யான் மார்ட்டலின் நாவலை சார்ந்து எடுக்கப்பட்டுள்ள Life of Pie சமீபத்தில் வந்த “அவதார்”, “ஹியுகோ” போன்று 3D கிராபிக்ஸில் பெரும் சாதனையை செய்கிறது. இதன் கிராபிக்ஸ் அவதாரை விட நிஜமாக தோன்றுகிறது.
படத்தில் பை பட்டேல் எனும் 17 வயது பாண்டிச்சேரி தமிழ் இளைஞர் பசிபிக் கடலில் ஒரு சிறுபடகில் ஒரு பெரும் வங்காளப் புலியுடன் திசையற்று நாட்கணக்கில் திரிய நேர்கிறது. நாவலில் அவன் மாதக்கணக்காய் கடலில் ஆதரவற்று தவிக்கிறான். ஆனால் படத்தில் எவ்வளவு காலம் என்பது குறிப்பாய் சொல்லப்படவில்லை. இந்த கடற்பயண சாகசங்கள், மன முதிர்ச்சியும் தெளிவும் ஏற்படுத்தும் அனுபவங்கள், வாழ்வின் விழுமியங்கள் மீது ஐயப்பாடுகளை எழுப்பும் குரூரங்கள் ஆகியவை தான் இப்படத்தின் முக்கிய பகுதி.
காட்சிபூர்வமாகவும் தத்துவார்த்தமாகவும் படத்தின் ஆகர்சமும் இக்காட்சிகள் தாம். படத்தின் ஆரம்பமும் துவக்கமும் இவைக்கான தயார்ப்புகள். இருந்தும் இக்காட்சிகளை மிகுந்த கவித்துவம் மற்றும் நுணுக்கத்துடன் இயக்குநர் ஆங் லீ உருவாக்கி இருக்கிறார். மையக்காட்சிகள் பார்வையாளர்களை பெரும் வியப்பளிக்க வைக்கும் போது ஆரம்ப முடிவுக் காட்சிகள் சிரிக்கவும் நெகிழவும் மனம்கசக்கவும் வைக்கிறது.கதையை சுருக்கமாக சொல்லி விடுகிறேன். நாயகன் பை படேலின் அப்பா பாண்டிச்சேரியில் தான் நடத்தும் மிருகக்காட்சி சாலையை காலி செய்து மிருகங்களை விற்று குடும்பத்துடன் கனடாவுக்கு சென்று நிலைப்பட முடிவு செய்கிறார். மிருகங்களுடன் பையின் குடும்பம் ஒரு ஜப்பானிய கப்பலில் பசிபிக் கடலில் பயணிக்கிறது. புயல் தாக்கி கப்பல் கவிழ்ந்து படேலின் குடும்பத்தினர் இறக்க, அவன் ஒரு வரிக்குதிரை, ஒரங்கூட்டன் குரங்கு, கழுதைப்புலி மற்றும் ஒரு புலியுடன் ஒரு சிறுபடகில் கடலில் தத்தளிக்கிறான். பிற மிருகங்கள் இறந்திட பையும் புலியும் மட்டும் இயற்கையுடன் போராடி பிழைக்கிறார்கள். இறுதியில் கரையை வந்தடைய புலி வனத்துக்கு திரும்ப பை காப்பாற்றப்பட்டு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்படுகிறான்.
பை தன் கதையை முதலில் கப்பலின் பிரதிநிதிகளான ஜப்பானிய அதிகாரிகளிடம் சொல்கிறான். அடுத்து பல வருடங்களுக்குப் பின் நாற்பது வயதில் நாவலாசிரியர் யான் மார்ட்டலிடம் மீண்டும் சொல்கிறான். அவனிடம் இரு கதைகள் உள்ளன. இரண்டில் எது உண்மை என்கிற புதிர்த்தன்மை தான் இப்படத்தின் முக்கிய சுவாரஸ்யம். கதைக்குள் கதை என்கிற பிரதானமான இலக்கிய உத்தியை திரையில் ஆங் லீ அற்புதமாக கையாண்டிருக்கிறார். இலக்கிய பண்டித உணர்வு நமக்கு தோன்றாதபடி.
ஆங் லீயின் “Crouching Tiger Hidden Dragon” இந்தியாவில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. குறிப்பாக சாகச சண்டைக் காட்சிகள். காற்றில் பறந்து நிகழ்த்தப்படும் தற்காப்பு கத்திச் சண்டைகள். இச்சண்டைகளின் அழகியலும் கவித்துவமும் நம்மை மீண்டும் மீண்டும் பார்க்க வைத்தன. சண்டையிடுபவர்களின் தத்தளிப்பும் ஏற்புநிலையும் நிலையமைதியும் இவை வெறும் சண்டைகள் அல்ல என தோன்ற வைத்தது. ஆங் லீயின் படங்களின் ஆதார அக்கறை வாழ்வின்/இயற்கையின் குரூரத்தன்மையை நமது அற நம்பிக்கைகளின் அடிப்படையில் எப்படி புரிந்து கொள்வது என்பது.
சின்ன வயதில் நாம் கற்கும் அற-ஒழுக்க விழுமியங்கள் வளர வளர பொய்த்துப் போக ஆரம்பிக்கின்றன. யோசிக்கிறவர்கள் ஒன்றில் விழுமியங்களை அல்லது விழுமியங்களின் அடிப்படையான இறைநம்பிக்கையை நிராகரிக்கிறார்கள். வாழ்வின் பொதுநம்பிக்கைகளோடு தொடர்ந்து போராட தயாராகிறார்கள். இன்னொரு வகையினர் விழுமியங்களும் மரபும் தமக்கு எளிய வகையில் ஒரு பிடிப்பையும் அர்த்தத்தையும் முக்கியமாக பிறர் மீது அதிகாரத்தை செலுத்தவும் உதவுவதை அறிந்து வாழ்வு முழுக்க அவநம்பிக்கையாளர்களுடன் பொருத தயாரிகிறார்கள். ஆனால் இருதரப்பினரும் தம் நம்பிக்கைகளால் ஒரு கட்டத்தில் இறுகிப் போகின்றனர். அதனைக் கடந்து பரிசீலிக்க மறுக்கிறார்கள். Life of Piயில் பை பட்டேல் ஓரிடத்தில் சொல்கிறான்: “சந்தேகங்களும் கேள்விகளும் தான் இறைவிசுவாசத்தை வலுப்படுத்த உயிர்த்திருக்க வைக்க உதவுகின்றன”.
நாம் மேலே பேசின வகையறாக்களில் பை பட்டேல் மூன்றாவதாக வருகிறான். அவன் திறந்த அச்சமற்ற மனம் கொண்டவன். வாழ்வின் பிரவாகத்துக்கு தன்னை ஒப்புக் கொடுக்க எப்போதும் தயாராக இருப்பவன்.
