”பூதக்கண்ணாடி” லோஹிததாஸின் இயக்கத்தில் மிக அதிகம் பேசப்பட்ட படம். நல்ல இசை, மம்முட்டியின் அற்புத நடிப்பு, பாம்பு குறியீடுகள் என பல விசயங்கள் இருந்தாலும் படம் எனக்குள் தூண்டிய கேள்வி பைத்தியம் சம்மந்தப்பட்டது.
பொதுவாக பைத்தியமாதலை ஒரு கடும் அதிர்ச்சியால் மனம் மீள முடியா வண்ணம் கலங்கிப் போவதாக படங்களில் காட்டுவார்கள். அல்லது பைத்தியம் கொண்டவர்கள் பல்வேறு பிரமைகளில் சிக்கி இருப்பார்கள்; விளைவாக தனிமைப்படுவார்கள், அல்லது கொலை செய்வார்கள். நிஜவாழ்க்கையில் நிறைய பேர் தற்கொலை செய்வார்கள்.
அறிவியலில் நமக்கு பொதுவாக உள்ள விளக்கம் பைத்தியம் என்பது ஒரு விஷயத்தை வேண்டுமென்றே சிக்கலாக்கி குழப்பிக் கொள்வது அதனால் அவஸ்தைப்படுவது; பைத்தியமற்றவர்கள் விஷயங்களை தெளிவாக்கி தர்க்கரீதியாக பார்ப்பார்கள். பொதுவாக நாம் இரண்டுக்கும் இடைப்பட்டு இருக்கிறோம்.
இன்னும் சொல்வதானால் பைத்தியம் ஒருவனை வாழ்வின் ஏமாற்றங்களை, அதன் வலியை தாங்க முடியாதவனாக்குகிறது. அவர்கள் வலியை தாமாக பன்படங்கு பெருக்குகிறார்கள். வலியை பெருக்கி எங்கிருந்தோ தப்பித்து போக பார்க்கிறார்கள். எதனிடம் இருந்து? வலியிடம் இருந்து தான். அதாவது நமக்கு காமம் போதவில்லை என்றால் போர்னோ அல்லது பகற்கனவு மூலம் மிகையான காமத்தை நாடுவோம். அதே போல் அரசியலிலும் எதார்த்தம் தாங்க முடியாத நிலையில் நாம் கருத்தாக்கங்கள், இலக்குகளை மிகையாக்கி லட்சியவாதத்தில் நிழல் தேடுவோம். ஒவ்வொரு முறையும் மிகைப்படுத்துகையில் தப்பிக்கவே முயல்கிறோம்.
வலியை தீர்க்க வழி உண்டு. ஒன்று தர்க்கரீதியாய் தீர்வை தேடலாம். அல்லது தானே சரியாகும்படி விட்டு விடலாம். இந்தியர்கள் பொதுவாக ரெண்டாவது வழியை தான் தேர்கிறார்கள். தானே சரியாகும் வரை நாம் கடுமையான மன நெருக்கடியை, ஸ்திரமின்மையின் பதற்றத்தை சந்திக்க வேண்டி வரும். அப்போது நாம் மதம், சடங்குகள் வழி இறைவனிடம் பணிய முனைகிறோம். இந்தியாவில் மதம் இவ்வளவு வலுவான இடத்தை பெற்றிருப்பதற்கு காரணம் அது ஒரு ”பைத்தியக்கார ஆஸ்பத்திரியாகவும்” இருப்பதால் தான். பொதுவாக மனநலம் பாதிக்கப்படுபவர்களுக்கும் திடீரென்று மத ஈடுபாடு அதிகமாவதுண்டு. சமீபமாக வடக்கிந்தியாவில் இருந்து பைத்தியம் பிடித்த ஒரு இளைஞர் பல கோயில் புண்ணிய தலங்களில் அலைந்து இறுதியாக கேரளாவில் அமிர்தானந்தமயியின் ஆசிரமத்தில் சரணடைந்து அங்குள்ள பாதுகாவலர்களால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டார்.
ஆக தானே சரியாகும் என விடுவதற்கும் ஒரு மன வலு தேவைப்படுகிறது. அது இல்லாதவர்கள் மனநோயின் மீளாப்பள்ளத்தில் விழுகிறார்கள். மன வலு ஏன் இல்லாமல் போகிறது என கேட்க வேண்டும்.
உளவியலாளர்கள் இதற்குக் காரணம் மரபியல் மற்றும் ஆளுமைக் கோளாறு என்கிறார்கள். ஆனால் மனிதனுக்கு என்றுமே இதையிரண்டையும் கடந்து மேலெழும் சக்தியை இயற்கை வழங்கி உள்ளது. இங்கு தான் நாம் பொதுவாக உளவியலில் இருந்து மாறுபட வேண்டும். மனிதன் சுயமுனைப்பற்ற ஆட்டுக்குட்டி அல்ல.
என்னைப் பொறுத்த வரையில் முக்கிய காரணம் பயம் தான். பயம் எங்கிருந்தோ வந்து நம்மில் தொற்றிக் கொள்கிறது. “பூதக்கண்ணாடி” படத்திலும் நாயகன் சதா எதைக் கண்டும் பயப்படுகிறவனாக இருக்கிறான். பயம் அவனை பலவீனப்படுத்துகிறது.
பூதக்கண்ணாடி என்றால் நுண்பெருக்கி. நாயகன் கைக்கடிகாரம் பழுதுபார்ப்பவன். அவன் ஒரு கண்ணில் மாட்டுகிற நுண்பெருக்கியை பயன்படுத்துகிறான். ஒரு கட்டத்தில் அச்சம் காரணமாக அவன் வாழ்வின் எல்லா அம்சங்களையும் நுண்பெருக்கி கொண்டு பார்க்க விழைகிறான். ஒரு நுண்பெருக்கியை வைத்து புத்தகம் வாசிப்பது போல இது. களைத்து விடுவீர்கள். அதே நுண்பெருக்கியை வைத்து உலகை பார்க்க முயன்றால் நாம் ஒரு ஒட்டுமொத்த சித்திரத்தை இழக்கிறோம். இறுதியில் நாயகன் பைத்தியம் முற்றி தன்னையே மறந்து சதா நுண்பெருக்கி வழி உலகை பார்த்தபடி இருக்கிறான்.
வாழ்வை புரிவதன் முக்கிய இலக்கு தெளிவு. வாழ்வை நுண்மையாக பார்க்கையில் தெளிவை இழக்கிறோமா? இது முக்கிய கேள்வி. ஆழமான விவாதங்களுக்கு இட்டுச் செல்லக் கூடியது. விசயங்களுக்குள் நுட்பத்துக்குள் நுட்பத்துக்குள் செல்வது அவசியம். அது உங்களை பைத்தியமாக்காது. ஒரு துறை சார்ந்த சிந்தனை, ஆய்வில் இதை செய்யலாம். வாழ்விலும் மிக மிக நுட்பமாக எல்லாவற்றையும் ஆராயலாம். அதனால் வழி தவற மாட்டீர்கள். ஆனால் இதன் முக்கியமான அடிப்படை என்னவென்றால் கவலை, அச்சம் ஆகிய உணர்ச்சிகள் உங்களை வழிநடத்தக் கூடாது என்பது. கராறான தர்க்கமும் தோல்வியை ஏற்கும் மனநிலையும் இருந்தால் நுட்பமான பார்வை உங்களுக்கு பெரும் வரமாகவே இருக்கும். நீங்கள் சித்தராகி விடுவீர்கள்.
மரணமடைய கற்பவன் தான் சிறந்த வீரன், அவனை தோற்கடிக்க இயலாது என்பார் புரூஸ் லீ. அதாவது மரணம் என்பது வாழ்வின் முடிவல்ல, ஒரு பகுதி. வாழ்வு ஒரு பெரும் ஆட்டம். அது மரணத்தோடு முடிவதில்லை. இந்த அமைதியும் தெளிவு இருந்தால் ஒரு சண்டையில் உங்களை தோற்கடிக்கவே முடியாது. இது ஒரு உயர் தத்துவ நிலை. இது கூட வேண்டாம். தோனி தோல்வியை கையாள்வதில் உள்ள அலட்டிக் கொள்ளாத அணுகுமுறை கூட போதும்.
சேம்பியன்ஸ் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா தோல்வியின் விளிம்பில் இருந்தது. மிக முக்கியமான கட்டத்தில் தோனி பந்தை இஷாந்திடம் கொடுத்தார். இஷாந்த் அன்றைய ஆட்டத்தின் மிக மோசமான வீரராக இருந்தார். வர்ணனையாளர்களும், பார்வையாளர்களும் தோனிக்கு பைத்தியம் பிடித்து விட்டதா என வியந்தனர். ஏனென்றால் தர்க்கப்படி அவர் பந்தை அன்று இஷாந்தை விட மேலாக வீசிய உமேஷ் யாதவ் அல்லது புவனேஷ்வர் குமாரிடம் அளித்திருக்கலாம். ஏன் இஷாந்திடம் கொடுக்க வேண்டும்?
எதிர்பார்த்தது போன்றே இஷாந்த் ரெண்டு நான்கு ஓட்டங்களை தொடர்ந்து அணித்து தோல்வியின் விளிம்பில் இருந்து கிட்டத்தட்ட கீழே தள்ளியே விட்டார். பின்னர் அடுத்து ரெண்டு வைடுகள் போட்டார். ஆனால் எதிர்பாராமல் அதே ஓவரில் ரெண்டு விக்கெட்டுகளை சட்டென எடுத்து ஆட்டத்தை திசை திருப்பினார். அவரால் தான் இந்தியா சாம்பியன்ஸ் கோப்பையை வென்றது. ஒரே ஓவரில் அவர் வில்லனில் இருந்து ஹீரோவானார். சொல்லப் போனால் தோனி செய்தது ஒரு இயக்குநர் திரைக்கதையில் தன் கதாபாத்திரத்தை வைத்து விளையாடுவது போல் இருந்தது.
எனக்கு ரெண்டு விசயங்கள் தோன்றியது. உண்மையில் தோனியின் முடிவு தர்க்கரீதியானது. ஆனால் எதிர்கால பத்திரமின்மையால் பாதிக்கப்படாத தர்க்கம். தோல்வியை ஏற்றுக் கொள்ளும் தர்க்கம்.
இஷாந்த் மோசமான ஆட்டநிலையில் இருந்தார் தான். ஆனால் அவர் அனுபவஸ்தர். இது போன்ற பல சூழல்களில் வீசியவர் என்பதால் அவருக்கு தன்னிச்சையாகவே இதைக் கையாளும் நுட்பங்கள் தெரியும். அந்த இரு பந்துகளும் வேறு இடங்களில் சென்று விழுந்து விக்கெட் விழாமல் போயிருக்கலாம். அதற்கும் தோனி தயாராகவே இருந்திருப்பார். ஒருவேளை இந்தியா இப்போட்டியில் இக்காரணத்தால் தோற்றிருந்தாலும் அடுத்த ஆட்டத்தில் இது போல் முக்கியமான கட்டம் வரும் போது தோனி இஷாந்திடம் தான் பந்தை ஒப்படைப்பார். அது தான் தோனியின் தர்க்கம் மற்றும் அணுகுமுறை.
நாம் பொதுவாக எதிர்கால முடிவுகளை தர்க்கரீதியாய் எடுக்கையில் கூட ஆபத்துகளை அதிகம் கருத்தில் கொண்டே செய்வோம். ஆபத்தில்லாத பத்திரமான முடிவுகள் தர்க்கரீதியாய் இருந்தாலும் கொஞ்சம் பலவீனமாய் தான் இருக்கும். இவற்றை iffy முடிவுகள் என்கிறோம். இதற்கும் நாணயம் சுண்டிப் போடுவதற்கும் அதிகம் வித்தியாசம் இல்லை. ஆனால் தோனி ஆபத்தான, அபத்தம் என பிறருக்கு தோன்றுகிற முடிவுகளை எடுக்க தயங்குவதில்லை என்பது தான் அவரது பலம். ஒரு முடிவை எடுப்போம். அப்படியே சொதப்பிப் போனால் போகட்டும். அடுத்த முறை திருத்திக் கொள்ளலாம். என்ன உயிரா போய் விடும் என்பது அவரது தர்க்கம். விதிவசம் வாழ்வை ஒப்படைக்கும் இந்திய மனமும் கராறாக தர்க்கரீதியாக சிந்திக்கும் ஐரோப்பிய மனமும் தோனியிடம் சரியாக ஒன்றிணைகிறது எனலாம்.
முழுக்க முழுக்க நமக்கு சாதகமான ஒரு எதிர்கால முடிவை எடுக்க முடியுமா? முடியாது தான். தெ.மு.தி.கவை அழிக்க வேண்டுமா கனிமொழி எம்.பி ஆவதை அனுமதிக்க வேண்டுமா? ரெண்டாவது எதிரியை அழிக்கும் பட்சத்தில் முதல் எதிரி வளர்ந்து விடுவானா? சிக்கலான கேள்வி. ஆனால் கொஞ்சம் ஆபத்தை உள்ளடக்காத நல்ல முடிவுகளை தர்க்கரீதியாக கூட எடுப்பது சாத்தியமில்லை.
கொஞ்சம் தோல்விக்கு தயாராக நாம் முடிவுகள் எடுப்பதானால் பயம் மறையும். தெளிவு கிடைக்கும். வலி குறையும். எங்களூரில் ஒரு பழமொழி உண்டு. பிரச்சனைகளின் போது அடிக்கடி அதை நினைத்துக் கொள்வேன்: “யானை வந்தால் ஆளைக் கொல்லும் மயிரையா பிடுங்கும்”.
