Friday, 30 December 2011

நாளை ”கால்கள்” நாவல் வெளியீடு

Read More

ஜோசியம் பித்தலாட்டமா?



நோபல் பரிசு பெற்ற இந்திய விஞ்ஞானி வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் ஜோசியம் வெறும் பித்தலாட்டம் என்று சமீபமாய் சொன்னது இந்தியர்கள் பலரை எரிச்சலூட்டியுள்ளது. இதன் பொருள் இந்தியர்கள் அறிவியல் பார்வை இல்லாதவர்கள் என்று அல்ல; நமக்கு அறிவியல் புரியும். ஆனால் நாம் வாழ்வை தர்க்கரீதியாக அளந்து கூறு போட விரும்பாதவர்கள். நடைமுறையிலும் தத்துவார்த்தமாகவும் வாழ்வு சிடுக்கானதாக உள்ளது இங்கே. நாம் உள்ளுணர்வு சார்ந்து இயங்க தலைப்படுகிறோம். ஜோசியம் பொய்யாக இருந்தாலும் நமக்கு அது தேவையாக உள்ளது. மேலும் அறிவியல் பூர்வமாக சிந்திக்கும் சமூகமே முன்னேறும் என்று வெங்கி சொல்வது முழுக்க உண்மையல்ல. அறிவியலும் ஊகங்களையும் கற்பனையையும் தர்க்கரீதீயாக ஸ்தாபிக்க முயல்கிறது என்று நிரூபித்துள்ளார்கள். கூச்சலும் குழப்பமுமாக உலகமே நமக்கு சௌகரியம். ஜோசியமும், மித்துகளும் இந்த சமூகத்தின் மாய-எதார்த்த கதைகள்.
Read More

Wednesday, 28 December 2011

பாலியலும் தமிழ்ப்புனைவும்: பிராய்டில் இருந்து கலகம் வரை




பாலியலை காத்திரமாக நேரடியாக பேச பொதுவெளியில் தடை உள்ளது. அதனால் வெகுஜன இதழ் கதைகளில் பாலியல் வேறுவிதமாக எழுதப்பட்டது. மிகையாக குற்றவுணர்வு தோன்ற சற்று வக்கிரமான சித்திரங்களுடன். ஆனால் சிற்றிதழ்களில் பாலியல் எழுத அபாரமான சுதந்திரம் இருந்தது. பாலியல் கதைகள் எழுதினவர்கள் உடனடியாக கவனிக்கப்பட்டார்கள்
அவை பொதுவாக மூன்று வகை. கிளர்ச்சி பாலியல் எழுத்து. உளவியல் பாலியல். அரசியல் பாலியல். இந்த மூன்று வகையுமே முக்கியம் தான்.
கிளர்ச்சி பாலியல் எழுத்தின் சமகால உதாரணம் வா.மு.கோமு, ஜே.பி சாணக்யா ஆகியோர். இருவருக்கும் சில வித்தியாசங்கள் உண்டு. கோமுவின் சித்தரிப்புகள் பெண் காமம் பற்றின ஆணின் பகற்கனவுகள். ஏற்கனவே பாலகுமாரன், புஷ்பா தங்கதுரை போன்றவர்கள் ஒரு ஒழுக்கமனதுக்குள் இருந்து எழுதியவற்றை அநேகமாய் அதே மொழியில் ஆனால் ஒழுக்க நெருக்கடி இன்றி அரை சிட்டிகை எதார்த்தமும் சேர்த்து எழுதுவது கோமுவின் பாணி. அவரை தீவிர இலக்கிய-வணிக இலக்கியத்துக்கு இடையேயான பாலியல் பாலம் எனலாம். ஜே.பி சாணக்யா ஒருவகையில் கோணங்கி, எஸ்.ராவின் மரபின் தொடர்ச்சி. குறியீட்டு/உருவக மொழியில் பாலியல் உறவுகள் பற்றி பேசுபவர். ஆனால் நமது பாலியல் கதை மரபை உடைத்து காமப் பிறழ்வை சுவாரஸ்யமான நடையில் எழுதியவர் சாரு நிவேதிதா. ஒருபால் உறவு, சுயமைதுனம், taboo காமம் ஆகியவை அவரது களம். பரவசமான நடையில் எழுதப்பட்ட உன்னத சங்கீதம்தமிழின் கிளர்ச்சியான பாலியல் எழுத்தின் சிறந்த உதாரணம். சாருவை நாம் தி.ஜானகிராமனுடன் ஒப்பிடலாம்.
தி.ஜா இரண்டாவது வகை பாலியல் எழுத்தாளர். Taboo தான் அவரது முக்கிய களம். ஆனாலும் நிகழாமல் அடக்கி வைக்கப்பட்ட காமம். இதனால் மிக கற்பனை சாத்தியம் கொண்டதாக தி.ஜாவின் புனைவுகள் விளங்குகின்றன. வயதில் மூத்த யமுனாவை பாபு மோகிக்கும் கதை மோகமுள். மகன் அம்மாவை காமுறும் கதை அம்மா வந்தாள். தி.ஜா சாரு, கோமு, சாணக்யா அளவுக்கு சர்ர்சைகளை உருவாக்கவில்லை. அதற்கு இரு காரணங்கள். ஒன்று அவர் ஒரு இலக்கிய காமத்தை எழுதினார். நிஜ வாழ்வில் இருந்து சற்றே விலகிய நாடகீயமான காமம் ஆ.மாதவனும் இந்த ராஜபாட்டையில் தான் சென்றார். உதாரணமாய் “முலைகளை வெறித்தான் என்பதை “கழுத்துக்கு கீழ் மேடிட்ட பகுதியில் பார்வையை ஓட்டினான் என எழுதுவது. இரண்டாவது சொற்றொடர் தான் அதிக கிளர்ச்சி தருவது என்று சொல்லத் தேவையில்லை. ஆனால் அது நம்மை அதிர்ச்சியுற வைக்காது. தி.ஜாவும் ஆ.மாதவனும் பிராய்டின் உளப்பகுப்பிவியலால் கவரப்பட்டவர்கள். வெளிப்படாமல் மனதுக்குள் தேங்கிய காமமே மனிதனின் அனைத்து செயல்பாடுகளையும் செலுத்துகிறது என்றார் பிராயிட். ஆக “அம்மா வந்தாளில் அம்மா தன் பாலியல் குற்றவுணர்வில் இருந்து விடுபட மகனை வேதபாடசாலையில் பயிற்றுவிக்க அனுப்புகிறாள். மகனுக்கு அம்மா மீது உள்ள மோகத்தில் இருந்து விடுபட வேண்டும்  அதற்கு அவன் வேதம் படிக்காமல் அம்மாவுக்கு நிகரான மற்றொரு பெண்ணை அணுகி காதலிக்கிறான். ஆனால் ஆ.மாதவனை விட தி.ஜாவில் வாசிப்பு சுதந்திரம் அதிகம். சமீபமாக வெளிவந்த பிரான்சிஸ் கிருபாவின் “கன்னி மற்றொரு குறிப்புணர்த்தும் taboo கதை. சாரு “மோகமுள்ளுக்கான ஒரு எதிர்வினைக்கதை எழுதி உள்ளார். “முள் என்றொரு சிறுகதை. அதில் கதைசொல்லி தன் அத்தை உடனான காமத்தை வெளிப்படையான லகுவான மொழியில் பேசுகிறான். தி.ஜாவில் இருந்து சாரு மற்றும் கோமுவரை உள்ள தூரம் வாசலுக்கும் படுக்கைக்கும் இடையே இருப்பது தான். இன்றுள்ள “மலர்மஞ்சத்தை அடைய நமக்கு ஐம்பது ஆண்டுகள் பிடித்துள்ளன. அதே வேளையில் நிகழ்ந்து முடியும் காமத்திற்கு இலக்கியமதிப்பு குறைவு என்ற நகைமுரணையும் சொல்லியாக வேண்டும்.
இன்றைய பாலியலுக்கும் நேற்றைய பாலியலுக்கும் மற்றொரு முக்கிய வித்தியாசம் உள்ளது. அது அரசியல்.
காமமும் வன்முறையும் நமக்குள் உறைந்துள்ள பண்புகள். அவை நம் தீமையை வெளிப்படுத்துகின்றன என்று இருபதாம் நூற்றாண்டின் நவீனத்துவ எழுத்தாளர்கள் நம்பினார்கள். உதாரணமாக புதுமைப்பித்தனின் “காஞ்சனையில் காமம் ஒரு மோகினிப் பேயின் வடிவில் வெளிப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக ஜெயமோகன் தம்புரானும் தம்புராட்டிகளும் தோன்றும் காமப் பேய்க் கதைகள் (நிழல்வெளிக் கதைகள்) எழுதினார். தீமை கொடியது என்பதால் இந்த வகை கதைகளில் காமத்துடனான மனப்போராட்டம் பிரதானமாகிறது. ஜெயமோகன் காமத்தை தூயமிருக நிலையாக (ஊமைச்செந்நாய்), உளவியல் சிடுக்கின் விடுபலாக (பின்தொடரும் நிழலின் குரல்) சித்தரிப்பவர். அவரது பாத்திரங்கள் காமத்தின் உச்சத்தை எட்டியதும் ஏமாற்றமும் வெறுப்பும் அடைகின்றனர் (நாகம், காடு)
ஜி.நாகராஜன் விபச்சாரிகளை முன்வைத்து பல கதைகள் எழுதினார். ஆனால் அவரது விபச்சாரிகள் அபலைகள். ஒரு ஆண் தோன்றி தன்னை காப்பாற்றக் கூடும் என்று ஏங்கும் காமக் கைதிகள். இவர்கள் ஆணின் பார்வையில் படைக்கப்பட்ட கற்பனாவாத பாத்திரங்கள் என்றொரு குற்றச்சாட்டு உண்டு. ஜி.நாகராஜன் பாலியலை கையாண்ட விதம் பிரத்யேகமானது.
அவரது பாத்திரங்களுக்கு கட்டற்ற காமம் லட்சியம். ஏன்? ஜி.நாவுக்கு காமம் என்பது காமம் அல்ல. மரபில் இருந்து விடுதலை. இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் எந்திரமயமாக்கம், உலகப்போர், அறிவியல் வளர்ச்சி ஆகிய காரணங்களால் மரபான விழுமியங்கள் மீது மனிதன் நம்பிக்கை இழந்தான். பரஸ்பர அன்பும் காதலும் அப்படியான ஒரு விழுமியம். ஜி.நாவின் நாயகன் காதலை மறுத்து காமத்தை மட்டும் ஏற்கிறான். அதன் எதிர்விளைவுகளை சந்திக்கிறான். இந்த மரபு vs காமம் மோதலை லா.ச.ரா தனது “அன்புள்ள ஸ்நேகிதனுக்கு கதையில் சித்தரித்திருக்கிறார்.
ஆனால் கலாச்சார அரசியல், அதிகார அரசியல், பெண்ணியம் போன்ற சமகால கருத்தாக்கங்கள் காமத்தை ஒரு அரசியல்/தத்துவப் பிரச்சனையாக்கின. சுருக்கமாக காமம் ஒரு கலகம் ஆகியது. சமூகம் காமத்தைக் கொண்டு மனிதனின் மீது அதிகாரம் செலுத்துகிறது. காமத்தை நேரடியாக எழுத்தில் சந்திப்பது இந்த அதிகாரத்துக்கு எதிரான ஒரு கலகம். ஆக இன்றைய எழுத்தில் ஒருவன் சுயமைதுனம் அல்லது ஆசனப்புணர்ச்சியில் ஈடுபட்டால் அது பீறிடும் காமத்தால் மட்டுமல்ல, சமூக அடக்குமுறையை எதிர்க்க; பொதுப்போக்கோடு உடன்படாத தனது அடையாளத்தை வலியுறுத்த. இவர்களுக்கான முன்னோடிக் கதைகளை எண்பதுகளில் எழுதியவர்கள் ராஜேந்திர சோழன், ஜெயகாந்தன் போன்றோர். பிராயிடிய காமத்துக்கும் இன்றைய அரசியல் காமத்துக்கும் இடையில் உள்ள புள்ளி இவர்கள்.
குழந்தைகள் மீதான காமம்? சுஜாதாவின் சங்கிலிகதையில் ஜெஞ்சுலட்சுமி என்ற லட்சணமான சின்ன குழந்தை ரயிலில் வருகிறது. பிரயாணிகள் அதை வாங்கி ஆளாளுக்கு ‘பச்சக் பச்சக் என்று முத்துகிறார்கள். சுஜாதா எழுதுகிறார் “பேருக்கு பேர் கொடுத்த எல்லா முத்தங்களிலும் களங்கமில்லை என்று என்னால் சொல்ல முடியவில்லை
கவிதையில் கடந்த பத்துவருடங்களில் எழுத வந்த பெண் கவிஞர்கள் அனைவருமே அநேகமாக பாலியல் அரசியல் கவிதைகள் எழுதினார்கள். பெண்மொழி என்ற சொல்லாடல் பிரபலமாகியது. சரி “ஆண்மொழி என்றால் என்ன? “திமிறிப் புடைத்து எழுந்தது காமம் என்ற சாதாரண வாக்கியத்தில் உள்ளது ஒரு ஆண்குறி விரைப்பு பற்றின உருவகம் தான் அது. இப்படி தமிழ் முழுக்க கறைப்பட்டுள்ளதால் அதனை பெண்மொழியாக்கி சலவை செய்வது இவர்களின் நோக்கம் சுகிர்தராணி குறிப்பிடத்தக்கவர். சுவாரஸ்யமாக, பிரமிளை தவிர நமது ஆண்கவிஞர்கள் மிக அரிதாகவே பாலியல் தொனிக்கும் வரிகளை (ஆடையின் இரவினுள் உதயத்தை தேடும் பருவ இருள்) எழுதினர். பெண்ணிய கவிஞர்கள் தங்களது லட்சியம் “இரவினுள் உதயத்தை (லிங்கத்தை) தேடுவது அல்ல என்று உறுதியாக மறுக்கிறார்கள். 1960இல் இருந்து இன்று நாம் பாலியல் கவிதையில் வந்துள்ள புள்ளியை பிரமிள் vs பெண்ணியம் என்று சுருக்கலாம்.
(2011 டைம்ஸ் நவ் தீபாவளி மலரில் வெளியானது)
Read More

இருளுக்குள் சகஹிருதயர்கள்

ஒரு அந்நிய நகரத்தில்
ஒரு சின்ன அறைக்குள்
திரைகள் மூடியிருக்க
செவ்விசை கேட்டபடி பசித்திருந்தது நினைவுள்ளது
இளம் வயது, மிகவும் இளமையென்பதால்
உள்ளே துளைத்த கத்தியை போல்
அது வலித்தது
ஏனெனில் முடியும் வரை மறைந்து இருப்பதை விட
வேறுவழி இருக்கவில்லை ---
தன்னிரக்கத்தில் அல்ல ஆனால் குறைவான வாய்ப்புகள் தந்த அவநம்பிக்கையினால்:
தொடர்புறுத்த முயன்று கொண்டிருந்தேன்.

என்னிடம் பேசியவர்கள் பழைய இசையமைப்பாளர்கள்
மொசார்டு, பாக், பீத்தோவன்,பிராம்ஸ்;
அவர்கள் உயிரோடு இல்லை.

கடைசியில், பட்டினியால் வாடி தோற்று செல்ல வேண்டி இருந்தது
குறைந்த சம்பள,
சலிப்பான வேலைகளுக்காய்
மேசைகளுக்கு பின்னால் உள்ள விநோத மனிதர்களால்
கண்களற்ற மனிதர்களால் முகமற்ற மனிதர்களால்
என் நேரத்தை பிடுங்கி
நொறுக்கி
அதில் மூத்திரம் பெய்யும்
மனிதர்களால்
நேர்முகத் தேர்வு செய்யப்பட.

இப்போது வேலை செய்கிறேன் பத்திரிகை ஆசிரியர்களுக்கு வாசகர்களுக்கு
விமர்சகர்களுக்கு

இருந்தும், கூட சேர்ந்து தண்ணியடிப்பேன்
மொசார்ட், பாக், பிராம்ஸ் மற்றும்
பீத்தோவனுடன்

சில தோஸ்துகள்
சில மனிதர்கள்
சில வேளைகளில் தனிமையில் நாம் தொடர்ந்து இயங்க தேவையெல்லாம்
நம்மை சூழும்
சுவர்களை தடதடக்க வைக்கும்
இறந்து போனவர்கள்
Read More

Tuesday, 27 December 2011

என் முதல் நாவல்

என் முதல் நாவல் “கால்கள்” உயிர்மை வெளியீடாக ஜனவரி 1, 2012 க்கு வருகிறது. ஜனவரி 1 மாலை ஆறுமணிக்கு LLA Building அரங்கத்தில் வெளியீட்டு விழா. நண்பர்களையும் வாசகர்களையும் பிளாகர்களையும் அன்புடன் அழைக்கிறேன்.
Read More

Sunday, 25 December 2011

நவீன இலக்கியமும் கல்வித்துறையும்



நமது கல்வி அமைப்புகளுக்கும் இலக்கியத்துக்கும் இடையே ஒரு பெரும் இடைவெளி நிலவியது. அது ஓரளவு தற்போது குறைந்துள்ளது. பெரும்பாலான தமிழாசிரியர்களுக்கு நவீன இலக்கிய பரிச்சயம் இல்லை. நவீன தமிழில் நேர்ந்துள்ள மாற்றங்கள் பற்றியும் போதம் இல்லை. இந்த இடைவெளி எப்படி உருவானது? இதற்கு வரலாற்று கலாச்சார ரீதியான காரணங்கள் உண்டு. ஆரம்பத்தில் தமிழாசிரியர்கள் சைவ, வைணவ இலக்கியங்களில் தோய்ந்தவர்களாக இருந்தனர். இந்த சமயப்பற்று தான் மொழிப்பற்றாக இருந்தது. பின்னர் திராவிட கழகங்கள் தமிழகத்தில் புயலாக கிளம்பியதும் தமிழாசிரியர்களில் ஒரு பகுதியினர் திராவிடப் பற்றாளர்களாக மாறினர். திராவிட இலக்கிய மறுமலர்ச்சி தமிழின் விபூதியை அழிக்கும் மேலோட்ட புரட்சியை தான் செய்தது. அது இலக்கியத்தை மொழி மற்றும் இனப்பற்றாக சுருக்கியது. இலக்கியத்தை மேலும் அணுகி அறிய கோட்பாடுகளும் தத்துவமும் அவசியம். இந்த மாற்றத்தை எழுபதுகளில் இடதுசாரிகளும் வானம்பாடிகளும் கல்வித்துறை தமிழ் அறிஞர்களிடத்து கொண்டு வந்தனர். தமிழ்ப்புதுக்கவிதை வடிவத்தை கல்விப்புலத்தில் பிரபலமாக்கிய பெருமை தமிழன்பன், மூ.மேத்தா, அப்துல் ரகுமான், வைரமுத்து போன்ற வானம்பாடிகளை சேரும். துரதிஷ்டவசமாக பிறகு ஒரு தேக்கம் ஏற்பட்டது. நவீன தமிழ் இலக்கியத்தில் நிகழ்ந்த மாபெரும் மாற்றங்களை, பரீட்சார்த்த முயற்சிகளை, முக்கிய சாதனைகளை அறியாமலே ஒரு தலைமுறை தமிழ்படித்து வந்தது. அவர்கள் வரையில் நவீன புனைகதை என்பது ஜெயகாந்தனில் ஆரம்பித்து தொடர்ந்து முடிந்தது. இதற்கு திராவிட×ஆரிய அரசியல் கோஷம் ஒரு காரணம்.
தமிழின் நவீனத்துவ பிதாமகர்களில் அநேகமானவர்கள் பிராமணர்கள். திராவிட கட்சிகள் சமூக ஏற்றத்தாழ்வுக்கும் சீரழிவுக்கும் பார்ப்பன சதியே ஏக காரணம் என்று கருதின. திராவிட ஆதரவு ஆசிரியர்களிடத்து பார்ப்பன விரோதம் வலுவான இருந்தது. அவர்கள் நவீனத்துவ இலக்கியத்தை பிராமண இலக்கியம் என்று மேலோட்டமாக புரிந்து கொண்டனர். தமிழ் நவீனத்துவவாதிகளோ திராவிட, மார்க்ஸிய தரப்பின் சமூகத் தரப்பை காண மறுத்தனர். இப்படி இரு தரப்பினரும் கண்களை இறுக்கக் கட்டிக் கொண்டு தொட்டுத் தடவி புரிந்து கொண்டதில் யானை கையடக்க பொருளாக மட்டுமே தென்பட்டது.
க.நா.சு, சுந்தர ராமசாமி, அசோகமித்திரன் ஆகியோர் தங்களது முன்னோடிகளாக பிரெஞ்சு, ஜெர்மானிய, அமெரிக்க எழுத்தாளர்களையே கண்டார்கள். கம்பனையோ இளங்கோவையொ வள்ளுவனையோ அல்ல. சு.ராவும் அவரது வழிவந்தவர்களும் வள்ளுவம் இலக்கியம் அல்ல என்று மறுத்தனர். க.நா.சு இலக்கியத்தை தமிழ் ஆசிரியர்களிடம் இருந்து காப்பாற்றுவதே தலையாய பணி என்று நினைத்தார். இவ்வாறு நவீன எழுத்தாளர்களுக்கு மரபின் தொடர்ச்சி இருக்கவில்லை. தமிழாசிரியர்களில் அநேகம் பேருக்கு அன்று ஆங்கில பயிற்சியோ உலக இலக்கிய வாசிப்போ இருக்கவில்லை. நவீன தமிழ் இலக்கியம் மக்கள் இலக்கியம் அல்ல என்று தமிழாசிரியர்கள் வெகுகாலமாய் மறுத்தனர். பிராமணியம் போக, இது அவர்களின் முக்கிய புகாராக இருந்தது நவீனத்துவவாதிகளுக்கு வெகுஜன ரசனை என்பது ஒவ்வாமையாக இருந்தது. இது ஏற்படுத்திய பிளவு காரணமாய் இரு தரப்பினருக்கும் இழப்பு ஏற்பட்டது.
மரபை புத்துருவாக்குவதன் மூலமே நாம் நவீனத்துவத்தை அறிய முடியும். மரபை அறியாமல் நாம் பத்மவியூகத்தில் மாட்டிக் கொள்வோம். அனைத்து விதிகளையும் உடைத்துக் கொண்டு உள்ளே செல்லலாம்; ஆனால் வெளியேறத் தெரியாது. மரபுக்கும் நவீனத்துக்கும் இடையிலான இணைவு தான் படைப்பூக்கத்தை தூண்டும் என்றார் டி.எஸ் எலியட். மரபை புறக்கணித்தது நவீன தமிழுக்கு ஒரு இழப்பு தான். மேலும் மேற்கத்திய நாடுகளில் போல் இங்கு நவீன இலக்கியத்தை அறிமுகப்படுத்தி வாசிக்க வைக்கும் பயிற்சியை தமிழ் கல்வியாளர்கள் செய்யவில்லை. முந்நூறு பிரதிகள் விற்ற சிற்றிதழ்கள் மூலம் நவீன இலக்கியம் ஒரு ரகசிய இயக்கமாகவே அரைநூற்றாண்டு இயங்கியது. நவீனத்துவவாதிகளுக்கு வெகுஜன ஊடகத்தில் எழுதுவதில் உவப்பின்மை இருந்ததால் தீவிர இலக்கியம் மீதான அரை-இருட்டு முழு இருட்டானது.
இருபதாம் நூற்றாண்டில் ஏகப்பட்ட அறிவுத்துறைகள் இலக்கிய வாசிப்பில் பாதிப்பை ஏற்படுத்தின. இலக்கியம் வாசிக்க ஒருவர் அரசியல், உளவியல், மொழியியல், தத்துவம், பண்பாட்டு தத்துவம், மானுடவியல், வரலாற்றுவாதம் போன்ற எண்ணற்ற கருத்தியல்களை அறிய வேண்டியதானது. இந்தப் புதுவாசிப்பு முறைகள் தமிழர்களுக்கு நவீன இலக்கியம் வழியாகவே அறிமுகமானது. கண்ணை மூடி பால்குடித்துக் கொண்டிருந்த தமிழய்யாக்கள் உலகம் மாறி வருவதை அறியாமல் விமர்சனம் என்பதை எளிய பொழிப்புரையாக களிம்பேறிய மொழியில் கற்பித்தார்கள். இதன் காரணமாக தொண்ணூறுகள் வரை தமிழ் படித்தவர்கள் சமகால போக்குகள் குறித்த எந்த பிரக்ஞையும் இல்லாதவர்களாக உருவானார்கள். இன்றும் தமிழ்ப்பேராசியர்களில் இருந்து தமிழின் சிறந்த படைப்பாளிகளாக உருவாகி வந்தவர்களை அரிதாகவே பார்க்க முடியும். மேற்கில் இதற்கு முற்றிலும் மாறான நிலை நிலவுகிறது என்பதை கவனிக்க வேண்டும்.
அண்மையில் தமிழ் கலாச்சார பரப்பில் குறிப்பிடத் தக்க மாற்றங்கள் நடந்தன. சிற்றிதழ்-வெகுஜன லட்சுமணக் கோடு அழிந்தது. சிற்றிதழ்வாதிகள் வெகுஜன ஊடகங்களை ஆக்கிரமித்தனர். பாலகுமாரனையும் பட்டுக்கோட்டை பிரபாகரையும் வாசித்தவர்கள் ஜெயமோகனையும் எஸ்.ராமகிருஷ்ணனையும் நாடி வந்தனர். நவீன இலக்கியத்தை நிராகரிப்பது இனிமேல் இயலாது என்ற நிலை கல்வியாளர்களுக்கு ஏற்பட்டது. திராவிட-மார்க்ஸிய சிந்தனைக்கு மாற்றாக பின்நவினத்துவமும் தலித்தியமும் பெயரளவிலேனும் தமிழ் வகுப்புகளுக்குள் பிரவேசித்தன. இன்று தமிழ்ப்படித்து வரும் பலருக்கும் தீவிர இலக்கியம் தெரிந்திருக்கிறது; குறைந்தபட்ச பரிச்சயமாவது உள்ளது. பாடத்திட்டத்திலும் ஓரளவு நவீன மற்றும் சமகால இலக்கியம் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த இடத்தில் ஒரு முக்கியமான குற்றச்சாட்டு வருகிறது.
சென்னை பல்கலையில் பாடத்திட்டத்தில் நவீனத் தமிழ் பகுதி எந்த எழுத்தாளனிடம் இருந்து துவங்குகிறது? கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை. அவரைத் தொடர்ந்து பாரதியும், பாரதிதாசனும் வருகிறார்கள். பிறகு கொஞ்சம்  வானம்பாடி கவிதைகள். அதன் தூய அர்த்தத்தில் இவர்கள் நவீன எழுத்தாளர்கள் அல்ல என்று நாம் அறிவோம். இந்த வெளிநபர்களுடன் நீங்கள் சில அசல் நவீனத்துவ கவிஞர்களையும், சமகால பெண்கவிஞர்களையும் சேர்த்து படிக்கும் போது ஒரு வரலாற்றுக் குழப்பம் ஏற்படுகிறது. தோட்டக்காரரின் கத்திரிக்கோலை கொண்டு மீசை திருத்த முடியாதே? பிரமிளிலும் பாரதிதாசனிலும் நாம் ஒரே பண்புக்கூறுகளை காண முடியாது. புனைவிலும் தொ.மு.சி, ஜெயகாந்தன், மு.வா ஆகியோரை சு.ரா, எஸ்.ரா, ஜெ.மோவுடன் ஒரே தட்டில் வைத்து படிக்க முடியது. ஆக பொத்தாம்பொதுவாக நவீன இலக்கியத்தை புகட்டும் இந்த போக்கு கல்வியாளர்களின் அக்கறையின்மையை காட்டுகிறது. நவீன இலக்கியத்தில் திராவிட இலக்கியம், மார்க்ஸிய இலக்கியம், நவீனத்துவ இலக்கியம், பின்நவீனத்துவ இலக்கியம், பெண்ணிய இலக்கியம், தலித் இலக்கியம் என்ற தெளிவான பகுப்புகள் வேண்டி உள்ளது.
அடுத்து மரபிலக்கியத்தின் நவீன கோட்பாடுகளை கொண்டு காத்திரமான ஆய்வுகளை செய்யவும் அந்த புரிதலை மேற்கொண்டு பாடத்திட்டம் மற்றும் படிப்பித்தல் வழி மாணவர்களை ஏற்படுத்தவும் செய்ய வேண்டும். சென்னை பல்கலைக்கழக ஆய்வரங்கங்கள், அமெரிக்கன் கல்லூரியின் பாடத்திட்டம் ஆகியவை இதை நோக்கி நல்ல முயற்சிகள் என்றாலும் நாம் இன்னும் வெகுதூரம் செல்ல வேண்டி உள்ளது. 
 (2011 டைம்ஸ் நவ் தீபாவளி மலரில் வெளியானது)
Read More

