இலங்கையில் நடந்த முத்தரப்பு ஒருநாள் தொடரில் இந்திய கிரிக்கெட் அணி முதல் போட்டியில் தள்ளாட்ட அணி நியுசீலாந்தை வீழ்த்தி ஐ.சி.சி பட்டியலில் முதல் இடத்தை பெற்ற போது இர்விங் வேலசின் "தெ பிரைஸ்" நாவலில் வரும் இங்கிரிட் பாஹ்ல் என்னும் ஒரு பெண் எழுத்தாளரின் சங்கடம் நினைவு வந்தது. எளிய இயற்கை கவிதைகளை மட்டும் பாடி வந்த அவருக்கு முழுக்க அரசியல் காரணங்களால் நோபல் பரிசு வழங்கப்படும்; கவிஞர் (வைரமுத்துவை போலன்றி ) நுண்ணுணர்வு கொண்டவர் தான். ஆனாலும் தனக்கு தகுதி இல்லை என தெரிந்தும் மறுக்கும் திராணி இல்லாமல் பெற்றுக் கொள்கிறார். பிற்பாடு பொருந்தாத மகுடம் அவரை உறுத்துகிறது; யோக்கியதை உள்ள பரிசாளர்களை சந்திக்கும் போது கூசுகிறார். தன்னை அழுத்தும் இந்த பரிசின் கனத்தை எப்படி இறக்கி வைப்பது என்பது தான் அவரது சிக்கல். சனிக்கிழமை இலங்கை அணியிடம் படுகேவலமாக இந்தியா தோற்றது தரப்பட்டியலில் முதல் அணியாக அது இருப்பதன் அபத்தத்தை துல்லியமாக சித்தரித்தது. அரியணையில் புட்டம் நெளிய வைத்தது. தோனி தலைமையிலான இந்திய அணி கடந்த சில வருடங்களில் தொடர்ச்சியாய் பல போட்டிகளில் வென்றிருந்தாலும், நமக்கு நியாயமான இடம் 5 தான். என்ன காரணம்?
உலகின் சிறந்த அணிக்கு சில அடிப்படை வலிமைகள் உண்டு.
"ஃபீல்டிங்கில் தொடர்ச்சியான சிறப்பு. "
தற்போதைய வலிமையான அணிகளிடம் இதைப் பார்க்கலாம்: அஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, இலங்கை. நெடுங்காலமாகவே அவர்களிடம், உள்ளூர் போட்டிகளில் கூட, நன்றாக ஃபீல்டிங் செய்யும் கலாச்சாரம் உள்ளது. நமது ஃபீல்டிங் தரம் இளம் வீரர்களின் விகிதத்தை சார்ந்தே உள்ளது. முதிய வீரர்கள் அணியில் அதிகரிக்கும் போது இயல்பாகவே ஃபீல்டிங் தரம் வீழ்கிறது.
"உடற்தகுதி"
இந்திய அணியினரின் உடற்தகுதி முன்னேறி உள்ளதென்றாலும் அங்கீகரிக்கப்பட்ட தரத்திற்கு நெடுந்தூரம் உள்ளது.
"மட்டையாட்டத்தில் சரிவு ஏற்படும் போது சரிகட்டி அணியை வலுவான நிலைக்கு எடுத்து செல்ல இரு மட்டையாளர்கள்"
இவர்கள் ஓரளவுக்கு தொழில் நுட்பம் தெரிந்த, ஒற்றை இரட்டை ஓட்டங்களை சுளுவாக எடுக்க தெரிந்தவர்களாக, சூழமைவுக்கு ஏற்றபடி தங்கள் ஆட்டத்தை தகவமைப்பவர்களாக, நினைத்த படி நிதானத்தில் இருந்து ஆக்ரோசத்துக்கு கியர் மாற்ற முடிபவர்களாக இருக்க வேண்டும். தென்னாப்பிரிக்காவுக்கு காலிஸ் மற்றும் டிவில்லியர்ஸ். முந்தைய ஆஸி அணியில் மார்டின் மற்றும் ஸ்டீவ் வாஹ். அசர் -- ஜெடேஜா ஜோடிக்கு பின்னர் இந்திய அணிக்கு இப்படியான யாரும் பின்னர் அமையவில்லை. தோனி நம்முடைய நவீன ஜெடேஜா. அசரின் இடம் இன்னும் காலியாகவே உள்ளது. இத்தகைய பாத்திரத்தை ஏற்க டெண்டுல்கருக்கு விருப்பம் இல்லை.
