இரண்டு வருடங்களுக்கு முன் ஏழு, எட்டு வயது குழந்தைகளுக்கான கோடைப்பருவ கிரிக்கெட் பயிற்சி ஆட்டத்தை எம்.சி.சி மைதானத்தில் பார்த்தேன். குழந்தைகளின் அபாரமான பொறுப்புணர்வு, சலிப்பு, பலதரப்பட்ட திறமைகள் என பார்க்க முதிர்ந்தவர்களின் ஆட்டத்தை விட சுவாரஸ்யமாக, கொஞ்சம் வேடிக்கையாக இருந்தது. குழந்தைகளுக்கு பீல்டிங் எனப்படும் பந்துக்காக காத்திருக்கும் பொறுமை இல்லை. பலரும் ஆட்டத்தின் போது அடிக்கடி மைதானத்தில் உட்கார்ந்து விடுவார்கள். பயிற்சியாளர்கள் "டேய் ஏந்திரு கெட் அப்" என்று வாய் கிழிய கத்துவார்கள். பெற்றோர்கள் சப்பாட்டுக் கூடை, தண்ணீர் பாட்டில், டவ்வல் சகிதமாய் காத்திருப்பார்கள். அணித்தலைவன் பேருக்குத் தான். ஆட்டத்தை எல்லையில் நின்று நடத்துவது பயிற்சியாளர்கள். நான் பார்த்த அணியின் தலைவன் சோட்டூ எல்லைக் கோட்டில் நின்று நகம் கடித்தான். பயிற்சியாளர்கள் இந்த சிறுவர்களை அலசுவது கேட்க பயமாக இருக்கும். ஸ்ரீராம் என்றொரு சிறுவன் லூப்போடு கச்சிதமாய் சுழல்பந்து வீசினான். "இன்னும் பத்து வருஷத்ல இவன் தமிழ் நாடு ரஞ்சி ஆடுவான் சார்" என்றார் ஒருவர். அபினவுக்கு சில மைக்ரோநொடிகளுக்கு முன்னரே பந்து வரும் திசை, விழப்போகும் இடம் தெரிந்தது. சம்பிரதாய அமைதி ஆட்டம் ஆடி 47 ரன்கள் சேர்த்தவன், குளறுபடியான ரன் அவுட்டால் வெளியேற நேர, ஒருவர் பாய்ந்து வந்து அவன் முதுகில் அப்பினார்: " நாயே நாயே அவன் ஓடினால் நீயும் ஏன்டா ஓடுறே, ஹாப் சென்சுவரியை தவற விட்டியே போருமா நாயே ". அவர்தான் அப்பாவாம். வழிமுழுக்க உரக்க பையனை திட்டிக் கொண்டே வந்தார். குற்றவுணர்வில் தாரை தாரையாய் சிறுவன் கன்னத்தில் வடிவதை கவனிக்க பொறுமையில்லை. அந்த குழந்தை எதிர்காலத்தில் நிச்சயம் கிரிக்கெட் ஆடமாட்டான் என்று தோன்றியது. ஆனால் இங்கிலாந்தில் ஒரு குழந்தை தொடர்ந்து ஆடியது.
சர்வதேச ஆட்டத்துக்கு முந்தின இரவுகளில் பெரும்பாலும் ஹுசேன் தூங்குவதில்லை. சதா கண்ணாடி முன் மட்டையுடன் நின்றும் எதிரணி பந்து வீச்சாளரை கற்பனை செய்து பயிற்சி செய்வார். அதிகாலை தூங்க முயன்றாலும் அடுத்த நாள் தான் சந்திக்கப் போகும் பந்துகள், சூழல் என்று மனம் ரீங்கரித்துக் கொண்டே இருக்கும். துயரம் என்னவெனில் 96 ஆட்டங்களிலும் இந்த நிலைதான். ஆட்டத்தின் போது பெவிலியனில் தன் முறைக்காக காத்திருப்பது நசீருக்கு கடுமையான மன உளைச்சலைத் தருவது. எதிர்மறைக் கற்பனைகளின் அழுத்தம் தாங்காமல் எப்போது ஆடுகளத்துக்கு ஓடுவது என்று தவிப்பார். இந்த காத்திருப்பின் நெருக்கடி காரணமாகவே துவக்க ஆட்டக்காரர்கள் நெடுநேரம் நிலையாக ஆடி ஓட்டம் சேகரித்த நிலையில் ஆட வரும் ஹுசேன் எளிதில் அவுட்டாகி விடுவார். விக்கெட்டுகள் வேகமாய் சரிந்து சீக்கிரமாய் ஆட வரும்போது சிறப்பாய் ஆடுவார். நகைமுரணாக, இந்த தனித்துவமான மனநிலை ஹுசேனுக்கு நெருக்கடி ஆட்டக்காரர் அடையாளத்தை பெற்றுத்தந்தது. இவரது சிறந்த ஆட்டம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 207. இந்த ஆட்டத்தின் போது தனக்கு உடலும் மனமும் இயைந்து போகும் ஒரு அபூர்வமான மனநிலை கிட்டியதாக சொல்கிறார். சுதந்திரமாக இவர் அடுத்து ஆடியது தன் கடைசி ஆட்டத்தில் தான். பதினாலு வருட கிரிக்கெட் வாழ்விலிருந்து ஓய்வு பெறுவதாய் ஏற்கனவே அறிவித்த நிலையில் நசீருக்கு அடையவோ, இழக்கவோ ஏதும் இருக்கவில்லை. இவரது மிகச்சிறந்த ஆட்டமாக இது அமைந்தது. சிறப்பாய் ஆடுவதன் சூத்திரம் இந்த இறுதி சில மணி நேரங்களில் அவருக்கு புரிந்தது.
"தீயோடு விளையாடுவது" எனும் ஆங்கில சொலவடைக்கு அவசியமின்றி ஆபத்தில் ஈடுபவது என்று பொருள். ஒரு ஆவேசமான கலகக்காரனாக நசீர் பற்றிய பொதுச்சித்திரம் இந்நூல் படிக்கையில் கலைகிறது. ஆபத்து பற்றி எப்போதும் உள்ளூர பதறிய, தன் ஆட்ட வாழ்வை இறுதி கணங்களில் மட்டுமே கொண்டாடத் தெரிந்தவரின் கதை இது. மேலும் இந்நூலில் அணித்தலைமையின் மனவியல் பற்றி சில கூர்மையான அவதானிப்புகள் வருகின்றன. 1999இல் சிம்பாப்வே இனக்கலவரத்தைக் கண்டித்து இங்கிலாந்து அணி அங்கு செல்ல மறுத்தது. அப்போது சர்வசதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவர் மால்கம் ஸ்பீட் அற உணர்வற்று நடந்து கொண்டதை, வீரர்களை கால்நடைகள் போல் நடத்தியதை ஹுசேன் கண்டிக்கிறார். நாம் அறியாத ஐ.சி.சியின் எந்திர முகம் இது. தற்போது ஐ.பி.எல் தாதா லலித் மோடி இந்தியாவில் மனித உயிர்கள் சர்வசாதாரணமாய் தீவிரவாதத்துக்கு பலியாகும் பயங்கர சூழலில் டெஸ்டி ஆட்டங்களை தொடர்ந்து ஆடும்படி இங்கிலாந்து அணியினரை மிரட்டி பணியவைக்கப் பார்க்கிறார். ஐ.பி.எல் எனும் டினோசர், கால்நடை சந்தையான கிரிக்கெட்டை கசாப்புச் சந்தையாக்கி விட்டது.
நவ் ஜோத் சிங் சித்து ஒரு பேட்டியில் " நான் எதற்கு கிரிக்கெட் ஆடுகிறேன் என்று பலமுறை வியந்ததுண்டு. என் கிரிக்கெட் ஆட்ட வாழ்வில் நான் விரும்பி ரசித்து ஆடியது மிகக்குறைவு " என்றார். அவர் மேலும் நெகிழ்ந்து சொன்னார்: " இப்போது ஒரு வர்ணனையாளனாக, பேச்சாளனாக நான் மிகவும் இயல்பாக உணர்கிறேன், ஈடுபாட்டோடு செயல்படுகிறேன் " சித்துவின் இந்த நாற்பது வயதிலான தாமத மலர்ச்சி பிறரையும் கூட ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இவரது செறிவான சுவாரஸ்யமான ஆங்கிலத்துக்கு, அதிரடியான கருத்துக்களுக்கு ஒரு தனி ரசிகப்படை உருவானது. அடுத்தடுத்து சொலவடைகள், ஒப்பீடுகள், மணிமொழிகள் தெறிக்கும் இவரது பிரவாக மொழியை ஊடகங்கள் 'சித்துவிசம்' என்று கொண்டாடின. கிரிக்கெட் பற்றி இவர் பேசினது பாதி உளறல்தான். ஆனால் கவாஸ்கர், ரவி சாஸ்திரியை விழுங்கி விடும்படியான பிரபலத்தை குறுகிய காலத்தில் அடைந்தார். கிரிக்கெட் விவாதங்களின் போது உணர்ச்சிவசப்பட்டு இவர் பிதற்றும் அபத்தங்களை, தன்னம்பிக்கையோடு செய்யும் கோமாளித்தனங்களை ஆங்கில செய்தி சானல்கள் ஒரு காமெடி டைம் போல் பயன்படுத்தின. திமிறும் மொழியின் வேகத்தோடு ஈடுகொடுக்கும் ஆர்ப்பாட்டமான உடல் மொழி சித்துவுக்கு இருந்தது. ஆட பாட கூட தயக்கமில்லை. தமிழில் சித்துவோடு வைகோவை ஓரளவு ஒப்பிடலாம். ஊடகங்களின் செல்லப்பிள்ளையை விரைவில் பா.ஜ.கா சுவீகரித்துக் கொண்டது. மீண்டும் டீ.வியில் பார்த்த போது சித்து காவி முண்டாசுடன் பொதுமக்கள் மத்தியில் அதே கொந்தளிப்புடன் பேசிக் கொண்டிருந்தார். கோமாளிகளுக்கும், பொழுதுபோக்காளர்களுக்கும் அரசியலில் முக்கியமான இடம் உண்டு என்பதை தத்துவ ஞானி பிளேட்டோ நூற்றாண்டுகளுக்கு முன்னரே கணித்திருந்தார்.
சித்துவின் அப்பா உயிரோடு இருந்திருந்தால் மகனின் எதிர்காலம் பற்றிய தனது கணிப்பின் தவறை அந்த சர்தார்ஜி உணர்ந்திருப்பார். சித்து கிரிக்கெட்டில் ஒளிவிட வேண்டும் என்பதே அவர் கனவு. ஆனால் குறைந்தபட்ச திறமை உடைய மகன் ரஞ்சி ஆட்டங்களில் ஓட்டங்கள் எடுக்கத் திணறி ஆடுகளத்தில் விறைத்துப் போய் நின்றான். பந்தின் திசை, விழப்போகும் இடத்தை அரை நொடிக்கு முன் கணிக்கும் திறன் இவருக்கு இல்லை. செய்தித்தாள் ஒன்று இவரை 'அடிக்கத் தெரியாத வினோதம்' என்று பரிகசித்தது. மனமுடைந்த தந்தை சிலநாட்களில் உயிரிழந்தார். கிரிக்கெட்டில் முன்னேறுவது சித்துவுக்கு தந்தைக்கு ஆற்றும் கடனாக மாறியது. இந்த குறிப்பிட்ட விமர்சனப் பத்தியை அறைச் சுவரில் ஒட்டி வைத்து, நாள் தோறும் பார்த்து உசுப்பேற்றிக் கொள்வார். கடுமையாய் உழைத்து சித்து தேசிய அணியில் நுழைந்தார். எதிர்பாராதபோதெல்லாம் சுழல்பந்தாளர்களை தூக்கி அடித்து "சிக்சர் சித்து" என பிரபலமடைந்தார். ஆனாலும் அணியில் நிரந்தரமடைய முடியவில்லை. பாதுகாப்பின்மை சித்துவை கடுமையாய் பாதித்தது. அசர் தலைமயிலான இங்கிலாந்து செல்லும் இந்திய அணியில் சித்துவோடு சில இளைய வீரர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தனர். இவர்கள் தன் இடத்தை பறிக்க வருகிறார்கள் என்ற பதற்றத்தில் சித்து அணி மேலாண்மையோடு தகராறு செய்தார். அடுத்த விமானம் பிடித்து இந்தியாவுக்குத் திரும்பினார். பெற்றோர் ஆசிரியர்களின் நெருக்கடி தாளாமல் ஊரை விட்டு ஓடும் ஒரு பள்ளி மாணவனுடையதை ஒத்திருந்தது இவர் செய்கை. 1999இல் பாகிஸ்தானுடனான போட்டிகளில் கழற்றி விட்டதை சர்தாரால் தாங்க முடியவில்லை. ஓய்வு பெற்றார். அதுவொரு திருப்பு முனை; பட்டுப்புழு பட்டாம்பூச்சி ஆனது. பேச்சாளனாக, மீடியா விதூசகனாக, அரசியல்வாதியாக .
யுவ்ராஜின் அம்மா இவர் குழந்தையாய் இருக்கும்போதே குடும்பத்திலிருந்து வெளியேறி விட்டார். ஒரு நொறுங்கின குடும்பத்தின் வலி தொலைக்காட்சி பேட்டிகளின் போது இவரது பால்யம் மாறாத முகத்தில் படர்கிறது. அப்பாவைப் பற்றின எதிர்மறை நினைவுகள் தான் உடனடி நினைவுக்கு வருகின்றன. ஒருமுறை வீட்டுக்கு நவ்ஜோத் சித்து வந்திருந்தாராம். யுவிக்கு அப்போது 13 வயதிருக்கும். அப்போது பள்ளி ஜிம்னாஸ்டிக் போட்டி ஒன்றில் தான் முதலிடம் வென்ற கோப்பையை அப்பாவிடம் காட்ட ஓடி வந்தார். யோக்ராஜ் அதை ஆத்திரத்தில் பிடுங்கி வீசினார். சித்துவிடம் பையனின் தவறான ஈடுபாடு பற்றி புகார் செய்தார். சிக்சர் சித்து யுவ்ராஜை அறிவுறித்தினார்: " தம்பி, ஜிம்னாஸ்டிக் பொம்பளைங்க விளையாட்டு. கிரிக்கெட்டுக்கு வா. அதான் வீரமான ஆட்டம்! "
No comments :
Post a Comment