தற்போது பரபரப்பாக பரவி வரும் கொடூர காணொளி ஒன்று கசாப்புக்காக பசுக்களை தலையில் சுத்தியால் அடித்து கொல்லுவதைக் காட்டுகிறது. நெஞ்சை பதற வைக்கும் காட்சி. பசுக்கள் எதிர்ப்புணர்வற்று திமிறாமல் காட்டிக் கொடுக்கின்றன. அதைப் பார்க்க ஒரு குழந்தையை மயங்க வைத்து நெரித்துக் கொல்லுவதற்கு இணையாக உள்ளது. ஆனால் நெஞ்சை உறுதியாக்கிக் கொண்டு பார்த்து விடுமாறு நண்பர்களைக் கேட்கிறேன்.
இது பசுவதைக்கு எதிரான காணொளி அல்ல. மேற்கத்திய நாடுகளில் மாட்டுக்கறி அதிகமாக புசிக்கப்படுவதால் இதைவிட எண்ணிக்கை அதிகமான பசுமாடுகள் தொழிற்சாலையில் எந்திரங்கள் மூலம் சில நொடிகளில் அடித்து வீழ்த்தப்பட்டு எந்திரம் மூலமே தோலுரித்து துண்டு துண்டாக்கப்படுகின்றன. இங்கு நம் ஆட்கள் முரட்டுத்தனமாக நேர்த்தியற்று சின்ன சுத்தி கொண்டு அதைப் பண்ணுகிறார்கள். அது தான் வித்தியாசம்.
எனக்கு இதைப் பார்க்கையில் குற்றவுணர்வு ஏதும் எழவில்லை. நான் இன்னும் கூட தயங்காது மாட்டுக்கறி உண்பேன். ஏனென்றால் இந்த உலகத்து ஜீவராசிகளை என் சுயகட்டுப்பாட்டால் வலியில் இருந்து வதையில் இருந்து காப்பாற்றிட முடியும் என நான் கற்பனாவாத கிளர்ச்சி நிலைக்கு போக விரும்பவில்லை. காந்தியைப் போன்றவர்கள் செய்த தவறை நானும் செய்ய விரும்பவில்லை. உலகம் பிரம்மாண்டமானது, சிக்கலானது. இங்கு இதெல்லாம் நடந்தவாறு தான் இருக்கும்.
நான் இதனை நமது அண்டை நாடுகளில் நடந்து வரும் போரின், இனச்சுத்தீகரிப்பின் பெயரிலான மனிதக் கொலைகள், வி.எச்.பி, ஆர்.எஸ்.எஸ் இந்தியாவில் நடத்தும் கலவரக் கொலைகள், மலம் அள்ள நிர்பந்திக்கப்படும் மக்களின் அவலம், சாதி ஒடுக்குமுறை, பெண்களின் மீதான வன்முறை, குடும்பத்தில் இருந்து வேலையிடம் மற்றும் அரசியல் அதிகார மட்டம் வரையிலான ஒருவரின் வளர்ச்சிக்காக இன்னொருவரை தயையின்றி பலிகொடுக்கும் நடைமுறை ஆகியற்றோடு பொருத்தித் தான் பார்க்க விரும்புவேன். நாம் தொடர்ந்து மிகப்பெரிய தீமைகளின், கொடூரங்களின், சுரண்டல்களின், வெறுப்பின் இடையே தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இக்காணொளி அதன் ஒரு சிறுபகுதி. ஒரு ஆதாரம்.
தலையில் அடித்துக் கொல்லப்படும் ஒவ்வொரு பசுவும் எனக்கு ஒரு தனி மனிதன் தான். நாம் இந்த கொடுமைகளின் மத்தியில் கண்ணை மூடிக் கொண்டு வாழ்ந்தபடி இருக்கிறோம். அடிக்கடி கண்ணைத் திறந்து பார்த்துக் கொண்டு இரவெல்லாம் தூக்கம் வராமல் அவதிப்படுகிறோம்.
இதைப் பார்க்கும் ஒவ்வொருவரும் கடந்த பத்து வருடங்களில் அமெரிக்க, சிங்களப்படையினரால் அழிக்கப்பட்ட லட்சக்கணக்கான மனித உயிர்களின் காணொளியையும் யுடியூபில் பார்த்து எதிர்வினை செய்ய வேண்டும். இல்லாவிட்டால் போகிறது போகட்டும் ஒரு பசு தானே என்றிருந்து விட வேண்டும். மனிதர்கள் சாகும் போதும் அப்படித் தானே இருந்தோம்!
மேலும் படிக்கவும் பார்க்கவும்:
1. வலிக்காமல் கொல்லும் இயந்திரம் மூலம் மாடுகளை கொல்ல வைக்கலாமே...
ReplyDelete2. இவர்கள் மனம் மறத்துப் போய் விட்டது...ஒன்றுமே செய்ய முடியாது...