படத்தில் இரு தர்க்கவாதிகள் வருகிறார்கள். ஒன்று பை படேலின் அப்பா. பை சிறுவயதில் அனைத்து மதங்களையும் பின்பற்ற விழையும் போது அவனது அப்பா அவனை கண்டிக்கிறார். எல்லா மதங்களையும் பின்பற்றினால் எதையும் புரிந்து கொள்ள முடியாது என்கிறார். ஆனால் பைக்கோ ஒரு மதத்தை தர்க்கரீதியாக அறிவது முக்கியமல்ல. மாறாக அவன் அனைத்து மதங்களிலும் வெவ்வேறு அம்சங்களை தேடுகிறான். அவனை மலையை தூக்கிப் பறந்த அனுமனின் பிரம்மாண்ட வலிமையுடன் தோல்வியையும் வலியையும் குற்றங்களையும் விரும்பி சுமந்த கர்த்தரின் மானுடநேசமும் ஈர்க்கிறது. அவன் தொடர்ந்து வாழ்வின் பொருள் குறித்த தன் கேள்விகளை எழுப்பியபடியே இருக்கிறான். இந்துமதத்தின் சடங்குகளும் தொன்மங்களும் அவனை ஆகர்சிக்கின்றன. இஸ்லாமிய பிரார்த்தனை முறைகளை விருப்பமாக பின்பற்றுகிறான். ஒரு காற்றுக்குமிழியைப் போன்று பறந்து கொண்டே இருக்கிறான். அவன் அப்பா அவனிடம் மதம் என்பது முதலில் வசீகரமாகத் தான் இருக்கும், ஆனால் அது அடிப்படையில் இருண்மை மிக்கது; மதத்தின் வெறுமைக்குள் மனிதன் தொலைந்து போவான் என அறிவுறுத்துகிறார். ஆனால் பை தன் இறைதேடலை தொடர்ந்த படியே இருக்கிறான்.
இறைநாட்டத்தை விட பையின் பிரதான பண்பு அவனது வாழ்க்கை குறித்த உற்சாகம், ஏற்புமனநிலை, நேர்மறை அணுகுமுறை எனலாம். இருளைப் போன்றே மட்டற்ற வெளிச்சமும் நம்மை குருடாக்குவது தானே. பட்டேலின் கட்டற்ற நேர்மறை நம்பிக்கை கண்ணைக் குருடாக்கும் வெளிச்சம் போல அவனை தீமையை புரிந்து கொள்ள அனுமதிப்பதில்லை. ஆனாலும் அவன் இன்னொரு பக்கம் தீமையால் ஆக்ர்சிக்கப்பட்டுக் கொண்டும் இருக்கிறான்.
அவனது அப்பாவின் மிருகக்காட்சி சாலையில் ஒரு வங்காளப் புலி உள்ளது. அதன் அசலான பெயர் Thirsty. அது தண்ணீர் குடிப்பதில் மிகுதியான ஆர்வம் கொண்டது என்பதால் அதனைப் பிடித்து மிருகக்காட்சி சாலைக்கு விற்ற ரிச்சர்ட் பார்க்கர் அதற்கு அப்பெயர் அளிக்கிறான். ஆனால் ஒரு குமாஸ்தா பெயரை எழுதும் போது இடம்மாற்றி விட ரிச்சர்ட் பார்க்கர் எனும் பெயர் புலிக்கு கிடைத்து விடுகிறது. படம் முழுக்க ரிச்சர்ட் பார்க்கர் எனும் கண்ணிய கம்பீர முறுக்கான பெயர் ஒரு அபத்த நகைச்சுவையை புலியின் தோற்றத்துக்கு அளிக்கிறது.
ஆனால் தாகம் எனும் முதல் பெயரும் உருவகம் தான். தாகம் மிக்க ஒரு புலி கடல் நடுவே தண்ணீரே கிடைக்காமல் மாட்டி தவிக்கிறது; தண்ணீரில் விழுந்து தத்தளிக்கிறது. தண்ணீரோடு போராடி பிழைக்கிறது. இப்பெயர் புலியின் தப்பித்தல் முயற்சிகளை ஒரு அகப்போராட்டமாகவும் சித்தரிக்கிறது. மிஷ்கினின் படங்களில் போல இப்படத்திலும் பெயர், இடம், குறிப்புகள் எல்லாம் உருவகத் தன்மை கொண்டவை. தடுக்கி விழுந்தால் ஒரு உருவகத்தின் மீதாக இருக்கும்; தடுக்காமல் போனாலோ ஒரு படிமத்தை தவற விட சாத்தியமுண்டு. ஆனால் மிஷ்கினின் படங்களை விட ஆங் லீயிடம் சாகசங்களும் வண்ணங்களின் அழுத்தமும் கதைவேகமும் அதிகம் என்பதால் வெளிப்படையாக அர்த்தங்களின் முள் தொண்டையில் மாட்டாது.
பையின் பெயர் கூட இவ்வாறே. பிஸின் மோலிட்டர் பட்டேல் என்பது தான் அவனது அசல் பெயர். இந்த பிசினை பள்ளியில் பிஸ்ஸிங் என்று மூச்சா என்ற பொருளில் மாணவர்கள் கேலி பண்ணுவதால் அவன் அதை சுருக்கி கணிதக் குறியீடான Pi என மாற்றுகிறான். இக்கணித குறியீடு எண்ணற்ற சாத்தியங்களை குறிக்கக் கூடியது. விமர்சகர் ரோஜர் எபர்ட் இப்பெயர் பை பட்டேலின் ஆதார உளவியலை குறிப்பதாய் சொல்கிறார். அவன் வாழ்வின் எண்ணற்ற சாத்தியங்களை தேடிச் செல்பவன். அவனுக்கு வாழ்வை ஒரு சிறு கருத்தியலாக சுருக்குவதில் விருப்பமில்லை. இவ்விசயத்துக்கு பிறகு வருவோம்.
தர்க்கவாதிகள் குறித்து பேசினோம். முதல் தர்க்கவாதியான பையின் அப்பா தன் மகனின் கற்பனாவாதத்துக்கு ஒரு முடிவு கட்ட ஒரு கொடுங்காரியத்தை செய்கிறார். பைக்கு புலி மீது பெரும் வசீகரம். அவன் புலியை கவிஞர் ராபர்ட் பிளேக் போன்று தீமையின் ஒரு அழகியல் வடிவமாக பார்க்க உத்தேசிக்கிறான். மிக அருகாமையில் இருந்து புலியை பார்ப்பதற்காக அதன் கூண்டைத் திறந்து கறி கொடுக்க முயலும் போது அவன் அப்பா வந்து அவனை காப்பாற்றுகிறார். அவனை திருத்துவதற்காக, அவன் முன்னிலையில் புலிக்கு ஒரு ஆட்டுக்குட்டியை புசிக்க கொடுக்கிறார். அந்த காட்சிபூர்வ குரூரம் அவனது கற்பனாபூர்வ குமிழை உடைக்கிறது. குமிழுக்கு வெளியே வாழ்வு எவ்வளவு அப்பட்டமாக நிணமும் குருதியும் வெறுப்புமாக உள்ளது என அவன் மெல்ல மெல்ல அறிகிறான். ஆனால் இந்த விழிப்புணர்வுக்கு அவன் தயாராக இல்லை. துடுப்பை இழந்த படகோட்டி போலாகிறான்.
