சமீபத்தில் தில்லியில் ஓடும் பேருந்தில் இளம்பெண் கூட்ட வன்புணர்வு செய்து கொல்லப்பட்ட நிகழ்வின் போது போலீஸ் பிரதான குற்றவாளி ராம்சிங் குறித்து ஒரு தகவல் வழங்கியது: அவர் ஏற்கனவே குற்றங்களில் வழக்கு பதிவானவர். அவரது மனைவி இறந்து விட்டார். இதன் பொருள் அவர் பொது சமூகத்துக்கு வெளியே இருக்கும் குற்றவாளி. முக்கியமாய் அவர் குடும்ப அமைப்புக்குள் இருப்பவர்.
இத்தகவல் நமக்கு வன்புணர்ச்சியாளர்கள் அனைவரும் சமூக விளிம்பில் இருப்பவர்கள்; அவர்கள் குடும்ப அமைப்புக்குள் இல்லாததால் ஒழுக்க கட்டுப்பாடு அற்றவர்கள் என்கிற பொதுமைப்படுத்தப்பட்ட சித்திரத்தை அளிக்கிறது. ஊடகங்கள் இந்த தட்டையான பிம்பத்தை நன்கு பயன்படுத்திக் கொள்கின்றன. இத்தருணத்தில் ஒரு எம்.பி நமது பிள்ளைகளை நன்றாக ஒழுக்கம் சொல்லித் தந்து வளர்க்காதது தான் அவர்கள் குற்றவாளிகளாக மாறக் காரணம் என அறிவித்தார். ஆனால் உண்மை வேறானது.நமது நாட்டில் அநேகமான வன்புணர்வு குற்றங்கள் குடும்பத்துக்குள் தான் நடக்கின்றன. மற்றவை பெரும்பாலும் ராணுவம், போலீஸ், நிலப்பிரபுக்கள், உயர்சாதி வெறியர்களால் கீழ்த்தட்டு மக்கள் மீதும் பலவீனர்கள் மீதும் நிகழ்த்தப்படுகின்றன. இவர்கள் அனைவரும் சமூகத்தின் மைய அமைப்பில் இருந்து வருபவர்கள் தான். சொல்லப்போனால் அழுத்தமான ஒழுக்க பிரக்ஞை கொண்டவர்கள். ஆனால் தம் ஒழுக்க நம்பிக்கையை தமக்கான ஆயுதமாக பயன்படுத்துகிறவர்கள். இது வேறொரு விவாதம். நாம் இங்கு கேட்கப் வேண்டிய கேள்வி மையநீரோட்ட சமூகமும், குடும்ப அமைப்பும் பிரதனாமாக குற்றவாளிகளுக்கு புகலிடம் அளிக்கும் இந்நிலையில் நாம் குற்றவாளிகளை நமக்கு அப்பாற்பட்ட ஒரு கற்பனையான வெளியில் அடையாளம் காண்பது ஒரு தப்பித்தல் மனநிலை அல்லவா என்பது.
தமிழ் சினிமாவில் குற்றவாளிகளை பொதுவாக விளிம்புநிலை மக்களாக இஸ்லாமியராக அல்லது கிறித்துவர்களாக காட்டுவதே மரபு. இது நமக்கு பழகி விட்டது. ஆனால் ஒரு நாயகனை anti-heroவாக காட்டும் போது அவனை எங்கே நிறுவுவது என்கிற சிக்கல் எழும்.
“நான்” படத்தில் நாயகன் எந்த ஒழுக்க அற விழுமியமும் அற்றவன். “தப்பை சரியாக செய்தால் தப்பே இல்லை” என்கிற சித்தாந்தம் தான் படத்தின் அடிப்படை. முதலில், இப்படி யோசிப்பவனை பொதுநீரோட்டத்தில் இருந்து அகற்றி காட்டுகிறார்கள். அவன் அம்மா ஒழுக்கங் கெட்டவள். அப்பா தூக்கிட்டு சாகிறார். அவன் தன் அம்மாவை கொன்று சிறை செல்கிறான். ஆக இப்படியானவனுக்கு குற்ற வாழ்க்கையன்றி வேறு வழியில்லை என்று நிறுவி விட்டு அவன் தன் தப்பை சரியாக செய்யும் தந்திரங்களை விலாவரியாக சித்தரிக்கிறார்கள். பொதுவாக நமக்கு குற்றங்களை புத்திசாலித்தனமாக செய்யும் பாத்திரங்களைப் பிடிக்கும். குறிப்பாக ஒரு சூழலின் கைதியாக அப்பாத்திரம் இருந்தால் ரசிகர்கள் அவன் குற்றத்தை ஓரளவுக்கு ஏற்றுக் கொள்கிறார்கள். “நானின்” நாயகனும் தனது கையாலாகாத நிலைமையை கண்ணீர் மல்க சொல்லி நம் இரக்கத்தை தூண்டுகிறான்.
