலநேரங்களில் அன்பு காட்டுவது நமக்கு அவ்வளவு ஆடம்பரமான ஒன்றாகி விடுகிறது. அதை என்னால் அவனுக்கு புரிய வைக்க முடியவில்லை.
விளைவாக நான் அவனிடம் தன்னம்பிக்கையின்றி வழவழவென்று பேசினேன். அவன் இதை நான் என் தவறுகளை ஏற்றுக் கொண்டு மன்னிப்பு கேட்பதாய் தவறாக புரிந்து கொண்டு தலையாட்டி சரி என்றான். அடுத்து என்னை ஆறுதல்படுத்த வேறு முன்வந்தான். எப்படியொ பிரச்சனை ஒழிந்தது என்று நானும் நிம்மதியானேன். நாங்கள் தேநீர் குடிக்க வெளியே கிளம்பினோம்.
தேநீர் குடிக்கும் போது நினைவு வர குடும்பம் பற்றிக் கேட்டேன். அவன் மீண்டும் இறுக்கமானான். “விவாகரத்தாகி விட்டது, அப்பாவும் அம்மாவும் ஊருக்கு போய் விட்டார்கள்” என்றான். அதிர்ச்சியை கூடுமானவரை மறைத்து விட்டு உறுத்தாதபடி விசாரித்தேன். இப்போது வழக்கு நடந்து கொண்டிருக்கிறது என்றும் அதுவரை மனைவி குழந்தையும் அவளது மாமா வீட்டில் தங்கி இருப்பதாகவும் சொன்னான். பிறகு அவனாகவே காரணத்தையும் சொன்னான்: “எங்க ரெண்டு பேருக்கும் ரொம்ப மாசமாவே தினமும் தகராறு தான். நான் சரியா சம்பாதிக்கிறதில்லை என்று முதலில் எரிந்து விழுந்தாள். பிறகு என் தனிப்பட்ட காரியங்களை கட்டுப்படுத்த துவங்கினாள். அதுகூட பரவாயில்லை. என் குடும்பத்தினரை பழித்தாள். அதுவும் பரவாயில்லை. ஒருநாள் கல்யாண வீட்டில் என் குடும்பம் தரித்திரம் பிடித்ததென்று அவளது சொந்தக்காரர்களிடம் நக்கல் அடிப்பதைக் கேட்டேன். வீட்டுக்கு வந்ததும் பளாரென்று அறை விட்டேன். பாத்திரம் பண்டங்களை தூக்கி வீசினாள். பாதி சாமான்களை தெருவில் போய் விழுந்தன. ஒருவாரம் சமைக்கவில்லை. பிறகு நான் சம்பாதிக்க லாயக்கற்றவன் என்று கத்தினாள். என் பெற்றோரின் பாரத்தை வேறு தான் சுமக்க நேர்வதாய் அலுத்துக் கொண்டாள். நான் அவளை மீண்டும் அடிக்கப் போக அவள் உறவினரை அழைத்து வந்து பஞ்சாயத்து பேசினாள். என்னை மன்னிப்பு கேட்க வைத்து உத்திரவாத பத்திரம் எழுதி வாங்கினார்கள். நினைவுமறதி மிக்க என் அம்மாவை சுத்தம் செய்வது, அவரை கழிப்பறை அழைத்துப் போவது போன்ற வேலைகளை அவள் செய்ய வேண்டியதில்லை என்று உறுதியளித்தேன். அதற்கு தனியாக செவிலியை நியமிப்பதாய் ஏற்றுக் கொண்டேன். விரைவில் நல்ல சம்பளம் வரும் புதுவேலையை தேடுவதாய் கூட சொன்னேன். அவள் திரும்ப என்னுடன் வாழ சம்மதித்தாள். பிறகு தான் இத்தனையும் அவளது அம்மாவின் தூண்டுதலில் நடக்கிறது என்று அறிந்து கொண்டேன். பிறகு நாங்கள் ஏதோ பேருக்கு சேர்ந்து வாழ்ந்தோம் என்றாலும் எந்த தகராறோ பிரச்சனையோ இல்லை. குழந்தைக்காக உறவினர் மத்தியில் என் மரியாதைக்காக எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டு வாழ்ந்தேன். அப்புறம் போகப் போக பழகி விட்டது. ஆனாலும் எல்லாம் ஒரு நூலிழையில் தொங்கிக் கொண்டிருந்தது. எங்களுக்கு ஒருவரை ஒருவர் பிடிக்கவில்லை. ஆனால் ஏதோவொரு விதத்தில் தேவைப்பட்டது. சேர்ந்து வாழ்ந்து கொண்டிருந்தோம். எவ்வளவு நாள் என்பது தான் கேள்வி. யார் முதலில் விவாகரத்து கேட்பது, குழந்தை யார் பொறுப்பு என்பன தான் கேள்விகள். பிறகு அந்த விபத்து நடந்தது.”
நான் அவன் முகத்தைப் பார்த்தேன். சின்ன வீக்கம் போல் லேசாக முகவாயில் கோணல் இருந்ததே ஒழிய காயம் முழுக்க ஆறியிருந்தது. ஆனால் தன்னால் இன்னமும் முழுதாய் தூங்க முடியவில்லை என்றான் தேசிங்குராஜா. அது மட்டுமல்ல கடுமையான தலைவலி. நீங்காத தலைவலி.  “மருந்து சாப்பிடுகிறாய் அல்லவா?”
“ஆமாம். ஆனால் தலைவலி விடுவதே இல்லை. நான்கைந்து மணிநேரம் வலியில் துடிப்பேன். அது எப்போது என்று தெரியாது. மிச்ச நேரம் மந்தமாக ஒரு வலி தோன்றியபடியே இருக்கும். அதை எப்படி உனக்கு புரிய வைக்க? சிலநேரம் யாரோ தலையில் பேஸ் கிட்டார் வாசிப்பது போல, சிலநேரம் மெத்து மெத்தென்று தலையின் இருப்பக்கமும் உலக்கையால் இடிப்பது போல். திடீரென்று ஆயிரம் ஊசிகள் சுருக் சுருக் என்று குத்துவது போல தோன்றும். கன்னத்தில் இருந்து ஆரம்பித்து பின் மெல்ல மேலே ஏறி கட்டெறும்புகள் போல சுருக் சுருக் என்று துளைக்கும் வலி பரவும். எலும்பு மஜ்ஜை வரை கூசும். அந்த வலி எப்படி என்று உனக்கு விளக்கவே முடியாது. அதை அனுபவிக்க வேண்டும். ஆனால் இப்போது பரவாயில்லை. முதல் சில மாதங்கள் தாங்கமுடியா வண்ணம் கடுமையாக இருந்தது. சிலசமயம் எனக்கு வலியில் பைத்தியம் பிடிப்பது போல இருக்கும். ஆனால் வலி இல்லாத போது தான் நான் என் கட்டுப்பாட்டை இழந்து என்னன்னமோ பேசுவேன். ஒருமுறை என் மைத்துனனை அடிக்க போய் விட்டேன். பிறகு பஸ் ஏறி மதுரை திருச்சி என்று எங்கெங்கோ சுற்றி விட்டு திரும்பினேன். வந்த போது வீடு காலியாக இருந்தது. அப்போது தான் நான் விவாகரத்துக் கேட்க முடிவு செய்தேன்.”
ஒரு சிகரெட்டை பற்ற வைத்து விட்டு தொடர்ந்தான். மழை பெய்ய ஆரம்பித்தது. டீக்கடையில் இன்னும் பலர் வந்து ஒதுங்கினர்.
“எனக்கு ஒரு நெருக்கடி வரும் போது உறுதுணையாக இல்லாத குடும்பம் இருந்து எதற்கு என்று தோன்றியது. அவ்வளவு தான். என் மனைவி திரும்ப வந்து என்னிடம் விளக்கப் பார்த்தாள். நான் எதையும் கேட்க தயாராக இல்லை. இப்போது யோசித்தால் அவள் எனக்கு நலமில்லாத போது மிகுந்த கரிசனத்துடன் பொறுமையுடன் பார்த்துக் கொண்டிருக்கிறாள் என்று புரிகிறது. சிலசமயம் மனிதர்களின் அன்பை அறிய வாழ்வில் நெருக்கடி வர வேண்டும். ஆனால் அப்போது அவள் என்னை முக்கியமான சந்தர்பத்தில் கைவிட்டு விட்டதாகவே எண்ணினேன். கோபத்தில் குழந்தையின் முகத்தை கூட பார்க்க மறுத்து விட்டேன். அதைத் தான் இப்போது நினைத்தாலும் தாங்கிக் கொள்ள முடியவில்லை.” அவன் தலையை புறா போல சாய்த்து அழத் தொடங்கினான். ஒரு கண்ணில் இருந்து மட்டும் கண்ணீர் கோடாக வழிந்தது. இன்னொரு கண் அசைவற்று என்னை வெறித்தது. பிறகு சுதாரித்துக் கொண்டு கண்ணைத் துடைத்து இயல்பானான்.
அவனது ஒரு கண்ணுக்கு என்னாயிற்று என்று விசாரித்தேன். கொஞ்ச நாளாய் அப்படித் தான் இருக்கிறது என்று பார்வையில் எல்லாம் இரட்டையாய் தெரிகிறது என்றும் கூறினான். “நான் கூடவா இரண்டாக தெரிகிறேன்?” என்று கேட்டேன்.
“ஆம்”
எனக்கு இவ்விசயம் ஏனோ சங்கடமாய் இருந்தது. அந்த நிலையில் அவனிடம் எந்த முகபாவத்துடன் என்னவித சைகையுடன் உரையாடுவது என சிந்தித்தேன். குழப்பமாக இருந்தது. அவன் ஒரு கண்ணை மட்டும் கைக்குட்டையால் துடைத்துக் கொண்டான். பிறகு அந்த சிவந்து போன ஒற்றைக் கண்ணைக் கொண்டு புறா போல என்னைப் பார்த்து சொன்னான்: “எல்லாம் இந்த விபத்தினால் தான். இந்த விபத்து நேராமல் இருந்திருந்தால் விவாகரத்தை தள்ளிப் போட்டிருப்பேன். என் குடும்பம் என்னோடு இருந்திருக்கும். என் குழந்தை என் கண்முன்னே வளர்ந்திருப்பான். அவனது சிரிக்கின்ற முகத்தை பார்த்தால் என் கவலையெல்லாம் பறந்து விடுமே! என்ன சொல்ல, விபத்துக்குப் பின் நான் வெறும் பாதி மனிதன் தான். அப்படித் தான் தோன்றுகிறது, நிஜமாகவே. பாதி மனிதனை யாருக்கு வேண்டும்? குடும்பத்துக்கும் வேண்டாம், வேலை பார்க்கும் நிறுவனத்துக்கும் வேண்டாம், அப்படித்தானே?”
நான் அவனுடைய மனப்பதிவு ஆதாரமற்ற வெறும் பிரமை என்றேன்.
“இருக்கலாம். நன்றாக இருந்திருந்தால் உன்னைப் போல் ஜோராக அந்த கல்லூரி வேலையில் இன்னமும் இருந்திருப்பேன். அடிமையாக எல்லா கொடுமையையும் பொறுத்துக் கொண்டிருக்க மனிதனுக்கு முதலில் தேவை ஆரோக்கியம். நல்ல உடல். இல்லையா?” அவன் வக்கிரமாக சிரித்தான்.
நான் எனது ராஜினாமாவை குறிப்பிட்டேன். அவன் ஆச்சரியம் காட்டினான். “ஏன் திடீரென்று ராஜினாமா செய்ய நேர்ந்தது? என்ன பிரச்சனை உனக்கு?” என்று கேட்டான். “எந்த பிரச்சனையும் இல்லை. கிளம்புவதற்கு ஒரு சந்தர்ப்பம் வாய்த்தது.”
“ஆனால் உனக்கு இங்கு அப்படி ஒன்றும் பிரச்சனை இல்லையே?” என்றான் சந்தேகமாக.
எனக்கு பதில் சொல்லத் தெரியவில்லை “ இப்போது இதனால் எனக்கு எந்த நஷ்டமும் இல்லை லாபமும் இல்லை.” என்றேன்.
“ஏன் உனக்கு போக பிடிக்கவில்லையா?”
“பிடிக்குதோ இல்லியோ போக வேண்டும். இங்கேயே இனி இருக்க முடியாது” என்றேன்.
அவன் ஆம் என தலையாட்டியபடி பல மாதங்களுக்கு முன்பு தனக்கு நிகழ்ந்த விபத்தை துல்லியமாக விவரிக்க ஆரம்பித்தான். பின்னிருந்து யாரோ கத்தியால் குத்தியது. கண்ணில் மின்னல் போல பளிச்சிட்டது. சூடாக ரத்தத்தை உணர்ந்தது. அந்த ரத்தத்தை கையில் வழித்து பார்க்கக் கூட இல்லை. அதற்கு முன்பு மயக்கம் போட்டு நடுசாலையில் விழுந்து விட்டான்.
வெம்மையான சூடான ரத்தம். பின்னங்கழுத்தில் வழியும் ரத்தத்துக்கு வேறு நிறமோ உருவமோ இல்லை. தேவையும் இல்லை.