யோசித்துப் பார்த்தால் பொதுவாக நாம் குழந்தைகளை வாழ்வின் மறுபக்கத்தை பார்க்க அனுமதிப்பதில்லை. வாழ்வின் தீமையை அறிவதில் இருந்து அவர்களை சதா பாதுகாக்கிறோம். ஏனென்றால் சிறுவயதில் மனிதர்களிடம் தீமை சரளமாய் தன்னியல்பாய் பொங்குகிறது. அவர்கள் அழிவை வன்முறையை வெறுப்பை கொண்டாடுகிறார்கள். பிறகு மெல்ல மெல்ல நாம் அவர்களுக்கு வாழ்வு குறித்த அற்புதக் கனவுகளை பள்ளிகள், சடங்குகள், சமூக நிகழ்வுகள் வழி அளிக்கிறோம். அவர்களை நன்னெறி கொண்டவர்களாக மாற்ற முயன்று நிஜத்தில் அவர்களுக்கு தம் இயல்பு குறித்த கூச்சத்தை குற்றவுணர்வை ஏற்படுத்துகிறோம். அடுத்து வளர்ந்த பின் அவர்கள் வாழ்வின் கறுத்த பக்கத்தை காணும் போது அதில் இருந்து தம்மை விலகுதல் மற்றும் நியாயப்படுத்தல் மூலம் காத்துக் கொள்ளும் சித்தாந்த வலு அவர்களுக்கு கிடைத்திருக்கும். ஆனால் பை படேலுக்கு அவன் தர்க்கவாதி அப்பா அந்த தயாராகும் சந்தர்பத்தை அளிப்பதில்லை.
இரண்டாவது தர்க்கவாதி எழுத்தாளர் யான் மார்ட்டெல். அவர் பையை சந்தித்து அவனது கதையைக் கேட்டு அதனை நாவலாக எழுத வந்துள்ளார். படத்தில் நாற்பது வயது பையுடன் உரையாடும் போது அவரும் தர்க்கரீதியாக அவனது கதையை தனக்கு விளங்கிக் கொள்ள முயல்கிறார். பை இரண்டு கதைகள் சொல்கிறான். ஒன்று அவன் படகில் பயணிக்கும் போது மிருகங்களுடனான அவன் சாகசங்கள் பற்றியது.
கழுதைப்புலி பசியினால் வரிக்குதிரையை கொல்லுகிறது. பிறகு குரங்கைக் கொல்லுகிறது. அப்போது திடீடென்று படகில் கீழ்த்தளத்தில் இருந்து புலி பாய்ந்து வந்து கழுதைப்புலியை கொல்லுகிறது. இக்காட்சி மிக எதிர்பாராதவிதமாய் அமைந்து பார்வையாளர்களை உலுக்கி விடுகிறது. அதன் பயங்கரமும் தான். ஒன்றையொன்று தின்று வாழும் இயற்கை நியதி. ஆனால் பை இதனை ஒரு கருத்தியலாக காண்பதில்லை. அவன் முதலில் அப்புலியிடம் இருந்து தப்பிக்க முயல்கிறான். பிறகு அதனை உயிரோடு வைத்திருக்க பிரயத்தனிக்கிறான். ஏனென்றால் புலிக்கு உணவு தராவிட்டால் அது அவனை கொன்று விடும். மேலும் புலி உயிரோடு இருப்பதன் அச்சம் அவனை தொடர்ந்து விழிப்புடன் வைத்து நடுக்கடல் தனிமையில் அவனை மனம் பேதலிக்காமல் காப்பாற்றும். இப்படித் தான் புலியுடனான அவனது பரஸ்பர சார்பு வாழ்வு ஆரம்பிக்கிறது.
ஒரு காட்சியில் புலி நீரில் குதித்து மீன் பிடிக்கிறது. ஆனால் அதற்கு திரும்ப படகில் ஏற தெரியவில்லை. பைக்கு சிக்கல் அதனை காப்பாற்றவா அல்லது வேண்டாமா என்பது. காப்பாற்றினால் அவனுக்கு ஆபத்து வரலாம். ஆனால் அவனது தர்க்கம் கடந்த அன்பு புலியை காப்பாற்ற சொல்கிறது. காப்பாற்றின பின் அவன் புலியுடனான உறவை ஒரு படிநிலை அடிப்படையில் அமைக்க முயல்கிறான். புலியுடன் மற்றொரு வனமிருகம் போல் பொருதி அதன் அச்சத்தைக் கொண்டு அதனை அடிபணிய வைக்கிறான். புலி அவனுக்கு பணிகிறது. ஆனால் பிறரை போல அவன் புலியை ஒரு கீழ்நிலை மிருகம் போல பாவிக்க தயாராக இல்லை. அதனுடன் தோழமை பாவிக்கிறான். ஒரு கட்டத்தில் இருவரும் பரஸ்பர புரிந்துணர்வுடன் அருகருகே படகில் இருந்து நட்சத்திரங்கள் பூத்து கடலில் பிரதிலிக்கும் காட்சியை பார்த்து வியக்கிறார்கள். புலி கடலடியே ஓடும் உயிரினங்களை தீராத ஆர்வத்துடன் கவனிக்கிறது. அதற்கு காணும் இடமெல்லாம் உணவன்றி வேறில்லை. ஆனால் பட்டேலுக்கு அகண்ட முடிவற்ற வானம் ஒரு தத்துவ வெளியாக தோன்றுகிறது. தனது தனிமையும் உயிர்வாழ்தலுக்கான சவால்களும் இறைவன் தன்னுடன் நிகழ்த்தும் உரையாடல் என நினைக்கிறான்.
பொதுவாக இலக்கியத்திலும் படத்திலும் காளை, புலி இவையெல்லாம் மனித வன்மத்தின் உருவகங்களாகத் தான் வருகின்றன. ஹெமிங்வே, நம்மூரில் கி.ரா ஆகியோரின் படைப்புகளில் காளையோடு வரும் மனிதன் என்பது சமூக மனிதனும் அவனது மற்றொரு பக்கமான ஆதிஇயற்கை மனிதனும் தான். இப்படத்திலும் ரிச்சர்ட் பார்க்கர் எனும் புலி பை படேலின் ஆளுமைப் பிளவு தான். அவன் தன் தீமையை உணர்ந்து அதனை ஆட்கொண்டு அருகருகே அதனோடு அமைதியுடன் புரிந்துணர்வுடன் வாழப் பயிலும் ஒரு “விழிப்புணர்வு” பெற்ற மனிதன். ஹெர்மன் ஹெசெயின் சித்தார்த்தா நாவலின் நாயகனைப் போல. அவன் தன் தீமையை மறுக்கவோ மறைக்கவோ தேவையில்லை. அல்லது இன்றைய தமிழ் எதிர்கலாச்சாரவாதிகளைப் போல தீமையை மிகுதியாக கொண்டாடவும் போவதில்லை. இது ஒரு தர்க்க புரிதல் மட்டுமே. ஆனால் புலி நிஜமாகவே புலி இல்லையா? இப்படம் எழுப்பும் முக்கியமான கேள்வி இது.