“பிட்சா” படத்தில் திருமணத்துக்கு முன்னர் சேர்ந்து வாழும் ஜோடியாக நாயகனும் நாயகியும் வருகிறார்கள். அது குறித்த எந்த நியாயவாதமும் குற்றவுணர்வும் இன்றி எதார்த்தமாக இவ்வுறவை சித்தரிக்கிறார்கள். ஆனால் நாம் இது குறித்து ரொம்பவே பூரிப்படைய வேண்டியதில்லை. அவர்கள் இருவரும் கிறித்துவர்கள். இருவருமே அனாதை இல்லங்களில் வளர்ந்தவர்கள். பின்னர் இருவரும் சேர்ந்து நாயகனின் முதலாளியிடம் இருந்து 2 கோடி பணத்தை ஏமாற்றுகிறார்கள். அப்போது அவர்களுக்கு நெஞ்சு உறுத்தாதா? இயக்குநர் அதற்கு இப்படி நியாயம் அளிக்கிறார்: “நாம் அநாதை இல்லங்களில் எவ்வளவு கஷ்டப்பட்டு வாழ்ந்தோம். இப்படியான பணத்துக்காக எவ்வளவு ஏங்கியிருப்போம். நமக்கு இதுவரை வாய்க்காத வாழ்க்கை இப்போது இதன் மூலம் கிடைக்கவிருக்கிறது”. ஆக அனாதைகள் என்றால் எளிதில் குற்றவாளிகளாகி விடுவார்களா? அவர்களும் கிறித்துவர்களும் தாம் live-in உறவுகளில் இருக்கிறார்களா?
எதார்த்தத்தில் தமிழகத்தில் சமீபத்தில் நடந்துள்ள அநேக குற்றங்கள், கொள்ளை, கொலை உள்ளிட்டு, நன்கு படித்த இளைஞர்களால் தான் நிகழ்த்தப்பட்டன. அவர்கள் பொதுவான ஒழுக்க விழுமியங்கள் புகப்பட்டப்பட்டு நல்ல பள்ளி கல்லூரிகளில் கல்வியளிக்கப்பட்டவர்கள் தாம். அவர்களின் பெற்றோர் சமூகத்தில் நல்ல அந்தஸ்தில் இருப்பவர்கள் தாம். ஜான் டேவிட் நினைவிருக்கிறதா? அவர் சிறையில் இருந்த போது சதா ஆங்கில நாவல்கள் தாம் வாசிப்பார். பெயிலில் வந்த அவர் சென்னை வேளச்சேரியில் ஒரு பி.பி.ஓவில் வேலை பார்த்து அணித்தலைவராக உயர்வு பெற்றார். குற்றங்கள் செய்பவர்கள் அனைவரும் சைக்கோக்களோ முட்டாள்களோ அல்ல. அவர்கள் நம்மைப் போல் சாமான்யர்கள். அப்பா, அம்மா, சகோதர, சகோதரி, நண்பர்கள், கூட வேலை பார்ப்பவர்களிடம் நியாயமாக ஒழுக்கமாக நடந்து கொள்பவர்கள்.
குற்றம் ஒரு போதை அல்லது மனநிலை. அது ஒரு பண்பாடு அல்ல. மேற்கத்திய உளவியலில் இவ்வாறு குற்றவாளியை அவனது வளர்ப்போடு அடையாளப்படுத்தும் ஒரு பாணி இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் வலுப்பெற்றது. ஆனால் பின்னர் இது கடுமையான சர்ச்சைக்குள்ளானது. இன்றும் அறிஞர்கள் ஒரு முடிவுக்கு வரவில்லை. வளர்ந்த சூழலும் மரபணுவும் ஓரளவு குற்றத்தை தூண்டலாம். தூண்டாமலும் இருக்கலாம். மனிதனின் மகத்துவமே தனது சூழலை குறைப்பாட்டை கடந்து மேலெழுவது தானே. அந்த நம்பிக்கை இருப்பதனால் தான் இலக்கியத்துக்கும் தத்துவங்களுக்கும் இன்னும் மதிப்பிருக்கிறது. நம்மிடையே இந்த உரையாடல் சாத்தியமாகிறது.
மேலும் நாம் இன்று கோடானு கோடி மதிப்பிலான பொருளாதார குற்றங்களின் காலத்தில் வாழ்கிறோம். நமது தலைவர்களில், லட்சிய பிம்பங்களில், நாயகர்களில் கறைபடியாத ஒருவர் கூட இல்லை. நமது நாட்டை சூறையாடும் படித்த திறமையான தலைவர்களை மன்னித்து ஏற்று வாழுகிற மனநிலைக்கு இன்று நாம் தள்ளப்பட்டு விட்டோம். குற்றம் என்பது கொலை, கொள்ளை, வன்புணர்வு என்கிற குறுகின விளக்கம் காலாவதியாகி விட்டது. பழங்குடி மக்களை, இஸ்லாமியப் பெண்களை அல்லது ஈழப்பெண்களை ஒரு ராணுவம் வன்புணர்ந்து அழிக்கும் போது அதனை அனுப்பிய, நியாயப்படுத்திய அல்லது பாதுகாத்த ராணுவ ஜெனரல்கள் மற்றும் பிரதமர், அமைச்சர்களும் தாம் பொறுப்பாகிறார்கள். நாம் ஒரு மிகச்சிக்கலான காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
இப்போது நாம் முதலில் செய்ய வேண்டியது குற்ற அச்சைக் கொண்டு கீழிருப்பவர் நெற்றியில் ஒருவர் மாறி ஒருவர் குத்தாமல் இருப்பது தான். குற்றங்கள் மனப்பிறழ்வினால் அல்ல அதிகாரத்துக்கும் பணத்துக்காகவும் தான் பிரதானமாய் செய்யப்படுகின்றன.
தனக்குத் தேவையானதை யார் வேண்டுமானாலும் யாரிடம் இருந்தும் பறித்துக் கொள்ளலாம் என்கிற விழுமியம் இங்கு எப்படி உருவானது என்று நாம் அடுத்து வினவ வேண்டும். இந்த சமூகத்தில் மீண்டும் கொஞ்சம் லட்சியவாதம் உருவாக வேண்டும். ஒருவேளை உயர்ந்த நம்பிக்கைகளை பற்றிக் கொள்வது நம்மை இந்த சிறுமையில் இருந்து மேலெழுந்து வர உதவலாம். இன்னொரு மனிதனின் உரிமைகளை மதிக்க அது நமக்கு கற்றுத் தரலாம். குற்றங்கள் ஒருவிதத்தில் நமது சமூகத்தில் மையத்தில் உள்ள மாபெரும் வெற்றிடம் ஒன்றின் விளைவாக இருக்கலாம். வெற்றிடத்தில் பொத்தையான மனிதர்கள் மட்டுமே உலவ முடியும். நாம் அவ்வாறே மாறி வருகிறோம்.
பொத்தை மனிதர்கள்
-டி.எஸ்.எலியட்
நாங்கள் பொத்தையான மனிதர்கள்
நாங்கள் பஞ்சு திணிக்கப்பட்ட மனிதர்கள்
ஒருவரோடு ஒருவர் சார்ந்தபடி
தலைப்பகுதி வைக்கோலால் நிரப்பப்பட்டு. ஐயோ!
சேர்ந்து முணுமுணுக்கையில்
எங்கள் வறண்ட குரல்கள்
அமைதியாய் அர்த்தமற்று
காய்ந்த புற்களில் காற்றடிப்பது போல்
அல்லது எங்களது வறண்ட நிலவறையில்
கண்ணாடிச் சில்லுகளில் எலியின் பாதங்கள் போல்
வடிவமற்ற உருவம், நிறமற்ற நிறவித்தியாசம்,
முடங்கின ஆற்றல், சைகையற்ற அசைவு,
நேரடிப் பார்வையுடன் கடந்து
மரணத்தின் ராஜ்ஜியத்தை அடைந்தவர்கள்
எங்களை நினைவு கொள்வார்கள் – அப்படியே ஒருவேளை நினைத்தால் – வழி தவறிய ஆவேசமான ஆன்மாக்களாக அல்ல,
வெறும் பொத்தை மனிதர்களாக,
பஞ்சு திணிக்கப்பட்ட மனிதர்களாக.
No comments :
Post a Comment