Tuesday, 20 December 2011

17 கர்ப்பங்களின் கலகம்



பதின்வயதின் கலக விழைவு பற்றி நேர்மையான அக்கறை கொண்ட படங்கள் மலையாளத்தில் சில வந்துள்ளன. பத்மராஜனின் “தேசாடனக் கிளி கரயாறில்லா (பிரயாணம் செல்லும் கிளிகள் அழுவதில்லை) குறிப்பிடத்தக்க ஒன்று. இரண்டு பள்ளிக்கூட பருவ பெண்கள் சுதந்திரமாய் வாழும் ஒரே இச்சையுடன் ஓடிப் போய் பெயர் அடையாளம் மாற்றிக் கொண்டு வாழ்கிறார்கள். வேலை பார்த்து சிரமப்பட்டு வளர்ந்தவர்களின் அன்றாட வாழ்வின் சில அனுகூலங்களை அனுபவிக்கிறார்கள். சுயபொறுப்பின், குடும்ப அந்தஸ்தின், சின்ன சின்ன சுதந்திரங்களின் மகிழ்ச்சியை அலாதியாக அனுபவிக்கிறார்கள். யாரிடமும் ஈடுபாடு கொண்டு உறவை வளர்க்க கூடாது, அது தம் அடையாளத்தை காட்டிக் கொடுத்து விடும் என்று உறுதி எடுக்கிறார்கள். ஒரு பெண் மென்மையாளவளாகவும் மற்றவள் வலிமையானவளாகவும் இருப்பது ஒரு பரஸ்பர சார்பை ஏற்படுத்தி அவர்களை ஒரு பாலியலற்ற ஒருபால் குடும்பமாகவே மாற்றுகிறது. பிறகு ஒரு பெண் ஒரு அந்நிய ஆணிடம் காதல் வயப்பட அவன் வழியாக அவர்களின் பெற்றோர்களுக்கு தெரிய வந்து அவர்கள் மீண்டும் வீட்டில் ஒப்படைக்கப்படும் நிலை ஏற்படுகிறது. ஒரு தோழி தற்கொலை செய்வதில் படம் முடிகிறது. வாழ்க்கை ஒரு சுதந்திரமான பிரயாணம் என்றால் அதில் ஏற்படும் தடை என்ன என்பது இப்படத்தில் மட்டும் அல்ல பத்மராஜனின் “ஓரிடத்து ஒரு பயில்வான், “தூவானத்தும்பிகள் போன்ற வேறு பல படங்களிலும் வரும் கேள்வி. இச்சை தான் அந்த பிரச்சனை என்ற கோணத்தில் அவர் அணுகியிருப்பார். தமிழில் இந்த வகையான படங்கள் சில வாழ்வை பற்றின பரந்துபட்ட பார்வையை வைக்காமல் எளிய உபதேச நோக்கங்களுடன் தொய்ந்து போயின. தற்போது நடந்து வரும் சென்னை உலகத்திரைப்பட விழாவின் போது திரையிடப்பட்ட “seventeen girlsபிரஞ்சு படம் வளர்இளம் பருவத்தினரின் இப்படியான ஒரு கலகத்தை முற்றிலும் புதிய கோணத்தில் அலசுகிறது.
இது தான் ஒற்றைவரி: ஒரு பள்ளியில் 17 பெண்கள் சுயவிருப்பத்துடன் கர்ப்பமாகிறார்கள். அவர்கள் சேர்ந்து குழந்தைப் பெற்றுக் கொண்டு ஒரு commune வாழ்வு வாழ உத்தேசிக்கிறார்கள்.
படத்தின் சுவாரஸ்யம் கர்ப்பம் இவர்கள் வாழ்வை என்னவாக்கிறது என்பதல்ல, பெற்றோர்கள், ஆசிரியர்கள், மற்றும் சமூகம், ஊடகங்கள் ஆகியவர்கள் எப்படி எதிர்வினையாற்றுகிறார்கள் என்பதே. அதாவது இப்பெண்களுக்கும் சமூகத்துக்குமான உறவு.
பெற்றோரிடம் மனஸ்தாபம், காம வேட்கை போன்ற காரணங்களால் பள்ளி மாணவர்கள் வீட்டை விட்டு வெளியேறுகிறார்கள், பின்னர் சீரழிந்து மனம் திருந்துகிறார்கள் என்றொரு அசட்டுவாதம் கஸ்தூரிராஜா, பாலசந்தர் போன்ற தமிழ் இயக்குநர்களிடம் உண்டு. ஆனால் பத்மராஜனின் படங்களைப் போன்றே மேற்சொன்ன படமும் இப்பிரச்சனையை எளிமைப்படுத்தாமல் வளரிளம் பருவ கலகத்தின் காரணங்கள் தனிமை, வாழ்க்கையின் சலிப்பு, அந்தஸ்தை உருவாக்கும் முனைப்பு, மற்றும் சமூகமாக்கல் விழைவு ஆகியனவாக இருக்கலாம் என ஆழமான சாத்தயங்களை நோக்குகிறது.
ஒவ்வொரு பெண்ணுக்கு ஒவ்வொரு பிரச்சனை. கெமைல் எனும் மத்திய வர்க்க பெண் அப்பா இல்லாதவள். சிறு வயதில் அம்மா அவளை பல மணிநேரம் வேலைக்காக தனியே வீட்டில் விட்டு விட்டு சென்று விடுவாள். அது ஒரு காயமாக அவளுக்குள் ஆழமாக உயிருடன் இருக்கிறது. அந்த நினைவில் உள்ள உளவியல் தனிமையை கடக்க அவளுக்கு ஒரு குழந்தை தேவையாகிறது. அவள் எதேச்சையான ஒரு உறவில் தான் கர்ப்பமாகிறாள். முதலில் பதற்றப்பட்டாலும் பிறகு கரு நல்லது என படுகிறது. அவளை பின் தொடர்ந்தே மேலும் பல தோழிகள் கர்ப்பமாகிறார்கள்.
கெமைலின் மிலிட்டிரி அண்ணன் ஓரிடத்தில் அவளிடம் சொல்கிறான் “நானும் பெருங்கனவுகளுடன் தான் ராணுவத்தில் சேர்ந்தேன். ஆனால் இப்போதோ எனக்கு எந்த தீங்கும் செய்யாதவர்களை சுட்டு கொல்லுகிறேன். தங்கையின் குழந்தை வளர்ப்பும் இப்படித்தான் முடியும் என்று அவநம்பிக்கை உறுகிறான். ஆனால் தனிமையின் கரிப்பின் முன் ஏமாற்றத்தின் கண்ணீர் அவளுக்கு மேலானதாக தோன்றுகிறது.
கெமைலின் அம்மா ஆரம்பத்தில் கர்ப்பத்தை கடுமையாக எதிர்க்கிறாள். பின்னர் சகஜமாக எடுத்துக் கொண்டு நட்புணர்வுடன் தன் மகளுக்கு சம அந்தஸ்து அளித்து நடத்துகிறாள். கெமைல் இதையும் தான் விரும்புகிறாள். குழந்தை எனும் பாத்திரத்தில் இருந்து விடுபட்டு பெண் என்ற அடுத்த நிலையை அடைய வேண்டும் அவளுக்கு. படத்தில் இது ஒரு கூர்மையான இடம். குழந்தைப் பேறை நாம் ஒவ்வொருவரும் அதனோடு தொடர்பற்ற ஏதோ ஒன்றோடு தான் சம்மந்தப்படுத்துகிறோம். அது அந்தஸ்தோ, வாழ்வுக்கான அர்த்தமோ, சலிப்பை கடப்பதோ ஆகலாம். உயிரியல் விழைவு காமத்தின் மொழி மட்டுமே. அதற்கு பிறகு குழந்தைப்பேறின் போது நம் சமூக மனம் தான் செயல்படுகிறது.
கிளமண்டெயின் என்கிற பெண் மெல்லிய குழந்தைத்தனமான தோற்றம் கொண்டவள். மனதளவிலும் அவள் பத்தாம்பசலிதான். அவளுக்கு தான் எளிதில் ஜோடி மாட்ட மாட்டேன் என்கிறது. இறுதியில் ஒரு இளைஞனுக்கு முப்பது டாலர்கள் தருவதாய் ஆசை காட்டி தன்னை புணர செய்கிறாள். கருவுற்ற பிறகு அவளுக்கு பெற்றோரையும், வாழ்வைவும் எப்படி நேரிட என்று தெரியவில்லை. தொடர்ந்து எல்லாவற்றில் இருந்து தப்பித்து ஓடி விட்ட இடத்தில் இருந்து திரும்பியும் ஒரு குழப்பமான கலகத்தை நிகழ்த்துகிறாள். கிளமெண்டெயின் கெமைலின் எதிர்முகம் என்ற அளவில் சுவாரஸ்யமான பாத்திரம்.
இந்த தொடர் கர்ப்பங்கள் பற்றி தலைமை ஆசிரியர் தமது ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுடன் நடத்தும் கூட்டங்கள் இன்னும் சுவாரஸ்யமானவை. தலைமை ஆசிரியர் தனக்கு காரணமே தெரியவில்லை என, ஒரு ஆசிரியை இது பெண்ணிய வெற்றி என்கிறார். உடற்பயிற்சி ஆசிரியர் கர்ப்பமான பெண்களை ஹைஜம்ப் செய்ய வைக்கலாமா கூடாதா என்று கவலைப்படுகிறார். மீடியாவில் சேதி பிரபலமாக ஒரு நிருபர் இது பிரஞ்சு சமூகத்தின் பல்வேறு சீரழிவுகளின் நோய்க்கூறு என்று அறிவுஜீவு அலசல் செய்ய அதை டி.வியில் பார்க்கும் கெமைல் அலுப்படைந்து அணைக்கிறாள். பெண்களை அச்சுறுத்த பள்ளி உள்ளரங்கில் குழந்தைப்பேறு வீடியோ ஒன்றை காட்டுகிறார்கள். “இதெல்லாம் பார்த்து நாம் மிரண்டு விடுவோமா என்று கலாய்க்கிறார்கள் பார்த்துக் கொண்டிருக்கும் கர்ப்பமான பெண்கள். ஆண்கள் பெண் வயிற்றில் இருந்து வெளியெடுக்கப்படும் சிசுவை பார்த்து அருவருப்படைகிறார்கள், சிலர் சிரிக்கிறார்கள்.
வேறு வழியின்றி தொடர் கர்ப்பங்களுக்கு முடிவு காண ஒரு அச்சுறுத்தலாக கெமைலை பள்ளியில் இருந்து நீக்குகிறார்கள். ஆனால் ஒரு கார் விபத்தில் அவளது கரு இறந்து போக, மிச்ச 16 பேரும் குழந்தை பெறுகிறார்கள். அதை விட முக்கியமாய், குழந்தை பெற்ற அவர்கள் ஒன்றுமே நடக்காதது போல் படிப்பை தொடர்ந்து வாழ்வையும் முன்பு போல் நடத்துகிறார்கள். குழந்தை பெற முடியாத கெமைலின் வாழ்வு தான் முற்றிலும் மாறிப் போகிறது. அவள் ஒரு மறைமுக வாழ்வு வாழ்கிறாள். இந்த நகைமுரண் வாழ்வின் மிகத்தீவிரமான செயல்கள் எப்படி அபத்தமான முடிவுகளை அடைகிறது என்று காட்டுகிறது. உண்மையில் கலக வாழ்வின் தீவிரமான சாகசங்கள் இது போல் சாதாரண வாழ்வு போல் முடிந்து விடுகிறது. அடிக்கடி யாரும் மூச்சு வாங்குவதோ நெட்டுயிர்ப்பதோ இல்லை..
கெமைல் ஒரு காட்சியில் பள்ளிக்கூட செவிலியிடம் வளர்ந்தவர்கள் தோல்வி மனப்பான்மையுடன் வாழ்கிறார்கள், தம்மைத் தாமே ஏமாற்றுகிறார்கள் என்று குற்றம் சாட்டுகிறாள். படித்து ஒழுங்காய் மணம் புரிந்து குழந்தை பெற்று வளர்த்து யாரும் மகிழ்ச்சியாய் இல்லை. இவை யாவும் செய்யாதப் போது உள்ள ஆதார பிரச்சனைகளான தனிமை, அர்த்தமின்மை, சலிப்பு ஆகியவை அப்போதும் தொடரத்தான் செய்கின்றன. பிறகு விருப்பப்படி வாழ்ந்தால் தான் என்ன என்று அவள் வியக்கிறாள். ஆனால் பால்யகால கர்ப்பம் எனும் கலகத்துக்கு பின்னரும் கூட கெமைலின் வாழ்வும் பிறரும் வாழ்வின் எந்த விதத்திலும் மேம்படாமல் இருப்பது தான் உச்ச அபத்தம். மரபான வாழ்வும் சரி எதிர்கலாச்சாரமும் சரி நம்மை பிரச்சனைகளின் பொறியில் இருந்து தப்புவிப்பதில்லை என்கிறது 17 Girls.  
2008இல் அமெரிக்காவின் மெஸசூசட்சில் இது போல் 18 பள்ளிக்கூட பெண்கள் திட்டமிட்டு கர்ப்பமடைந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. டெல்பின் மற்றும் முரியல் கூலின் ஆகிய சகோதரிகள் இணைந்து இந்த உண்மைக்கதையை சார்ந்து ஒரு கூர்மையான பகடியை முயன்றிருக்கிறார்கள். ஒரு டிராமாத்தனமான கதையை மிகக் குறைவான நாடகீயத்துடன் சொல்லியிருக்கிறார்கள்.
Read More

Thursday, 15 December 2011

“மயக்கம் என்ன”: செல்வராகவன் தவறி நுழைந்த ஏரியா



செல்வராகவனின் படங்கள் இறந்த கால துயரில் இருந்து மீள முடியாது தவிக்கும் தனிமனிதர்களின் தனிமை, வன்மம், சீரழிவு, இறுதியில் மீட்பு என்று முழுக்க முழுக்க உள்குவிந்தவை. கடந்த சில வருடங்களில் தமிழ்-உலக சினிமா என்ற பெயரில் சேப்பியார் டோனில் ஏகப்பட்ட தனிமனித சீரழிவு சினிமாக்கள் இங்கு எடுக்கப்பட்ட போதும் செல்வராகவனின் படங்கள் ஒரு முக்கிய காரணத்துக்காக காலாவதியாகவில்லை. அதற்கு ஒரு காரணம் அவரது மையபாத்திரங்கள் அனுபவிக்கும் தத்துவார்த்த தனிமை. காலத்தின் முன் தன்னை வெறும் பகடைக்காயாக உணரும் முத்துவும் கொக்கிகுமாரும் தமிழ் சினிமாவின் தளத்தை நிச்சயம் விரிவடைய வைத்தனர். “மயக்கம் என்ன படத்தில் செல்வராகவன் இப்படியான தனிமனித அகப்போராட்டத்தை drama என சொல்லப்படும் வகை சினிமாவுக்கு நகர்த்தி பாத்திருக்கிறார்.
தமிழில் டிராமா மிக வெற்றிகரமான ஒரு வடிவம். ஆனால் குரசாவோவில் இருந்து சத்யஜித்ரே வரைக்குமான மாற்றுப்படங்கள் மற்றும் டாக்சி டிரைவர், காட்பாதர் போன்ற ஹாலிவுட் படங்கள் ஆகியவையில் நாம் காணும் டிராமாவுக்கும் தமிழில் பாலசந்தர், மணிரத்னம், கவுதம் மேனன் ஆகியோர் பிரபலப்படுத்திய டிராமாவுக்கும் ஒரு முக்கிய வித்தியாசம் உள்ளது. நம்மூரில் டிராமா முழுக்க அதன் உணர்ச்சிகரமான கதாபாத்திர மோதல்களில் மையம் கொண்டது. காட்சிபூர்வமான நுணுக்கங்கள் குறைவாக இருக்கும். காட்சிக்கு காட்சி திரை பாத்திரங்களால் நிரம்பி இருக்கும். முகங்களை விட நீட்டப்படும், சைகை காட்டும், கட்டிப்பிடிக்கும் கரங்களும், குரல் ஏற்ற இறக்கங்களுமே அதிகம் நடிக்கும். செல்வராகவனின் டிராமா முயற்சி ரசிகர்களை பல இடங்களில் அலுப்படைய வைக்கிறது. இருந்தும் இது நாம் பார்த்து விவாதிக்க வேண்டிய படமாகவே உள்ளது. அதற்கு இரு காரணங்கள்.
பொதுவாக டிராமா வகையறா படங்கள் தனிமனிதனின் அகப்போராட்டத்தை பற்றியவை. காட்சிகள் வழியாக அல்லாமல் கதாபாத்திர மோதல்கள், சந்திப்புகள், பரஸ்பர அறிதல்கள் வழியாக உள்போராட்டம் சித்திரிக்கப்படும். படம் முழுக்க ஏதாவது ஒரு தனிமனித சீரழிவு தொடர்ந்து வரும். பல நல்ல டிராமாக்களில் சீரழிவுக்கு வெளிப்படையான காரணமோ எளிய தீர்வுகளோ இருக்காது. “செவன் சாமுராயில் வீரர்களின் சமாதிகள் வரும் காட்சியை உதாரணம் காட்டலாம். விவசாயிகளை கொள்ளைக்காரர்களிடம் இருந்து காக்க போராடி மூவர் தவிர மீதி வீரர்கள் மாண்டு விட்டனர். ஆனால் விவசாயிகளுக்கு தமக்காக உயிரை கொடுத்த சாமுராய்கள் மீது வெறுப்பும் அவநம்பிக்கையும் அப்போதும் அப்போதும் கொண்டுள்ளனர். இந்நிலைமையில் வயதான தளபதி கம்பெய் அமைதியாக, ஏதோ இது வழக்கம் தான் என்பது போல், சொல்கிறார்: “நாம் மீண்டும் தோற்கடிக்கட்டோம். உண்மையில் மனித சீரழிவுக்கு எந்த விளக்கங்களும் இதுவரையில் இல்லை.

“மயக்கம் என்ன படத்தில் ஒரு கலைஞனின் ஒழுக்க சீரழிவும் தன்னழிப்பு முனைப்பும் காட்டப்படுகிறது. கார்த்திக் எனும் புகைப்பட கலைஞன் தனது படம் திருடப்பட்ட ஏமாற்றம் மற்றும் பல்வேறு தொழில்முறை அவமானங்கள் காரணமாகவும் வாழ்வில் அவநம்பிக்கை அடைகிறான். ஒரு கட்டத்தில் விபத்தில் மனம் பேதலிக்கிறான். வன்மம் மிக்கவனாக, மூர்க்கமானவனாக மாறும் அவனுக்கு தன் காதல் மனைவியை நேசிக்கவோ நண்பர்களை பழையபடி ஏற்றுக் கொள்ளவோ முடிவதில்லை. தான் பயின்ற புகைப்பட கலை மீது கடுமையான வெறுப்பு கொள்கிறான். இதுவரை நாம் பார்த்த குடிகார போக்கிரி நாயகர்களுக்கும் கார்த்திக்குமான வித்தியாசம் அவன் காதல் தோல்வியால் பைத்தியம் ஆகவில்லை என்பது.
யோசித்து பாருங்கள், எத்தனை எத்தனை சினிமாக்கள் இப்படி ஒரு அபத்த கற்பனையை நம்பி உருவாகி உள்ளன. அன்றாட வாழ்வில் எந்த ஆணும் காதல் தோல்வியால் மனம் சிதறவோ சீரழிவதோ இல்லை. ஆணின் ஆதார தேவை தன்னை ஒரு திறன் சார்ந்து முன்னிறுத்துவது. தொழில்முறையில் தோல்வியடையும் ஆண்கள் தாம் அதிகமாக உருக்குலைகிறார்கள். அரசியல், வணிகம், கலை என பல துறைகளில் இதற்கான உதாரணங்களை நடைமுறை வாழ்வில் காணலாம். இந்த உண்மையை அவதானித்ததற்காக இப்படத்தை முதலில் பாராட்டலாம்.
இந்த வேளையில் செல்வராகவன் செய்யும் ஒரு தவறு கார்த்திக்கின் சீரழிவுக்கு தீர்வாக அவனது மனைவியின் தளராத ஆதரவையின் காதலையும் முன்வைப்பது. காதலோ பேரன்போ அல்ல மனிதனை காப்பாற்றுவது. எதேச்சையாக ஒரு நொடியின் தெளிவில் நாம் நம்மை கண்டுணரும் போது தான் சீரழிவில் இருந்து மீள முடியும். வெளியில் இருந்து யாரும் உதவ முடியாது. கார்த்திக் கர்பிணியான தன் மனைவியை தாக்கி கருக்கலைய அவளது கர்ப்ப உதிரத்தை வெறித்து பார்த்து அமர்ந்திருக்கும் அற்புதமான காட்சி இப்படியான ஒரு தன்னை உணரும் தருணத்தை தான் காட்டுகிறது. தன்னைத் தானே ஒரு மனிதன் அழிக்கும் போது அவன் தன்னை சுற்றி உள்ளோரையும் சேர்த்து அழிக்கிறான். ஒரு குழந்தையின் உயிரை போன்ற வாழ்வின் அற்புதங்களை அழிக்கிறான். கார்த்திக் இதை உணர்ந்த பின் மெல்ல மெல்ல நடைமுறை வாழ்வின் வழமைக்கு மீள்கிறான். அதுவரை கீழானது என்று கருதின புகைப்பட வேலைகள் பலவற்றுக்கும் செல்கிறான். அலுவலக அவமதிப்புகளை மௌனமாக ஏற்கிறான். அவனது அகங்காரம் கரைய கரைய வாழ்வில் தெளிவு பிறக்கிறது. வெளிச்சம் தோன்றுகிறது. அதிர்ஷ்டமும் மெல்ல திரும்புகிறது.

ஆனால் செல்வராகவன் இங்கு ஒரு தவறு செய்கிறார். இந்த நுட்பமான தருணங்களை நாடகீயமான உணர்ச்சிமேலிடல்கள் மூலம் மூழ்கடிக்கிறார். தேவதைக் கதை முடிவும் தருகிறார்: கார்த்திக் உலகப் புகழ் புகைப்பட கலைஞனாகி சர்வதேச விருது வாங்கி அங்கு தன் மனைவியை கண்ணீர் மல்க நன்றி பாராட்டி அதை நேரலையாக டீ.வியில் கண்ட மனைவியும் கண்ணீர் மல்க திரையரங்கில் மெகாதொடர் விசிறிகளுக்கே நெஞ்சு வலிக்க ஆரம்பிக்கிறது. படம் இப்படி போலி கண்ணீரில் நனைந்து முடிந்ததும் மற்றொரு நுட்பமான காட்சி கடைசி இணைப்பாய் வருகிறது. கார்த்திக் விருது விழாவின் போது தன்னை ஆரம்பத்தில் அவமானப்படுத்தி புகைப்படத்தை வேறு திருடி புகழ் சம்பாதித்த மானசீக மாஜி குரு மாதேஷ் கிருஷ்ணசாமியை பார்க்கிறான். அவர் இவனை தவிர்க்க பார்க்கிறார். விடாமல் அருகில் போய் அவரிடம் பக்குவமாய் நன்றி சொல்கிறான். ஏனென்றால் புகைப்பட கலையை கற்பிக்க மறுத்தாலும் இந்த குருநாதர் ஒரு முக்கிய பாடத்தை எதேச்சையாக அவன் படிக்க உதவுகிறார். பெரும் வீழ்ச்சிகள், குற்றங்கள், சீரழிவுகளுக்கு பிறகும் ஒரு மனிதனுக்கு முன் மீட்பின் சிறு பாதை திறந்தே உள்ளது, அதை அறிய அவன் கலைஞனாக உயர வேண்டியதில்லை, அன்றாட வாழ்வின் எளிமையை கொண்டாட ஏற்க தெரிந்தால் போதும் என்பதே அது. மாதேஷ் கிருஷ்ண சாமி ஆரம்பத்தில் அவனை உதவியாளனாக ஏற்று கற்பித்திருந்தால் அவன் தனது கலையின் எல்லைகளுக்குள் மட்டும் வாழ பழகி இருந்திருப்பான். ஆனால் அவர் மூலம் பெற்ற அவமானமும் புறக்கணிப்பும் மேன்மையும் கீழ்மையும் சமமானது என்று அவனுக்கு கற்றுக் கொடுக்கிறது. வாழ்வின் ஆகப்பெரும் அற்புதம் ஒரு குழந்தையின் சிந்தப்படும் குருதி என்று அவனுக்கு விளங்க வைக்கிறது.
சற்று மிகைப்படுத்தப்பட்டிருந்தாலும் அண் நட்பு பற்றிய பதிவு கூர்மையாகவே படத்தில் கையாளப்பட்டுள்ளது. கார்த்திக் தனது ஆத்ம நண்பனின் காதலியான யாமினியை பார்த்ததுமே ஈர்க்கப்படுகிறான். ஆனால் அதை வெளிப்படுத்த தயங்கி கடுமையான வெறுப்பை அவள் மீது காட்டுகிறான். ஒரு கட்டத்தில் காதல் வெளிப்படுகிறது. சுந்தர் இதை அறிந்து நண்பன் மீது கடுமையாக ஆத்திரம் கொள்கிறான். சுவாரஸ்யமாக கார்த்திக் நண்பனுக்காக தான் யாமினியை கைவிட தயார் என்று தற்காலிகமாக சொன்னவுடன் சுந்தரின் கோபம் மறைந்து மீண்டும் நட்பு வலுவாகிறது. மற்றொரு காட்சியில் கார்த்திக் குடிகாரனும் பைத்தியக்காரனுமாக மாறிட அவனது அப்போதைய மனைவியான யாமினியை மற்றொரு நண்பனான ஷங்கர் தன்வசமாக்க முயல்கிறான். ஆண் மனம் பெண்கள் விசயத்தில் எப்போதுமே இப்படி ஒரு தூய மிருக நிலையில் தான் உள்ளது. எத்தனை மேலான நண்பனும் இப்படி சமயம் வாய்த்தால் அபகரிப்பதில் அபரித ஆர்வம் கொண்டவாக இருக்கிறான். நண்பனின் காதலி கூடுதல் கவனம் பெறுவதற்கு நண்பன் மீதான பொறாமை மட்டும் அல்ல அவனது தேர்வு மீதான நம்பிக்கையும் அதை ஒரு உணவை அல்லது பொருளை போல் பகிரும் தன்னியல்பான விருப்பமும் காரணமாகலாம். நண்பனின் இணையை மோகிப்பது மனப்பிறழ்வோ அறம்பிழைத்தலோ அல்ல ஆழ்மனதில் விழித்துள்ள ஆதிமனித இச்சை. நண்பர்கள் என்றாலே காரணமின்றி கூட்டமாக கொலைகளிலும் திருட்டுகளிலும் ஈடுபடுவது என்கிற வகையில் “சுப்ரமணியபுரம் படத்திற்கு பிறகு ஒரு பாணி தமிழின் “மதுரைக்கார உலக சினிமா இயக்குநர்களால் கடைபிடிக்கப்படுகிறது. இது எத்தனை மேலோட்டமானது என்பது “மயக்கம் என்ன பார்த்தால் விளங்கும். ஒரு நல்ல நண்பனின் இலக்கணம் அவன் ஒரு நல்ல எதிரியும் கூடத் தான் என்பதே. அதனாலே நண்பர்கள் தேவையானவர்களாக இருக்கிறார்கள்.
இந்த படத்தில் செல்வராகவன் பாலசந்தர், மணிரதனம், கவுதம் மேனன் ஏரியாவுக்குள் நுழைந்தது தான் ஒரு முக்கிய தவறு. அதைத் தவிர தனது எதிர்கலாசார தளத்தில் காலூன்றும் போது தான் இப்படத்தில் சில அற்புதங்கள் நிகழ்கின்றன. அவை இப்படத்தை மறக்க முடியாததாக்கு கின்றன.
Read More

Sunday, 11 December 2011

ஒரு கவிதை உரையாடலும் நிறைய சிரிப்பும்




நேற்று திருச்சி எஸ்.ஆர்.வி பள்ளியில் அவர்களின் படைப்பாற்றல் ஸ்டுடியோ எனும் நிகழ்வுக்காக 11ஆம் வகுப்பு மாணவர்களிடம் நவீன கவிதை குறித்து இரு பகுதிகளாக ஐந்து மணிநேரம் உரையாடினேன். நான் எதிர்பார்த்ததை விட மாணவ மாணவிகள் கூர்மையாக ஆர்வமுடன் இருந்தார்கள். 
பொதுவாக என் வகுப்பில் கவிஞர்கள் யாராவது உள்ளார்களா என்று விசாரித்தால் ரொம்ப தயங்கிய பிறகு ஒருவர் இருவர் கை தூக்குவார்கள். ஆனால் இங்கே அநேகமாய் மொத்த வகுப்பும் தம்மை எழுத்தாளர்கள் என்று தன்னம்பிக்கையுடன் அறிவித்தது. பலரும் ஆர்வமுடன் வந்து தம் கவிதையை வாசித்தனர். அதற்கு பிறர் அசட்டுத்தனமாய் கமெண்ட் அடிக்காமல் ஒழுங்காய் கைத்தட்டி ஆதரித்தார்கள், அங்கங்கே பிசிறாய் சிரித்தார்கள். தொடர்ந்து எழுத்தாளர்களை சந்தித்து உரையாடுவது தான் இந்த எழுத்தாள ஆர்வத்துக்கு காரணம் என்று யூகித்தேன்.
யாரெல்லாம் வாழ்வில் தனிமையை உணர்கிறீர்கள் என்று கேட்டால் பத்து பேர் எழுந்து கொண்டார்கள். சற்று அதிர்ச்சியாகவும் வருத்தமாகவும் இருந்தாலும் தங்கள் தனிமையின் காரணத்தை தயக்கமின்றி அவர்கள் வெளிப்படுத்தியது ஆறுதல் ஏற்படுத்தியது.
கற்பனாவாத கவிதைக்கும் நவீன கவிதைக்குமான வித்தியாசங்களை விளக்கி நவீன கவிஞர்களை கவிதைகளை அறிமுகப்படுத்துவதில் முடித்தேன். பயர்பாயிண்ட் பயன்படுத்தியது எனக்கு ஒரு வித்தியாசமான உபயோகமான அனுபவமாக இருந்தது. உரையாடல் முடித்ததும் செஸ்லோவ் மற்றும் பசுவய்யாவின் இரு கவிதைகளை காட்டி அவை என்ன வகை மற்றும் அவற்றில் உள்ள கவிதைக்கருவிகளை அடையாளப்படுத்த கேட்டேன். பசங்க எந்தளவுக்கு கூர்மை என்றால் பலரும் பகடி, குறியீடு,படிமம் என்று சரளமாக பேச ஆரம்பித்து விட்டார்கள். அதுவும் செஸ்லோவின் கவிதையில் வரும் குறியீடு வீடு தான், அக்குறியீட்டின் பொருள் வாழ்க்கைக் கனவுகள் என்று இரு மாணவர்கள் சொன்னது போது ரொம்பவும் நெகிழ்ந்து போனேன்.
தமிழ் மற்றும் ஆங்கில நவீன எழுத்தாள ஆளுமைகளை விவரித்த போது ரொம்பவும் ரசித்தார்கள். குறிப்பாய் விக்கிரமாதித்யன். பிற்பாடு அவரது “வாழவும் பிடிக்கவில்லை, வாழாமல் இருக்கவும் பிடிக்கவில்லை கவிதையில் வரும் “குடிக்கவும் பிடிக்கவில்லை குடிக்காமல் இருக்கவும் பிடிக்கவில்லை என்று வரிக்கு சிரிப்பலை எழுந்தது. தேவதேவன் எப்படி பேசுவார் என்று பேசிக்காட்டிய போது விழுந்து விழுந்து சிரித்தார்கள். கலாப்பிரியாவின் பெயர்க்காரணம் சொன்ன போதும் அப்படியே.
இரண்டாவது அமர்வில் பிரமிள், நகுலன், பசுவய்யா, மனுஷ்யபுத்திரன், விக்கிரமாதித்யன், குட்டிரேவதி, யுவன், முகுந்த் நாகராஜன், என்.டி ராஜ்குமார், அப்பாஸ், ஆத்மாநாம் ஆகியோரின் கவிதைகளை அதிகமாய் விவாதித்தேன். மனுஷ்யபுத்திரனை ஏதோ சொந்த தம்பி போல் தெரிந்து வைத்திருக்கிறார்கள். என்.டியின் வட்டார மொழி அவர்களை வசீகரித்தது. அவரது இரு கவிதைகளின் எதார்த்தம் பாதித்தது கண்களில் தெரிந்தது. அவர் கவிதைகளை எப்படி ஒரு தாளலயத்துடன் வாசிக்க வேண்டும் என்று காண்பித்தேன். அப்பாஸின் ஒரு பெருவெளியை அவர்கள் உள்வாங்கியது ஆச்சரியம் அளித்தது. யுவனின் குள்ளச்சித்தன் சரித்திரத்தில் வரும் ஒரு சம்பவத்தோடு ஒப்பிட்டு நம் வாழ்வில் எப்படி இத்தகைய அனுபவங்கள் ஏற்படுகின்றன என்று சொன்னேன். எதிர்பார்த்தது போல் பெண்களுக்கு பிடித்தமானவராக முகுந்த் இருந்தார். கூட “எனக்கு இரங்கல் கூட்டங்கள் நடத்த வேண்டாம் என்னால் வர முடியாது என்ற வரி மூலம் நகுலன் சில பெண்களின் ஆதரவையும் புன்னகையையும் பெற்றது ஒரு சின்ன ஆச்சரியம்.
வழக்கம் போல் உரையாடலை முடிக்க மனமின்றி கிளம்பி வந்தேன்.
எஸ்.ஆர்.வி பள்ளியினரின் விருந்தோம்பல் சிறப்பாக இருந்தது. விடிகாலையில் சென்னை வந்தேன். மனைவியும் நாய்க்குட்டியும் இல்லாத பட்சத்தில் கதவை நெருங்கும் முன்னரே என் பூனை மோப்பம் பிடித்து என்னை அழைத்து, உள்ளே வந்ததும் வளைந்த முதுகும் நிமிர்ந்த வாலுமாய் கொஞ்சியபடி வாழ்வில் முதன்முறையாய் என்னை அப்படி வரவேற்றது. அப்படி ஒரு இனிய அனுபவம் முடிவுக்கு வந்தது.
Read More

Monday, 5 December 2011

தமிழ் இலக்கியம் ஏன் பன்னாட்டு தளத்தை அடையவில்லை?




தமிழ் இலக்கியம் ஏன் பன்னாட்டு தளத்தை அடைந்து விட்டதா? உலகின் மூத்த செவ்வியல் மொழிகளுள் ஒன்று தமிழ்; உலகின் தலைசிறந்த கவிஞர் தமிழர் (வள்ளுவர்); உலகின் தலைசிறந்த காவியங்கள் தமிழில் உள்ளன; எழுத்தாளர்களை நெடுங்காலம் அரியணையில் வைத்திருந்த சமூகம் தமிழ் சமூகம்; தமிழ் நாவல் ஒன்று அமெரிக்க பல்கலைக்கழகத்தில் பாடமாக வைக்கப்பட்டுள்ளது. இவை எல்லாம் உண்மை என்றால் தமிழ் இலக்கியம் பன்னாட்டு அளவில் புகழ் பெற்று விட்டது என்று பொருள். ஆனால் இவை முழுக்க உண்மை அல்ல. சர்வதேச அளவில் புகழ் பெற்ற எழுத்தாளர்களான மார்க்வெஸ், பாஷெவிஸ் சிங்கர், பாமுக் என பலரும் ஆங்கிலத்தில் எழுதவில்லை. தமிழை விட குறைவான மக்கள் தொகையினரால் பேசப்படும் போலிஷ், ஸ்பானிஷ், துருக்கி போன்ற மொழிகளில் எழுதியவர்கள். அவர்களின் நூல்கள் கோடிக்கணக்கிற விற்கின்றன. இவர்களுடன் ஒப்பிடுகையில் நமது தமிழ் எழுத்தாளர்கள் சர்வதேசம் என்ன உள்நாட்டு அளவில் கூட அதிக அங்கீகாரம் பெறாதவர்கள். இந்த சாபக் கேட்டுக்கு காரணம் என்ன?
முதலில் உள்ளூர் காரணம். நமது பக்கத்து ஊரான கேரளா மற்றும் கர்நாடகாவுடன் ஒப்பிட்டு தமிழில் இலக்கியவாதிகளுக்கு அந்தஸ்து இல்லை என்று புலம்பப்படுகிறது. தமிழர்களுக்கு பண்பாட்டு நடவடிக்கைகள் சினிமா மற்றும் சமய சடங்குகளுடன் முடிந்து விடுகின்றன. பொதுமக்கள் எந்தளவுக்கு இலக்கிய வாசிப்பில் இருந்து விலகி நிற்கிறார்களோ அந்தளவுக்கு எழுத்தாளர்கள் சமூகத்தில் இருந்து தம்மை துண்டித்துக் கொண்டவர்களாகவே அரைநூற்றாண்டாக இங்கே இருந்தனர். குறிப்பாக தமிழ் நவீனத்துவதாகிகளுக்கு வெகுஜனம் என்பது ஒரு கெட்டவார்த்தை. அதே வேளையில் திராவிட கழகங்கள் போன்ற சமூக அரசியல் இயக்கங்கள் சமூக ஈடுபாடு தான் இலக்கிய கடப்பாடு என்ற நம்பிக்கையில் இயங்கினர். இந்த பரஸ்பர அக்கறையின்மை இலக்கியவாதிகளிடம் இருந்து மக்களை அந்நியப்படுத்தியது. மாறாக கேரளா மற்றும் கர்நாடகாவில் மாபெரும் மக்கள் இயக்கங்களில் பங்கெடுத்தவர்களாக எழுத்தாளர்கள் இருந்திருக்கிறார்கள். அதனாலே அவர்களுக்கு சமூகத்தில் அங்கீகாரமும் உள்ளது. நம்மூர் தீவிர இலக்கியவாதிகள் ஒரு பஸ் மறியல் கூட செய்ய முடியாது. அதற்காக சாரு கேரளா போகிறார். மார்க்வெஸ், போர்ஹெஸ், பாமுக், லோசா என சமூக அரசியல் பங்களிப்பு செய்துள்ள ஏராளமான இலக்கியவாதிகளை, இந்த அக்கறையினால் நாடுகடத்தப்படும் அளவுக்கு அச்சுறுத்தல்களை சந்தித்த எழுத்தாளர்களை சர்வதேச தளத்திலும் நாம் காண முடியும். ஆனால் நேரடி அரசியல் பங்கேற்பு ஒரு இலக்கியவாதிக்கான அளவுகோல் அல்ல. இருந்தாலும், தமிழகத்தில் இலக்கியம் அந்நியப்பட்டதற்கு இதுவும் ஒரு காரணம்.
அடுத்து சர்வதே அளவில் நாம் புகழடையாததற்கு காரணங்களாக ஆங்கிலம் கருதப்படுகிறது. நமக்கு போதுமான தமிழ்-ஆங்கில மொழிபெயர்ப்பாளர்கள் இல்லை என்று தொடர்ந்து புகார் சொல்லப்பட்டது. ஆனால் அக்குறை ஓரளவுக்கு நீங்கி வருகிறது. தமிழின் பல முக்கிய நாவல்கள் மொழியாக்கப்பட்டு பெங்குவின், கதா, பிளேப்ட் போன்ற பதிப்பகங்களில் வெளிவந்தன. ஆனால் அவை இந்தியர்களால் ஆங்கிலத்தில் நேரடியாக எழுதப்படுகிற ஆங்கிலோ இந்திய நாவல்கள் அளவுக்கு பிரபலமடையவோ விமர்சன கவனிப்புக்குள்ளாகவோ இல்லை. இதற்கு வியாபார ரீதியான காரணங்கள் ஒரு பக்கம் இருந்தாலும் அதை விட, இந்திய மற்றும் சர்வதேச ஆங்கில வாசகப் பரப்பை தமதாக்கி விட்ட ஆங்கிலோ இந்திய நாவல்கள் மற்றும் அபுனைவுகள் நமக்கு தொடர்ந்து ஒரு மாற்றுத்தரப்பாக இருப்பது ஒரு முக்கிய காரணம்.
தமிழ் மொழியாக்கத்தை ஆங்கிலோ இந்திய பிரதியுடன் ஒப்பிடும் போது நடை மற்றும் பேசுபொருள் இரண்டிலும் மாறுபட்டிருப்பதை காண்கிறோம். உதாரணம் தமிழ்நாட்டில் இருந்து கொண்டு ஒருவர் ஆங்கிலத்தில் நேரடியாக தமிழகம் குறித்து எழுதினால் அது தமிழர்களுக்காக அல்ல, மொழியும் கலாச்சாரமும் பழக்கமில்லாத புலம் பெயர்ந்த மற்றொரு பெரும் மக்கள் பரப்புக்காகவே. அவர்களுக்கு நமது கலாச்சாரமும் எளிதாக பொறுமையாக சொல்லிப் புரியவைக்க வேண்டி உள்ளது. உதாரணமாக ஜும்பா லஹரியின் கதைபாத்திரம் போஸ்டனில் பேல்பூரி சாப்பிடுகிறாள் என்றால் பேல்பூரியின் சமையல் குறிப்பையும் அவர் நாலுவரிகளில் விளக்கி விட்டே நகர்வார். இன்றைய வங்காளி இளைஞனின் சமூக பொருளாதார கலாச்சார பிரச்சனை அல்ல அவரது அக்கறை. புலம்பெயர்ந்த இந்தியனின் பொதுவான வேரற்ற நிலையை பேசுகிறார். இது அவரைப் போன்ற எழுத்தாளர்களுக்கு ஒரு சர்வதேச விரிவை ஆழத்தை கொடுக்கிறது. புலம்பெயர்தலும் அடையாளமிழப்பும் பரவலாகி விட்ட உலக சமூகங்களில் இப்படியான எழுத்துக்கு தான் செலாவணி அதிகம். கடந்த பத்துவருடங்களில் ஆங்கில பதிப்புலகில் காலனிய இந்தியா மற்றும் தற்போதைய ‘ஒளிரும் இந்தியா குறித்த வரலாறு புதினங்களுக்கு பெரும் வரவேற்பு ஏற்பட்டுள்ளன. நாம் மாறாக உள்ளூர் பிள்ளைமார் அல்லது கள்ளர்களின் குடும்ப வரலாற்றை பேசினால் அது சர்வதேச வாசகர்களின் கிணற்றுச் சுவரை தாண்டாது. இதே பிரச்சனை ஜப்பானிய இலக்கியத்திலும் உள்ளது. மிஷிமோ கிணற்றுக்கு உள்ளே, ஹருகி முராகாமி வெளியே.
மேலும் நையாண்டி, அங்கதம் கலந்த நெகிழ்ச்சியற்ற மொழிநடை ஒன்றை ஆ.-இ நாவல்கள் வெற்றிகரமாய் நிறுவி உள்ளன. நமது படைப்புமொழி இம்மரபுக்கு வெளியே நிற்கிறது. ஆங்கிலோஇந்திய படைப்புகள் ஐந்துநட்சத்திர ஓட்டல் சாம்பார் என்று ஜெயமோகன் குற்றம் சாட்டினார். அது உண்மை அல்ல. ஆங்கிலத்தில் வெளியாகும் சர்வதேச இந்திய இலக்கியத்தை சொந்தம் கொண்டாடுவதற்கான வீச்சும் விரிவும் நம்மிடம் இல்லை. உலக வாசகர்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல. செருப்பு கடிக்கிறது என்றால் செருப்பின் மீதா குற்றம்?
Read More

Saturday, 3 December 2011

மற்றொரு பிறந்த நாள்



மற்றொரு வருடம் முடிகிறது. இப்பிறந்த நாள் காலம் எனக்களித்த ஒரு பரிசு. போன பிறந்த நாளின் போது மிக மனச்சோர்வுடன் இருந்தேன். அப்போதில் இருந்து வாழ்க்கை ஒன்றும் ரொம்ப மாறி விடவில்லை. ஆனால் சின்ன சின்ன சன்மானங்களின் மதிப்பு தெரிகிறது. எழுதியதற்கு முதன்முறை மூவாயிரம் பணம் கிடைத்தது. பணம் கிடைப்பது பெரிதில்லை. ஆனாலும் எழுதி சம்பாதித்தது ஒரு விநோதமான உணர்வை அளித்தது.
வகுப்பில் சாமர்த்தியமாக பாடம் எடுப்பதே முன்பு வேலை நோக்கமாக இருந்தது. இப்போது என்னைப் பற்றி கவலைப்படுவதில்லை. மாணவர்களுடன் தெளிவாகவும் சுதந்திரமாகவும் உரையாடுவதே முக்கியமாக கொள்கிறேன். நேற்று எப்படியோ பிறந்தநாளை தெரிந்து கொண்டு சில மாணவர்கள் வாழ்த்திய போது அடைந்த நெகிழ்ச்சி எப்போதும் அடைந்ததில்லை. எழுத்தளவுக்கு என் ஆசிரிய வேலையையும் ஆவேசமாய் நேசிக்கிறேன். நேற்று ராஜாஜியின் ஒரு கட்டுரையை அறிமுகம் செய்யும் போது அவர் குலக்கல்வி முறையை நிலுவையில் கொண்டு வர முயன்று தோல்வியுற்று அதனால் ராஜினாமா செய்ததை விளக்கினேன். இந்திய வரலாற்றின் சாதி துவேசத்தை விவரித்த போது பலரது முகங்கள் உக்கிரமாக இருந்தன. என்னை மிகவும் திருப்தியுற வைத்த வகுப்பாக அது இருந்தது. வகுப்புகள் எழுத்தை விட மிக இயல்பான ஒரு பகிர்வு ஆக உள்ளன
இவ்வருடம் என் முதல் நாவலை எழுதி முடித்தேன். அத்திறன் எனக்கு உள்ளது என்று உணர்ந்துள்ளதே மிகுந்த திருப்தி அளிக்கிறது. ஓருமுறை மனுஷ்யபுத்திரனிடம் பேசிக் கொண்டிருக்கும் போது “ஒரு நாவல் எழுதலாமே என்றார். “நான் அவ்வளவு பெரிய ஆளெல்லாம் கிடையாது சார் என்றேன். அதற்கு “ஏன் உங்களால் முடியாது? என்று கேட்டார். அந்த கேள்வியை இத்தருணத்தில் நினைத்துப் பார்த்துக் கொள்கிறேன்.
இந்த பிறந்த நாளிலும் சற்று சலிப்பாக சோர்வாகத் தான் உள்ளது. ஆனாலும் ஒரு உள்ளார்ந்த திருப்தி இத்தருணத்தை மகத்துவமானதாக ஆக்குகிறது
Read More

Sunday, 27 November 2011

காதல் சந்திக்கும் சவால்கள் – குருதியும் ஊடகங்களும்



காதலுக்காக எக்காலத்திலும் குருதி சிந்தப்பட்டுள்ளது. இது பணம், சமூக அந்தஸ்து, சாதிப் பற்று ஆகிய காரணங்களினால் நடந்து வருவது. வடக்கில் இதற்கு honor killing என்று பெயர் உண்டு. ஆனால் சமகாலத்தில் தான் காதலுக்காக அல்ல காதலை தடை செய்யும் காரணத்துக்காக கடுமையான வன்முறை செயல்களில் குறிப்பாய் இளம் தலைமுறையினர் ஈடுபட்டு வருவதை காண்கிறோம்.
காதலில் ஈடுபவதை எதிர்த்ததற்காக அம்மாவை அம்மிக் குழவியால் இடித்து கொன்று தங்கையை தண்ணீர் தொட்டிக்குள் அமுக்கி கொல்லும் பெண்கள். பெற்றோர்களுக்கு மயக்க மருந்து கொடுத்து காதலன் துணையோடு நெரித்து கொல்லும் சகோதரிகள், வேறு பெண்தொடர்புகள் கொண்டிருந்ததால் உடற்பயிற்சி நிலைய பயிற்சியாள கணவனை கூலிப்படையை ஏவி மின்வயர்களை சுற்றி கொல்லும் மனைவிகள், காதலனை பழிவாங்க அவனது குழந்தையை கொல்லும் கள்ளக்காதலிகள் என இன்று நாம் காணும் இந்த வன்முறை வெளிப்பாட்டில் ஒரு விநோத தன்மை உள்ளது. இது சாதியம், மதம், ஒழுக்கம், காதல் என்ற லட்சியங்களுக்காக செய்யப்படும் கொலைகள் அல்ல. உறவுகளுக்குள் நாம் சகிப்புத்தன்மையை இழந்து வருவதை, பரஸ்பர சந்தேகத்தினால் தனிமையுணர்வை அடைந்து வருவதை காட்டுகின்றன. இவை காதலுக்கான கொலைகள் அல்ல, வெறும் காதல் கொலைகள்.
காதல் எனும் வெட்டவெளி
நுண்பேசி படக்கருவியும் முகநூல் போன்ற சமூகவலைதொடர்பு தளங்களும் ஆண் பெண் உறவை பொதுமேடைக்கு நகர்த்தி உள்ளன. ஒரு உறவை திரைகளுக்கு பின்னே இருட்டில் ஒளித்து வைப்பதும் வெட்டவெளியில் பலர் முன்னிலையில் கொண்டு வருவதற்கும் ஒரே நோக்கம் தான். அந்த உறவின் நெருக்கடியில் இருந்து தப்பித்தல்.
நுண்பேசியில் படம்பிடிக்கப்பட்ட ஏகப்பட்ட அந்தரங்க காட்சிகள் எம்.எம்.எஸ்களாகவும் இணையத்தில் மலிந்து வருகின்றன. இவை ரகசியமாக அல்ல இருசாராரின் அறிவுடன் தான் படம் பிடிக்கப்படுகின்றன. படக்கருவி முன் நிர்வாணமாய் தோன்றுவதிலும் உறவில் ஈடுபடுவதிலும் நமக்கொரு கிளர்ச்சி உள்ளது. இக்காட்சிகள் பின்னர் நண்பர்களிடம் பரவி இணையத்தில் சென்று போர்னோவாகின்றன. இணையத்தில் போர்னோ பார்ப்பவர்களுக்கு எந்நேரமும் தமக்கு தெரிந்த ஒரு முகம் அதில் தோன்றி அதிர்ச்சியுறும் அபாயம் உள்ளது. இணையை பின்னர் மிரட்டவும், பிறரிடம் தன் பாலியல் அந்த ஆற்றலை காண்பிக்கவும் உத்தேசித்தாலும் படம் பிடிப்பவர்கள் அந்தரங்க காட்சிகள் பல்கி பெருகும் ஒரு வைரஸ் கிருமி போன்றது என்பதை அதை செய்யும் போது உணர்வதில்லை. ஒரு கட்டத்தில் அவர்களின் அந்தரங்கம் அவர்களுக்கு அல்லாததாகிறது. அது கோடானுகோடி கோடி கண்களால் கொட்டாமல் பார்க்கப்படுவதை அவர்களால் என்ன முயன்றும் தடுக்க முடியாது.  இப்படி வெட்டவெளிச்சத்துக்கு காம உறவை கொண்டு வருவதன் மூலம் நமது தலைமுறை ஆண்-பெண் உறவை அதிக மதிப்பற்ற ஒரு தற்செயல் நிகழ்வாக மாற்றுகிறது. இன்று ஒரு பிரபலம் மீது ஊடகத்தில் பாலியல் புகார் ஆதாரத்துடன் வந்தாலும் அது ஒரு போர்னோவாக விரைவில் மாற்றப்பட்டு பரவலாக புழங்கியபின் மறக்கப்பட்டு விடுகிறது. பாலியல் குற்றங்களை நாம் இன்று அசட்டையாக பார்ப்பது போல் ஒன்றை நாற்பது ஐம்பது வருடங்களுக்கு முன் கற்பனையே செய்ய முடியாது. இதற்கு ஊடகங்கள் ஒரு முக்கிய காரணம்.
ஒரு திருமணமான நண்பர் தனக்கு நல்ல வாழ்க்கை துணை இல்லாமல் தவிப்பதாய் முகநூல் நிலைத்தகவலில் கூறுகிறார். அவரது ஆயிரக்கணக்கான நண்பர்களில் ஒருவர் அவரது சுவரில் “உங்களுக்கு விரைவில் திருமணமாகி நல்ல வாழ்க்கை துணை அமையட்டும் என்று வாழ்த்துகிறார். இதை அவர் மனைவி வாசித்தால் எப்படி குழம்பி போவார். பல தம்பதிகள் தமது குடும்ப விரிசல்களை இப்படி நிலைத்தகவல்கள் மூலம் பிரஸ்தாபித்து கோபத்தை வெளிக்காட்டுகிறார்கள். உதாரணமாக கீர்த்தனா மோகந்தாஸுக்கு தன் கணவனை பிடிக்காமல் போனால் உடனே இரண்டாவது பெயரை மாற்றி அப்பா பெயரை போட்டு கீர்த்தனா சந்திரசேகர் ஆகி விடுகிறார். இதன் மூலம் தனது திருமண உறவு நிலையை நண்பர்களை ஊகிக்க விடுகிறார். வேறு பல திருமண ஜோடிகள் முகநூலில் நேரடியாக ஒருவரை ஒருவரை தாக்கிக் கொள்கிறார்கள். தனிப்பட்ட வெளியில் நமது உறவுச் சிக்கல்களின் தீர்க்கும் சாத்தியங்களோ மன உறுதியோ நேர்மையோ இல்லை என்ற நிலையில் தான் முகநூல் போன்ற பொதுவெளியில் தம்பதிகள் மோதிக் கொள்கிறார்கள். ஜனநெரிசலில் பாதுகாப்பு உள்ளதாய் நினைக்கிறார்கள். நெருக்கமான நண்பர்களிடம் பிரச்சனையை விவாதிப்பதற்கும் நம்மை பரிச்சயமே இல்லாத ஆயிரக்கணக்கான முகநூல்வாசிகளிடம் தனிப்பட்ட கவலைகளை பகிர்வதற்கும் வித்தியாசம் உண்டு. இது நமது தனிமனித உறவுகள் எவ்வளவு பலவீனப்பட்டு போயுள்ளது, கட்டற்று தொடர்பு சாத்தியங்கள் உள்ள யுகத்தில் நாம் நம் முன் உள்ள ஒரு மனிதரிடம் மனம் திறந்து பேச எவ்வளவு அஞ்சுகிறோம் என்று காட்டுகிறது. வெளிப்படைத் தன்மையை சதா ஊக்குவிக்கும் ஊடகங்களால் சூழப்பட்ட இந்த வேளையில் தான் நாம் தினசரி வாழ்வில் நேரடியாக பேச கூட தயங்குகிறோம்.
நமக்குத் தேவை சில சொற்களை தனிமையில் பயமின்றி பேசும் அவகாசம். நான்கு கண்கள் மட்டுமே உள்ள அந்தரங்கம். அந்த கணத்தில் நம் மீதே நமக்கு நம்பிக்கை பிறக்கிறது. உடனே காதலியை / காதலனை முழுமையாக நம்பத் தொடங்குகிறோம்.
Read More

