ஸ்டீவ் ஜோப்ஸின் அம்மா ஜோனா ஒரு ஜெர்மானிய வம்சாவளியில் தோன்றியவர். அப்பா ஜிந்தாலி ஒரு சிரியன் முஸ்லீம். இருவரும் காதலித்தனர். ஜோனா கர்ப்பமாக அவரை உடனடியாக மணம் புரிய முடியாது என ஜிந்தாலி மறுத்தார். விளைவாக ஜோனா ஜோப்ஸை பிறந்து சில மாதங்களில் தத்து கொடுத்தார். கொடுக்கும் போது தன் மகனுக்கு கட்டாயம் கல்லூரி கல்வி வழங்க வேண்டும் என வலியுறுத்தினார்.
சிலவருடங்களுக்கு பின் ஜிந்தாலியும் ஜோனாவும் மணம் புரிந்தனர். அவர்களுக்கு மோனா என்றொரு மகள் தோன்றினாள். ஆனால் தத்து மகனை கண்டுபிடித்து மீட்க முடியவில்லை. ஜோப்ஸுக்கு இறுதி வரை தன்னை தன் நிஜ பெற்றோர் கைவிட்டு விட்டார்கள் என்ற கோபமும் பச்சாதாபமும் இருந்தது. அது அவரது ஆளுமையை, ஆட்களை நடத்தும் விதத்தை, பல்வேறு நம்பிக்கைகளை பாதித்தது. பின்னர் ஜோப்ஸ் வடிவமைத்து உருவாக்கிய ஆப்பிள் கணினி, ஐபேட் உள்ளிட்ட பல்வேறு மின்னணு சாதனங்களில் இந்த பாதிப்பு மறைமுகமாக இருந்தது என ஸ்டீவ் ஜாப்ஸின் வாழ்க்கைக் கதை எழுதிய வால்டர் நுணுக்கமாக விளக்குகிறார். இதில் ஜோப்ஸ் தன் நிஜ பெற்றோரை கண்டுபிடிக்கும் இடம் நெகிழ்ச்சியானது, நாடகீயமானது.
தத்தெடுத்த அம்மா உயிரோடு இருக்கும் வரை தன் நிஜபெற்றோரை தேட அவருக்கு தயக்கம் இருந்தது. அவர்களை காயப்படுத்தக் கூடும் என பயந்தார். அம்மா இறந்த பின் அப்பாவிடம் அனுமதி பெற்றபின் ஒரு துப்பறியும் நிறுவனம் மூலம் மிக சிரமப்பட்டே தன் நிஜ பெற்றோரை கண்டறிகிறார். அப்போது ஜோப்ஸ் மிக பிரபலமான பணக்காரர். அம்மாவையும் தங்கையையும் ஒரு உணவகத்தில் சந்திக்கிறார். அதற்கு முன் அம்மா தன் மகள் மோனாவிடம் தொலைபேசியில் “உனக்கு ஒரு அண்ணன் இருக்கிறார். அவர் மிக பிரபலமானவர்” என மட்டும் சொல்லி இருக்கிறார். அவள் தன் தோழிகளுடன் சேர்ந்து அவர் யாராக இருக்கக் கூடும் என பல பெயர்களை ஊகிக்கிறார்கள். பெரும்பாலும் ஹாலிவுட் நட்சத்திரங்கள் தாம். ஒரு பெண் மட்டும் சொல்லுகிறாள்: “ஒருவேளை இந்த ஆப்பிள் கணினியை கண்டுபிடித்த அணியில் யாராவதாக இருக்குமோ?”.
உணவகத்தில் சந்திக்கையில் தான் தன் அண்ணன் ஜாப்ஸ் என மோனாவுக்கு தெரியும். இருவருக்கும் ஆளூமையில் நிறைய ஒற்றுமைகள். பார்த்து பேச ஆரம்பித்ததும் நெருங்கிய பந்தம் தோன்றுகிறது. ஆனால் ஜோப்ஸுக்கு அம்மாவுடன் அத்தனை எளிதில் நெருங்க முடியவில்லை. அம்மா தான் ஜோப்ஸை மிகுந்த வற்புறுத்தலின் பெயரிலே அவரை தத்துக் கொடுத்ததாகவும், அதற்காக பின்னர் மிக வருந்தி ஏங்கியதாகவும் சொல்கிறார். பலமுறை மன்னிப்பு கேட்கிறார். பின்னரும் தொடர்ந்து அடிக்கடி அம்மா அவரை சந்திக்கிறார். அவருக்குள் அந்த குற்றவுணர்வு மறையவே இல்லை. ஒவ்வொரு முறை கண்ணீருடன் மன்னிப்பு கேட்கிறார். அல்லது எப்படியாவது ஏதாவது ஒரு தருணத்தில் ஜோப்ஸை தத்துக் கொடுக்க நேர்ந்த மனநிலையை பற்றி குறிப்பிடுகிறார்.
ஜோப்ஸின் அப்பா திருமணமாகி ஐந்தாவது வருடத்திலேயே குடும்பத்தை கைவிட்டு போய் விடுகிறார். அதற்கு பின் சில பெண்களை மணம் புரிந்து விலகுகிறார். அவர் பல உணவகங்களை நடத்தினார். இறுதியில் வியாபாரம் தளர்ந்து ஒரு சின்ன உணவகத்தில் வேலை செய்கிறார். அவரை பார்ப்பதற்கு தங்கை மோனாவை அனுப்புகிறார் ஜோப்ஸ். எந்த காரணம் கொண்டும் ஜோப்ஸ் தான் அவர் மகன் என சொல்லக் கூடாது என கூறுகிறார்.
மோனா அப்பாவை அந்த சின்ன உணவகத்தில் சந்திக்கிறார். அவர் சொல்லுகிறார்: “நான் இதற்கு முன் நல்ல வளமாக இருந்தேன். மெடிட்டரேனியன் என ஒரு பெரிய உணவகத்தை நடத்தினேன். அப்போது நீ வந்து என்னை பார்த்திருக்க வேண்டும். அங்கே பெரிய நட்சத்திரங்கள் எல்லாம் வருவார்கள். உனக்குத் தெரியுமா ஸ்டீவ் ஜோப்ஸ் அவர் கூட அங்கு சிலமுறை வந்திருக்கிறார். நிறைய டிப்ஸ் கொடுப்பார்.” மோனாவுக்கு அவர் மகன் தான் ஜோப்ஸ் என சொல்லும் அவா தொண்டை வரை வந்து நின்று விடுகிறது.
சில வருடங்களுக்கு பின் ஒரு இணைய பக்கத்தில் ஜோப்ஸின் உண்மை தந்தை ஒரு சிரியன் என்று அவரது பெயருடம் விபரம் வெளியிட்டிருந்தார்கள். அதைப் படித்த அவரது அப்பா தன் மகளிடம் கேட்டு உறுதி செய்கிறார். “ஆனால் ஜோப்ஸ் உங்களை பார்க்க விரும்பவில்லை” என்றார் மோனா. அப்பா கோபப்படவோ மறுக்கவோ இல்லை. அவர் அமைதியாக தன் மகனின் நிராகரிப்பை ஏற்றுக் கொண்டார்.
சிறுவயதில் தன் பெற்றோரால் கைவிடப்பட்ட ஜோப்ஸ் யாரையும் எப்போதும் தயக்கமின்றி கைவிடக் கூடியவராக இருந்திருக்கிறார். அவரை துறக்கையில் அம்மாவுக்கு வயது 23. அதே 23 வயதில் ஜோப்ஸும் ஒரு பெண்ணுடன் உறவு கொண்டு ஒரு மகளுக்கு தந்தையாகிறார். ஆனால் உண்மை தெரிந்திருந்தும் பொய்யாக அவள் தன் மகள் அல்ல என மறுத்து விடுகிறார். அவருக்கு ஒரு காத்திரமான பொறுப்பான உறவை ஏற்கும் பயம் இருந்தது. வலுவான உறவுகள் அவருக்கு பதற்றத்தை ஏற்படுத்தின. வழக்கு நீதிமன்றத்தில் கொஞ்ச காலம் நடக்கிறது. பின்னர் ஜோப்ஸ் தன் தவறை உணர்ந்து தன் மகளை ஏற்றுக் கொண்டார். அவள் பெயரை தான் உருவாக்கிய ஒரு மெக்கிண்டோஷ் கணினிக்கு இட்டார். லிஸா. தன் இறுதிக் காலத்தில் தான் வாழ்வில் செய்த குற்றங்களில் மிக அதிகமாக வருந்துவது தன் மகளை ஏற்றுக் கொள்ள மறுத்தது தான் என்கிறார்.
மனித மனம் எவ்வளவு நுணுக்கமாக சிக்கலாக இயங்குகிறது என்பதை வால்டர் ஐசக்சன் எழுதிய ”ஸ்டீவ் ஜோப்ஸ்” நூல் சித்தரிக்கிறது.
No comments :
Post a Comment