தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக படைப்புகளை இன்னொருவருக்கு அனுப்பி கருத்து கேட்பது இன்று பரவலாகி வருகிறது. ஜெயமோகன் தற்போது தனக்கு பிடித்த இளம்படைப்பாளிகளின் கதைகளை பிரசுரிக்கையில் இன்னொரு புறம் பிடிக்காத பலரையும் நிராகரிக்க தான் செய்கிறார். நிராகரிப்படுபவர்கள் காயப்படுகிறார்கள். கோபமாகிறார்கள். குழப்பமடைகிறார்கள். இதெல்லாம் தேவையா என யோசிக்கிறேன்.
நானும் இது போல் என் படைப்புகளை ஜெயமோகன் உள்ளிட்ட பலரிடமும் படிக்க கொடுத்துள்ளேன். ஆனால் அதனால் எந்த பயனும் இல்லை என்பதை தொடர்ந்து எழுத ஆரம்பித்த பின் தான் உணர்ந்தேன். மேலும் நிராகரிப்பை எதிர்கொள்ளும் சிறந்த வழி தொடர்ந்து எழுதி பிரசுரித்துக் கொண்டே இருப்பது தான். இது குறித்து என் கருத்துக்களை சுருக்கமாக கீழே அடுக்கி இருக்கிறேன்.
1. கதை நன்றாக உள்ளதா என்பது முக்கியமல்ல. கதையின் நோக்கம் பிரசுரம், அதன் மூலம் வாசகனுடன் உரையாடுவது.
2. நாம் நம் தன்னம்பிக்கையை உயர்த்துவதற்காக அடுத்தவரின் கருத்தை எதிர்நோக்குகிறோம். இதற்காக பிறரிடம் வாசிக்க கொடுக்கிறோம். ஆனால் அசலான தன்னம்பிக்கை ஒருவர் பாராட்டுவதனால் அல்ல பலர் வாசிப்பதனால் தான் ஏற்படும்.
3. தொடர்ந்து பிரசுரமாவது, வாசிக்கப்படுவது தான் எழுத்தாளனுக்கு முக்கியம்.
4. அடுத்து அவன் வாசகனுடன் உரையாடும்படி அவன் கதையில் ஒரு வாசல் திறக்க வேண்டும். அதற்கு தான் பயிற்சியும் அனுபவமும் திறனும் தேவையாகிறது.
4. அடுத்து அவன் வாசகனுடன் உரையாடும்படி அவன் கதையில் ஒரு வாசல் திறக்க வேண்டும். அதற்கு தான் பயிற்சியும் அனுபவமும் திறனும் தேவையாகிறது.
5. ஒரு மூத்த எழுத்தாளர் படித்து விட்டு “இது தான் சிறந்த படைப்பு” என கூறினால் அது சிறந்ததாகி விடாது. ஏனெனில் ஒரு படைப்புக்கு மதிப்பெண் அல்ல அளவுகோல். சொல்லப் போனால் படைப்புக்கு அளவுகோலே அவசியமில்லை.
6. ஒரு படைப்பு என்பது ஒரு விவாதம். வாசகர்கள் அவ்விவாதத்தில் கலந்து கொள்ள வேண்டும். பல தரப்பட்ட கருத்துக்களை எண்ணங்களை தோற்றுவிப்பதே சிறந்த படைப்பு. ஏனென்றால் இந்த கருத்துக்கள் அல்லது மனப்பதிவுகள் தாம் அப்படைப்பின் வளர்ச்சி எனலாம். ஒரு படைப்பு என்பது விதை. அது வாசகனின் மனங்களில் விழுந்து வேர் பரப்பி வளர்ந்து விருட்சமாக வேண்டும். வாசகனின் மனப்பதிவுகள் மூலம் தான் ஒரு படைப்பே உருவாகிறது. ஒரே ஒருவர் படித்து நன்றாக உள்ளது என சொல்லும் போது கூட அது உயிர் கொள்ளுகிறது தான். ஆனால் சின்ன செடியாக மட்டுமே இருக்கும்.
