நேற்று புக்பாயின் அரங்கில் உயிர்மையின் 9 நூல்கள் வெளியீட்டு நிகழ்வில் எனது “புரூஸ் லீ: சண்டையிடாத சண்டை வீரன்” நூலும் வெளியிடப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டது. நீயா நானா இயக்குநர் ஆண்டனி என் புத்தகம் பற்றி பேசினார்.
ஆண்டனி முன்பே சில அரங்குகளில் பேசி கவனித்திருக்கிறேன். அத்தோடு ஒருமுறை தனி உரையாடலில் அவர் புரூஸ் லீ எப்படி இந்திய-சீனா போரின் போது இந்திய மக்களிடையே பாதிப்பை ஏற்படுத்தினார் எனக் குறிப்பிட்டதும் என்னை பெரிதும் கவர்ந்தது. அப்போதே அவர் தான் என் நூலைப் பற்றி அரங்கில் பேச வேண்டும் என்று முடிவு செய்து விட்டேன். அவர் எதிர்பார்த்தது போல் மிக நன்றாக பேசினார்.
புத்தகத்தின் கருவை, விவாதப்புள்ளிகளை, எழுத்து முறையை சுட்டிக் காட்டி விட்டு பொதுவாக ஒரு ஆளுமையை பற்றி எழுதுகிறவர்கள் தமிழில் அதை ஒரு புகழாரமாக மாற்றி விடக் கூடிய வழமை இருப்பதை சொன்னார். காமராஜ் என்றாலே காமராஜ் ஒரு சரித்திரம் என்று தான் உச்சஸ்தாயில் வர்ணிப்பார்கள். இந்நூல் அப்படியல்லாமல் புரூஸ் லீயின் தவறுகளை, பிரச்சனைகளை கராறாக சித்தரிப்பதை பாராட்டினார். ஆங்கிலத்தில் டி.ஜெ.எஸ் ஜார்ஜ் எழுதின எம்.எஸ்.சுப்புலட்சுமியின் வாழ்க்கைக்கதையோடு இந்நூலை ஒப்பிட்டு இது போன்ற நூல்கள் தமிழில் தொடர்ந்து வந்தால் இந்தியர்களைப் பற்றின வாழ்க்கை நூல்களை எழுதும் பாணியில் ஒரு முக்கிய மாற்றம் வரும் என்று அவதானித்தார்.
சில குறைகளையும் சுட்டிக் காட்டினார். ஒன்று முழுக்க லயிக்காமல் நான் சற்று விலகலுடன் லீ குறித்து எழுதியிருப்பதாக சொன்னார். அடுத்து இந்திய சண்டைக்கலைகளுடன் ஒப்பிட்டு குங் பூவை மேலும் விளக்கியிருக்கலாம் என்றார். இப்படி ஆண்டனியும் தனது பேச்சை முழுக்க பாராட்டு பத்திரமாக இல்லாமல் கராறான விமர்சனமாக முன்வைத்தார். இதுவும் என்னை கவர்ந்தது.
பின்னர் மனுஷ்யபுத்திரன் முகநூல் குறிப்பொன்றில் குறிப்பிட்டது போல் நிகழ்ச்சி மிக நேர்த்தியாக ஆரவாரமின்றி அமைந்தது. பொதுவான இலக்கிய சர்ச்சைகள், கசப்புகள், காழ்ப்புகள் ஏதும் இன்றி. ஆனாலும் விதிவிலக்கு ஒன்று இருந்தது. அது ஜெயமோகனின் பேச்சு. அரைமணிநேர உரையில் அவர் ஓரிடத்தில் கூட சிவகாமியின் நாவல் தனக்கு பிடித்துள்ளதா, ஒரு இலக்கிய பிரதியாக அது வென்றுள்ளதா என எதையும் சொல்லவில்லை. ஓரே ஓரிடத்தில் குரல் இடற இது “ஒரு குறிப்பிடத்தக்க நாவல்” என்றார். அநேகமான நேரம் ரஷ்ய, மலையாள நாவல்களில் அரசு அதிகார அமைப்புகள் எப்படி எந்திரத்தனமாக இயங்குவதை சொல்லியிருக்கிறார்கள் என்பவை விவரித்தார். அவரை இந்நாவல் நிஜமாக கவர்ந்ததா என்பது எங்குமே புலப்படவில்லை. தான் படித்து சிலாகிக்காத நூலைப் பற்றி பேச ஒருவர் இவ்வளவு தூரம் ஏன் பயணித்து வர வேண்டும் என்கிற கேள்வி எனக்குள் எழுந்தது.
இது ஜெயமோகன் என்றில்லை பொதுவாக தமிழின் சீனியர் எழுத்தாளர்களின் பிரபலமானவர்கள் அத்தனை பேரின் தந்திரமும் தான். ஒரு நாவலைப் பற்றி இன்னொரு நாவலாசிரியனை பேசக் கூப்பிட்டால் சுற்றி சுற்றி வந்து பல்டி அடித்து கைத்தட்டு வாங்கி விட்டு போய் விடுவார். சினிமாக்காரர்கள் என்றால் “நான் புத்தகத்தை படிக்கவே இல்லை” என்று டீச்சர் முன் தலைகுனிந்து நிற்கும் பள்ளி மாணவன் போல் வந்து சொல்லி விட்டு சட்டென்று இன்னொரு விசயம் பற்றி ஆவேசமாக பேசிப் போவார்கள். தங்கர்பச்சான் விதிவிலக்காக நேற்று பைம்பொழில் மீரானின் நூலைப் பற்றி மட்டும் பேசினார். அவரது பொதுவான ஆளுமைக்கு முழுக்க மாறுபட்டதாக இருந்தது அந்த தொனியும் முறையும்.
கவிஞர்கள் ஆத்மார்த்தி, மண்குதிரை, ஜெயபாலன் போன்றோர் எளிமையாக நேர்மையாக தந்திரமின்றி பேசினார்கள். அவர்களால் பெயர்களை அநாயசமாய் உதிர்க்கவோ சொற்களை திருகி புஸ்வாணம் விடவோ முடியாமல் போகலாம். ஆனால் குறிப்பிட்ட நூலை வாசித்து அதுகுறித்து மனதில் பட்டதை சொல்ல முயல்வது தெரிந்தது. இலக்கிய விழாக்களில் இவர்களைப் போன்றவர்கள் இன்னும் அதிகமாக மேடைகளில் தென்பட வேண்டும். சியர்லீடர்களின் வேலைக்கு எழுத்தாளன் தேவையில்லை.
No comments :
Post a Comment