பயம் என்பது ஒவ்வொரு மயிராய் பிடுங்கப்பட்டு சித்திரவதையில் சாவதற்கு இணை. அதற்கு ஒரே மிதியில் சாகலாம்.
("அமிர்தாவில்" எழுதி வரும் “அறிந்ததும் அறியாததும்” பத்தியில் இம்மாத கட்டுரை)
கொஞ்சம் ஆபத்தை உள்ளடக்காத நல்ல முடிவுகளை தர்க்கரீதியாக கூட எடுப்பது சாத்தியமில்லை.
ReplyDeleteகொஞ்சம் தோல்விக்கு தயாராக நாம் முடிவுகள் எடுப்பதானால் பயம் மறையும். தெளிவு கிடைக்கும். வலி குறையும்.
அருமையான ஆக்கம்..!
//ஒரு முடிவை எடுப்போம். அப்படியே சொதப்பிப் போனால் போகட்டும். அடுத்த முறை திருத்திக் கொள்ளலாம்//
ReplyDeleteவிளையாட்டில் வெற்றியும் தோல்வியும் சகஜம் என எடுத்துக்கொள்ள முடியும். ஆனால் முடிவு தவறாய் போய் மற்றவர்களும் பாதிக்கப்படும் பட்சத்தில்(குறிப்பாய் சாவு) முடிவு எடுப்பதை தள்ளி போட்டு தானாகவே சரியாகட்டும் என விட்டு விடுவது நல்லதல்லவா.சமாதான பேச்சுவார்த்தையும் ஓர் போர் தந்திரம் என படித்திருக்கிறேன்
இந்த கட்டுரை படித்தபின் பூதக்கண்ணாடி படம் பார்த்தேன்.அற்புதமான படம்.சில மலையாள படங்களை பார்க்கும் போது ஒரு விஷயம் ஆச்சரியமாக இருக்கும்.கிட்டத்தட்ட ஒரு நிமிடத்திற்கும் மேலாக எந்த வெட்டும் இல்லாமல் காமிரா சீராக பயணிக்கும்.இந்த படத்திலும் அப்படியான காட்சிகளை பார்க்க முடிகிறது.இப்படி நிறைய வெட்டு இல்லாமல் படம் பார்க்கும் போது சற்று நமக்கு அருகாமையில் நடப்பது போன்ற ஒரு உணர்வு ஏற்படுகிறது.நாம் ஒரு திரைப்படத்தை பார்க்கிறோம் என்ற உணர்வு கூட சமயங்களில் மறந்துபோய்விடுகிறது.இந்த படத்தில் இசையும் நன்றாக இருக்கிறது.சில மலையாள படங்களின் இன்னொரு முக்கிய விஷயம் திரைக்கதை.ஏதோ இறுதியாக சொல்ல வரும் ஒரு கருத்துக்காக பிண்ணப்பட்டது போல காட்சிகள் இருக்காது.சீரான வேகத்தில் ஏதோ நாற்பது கீலோ மீட்டர் வேகத்தில் செல்லும் பேருந்து போல செல்லும்.நமக்கும் எந்த அவசரமும் இல்லாமல் சீராக செல்லலாம்.மகிழ்ச்சியான பயணம்.பத்மராஜனின் படங்களை பார்க்கும் போது இதை உணர்ந்திருக்கிறேன்.அடர்த்தியான திரைக்கதை.சிறு கதாபாத்திரங்களுக்கும் ஒரு அவசியம் இருக்கும்.லோகிதாஸ் அசாதரணமான திரைக்கதை ஆசிரியர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.இந்த திரைக்கதையை பற்றி யோசிக்கும் போது ஒரு விஷயம் தோன்கிறது.இவை மிகவும் சிரத்தையோடு நெயப்பட்டது போல தோன்றவில்லை.தன்னியல்பாக தனக்கு தெரிந்த ஒரு கதையை சொல்வது போல இருக்கிறது.மக்களோடு வாழ்ந்து கண்டு கேட்டு ரசித்து புணைவின் ரகசியங்களை ஒரு தினசரி செயல்பாடு போல நெய்யக்கூடிய ஒரு மனதின் திரைக்கதை இது.தமிழில் இது போல ஒரு திரைப்படம் வந்திருக்கிறதா என்று நினைத்துப்பார்க்கிறேன்.மிக குறைவாகவே சொல்ல முடியும்.நன்றி.
ReplyDeleteசர்வோத்தமன்.
Please third week arinthum ariyamalum in this blog.....
ReplyDelete