இந்தியாவில் போலியோவை ஒழித்து இரண்டு வருடமாகிறது. யோசித்துப் பார்த்தால் இது ஒரு மகத்தான சாதனை. உலக அரங்கில் துவங்கிய போலியோ அழிப்பு திட்டத்தில் இந்தியா கலந்து கொண்டு கடந்த முப்பது வருடங்களுக்கு மேலாக எண்ணற்ற மருத்துவர்களின் பங்களிப்புடன் ஊர் ஊராக ஒவ்வொரு ஏழை வீடாக சென்று இலவச தடுப்பு மருந்து கொடுத்து ஒரு சமூகப் புரட்சியின் கடப்பாட்டுடன் லட்சியவாதத்துடன் செயல்பட்டிருக்கிறது. இதற்காக 2000இல் இருந்து வருடந்தோறும் சுமார் ஆயிரம் கோடி செலவழித்து வருகிறோம். நம்மூரில் இப்படி நடந்துள்ளது வியப்புக்குரிய காரியம்.
ஒன்று இந்தியாவில் இப்படியாக திட்டமிட்டு கச்சிதமாக ஒரு காரியத்தை பண்ணுவது என்பது கற்பனைக்கு அப்பாலானது. ஆனால் பொதுப்பணித் திட்டங்களில் ஆரம்பத்தில் பண்ண வேண்டியதை கடைசியில் செய்தும் கடைசியில் பண்ண வேண்டியதை ஒருக்காலும் செய்யாமல் இருக்கிற நம் இந்தியாவில் தான் நாம் இந்த போலியா ஒழிப்பு இலக்கை எட்டியிருக்கிறோம் என்பது நிச்சயமாய் சாதனை தான்.
அடுத்து போலியோ ஒரு சிறுபான்மை நோயாக இருந்தும் நாம் அதற்காக ஆயிரம் கோடி வருடந்தோறும் செலவழிக்கிறோம் என்பது. இதை வீண் செலவு என ஒரு பக்கம் அறிஞர்களும் ஆய்வாளர்களும் அரசை விமர்சிக்க அரசு தொடர்ந்து இத்தொண்டை செய்து வருகிறது. உலக அரங்கில் இந்தியாவின் அந்தஸ்தை உயர்த்த பூஜ்யம் நோய்த்தாக்குதல் என்கிற இந்த புள்ளியல் விபரம் முக்கியம். ஆனால் இது வெறும் எண்களை எட்டுவதற்கான அரசியல் சாகசம் என விமர்சிக்கிறவர்கள் இருக்கிறார்கள். வலதுசாரி சிந்தனை கொண்டவர்கள் இவர்கள். இவர்கள் தாம் மேற்கிலும் ஆசிய நாடுகளிலும் ஒருமித்து பொதுப்பணத்தை தொழில் அபிவிருத்திக்கு மட்டுமே செலவழிக்க வேண்டும் என குரல் கொடுப்பவர்கள். தொழில்வளர்ச்சி என்கிற பேரில் நடப்பது கார்ப்பரேட்டுகளுக்கு அரசியல் ஆதரவும் நிதி உதவிகளும் அளிப்பது தான்.
நம்மூரில் எண்பதுகளில் போலியோ வருடத்துக்கு நான்கு லட்சம் வரை பாதிக்கப்பட்டார்கள். தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் வந்த படங்களில் கூட நீங்கள் போலியோ பாதிக்கப்பட்ட குழந்தைகளைக் காண முடியும். எல்லா தெருவிலும் நடக்க முடியாத கால் சூம்பின ஒருத்தர் இருப்பார். போலியோ வைரஸ் ஒரு விநோதமான கிருமி. அதன் உத்தேசம் கை கால் முடம் அல்ல. எதேச்சையாக அது தாக்குகிறவர்களில் ஆயிரத்தில் ஒருவர் மட்டுமே வாதம் பாதிக்கப்படுகிறார்கள். இதனாலேயே போலியோ சிகிச்சைக்கான ஆய்வுகள் உலகளவில் பெருமளவில் நடக்கவில்லை. பாதிக்கப்பட்டவர்களுக்கான காலிப்பர் போன்ற புரோஸ்தெடிக் கருவிகளும் பரவலாக எளிதில் கிடைப்பதில்லை. விலையும் அதிகம். காரணம் ஒன்று பாதிக்கப்படுபவர் எண்ணிக்கை குறைவு. இன்னொன்று இன்றைய தலைமுறை அதில் இருந்து கிட்டத்தட்ட முழுக்க மீண்டு விட்டது. போக்கு இப்படியிருக்க நம் அரசு மட்டும் தன்னந்தனியாக ஒரு சிறு எண்ணிக்கை நோயாளிகளைக் காப்பாற்ற போராடி வந்துள்ளது என்பது நிச்சயம் பாராட்டத்தக்கது.
போலியோ வைரஸ் HIVஐ போலன்றி தடுக்க எளிதானது. எண்பதுகளிலேயே தடுப்பு மருந்து பயன்படுத்தப்பட்டது. ஆனால் பிரச்சாரம் பரவலாக கிராமங்களைப் போய்ச் சேரவில்லை. என் உறவுகளில் உள்ள சுமார் இருபது குழந்தைகளில் யாருக்குமே தடுப்பூசி போடவில்லை. பெற்றோர்கள் அதன் முக்கியத்துவத்தை உணரவில்லை. இந்த குழந்தைகளில் எனக்கு மட்டுமே போலியோ வந்தது. இன்றும் பலர் என்னிடம் ஏன் உனக்கு தடுப்பு மருந்து தரவில்லை எனக் கேட்கிறார்கள். அவ்வளவு எளிய விசயத்தை செய்ய ஏன் உன் பெற்றோர்கள் தவறினார்கள் என்கிறார்கள். என் பெற்றோர் ஏழைகளோ படிப்பறிவு அற்றவர்களோ அல்ல. அவர்களின் இந்த தவறுக்குப் பின் ஒரு இந்தியத்தனம் இருந்தது.
படிப்போ அந்தஸ்தோ பணமோ நமக்கு எந்த நவீனப் பண்புகளையும் தருவதில்லை. எதையும் திட்டமிட்டு கராறாக தொலைநோக்குடன் செய்வது, தர்க்க ரீதியான சிந்தனை செயல்பாடு ஆகியவை இந்திய மனதுக்கு அந்நியமானது. என் அப்பா ஆங்கிலத்திலும் தமிழிலும் ஏராளமாக வாசிக்கக் கூடியவர். தி.க சாய்வு கொண்டவர். சின்ன வயதில் இருந்தே என்னிடம் அறிஞர் அண்ணாவைப் பற்றி பேசி பேசித் தான் வளர்த்தார். ஆக அவர் பகுத்தறிவாளராக இருந்திருக்க வேண்டும். ஆனால் அப்படி இல்லை.
இளமையில் அவர் என்னை பல பிற்போக்குத்தனமான சிகிச்சைகளுக்கு உட்படுத்தினார். ஏனெனில் அவர் அடிப்படையில் பழமைவாதியாகத் தான் இருந்தார். இந்த முரண்பாடு கொண்ட நபர்களை ஏராளம் பின்னால் சந்தித்தேன். ஒப்பிடுகையில் என் அம்மா போன்ற குறைந்த கல்வியறிவு கொண்டவர்களின் அறியாமையை புரிந்து கொள்ள முடிகிறது. என் அம்மா எனக்கு போலியோ வரக் காரணம் நான் குழாந்தையாய் இருக்கையில் எங்கள் வீட்டில் ஒரு நாய் இருந்தது தான் காரணம் என நம்பி வருகிறார். ஆக படிப்பு உள்ளவர்களும் இல்லாதவர்களும் நம்மூரில் ஒரே மாதிரி தான் யோசிக்கிறார்கள்.
இருப்பதை இருக்கிறபடியே விட்டு விட்டால் தானே சரியாய் போகும் என்பது ஒரு இந்திய மனப்பான்மை. இந்த தர்க்க வறுமையைப் பற்றி வி.எஸ் நைப்பால் தனது India Wounded Civilization நூலில் விரிவாக அலசியிருக்கிறார். நம் பிரச்சனை படிப்போ அறிவோ அல்ல. சிந்தனையில் இருக்கிற கோளாறு தான். எதையுமே அலசக் கூடாது, ஆதாரபூர்வமாக தர்க்கரீதியாக யோசிக்கக் கூடாது என்பதில் பிடிவாதமாக இருக்கிறோம். நமக்கு வசதியான விசயங்களை நம்புவதற்கு பல கற்பனைகளை உருவாக்கி கொள்கிறோம். அதில் ஒன்று இந்தியாவில் எல்லாமே உள்ளது, நாம் பல்லாயிரம் வருடங்களாக இப்படித் தான் இருந்தோம், மேற்கத்திய ஆக்கிரமிப்பால் எல்லாவற்றையும் இழந்து விட்டோம், மீண்டும் பழம் பண்பாட்டை மீட்டால் எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வு கிடைத்து விடும் என்பது. ஒரு அறிவியல் நவமுதலாளித்துவ யுகத்தில் நாம் எவ்வளவு பின் தங்கிப் போயிருக்கிறோம் என்கிற தாழ்வுமனப்பான்மையினால் வருகிற எண்ணம் தான் இது.
இந்த எண்ணம் ஒரு மறுப்புவாதத்தை தூண்டுகிறது. என் தலைமுறையில் யாருக்கும் தடுப்பு மருந்து தரவில்லை, என் உறவினர்களும் அதை தன் குழந்தைகளுக்கு செய்யவில்லை நான் மட்டும் ஏன் செய்ய வேண்டும் என என் பெற்றோர்களை யோசிக்க வைக்கிறது. இதே எண்ணம் தான் இந்தியாவில் முன்பு அணுகுண்டு, விமானங்கள் உட்பட்ட அனைத்து தொழில்நுட்பமும் இருந்தது என படுபேத்தலாக சோ போன்றவர்களை எழுத வைத்தது. இன்னொரு புறம் நம் இளையதலைமுறையை அத்தனை நவீன வசதிகளையும் அனுபவித்தபடி நுனிநாக்கு ஆங்கிலம் பேசியபடி பெண்களையும் தாழ்த்தப்பட்டவர்களையும் மிக பிற்போக்குத்தனமாக நடத்த வைக்கிறது. நவீனத்தின் அடிப்படை விழுமியங்களான ஜனநாயகம், சம உரிமை, சுயசிந்தனை, தனிமனித முக்கியத்துவம் ஆகியவற்றை ஒழித்து ஆனால் நவீனத்தின் அத்தனை வசதிகளையும் பயன்படுத்துவதே இந்திய போக்கு. கேட்டால் எங்களுக்கு ஆயிரம் வருட பாரம்பரியம் என்று மழுப்புவார்கள். போலியோவுக்கு கூட ஆயுர்வேதத்தில் மருந்திருந்தது, அதை காணாமல் அடித்து விட்டார்கள் என்று கூட இந்த தருணத்தில் ஒருவர் கூறுவார். இந்த விவாதம் இப்படி நீண்டு கொண்டே இருக்கும்.
போன மாதம் ஒரு பெட்ரோல் பங்கில் ஒரு மிஷினரி கன்னியாஸ்திரி நன்கொடை வசூலித்துக் கொண்டிருந்தார். நான் அவரிடம் சென்று கொஞ்சம் பணத்தைக் கொடுத்து “உங்கள் மிஷினரி ஆஸ்பத்திரி தான் இரண்டு மாத குழந்தையாய் இருக்கையில் என் உயிரைக் காப்பாற்றியது. உங்களுக்கு நன்றிக் கடன்பட்டிருக்கிறேன்” என்று நெகிழ்ச்சியுடன் சொன்னேன். அந்த கன்னியாஸ்திரி புன்னகையுடன் வாங்கிக் கொண்டார். நான் யாருக்கும் என் வாழ்வில் நன்கொடை அளித்ததில்லை. வீட்டுக்கு யாராவது கும்பாபிசேகம் என்று மஞ்சள் துண்டோடு வந்தால் விரட்டி விடுவேன். காரணம் நம்பிக்கையின்மை அல்ல. எந்த சமூகப் பொறுப்பும் இன்றி வெறும் சடங்குகளோடு மட்டும் ஒட்டி உயிர்வாழும் ஒரு மதத்தின் மீதான கோபம் தான். இந்து மதம் என்பது “சம்ஸ்காரா” நாவலில் வருவது போல யாரும் அடக்கம் பண்ண விரும்பாத ஒரு பிணம். அது ஜீவனை விட்டு பல நூறு ஆண்டுகளாகிறது. ஐரோப்பாவில் புத்தொளி காலகட்டம் துவங்கினதுமே அது தன் கடைசி மூச்சை ஒருமுறை இழுத்து விட்டு விட்டது.
இந்தியா போன்ற ஒரு இந்து தேசத்தில் பிறந்ததற்காக நான் ஒவ்வொரு நொடியும் வெட்கப்படுகிறேன். சிறுபான்மையினரான கிறித்துவ மிஷினரிகள் தொழுநோயாளிகள், போலியோ குழந்தைகள், அநாதைகள் என ஒதுக்கப்பட்டவர்களை அணைத்து சேவை செய்யும் போது நாம் இவர்களை கோயில் வெளியே உட்கார வைத்து சில்லறைக் காசு போட்டு புண்ணியம் சேர்க்கிறோம். நோய் என்பது கிருமியால் அல்லது கர்மாவால் வருகிறது என நன்கு படித்த இந்துக்களே வாதிக்கிறார்கள். சமீபமாக இந்து அறநிலையத்துறை ஊனமுற்றவர்கள் கோயிலுக்குள் வரக்கூடாது என்று கூட ஒரு விதிமுறையை பிரஸ்தாபித்தது. இன்னொரு புறம் இந்து நிறுவனங்கள் கரசேவகர்கள், ராமசேனைகளை உருவாக்கி விட்டு அயோத்தியா கோயில் கட்டுவதற்கான செங்கற்களை ஊர் ஊராக பூஜித்து அனுப்புகிறது. கூட்டங்கூட்டமாக சிறுபான்மை மக்களை போலீஸ் உதவியுடன் கொல்லுகிறது. திருப்பதி, திருவனந்தபுரம் பத்மநாதசாமி போன்ற கோயில்களுக்கு கோடிக்கணக்குக்கு சொத்து உள்ளது.
சொல்லப்போனால் அரசாங்க கஜானாவை விட நம் கோயில்களின் கஜானாக்கள் பெரிது. கடந்த வருடம் பத்மநாதசாமியின் ஆயிரம் கோடி மதிப்பிலான நகைகளை பொதுசொத்தாக்க வேண்டும் என்று கோரிக்கை வந்த போது மொத்த மலையாளிகளும் எதிர்த்தார்கள். இங்கு ஜெயமோகனும் அதை எதிர்த்தார். கோயில் சொத்து என்பதே ஒரு முரண்வழக்கு. அது மக்கள் சொத்து. கோயில் ஒரு வர்த்தக நிறுவனம் அல்ல. இந்து நிறுவனங்கள் நினைத்தால் இங்கு மிகப்பெரிய பொது சேவைகளை செய்ய முடியும். இலவச மருத்துவமனைகள், பள்ளி, கல்லூரிகள் நடத்த முடியும். எதற்கெடுத்தாலும் அந்நிய நிதி கொண்டு கிறித்துவர்கள் பிரச்சாரம் செய்வதாக குற்றம் கூறும் இவர்கள் தமது நிதியை மட்டும் பதுக்குவது ஏன்? அடுத்து இங்கு ஒரு சமூகப் புரட்சி நடந்தால் அது கோயில் சொத்துக்களை கைப்படுத்தி பொதுப்பணிக்காக பயன்படுத்துவதற்காகத் தான் இருக்க வேண்டும்.
இந்தியர்கள் தமக்கு ஒரு பண்பாட்டு நோய் இருப்பதாக ஏற்றுக் கொள்ள வேண்டும். அதன் பிறகே சிகிச்சை செய்ய முடியும். புண்ணை மறைத்துக் கொண்டே இருந்தால் அது மேலும் மேலும் அழுகிக் கொண்டே தான் போகும்.
No comments :
Post a Comment