பை மற்றொரு கதை சொல்கிறான். இக்கதை அவனை பிற்பாடு நாடி வரும் ஜப்பானிய அதிகாரிகளின் தேவைக்காக தான் உருவாக்கின கதை என்கிறான். ஆனால் எந்தளவுக்கு இது உண்மை என்பது பார்வையாளனுக்கு குழப்பமாகவே இருக்கும். ஏனென்றால் இந்த இரண்டாம் கதை மேலும் எதார்த்தமானது. எதார்த்தமே உண்மை என நம்பப் பழக்கப்பட்ட நாம் இரண்டாம் கதையை தான் நம்பத் தலைப்படுவோம். மேலும் இரண்டாம் கதை மனிதனின் ஆதாரமான குரூரத்தை சித்தரிக்கும் ஒன்று. மனிதன் பிரதானமாய் தீமையால் ஆனவன் என நம்ப விரும்பும் நவீன மனதுக்கும் இரண்டாம் கதையே நெருக்கமாக இருக்கும். இக்கதையில் கப்பல் கவிழ்ந்த பின் படகில் பை தப்பிக்கையில் கூட மிருகங்கள் ஒன்றும் இல்லை. பதிலுக்கு கூட அவன் அம்மா, காயமுற்ற கப்பல் மாலுமி மற்றும் ஒரு சமையற்காரன் பயணிக்கிறார்கள். சமையற்காரன் மாலுமியை இறக்க விட்டு அவனது உடலை மீன் பிடிக்க இரையாகவும் உணவாகவும் பயன்படுத்துகிறான். இதை எதிர்க்கும் படேலின் அம்மாவையும் அவ்வாறே செய்கிறான். கோபத்தின் உச்சத்தில் பை அந்த சமையற்காரனை கொன்று விடுகிறான். பிறகு அவன் நீண்ட நாட்கள் கடலில் தத்தளித்து இறுதியில் காப்பாற்றப் படுகிறான்.
இரண்டாம் கதையை கேட்கும் எழுத்தாளர் முதலில் வரும் கழுதைப்புலி தான் சமையற்காரன், வரிக்குதிரை காயமுற்ற மாலுமி மற்றும் ஓரங்குட்டான் குரங்கு தான் அவன் அம்மா என புரிந்து கொள்கிறார். அப்படி என்றால் புலி? புலி வேறு யாருமில்லை பையே தான் என்கிறார். அதாவது பை பட்டேல் முதலில் நடந்ததை ஒரு மிகுபுனைவு உருவகக் கதையாக மாற்றி முதற்கதையாக கூறுகிறான். இரண்டாம் கதை தான் உண்மையில் முதல் கதை. இதன் மூலம் அவன் தன் வாழ்வில் நிகழ்ந்த அதர்க்கமான நிகழ்வுகளை புரிந்து வாழ்வின் அர்த்தத்தை மீட்க முயல்கிறான்.
ஏனென்றால் அப்பா அவனை புலி ஆட்டைத் தின்பதை பார்க்க வற்புறுத்தியதில் இருந்து அவனால் முன்னிருந்த களங்கமின்மையுடன் கடவுளை அணுக முடியவில்லை. பின்னர் பதின்வயது பை இறைவனின் நன்மையை தொடர்ந்து கேள்வி கேட்ட தஸ்தாவஸ்கியை, வாழ்வின் அர்த்தமின்மையை அபத்தத்தை சித்தரித்த காம்யுவை வாசிப்பதை காட்டுகிறார்கள். பை இந்த கொடூர வாழ்வனுபவத்தை தன் சொந்த புனைவு வழி தாண்டிச் சென்று இறைவனின் இருப்பை அதன் வழி நிறுவிக் கொள்கிறான். புலியுடன் சேர்ந்து வாழ்ந்து கடல் எனும் பேராபத்தில் இருந்து தப்பிப்பது தீமை என்பது முழுக்க தீமை அல்ல என்ற புரிதலைத் தானே அவனுக்கு தருகிறது. ஆக வாழ்க்கை முழுக்க மறுப்புவாதத்திற்குள் அடங்குவதும் இல்லை.
ஆக தன் அம்மாவை கொன்ற சமையற்காரனை கொன்றது பை பட்டேல் தான். இந்த அறமற்ற செயல் அவனுக்கு விநோதமாக வாழ்வின் அடிப்படை இயல்பை புரிந்திட உதவுகிறது. மனிதன் எதையும் செய்யக் கூடியவன். அவன் தீமையின் எந்த எல்லைக்கும் செல்லலாம். அது எப்போது தீமையற்றதாய் மாறுகிறதென்றால் அவன் தன்னை வாழ்வின் நிலையோடு பொருந்தி சூழலின் பகுதியாக மாறிய நிலையில் அதனை செய்யும் போது தான். அப்போது அவன் சுழன்று அடிக்கும் கொடும் சூறாவளியின் பகுதி; ஆழிப்பேரலைகளின் சிறுதுளி. தீமையெனும் பிரம்மாண்டத்தின் பிரிக்க முடியா அங்கம். அவன் ஒரு முழுமை அடைகிறான்.
படத்தின் இரண்டு மூன்று காட்சிகள் இவ்விசயத்தை குறிப்புணர்த்தும். பை பட்டேலின் கப்பலை புயல் தாக்க அவன் மேல்தளத்தில் ஏறி காற்றோடு நிலைப்பட முயன்று தடுமாறி போராடுவான். அப்போது அவனிடம் அச்சமல்ல விளையாட்டு உக்கிரமே உச்சமாக இருக்கும். மற்றோர் இடத்தில் அவனது சிறுபடகு பெரும் மழை மற்றும் புயலும் தூக்கி வீசப்படும். அப்போதும் பை ஏறி நின்று இறைவனை நோக்கி “உனது குரலை இதன் வழி கேட்கிறேன். உன் இருப்பை இதன் வழி அறிகிறேன்” என்பான். இக்காட்சிகளில் எவ்வாறு பை பட்டேல் வாழ்வு நன்மை நிறைந்தது என்கிற மிகை நம்பிக்கையில் இருந்து தீமையை முழுக்க அதன் பிரம்மாண்டத்துடன் ஏற்கும் மனநிலைக்கு வந்து சேர்கிறான் என்பதை நாம் புரிந்து கொள்ள முடிகிறது. இது தான் இந்த கடல் சாகசத்தில், உயிர்ப்போராட்டத்தில் இருந்து அவன் அறியும் பாடம்: இந்த பாடத்தையே தனக்கு கடவுள் மீது நம்பிக்கை ஏற்படச் செய்த நிகழ்வாக அவன் நாவலாசிரியர் யான் மார்ட்டெலிடம் சொல்கிறான்.