நன்றி: அமிர்தா, நவம்பர்
Read More

சொந்தக்காரர்களும் சாதியமும்



தந்துகி: சாஸ்திரம் சடங்கு சம்பிரதாயம் எனும் கட்டுரையில் ஆதவன் தீட்சண்யா தன் கொள்கைக்கு எதிராக சடங்குகளை பின்பற்ற நேரும் சிக்கலை பேசுகிறார். உண்மை தான். ஆனால் இதற்கு எளிய தீர்வு அவர் சொல்லுவது போல மேலும் வலுவான கொள்கைப்பிடிப்பு அல்ல.


உறவினர்களை தேவையில்லாமல் ஒட்டிக் கொண்டிருப்பதை நிறுத்துவது சரியான தீர்வு. நம் உயிரணுக்களை சுமக்கிறார்களே அன்றி அவர்கள் நாம் அல்ல.
நான் ஆரம்பத்தில் இருந்த இம்மாதிரி பிரச்சனைகளை இவ்வாறு தான் தவிர்த்து வருகிறேன். சாதியத்தை கடப்பதற்கு முதலில் உறவினர்களை கடக்க வேண்டும். நாம் ஒரு உயர் அறிவு மற்றும் கலாச்சார சமூகம். உலகு தழுவிய சமூகம். நம்மோடு உரையாடும் பண்பாட்டு தகுதியில்லாத உறவினர்கள் நமக்கு எதற்கு? விட்டொழியுங்கள்.

என் அப்பாவின் நினைவுநாள் சடங்குகளை செய்ய அம்மா வற்புறுத்தினார். மறுத்து விட்டேன். அத்தை இறந்த போது போய் பார்த்து சடங்குகளில் கலந்து கொள்ளவில்லை. அதற்கு அவசியமில்லை. ஆனால் என் எழுத்தோடு சிந்தனைத் தளத்தோடு இதயத்தோடு நெருக்கமுள்ளவர்களின் தேவை என்றும் நான் இருப்பேன். ரத்த சொந்தம் அல்ல புத்தி சொந்தம், இதய அணுக்கம் தான் முக்கியம். அப்படிருந்தால் இப்படியான இரட்டை வாழ்க்கையை வாழ நேராது.

குழந்தைகளுக்கும் சாதியத்தை கற்றுக் கொடுப்பது சொந்தக்காரர்களும் அவர்களின் சடங்குகளும் தான்.சொந்தங்கள் ஒரு நீட்டித்த குடும்பம் போன்று செயல்படுகிறார்கள். இரண்டு முறை எனக்கு நண்பர்கள் சொந்தங்கள் தவிர்க்க முடியாதவை என வலியுறுத்தி இருக்கிறார்கள். பள்ளியில் படிக்கும் போது கலை இலக்கிய பெருமன்ற கூட்டங்களில் தொடர்ந்து கலந்து கொள்வேன். அங்கு பிரேம்குமார் என்றொரு எழுத்தாளர் இருந்தார். அவர் என்னிடம் ஒரு உரையாடலில் சொன்னார்: “நீ என்னதான் சாதி வேண்டாம் என்றாலும் திருமணம் என்றதும் அங்கு சாதி வந்து விடும். உன் உறவினர்களின் கேள்வியை நீ சமாளிக்கவே முடியாது” என்றார். நான் பின்னர் சாதி கடந்து மணம் புரிந்தேன். என் உறவினர்கள் ஆட்சேபித்தார்கள். ஆனால் அவர்களை நான் பொருட்படுத்தவே இல்லை. இன்று வரை அவர்களின் அபிப்ராயங்களை நான் கேட்பதோ கவனிப்பதோ இல்லை. எனது மதிப்பை நான் மதிக்கும் நபர்களிடம் தான் தேடுவேன். நான் மதிக்காதவர்கள் எனக்கு மனிதர்களே அல்ல. இன்னும் சொல்வதானால் மிருகக்காட்சி சாலையில் உள்ளவற்றை பார்க்கும் ஆர்வத்துடன் தான் இவர்களை கவனிக்கிறேன். படிப்பினால் கிடைக்கும் பண்பாட்டு மேம்பாட்டை அடையாதவன் கவனிக்கத்தக்கவன் அல்ல.

அடுத்த இயக்குநர் ராம் ஒரு காலத்தில் பழக்கத்தில் இருந்தார். அப்போது என் மனைவி என்னை மணப்பதற்கு அவளது குடும்பமும் உறவுகளும் கடுமையாக எதிர்த்ததனர். ராம் என் மனைவி தன் குடும்பத்தின் சம்மதத்தை பெற முயலவேண்டும் என்றார். நான் அவர்கள் முக்கியமல்ல என்றேன். அவர் “இல்லை வாழ்வில் பலசமயங்களில் அவர்கள் இன்றியமையாதவர்களாக இருப்பார்கள்” என்றார். பிறகு குடும்பம் உறவை எதிர்த்து மணம் புரிந்து இத்தனை ஆண்டுகளில் எங்களுக்கு எந்த சொந்தங்களும் தேவைப்படவில்லை. இதை இரக்கத்துடன் சொல்லவில்லை. உண்மையிலே அவர்கள் எங்கள் உலகில் இல்லை. என் வாழ்வில் நான் மரணத்தை மிக நெருக்கமாக சென்று பார்த்து வந்து விட்டேன். அப்போதும் என் நண்பர்களும் வாசகர்களும் தான் முதலில் வந்து ஆதரவு தந்தார்கள். என் எழுத்தின் வாசகியாக மட்டுமே அப்போது அறிமுகம் இருந்த தோழி சம்மங்கி திருவண்ணாமலையில் இருந்து வந்து ஆஸ்பத்திரியில் என் உள்ளங்கையை திறந்து ஐநூறு ரூபாய் வைத்து வாங்கிக் கொள்ள வற்புறுத்தினார். நான் எவ்வளவோ மறுத்துப் பார்த்தேன். பிறகு என் கண் கலங்கிப் போயிற்று. தமிழ்நதி வந்ததையும் நான் மறக்க முடியாது. இவர்கள் தான் சொந்தங்கள். இவர்கள் சொந்தமாக இருப்பதிலேயே எனக்கு பெருமை.

நாம் எவ்வளவு தான் வாசித்தாலும் தீவிரமாக இயங்கினாலும் சாதியம் நமக்குள் இருந்து கொண்டு தான் இருக்கும். காரணம் சாதியவாதிகளான நம் உறவினர்களுடன் இருந்து தான் நம் சமூகமயமாக்கல் சிறு வயதில் இருந்து துவங்குகிறது. பிறகு ஊர்க்காரரகளிடம் பழகுகிறோம். அவர்களும் அநேகமாக நம் சாதியே. ஆனால் பள்ளிக்கும் கல்லூரிக்கும் சென்று பல்வேறு சாதிகளுடன் இருக்கும் போது அடையாளக் குழப்பம் ஏற்படுகிறது. ஆனால் அந்நேரம் நமது சாதிய அடையாளம் உளவியல் ரீதியாக வலுப்பெற்றிருப்பதால் வெளிசாதிகளை அரைமனதாய் ஏற்று பாசாங்கு பண்ண துவங்குவோம். இந்தியர்களின் பிரச்சனையே இது தான்.

அதற்காக குழந்தைகளை சொந்தங்களின் அணுக்கமே இன்றி வளர்க்க முடியுமா என்ன? முடியாது. நாம் அதற்குப் பதில் விரிவான சிந்தனை கொண்ட ஒரு நட்பு வட்டத்தை வெளியில் தோற்றுவிக்க வேண்டும். இவர்களுடன் இவர்களின் குடும்பங்களுடன் நம் குழந்தைகளை பழக விட வேண்டும். சிறு வயதில் இருந்தே கலவையான சாதி அடையாளங்களுடன் விரிவான அறிவு பண்பாட்டுச் சூழலில் பழக நேரும் குழந்தைகளுக்கு சொந்தங்களை விட உயர்ந்த மனிதர்களே முக்கியம் என்று சொல்லிக் கொடுக்க வேண்டும். இவ்வாறு உலக சமூகத்தோடு தம்மை அடையாளப் படுத்தும் குழந்தைகளை நாம் பயிற்றுவித்து மேலெடுக்க முடியும்.

இது ஒரு கருத்தியல் தான். முயன்று பார்ப்போமே.

மேலும் வாசிக்க: http://aadhavanvisai.blogspot.in/2012/06/blog-post_18.html
Read More

ஓசியில் எழுதலாமா?



மனுஷ்யபுத்திரன் உடனான சச்சரவில் சில இடங்களில் ஓசியில் எழுதும் எழுத்தாளர்கள் என லீனா மணிமேகலை திரும்பத் திரும்ப கூறி வருகிறார். இது குறித்த சில விசயங்களை தெளிவு படுத்த வேண்டும்.

ஐம்பதுகளில் இருந்தே நமக்கு ஓசியில் எழுதி வரும் வரலாறு உண்டு. நான் ஜெயமோகனை பதினைந்து வயதில் சந்தித்த போது அவர் இருபது வருடங்களாக ஓசியில் தான் எழுதிக் கொண்டிருந்தார். மிக சமீபமாகத் தான் அவர் ராயல்டி மூலம் ஓரளவு பணம் பெற்றிருக்கிறார். என் கலை இலக்கிய பெருமன்ற நண்பர்களில் யாரும் இதுவரை எழுத்தின் மூலம் பத்து ரூபாய் கூட சம்பாதித்திருக்க மாட்டார்கள். அவர்கள் புலம்பியும் நான் கேட்க வில்லை. 

தமிழில் எழுதி அதிகம் சம்பாதிக்க முடியாது என தெரிந்து தான் வருகிறோம். எழுதி சம்பாதிக்கும் லட்சியபூர்வமான சூழலும் இங்கில்லை. நான் அடிப்படையில் நடைமுறைவாதி. இங்குள்ள பதிப்பக சூழல், படிநிலை, அதில் எப்படி ஏறி வருவது, மற்றும் சிறுபத்திரிகை போலித்தனங்கள், அசட்டுத்தனங்களில் ஒரு சிறுபகுதியேனும் அறிவேன்.

