எதிர்காலத்தில் மின்நூல்கள் பிரபலமானால், அவற்றை எழுத்தாளனே சுயமாய் பிரசுரிக்கும் நிலை வந்தால் அது பதிப்பாளனுக்கு ஊறு விளைவிக்காதா? இதன் அனுகூலங்களும் பிரச்சனைகளும் என்ன?
ஒரு பதிப்பாளரின் கண்ணோட்டத்தில் இருந்தும் மின்நூல்கள் லாபகரமாகவே இருக்கும். ஒன்று, அச்சுபதிப்பில் கணிசமான புத்தகங்கள் நஷ்டம் ஏற்படுத்துபவை தான். பத்தில் ஒன்றோ ரெண்டோ தான் வெற்றி பெறும் நூல்கள். மிச்ச நூல்களின் பிரதிகளை ஆயிரக்கணக்கில் கிடங்கில் பாதுகாப்பதற்கும் நிறைய செலவாகும். தமிழில் எழுத்தாளனுக்கு சரியாக ராயல்டி போகாததற்கு இந்த நஷ்டங்களும் பதிப்பு தொழில் ஒரு பெரும் சூதாட்டம் என்பதும் பிரதான காரணம்.
தமிழில் எந்த இலக்கிய எழுத்தாளனின் ஆரம்ப நூலும் ஆயிரக்கணக்கான பிரதிகள் விற்றிருக்காது. ஆக புதிதாய் வருபவர்களையும் பதிப்பாளர் ஆதரிக்க வேண்டும். கிழக்கு போன்று வியாபார ரீதியாய் பதிப்பிப்பவர்களுக்கும் திட்டமிட்டபடி எல்லா புத்தகமும் விறபனையாவதில்லை.
இதற்கு பல காரணங்கள். முக்கியமாய் இங்கு புத்தகங்களை சந்தைப்படுத்தும் வாய்ப்புகள் குறைவாக உள்ளது. மின்நூல் பிரசுரத்தில் புத்தகத்தை வடிவமைப்பது மட்டுமே செலவு. அச்சு செலவான லட்சக்கணக்கான பணத்தை விளம்பரத்துக்கு பயன்படுத்தலாம். இன்று விளம்பரமே இல்லாத ஒரு சூழலில் இது மிகப்பெரிய வரப்பிரசாதமாக இருக்கும். அது மட்டுமல்ல பதிப்பகங்களே மின்நூலை வாசிப்பதற்கான கருவியையும் இலவசமாக வழங்கும் காலமும் வரும். Itunes போல் ஒரு அமைப்பு கொண்டு விற்பனையை கட்டுப்படுத்தவும் செய்யலாம். புத்தகம் விற்கவே இல்லையென்றாலும் சிரமம் இருக்காது.
அமேசோனில் சுயபதிப்பு முறை உள்ளது. இதைக் கொண்டு சுயமாய் பதிப்பித்து கோடீஸ்வரனானவர்கள் மேற்கில் உள்ளார்கள். பதிப்பகங்களுக்கு அப்போதும் முக்கியத்துவம் இருக்கும். Brand value மற்றும் வியாபார ஒருங்கிணைப்புகள், சந்தைப்படுத்துதலை அவர்கள் பார்த்துக் கொள்ளலாம்.
இன்று அமேசானில் நீங்கள் சுயபதிப்பான மின்நூல்களை ஒரு டாலருக்கு வாங்கி வாசிக்க முடியும். ஒரு டாலர் விலையே வேறு செலவுகள் இல்லை என்பதால் தான். விலையை எழுத்தாளன் தான் தீர்மானிக்கிறான். அவனுக்கு புத்தகம் போய் சேர்ந்தால் போதும் என்றால் குறைந்த விலைக்கே கொடுக்கலாம். பத்ரி சேஷாத்ரி என்னிடம் அவர் இயல்பியல் நூல் ஒன்றை ஒரு டாலருக்கு வாங்கிப் படித்ததாகவும் நன்றாக இருந்த்தாகவும் கூறினார். எழுத்தாளர் ஒரு ஜப்பானியர். அவர் யாரென்றே தெரியாது; ஆனாலும் சும்மா வாங்கிப் பார்க்கலாம் என ஒரு உந்துதலில் வாங்கிப் படித்ததாக கூறினார். இது தான் மின்நூலின் பிரதான அனுகூலம். இது புத்தக விற்பனை-வாங்குதல் உரிமையை தளர்த்தி அனைவருக்கு உரித்தானதாக்குகிறது. விளைவாக இனி வலைப்பக்கம் வந்த போது நேர்ந்தது போல் புத்தகம் பிரசுரிப்போரின் எண்ணிக்கையில் ஒரு பெருவெடிப்பு நிகழும். கிட்டத்தட்ட எல்லோருமே எழுத்தாளராக முயல்வார்கள். பின்னர் எண்ணிக்கை மெல்ல மெல்ல குறைந்து ஒரு சமநிலை வரும்.
இன்று டிஜிட்டல் காமிராக்களும் இணையமும் வந்த பிறகு குறும்படங்கள் மூலம் அப்படியான ஒரு பரவலாக்கல் நடந்துள்ளது அல்லவா. அது சினிமாவையும் நல்லரீதியில் பாதித்துள்ளதற்கு “காதலில் சொதப்புவது எப்படி?”, “சூது கவ்வும்” போல் பல உதாரணங்கள். இளைய எழுத்தாளர்களில் இன்று கணிசமானோர் இணையம் மூலம் எழுதப்பழகி வந்தவர்கள் தாம். இணையத்தில் இருந்து அவர்கள் அச்சுப் பத்திரிகைக்கு போய் அப்பத்திரிகைகளின் மொழிநடை உள்ளடக்கத்திலே கூட மாற்றங்கள் ஏற்படுத்தி உள்ளனர்.
இனி சில பிரச்சனைகள்.
வாசகனைப் பொறுத்தமட்டில் எதைப்படிப்பது என்கிற குழப்பம் அதிகமாகும். இலவசமாய் ஆயிரக்கணக்கான நூல்களை மெமரியில் வைத்துக் கொண்டு எங்கிருந்து துவங்க என திணறுவார்கள். ஆனால் கிட்டத்தட்ட எல்லா புதிய துறை சார்ந்தும் நூல்கள் தோன்றும். பரவலான மாறுபட்ட வாழ்க்கை அனுபவங்களும் பிரசுரத்தில் வரவும் வாய்ப்புள்ளது. வாசகனின் கவனத்தை சென்றடையும் போட்டி எழுத்தாளர்களிடையே மும்முரமாகும். இன்றுள்ளதை விட படிக்கப்படாமலே பிரசுரமாகி உறங்கும் நூல்களின் எண்ணிக்கை அதிகமாகும்.
ஒட்டுமொத்தமாக பார்க்கையில் பிரசுர தொழிலில் உள்ள சூதாட்ட தன்மையை மட்டுப்படுத்த உதவும் என தோன்றுகிறது. எழுத்தாளனுக்கும் வாசகனுக்கும் இடையிலான ஒரு தடை அகலும். இந்த தடை அச்சில் ஒரு நல்ல தரக்கட்டுப்பாடாகவும் இருக்கிறது. மின்நூல் பிரசுரம், குறிப்பாக சுயபிரசுரம், பலவீனமான படைப்புகளை கண்டறியாமல் வாசகனின் வாசலுக்கு அனுப்பும் பிரச்சனையையும் ஏற்படுத்தும்.
பொதுவாக தகவல் சார்ந்த புத்தகங்களும், சுயவாழ்க்கை எழுத்துக்களும் பதிப்பில் அதிகமாகும் என தோன்றுகிறது. வாசிப்பதற்கான காலம் பல்வேறு கவனச்சிதறல்களால் குறைந்து கொண்டே போகிறது. வாசகன் இல்லாமல் புத்தகங்கள் மட்டும் பெருகி என்ன பலன்? புத்தகம் பிரசுரிப்பது வாசகனை கண்டடைவது என இல்லாமல் ஒரு சடங்காக மாறுமா?
இணையம் வந்த பின் நாம் கணிசமான நேரத்தை வாசிக்க அல்ல எழுதவே எடுத்துக் கொள்கிறோம். ஆக வாசிப்பினால் ஏற்படும் வலுவான அடித்தளம் இல்லாத எழுத்தாளர்கள் பல உருவாவார்களா? இன்றே அப்படி பலர் இருக்கிறார்கள். படிப்பது வீண்வேலை என்றே வெளிப்படையாகவே கூறும் இளைய எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். இது அவர்களின் தவறு அல்ல. இணையம் போன்ற சுதந்திர சுயவெளிப்பாட்டை கோரும் ஒரு ஊடகத்தின் பண்பாடே மேலோட்டமான மேய்ச்சல் தான். ஆக உள்ளீடற்று சளசளவென எதையாவது எழுதிக் கொண்டிருக்கும் எழுத்தாளர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகமாகும்.
Text-to-speech மென்பொருள் உள்ளது. இதைக் கொண்டு பேசினால் தானே எழுத்தாகும். ஆக மாங்கு மாங்கென்று அடிக்க வேண்டாம். சொல்ல விசயம் இருந்தால் நூறு பக்கங்களை மிக எளிதாக ஒரே நாளில் பேசியே ”எழுதலாம்”. மின்நூல் சுயபதிப்பில் Text-to-speechஉம் இணையும் ஒரு காலத்தை நினைத்துப் பார்க்கிறேன். கண்ணைக் கட்டுகிறது. ஒரு சாலையை கற்பனை செய்யுங்கள். அங்கு ஹெட்போன் மாட்டிக் கொண்டு தன்னைத் தானே பேசிக் கொண்டு ஆட்கள் கடந்து போகிறார்கள். நுண்பேசியில் உரையாடவில்லை. அவர்கள் நடந்து கொண்டே ஒரு நாவலோ புத்தகமோ எழுதிக் கொண்டு இருக்கிறார்கள். பேச பேச இன்னொரு இடத்தில் அது எழுத்தாக உருப்பெற்றுக் கொண்டிருக்கும்.
சரி இறுதியாக இணையம் இன்று இத்தனை பேரை எழுத்தாளராக்கி பந்திக்கு கொண்டு வந்துள்ள நிலையில் பிரதானமாய் தோன்றியுள்ள பிரச்சனை என்ன? கருத்துக்களின் பஞ்சம். கருத்தியல் விவாதங்களின் வறுமை. பொத்தாம்பொதுவான கருத்துக்களும், எண்ணற்ற வீணான வார்த்தைகளும், உயிரற்ற அர்த்தமற்ற தகவல்களும் இன்று மலிந்து கிடக்கின்றன. ஆனால் கருத்தியல் தளத்தில் இருந்தோ படைப்பூக்கத்தோடோ யோசித்து பேசுகிறவர்கள் குறைந்து கொண்டே போகிறார்கள். இன்று சொந்தமாக புதிதாக அல்லது ஆழமாக யோசிக்கிறவர்களுக்கு எல்லா இடத்திலும் ஒரு தேவை உருவாகி இருக்கிறது. எதிர்காலத்தில் இந்நிலை இன்னும் மோசமாகும் என கருதலாம். திசையற்ற சிந்தனைகளுக்கு ஒரு வழிகாட்டி தேவைப்படுவார். யாருக்கும் யாரை நம்புவது என புரியாமல் குழப்பம் ஏற்படும். ஆளாளுக்கு மின்நூல் வெளியிடும் ஒரு காலகட்டம் இப்படியும் இருக்கலாம்.
இதனால் தான் ஒரு வனத்தில் இயற்கை ஒரு புலிக்கு நூறு மான்கள் என்கிற கணக்கில் விகிதத்தை தக்க வைக்கும். வாசகர்கள் மான்களைப் போல. எதிர்காலத்தில் நாம் அருகி வரும் வாசகனைப் பற்றி கவலைப்படவும் நேரலாம்.
இலவசமாய் நூல்களை தரவிறக்கி படிப்பது குற்றமல்லவா? ஆம். ஆனால் இதை தவிர்க்கவும் முடியாது. என்னதான் பாதுகாப்பு ஏற்பாடு பண்ணினாலும் யாராவது decode பண்ணி மின்நூலை இலவசமாய் வெளியிட வாய்ப்புள்ளது. இன்று இணையத்தில் உலவும் பல முக்கிய மின்நூல்கள் சமீபத்தில் வெளியானவை தாம். ஆனால் அதேவேளை இதனால் நூல்களின் விற்பனை பாதிக்கப்பட்டதாகவும் தெரியவில்லை. இன்னொரு புறம் மறுபதிப்பு வராமல் தமிழில் எத்தனையோ நூல்கள் மக்கி போயிருக்கின்றன. பல முக்கிய புத்தகங்களை நீங்கள் இன்று வாங்கவே முடியாது. இத்தகைய வியாபார முக்கியத்துவம் இல்லாதவற்றை மின்நூல்கள்களாக இலவசமாய் உலவ விடுவது தவறில்லாத ஒரு தவறு தானே.
குமுதம் , விகடன் வலை தளங்களையே ஒரு கடவுச் சொல் பயனர் அடையாளம் மூலம் நான்கு ஐந்து பயனர்கள் இலவசமாக வாசிக்கும் மனோ நிலை கொண்டவர்கள் நாம் (இந்தியர்கள் ).
ReplyDeleteஎனவே மின் நூல் கிடைத்தால் அதை உடனே இலவசமாக நண்பர்களுக்குப் பகிர ஆரம்பிப்போம் .அந்த ஒரு பொருளாதார இழப்பு மட்டும் ஒரு கெடுதல் மின் பதிப்பில் .
அதை மட்டும் தவிர்த்துப் பார்த்தால் மின் நூல் மிகப் பெரிய வரப் பிரசாதம்
ஆங்கிலத்திலேயே சகல முக்கியமான புத்தகங்களும் மின் பிரதிகள் இலவசமாகக் கிடைக்கின்றன. குறிப்பாக டொரண்டுகளாக. உதாரணமாக, அமேசான் டாப்-100 புத்தகங்கள் வருட வாரியாக டொரண்டுகள் உண்டு! ஒரே டொடரண்டில் 5000, 10000 புத்தகங்கள் கொண்ட லைப்ரரிகளும் உள்ளன. எந்த பிரபல எழுத்தாளரை எடுத்துக்கொண்டாலும் அவருடைய 10 புத்தகங்களை 10 நொடியில் இலவசமாக டவுண்லோடு செய்துவிட முடியும் என்கிற நிலை உள்ளது. ஆங்கிலத்தில் முறையாக விற்கும் காப்பிகள் அதிகம் என்பதான் அவர்கள் இந்தத் திருட்டை சமாளிக்க முடிகிறது. இங்கு நிலை வேறு. இணையம் வந்தபிறகு இசைத்தட்டு சிடிகள் விற்பனை அடியோடு அழிந்துவிட்டது. அந்த நிலையை பதிப்பாளர்கள் விரும்ப மாட்டார்கள். பத்ரியே கையைச் சுட்டுக்கொண்டு என்.எச்.எம். செயலியை நிறுத்திவிடக் கூடும்.
ReplyDelete