மார்ட்டெலுக்குள்ளும் இக்கேள்விகள் உண்டு. அவரும் பையின் அப்பாவை போல நாத்திகர். எல்லா நாத்திகர்களையும் போல அவரும் வாழ்வின் தீமையை இறைவனுடன் பொருத்திக் கொள்ள முடியாது இறைவனை மறுக்கும் நிலையை வந்தடைகிறார். ஆனால் பை ஒருபடி மேலே போய் தீமை வழி இறைவனை அறிந்து கொள்கிறான். சொல்லப்போனால் இது ஒரு இந்திய வைதிக நிலைப்பாடு அல்ல. ஆங் லீயின் ஜென்மனம் தான் பட்டேலின் வழி பேசுகிறது.
யான் மார்ட்டெல் பட்டேலிடம் எது உண்மைக்கதை எனவே அறிய விரும்புகிறார். ஆனால் பை அதற்கு ஒரு எளிய விடையை தர தயார் இல்லை. பை பட்டேல் தனது இருகதைகளில் எது அதிக உண்மையானது என்பதல்ல எது அதிக ஈர்ப்புள்ளதாக இருக்கிறது என கேட்கிறான். மார்ட்டெல் அதற்கு புலியுடனான கதை என்கிறார். இறைவன் இருக்கிறான் என்பதற்கு இந்த ஈர்ப்பே உதாரணம் என்கிறான் பை. இவ்விசயம் எனக்கு அசோகமித்திரன் குறித்த ஒரு சம்பவத்தை நினைவூட்டுகிறது.
அசோகமித்திரனின் ”புலிக்கலைஞன்” எனும் பிரபலக் கதையை வாசித்த ஒரு வாசகர் அவரிடம் வந்து அருகி வரும் ஒரு நாட்டுப்புறக் கலைஞனின் கதையை பதிவு செய்தமைக்காக அவரை நெகிழ்ந்து பாராட்டுகிறார். பிற்பாடு அங்கிருக்கும் ஜெயமோகன் அசோகமித்திரனிடம் தான் இக்கதையை வேறுவிதமாய் ஒரு படைப்பாளியின் ”விஸ்வரூபத்தை” சித்தரிக்கும் கதையாக புரிந்து கொள்வதாக சொல்லுகிறார். அசோகமித்திரன் இந்த விளக்கத்தையும் ஏற்றுக் கொண்டு தன் கதையை ஒரு நாட்டுப்புற கலைஞனின் எளிய வாழ்க்கைப்பிரச்சனை பதிவாக புரிந்து கொள்ளப்படுவதில் தனக்கு எந்த மாறுபாடும் இல்லை என்கிறார். ஏனென்றால் அசோகமித்திரனுக்கு கதை என்பது வாழ்க்கைக்கு மிக நெருக்கமாக வரும் ஒரு வஸ்து. ஒரு கதையை விளக்க நியாயப்படுத்த முயலும் போது அது உண்மைத் தன்மையை இழக்கிறது. அதை ஆளாளுக்கு தேவையானபடி புரிந்து கொள்ளலாம். கதையில் முக்கியம் அது நம்மை உள்ளார்ந்து ஈர்க்கும் தன்மை. அந்த ஆழ்மன வசீகரம் கதையின் உண்மையில் இருந்து, வாழ்வின் உண்மையில் இருந்து தோன்றுவது.
பை பட்டேல் தன் வாழ்க்கைக் கதையையே சொல்கிறான் என்பதால் இங்கு நம் வாழ்க்கையை நாம் புரிந்து கொள்வதில் எத்தனை சதவிதம் கற்பனை என்கிற கேள்வி வருகிறது. கடவுளை புரிதல், வாழ்வை அறிதல் போன்றவை கூட புற உலகை கறுப்புக் கண்ணாடி கொண்டா மஞ்சள் கண்ணாடி வழியா பார்ப்பது என்கிற தனிமனித தேர்வாக இருக்கலாம். அதனாலே பை பட்டேல் எந்த இடத்திலும் தன் அனுபவம் மூலம் இறைவனை விளக்க முயல்வதில்லை. ஆனால் மிக ஆழமாக இறைவனின் அருகாமையை தன் வாழ்வின் ஆக ஆபத்தான தருணங்களில் உணர நேர்ந்ததாக சொல்கிறான்.
நாயகனும் புலியுமாக ஒரு பாசிகளில் மிதக்கும் தீவில் அடைக்கலம் புகுகிறார்கள். அத்தீவு இரவானால் அமிலத்தன்மை பெற்று உயிர்களை புசிக்கக் கூடியது. ஒருநாள் மரமொன்றின் கனியை பறித்து திறக்கும் போது அதன் மத்தியில் இறந்து போன ஒரு மனிதனின் பல்லை அவன் காண்கிறான். இதை இறைவன் தனக்கு விடுத்த சேதியாக கருதி அவன் அங்கிருந்து தப்பிக்கிறான். இது எதேச்சையாகவும் இருக்கலாம். ஆனால் இப்படி புரிவது பையின் தேர்வு.
இளம் பையும் புலியுமாக கடலில் காணும் பிரமிப்பூட்டும் அழகியல் காட்சிகள் மிக கவித்துவமாகவும் கிளர்ச்சிதருவதாகவும் உள்ளன. குறிப்பாக ஒரு காட்சியில் பறக்கும் மீன்கள் பெருங்கூட்டமாக அவர்களின் படகை கடந்து பாய்கின்றன. அப்போது பை மன எழுச்சியுடனும் வியப்புடனும் அவற்றின் வீச்சை எதிர்த்து நின்று போராட முயல புலியோ முடிந்தளவுக்கு அவற்றை வாயில் ஏந்தித் தின்னுகிறது. அப்போது ஒரு பெரிய மீன் மாட்ட அவன் அதனை புலியிடம் இருந்து பிடுங்கி அதனை துரத்தி சின்ன பறக்கும் மீன்களை தின்னும் படி பணிக்கிறான். சுவாரஸ்யமாக படத்தின் ஆரம்பத்தில் பை முழு சைவம். இன்னொரு காட்சி மிதக்கும் தீவில் மீர்க்கெட் எனும் குட்டி கங்காரு போன்ற மிருகங்கள் மத்தியில் அவனும் புலியுமாக காலையில் விழித்தெழுவது. அப்போதும் புலி குழந்தைகள் செடி இலைகளை கிள்ளுவது போல் சில மீர்க்கெட்டுகளை துரத்தி வாயில் கவ்வி விழுங்குகிறது.