Saturday, 26 November 2011

ஹர்பஜன் சிங்கிடம் இல்லாத ஒன்று அஷ்வினிடம் உள்ளது



97 நவம்பரில் அனில் கும்பிளே இண்டிபெண்டன்ஸ் கோப்பை அரையிறுதியில் சயத் அன்வரால் ஒரு ஓவரில் தொடர்ச்சியாக சிக்சர்கள் விளாசப் பட்ட காரணத்தால் அணியில் இருந்து சற்று காலம் விலக்கி வைக்கப்பட்டார். அனில் உள்ளூர் பயிற்சியாளர்களிடம் அலோசித்து தன் பிழையை அறிந்து தயார் ஓட்டத்தில் சில அடிகள் குறைத்து திருத்தி ரஞ்சி கோப்பைக்கு திரும்பு விக்கெட்டுகள் குவித்து தேசிய அணிக்கு திரும்பிய போது அவரது இடம் பத்திரமாக இருந்தது. இது போல் கும்பிளே தன் ஆட்டவாழ்வில் ஏகப்பட்ட மறுவரவுகளை நிகழ்த்தினார். 2002இல் கங்குலிக்கு கீழ் தொடர்ந்து இரு டெஸ்டுகள் வெளியேற்றபட்ட போது மூன்றாவது டெஸ்டில் உடைந்த தாடையில் பெரிய கட்டுடன் பந்து வீசி அதிர்ச்சியான பிரையன் லாராவை ஒரு உயரப்பந்தால் வெளியேற்றியது, வெளியூரில் அவர் வெறும் மிதவேக வீச்சாளர் சுழலர் அல்ல என்ற தொடர் புகாரை பொய்யாக்க ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் சோபித்து டெஸ்டு ஆட்டங்களை வென்று தந்தது என ஒரு சுயமுன்னேற்ற நூலுக்கான பல கிளாசிக்கல் தருணங்கள் கும்பிளேவின் ஆட்டவாழ்வில் உள்ளன. அவர் தொடர்ந்து தன் குறைபாடுகளை கடந்து விஞ்சியவராக இருந்தார். அவருக்கு முன் இருந்த பேடி, பிரசன்னா, சந்திராவிடம் இருந்தும், பின் வந்த ஹர்பஜன் இடமிருந்தும் கும்பிளே இவ்வாறு வேறு பட்டார் முன்னோடி மூவர் இயல்பான திறமையை கொண்டு போதுமான அளவு சாதித்தனர்; கும்பிளே சுமாரான திறமையை கொண்டு போதுமானதற்கும் அதிகமாக சாதித்தார்; ஹர்பஜன் மிக அதிகமான திறமையிருந்தும் தொடர்ந்து தனக்குத் தானே நிழல் யுத்தம் புரிந்து சோர்ந்து போகிறார். கும்பிளேவின் முன்னோடிகள் தம்மளவில் திருப்தியடைந்த தூய கலைஞர்கள் என்றால் ஹர்பஜன் முன்னூறு டெஸ்ட் விக்கெட்டுகள் வீழ்த்தியிருந்தும் தோல்வி பயமும் அவநம்பிக்கையும் மிக்கவராக இருக்கிறார். இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் தொடர்களில் அணியில் இருந்து விலக்கப்பட்ட பின் ஐ.சி.எல் மற்றும் செலஞ்சர், ரஞ்சி தொடர்களில் அவர் அணித்தலைவராக ஆடினார். தோனி, கிரெம் ஸ்மித், லாரா, ஸ்டீவ் வாஹ், பாண்டிங் போன்ற வீரர்கள் அணித்தலைவர்களாக மிக சிரமமான அழுத்தம் மிகுந்த சூழ்நிலைகளில் பொறுப்பெடுத்து ஆடி அணியின் பிற வீரர்களுக்கு உதாரணங்களாக திகழ்ந்தனர். இது எல்லா நல்ல அணித்தலைவர்களிடமும் நாம் காணும் பொதுவான பண்பு. ஹர்பஜன் மட்டும் மாறாக மேற்சொன்ன மூன்று தொடர்களிலும் நெருக்கடி மிகுந்த கட்டங்களில் பந்து வீச மறுத்து இளைய வீரர்களிடம் பொறுப்பை ஒப்படைத்து தப்பித்து கொண்டார். உதாரணமாக சென்னைக்கு எதிரான ஒரு ஐ.சி.எல் ஆட்டத்தில் அவர் பந்தை இளம் கால்சுழல் பந்தாளர் சாஹலிடம் ஒப்படைத்ததை சொல்லலாம். வேறு வழியில்லாமல் போனாலோ நிலைமை சுமூகமானாலோ மட்டும் ஹர்பஜன் திரும்ப பந்து வீச வந்தார். நடந்து வரும் ரஞ்சி தொடர் ஆட்டங்களிலும் ஹர்பஜன் ஒவ்வொரு இன்னிங்சும் முப்பது ஓவர்களுக்கு மேல் வீசி விக்கெட்டுகள் எடுக்க முடியாமல் திணறுவதை கவனிக்கலாம். உள்ளூர் ஆட்டங்களில் கூட அவர் நிதானமாக இல்லை, ஒரு தோற்கடிக்கப்பட்ட படைவீரனை போல் வந்த பாதையிலேயே ஆவேசமாக திரும்ப ஓடுகிறார், துரதிர்ஷ்டவசமாக அவருக்கு முன்னோ பின்னோ யாரும் இல்லை. வெகுதொலைவில் அஷ்வின் உள்ளார். ஆனால் தொலைவில் உள்ள அப்புள்ளி ஹர்பஜனுக்கு பூதாகாரமாக தெரிகிறது.
இந்திய அளவில் கும்பிளே மற்றும் கபிலுக்கு அடுத்தபடியாய் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தின, உலகளவில் முன்னூறுக்கு மேல் விக்கெட்டுகள் பெற்றுள்ளதில் தற்போதும் ஆடிவரும் இரு சுழலர்களில் ஒருவரான ஹர்பஜனை இப்படி நெருக்கடிக்கு உள்ளாக்க, பின்னுக்கு தள்ள ஒரு இளம் அஷ்வினால் எப்படி முடிந்தது? ஹர்பஜனை தொடர்ந்து விமர்சித்து வந்துள்ள சஞ்சய் மஞ்சிரேக்கர் சொல்வது ஹர்பஜன் கடந்த ஐந்தாண்டுகளில் பரிணமிக்கவில்லை மாறாக தேங்கிப் போய் விட்டார் என்பது. இதன் பொருள் ஹர்பஜன் தன் திறன்களை இழந்து விட்டார் என்பதல்ல, அவரது திறன்கள் மழுங்கி விட்டன என்பதே. அப்படி மழுங்கக் கூடியனவா திறன்கள்? தூஸ்ராவை அவர் வீசுவதில்லை என்பது போக ஹர்பஜனால் இப்போதும் பந்தை எகிற வைக்கவும், நேர்பந்தால் மட்டையாளரை ஏமாற்றவும் முடியும். ஆப்ஸ்பின் எனப்படும் உள்வரும் பந்து என்றுமே அவரது இயல்பான பலமாக இருந்ததில்லை. நாடகீயமாக அகவெழுச்சியுடன் கதை சொல்லுகிற ஜெயமோகனுக்கு நகைச்சுவை வரவில்லை என்பதாலோ, எளிய மொழியில் அடக்கமாய் பெரும் மனித அவலத்தை பேசிய அசோகமித்திரனால் ஆர்ப்பாட்டமாய் வன்முறை சித்தரிக்க வராது என்பதால் அவர்கள் மோசமான எழுத்தாளர்கள் ஆவதில்லையே? எரப்பள்ளி பிரசன்னா ஹர்பஜனுக்கு சில தொழில்நுட்ப கோளாறுகள் உண்டு என்கிறார். அதையும் திருத்திக் கொள்ள முடியும். கங்குலி கூட கால்பக்கம் ஆடுவது எப்படி என்பதை ரொம்ப பிற்பாடே கற்றுக் கொண்டார். ஹர்பஜனின் பிரச்சனை உண்மையில் உள்ளார்ந்தது.
அவருக்கு நிகராக முன்னூறுக்கு மேல் விக்கெட்டுகள் கொண்ட உலகின் மற்றொரு மூத்த சுழலரான டேனியல் வெட்டோரி தனது ஆட்டவாழ்வின் முதல் பாதியை வேகவீச்சாளர்களின் நிழலில் கழித்தார். நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் அவர் அப்போதெல்லாம் பத்து ஓவருக்கு மேல் ஒரு இன்னிங்ஸில் வீச முடியாது இருந்தது. ஏனென்றால் நியூசிலாந்து பாரம்பரியமாக மிதவேக, வேக பந்து வீச்சை நம்பி இயங்கும் ஒரு அணி. அவ்வணியில் வெட்டோரி தலையான வீச்சாளரானது கெயிர்ன்ஸ், நாஷ் ஆகியோர் ஓய்வுற்று அவர்களின் வேகவீச்சு துறை பலவீனமான பின்பு தான். பின்னர் வெட்டோரி கடுமையான முதுகு காயம் காரணமாக இடதுகை சுழலருக்கு முதன்மையான பந்தாகிய வெளியே செல்லும் பந்தை வீச முடியாது போனது. பெரும்பாலான வீச்சாளர்கள் இக்கட்டத்தில் கிரிக்கெட்டில் இருந்தே வெளியே சென்றிருப்பார்கள். ஆனால் வெட்டோரி தன்னை வேறுபட்ட சுழலராக தகவமைத்துக் கொண்டார். உள்வரும் மற்றும் நேரே செல்லும் பந்துகளை வெவ்வேறு வேகங்களில் வீசுவது, பொறுமை, கற்பனை மற்றும் புத்திசாலித்தனம் ஆகியவற்றை பயன்படுத்தி தொடர்ந்து இன்றும் ஒரு அபாயகரமான சுழலராக நிலைக்கிறார். ஹர்பஜன் அறிமுகமான புதிதில் அவருக்கு சில அனுகூலங்கள் இருந்தன.
அவரது தூஸ்ரா எனப்படும் வெளியே செல்லும் பந்து, உள்வரும் பந்தின் உயரம் மற்றும் அவரது பொதுவான புதுமை. அவரை அடித்தாட பல மட்டையாளர்களும் ஆரம்பத்தில் முயன்று வெளியேறினர். இந்திய ஆடுகளங்களில் எதிரணியினர் அதிரடியாக ஆடும் போது தூஸ்ரா அவருக்கு உதவியது. தடுத்தாடினால் பவுன்ஸ் காரணமாக ஷார்ட் லெக், சில்லி பாயிண்டில் பிடிக்கப்பட்டு மட்டையாளர்கள் வெளியேறினர். கும்பிளே மறுமுனையில் ஆடினால் மட்டையாளர்கள் துரியோதனன் காந்தாரி முன் நின்றது போல் ஹர்பஜனிடம் எளிதில் மாட்டிக் கொண்டனர். ரெண்டாயிரத்தின் முதல் பாதி இவ்வாறு ஹர்பஜனுக்கு பொற்காலமாக விளங்கியது. பின்னர் கும்பிளே விலகினதும் ஹர்பஜன் மேல் நெருக்கடி அதிகமானது. ஆனால் ஹர்பஜன் பொறுப்பின் பாரத்தை தாங்க தயாராக இல்லை. அவர் தனிப்பட்ட சவால்களை ஆக்ரோஷமாக சந்திக்க விரும்பும் சர்தார்ஜியே அன்றி பொறுமையாக பெரும் காலச்சுமைகளை, வரலாற்று எதிர்பார்ப்புகளை தோளில் ஏந்தும் கும்பிளே அல்லது முரளிதரன் அல்ல. இதனால் தனக்கு தோதாக இல்லாத சூழல்களில் பாதுகாப்பாக மட்டும் வீச முற்பட்டார். சவாலாக அவற்றை ஏற்றுக் கொண்டு இங்கிலாந்தின் கிராம் ஸ்வான் போல் எதிர்தாக்குதல் தொடுக்க முயலவில்லை. சுவாரஸ்யமாக அசருதீன் மற்றும் தோனியை போல் அல்லாது ஹர்பஜனை அதிகமாக தலைமை தாங்கின கங்குலி எதிரணியை வேக வீச்சாளரர்களால் பிரதானமாய் விக்கெட் வீழ்த்தி தாக்க விரும்பியவர். அவரின் கீழ் சாதகமற்ற சூழல்களில் ஹர்பஜன் ஒரு வாளாக அல்ல கேடயமாகவே இருந்தார். இந்தியாவில் ஆடும் போது மட்டுமே ஹர்பஜன் ஒரு வீரியமிக்க வீரராக நோக்கப்பட்டார். ஆனால் ஒரு கட்டத்தில் அவர் ஒரு கட்டத்தில் பிடி கழன்று உறையிலேயே தங்கிப் போய் விட்டார். திராவிடின் தலைமையின் கீழ் இந்தியா பெற்ற அநேகமான தொடர் வெற்றிகளும் சரி, தோனியின் வெற்றிகளும் சரி ஸ்ரீசாந்த், ஆர்.பி சிங், சஹீர், இஷாந்த், அமித் மிஷ்ரா, ஓஜ்ஹா ஆகிய வீச்சாளர்களின் முக்கியமான பங்களிப்புகளுடன் ஹர்பஜனின் சிறிய ஆதரவுடனும் நிகழ்ந்தது. திராவிட் மற்றும் தோனியின் இரண்டாயிரத்தின் பிற்பகுதியிலான தலைமை கட்டங்களில் இப்படி இந்திய பந்து வீச்சும், ஒட்டுமொத்தமாக அணியின் தரமும் மேலோங்கிய போது ஹர்பஜன் மெல்ல மெல்ல வீழ்ந்து கொண்டிருந்தார். தனது அணியின் பொற்காலங்களில் ஒரு முரளிதரன், வார்னெ, கும்பிளே போல் அவர் தலைமை வீச்சாளராக அல்லாமல் எளிய காரணிகளில் ஒன்றாக மாறிப் போனார். இக்காலகட்டத்தில் அணி ஹர்பஜனை மீறி செல்ல முடிந்தது அல்லது முயன்றது. இதே வேளையில் தான் ஹர்பஜன் தன் மட்டையாட்டத்தை மெருகேற்றி பல முக்கியமான நெருக்கடி தருணங்களில் அணியை மீட்டவராக விளங்கினார். சொல்லப் போனால் ஆஸ்திரேலியா, நியுசிலாந்து ஆகிய அணிகளுக்கு எதிராக ஹர்பஜன் தன் மட்டையால் தான் பல ஆட்டங்களை வென்றளித்தார். சுவாரஸ்யமாக ஹர்பஜன் மட்டையாடும் போது மேலும் சுதந்திரமாக தோல்வி மனப்பான்மை இன்றி ஆடினார்.
இதே காலகட்டத்தில் இந்திய துணைக்கண்டத்தின் ஆடுகளங்கள் மெத்தனமானவையாக ஹர்பஜனுக்கு தோதற்றதவையாக மாறியதும் கவனிக்கத்தக்கது. அதனால் இந்தியாவில் ஆடினாலும் ஹர்பஜனை எதிர்கொள்வது மட்டையாளர்களுக்கு எளிதாயிற்று. மெத்தனமான ஆடுதளத்துக்கு ஈடுசெய்ய ஹர்பஜன் வேகமாக பந்தை திணிப்பார். ஜெயவர்தனே, காலிஸ் போன்ற மட்டையாளர்கள் அவரை பின்காலில் ஆடும் ஒரு முறையை வழமையாக வெற்றிகரமாக பின்பற்றினர். ஆப் மற்றும் மத்திய குச்சிகளில் இருந்து விலகி நாலு ஓட்டங்களுக்காய் லேட்கட் அல்லது குச்சிகளுக்கு குறுக்கே சென்று மிட்விக்கெட் பக்கமாய் ஒற்றை ஓட்டம். இந்த இரண்டு ஷாட்டுகள் கொண்டே நூற்றுகணக்காக ஓட்டங்கள் அவருக்கு எதிராய் எடுக்கப்பட்டன. ஹர்பஜன் ஓய்வுற்ற தாத்தா போல் தொலைவில் பதித்த விழிகளுடன் தான் தொடர்ந்து தட்டையாகி வருவதை ஏற்றுக் கொண்டார். இப்படி வீட்டுக்கு வெளியிலும் வீட்டுக்கு உள்ளேயும் ஹர்பஜன் எலியாகவே பரிணமித்தார்.
ஹர்பஜனை நாம் ஷோயப் அக்தருடன் ஒப்பிடலாம். இருவரும் அபரிதமான திறமை படைத்தவர்கள். ஆனால் தமக்குள் உள்ள சாத்தானை எதிர்த்து போராடியே சோர்ந்து போனவர்கள்.
ஹர்பஜன் இன்றும் அஷ்வினை விட மேலான திறமையாளர் மட்டும் அல்ல இந்தியாவின் சிறந்த ஆப்-சுழலரும் தான். அவர் முன்னூறு விக்கெட்டுகளை வீழ்த்திய போது சற்று சோர்வாகவே பேட்டியளித்தார். அந்த சாதனை வேளையில் தனக்கு வாழ்வின் தோல்விகளும் ஏமாற்றங்களுமே நினைவு வருவதாய் சொன்னார். அவர் மிக இளமையிலேயே சில ஏமாற்றங்களையும் பின்னடைவுகளையும் சந்தித்தார். முதலில் தேசிய அணிக்குள் வரும் முன் ஒழுக்கமின்மை காரணமாய் தேசிய கிரிக்கெட் அகாடெமியில் இருந்து வெளியேற்றப்பட்டார். பின்னர் அணிக்கு வந்து பிரபலமடைய துவங்கிய போது அவரது பந்துவீச்சு பாணி சந்தேகத்துக்குள்ளாகியது. இந்த விசயங்கள் ஹர்பஜனை தளர்த்திட அவர் கிரிக்கெட்டை விட்டு மனதளவில் அகல தொடங்கினார். அப்போது அவரது அப்பா இறந்து விட குடும்பப் பொறுப்பை ஏற்க வேண்டிய எதிர்பார்ப்பும், ஏமாற்றத்தின் கசப்பும் அவரை ஊக்கப்படுத்தி அணிக்குள் மீள்வருகை நடத்த தூண்டின. ஒருவிதத்தில் ஹர்பஜன் முதிர்ச்சி அடைந்தாலும் அவர் தோல்விக் கூச்சம் மிக்கவராகவும் ஆனார். ஒரு தோல்வியுற்ற ஐ.பி.எல் ஆட்டத்தின் போது தன் அணியை வெறுமனே கேலி செய்ததற்காக ஸ்ரீசாந்தை சீரியசாக எடுத்துக் கொண்டு அறைந்தது ஒரு உதாரணம். அடுத்து இந்திய கிரிக்கெட் நட்சத்திரங்கள் பொதுவாக அனுபவிக்கும் கோடானுகோடி ரசிகர்களின் எதிர்பார்ப்பு அழுத்தமும் அவரை எதிர்மறையாக பாதிக்கிறது.
அஷ்வினை விட ஹர்பஜன் காற்றில் பந்தை நன்றாக சுழல விட்டு லூப் எனப்படும் மிதவைப் பந்தை வீசுபவர். அஷ்வினை விட தந்திரம் மிக்கவர் மற்றும் நல்ல மட்டையாளர். மாறாக அஷ்வினிடம் மூன்று அனுகூலங்கள் உள்ளன. ஒன்று அவரது வேறுபட்ட பந்துகள். அநேகமாக அவரிடம் நான்கு பந்துகள் உள்ளன. ஒன்று உள்ளே வருவது, அடுத்து வெளியே செல்வது, மூன்று நேரே செல்வது, நான்கு டென்னில் பந்து எனப்படும் லெக் கட்டர். அஜெந்தா மெண்டிஸை அல்லது சக்லைன் முஷ்டாக் செய்த தவறு ஒன்றை அஷ்வின் தன் ஆட்டவாழ்வின் துவக்கத்திலேயே தவிர்த்து விட்டார். அதாவது, தன் வேறுபட்ட பந்துகளை அதிகமாக வீசி அதனையே மிகையாக நம்பியிருப்பதில்லை. அவர் பத்து ஓவர்களுக்கு இரண்டு அல்லது மூன்று டென்னிஸ் பந்துகளை தான் வீசுவார். பெரும்பாலும் பயன்படுத்துவது உள்வரும் மற்றும் நேராக போகும் பந்துகள் என்றாலும் மட்டையாளருக்கு எப்போதும் லெக் கட்டர் பற்றின ஒரு எதிர்பார்ப்பு இருந்து கொண்டே இருப்பதால் உள்வரும் பந்து அபாயகரமானதாக மாறுகிறது. அஷ்வின் இவ்வாறு சமயோஜிதமாக தன் வேறுபாடுகளை பயன்படுத்தி தன் முதல் இரு டெஸ்டுகளில் அதிக விக்கெட்டுகளை சாய்த்தார். முதல் கொல்கத்தா டெஸ்டில் ஓவர் தெ விக்கெட் முறையில் பந்து வீசினால் சுலபமாக ஆடி வந்த சந்தர்பாலை சமாளிக்க அவர் ரவுண்ட் த விக்கெட் வந்து குச்சிகளை நேராக தாக்கியது அவரது மாறுபட்ட சளைக்காத கற்பனைக்கு நல்ல உதாரணம். இதுவே ஹர்பஜன் என்றால் லெக் குச்சிக்கு வெளியிலோ ஆப் குச்சிக்கு வைடாக வீசி ஓட்டங்களை கட்டுப்படுத்த மட்டுமே முயன்றிருப்பார். அப்படி ஆகும் என்று எதிர்பார்த்து தான் சந்தர்பால் மிடில் குச்சிக்கு கார்டை மாற்றி நின்றார். உடனே அஷ்வின் ஒரு நேர்பந்தை நழுவ விட சந்தர்போல் எல்.பி ஆனார். அஷ்வினின் இந்த அமைதியான புத்திசாலித்தனத்தை அடுத்து பேசுவோம்.
அவர் ஐ.பி.எல்லில் ஜொலிக்க துவங்கிய போதில் இருந்தே மிக நிதானமாக கிரிக்கெட்டை எளிமையான ஒரு ஆட்டமாக புரிந்து கொண்டு செயல்படும் பாங்கு கவனிக்கப்பட்டது. இதே அமைதி தான் அவருக்கு டெஸ்டு ஆட்டங்களிலும் ஒருநாள் ஆட்டங்களின் நெருக்கடியான சந்தர்பங்களிலும் பயன்படுகிறது. குறிப்பாக அவர் ஒரு ஆட்டத்தில் தான் பந்துவீசும் ஓவர்களை சிறுசிறு கட்டங்களாக பிரித்து அந்தந்த போதுகளில் வேண்டிய சவால்களை மட்டும் எதிர்கொள்ள முயல்கிறார். வேண்டிய நேரத்தில் வந்து ஒரு மட்டையாளரை வீழ்த்த பார்க்கிறார். முடியாவிட்டால் அடுத்த சந்தர்பத்திற்காக காத்திருந்து மற்றொரு மட்டையாளருக்கு குறி வைக்கிறார். அவர் ஒரு ஆட்டத்தில் மொத்தமாக சோபிக்க வேண்டும் என்ற அழுத்தத்திற்கு தன்னை ஆட்படுத்துவதாக தெரியவில்லை. அஷ்வினால் இந்த பண்பை ஒரு பத்தாண்டுகளுக்கு தக்க வைக்க முடியுமா என்பது இப்போதைக்கு கணிக்க முடியாது என்றாலும் ஹர்பஜனுக்கு இதில் ஒரு பாடம் உள்ளது.
ஹர்பஜன் முன்னூறு விக்கெட்டுகள் வீழ்த்தின சாதனை வேளையில் ஒரு நிருபரிடம் தனக்கு ஐநூறு விக்கெட்டுகளாவது வீழ்த்த வேண்டும், அதற்கு அடுத்த ஐந்தாண்டுகள் ஆட வேண்டும் என்றொரு செயல்திட்டத்தை வெளியிட்டார். அது தன்னை சிறப்பாக ஆடத் தூண்டுவதாக இருக்கும் என்றார். சுருக்கமாக ஹர்பஜன் கும்பிளேவின் சாதனையை முறியடித்து இந்தியாவின் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தின பந்துவீச்சாளராக விரும்புகிறார். ஆனால் அவர் புரிந்து கொள்ள வேண்டியது ஒரு வீரர் ஓய்வு கொள்ளும் போது மக்கள் நினைவில் கொள்வது அவரது விக்கெட் அல்லது ஓட்ட எண்களை அல்ல வரலாற்றில் அவர் செலுத்திய பங்கையே. உதாரணமாக கபில்தேவ் 83 உலகக்கோப்பைக்காகவும் கங்குலி தனது அணித்தலைமைக்காகவும், கவாஸ்கர் மற்றும் சச்சின் தமது தேச மத்தியவர்க்கத்தின் தன்னம்பிக்கையை நட்சத்திரமாக திகழ்ந்து இந்திய கிரிக்கெட்டை சுமந்ததற்காகவும் தாம் இன்றும் நினைத்துப் பார்க்கப் படுகிறார்கள். கவாஸ்கர் எத்தனை சதங்கள் அடித்தார் என்றோ கபில்தேவின் விக்கெட் எண்ணிக்கை என்னவென்றோ நாம் கவலைப்படுவதில்லை. வரலாறு எண்களால் கட்டப்படுவதில்லை. தற்செயல்களாலான வரலாற்றுடன் மனிதன் இணைவது தன் அகங்காரம் களைந்து ஈடுபாடு காட்டும் போதே. அதற்கு, ஒரு விளையாட்டை அதன் சவாலுக்காக ஆடும் மனப்பான்மையை ஹர்பஜன் மீட்டெடுக்க வேண்டும். இனிமேல் அவர் சாதனைகளை துரத்துவது பயனற்றது.
தன் ஆட்டத்தில் மகிழ்ச்சி காண முயன்றால் தான் ஹர்பஜனின் ஆட்டம் இனி மேம்படும். அவரிடம் தற்போது இல்லாததும் அஷ்வினிடம் நிரம்ப உள்ளதும் கொண்டாட்டமே..அடுத்தமுறை பந்துவீச தயாராகி சிறகடிக்கும் பறவை போல் இருப்பக்கமும் கைகளை வீசுகையில் நிஜமாகவே அவரது சிறகுகள் திறக்கட்டும்.
Read More

Sunday, 20 November 2011

இன்றைய இலக்கிய வாசகன்



இன்றைய இலக்கிய வாசகன் ஜனரஞ்சக வாசிப்பில் இருந்து சமீபமாக தீவிர இலக்கியம் நோக்கி வந்தவன் அல்லது எந்த வாசிப்பு பயிற்சியும் அற்றவன். அவனுக்கு வாசிப்பு என்பது ஒரு அடையாள அட்டை. முன்னெப்போதையும் விட ஊடகங்களில் நேர்ந்துள்ள திறப்பு காரணமாய் அவனுக்கு எழுத்தாளர்களையும் சகவாசகர்களையும் எளிதில் தொடர்பு கொள்ள முடிகிறது. அவன் இரண்டு காரியங்களை செய்கிறான். மின்னஞ்சல்கள் அனுப்பி, தொலைபேசியில் பேசி எழுத்தாளன் முன் ஒரு தாசனாக பணிகிறான். கையில் பிரசாதம் வாங்கியதும் தான் ஒரு இலக்கிய வாசகன் என்ற அங்கீகாரம் வாங்குகிறான். ஆம் அவன் எதையும் அடைவதில்லை. சிக்கனமாக எளிதாக வாங்கி பத்திரப்படுத்துகிறான்.
இன்றைய வாசகன் எழுத்தாளனுக்கு நிகராக தன்னை பாவித்துக் கொள்வதில்லை. தன் வீட்டில் உள்ள ஒரு புத்தம் புது எல்.சி.டி டீவி மட்டுமே அவனுக்கு தான் புதிதாய் அபகரித்த ஒரு முன்னணி தீவிர எழுத்தாளன். எழுத்தாளனுக்கோ இந்த புதுவாசகன் தன் இணையதள வருகைப்பட்டியலில் சேர்ந்துள்ள ஒரு உபரி எண், தன் நுண்பேசி கால் லிஸ்டில் ஒரு அநாமதேய நபர். முதிர்ச்சியின்மை, அவசரம் மற்றும் பயிற்சியின்மையால் தான் இந்த பரஸ்பர அக்கறையின்மை நேர்கிறது.
நெடுங்காலமாய் வாசகனே இல்லாமல் இருந்த தீவிர எழுத்தாளனுக்கு இன்று தன்னை நோக்கி வரும் ஒரு பத்தாயிரம் வாசகர்கள் பிரமிப்பை ஏற்படுத்துகிறார்கள். இதே பத்தாயிரம் பேர்கள் தாம் தன் போட்டி எழுத்தாளனையும் வாசிக்க போவதாய் சற்று பதற்றம் ஏற்படுகிறது. கற்பனை பெயர்களில் கூட வாசகர்களை உருவாக்கி தமக்குத் தாமே கடிதம் எழுதி தங்கள் இணையதளங்களில் வெளியிடுகிறார்கள். ஒரு கதையில் நீங்கள் அம்மா என்று எழுதிய சொல்லை படித்து நான் நேற்று இரவெல்லாம் அழுதேன் என்று இதே வாசகன் அசட்டுத்தனமாக சொன்னால் ஒரு தீவிர எழுத்தாளன் பத்து ஆண்டுகளுக்கு முன் அதை வறட்டுப் புன்னகையுடன் நிராகரித்திருப்பான். இன்றோ அதை பொருட்படுத்தி உங்களைப் போல் நூற்றுக்கணக்கானோர் கடிதம் எழுதி உள்ளார்கள். அதை எல்லாம் படித்து நானும் அழுதேன் என்று பதில் எழுதுகிறான். மற்றொரு வகை வாசகன் புத்தகத்தை விடுத்து எழுத்தாளனை நாயகனாக்கி கொண்டாடுகிறான். ஒரு எளிய சினிமா ரசிகன் போல் நடந்து கொள்கிறான். கடந்த சில ஆண்டுகளில் நமது வாசகப் பரப்பு மாறி உள்ளதற்கு இது ஒரு உதாரணம்.
மற்றொரு பரிமாணம் உள்ளது. அசலான வாசகனுக்கு தொலைபேசி மற்றும் இணையம் வழியாக புத்தகங்களை அடைவது இன்று எளிதாகி உள்ளது. Facebook மூலம் சக-ஆர்வலர்களை தொடர்பில் வைப்பதும், இலக்கிய நடப்புகளை அறிவதும், தம் கருத்துக்களை சுதந்திரமாக உடனடி பதிவு செய்வதும் லகுவாகி உள்ளது. ஆங்கிலம் அறிந்த தமிழ் வாசகனுக்கு இன்று திறந்துள்ள சாத்தியங்கள் எண்ணற்றவை. ஆனால் இத்தகைய வாசகர்கள் ஒரு சிறுபான்மையினர் மட்டுமே.
(2011 டைம்ஸ் நவ் தீபாவளி மலரில் வெளியான கட்டுரை)
Read More

Saturday, 19 November 2011

இணையம் இன்று இலக்கியத்தை எப்படி பாதித்துள்ளது


கடந்த சில வருடங்களில் இணையம் தமிழ் உரைநடையை கவனிக்கும்படியாய் மாற்றி உள்ளது. சுஜாதா ஒருமுறை குறிப்பிட்டது போல், தொண்ணூறுகளில் தீவிர உரைநடையாளர்கள் சிடுக்காக நீளமாக எழுதுவதை கௌரவமாக கருதினார்கள். பொதுவாகவும் தனிப்பட்ட முறையில் நம்பப்படுவது போல் எனக்கு சளி பிடித்துள்ளது என்பதை சொல்லியாக வேண்டும் என்று நினைக்கிறேன் என்பது போல் எதையும் வளைத்து சுழித்து சொன்னால் மேலானது என்று நினைத்தார்கள். ஒரு புத்தகத்தை சற்று குதர்க்கமாய் பார்க்க முடிந்தால் “கட்டுடைத்ததாய் கோரினார்கள். இணைய வருகையால் நேரடியாக கிளர்ச்சியாக சுருக்கமாக எழுதும் பாணி பிரபலமாகி உள்ளது. இணைய பாதிப்பை நாம் கடந்த பத்து வருடங்களில் தமிழில் புத்தகப் பதிப்பு அடைந்த அபரித வளர்ச்சி மற்றும் இடைநிலை பத்திரிகைகள் பெற்றுள்ள வெற்றியையும் கணக்கில் கொண்டே புரிய வேண்டும்.
கடந்த பத்தாண்டுகளில் ஜெயமோகன், எஸ்.ரா, சாரு உள்ளிட்ட எழுத்தாளர்கள் புனைகதைக்கு நிகராக பத்திகளும் எழுதினார்கள். வாசகர்களை பெருக்கினார்கள். கவனத்தை தொடர்ந்து தக்க வைத்தார்கள். இது அவர்களின் புத்தக விற்பனையை அதிகப்படுத்தியது. எஸ்.ரா இடைநிலை, ஜனரஞ்சக இதழ்களிலும், சாரு மற்றும் ஜெ.மோ தம் இணையதளங்களிலும்.
சாரு இணைய பத்தி எழுத்தை தமிழுக்கு அறிமுகப்படுத்தியவர். வாசகனுக்கு அணுக்கமாக, தன்னிலையாக, கொஞ்சம் அதிரடியாக, நிறைய சுவாரஸ்யமாக படுக்கையறை ரகசியங்கள், சமையலறை விவகாரங்கள், புலம்பல்கள், புகார்களில் இருந்து துவங்கி லத்தீன் அமர இலக்கியத்தில் சென்று முடிவது சாருவின் பாணி. இன்று ஏராளமான இளம் எழுத்தாளர்கள் இணையத்தில் உருவாகி அங்கிருந்து பத்திரிகைகளுக்கும் வருகிறார்கள். இவர்களிடம் சாருவின் வலுவான பாதிப்பை காண முடிகிறது. கட்டுடைக்கும் ஆர்வமின்றி தன்னிலையாக கிளர்ச்சியாக எழுத முயல்கிறார்கள். உடனடியான ஆனால் நிலையற்ற கவனமே நோக்கம்
ஜெ.மோ தன் இணையதளத்தில் வழமையானவற்றை தான் எழுதினாலும் அவரது உரைநடை லகுவாகி நேரடியானதாக மாறி உள்ளது. உலோகம் “அனல் காற்று போன்ற அவரது சமீப நாவல்களும் “சோற்றுக்கடன் போன்ற சிறுகதைகளும் எளிய லட்சியங்களும் வளவள சித்தரிப்புகளும் மிகையான உணர்ச்சிகளும் கொண்டவை. ஜனரஞ்சக வாசகனை தக்க வைக்கும் பதற்றம் இதற்கு காரணமாக இருக்கலாம்.
கனமான கவித்துவ மொழிக்காக அறியப்பட்ட எஸ்.ரா இன்று எளிமையான சற்று உணர்ச்சிகரமான மொழியையே பயன்படுத்துகிறார். “உபபாண்டவத்தில் இருந்து உறுபசியில் இருந்து “துயிலில் அவரது மொழி குறிப்பிடும்படியாய் மாறி உள்ளது. உருவக இறுக்கத்தில் இருந்து உலர்வான சொற்களில் இருந்து இன்று அது மாறி இளகிப் போய் உள்ளது. இதற்கு கடந்த பத்தாண்டுகளில் நிகழ்ந்த மேற்சொன்ன மாற்றங்கள் ஒரு காரணம் எனலாம்.
வேறெந்த இந்திய மொழியை விடவும் தமிழில் தான் அதிகபட்சமாக இணையத்தில் இலக்கியம் வாசிக்க கிடைக்கிறது. 10,000 இலக்கிய வாசகர்களில் கணிசமானோர் இணையத்தில் மட்டும் வாசிப்பவர்கள். பெரும்பாலான எழுத்தாளர்களுக்கு இணையதளம் உள்ளது. பழந்தமிழ் இலக்கியத்தில் இருந்து கடந்த ஐம்பது வருட நவீன இலக்கியம் வரை அநேகமாய் அனைத்து எழுத்தாளர்களின் பல அல்லது ஒரு மாதிரி படைப்பாவது வாசிக்க கிடைக்கிறது. முன்பிருந்த அறியப்படாத எழுத்தாளன் என்ற மர்மவெளி இன்றில்லை. இணையம் நல்கும் சுயபிரசுர வாய்ப்பு எழுத விரும்புபவர்களுக்கு இன்று தரும் சுதந்திரம் அபாரமானது. சுயமேம்பாட்டுக்கும் பரஸ்பர தாக்குதலுக்கு அது மலினப்படுத்தப்பட்டாலும் எதிர்காலம் நம்பிக்கை ஏற்படுத்துவதாகவே உள்ளது.
(2011 டைம்ஸ் தீபாவளி மலரில் வெளியான கட்டுரை)
Read More

Contact Us

So you think we’re the right folks for the job? Please get in touch with us, we promise we won't bite!



Designed By Blogger Templates