இரண்டு வருடங்களுக்கு முன் எழுத்தாள நண்பர்கள் சிலருடன் பேசிக் கொண்டிருக்கையில் என்னை கூட்டாக அவர்கள் அடிமை எழுத்தாளன் என்று தாக்கினார்கள். என்னை அடுத்தவர் பயன்படுத்துவதாக சொன்னார்கள். ஆனால் என் தொலைநோக்கு அவர்களுக்கு புரியாது என்பதால் கடந்த காலத்தில் இருந்து இரண்டு கதைகள் சொன்னேன்.
ஒன்று என் முதல் நூல் பற்றியது. ஐந்து வருடங்களுக்கு முன் தமிழினி வசந்தகுமாரை சந்தித்து மேற்கத்திய ஹைக்கூ மொழிபெயர்ப்புகளை பிரசுரிக்க கேட்டேன். அவர்கள் வெறுமனே மறுப்பதை விட்டு அற்பமாக நடத்தினார். நட்புரீதியாக அவரை தொடர்ந்த சந்திக்க விரும்புவதாக கேட்டேன். அதற்கு அவர் நான் அவரை தொடர்ந்து சந்தித்து ஒருவித இரக்கத்தை ஏற்படுத்தி அதன் மூலம் புத்தகம் பிரசுரிக்க முயல்வேன் என சொல்லி விரட்டி மேலும் அவமானப்படுத்தினார். இன்னொரு சம்பவம் தீராநதி பற்றியது. 

ஐந்து வருடங்களுக்கு முன் தீராநதிக்கு ஒரு நல்ல கட்டுரை எழுதிக் கொண்டு நேரில் சென்று ஆசிரியரிடம் கொடுத்தேன். வாங்கினார். பிறகு தொலைபேசியில் அழைத்து கட்டுரை பிரசுரமாகுமா எனக் கேட்டேன். அதற்கு அவர் என்னை இழிவாக திட்டி இனிமேல் போன் பண்ணாதே என்றார். இதில் தமாஷ் என்னவென்றால் நான் பிற்பாடு உயிர்மையில் இரண்டு வருடங்கள் எழுதியதும் என்னை தொடர்ந்து படித்து அவரே என் வாசகனானார். என்னை பாராட்டி தன் வலைப்பக்கத்தில் எழுதினார். ஆனால் நான் தான் அன்று கட்டுரை கொண்டு வந்த நபர், போனில் அழைத்து அசிங்கமாக திட்டப்பட்டவன் என மறந்து விட்டார். உண்மையில் மனுஷ்யபுத்திரனை விட எனக்கு இவர்கள் இருவரும் தான் அதிகம் முக்கியம். கடந்த நான்கு வருடங்களில் ஆயிரக்கணக்கான் பக்கங்கள் எழுதியிருக்கிறேன். எத்தனையோ இரவுகளில் கண்கள் களைக்கும் போது விரல்கள் சலிக்கும் போது நான் இவர்களை ஒரு நொடி நினைத்துக் கொள்வேன். எனக்கு கிடைத்துள்ள பிரசுர இடத்தை எளிதாக எடுத்துக் கொள்ளக் கூடாது என நினைத்துக் கொள்வேன். மேலும் என்னை நிராகரித்தவர்கள் என் வளர்ச்சியை பார்த்து வருகிறார்கள் என்பதே உற்சாகமூட்டும் எண்ணம் தானே.

என்னை ஓசி எழுத்தாளன், அடிமை என நினைப்பவர்களை முட்டாள்கள் எனவே நினைப்பேன். ஏனென்று சொல்கிறேன். இங்குள்ள சூழலில் எழுதினால் பணம் கிடைக்காமல் போகட்டும், எழுத போதுமான பத்திரிகை இடமே எளிதில் கிடைப்பதில்லை. இரண்டு விதமான எழுத்தாளர்களுக்கு ஸ்திரமான, எந்த குப்பை எழுதினாலும் பிரசுரிக்க இடம் உள்ளது. முதலில், வயதான எழுத்தாளர்கள். அவர்களுக்கு ஒரு பிம்பம் உள்ளது. அவர்களை படித்து வளர்ந்தவர்கள், அல்லது கூட தோளில் கையிட்டு பழகியவர்கள் இலக்கிய பத்திரிகை ஆசிரியர்களாக இருப்பதால் பிரசுரம் அவர்களுக்கு கனவு அல்ல, ரோட்டில் போகிற பெண்ணை பார்த்து இளிப்பது போல எளிதானது. 

இரண்டாவது, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் போல நிறுவன பலம் உள்ள எழுத்தாளர்கள். அவர்களுக்கு பிரசுரத்தை விட பிரச்சார ஆதரவும் விருதுவாங்கும் வாய்ப்புகளும் வலுவான வலைதொடர்பும் உண்டு. இந்த இரண்டு பின்னணியும் இல்லாமல் எழுத வருபவர்களின் அடிப்படையான நெருக்கடி உண்மையில் முன்னூறு ரூபாய் பணம் சம்பாதிப்பது அல்ல. ஜடாயுக்களின் இடம் தமக்கு கிடைக்கும் என்றால் வேண்டுமானால் அவர்களே கூட பத்திரிகைக்கு பணம் தர தயாராக இருப்பார்கள். அது கூட உண்மையில் நல்ல ஏற்பாடு தான்.

இரண்டு தரப்பினருமே இருக்கக் கூடாதென்றோ அவர்கள் செய்வது தவறு என்றோ நான் கருதவில்லை. ஒரு இளைய எழுத்தாளனாக நான் மோத வேண்டியது அவர்களுடன் தான் என சொல்ல வந்தேன். அந்த போட்டி தான் நல்ல எழுத்தை உருவாக்கும்.



உயிர்மையை எடுத்துக் கொள்வோம். நான் நாவல் எழுதினதாக சொன்னதுமே பிரசுரித்து விடுவோமே என ஆதரவாக முன்வந்தார். இத்தனைக்கும் என் புனைவுகள் அதிகம் பிரசுரமாகியதில்லை. ஆனாலும் மனுஷ்யபுத்திரனுக்கு என் மீது ஆபாரமான நம்பிக்கை இருந்தது. கடந்த மார்ச்சில் அவரிடம் போய் நான் புரூஸ் லீ பற்றி புத்தகம் எழுதப்போகிறேன், பிரசுரிப்பீர்களா என்றேன். தாராளமாக என்றார். 350 பக்கத்துக்கு புத்தகம் வந்திருக்கிறது. அவர் எந்த கேள்வியும் இன்றி ஊக்கப்படுத்தினார். ஒரு இளைய எழுத்தாளனுக்கு இது தான் அவசியம். இடமும் ஊக்கமும்.

சின்ன சின்னதாய் கவிதை எழுதி ஓய்கிறவர்களுக்கு இது பெரும் பிரச்சனை இல்லை. ஆனால் நிறைய உரை எழுதும் விருப்பம் கொண்ட என் போன்றவர்களுக்கு உயிர்மை ஒரு கனவு நிலம். உயிர்மையை எதிர்க்கும் பலரில் அப்பத்திரிகையில் பத்தி எழுத ஆசைப்படுகிறவர்களும் அடங்குகிறார்கள். 

கடந்த முறை இதே பிரச்சனையை ஒட்டி முகநூலில் சர்ச்சையை கிளப்பின நண்பர் உயிர்மையில் தன் நாவலை கொண்டு வர ஆசைப்பட்டார். மனுஷ்யபுத்திரன் நிராகரித்து விட்டார். நண்பரிடம் போனில் பேசும் போது கேட்டேன்: “சரி உயிர்மை தான் ராயல்டி தரவில்லை. ராயல்டி தருகிற, உயிர்மை அளவுக்கு வீச்சும் வாசகர் கவனமும் உள்ள இன்னும் நாலு பத்திரிகை சொல்லுங்கள். அதில் எழுதுவோமே” என்றேன். அவரிடம் பதில் இல்லை. நான் கடந்த நான்கு வருடங்களில் வேறு சில பத்திரிகைகளிலும் எழுதியிருக்கிறேன். ஆனால் உயிர்மையில் எழுதும் போது கிடைக்கிற கவனமும் பாராட்டும் வேறெங்கும் இருப்பதில்லை. ஒரு இளைய எழுத்தாளன் தன் priority என்ன என்று சிந்திக்க வேண்டும். அவனைச் சுற்றி எந்த ஆதரவும் இல்லை. அவன் கிடைக்கிற ஒரு சின்ன மரத்துண்டையாவது பற்றிக் கொண்டு கரையேற வேண்டும்.

மனுஷ்யபுத்திரன் உன் நண்பர் என்பதால் ஆதரிக்கிறாய் என்று நீங்கள் சொல்லலாம். அப்படி நினைப்பவர்கள் ஒரு விசயத்தை பார்க்க தவறுகிறார்கள். கடந்த சில வருடங்களில் உயிரோசை உயிர்மை இரண்டிலும் மிக அதிகமாகவும் தொடர்ச்சியாகவும் எழுதி வந்துள்ளவர்கள் மாயா, முத்துக்கிருஷ்ணன், ஷாஜி, மற்றும் நான் உள்ளிட்ட மிகச்சிலரே. மனுஷ்யபுத்திரனிடம் எங்களுக்கு உள்ளது நட்பு கடந்த ஒரு கூட்டுறவு. இதன் மூலம் எங்களுக்கும் வாசகர்களுக்கும் பலன் உள்ளது.
எனக்கு எழுத்து குறித்து பெரும் கனவுகள் உள்ளன. அடுத்த முப்பது வருடங்களேனும் எழுத நினைக்கிறேன். அதற்கான தீர்மானமான திட்டங்கள் என்னிடம் உள்ளன. நான் லீனாவின் மொழியில் “ஓசியில்” எழுதுகிற எதுவும் ஓசி என நான் நினைக்கவில்லை. ஜெயமோகனும் எஸ்.ராவும் முப்பது வருடங்களாய் எழுதினது ஓசி இல்லை. இனியும் அப்படியே!



நீட்சே சொன்னது போல் மனிதனுக்கும் அதிமனிதனுக்கு இடையிலான பாலமாக இருப்பவர்களே எழுத்தாளர்கள். எழுத்து மீது மிகப்பெரிய கடப்பாடும் காதலும் இருப்பவர்கள் தொடர்ந்து எழுதி வாசகனை அடைவதே பிரதானம் என நினைப்பார்கள். எழுத்து என்பது சினிமாவில் நுழைவதற்கு முன்பான இளைப்பாறலோ, வலைதொடர்பாக்கமோ அல்ல. அப்படி கருதுபவர்களுக்கு நான் சொல்வது புரியாது.
Read More

Thursday, 15 November 2012

தர்மபுரி கலவரம் : கொள்ளையுடன் நடந்த ஜாதிவெறி துவம்சம்.





[தர்மபுரி ஜாதிக்கொள்ளை குறித்த உண்மை அறியும் குழுவின் (கம்பீரன், யாக்கன், யாழன் ஆதி, கு. உமாதேவி, ஸ்ரீதர் கண்ணன், நீரை.மகேந்திரன்) அறிக்கை.]

“எப்படிங்கன்னா நாங்க ஒண்ணா படிப்போம்; எங்க பிரண்ட்ஸுங்க அம்மாங்கதான் அந்தச் சேரிக்காரனுங்க வீட்டயெல்லாம் கொளுத்துங்கடான்னு கெட்ட கெட்ட வார
்த்தாயா திட்டினு வந்தாங்க;எங்கூட படிக்கிற பசங்க எல்லாம் வந்து எங்கவீட்ட கொளுத்துனாங்க, பேச்சுப்போட்டியில நான் வாங்குன ப்ரைஸ் சர்டிபிக்கேட் எல்லாம் எரிஞ்சி போச்சு அதோ அந்த கொல்லையில நின்னுட்டுதான் நாங்க எல்லாத்தையும் பாத்தோம் .இப்ப எப்படி போய் ஸ்கூல்ல ஒண்ணா படிப்போம்”
- விசாலி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) ,9ம் வகுப்பு மாணவி,
அண்ணாநகர், தர்மபுரி ஜாதிக் கொள்ளையில் பாதிக்கப்பட்டவர்

கடந்த நவம்பர் 7, 2012 அன்று தர்மபுரி மாவட்டம், தர்மபுரி ஊராட்சியைச் சேர்ந்த நத்தம் காலனி. கொண்டாம்பட்டி ,அண்ணாநகர், ஆகிய பகுதிகளில் ஜாதி வெறியுடன் தலித் மக்களின் சொத்துக்களைக் கொள்ளையிட்டு அவற்றை சூரையாடி கொளுத்தி அவர்களின் வாழ்வாதாரங்களை அழித்து ஜாதிவெறி வன்னியர்களால் நடத்தப்பட்ட அட்டூழியம் ஈழத்தில் தமிழர்கள் மேல் சிங்களவர்களால் நடத்தப்பட்டதைவிட கொடுமையானது. 250க்கும் மேற்பட்ட வீடுகள் மீண்டும் வாழமுடியாத இடங்களாக மாறியுள்ளன.

இத்தகைய தாக்குதலை ஜாதிமோதல் என்றும் ஏதோ இரண்டு மூன்று குடிசைகள் கொளுத்தப்பட்டது என்றும் பொதுபுத்தி இதழ்கள் செய்தி வெளியிடுயிடுகின்றன. அவை முற்றிலும் தவறானவை. இது ஜாதிமோதல் அல்ல. இரண்டு ஜாதிகளும் கைகலப்பில் ஈடுபட்டிருந்தால் அது ஜாதிமோதல்.ஆனால் இது ஆதிக்க ஜாதியினரின் திட்டமிடப்பட்ட தாக்குதல். திருப்பி அடிக்க ஆட்கள் இல்லாத தலித் பகுதியில் கனத்த ஆயுதங்களுடனும் பெட்ரோல் பாம்களுடனும் புகுந்த 1000க்கும் மேற்பட்ட வன்னியர்கள் அப்பாவி பெண்களையும் குழந்தைகளையும் துரத்தி அடித்து அவர்களின் வீட்டைக் கொள்ளையிட்டு கொளுத்தி அழித்த கொடூரச்செயல்திட்டம்.

தாக்குதலுக்கானக் காரணம்

இதற்குக் காரணத்தை ஒரு கலப்புத்திருமணத்தின்மீது போட்டிருக்கிறார்கள் அவ்வளவுதான். திவ்யா என்னும் வன்னியர் சமூகப் பெண்ணும் இளவரசன் என்னும் தலித் இளைஞனும் காதலித்துத் திருமணம் செய்து கொண்டு நாற்பது நாட்கள் ஆகின்றன. அவர்களைப் பிரித்துவிட வேண்டும் என எத்தனிக்கிறது ஆதிக்க வன்னிய சமூகம். அதற்கு வன்னிய அமைப்புகளும் துணை போயிருக்கின்றன.

திருமணம் செய்துகொண்டவர்களைப் பிரித்துவிட கட்டளையிட்ட வன்னிய சாதியினர் அது நடக்காமல் போனதால் திவ்யாவின் அப்பா திரு.நாகராஜ் அவர்கள் கடந்த 7ம் தேதி தற்கொலை செய்துகொண்டதாகச் சொல்லி. வன்னியர்கள் இப்படி ஒரு தாக்குதலை அரங்கேற்றிவிட்டனர்.

