Thursday, 29 October 2009

"சச்சின் அவுட் சரிதான்": ஆஸ்திரேலிய நடுவர் டேரில் ஹார்ப்பர் பேட்டி

1999-இல் மெக்ரேத்தின் பவுன்சருக்கு குனிந்து அடிவாங்கிய டெண்டுல்கருக்கு அவுட் வேறு வழங்கி இந்தியர்களின் கரிப்பையும் சாபத்தையும் தாராளமாக பெற்ற, 2009-ல் ஆட்டவீரர்கள் மூன்றாவது நடுவருக்கு முறையிடும் சோதனை முறை செயல்படுத்தப்பட்ட போது சர்வதேச அளவில் கண்டனம் பெற்ற ஆஸ்திரேலிய நடுவர் டேரில் ஹார்ப்பரில் நுண்ணிய நகைச்சுவையும், வக்கணையும் கொண்ட பேட்டி. பேட்டியாளர் cricinfo.com-இன் நாகராஜ் கோல்புடி. தேர்ந்தெடுத்த பகுதிகளை மட்டும் தமிழாக்கி உள்ளேன்




நாகராஜ்: மட்டையாளரின் ஷாட்களால் என்றாவது வாங்கியது உண்டா?

ஹார்ப்பர்: பெற்றதிலேயே மோசமான அடி மேற்கிந்திய தீவுகளில் சனத் ஜெயசூர்யாவின் ஸ்கொயர் கட். பாப்பிங் கிரீஸ் ரன் அவுட்டுக்கான டீ.வி படப்பிடிப்பு கருவிகள் ஒரு பக்கம் மட்டுமே இருந்ததால் அவற்றுக்கு இடமளிக்க நடுவர்கள் ஆஃப் பக்கத்தில் நின்று கொண்டிருந்தோம். அந்த மூர்க்கமான ஷாட்டிலிருந்து விலக எனக்கு எந்த வழியும் இல்லை; நேராக அது என் நடுமார்பில் மோதியது. ஒற்றை ஓட்டம் ஒடின பின்னர் மட்டையாளர்கள் என்னிடம் வந்தனர்; ஜெயசூர்யா என்னிடம் சொன்னதெல்லாம், “உங்களால் எனக்கு 4 ஓட்டங்கள் போச்சு”. நான் சொன்னேன், “உனக்கு ஒரு அதிலிருந்து ஒரு ஓட்டம் கிடைத்ததே”. அடுத்த ஒரு மாசமும் வலித்தது.

நாகராஜ்: ஐ.சி.சியின் வருடத்தின் சிறந்த நடுவர் விருதை சிமன் டௌபல் ஐந்து முறை வென்றுள்ளதை கருதுகையில், அது ஒரு மோசடி விருது என்று நினைக்கிறார்களா?

ஹார்ப்பர்: முதல் பன்னிரெண்டு வரிசையில் கண்டிப்பாக நான் உள்ளேன். எதிர்பார்க்கும் பதில்களை எப்போதும் தருகிறவனல்ல நான் என்பதால் அதை நான் வெல்லும் பட்சத்தில் எனக்கே அது ஏறத்தாழ ஏமாற்றமாக இருக்கும். வாக்களிப்பவர்களிடம் கடினமான கேள்விகளை கெட்க எனக்கு எந்த தயக்கமும் இல்லை. சில நடுவர்கள் என் அளவிற்கு விமர்சிக்க மாட்டார்கள். ஆனால், டௌஃபல் சிறந்த நடுவரே, முற்றுப் புள்ளி.

நாகராஜ்: நீங்கள் ஒருமுறை குறிப்பிட்டது போல், டௌஃபல் இப்போதும் தன் முடியை கண்ணாடியில் பார்த்து மகிழ்வுறுகிறாரா?

ஹார்ப்பர்: அவருக்கு உச்சியில் கொஞ்சம் முடி உண்டு; ஹார்ஷா போக்ளே மோஸ்தரில் சிகிச்சை எடுத்துக் கொள்ள நான் அவரிடம் பரிந்துரைத்தேன். இந்த கட்டத்தில் அவர் அதை பற்றி மட்டுமே சிந்திக்கிறார்.

நாகராஜ்: நீங்களும் அச்சிகிச்சையை செய்யலாமே?

ஹார்ப்பர்: அதைப் பற்றி கவலைப்படும் அளவுக்கு எனக்கு வீண்-பகட்டு இல்லை – நீங்கள் உச்ச்ந்தலையை பார்த்தீர்கள் என்றால் அங்கு எல்லாம் வளர்ந்து கொண்டு தான் இருக்கிறது. என் மகள் மற்றும் மகனிடம் எனக்கு பெரிய நெற்றி உள்ளதாக சொல்லி உள்ளேன்.

நாகராஜ்: நீங்கள் மறக்க விரும்பும் ஒரு சந்தர்பத்தை சொல்லுங்கள்



ஹார்ப்பர்: 1999-இல் அடிலைடில் சச்சின் (கிளன்) மக்ராத்தின் பவுசருக்கு குனிந்த சந்தர்பத்தை தான் உலக மக்கள் மறக்க விரும்புகிறேன். என் மடிக்கணினியில் அந்த படத்துணுக்கை வைத்துள்ளேன்; இப்போதும் கூட பார்த்தால் அது அவுட் தான்! நான் ஆட்ட அரங்கை விட்டு வெளியேறிய போது பல நண்பர்களும் தங்கள் ஏமாற்றத்தை தெரிவித்தது தான் எனக்கு பிடிக்கவில்லை. “ஹேய் டேரில் நாங்கள் பார்க்க வந்தது சச்சின் மட்டையாடுவதை, நீங்கள் நடுவர் செய்வதை அல்ல”. அதற்கு நான் சொன்னேன், “மன்னிச்சுக்குங்க, நான் என் கடமையை தான் செய்தேன்”. சுனில் கவாஸ்கர் தான் அப்போது வர்ணனையாளர்; அவரும் ஏற்றுக் கொண்டார், குச்சிகள் ஆறு அங்குலம் அதிக உயரமிருப்பின் அது அவுட் ஆகவிருக்கலாம் என்றார். சச்சின் தான் அப்போது அணித்தலைவர்; அவர் தன் அறிக்கையில் அதை குறிப்பிடவில்லை – சச்சின் எப்போதும் நியாயமானவர்; அவர் இப்போதும் ஒரு அட்டகாசமான விளையாட்டு வீரர்.

நாகராஜ்: ஒரு விளையாட்டு வீரரிடம் இருந்து நீங்கள் பெற்ற மிகச்சிறந்த பாராட்டு எது?

ஹார்ப்பர்: ஆடம் கில்கிறிஸ்ட் தனது தன்வரலாற்றின் முதல் அத்தியாயத்தில் நான் அவரது ஆட்ட முறை பற்றி சொன்ன கருத்து ஒன்றை பதிவு செய்துள்ளார். நான் என் அவரது கடைசி டெஸ்டில் நின்று கொண்டிருந்தேன்; நான் சொன்னேன், “அடுத்து உன் பெற்றோர்களை பார்த்தால், அவர்களுக்கு சரியாக அமைந்து விட்டது, அவர்கள் வேறெதையும் வித்தியாசமாக செய்ய வேண்டியிருக்க இல்லை என்று சொல்” என்றேன். வேறு வார்த்தைகளில் சொல்வதானால், அவர் ஒரு மிகச்சிறந்த நபராக உருவாகி உள்ளார். அதைத் தன் நூலில் பயன்படுத்தினார்.




மற்றொரு சந்தர்பத்தில், ஆஸ்திரேலியாவில் ஒரு சர்வதேச ஒரு நாள் போட்டியில் நான் கால் பக்கமாய் ஒரு வைடு பந்தை அறிவித்தேன்; கில்லி அப்பந்து பேடுகளில் பட்டு திரும்பியதாக கருதியதால், சற்று நேரம் அத்தீர்மானத்தை எதிர்த்தார். பிறகு ரீப்ளெ பார்த்து விட்டு, ஓவர் முடிவில் என்னை கடக்கும் போது சொன்னார், “அதற்காக மன்னியுங்கள்; இதனால் தான் நீங்கள் உலகத்தரமான நடுவராகவும் நான் விளையாட்டு வீரனாகவும் இருக்கிறோம் என்று யூகிக்கிறேன்” .

நாகராஜ்: ஊடகங்கள் உங்களிடம் கேட்க அனுமதிக்கக் கூடாத ஒரு கேள்வி?

ஹார்ப்பர்: "நீங்கள் ஓய்வு பெற வேண்டும் என்று நினைக்கிறீர்களா?”
Read More

Friday, 23 October 2009

கதை சொல்ல வாழ்கிறேன்: காப்ரியல் கார்சியா மார்க்வெஸ் (அத்தியாயம் 5)



"இரண்டும் ஒன்றுதான் என்கிறார் உன் அப்பா", அவள் சொன்னாள்.
அது பொய்யென்று அறிந்த நான் சொன்னேன்:
"அவரும் வயலின் வாசிப்பதற்காக படிப்பை விட்டவர் தானே"
"அது வேறு", அவள் பெரும் ஊக்கத்துடன் சொன்னாள், "அவர் விருந்துகள் மற்றும் மாலை நேர காதல் பாடல்களின் போது மட்டுமே வாசித்தார். சாப்பிடக்கூட காசில்லாமல் இருந்ததனால் மட்டுமே அவர் படிப்பை நிறுத்தினார். ஆனால், அரகடகாவில் உள்ள எல்லாருக்கும் முன்பே, ஒரு மாதத்தில் அவர் தந்திக்கலை படித்தார்; அது அப்போது மிகச்சிறந்த வேலையாக இருந்தது"

"நானும் கூட பத்திரிகைகளுக்கு எழுதி சம்பாதிக்கிறேன்", நான் சொன்னேன்.
"நான் பயப்படாமல் இருப்பதற்கு சொல்லுகிறாய்", அவள் சொன்னாள், "ஆனால் தொலைவில் இருந்து பார்த்தாலே உன் நிலைமை எல்லாருக்கும் புரியும். அந்த புத்தகக்கடையில் எனக்கு அடையாளமே காண முடியாதபடி மோசமான நிலைமை"
"என்னால் கூட உன்னை அடையாளம் காண முடியவில்லையே", நான் சொன்னேன்.
"ஆனால் இதுமாதிரியான காரணத்தினால் அல்ல", அவள் சொன்னாள், "உன்னைப் பார்த்து ஒரு பிச்சைக்காரன் என்று நினைத்தேன்"
என் நைந்து போன் செருப்புகளை பார்த்து தொடர்ந்தாள், "ஒரு காலுறை கூட கிடையாது"
"அதுதான் ரொம்ப வசதியாக உள்ளது", நான் சொன்னேன், "ரெண்டு சட்டை, ரெண்டு ஜோடி உள்ளாடைகள், ஒன்று காயும்போது மற்றொன்றை அணிந்து கொள்ளலாம். ஒருவருக்கு வேறென்ன வேண்டும்?"
"சற்று கௌரவம்", அவள் சொன்னாள். ஆனால் வித்தியாசமான ஒரு தொனிக்கு உடனடியாக மாறி இதைக் கூறி மென்மையானாள், "நாங்கள் உன்னை மிக அதிகமாய் நேசிப்பதனால் தான் இதை சொல்கிறேன்"
"எனக்குத் தெரியும்", நான் சொன்னேன், "ஆனால் ஒரு விஷயம் சொல், என் இடத்திலே இருந்திருந்தால் நீயும் இதையேதான் செய்திருப்பாய்?"

"நான் செய்திருக்க மாட்டேன்", அவள் சொன்னாள், "என் பெற்றோர்களை வருந்த செய்யும் என்றால் நான் அதை செய்ய மாட்டேன்". அவளது திருமணத்தின் பாலான குடும்பத்தினரின் எதிர்ப்பை விடாப்பிடியாய் அவள் முறியடித்ததை நினைவில் கொண்டு சிரித்துக் கொண்டு சொன்னேன்:
"என் கண்ணைப் பார்த்து சொல் பார்க்கலாம்"
நான் என்ன யோசிக்கிறேன் என்பதை மிக நன்றாக அறிந்திருந்ததால் என் பார்வையை தவிர்த்த அவள் துயருற்று தெரிந்தாள்.
"என் பெற்றோரின் ஆசீர்வாதம் கிடைக்கும் வரையில் நான் மணமுடிக்க இல்லை", அவள் சொன்னாள், "மனதில்லாமல் தான், நான் அதை ஒத்துக் கொள்கிறேன், ஆனால் எனக்கு அது கிடைத்தது".
அவள் விவாதத்தை தற்காலிகமாக நிறுத்தினாள், என் விவாதக் கருத்துக்களால் தோற்கடிக்கப்பட்டு அல்ல, அவளுக்கு கழிப்பறைக்கு போக வேண்டும் என்பதாலும், அதன் சுகாதார நிலைமையை அவள் நம்பாததாலும். கப்பலின் ஒருங்கிணைப்பு மற்றும் எந்திர மேற்பார்வை அதிகாரியிடம் மெலும் சுத்தமான இடம் கிடைக்குமா என்று விசாரித்தேன்; ஆனால் தானே பொதுக்கழிப்பறையைத் தான் பயன்படுத்துவதாய் அவர் சொன்னார். என்னவோ கோன்ரெடை படித்தது போல் அவர் சொல்லி முடித்தார், "கடலிலே எல்லாரும் ஒன்றுதான்". அதனால் அம்மா சமத்துவ விதிக்கு அடிபணிந்தார். நான் பயந்ததற்கு நேர்மாறாய் வெளியே வந்தபின் அவள் முயன்ற¦ல்லாம் தன் சிரிப்பை அடக்க முயன்றது தான், "நானொரு சமூக நோயுடன் திரும்ப சென்றால் உன் அப்பா என்ன நினைப்பார் என்பதை உன்னால் கற்பனை பண்ண முடிகிறதா?"

Read More

Wednesday, 21 October 2009

இந்திய அணி அறிவிப்பு: ஸ்ரீகாந்தின் மேலும் சில சொதப்பல்கள்



ஆஸி தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. திராவிட், யூசுப், ஆர்.பி சிங், கார்த்திக், அபிஷேக் நாயர் நீக்கம், யுவ்ராஜ், சேவாக் திரும்பல், வேக வீச்சாளர் சுதீப் தியாகி தேர்வு ஆகியன முழுக்க எதிர்பார்த்தபடிதான் உள்ளன. பயிற்சியாளர்கள் ரோபின் மற்றும் பிரசாத் ஆகியோரை நீக்கினது ஒரு சிறு அதிர்ச்சிதான். நீக்கலும் தேர்வும் பொதுமக்கள் மற்றும் மீடியாவை விட எதிரணியினரை கலங்கடிக்கும் படியாக இருக்க வேண்டும். இந்த விதத்தில் தான் ஸ்ரீகாந்த தலைமையிலான தேர்வுக்குழு தோற்றுப் போயுள்ளது.

ஒரே அணியை மீண்டும் மீண்டும் தேர்ந்தெடுக்க தேர்வாளர்கள் எதற்கு?

“கடந்த இரு ஆண்டுகளாக இந்த தேர்வுக்குழு ஒரே அணியைத் தான் திரும்பத் திரும்ப சிறு மாற்றங்களுடன் தேர்கிறார்கள். தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகளில் புது வீரர்கள் வந்துள்ளது போல் இந்தியாவில் எந்த புதுமுகத்தை இவர்கள் அறிமுகப்படுத்தி உள்ளார்கள்?” என்று சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் போது ரவி சாஸ்திரி தேர்வாளர்களின் தயக்கத்தையும், சமயோசிதமின்மையையும் கடுமையாக விமர்சித்தார். ஸ்ரீகாந்த் தலைமை ஏற்ற போது அவருக்கு பெரிய தலைவலி ஒன்றுமில்லை. அதை அவர் விரும்புபவரும் அல்ல. தேர்வாளர்களுக்கு ஊதியம் தரப்படும் என்று இ.கி.க.வா அறிவித்த உடன் புளியம் கொம்புக்காக விலா சொறிந்து காத்திருந்த ஸ்ரீகாந்த திடீரெனப் அப்பதவியை பெற்றார். முன்னர் பல பேஜாரான முடிவுகளை, தேர்வுகளை செய்து தோனி தலைமையிலான ஒரு வெற்றிகரமான அணியை அமைத்து விட்டு வெங்குசார்க்கர் குழு கிளம்பி போன பின் சீக்கா செய்ய வேண்டியிருந்தது எல்லாம் டேபிளைத் துடைத்து “தோசை, பூரி மசாலா ...” என்று ஒப்பிப்பது தான். ஏற்கனவே வலுவான மட்டையாட்டத் துறையின் இண்டு இடுக்குகளில் விஜய், பத்ரி போன்றோரைத் திணித்தது, முழுமையான ஃபார்முக்கு திரும்பாத பாலாஜியை தேர்வு செய்தது போன்ற கால விரயங்கள் மட்டுமே அவரது இதுவரையிலான சாதனைகள். இப்போது அணியில் உள்ள இளம் நட்சத்திரங்கள் வெங்குசார்க்கர் மற்றும் அவரது முந்தைய தேர்வுக்குழுவினரின் கண்டுபிடிப்புகள்.தாம் இதே வீரர்கள் வைத்து ஜம்மென்று தேர்வாளராக காலத்தை ஓட்டி விடலாம் என்று நினைத்தார். புதிய வீரர்களை தேர்வு செய்யாத அவரது தயக்கத்துக்கு இது ஒரு காரணம். “வேகப்பந்து வீச்சாளர்களுக்கு அவ்வப்போது ஓய்வு கொடுத்து புது வீரர்களை அறிமுகப்படுத்தி இருந்தால் இந்தியாவின் பந்து வீச்சு இப்படி வீழ்ந்திருக்காது” என்றார் ரவி சாஸ்திரி. தரமான புதுமுகங்கள் இல்லை என்பது சப்பைக்கட்டு. புதிய திறமைகளை தேடி கண்டுபிடிக்கும் அமைப்போ அத்தகைய தீவிரமோ நம்மிடம் இல்லை என்பதே உண்மை. ராஜஸ்தான் ரோயல் அணியின் உதவிப் பயிற்சியாளர் ஸ்னேப் எனும் வெள்ளையர் தன் தனிப்பட்ட முயற்சி மற்றும் அவதானிப்பு கொண்டு கம்ரான்கான் எனும் அருமையான வேகவீச்சாளரை ஐ.பி.எல்லின் போது அறிமுகப்படுத்தினார். அவரது அதிர்ச்சி அம்சம், புதுமையான வீச்சு முறை மற்றும் அதிரடி வேகம் சில முக்கியமான ஆட்டங்களை ராஜஸ்தான் ராயல்சுக்கு வென்று தந்தது. கங்குலியை வீழ்த்தி கொல்கொத்தாவை அவர் தோற்கடித்த ஓவர் குறிப்பிடத்தக்கது. வீச்சு முறை அங்கீகரிக்கப்படாமல் கம்ரான் தற்போது இருட்டில் இருந்தாலும், இவரைப் போன்று எத்தனை ரத்தினங்களை நமது தூங்குமூஞ்சி தேர்வாளர்களும், உளுத்துப் போன அமைப்பும் கோட்டை விட்டுள்ளது? பல பருவங்கள் சிறப்பாக செயல்பட்டும் நெஹ்ரா, ஓஜ்ஹா போன்ற திறமையாளர்கள் ஐ.பி.எல்லில் ஆடின பின்னரே கவனிக்கப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்டனர் என்பது நமது கிரிக்கெட் அமைப்பின் மீது முக்கியமான கேள்விக்குறியை எழுப்பி உள்ளது.

சேலஞ்சர் தொடரை புறக்கணித்த நட்சத்திரங்கள்

வழமையாக தேசியத் தீர்வுக்கான போட்டித்தொடராக கருதப்படும் சேலஞ்சர் தொடரை புறக்கணித்து விட்டு இம்முறை பல முக்கியமான காம்பிர், ஓஜ்ஹா, ஆர்.பி சிங் உள்ளிட்ட இளம் வீரர்கள் சாம்பியன்ஸ் லீக் ஆட சென்றனர். சர்வதேச நட்சத்திரங்களுடன் இளம் வீரர்களை ஆட வைப்பதே இரானி மற்றும் சேலஞ்சர் கோப்பைகளில் நோக்கம். இந்த நோக்கம் சமீபமாய் கார்ப்பரேட்டுகளின் வணிக ஆவேசத்தில் தோற்கடிப்பட்டுள்ளது. இ.கி.க.வா. நிர்வாகிகள் எத்தனை பலவீனப்பட்டு போயுள்ளார்கள் என்றால், உடைந்து போன மூக்கைப் பற்றி புகார் சொல்ல கூட திராணி இல்லை. தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சுதீப் தியாகி சமீப செலஞ்சர் தொடரில் ஒன்றும் பட்டையை கிளப்பவில்லை. இறுதிப்போட்டியில் நுமான் ஓஜ்ஹா போன்றோரை அவுட் செய்தது அல்ல, சேவாக், சச்சின் ஜோடிக்கு வீசுவதே அவரது பரீட்சையாக இருந்திருக்க வேண்டும். சேலஞ்சர் கோப்பைத் தொடரில் இப்படியான அடிபொடிகள் மட்டுமே புளூ, கிரீன் போன்ற அணிகளுக்காக தங்களை ஒத்த குட்டி பூதங்களுடன் மோதியதால் இறுதி ஆட்டத்தில் இலக்கு வெறும் 80 ஓட்டங்களாக இருந்தது.

ஸ்ரீகாந்த குறுக்குசந்து

இருந்தாலும் இடதுகை வேகவீச்சாளர் தியாகியின் தேர்வு மகிழ்வளிக்கிறது. ஆஸ்திரேலிய நேதன் பிராக்கனை போல் வலது கையாளர்களுக்கு ரவுண்ட் தெ விக்கெட் வந்து இவர் உள்வரும் பந்துகள் வீசி ஏற்படுத்தும் நூதனமான கோணம் முறை ஒருநாள் ஆட்டத்திற்கு உகந்ததாக இருக்கும். இரானி மற்றும் சேலஞ்சர் தொடர்களில் தியாகியை தொடர்ந்து கவனித்தேன். அவரால் தொடர்ச்சியாக கட்டுப்பாடுடன் வீச முடியவில்லை. தியாகி மிகத் திறமையானவர் தான். ஆனால் அவர் இப்போது சர்வதேச தரத்துக்கு தயாரில்லை. பந்து வீச்சை வலுப்படுத்த ஏதாவது நடவடிக்கை எடுத்தாக வேண்டும் என்ற நெருக்கடிக்கு தேர்வாளர்கள் கண்ட குறுக்குவழி தான் தியாகி; கடந்த இரு தொடர்களில் மட்டையாளர்களை வேகப்பந்து வீச்சிலிருந்து காப்பாற்ற எப்படி திராவிட் குறுக்குவழியாக இருந்தாரோ அப்படி இப்படியான குறுக்குவழி சமாளிப்புக்கு பெயர் போன சீக்காவின் பெயரை திருவல்லிக்கேணியின் குறுக்குசந்துகளில் ஒன்றிற்கு சூட்ட வேண்டும் என்று கலைஞர் அவர்களை கேட்டுக் கொள்கிறேன்.

தவற விட்ட கேரம் பந்து



ரவிச்சந்திரன் அஷ்வினுக்கு இந்த ஆஸி தொடரில் வாய்ப்பு அளித்திருக்க வேண்டும். அவர் தமிழர் என்பதால் அல்ல. அவர் புதிதாக தன் வீச்சில் சேர்த்துள்ள கேரம் பந்துக்காக. இலங்கையின் அஜந்தா மெண்டிசினுடையது போன்றே அஷ்வினின் கேரம் பந்தும் லெக்-மிடில் குச்சி லைனில் விழுந்து எகிறுகிறது. அஷ்வினின் உள்ளூர் சாதனைகள் ஒன்றும் பிரமாதமில்லை தான். 20 ஆட்டங்களில் 80 விக்கெட்டுகள். பந்து வீச்சு சராசரி 27.46. ஓரளவு மட்டையாடுவார். ஒரு சதம் அடித்திருக்கிறார். சராசரி 31.68. உயரமான அஷ்வின் இந்த வருட சேலஞ்சர் ஆட்டங்களில் தனது துல்லியமான பந்து வீச்சால் தோனி உட்பட அனைத்து மட்டையாளர்களையும் திணறடித்தார். ஹர்பஜன் அளவுக்கு சுழல், லூப், ஃபிளைட் போன்ற செவ்வியல் அம்சங்கள் அஷ்வினுக்கு இல்லை. இந்த காரணத்தினாலே அவர் பஜ்ஜிக்கு சிறந்த ஜோடியாக இருப்பார். ஒரு முனையில் அஷ்வின் ஓட்டங்களை வறள வைத்தால், சர்தாரால் மறு முனைவில் தாக்க முடியும். இருவரும் முற்றிலும் மாறான வீச்சு முறை மற்றும் அணுகுமுறை கொண்டவர்கள் என்பதால் மட்டையாளர்கள் ஒரே போன்றதாக பழகி விடும்படி இந்த ஜோடி அமையாது. இன்று வலுவான பந்து வீச்சு கொண்டுள்ள தென்னாப்பிரிக்கா, இலங்கை, பாக்கிஸ்தான் போன்ற அணிகள் சுழல் ஜோடிகளை முக்கிய ஆயுதமாக கொண்டுள்ளன. பாக்கிஸ்தானின் அஃப்ரிடியையும் அவ்வாறே கருதுவோமானால், இந்த ஜோடிகள் முழுநேர சுழலர்கள் தாம். மெண்டிஸைப் போன்றே அஷ்வினால் அவரை முதன்முறை சந்திக்கும் ஆஸி மட்டையாளர்களை தனது புதிர் காரம் பந்தால் கதிகலங்கடிக்க முடியும். இந்த ஒரு சின்ன ஆச்சரியத்தை ஆவது நாம் வருகை தரும் ஆஸி அணிக்கு அளித்திருக்கலாம். இறுதியாக கழற்றி விடப்பட்ட ஆன்மாக்கள் பற்றி சில வார்த்தைகள்.





எரப்பள்ளி ப்ரசன்னாவும், மஞ்சுரேக்கரும் சொல்வது போல், தாமதமாக என்றாலும் டிராவிட்டின் வெளியேற்றம் அவசியமே. ஒன்றாம் வகுப்பு சிறிசுகள் முட்டை வாங்கினதற்கு அங்கு ஐந்தாம் வகுப்பு பையனை அமர வைக்க முடியாது. ஆர்.பி சிங் தன் ஃபார்மை மீட்டு, எதிரணி மட்டையாளரை பார்த்து பளிச்சென்று மார்க்கமாய் பல்தெரிய சிரிப்பதை நிறுத்த வேண்டும். அணியில் இடம் பெற்றதும் செயற்கைப் பல் பொருத்திய யூசுப் ஒன்றை செய்ய விட்டு விட்டார். அவர் தன் தடுப்பாட்டத்தை மெருகேற்ற வேண்டும் அல்லது மென்மையாக பந்தை தட்டி / உதிர்த்து விட்டு ஓடும் தந்திரத்தை பழக வேண்டும். இதே போன்ற பலவீனத்திலிருந்து முன்பு ஆஸ்திரேலிய ஆண்டுரூ சைமண்ட்ஸ் மீண்டு வந்து டெஸ்டு அணியிலும் இடம் பிடித்த வரலாறு யூசுப்பை உசுப்பேற்ற வேண்டும்.

இத்தனைக்கு பிறகும் நாம் ஆஸி தொடரை ஒருவேளை வென்று விட்டால் ... நான் என் கூற்றுகளை திரும்பப் பெற போவதில்லை.
Read More

Friday, 16 October 2009

அடுத்த வாரிசு: அனிருத்தா ஸ்ரீகாந்த




பிள்ளைகளின் நலத்துக்காக தாய்தந்தையர் பதினாறு அடி பாய்வது பாராட்டத்தக்கதுதான். இப்படியாக உள்ளூர் போட்டிகளில் 25 சராசரியில் 660 ஓட்டங்கள் மட்டுமே எடுத்திருந்தாலும் தற்போது நடந்து முடிந்த சேலஞ்சர் தொடர் போட்டிகளில் கிரீன் அணிக்கு தேர்வு செய்யப்பட்ட இந்திய கிரிக்கெட் தேர்வு வாரியத் தலைவரின் மகன் ஸ்ரீகாந்த் அனிருத்தா ஒரே எவ்வு எவ்வி பதினேழாவது படியில் நிற்கிறார். 2007 சேலஞ்சர் தொடரின் போதும் இவர் தேர்வு செய்யப்பட்டு மொத்தம் 13 ஓட்டங்கள் எடுத்தார். சுயநலத்தை கூச்சமின்றி வெளிப்படுத்த நிறைய மனத்தெம்பு வேண்டும். அப்பாக்களுக்கு இது இயல்பாகவே ஏற்படுகிறது. ஸ்ரீகாந்துக்கு சொல்லவே வேண்டாம்.



ரோஹன் கவாஸ்கர் விசயத்தில் சன்னி மீது அதிகார துஷ்பிரயோக குற்றச்சாட்டு எழுந்தது. ஆனாலும் ரோஹனுக்கு போதுமான வாய்ப்புகள் வழங்கப்படவில்லை என்றே கருதுகிறேன்;



கவாஸ்கர் சீக்கா அளவுக்கு அதிரடிக்காரர் அல்ல. போன ஐ.பி.எல்லின் போது அசரூதீன் தனது பையன் அஷாதுதீனை கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணியில் போஷிக்கும் படி கங்குலிடம் ஒப்படைத்தார்.இத்தனைக்கும் அஷாதுதீன் சில 2 நாள் லீக் டிவிஷன் போட்டிகளில் மட்டுமே ஆடியிருந்தார். அவருடன் தேர்வு முகாமில் இருந்த மிச்ச 40 ஆட்டக்காரர்களில் பலர் தத்தம் மாநில ரஞ்சி அணிகளில் சாதித்து உள்ளங்கை காய்த்தவர்கள். ஆனால் புச்சன்னன் புயலில் கங்குலியோடு அஷாதுதீனும் அவரும் காணாமல் போனார்.



நான் சென்னை கிறித்துவக் கல்லூரியில் படிக்கும் போது பயிற்சியாளர் மாணவர்களுக்கான வலைப்பயிற்சியின் போது தனது ஸ்கூல் செல்லும் மகனுக்கு சிறப்புப் பயிற்சி அளித்தார். 16-வயதுக்கு கீழான கிரிக்கெட் போட்டி ஒன்றின் போது அவரது மகனுக்காக மட்டும், கல்லூரி விதிகளை மீறி, சில மாலை வேளைகளில் சிறப்பு வலைப்பயிற்சி ஒன்றை அவர் ஒருங்கிணைத்து தீவிர பயிற்சி அளித்தார். இதில் பந்து வசி வழக்கமான பந்து வீச்சாளர்கள் தளர்ந்ததால், ஓட்டபந்தய வீரர்களைக் கூட வீச பயன்படுத்தினார். இந்த அ.து.பி கல்லூரி அணியினரிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. ஏனென்றால் அணியின் ஆட்டக்காரகளுக்கே தினசரி பயிற்சி வாய்ப்பு கிடையாது. ஆனால் மரணத்துக்கு அடுத்த படியாய் கிரிக்கெட் தான் பெரும் சமத்துவ ஆயுதம்: பொம்மை வாரிசுககள் கிரிக்கெட்டில் நிலைப்பதில்லை. அனிருத்தா நிலைப்பாரா?

அனிருத்தா பார்க்க இன்சமாமின் குட்டித் தம்பி போல் தொ¢கிறார். அசட்டையான உடல் மொழி, ஜெயசூர்யாவைப் போல மேனரிசம், ரெண்டு வாரப் பட்டினியையும் தாங்கும் தேகம், முண்டைக் கண், கெவின் பீட்டர்சன் பாணியில் ஸ்கங்க் ஹேர்கலர், அதற்குக் கீழ் சுறுசுறுப்பான மூளை. மட்டையாட்டத்தில் தரம் என்றால் பந்து எங்கே விழப்போகிறது என்பதை சில நொடிகளுக்கு முன் கணித்து தயாராகி விடுவது தான். சிலருக்கு இதோடு அபாரமான மட்டை வேகமும் அமைந்து விடுகிறது. உதாரணம், சேவாக், தில்ஷான். இந்தியாவின் உள்ளூர் வீரர்களில் ரோஹித் ஷர்மா, விராத் கோலி, சன்னி சோஹல், காடிவாலி ஆகியோரை சொல்லலாம். இத்தகைய பிரத்யேகமானவர்களின் பட்டியலில் அனிருத்தா இல்லை. அவரது பண்புத்தரம் வேறு.

இந்த தொடரில் ரெய்னாவின் கிரீன் அணி ஐந்து விக்கெட்டுகள் இழந்து சொதப்பிக் கொண்டிருந்த போது களமிறங்கியவர் சற்றும் பதற்றம் காட்டாமல் நேர்மறையாக ஆடினார். அலுங்காமல் ஓடினார். பந்துகளை எளிதாக கணித்து, மதிநுட்பத்துடன் காலியிடங்களுக்கு அடித்தார். இப்படி நிலைமையை சுலபமாக கணித்து அலட்டாமல் ஆடுவது அவரது முக்கியமான இயல்பு. அப்புறம் அவரது ஷாட்களில் உள்ள மூர்க்கமும், சம்பிராதயமற்ற பாணியும். இரண்டாவது போட்டியில் தோனியின் புளூ அணிக்கு எதிராக ஆரம்ப வீரராக களமிறங்கின அனிருத்தா குறைந்த பந்துகளில் அரைசதமடித்தார். அபிஷேக், மாலிக் ஆகியோரின் மிதவேகப் பந்துகளை லாங் ஆஃபுக்கும், நேராகவும் அவர் அடித்த வேகத்தில் ஒரு முறை ஹர்பஜனின் பக்கமாகவே அவர் அசையும் முன்னே பந்து அதிவேகத்தில் கடந்தது. கோட்டை விட்ட பஜ்ஜி பந்து தனக்கு தெரியவே இல்லை என்று சைகை செய்தார். கடுமையாகவும், மூர்க்கமாகவும் அடிக்கப்படும் ஷாட்கள் உளவியல் ரீதியான பாதிப்பை எதிரணியினரிடம் ஏற்படுத்துவதை கவனித்திருக்கிறேன். இரண்டு முறை தொடர்ச்சியாக அபிஷேக்கை அவர் லேட் கட் செய்த போது பார்த்த எதிரணி தலைவர் தோனி முகத்தில் தெரிந்த கவலைக் களை அனிருத்தாவை பொறுத்தமட்டில் உற்சாகமான அறிகுறி. சம்பிரதாயமற்ற மட்டையாளர்களுக்கு பந்து வீசுவதும், களம் அமைப்பதும் சிரமமானது. பந்து வீச்சாளனின் ரிதமை எளிதில் குலைக்க இவர்களால் முடியும். இத்தகையோர் அணிக்கு ஒருவர் தேவை. அனிருத்தாவுடன் ஒப்பிடுகையில் தற்போதைய இந்திய அணி அதிரடியாளர் யூசுஃப் பதான் ஒற்றை பரிமாண மட்டையாளர். சூழமைவுக்கு ஏற்றபடி ஆட்டத்தை தகவமைக்கவோ, ஒற்றை ஓட்டங்கள் எடுக்கவோ அவர் இன்னும் முதிரவில்லை. இவ்வகையில் தென்னாப்பிரிக்காவின் பவுச்சர், இங்கிலாந்தின் காலிங்வுட் ஆகியோரின் பள்ளியை சேர்ந்தவர் அனிருத்தா. அணியில் 1, 3, 5, 7 என்று எந்த இடத்திலும் ஆட முடிகிற மிதப்பு ஆட்டக்காரர் இவர். அனிருத்தாவின் மட்டையாட்டத்தின் மூர்க்கம் பாக்கிஸ்தான் பாணி.

மாநில ஆட்டங்களில் நிறைய ஓட்டங்கள் சேர்த்து ஒரு நல்ல பருவம் அமைந்தால் அப்பாவின் பதவிக் காலம் முடியும் முன் அனிருத்தா நிச்சயம் இந்திய அணியில் நுழைந்து விடுவார். மேலே குறிப்பிட்ட பிரத்யேகமான பாணிக்காகவே அவருக்கு வாய்ப்பளிப்பதிலும் தவறில்லை. சென்னை சூப்பர் கிங்ஸ்சிலும் அவருக்கு ஒளிமய எதிர்காலம் உண்டு. என் கதை வேறு. எந்த கட்டத்திலும் என் அப்பா என்னை பாராட்டினதோ ஊக்குவித்ததோ இல்லை. கல்லூரி சேர்க்கையின் போது குடிபோதையில் என் பேராசிரியரை கெட்டவார்த்தையில் திட்டினதும் அல்லாமல், வளர்ந்த பையனுக்கு நானெதற்கு கண்ட சேர்க்கைப் படிவங்களில் எல்லாம் கையொப்பம் இடவேண்டும் என்று உளறியபடி விசிறி எறிந்தார். என் எழுத்தின் மோசமான விமர்சகர். "தயவு செஞ்சு எழுதாதே!" என்றார். இதற்கு நேர் எதிர் கோடியில் இருக்கும் சீக்கா நல்லவர் தான். அதனால் ஒரு மாற்றாக அவரை புகழ்ந்து சில வார்த்தைகளை இங்கு சொல்லலாம் என்று ஆரம்பிக்கிறேன் ...

