பலவீனமாக உள்ள இந்திய வேகப்பந்து வீச்சு தற்போதைய ஊடக பரபரப்பாக உள்ளது. இங்கு இந்திய வேகப் பந்துவீச்சின் ஏற்ற இறக்கத்தை ஒரு மீள்பார்வை பார்த்து, வெகப்பந்தை பற்றி பொதுவாக யோசிக்கலாம்.
இந்தியாவுக்கே என்றுமே பிரமாதமான வேகப் பந்து வீச்சாளர்களின் பாரம்பரியம் இருந்ததில்லை. ஆனாலும் திராவிட் தலைமையின் பிற்பகுதியிலும், கும்பிளே தலைமை கீழும், பின்னர் தோனி தலைமையிலும் ஒரு சிறுமறுமலர்ச்சி ஏற்பட்டது. எப்படி? இங்கிலாந்தின் கவுண்டி கிரிக்கெட் ஆடி தன் ஆட்டத்திறனின் உச்சத்தில் திரும்பின சகீர்கானின் கீழ் புதியவர்களான ஆர்.பி சிங், இஷாந்த், பிரவீண், இர்ஃபான், ஸ்ரீசாந்த போன்றோர் ஒரு சிறப்பான போட்டிச்சூழலில் ஆடினர். பந்து வீச்சுக்கு சாதகமான இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா போன்று வேகப்பந்தாளர்களின் சுவர்கத்திலேயே இந்த இளம் வீச்சாளர்கள் இயங்கினர் என்பதை நாம் கவனிக்க வேண்டும். முடித்து விட்டு இந்தியா திரும்பினவர்கள் இங்கோ, இலங்கை, பாக்கிஸ்தான் போன்ற ஆசிய ஆடுதளங்களிலோ சோபிக்கவில்லை. ஏன்?
ஆசியாவில் ஆடுதளங்கள் உறுதியற்றவை, இளகி வெடித்துப் போனவை. புழு அரித்தது போன்ற மைதானத்தின் தரைப்பரப்பில் ஓடும் பந்து எளிதில் வழவழத்தனமையை இழந்து விசுகிறது. இதனால் பத்து ஓவர்களுக்கு பின் நம்மூர்களில் பந்தை ஸ்விங் செய்ய வைப்பது சிரமம். கொளுத்தும் வெயில் வேக வீச்சாளர்களின் ஆற்றலை சீக்கிரமாய் உறிஞ்சி விடுகிறது. இந்தியா, பாக், இலங்ககைக்கும் பயணம் செய்துள்ள ஐரோப்பிய அணிகளின் வேக வீச்சாளர்கள் கட்டுப்பாடுடன் வீசி நெருக்கடி ஏற்படுத்துவதன் மூலம் விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்களே அன்றி சொந்த நாட்டில் போல் யாரும் அவர்கள் இங்கே வேகமாக வீசி தீவிர பாதிப்பை ஏற்படுத்தியதில்லை. நமது ஆடுதளங்களில் சிறக்க ரிவர்ஸ் ஸ்விங் கைவர வேண்டும். பாக் வேக வீச்சாளர்களின் பொதுவான வெற்றிக்கும், உள்நாட்டில் சகீர் சோடை போகாததற்கும் இது காரணம்.
இந்தியாவுடன் ஒப்பிடுகையில் பாக்கிஸ்தானில் உள்ள ஓரளவு ஆதரவான வேக ஆடுகளங்கள், இம்ரான்கான் ஆரம்பித்து வைத்த வேக வீச்சாளர்களின் பாரம்பரியம் மற்றும் பாக்கிஸ்தானியரின் பொதுவான ஆக்ரோசம் ஆகியவை அவர்களது வேகத்துறை கொடுக்காக இருந்ததற்கு காரணம். ஆனால் வாசிம் அக்ரமுடன் அந்த பாரம்பரியம் துண்டிக்கப்பட்டது. வேகத்துறைக்கு தலைமை ஏற்க வேண்டிய ஷோயப் அக்தர் பொறுப்பற்ற விதமாக தன் கிரிக்கெட் தொழில்வாழ்வை அழித்துக் கொண்டது முக்கிய காரணம். இப்போது பாக் அணியின் சிறந்த பந்தாளர் ஒரு சுழற்பந்தாளர் -- அஃப்ரிடி. இம்ரானுக்கு அமைந்தது போல கபில்தேவுக்கு சீடகோடிகள் யாரும் இல்லை. அவருக்கு பின் பத்து ஆண்டுகளாவது வேக வீச்சுத் துறையில் தொடர்ச்சியாக இயங்கி இளைய வீரர்களுக்கு வழிகாட்டியாக, ஒரு தலைமுறைக்கே முன்மாதிரியாக நமக்கு யாரும் கிடைக்கவில்லை. இந்திய வேக வீச்சாளர்களை தாளித்து வறுத்து மசாலா தூவுமுன் நாம் இந்த வெற்றிடத்தை அலச வேண்டும்.
பாரம்பரிய விவாதத்தில் இலங்கையின் இடம் சுவாரஸ்யமானது. இலங்கை வேகவீச்சை தன் குறுகலான தோள்களில் சுமந்த சமிந்தா வாஸ் பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு மேலாக முரளிதரனின் நிழலிலே இருந்து வந்துள்ளார். முரளி மட்டுமே அவர்களது ஆட்டத்தின் அபாயகரமான சாகச அம்சம். பிற வீச்சாளர்கள் எதிர்மறையாக, கட்டுப்பாடாக வீசுவதில் மட்டுமே சிறந்தவர்கள். சமீபமாக இலங்கை கிரிக்கெட் வாரியம் வாஸை கட்டாய ஓய்வு அறிவிக்க கட்டாயப்படுத்தும் அளவுக்கு வசதியாக மலிங்கா, குலசேகரா, மிராண்டா போன்றோர் அணிக்கு வந்த பின்னும், எதிரணியினரை மொத்தமாக வீழ்த்தி ஆட்டத்தை வெல்லும் தன்னம்பிக்கை இவ்வணியின் வேக வீச்சாளர்கள் இன்னும் பெறவில்லை. இதற்கு சிறந்த உதாரணம், சமீபத்திய சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இங்கிலாந்துடனான அவர்களின் ஆட்டம். ஆட்டத்தில் தோல்வியுற்றதும் தலைவர் சங்கக்காரா ஆடுகளம் மோசமானது என்று புகார் செய்தார். உண்மையில் இது தங்களால் வேக ஆடுகளத்தில் சுதாரிக்க முடியவில்லையே என்கிற ஆதங்கம் தான். ஒருநாள் ஆட்ட அணிகளில் இலங்கையின் பந்துவீச்சு துறை வலுவானது. அவர்களது வேக வீச்சாளர்கள் மிகத் திறமையானவர்கள். ஆனால் நெடுங்காலமாக எதிர்மறையாக வீசி வந்துள்ள மனநிலையை இலங்கையால் கைவிட முடியவில்லை. முரளியை தவிர்த்து அப்படியான பாரம்பரியம் அவர்களுக்கு இல்லை. தாக்கி ஆட வேண்டிய சூழலில் பதுங்கவே தேர்கிறார்கள். தலைமுறைகளாய் நீடிக்கும் ஒரு சங்கிலித்தொடர் விளைவிலிருந்து விடுபடுவது எளிதல்ல.
நமது சேம்பியன்ஸ் கோப்பை வெளியேற்றத்துக்குப் பின் பேட்டி காணப்பட்ட பட்டோடி உள்ளிட்ட முன்னாள் வீரர்கள் சில கூற்றுகளை வெளியிட்டார்கள். சாராம்சமாக்: (1) இந்தியாவில் வேக வீச்சாளர்களே இல்லை; (2) நமது வீச்சாளர்கள் காயமடையும் அச்சம் காரணமாக வேகத்தை குறைத்து வருகின்றனர். இரண்டுமே உண்மைதான். ஆனால் இவற்றில் அபாய சமிக்ஞை ஏதும் இல்லை.
பந்து வீச்சை வேகம், மிதவேகம், மிதம் என்று பிரிக்கலாம். இந்த பகுப்பை ஒரு தரவரியையென நாம் கருதக்கூடாது. நம் மீடியா புரியும் தவறு அதுவே. இத்தகைய ஒரு முன்முடிவு நம்மவர்களிடம் இருப்பதாலே சித்தார்த் திரிவேதி, தவல் குல்கர்னி, ஜேசுராஜ் போன்ற அருமையான மித வீச்சாளர்கள் ஒதுக்கப்படுகிறார்கள். இர்ஃபான் பதானிடம் வேகம் போதவில்லை என்று குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. பந்தை "பேச" வைக்க முடியுமானால் எந்த வேகமும் சரிதான். இலங்கை மிதவீச்சாளர் நுவன் குலசேகரா உலக தரவரிசையில் முதலிடத்தை பிடிக்கவில்லையா? முன்னூறு விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்திய ஷோன் பொல்லாக், வாஸ் போன்றோர் 125--128 கிலோ மீட்டர் வேகத்தில் வீசியவர்களே. அதிவேகத்தின் அனுகூலம் வீச்சாளர் மட்டமான பந்துகள் வீசினாலும் பெரும்பாலும் மட்டையாளனுக்கு எல்லைக்கோட்டுக்கு பந்தை விளாசும் அவகாசம் இருப்பதில்லை என்பதே. நடிப்புத் திறன் குறைந்த விவேக் தனது டைமிங், குரல் லாவகம் மூலம் நம் கவனததை திருப்பி விடுவது போன்றது இது. வேகம் அதிகமாக ஆக பந்து "ஊமையாகி" விடும். பிறகு அதிவேகத்தால் அச்சுறுத்தி திணறடித்து தான் விக்கெட்டுகள் வீழ்த்த வேண்டும். காயம் காரணமாக குறைவேகத்தில் வீசி ஷோன் பொல்லாக், வாஸ் போன்றோர் பெரும் வெற்றியை கண்டுள்ளனர். வேகத்தை குறைப்பது ஒரு வீச்சாளரின் தனிப்பட்ட தேர்வுதான். இதை விமர்சிப்பது வர்ணனையாளர்களின் அவல் மெல்லும் அவசரம் மட்டுமே.
இந்தியாவில் ஏன், நம் தலைமுறையிலேயே, உலகில் இரண்டு வேக வீச்சாளர்கள் தான் தோன்றியுள்ளனர்: பிரட் லீ மற்றும் அக்தர். பொதுவாக வேகவீச்சாளர்கள் அரிதான வகை. இந்தியாவில் தோன்றினதே இல்லை. இந்தியர்களின் மெலிதான, குறுகின உடலமைப்பு காரணம் என்று நாம் தாழ்வு மனப்பான்மை கொள்ள வேண்டியதில்லை. வேகப்பந்துக்கு ராட்ச உருவம் தேவையில்லை. இதை ஆஸ்திரேலிய வேக வீச்சாளர் டென்னிஸ் லில்லீ தனது "The Art of Fast Bowling" என்ற நூலில் விளக்குகிறார். வேகவீச்சின் ஆக்கக்கூறுகள் என்ன?
பொதுவாக பயிற்சியாளர்கள் உயரமானவர்களையே வேகப்பந்துக்கு ஊக்குவிப்பார்கள். சிறந்த வேக வீச்சாளர்கள் பலரும் உயரமானவர்களே. ஆனால் சராசரி உயரக்காரர்களான மால்க்கம் மார்ஷல், வக்கார் யூனிஸ் போன்றோரால் எப்படி எகிற விட முடிந்தது? சமீபத்திய இரானி கோப்பை ஆட்டத்தில் (மும்பை vs. ரெஸ்ட் ஆஃப் இந்தியா) இந்த முரண் வெளிப்படையாகவே தெரிந்தது. இரண்டாவது இன்னிங்சின் ஆரம்ப சில ஓவர்களில் அகார்க்கர் மிகக்குறைவான ஓட்டத்தில் 125 கி.மீ வேகத்தில் வீசினார். ஒப்பிடுகையில் அவரை விட அதிக உயரமும், நீண்ட ஓட்டமும் உள்ள தவல் குல்கர்னி சராசரியாக 118 கி.மீ-இல் வீசினார். பிறகு அடுத்து சில ஓவர்களில் சற்றே ஓட்ட அடிகளை அதிகரித்து அகார்க்கரால் அதிக சிரமமின்றி 138 கி.மீ வேகத்தை எட்ட முடிந்தது. அதே ஆட்டத்தில் கையை உதறி, முறுக்கி, தனக்குள் பேசி உசுப்பேற்றிக் கொண்டு நீண்ட தூரம் ஓடி வந்து வீசின ஸ்ரீசாந்தால் குறைபிரசவ குழந்தை போல் தோற்றமளிக்கும் அகார்க்கரை வேகத்தில் விஞ்ச முடியவில்லை. லில்லீ தனது நூலில் வேக வீச்சாளருக்கு உயரம் பந்தை எகிற வைக்க அவசியம் என்கிறார். ஆனால் வேகமாய் வீச வலுவான உடலைப்பு அவசியமில்லை என்கிறார். தொடர்ந்து வேகமாய் வீசுவதற்கு உடல் ஊக்கமும் உள்ளாற்றலும் போதும் என்கிறார். வேகவீச்சாளருக்கு முதலும் முடிவுமான குணம் வேகமாய் வீசுவதே. இது மரபு ரீதியானது; பயிற்றுவிக்க முடியாதது. அதாவது ஒரு வேக வீச்சாளன் உருவாக்கப் படுவதில்லை; அவன் தோன்றுகிறான்.
மனித உடலின் தசை நார்களை இருவிதமாய் பிரிக்கலாம்: (1) வேகமாய் சுருங்குபவை, (2) மெல்ல சுருங்குபவை. வேகமாய் சுருங்கும் தசை நார்கள் திடீர்வெகத்தையும், மெல்ல சுருங்குபவை நீடித்து இயங்கும் ஆற்றலையும் வழங்கும். ஒரு வேக வீச்சாளருக்கு உடலில் வேகமாய் சுருங்கும் தசைநார்கள் 75% வேண்டும். மாறாக அதிதொலைவு ஓட்ட வீரர்களுக்கு மெல்ல சுருங்கும் தசை நார்கள் அதிகம் இருப்பது தான் உதவும். ஸ்கூல் பையனைப் போன்று தோற்றமளித்தாலும் ஆகார்க்கரால் 140 கி.மீட்டருக்கு மேல் வீச முடிவதற்கு அவருடலில் வேகமாய் சுருங்கும் தசை நார்கள் உள்ளதே காரணம். தசை பயோப்சி எனும் தொழிற்நுட்பம் மூலம் இதை கண்டறிய முடியும். வேகமாக வீச முடியாதது ஒரு உயிரியல் நிஜம். இதை உணராமல் ஆர்.பி சிங், இர்ஃபான் போன்றோர் வேகமாக வீச முயன்று சொதப்புவதை பார்க்கிறோம். அவரவர் வானம் அவரவர் உயரத்தில் உள்ளது. இந்திய அணியின் 1997 மேற்கிந்திய சுற்றுப்பயணத்தின் போது டோடா கணேஷ் எனும் கர்நாடக மாநில மிதப்பந்து வீச்சாளர் அறிமுகமானார். அவர் சிறப்பாக வீசினாலும் அப்போதைய பயிற்சியாளர் மதன்லால் திருப்தி அடையவில்லை. கணேஷ் ரொம்பவும் ஒல்லியாக உள்ளார்; ஜிம்முக்கு போய் வெயிட்டடித்து சதை போட்டு வந்தால் தான் அவருக்கு எதிர்காலம் உண்டு என்று பத்திரிகைகளுக்கு தெரிவித்தார். கணேஷை சீக்கிரமே அணியிலிருந்து தூக்கினார்கள். உள்ளூர் ஆட்டங்களில் 400-க்கு மேல் விக்கெட்டுகள் சாய்த்தும் அவருக்கு பிறகு வாய்ப்பு வழங்கப்படவில்லை. ஏனென்றால் கணேஷ் கடைசி வரை கன்னம் ஒட்டியே தெரிந்தார். அடுத்த தமாஷாக, கங்குலி ஒருமுறை தான் உடற்பயிற்சி செய்து தோள் வலு கூட்டி,130-க்கு அதிகமான வேகத்தில் வீசப் போவதாக ஒரு பேட்டியில் தெரிவித்தார். கடைசி வரை அவருக்கு வேகம் வாய்க்கவில்லை. முந்தைய உயிரோசை கட்டுரை ஒன்றில் நான் கணித்தது போல் அபிஷேக் நாயர் சேம்பியன்ஸ் கோப்பையில் நிறைய அப்பளம் வீசினார். அதுவும் குறி தவறி போய் விழுந்தன. இதே போட்டியில் ஒரு எதிர்பாராத திருப்பம் இருந்தது. நாயர் காற்றோடு பறந்து போய் வருவது பொறுக்காமல் தோனியே கீப்பிங் கிளவுசை கார்த்திக்கிடம் ஒப்படைத்து விட்டு, பந்து வீசி 130 கி.மீ வேகத்தை எளிதாக எட்டினார், அதுவும் குறைவாக ஆனால் சரளமாக ஓடி வந்தே. அதை விட கவர்ந்தது தோனி பிரமாதமாக பந்தை தொடர்ச்சியாக குட் லெங்க்தில் வீசி ஸ்விங் செய்து முதல் ஓவரிலே விக்கெட் வீழ்த்தியது. இதைக் கண்டு, ஆல்ரவுண்டர் நாயரின் முகம் பேஜாரில் டீக்கடையில் பொரித்தெடுத்த பஜ்ஜி போலானது. அபிஷேக் மும்பை அணிக்காக கடந்த பல வருடங்களாய் வீசி விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ள ஒரு நிலையான உள்ளூர் பந்து வீச்சாளர். தோனிக்கு உள்ளூர் போட்டிகளில் மொத்தமாக ஒன்பது ஓவர்கள் வீசின அனுபவம் மட்டுமே உள்ளது. அதுதான் தோனி வாழ்வில் வீழ்த்தின முதல் விக்கெட்! எப்படி மிகக்குறைந்த அனுபவம் மற்றும் பயிற்சி கொண்ட தோனியால் அபிஷேக்கை விட சிறப்பாக, நெஹ்ரா, பிரவீனுக்கு ஒப்பாக வீச முடிகிறது? காரணம் ஒரு பந்து வீச்சாளன் மரபு ரீதியாக உருவாக்கப்படுகிறான் என்பதே.
ஆரம்பத்தில் ஜெயசூர்யா இடதுகை சுழல் வீச்சாளராக, வால்ஷ் கால்சுழல் வீச்சாளராக, கும்பிளே மிதவேக வீச்சாளராக, ஸ்ரீநாத் மட்டையாளராகவும் இருந்தனர். குழந்தை வயதில் டெண்டுல்கர் மிதவேகப்பந்து வீச்சாளராக விரும்பியதுமின்றி பல ஆட்டங்கலில் தனது அணிக்கு துவக்கமாக வேகப்பந்து வீசினார். ஒரு பரிட்சார்த்த முயற்சியில் தான் இவர்களது திறமையின் ஒரு புது, ஆதார பரிமாணம் தெரிய வந்தது. கபில்தேவுக்கு பிறகு யார் என்பதற்கு பதில், ஒருவேளை உழைப்பும், உடல்நிலையும், சூழமைவும் ஒருங்கிணைந்தால், தோனியாக இருக்கலாம்.
No comments :
Post a Comment