ஒவ்வொரு முறை அணி அறிவிக்கும் போதும் தேர்வுக் குழு நம்மை ஆச்சரியப்படுத்த, சில நேரம் சிரிக்க வைக்க, தவறுவதில்லை. இளைஞர்களை ஆதரிக்கிறோம் என இதுவரை சொல்லி வந்த தேர்வுக்குழு இர்பான் பதானை ஊருக்கு அனுப்பி 35 வயதில் டிராவிட்டுக்கு ஒருநாள் கிரிக்கெட் மீண்டும் ஆட டிக்கேட் கொடுத்துள்ளது. இந்நிலையில் தேர்வாளர்களிடம் ஒரு நிலையான தேர்வுத் திட்டம் இல்லை என்ற குற்றச்சாட்டு எழுகிறது. ஆனால் அவர்களிடம் எந்த திட்டமும் இல்லை என்பதே உண்மை. சென்னை பிரம்மாரிக்களின் சமையல் போல் சமய சந்தர்ப்பத்திற்கு ஏற்றபடி அவசர கால முடிவுகள் மட்டும் எடுக்கிறார்கள் தேர்வாளர்கள். இந்த விதமான தகிடுதித்த நடவடிக்கைகள் ஸ்ரீகாந்துக்கு சரளமாக வரக்கூடியது என்றாலும், அவரை மட்டுமே நாம் குற்றம் சாட்ட முடியாது. நெருக்கடி நிலையில் ஒரு புது அணித்தலைவர் தேர்வாகும் போதான கட்டாயத்தின் போது மட்டுமே இளைஞர்களை கண்டுபிடித்து ஊக்கமளிப்பது, நிலைமை சீரடைந்ததும், ஸ்திரமான வீரர்களை குளிர்பதனத்தில் பாதுகாப்பதும் இந்தியாவின் நெடுங்கால தேர்வுக் கலாச்சாரம். இக்கலாச்சாரத்தின் கண்ணி மட்டுமே தற்போதைய தேர்வுக்குழு.
இளைஞர்களை கலவரப்படுத்தும் ராணுவ வாரியம்
வத்தலான இளைய ஆட்டக்காரர்கள் கொண்ட இலங்கை, இங்கிலாந்து போன்ற அணிகள் தொடர்ந்து புதிய வீரர்களை கண்டுபிடித்து, பரீட்சித்து, போஷிப்பதை தேர்வுக் கொள்கையாக கொண்டுள்ளனர். உதாரணங்கள்: மலிங்கா, மெண்டிஸ், போப்பார, ஓவைஸ் ஷா. புது வீரர்கள் அணிக்குள் ஆரோக்கியமான போட்டிச்சூழலை ஏற்படுத்துவதுடன், எதிரணியினரை அதிர்ச்சியடைய வைத்து அவரகளின் ஆட்டத்திட்டத்தை குலைப்பார்கள். இங்கிலாந்து ஒரு ஆட்டக்காரர் மேல் அபாரமான பொறுமையும் நம்பிக்கையும் காட்டி பலவருடங்கள் வளர்த்தெடுத்து அதனால் பின்னர் அணித்திறனை பல மடங்கு உயர்த்தியது: ஓய்வு பெறப்போகும்\பெற்ற ஆண்டிரூ ஃப்ளிண்டாஃப். 1998-இல் அறிமுகமாக இவர் முதல் 4 வருடங்கள் ஒளிவிடாத நட்சத்திரமாகவே அணியில் இடம்பெற்றார். 2002 வரை ஃப்லிண்டாஃபின் மட்டை சராசரி 19. பந்து சராசரி 47. அதற்குப் பின் அவர் ராட்சத வளர்ச்சி கண்டார். இந்தியாவில் நாம் அப்படி யாரையாவது ஊட்டி வளர்த்ததுண்டா? இருக்கிறவர்களை அச்சுறுத்தி துரத்தி கடித்திருக்கிறோம். இந்திய கிரிக்கெட் வாரியம் ஒரு ராணுவ பயிற்சி முகாம். சமீபத்தில் தனது தம்பிக்காக யூசுப்பதான் தேர்வாளர்களை கடிய, ஒரு