திவ்யாவுக்கும் இளவரசனுக்கும் திருமணம் நடந்து 40 நாட்கள் ஆகிவிட்டன. திரு.நாகராஜ் அவர்கள் தலித் மக்களின் மீது அன்புகொண்டவர். ‘எம்மகதான் தப்பு பண்ணிட்டா அவங்களபோய் எதுவும் பண்ணிடாதீங்க’ என்று சொல்லியிருக்கிறார். அவர் தற்கொலை செய்துகொண்டதாகச் சொல்லப்பட்ட அன்று தன் மகளை சமாதானப்படுத்தி அழைத்துவர அவருடைய மனைவி சென்றுவிட நாகராஜ் அவர்கள் தற்கொலை செய்துகொண்டதாகச் சொல்லப்படுகிறது. அவருடையப் பிணத்தை வைத்துக்கொண்டு சாலை மறியல் செய்யப்பட்டபோதுதான் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது.

தாக்குதல் நடந்த விதம்

இளவரசன் இருந்த நத்தம் காலனிதான் தாக்குதலுக்கு இலக்கான முதல் தலித் பகுதி. நத்தம் காலனி வழியாகத்தான் திவ்யாவின் வாழிடமான வன்னியர்கள் வாழும் செல்லங்கொட்டாயிலிருந்து வரவேண்டும். நாகராஜின் பிணத்தை வீட்டிலிருந்து அந்த வழியாகத்தான் கொண்டுவந்து தர்மபுரி திருப்பத்தூர் முக்கிய சாலையை மறித்து சாலை மறியல் நடைபெற்றிருக்கிறது. அப்படி வரும்போதே இளவரசனின் வீடு அடித்து நொறுக்கப்பட்டு தீவைத்துக்கொளுத்தப்பட்டது. வீட்டிலிருக்கும் அனைத்துப் பொருட்களும் சூரையாடப்பட்டது. உணவுப் பொருட்கள் எடுத்து வெளியில் வீசப்பட்டிருக்கின்றன. துணிகள் எல்லாம் எடுத்துப் போடப்பட்டு பெட்ரோல் ஊற்றி கொளுத்தப்பட்டிருக்கிறது. அதுதான் பிரச்சினைக்குரியவர்களின் வீடு கோபத்தில் வன்னியர்கள் இப்படி செய்கிறார்கள் என்று எண்ணி நத்தம் காலனியில் இருந்தவர்கள் தற்காப்பு முயற்சிகள் ஏதும் செய்துகொள்ளாமல் இருந்திருக்கின்றனர். இது நடக்கும்போது சுமார் 4.30 மணி.

பிணத்தை வைத்துக்கொண்டு 50 பேர்தான் சாலை மறியலில் ஈடுபட்டிருக்கின்றனர். இதற்குள் நத்தம் காலணி, அண்ணா நகர், கொண்டாம்பட்டி ஆகிய தலித் பகுதிகளுக்கு வடக்கே சீராம்பட்டியில் பெரிய புளியமரம் ஒன்று மரம் அறுக்கும் எந்திரத்தால் அறுக்கப்படுகிறது. தெற்கே எஸ்.கொட்டாவூரில் ஒரு மரம் அறுக்கப்பட்டு சாலையின் குறுக்கே தள்ளப்படுகிறது. இருபுறமும் எந்த வாகனுமும் வர முடியாத சூழ்நிலை ஏற்படுத்தப்படுகிறது.

ஆனால் சுற்றுவட்டத்திலிருக்கும் வன்னியர்கள் பல ஊர்களிலிருந்து வந்து ஏற்கெனவே திரண்டு இருந்திருக்கின்றனர். சாலை மறியல் நடக்கும்போதே ஆயிரத்திற்கும் மேற்பட்ட வன்னியர்கள் பெட்ரோல் குண்டுகள்,சம்மட்டிகள், கடப்பாரைகள் தலித்துகள் வாழும்பகுதியான நத்தம் காலனியில் நுழைந்து வீடுகளைத் தாக்குகிறார்கள். அந்த நேரத்தில் குழந்தைகள் பள்ளிகளிலிருந்து திரும்பிக் கொண்டிருக்கின்றனர். 60க்கும் மேற்பட்ட பெண்கள் அருகில் இருக்கும் கொல்லையில் நிலக்கடலைப் பறிப்பதற்காகச் சென்றிருக்கின்றனர்.

முதல் வீடு தாக்கப்படுகிறது. கட்டுக்கற்களைப் பயன்படுத்தி வீட்டின் கதவுகளை உடைத்து உள்ளே செல்கிறார்கள். உள்ளிருக்கும் பீரோதான் அவர்களின் முதல் இலக்கு. அதை உடைத்துத் துணிகளை வெளியெ எடுத்து போடுகின்றனர். லாக்கரை உடைத்து உள்ளிருக்கும் நகைகளை எடுத்துக்கொள்கின்றனர். பணமிருப்பின் பணத்தை எடுத்துக்கொள்கின்றனர். பத்திரங்கள், குழந்தைகள் படிக்கும் புத்தகங்கள், கல்விச்சான்றிதழ்கள்,ரேஷன் கார்டுகள் என எல்லாவற்றையும் எடுத்து வெளியே இருக்கும் துணி அல்லது கட்டிலின்மேல் போட்டுவிட்டு கையில் வைத்திருக்கும், பெட்ரோல் நிறைந்த, நன்றாக அடைக்கப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்களில் ஓட்டைப் போட்டு வெளியே இருக்கும் எல்லா துண்மணி மற்றும் ஆவணங்கள்மீது பெட்ரோலைப் பீச்சி அடித்து நனைத்துவிட்டு வெளியே வந்து பெட்ரோல் குண்டுகளைக் கொளுத்தி அந்த வீட்டினுள் வீச அனைத்தும் தீ பிடித்து எரிகின்றது பெட்ரோல் குண்டுகள் வெடித்து மேலும் தீ பரவ வீட்டினுள் இருக்கும் எல்லாமே தீக்கிரையாகிறது.

இந்த முறையைத் தான் அனைத்து வீடுகளுக்கும் ஜாதிவெறி வன்னியர்கள் நிகழ்த்தி இருக்கின்றனர்.

சேட்டு (60) அவர்கள் கூறும்போது “இத்தகையத் தாக்குதல் இதுவரை நடந்ததில்லை. இதுதான் முதல் முறை. அவர்கள் அந்த வீட்டைக் கொளுத்தும்போது நான் இந்தவீட்டில் கட்டிலுக்கு அடியில் குழந்தைகளை வைத்துக்கொண்டு மறைந்திருந்தேன். அந்த வீட்டுக்காரரான் ஜெயராமன் தீயை அணைக்க முற்பட்ட போது அவரையும் தாக்கிவிடுவார்களோ என பயந்து அவர் ஓடிவிட்டார். அடுத்து என்னுடைய வீட்டில் பக்கத்தை அறையை அடித்துக்கொண்டிருக்கும்போது குழந்தைகளைத் தூக்கிக் கொண்டு நானும் தப்பித்து விட்டேன். அந்த ஜெயராமனின் பி.சி. ஜாதியைச் சேர்ந்த நண்பர்கள்தான் ‘இதுதான் ஜெயராமன் வீடு கொளுத்துங்க’ என்று சொல்லி கொளுத்தினார்கள்.” என்றார்.

அவருடைய மகன் காளியப்பன் பெங்களூரில் பழையபேப்பர்கள் விற்கும் கடை வைத்திருக்கிறார். அங்கு உழைத்து சம்பாதித்துக் கொண்டிருக்கிறார். அவர் லாக்கரில் வைத்திருந்த 2 லட்சம் பணமும் 22 சவரன் நகையும் கொள்ளையிடப்பட்டிருக்கின்றன.

இப்படி எல்லா வீடுகளும் தாக்குதலுக்குள்ளாக்கப்பட்டிருக்கின்றன. கொள்ளையடிக்கப்பட்டிருக்கின்றன. பொடா பழனிச்சாமி வீட்டில் புகுந்து அங்கேயும் கொள்ளையிட்டு அவருடைய வண்டியைக் கொளுத்திவிட்டு சென்றிருக்கின்றனர். 5 சவரன் நகை கொள்ளையிடப்பட்டிருக்கிறது. வீட்டில் என்னென்னப் பொருட்கள் இருந்ததோ அனைத்தும் எரிக்கப்பட்டிருக்கிறது.

ஒரு பெரியவர் அம்மாசி(60) திருக்க அது தெரியாமல் அவர் படுத்திருந்த வீடு கொளுத்தப்பட்டு தீப்பிடித்து எரிய அவர் கத்த ஆரம்பித்திருக்கிறார். உடனே அவரை வெளியே எடுத்துப் போட்டுவிட்டுச் சென்றிருக்கின்றனர்.

குழந்தைகள் வீடுகளிலிருந்து காடு கழனி வழியாக ஓடியிருக்கின்றனர். பக்கத்து ஊரான மாரவாடி மற்றும் மறைவிடங்களுக்குச் சென்றி விட்டிருக்கின்றனர். தீ எரிவதையும் வீடுகள் அடித்து நொறுக்குவதைப் பார்த்தும் குழந்தைகள் பயந்த மனநிலையிலேயே இருக்கின்றனர். அவர்களுடைய பாடபுத்தகங்கங்கள் எரிவதைப் பார்த்து அவர்கள் தேம்பி அழுது ஏங்கிப் போயிருக்கின்றனர்

பாட்டில்களில் செய்யப்பட்ட குண்டுகள் வெடித்துச்சிதறியிருக்கின்றன. வன்முறைக் கும்பலில் பெண்களும் வந்திருக்கின்றனர். அவர்கள் ஒரு குழந்தையை அடித்து விரட்டி இருக்கின்றனர். வன்னிய இனத்தைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் அந்தக் கும்பலில் வந்திருக்கின்றனர். தன் சக மாணவ மாணவிகளின் வீடுகளைக் கொளுத்தியிருக்கின்றனர்.

கொளுத்தப்பட்ட பிறகு கும்பல் அடுத்த இடத்திற்குச் செல்ல மறைந்திருந்த தலித் பெண்கள் அதை அணைக்க செல்ல திரும்பி வந்து அவர்களை விரட்டியிருக்கின்றனர். தண்ணீர் இருந்தால்தானே நீங்கள் அணைக்கிறீங்க என்று சொல்லி இருக்கின்ற தண்ணீர் டேங்குகளை எல்லாம் அவர்கள் உடைத்திருக்கிறார்கள்.

இப்படி நத்தம் காலனியில் இருக்கும் எல்லாவற்றையும் கொள்ளையிட்டுவிட்டு கொளுத்திவிட்டு அவர்கள் பக்கத்திலிருக்கும் அண்ணா நகருக்குள் புகுந்து தலித் வீடுகளைக் கொளுத்தி அதே போல செய்திருக்கின்றனர், அங்கிருக்கும் ஜோசப் என்பவர் வீடுதான் முற்றும்முழுதாக அழிக்கப்பட்டிருக்கிறது. அவருடைய வீட்டிலிருந்த எல்லாமே அழிக்கப்பட்டுவிட்டது. அவர்கள் போட்டிருக்கும் உடுப்பைத் தவிர அவர்களுக்கு வேறு ஒன்றும் கிடையாது. அவருடைய வீட்டின் இரும்புகேட்டை அவர்கள் அப்படியே பெயர்த்து எடுத்துச் சென்று சாலையில் பேட்டிருக்கின்றனர். அதைத் தூக்க சுமார் 100 பேராவது வேண்டும். அவ்வளவு பெரிய கேட் அது.

அந்த ஊரை முடித்துக்கொண்டு கொண்டாம்பட்டிக்குச்சென்று இதே மாதிரியான கொள்ளையை முடித்திருக்கின்றனர்.

ஒவ்வொரு வீட்டிலும் இருந்த நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருக்கின்றன. துணிகள் இல்லை. பணம் கொள்ளையடிக்கப்பட்டிருக்கிறது. அதன் மதிப்பு அரசாங்காத்தால் சரியாகக் கணக்கிடப்படவில்லை.அண்ணாநகர் ஜோசப் அவர்கள் வீட்டில் மட்டும் 60 சவரன் நகை கொள்ளை போயிருக்கிறது. லட்சக்கணக்கான பணம் இல்லாமல் போயிருக்கிறது.

எனவே ஒரு வீட்டுக்கு 5 சவரன் என சராசரியாக வைத்துக்கொண்டால் 260 வீடுகள் 1300 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருக்கிறது. கோடிக்கணக்கான ரூபாய்கள் சொல்லலாம்.

கண்டறிந்தவைகள்

1. கலப்புத்திருமணம் செய்துகொண்ட இளவரசன் – திவ்யா ஆகியோருக்குத் திருமணம் நடந்து 40 நாட்களுக்குப் பிறகுதான் வன்னிய சமூகத்தை சேர்ந்த திவ்யாவின் தந்தை திரு நாகராஜ் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.
2. அதற்கு முன்பு வரை அவர் தன்னுடைய மகள் தவறு செய்துவிட்டாள் போனால் போகட்டும் என்றுதான் கூறியிருந்திருக்கிறார். தற்கொலை செய்துகொள்ளும் எண்ணம் அவருக்கு இல்லை
3. அன்று கூட தன் மகளை சமாதானம் செய்து அழைத்துவர அவருடைய அம்மா தான் அனுப்பப்பட்டிருக்கிறார். தந்தையான நாகராஜனை ஏன் அனுப்பவில்லை.
4. போனால் போகட்டும் விடுங்கள் என்று சொன்ன நாகராஜனை வன்னியர்கள் இன்னைக்கு உன்னோட பொண்ணுக்கு நாளைக்கு எங்களுக்கும் இது நடக்கும் என்று சொல்லியிருக்கின்றனர்.
5. தற்கொலை செய்துகொண்டிருப்பவர் தன் மகள் ஓடிப்போன அன்றே அந்த முடிவை எடுக்காதது ஏன்?
6. மகளை சமாதானம் செய்ய தந்தையையும் அனுப்பாதது ஏன்
7. ஒருவேளை இந்தத் தாக்குதலை நடத்துவதற்கு என்றே அவரை வன்னியர்கள் கொன்றிருக்கலாம் என்றே சந்தேகம் வலுக்கிறது.
8. தூக்கு மாட்டிக்கொண்டவரை கீழிறக்கி சாலைக்கு உடலைக் கொண்டுவரும் அந்த நேரத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வன்னியர்கள் அந்த இடத்தில் கூடியிருக்கின்றனர். அவர்கள் அங்ஙனம் வந்ததெப்படி?
9. வடக்கே சீராம்பட்டியில் பெரிய புளியமரம் ஒன்று மரம் அறுக்கும் எந்திரத்தால் அறுக்கப்படுகிறது. தெற்கே எஸ்.கொட்டாவூரில் ஒரு மரம் அறுக்கப்பட்டு சாலையின் குறுக்கே தள்ளப்படுகிறது. இருபுறமும் எந்த வாகனுமும் வர முடியாத சூழ்நிலை ஏற்படுத்தப்படுகிறது. மரம் அறுக்கும் எந்திரங்கள் குறிப்பிட்ட தூரங்களில் மறும் அறுப்பது சாலையை மறிப்பது என்பது உடனே நடந்ததா?
10. மரம் வெட்டித் தள்ளப்பட்ட பகுதியில் அமைந்துள்ள 3 தலித்
குடியிருப்புகளும் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறது.
11. திருமணம் செய்துகொண்டவர்களின் பகுதி நத்தம் காலனி, ஆனால்
அண்ணா நகர், கொண்டாம்பட்டி ஆகிய இடங்களில் தாக்குதல்
நடத்தப்படக் காரணம் என்ன?
12. தாக்குதல் நடத்தப்பட்ட எல்லா வீடுகளிலும் பெட்ரோல் குண்டுகள் மண்னென்ணை பயன்படுத்தப்பட்டிருக்கிறத. 250 வீடுகள். ஒரு வீட்டிற்கு ஒரு லிட்டர் என்று வைத்துக்கொண்டாலும் இவ்வளவு பெட்ரோல் மண்ணெண்ணெய் ஆகியவை நாகராஜன் தற்கொலைக்குப் பிறகு உடனடியாக எப்படி கிடைத்தன?
13. இத்தனை பாட்டில்கள், தடிகள் கடப்பாரைகள் சம்மட்டிகள் எப்படி சேகரிக்கப்பட்டன.
14. தாக்குதல் நடத்தப்பட்ட நான்கு மணி நேரம் வரை காவல்துறை தீயணைப்புத் துறை எதுவுமே வரவில்லை என்று மக்கள் கூறுகின்றனர்.
ஆனால் தலித் மக்கள் காவல் துறைக்கும் மற்றவர்களுக்கும் தகவல்களைச் சொல்லி இருக்கின்றனர்.
15. வெட்டிச் சாய்க்கப்பட்ட மரங்களைத் தாண்டி இருபுறமும் காவல்துறையால் வரமுடியவில்லை என்பதினை ஏற்க முடியாது
16. அப்படியே அவர்கள் வரவேண்டும் என்று நினைத்திருந்தால் தர்மபுரி புறவழிச்சாலை வழியாக அவர்கள் நத்தம் காலனிக்குள் வந்திருக்க முடியும். ஆனால் அவர்கள் ஏன் தாமதம் செய்தார்கள்
17. இந்தத் தாக்குதலுக்கு இளவரசன் திவ்யா காதல் மட்டுந்தான் காரணமாக இருந்திருக்குமா? தங்களை விட பொருளாதாரத்தில் உயர்ந்துவிட்ட தலித்துகள் தங்களிடம் கூலி அடிமைகளாக இல்லாமல் இப்படிப் பொருளாதார விடுதலை அடைந்திருக்கின்றனர் என்ற உளவியல்தான்.
18. தாக்குதல்களை தொடர்ந்து நாம் ஆய்வு செய்கிறபோது தாக்கப்பட்ட எல்லா வீடுகளும் ஒரேமாதிரியான தாக்குதலுக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறது. எல்லா வீடுகளிலும் பீரோக்கள் உடைக்கப்பட்டு முக்கியமான விலைமதிப்புள்ள பொருட்கள் களவாடப்பட்டு அவர்களின் ஆவணங்கள் எல்லாம் தீக்கிரையாக்கப்பட்டிருக்கிறது.
19. ஒன்பதாம் வகுப்பு மாணவி மற்றும் மாணவர்களின் கருத்துப்படி அவருடன் படிக்கின்ற மாணவர்கள் இந்த தாக்குதலுக்கு வந்திருக்கிறார்கள். அடித்திருக்கிறார்கள். எரித்திருக்கிறார்கள்
20. தாக்க வந்தவர்கள் இது முப்பதாண்டு பகை இந்த தீபாவளி எங்கள் தலை தீபாவளி என்று கொக்கரித்திருக்கின்றனர்.
21. தாக்குதல் நடத்தியவர்கள் பெரும்பாலும் தலித்துகளின் நண்பர்களாக இருந்த வன்னீயர்கள் தான்.

பரிந்துரைகள்

1. இந்தத் தாக்குதலுக்கு அடிப்படைக் காரணம் கடந்த ஏப்ரல் 1012 ல்
மாமல்லபுரத்தில் நடந்த வன்னியர் இளைஞர் மாநாட்டில் மருத்துவர் ராம்தாஸ் முன்னிலையில் காடுவெட்டி குரு பேசிய பேச்சு.நம் ஜாதி பெண்களை யாராவது காதல் திருமணம் செய்தல் அவர்களை வெட்டிவிட்டு வா நான் பார்த்துக்கொள்கிறேன் என்று கூறியது. எனவே அவர்மீதும் அந்தநேரத்தில் மேடையில் இருந்த மருத்துவர் ராமதாஸ்மீதும் வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்
2. கொங்குபகுதியில் இருக்கும் பெரும்பான்மையான ஆதிக்கசாதியான
கொங்கு வேளாள கவுண்டர்களும் இதே கருத்தை வலியுறுத்தி மாநாடுகள் நடத்துகின்றனர். பள்ளிகளிலும் இது பரப்புரை நடத்தப்படுகிறது. இது தடை செய்யப்பட வேண்டும். அவர்கள்மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
3. நத்தம் காலனி, அண்ணாநகர், கொண்டம்பட்டி ஆகிய பகுதிகளில் தலித்
வீடுகளில் கொள்ளையிடப்பட்ட நகைகள், பணம், அழிக்கப்பட்ட சொத்துகள் ஆகியவற்றைத் திரும்பக் கொடுக்க வேண்டும்.
4. அந்தப்பகுதியில் இருக்கும் குழந்தைகள் படிப்பதற்கான அனைத்து பாதுகாப்புகளையும் செலவினங்களையும் அரசே ஏற்க வேண்டும்.
5. இழப்பீடு என்றில்லாமல் அங்கே இருக்கக் கூடிய தாக்குதலுக்கு உட்பட்ட அனைத்து மக்களுக்கும் 5 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும்
6. சாதியை முன் வைத்து நடந்த இத் தாக்குதல்களில் ஈடுபட்ட அனைவருக்கும் சட்டபூர்வமான தண்டனைகள் கொடுக்கப்பட வேண்டும்
7. பள்ளிகளில் ஜாதி ஒழிப்பிற்கானப் பரப்புதல்களைச் செய்ய வேண்டும்.
8. சாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்டவர்களைப் போற்றுதலுக்குரியவர்களாக அரசு அறிவித்து அவர்களுக்கு சிறப்பு ஊக்கங்களைத் தர வேண்டும்
9. எய்ட்ஸ்/குடும்பக் கட்டுப்பாடு விளம்பரங்களைப் போல தொலைக்காட்சி, செய்தித்தாள்கள், ஆதிக்க சாதிகள் வாழும் பகுதிகள் ஆகியவற்றில் ஜாதி ஒழிப்பிற்கானப் பிரச்சாரத்தை அரசே ஏற்க வேண்டும்.
10. இத்தகைய தாக்குதல்களால் தொடர்ந்து பாதிக்கப்படும் தலித் மக்கள் வாழ்வதற்குத் தேவையான உளவியல்பூர்வமான வழிகாட்டுதல்கல் சிறப்பு கடனுதவிகள் ஆகியவற்றைத் தந்து அரசு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
11. தற்காலிக நிவாரணங்களை வழங்குவது மட்டுமே அரசின் கடமை என்ற நிலைமாறி நிரந்தரத் தீர்வுகளை நோக்கி அரசு முனைய வேண்டும்.
12. அதற்கு தலித் மக்கள் அமைப்பாகத் திரளுதல் ஆயுதங்கள் வைத்துக்கொள்வதற்கான உரிமைகள் ஆகியவற்றை அரசே ஏற்பாடு செய்ய வேண்டும்.
Read More

Contact Us

So you think we’re the right folks for the job? Please get in touch with us, we promise we won't bite!



Designed By Blogger Templates