திருவல்லிக்கேணி சாலையோர கடைகளில் தான் நான் பல நல்ல நூல்களை வாங்கி உள்ளேன். புத்தகக் கடைகளில் போலல்லாது பல தரப்பட்ட புதிய பழைய நூல்கள் வரும். இவ்வளவு விலைவாசி ஏறினாலும் அதே விலை தான். ஒரு புத்தகத்தை எடுத்துக் கொண்டு அதன் நிலை, கனம், அட்டை பார்த்து ஒரு விலை மனதுக்குள் போடுவேன். இதற்கும் தரத்துக்கும் சம்மந்தமில்லை. பின் கடைக்காரரிடம் விலை கேட்பேன். அவர் எப்போதும் ஒரு ஐம்பது நூறு கூட்டி கேட்பார். ஆனால் பேரம் நிச்சயம் என் கணக்கில் படிந்து விடும். நேற்று உம்பர்த்தோ ஈக்கோவின் How to Travel with Salmon என்கிற பத்தி தொகுப்பு வாங்கினேன். 2008இல் லஷ்மி என்பவர் வாங்கி பெயரெழுதி இருக்கிறார்.
ஈக்கோவை வாங்கும் அளவுக்கு அவர் வாசிப்பு முதிர்ச்சியோ குறைந்தது உலக இலக்கிய பரிச்சயமோ கொண்டவராக இருந்திருக்க வேண்டும். இலக்கிய வெறியராக இருந்திருக்க வேண்டும். பொதுவாக இப்படியான உலக மகா எழுத்தாளனின் நூல்களை கைவிட மனம் வராது. ஆனாலும் அவர் எப்படி இந்த நூலை தூக்கி விலைக்கு போட்டிருக்க முடியும் என யோசித்தேன். அதுவும் பழைய நூல் வியாபாரிகள் கிலோ கணக்கில் தான் விலை நிர்ணயிப்பார்கள். இந்த நூலுக்கு ஐந்து ரூபாய் கிடைத்திருக்குமா? ஆனால் அசல் விலை 800. நான் வாங்கினது ஐம்பது. ஒருவேளை அவரது வீட்டில் யாராவது தூக்கி போட்டிருக்கலாம். ஏதாவது ஒரு காகித குவியலில் விழுந்து கிடந்து தெரியாமல் செய்தித் தாள் விலைக்கு போடும் போது கொடுத்திருக்கலாம். அல்லது அவர் வீடு மாறி போகும் போது வேறு வழியில்லாமல் தன் அரிய நூல்களை விற்க வேண்டி வந்திருக்கலாம். இன்னொரு சாத்தியம் யாராவது நண்பர் வாசிக்க வாங்கி திரும்ப கொடுத்தாமல் கைமறதியாய் வைத்து பின்னர் அவரே தெரியாமல் விலைக்கு போட்டிருக்கலாம்.
அப்போது இன்னொன்றும் தோன்றியது. ஏன் இவ்வளவு நல்ல விலைமதிப்பான நூல்களை கிலோ கணக்குக்கு கொடுக்க வேண்டும்? நம் புத்தகக் கடைகளிலே பழைய நல்ல நூல்களை வாங்கி தனியாய் ஒரு பிரிவில் விற்பனைக்கு வைக்கலாம். நாம் படிக்கிற அத்தனை நல்ல நூல்களும் திரும்ப திரும்ப படிக்க வேண்டியவை அல்ல. ஒரு தடவைக்கு மேல் திறக்கப்படாமல் பல புத்தகங்கள் வருடக்கணக்கில் ஏதாவது அட்டைப்பெட்டிக்குள் தூங்கிக் கொண்டிருக்கும். அவற்றை பாதி விலைக்கு விற்க முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். இதை புதிதாய் புத்தகக்கடை திறந்திருக்கிற வாசுதேவனிடம் சொன்னேன். அவர் இது போல் பழைய நூல்களை வாங்கி புது நூல்களை கொடுக்கும் முறையை அறிமுகப்படுத்தலாம் என்றார்.
ஐநூறு ரூபாய்க்கு மேல் கொடுத்து நீங்கள் வாங்கின சில ஆயிரம்பக்க நாவல்கள் இருக்கும். அவை உங்களுக்கு வாசிக்க ஆரம்பித்து பிடிக்காமல் போயிருக்கலாம். என்னிடம் சல்மாவின் “இரண்டாம் ஜாமங்களின் கதை”, பா.வெங்கடேசனின் “தாண்டவராயன் கதை” போன்ற வாதை புகுந்த நாவல்கள் பல இருக்கின்றன. அவற்றை படிக்க முயன்ற போதெல்லாம் ஒரு கூட்டு பலாத்காரத்துக்கு ஆளாகும் உணர்வு ஏற்பட்டு மூடி வைத்து விடுவேன். ஆனால் தூக்கி போடவும் மனம் வராது. பார்க்கும் போதெல்லாம் ஐநூறு ரூபாய் வீணாகி விட்டதே என கடுப்பாக இருக்கும்.
அவற்றை எல்லாம் வாங்கி ஒரே வாரத்தில் திரும்ப கொடுத்து வேறு ஒரு நானூறு ரூபாய் புத்தகமாக வாங்கிச் செல்ல முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். ஏனென்றால் நமக்கு கழுத்து வலி ஏற்படுத்தும் தலையணை நூல்கள் வேறு சிலருக்கு மயிலிறகாய் தோன்றலாம். மனுஷ்யபுத்திரன் இத்தகைய வாசகர்களை புற்றுக்குள் கைவிட்டு பாம்பு பிடிப்பவர்கள் என்பார். இவர்கள் எத்தகைய சுயவதை நூல்களையும் பதறாமல் பல் படாமல் படித்து விடுவார்கள். இந்த நூல்கள் அவர்களிடமே போகட்டுமே! நாம் புல்லாங்குழலை எடுத்துக் கொண்டு மகுடியை கொடுத்து விடுவோம். அது தானே சரியான ஜனநாயகம்.
புல்லாங்குழல் x மகுடி. நல்ல உதாரணம் தான். ஆனால் நீங்கள் சொன்னது போல் "கழுத்து வலி ஏற்படுத்தும் தலையணை நூல்கள் வேறு சிலருக்கு மயிலிறகாய் தோன்றும்" போது மகுடி அவர்களுக்கு புல்லாங்குழலாய் தோன்றாலாமல்லவா?. எப்படியோ சிந்தனை (புத்தகங்கள் மாற்றம்) சிறப்பானது. கொடுப்பவனுக்கு மனநிறைவை(சிறிதளவேனும்) தரும்.
ReplyDelete