கேரின் ஸ்லாட்டரின் Fractured எனும் துப்பறியும் நாவல் படித்தேன். அதிக பரபரப்பில்லாத மென்மை கொண்ட குற்றவிசாரணை எழுத்து. ஒரு ஆண் மற்றும் பெண் விசாரணை அதிகாரியின் கண்ணோட்டத்தில் இருந்து பிரதானமாய் கதை நடக்கிறது.
பெண்களுக்கு வலிமையான அதே சமயம் மென்மையான எளிதில் ஈகோவை துறந்து அழத் துணிகிற ஆண்களை பிடிக்கிறது. ஸ்லாட்டர் தன் நாயகனான வில் டிரண்டை அப்படித்தான் சித்தரிக்கிறார். எளிதில் மன்னிகிற, வன்மம் இல்லாத, குற்றவுணர்வு கொள்கிற, கூச்சம் மிக்க துப்பறியும் அதிகாரி. அதாவது கிட்டத்தட்ட பெண் போன்ற ஆண். பெண் அதிகாரியான பெயித்தின் கண்ணோட்டத்தில் பெண் பாத்திரங்கள் நிறைய விமர்சனத்துடன் குற்றம் குறைகளுடன் தோன்றுகிறார்கள். ஆண் எழுத்தாளர்கள் எப்படியும் கொஞ்சம் தேவதைத் தன்மை கொண்ட பெண் பாத்திரங்களை உருவாக்குவார்கள். ஆனால் பெண்கள் எழுதும் போது பெண் பாத்திரங்கள் மீது தான் அதிக விமர்சனங்களை வைக்கிறார்கள். நம்முடைய சிவசங்கரி, அனுராதா ரமணன்கள் ஆண்களின் பார்வையில் இருந்து பெண் பாத்திரங்களை உருவாக்கினார்கள் என்பது வேறு விசயம்.
நாவலில் ஓரிடத்தில் ஒரு விடுதிக்குள் நுழைகையில் ஏற்படும் பிரத்யேக பதின்வயது பையன்களின் வாசனை பற்றி எழுதுகிறார். அது போல் பெண் அதிகாரி பெயித்துக்கு தன் பதின்வயது மகன் மற்றும் காதலன் ஆகியோரை எதிர்கொள்கையில் வரும் குழப்பங்கள், தோன்றுகிற புதிர்கள் மேற்சொன்ன பெண்மை தீற்றல்களை அழுத்தமாய் கொண்டவை. எனக்கு நாவலில் பிடித்த இன்னொரு விசயம் பொதுவாக விசாரணையில் உள்ள சலிப்புத் தன்மையை சித்தரிக்க முயன்றுள்ளது. ஒரு போலியான விறுவிறுப்பு இல்லை. ஒரு முறையான அறிவியல்பூர்வமான விசாரணையில் உள்ள கையாகாத தன்மை, விசாரணை அதிகாரிகளுக்கு உள்ள அழுத்தங்களை நாவல் காட்டுகிறது. தொடர்ந்து கவனம், உழைப்பு, அக்கறை மற்றும் கொஞ்சம் அதிர்ஷ்டம் எப்படி ஒரு வழக்கு விசாரணையை முடிக்க உதவுகிறது எனவும் காட்டுகிறது. வழக்கம் போல ஒரு அதிகாரியின் அட்டகாச புத்திசாலித்தனத்தால் வழக்கு தீர்வாகிற நாயகத்தனம் எதுவும் இல்லை. இவையெல்லாம் சாதக அம்சங்கள். பொதுவாக வணிக நாவல்களில் உள்ள வலிந்து சொல்லப்பட்ட முடிவு, சைக்கோ கொலைகாரன் ஆகியவை பலவீனங்கள்.
இந்நாவல் குழந்தை பலாத்காரம் பற்றி நாவல் பேசும் போது கேட்க வேண்டிய பல தொந்தரவான ஆழமான கேள்விகளை தவிர்த்து விடுகிறது. வசதியாக குற்றவாளியை ஒரு கொடூரனாக காட்டி தாண்டி போகிறது. நல்ல வணிக நாவலுக்கும் சுமாரான இலக்கிய நாவலுக்குமான வித்தியாசமே இது தான். வணிக நாவல் வாளி. இலக்கிய நாவல் பாதாள கரண்டி. கிணற்றுக்குள் போய் வரும் போது பாதாள கரண்டி நாம் எதிர்பார்க்காத பல கசப்பான விருப்பமில்லாத ஆனால் முக்கியமான பொருட்களை ஆழத்தில் இருந்து நமக்கு எடுத்து காட்டும். ஆனாலும் தாகம் எடுக்கும் போது வாளியை இறக்கி நல்ல தண்ணீர் மொண்டு குடிப்பதும் அவசியம் தான். Broken அப்படி நல்ல சுவையான நீரை தருகிறது.
போலியான விறுவிறுப்பு இல்லை....
ReplyDelete