என் சின்ன வயதில் அண்ணன்மார்கள் டெக்கும் டி.வியும் வாடகைக்கு எடுத்து ஊரில் படம் போடுவார்கள். இரவு ஆரம்பித்து விடிய விடிய ஐந்து படங்கள். எம்ஜியார், சிவாஜி, ரஜினி, கமல் என்று தெருவில் வசூலிக்கிற காசுக்கு ஏற்றமாதிரி ஜனநாயகப்பூர்வமான படம்காட்டல். மாமாக்களுக்கு தெரியாமல் அத்தைகள் கொடுக்கும் கடுகு டப்பா காசுகளுக்கு கரகாட்டக்காரன், சூரியவம்சம் போன்ற படங்களும் காலத்துக்கு ஏற்ப அதில் அடக்கம். சொக்கும் கண்களுடன் மூன்றாவது படம் தாண்டும் முன்பே பக்கத்திலிருப்பவனின் மடியில் அனந்தசயனம் கொள்வது என்போன்ற பொடிசுகளுக்கு வழக்கம். விழித்து பார்த்தால் விடிந்திருக்கும்.
டெக்கும் டிவியும் பக்கத்திலிருக்கும் படிப்பகத்துக்கோ, இளைஞர் சங்க கட்டிடத்துக்கோ இடம் பெயர்ந்திருக்கும். அங்கே அண்ணன்மார்கள் ஸ்பெஷலாக சில படங்கள் பார்த்த பிறகே வீடியோ, கடைக்கு போகும். அதற்குள் "காப்பி" குடித்து விட்டு நாங்கள் அடுத்த ரவுண்டுக்கு அங்கே ஆஜராகி விடுவோம். ஸ்பெஷல் படங்கள் என்பது நீங்கள் நினைப்பது போல அல்ல, பெரும்பாலும் ஜாக்கிஜான் அல்லது புரூஸ் லீ படங்கள் தான்.
புரூஸை விட எங்களுக்கு ஜாக்கியே விருப்ப நாயகன். எங்கே வேண்டுமானாலும் தாவி ஏறுகிற, கையில் கிடைக்கும் பொருட்களை எல்லாம் ஆயுதமாக்குகிற, விதவிதமாக முகசேஷ்டைகள் செய்தபடி சண்டையிடுகிற ஜாக்கிஜானே மனதுக்கும் (உடம்புக்கும்) உகந்தவராக தெரிந்தார். அந்த பள்ளி பருவத்தில் அதிகபட்ச வன்முறையே "வெளிய வா பத்துக்கிறேன்" என்பதாகத்தான் இருக்கும். அந்த அளவுக்கே "வாழைமட்டை" சண்டைக்காரர்களான எங்களுக்கு தமாசான ஜாக்கியின் சணடைகளில் ஈர்ப்பு இருந்தது ஆச்சரியமில்லை. புரூஸ் லீயின் சணடைகள் சீரியசானவை என்கிற நினைப்பும் கூடவே இருந்ததால் அவர் படங்களை பார்த்ததே இல்லை என்றும் சொல்லலாம்.
குமரி மாவட்டத்தில் தான் அதிகமான கராத்தே மற்றும் குங்ஃபூ வகுப்புகள் நடக்கிறதோ என்கிற மாயை எனக்கு உண்டு. காரணம் எந்த பஸ்டாப்பின் பக்கத்திலும் நாக்கு சுளுக்கி கொள்ளும் சைனீஸ்(ஜப்பானீஸ்?) பெயருடைய கராட்டே(குங்ஃ பூ?) வகுப்பிற்கான ஒரு பேனராவது காற்றில் புல்அப்ஸ் எடுத்தபடி தொங்கி கொண்டிருக்கும். பத்தாம் வகுப்பு படிக்கும் போது அசோகன் மாஸ்டரிடம் கிளாசுக்கு போக ஆரம்பித்தேன். அது கராத்தேவா குங்ஃபூவா என்று யோசித்தாலும் என்னால் இன்று ஊகிக்க முடியவில்லை. ஒரு ரப்பர் தோட்டத்தின் நடுவில் ஏதோ தீவிரவாதிகளின் ரகசிய பயிற்சி போல, மயங்கும் மாலை வேளைகளில் தான் வகுப்பு. பயிற்சி காரணாமாவோ என்னவோ அசோகன் மாஸ்டரின் முக அமைப்பு கூட கொஞ்சம் சைனீஸ் கட்டில் தாண் இருக்கும். அவர் கத்தி கத்தி சொல்லி தருகிற "ஊஊச்" "கியா" சத்தம் ரப்பர் மரங்களில் பட்டு எதிரொலிக்கும்.
"உடம்ப தேத்தணுமுன்னா நல்லா புரோட்டாவும் இறச்சியும் வாங்கி தின்னனும்" என்று எனக்கு அட்வைஸ் பண்ணுகிற செல்வின் ரொம்பநாட்களாக கராத்தே கற்று கொண்டிருந்தான் அல்லது கொண்டிருப்பது போல படம் காட்டுவான். புஷ்அப்ஸ் எடுத்து கறுப்பான முஷ்டிகணுக்களை காட்டி டெஸ்கில் குத்துவான். அவனுடைய மாமா ஒரு ஊரறிந்த மாஸ்டர். பெயர் ஜீ.வி பால். மண்ணெண்ணய் ஊற்றி ஓட்டுவதாகசொல்லப்படும் புல்லட்டில் அவர் பட படவென்று சாலையை கிழித்து ஓட்டிச்செல்லும்போது நாங்கள் பிரமிப்புடன் பாத்துக்கொண்டிருப்போம். ஜீ.வி பால் மீதான பிரமிப்பு வகுப்பில் செல்வின் மீதும் கொஞ்சம் புசிந்து கொண்டு இருந்தது.
அவன் தான் புரூஸ் லீ பற்றி அவ்வப்போது கதைகளை எடுத்து விடுவான். தான் மாமாவுடன் சேர்ந்து தங்கள் சொந்த வீடியோவில் புரூஸ் லீ படங்களை நினைத்த நேரத்தில் போட்டு பார்த்து கொள்ளுவார்கள். புரூஸ்லீயை யாராலும் கொல்லவே முடியவில்லை பிறகு சாப்பாட்டில் விஷம் வைத்து தான் கொன்றார்கள். அவரை எதுக்கு கொல்லணும் அப்படி கொல்கிற அலவுக்கு அவர் கெட்டவரா என்று எந்த கேள்விகளும் எழுவதில்லை ஆனால் யாராலும் சண்டையிட்டு கொல்ல முடியாத ஆள் என்கிற பதம் மட்டுமே வசீகரமான பிரமிப்புடன் மனதில் தங்கி இருந்தது. ஆனால் சென்னைக்கு வரும் வரை புரூஸ்லீ படங்கள் பார்த்ததில்லை.
பிறகு புரூஸ் லீ படங்களை பார்த்தபோது அவருடைய சண்டையில் இருந்த சீரியஸ் தன்மை ஜாக்கிஜானிடமிருந்த ஜாலியான பிள்ளை விளையாட்டு சண்டைகளிலிருந்து மாறுபட்டிருப்பது மட்டும் தெரிந்தது. அத்தோடு அதை விட்டு விட்டேன்.
2
அபிலாஷ் எழுதிய புரூஸ் லீ: சண்டையிடாத சண்டை வீரன். சனிக்கிழமை இரவு ஆரம்பித்து ஞாயிறு மாலையில் படித்து முடித்து விட்டேன். எனது மகன் நூடுல்ஸ் கேட்டு அடம்பிடிக்கவும் ஷர்மி எனக்கும் ஒரு பிளேட்நூடுல்ஸ் கொடுத்தாள். இரண்டு நாட்களாக சீனாவில் சுற்றிகொண்டிருந்ததை போல பிரமையில் இருந்த எனக்கு இந்த ஒரு பிளேட் நூடுல்ஸ் அந்த பிரமையின் தொடர்ச்சியை மேலும் சற்று நேரம் நீடிக்கச்செய்து விட்டது.
அபிலாஷின் மொழி புரூஸ் லீயின் அசாத்தியமான சண்டையிலிருக்கும் அழகு போல என்னை வசீகரிக்கிறது. "மிதக்கும் மனநிலை" என்கிற ஒரு சொல்லாட்சியை முன்னுரையில் படித்த ஞாபகம். இந்த மொழி வழியாக அபிலாஷ் உருவாக்கும் புரூஸ் லீயின், குங்ஃபூவின், சண்டைக்கலையின் சித்திரங்கள் ஒரு ஜென் பெயின்டிங்கை போல தண்ணீரின் நெகிழ்வுடன் மனதில் அசைகிறது. வெறும் ஒரு வாழ்க்கைகதை வழக்கமான தட்டைமொழியில் அச்சடிக்கப்பட்ட புத்தகமல்ல இது. புரூஸ் லீயின் வாழ்கையைப் பற்றி சுவாரஸ்யமாக சொல்லி செல்லும் வரிகளுக்கிடையில் சீனாவின் தத்துவம், அழகியல், வரலாற்றுப்பின்னணி, அரசியல், பண்பாடு எல்லாம் ஒரு சினிமாவின் காட்சி பின்புலம் போல விரிந்து புத்தகங்களின் பக்கங்களில் ஓடுகிறது.
“எனக்கு எதிரியே இல்லை. ஏனென்றால் மோதலின் போது “நான்” என்கிற பிரக்ஞையே இருப்பதில்லை” என்பார் லீ. என்பதிலிருந்து சண்டையின் தத்துவத்தை தாவோயிசத்தின் யிங்-யாங்குடன் பொருத்தி விளக்கமளிப்பது வரை ஒரு மூங்கில் விசிறியைப்போல அடுக்கடுக்காக விரிகிறது சண்டையின் நுட்பங்களும், அதன் ஆத்மீகவயப்பட்ட தத்துவங்களும்.
ஒரு வரலாற்று நாயகனின் வாழ்க்கை கதையை மட்டும் சுவராஸ்யமாக படிக்க வேண்டும், அல்லது இன்னும் சற்று ஆழமாக சண்டைக்கலைகலைப்பற்றி அறியவேண்டும்ம, அல்லது அதன் ஆத்மீக, தத்துவ, வரலாற்று இன்னபிற விஷயங்களையும் அறிந்து கொள்ள வேண்டும், என்று பல்வேறு விதமாக வாசிக்க விழையும் அனைவருக்கும் இந்த புத்தகம் தனக்கான பக்கங்களை திறந்து கொள்ளும் என்றே தோன்றுகிறது.
ஒரு ஜென் கவிதையைப்போல சட்டென்று முடிந்துவிடும் புரூஸ் லீயின் வாழ்வை. கவித்துவமுமம், முரண்களும், பிடிபடாத வாழ்க்கையின் புதிர்களுடனும் சொல்லும் இந்த புத்தகத்தில் அவருடைய மரணத்தைப்பற்றிய சொற்கள் எனக்கு மிக முக்கியமாகப்பட்டது. புரூஸ் லீயின் மரணம் ஒரு தொன்மத்திற்கேயுரிய தன்மையுடன் புதிராகவே உள்ளது. ஆனால் அதைவிட அவர் வாழ்வு அளிக்கும் உணர்ச்சிகரமான சித்திரமே நமக்கு முக்கியம் என்கிறார் அபிலாஷ்.
ஒரு சினிமாவைப்பற்றி எவ்வளவு பக்கம் பக்கம் பக்கமாகபேசினாலும் அந்த சினிமாவை பார்க்கும்போது நாமடையும் அனுபவம் நமக்கே உரியது அது போல தான் இந்த புத்தகமும். அதை படித்து அடையும் அனுபவம் உங்களுக்கு எல்லாம் வாய்க்கப்பெற ஆசைப்படுகிறேன். அது இந்த மாதிரி வாழ்க்கைகதைகள் அபிலாஷ் போன்றவர்களால் எழுதப்படுவதே அந்த ஆளுமைகளின் வாழ்வுக்கு நாமளிக்கும் மரியாதை என்பதை உணர்த்தும். அந்த மொழியின் வழியாக புரூஸ் லீ பிறந்து மரணமடைந்து ஒரு தொன்ம நாயகனாக எனக்குள் அமரும் மாயாஜாலத்தை இந்த புத்தகத்தை வாசித்து முடிக்கையில் நானடைந்தேன்.
நேற்றிரவு கனவில் ஒரு சின்ன பாலத்தின் மீது புரூஸ் லீ அவருக்கேயுரிய சிறிய ஆழமான கண்களால் என்னை பார்த்து கொண்டு நடந்து கடந்தார். பாலத்தின் கைப்பிடியில் அமர்ந்து சிரித்து கொண்டிருந்தார் அபிலாஷ். நன்றி அபிலாஷ் என்று சொல்ல தோன்றியது. அதற்கு தேவையில்லை என்பது போல இருந்தது அவரது சிரிப்பு.
No comments :
Post a Comment