முதல் காட்சியில் வரும் பறக்கும் மீன்களின் உக்கிரமான கடலும் இரண்டாம் காட்சியில் தோன்றும் பகலில் உண்ண சுவையான வேர்களையும் இரவில் ஆளைக் கொல்லும் ரசாயனத்தன்மையும் கொண்ட பாசிகளின் மீதெழுந்த வஞ்சமான தீவும் பை பட்டேலின் மனம் தான். ஒவ்வொரு முறையும் அவன் தன் மனதோடு தான் போராடி தப்பிக்கிறான். ஒவ்வொரு முறையும் அவன் மனதில் இருந்து தனித்து நின்று அதைப் பார்க்கவும் செய்கிறான். இப்படியான மிக உளவியல் ஆழம் கொண்ட படிமங்களை இப்படம் நெடுக காணலாம்.
இவ்வளவு தத்துவ விசாரத்தையும் சித்தரிக்கும் வேளையில் படத்தின் ஆதார தொனி ஒரு மேற்கத்திய மனதினுடையதாக இருக்கிறது என்பதையும் சொல்லியாக வேண்டும். “Tree of Life” போல பல இடங்களில் கிறித்துவ போதனை படம் பார்க்கும் உணர்வு நமக்கு ஏற்படுகிறது. உண்மையில் இந்தியர்கள் கடவுளை தத்துவரீதியாக விளக்கி உணர்வு ரீதியாக ஒன்றுபட போராடுபவர்கள் அல்ல. ஒரு பேராபத்து நிகழும் போது ஏன் என ஆங்காரமாய் வினவுவதோ அது கடவுளின் சோதனை என்று அமைதியாவதோ இந்திய மனம் அல்ல. இந்திய மனம் ஒரு பேராபத்தே தன்னால் தான் நிகழ்கிறது என கருதிக் கொள்ளும். எதுவும் கடந்து போகும் என ஆழமாக நம்பும். இப்படத்தில் அப்பா, அம்மாவுடன் பட்டேலுக்கான உறவு கூட ஒரு மேற்கத்திய பாணியில் தான் அமைந்துள்ளது.
ஆங் லீயின் Brokeback Mountain எதார்த்த வகையிலான ஓரின காதலின் கதையை சொல்லும் படம். இப்படத்தில் ஓரின காமமும் சரி, அக்காதலர்களின் ஒருவனின் மரணமும் சரி எவ்விதத்திலும் ஆங் லீயால் விளக்கப்பட்டிருக்காது. காமமும் மரணமும் இயற்கையின் பெரும் சுழற்சியில் மனிதனை அடித்துப் போகும் மீளாக் கனவுகள். அப்படத்தில் உள்ள ஆழ்ந்த சோகமும் கூட கண்மூடித்தனமான ஒரு காலத்தின் முன் தனியாக நிற்கும் ஒரு மனிதன் உணரக் கூடியதே. அதனாலே ஹீத் லெட்ஜர் இப்படத்தில் தன் கொல்லப்பட்ட ஓரினக்காதலனுக்கு பழிவாங்காமல், கோபத்தில் ஆவேசப்படாமல் அமைதியாக அவன் நினைவுக்காக சில ஆடைகளை மட்டும் அவன் குடும்பத்திடம் இருந்து வாங்கி விட்டு திரும்புகிறான். “Crouching Tiger Hidden Dragonஇல்” பை படேலை போன்று தீமைக்கும் நன்மைக்கும் இடையே குழம்பி தத்தளிக்கும் ஜியா லொங் யு எனும் இளம் பெண் வருகிறாள். அவளால் நன்மையின் தரப்பில் நின்று போராடுபவர்கள் மரணிப்பதும் நடக்கிறது. இறுதியில் அவள் தனது குறைபாடு வாழ்வின் முழுமையை தீமை நன்மையோடு அப்படியே ஏற்க முடியாதது தான் என அறிகிறாள்.
Crouching Tiger Hidden Dragonஇன் மற்றொரு முக்கிய பாத்திரம் லீ மொ பாய். லி மொ பாய் ஒரு வாள் சண்டை மேதை. அவரிடம் green destiny என்றொரு அபூர்வ சக்தி கொண்ட வாள் உள்ளது. அவர் தொழில்முறையில் ஒரு சண்டை வீரர். ஆனால் மனதளவில் தன் சண்டைக்கலை மூலம் ஆழமான அமைதியை கண்டடைய முயல்கிறார்; அந்த வாள் சண்டைகளின் போது அவருக்கு வாழ்வின் அடிப்படையான யின் – யாங் பூரணத்தை அடைய உதவுகிறது. ஆனால் அதே பலதலைமுறைகளின் குருதி புரண்ட வாள் அவரை வன்முறையின் பாதையிலும் நிலைத்திருக்க செய்கிறது. வாளைச் சுழற்றாத போதெல்லாம் அவர் அமைதியற்றவராக இருக்கிறார்.
படம் முழுக்க லி மொ பாய் வன்முறை மற்றும் ஆன்ம எழுச்சியின் இரு பாதைகளிடையே தடுமாறி நிலைப்படுவதை சித்தரிக்கிறார் ஆங் லீ. அவர் தன் வாளை நாட்டின் ஆளுநரிடம் ஒப்படைத்து வன்முறை வாழ்வில் இருந்து ஓய்வு பெற முயல்வதில் படம் துவங்குகிறது. ஆனால் குருதியின் தடம் எங்கு சென்றாலும் அவரைத் தொடர்கிறது. வாள் திருடு போகிறது. அதைக் கண்டுபிடிக்கும் பொறுப்பும் ஜியா லொங் எனும் பிறழ்வுபட்ட மேதைமை கொண்ட இளம் வீராங்கனைக்கு சரியான பாதையை காட்டும் பொறுப்பும் அவரைப் பற்றிக் கொள்கின்றன. அத்தோடு அவரது குருவைக் கொன்ற ஜேட் பாக்ஸ் எனும் சூழ்ச்சிக்கார பெண்ணைக் கொன்று பழிவாங்கும் ஆவேசமும் அவரை தொடர்ந்து வாளைப் பயில வைக்கிறது. சொல்லப்போனால் அந்த வாள் தான் படம் முழுக்க பாத்திரங்களை தன் செலுத்துகிறது – அபாயங்களை, அற்புதங்களை, சுய அழிவை, சுய கண்டுபிடிப்பை நோக்கி. விதியின் புதிர்பாதையில் மாட்டிக் கொண்ட தப்பிக்க இயலாத ஆன்மாக்கள் ஒவ்வொருவரும். ஒரு வித்தியாசம் சிக்கல் வெளியே அல்ல உள்ளே இருக்கிறது என்பது; விடுதலை மனப்பொறியில் இருந்து பெறப்பட வேண்டியது என்பது. காலத்தின் பிடியில் இருந்து விடுதலையே இல்லை எனும் ஐரோப்பிய இருத்தலியம் நமக்கு பரிச்சயமானது. சார்த்தர், காம்யுவில் இருந்து ஆங் லீயின் ஆசிய மனம் இவ்வாறு தான் வேறுபடுகிறது.