ஆனாலும் எங்கோ நெருடுகிறது.
Read More

Thursday, 15 October 2009

கதை சொல்ல வாழ்கிறேன்: காப்ரியல் கார்சியா மார்க்வெஸ் (அத்தியாயம் 4)



மனச்சமநிலையோடு அந்த கொடுமையான பயணத்தை அவள் தாங்குவதைக் கண்டு, இத்தனை வேகமாயும் தேர்ச்சியுடனும் வறுமையின் அநியாயங்களை எப்படி அவளால் கீழ்ப்படுத்திட முடிந்தது என நானே கேட்டேன். அந்த அதிபயங்கர இரவு அவளது உச்சகட்ட பொறுமையையும் சோதித்தது.
ரத்தவெறி பிடித்த கொசுக்கள், அடர்த்தியான வெப்பம், கடந்து செல்லும் எந்திரப் படகு கடைந்ததில் கால்வாய் சகதியிலிருந்து கிளம்பிய குமட்டச் செய்யும் வாடை, பிதுங்கும் கூட்ட நெரிசலில் இடம் கிடைக்காத தூக்கமற்ற பயணிகளின் குறுக்கும் நெடுக்குமான வெறிகொண்ட அலைச்சல் --- மிகச்சிறந்த நடுநிலை மனஇயல்பு கொண்டவரையும் கலங்கடிக்க இவை போதும் என்று தோன்றியது. வாடகைக்கான பெண்கள், ஆண்களைப் போலவோ மெனோலஸாகவோ ஆடை அணிந்து, கோலாகலக் கொண்டாட்ட அறுவடையை அருகிலுள்ள சிற்றறைகளில் கொய்திட, அம்மா எல்லாவற்றையும் தாங்கி தன் நாற்காலியில் அசைவற்று அமர்ந்திருந்தாள். அவர்களில் ஒருவள் ஒவ்வொரு முறையும் புது கிராக்கியுடன் என் அம்மாவின் நாற்காலிக்கு அடுத்திருந்த தன் சிற்றறைக்குள் பலமுறை போய் வந்தவாறு இருந்தாள். அம்மா அவளை பார்த்திருக்கவில்லை என்று நினைத்திருந்தேன். ஆனால் ஒரு மணிநேரத்தில் நான்காவது அல்லது ஐந்தாவது முறையாக அவள் நுழைந்து வெளியேறிய போது, அம்மா பாதை முடிவு வரை தன் பார்வையாலே இரக்கத்துடன் அவளைத் தொடர்ந்தாள். "பாவப்பட்ட சென்மங்க", பெருமூச்சு விட்டவாறு அவள் சொன்னாள், "வாழ்க்கைப் பாட்டுக்கு அவர்கள் செய்ய வேண்டியது வேலை பார்ப்பதை விட மோசமானது".
நள்ளிரவு வரை நிலைமை இப்படித்தான் இருந்தது; தாங்க முடியாத அதிர்வும், வழிப்பாதையின் மங்கிய வெளிச்சமும் காரணமாய் வாசித்து நான் சோர்ந்து விட, யோக்னாபடாவபா கவுண்டியின் புதைமணல்களில் இருந்து என்னை விடுவிக்க முயன்றவாறு, அவளருகே புகைபிடிக்க அமர்ந்தேன். பெர்னாட்ஷாவில் நான் படித்துள்ளதாய் நம்பும் "மிகச்சிறு வயது முதலே என் கல்வியை பள்ளிக்கு போகும் பொருட்டு தற்காலிகமாய் நிறுத்த வேண்டியிருந்தது" எனும் ஒரு சொற்றொடரால் ஊக்கம் பெற்று பத்தி¡¢கைத்துறை மற்றும் இலக்கியத்தை பற்றி ஏதும் கற்றறியும் அவசியமின்றி அவற்றைக் கொண்டு வாழ்க்கைப்பாட்டை ஓட்டி விடலாம் என்ற குருட்டாம்போக்கு நம்பிக்கையுடன், ஒரு வருடம் முன்பு பல்கலைக்கழகத்தில் இருந்து நின்று விட்டிருந்தேன். இதற்கான காரணங்கள், அவற்றை எப்படி விளக்குவது என்று எனக்கு தொ¢யவில்லை என்றாலும், எனக்கு மட்டுமே தோதாக இருக்கும் என்று தோன்றியதால் அவற்றைப் பற்றி யா¡¢டமும் விவாதிக்க முடியவில்லை. என்னிடம் நிரம்ப நம்பிக்கை வைத்திருந்து, தங்களிடம் இல்லாத காசையும் எக்கச்சக்கமாய் செலவழித்துள்ள என் பெற்றோர்களிடம் இத்தகைய ஒரு கிறுக்குத்தனத்தை பற்றி நம்பிக்கை ஏற்படுத்துவது நேரத்தை விரயம் செய்வதாகும். குறிப்பாக, தன்னால் அடைய இயலாத, ஒரு கல்விச்சான்றிதழை சுவற்றில் தொங்கவிட இல்லை என்பதைத் தவிர வேறெதற்காகவும் அப்பா என்னை மன்னித்திருப்பார். எங்களிடையே பேச்சுவார்த்தை தடைபட்டிருந்தது. ஏறத்தாழ ஒரு வருடத்துக்குப் பின் அம்மா தோன்றி வீட்டை விற்க அவளுடன் செல்லுமாறு என் அழைக்கும்வரை அவரை சந்தித்து என் காரணங்களை விளக்க ஊருக்கு செல்வது பற்றி நான் திட்டமிட்டபடிதான் இருந்தேன். நள்ளிரவில் இரவுணவின் போது, ஏதோ அசா£¡¢ கேடட்து போல் என்னிடம், நிஜமாகவே, காரணத்தை சொல்ல வேண்டிய தருணம் வந்து விட்டதாய் அவள் உணரும் வரை இந்த சமாச்சாரத்தை நான் குறிப்பிடவே இல்லை; புறப்படும் முன்பான தூக்கமற்ற இரவுகளின் தனிமையில் அவளுள் முதிர்ந்து பழுத்த முறை, தொனி மற்றும் துல்லியமான வார்த்தைகளுடன் ஆரம்பித்தாள்.
"உங்கள் அப்பா வருத்தமாக இருக்கிறார்”, அவள் சொன்னாள்.

சா¢தான், ஆரம்பித்தாகிவிட்டட்து. நான் மிகவும் பயந்த நரகம். அவள் எப்போதும் போலவே ஆரம்பித்தாள். நாம் ஒருபோதும் எதிர்பார்த்திராத போது, சற்றும் பதற்றம் கொள்ளாத ஆறுதலான் குரலில். என்ன பதில் வரும் என்பது மிக நன்றாக தொ¢ந்திருந்ததால், சம்பிரதாயமாக மட்டும் கேட்டேன்:
"ஏன் அப்ப்டி"
"ஏனென்றால் நீ படிப்பை நிறுத்தி விட்டாய் அல்லவா"
"நான் படிப்பை நிறுத்தவில்லை", நான் சொன்னேன்
"நான் வேலையை மட்டும் தான் மாற்றினேன்"
ஒரு முழுமையான விவாதத்துக்கான சாத்தியம் என் உற்சாகத்தை தட்டி எழுப்பியது.

Read More

Wednesday, 14 October 2009

காமம் - பொய் - வீடியோ சுருள்

சாய் பாபாவின் திகிடுதித்தங்களை விளக்கி அவருடன் ஒருகாலத்தில் நெருங்கிப் பழகின ஜி.ஆர் பாபு எழுதின இந்த அதிர்ச்சியூட்டும் கட்டுரையை மூன்று வருடங்களுக்கு முன் தமிழாக்கி புதிய காற்றில் பிரசுரித்தேன். இரண்டு பிரதிகளாக வெளியாயின. முதல் பகுதியின் மென்பிரதி கிடைக்கவில்லை. அதனால் இரண்டாம் பகுதியை மட்டும் இங்கே தருகிறேன். முதற்பகுதி இல்லாமலும் புரியும். முக்கியமான கட்டுரை.



வெளிறிப்போன முகத்துடன், வெளிநாட்டவர் ஒருவர் வந்து பாபவை ஏற்றுக் கொண்டு விட்டால், பின் ஐயப்பட ஒன்றுமில்லை. தேசிய வானொலியும், தொலைக்காட்சியும் பாபாவுக்காக பிரச்சாரம் செய்கின்றன. பத்திரிகையாளர்கள் ஏமாளிகளாகவோ, விலைக்கு வாங்கப்பட்டவர்களாகவோ உள்ளனர்.

“அங்கே ஒரு நெக்லஸ் தோன்றக் கடவாக”

ஆனால் ஒரு விசுவாசியின் சந்தேகத்திற்கு கண் கூடாகவே தீவனமிடுவது டெக்கான் குரோனிக்கல். 1992, நவம்பர் 23 அன்று சத்யசாயி பாபாவுக்கு வழங்கிய நூதன பிறந்த நாள் பரிசாகும். அதி எண்ணிக்கையில் விற்பனையாகும் ஐதராபாத்தைச் சார்ந்த இந்த ஆங்கில நாளிதழ் ஒரு பகுத்தறிவுவாதியின் கனவு என்று மட்டுமே வர்ணிக்கத்தக்க ஒன்றை பிரசுரித்தது. இந்திய பிரதமர் திரு.பி.வி.நரசிம்மராவின் முன்னிலையில் சத்யசாயி பாபா தங்க நெச்லஸ் ஒன்றை உருவாக்கியதன் படப்பிடிப்பும் புகைப்படங்கள் முன்பக்கத்தில் பெருமளவு இடம் பிடித்தன. இந்த படப்பிடிப்புச் சுருள், சத்யசாயி பாபா கை வீசி “வருவிக்கும்” நெக்லேசை முன்னரே அவருக்கு அவரது தனிப்பட்ட உதவியாளர் ராதகிருஷ்ண மேனன் ரகசியமாய் கைமாற்றுவதை தெளிவாகக் காட்டுகிறது.

பிரதமரை பதிவு செய்த மாநில குழு ஒன்றால் படம் பிடிக்கப்பட்ட இதன் காசெட் மறைக்கப்பட்டது. ஆயினும், ஒரு பிரதி வெளியாகிட, பல பிரதிகள் தொடர்ந்து இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் விநியோகிக்கப் பட்டன. தீரமிக்க அந்த பத்திரிகையாளர் வேணு கொடிமேளாவை பாராட்டும் விதமாய் ஒரு பெரிய கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. பின்னர் நீண்ட காலமாய், எங்களுடைய பொதுக் கூட்டங்களின் போதெல்லாம், இந்த படக்காட்சிகளை பார்ப்பது ஒரு கட்டாயச் சடங்காய் மாறியது. வட்டார மற்றும் மாநில கம்பி தெலைக்காட்சியில் சில காட்சிகள் காட்டப்பட்டன. சில பகுத்தறிவாளர்களின், அவர்கள் பிற்பாடு உணர்ந்தது போல், உடலுக்கு பெரும் தீங்கு நேரும் விதமாய் ஆயினும் புட்டபர்த்திக்கு வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கையை இந்த விளம்பரம் குறிப்பிடும்படியாய் பாதித்தது. இருப்பினும், பாபா தான் புரியும் நல்ல விஷயங்களை நோக்கி மக்களை கவர்வதற்காகவே “அதிசயங்களை” நிகழ்த்துவதாகவும், அவர் எப்போதும் தன் தனிப்பட்ட சக்திகளை பற்றி பிரகடனம் செய்ததில்லை என்று சிலர் இன்னும் கூட அழுத்திக் கூறுகின்றனர்.

மிக மோசமான திருப்பம் ஒன்று 1993, ஜுன் 6 அன்று காத்திருந்தது. சத்யசாயி பாபாவின் படுக்கையறையில் பிரசாந்தி நிலைய வாசிகளான ஆறுபேர்கள் கொல்லப்பட்டனர். இருவரை கொலைகாரர்களே கொன்றதாய் சொல்லப் பட்டது; காவல் துறையினர் கத்தி மட்டுமே ஏந்திய நான்கு கொலைகாரர்களை சுயபாதுகாப்பு கருதி கொன்றதாய் அறிவித்தனர். தனக்கு நேரப்போகும் ஆபத்தை உணர்ந்த பாபா தன்னுயிரைக் காப்பாற்ற ஓடினார்; திறந்த ஜன்னல் வழி குதித்து வெளியேறி, பிரசாந்தி நிலையத்திற்கு மிகப் பரிச்சயமான வர்கள் கூட அறிந்திராத, ரகசிய அபாய அறிவிப்பொலியை இயக்கினார். படப்பிடிப்பில் பாபாவுக்கு ரகசியமாய் நெக்லசை கைமாற்றிய அவரது தனிப்பட்ட உதவியாளரான ராதா கிருஷ்ணன் மேனனையும் சேர்த்து, கொலை செய்யப்பட்ட அனைவரும் பாபாவின் உள் வட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பது கவனத்திற்குரியது.

பாபாவே தனது குரு பூர்ணிமா உரையின் போது, இம்மரணங்களைக் குறிப்பிட்டு தனக்கு நெருக்கமானவர்களின் மரணம் தவிர்க்கத் தக்கதா என்ற கேள்வியைக் கையாண்டார்: “ஜனனமும், மரணமும் சேர்ந்தே செல்பவை. மரணம் ஒரு இயற்கை நிகழ்வு, அதையெண்ணி நாம் கவலையுறக் கூடாது என்பதை நாம் உணர வேண்டும்... சுவாமியின் உயிர் அவர் கையிலே உள்ளது, வேறெவரிடமும் அன்று என்பதை குறித்துக் கொள்ள வேண்டும். நான் வேண்டும் வரை என்னால் வாழ முடியும். சர்வ வல்லவனாய் இருப்பதாலேயே இறைவன் தன் எண்ணம் போல் இயங்க முடியாது. இவ்வுண்மையை உணராமல், லௌகீக வாழ்வை பின்பற்றும் மனிதர்கள் கடவுள் ஏன் சில சூழ்நிலைகளில் தன் முடிவற்ற சக்தியை பயன்படுத்தி எதிர்பாராத, தேவையற்ற சம்பவங்களை தவிர்க்கவில்லை என்பது போன்ற கேள்விகளைக் கேட்கிறார்கள். .”

பாபாவைக் கொல்ல முயற்சி என்பதிலிருந்து பிரசாந்தி நிலையத்தினுள் நிகழ்ந்த உள் சச்சரவாக இருமுறை காவல்துறை அறிக்கை மாற்றி எழுதப்பட்டது. மர்மமான முறையில், இந்திய ஜனாதிபதி சங்கர் தயால் ஷர்மா, நடைமுறை யிலிருந்தும், நன்னடதையில் இருந்தும் பிறழ்ந்து, இந்த மரணங்கள் “ஒரு பெண்” சம்பந்தப்பட்டவை என்றார். ஏன் என்ற கேள்வி எழுந்த போது, நிறுவனத் தலைவரான சத்யசாயி பாபா விசாரிக்கப் படவில்லை. சத்யசாயி பாபவை இருமுறை சந்தித்த உள்துறை அமைச்சர் சவான் கொலை நடந்த நேரத்தில் சாய்பாபா அங்கிருக்கவில்லை என்று வழக்கை மேலும் சமரசப்படுத்தினார். ஆச்சரியமாக, பிரசாந்தி நிலைய அதிகாரிகள் தாமாக எந்த புகாரும் காவல்துறையிடம் அளிக்கவில்லை. மந்திர வித்தைக்காரரும், பாபாவின் முன்னாள் பக்தரும், இந்தியாவிலுள்ள மிக முக்கிய ஆஸ்திகரும், பாபாவின் வாழும் கேலி விமர்சகருமான பி.பிரேமானந்த் விசாரணையின் போதன இந்த குறுக்கிடலை ஏற்றுக் கொள்ளாமல் காவல்துறை திட்டமிட்டு சாட்சியங்களை அழித்தாய் அரசை நீதிமன்றத்திற்கு இழுத்தார்.

வேடிக்கையாக, முன்னொரு முறை தங்க ஆபரணங்களை பக்தர்களுக்கு “சிருஷ்டித்து” அளிப்பதன் மூலம் சத்யசாயி பாபா தங்க உற்பத்தி, உடைமை, விற்பனை மற்றும் இடமாற்றம் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும் தங்க கட்டுப்பாட்டுச் சட்டத்தை மீறியதாய் பிரேமானந்தும், பகுத்தறிவு வக்கீலான கெ.என்.பாலகோபாலனும் அவர் மேல் நீதி மன்றத்தில் புகார் அளித்தனர். விண்ணப்பத்தை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்ற நீதிபதியும், சத்யசாயி உள்வட்ட உதவியாளருமான ஒய்.வி.அஞ்சனயேலு, ஆன்மீக சக்தியால் ஒரு பொருளை உருவாக்குதல் உற்பத்தியோ, தயாரிப்போ, மறுவடிவமைப்போ ஆகாது என்றார். அநேகமாக, சட்ட நீதி வரலாற்றில் முதன் முறையாக ஆன்மீக சக்தி சட்டபூர்வ சாட்சியாக அங்கீகரிக்கப்பட்டது.

ஆனால், இந்த தற்போதைய வழக்கில் நீதி கிடைக்கும் விதம் வழக்கை நடுநிலை விசாரணை அமைப்பிற்கு மாற்ற வேண்டும் என்று பிரேமானந்த் உயர்நீதி மன்றத்தில் பொது நல வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார். உயர்நீதி மன்றத்தில், கோரிக்கையை தள்ளுபடி செய்த தலைமை நீதிபதி மிஷ்ரா சத்யசாயி பாபாவை அவதூறு செய்யும் விதமாய் நீதிமன்றத்தை மறுமுறை பயன்படுத்தினால் தண்டிக்கப் போவதாய் பிரேமானந்தை மிரட்டினார். தன் பகுத்தறிவு மனத்திடத்தை கொண்டாடும் விதம், உயர்நீதிமன்றம் ஜனவரியில் இந்த கருத்துக்களை மறுத்து ஒதுக்கியது. உயர்நீதிமன்றத்தின் கண்டனத்திற்கு உள்ளான ஆந்திர மாநில மேல்நீதி மன்றமும் மே முதல் வாரத்தில் அரசிற்கும், காவல்துறைக்கும் எதிராக பிரேமானந்த் தொடுத்த நீதிமன்ற அவமான வழக்கை ஏற்றுக் கொண்டது. பிரேமானந்தும், சத்யசாயி பாபாவும் பத்திரிகைகளின் முதற்பக்கங்களில் மீண்டும் இடம் பிடித்தனர்

இந்தியாவின் நீதிமன்ற மனநிலை கடந்த சில மாதங்களில் குறிப்பிடும் படியாய் மாறியுள்ளது. இந்திய உச்சநீதிமன்றம் தன் “கைகளை தூய்மைப்படுத்தும் நடவடிக்கை” மூலம் பல ஊழல் அரசியல்வாதி களை கைது செய்தது. இந்திய பிரதமர் நரசிம்மராவை வலியுறுத்தி அவரது விருப்பத்திற்குரிய சாமியாரும், ஆயுத விற்பனைத் தரகருமான சந்திராசாமியையும் மே முதல் வாரத்தில் கைது செய்தது. பகுத்தறிவாளர்கள் எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர். . .

2000 மில்லியன் இந்திய ரூபாய் செலவில் அமைக்கப்பட்டு அனைவருக்கும் இலவச சிகிச்சை அளித்து வரும் சத்யசாயி மேல்நிலை மருத்துவ அறிவியல் கல்லூரி சார்ந்த அதிர்ச்சிகரமான அறிக்கை ஒன்றை மராத்தி மொழி வார இதழான “லோக் சபா” 1996, ஜனவரி 19 அன்று பிரசுரித்தது. மகாரஷ்டிர மாநில லாத்தூர் மாவட்டத்தை சேர்ந்த விவசாயியான திரியாம்பக் கர்வந்தே தன் மகனுக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மூலம் சிறுநீரகம் பொருத்தினார். அறுவை சிகிச்சை முடிந்து ஒரு வாரமான பின், இறக்கும் நிலையிலிருந்து திரியாம்பக்கின் சிகிச்சை தோல்வி அடைந்து விட்டதாய் கூறப்பட்டு, தந்தையும், மகனும் வீட்டிற்கு திருப்பி அனுப்பப் பட்டனர். ஊரில் மகாராஷ்டிர மருத்துவ அறிவியல் கல்லூரியில் டாக்டர்.கஸ்தூர் இரு ஸ்கான்களும் சோனோகிராபியும் செய்து திரியாம்பக்கிற்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையே செய்யப் படவில்லை என்று கண்டறிந்தார். அது மட்டுமல்ல, பாலாஜியின் சிறுநீரகம் களவாடப் பட்டுள்ளது என்பதை ஸ்கான்கள் உறுதி செய்தன. பாலாஜியின் சிறுநீரகம் எங்கே போயிற்று? இதுவரையிலும் பெரும்புகழ் வாய்த்திருந்த இந்த மருத்துவமனை ஒருவேளை சர்வதேச உறுப்பு திருட்டு வியாபாரத்தின் பங்காளியோ? குற்ற மிழைக்கப் பட்டவரின் ஆரம்பப் புகார்கள் புறக்கணிக்கப் பட்டன; ஆனால் மகராஷ்டிர மூடநம்பிக்கை ஒழிப்புக் குழு தனது தனிப்பட்ட விசாரணைக்குப் பின் கர்வந்தே குடுபத்திற்கு நீதி உதவி கிடைக்க முயன்று வருகிறது. உண்மை விரைவில் வெளியாகும்.

இந்திய பகுத்தறிவாளர் சங்கத்தின் போலி அதிசய புலப்படத்தல் ஆலோசகரும், “இந்திய ஆஸ்திகனின்” ஆசிரியருமான பி.பிரேமானந்த், சாயியின் சொத்து மதிப்பு 60,000 மில்லியன் ரூபாய் என்கிறார். புட்டபர்த்தியில் இப்போது ஒரு விமான நிலையமும், வருகை தரும் பணம் கொழித்த அமெரிக்கர்கள், ஸகாந்திநாவியர்கள், பெல்ஜியர்கள், ஜெர்மனியர்கள், டச்சுக்காரர்கள், மலேசியர்கள், ஜப்பானியர்கள் ஆகியோர் வாடகைக்கு தங்குவதற்கான 3000 சிறு குடியிருப்புகளும் உள்ளன. 10,000 பேர்களுக்கு ஒரே நேரத்தில் உணவு அளிப்பதற்குப் போதுமான உள்கட்டு மானத்தை பிரஷாந்தி நிலையம் கொண்டுள்ளது. இந்தத் தகவலை கணக்கிலெடுத்துக் கொண்டால் போதும்: 1982ல் சத்யசாயி சங்கத்தின் இலக்கு 6000 கிராமங்களை, அங்குள்ள சமுதாயங்களின் உடல், ஆன்மீகத் தேவைகள் நிறைவேற்றும்படியாய், தத்தெடுப்பது ஆகும். இந்தியாவில் 3000 சத்யசாயி மையங்கள் உள்ளன. 85 வெளிநாடு களில் 400 மையங்கள் உள்ளன. ஸ்ரீசத்யசாயி பால் விகாஸ் அறக் கட்டளை நடத்தும் மையங்களில் 1,00,000 குழந்தைகள் இலவசமாக பயிற்றுவிக்கப்படும் செய்தியை அவர்கள் விம்பரப்படுத்தி விற்பனை செய்கிறார்கள். மேலும் அவர்கள் தங்கள் சமூக சேவை நடவடிக்கைகள் பற்றி பிரச்சாரமும் செய்கிறார்கள். மாநிலத்திற்கு சொந்தமான யூனியன் பேங்க் ஆப் இந்தியா சத்யசாயி பாபாவிற்கு பணம் மாற்றுவதற்கு எந்த கட்டணமும் வசூலிப்பதில்லை; பணம் தொடர்ச்சியாக கொட்டுகிறது.

சத்யசாயி பாபா தன் 70வது பிறந்த நாளை 1995, நவம்பரில் கொண்டாடிய போது இந்திய ஜனாதிபதியும், பிரதமரும் ஆஜராகி, வறண்ட மாவட்டமான ஆனந்த்பூரின் ஒவ்வொரு கிராமத்திற்கும் குடிநீர் வழங்கும் சத்யசாயி தண்ணீர் திட்டத்தை கைதட்டி வரவேற்றனர். உண்மைத் தகவல் என்னவெனில், கீழ்த்தர கட்டுமானப் பொருட்கள் ஊழல் காரணமாய் பயன்படுத்தப் பட்டமையால் தொட்டிகள் உடைந்தன, குழாய்கள் வெடித்து முடிந்த பின் இன்று வரையிலும் கிராமக் குழாய்களில் தண்ணீர் வந்தபாடில்லை. அரசு தன் கடமையிலிருந்து தவறும்போது, மத நிறுவனங்கள் அவ்விடத்தை எவ்வாறு பற்றிக் கொள்ளும் என்பதற்கு இது ஒரு முக்கிய உதாரணம். அவரது பிறந்த நாளின் போது மட்டும் ஊர் பேரற்ற அமெரிக்க மற்றும் ஜப்பானிய தர்ம ஸ்தாபனங்கள் 1600 மில்லியன் இந்திய ரூபாயை (45 மில்லியன் அமெரிக்க டாலர்கள்) சத்யசாயி தர்ம வேலைக்காக நன்கொடை வழங்கியது. இது ஒருவேளை பணக்கடத்தலோ என்ற கோணத்தில் பிரேமாந்த் விசாரித்து வருகிறார்.

பள்ளிப் படிப்பை பாதியில் துறந்த சத்யசாயி பாபாவின் உலகியல் பார்வையை சற்று பரிசீலித்தால் அவர் பாணியிலான தானதர்மத்தையும், கல்வியையும் ஏன் எதிர்க்க வேண்டும் என்பது புரியும். “மையத்தில் (உலகின்) எல்லாமே ஜலம், எல்லாமே உருகியுள்ளது. தட்ப வெப்பமில்லை. தஞணர் போல் எல்லாம் ஜலவடிவில். தங்கம், இரும்பு, வெள்ளி அனைத்தும் ஜலமாய். இதன் பின் திடப்பொருள், பிறகு மரங்கள், பின் மானிடர்களும், மிருகங்களும், மையத்தில் இருப்பதே இறை. அவனே அனைத்திற்கும் ஆதாரம். முதலில் ஜலம், வேதியியல். பிறகு திடப்பொருள், இயற்பியல். பின் மரங்கள், தாவரவியல். பிற்பாடு மனிதன், வாழ்வின் உச்சநிலை. ஆனால் மையத்தில் அனைத்திற்கும் ஆதரமாய் இறை உள்ளது. இறையற்று ஏது வேதியலும், இயற்பியலும், தாவரவியலும்? இதைப் போன்றே இந்த பல்கலைக் கழகத்தில் அனைத்துப் பாடங்களும் பயிற்றுவிக்கப்படும்”. இந்தியாவிலுள்ள பிற உயர்கல்வி மையங்களுக்கு இணையாக சத்யசாயி உயர்கல்வி நிலையம் நிகர்நிலை பல்கலைக் கழகமாக சாயி பக்தரும், யு.ஜி.சியின் தலைவருமான மாதுரி ஷாவால் சில வருடங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது.

வறிய நாடுகளில் செய்யப்படும் தானதர்மம் பற்றிய செய்தி பகுத்தறிவு வாதத்தை புதைச் சேற்றில் அமுக்குகிறது. சோகம் என்னவெனில், இந்தியர்கள் இன்னமும் கூட இனவாதிகள்தான்; வெளிறிப்போன முகத்துடன், வெளிநாட்டவர் ஒருவர் வந்து பாபவை ஏற்றுக் கொண்டு விட்டால், பின் ஐயப்பட ஒன்றுமில்லை. தேசிய வானொலியும், தொலைக்காட்சியும் பாபாவுக்காக பிரச்சாரம் செய்கின்றன. பத்திரிகையாளர்கள் ஏமாளிகளாகவோ, விலைக்கு வாங்கப்பட்டவர்களாகவோ உள்ளனர். நீதிபதிகள் சில நேரம் தங்கள் தனிப்பட்ட நம்பிக்கைகள் சார்ந்து முடிவெடுக்கும் பலவினம் கொண்டவர்கள். பாபாவுக்கு அளிக்கப்படும் அரசியல் ஆதரவு நிலைமையை மேலும் சீரழிக்கிறது. (மூடநம்பிக்கை யாளரான நரசிம்மராவ், அவரது மந்திரி சபை மற்றும் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா ஆகியோர் தங்களது அலுவலகப் பொறுப்பில் இருந்தவாறே சாயிபாபாவை சந்திக்க ஆரம்பித்தவுடன் அவரது செல்வாக்கு பன்மடங்கு பெருகியது) இந்தியாவில் அரசியல் மற்றும் குற்ற அடையாளங்கள் இரண்டறக் கலந்து விடும்.

விஞ்ஞானிகள், வழக்கறிஞர்கள் மற்றும் அறிவுஜீவிகள் இந்த நவீன ஆன்மீகப் போலி மீதான தங்களது மடத்தனமான பக்தி காரணமாய் சமூகத்தின் முன் எடுத்துக் காட்டுகளாய் விளங்கி பிறரை தவறாக வழி நடத்துகின்றனர். தானதர்மம் என்பது வெறுமனே பாபாவின் வழிபாட்டுக் குழுவிலும், சாம்ராஜ்ஜியத்திலும் முதலீடு செய்வதும், வரியைத் தவிர்க்கும் சூழ்ச்சியும் ஆகும் என்பதை நல்லெண்ணம் கொண்ட பலரும் சத்யசாயி பாபாவின் பக்தர்களிலும், அவரைப் பின்பற்றுபவர்களில் பலரும் - புரிந்து கொள்ளத் தவறுகின்றனர். அறிவுஜீவிகளாலும், தங்கள் ஆய்வறிக்கை அடகு வைத்து வேண்டுமென்றே ஏமாந்து போகும் பொது மக்களாலும் சத்யசாயி எனும் அக்டோபஸ், அற்புதங்களின் வசீகரத்தால், தன் உணர்கொம்புகளை தெலைவாகவும், விரிவாகவும் பரப்பி வருகிறது.

மேலும் படிக்க: Saiguru.com
Read More

ஆர்கன் பாமுக் - முரண் ஆளுமைகளின் எழுத்தாளன்



இரண்டு வருடஙகளுக்கு முன் புதிய காற்றில் நான் எழுதிய கட்டுரை.



“நம்மால் நம் கடந்த காலத்தைப் பற்றி பேச இயல வேண்டும்... 30,000 கெர்டுகளும், 1.5மில்லியன் அர்மேனியர்களும் இந்த தேசத்தில் கொன்று குவிக்கப்பட்டனர், அதைப் பற்றிப் பேச யாருக்கும் நெஞ்சுரம் இல்லை”. 2006-ஆம் ஆண்டின் நோபல் பரிசை சமீபத்தில் வென்ற துருக்கிய நாவலாசிரியர் ஆர்கன் பாமுக் 2005 பிப்ரவரியில் ஸ்விஸ்ஸர்லாந்து பத்திரிகை ஒன்றில் கூறிய இக்கருத்து துருக்கிய அரசியல் கலாச்சாரத் தளங்களில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. பாமுக்கின் குற்றச்சாட்டு அனடோலியாவில் 1915-1917 காலகட்டத்தில் ஒட்டோமான் துருக்கியர்கள் 1.5 மில்லியன் ஆர்மேனியர்களை திட்டமிட்டு இனப்படுகொலை செய்தனர் என்பதே. இந்த இனப்படுகொலை பெரும்பாலும் துருக்கிய அரசால் இருட்டடிப்பு செய்யப்பட்டு விட்டது என்கிறார். இந்த படுகொலை பற்றி பேசினாலே துருக்கிய அரசு பதற்றமடைந்து விடும்.

ஐரோப்பிய யூனியனில் அங்கத்தினராக சர்வதேச அரசியல் தளத்தில் பல்கலாச்சார ஊடாடலை ஏற்றுக் கொள்ளும் தேசமாகவும், அமைதி விரும்பியாகவும் (பாகிஸ்தானைப் போல்) தன்னைக் காட்டிக் கொள்ளும் கட்டாயம் துருக்கிக்கு. 1980 மற்றும் 1990-களில் கெர்டிய பிரிவினைவாதிகளுக்கு எதிரான தனது நடவடிக்கை இனப்படுகொலை அல்ல என்றது துருக்கி. மேலும் பாமுக் கொல்லப் பட்டவர்களின் எண்ணிக்கையை மிகைப்படுத்துகிறார் என்று குற்றம் சுமத்தியது. இந்த நடவடிக்கையின் போது இஸ்லாமிய துருக்கியர்கள் பலர் உயிர்விட வேண்டியதாயிற்று என்று மழுப்ப வேறு செய்தது. இத்தகைய நெருக்கடியான சூழலில் உலக அளவில் விமர்சகர்களால் கவனிக்கப்பட்டு வரும் எழுத்தாளரான பாமுக்கிடமிருந்து இத்தகைய குற்றச்சாட்டு வர, குண்டாந்தடியாக அவரை மூன்று வருடங்கள் வரை சிறையில் தள்ள ஏற்பாடு செய்யப்பட்டது. “துருக்கியர்களை அவமதித்ததே” அவர் மீதான குற்றச் சாட்டு.

பாமுக்கின் நூல்களும், உருவப்படங்களும் ஊர்வலங்களில் எரிக்கப்பட்டன. போன வருடமே இது போன்ற “குற்றத்திற்காய்” 60 எழுத்தாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் துருக்கியில் தண்டிக்கப்பட்டுள்ளனர். முன்கூட்டியே இதையெல்லாம் எதிர்பார்த்தது போல பாமுக் பேட்டிக்குப் பின் துருக்கியில் இருந்து பறந்து விட்டார். நியூயார்க் பத்திரிகையில் பின்னர் எழுதுகையில், பாமுக் “என் மீது துருக்கி அரசு வழக்கு தொடர்ந்ததில் எந்த ஆச்சர்யமும் இல்லை. வருடக் கணக்கில் கோர்ட்டுக்கு அலைந்து, சிறையில் கிடந்த பிறகே எழுத்தாளர்களை கவுரவிக்கும் தேசத்திடமிருந்து வேறென்ன எதிர்பார்க்க முடியும். என் நண்பர்கள் இப்போதுதான் நீ நிஜமான துருக்கிய எழுத்தாளன் என்று சொன்னதன் உள்ளர்த்தம் புரிகிறது” என்றார். இந்த கைது முடிவு ஐரோப்பிய யூனியனிடமிருந்து கடுமையான விமர்சனத்திற்கு துருக்கியை உள்ளாக்கியது.

ஆம்னஸ்டி இண்டர்நேஷனல், பென் எனும் சர்வதேச இலக்கியப் பேரவை போன்றவற்றோடு சேர்ந்து உம்பர்தோ ஈகோ, மார்க்வெஸ், ஜான் அப்டைக், குந்தர் கிராஸ் போன்ற முக்கிய எழுத்தாளர்களும் துருக்கியின் இந்நடவடிக்கையை கண்டித்தனர். பேச்சு சுதந்திரம் இல்லாத துருக்கி நாட்டிற்கு ஐரோப்பிய யூனியனில் உறுப்பினர் பதவி வேறு ஒரு கேடா என்றது பிரேசில். சர்வதேச ரீதியிலான கண்டனங்கள் மேலும் குவிய, துருக்கி அரசு பாமுக்கிற்கு எதிரான வழக்கை போன ஜனவரியில் வாபஸ் வாங்கியது. பாமுக்கின் தாய் நாட்டிற்கு எதிரான கலகச் செயல்பாடுகள் அவரது மேற்கத்திய கலாச்சார சார்பு நிலையையே காட்டுகிறது என்கின்றனர் துருக்கிய தேசியவாத விமர்சகர்கள். மேற்கிந்திய நாவலாசிரியர் வி.எஸ். நைப்பால் தன் சொந்த நாட்டை கடுமையாய் விமர்சித்து, சமகால மேற்கிந்திய படைப்பாளிகளால் துரோகிப் பட்டம் வாங்கிக் கட்டிய தோடு, இஸ்லாமியர்களை வேறு இந்தியாவை கெடுத்து குட்டிச் சுவராக்கியதாய் பழி சுமத்தியதும், அவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்ட சம்பவத்தோடு, பாமுக்கிற்கு பரிசு வழங்கப்பட்டதையும் ஒப்பிட்டனர் சில விமர்சகர்கள். சொந்த நாட்டையோ, இஸ்லாமியர்களையோ விமர்சிப்பதுதான் நோபல் பரிசுக்கான தகுதியா என்பது இவர்களின் கேள்வி.

ஒரு எழுத்தாளன் வரலாற்று இருட்டடிப்புக்கெதிராக குரலெழுப்புவது நிச்சயம் பாராட்டத்தக்கது தான். 1998-இல் துருக்கிய அரசு வழங்கிய “தேசிய கலைஞன்” விருதை, ‘இதை ஏற்றுக் கொண்டால் பிறகு நான் முக்கியமாய் கருதுபவர்களின் முகத்தில் எப்படி விழிக்க முடியும்’ என்று காரணம் கூறி பாமுக் நிராகரித்தார். பாமுக்கின் அரசியல், கலாச்சார நிலைப்பாடு வெளியே யிருந்து பார்க்கையில் சற்று சிக்கலானதே. துருக்கியின் சமூக பண்பாட்டு பொருளாதார வளர்ச்சி, அது எவ்வாறு மேற்கத்திய கலாச்சாரத்தின் நேர்மறை அம்சங்களை தனது மரபான வாழ்க்கைக்குள் கிரகித்து வளர்கிறது என்பதைப் பொறுத்தே அமையும் என்கிறார் பாமுக். இவரது இத்தகைய நிலைப்பாடுகள் காரணமாய் இவர் ஐரோப்பிய சார்பாளரோ என்று நாம் எளிதாய் கருதும் வாய்ப்புகள் அதிகம். ஆனால் பாமுக்கின் அரசியல் கலாச்சார சமூக கருத்தாக்கங்கள் மேலும் நுட்பமும், விரிவும் கொண்டவை. இவரது சிக்கலான துருக்கிய மனப்பான்மையை புரிந்து கொள்ள, ‘பனி’, ‘வெண்ணிறக் கோட்டை’, ‘என் பெயர் சிவப்பு’ ஆகிய அவரது அரசியல் நாவல்களையும் முக்கிய வாழ்க்கை நிகழ்வுகளையும் ஆராய்வது உதவும்.

பனி நாவல் ஸ்டெண்டல்லின் கீழ்வரும் மேற்கோளோடு துவங்கு கிறது: “ஒரு இலக்கியப் படைப்பில் அரசியல் என்பது கச்சேரியின் போது துப்பாக்கிச் சூடு போன்றது. தவிர்க்க சாத்தியமற்ற ஒரு கொடூரமான சமாச்சாரம். நாம் அசிங்கமான சில விஷயங்களைப் பற்றிப் பேசப் போகிறோம்”. கதாபாத்திரங்களின் எதிர் கருத்தியல்களையும், “அவற்றிற்கு இடையே நிலவும் குழப்பத்தையும்” விவாதிக்கும் நாவல் இது. 9/11-க்கு இரண்டு வருடங்களுக்கு முன்பு புனையப்பட்ட “பனி” வடகிழக்கு துருக்கியிலுள்ள கார்ஸில் நடக்கிறது. ராணுவப் புரட்சி ஒன்றில் மாட்டிக் கொள்ளும் கவிஞனின் கதை இது. கடந்த நூற்றாண்டில் மதச்சார்பின்மை மற்றும் மதத்திற்கு இடையே மதில் மேல் பூனையாய் தவித்து வந்த துருக்கியின் நிலையை இந்நாவல் நுட்பமாய் பதிவு செய்கிறது. இவ்விரு நிலைப்பாடுகளுக்கு இடையேதான் “குழப்பத்தையே” பனி அலசுவதாய் தெகார்டியன் பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியில் பாமுக் குறிப்பிட்டு உள்ளார்.

1995-இல் வெளியான பாமுக்கின் வெண்ணிறக் கோட்டை நாவலில் 17-ஆம் நூற்றாண்டை சேர்ந்த லத்தீன் பண்டிதன் ஒருவனை ஒட்டோமான் கடற்கொள்ளையர்கள் பிடித்து மேற்கத்திய உலகைப் பற்றி அறியும் தீவிர ஆர்வம் கொண்ட ஒரு துருக்கியனுக்கு விற்று விடுகின்றனர். இந்நாவல் “ஒரு விதமான தீவிர தனிமனித போராட்டம் மட்டுமல்ல, இரட்டையர்கள் பற்றிய புனைவுமே” என்கிறார் பாமுக். பனியில் இவர் விவாதிக்கும் “குழப்ப நிலையும்”, வெண்ணிறக் கோட்டையின் “இரட்டையர்கள்” கதைக்கருவும் ஒரே தத்துவ சரடில் கோர்க்கப்பட்டவை. 95ரூ துருக்கியர்களும் இரண்டு ஆன்மாக்களை தம்முள் சுமந்து திரிவதாய் கருதுகிறார் பாமுக். மதச்சார்பின்மையாளர்கள், குடியரசுவாதிகள், முற்போக்காளர்கள் என்று ஒரு புறமும், தேசியவாதிகள், இஸ்லாமிய அடிப்படைவாதிகள், அரசியல்வாதிகள் என்று மறுபுறமும் இவர்கள் இரு விதமான முரண் அடையாளங்களை சுமக்கிறார்கள் என்பதை பாமுக் இவ்வாறு மறைமுகமாய் குறிப்பிடுகிறார். ஒவ்வொரு துருக்கியனும் இவ்வாறு தன்னுள்ளே முரண்பட்டு போராடுகிறான். இந்த முரண் ஆளுமைகளை சுமக்கும் சராசரி துருக்கியனே இரட்டையனாய் பாமுக்கின் எழுத்தில் பாத்திரமாகிறான். இரட்டை ஆளுமை மனிதர்களின் வாழ்வே துருக்கியின் மிகச் சரியான இலக்கியக் கரு என்கிறார் பாமுக்.

துருக்கியின் ஐரோப்பிய யூனியன் நுழைவுக்கு தீவிர ஆதரவு தெரிவிக்கும் பாமுக் தன் தேசம் நவீனப்படுவதற்கும், ஐரோப்பிய வளர்ச்சியில் பங்கேற்பதற்குமான தடைகள் தன் நாட்டிற்கு வெளியிலிருந்தும், உள்ளிருந்தும் உருவாக்கப்படுகின்றன என்கிறார். ஐரோப்பிய பழமைவாதிகள் துருக்கி ஐரோப்பாவுடன் உறவு கொள்ளும் தகுதி உடையதல்ல என்று ஒருபுறம் இழிவுபடுத்த, துருக்கியின் முற்போக்கு அதிகார வர்க்கத்தினர் தங்கள் அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ள தங்கள் நாடு மேற்கத்திய நாடுகளால் இழிவுபடுத்தப்படுவதான போலித் தோற்றத்தை கட்டுவிக்கின்றனர். நாட்டில் நிகழும் திடுதிப்பான நவீன மாற்றங்களால் சற்றே பாதுகாப்பற்று போனதாய் வருந்தும் துருக்கியர்கள் இப்போலிப் பிரச்சாரத்தால் மேலும் தடுமாறுகின்றனர்.

துருக்கியை மீண்டும் பழமையை நோக்கித் தள்ளி அதிகாரத்தை தக்க வைப்பதே இந்த அதிகார வெறியர்களின் நோக்கம் என்கிறார் பாமுக். இத்தகைய அரசியல் பித்தலாட்டங்களால் “பிளவு மனநிலைக்கு” உட்படும் துருக்கியர்களின் குழப்பத்தையே இவரது நாவல்கள் பேசுகின்றன. எந்த நாடும் அந்நிய கலாச்சார, இலக்கிய, அரசியல் சிந்தனைகளை எதிர்கொள்கையில் இத்தகைய ஆன்மீகத் தடுமாற்றம் ஏற்படுவது இயல்பே. இந்த தடுமாற்றத்திலிருந்தும், குழப்பத்திலிருந்தும் மட்டுமே தெளிவு பிறக்கும், பழமையை நோக்கி பின்னோடுவதன் மூலமல்ல என்று அவர் வலியுறுத்துகிறார்.

2003-இல் வெளியான இவரது மற்றொரு நாவலான என் பெயர் சிவப்பு. ஒரு நாடு அயல் கலாச்சாரத்தின் வழமைகளை முழுக்க தவிர்க்கவோ, பின்பற்றவோ முடியாத இரண்டக நிலையைப் பேசுகிறது. கொலை ஒன்றின் மர்ம முடிச்சுகளை அவிழ்த்து விரியும் இந்த திகில் நாவல் இஸ்லாமிய நுணுக்க ஓவியர்களுக்கும் மேற்கத்திய சிந்தனாவாத மரபின் பால் மயக்கமுற்ற கலைஞர்களுக்கும் இடையேயான போராட்டத்தை சித்தரித்து இஸ்லாமுக்கும் கிறித்துவத்திற்கும் இடையேயான மோதலை விவரிக்கிறது.

பாமுக் தற்போது எழுதி வரும் வெகுளித்தனத்தின் அருங்காட்சியகம் எனும் நாவலில் கீழ் தரப்பட்டு உள்ள வசனம் வருகிறது: “ஏழைகள் தங்கள் வறுமையை ஒரு பாவமென்று கருதுமளவு அப்பாவிகளாய் உள்ளனர்; செல்வந்தரானவுடன் தங்களின் தெய்வக் குற்றமும் மன்னிக்கப்பட்டுவிடும் என்று நம்புகிறார்கள்”. துருக்கியின் அரசியல் பிற்போக்குவாதமும், மக்கள் வாழ்வை சிதிலமடையச் செய்யும் வறுமையும் மேற்கை சந்திக்கையில் ஏற்படுத்தும் தலை குனிவை தவிர்ப்பதற்கான முனைப்பு, பழமைவாதத்தை நோக்கி செலுத்தும் அபாயத்தை இவ்வசனத்தில் பாமுக் குறிப்புணர்த்துகிறார். வறுமையை பாவமெனக் கருதுகையில் தாழ்வுணர்வு ஏற்பட்டு நிகழும் ஆன்மீகச் சிதைவு, காலாவதியான சிந்தனைகளை போலி கௌரவத்தில் சுமக்கையிலும் நிகழலாம். ஐரோப்பிய இலக்கிய மரபிலுள்ள பயிற்சியே தன் படைப்பெழுச்சிக்கான ஊற்றுக்கண் என்று பாமுக் ஒத்துக் கொள்கிறார்.

இவரது ஐரோப்பிய சாயலுடைய எழுத்து பாணியை கண்டிக்கும் விமர்சகர்களுக்கு, துருக்கியின் எதார்த்தவாத இலக்கிய மரபே எர்ஸ்கின் கால்டு வெல், கார்க்கி மற்றும் ஸ்டெய்ன் பெக் போன்ற மேற்கத்திய படைப்பாளிகளின் நூல்களை முன்னோடியாய் கொண்டு உருவானது தானே என்று பதிலளிக்கிறார். தனது புது வாழ்வு நாவலில் தாந்தேயின் பாதிப்பையும், கறுப்பு புத்தகத்தில் ஜேம்ஸ் ஜாய்ஸின் யுலைஸஸ் நாவலின் பாதிப்பையும் வெளிப்படையாக ஏற்றுக் கொண்டுள்ளார். மேற்கும் கிழக்கும் நேர்த்தியாய் இணைவதன் நேர்மறை விளைவுகளையே தன் படைப்பியல் வெற்றிகள் குறிப்புணர்த் துவதாய் பாமுக் நம்புகிறார். மேற்கின் வளத்தை உறிஞ்சி, இஸ்தான்புல் தன்னை உறுதியாய் நிலைநாட்ட முடியும் என்ற பாமுக் நம்புகிறார்.

பாமுக்கின் புனைவுகளில் இடையறாது விவாதிக்கப்படும் சுயமுரண் பாட்டு ஆன்மீக நிலைப்பாட்டின் அடிவேரை தேடிச் சென்றால்அது அவருடைய பால்ய கால நினைவுகளில் சென்று முடிகிறது. “மிகச்சிறு வயதிலேயே எனது இரட்டையனான மற்றொரு பாமுக் இஸ்தான்புல்லின் ஏதாவதொரு தெருவில் எங்களுடையது போன்றதொரு வீட்டில் வாழ்ந்து வருவதாய் நான் சந்தேகித்தேன்”.

பெற்றோரிடையே அடிக்கடி நிகழும் சண்டை சச்சரவுகள் பொறுக்க முடியாமல் போகும் போது தானொரு “மறைந்து போகும் விளையாட்டை” ஆடியதாய் சொல்கிறார். அதாவது தன் அம்மாவின் அலங்கார மேஜையிலுள்ள முப்பரிமாண கண்ணாடியை அது பற்பல “பாமுக்குகளை” முடிவற்று பிரதிபலிக்கத் தக்க விதத்தில் திருப்பி வைப்பார். இம்பிம்பங்களின் பெருக்கத்தில் தன் தற்காலிக இருப்பை மறைந்திடச் செய்வார். இந்த தப்பித்து ஓடும் மனதின் ஏமாற்று வித்தை, வளர்ந்த பின் இவரது சுய அனுபவங்களை பல்வேறு தளங்களில் பிரதிபலித்து பெருக்கி, அவற்றின் இடையறாத முரண் சந்திப்புகளில் மனவிகாசம் அடையும் படைப்பியல் தேடலாக மாறியுள்ளது.
Read More

ஸுஹ்ராவின் நகங்கள்:பஷீரின் இளம்பருவத்து தோழி விமர்சனம்

வருடஙகளுக்கு முன் பஷீரின் இளம்பருவத்து தோழி நாவலுக்கு புதிய காற்றில் நான் எழுதிய விமர்சனம்.




ஸீஹ்ரா ஒரு ஏழை பாக்கு வியாபாரியின் மகள். துறுதுறுப்பான, தைரியசாலியான சிறுமி. மஜீத் ஒரு பணக்கார மரவியாபாரியின் மகன். கனவுகள் நிரம்பிய, சாகசங்கள் புரிய விரும்பும் கொஞ்சம் மக்கான சிறுவன். மஜீத்தும் ஸுஹ்ராவும் மாம்பழங்களை பறிக்கும் போட்டியில் எதிரிகளாக ஆரம்பித்து, பின் மஜீத் தன் பழங்களை அவளுக்காக தியாகம் செய்திட நண்பர்களாகின்றனர். பிறகு கண்தெரியா நியதி ஒன்றின்படி காதலர்களாகின்றனர்.

ஸுஹ்ராவும் மஜீத்தும் பள்ளி கடைசி வகுப்பில் தேர்வடைகிறார்கள். ஸுஹ்ராவின் வாப்பாவின் மரணம் உயர்நிலைப்பள்ளியில் மேற்கொண்டு படிக்க வேண்டும் என்ற ஸுஹ்ராவின் ஆசை நிறைவேறாமல் போகிறது. அவளும், உம்மாவும், தங்கைகளும் ஒற்றை அறையிலான சிறிய வீடு மட்டும் கொண்ட ஏழை அனாதைகள் ஆகின்றனர். மஜீத்தை அவனுடைய பணக்கார அப்பா நகரத்திலுள்ள பள்ளிக்கூடத்தில் சேர்க்கிறார். அவன் புதுச்சட்டை வேட்டி, தொப்பி, குடை சகிதம் பள்ளிக்கு செல்கிறான். மஜீத் யார் கருத்தையும் மதிக்காத “சர்வாதிகாரியான” அப்பாவுடன் சண்டையிட்டு வீட்டிலிருந்து வெளியேறுகிறான். நகரம் சென்று, பல வருடங்கள் கழித்து பணமில்லாமல் ஒட்டைக் காலணாவாக ஸுஹ்ராவை மணக்கும் ஆசையுடன் சொந்த கிராமம் திரும்புகிறான். நிலைமை அங்கே தலைகீழாக உள்ளது. வாப்பாவின் சொத்து முழுவதும் கடனில் மூழ்கிப் போயிருந்தது. வாழ்ந்து கொண்டிருந்த வீடு கூட அடமானத்தில். சகோதரிகள் வளர்ந்து திருமண வயதில். எல்லாவற்றிற்கும் மேலாக ஸுஹ்ராவுக்கு நகரத்திலுள்ள கசாப்புக் கடைக்காரனுடன் இரண்டாம் தாரமாக திருமணம் முடிந்திருந்தது. கணவனின் சித்திரவதையால் பல் உடைபட்டு, கன்னங்கள் ஒட்டி மெலிந்து வெளிறிப் போய் அவள் சொந்த ஊர் திரும்புகிறாள். மஜீத்தும், ஸுஹ்ராவும் ஊரார்களின் அதிருப்தியைப் பொருட்படுத்தாமல் இணைகின்றனர்.

தங்கைகளின் திருமணத்திற்கு பணம் வேண்டும். அதற்காக பொருள் திரட்ட மஜீத் மீண்டும் நகரம் செல்கிறான். ஊனமுறுகிறான். இருக்கும் வேலை அதனால் பறிபோகிறது. தன் நிலையை வீட்டிற்கு தெரிவிக்காமல் உணவுவிடுதி ஒன்றில் பாத்திரம் கழுவும் வேலை செய்கிறான். ஸுஹ்ராவின் மீதான காதல் அவலத்தின் உச்சத்திலும் வாழ்வை இனிக்கச் செய்கிறது. “எல்லோரும் தூங்கிய பிறகு மஜீத் ஸுஹ்ராவிடம் ஏதாவது பேசுவான். அவளது இருமல் ஒலி காதில் விழும்...”. “ஸுஹ்ரா, இப்போ நீ எப்படி இருக்கே? நெஞ்சு வலி இருக்கா?” என்று கூறியவாறு பாத்திரங்களைப் பார்ப்பான். ஸுஹ்ராவை எப்போது பார்ப்பது? உம்மாவின் கடிதம் வருகிறது. ஸுஹ்ராவின் மரணத்தை அறிவித்து, அதன் வீச்சத்துடன் எங்கும் நிரம்புகிறது. கடிதத்தைப் பற்றிய விரல்களெல்லாம் துக்கத்தின் கறை, பிறகு உடம்பெல்லாம்... அதிர்ச்சியாகி உறைந்து நிற்கிறான். ஆனாலும் பெருந்துயரின் மத்தியிலும் இப்போது கூட ஒரே ஒரு ஆசை மிச்சம் உள்ளது. அது கூட ஸுஹ்ரா பற்றியதுதான்.

ஆண் பெண் உறவு பற்றிய ஆழமான புரிதல்களை உள்ளடக்கிய படைப்பு வைக்கம் முஹம்மது பஷீரின் “இளம்பருவத்துத் தோழி” ஸுஹ்ரா “பாறையைப்” போன்ற, “நீளமான கூர்மையான” நகங்களுடைய சிறுமி. துடுக்குத்தனமும், தைரியமும் நிரம்பிய குழந்தை. தன்மானம் மிகுந்தவள். மிகவும் பிடித்த மாம்பழத்தை மஜீத்திடமிருந்து கெஞ்சி வாங்க ஒப்புக் கொள்ளாத நெஞ்சுரம் கொண்டவள். மாமரத்தில் எறும்புகளுக்கு அஞ்சாமல் ஏறி பழங்கள் பறித்து அவளுக்குத் தந்தும், பல பொய்கள் சொல்லியும் மஜீத் அவள் மனதை இளகச் செய்கிறான். ஏற்றத் தாழ்வுகளை ஏற்காத, பயமற்ற ஸுஹ்ராவின் சுதந்திர மனதை தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருகிறான். அஞ்சாமல் திமிறிச் செல்லும் சிறுமி ஸுஹ்ராவின் குழந்தை மனம் மஜீத் மீதான அன்பால் வலுவிழந்து, அவனது ஆண் மனதிற்கும், நட்பிற்கும் தன்னை ஒப்புவிக்கிறது. மஜீத் மீதான அன்பு முதிர ஸுஹ்ரா என்னும் அடங்காபிடாரி சிறுமி, சிறுகொடுக்கு அமரும் குருவி போல், மலரினும் மெல்லிய பெண்ணாக வளரத் தொடங்குகிறாள். ஆனால் மஜீத்தின் குணாதிசியங்களை இவ்வுறவு குறிப்படும்படி மாற்றவில்லை. மஜீத் ஒரு முரட்டு சாகசக்கரானாகவே தொடர்கிறான். கட்டுக்கடங்காத பெண் மனதை ஆண், தன் தந்திரங்களால், விதிக்கப்பட்ட வரைமுறையினுள் செயல்படும்படி கட்டுப்படுத்துவதை பஷீர் மிக நுட்பமாக, எளிமையாக, நகைச்சுவை ததும்ப பதிவு செய்கிறார்.

ஸுஹ்ராவின் நீண்ட நகங்கள் அவளது அடிப்படையான, கட்டுப்பாடுகளை ஏற்காத, களங்கமற்ற குழந்தை மனநிலையின் குறியீடு. மஜீத் மீது கோபம் வரும் போதெல்லாம் அவள் அவனை ரத்தம் சுண்டும்படி கிள்ளுவாள். இதிலிருந்து தப்பிக்க அவன் கெஞ்சலாக இரக்கம் ஏற்படும் படி பேசி அவளது நகங்களை வெட்டி விடுகிறான். அதன் பின் மிகுந்த குதூகலமும், வெற்றிக்களிப்பும் அடைகிறான். நகங்கள் வெட்டப்பட்ட ஸுஹ்ரா அச்சுறுத்தல்களற்ற மெல்லியள் ஆகிறாள். அடுத்தமுறை, ஆத்திரம் பொங்க அவள் கிள்ளும்போது மஜீத் நக்கலாக “வலிக்கவில்லை சுகமாகவே உள்ளது” என்கிறான். ஏமாற்றமடையும் ஸுஹ்ரா மனம் வெடிக்க தேம்பி அழுகிறாள். பெண் வாழ்வின் ஒரு திருப்புமுனையை பஷீர் இங்கு படம் பிடிக்கிறார். ஆதிகாலம் முதற்கொண்டே பெண்களை இப்படி ‘வழிக்கு கொண்டு வந்துவிட்ட’ பிறகு வாழ்க்கைத் துணையாக்கி இருக்க வேண்டும்.

“இனியும் கிள்ளு, எனக்கு நல்லா சுகமாத்தான் இருக்கு”

“அப்படின்னா நான் கடிப்பேன்” என்கிறாள் ஸுஹ்ரா.

வேறுவழியில்லாமல் மஜீத் ‘குர்-ஆன்’ மீது சத்தியம் செய்தான்.

“முப்பது யூதர்கள் உள்ள முஸ்ஹஃப் மேல் சத்தியமாகச் சொல்றேன். .” மஜீத்தின் தங்க மாளிகையின் வருங்கால எஜமானியாகிய “ராஜகுமாரி கடிக்கக் கூடாது” ஆணாதிக்கத்தின் சாயல் மதத்திலும் படிந்து கிடப்பதை பஷீர் மெல்லிய கிண்டலுடன் சுட்டிக் காட்டுகிறார்.

சமூகம் தன் ஒழுக்கம் மற்றும் மத நெறிகளின் வாயிலாக ஸுஹ்ரா போன்ற சுதந்திர மனம் கொண்ட பெண் குழந்தைகளின் இயல்பான வன்முறை மனோபாவத்தை மழுங்கடிக்கிறது. பொருளாதார உற்பத்தியில் பெண்கள் நேரிடையாய் பங்கேற்கும் இன்றைய சூழலில் இந்நிலை சற்றே மாறிவிட்டிருக்கிறது. நான்கு சுவர்களுக்குள் ஆணுலகம் தரும் ‘பாதுகாப்பு’ இல்லாமல் ஆகிவிட்டதால், வீட்டை விட்டு வெளியுலகம் சென்று வேலை செய்யும் பெண்கள் தற்காப்பு கலைகள் பயில்வதன் மூலமும், ஆணுடைகள் அணிவதன் வாயிலாகவும் தங்களது வன்முறையை, வலிமையை குறிப்பாய் உணர்த்தி, தற்காப்புத் திறன் தங்களுக்கு உண்டு என்று சொல்ல விழைகின்றனர். ஆனாலும் பெண்களின் இந்த அணுகுமுறை மாற்றம் சிறிய அளவிலேயே அங்கீகரிக்கப்பட்டு, பயனுள்ளதாகிறது இன்றை சூழலில்.

இந்நாவலில் வரும் மாமரம்; உடல் வலிமையாலும், வீரத்தாலும் மட்டுமே சாத்தியப்படும் சாதனைகளின் குறியீடு. “அவன் (மஜீத்) ஊரிலுள்ள எல்லா மாமரங்களிலும் போய் ஏறுவான். மரங்களின் உச்சியிலிருக்கும் கிளைகளைப் பிடித்துக் கொண்டு இலைகள் வழியாகப் பரந்து கிடக்கும் உலகைப் பார்ப்பதில் அவனுக்கு அப்படியொரு விருப்பம். வானத்தின் விளிம்பைத் தாண்டி இருக்கும் உலகங்களைப் பார்க்க வேண்டும் என்று தணியாத வெறி அவனுக்கு இருந்தது. கற்பனையில் மூழ்கியவாறு அவன் மரத்தின் உச்சியில் நின்று கொண்டிருக்கும்போது மரத்திற்கு அடியிலிருந்து ஸுஹ்ரா அவனைப் பார்த்துக் கேட்டாள்:

“மக்கா தெரியுதா பையா?”

“மக்காவைப் பார்க்கலாம்... மதீனாவின் பள்ளி வாசலையும் பார்க்கலாம்...”

வாழ்க்கைச் சூழல் தரும் நெருக்கடிகளை விலக்கி அனுபவங்களை, அறிவை, திறமையை எவ்வழியிலேனும் துணிவுடன் விரிவுபடுத்தும் வாய்ப்புகள் சமீபகாலம் வரை ஆண்களுக்கு மட்டுமே உரித்தானதாய் இருந்துள்ளனஎன்னுடன் தற்போது பணிபுரிந்து வரும் முஜீப் “எங்க குடும்பத்திலேயே பொம்பளைங்க வேலைக்கு போறது இழிவா நெனைக்கிறோம். ஆம்பிளைங்க சம்பாதிச்சிட்டு வாறத வச்சு அவுங்க குடும்பம் நடத்தினாப் போதும்” என்று இமைகள் படபடக்க சொல்கிறார். சொல்லும்போது அவர் குரல் நடுங்குகிறது. பெண்ணியம் வலுப்பெற்று வரும் இக்காலகட்டத்தில் பிடுங்க முடியாமல் மண்ணுள் புதைந்து கிடக்கும் ஆணாதிக்க வேர்களின் சான்று அவரது கருத்து. ஒருநாள் மக்கப் போவது உறுதியாகத் தெரிந்திருந்தும் வலிமையாய் ஆழப் பதிய முயலும் இத்தகைய வெட்டப்பட்ட வேர்கள் தமிழகம் முழுவதும் உள்ளன. பொருளாதார வலிமை வாழ்வியல் சுதந்திரத்தை பெண்களுக்கு ஓரளவுக்கு வழங்கியுள்ளது. ஆனாலும் ஓரளவு விடுதலை பெற்ற பெண்கள் மேற்தட்டு வர்க்கத்தை சேர்ந்தவர்கள் என்பதை இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும். முஜீப் கூட பிரியங்கா காந்தி பிரதமராவதை “இழிவாக” நினைக்காமல் ஆதரிக்கிறார் என்பது அதிகாரமும், பொருளாதார வலிமையும் பெண்கள் தங்களது முழுவிடுதலைக்காக கையிலெடுக்க வேண்டிய ஆயுதங்கள் என்பதை மிகத் தெளிவாக உணர்த்துகிறது. நேர்மாறாக, நம் முந்தைய நூற்றாண்டின் பெண்கள் மாமரத்தின் கீழ்நின்று “மக்கா தெரிகிறதா” என்று ஏக்கத்துடன் கேட்கும் ஸுஹ்ராவைப போன்று வீட்டு ஜன்னல் வழியாக மட்டுமே உலகத்தை ஸ்பர்சித்து வாழ்ந்து வந்துள்ளனர் என்பது நெஞ்சை உறுத்தும் உண்மை. ஸுஹ்ரா அவர்களுள் ஒருவள்.

உடல்ரீதியான வீரசாகசங்கள் செய்ய முடியாவிட்டாலும் கணக்குப் பாடத்தில் மிகவும் திறன் கொண்டவளாக ஸுஹ்ரா விளங்குகிறாள். நேர்மாறாக, மஜீத் கணக்கில் மக்கு. ஸுஹ்ராவின் சிலேட்டை பார்த்து எழுதி கணக்கு ஆசிரியரிடமிருந்து அடிவாங்காமல் தப்பிக்கிறான். இதனால் உருவாகும் வெட்கக்கேட்டை சமன் செய்ய, கேலி செய்யும் ஸுஹ்ராவின் வாயை அடைக்க “ராஜகுமாரி” என்று அழைத்து அவளது வெட்டப்பட்ட நகங்களை நினைவு படுத்துகிறான். இத்தகைய ஆண் பெண் முரண்நிலைப் போராட்டங்கள் இந்நாவலின் மையச் சரடுகளுள் ஒன்று.

வறுமை நமது வாழ்வியல் கோணத்தை திருப்பிப் போடும் திறனுடையது. வாழ்வில் நிலைகொள்வதே தொடர் போராட்டமாகும் போது ஆளுமை முரண்பாடுகள், அந்தஸ்து, ஆணவம், படிநிலைப் பாகுபாடுகள் தேய்ந்து முக்கியத்துவம் இழக்கின்றன. ஒருவாய்ச்சோறும், தலைக்கு மேல்கூரையுமே கிடைக்கும் என்ற நிலையில் ஸுஹ்ராவுக்கும், மஜீத்துக்கும் வாழ்வின் எளிய தருணங்களே இனிக்கத் தொடங்குகின்றன.

உடல் தளர்ந்து, பொருளற்று போனபின், மஜீத்துக்கு ஆசைகள் கொஞ்சம்தான். அடங்கி தகிக்கும் கனல் போன்ற ஆசைகள்: தங்கைகளின் மணத்திற்கு பொன் சேர்க்க வேண்டாம்; வீட்டின் மேலுள்ள கடன் தீர்க்க வேண்டாம்; ஸுஹ்ராவை ஒருமுறை பார்த்தால் மட்டும் போதும். ஸுஹ்ராவுக்கும் அப்படித்தான். வாழ்க்கை இருவரது உச்சந்தலையில் மிதித்து அழுத்த அழுத்த அவர்களின் உறவு மேலும் மேலும் முதிர்கிறது. இன்னபல ஆசைகள் ஓசையற்று உதிர ஆழமாய் பரஸ்பர நேசம் இருவருள்ளும் முதிர்ந்து கனிகிறது. ஸுஹ்ரா மரணமடைந்த பின், முன்பு தான் ஊரைவிட்டு நகரத்திற்கு இரண்டாம் முறையாய் புறப்படும் போது அவள் வாசலில் நின்றவாறு சொல்லாமல் மறைந்த ரகசியம் என்னவென்று மஜீத்துக்கு தெரிந்தால் மட்டும் போதும் இப்போது. மஜீத், ஸுஹ்ராவின் உறவு பரஸ்பர போட்டிகளின், முரண் ஆளுமை மோதல்களின் உலகிலிருந்து, வானுயர் கனவுகளின் தளத்திலிருந்து கருணையின், அக்கறையின் முடிவற்ற நிழலை வந்தடைகிறார்கள். கடும்பனி ஊடுருவித் துளைக்கும் மையிருள் இரவில் கூரையற்றுப் போன இருவர் வெளிச்சப் போர்வையொன்றை மூடிப் பகிர்வது போல் காதலின் வெம்மையை எளிமையாகவும், அதே நேரம், உக்கிரமாகவும் பரிமாறிக் கொள்கின்றனர். மஜீத் விரும்பிய தங்கமாளிகை இப்போது ஒருவிதத்தில் இந்த போர்வைதான்; ஸுஹ்ரா தன் நகங்களைப் பற்றி இனி கவலைப்பட மாட்டாள்.

நூல் : இளம் பருவத்துத் தோழி
(நாவல் - மலையாளம்)
ஆசிரியர் : வைக்கம் முகம்மது பஷீர்
தமிழில் - சுரா
வெளியீடு : ராம் பிரசாந்த் பப்ளிகேசன்
106/4, ஜானிஜான் கான்ரோடு,
ராயப்பேட்டை, சென்னை - 600014.
Read More

அடுத்த ஞாயிற்றுக்கிழமை: ஆர்.கே.நாராயண்



ஒவ்வொருவரும் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்க்கும் நாள் ஞாயிற்றுக் கிழமை. நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் என்பதை உணரும் முன்னே திடீரென ஆவியாகி விடும் நாள் அது. எதிர்பார்ப்பின் உவகைகளுடன் கூடிய சனிக்கிழமை மாலையின் உணர்வையும், திங்கள் பற்றிய எண்ணங்களால் கறைபட்ட ஞாயிறு மாலை உணர்வையும் எல்லோரும் அறிவோம். என்ன ஆகிறது அந்நாளுக்கு? பற்பல விஷயங்கள் திணிக்கப்படுகிற நாள் அது - வெளியே அழைத்துச் செல்வதாய் குழந்தைகளுக்கு கொடுத்த வாக்குறுதிகள், சாமான் வாங்க சிறிது நேரம் கடைக்கு அழைத்துச் செல்வதாய் சொன்ன வாக்குறுதி, இது போன்ற மென்மேலும் வாக்குறுதிகள், வாக்குறுதிகள். இருபத்தி நாலு மணிநேரத்தை நாற்பத்தி எட்டாய் நீட்டுவதை விட வேறு வழியில்லை. இதை ஒருவர் கண்டுணரும் முன் முற்பகல் முடிந்து விடும்.

காலையில் கொஞ்சம் தாமதமாய் படுக்கையிலிருந்து எழலாம் என்று முடிவு செய்வோம். ஆனால் ஞாயிற்றுக் கிழமை ஆகையால் சற்று முன்னதாகவே ஆரம்பித்துவிடும் கூச்சல் நம்மை சிரமத்துடன் தானாக எழுந்து விடச் செய்யும். ஒரு மணிநேரம் முன்னதாகவே வானொலிப் பெட்டியை இயக்க அந்நாளுக்காகவே காத்திருந்த அண்டை வீட்டு வானொலி ஆர்வலர், இயந்திர பாகங்கள் விண்டு தெறிப்பது போல் அலறும் கார், பள்ளிக்கூடம் விடுப்பு என்பதால் ஆனந்த கூச்சலிடும் குழந்தைகள், ஞாயிறு பக்தன் ஒருவன் ஒரு மணி நேரம் அதிகமாய் படுக்கையில் செலவிட திட்டமிடும் போது இவை அனைத்தும் அரங்கேறும் சற்றே எரிச்சலுற்ற மனநிலையில் எழுந்திருப்போம். ஒரு நாளை ஆரம்பிக்க இதுவல்ல நல்ல வழி. இருப்பின் வசீகரத்தை துவக்கத்தில் இருந்தே இது ஒழித்துக் கட்டி விடும். இத்தகைய மனநிலையில் எழுந்த பின் நல்ல வாழ்க்கையை எதிர்பார்ப்பதில் பயனில்லை. அதை அப்படியே ஏற்றுக் கொள்வதே நலம்; அதாவது நல்லவொரு ஞாயிற்றுக் கிழமை ஏறத்தாழ நாசமாய் போய்விட்டது.

அடுத்து சில விஷயங்களை கவனிக்கத் தொடங்குவோம். மற்ற நாட்களில் இது போன்ற நுண்ணாய் களுக்கும், விசாரணைகளுக்கும் நமக்கு நேரமே வாய்ப்பதில்லை. எல்லா வேலை நாட்களிலும் மிக மென்மையானவராகவும், ஞாயிற்றுக் கிழமை மட்டும் அப்படியே ஒரு பல்டி அடித்து விடும் ஒரு நபரை எனக்குத் தெரியும். அவர் கொடியவராகவும், சமாளிக்க முடியாதபடியும் மாறுவார். வீட்டில் அனைத்துமே கோளாறாய் இருப்பதைப் பார்ப்பார். இவர் பொருட்களை தன் கையாலே பழுது பார்க்கும் விருப்ப வேலை கொண்டவர். ஞாயிற்றுக் கிழமை வேலைகளுக்காக மிதமிஞ்சிய நிகழ்ச்சி நிரல் ஒன்றை அவர் தயாரிப்பார். படம் ஒன்றை மாட்டுவது, ஒழுகும் குழாயை பழுது செய்வது, வானொலியின் கிறீச் ஒலியை நிறுத்துவது அல்லது கை கடிகாரம் அல்லது மிதிவண்டிக்கு எண்ணையிடுவது ஆகியவை ஞாயிற்றுக் கிழமைக்கான வேலைகள்.

வாரம் முழுக்க ஞாயிற்றுக் கிழமைக்கான வேலைகள் பற்றி மானசீகமாய் குறிப்பெடுத்தவாறு இருப்பார். அவர் போக்கிலே சென்றாரானால், அவர் நள்ளிரவு வரை மட்டுமல்ல திங்கள் காலையின் ஒரு பகுதியும் உழைக்க வேண்டி இருக்கும். ஆனால் இந்த கடினமான செயல்முறைத் திட்டத்தை ஒரு போதும் முழுமையாய் அவரால் நிறைவேற்ற முடிந்ததில்லை. அன்றைய முதல் வேலையாய் அவர் ஒரு வானொலிப் பெட்டியையோ அல்லது கைகடிகாரத்தையோ திறந்து, கடவுள் தன் பட்டறையில் அமர்வது போல் குத்திட்டு அமர்வார் என்பதில் சந்தேகமே இல்லை.

“இந்த பிரபஞ்சமே அவனது களிப்புகளின் பேழை” என்றார் ஃபிரான்ஸிஸ் தாம்ஸன், ஷெல்லியைப் பற்றி. இந்த மனிதர் தன் பொம்மைகளுடன் அமர்ந்திருக்கையில் நமக்கு இந்த சித்திரம்தான் நினைவுக்கு வரும்; ஆனால் ஒரு வித்தியாசத்துடன்; ஷெல்லி படைப்பின் ஆனந்தத்தில் தன்னை இழந்து விட்டதாய் கருதப்படுகையில், பல பொருட்கள் காணாமல் போய்விட்டதால் இவராலோ ஏதும் செய்ய இயலவில்லை. அவர் நேசித்துப் பேணிய ஓர் ஆணி, எதிர்காலத் தேவைக்காய் ஒதுக்கி வைத்திருந்த சிறு கயிறு அல்லது கம்பித் துண்டு, விலை மதிப்பற்ற திருகு மரையோ அல்லது செருகு குண்டூசியோ, மேலும் ஒன்று அல்லது மற்றொன்று என்று ஏதேனும் ஒன்று எப்போதும் தொலைந்தவாறு இருக்கும்; இது அவருக்கு பெருங்கோபம் மூட்டும்.

அவரது குழந்தைகளின் எண்ணிக்கையும் தொலைந்து போகும் பொருட்களின் எண்ணிக்கையும் சரிசமமான விகிதத்தில் உள்ளது. இந்த சிடுமூஞ்சிக்கு இவ்விஷயத்தை தற்செயலாய் எடுத்துக் கொள்ளத் தெரியாது. வாரம் முழுக்க குழந்தைகள் பல்வேறு பொருட்களை கையாள்கிறார்கள். பென்சிலை செதுக்க ஒரு பிளேடோ, எதையாவது கட்ட ஒரு கம்பியோ, எதற்காகவோ எதுவோ ஒன்று, மற்றும் பார்க்க அழகாய் இருப்பதால் ஒரு திருகு மரையும், செருகு குண்டூசியும். அவருக்கு கட்டுப்படுத்த முடியாத கோபம் வருகிறது. எல்லாரையும் அழைத்து, வரிசையாய் நிற்க வைத்து விசாரணையை ஆரம்பிக்கிறார். விசாரணையின் முடிவு பயனுள்ளதாகவோ அல்லாமலோ போகலாம். அது கடவுளின் கையில்தான் உள்ளது.

அப்பாவின் பாங்கால் கவரப்படும் குழந்தையொன்று தன் கொள்ளைப் பொருளை ஒருவேளை திருப்பித் தந்து விடும்; மற்றொரு குழந்தை நல்ல பெயர் வாங்க அப்படிச் செய்யலாம். அல்லது அவை தங்கள் பொக்கிஷங்களை விட்டுத் தராமல் முரண்டு பிடிக்கலாம். பெட்டியில் தன் பொம்மைகளுடன் இருக்கும் அம் மனிதர் நிச்சயம் எரிச்சல் உற்றுள்ளார். அவரது சந்தேகம் உசுப்பப்பட்டு, தனது அனைத்து இழப்புகளையும் கணக்கிட ஆரம்பிக்கிறார். அவசரமாய் எழுந்து நிலையடுக்குகளைத் திறக்கிறார். தற்போது “அது எங்கோ” அல்லது “அதற்கு என்னாயிற்று?” போன்ற கேள்விகள் வேறுபடும் அளவுகளிலான எரிச்சலுடன் வீடெங்கும் முழங்கும். ஆனால் ஜெஸ்டின் பைலட்டினுடையது போல் இக் கேள்விகளுக்கும் பதிலற்று அழிவதே விதி. நம்மால் முடியுமெனில் இவற்றுக்கு பதிலிறுக்கலாம். வேறு யாரும் எப்போதும் பாத்திராத அந்த சுத்தியல் எங்கே போயிற்று என்று அவரை விட அதிகமாய் பிறருக்குத் தெரியாது.

எதற்கும் உதவாத ஒரு உலகில் வாழ்கிறோம் என்று அவருக்குப் புரிய வருகிறது. தன் கேள்வியை பொதுப்படையாய் கேட்டாலும், வீட்டின் உட்பகுதியில் பரபரப்பாய் வேலை செய்யும் மனைவியையும், தங்கள் தந்தையின் வெறியெழுச்சியை களிப்புடன் வேடிக்கை பார்த்து, தப்பியோடும் வாய்ப்புக்காக மட்டுமே காத்து நிற்கும், குழந்தைகளையும் நோக்கியே அவற்றை ஏவுகிறார். ஏழு வயதான, தப்பியோடும் இயலுணர்வு உடைய, குழந்தை ஒன்று வெளிப்படையான மாசின்மையுடன் இந்த இந்த பொருள் இன்ன இன்ன இடங்களில் இருக்கலாம் என்றும், அவற்றை அவர் சென்று தேடிப் பார்க்கலாமே என்றும் யோசனை சொல்கிறது. இந்த சாதுர்யத்திற்கு பெருங்கோபம் மிக்க அந்த மனிதர் பலியாகிறார். எந்த தாவீதும் கோலியத்தை இவ்வளவு எளிதாய் தோற்கடித்ததில்லை. தனக்கு என்ன நேர்ந்ததென்று அவர் உணரும் முன்பே, அந்த குட்டிப்பையன் மறைந்து விடுகிறான்; மேலும் வரிசை ஒருமுறை உடைக்கப்பட்டு விட்டால் அது நிரந்தரமாய் உடைந்து விட்டதாய் பொருள்.

அதே குழந்தைகள் கவலையற்று அடுத்த வீட்டில் விளையாடுவதை அவர் காணும் வரை வேறெதிலாவது, ஒருவேளை மேஜை மீதுள்ள ஒரு புத்தகத்திலோ, இதழிலோ மூழ்கிப் போய் எல்லாவற்றையும் சற்று நேரம் மறந்து விடுகிறார். அசிங்கமாய் ஜன்னல் வழி கத்தி அவர்களை வீட்டுக்குத் திரும்ப அழைக்கிறார். அவர்கள் அணி வகுத்து திரும்புகிறார்கள்; அந்த மனிதர் தன் தாக்குதலை அவர்களது புத்தகங்கள் மற்றும் பள்ளி வேலை பற்றி விசாரித்து ஆரம்பிக்கிறார்; இது நிச்சயமாக ஒரு கொடுமை விருப்ப நோக்கமே. இது அவர்களது கல்வி முன்னேற்றம் மற்றும் போக்கு பற்றிய விசாரணை நோக்கி இட்டுச் செல்லும். தன் குழந்தைகள் சரியான முறையில் வளர்ச்சி அடையவில்லை என்பதை அவர் கண்டுபிடிப்பார்; இதுவரை அவர்கள் இத்தனை மோசமாய் வளர்ந்து வருவதை அவர் கவனித்திருக்கவில்லை - இது வீட்டின் உட்பகுதியிலிருந்து ஆவேசமாய் மறுக்கப்படும் ஒரு மறைமுக குறிப்பீடு. குழந்தைகளை சற்று நேரம் கொடுமைப்படுத்தி விட்டு, சீக்கிரமே அவர் சோர்ந்து விடுகிறார். அப்போது பாதி ஞாயிறை மீட்க முடியாவண்ணம் இழந்து விட்டதை கண்டறிகிறார். இன்னும் சில மணி நேரங்கள் மட்டுமே பகலொளி எஞ்சி உள்ளது.

மதிய உணவு அருந்தி, இனிமையான மனநிலையில் அவருக்குத் தான் முன்பு செய்த அந்நாளுக்கான பல வாக்குறுதிகள் ஞாபகம் வருகின்றன. ஒரு பூனைத் தூக்கத்திற்கு பிறகு தன் கடமைப் பொறுப்புகளை நிறைவேற்றுவதாய் உறுதி மேற்கொள்கிறார். ஓய்வுக்குப் பின் எழுந்த போது, தன் குடும்பத்தை அன்று வெளியே அழைத்துச் செல்ல முடியாது என்பதை உணர்கிறார். பெரிதும் சிதைக்கப்பட்டு விட்ட தன் ஞாயிற்றுக் கிழமையின் மிச்சத்தை பேருந்து நிறுத்தங்களில் அவர் நிச்சயம் செலவழிக்க மாட்டார். முன்னொரு முறை, குழந்தைகள் பசியில் அலற இரண்டு மணி நேரங்கள் பேருந்து நிறுத்தமொன்றில் செலவழிக்க நேர்ந்ததும், இரவில் வீட்டுக்கு தளர்நடையிட்டு வந்து சேர்ந்ததும் அவருக்கு ஞாபகம் வருகிறது. அந்த நினைவில் நடுக்கம் கொண்டு, திடீரென கத்துகிறார், “தயவு செஞ்சு, இன்னிக்கு நாம் வீட்டிலேயே இருப்போம். உங்களை எல்லாம் அடுத்த ஞாயிற்றுக் கிழமை வெளியே கூட்டிக்கிட்டு போறேன்”.




Read More

"யாரது பேசுவது?"

இன்றிரவு நிலவின் கீழ் நூலில் என் முன்னுரை


இந்த ஹைக்கூக்கள் மொழியாக்கத்தின் ஆதியில் ஸ்காட்லாந்துக் கவிஞர் ஆலன் ஸ்பென்ஸ் மட்டுமே இருந்தார். பிறகு 2003-ஆண்டின் ஓர் பனி இரவும்; சில்வண்டுகள் நிலவொளி சூழ்ந்த கல்லூரி விடுதியின் இடுங்கின அறையும். கட்டுப்பாடின்றி, காலம் போவது அறியாமல், வரிசை கிரமமற்று பின்னெப்போதும் வாய்க்காத மனஒருமையுடன் ... ஸ்பென்ஸின் "இதயத்தின் பருவங்கள்" தொகுப்பிலிருந்து எனக்குப் பிடித்த 40 கவிதைகளை தமிழில் எழுதினேன். விடிகாலைதான் நிறுத்தினேன். கண் எரிந்தது. உடல் சூடு தலையில் ஆவியாகியது. ஒருக்களித்த கதவைத் திறந்து வெளிவந்தேன். வராந்தா. தரையில் தேங்கின பௌர்ணமி வெளிச்சம். கால்வைக்க கூசியது. திண்டு ஓரம் ஒரு தவிட்டு நிறக் குருவி வந்தமர்ந்து எதிரில் தோட்டத்தை கவனித்தது. என் நிழல் நீட்சி குருவி மீது கவிழ்ந்தது. குருவி அதை பொருட்படுத்தவில்லை. என் பிளாக்கில் உள்ள பூட்டியிருந்த அறைகள் சிலவற்றில் மட்டும் வியாதிஸ்தன் போல் ரேடியோ கசிந்தது. அலாரங்கள் சிணுங்கி ஓய்ந்தன. தோட்ட நடுவில் இருந்த சிறு குளக்கரையில் சென்று அமர்ந்து கால்களை ஊறப்போட்டேன். எனக்குள்ளிருந்து மற்றொரு மனம் இறங்கிக் கரைந்தது. பிறகு தலை கிறுகிறுத்தது. ஒரு சில ஹைக்கூ கவிதைகளை தமிழில் படிக்கும் விருப்பத்தில் ஆரம்பித்து ஒரு பிசாசால் இரவெல்லாம் வழி நடத்தப்பட்டிருக்கிறேன்.


அப்போது எனக்கு எழுத்தாளத் திட்டங்கள், பிரசுர நோக்கம் இல்லை. இளவெயில் மூஞ்சியில் அடிக்க தூங்கும் போது இரவை வீணடித்தக் கோபம். புத்தகத்தை கட்டில் கீழே வீசினேன்: "அங்கேயே கிட". அன்று மாலையே பிரிட்டிஷ் கவுன்சில் நூலகத்தில் அப்புத்தகத்தை அப்பாடா என்று திருப்பி கொடுத்தேன். தமிழாக்கத்தை மீண்டும் படித்த போது அதே பிரியத்தை உணர்ந்தேன். போர்ஹேஸ் என்று கெலியாய் அழைக்கப்பட்ட நண்பர் ஆறுமுகம் சில கவிதைகளை படித்து சிலாகித்தார். இந்த புத்தகத்தின் சிறந்த மொழியாக்கப் பகுதிகளில் பல அன்றிரவு எழுதியவை. ஆனாலும் எழுத்து வாதை வேண்டாம் என்பதில் உறுதியாக இருந்தேன்.


நீங்கள் புழுவிடம் பேசியதுண்டா? 2006-ஆம் ஆண்டு. நெருக்கமான ஒருவர் என்னிடம் அப்படி பெசினார், ஒரு சுடுசொல்லை கூட உதிர்க்காமல், சிறிதளவு வெறுப்பு காட்டாமல். மூச்சுமுட்டல் தாங்காமல் குறும்பேசியில் ஒவ்வொரு தொடர்பு எண்களாக புரட்டினேன். என் குருநாதர் ஜெயமோகன் லைனில் வந்தார். உணர்ச்சி மேலிட்டதில் முதல் 20 நிமிடம் என்னால் பேச முடியவில்லை. கட்டுப்படுத்த முயன்றதில் அதிகம் அழுதேன். "என்ன ஆச்சு அபிலாஷ்?" திரும்பத் திரும்பக் கேட்டபடி இருந்தார். வள்ளியாற்றங்க் கரை தாண்டி தக்கலையில் அலுவலகம் நோக்கி நடந்து சென்று கொண்டிருக்க வேண்டும். "ஏதும் கவலைப்படாதீங்க சென்னையில எனக்கு நண்பர்கள் இருக்காங்க ... எதுன்னாலும் பார்த்துக்கலாம்!". அலுவலகம் சென்றதும் லேண்ட் லைனில் திரும்ப அழைத்தார். ஒரு மணி நேரம் பேசினோம். "என்னை யாரும் மதிப்பதில்லை. பீத்துண்டம் போல் நடத்துகிறார்கள்". உடனுக்குடன் அவமானப்படுவது ஒருவித தோல் வியாதி என்று அப்போது தெரியாது. ஜெயன் ஆதரவு வார்த்தைகள் தரவில்லை. மாறாக என்னை பழித்தார். "கடந்த நாலு வருடங்களில் என்ன எழுதினாய்? இந்நேரம் இலக்கிய தளத்தில் உன்னை நிறுவிக் கொண்டிருக்க வேண்டும். வீணடித்து விட்டாய். உனது இளமையில் காசையும், காமத்தையும் மட்டும் துரத்தினால் நாற்பது வயதுக்கு மேல் கடுமையான வெறுமை, இழப்புணர்வு மேலிடும். எழுத்தில் உன்னிப்பாக ஈடுபட்டால் லௌகீக வாழ்வின் அவமானங்களை பொருட்படுத்த மாட்டாய் "

" உம் "




பிறகு அவர் என்னை மனுஷ்யபுத்திரனுடன் ஒப்பிட்டது பிடிக்கவில்லை. ஒரு உடல் ரிதியான காரணம் இருந்ததாய் பட்டது. "உன் வயதில் மனுஷ்ய்புத்திரன் இலக்கியத்தில் ஒரு புயலாக நுழைந்து விட்டிருந்தார். இன்று தீபாவளி, பொங்கலுக்கு பேட்டி கொடுக்கும் அளவு வளர்ந்திருக்கிறார்". குரல் குழைந்தது. "இன்னொன்று சொல்கிறேன், ரகசியமாக வைத்துக் கொள் ..."

" உம் "

"மனுஷ்யபுத்திரன் ஒரு பயங்கர பிளேபாயாக வாழ்கிறார்"


கடைசியாய் சொன்னது பிடித்திருந்தது. எனக்கு ரகசியங்களை போற்றத் தெரியாதென்பது அப்போது தெரியாது.


" ஓ ..."


சப்புக்கொட்டினேன்: எப்படியாவது இலக்கிய உலகில் நுழைய வேண்டும். படைப்பு பழக்கம் விட்டுப் போயிருந்தது. எதை எழுத? ஆனால் அந்நொடியிலிருந்து எனக்குள் எதுவோ புகுந்தது. அவசியமற்ற எண்ணங்கள், கனவுகள், பரிதவிப்பு. புத்தக விழா வந்தது. அங்கு ஸ்டால்களை விலகலோடு மேய்ந்த போது, வயிற்றுக்குள்ளிருந்து தீ விரல் நுனிகளில் கனன்றது. சுஜாதாவின் ஒரு சிறுகதையில் மென்பொருள் இளைஞன் அடிக்கடி அலுவலக கழிப்பறைக்கு சென்று ஆடை கழற்றி வைத்துக் கொண்டு, கீழ் நிலை ஊழியப் பெண் முன் போய் கம்பீரமாய் நின்று "என் பென்சில் எங்கே ?" என்று கத்துவான். மௌனமாய் புத்தகங்களைக் கடந்து சஞ்சரித்தபடி நான் அன்று கேட்டேன் "என் புத்தகம் எங்கே?".


பூனை மயிர்கள் போல் ஸ்பென்சின் மொழியாக்கக் கவிதைகள் என்னுடனே இருந்தன. "இதயத்தின் பருவங்கள்" கூட பிரிட்டிஷ் கவுன்சில் நூலகத்தில் எளிதாக கிடைத்தது. முதல் மொழியாக்கத்தில் விடுபட்ட கவிதைகளில் எளிதானவற்றை இரண்டு வாரங்களில் முடித்தேன். பல கவிதைகளுடன் மாதங்களாய் போராடினேன். அப்போது இரண்டு தவறுகள் செய்தேன். வாசிப்பு பரபரப்பில் ஏதாவது ஒரு வார்த்தையை தமிழாக்க தவறி விடுவேன். பிறகு படிக்கும் போதே புலனாகும். கவித்துப பாதிப்பை மறுஆக்கம் செய்யும் மிகை-ஈடுபாட்டில் மூலக் கவிதையின் கண், மூக்கை சற்றே மாற்றி ஒட்டி விடுவேன். நுட்பமாய் கவனித்தால் இத்தொகுப்பில் கூட ஸ்பென்சின் கவிதைகளில் அப்போதைய அறுவை சிகிச்சை சிதைவுகளை காண முடியும். தற்போது இக்கவிதைகளை திருத்தினால் ஆரம்ப மொழியாக்கத்தின் ஆதார குணமொன்று காணாமல் போவதாய் பட்டதால் அப்படியே விட்டு விட்டேன். பின்னாளில் குறைந்த பட்ச சுதந்திரத்துடன் வார்த்தைக்கு வார்த்தை மொழியாக்குவதே ஆரோக்கியம் என்று புரிந்தது. ஆனால் அன்றைய மொழியாக்க உத்வேகத்திற்கு இப்போதுள்ள நிதானம் ஈடல்ல. அன்று ஸ்பென்சின் வரிகள் கார்ப்பரேட் உலகின் எந்திர இறுக்கத்திலிருந்து என்னை தளர்த்தின; நகரத்தின் உக்கிரத் தனிமையில் தோள் அணைத்தது. மொழியாக்க உவகையில் அரையடி அதிக உயரத்தில் நடப்பேன். என் காதலி காயத்ரி கேட்டாள்: "ஏன் இப்போதெல்லாம் பேச்சு நடுவே மௌனமாக சிரிக்கிறாய்?"

"எழுதுகிறேன் அல்லவா!"

"இதுதான் என்றால் நீ இனிமேல் எழுத வேண்டாம்"


எனக்கு பந்தயம் என்றால் பாதி ஓட்டம் தான். மொத்தத் தொகுப்பையும் பூர்த்தி செய்ய காயத்ரியின் ஊக்கம் காரணம். பிறகு கவிதைகளை வரிசையாக அடுக்கி, திருத்தங்கள் செய்ததும் அவள்தான். அடுத்த புத்தக விழாவில் என் குருநாதரின் ஆதர்ச பதிப்பாளரிடம் சென்று மொழியாக்க கவிதைகளை பிரசுரிக்கக் கேட்டேன். "கவிதைகள் விற்காது, மேலும் நண்பர்களுடையது தவிர நான் வேறு கவிதைகள் பிரசுரிப்பதில்லை" என்றார். அத்தோடு நிறுத்தியிருக்கலாம். "தம்பி என்னை இனிமே பார்க்க வராதீங்க"

"ஏன்?"

"நீங்க தொடர்ந்து வந்தால் எனக்கு உங்கள் ஊனம் மீது இரக்கம் தோன்றி பிரசுரிக்கும் கட்டாயம் நேரும்; அதனால் தான்!". கொஞ்ச காலத்துக்கு எனக்கு எழுத்து, பதிப்பு, புத்தகங்கள் என்றாலே பீதியாகியது. நிச்சயமாய், இதற்கு வெளியுலகின் அவமானமே பரவாயில்லை. நீங்கள் பிணத்துடன் பேசியதுண்டா? ...





உயிர்மையில் எனது கவிதை ஒன்று வெளியானது. ஒரு மாலை ஸ்பென்சின் மொழியாக்கத் தொகுப்பை மனுஷ்யபுத்திரனிடம் காமித்தேன். புரட்டியபடி உதிரியாக படித்தார்.

"ஜென் தோட்டம்

என்னையும்

சேர்த்து"

கண்மூடித் திறந்தார்: "ரொம்ப அருமையான கவிதை ... இக்கவிதைகள் தமிழுக்கு அவசியம் தேவை, நிச்சயம் பிரசுரிப்போம்". அன்றிரவு நான் தூங்கவில்லை. அந்த பதில் போதுமனதாக இருந்தது. ".. என்னையும் சேர்த்து"


அடுத்த வருடம் "உயிரோசை" நிகழ்ந்த போது அதனோடு எனக்கு தொடர்பு கண்ணியானது "இதயத்தின் பருவங்கள்" தான். தொடர்ச்சியாக நவீன ஹைகூ தொடராக நூற்றுகணக்கான கவிதைகள் இன்றுவரை வெளியானதற்கு மனுஷ்யபுத்திரனின் திட்டமும், ஊக்கமும் தான் காரணம். சினிமா, அரசியல் கட்டுரைகள், புனைவுகள் அளவிற்கு தமிழில் கவிதைக்கு வாசகர்கள் இல்லை. பதிப்புத்தொழிலில் தங்க வாத்துக்களுக்குத்தான் முதலிடம் என்றும் இருக்கும். ஆனாலும் கவிதையை வறட்சியிலிருந்து காப்பாற்ற பதிப்பாளர்களிடம் இலக்கியப்பரப்பை விரிவுபடுத்தும் லட்சியவாதமும், பொறுப்புணர்வும் இருப்பது ஆரோக்கியமானது. ஆலன் ஸ்பென்ஸின் ஜென் வழியான அனுபவ உறைதல், ஜாக் கெரவக், ஆலன் கின்ஸ்பெர்க்கின் ஹைக்கூக்களின் எதிர்கவிதை சரடு, சாண்டிகோவின் துறவு நிலை பதிவுகள், பிற உதிரிக் கவிஞர்களின் பல்வேறுபட்ட தினசரி வாழ்வு சார் தருணங்கள் என இக்கவிதைகள் இதுவரை உயிரோசையின் இணைய உலகினோடு பகிர்ந்துள்ள அனுபவங்கள் முற்றிலும் புதியவை, அலாதியானவை. தமிழின் நூல் வாசகர்கள் இக்கவிதைகளுடன் நிகழ்த்த உள்ள உரையாடல், அதிலிருந்து தொடரும் தேடல் பயணம் மிக முக்கியமாக இருக்கப் போகிறது.


மொழியாக்கம் கடந்த ஒன்பது மாதங்களாய் உயிரோசையில் தொடர்ந்து வாராவாரம் எழுதும் வாய்ப்பை எனக்கு பெற்றுத் தந்தது. தூங்கா வாதையுடன் சமரசமும், நட்பும் தொடர்கிறது. பிரசுரம் மீதான வெளிநபரின் புகார்களும், இயலாமைக் கவலைகளும் இப்போது எனக்கு இல்லை. எழுத்து மேலும் பலவித ரசவாதங்ககளை என் மீது நிகழ்த்துகிறது:


தோல் ரொம்பவும் கெட்டியாகி விட்டது. "யாரது பேசுவது? கேட்கவில்லை"
Read More

வலைப்பூவை ஒரு மாதம அப்டேட் செய்யாதது ஏன்?

கடந்த ஒரு மாதமாக வலைப்பூவை புதுப்பிக்க இல்லை. டாட்டா இண்டிகாம் இணைய சேவையை துண்டித்து விட்டு பி.எஸ்.என்.எல் முயன்றேன். அவர்கள் இந்த ஒருமாதமாக என்னை வெறுப்பேற்றி இன்றுதான் இணைப்பு தந்தார்கள். அது போக சிலபல எளிய விபத்துக்களில் வேறு மாட்டிக் கொண்டேன்.

ஒரு விடிகாலையில் நான் எழுதுவது டி.வி பார்ப்பது என்று இரவை ஓட்டி விட்டு தூங்குவதற்காக சென்ற போது விழுந்து விட்டேன். வழுக்கியோ தடுக்கியோ மோதியோ அல்ல. நான் காலில் அணியும் காலிப்பர் எனும் கருவி நான் நடக்கும் போது தன்னிச்சையாக மடிந்தது. முட்டியில் ரத்தக்கசிவு, கால் சுண்டு விரலில் எலும்பு முறிவு. மருத்துவமனை நான் சென்றிருந்த போது களைகட்டியது. பக்கத்தில் சங்கீதக்கச்சேரி. உள்ளே இந்தியா--பாக் கிரிக்கெட் ஓடியது. எலும்பு மருத்துவர் செல்போனில் வைத்தியம் பார்த்தபடியே என் காலைத் திருகிப் பார்த்தார். அவர் டேன் பிரவுனின் தீவிர விசிறி. வேறு நிறைய குப்பை புத்தகங்கள் படித்து வருவதாகவும் சொன்னார். மூன்று வாரங்கள் கட்டாய படுக்கை-ஓய்வு. அடுத்த வாரத்துடன் முடிகிறது.



இரண்டாவது வார ஞாயிறு ஒன்றில் தூக்கக் கலக்கத்தில் ஆவி பறக்கும் காப்பியை குடிக்க தடுமாறிக் கொண்டிருந்தேன். எனக்குள் ஒரு அட்டவணை ஓடிக்கொண்டே இருக்கும். அதை சரி பார்க்க நான் கடிகாரம் எட்டி பார்க்க, கோப்பை கவிழ்ந்து கொதிக்கும் காப்பி என் வெற்று மாரில் கொட்டியது. ”பாவமன்னிப்பில்” சிவாஜி கணேசன் போல் கதறி உருண்டேன். மனைவி வந்து படாரென்று ஒன்று போட்ட பிறகு அடங்கினேன். ஒரு மீடியம் சைஸ் பப்பாளி அளவுக்கு தோல் வெந்து விட்டது. அதே வடிவில் தோல் கருப்பு இன்னும் மாறவில்லை. என்ன நீங்கள் உற்றுப் பார்க்க வேண்டும். சிவப்பாக பிறக்கவில்லை என்று எவ்வளவோ சந்தோஷப்பட்டேன்.
Read More

நவீன ஹைக்கூ மொழியாக்கத் தொகுப்பு "இன்றிரவு நிலவின் கீழ்" வெளியீட்டு விழாவின் போது ...

Read More

வேகப்பந்து வீச்சு: பாரம்பரியமும் மரபியலும்

பலவீனமாக உள்ள இந்திய வேகப்பந்து வீச்சு தற்போதைய ஊடக பரபரப்பாக உள்ளது. இங்கு இந்திய வேகப் பந்துவீச்சின் ஏற்ற இறக்கத்தை ஒரு மீள்பார்வை பார்த்து, வெகப்பந்தை பற்றி பொதுவாக யோசிக்கலாம்.

இந்தியாவுக்கே என்றுமே பிரமாதமான வேகப் பந்து வீச்சாளர்களின் பாரம்பரியம் இருந்ததில்லை. ஆனாலும் திராவிட் தலைமையின் பிற்பகுதியிலும், கும்பிளே தலைமை கீழும், பின்னர் தோனி தலைமையிலும் ஒரு சிறுமறுமலர்ச்சி ஏற்பட்டது. எப்படி? இங்கிலாந்தின் கவுண்டி கிரிக்கெட் ஆடி தன் ஆட்டத்திறனின் உச்சத்தில் திரும்பின சகீர்கானின் கீழ் புதியவர்களான ஆர்.பி சிங், இஷாந்த், பிரவீண், இர்ஃபான், ஸ்ரீசாந்த போன்றோர் ஒரு சிறப்பான போட்டிச்சூழலில் ஆடினர். பந்து வீச்சுக்கு சாதகமான இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா போன்று வேகப்பந்தாளர்களின் சுவர்கத்திலேயே இந்த இளம் வீச்சாளர்கள் இயங்கினர் என்பதை நாம் கவனிக்க வேண்டும். முடித்து விட்டு இந்தியா திரும்பினவர்கள் இங்கோ, இலங்கை, பாக்கிஸ்தான் போன்ற ஆசிய ஆடுதளங்களிலோ சோபிக்கவில்லை. ஏன்?

ஆசியாவில் ஆடுதளங்கள் உறுதியற்றவை, இளகி வெடித்துப் போனவை. புழு அரித்தது போன்ற மைதானத்தின் தரைப்பரப்பில் ஓடும் பந்து எளிதில் வழவழத்தனமையை இழந்து விசுகிறது. இதனால் பத்து ஓவர்களுக்கு பின் நம்மூர்களில் பந்தை ஸ்விங் செய்ய வைப்பது சிரமம். கொளுத்தும் வெயில் வேக வீச்சாளர்களின் ஆற்றலை சீக்கிரமாய் உறிஞ்சி விடுகிறது. இந்தியா, பாக், இலங்ககைக்கும் பயணம் செய்துள்ள ஐரோப்பிய அணிகளின் வேக வீச்சாளர்கள் கட்டுப்பாடுடன் வீசி நெருக்கடி ஏற்படுத்துவதன் மூலம் விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்களே அன்றி சொந்த நாட்டில் போல் யாரும் அவர்கள் இங்கே வேகமாக வீசி தீவிர பாதிப்பை ஏற்படுத்தியதில்லை. நமது ஆடுதளங்களில் சிறக்க ரிவர்ஸ் ஸ்விங் கைவர வேண்டும். பாக் வேக வீச்சாளர்களின் பொதுவான வெற்றிக்கும், உள்நாட்டில் சகீர் சோடை போகாததற்கும் இது காரணம்.

இந்தியாவுடன் ஒப்பிடுகையில் பாக்கிஸ்தானில் உள்ள ஓரளவு ஆதரவான வேக ஆடுகளங்கள், இம்ரான்கான் ஆரம்பித்து வைத்த வேக வீச்சாளர்களின் பாரம்பரியம் மற்றும் பாக்கிஸ்தானியரின் பொதுவான ஆக்ரோசம் ஆகியவை அவர்களது வேகத்துறை கொடுக்காக இருந்ததற்கு காரணம். ஆனால் வாசிம் அக்ரமுடன் அந்த பாரம்பரியம் துண்டிக்கப்பட்டது. வேகத்துறைக்கு தலைமை ஏற்க வேண்டிய ஷோயப் அக்தர் பொறுப்பற்ற விதமாக தன் கிரிக்கெட் தொழில்வாழ்வை அழித்துக் கொண்டது முக்கிய காரணம். இப்போது பாக் அணியின் சிறந்த பந்தாளர் ஒரு சுழற்பந்தாளர் -- அஃப்ரிடி. இம்ரானுக்கு அமைந்தது போல கபில்தேவுக்கு சீடகோடிகள் யாரும் இல்லை. அவருக்கு பின் பத்து ஆண்டுகளாவது வேக வீச்சுத் துறையில் தொடர்ச்சியாக இயங்கி இளைய வீரர்களுக்கு வழிகாட்டியாக, ஒரு தலைமுறைக்கே முன்மாதிரியாக நமக்கு யாரும் கிடைக்கவில்லை. இந்திய வேக வீச்சாளர்களை தாளித்து வறுத்து மசாலா தூவுமுன் நாம் இந்த வெற்றிடத்தை அலச வேண்டும்.

பாரம்பரிய விவாதத்தில் இலங்கையின் இடம் சுவாரஸ்யமானது. இலங்கை வேகவீச்சை தன் குறுகலான தோள்களில் சுமந்த சமிந்தா வாஸ் பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு மேலாக முரளிதரனின் நிழலிலே இருந்து வந்துள்ளார். முரளி மட்டுமே அவர்களது ஆட்டத்தின் அபாயகரமான சாகச அம்சம். பிற வீச்சாளர்கள் எதிர்மறையாக, கட்டுப்பாடாக வீசுவதில் மட்டுமே சிறந்தவர்கள். சமீபமாக இலங்கை கிரிக்கெட் வாரியம் வாஸை கட்டாய ஓய்வு அறிவிக்க கட்டாயப்படுத்தும் அளவுக்கு வசதியாக மலிங்கா, குலசேகரா, மிராண்டா போன்றோர் அணிக்கு வந்த பின்னும், எதிரணியினரை மொத்தமாக வீழ்த்தி ஆட்டத்தை வெல்லும் தன்னம்பிக்கை இவ்வணியின் வேக வீச்சாளர்கள் இன்னும் பெறவில்லை. இதற்கு சிறந்த உதாரணம், சமீபத்திய சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இங்கிலாந்துடனான அவர்களின் ஆட்டம். ஆட்டத்தில் தோல்வியுற்றதும் தலைவர் சங்கக்காரா ஆடுகளம் மோசமானது என்று புகார் செய்தார். உண்மையில் இது தங்களால் வேக ஆடுகளத்தில் சுதாரிக்க முடியவில்லையே என்கிற ஆதங்கம் தான். ஒருநாள் ஆட்ட அணிகளில் இலங்கையின் பந்துவீச்சு துறை வலுவானது. அவர்களது வேக வீச்சாளர்கள் மிகத் திறமையானவர்கள். ஆனால் நெடுங்காலமாக எதிர்மறையாக வீசி வந்துள்ள மனநிலையை இலங்கையால் கைவிட முடியவில்லை. முரளியை தவிர்த்து அப்படியான பாரம்பரியம் அவர்களுக்கு இல்லை. தாக்கி ஆட வேண்டிய சூழலில் பதுங்கவே தேர்கிறார்கள். தலைமுறைகளாய் நீடிக்கும் ஒரு சங்கிலித்தொடர் விளைவிலிருந்து விடுபடுவது எளிதல்ல.

நமது சேம்பியன்ஸ் கோப்பை வெளியேற்றத்துக்குப் பின் பேட்டி காணப்பட்ட பட்டோடி உள்ளிட்ட முன்னாள் வீரர்கள் சில கூற்றுகளை வெளியிட்டார்கள். சாராம்சமாக்: (1) இந்தியாவில் வேக வீச்சாளர்களே இல்லை; (2) நமது வீச்சாளர்கள் காயமடையும் அச்சம் காரணமாக வேகத்தை குறைத்து வருகின்றனர். இரண்டுமே உண்மைதான். ஆனால் இவற்றில் அபாய சமிக்ஞை ஏதும் இல்லை.

பந்து வீச்சை வேகம், மிதவேகம், மிதம் என்று பிரிக்கலாம். இந்த பகுப்பை ஒரு தரவரியையென நாம் கருதக்கூடாது. நம் மீடியா புரியும் தவறு அதுவே. இத்தகைய ஒரு முன்முடிவு நம்மவர்களிடம் இருப்பதாலே சித்தார்த் திரிவேதி, தவல் குல்கர்னி, ஜேசுராஜ் போன்ற அருமையான மித வீச்சாளர்கள் ஒதுக்கப்படுகிறார்கள். இர்ஃபான் பதானிடம் வேகம் போதவில்லை என்று குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. பந்தை "பேச" வைக்க முடியுமானால் எந்த வேகமும் சரிதான். இலங்கை மிதவீச்சாளர் நுவன் குலசேகரா உலக தரவரிசையில் முதலிடத்தை பிடிக்கவில்லையா? முன்னூறு விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்திய ஷோன் பொல்லாக், வாஸ் போன்றோர் 125--128 கிலோ மீட்டர் வேகத்தில் வீசியவர்களே. அதிவேகத்தின் அனுகூலம் வீச்சாளர் மட்டமான பந்துகள் வீசினாலும் பெரும்பாலும் மட்டையாளனுக்கு எல்லைக்கோட்டுக்கு பந்தை விளாசும் அவகாசம் இருப்பதில்லை என்பதே. நடிப்புத் திறன் குறைந்த விவேக் தனது டைமிங், குரல் லாவகம் மூலம் நம் கவனததை திருப்பி விடுவது போன்றது இது. வேகம் அதிகமாக ஆக பந்து "ஊமையாகி" விடும். பிறகு அதிவேகத்தால் அச்சுறுத்தி திணறடித்து தான் விக்கெட்டுகள் வீழ்த்த வேண்டும். காயம் காரணமாக குறைவேகத்தில் வீசி ஷோன் பொல்லாக், வாஸ் போன்றோர் பெரும் வெற்றியை கண்டுள்ளனர். வேகத்தை குறைப்பது ஒரு வீச்சாளரின் தனிப்பட்ட தேர்வுதான். இதை விமர்சிப்பது வர்ணனையாளர்களின் அவல் மெல்லும் அவசரம் மட்டுமே.

இந்தியாவில் ஏன், நம் தலைமுறையிலேயே, உலகில் இரண்டு வேக வீச்சாளர்கள் தான் தோன்றியுள்ளனர்: பிரட் லீ மற்றும் அக்தர். பொதுவாக வேகவீச்சாளர்கள் அரிதான வகை. இந்தியாவில் தோன்றினதே இல்லை. இந்தியர்களின் மெலிதான, குறுகின உடலமைப்பு காரணம் என்று நாம் தாழ்வு மனப்பான்மை கொள்ள வேண்டியதில்லை. வேகப்பந்துக்கு ராட்ச உருவம் தேவையில்லை. இதை ஆஸ்திரேலிய வேக வீச்சாளர் டென்னிஸ் லில்லீ தனது "The Art of Fast Bowling" என்ற நூலில் விளக்குகிறார். வேகவீச்சின் ஆக்கக்கூறுகள் என்ன?

பொதுவாக பயிற்சியாளர்கள் உயரமானவர்களையே வேகப்பந்துக்கு ஊக்குவிப்பார்கள். சிறந்த வேக வீச்சாளர்கள் பலரும் உயரமானவர்களே. ஆனால் சராசரி உயரக்காரர்களான மால்க்கம் மார்ஷல், வக்கார் யூனிஸ் போன்றோரால் எப்படி எகிற விட முடிந்தது? சமீபத்திய இரானி கோப்பை ஆட்டத்தில் (மும்பை vs. ரெஸ்ட் ஆஃப் இந்தியா) இந்த முரண் வெளிப்படையாகவே தெரிந்தது. இரண்டாவது இன்னிங்சின் ஆரம்ப சில ஓவர்களில் அகார்க்கர் மிகக்குறைவான ஓட்டத்தில் 125 கி.மீ வேகத்தில் வீசினார். ஒப்பிடுகையில் அவரை விட அதிக உயரமும், நீண்ட ஓட்டமும் உள்ள தவல் குல்கர்னி சராசரியாக 118 கி.மீ-இல் வீசினார். பிறகு அடுத்து சில ஓவர்களில் சற்றே ஓட்ட அடிகளை அதிகரித்து அகார்க்கரால் அதிக சிரமமின்றி 138 கி.மீ வேகத்தை எட்ட முடிந்தது. அதே ஆட்டத்தில் கையை உதறி, முறுக்கி, தனக்குள் பேசி உசுப்பேற்றிக் கொண்டு நீண்ட தூரம் ஓடி வந்து வீசின ஸ்ரீசாந்தால் குறைபிரசவ குழந்தை போல் தோற்றமளிக்கும் அகார்க்கரை வேகத்தில் விஞ்ச முடியவில்லை. லில்லீ தனது நூலில் வேக வீச்சாளருக்கு உயரம் பந்தை எகிற வைக்க அவசியம் என்கிறார். ஆனால் வேகமாய் வீச வலுவான உடலைப்பு அவசியமில்லை என்கிறார். தொடர்ந்து வேகமாய் வீசுவதற்கு உடல் ஊக்கமும் உள்ளாற்றலும் போதும் என்கிறார். வேகவீச்சாளருக்கு முதலும் முடிவுமான குணம் வேகமாய் வீசுவதே. இது மரபு ரீதியானது; பயிற்றுவிக்க முடியாதது. அதாவது ஒரு வேக வீச்சாளன் உருவாக்கப் படுவதில்லை; அவன் தோன்றுகிறான்.

மனித உடலின் தசை நார்களை இருவிதமாய் பிரிக்கலாம்: (1) வேகமாய் சுருங்குபவை, (2) மெல்ல சுருங்குபவை. வேகமாய் சுருங்கும் தசை நார்கள் திடீர்வெகத்தையும், மெல்ல சுருங்குபவை நீடித்து இயங்கும் ஆற்றலையும் வழங்கும். ஒரு வேக வீச்சாளருக்கு உடலில் வேகமாய் சுருங்கும் தசைநார்கள் 75% வேண்டும். மாறாக அதிதொலைவு ஓட்ட வீரர்களுக்கு மெல்ல சுருங்கும் தசை நார்கள் அதிகம் இருப்பது தான் உதவும். ஸ்கூல் பையனைப் போன்று தோற்றமளித்தாலும் ஆகார்க்கரால் 140 கி.மீட்டருக்கு மேல் வீச முடிவதற்கு அவருடலில் வேகமாய் சுருங்கும் தசை நார்கள் உள்ளதே காரணம். தசை பயோப்சி எனும் தொழிற்நுட்பம் மூலம் இதை கண்டறிய முடியும். வேகமாக வீச முடியாதது ஒரு உயிரியல் நிஜம். இதை உணராமல் ஆர்.பி சிங், இர்ஃபான் போன்றோர் வேகமாக வீச முயன்று சொதப்புவதை பார்க்கிறோம். அவரவர் வானம் அவரவர் உயரத்தில் உள்ளது. இந்திய அணியின் 1997 மேற்கிந்திய சுற்றுப்பயணத்தின் போது டோடா கணேஷ் எனும் கர்நாடக மாநில மிதப்பந்து வீச்சாளர் அறிமுகமானார். அவர் சிறப்பாக வீசினாலும் அப்போதைய பயிற்சியாளர் மதன்லால் திருப்தி அடையவில்லை. கணேஷ் ரொம்பவும் ஒல்லியாக உள்ளார்; ஜிம்முக்கு போய் வெயிட்டடித்து சதை போட்டு வந்தால் தான் அவருக்கு எதிர்காலம் உண்டு என்று பத்திரிகைகளுக்கு தெரிவித்தார். கணேஷை சீக்கிரமே அணியிலிருந்து தூக்கினார்கள். உள்ளூர் ஆட்டங்களில் 400-க்கு மேல் விக்கெட்டுகள் சாய்த்தும் அவருக்கு பிறகு வாய்ப்பு வழங்கப்படவில்லை. ஏனென்றால் கணேஷ் கடைசி வரை கன்னம் ஒட்டியே தெரிந்தார். அடுத்த தமாஷாக, கங்குலி ஒருமுறை தான் உடற்பயிற்சி செய்து தோள் வலு கூட்டி,130-க்கு அதிகமான வேகத்தில் வீசப் போவதாக ஒரு பேட்டியில் தெரிவித்தார். கடைசி வரை அவருக்கு வேகம் வாய்க்கவில்லை. முந்தைய உயிரோசை கட்டுரை ஒன்றில் நான் கணித்தது போல் அபிஷேக் நாயர் சேம்பியன்ஸ் கோப்பையில் நிறைய அப்பளம் வீசினார். அதுவும் குறி தவறி போய் விழுந்தன. இதே போட்டியில் ஒரு எதிர்பாராத திருப்பம் இருந்தது. நாயர் காற்றோடு பறந்து போய் வருவது பொறுக்காமல் தோனியே கீப்பிங் கிளவுசை கார்த்திக்கிடம் ஒப்படைத்து விட்டு, பந்து வீசி 130 கி.மீ வேகத்தை எளிதாக எட்டினார், அதுவும் குறைவாக ஆனால் சரளமாக ஓடி வந்தே. அதை விட கவர்ந்தது தோனி பிரமாதமாக பந்தை தொடர்ச்சியாக குட் லெங்க்தில் வீசி ஸ்விங் செய்து முதல் ஓவரிலே விக்கெட் வீழ்த்தியது. இதைக் கண்டு, ஆல்ரவுண்டர் நாயரின் முகம் பேஜாரில் டீக்கடையில் பொரித்தெடுத்த பஜ்ஜி போலானது. அபிஷேக் மும்பை அணிக்காக கடந்த பல வருடங்களாய் வீசி விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ள ஒரு நிலையான உள்ளூர் பந்து வீச்சாளர். தோனிக்கு உள்ளூர் போட்டிகளில் மொத்தமாக ஒன்பது ஓவர்கள் வீசின அனுபவம் மட்டுமே உள்ளது. அதுதான் தோனி வாழ்வில் வீழ்த்தின முதல் விக்கெட்! எப்படி மிகக்குறைந்த அனுபவம் மற்றும் பயிற்சி கொண்ட தோனியால் அபிஷேக்கை விட சிறப்பாக, நெஹ்ரா, பிரவீனுக்கு ஒப்பாக வீச முடிகிறது? காரணம் ஒரு பந்து வீச்சாளன் மரபு ரீதியாக உருவாக்கப்படுகிறான் என்பதே.

ஆரம்பத்தில் ஜெயசூர்யா இடதுகை சுழல் வீச்சாளராக, வால்ஷ் கால்சுழல் வீச்சாளராக, கும்பிளே மிதவேக வீச்சாளராக, ஸ்ரீநாத் மட்டையாளராகவும் இருந்தனர். குழந்தை வயதில் டெண்டுல்கர் மிதவேகப்பந்து வீச்சாளராக விரும்பியதுமின்றி பல ஆட்டங்கலில் தனது அணிக்கு துவக்கமாக வேகப்பந்து வீசினார். ஒரு பரிட்சார்த்த முயற்சியில் தான் இவர்களது திறமையின் ஒரு புது, ஆதார பரிமாணம் தெரிய வந்தது. கபில்தேவுக்கு பிறகு யார் என்பதற்கு பதில், ஒருவேளை உழைப்பும், உடல்நிலையும், சூழமைவும் ஒருங்கிணைந்தால், தோனியாக இருக்கலாம்.
Read More

Contact Us

So you think we’re the right folks for the job? Please get in touch with us, we promise we won't bite!



Designed By Blogger Templates