கடந்த மாத இறுதியில் மதுரையில் உயிரோசை புத்தக வெளியீட்டு விழாவில் பேசின தினமணி ஆசிரியர் வைத்தியநாதன் பிரசுர சந்தையில் சமீக கால புத்தகப் பெருக்கம் பற்றின ஒரு தீவிரமான கவலையை தமாஷாக அலசினார். பிறகு பேசிய சாரு "தவறான இடத்தில் பேசி விட்டீர்" என்று தருமிக் குடுமியை ஒரு பிடிபிடித்தார். புத்தகங்களின் அதிகப்படியான பிரசுரமும், தலையில் முட்டை ஓடு துண்டுகள் ஒட்டின வாசகர்களின் தீவிர இலக்கியக் களத்தை நோக்கின படையெடுப்பும் ஒரு தொடக்க நிலை ஆபத்து என முந்தைய தலைமுறையின் தெரியப்பட்ட எழுத்தாளர்களில் சிலரோ பலரோ சொல்கிறார்கள் அல்லது உள்ளூர நம்புகிறார்கள அல்லது குறைந்த பட்சம் உத்தேசிக்கிறார்கள். இது வெறுமனே கால இடைவெளி தரும் கவலையோ புதுமை நிராகரிப்போ அல்ல. நாம் கவனமாக அலச வேண்டிய பிரச்சினை.
உலகில், குறிப்பாய் மேற்கில், அரை நிமிடத்துக்கு ஒரு புத்தகம் எழுதப்படுகிறது. அரசாங்கங்களாக பார்த்து அகவிலைப்படி, பண்டிகை சிறப்பு நிகழ்ச்சிகள் பார்க்க போனஸ், ஓய்வூதியம் தந்து உலகில் பிரசுரமாகும் புத்தகங்களை தினசரி 8 மணி நேரம் படிப்பதற்கான தொழில் முறை வாசகர்களை நியமித்தால் கூட, ஏற்கனவே எழுதப்பட்ட புத்தகங்களை படித்து முடிக்க இன்னும் 2,50,000 வருடங்கள் தேவைப்படும் என்கிறார் மெக்ஸிக்க எழுத்தாளர் கேப்ரியல் சயித் நூல் வாசிப்பு மற்றும் கலாச்சாரம் குறித்தான தனது So Many Books எனும் நூலில். எப்படி என்கிற இந்த மலைப்புதான் உலக வாசகன் முன்னுள்ள இன்றைய பெரும் சவால்.
"வெளியாகும் தீவிர தமிழ் புத்தகங்கள் அனைத்தும் கட்டாயம் படிக்க வேண்டியவையே" என்றார் சாரு வைத்தியலிங்கத்தை கண்டிக்கும் போக்கில். இந்த புத்தகங்கள் அனைத்தும் வாசிக்க வேண்டியவையா? இந்த கேள்விக்கான பதிலை அடைவதற்காக வசதியாக நாம் வாசகர்களை மூன்று பிரிவுகளாக வகைப்படுத்தலாம்.
(1) பொழுது போக்க, லௌகீக தேவைக்காக படிப்பவர்கள்
(2) பயிற்சிக்காக படிப்பவர்கள்
(3) தேடலுக்காக படிப்பவர்கள்
(2) மற்றும் (3)-ஆம் பிரிவினர் மீது மட்டுமே நமக்கு அக்கறை. இரண்டாம் வகையினர் செவ்வாய்க் கிழமை அசோக மித்திரனின் "தண்ணீர்", சனிக்கிழமை வாக்கிங் முடித்த பின் லா.ச.ராவின் "புத்ரா" என்று படித்த படி இமை சுருக்குவார்கள். இவ்வாறு கண்களைப் பழக்குவது தீவிர வாசிப்பின் முதல் நிலை. பிரதியில் எதையெல்லாம் கவனிக்க வேண்டும் என்று நமக்கு மறைமுகமான கலாச்சார பயிற்சி அல்லது முறைப்படியான அறிவியல் பயிற்சி வழங்கப்படுகிறது. உதாரணமாக, பஷீரின் "மதில்கள்" நாவலில் சிறைச்சாலை × பூந்தோட்டத்தை முரண் நிலை வாழ்வனுபவங்களாக ஏன் கவனிக்கிறோம். முரண் எதிரிடைகள் குறியீடுகளாகி பொருள் உருவாக்கும் என சுட்டிக்காட்டின அந்த விரலுக்கு கீழே தான் நம் வாசிப்பு இங்கு நகர்கிறது. இப்படி வாசிப்பை ஒருமுகப்படுத்த பயின்ற பின்னரே தேவதேவனின் மரங்களும், எமிலி டிக்கின்சனின் பூக்களும் நமக்கு புலனாகின்றன. ஆனால் இந்த கட்டத்திலேயே பெரும்பாலான வாசகர்கள் தேங்கி விடுகிறார்கள். தங்களது ஆய்வு உபகரணங்களை தீட்டி, துலக்கியபடி, கொலுவில் எழுத்தாளர்களை மாற்றி மாற்றி சீர்படுத்தி திருப்தி கொண்டபடி, இனி படிக்க என்ன மிச்சம் என்று விரல்கள் மடித்தபடி நின்றபடி பறப்பார்கள். ஒவ்வொரு படித்த புத்தகமும் இவர்கள் தலைமேல் அட்டைக் கிரீடங்களாய் அமர்ந்து ஒற்றை கோபுரமாய் உயரும். வீட்டில், புத்தக ஸ்டால்களில் குவிந்துள்ள புத்தகம் பார்த்து ஒற்றை பெருமூச்சு தான், சுருக்கமாக சொல்வதென்றால், இவரகளது வாசிப்பு வாழ்வு. வீட்டில் வளர்க்கப்படும் பூனை வளர்ந்த பின்னும் அம்மாவால் (வளர்ப்பாளர்) போஷிக்கப்படும் குட்டியாக தன்னை கற்பிக்கும் என்றொரு கருத்துள்ளது. பூனை மனவியலாளர்கள் இதை "தொங்கும் குழந்தைப்பருவம்" என்கிறார்கள். பயிற்சிப்பள்ளியிலே தேங்கிவிடும் வாசகன் ஒரு வீட்டுப்பூனை.
தளவாய் சுந்தரத்தின் "ராஜராஜன் சாலையில் ஒரு கிழவர்" என்னும் சிறுகதையில் நூலகக் கிழவர் ஒரு நூல்களின் குகைக்குள் புகுந்து வெளிவருவது போல், பயிற்சி வாசகன் புத்தக மலையில் தனக்கான நூலை அநாயசமாய் உருவி எடுக்கிறான். Youtube பேட்டி ஒன்றில் ஃபூக்கோ தான் தனது வீட்டு நூலகத்தின் மிக சில புத்தகங்களையே படித்துள்ளதாய் நிதானமாய் தயங்காமல் சொல்கிறார். ஃபூக்கோவுக்கான புத்தகங்கள் மட்டுமே ஃபூக்கோவுக்கு போதுமானவை. இந்த தேடல் நிலை எப்போது ஆரம்பமாகிறது? இதற்கு முழுக்க அகவயமான விளக்கம் மட்டுமே கிடைக்கும். வாழ்வின் அழுத்தத்தில் அந்த தேடலுக்கான அக்கினிக் குஞ்சு பிறந்து நம் மனதின் பக்கங்களில் விழுந்து பற்றிக் கொள்கிறது. அப்போதிலிருந்து நம் வாசிப்பு பயணம் திசை மாறுகிறது. இந்த பொறியின் வெளிச்சத்தில் நமக்கான எழுத்தாளர்களை தேடி கண்டடைகிறோம். இந்த வாசிப்புக்கான உத்தேசம் உள்கேள்விகளுக்கான விடைகளும் விளைவான மனவிகாசமும். வெறுமனே தகவல் தொகுத்து புத்தகங்களை சீட்டு ஒட்டி முறைப்படுத்தும் வாசிப்பு கட்டம் குரங்கு நிலை என்றால், தேடல்வாத வாசிப்பு மானிடப் பரிணாமம். எண்ணற்ற புத்தகங்களின் வருகை பயிற்சி வாசகனுக்கு மட்டுமே இடையூறானது.
தேடல்வாதி வாசகனை நாம் கண்டு கொள்வது எப்படி? அவனது இரு கர்மங்கள் வழி. பரிணாமம் பெற்றதும் அவன் முதலில் தன் குருநாதரின் தலையில் ஒரு போடு போடுவான். பெரும்பாலான தேடல்வாதிகள் இதை செய்கிறார்கள். நிரந்தர அளவுகோல்களையும் உதறி விடுவான். ஒரே ஆணுறையைப் போல் ஒரே எழுத்தாளனையே திரும்பத் திரும்ப அணிவது அபாயகரமானது என்று அவனுக்கு புரியும். ஒரு விம்மலுடன் உருவி பத்திரப்படுத்துவான்.
உயிர்மையின் இரு புத்தக வெளியீடுகளில் நிரம்பி நின்ற அரங்கு முன்பு மேடையில் தோன்றின எழுத்தாளர் தமிழவன் இருமுறையும் தமிழ் இலக்கியத்தின் எதிர்காலம் பற்றின் தனது பயத்தை தெரிவித்துள்ளார். 100 புத்தகங்களை 99 வாசகர்கள் படித்த எண்பதுகள் வரையிலான சிறுபத்திரிகை சூழலே ஆரோக்கியமானதாக அவர் கருதியதாக பட்டது. இந்த கூற்று பற்றின ஐயத்துடன் மதுரைக் கூட்டத்தில் அவரை சந்தித்து விசாரித்தேன். வியாபார எழுத்தில் இருந்து புரதம் பெற்று வளர்ந்த புது வாசகர்கள் தீவிர இலக்கிய தளத்தை ஆக்கிரமித்து அவர்களுக்கான கோமாளி எழுத்தாளனை உருவாக்கக் கூடும் என்று தமிழவன் கவலை கொண்டார். ஆனாலும் தன் தலைமுறையினரோடு ஒப்பிடுகையில் இளம் தலைமுறை வாசகர்கள் ஆழமான கருத்துத் தளங்களை அணுகும்படி முதிர்ந்துள்ளதாய் அவர் பாராட்டினார். பிறகு தொடர்ந்து இது பற்றி எழுத்தாளர் சுகுமாரனிடம் விவாதித்தேன். சுகுமாரன் அதிகபட்ச பிரசுரத்தை, புதுவாசகர் படையெடுப்பை உற்சாகமாக வரவேற்றார். "தமிழ் வாசிப்பை புதிய அணுகுமுறைகளுடனான பலதரப்பட்ட படைப்புகள் விரிவுபடுத்தும் சாத்தியம் தற்போது ஏற்பட்டுள்ளது. இது நல்லது" என்றார். தொடர்ந்து "இப்போது நன்றாக எழுதும் இளைய எழுத்தாளர்களை உடனுக்குடன் நாம் படிப்பதற்கான சூழல் இணையத்தில் உள்ளது. இருபது முப்பது வருடங்களுக்கு முன் இன்றைய பிரசுர சாத்தியங்கள் இல்லை. புதியவர்களின் நுழைவும், அவர்களுக்கான வரவேற்பும் ஒரு மறுமலர்ச்சி" என்றார். இன்றைய வாசகனுக்கு உரைநடை படைப்புகள் வழி புதிய அறிவு தளங்களை அடையும் பேரார்வம் உள்ளது. இதனால் உரை நடை இலக்கியத்தில் உள்ள காலியிடத்தை நாம் பயன்படுத்தி தொடர்ச்சியாக எழுத வேண்டும் என்று கண்கள் ஒளிர ஊக்குவித்தார். சரி, மொத்த சில்லறை பிரசுர இடிபாடுகளில் மட்டமான எழுத்து முன்வைக்கப்பட்டு, நல்ல படைப்புகளை வாசகன் ஒருவேளை தவறவிட்டால்? தேடல் உள்ள வாசகன் பத்து வருடங்களுக்குப் பின்னரும் ஒரு சிறந்த படைப்பை கண்டடைவான் என்று தனது அனுபவம் ஒன்றை குறிப்பிட்டு புன்னகை மலர்ந்தார். அப்படி சொன்னதும் ஜன்னல் வழி மின்னல் ஒளி தேறித்தது. சுகுமாரன் தனது தோள் துண்டை இறுக்கிக் கொள்ள, மழையை வேடிக்கை பார்ப்பதில் நானும் சேர்ந்து கொண்டேன். அவரது மார்க்வெஸ் மீசை மயிரிழைகள் போன்றே சீரான மழை.
கேப்ரியல் செயித் தனது நூலில் தமிழவனின் கருத்தை வழிமொழிகிறார்.உலகம் பூரா கோடிக்கணக்கான புத்தகங்கள் குறிப்பிட்ட அறிவு\ரசனை தளத்தை சேர்ந்த பல்வேறுபட்ட வாசகர்களுக்காக எழுதப்பட்டு தலா சில ஆயிரம் பிரதிகள் விற்பனையாகின்றன. விஷுவல் மீடியா வெளியீடுகளுடன் ஒப்பிடுகையில் புத்தக பிரசுரம் மலிவானது. இதனால் குறைந்தபட்ச முதலீட்டுடன் ஒருவர் தனது கருத்துக்கள், அவதானிப்புகள், தரிசனங்கள், அலசல் விவரிப்புகளை பொருளாதார பதற்றம் இன்றி ஆயிரம் பிரதிகள் வெளியிட்டு தனக்கான ஒரு வாசகர் தளத்துக்கு கொண்டு செல்ல முடியும். இதுவே எழுத்துக்கு விரிவும் ஆழமும் சேர்க்கும் ஆரோக்கியமான சூழலை ஏற்படுத்துகிறது. எழுத்தாளன் இப்படி மிகச்சின்ன வட்டத்தில் வாழ்வதும், அங்கு சந்திக்கும் தனிமையும் சினிமாக் கலைஞனுக்கு அமைவதில் இருந்து நேர்மாறானது. ஆனாலும் இந்த நிலையே எழுத்துலகுக்கு சாதகமானது என்கிறார் செயித். குறைந்த பிரதிகளுடன் மில்லியன் புத்தகங்களை சிறு வாசக வட்டங்களுக்கு பிரசுரிப்பதை விட, மில்லியன் பிரதிகளில் சில நூல்களை பெரும் மக்கள் கூட்டத்துக்கு பிரசுரிப்பது படைப்புகளின் உள்ளடக்கப் பரப்பை ஆழத்தை வெகுவாய் குறைத்து விடும். பெரும்பான்மையினரின் பொதுத் தேவையை நிறைவேற்றும் பணியை புத்தகத்தால் செய்ய முடியாது என்கிறார் செயித். அனைத்து நூல்களும் அனைவருக்கும் ஆனவை அல்ல. உங்களுக்கான புத்தகங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்டு எங்கோ காத்திருக்கின்றன. தீவிர இலக்கிய உலகில் வணிக வாசகர்களின் படையெடுப்பால் பாதகம் இல்லை. அவர்களுக்கான எழுத்தாளன் இங்கு இயங்கினாலும் கூட. எழுத்தாளனும் வாசகனும் சந்தித்துக் கொள்ள எண்ணற்ற பாதைகள் திறந்துள்ளன. சந்திப்பு முழுக்க எதேச்சை அல்ல என்பதே முக்கியம்.
மிக அதிக லாபமும், அதனால் அதிகபட்ச முதலீடும் செய்யப்படும் துறையாக புத்தக பிரசுரம் மாறி லட்சகக்கணக்கான மக்களுக்காக ஒரு சில அபத்தமான புத்தகங்கள் வெளியிடப்படும் சூழல் ஒருவேளை உருவாவது மட்டுமே ஆபத்தானது. ஏனென்றால் அப்போது குறைவான மக்களால் படிக்கப்படும் தீவிர அறிவுத்துறை புத்தகங்களுக்கான ஓர இடததை எல்லாம் டினோசர் எழுத்தாளர்கள் பிடித்துக் கொள்வார்கள். பொது மக்கள் அனைவருக்குமான புத்தகம் என்பதே ஒரு கற்பிதம் என்கிறார் கேப்ரியல் சயித். புத்தகம் சமூகப் புரட்சியின் மூளை என்பதும் அப்படியே. ஃபிடல் காஸ்டுரோ "டஸ் காபிடலின்" ஆரம்ப பக்கங்களை மட்டுமே படித்துள்ளார் என்று தமாஷாக குறிப்பிடுகிறார். பலபிரிவினருக்கான பலதரப்பட்ட நூல்களை எழுதுவதே லட்சியமாக இருக்க வேண்டும். சினிமாவின் பலமும் பலவீனமும் அது பெரும்பான்மையினருக்கான ஒரு பொதுப்படைப்பாக இருப்பதே. சதுர்த்தி பொம்மையை பலவிதமாக செய்து அவர்கள் கரைத்துக் கொண்டு இருக்கும் வரை, தமிழ் இலக்கியத்தின் இடம் பாதுகாப்பானது. அதுவரை. காகிதப் பரப்பிலோ, கணினித் திரையிலோ எழுத்துக்கள் புற்றுகளை நோக்கி தங்களுக்கான எண்ணற்ற புதிர்பாதைகளில் பயணித்தபடி இருக்கலாம்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment