வருடஙகளுக்கு முன் பஷீரின் இளம்பருவத்து தோழி நாவலுக்கு புதிய காற்றில் நான் எழுதிய விமர்சனம்.
ஸீஹ்ரா ஒரு ஏழை பாக்கு வியாபாரியின் மகள். துறுதுறுப்பான, தைரியசாலியான சிறுமி. மஜீத் ஒரு பணக்கார மரவியாபாரியின் மகன். கனவுகள் நிரம்பிய, சாகசங்கள் புரிய விரும்பும் கொஞ்சம் மக்கான சிறுவன். மஜீத்தும் ஸுஹ்ராவும் மாம்பழங்களை பறிக்கும் போட்டியில் எதிரிகளாக ஆரம்பித்து, பின் மஜீத் தன் பழங்களை அவளுக்காக தியாகம் செய்திட நண்பர்களாகின்றனர். பிறகு கண்தெரியா நியதி ஒன்றின்படி காதலர்களாகின்றனர்.
ஸுஹ்ராவும் மஜீத்தும் பள்ளி கடைசி வகுப்பில் தேர்வடைகிறார்கள். ஸுஹ்ராவின் வாப்பாவின் மரணம் உயர்நிலைப்பள்ளியில் மேற்கொண்டு படிக்க வேண்டும் என்ற ஸுஹ்ராவின் ஆசை நிறைவேறாமல் போகிறது. அவளும், உம்மாவும், தங்கைகளும் ஒற்றை அறையிலான சிறிய வீடு மட்டும் கொண்ட ஏழை அனாதைகள் ஆகின்றனர். மஜீத்தை அவனுடைய பணக்கார அப்பா நகரத்திலுள்ள பள்ளிக்கூடத்தில் சேர்க்கிறார். அவன் புதுச்சட்டை வேட்டி, தொப்பி, குடை சகிதம் பள்ளிக்கு செல்கிறான். மஜீத் யார் கருத்தையும் மதிக்காத “சர்வாதிகாரியான” அப்பாவுடன் சண்டையிட்டு வீட்டிலிருந்து வெளியேறுகிறான். நகரம் சென்று, பல வருடங்கள் கழித்து பணமில்லாமல் ஒட்டைக் காலணாவாக ஸுஹ்ராவை மணக்கும் ஆசையுடன் சொந்த கிராமம் திரும்புகிறான். நிலைமை அங்கே தலைகீழாக உள்ளது. வாப்பாவின் சொத்து முழுவதும் கடனில் மூழ்கிப் போயிருந்தது. வாழ்ந்து கொண்டிருந்த வீடு கூட அடமானத்தில். சகோதரிகள் வளர்ந்து திருமண வயதில். எல்லாவற்றிற்கும் மேலாக ஸுஹ்ராவுக்கு நகரத்திலுள்ள கசாப்புக் கடைக்காரனுடன் இரண்டாம் தாரமாக திருமணம் முடிந்திருந்தது. கணவனின் சித்திரவதையால் பல் உடைபட்டு, கன்னங்கள் ஒட்டி மெலிந்து வெளிறிப் போய் அவள் சொந்த ஊர் திரும்புகிறாள். மஜீத்தும், ஸுஹ்ராவும் ஊரார்களின் அதிருப்தியைப் பொருட்படுத்தாமல் இணைகின்றனர்.
தங்கைகளின் திருமணத்திற்கு பணம் வேண்டும். அதற்காக பொருள் திரட்ட மஜீத் மீண்டும் நகரம் செல்கிறான். ஊனமுறுகிறான். இருக்கும் வேலை அதனால் பறிபோகிறது. தன் நிலையை வீட்டிற்கு தெரிவிக்காமல் உணவுவிடுதி ஒன்றில் பாத்திரம் கழுவும் வேலை செய்கிறான். ஸுஹ்ராவின் மீதான காதல் அவலத்தின் உச்சத்திலும் வாழ்வை இனிக்கச் செய்கிறது. “எல்லோரும் தூங்கிய பிறகு மஜீத் ஸுஹ்ராவிடம் ஏதாவது பேசுவான். அவளது இருமல் ஒலி காதில் விழும்...”. “ஸுஹ்ரா, இப்போ நீ எப்படி இருக்கே? நெஞ்சு வலி இருக்கா?” என்று கூறியவாறு பாத்திரங்களைப் பார்ப்பான். ஸுஹ்ராவை எப்போது பார்ப்பது? உம்மாவின் கடிதம் வருகிறது. ஸுஹ்ராவின் மரணத்தை அறிவித்து, அதன் வீச்சத்துடன் எங்கும் நிரம்புகிறது. கடிதத்தைப் பற்றிய விரல்களெல்லாம் துக்கத்தின் கறை, பிறகு உடம்பெல்லாம்... அதிர்ச்சியாகி உறைந்து நிற்கிறான். ஆனாலும் பெருந்துயரின் மத்தியிலும் இப்போது கூட ஒரே ஒரு ஆசை மிச்சம் உள்ளது. அது கூட ஸுஹ்ரா பற்றியதுதான்.
ஆண் பெண் உறவு பற்றிய ஆழமான புரிதல்களை உள்ளடக்கிய படைப்பு வைக்கம் முஹம்மது பஷீரின் “இளம்பருவத்துத் தோழி” ஸுஹ்ரா “பாறையைப்” போன்ற, “நீளமான கூர்மையான” நகங்களுடைய சிறுமி. துடுக்குத்தனமும், தைரியமும் நிரம்பிய குழந்தை. தன்மானம் மிகுந்தவள். மிகவும் பிடித்த மாம்பழத்தை மஜீத்திடமிருந்து கெஞ்சி வாங்க ஒப்புக் கொள்ளாத நெஞ்சுரம் கொண்டவள். மாமரத்தில் எறும்புகளுக்கு அஞ்சாமல் ஏறி பழங்கள் பறித்து அவளுக்குத் தந்தும், பல பொய்கள் சொல்லியும் மஜீத் அவள் மனதை இளகச் செய்கிறான். ஏற்றத் தாழ்வுகளை ஏற்காத, பயமற்ற ஸுஹ்ராவின் சுதந்திர மனதை தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருகிறான். அஞ்சாமல் திமிறிச் செல்லும் சிறுமி ஸுஹ்ராவின் குழந்தை மனம் மஜீத் மீதான அன்பால் வலுவிழந்து, அவனது ஆண் மனதிற்கும், நட்பிற்கும் தன்னை ஒப்புவிக்கிறது. மஜீத் மீதான அன்பு முதிர ஸுஹ்ரா என்னும் அடங்காபிடாரி சிறுமி, சிறுகொடுக்கு அமரும் குருவி போல், மலரினும் மெல்லிய பெண்ணாக வளரத் தொடங்குகிறாள். ஆனால் மஜீத்தின் குணாதிசியங்களை இவ்வுறவு குறிப்படும்படி மாற்றவில்லை. மஜீத் ஒரு முரட்டு சாகசக்கரானாகவே தொடர்கிறான். கட்டுக்கடங்காத பெண் மனதை ஆண், தன் தந்திரங்களால், விதிக்கப்பட்ட வரைமுறையினுள் செயல்படும்படி கட்டுப்படுத்துவதை பஷீர் மிக நுட்பமாக, எளிமையாக, நகைச்சுவை ததும்ப பதிவு செய்கிறார்.
ஸுஹ்ராவின் நீண்ட நகங்கள் அவளது அடிப்படையான, கட்டுப்பாடுகளை ஏற்காத, களங்கமற்ற குழந்தை மனநிலையின் குறியீடு. மஜீத் மீது கோபம் வரும் போதெல்லாம் அவள் அவனை ரத்தம் சுண்டும்படி கிள்ளுவாள். இதிலிருந்து தப்பிக்க அவன் கெஞ்சலாக இரக்கம் ஏற்படும் படி பேசி அவளது நகங்களை வெட்டி விடுகிறான். அதன் பின் மிகுந்த குதூகலமும், வெற்றிக்களிப்பும் அடைகிறான். நகங்கள் வெட்டப்பட்ட ஸுஹ்ரா அச்சுறுத்தல்களற்ற மெல்லியள் ஆகிறாள். அடுத்தமுறை, ஆத்திரம் பொங்க அவள் கிள்ளும்போது மஜீத் நக்கலாக “வலிக்கவில்லை சுகமாகவே உள்ளது” என்கிறான். ஏமாற்றமடையும் ஸுஹ்ரா மனம் வெடிக்க தேம்பி அழுகிறாள். பெண் வாழ்வின் ஒரு திருப்புமுனையை பஷீர் இங்கு படம் பிடிக்கிறார். ஆதிகாலம் முதற்கொண்டே பெண்களை இப்படி ‘வழிக்கு கொண்டு வந்துவிட்ட’ பிறகு வாழ்க்கைத் துணையாக்கி இருக்க வேண்டும்.
“இனியும் கிள்ளு, எனக்கு நல்லா சுகமாத்தான் இருக்கு”
“அப்படின்னா நான் கடிப்பேன்” என்கிறாள் ஸுஹ்ரா.
வேறுவழியில்லாமல் மஜீத் ‘குர்-ஆன்’ மீது சத்தியம் செய்தான்.
“முப்பது யூதர்கள் உள்ள முஸ்ஹஃப் மேல் சத்தியமாகச் சொல்றேன். .” மஜீத்தின் தங்க மாளிகையின் வருங்கால எஜமானியாகிய “ராஜகுமாரி கடிக்கக் கூடாது” ஆணாதிக்கத்தின் சாயல் மதத்திலும் படிந்து கிடப்பதை பஷீர் மெல்லிய கிண்டலுடன் சுட்டிக் காட்டுகிறார்.
சமூகம் தன் ஒழுக்கம் மற்றும் மத நெறிகளின் வாயிலாக ஸுஹ்ரா போன்ற சுதந்திர மனம் கொண்ட பெண் குழந்தைகளின் இயல்பான வன்முறை மனோபாவத்தை மழுங்கடிக்கிறது. பொருளாதார உற்பத்தியில் பெண்கள் நேரிடையாய் பங்கேற்கும் இன்றைய சூழலில் இந்நிலை சற்றே மாறிவிட்டிருக்கிறது. நான்கு சுவர்களுக்குள் ஆணுலகம் தரும் ‘பாதுகாப்பு’ இல்லாமல் ஆகிவிட்டதால், வீட்டை விட்டு வெளியுலகம் சென்று வேலை செய்யும் பெண்கள் தற்காப்பு கலைகள் பயில்வதன் மூலமும், ஆணுடைகள் அணிவதன் வாயிலாகவும் தங்களது வன்முறையை, வலிமையை குறிப்பாய் உணர்த்தி, தற்காப்புத் திறன் தங்களுக்கு உண்டு என்று சொல்ல விழைகின்றனர். ஆனாலும் பெண்களின் இந்த அணுகுமுறை மாற்றம் சிறிய அளவிலேயே அங்கீகரிக்கப்பட்டு, பயனுள்ளதாகிறது இன்றை சூழலில்.
இந்நாவலில் வரும் மாமரம்; உடல் வலிமையாலும், வீரத்தாலும் மட்டுமே சாத்தியப்படும் சாதனைகளின் குறியீடு. “அவன் (மஜீத்) ஊரிலுள்ள எல்லா மாமரங்களிலும் போய் ஏறுவான். மரங்களின் உச்சியிலிருக்கும் கிளைகளைப் பிடித்துக் கொண்டு இலைகள் வழியாகப் பரந்து கிடக்கும் உலகைப் பார்ப்பதில் அவனுக்கு அப்படியொரு விருப்பம். வானத்தின் விளிம்பைத் தாண்டி இருக்கும் உலகங்களைப் பார்க்க வேண்டும் என்று தணியாத வெறி அவனுக்கு இருந்தது. கற்பனையில் மூழ்கியவாறு அவன் மரத்தின் உச்சியில் நின்று கொண்டிருக்கும்போது மரத்திற்கு அடியிலிருந்து ஸுஹ்ரா அவனைப் பார்த்துக் கேட்டாள்:
“மக்கா தெரியுதா பையா?”
“மக்காவைப் பார்க்கலாம்... மதீனாவின் பள்ளி வாசலையும் பார்க்கலாம்...”
வாழ்க்கைச் சூழல் தரும் நெருக்கடிகளை விலக்கி அனுபவங்களை, அறிவை, திறமையை எவ்வழியிலேனும் துணிவுடன் விரிவுபடுத்தும் வாய்ப்புகள் சமீபகாலம் வரை ஆண்களுக்கு மட்டுமே உரித்தானதாய் இருந்துள்ளனஎன்னுடன் தற்போது பணிபுரிந்து வரும் முஜீப் “எங்க குடும்பத்திலேயே பொம்பளைங்க வேலைக்கு போறது இழிவா நெனைக்கிறோம். ஆம்பிளைங்க சம்பாதிச்சிட்டு வாறத வச்சு அவுங்க குடும்பம் நடத்தினாப் போதும்” என்று இமைகள் படபடக்க சொல்கிறார். சொல்லும்போது அவர் குரல் நடுங்குகிறது. பெண்ணியம் வலுப்பெற்று வரும் இக்காலகட்டத்தில் பிடுங்க முடியாமல் மண்ணுள் புதைந்து கிடக்கும் ஆணாதிக்க வேர்களின் சான்று அவரது கருத்து. ஒருநாள் மக்கப் போவது உறுதியாகத் தெரிந்திருந்தும் வலிமையாய் ஆழப் பதிய முயலும் இத்தகைய வெட்டப்பட்ட வேர்கள் தமிழகம் முழுவதும் உள்ளன. பொருளாதார வலிமை வாழ்வியல் சுதந்திரத்தை பெண்களுக்கு ஓரளவுக்கு வழங்கியுள்ளது. ஆனாலும் ஓரளவு விடுதலை பெற்ற பெண்கள் மேற்தட்டு வர்க்கத்தை சேர்ந்தவர்கள் என்பதை இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும். முஜீப் கூட பிரியங்கா காந்தி பிரதமராவதை “இழிவாக” நினைக்காமல் ஆதரிக்கிறார் என்பது அதிகாரமும், பொருளாதார வலிமையும் பெண்கள் தங்களது முழுவிடுதலைக்காக கையிலெடுக்க வேண்டிய ஆயுதங்கள் என்பதை மிகத் தெளிவாக உணர்த்துகிறது. நேர்மாறாக, நம் முந்தைய நூற்றாண்டின் பெண்கள் மாமரத்தின் கீழ்நின்று “மக்கா தெரிகிறதா” என்று ஏக்கத்துடன் கேட்கும் ஸுஹ்ராவைப போன்று வீட்டு ஜன்னல் வழியாக மட்டுமே உலகத்தை ஸ்பர்சித்து வாழ்ந்து வந்துள்ளனர் என்பது நெஞ்சை உறுத்தும் உண்மை. ஸுஹ்ரா அவர்களுள் ஒருவள்.
உடல்ரீதியான வீரசாகசங்கள் செய்ய முடியாவிட்டாலும் கணக்குப் பாடத்தில் மிகவும் திறன் கொண்டவளாக ஸுஹ்ரா விளங்குகிறாள். நேர்மாறாக, மஜீத் கணக்கில் மக்கு. ஸுஹ்ராவின் சிலேட்டை பார்த்து எழுதி கணக்கு ஆசிரியரிடமிருந்து அடிவாங்காமல் தப்பிக்கிறான். இதனால் உருவாகும் வெட்கக்கேட்டை சமன் செய்ய, கேலி செய்யும் ஸுஹ்ராவின் வாயை அடைக்க “ராஜகுமாரி” என்று அழைத்து அவளது வெட்டப்பட்ட நகங்களை நினைவு படுத்துகிறான். இத்தகைய ஆண் பெண் முரண்நிலைப் போராட்டங்கள் இந்நாவலின் மையச் சரடுகளுள் ஒன்று.
வறுமை நமது வாழ்வியல் கோணத்தை திருப்பிப் போடும் திறனுடையது. வாழ்வில் நிலைகொள்வதே தொடர் போராட்டமாகும் போது ஆளுமை முரண்பாடுகள், அந்தஸ்து, ஆணவம், படிநிலைப் பாகுபாடுகள் தேய்ந்து முக்கியத்துவம் இழக்கின்றன. ஒருவாய்ச்சோறும், தலைக்கு மேல்கூரையுமே கிடைக்கும் என்ற நிலையில் ஸுஹ்ராவுக்கும், மஜீத்துக்கும் வாழ்வின் எளிய தருணங்களே இனிக்கத் தொடங்குகின்றன.
உடல் தளர்ந்து, பொருளற்று போனபின், மஜீத்துக்கு ஆசைகள் கொஞ்சம்தான். அடங்கி தகிக்கும் கனல் போன்ற ஆசைகள்: தங்கைகளின் மணத்திற்கு பொன் சேர்க்க வேண்டாம்; வீட்டின் மேலுள்ள கடன் தீர்க்க வேண்டாம்; ஸுஹ்ராவை ஒருமுறை பார்த்தால் மட்டும் போதும். ஸுஹ்ராவுக்கும் அப்படித்தான். வாழ்க்கை இருவரது உச்சந்தலையில் மிதித்து அழுத்த அழுத்த அவர்களின் உறவு மேலும் மேலும் முதிர்கிறது. இன்னபல ஆசைகள் ஓசையற்று உதிர ஆழமாய் பரஸ்பர நேசம் இருவருள்ளும் முதிர்ந்து கனிகிறது. ஸுஹ்ரா மரணமடைந்த பின், முன்பு தான் ஊரைவிட்டு நகரத்திற்கு இரண்டாம் முறையாய் புறப்படும் போது அவள் வாசலில் நின்றவாறு சொல்லாமல் மறைந்த ரகசியம் என்னவென்று மஜீத்துக்கு தெரிந்தால் மட்டும் போதும் இப்போது. மஜீத், ஸுஹ்ராவின் உறவு பரஸ்பர போட்டிகளின், முரண் ஆளுமை மோதல்களின் உலகிலிருந்து, வானுயர் கனவுகளின் தளத்திலிருந்து கருணையின், அக்கறையின் முடிவற்ற நிழலை வந்தடைகிறார்கள். கடும்பனி ஊடுருவித் துளைக்கும் மையிருள் இரவில் கூரையற்றுப் போன இருவர் வெளிச்சப் போர்வையொன்றை மூடிப் பகிர்வது போல் காதலின் வெம்மையை எளிமையாகவும், அதே நேரம், உக்கிரமாகவும் பரிமாறிக் கொள்கின்றனர். மஜீத் விரும்பிய தங்கமாளிகை இப்போது ஒருவிதத்தில் இந்த போர்வைதான்; ஸுஹ்ரா தன் நகங்களைப் பற்றி இனி கவலைப்பட மாட்டாள்.
நூல் : இளம் பருவத்துத் தோழி
(நாவல் - மலையாளம்)
ஆசிரியர் : வைக்கம் முகம்மது பஷீர்
தமிழில் - சுரா
வெளியீடு : ராம் பிரசாந்த் பப்ளிகேசன்
106/4, ஜானிஜான் கான்ரோடு,
ராயப்பேட்டை, சென்னை - 600014.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment