ராஞ்சனா மிக உணர்ச்சிகரமான நாடகியமான தனுஷ் மற்றும் ரஹ்மானின் சில அற்புதமான தருணங்களை உள்ளடக்கிய படம். ஆனால் இது மட்டுமே அல்ல அது வெற்றி பெற்றுள்ளதற்கு காரணம். சொல்லப் போனால் படத்தின் பல திரைக்கதை கோளாறுகள், லாஜிக் நெருடல்கள், தேய்வழக்குகள், மீள்கூறல்கள் காரணமாய் நெஞ்சில் தங்குகிற படைப்பூக்கமுள்ள காட்சி என ஒன்றும் இல்லை என கூறலாம். ஒட்டுமொத்தமாய் ஒரு மனத்திறப்புக்கு இட்டு செல்ல எண்ணிலா காட்சிகளில் ஒன்றாகவோ ஒவ்வொரு காட்சியும் அமைந்துள்ளது. தனியாய் எதற்கும் முக்கியத்துவம் இல்லை. தனியாய் பார்க்கையில் காட்சிகள் இதுவரை பார்த்த எத்தனையோ தமிழ் இந்திப்படங்களின் பிரதியாகவோ தோன்றும். படமும் துவங்கியதில் இருந்து பழகிய மாட்டு வண்டியை போல் பரிச்சயமுள்ள தடத்தில் பிசகாமல் நடந்து வீடு போய் சேர்ந்து விடுகிறது. ஆனாலும் இப்படம் நம்மை நெகிழ வைக்கிறது. ஏதோ ஒரு புள்ளியில் ஈர்க்கிறது. இந்தியா முழுக்க அதைப் பார்த்த சாதாரண ஜனத்திரளின் அகத்தின் ஒரு உணர்கொம்பை அது மிகச்சரியாக சென்று தொட்டுள்ளது. ராஞ்சனா நமக்கு ஏன் பிடிக்கிறது?
பொதுவான ஒருதலைக் காதல்களில் காதலனின் விடா முயற்சிகளை கல்லிதயம் கொண்ட நாயகி இறுதியில் உணர்ந்து ஏற்பாள். ராஞ்சனாவிலும் கிட்டத்தட்ட இது தான் நடக்கிறது. ஒரே வேறுபாடு நாயகி காதலனை கொல்லுகிறாள் என்பது. இது ஒரு முக்கியமான கதை மாற்றம். அவள் ஏன் கொல்லுகிறாள் என்பதில் இந்திய பெண்களின் உளவியலும் இருக்கிறது, இந்தியாவில் பொதுவாக உறவுகள் இடையே உள்ள பரஸ்பர அழிவு விருப்பமும் இருக்கிறது.
முதலில் பெண்களைப் பற்றி பார்ப்போம். இந்திய பெண்கள் இங்குள்ள பொருளாதார பண்பாட்டு அமைப்பு காரணமாக பாதுகாப்பின்மை மனப்பான்மையுடன் மிக சிறு வயதில் இருந்தே வளர்கிறார்கள். தம்மை பாதுகாக்க வேண்டும் என்கிற அளவுகோலின் அடிப்படையில் இருந்தே உறவுகளில் இருந்து வேலை, குடும்பம், வெளி உலக தொடர்புகள் என அனைத்தையும் தீர்மானிக்கிறார்கள். இந்த பாதுகாப்பின்மை முடிவெடுப்பதில் உள்ள எளிய தயக்கங்கள், சிக்கல் வருகையில் அதிகாரத்திடம் சரணடைதல், குடும்பத்தை பாதுகாப்பதற்காக வெளிநபர் யாரையும் பலி கொடுக்க தயாராவது, தம் வட்டத்துக்கு வெளியே என்ன கொடுமை நடந்தாலும் அதை பார்க்கவோ கவனிக்கவோ விடாப்பிடியாக மறுத்தல் என ஆரம்பித்து பெரும் வெறுப்பு, வன்மம், கொலை வரை போய் முடிகிறது. இது மிக நுட்பமான தளத்தில் இயங்குகிறது. வெளியே இருக்கிற எதிரியினால் அல்ல உங்களை ஆவேசமாக நேசிக்கும் காதலி அல்லது மனைவியால் நீங்கள் மறைமுகமாகவோ நேரடியாகவோ கொல்லப்படும் வாய்ப்புகள் மிக அதிகம்.
செய்தித் தாளை திறந்து பார்த்தால் இதற்கு ஏராளமான உதாரணங்களை பார்க்கலாம். பெண்களை மெல்லியல் என்பது மிக தவறான அவதானிப்பு. பெண்கள் ஆண்களை விட வன்மம் மிகுந்தவர்கள். முக்கியமாக ஒரு வன்முறையான செயலில் இறங்குவதற்கு அவர்கள் சற்றும் தயங்குவதில்லை. ஒரே வித்தியாசம் ஆண்கள் வன்முறைக்காக வன்முறையில் ஈடுபடுகிறார்கள். பெண்கள் தம்மை பாதுகாப்பது சம்மந்தப்பட்ட உணர்வெழுச்சியினால் கொலை செய்வதில் மிக சுலபமாக குற்றவுணர்வின்றி ஈடுபடுகிறார்கள். பொதுவாக நம்முடைய பெண் மேலதிகாரிகள் பிற பெண்களை அலுவலகங்களில் நடத்தும் விதம், ஜாதி கலவரங்களில், படுகொலைகளின் போது மேல்சாதி அம்மாக்கள் நடந்து கொள்ளும் விதம், பெண் முதலமைச்சர்கள் மனசாட்சி இன்றி பல சமயங்களில் நடக்கும் விதம், கேரளாவில் சமீபமாக பெருகி வரும் பெண் கொலையாளிகளின் எண்ணிக்கை தரும் உதாரணம், மற்றும் குஜராத் கலவரத்தின் போது பெண் அரசியல்வாதி ஒருவரின் பங்களிப்பு ஆகியவை இதற்கு சிறந்த உதாரணங்களாக உள்ளன. வீடுகளிலும் பள்ளி, கல்லூரிகளிலும் குழந்தைகள் மற்றும் மாணவர்களின் துன்புறுத்துவது மற்றும் உளவியல் வதை பண்ணுவதிலும் ஆண்களை விட பெண்களே முன்னிலையில் இருப்பதும் ஒரு எதார்த்தம். நீங்கள் எந்த குழந்தை மற்றும் மாணவரிடம் கேட்டுப் பாருங்கள், அவர்கள் அப்பா அல்லது ஆண் ஆசிரியரிடத்தே அதிக பாதுகாப்பாக, தொந்தரவில்லாமல் உணர்வார்கள். பள்ளி கல்லூரிகளில் பெண்களின் ஆடை கட்டுப்பாட்டை கடுமையாக வலியுறுத்துபவர்களும், காதலை ஒடுக்குவதும் ஆண்களை விட பெண் ஆசிரியர்களாகவே இருப்பார்கள். இரண்டு பெண்கள் பேசும் போது கவனியுங்கள், பெரும்பாலும் இன்னொரு பெண்ணின் காதல் உறவு பற்றி கடும் வெறுப்புடன் பேசிக் கொண்டிருப்பார்கள்; எப்படி அந்த உறவை அழிப்பது என்று தான் தமக்குள் யோசித்துக் கொண்டிருப்பார்கள்.
இந்திய பெண்களின் உடல் சார்ந்த பாதுகாப்பின்மை வெறுப்பாக, வன்முறையாகவும், சம்பிரதாய விழுமியங்களை ஆதரிப்பதாகவும் வெளிப்படுகிறது. இந்த பெண்களையும் முழுமையான பழமைவாதிகள், பழமைக்கும் புதுமைக்கும் (நவீனத்துக்கும்) இடைப்பட்ட மத்தியவர்க்கத்தினர், புதுமையான மேற்தட்டினர் அல்லது மேல்மத்திய தட்டினர் என பிரிக்கலாம். இந்த தட்டினர் இடையேயும் சில கொடுக்கல் வாங்கல் இருக்கலாம். ராஞ்சனா இந்த பகுப்பில் இடைப்பட்ட பெண்களின் தரப்பை பேசுகிறது.
பாதுகாப்பின்மை அச்சம் கொண்ட பெண்களுக்கும் அவர்களை அடைய முடியாத ஆண்களுக்கும் இடையே ஒரு முரண்பாடு தொடர்ந்து இங்கு நிலவுகிறது. இது பதின்வயதில் இருந்தே துவங்குகிறது எனலாம். ஆண்கள் தரப்பில் இருந்து ஒரு வன்முறையை இது கிளப்புகிறது. ஆண்கள் தம்மைத் தாமே வருத்துவது, உடலை காயப்படுத்துவது, தற்கொலை செய்வது என ஒரு பக்கமும் பெண் மீது அமிலம் வீசுவது மற்றும் பல்வேறு விதங்களில் அவளை துன்புறுத்துவது ஆகியவற்றை செய்கிறார்கள். பெண் இன்னொரு புறம் தான் உறவு கொள்ளும் ஆணை உளவியல் ரீதியாக துன்புறுத்துவது, நிராகரித்தல், கைவிடுதல், ஏமாற்றுதல், திருமணத்துக்கு பின் சிறுக சிறுக வதைத்தல் அல்லது மரணத்தை நோக்கி தள்ளுதல் என தம்மளவில் வன்முறையை காட்டுகிறார்கள். இந்தியாவில் காதல் என்பது சிறுக சிறுக நடக்கிற ஒரு மறைமுக வன்முறை அன்றி வேறில்லை. இந்த உண்மையை தான் ”ராஞ்சனா” படம் தொட்டுணர்த்துகிறது.
ஒரு ஆண் தான் காதலித்த பெண்ணுக்காக அவஸ்தைகளுக்கு உள்ளாவது ஒன்றும் நம் சினிமாவுக்கு புதிதில்லை. ஆனால் ராஞ்சனாவில் அந்த ஆண் எதையும் அடையாமல் தன் காதலின் பரிசாக காதலியின் தீராத வன்முறையை தான் பெறுகிறான். ஒரு முக்கிய கட்டத்தில் தன் காதலியை காதலனோடு இணைத்து வைக்கிறேன் என வழக்கமான ஒருதலை சினிமா காதலன் போல் கிளம்பி ஆனால் தன் காதலி தன்னை ஏமாற்றுகிறாள் என அறிந்து கடும் வன்மம் கொள்கிறான். கீழ்த்தட்டை சேர்ந்த குந்தன் மேல்தட்டை சேர்ந்த ஸியாவை ஒருதலையாக காதலிக்கிறான். முஸ்லீமான ஸியா அவன் இந்து என்பதால் நிராகரிக்கிறாள். அதுவரை சரி, இந்த நிராகரிப்பை குந்தனும் ஏற்கிறான். மற்றொரு முஸ்லீமான அக்பருடன் அவளை சேர்த்து வைக்கவும் உதவுகிறான். ஆனால் அக்பர் உண்மையில் ஜஸ்வீர் எனும் சீக்கியன் என அறிய அவன் தான் வஞ்சிக்கப்பட்டதாக உணர்ந்து அவளது திருமணத்தை இந்த உண்மையை வெளிப்படுத்தி நிறுத்துகிறான். இங்கு தான் படம் சுவாரசியமாகிறது.
சோயாவின் குடும்பத்தினர் ஜஸ்வீரை தாக்கி குற்றியிராக்குகிறார்கள். பிறகு அவன் இறந்து போகிறான். சோயா தன் காதலனுடனான திருமணத்தை முறித்து, காதலனையும் கொன்ற பழியை குந்தன் மீது போட்டு அவனை கடுமையாக வெறுக்க ஆரம்பிக்கிறாள். ஒரு கட்டத்தில் அவளது அரசியல் இயக்கத்தில் அவன் பங்கு பெற்று வளர்வதை அவளால் தாங்கிக் கொள்ள முடியாமல் ஆகிறது. பின்னர் ஒரு சதியில் பங்கேற்று குந்தன் கொல்லப்படுவதற்கு காரணமாகிறாள்.
இது கலப்பு காதல் பற்றின படம் அல்ல. இது அன்பு திரிந்து போய் கடும் வெறுப்பாக வன்மமாக ஆவதைப் பற்றின படம். இன்னும் சொல்லப் போனால் ஏன் நாம் தீவிரமாக நேசிப்பவர்கள் நம்மை கொடூரமாக வெறுக்க நேர்கிறது என்பதை கேட்கும் படம். இந்த காரணமற்ற வெறுப்பு ஒரு கட்டத்தில் நம்மை களைப்பாக்குகிறது. இறுதிக் காட்சியில் குந்தனும் மரணப்படுக்கையில் “இனி எதற்கு வாழ வேண்டும்? ரொம்ப களைப்பாக இருக்கிறது” என்றே சொல்கிறான்.
இந்தியாவில் இந்த அனுபவம், காதலிக்காதவர்களுக்கு கூட, பலவேறு நிலைகளில் எப்போதாவது ஏற்பட்டிருக்கும். படம் முடிகையில் நம் மனம் சுண்டிப் போவதற்கு, படம் பெரும் வெற்றி பெற்றிருப்பதற்கு இதுவும் காரணம். தமிழில் கிட்டத்தட்ட இதே கருவை கையாண்ட படம் “சுப்பிரமணியபுரம்”. ராஞ்சனா இந்த வெறுப்பான காதல் குறித்த கேள்விகளை இன்னும் உக்கிரமாக கேட்கிறது.
எங்கிருந்து வருகிறது இவ்வளவு வெறுப்பு? இந்தியா சமூக பொருளாதார அளவில் மிகுந்த ஏற்றத்தாழ்வு கொண்ட நாடாக இருப்பது, அந்த அமைப்பு இப்போது மெல்ல மெல்ல நவீனப்பட்டு வருவது ஒரு காரணம். முழுமையாக அங்கும் இங்கும் இல்லாத நாட்டில் காலடியில் நசுங்கிக் கொண்டிருக்கும் ஒரு வஸ்துவைப் போலத் தான் ஜனங்கள் உணர்வார்கள். மேலும் இங்குள்ள பெரும் மக்கள் தொகையும் எல்லோர் மீதும் ஒரு சந்தேக உணர்வையும் வெறுப்பையும் ஏற்படுத்தியபடி இருக்கிறது. இங்கு நீங்கு ஒருவர் உங்களை கேட்க கத்தி பேச வேண்டியிருக்கிறது, உங்களை அறிய வைக்க மிகையாக நடிக்க வேண்டி இருக்கிறது, அன்பைப் பெற அமிலம் வீச வேண்டி வருகிறது. அன்பாலான குற்றங்கள் சமீப காலத்தில் எகிறி வருவதற்கும் “ராஞ்சனாவின்” வெற்றிக்கும் ஒரு தொடர்பு உள்ளதா? இருக்கலாம்.
ஸோயா குந்தனை நிராகரித்தற்கு அவன் வேற்று மதத்தவன் என்பதை பிரதான காரணமாக கூறுகிறாள். ஆனால் அவளே பிற்பாடு ஒரு இந்துவை காதலிக்கிறாள். ஆக குந்தனை காதலிக்காததன் காரணம் அவன் அவளை மனதின் அடியாழத்தில் கவர வில்லை என்பது. ஒரு ஆண் என்னதான் தலைகீழாக நின்று போராடினாலும் பெண்ணின் ஆழ்மனதை கவர்வது எளிதல்ல, அது தானாக நிகழ வேண்டும். பெண்களின் வேட்கை தோன்றும் ஊற்று மிக மிக மர்மமானது. வெறுமனே அன்பையும் தொடர்ச்சியான முயற்சியையும் பார்த்து காதல் தோன்றுவதில்லை என இந்த படம் சொல்லுகிறது. குந்தன் கடைசியில் மரண படுக்கையில் அதைத் தான் புரிந்து கொள்கிறான். ஆனால் இன்னொரு புறம், தன்னை நேசிக்காத பெண்ணை ஒரு ஆண் இப்படி வேட்டையாடுவது போல் துரத்தி காதலை திணிப்பது நியாயமா என்கிற கேள்வியும் எழுகிறது. ஆனால் ஒரு அப்பத்துக்கு நூறு குரங்குகள் போட்டியிடும் இந்த நாட்டில் ஒரு சிறு இலக்கிய பத்திரிகையில் ஒரு கவிதையை பிரசுரிக்கவே நீங்கள் ஒரு பெண்ணை போல் ஆசிரியரை துரத்த நேர்கிறதே! அப்படி இருக்க காதலிக்க என்னவெல்லாம் பண்ண வேண்டியிருக்கிறது. குந்தன் தான் ஐ லவ் யு சொன்னால் சோயா கேலி பண்ணுகிறாள் என்பதால் தன் கையை அறுத்து குருதியை அவளுக்கு காட்டுகிறான். மொழி ஊமையாக்கப்படும் போது குருதி காட்டி பேசும் நிலைக்கு தள்ளப்படுகிறான்.
ஷோபா டே ஒரு பத்தியில் இப்படத்தில் வரும் காதல் காட்சிகள் பெண்களை விரட்டி தொந்தரவு செய்யும் stalking எனும் குற்றத்தை ரொமாண்டிக்காக காட்டி ஆதரிக்கின்றன என கடுமையாக விமர்சித்தார். அதற்கு படத்தின் இயக்குநர் ஆனந்த ராய் மாநகரங்களில் போல் சிறுநகரங்களில் மக்கள் காபி டேக்களிலும் பப்புகளிலும் பெண்களை பார்த்து காதலிக்க வசதி இருக்காது என பதில் அளித்தார். இதை மாநகரத்து மேல்தட்டினர் போல் என நாம் திருத்தி படிக்க வேண்டும். ஷோபா டேவின் தரப்பிலும் ஒரு நியாயம் உள்ளது. ஆனால் பிரச்சனை இங்கு stalking அல்ல.
பெண்கள் மிக எதிர்மறையாக இப்படத்தில் சித்தரிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது தான் உண்மையான பிரச்சனை. ஷோபா டேயை போன்ற மேற்தட்டை சேர்ந்த ஓரளவு திறந்த சுதந்திர கலாச்சாரத்தில் இருக்கும் பெண்களுக்கு ஸோயாவின் பாத்திர சித்தரிப்பு அநியாயமாக படுவது நியாயம் தான். பொதுவாக நவீனமாக சிந்திக்கும் பெண்களுக்கு நிச்சயம் சோயாவின் பாத்திரம் எரிச்சல் ஊட்டும். அவர்கள் விடுதலை பெற்றவர்கள். அவர்கள் காதலை இவ்வளவு சிக்கலாக ஆக்காமல் இருக்கலாம். காதலில் பல பரிசீலனைகள் செய்ய அவர்கள் தயாராக இருக்கலாம். ஆனால் இந்தியாவில் உள்ள கணிசமான பெண்கள் அப்படி அல்ல. கணிசமான பெண்கள் காதலை ஒரு வெடிகுண்டு போல் உள்ளங்கையில் வைத்து காத்திருக்கிறார்கள். அதை வீசவா வைக்கவா என இறுதி வரை தீர்மானிக்க மாட்டார்கள். தம்மை நேசிக்கிற ஒரு ஆணை அதே காரணத்துக்காக வெறுத்து நிராகரிப்பார்கள். பின்னர் தம்மை சுத்தமாக நேசிக்காத மதிக்காத ஒரு ஆணை மணப்பார்கள். அடுத்து தம்மை யாரும் நேசிக்கவில்லையே என மறுகி மறுகி வெறுப்பில் உழல்வார்கள். அந்த வெறுப்பை தம் குழந்தைகளுக்கும் ஊட்டி வளர்ப்பார்கள். பெண்கள் ஏன் இப்படி சிடுக்குண்ட நூல்கண்டு போல் இருக்கிறார்கள் என அவர்களுக்கே தெரியாது.
பெண்களை குறித்து இதுவரை நான் சொன்னது அத்தனையும் தவறு என நினைப்பவர்கள் கூட ஷோபா டேயை போன்று தான். நீங்கள் மிருகக்காட்சி சாலையின் வெளியே நின்று ஏன் இந்த டைகரை பாவம் பூட்டி வைத்திருக்கிறீர்கள், அது தப்பில்லையா, குற்றமில்லையா என கேட்கிறீர்கள். டைகர் எங்களை கடிச்சிடும் என்று சொன்னால் உங்களுக்கு கோபம் வருகிறது. ஆனால் எங்களுக்கு இதையெல்லாம் பார்த்து பார்த்து குந்தனை போல் இது தான் சொல்லத் தோன்றுகிறது: “ரொம்ப களைப்பாக இருக்கிறது”.
இறுதியாக, குந்தன் மரண படுக்கையில் கிடக்கையில் நமக்கு நத்தம் இளவரசனின் முகம் ஒரு நொடி கண் முடி நிழலாடுகிறது.