"இரண்டும் ஒன்றுதான் என்கிறார் உன் அப்பா", அவள் சொன்னாள்.
அது பொய்யென்று அறிந்த நான் சொன்னேன்:
"அது வேறு", அவள் பெரும் ஊக்கத்துடன் சொன்னாள், "அவர் விருந்துகள் மற்றும் மாலை நேர காதல் பாடல்களின் போது மட்டுமே வாசித்தார். சாப்பிடக்கூட காசில்லாமல் இருந்ததனால் மட்டுமே அவர் படிப்பை நிறுத்தினார். ஆனால், அரகடகாவில் உள்ள எல்லாருக்கும் முன்பே, ஒரு மாதத்தில் அவர் தந்திக்கலை படித்தார்; அது அப்போது மிகச்சிறந்த வேலையாக இருந்தது"
"நானும் கூட பத்திரிகைகளுக்கு எழுதி சம்பாதிக்கிறேன்", நான் சொன்னேன்.
"நான் பயப்படாமல் இருப்பதற்கு சொல்லுகிறாய்", அவள் சொன்னாள், "ஆனால் தொலைவில் இருந்து பார்த்தாலே உன் நிலைமை எல்லாருக்கும் புரியும். அந்த புத்தகக்கடையில் எனக்கு அடையாளமே காண முடியாதபடி மோசமான நிலைமை"
"என்னால் கூட உன்னை அடையாளம் காண முடியவில்லையே", நான் சொன்னேன்.
"ஆனால் இதுமாதிரியான காரணத்தினால் அல்ல", அவள் சொன்னாள், "உன்னைப் பார்த்து ஒரு பிச்சைக்காரன் என்று நினைத்தேன்"
என் நைந்து போன் செருப்புகளை பார்த்து தொடர்ந்தாள், "ஒரு காலுறை கூட கிடையாது"
"அதுதான் ரொம்ப வசதியாக உள்ளது", நான் சொன்னேன், "ரெண்டு சட்டை, ரெண்டு ஜோடி உள்ளாடைகள், ஒன்று காயும்போது மற்றொன்றை அணிந்து கொள்ளலாம். ஒருவருக்கு வேறென்ன வேண்டும்?"
"சற்று கௌரவம்", அவள் சொன்னாள். ஆனால் வித்தியாசமான ஒரு தொனிக்கு உடனடியாக மாறி இதைக் கூறி மென்மையானாள், "நாங்கள் உன்னை மிக அதிகமாய் நேசிப்பதனால் தான் இதை சொல்கிறேன்"
"எனக்குத் தெரியும்", நான் சொன்னேன், "ஆனால் ஒரு விஷயம் சொல், என் இடத்திலே இருந்திருந்தால் நீயும் இதையேதான் செய்திருப்பாய்?"
"நான் செய்திருக்க மாட்டேன்", அவள் சொன்னாள், "என் பெற்றோர்களை வருந்த செய்யும் என்றால் நான் அதை செய்ய மாட்டேன்". அவளது திருமணத்தின் பாலான குடும்பத்தினரின் எதிர்ப்பை விடாப்பிடியாய் அவள் முறியடித்ததை நினைவில் கொண்டு சிரித்துக் கொண்டு சொன்னேன்:
"என் கண்ணைப் பார்த்து சொல் பார்க்கலாம்"
நான் என்ன யோசிக்கிறேன் என்பதை மிக நன்றாக அறிந்திருந்ததால் என் பார்வையை தவிர்த்த அவள் துயருற்று தெரிந்தாள்.
"என் பெற்றோரின் ஆசீர்வாதம் கிடைக்கும் வரையில் நான் மணமுடிக்க இல்லை", அவள் சொன்னாள், "மனதில்லாமல் தான், நான் அதை ஒத்துக் கொள்கிறேன், ஆனால் எனக்கு அது கிடைத்தது".
அவள் விவாதத்தை தற்காலிகமாக நிறுத்தினாள், என் விவாதக் கருத்துக்களால் தோற்கடிக்கப்பட்டு அல்ல, அவளுக்கு கழிப்பறைக்கு போக வேண்டும் என்பதாலும், அதன் சுகாதார நிலைமையை அவள் நம்பாததாலும். கப்பலின் ஒருங்கிணைப்பு மற்றும் எந்திர மேற்பார்வை அதிகாரியிடம் மெலும் சுத்தமான இடம் கிடைக்குமா என்று விசாரித்தேன்; ஆனால் தானே பொதுக்கழிப்பறையைத் தான் பயன்படுத்துவதாய் அவர் சொன்னார். என்னவோ கோன்ரெடை படித்தது போல் அவர் சொல்லி முடித்தார், "கடலிலே எல்லாரும் ஒன்றுதான்". அதனால் அம்மா சமத்துவ விதிக்கு அடிபணிந்தார். நான் பயந்ததற்கு நேர்மாறாய் வெளியே வந்தபின் அவள் முயன்ற¦ல்லாம் தன் சிரிப்பை அடக்க முயன்றது தான், "நானொரு சமூக நோயுடன் திரும்ப சென்றால் உன் அப்பா என்ன நினைப்பார் என்பதை உன்னால் கற்பனை பண்ண முடிகிறதா?"
"கதை சொல்ல வாழ்கிறேன்" என்ற மொழிபெயர்ப்பை நான் நம்பவில்லை."கதை சொல்ல வாழ்தல்" என்பதே என் கருத்து.
ReplyDeleteஉங்கள் மொழிபெயர்ப்பு கவித்துவ அழகை கொடுத்தாலும்.........................................
ReplyDelete”கதை சொல்ல வாழ்கிறேன்” பொருளை சிதைக்கவில்லை. எழுதும் முன் இதைப் பற்றி நெடிது யோசித்தேன் தான். உங்கள் பரிந்துரையும் தோன்றியது. கடைசியில் மார்க்வெஸும் இதையே விரும்புவார் என்று சமாதானம் கொண்டேன். “கதை சொல்ல வாழ்தல்” இலக்கண ரீதியாய் நேரடியாக இருந்தாலும், தட்டையாக தோன்றுகிறதல்லவா?
ReplyDelete