"ஆல்ரவுண்டர்கள்"
குறிப்பாக வேக\மிதவேக வீச்சாள ஆல்ரவுண்டர்கள். சிறந்த ஆல்ரவுண்டர் அரிது என்றாலும் துண்டு துக்கடா ஆல்ரவுண்டர்களுக்கும் அணியின் வெற்றியில் முக்கிய பங்குண்டு. இந்திய அணி மேலாண்மைக்கு இவ்விசயத்தில் லட்சியவாத அணுகுமுறை உண்டு. பிரஸ்னன், காலிங்வுட் (இங்கிலாந்து), மேத்யூஸ் (இலங்கை) போன்றவர்கள் இந்தியாவில் பிறந்திருந்தால் உள்ளூர் அளவிலாக மட்டுமே தேய்ந்து போயிருப்பார்கள். சமீபத்தில் இந்திய தேர்வுக்குழு தலைவர் ஸ்ரீகாந்த் நாட்டின் முக்கு மூலைகளில் எல்லாம் தனது குழு ஆல்ரவுண்டர்களுக்காக தேடுவதாக தெரிவித்தார். சமீப ஐ.பி.எல்லில் ஜொலித்த வங்காளத்தின் லஷ்மி ரதன் ஷுக்ளா இவர்கள் கண்ணில் ஏன் படவில்லை? சச்சின் ரானா, ஜெ.பி யாதவ், ஜோகிந்தர் ஷர்மா ஒதுக்கப்படுவது ஏன்? இவர்கள் இந்திய தேர்வாளர்களின் குறுகின மனப்பான்மை மற்றும் லட்சியவாத அணுகுமுறைக்கு பலிகடாக்கள். இடைத்தர ஆல்ரவுண்டர்களால் ஒரு முழுமையான பந்து வீச்சாளர் அல்லது மட்டையாளரை விட உபயோகமாக செயல்பட்டு அணிக்கு சமநிலை அளிக்க முடியும். கபில், ஹேட்லி, காலிஸ் போன்றோரின் திறமையுடன் வந்தால் தான் இடம் தருவோம் என அடம் பிடிப்பதனால் தான் இந்திய அணி ஒரு போலியோ குழந்தை போல் ஒரு பக்கம் சூம்பி உள்ளது.
"எந்த சூழல் அல்லது ஆடுகளத்திலும் விக்கெட்டுகளை நிலையாக வீழ்த்தும் மூன்று வீச்சாளர்கள்"
பத்தாண்டுகளுக்கு மேலாக வெற்றிகர அணியாக ஆஸ்திரேலியா திகழ்ந்த போது மெக்ராத், கிலெஸ்பி, வார்னே; தொண்ணூறுகளின் இறுதியில் கிரிக்கெட்டை ஆண்ட போது பாக் அணியில் அக்ரம், வக்கார், ரசாக், சக்லைன் கூட்டணி; தென்னாப்பிரிக்காவின் டொனால்டு, பொலாக், காலிஸ் ஆகியோர். விக்கெட் வீழ்த்தும் கூட்டு எந்திரங்களாக இவர்கள் தங்கள் அணிக்காக நெடுங்காலம் செயல்பட்டவர்கள். நமது அணி இருவரை சார்ந்தே எப்போதும் இயங்கி வந்துள்ளது. முன்பு ஸ்ரீநாத், கும்பிளே, தற்போது சகீர்கான், ஹர்பஜன். மட்டையாட்டம் மூலம் உச்சங்களை எட்டினாலும் அடிக்கடி சொங்கியாக தளர்வதற்கு இந்த பந்து வீச்சு வறுமை காரணம்.