மேற்சொன்ன படத்தின் துவக்கத்தில் மொ பாய் தான் ஆழமன தியானம் மேற்கொண்ட் அனுபவத்தை தன் காதலி யு ஷு லியனிடம் சொல்கிறார். அவரால் தியானத்தின் ஆழங்களுக்குள் செல்ல முடிகிறது. ஆனால் சட்டென்று தியானத்தில் இருந்து விழித்துக் கொண்டவருக்கு தனது குரு ஏன் அதுநாள் வரை அந்த தியான முறையை தனக்கு சொல்லித் தரவில்லை என புரிகிறது. எவ்வளவு ஆழத்திற்கு சென்றாலும் அவரால் பரவசத்தை அடைய முடியவில்லை. மாறாக மனம் முழுக்க கசப்பால் நிரம்பி இருக்கிறது. லி மொ பை அடிப்படையில் அமைதியாக இல்லை. அவருக்குள் தன் குருவை கொன்ற ஜேட் பாக்ஸ் மீது தீரா கோபம் உள்ளது. அதே போன்று யு ஷு லியனிடம் சொல்ல முடியாத தீராக் காதலும். யு ஷுவை ஆரம்பத்தில் மொ பாயின் நண்பன் தான் காதலித்தான். ஒரு சண்டையின் போது மொ பாயை காப்பாற்றும் பொருட்டு நண்பன் உயிரை தியாகம் செய்கிறான். பிற்பாடு யு ஷுவுக்கும் மொ பாய்க்கும் காதல் மலர்ந்தாலும் நண்பனின் தியாகம் அவர்களுக்குள் கடுமையான குற்ற உணர்வை ஏற்படுத்துகிறது. அதனால் காதலை மறைத்து ஒரு தூய்மையான நட்புறவை நீண்ட காலமாக தக்க வைக்கிறார்கள். லி மொ பாய் வெறுப்புக்கும் காமத்துக்கும் இடையே தத்தளிப்படி இருக்கிறார். அவரது இந்த உளவியல் சிக்கல் தான் அவரது மேதைமைக்கும் ஆன்மிக விழிப்புணர்வுக்கு இடையே தடையாக உள்ளது. அவரைப் போன்று ஒருவரால் இந்த சிக்கலை விடுவிக்கவே முடியாது. மரணம் தான் ஒரே தீர்வு.
ஆங் லீயின் படங்களில் ஊடாக இப்படியான தொடர்ச்சி உள்ளது. அவர் மனிதன் ஏன் வாழ்க்கை முன் தோற்றுக் கொண்டே இருக்கிறான் என்கிற கேள்வியை கேட்கிறார். அது ஏன் நம்மை காயப்படுத்திக் கொண்டே இருக்கிறது என வினவுகிறார்.
பை பட்டேல் இந்தியாவில் இருந்து கிளம்பும் போது தன் காதலியை பிரிகிறான். ஆனால் அவளிடம் திரும்ப வருவேன் என பொய் கூறுகிறான். அவளும் ஏற்கிறாள். அந்த பரஸ்பர பொய் இருவரையும் காயப்படுத்துகிறது. அவனால் மனம் திறந்து விடை பெற முடியாது போகிறது. காதல் எத்தனை வலிமையாக இருந்தாலும் காலத்தின் முன் அது நொறுங்கிப் போகிறது என அவனுக்கு புரிவதில்லை. பின்னர் அவன் கப்பல் விபத்தில் குடும்பத்தை இழக்க இறுதியாக அவர்கள் முகத்தைக் கூட காண முடியாது பெரும் கசப்படைகிறான். இறுதியாக அவன் ரிச்சர்ட் பார்க்கர் எனும் வங்காளப் புலியுடன் மிகவும் நெருக்கமாகிறான். அது அவன் உற்ற தோழனாகிறது. ஆனால் ஒரு வனத்தை அடைந்ததும் புலி திரும்ப நோக்காமல் மீள்பயணிக்கிறது. அதுவே அதன் இயல்பு. அதுவே வாழ்வின் இயல்பும் கூட. வாழ்வு முழுக்க எத்தனையோ உறவுகள் நிறைவுறாதே நம்மை விட்டு அகல்கின்றன. ஆனால் பை பட்டேலால் அதனை ஏற்க முடியாது போக அவன் கத்தி அழுகிறான். அவனை காப்பாற்றி தூக்கி செல்லும் போது அவன் தனக்கு விடைதராத புலியை எண்ணி ஆற்றாமையில் கதறுகிறான். பின்னர் இறுதிக் காட்சியில் எதிர்பாராத விதமாக 40 வயது பை பட்டேலின் குடும்பத்தை காட்டுகிறார்கள். இது நாவலாசிரியர் யான் மார்டெலுக்கு வியப்பளிக்கிறது. ஏனென்றால் இத்தனை இழப்புகள் கசப்புகள் காயங்களுக்குப் பிறகும் அவன் ஒரு புதுக்குடும்பத்தை அடைந்து குற்றவுணர்வின்றி நிறைவான வாழ்க்கை வாழ்கிறான்.
தன்னிடம் விடைபெறாது பிரிந்த உறவுகளுக்காக சிந்த இனி அவனிடம் கண்ணீர் இல்லை. எவ்வளவு இழந்தாலும் வாழ்வு முழுமை கொள்ளுகிறது. இவ்வளவு இழந்த பின்னும் பை எல்லாவற்றையும் பெற்றவனாக இருக்கிறான். இறைவனும் சாத்தானும் இனி அவன் பகுதிகள் அல்ல. கடவுளும் புலியும் ஒரு தெளிந்த பகலையும் அடர்ந்த இருளையும் போல அவனை கடந்து போகிறார்கள்.
உங்களது எல்லாப் பதிவுகளிலும் தத்துவப் பார்வை கலந்த உங்கள் சினிமா விமர்சனங்கள் எப்போதுமே அருமை. அவற்றில் துலங்கும் உங்களது மொழி ஆளுமை ரசமானது. ஆனால் கருத்துகளில் நான் முரண்படுகிறவற்றைச் சுட்டிக்காட்டவும் வேண்டியுள்ளது.
ReplyDelete//எல்லா நாத்திகர்களையும் போல அவரும் வாழ்வின் தீமையை இறைவனுடன் பொருத்திக் கொள்ள முடியாது இறைவனை மறுக்கும் நிலையை வந்தடைகிறார். ஆனால் பை ஒருபடி மேலே போய் தீமை வழி இறைவனை அறிந்து கொள்கிறான். சொல்லப்போனால் இது ஒரு இந்திய வைதிக நிலைப்பாடு அல்ல. ஆங் லீயின் ஜென்மனம் தான் பட்டேலின் வழி பேசுகிறது.//
இந்திய வைதீக நிலைப்பாடு பற்றிய நேர் எதிரான வினோதமான கருத்து. இந்தியர்கள் தீமை வழி இறைவனை அறிந்து கொண்ட அளவு உலகில் எந்த மதமும் அறிந்து கொள்ளவில்லை என்றே சொல்ல வேண்டும். மனித மனதுக்குள் சதா நடக்கும் தர்மம், அதர்மத்துக்கிடையிலான மோதல் பற்றி இந்தியர்கள் உணர்ந்து வெளிப்படுத்திய அளவு யாரும் உணர்ந்து வெளிப்படுத்தியிருக்க முடியாது. தேவாசுர யுத்தம் என்று புராணங்களில் கூறப்படுவதே மனிதனின் மன வெளியில் நன்மை தீமைக்கிடையே நடக்கும் ஊசலாட்டம் கலந்த போராட்டம் தான். கடவுள் பொதுவாக தர்மத்தின் வடிவாக கொண்டாடப்பட்டாலும் அவர் நன்மை, தீமை, பாவம், புண்ணியம் என்ற இரட்டைகளுக்கு அப்பால் மேம்பட்டவர் என்பதை ஆழமாக வலியுறுத்தியிருப்பவர்கள் இந்தியர்கள் தான். திருமாலின் திரிவிக்கிரம அவதாரம் (அதாவது விஸ்வரூபம்) பற்றிய வர்ணனையில் தர்மம் இறைவனின் மார்பு என்றும் அதர்மம் இறைவனின் முதுகு என்றும் வர்ணிக்கப்பட்டுள்ளது. அதாவது தர்மம் கடவுளுக்குப் புறம்பானதல்ல, அவரது அங்கமே. சொர்க்கம், நரகம் கூடக் கற்பிதங்களே. பாவம், புண்ணியம் அதற்கு ஆதாரமான தர்மம், அதர்மம் எல்லாமே கடவுளுக்குள் அடக்கம் (கடவுளுக்குப் புறம்பான சாத்தான் என்ற வேறொரு சக்தியால் கட்டுப்படுத்தப்படுபவை அல்ல என்பதை கவனிக்கவும்.)
//உண்மையில் இந்தியர்கள் கடவுளை தத்துவரீதியாக விளக்கி உணர்வு ரீதியாக ஒன்றுபட போராடுபவர்கள் அல்ல.//
மேலும் வினோதமான கருத்து. இந்தியர்கள் கடவுளைத் தத்துவ ரீதியாக விளக்கியதில்லை என்றால் வேறு யார் விளக்கியிருக்கிறார்கள்? இந்தியர்கள் உணர்வு ரீதியாக இறைவனுடன் ஒன்றுபடத் தயார் இல்லை என்றால் வேறு யார் தயார் என்று சொல்லுவீர்கள் என்ற விளக்கம் தேவை. இன்றைய சீரழிந்த இந்திய மனதைப் பார்த்துவிட்டு இது தான் இந்தியா என்று மொத்தமாக முடிவு கட்டுவது குறுகிய மனோபாவமாகும்.
//ஒரு பேராபத்து நிகழும் போது ஏன் என ஆங்காரமாய் வினவுவதோ அது கடவுளின் சோதனை என்று அமைதியாவதோ இந்திய மனம் அல்ல. இந்திய மனம் ஒரு பேராபத்தே தன்னால் தான் நிகழ்கிறது என கருதிக் கொள்ளும். எதுவும் கடந்து போகும் என ஆழமாக நம்பும்.//
இன்னும் வினோதம்! நடைமுறையில் எளிய ஜனங்களின் மனம் நீங்கள் சொல்வது போல் சிந்திக்கலாம் .(எளிய ஜனங்களின் மனம் உலகம் முழுதும் ஒரே மாதிரி தான் சிந்திக்கும். வேறுபாடுகள் எல்லாம் அறிவுத்திமிருடன் சிந்திக்கத் தெரிந்தவர்களிடம் மட்டுமே) ஆனால் இந்தியத் தத்துவங்கள் நீங்கள் சொல்வது போல் அணுகவில்லை. ஆங்காரமாக வினவி அலசி கடவுளின் செயல் என்று அறிந்தது மட்டுமல்ல, தீமைகளையும் ஆபத்துகளையும் ஏன் தவிர்க்க முயல வேண்டும் என்று கூட யோசித்திருக்கிறது.
உங்களுக்குக் கடவுள் நம்பிக்கை இல்லாவிட்டாலும் முடிந்தால் பாகவதபுராணத்தை ஒரு முறை படியுங்கள். (ஏற்கெனவே படித்திருந்தால் மறு வாசிப்பு செய்யுங்கள்.) குறிப்பாக விருத்திராசுரனின் முன்பிறப்பான சித்ரகேது என்ற அரசனின் கதை. அதில் போகிற போக்கில் பாவ, புண்ணியம், வரம், சாபம் பற்றி எழுப்பப்படுள்ள தர்க்க வாதங்கள் சிந்திக்க வைப்பது மட்டுமின்றித் தீமை குறித்த அழகுணர்ச்சியை முன் வைப்பதாகவும் இருக்கும்.
முந்தைய பின்னூட்டத்தின் தொடர்ச்சி:
ReplyDeleteபாகவதம் மட்டுமின்றிப் பொதுவாக நம் புராண இதிகாசங்கள் எல்லாவற்றிலுமே தீமையும் அழிவும் எரியும் நெருப்பின் பயங்கரம் போலக் கவர்ச்சி நிறைந்ததாக சித்தரிக்கப்பட்டுள்ள இடங்கள் அநேகம். பாரதப் போரின் அழிவு பற்றிய உக்கிர வர்ணனைகளில் கொட்டியிருக்கிற அழகியல் உணர்வு தீமை வழி கடவுளை அறிவதன்றி வேறென்ன?
எல்லாவற்றுக்கும் மேல் பிரளயம் என்ற தத்துவம்! சிருஷ்டியின் முடிவு பற்றி இவ்வளவு கவர்ச்சிகரமாக எந்த மதமும் இனமும் சிந்தித்திருக்க முடியுமா என்பது ஐயமே. இந்தியத் தத்துவப்படியான பிரளயம் என்பது உலகம் அழியும் என்று கிறித்துவர்கள் அடிக்கடி பயமுறுத்துவதிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. படைப்பின் ஒழுங்கு முற்றிலும் கெடுவதையும் அதன் முடிவான பிரளயத்தையும் பரவசப்படுத்தும் சொற்களில் புராணங்கள் வர்ணித்திருப்பதே தனி அழகு.
உண்மையில் பிரளயம் என்பது அழிவல்ல. ஒடுக்கம். அமைதி, ஓய்வு என்றே சித்தரிக்கப்படுகிறது. (ப்ரளயம் என்ற வடமொழிச் சொல்லின் நேர்ப் பொருள் பெரும் ஒடுக்கம் என்பதே. படைப்பு முழுதும் பரம்பொருளுக்குள் ஒடுங்குவதே பேரொடுக்கம்.) அது மீண்டும் துவங்கப் போகும் சிருஷ்டிக்கான மங்களகரமான முடிவு. அழிவின் கடவுளான சிவன் தான் அன்பே சிவம் என்று கூறப்படுவதிலிருந்தே இது தெளிவாகத் தெரியவில்லையா? தீமை வழி கடவுளை அறிவதில் ஜென்னுக்கெல்லாம் முன்னோடிகளான மூத்த குடிகள் இந்தியர்கள் தான்.