"என்னை மூணாம் பேருக்குத் தெரியாமல்
தன்னந்தனியாய் அழைத்துப் போய்
வெறி தீர சித்திரவதை செய்து கொன்று விடேன்.
அந்த அளவிலாவது நான் பயன்படட்டும்
மரணமும் உன் கைகளாலே உணரப்படட்டும்."
(தனியே, பூமா ஈஸ்வரமூர்த்தி; பூமா ஈஸ்வரமூர்த்தி கவிதைகள்)
மரணம் வழியான படைப்பின் திறப்பு பற்றிய "ஆண்டுரோமிடாவிற்கு வரவேற்கிறேன்" ஆங்கில நாடகம் 2008 ஆகஸ்டு 6-அன்று நிகழ்த்தப்பட்டது. தெ ஹிந்து மெட்றோபிளஸ் நாடக விழாவின் போது ஆகஸ்டு 2 முதல் 12 வரை அரங்கேற்றப்பட்ட 12 நாடகங்களில் ஒன்று இது. கடந்த 50 வருடங்களாய் 200 நாடகங்களுக்கு மேல் அரங்கேற்றியுள்ள தெ மெட்ராஸ் பிளேயர்ஸ் எனும் ஆங்கில நாடகக் குழு தான் தயாரிப்பு. அமெரிக்க நாடகாசிரியரான ரான் வைட்டின் இந்நாடகம் மிகச்சிறப்பான முறையில் ஜெ. ராஜீவ் சவுத்திரியால் இயக்கப்பட்டது. மூன்றாவது வருடமான இம்முறை தெ ஹிந்து மெட்றோபிளஸ் நாடக விழாவில் பார்வையாளர்களின் வருகையும், ஈடுபாடும் குறைவாகவே இருந்தது. இது போன்ற ஆங்கில நாடகங்களுக்கு பிராண்டட் சட்டை, ஜெல் போட்டு வாரிய தலை சகிதமாய் பிரசன்னமாகி நுனி நாக்கு ஆங்கிலம் பேசும் கும்பல், எஸ். வி. சேகர், கிரேசி மோகன் நாடகங்களில் மூக்குப் பொடி போட்டது போல் எந்திரத்தனமாய் சிரிக்கும் பார்வையாளர்களின் அதே மட்டரக ரசனை கொண்டவர்கள் தான். இந்நாடகத்தின் தீவிரமான உள்ளடக்கத்தை ஏற்கும் மனநிலையில் அவர்கள் இருக்கவில்லை.
நாடகத்தில் இரண்டே கதாபாத்திரங்கள் தான். இருபத்தைந்து வயதான, கழுத்துக்கு கீழ் செயலிழந்து படுத்த படுக்கையான ஒரு இளைஞனும், நாற்பதுக்கு மேல் மதிக்கத்தக்க ஒரு செவிலியும். இருவரின் பெயர்களும் தரப்படுவதில்லை. அவனது பாத்திரத்தில் கார்த்திக் சீனிவாசன் (குரு படத்தில் சில நொடிகளே மருத்துவராக தோன்றும் இவர், இந்திய ஆங்கில நாடக உலகில் ஒரு பிரம்மராக்ஷஸ்);செவிலியாக காயத்திரி ஸ்ரீராம். நாடகம் முழுக்க படுக்கையில் கிடந்தவாறே நடித்த கார்த்திக்கிற்கு தன் முகமும், குரலுமே வெளிப்பாட்டுக் கருவிகள். பலவித உணர்வு நிலை மாற்றங்களை அவரால் சகஜமாய் தன் குரலின் ஏற்ற இறக்கங்கள், சிறு அதிர்வுகள், பீறிடல்கள் மூலம் வெளிப்படுத்த முடிந்தது. தன் உடலை பயன்படுத்த முடியா நிலையை சமனம் செய்ய உச்ச தொனியில் மிகையாய் சதா பேசும் பாணியை பின்பற்றாமல், நுட்பமாய் நடிப்பதற்கான கார்த்திக்கின் முயற்சி நாடகத்தின் யதார்த்தப் போக்கிற்கு வலு சேர்த்தது. காயத்திரி ஸ்ரீராம் ஆரம்பக் காட்சிகளில் மிகையாக நடித்து சொதப்பினாலும், பிறகு தாக்குப்பிடித்து கதாபாத்திரத்தின் ஆழங்களுக்குள் இயல்பாகவே சென்றார். செவிலி தன் அகமன சிக்கல்களை நேர்மறை உரையாடல், உற்சாகம் பீறிடும் நடவடிக்கைகள் மூலம் மறைக்க முயல்பவள். யதார்த்த வாழ்வின் எல்லைகளை தன்னிடத்தில் இருந்தவாறே கற்பனை மூலம் தகர்க்க விழையும் இளைஞனின் போக்கு அசைவின்மை மூலமும், வாழ்வின் அபத்தத்திலிருத்து தப்பித்து ஒட்டும் செவிலியின் போக்கை ஓடுதல், நடனம், "தேனே" எனும் உணர்ச்சி பீறிடும் செயற்கையான அழைப்பு போன்ற மிகையான அசைவுசார் நடவடிக்கைகள் மூலமும் ரான் வைட் குறிப்புணர்த்துவதை இரு நடிகர்களும் புரிந்து நடித்துள்ளது பாராட்டத்தக்கது. .
ஊனமுற்ரோரின் எழுத்தாளராய் அறியப்படும் (ஆண்டுரோமிடாவில் வரும் இளைஞனைப் போலவே கழுத்திற்கு கீழே அசைவின்றி, தளர்வாதத்தால் வாழ்நாளில் பெரும்பகுதி அவதியுற்றவர் ரான் வைட்) ரான் வைட்டின் இந்நாடகத்தின் மையக்கரு, அதன் முக்கிய பாத்திரம் ஊனன் ஆயினும், ஊனம் பற்றியதல்ல எனும் தெளிவு இதை ஆழமாய் புரிந்து கொள்ள மிகவும் அவசியம்.
நாடகத்தின் இரு பாத்திரங்களில் ஒருவனான இளைஞனுக்கு துணை அவன் அம்மா மட்டுமே. ஒவ்வொரு பிறந்த நாளன்றும் அவனுக்கு பரிசு வாங்க அவள் நகரத்திற்கு செல்வது வழக்கம். அன்று அவனது 25-ஆவது பிறந்த நாள். நகரத்திற்கு தான் சென்று வரும் சில மணிநேரங்கள் அவனை கவனித்துக் கொள்ள ஒரு செவிலியை நியமிக்கிறாள். இளைஞன் கோபம், மகிழ்ச்சி, வன்மம், வெறுப்பு, ஆசை, உற்சாகம் என்று நிமிடத்திற்கு ஒரு மனநிலைக்கு தாவுகிறான். செவிலி எப்போதும் உற்சாகம் கொப்புளிக்க, தன் தொழில் மீது அதீத பற்றுதல் கொண்டவளாக தோன்றுகிறாள். அவள் திருமணமாகாதவள். மதுவுக்கு அடிமை. இவர்கள் இருவருக்கும் இடையேயான குறுகிய கால உறவும் அதன் விளைவுமே நாடகத்தின் கதையமைப்பு. நாடகம் பாதியிலிருந்து ஆரம்பிக்கும் பாணியைக் கொண்டுள்ளது. இளைஞன் குடிக்க தண்ணீர் கேட்க, வெளியேறும் செவிலி மது அருந்திவிட்டு, நீரை எடுத்து வர மறந்து விடுகிறாள். இதனால் எரிச்சலுற்ற இளைஞன்
"தண்ணீர் வேண்டும்" என்று கத்தும் காட்சியிலிருந்தே நாடகம் ஆரம்பமாகிறது. அவனது நாகரிகமற்ற நடவடிக்கையால் எரிச்சலடையும் செவிலி, மயக்க ஊசியிட்டு அவனை உறக்கத்தில் ஆழ்த்த முனைகிறாள். இங்கு இளைஞனின் முக்கியமான குணாதசியங்கள் சில வெளியாகன்றன---அவன் தன் நடிப்புத் திறன், பிறரை பேச்சால் வசியப்படுத்தும் திறமை மற்றும் பிறரது பலவீனங்களை கணித்து அதை பயன்படுத்தி அவர்களை கட்டுப்படுத்தும் வழக்கம் உடையவன். அவன் இந்த குறிப்பிட்ட காட்சியில் சட்டென தன் முரட்டுத்தனத்தைக் கைவிட்டு, அவள் மனம் இளகும் விதம் பேசுகிறான். பிறகு அவன் அன்றிரவு அவள் தன்னைக் கொல்லப் போவதாய் அறிவிக்க அவள் அதிர்ச்சியும் கோபமும் கொள்கிறாள். அவனிடம் பேச மறுக்கிறாள். அவன் தன்னை அவள் கற்பழிக்க முயன்றதாய் தன் தாயிடம் புகார் செய்யப் போவதாய் மிரட்டுகிறான். வேலை பறிபோகும் பயத்தில் அவனிடம் பேச ஒத்துக் கொள்கிறாள். அவளை மதுவருந்த ஊக்குவிக்கிறான். போதையேற அவள் இறுக்கம் இன்றி செயல்படுகிறாள். இவ்வாறு பல விதங்களில் செவிலியை நோயாளி கட்டுப்படுத்தும் இடங்கள் குறியீட்டு ரீதியில் பார்வையாளனுக்கும், நாடகத்திற்குமான ஆரம்பநிலை உறவைப் பற்றி பேசுவதாய் உள்ளன; படைப்பை எதிர்கொள்ளும் பார்வையாளன் மனம் இனிமை, பதற்றம், அதிர்ச்சி, வெறுப்பு என பலவித உணர்வு நிலைகளை கடந்து செல்வதைக் குறிக்கின்றன.
நாடக--பார்வையாள உறவின் பல்வேறு பரிமாணங்களை பிறகு வரும் காட்சிகள் மிக நுட்பமாய் சித்தரிக்கின்றன. இளைஞன் பலவித மனநிலைகளை முகமூடிகளாய் அணிந்து நடிக்கிறான். நாடகத்தில் எங்குமே அவனது நிஜமான எண்ணமோ, உத்தேசமோ எதுவென்ற குறிப்பு வெளிப்படவில்லை. கதாபாத்திரத்தின் இந்த முகமற்ற நிலை உருமாறும் மையம் கொண்ட ஒரு பிரதியின் போக்கை ஒத்தது. எடுத்துக்காட்டாய் செவிலி அவனது ஊனத்திற்கான காரணம் கேட்கையில் அவன் புளுகு மூட்டைகள் ஒவ்வொன்றாய் அவிழ்த்து விட்டு அவளுக்கு தெரியும் படியே அவளை தொடர்ச்சியாய் ஏமாற்றும் காட்சியை சொல்லலாம். நிஜம் என்று ஒன்றை சுட்டுவதை விட அதன் எண்ணற்ற பரிமாணங்களை மொழியில் பிரதிபலிக்கச் செயவதிலே படைப்பு நோக்கமாய் கொண்டிருக்கும். மனம் வலி நிரம்பிய கணங்களை கடந்து செல்ல மேற்கொள்ளும் தப்பித்து செல்லும் தந்திரமாக அவனது இந்த செயலை பார்க்கவும் சாத்தியம் உள்ளது.
இளைஞனுக்கும், செவிலிக்கும் இடையே ஒருவித எதார்த்தம் மீறிய நம்பிக்கை பிணைப்பும், நெருக்கமும் ஏற்படுகிறது. இதை நாடகத்தின் இரண்டாம் கட்டம் எனலாம். அவனது விருப்பத்திற்கு ஏற்றபடியெல்லாம் வளைந்து கொடுக்கிறாள். இதை நாடகத்தின் சிறந்த காட்சிகளில் ஒன்றான நடனக் காட்சி காட்சி பூர்வமாய் சொல்கிறது. அவன் ஒலிப்பேழையிலிருந்து வழியும் இசைக்கு ஏற்றவாறு தன்னை நடனத்துணையாக கற்பித்துக் கொண்டு ஆடுமாறு அவளை கேட்டுக் கொள்கிறான். அவள் ஆரம்பத்தில் திகைத்தாலும் பிற்பாடு மனம் ஒன்றி ஆடுகிறாள். அவன் படுக்கையில் சாய்ந்து கொண்டே கற்பனையிலேயே அவளது அசைவுகளுக்கு ஏற்ப அசைகிறான்; மற்றொரு உடலின் அசைவுகளில் தன்னிலை இழந்து பரவசம் கொள்கிறான். கட்டிலில் வந்தமரும் அவள் அவனை அணைத்துக் கொள்கிறாள். புனைவின் தாளலயங்களுக்கு ஏற்ப மனம் இசைவதற்கு கற்பனையின் அவசியம், நாடகம் தன் போக்கிற்கேற்ப பார்வையாளனை வசியப்படுத்தி இயக்குவது, இரு கதாபாத்திரங்களுக்குள் நிகழும் ஆத்மீக இணைவு என பல விஷயங்கள் காட்சிபூர்வமாய் இங்கு சொல்லப்படுகிறது.
செவிலி இளைஞனின் வேண்டுகோளுக்கு இணங்க அவன் முன் மேலாடை களையும் காட்சி அதிர்ச்சி அடைய வைப்பதை விடவும், ஒழுக்க விழுமியங்களுக்கும் படைப்புக்குமான உறவைப் பேசுவதாய் இருந்தது. படைப்புலகில் ஒழுக்க விழுமியங்கள் நிஜம்--நேர்மை எனும் உரைகல்லில் உராயப்பட்டே மதிப்படப்படுவதை இக்காட்சி உணர்த்துகிறது. ஆரம்பத்தில் கூசி பின்வாங்கும் செவிலி பிற்பாடு தன்னுடலை வெளிப்படுத்துவதும், அவன் அவள் மார்புகளை கேலி செய்ய அவள் எதிர்க்காமல் விளையாட்டாய் கொண்டு தன்னைத் தான் கேலிக்குட்படுத்துவதுமான விசித்திரங்கள் இவர்கள் உறவின் போக்கில் புலப்படும் யதார்த்தத்திற்கு புறம்பான உள்ளோட்டத்தை சுட்டுகிறது. இந்த இயல்திரிபான தன்மை இந்நாடகத்தின் குறியீட்டு வாசிப்பின் அவசியத்தை உணர்த்துகிறது.
பொருளியல் தேவைகள், சடங்குகள், வெற்று நம்பிக்கைகள் கொண்டு இயங்கும் தினசரி வாழ்வெனும் பிரம்மாண்ட எந்திரம் நம்மை மென்று அபத்தத்தையும், அர்த்தமின்மையுமே துப்புகிறது. எந்திர வாழ்வின் அவசரத்தில் நம் செயல்பாடுகளின் கண்மூடித்தனமான பொம்மாலாட்டப் போக்கை கவனிக்கத் தவறுகிறோம். ஆனால் கதாநாயகனின் கூர்ந்த அவதானிப்பு மனிதர்கள் "உயிரை தக்க வைப்பதற்காகவே உயிரோடிருக்கும்" விசித்திரத்தை சொல்கிறது. கண்ணுக்குப் புலப்படாத, திட்டமிடப்பட்ட சூட்சும திரைக்கதை ஒன்றின் படி சமூகம் நம்மை அங்குலம் அங்குலமாய் கட்டுப்படுத்த இடையறாது முயலும் நிகழ்வின் நுணுக்க மாதிரி வடிவம் என்பது போல், இளைஞனின் வாழ்வவை அவன் அம்மா கச்சிதமாய் தன் எதிர்பார்ப்புகள், நம்பிக்கைகளுக்கு ஏற்ப துல்லியமாய் இயக்க விழைகிறாள். ஒரு லட்சிய இளைஞன் பற்றிய அவளது கற்பனைகள் இவை: அவன் உலகத்து அனைத்து அறிவுத் துறைகளிலும் பரிச்சயமுடையவனாய் இருத்தல் வேண்டும். அது போன்றே புகைப் பழக்கம், மது அருந்தும் பழக்கம், முழுமையான பாலியல் வாழ்க்கை ஆகியவை கொண்டு சமூக அந்தஸ்து பெற்று குடும்ப பாரம்பரியத்தை நிலை நிறுத்த வேண்டும். அவனது தந்தை ராணுவ சேவையில் நாட்டுக்காக உயிர் துறந்த வீர பராக்கிரமசாலி என்பது குறிப்பிடத்தக்கது. அவரை யுத்த மரியாதைகளுடன் வீட்டுப் புழக்கடையில் அடக்கம் செய்துள்ளனர். இத்தகவலை படுத்த படுக்கையாய் இளைஞன் சொல்லும் போது உருவாகும் நகைமுரண் கவனிக்கத்தக்கது. இத்தகைய உடல் ரீதியான சாகசக்காரனான தியாகி அப்பாவின் பாரம்பரியத்தை தன் மகன் தொடர்வதற்கான அபத்த முயற்சிகளாய் அவனை சிகரெட் புகைக்க, சுயமைதுனம் செய்ய ஊக்குவிக்கிறாள். அவளது ஏக்கத்தின் சுமக்கவியலா பாரம் அவனையும் அழுத்துகிறது. தன்னை சம்பிரதாய வாழ்வின் நாடித் துடிப்புகளுக்கு ஏற்ப நடிக்க வைக்க முயலும் அபத்தப் போக்கின் உச்சபட்ச குறியீடான அம்மாவைத் தோற்கடிக்கும் அவனது மனஉந்துதலை காட்சி பூர்வமாய் வைட் வெளிப்படுத்துகிறார். சரியாய் ஒன்பது மணிக்கு அவனை தூங்க வைப்பதற்காக அவள் ஒரு டைமரை தயாராய் வைத்துள்ளாள். அதன் படி ஒன்பது மணிக்கு அனைத்து விளக்குகளும் அணைந்து விடும். இந்த திட்டதை முறியடிப்பதற்காய், விளக்குகள் அவ்வாறு அணைந்ததும் செவிலியிடம் ஸ்விட்சுகள் உள்ள இடத்தைக் குறிப்பாய் சொல்லி ஓடிச்சென்று அவற்றை இயக்கப் பணிக்கிறான். அவள் இயக்க, வெளிச்சம் வெண்புறாக் கூட்டம் போல் அவர்கள் மேல் குவிய, குதூகலமாய் தங்கள் வெற்றியை கொண்டாடுகிறார்கள். அதிகார கட்டுப்பாடுகளுக்கும் படைப்பாளிக்குமான உறவு இங்கு விமர்சனத்திற்கு உள்ளாகிறது.
வார்த்தைகளின் மாயஜாலத்தால் மட்டுமே அடிக்கடி தப்பித்து போக இயல்கிற ஒரு சிறையாகவே வாழ்க்கையை அவன் நோக்குகிறான். இந்த பார்வையின் விளைவாய் மரணமே உள்ளீடற்ற வாழ்விலிருந்து விடுதலை எனக் கொண்டு, தன்னை கொன்று விடுமாறு செவிலியை வேண்டுகிறான், மிரட்டுகிறான், பின்பு மனவியல் ரீதியில் அவளை தூண்டில் முள் மீன் போல் மாட்ட வைத்து, தன் விருப்பத்திற்கேற்ப செயல்படுத்துகிறான். இவ்வாறு, சமூக--மனித உறவின் நுண்மாதிரி வடிவம் என்பது போல், தனிமனித உறவுகளின் வலைப்பின்னலில் ஒருவரை மற்றொருவர் தத்தமது சூட்சும திரைக்கதைக்கு ஏற்ப இயக்க முயலும் நிஜம் நாடகம் முழுக்க ஒரு சரடாகவே அதற்கான மெல்லிய நகைச்சுவை, அதிர்ச்சிகளுடன் தொடர்கிறது. நாடகவியல் பற்றி பேசும் ஷேக்ஸ்பியரின் நாடகங்களான தெ டெம்பஸ்ட், ஹாம்லெட் போன்றவற்றில் இந்த கருப்பொருளை அவர் மிகுந்த லாவகத்துடன், நேர்த்தியாய் கையாண்டிருப்பார்.
செவிலி நாடகத்தின் போக்கிலேயே, இளைஞனை புரிந்து கொண்டு, அவனை அளவற்ற கருணையுடன் நெருங்கும் உறவின் பரிணாமம் நாடகப் புரிதலுக்கு முக்கியமானது. பார்வையாளன் ஒரு நாடகத்தின் உள்ளாழங்களுக்கு பயணிக்க மானுடம் மீதான கருணை அவசியம் எனபதை இக்கட்டம் சொல்கிறது. தன் வாழ்வின் குரூரமும், அவமதிப்பும், துயரமும் மிக்க அந்தரங்களை செவிலி சற்று முன்னரே அறிமுகமான இளைஞனிடம், கண்ணாடி முன் நின்று தனக்குத் தானே பேசிக் கொள்வது போன்ற சுதந்திரத்துடன், வெளியிடுவதை ஒரு படைப்பின் முன் அதை உள்வாங்கும் மனம் அந்தரங்களுடன் தயக்கமின்றி உரையாடும் தன்மையைப் பற்றியது.
இளைஞனின் வலிகளையும், இழப்பையும் அவன் பேசக் கேட்கும் செவிலி உணர்ச்சி வசப்பட்டு கண்ணீர் உகுக்கிறாள். அவன் அவளை கடுமையாய் கண்டித்து, சமனிலையுடன் தன் அனுபவங்களை அணுக வேண்டுகிறான். பார்வையாளனுக்கு நாடகாசிரியன் தரும் இந்த மறைமுக அறிவுரை மீண்டும் ஷேக்ஸ்பியரின் முன்பு கூறிய நாடகங்களை நினைவுபடுத்துகிறது. இதில் நகைமுரண் என்னவெனில் நிஜத்தில் நாடகம் நடைபெறுகையில் உணர்ச்சிவசப்படுவது போக, நம் பார்வையாளர்கள் குறைந்தபட்ச எதிர்வினை கூட ஆற்றவில்லை என்பதே. அங்காங்கே மாட்டிய நகைச்சுவை தெறிப்புகளுக்கு நர்சரி குழந்தைகள் ரைம் ஒப்பிப்பது போல் சிரிப்பதிலே அவர்கள் குறியாய் இருந்தனர். ஆனால் இளைஞன் தன் ஊனம் பற்றிய காரணத்தை மறைப்பது போன்ற பல் நுட்பமான தருணங்களில் அவர்கள் உலர்ந்த சோற்றுப் பருக்கைகள் போல் அசைவின்றி ஒட்டிப் போய் இருந்ததே மிச்சம்.
பெரும்பான்மையினராயுள்ள ஆரோக்கியசிகாமணிகள், ஹீமான்கள், அதிமனிதர்களின் உலகம் ஊனமுற்றோர் போன்ற சிறுபான்மையினருக்கு எத்தனை ஒருதலைச் சாய்வானதாய் உள்ளது என்பதை வைட் ஒரு கட்டத்தில் நாசுக்காய் சுட்டிக்காட்டுகிறார். ஒவ்வொரு கிறித்துமஸ் காலையின் போதும் கிறித்துமஸ் தாத்தாவின் பரிசு இளைஞன் படுக்கையருகில் காத்திருக்கும். போது அரங்கில் கனவான்கள் அணிவதற்கான கோட்டும், முழுக்கால் சட்டையுமே அது. படுத்த படுக்கையான அவனுக்கு கிஞ்சித்தும் பயன்படாத அபத்தமான பரிசு. உலக அரங்கில் ஒருவன் தன் அடையாளத்தை நிறுவ, வாழ்க்கைத் தேடலை முன்னெடுத்துச் செல்ல பெரும்பான்மையினருக்கான தடத்திலே பயணிக்க வேண்டும் எனும் கண்மூடித்தனமான, ஒற்றைப் படையான எண்ணப்போக்கு இங்கு கடுமையான கேலிக்கு உள்ளாகிறது.
நாடக ஆரம்பத்திலிருந்தே தன் மரணத்தை விழையும் இளைஞன் தன் பிறந்த நாளான அன்று அதை நிகழ்த்த முடிவெடுக்கிறான். சுய பிரக்ஞையுடன் மரணமுற, அபரிதமாய் மது உட்கொள்வதைத் தவிர்க்கிறான். உயிரைக் காப்பதையே தன் கடமையெனக் கோண்டிருக்கும் செவிலி, அவனது மரண வேண்டுகோளை ஆவேசமாய் மறுத்தாலும் நாடக முடிவில், போதை காரணமாய், மருந்தை மாற்றி அளித்து அவனது மரணத்திற்கு காரணமாய் அமைகிறாள். பின் அதை உணர்ந்து பதறுகிறாள். இளைஞன் அவள் தந்தது சரியான மருந்தாகிய ஆஸ்பரின் தான், தான் இறக்கப் போவதில்லை என்கிறான். இது அவனது கடைசிப் பொய். அவள் அதை நம்பி, பேருவகையுடன் அவனைத் தழுவி கொண்டாடுகையில், அவன் சட்டென இறந்து போகிறான். அவன் மரணம் உறும் காட்சி நாடகத்தின் இறுதித் திருப்பமும், முடிவுமாய் அமைகிறது. இந்த கச்சிதமான முடிவு படைப்பியல் பற்றி ஆழமான ஒரு விஷயத்தை சொல்கிறது. ஒரு படைப்பு புனையப்படுவதான பிரக்ஞை மரணமடையும் நொடியில் தான் அது உயிர் பெறுகிறது. இம்மரணமே முடிவின்மைக்குள் நுழையும் முழுமையான விடுதலையை அளிக்கும். மரணம் இங்கு படைப்பனுபவத்தின் மூலம் ஆசிரியனுக்கும், பார்வையாளனுக்கும் கிடைக்கும் மனத்திறப்பின் குறியீடு.
இம்மனத்திறப்பு மரணம் போன்றே அறிவின் விளிம்பில் நிற்கும் அனுபவம்; மலைமுகட்டு பனி மூட்டம் போன்றது. அடுத்த அடி பாதாளத்திலா, தரையிலா என்னும் நிச்சயமின்னமை படைப்பின் நகர்விலும், வாழ்க்கை எனும் மாபெரும் பிரபஞ்சப் புனைவிலும் நாடித்துடிப்பாய் உள்ளதை ஆண்டுரோமிடாவின் இறுதிக்காட்சி மிக நுட்பமாய் பேசுகிறது. பெயர் தெரியாத ஒரு குழந்தையின் முதற்பார்வை போல் இத்திருப்பம் அரங்கிலிருந்து வெளியேறிய பின்னும் நம்மை தொடர்ந்தவாறு உள்ளது.
No comments :
Post a Comment