Monday, 20 July 2009

எழுத்து வெறியும் ஒழுக்கு நிலையும்: ஏராளமாய் எழுதுவதன் பின்னணி என்ன?

எழுத்தாளன் குறைவாக, மெலிதான அளவில் தான் எழுத வேண்டும் என்றொரு தரப்பு தமிழில் உள்ளது. ஆயிரங்களில் எழுதப்படுவது நீர்த்துப் போன எழுத்து என்பது இவர்கள் வாதம். ஒரு எழுத்தாளனின் முதல் நூலைப் படித்தால் போதும். பிறகு அவன் எழுதுவதெல்லாம் அதன் மிகையான பிரதிகள் தான் என்றார் சுஜாதா. அதாவது எழுத்தாளனின் சாராம்சமான தரிசனம் அவனால் பிறகு எழுதும் நூல்களில் பல்லாயிரம் பக்கங்களுக்கு மோர்ப் பந்தலாக்கப்படுகிறது. தமிழில் சில வாசக\விமர்சகர்கள் இது வணிக நிர்பந்தம் என்கிறார்கள். தமிழில் ஊடகங்களுக்கு தீப்பசி. இதற்கு எழுத்தாளன் பலியாகக் கூடாது என்கிறார் யுவன் சந்திரசேகர். 

நான் ( "நான் கடவுள்" புகழ்) விக்கிரமாதித்யனை முதலில் நான் சந்தித்தபோது அவர் தமிழில் நிறைய தலையணைகள் வந்திறங்கி உள்ளதாய் லேசாய் கிறங்கின கண்களுடன் விசனித்தார். அது சு.ராவின் "குழந்தைகள் ... " காலம். விக்கிரமாதித்யனின் வயதையும், அவர் ஒரு பிரயாணி என்பதையும் நாம் கணக்கில் கொள்ள வேண்டும். மற்றபடி குண்டு நூல்களும் தரும் சிரமங்கள் என்ன? தொடர்ச்சியை தக்கவைத்து படிப்பதில் அன்றாட வாழ்வில் உள்ள சிரமம். தலையணைகளை கோடை விடுமுறைகளில் படிக்க வேண்டும். அல்லாவிட்டால் 10 மணிநேரம் அலுவலகம், போக்குவரத்து, குடும்பம் என்னும் குக்கர் வெயிட்டை எடுத்து விட்டு தினம் ஒரு மணி நேரம் விகிதம் "போரும் அமைதியும்" படிக்கலாம். ஆனால் அதன் நாலு லட்சத்து அறுபதினாயிரம் வார்த்தைகளில் வரும் நாற்பது சொச்சம் பாத்திரங்களில் 'யாரிந்த இல்லியா ஆண்டியாவிச் ரொஸ்டாவா ?' என்று திடீரென கனவில் முழித்து தோன்றும். குறைந்த பட்சம் தலையணைகளைப் படிக்க ஒரு வார விடுப்பு நல்லது. 

சில தடிமன் நூல்களைப் படிக்க முன்தயாரிப்பு வேண்டும். உதாரணமாய் "விஷ்ணுபுரம்". இந்நூலின் பாதியில் வந்தவுடன் நல்ல பிள்ளையாய் மூடி வைத்து 'இந்து மரபின் ஆறு தரிசனங்கள்' நூலை படித்து விட வேண்டும். அப்போது தான் தொடர்ந்து வாசிக்க ஒரு தன்னம்பிக்கை பிறக்கும். இன்னொரு முறையும் உண்டு. அதற்கு விடுப்பு தேவையில்லை. உங்களிடம் கார் இருந்தால் ஒவ்வொரு சிக்னல் நிறுத்தத்தின் போதும் ஒரு சில பக்கங்களை படித்து விடலாம். கனடாவில் ஒரு பெண்மணி இப்படியாக "விஷ்ணுரத்தை" தலைகீழ் பாடமாக்கி விட்டார். சாலை போக்குவரத்திடையே நடந்து கொண்டும் படிக்கலாம். அப்படி ஒருவரை தக்கலையில் பார்த்திருக்கிறேன். 

தகுந்த தயாரிப்புகள் உள்ள பட்சத்தில் பரந்துபட்ட பெரும் நாவல்களின் நாட்கணக்கான வாசிப்பு நீட்சி ஒரு அலாதியான அனுபவம். 

வினாடி கணக்காய் அட்டவணைப் போட்டு கழிக்கும் இந்த அதிவிரைவு காலத்தில் தான் தமிழில் குண்டு நூல்கள் பெருமளவில் பிரசுரமாகின்றன. நம்மைவிட ஜுரவேகத்தில் வாழும் மேற்கில் கோடிக்கணக்கில் படிக்கப்பட்ட "டாவின்சி கோட்", "ஹாரி போட்டர்" வரிசைகள் ஒன்றும் குறுநாவல்கள் அல்ல. சமீபமாய் தீவிர இலக்கிய நூல்களின் விற்பனையும் எகிறியுள்ளது. தீவிர இலக்கியவாதிகள் நட்சத்திரங்கள் ஆகி விட்டனர். இது வணிக எழுத்து காலி செய்த இடத்தை தீவிரர்கள் பிடித்ததன் விளைவுதான்; இதை வணிகமயமாக்கம் என்று விமர்சிப்பவர்கள் எழுத திராணியற்றவர்கள் என்கிறார் ஜெயன் "நவீனத் தமிழிலக்கிய வரலாறு" நூலில். இதில் பாதியே உண்மை; திராணி என்பதை விருப்பம் என்று மாற்றிக் கொள்ள வேண்டும். 

ஏராளமாய், குண்டு குண்டாய் எழுதத் தூண்டுவது என்ன? 
பணம் (?), புகழ், அவகாசம் போன்றவை காரணம் என்றால், ஒரே நூலில் உலகளவில் பிரபலமடைந்த சாலிங்கர் (காட்சர் இன் த ரை), அருந்ததி ராய் (காட் ஆப் ஸ்மால் திங்க்ஸ்), ஹார்ப்பர் லீ (டு கில் எ மாக்கிங் பெர்டு), ரால்ப் எலிசன் (இன்விசிபிள் மேன்) போன்றோர் அடுத்து நாவல் ஏதும் பிரசுரிக்காதது ஏன்? இந்த தூண்டுதல் உள்ளிலிருந்து வருவது.

உலகின் பல முக்கியமான எழுத்தாளர்கள் தாராளமாய் எழுதக்ககூடியவர்கள். பல்சாக் ( நாடகங்கள், நாவல்கள் சேர்த்து 100), விக்டர் ஹுயூகோ (75 நூல்கள்), மார்க்வெஸ் (23 நூல்கள்), பாக்னர் (20 நாவல்கள்), விர்கீனியா வூல்ப் (39 நூல்கள்), கான்ரட் (19 நாவல்கள்), வி.எஸ் நைப்பால் (33 நூல்கள்), ரஷ்டி (18 நூல்கள்) .... இப்படி நீள்கிறது பட்டியல். 

எல்லா எழுத்தாளர்களுக்கும் தாராளமாய் எழுத விருப்பம் தான். எழுத்தை பாதியில் நிறுத்துபவர்கள் அல்லது ஆரம்பத் தகராறு கொண்டவர்கள் எழுதாதது பற்றி சப்பைக் கட்டு கட்டுவது வாடிக்கை. பலர் 'உங்களுக்கு மட்டும் எப்படி எழுத நேரம் வாய்க்கிறது?' என்று தாராளர்களிடம் கேட்பதை காண்கிறோம். நம்மூரில் தம்பதிகள் மாதம் 12 முறை புணர்ந்தாலே அதிகம் என்கிறது ஒரு ஆய்வு. இதற்கு காரணமாக சொல்லப்படுவதும் வேலை அலுப்பு, மனஅழுத்தம், பதற்றம் ... இப்படி. யாரும் ஒத்துக்கொள்ளாத நிஜமான காரணம் ஒரே துணையை புணர்வதன் சலிப்பே. ஒருதுணை வாழ்வு பரிணாம விழைவுக்கு முரணானது. மாதம் ஒரு துணையென்றால் 12 மணி நேர வேலைக்கு பின்னும் பலருக்கு தூக்கம் வராது. இந்த விருப்ப விவகாரம் தாராள எழுத்துக்கும் பொருந்துவது. இந்த வகை எழுத்தாளர்களுக்கு எழுதாமல் தூக்கம் வராது.

சரி இந்த விருப்பம் சில பேருக்கு மட்டும் ஏன் ஏற்படுகிறது?

நான் இப்போது எழுதும் கை அசைவுகளை கட்டுப்படுத்துவது மூளை மேல்பரப்பிலுள்ள செரிபிரல் கார்டெக்ஸ் எனும் பகுதி. லிம்பிக் சிஸ்டம் எனப்படுவது ஒரு வட்ட வடிவ செல்கூட்டம். அது இந்த கார்டெக்சினுள் ஆழப் புதைந்துள்ளது. உங்கள் எழுத்தார்வத்தை தூண்டுவது; அகத்தூண்டுதல், உணர்வெழுச்சிகள், கண்ணுக்குள் பட்டாம்பூச்சி பறத்தல், சேக்கிழாருக்கு இறைவன் தந்த முதல் வரி அனைத்துக்கும் காரணமாவது பங்காரு அடிகளாரோ, பாபாவோ, சந்துமுனை கம்பி கூண்டு பிள்ளையாரோ, திராவிட அபிமான, சிவப்பு சித்தாந்தங்களோ அல்ல. இந்த லிம்பிக் சிஸ்டம் தான். லிம்பிக் பகுதியுடன் தொடர்புடையது நம் காதுக்குள்ள பின்னுள்ள டெம்பொரல் லோபுகள். இந்த லோபுகள் தாம் எண்ணங்களை ஒருங்கிணைப்பது வெட்டி சீர்படுத்துவது. இவற்றில் நிகழும் மூளை அலைகளின் நடவடிக்கைகளால், குறிப்பாய் பிரண்டல் லோபு பரபரப்படையும் போது, ஹைப்பர் கிராபியா எனும் ஆட்கொள்ளும் படைப்பு தூண்டுதல் நேர்கிறது. எட்கர் ஆலன் போ, தஸ்தாவஸ்கி, சில்வியா பிளாத், ஐசக் அசிமோவ், லீவில் கரோல் போன்றவர்கள் ஹைப்பர்கிராபியாவால் தூண்டப்பெற்றவர்கள். எழுதியே ஆக வேண்டும் என்று பசி, இயற்கை உபாதைகள் மறந்து பக்கம் பக்கமாய் கிறுக்கித் தள்ளும் உங்களில் சிலரும் ைஹைப்பர் கிராபியா மனநிலை கொண்டவர்தான். 

வலிப்பு எனும் நரம்பியல் கோளாறு மற்றும் மனச்சிதைவு, பைபோலார் டிஸ் ஆர்டர் எனும் மனநோய்கள் இந்நிலையை அரிதாக ஏற்படுத்தும். வலிப்பு ஹைப்பர்கிராபியாவுக்கு பிரதான உதாரணம் தஸ்தாவஸ்கி. தமிழில் பல எழுத்தாளர்களர்களுக்கு தங்களை மன நோயாளிகளாய் முன்னிறுத்துவதில் விருப்பமுள்ளது. அந்த அபாயத்தை முன்னிறுத்தி இதை சொல்லியாக வேண்டும். இந்த டெம்பரல் லோப் படைப்பாக்கம் குறிப்பாய் ஒரு மனநோய் அல்ல.

மற்றொன்று. இந்த தீவிர படைப்பு உந்துதலால் எழுதப்படுபவை அனைத்தும் தரமானவை அல்ல. குப்பைகள் எழுதப்பட்டு கூடைகளுக்கோ, பிரசுரத்துக்கோ செல்லலாம். மேலும் ஹைப்பர்கிராபியா ஒரு தூண்டுதல் மட்டுமே. பைக்கை உதைப்பது, விளக்கு பொத்தானை அழுத்துவது போன்று. பரிபூரண எழுத்து மனநிலை, அதனால் தாராள எழுத்துக்கு இது மட்டுமே விளக்கம் அல்ல. பிரக்ஞை மனதுக்கும் ஆழ்மனதுக்கும் ஒரு ஒருங்கிணைவு படைப்பு நிலை கைகூடுவது இதற்கு அவசியம். அப்போது மொழியை வெளிப்படுத்துவதில் இன்பம் ஏற்படுகிறது. காலம், வெளியிலிருந்து பிரக்ஞை கழன்று கொள்கிறது. தடையற்ற தொடர்எழுத்து சாத்தியமாகிறது. இந்நிலையை மிகாய் ஷிக்செண்ட் மிகாய் எனும் ஹன்கேரிய மனோவியலாளர் flow (ஒழுக்கு) எனும் கருத்துப் படிவம் மூலம் விளக்குகிறார். ஒருவர் ஒழுக்கு மனநிலையை அடைகிற போது சில காரணிகள் செயல்படுகின்றன:


ஈடுபட்டுள்ள நடவடிக்கையில் மனதை குவித்து ஆழமாய் இறங்கும் வாய்ப்பு; மனம் சிதறாத தன்மை.
பிரக்ஞை உணர்வு இழப்பு: செயலுக்கும் விழிப்புணர்வுக்குமான சங்கமம்
நேரம் போவது தெரியாமல் செயல்படுவது; கடிகாரத்தை வியப்பது அல்லது கோபிப்பது
நிலைமை மற்றும் நடவடிக்கை தனது கட்டுக்குள் இருப்பதான உணர்வு
ஒழுக்கு நிலையில் ஒரு உள்ளார்ந்த இன்பம் உள்ளதால் செயலின் கடினம் தெரிவதில்லை
திறமை அளவுக்கும் இலக்குக்கும் (அல்லது சவாலுக்கும்) நடுவிலான சமநிலை. இலக்கு எட்ட முடியாத அதிக கடினமாகவோ, எளிதில் எட்டி விடும்படி படுசுலபமாகவோ இருத்தல் கூடாது.

ஒழுக்கு மனநிலைக்கு இந்த கடைசி வரையறை மிக முக்கியம் என்று கருதுகிறேன். தொடர்ச்சியாய் எழுதிக் குவிப்பவர்கள் தங்களுடைய லட்சுமணக் கோட்டை விட்டு வெளிவராமல் எழுதுபவர்கள் என்பதை நாம் கவனிக்கலாம். தங்களுக்கு புழங்க தன்னம்பிக்கை உள்ள அதே நேரம் முழுதும் அறிந்துபடாத துறைக்குள் இயங்குவதிலேயே அனைத்து சிறந்த படைப்பாளிகளுக்கும் ஈடுபாடு. ஒரே மரத்தில் கிளை விட்டு கிளை தாவும் ஒருவித குரங்குத்தனம் இந்த மனப்பாங்கு. இந்த எழுத்தாளர்கள் பலதரப்பட்ட துறைசார் தகவல்களை தந்து பின்புலத்தை மாற்றி அமைத்தாலும் இவர்களின் பாத்திரங்களின் பிரச்சனைகள் ஒரே போன்றே இருப்பதை நாம் கவனிக்கிறோம். உதாரணமாய் தஸ்தாவஸ்கி. தேர்வுத் துணிவாற்றல் (freewill) இவரது மனம் பற்றிய மரக்கொம்பு (மேற்கின் பெரும்பாலான கிறித்துவ எழுத்தாளர்களுக்கும்). இதனாலேயே "குற்றமும் தண்டனையும்" நூலில் வரும் ரஸ்கால்னிக்கோவும், கரமசோவ் சகோதர்களில் ஒருவனான அலெக்சேய் கரமசோவும் எதிர்மறுப்புவாதம், ஆன்மீகம் எனும் இரு வேறுபட்ட நிலைப்பாடுகளில் நின்றாலும் நேரடியாகவோ மறைமுகமாகவோ கொலை செய்வது. எழுத்தாளர்கள் அடிக்கடி கதைத்தளத்தை புத்திசாலித்தனமாய் மாற்றிக் கொள்வது மேற்குறிப்பிட்ட சமநிலையை தக்கவைக்கத்தான். 

கி.ரா. எழுதுவது கடினமானது, ஒருவித வாதை என்கிறார். 'ஒழுக்கு' மனநிலையில் எழுத்து நிச்சயம் வாதை அல்ல, போதை. ஆயிரத்து முன்னூறு பக்க நாவலை தால்ஸ்டாய் பிரசுரத்துக்கு சற்று முன்வரை பல முறைகள் திருத்தி எழுதியபடி இருந்தார். இது பொறுமையோ கடும் உழைப்போ அல்ல. இப்படி பத்தாயிரம் பக்கங்களை எழுதுவது ஒழுக்கு நிலையில் வலியல்ல, ஒருவித நீடித்த சுயபுணர்வு அனுபவம். 

தாராள எழுத்தைப் போன்றே அக்குள் சைசுக்கு ஆயுளுக்கு ஒரு புத்தகம் எழுதுவதும் ஒரு இயல்புதான். குறைவாய் எழுதுவதற்கு சுயசமாதானம் தேவையில்லை. (மனோஜ் தனது "புனைவின் நிழலில்" தனக்கு அச்சு மோகம் இல்லை என்கிறார்.)

தாராள எழுத்தாளனை 'போலியாய் எழுதாதே' என்று கட்டுப்படுத்துவது கழிப்பறைக்கு விரைபவனை தடுப்பதற்கு ஒப்பாகும். ஒல்லிப்பீச்சான் எழுத்தாளனை 'சோம்பேறி' என்று விமர்சித்து தாராளமாய் வெளியிடும்படி எக்க வைப்பது அதை விட பெரும் வதை. எழுத்தை வாதையாக்குவது இந்த லெனினியவாதிகள் தான்.
Share This

No comments :

Post a Comment

Contact Us

So you think we’re the right folks for the job? Please get in touch with us, we promise we won't bite!



Designed By Blogger Templates