18-09-08 அன்று மாலை 7 மணிக்கு ஐயர்லாந்து நாடகாசிரியர் பிரையன் பிரையலின் ஆங்கில நாடகம்
விசுவாச மருத்துவன் சென்னை சிவகாமி பேத்தாச்சி ஆடிட்டோரியத்தில் காலி இருக்கைகளிடையே விரவியிருந்த ஒரே மூச்சில் எண்ணி விடக்கூடிய, என்ன ஏதுவென புரியாத பார்வையாளர்களுக்கு முன் நிகழ்த்தப்பட்டது. விசுவாச மருத்துவன் தீவிர நாடக பாணியைச் சேர்ந்தது. ராஷோமோன் பாணியில் சில பொது நிகழ்வுகளை மூன்று நபர்களின் கோணங்களிலிருந்து விவரிக்கிறது---தனிமொழிகளில். மற்றபடியாய் உங்களை ஆகா என்று சொல்லவைக்க திணிக்கப்படும் தொழில்நுட்ப தந்திரங்கள் ஏதுமில்லை.
இந்த மூன்று நபர்கள் (கதாபாத்திரங்கள்):
(1) பிராங்க்
தொடுகை மூலம் எந்நோயையும் குணப்படுத்தும், ஆனால் அடிக்கடி கைநழுவிப்போகும், ஆற்றல் கொண்டவன். கர்ணனுக்கு தேவையான நேரத்தில் தேர் புதைவது போல், இவனுக்கு அவசியமான நேரத்தில் தன் குறைமாத குழந்தையை காப்பாற்ற முடியாமல் போகிறது. மாந்திரிகத்தை சாத்தியப்படுத்தும் தன் மனநிலையின் சூட்மத்தை இவன் உணர்வதே நாடகத்தின் உச்சகட்டம்.
(2) கிரேஸ்
பிராங்கின் வைப்பாட்டி. பிராங்கால் 'மூளையற்ற விசுவாசி' எனப்படும் இவளுக்கு, சுயசம்பாத்தியமோ, தனித்த சமூக அந்தஸ்தோ அற்ற நம்மூர் மனைவிவருக்கு நிகழ்வது போல், வாழ்வின் தவிர்க்க முடியாத பற்றுக்கோடாக கணவனே இருக்கிறான்.
(3) டெடி
பிராங்கின் மேலாளன். மிகைப்பேச்சாளன். கலைஞருக்கும் கலை நுகர்வோருக்கும் மத்தியிலுள்ள கலைவியாபாரி. நோய் குணப்படுத்தும் சக்தி டெடியைப் பொறுத்தவரையில் பயன்படுத்தப்பட வேண்டிய (கூவிக்கூவி விற்பதற்கான) திறமை மட்டுமே.
இம்மூவரின் தனிமொழிகள் 4 பாகங்களில் நாடகத்தை முன்னகர்த்துகின்றன; சில பொதுச்சம்பவங்களின் முரண்கள், வேறுபாடுகள் சொல்லப்படுகின்றன.
ஒரு சம்பவத்தை ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் விவரிக்கும்போது முரண்கள் தோன்றுவது (ஷேக்ஸ்பியர் காலத்திலொருந்தே) ஒன்றும் புதிதல்ல. ஆனாலும், வாழ்வில் அதுவரை ஒன்றாக செயல்பட்ட மூவரும் தம்முள் மறைத்திருந்த வெறுப்பும், அலட்சியமும், அன்பும் இந்த தனிமொழிகளில் வெளிப்படும் இடங்கள் சுவாரஸ்யமானவை. குறிப்பாய் கணவன் மனைவியரிடையே பரஸ்பர நம்பிக்கையின்மையும், தனிமையும்! வாழ்வின் இறுதித்தறுவாய்களில் அன்பும் ஆசையும் வறண்ட பின்னும், வெறுப்பு மட்டும் தொடந்து கூட வரும் என்று பி.டி. ஜேம்ஸ் தம் நாவலொன்றில் சொன்னது நினைவு வருகிறது.