மேற்சொன்ன குறைகளால் நாம் ஒரு நடுத்தர அணிதான் என்பது நிச்சயப்படுகிறது. சரி, சமீபமாக இந்திய அணி பல நாடுகளில் தொடர்கள் வென்று செய்துள்ள சாதனைகளை கணக்கில் கொண்டு நமக்கு தான் முதல் இடம் வேண்டும் என்று தரையை உதைத்து லாலி பாப் சூப்பும் சீக்கா போன்றவர்களுக்கு பதில் என்ன? இந்தியா போன்ற ஒரு நடுத்தர அணி முதலிடத்தை அடைந்துள்ளது ஒரு சுவாரஸ்யமான உண்மையை வலியுறுத்துகிறது. நடுத்தரமானவர்களும் வெல்லும் படி, வெற்றி பலவித வெளிக்காரணிகளால் இயக்கப்படுகிறது. வெற்றிக்கு ஒரு வரலாற்று உந்துதல் உள்ளது. ந்மது மிகத்திறமையான இளைய வீரர்கள் தோனியின் நிதானத் தலைமை கீழ் பிறரை இடறி விட்டு முன்னோடிய போது, ஆஸ்திரேலியா, பாக்கிஸ்தான், நியூசிலாந்த், இலங்கை போன்ற அணிகள் அனுபவஸ்த திறமையான ஆட்டக்காரர்களின் இழப்பு, மேலாண்மைக் குழப்படி காரணமாய் ஒரு சுமூகமான நிலைமாற்றத்தை அடைய திணறிக் கொண்டிருந்தன. இந்திய ஒரு நாள் அணி இந்த நிலைமாற்றத்தை ஒரு இளைய வீரர்களின் குழுவைக் கொண்டு சுமூகமாக சாதித்தது தான் இதுவரையிலான அணியின் வெற்றிக்கு முக்கிய காரணம். இந்திய விடுதலைக்கு எப்படி முழுக்க முழுக்க காந்தி காரணமில்லையோ அதைப் போன்றே நமது இதுவரையிலான எழுச்சிக்கு நாம் மட்டுமே காரணமல்ல. தரவரிசையின் முதல் எண்ணில் ஒரு காலும் இரண்டாம் எண்ணில் மற்றொன்றுமாக ஒருவிதமான தோரணையில் தலை கிறுகிறுக்க இந்திய அணி நிற்கும் போது நாம் இந்த வரலாற்று காரணத்தையும் வலியுறுத்த வேண்டும்.
சுமார் பத்தாம் நூற்றாண்டில் வில்லியம் (தெ கான்கிரர்) என்ற ஆங்கிலோ சாக்சன் மன்னன் படையெடுத்து வந்து இங்கிலாந்து மண்ணில் காலூன்றிய போது தடுமாறி விழுந்து விட்டான். அப்படியே எழுந்தால் பின்னிற்கும் ஆயிரக்கணக்கான விசுவாச படையினர் முன் அவமானமாகி விடும். அவன் சுதாரித்தபடி ஒரு பிடி மண்ணை வாரி, கை துக்கி வீரர்களிடம் காண்பித்து "நாம் இந்த மண்ணை கைப்பற்றுவோம்!" என்று அறிவித்து வீரர்களிடம் இருந்து பெரும் ஆதரவு முழக்கம் பெற்றான். வில்லியமைப் போல் ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா அணிகள் விழுந்தாலும் எளிதில் தோல்வியை ஒப்புக் கொள்ளாது. தரமாக போராடிய பின்னரே தோற்கும். இந்திய அணியைப் போல் அவமானகரமாய் அவை ஆட்டத்தை இழப்பதில்லை; ஃபீடிங், பந்து வீச்சு, மட்டையாட்டம் என அனைத்து துறைகளிலும் குறைந்த பட்ச தரத்தை தக்கவைத்தபடிதான் தோற்கும். அத்தகைய வலுவான நிலையிலான ஒரு இந்திய அணி எதிர்கால தலைமுறையினருக்கு ஆனது. கங்குலி போல் தோனியும் நமது அணியை அடுத்தடுத்த கட்டங்களுக்கு அழைத்து செல்லுகிறார். எதிர்கால அதி-அணிக்கான பாலம் மட்டும் தான் தற்போதைய அணி. பலிபீடத்தில் நாம் இன்று சமர்ப்பிக்கும் கிரீடங்கள், கொட்டும் ரத்தத்திலிருந்து அவ்வணி எழுந்து வரும். இன்று நாளைக்கானது!
No comments :
Post a Comment