7. இதன் தொடர்ச்சியாக யோசித்தால் யாருமே படிக்காத ஒரு கதை அல்லது கவிதை என்பது ஒரு படைப்பே அல்ல. அது ஒரு தனிமனிதனின் கனவு மட்டும் தான்.
8. ஆக, ஒரு எழுத்தாளன் பண்ண வேண்டியதெல்லாம் பத்திரிகை ஆசிரியர்களுடன் நல்லுறவை பேணுவதும், தனக்கான ஒரு வலைபக்கத்தை ஆரம்பித்து அதன் மூலம் வாசகர்களுடன் ஒரு உயிர்ப்பான உறவை தக்க வைப்பதும் தான்.
9. எழுத்தாளனுக்கும் வாசகனுக்கும் தான் பஞ்சாயத்தே. இதனிடையே கருத்து கந்தசாமிகளுக்கும் விமர்சகர்களுக்கும் இடமில்லை. நீங்கள் எழுதுகிறதில் பெறுவதற்கு ஏதோ ஒன்று இருப்பதனாலே தான் உங்களை படிக்கிறார்கள். நீங்கள் யாராக இருந்தாலும் நீங்கள் ஒரு நல்ல பண்பாட்டு/அறிவு ஊற்றாக இருக்கும் பட்சத்தில் வாசகன் அள்ளி குடித்துக் கொண்டே இருப்பான்.
10. விமர்சகன் ஒரு தத்துவஞானி போல. அது ஒரு தனி துறை. தத்துவஞானிகள் வாழ்க்கை பற்றி கடுமையாக விவாதித்தபடி இருப்பார்கள். ஆனால் மக்கள் அதற்கு சம்மந்தமில்லாமல் வாழ்ந்து கொண்டிருப்பார்கள். ஆக இங்கே யார் வாழ்வது தான் வாழ்க்கை? தத்துவஞானியுடையதா அல்லது மக்களுடையதா? யாரும் தத்துவம் படித்து அதன்படி வாழ்வதில்லை. ஆனால் யோசிக்கவும் பேசவும் ஒரு முறைமையை தத்துவம் தருகிறது. இலக்கியம் பற்றி பேசவும் எழுதவும் ஒரு முறைமையை விமர்சனம் தருகிறது. ஆனால் வாசகர்கள் பலரும் விமர்சனம் படிப்பதில்லை. அவர்கள் நேரடியாக இலக்கியத்துடன் உரையாடுகிறார்கள். அவர்களுக்கு தாம் படிப்பது நல்ல இலக்கியமா மோசமானதா என கவலையில்லை. அவர்களது மனதுடன் அப்படைப்பு உரையாட வேண்டும். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ஆழத்தில் சென்று ஒரு படைப்பு தொட வேண்டி இருக்கிறது. ஆக படைப்பின் தரம் என்று ஒன்றை நிர்ணயிப்பது மிக சிரமம். பொத்தாம் பொதுவாக சிலவற்றை சொல்லலாம்.
11. ஆனால் வாசகன் என்றுமே இதையெல்லாம் புறக்கணித்து தனக்கு பிடித்ததை படித்துக் கொண்டு இருக்கிறான். எழுத்தாளனும் தனக்கு பிடித்ததை எழுதிக் கொண்டு போகிறான். இவர்கள் ஏதோ ஒரு புள்ளியில் சந்திக்கிறார்கள். அவ்வளவு தான்.
12. இது கிட்டத்தட்ட காதல் போன்றது. விமர்சகர்கள் ராமதாஸ் போன்றவர்கள். விமர்சனம் படித்து தன் படைப்பை பற்றி கவலைப்படுகிறவன் பாலியல் சந்தேகங்களை மாத்ருபூதத்துக்கு எழுதுகிறவனை போன்றவன்.
13. வாழ்க்கையில் செயல் தான் பிரதானம். யோசிப்பது பேசுவது எல்லாம் அதற்கு அடுத்து தான். ஆக எழுத்தாளன் யாரைப் பற்றியும் கவலைப்படாமல் எழுதுவான். மழை பெய்யுமா என கவலையின்றி விதை விதைப்பான்.
14. ஒரு மூத்த எழுத்தாளன் அல்லது தேர்ந்த வாசகனிடம் இருந்து படைப்பின் நுணுக்கங்களை கற்கலாமே? அதற்கு படைப்பை பார்வைக்கு அனுப்புவது உதவுமில்லையா? இல்லை. உலகில் எழுத்து சம்மந்தமாக எத்தனையோ ஆலோசனைகள் உள்ளன. கணிசமானவை நம்மை குழப்பும், வழிதவற செய்யும், செயலற்று போக வைக்கும். மொழி சார்ந்த சில அடிப்படைகள் போக கணிசமான உத்திகள், முறைகளை நாம் எழுத எழுத தான் கற்க முடியும். எந்த கோட்பாடும் உதவாது. நம் மனமும் மொழியும் இன்னொருவர் உறையில் தூங்கும் கத்தி அல்ல. நமக்கான பாதையை நாம் தான் நடந்து நடந்து உருவாக்க வேண்டும். ஒரு அலுவலகத்தில் சேர்ந்த உடன் job profile என்று ஒன்று கொடுப்பார்கள். அதற்கு இம்மியும் பிசகாமல் நடந்தால் வேலை வெற்றிகரமாக இருக்கும். ஆனால் எழுத்தாளனின் வேலை இதற்கு நேர்மாறானது.
15. என்னுடைய எழுத்து பற்றி நிறைய எதிர்மறை விமர்சனங்களை கேட்டுள்ளேன். அடிக்கடி யாராவது வந்து “நீ தவறான பாதையில் போகிறாய்” என்பார்கள். நான் இவர்களை உதாசினித்து விடுவேன். ஏனென்றால் எனக்கு ஒன்று தெரியும். நான் உபயோகப்படும்படியாக சுவாரஸ்யமாக எழுதும் போது யாராவது படித்தபடி தான் இருப்பார்கள். இந்த வாசிப்பு தான் என் எழுத்துக்கான நியாயம். வேறு எவரின் தீர்ப்பும் அல்ல.
16. பிரபல படைப்பாளிகள் தாம் இங்கே விமர்சகர்கள். அவர்கள் குறிப்பிடும் இளைய எழுத்தாளர்கள் உடனடி கவனம் பெறுகிறார்கள் என்பது உண்மை தான். ஆனால் அது மட்டுமே இறுதியானது அல்ல. அவர்களால் குறிப்பிடப்பட்ட எத்தனையோ பேர் இன்றும் வாசகர்களால் நிராகரிக்கப்பட்டு வருகிறார்கள். குறிப்பிடப்படாத எத்தனையோ பேர் நல்ல பெயருடன் விளங்குகிறார்கள். மூத்த எழுத்தாளனால் பாராட்டப்படாத ஒருவனால் கூட முப்பது நாற்பது வருடம் இங்கே வெற்றிகரமாக இயங்க முடியும். தொடர்ந்து எழுதுவதன் மூலம் இயங்குவதன் மூலம் நாம் இந்த தடையை எளிதில் கடந்து விட முடியும்.
16. நான் ஒரு பெண்ணை முத்தமிடுகிறேன் என்றால் அந்த முத்தத்தின் சுவை எனக்கும் அவளுக்கும் தான் தெரியும். வெளியில் இருந்து பார்ப்பவருக்கு அல்ல. எழுதுவதன் முக்கியத்துவம் வாசிக்க வாசிக்க தான் தோன்றும். எப்படி வாசிக்க என இன்னொருவர் சொல்லுவதனால் அல்ல.
17. நீங்கள் நூறு பெண்களை முத்தமிடுகிறீர்கள். இதில் 90 பேருக்கு உங்கள் முத்தம் பிடிக்கவில்லை. அதற்காக நீங்கள் முத்தமிடுவதை நிறுத்தி விடுவீர்களா? ஒருத்தருக்கு பிடிக்கவில்லை என்று நீங்கள் எழுதுவதை நிறுத்தினால் நீங்கள் அப்படி செய்வதாக தான் பொருள்.
No comments :
Post a Comment