கிரிக்கெட் ஆணைய பதவியாளர் மாமா திரும்ப கடித்தார்: " பாருங்க, ரெண்டே ஆட்டங்களில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொதப்பியதற்காக வாசிம் ஜாஃபரை அணியிலிருந்து விலக்கினோம். அவர் வாயே திறக்கலையே; யூசுப் ஏன் ஓவராக புகார் செய்கிறார்; அவர் இடமே நிரந்தரமில்லையே". மிரட்டலில் கலங்கிப் போன யூசுப் உடனே இந்திய கிரிக்கெட் வாரியமே சிறந்தது, முதன்மையானது என்று கண்ணில் ஒற்றி மன்னிப்பு கேட்டார். நமது அணியில் 30க்கு மேல் டெஸ்டு போட்டி சராசரி கொண்ட யுவ்ராஜின் ஆசனவாயில் இன்னமும் அரை இஞ்சு ஆழத்தில் தேர்வாளரின் ஆப்பு தொங்குகிறது. டெஸ்டு போட்டிகளின் போது ஒரு வாரம் கழிப்பறை பக்கம் போகாத கடுகடுப்பு யுவியின் முகத்தில் காணப்படுவதன் காரணம் இதுவே, இந்திய கிரிக்கெட் வாரியம் ஒரு சிறுவர் சீர்த்திருத்தப் பள்ளி மட்டுமே. அணித்தலைவர் மற்றும் பிராந்தியத் தேர்வாளர்களின் விருப்பு மற்றும் ஜீரணக் கோளாறு பொறுத்தே பெரும்பாலானவர்கள் கழற்றி விடப்பட்டு தக்கவைக்கப் படுவது.
நமது தேர்வாளர்கள் 20 பேர்ப் பட்டியலில் இருந்து சீட்டுக்குலுக்கி, இங்கி பிங்கி சொல்லி ஏறத்தாழ ஒரே அணியை திரும்பத் திரும்ப தருவதற்கு எதற்கு ஊதியம் என்ற கேள்வி உள்ளது. உள்ளூரில் நடக்கும் ஆட்டங்களை சிற்றுண்டி கிடைக்காத நாய்களும், வெளிக்குப் போகும் காகங்களும் மட்டுமே பார்க்கின்றன. ஆட்டம் பார்க்காமல் காகித புள்ளி விபரங்கள், முன்முடிவுகளை வைத்து பேருக்கு அலசி தெரிந்தவர்களை வைத்து ஒப்பேற்றுவதே இப்போது சீக்காவின் குழுவினர் கண்ணியமாக செய்வது. உதாரணமாக, தற்போது இலங்கை மற்றும் சேம்பியன்ஸ் டிராஃபி தொடர்களுக்கான அணிகளில் இடம்பெற்றுள்ள ஒரே ஆல்ரவுண்டரான அபிஷேக் நாயரின் பந்து வீச்சை குரு நானக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற புச்சிபாபு தொடர் ஆட்டமொன்றில் இன்று பார்த்தேன். மொட்டை மாடி பாட்டி போட்ட அப்பள வடாம் போல் அவரை நொறுக்கி எடுக்கிறார்கள். வேகமாக வீசும் ஆர்வத்தில் குறை நீளத்தில் வீசுகிறார். இவர் எப்படி 150 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்தியுள்ள இர்பானுக்கு பதிலீடாக முடியும். இது சாருஆன்லைனில் ஆசோகமித்திரனை எழுதவைப்பது போல் ஆகும். சமீப ஆட்ட நிலை தான் தேர்வு அளவுகோல் என்றால், சீக்கா சார், நீங்கள் நேரில் வந்து அபிஷேக் நாயர் அப்பளம் போடுவதை பார்க்க வேண்டும்.
இந்தியத் திறமையை கண்டுபிடிக்க வெள்ளைக்காரர்
கடந்த பத்து வருடங்களில் எத்தனை வேகப்பந்து வீச்சாளர்கள் தேர்வாளர்கள் கண்டடைந்துள்ளனர்: 2. சகீர் மற்றும் இஷாந்த. பாக்கிஸ்தான் வருடத்துக்கு இரண்டு பேரையாவது களத்தில் இறக்குகிறது. அனைவரும் உலகத்தரம். வேகப்பந்து வறுமைக்கு காரணம் ஆடுதளம் என்பது புருடா; நிஜக்காரணம் என்னவெனில் புதிய திறமையை வெளிச்சத்துக்கு கொண்டு வரும் நோக்கமோ செயல்முறைமையோ நமது தேர்வாளர்களுக்கு இல்லை. வாசிம் அக்ரமை இம்ரான் கான் தெருவில் கண்டுபிடித்து அறிமுகப்படுத்தியது போல், கம்ரான் கான் எனும் இளம் புயலை ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் பயிற்சி இயக்குனர் பெரி ஒரு உள்ளூர் 20-20 ஆட்டத்தில் பார்த்து பிரமித்து அணிக்குள் கொண்டு வந்தார். கம்ரான் கான் தனது உள்ளூர் ஆட்டவாழ்வில் பெரும்பாலும் டென்னிஸ் பந்து வீசியே பழகியிருந்தார். சிகிச்சைக்கு பணமின்றி தாயை பறிகொடுத்த, இந்தியாவில் ஒடுக்கப்பட்டு வரும் மதத்தை சேர்ந்தவர் அவர். உடுத்தவும் மாற்றவும் ஒரே ஆடையுடன் தேர்வு ஆட்டங்களில் பங்கேற்க செல்லும் போது பிளாட்பார்த்தில் தூங்கும் அளவிற்கே ஒரு சின்ன துரு பிடித்த இரும்பு ஸ்பூனுடன் பிறந்தவர். யாரேனும் பற்றி தூக்கி விட பாவம் அவர் தோளில் அந்த நூல் இல்லை. உத்திரபிரதேச மாநில அணி பக்கம் போனேலே பிச்சைக்காரன் என கம்ரானை துரத்தி விடுவார்கள். ஆன ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஐ.பி.எல்லில் ஒரு ஆட்டத்தில் 12 க்கு 3 விக்கெட்டுகள் எடுத்து கடைசி ஓவரில் கங்குலியை முக்கியமான தருணத்தில் வெளியேற்றி கம்ரான் ஆட்ட நாயகனான போது பல தேர்வாளர்கள், வாரிய அதிகாரிகள் முகத்தில் கரியை அவர் பூசியிருக்க வேண்டும். கம்ரானிடம் லகுவாக வேகம் உள்ளது. அத்தோடு கட்டுப்பாடு, ஆவேசம், முனைப்பு, வேட்கை, உழைப்பு என பலவும். ஆனால் நமது முன்னாள் வீரர்கள், வாரியம், தேர்வாளர்கள் இவரைப் பற்றி இன்றளவும் வாய் திறக்கவில்லை. வீசும் முறையில் ஐயம் என்று தடை செய்து சிலுவையில் அறைந்து விட்டார்கள். ரஞ்சியில் வருடங்களாய் செக்கிழுத்த பல பந்தாளர்களுக்கு கம்ரானின் தரம் இல்லை. இது நமது கிரிக்கெட் அமைப்பின் ஆதாரத்தை கேள்விக்கு உள்ளாக்குகிறது. தற்போது 140க்கு மேல் பந்து வீச உள்ளூர் வட்டாரத்தில் யாரும் இல்லை. நமது உள்ளூர் வீச்சாளர்களின் வேக சராசரி 125 கி.மீ எனலாம. கம்ரானை கண்டுபிடிக்க ஒரு வெளிநாட்டவர் வரவேண்டி இருந்தது.
ஓய்வா சுயநலமா?
நமது தேர்வாளர்கள் மத்தியஸ்தர்கள் மட்டுமே. திராவிட் விசயத்தில் இவர்களின் சந்தர்ப்பவாதத் தேர்வு இந்திய கிரிக்கெட்டை காயப்படுத்துமே தவிர காப்பாற்றாது.
பத்து வருடங்களுக்கு மேலாக இந்திய கிரிக்கெட்டை சேவித்துள்ள் மூத்த வீரருக்கு தரப்படும் மரியாதைபூர்வ வெளியேற்றம் தான் திராவிடுக்கான தேர்வுக் காரணம். எகிறும் பந்தை சமாளிக்க திராவிட் உள்ளே வருகிறார் என்பது அபத்தமான காரணம்: திராவிட் புல்ஷாட் அடித்தே பத்து வருடத்துக்கு மேல் இருக்கும். ஆனால் திராவிடுக்கான ஓய்வு வாய்ப்பினால் மனீஷ் பாண்டே, சன்னி சோஹல் போன்ற தரமான ஆட்டக்காரர்களுக்கு ங்ங்ங்... என்று ஒரு மணிச்சத்தமும் சங்கூதலும் தொடர்ந்து கேட்கலாம். இது நிச்சயம் ஆரோக்கியமானதல்ல. இந்தியாவில் பிறந்த இங்கிலாந்தின் முன்னாள் அணித்தலைவர் நசீர் ஹுசேன் தனது Playing with Fire நூலில் தான் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் முடிவை எடுக்க நேர்ந்த சுவாரஸ்யமான சம்பவம் ஒன்றை குறிப்பிடுகிறார். இங்கிலாந்தின் மிகச்சிறந்த அணித்தலைவர்களில் ஒருவராக கருதப்பட்ட ஹுசேன் 2004-இல் தென்னாப்பிரிக்காவுடன் ஒரு தொடரை தோற்ற பின் அணியில் இருந்து ஓய்வு பெறுவது பற்றின யோசனையில் தடுமாறினார். அவரது மட்டையாட்டம் கீழமட்டத்தில் துவள, கடுமையான நெருக்கடி மற்றும் அழுத்தத்தில் இருந்தார். ஆசுவாசத்திற்காக நியூசிலாந்துக்கு எதிரான தொடரின் கடைசிப் போட்டியில் ஓய்வு பெறுவதாய் அரைமனதாய் முடிவு செய்தார். ஆனால் மிகச்சிறப்பாக ஆடி (கங்குலி போல்) அந்த கடைசி ஆட்டத்தில் சதம் அடித்தார். அவர் நினைத்தால் ஆட்ட்த்தொழிலை தொடர்ந்திருக்க முடியும். ஆனால் அன்று இங்கிலாந்துக்காக மற்றொருவர், இளைஞர், தனது முதல் போட்டியில் சதம் அடித்து கவனத்தை கவர்ந்திருந்தார். போட்டி முடிந்ததும் எதிர்காலம் பற்றின பெரும் உற்சாகத்துடன், உணர்ச்சி வேகத்தில் வார்த்தைகள் தடுமாற தனது பெற்றோருடன் அந்த இளைஞர் தொலைபேசியில் உரையாடியதை நசீர் கவனித்தார். அத்தருணம் அவர் முடிவெடுத்தார். இந்த இளைஞரின் பாதையில் நாம் குறுக்கே நிற்கக் கூடாது என்று; உடனே ஓய்வை அறிவித்தார். நசீர் ஹுசேனின் இடத்தை அன்று பிடித்த அந்த இளைஞர் தாம் இன்று இங்கிலாந்து அணியின் தலைவர்: ஆண்டுரூ ஸ்டுராஸ். கங்குலி கடுமையான மீடியா நச்சரிப்பு தாங்காமலே விலகினார். அவர் நாற்காலி இன்னமும் நுனிப்பகுதி மட்டுமே ஆக்கிரமிக்கப் பட்டுள்ளது. சின்ன உலுக்கலில் யுவ்ராஜ் விழுந்து விடுவார். நசீர் ஹுசேனின் அதே நிலைமையில் தற்சமயம் திராவிட் உள்ளார். அவரது மனத்தின் வலிமை நமக்குத் தெரியும், ஆனால் விரிவு? தனது கோட்டையின் கதவுகள் புதிய கரங்களால் தொடர்ந்து தட்டப்படும் போது அவரது எதிர்வினை என்னவாக இருக்கும்? வரும் தொடர்களில் திராவிட் சதங்கள் அடிக்கும் பட்சத்தில் தேர்வுக் கோட்டைக் கதவின் பூட்டுகள் இறுகும்; இளைஞர்களுக்காக அவரை விலக்குவதும் சிரமமாகும். இந்திய கிரிக்கெட்டின் முன் உள்ள முக்கிய கேள்விக்குறி திராவிடின் ஓய்வு முடிவு.
கபிலுக்கு பின் நெடுங்காலக் காத்திருப்பில் நமக்கு எதேச்சையாகவே, கிரெக் சேப்பலின் பயிற்சி மற்றும் ஊக்குவிப்பால், கிடைத்த ஒரே ஆல்ரவுண்டர் இர்ஃபான் பதான். ஆல்ரவுண்டர்கள் அபூர்வமானவர்கள். ஆட்டத்திறனின் எதாவது ஒரு பரிமாணத்தைக் கொண்டு மட்டுமே கூட அணியில் நிலைக்கக் கூடியவர்கள் பெரும்பாலானோர். ஹேட்லி, கிரெயின்ஸ், கபில் போன்றோர் மட்டுமே தொடர்ந்து மட்டை பந்தாட்டங்கள் இரண்டிலும் சோபித்தனர். ஆல்ரவுண்டர்களில் பலர் ஒரு கட்டத்தில் உடற் தகுதி அல்லது ஆட்ட நிலை காரணமாக ஒரு பரிமாணத்தில் மட்டும் கவனம் செலுத்த ஆரம்பித்து விடுகிறார்கள். இங்கிலாந்தின் ஃப்லிண்டாஃப், நியூசிலாந்தின் ஜேக்கப் ஓரம், ஐ.பி.எல் முன்வரை தென்னாப்பிரிக்காவின் காலிஸ், பாக்கிஸ்தானின் ஷோயப் மாலிக், இலங்கையின் சமரவீரா என இதற்கு ஏராள உதாரணங்கள். பொதுவாக ஆல்ரவுண்டர்கள் விசயத்தில் அனைத்து அணிகளில் பொறுமையாகவே உள்ளன, இந்தியாவைத் தவிர. தற்போது பந்து வீச்சில் மட்டும் தோய்வடைந்துள்ள இர்ஃபானுக்கு ஒரு ஐந்தாவது பந்து வீச்சாளரின் இடத்தில் வீச்சு பழைய நிலையை எட்டும் வரை குறைந்த ஓவர்கள் மட்டும் வீசி, ஏழாவதாக இறங்கி அதிரடி மட்டை ஆட்டம் ஆடும் பொறுப்பு தரப்படலாம். ஏழு மட்டையாளர்களை இறக்கும் அபத்தத்தையும் இதனால் தவிர்க்கலாம்; சமநிலைப் பெறு அணியும் வலுப்படும். அபிஷேக் நாயரை போலன்றி இர்ஃபான் உச்ச ஆட்ட நிலைக்கு திரும்பும் பட்சத்தில் அவரை டெஸ்டு போட்டிகளிலும் பயன்படுத்தலாம்.
டிராவிடின் சுமூக ஓய்வுக்காக சாம்பிராணிக் குச்சி பற்ற வைக்க முனையும் முன் தேர்வாளர்கள் ஒரு நம்பிக்கையின் சுடரை ஏற்ற முயல வேண்டும். நமக்குத் தேவை ஒளி புகை அல்ல.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment