'வாரணம் ஆயிரம்'. அமெரிக்கா. காதலி மேக்னா இறந்த பின் அவளது அறைக்குத் திரும்புகிறான் சூரியா. விபத்துக்கு முன்னான அதே சாயலோடு மாற்றமின்றி அறை. படுக்கையில் துவண்டு கிடக்கும் அவளது சிவப்புச் சட்டையை எடுத்து முகர்ந்து, முகம் புதைத்துத் தேம்பி அழுகிறான். மேக்னாவைத் தேடி ஊர் ஊராக அலைய வேண்டுமெனத் தோன்றுகிறது. ’ஒருவேளை அவள் திடீரென எதிர்ப்பட்டால்?’ ஒரு பள்ளத்தாக்கின் விளிம்பில் நிற்கும்போது அவனுக்குத் தோன்றுகிறது. இல்லாவிட்டாலும் தேடிக் கொண்டே செல்லலாம்.
திரையை வெறித்து என் மனைவி. கன்னத்தசைகள் துடிக்கின்றன. புருவங்கள் நெரிகின்றன. கண்ணீர் வழிகிறது. வரிசைகளில் அடுக்கடுக்காய் முகங்கள் மத்தியில் நானும் தலை நீட்டி திரையைத் தொடர்கிறேன். மயிர்க்கூச்செறிகிறது. எழுதும்போது மறுபடியும் கரங்களில் புல்லரிப்பு. கற்பனையில் சூரியாவைத் தள்ளி விட்டு நான். நினைவின் அடுக்குகளிலிருந்து நழுவும் இறந்து போன அப்பாவுக்கு ஓய்வு பெற்ற அன்று வழங்கப்பட்ட, அவர் என்று தோளில் இட்டு குத்திட்டமரும் சிவப்பு சால்வை.
ஏன் இப்படி ஒரு கூடுதாவல் என ஒரு நொடி தோன்றுகிறது. சுதாரித்து, அழும் மனைவியை முறைக்கிறேன்.
முன்பு கேரளாவில் ’ஆகாச தூது’ என ஒரு கண்ணீர்ப் படம் மாதக்கணக்கில் ஓடியது. ஒரு குடும்பத்தில் கணவன் இறந்து போகிறான். இரண்டு குழந்தைகளை வைத்து சமாளிக்க மனைவி போராடும்போது அவளுக்கும் புற்று நோய் என்று தெரிய வருகிறது. இந்தப் படத்துக்கு அலைமோதிய பார்வையாளர் கூட்டத்துக்குப் படக்குழுவினர் கைத்துண்டுகளை இலவசமாய் வழங்கினர்.
இதை (அழுகை/மயிர்கூச்செறிதல்) திரையில் காட்சிகளுக்கு பாத்திரங்கள் செய்யும் எதிர்வினையை பார்வையாளர் போலிசெய்வதாய் விளக்கலாம். மற்றொரு மனிதனைப் பின்பற்றும் இந்த குணம் தினசரி வாழ்வில் பலதளங்களில் வெளிப்படுவதைக் காணலாம். உதாரணமாய், இருட்டறையில் நுழையும் என் மனைவி எங்கள் கறுப்புப் பூனை ஷிக்கியின் காலை மிதித்துவிடுகிறாள். அது அலறியபடி தாவுகிறது. என் மனைவி வீறிட்டு அலறுகிறாள். பின்னால் வந்த நானும் பதறிக் கத்துகிறேன். கவனிக்கவும். நான் பூனை மிதிபட்டதையோ, தாவினதையோ கவனிக்கவில்லை. மனைவியைப் பின்தொடர்ந்து அடுத்த நொடியில் அதே எதிர்வினையை போலிசெய்கிறேன், சைக்கிள் நிறுத்தத்தில் ஒன்றைத் தள்ளிவிட மற்றவையும் தொடர்ந்து சரிவன போல்! ஏன்?
இதற்கான பதில் மற்றொரு உதாரணத்தில் வருகிறது. முன்வரலாற்றுத் தருணமொன்றில் முன்னே செல்லும் என் மனைவி பூனைக் காலுக்குப் பதில் புலி வாலை மிதித்திருந்தால் பின்னால் செல்லும் நான் அவள் எதிர்வினையைப் போலி செய்துதான் ஓடிப் பிழைத்திருக்க முடியும். மிதிபட்டு கர்ஜிக்கும் புலியை ஆய்ந்து முடிவெடுக்க, போதுமான அவகாசம் இல்லை. காட்டில் கூட்டமாக வாழ்ந்திருந்த முன்நாகரிக மனிதர்களுக்கு வேட்டைப் பிராணிகளிடமிருந்து தப்பிக்க, உய்ய இந்த எதிர்வினை--போலிசெய்தல் சங்கிலித்தொடர் குணம் ஒரு முக்கிய செயல்முறைமை.
நூற்றாண்டுகள் தாண்டி விட்டன. அலுவலகத்தில் குறுந்தட்டிகளால் அடுக்கடுக்காய் பிரிக்கப்பட்டு நாங்கள். எங்களைக் கண்காணிக்கப் பதுங்கி வரும் மேலாளர் கவிதா திடீரென முதுகுக்குப் பின் நின்று காட்சி அளிப்பார். அதுவரை எனது இடம் மெசஞ்சரில் கணினி அரட்டை, காதில் ஹெட்போன், கையில் குறும்பேசி, வாயில் நொறுக்குத் தீனி, திரும்பியும் திரும்பாமலும் நேரடி அரட்டை எனக் களைகட்டும். மேலாளரின் கொலுசுச் சத்தம் வைத்து சுதாரித்து சில நொடிகளில் கணினிக்குள் தலைவிட்டு பாவ்லா காட்டத் தொடங்குவேன். பிறகு ஒரு நாள் கொலுசு அணிவதை நிறுத்தினார். நானும் கச்சேரியைத் தொடர்ந்தேன், ஆனால் அருகில் அமர்ந்திருக்கும் கூரிய செவிப்புலன் உடைய தோழி கயல்விழியின் வதனத்தில் ஒரு கண்வைத்து. மேலாளர் வருவதை அவளது முகமாற்றத்தை வைத்தே கணித்து வேலை செய்ய ஆரம்பித்துவிடுவேன். கொலுசுச் சத்தத்தை வைத்து அருகாமையை கணிப்பதை விட இது லகுவாய், நொடியில் சுதாரிக்கும்படி உள்ளது. இதுபோல் தினசரி வாழ்வில் ஏகத்துக்கு உதாரணங்கள்: பொதுவாய், பெரியவங்க பேச்சைக் கேட்பதிலிருந்து குறிப்பாய் காலையில் உங்களைக் கடந்து போனவர் எதேச்சையாய் பாடின பாடல் வரிகளை பிரக்ஞை இன்றி நீங்கள் நாள் முழுக்க முணுமுணுப்பது வரை. நமது நூற்றாண்டுகளின் நாகரிகம், வளர்ச்சி, கண்டுபிடிப்புகளுக்கு எல்லாம் பிரக்ஞைபூர்வ\அற்ற போலிசெய்தல் தான் அடிப்படை எனச் சொல்லலாம்.
முன்னால் சென்றவர் தந்ததைக் கைமாற்றி பின்வரிசைக்கு அனுப்பப் பயன்படும் கருவியான மொழிகூட இதே பாணியில் இயங்குவதை மொழியியலாளர்கள் பேசியுள்ளார்கள். அதாவது முன்னால் சென்ற வார்த்தையில் முட்டுக் கொடுத்து பின்னால் செல்லும் வார்த்தை செயல்படுகிறது. ஜெயமோகன் 'செண்பகக்குழல்வாய் மொழி' என்ற பெயரை உருப்போட்டு ’ஆயிரங்கால் மண்டபம்’ சிறுகதை எழுதியது இப்படித்தான். அகராதி மற்றொரு எளிய உதாரணம். ஆரம்ப நிலையில் நின்று மொழியைக் கற்பவர்கள் ஒரு வார்த்தைக்கு பொருள் அறிய மூன்று நான்கு வார்த்தைகளைப் புரட்ட வேண்டி வரும். அகராதியில் தனியாய் நிற்கும் ஒரு சொல்கூட இல்லை.
இதற்குக் காரணம் நம் நினைவுத் திறன் செயல்படும் விதம். ஒன்றையொன்று தொடர்புபடுத்தித்தான் நினைவுச்சங்கிலியில் கோடாணு கோடி தகவல்களை இணைக்கிறோம்; சேமிக்கிறோம். இத்தகவல்கள் ஒன்றோடொன்று நேரடித் தொடர்பற்றவை. அடிபட்ட மிருகத்தின் குருதித் தடங்கள் ஓடும் பெரும்பரப்பு போலுள்ளது நம் நினைவுத் திடல். இந்த சங்கிலித் தொடர் இயங்குமுறையால்தான் என் சாதித் தலைவரை அவதூறாய்ப் பேசினால் எனக்குள் ரத்தம் சூடேறுகிறது. அவர் சிலைக்கு செருப்பு மாலையிட்டால், என்னையே செருப்பால் அடித்தது போல் வெறியேறி அருவா தூக்குகிறேன். இன்று ஒரு சோதனை செய்தேன். என் பூனையிடம் அதைப் போலிசெய்து ’மீயாவ்’ எனப் பல தொனிகளில் கத்தினேன். அதிகார எல்லைக்குள் வேற்றுப் பூனை நுழையாவிட்டாலும்கூட, கோபம் கொண்ட அது உடனே சீறியது. என்னைத் தாக்கியது. கூரிய நகங்கள் என் கைகளில் பாய்ந்தன. இதற்குக் காரணமும் முன்சொன்னது தான்.
மானிட நடத்தைகளைப் பற்றிய ஆய்வொன்றை ’பயோ சயிண்டிபிக்கா’ பத்திரிகையில் பிரசுரித்திருந்தார்கள். இரண்டு பிரிவுகளில் ஆய்வுக்குட்படும் நபர்கள். ஒருசாராருக்கு திரையில் காட்சி ஒன்று காண்பிக்கப்பட்டது. இரண்டாவது சாரார் முதற் பிரிவினரைக் கவனித்தனர். முதற்சாராருக்கு இரண்டாவது சாரார் தங்களைக் கவனிப்பது தெரியாது. இரண்டாவது சாராருக்குக் காட்சி ஓடும் திரை மறைக்கப்பட்டிருந்தது. ஆய்வின் முடிவு இதுதான். முதற்சாராரின் எதிர்வினைகளை (முகபாவ மாற்றங்கள், உடல்மொழி, தோரணை) இரண்டாம் பிரிவினர் பிரக்ஞையின்றி போலிசெய்தனர்; திரையில் நிகழ்பவற்றைப் பார்க்காமலேயே அதற்கேற்ற எதிர்வினைகளை அவர்களால் செய்ய முடிந்தது.
இந்த எதிர்வினை-போலிசெய்தல் இயங்குமுறை மனிதனின் மென்பொருளில் எழுதப்படாமல் இருந்திருந்தால் சாதித்தலைவர்கள் மட்டுமல்ல படைப்புச் செயல்பாடுகள் கூட சாத்தியமில்லை. பிரபஞ்சத்துக்கு மனித மனம் செய்யும் எதிர்வினையே படைப்பாக்கம். படைப்பு மனத்தின் இந்த எதிர்வினைக்கு போலிசெய்யும் போது மட்டுமே மற்றொரு மனத்துக்குக் கலையனுபவம் கிடைக்கிறது, அதைத் தொடர்ந்து கண்டடைதல் நிகழ்கிறது. உதாரணமாய், மனுஷ்புத்திரனின் கடல் பற்றிய எதிர்வினையை நீங்கள் விரிவு, விடுதலை எனும் கோட்டில் பொருள் கொள்ளும்போது மட்டுமே குறிப்பிட்ட கவிதையோடு இணைவு கொள்ள முடியும்; கடலை கட்டுப்பாடு எனப்புரிந்தால் இது நிகழாது. அமெரிக்க எழுத்தாளர் ஜாக் கெரவக்கின் கவிதையொன்றில் ’இனி நான் மூச்சு விடுவேன்’ என்கிறார். இங்கு பௌத்த மூச்சுப்பயிற்சி தியானம் ஒட்டின ஜென் சிந்தனையை போலி செய்யும்போது மட்டுமே கெரவக்கின் அதே தளத்தை நாம் அடைகிறோம்.
’பொயடிக்ஸ்’ எனும் நாடக இயங்குமுறை பற்றின நூலில் அரிஸ்டாட்டில், மனிதனுக்குக் காண்பதை எல்லாம் போலிசெய்வதில் உவப்பு உள்ளது; படைப்பாக்கத்தின் ஆதாரம் அதுதான் எனச் சொல்கிறார்.
சாதித்தலைவர்களின் சிலைகள், அலுவலக சட்டதிட்டங்கள், கண்காணிப்பு, தண்டனைகள் என உலகம் நீண்ட வரிசைகளில் நம்மை பிசகாமல் அணிவகுக்கக் கட்டாயப்படுத்துகிறது. கலை இதே போலி செய்தலை தகவமைக்கும் சுதந்திரம் தருகிறது. நம்மால் ’மூச்சு’ விட முடிகிறது. எந்திரப்புலிகள் உலவும் இருள் வனாந்தரத்தில் நவீன மனிதனை அது கைப்பிடித்து அழைத்துச் செல்கிறது.
அது 'போலச் செய்தலா?', 'போலி செய்தலா?'அபிலாஷ். வழக்கம்போல உங்கள் துள்ளல் நடையில் இலாவகமாகச் சென்றது கட்டுரை (இதற்கு ஒரு சிரிப்புச் சிரிப்பீர்களாயிருக்கும்) கட்டுரையில் வந்த ஒரு விடயம் கவர்ந்தது. அதாவது, நீங்கள் ஒரு பூனை வளர்க்கிறீர்கள். எனது அண்ணாவின் மகளுக்கும் என்னைப்போல் பூனைப் பைத்தியம் உண்டு. சிலநாட்களாக பூனையைத் தூக்கி நாளாகிறது என்று அரற்ற ஆரம்பித்திருக்கிறாள். ஆனால் வளர்க்கும் உத்தேசம் இல்லை. எப்போதாவது உங்கள் வீட்டுக்கு வர நேர்ந்தால் (பூனைக்காக) அதை நாங்கள் தூக்க உங்கள் அனுமதி உண்டா? பூனையும் அனுமதிக்குமா என்று தெரிந்து சொல்லுங்கள்.:) வீதியில் திரிகிற பூனைகளைத் தூக்கினால் கையில் கடித்துவைக்கும். அல்லது கீறிவிட்டு ஒரே பாய்ச்சலில் ஓடிவிடும். அப்பாடா... பூனையை அளையும் ஆசைக்கு நான் வரிந்துகட்டி எழுதவேண்டியிருக்கிறது. நாளைக்கு இருக்கு அவளுக்கு...:)
ReplyDeleteஇந்த கட்டுரையின் அவதானிப்பு நன்றாக இருக்கிறது.
ReplyDelete