ஐ.சி.சியின் சமீபத்திய எக்காலத்துக்குமான 100 வீரர்கள் தரவரிசை ஒரு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளதாய் சொல்ல நான் ஒன்றும் சன் செய்தி வாசிப்பாளன் அல்ல. ஒரு சில பேர் அதிருப்தியை வெளியிட்டுள்ளனர். ஆனால் அவர்களில் பெரும்பாலோனோர் மைக் விழுங்கின முன்னாள் வீரர்கள். சற்று முன்னால் "முன்னாள்" பதவியை அடைந்த கும்பிளே கொஞ்சம் விலகி நின்று பார்த்து சொல்கிறார்: "தரவரிசைப் பட்டியல்களை பொருட்படுத்த வேண்டாம். யாரும் என்னிடம் இருந்து 600 விக்கெட்டுகளையோ, சச்சினிடமிருந்து 12000 ஓட்டங்களையோ பறித்து விட முடியாது. தற்போது அலச எந்த இந்தியா ஆட்டங்களும் நடக்க இல்லை, அதனாலே மீடியா இதை அவசர அவசரமாக பயன்படுத்தப் பார்க்கிறது". கும்பிளே மற்றுமொரு நல்ல விசயம் செய்கிறார். டீ.வி மைக்கை தவற விட்டு தனது ஈடுபாடான புகைப்படக் கலையை தொடரப் போகிறார். சலித்துப் போய் வரவர டீ.வி வர்ணனையாளர்கள் தங்களைப் பற்றியே பேசிக் கொள்கிறார்கள். இந்த அரட்டை குறட்டை நடுவே சில சமயம் விக்கெட் சரிந்தால் கூட சில நொடிகள் கழித்தே ஆ...ஊ.. என்கிறார்கள்.
சரி, பட்டியலில் காரசாரமாய் ஏதேனும் உள்ளதா? சச்சின் 16-வது இடத்தில். அவருக்கு சற்று முன்னால் 15-வது இடத்தில் சமீபத்திய சென்னை டெஸ்டில் இரண்டு வித ஷாட்களை மட்டுமே பயன்படுத்தி இரட்டை சதம் அடைந்த இங்கிலாந்து வீரர் ஆண்டிரூ ஸ்டுராஸ். முதல் பத்து பட்டியலில் லாராவும் இல்லை. இந்த பட்டியலை பார்க்கும் குட்டிப் பாப்பா கூட கைகொட்டி சிரிக்கும்தான். பொதுவாய் நமக்கு எழுந்த கேள்விகள்: ஐ.சி.சி பட்டியலாளர்கள் அத்தனை மடையர்களா இல்லை வரிசைப்படுத்திய மென்பொருளின் குளறுபடியா? ஆனால் இந்த பட்டியலிடலின் பயன்பட்ட அளவுகோலில் சற்று யதார்த்தம் உள்ளது. வரிசைப்பட்டியலை கிளறும் முன், ஒரு வீரர் தன் ஆட்டவரலாற்றில் எட்டியுள்ள உச்சங்களின் உயரத்தை கூறுவதே அதன் நோக்கம் என்பதை கவனிக்க வேண்டும்.
இந்த உச்சம் என்றால் என்ன? "பர்ப்பிள் பாட்ச்" எனப்படும் இந்த உச்சம் ஒரு வீரரின் மிக ராசியான காலகட்டத்தை குறிக்கிறது. இந்த கட்டத்தில் வீரரின் மனமும் உடலும் அபூர்வமான ஒருங்கிணைப்பை அடையும். மனம் நினைக்கும் போதே மட்டை வீசப்படும். உதாரணமாய், இலங்கைக்கு எதிரான ஒரு ஒருநாள் ஆட்டத்தில் சேவாக் வாஸின் பந்தை தூக்கி அடிக்க இறங்கி வந்தவர் பந்து தோளுயரம் எகிற, கால் நொடியில் சுதாரித்து பின் சென்று தேர்டு மேன் பகுதியில் (கீப்பருக்கு பின்னால் இடப்புறமாய்) ஆறு அடித்தார். சேவாக்கின் மேதைமை என்னே என டீ.வி சேவல்கள் கொக்கரித்தன. சேவாக் சொன்னார்:"என்ன நடந்ததென்று எனக்கே தெரியவில்லை, நான் திட்டமிட இல்லை. உள்ளுணர்வில் தான் அடித்தேன்". மனமும் உடலும் ஒருங்கிணையாமல் இருந்திருந்தால் சேவாக்கின் மண்டை எகிறியிருக்கும். இந்த தேனிலவு பருவத்தில் அதிர்ஷ்டம் முழுதும் இந்த வீரர் பக்கமே. பந்து குச்சியில் பட்டாலும் பெயில் கீழே விழாது. அவுட் ஆனாலும் அம்பயர் இல்லை என்பார். இப்படியான சிகரங்கள் பெரும்பாலான வீரர்களுக்கு ஒன்றிரண்டு ஆட்டங்கள் மட்டுமே. ஒரு சிலருக்கு மட்டுமே சிகரங்கள் வரிசையாய் இரண்டு மூன்று தொடர்களென நீளும். அப்படி நேரும் பட்சத்தில் இந்த வீரரால் தனிப்பட்ட முறையில் தன் அணியை தொடர்ந்து காப்பாற்ற, வெற்றிக்கு அழைத்துச் செல்ல முடியும்.
இந்த பர்ப்பிள் பாட்ச் நிலவரத்தை புரிந்து கொள்ள நாம் 2001 ஆஸி--இந்திய டெஸ்டு தொடரை நினைவு கொள்வோம். லஷ்மண் இரண்டாவது ஆட்டத்தையும் (281 ஓட்டங்கள்), ஹர்பஜன் (32 விக்கெட்டுகள்) இரண்டாவது மூன்றாவது ஆட்டங்களையும் தனியாளாய் அணிக்கு வென்று கொடுத்தனர். ஆனால் அடுத்து வந்த ஏழு வருடங்களில் என்றுமே இருவராலும் இந்த மாயத்தை தொடர முடியவில்லை. சீராய் ஆடி பின்னர் பெயரை தக்க வைத்தாலும் இவர்கள் சிகரம் ஏறுவதை மறந்து தொடர்ந்து சமதளத்திலெயே குதிரை ஓட்டினர். ஈடன் கார்டனில் வி.வி.எஸ் லஷ்மண் ஆஸ்திரேலியாவுக்கு 280 விளாசி ஆட்டத்தை வென்ற பின் ஒரு விமர்சகர் சொன்னார்: "பாவம் வி.வி.எஸ் தன் ஆட்ட வாழ்வில் உச்சத்தை வெகு சீக்கிரமே எட்டி விட்டார், இனிமேல் இறக்கம்தான், வேறுவழியில்லை". இன்று வரை இந்த பல்முளைத்த ஞாபகத்தில் தான் வி.வி.எஸ் தூங்கி வழிந்து ஆடி வருகிறார். பஜ்ஜி இறங்குமுகத்தின் கடைசி சறுக்கலாய் உள்ளே வரும் ஆப்ஸ்பின் எனும் ஆதாரப் பந்தை சரியாய் வீச முடியாமல் தூஸ்ரா, டாப்ஸ்பின் கொண்டு சமாளித்து வருகிறார். இப்போது பஜ்ஜி தன் மட்டை ஆட்டங்கொண்டு தான் அணிக்கு முக்கிய பங்களிக்கிறார். 2001-இல் ஆரம்பித்த வேகம் ஒரு வருடமேனும் தொடர்ந்திருந்தால் இப்போது 400 விக்கெட்டுகள் அனாயசமாய் எடுத்திருப்பார். இத்தகைய ஏணி--பாம்பு ஆட்ட வாழ்வுக்கு மற்றொரு உதாரணம் பாக்கிஸ்தானின் அக்தர்.
இதே தொடரில் ஹர்பஜனை தவிர பிறரை எளிதில் சமாளித்து ரன் குவித்த ஆஸி அணியின் ஹெய்டன் (3 ஆட்டங்களில் 549 ஓட்டங்கள், சராசரி 109.80) தொடர்ச்சியாய் 5 வருடங்கள் தன் ஆட்ட உச்சத்தை தக்க வைத்தார். 2001 முதல் 2005 வரை ஒவ்வொரு வருடமும் ஹெய்டன் ஆயிரம் ஓட்டங்களை குவித்தார், அதுவும் சரவெடி ஆட்டத்தால். ஜஸ்தின் லாங்கர் எனும் அதிரடி ஆட்டக்காரரோடு சேர்ந்து இவர் ஒரே நாளில் முந்நூறைத் தாண்டும் புதிய டெஸ்டு போட்டி வழக்கத்தை தொடக்கி வைத்தார். கிரிக்கெட் வரலாற்றில் பந்தாளர்ளுக்கு வருடம் தோறும் கிலி ஏற்படுத்திய டெஸ்டு ஜோடி இவர்கள் மட்டுமே. இப்படியான தொடர் உச்சங்கள் தான் ஐ.சி.சியின் தற்போதைய பட்டியலின் பின்னுள்ள அளவுகோல்.
பட்டியலில் முதலிடத்தில் உள்ள மேற்கிந்திய அணி மட்டையாளர் சிவ் நரைன் சந்தர்பவுல் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர். சந்தர்பவுல் தொடர்ச்சியாய் கடந்த இரு வருடங்களில் 100க்கு அதிகமான சராசரியை தக்கவைத்து உள்ளார். பிராட்மானுக்கு அடுத்த படியான சாதனை இது. 1000 பந்துகள் தொடர்ச்சியாய் வெளியேறாமல் ஆடியுள்ளார். முக்கியமாய் மூன்று தொடர்களில் (இங்கிலாந்து, இலங்கை, ஆஸ்திரேலியா)தனியாளாய் அணிக்கு தேவையான பெரும்பகுதி ரன்களை சேர்த்துள்ளார். இங்கிலாந்து தொடரில் இவரது சராசரி 148.66; ஆஸி தொடரில் 147.33. ஆஸி வீரர்களால் மூன்று ஆட்டங்களில் இவரை வெளியேற்றவே முடியவில்லை.
சந்தர்பவுலுக்கு பல பலவீனங்கள். பந்து வீசப்படும் கால் நொடி வரை குச்சிகளுக்கு குறுக்கே நிற்கும் ஆபத்தான பாணி; முன் கால் ஆட்டம் அரைகுறை; கால் பக்கம் வரும் பந்தை அடிப்பதில் தான் முதல் விருப்பம், பெரும்பாலான பந்துகள் பொதுவாய் ஆஃப் பக்கமே விழுவதால் படகோட்டுவது போல் தொட்டுத் துழாவி ஆடுவார். இவரை செலுத்துவது மனதிடம், விடாப்பிடி குணம் மற்றும் கவனம்.
இப்போது சொல்லுங்கள்: உங்கள் சச்சினோ, திராவிடோ இது போன்ற சராசரியோடு தொடர்ச்சியாய் மூன்று தொடர்கள் ஆடியதுண்டா? மேற்கூறியவர்களை விட பன்மடங்கு திறமைசாலியான சச்சினால் தன் ஆட்டத் தீவிரத்தை வாழ் நாளில் தொடர்ச்சியாய் இரு ஒரு நாள் தொடர்களில் மட்டுமே ஏறத்தாழ தக்கவைக்க முடிந்தது: 1999 கட்டத்தில் வங்கதேசம் மற்றும் ஷார்ஜாவில் நடந்த ஆட்டங்களில். சச்சினினுடயது நிதானமான ஆட்ட வளர்ச்சி மட்டுமே. பெரும்பாலும் ஒரு தொடரில் ஒன்றிரண்டு ஆட்டங்களில் அவர் தொடர்ச்சியாய் சதங்கள், பிறகு தூங்கப் போய் விடுவார். மெல்லத் தின்றால் பனையையும் தின்னலாம் என்பார்களே அது போல். இதற்கு ஒரு காரணம் அவரால் வெகு நேரம் கவனத்தை தீவிரத்தை தக்க வைக்க முடியாது என்பதே. அப்படி தக்கவைத்தாலும் அது ஒரு ஆட்டத்துக்கு மட்டுமே இருக்கும்.
எம்.சி.சி கல்லூரி அணியில் அவ்வப்போது பந்து வீசி வந்த நண்பர் வாசிமலையிடம் ஒரு நாள் கேட்டேன்: சாதாரண ஒரு நபர் சதம் அடிப்பதற்கும் சச்சின் அடிப்பதற்கும் என்ன வித்தியாசம்? எல்லாம் ஒரே ஓட்டங்கள் தானே? "
வாசி எரிச்சலாக சொன்னார்: " இந்த முனையிலிருந்து அந்த முனைக்கு ஒரு பயின்ற ஓட்ட வீரர் ஓடுவதற்கும் நீ ஓடுவதற்கும் வேறுபாடு உண்டல்லவா? ஓடும் பாணி, தொழில் நுட்பத்தில்"
"ஒரு வேளை நான் அவரை முறியடித்து முதலிடத்திற்கு வந்து விட்டால் பாணி, தொழில்நுட்பம் இருந்து என்ன பயன்?"
என்னை துரத்தி அடிக்காத குறைதான்.
சச்சினின் கலை, புத்திசாதுர்யம், லாவகம் புரிகிறது. ஆனால் ஓட்டங்களுக்கு கலையுணர்வின் கனம் இல்லை. அவை வெறும் எண்கள் தான். கடந்த வருடம் பங்களூரூவில் ஆஸி டெஸ்டில் சகீர்கான் அடித்த எண்பது கூட ஒரு சச்சின் சதத்தை விட இதனாலே சில நேரம் அதிக முக்கியமானதாகிறது.
12,000 ஓட்டங்களல்ல, சச்சின் தன் மேலதிகாரத்தை நிறுவ வரப்போகும் நியூசிலாந்து தொடரில் 100 சராசரியில் ஓட்டங்கள் எடுக்க வேண்டும். ஐ.சி.சி பட்டியல் இந்திய கிரிக்கெட் மேதைகளுக்கு ஒரு முக்கிய நினைவூட்டல்.
No comments :
Post a Comment