பிரையன் பிரையல் பற்றி:
வாத்தியார் குடும்பத்தில் தோன்றிய பிரையன் பிரையல் பள்ளி ஆசிரியராய் 10 வருடங்கள் ஒழுங்காய் வேலை பார்த்து, திருமணம் செய்து 5 குழந்தைகள் பெற்றார். ஆசிரியப் பணியை எழுதுவதன் பொருட்டு 1960-இல் துறந்தார். 1958 முதல் 1964 வரையில் தோல்வியை மட்டுமே அறிந்த பிரையனை சீன் வார்டு எனும் பத்திரிகையாளர் ஆபெய் தியெட்டரின் நிராகரிப்புகளில் ஒருவராக குறிப்பிட்டார். உல்பெர் நாடகக் குழுவை தனது நாடகம் சந்தேகத்துக்குரிய சுவர்க்கம் ஏறத்தாழ வீழ்ச்சி நிலைக்குத் தள்ளியதை ஒரு பேட்டியில் பின்னர் அவர் ஒப்புக் கொண்டார். பின்னர் பிலெடெல்பியா இதோ வந்துவிட்டேன் நாடகம் வெற்றி அடைய, நியூயார்க், லண்டனில் கூட இந்த முன்னாள் கணித ஆசிரியர் கொண்டாடப்பட்டார். கணிக்க முடியாத வெற்றி தோல்விகளின் ஏதோ ஒரு புள்ளியிலிரூந்து தனது படைப்பு நிலையின், அகமனத்தின் சூட்சுமத்தை பிரையன் உணர்ந்திருக்க வேண்டும், அவரால் அதை கரும்பலகையில் சூத்திரம் வகுத்து வரையறுத்துக் கூற முடியாவிட்டாலும் கூட. பிரையனுக்கு பிறகு திரும்பிப் பார்க்க நேரவில்லை. நாடக முடிவில் ஒரு நோயாளியை குணப்படுத்த அன்று தன் அற்புதம் செயல்படாது என பிராங்க் நிச்சயித்து விட்ட, அதனால் முரட்டு கிராமத்தாரால் தான் கொல்லப்படலாம் எனும் சந்தர்பத்தில், எதிர்பாராது அவன் காணும் வெற்றி, விசுவாசம், அற்புதம் பற்றிய எத்தகைய தரிசனங்களை அவனுக்கு அளித்திருக்கும் என்பதை, நாடகாசிரியர் பிரையனின் வாழ்வுக் குறிப்புகளை புரட்டும்போது கணிக்க முடிகிறது.
தனிமொழிகளாலான நாடகம் என்றாலும், கூர்மையான நகைச்சுவை, கதாபாத்திர ஆளுமையை சித்திரப்படுத்தும் மாறுபட்ட வசனமுறைகள், உடல் மொழி, துல்லியமான சம்பவ வர்ணனை என சுவராஸ்யமாக பாவையாளன் ஒன்றிப்போகும் படியாய் உள்ளது.
பிராங்காக பி.சி. ராமகிருஷ்ணா. மேமாதம் படத்தில் பணத்தாசை பிடித்த அப்பாவாக பூச்சாண்டி காட்ட முயலும் இவரை நினைவிருக்கலாம். இருவரிலும் இவர் நடித்துள்ள விஷயம் யாராவது இருவர் பட தீவிர விசிறிகள் தீமிதித்து சத்தியம் செய்தால் நம்பலாம். இந்த நாடகத்தைப் பொறுத்தவரையில் நீங்கள் கொட்டாவி விடும் இடம் இவர் வரும் இடமாகத்தான் இருக்கும்.
கிரேஸ் பாத்திரத்தில் தோன்றுவது தெகசிப் கத்தாரி. பி.சி.க்குப் பிறகு தோன்றுவதாலோ ஏனோ நன்றாய் நடித்ததாய் பட்டது. (தனக்கு விசுவாத குணப்படுத்தல் சாத்தியமாவதில்லை எனும் இவர், ஏன் ஒரு புறா போல் லேசாய் தலைசாய்த்து, சில தொலைக்காட்சி புகழ் ஸ்ரீ ஸ்ரீ ஆனந்தாக்கள் போல் சம்மந்தமின்றி அடிக்கடி வசனத்துக்கு நடுவே மந்திரம் உச்சாடனம் செய்கிறார் என்பது யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்களேன்.)
டெடி உணர்ச்சிக் கொந்தளிப்புகளும் தடுமாற்றங்களும், சின்ன கிறுக்குத்தனங்களும் உடைய வண்ணமயமான பாத்திரம். கார்த்திக் ஸ்ரீனிவாசன் டெடியாக அதிகப்படியான கைத்தட்டல்கள் பெற்றார். எழுத்தாளர் சுஜாதா போல் ஒல்லியாய் உசரமாய், கேவல் குரலும் சேர்த்தால் கார்த்திக். பிரக்ஞையற்ற சரள நடிப்பு இவர் பலம். இது போன்ற சாப்ளின் பாணியிலான, நினைவில் நீங்கா துன்பியல் கலந்த நகைச்சுவை பாத்திரங்களை அத்தியாயம் 2, ஆண்டுரோமிடா போன்ற நாடகங்களில் ஏற்கனவே சிறப்பாய் செய்திருக்கிறார்.
நாடகத்தின் அன்றைய பார்வையாளர்கள் பற்றி:
சென்னையில் இது போன்ற ஆங்கில நாடகங்களை போஷிக்கும், தமிழில் சொதப்பி, ஆங்கிலத்தில் குதப்பும் சிவப்புத் தோல் கனவான், சீமாட்டிகள் ஆழ்வார்பேட்டை போன்ற இடங்களில் வாசலில் கூர்க்கா தூங்க உள்ளே பங்களாக்களில் தூங்குபவர்கள். நாகேஸ்வரராவ் பூங்காவில் திபுதிபுவென ஒடும் இவர்கள் எச்சரிக்கை உணர்வு மிக்கவர்கள். பூங்காவுக்கு பின் தெருவில் நடைப்பாதையில் ஒருமுறை அமர்ந்திருந்ததற்கு, எதிர் மொட்டைமாடி வீட்டு மாமி ஒருத்தி என்னை "போலீசில் பிடித்துக் கொடுப்பேன்" என்று மிரட்டினாள். இதை ஏன் சொல்லுகிறேன் என்றால் அன்றைய கூட்டத்தில் இவர்களே 96% ஆக இருந்ததால் (நிஜமாகவே தலையெண்ணிப் பார்த்து சொல்கிறேன்), நான் நிகழ்ச்சி முழுக்க காரணம் புரியாத பதற்றத்துடனே அமர்ந்திருந்தேன். சுய அனுபவத்தோடு, இதற்கு அங்கு நிலவிய முன்காலனியச் சூழலும் ஒரு காரணம் (நாடகத்துக்கு நடுநடுவே சத்தமாய் விமர்சனம் முணுமுணுக்கும் கல்லூரி ஆங்கில வாத்திகள் உபயம்!).
மேட்டுக்குடியினருக்கு திருமணம், புத்தக வாசிப்பு, கைவினை கண்காட்சி, நாடகம் என ஒவ்வொன்றுமே ஆடை நுண்ணுணர்வை, கலையுணர்வை, ஆங்கில அறிவைக் காட்டிச் சிலுப்ப ஒரு பிரச்சார வாய்ப்பு. ஆடை ஒரு விளம்பர தட்டி போல. உதாரணத்துக்கு நாடகத்துக்கு குர்த்தா (இரு குர்த்தா ஆசாமிகளை பின்தொடர்ந்துதான் நானே சி.பே. ஆடிட்டோரியத்துக்கு வழி கண்டு பிடித்து வந்தேன்). சென்னையில் ஆங்கில நாடகங்கள் உயிரோடிருப்பதற்கு இவர்களும் முக்கியக் காரணம்.
மிச்சம் 4 சதவீதத்தில், வானொலிப் போட்டி ஒன்றில் வென்று இலவச அனுமதிச்சீட்டுப் பெற்றுத்தந்த என் மனைவியும், நானும்; மிச்ச இரண்டு பேர் பெயர் தெரியாத, 200க்குக் குறைவான விலையில், பச்சை நீல உடையணிந்த, திருதிருவென முழித்த, வத்தலான, நம்மூர் அழகிகள். இப்படி எங்களுக்கு டீக்கடையில் நின்று காபூசீனா குடிக்கும் கலவர உணர்வு ஏற்பட்டாலும், இந்த நாடகம் ஒரு நல்ல அனுபவமே.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment