Friday, 29 October 2010

பிரபஞ்சனின் “காகித மனிதர்கள்”





பிரபஞ்சனின் காகித மனிதர்கள் நாவல் கல்லூரி மட்டத்தில் பேராசிரியர்களிடம் உள்ள ஊழல், வேசைத்தனம், மெத்தனம், அறிவீனம் ஆகியவர்றில் ஆரம்பித்து காவல்துறை, அரசியல்வாதிகள் என்று ஒவ்வொரு மட்டமாக மேலேறி இந்த மேன்மையான பண்புகளை அவர்களிடமும் கண்டு கண்டிக்கிறது, விமர்சிக்கிறது, சாடுகிறது. இந்நாவல் நக்கீரன் கோபாலின் உதயத்தில் வெளிவந்து பின்னர் நாவல் வடிவம் பெற்றது. நாவலில் படிக்கிறவர்களுக்கு ஒரு சின்ன குழப்பம் உள்ளது. அதாவது ஒரு விமர்சனத் தடுமாற்றம். சுருக்கமாக, வணிக நாவலா தீவிர நாவலா என்பதே அது. இந்நாவலை வணிக நாவலில் இருந்து மாறுபடுத்திக் காட்டும் சில பண்புகள் உள்ளன. முதலில் அவை.

வடிவ ரீதியாக காகித மனிதர்கள் சாவகாசமாக ஆரம்பிக்கிறது. வர்ணனைகளில் (சுஜாதா போல்) கிளுகிளுப்பு முயற்சிகள் இல்லை. முடிவில் நீண்ட உபதேசம் இல்லை; முடிவில் வலிந்து திணிக்கப்பட்ட நேர்மறைத் தன்மை கூட இல்லை. கள அமைப்பை பொறுத்த மட்டில் சாகச/உணர்ச்சிகர நாயகனை பிரதானப்படுத்த இல்லை; மத்தியதர வாழ்க்கை பின்னணி இல்லை. மையநீரோட்டத்தில் உள்ள கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் அரசியல் தலைவர்களை (குறிப்பாக எம்.ஜி.ஆரை) வலுவாக விளாசுகிறது. அடுத்து வணிக நாவலுடனான ஒற்றுமைகள்.
(அ) தர்மாவேசம். தீவிர நாவலில் இத்தன்மை செல்லுபடியாவது இல்லை. சமூக ஆய்வுகள், உளவியல், பரிணாமவியல், இருத்தலியல் தொடர்பான தத்துவங்கள் மற்றும் சொல்லாடல் அரசியல் பற்றின மொழியியல் பிரக்ஞை காரணமாக நவீன தீவிர நாவலில் எழுத்தாளன் அண்டுராயர் கழன்று போகும் அக்கறை இல்லாமல் சமூகத் தீமை நோக்கி சாடுவது இல்லை காரணம் நவீன எழுத்தாளனுக்கு மனிதனின் நன்மை மீதான நம்பிக்கையை விட அவநம்பிக்கையே அதிகம். (குறைந்த பட்ச அறவுணர்வு எழுத்தாளனுக்கு உள்ளதை நான் மறுக்கவில்லைதான்.) நம்பிக்கை மிகுதியால் தான் கோபம் வருகிறது; ஏமாற்றப்படும் உணர்வுடன் கண்டிக்கும் உரிமையும் இலவசமாக சேர்ந்து கொள்கிறது. பெரும்பாலான நவீன நாவலாசிரியர்கள் மனிதன் மேன்மையடைந்தால் மட்டுமே ஆச்சரியப்படுவார்கள்.
(ஆ) மக்கள் போராட்டம். பிரபஞ்சன் மாணவர் போராட்டத்தை பக்கத்துக்கு பக்கம் விதந்தோம்புகிறார். போராட்ட குணத்தை கைவிடக் கூடாது என்கிறார். ஆனால் எந்த போராட்டமும் அவர் நம்புவது போன்று பரிசுத்த நோக்கத்துடன் நிகழ்வதில்லை. குறிப்பாய் கல்லூரி மாணவர்களின் போராட்ட நோக்கமே வேறு. அதிகார மையத்தால் அவர்கள் தூண்டி விடப்பட்டு ஆட்டுவிக்கப்படுவதை கண்கூடாய் பார்த்திருக்கிறேன். பிரபஞ்சனுக்குள் இருக்கும் இந்த கற்பனாவாதப் போக்கு வணிகச் சூழலுக்கானது.
அடுத்து நல்லவர்கள். நல்லவர்கள் மீதான நம்பிக்கை வெகுகாலம் முன்பிருந்தே செத்து விட்டது. வணிகப் பத்திரிகைகள் அதை ஏதோ ஒரு புதைபடிவ வடிவத்தில் தக்க வைக்கின்றன. பிரபஞ்சன் நாவலில் மூன்று வகை மனிதர்கள் வருகிறார்கள்.
(1)     மகா நல்லவர்கள், நாணயஸ்தர்கள், கவரிமான் வால் முளைத்தவர்கள்.
(2)     மகாகெட்டவர்கள். கெடுதியில் ஊறித் திளைப்பவர்கள். அகங்காரத்தை பிரதான தீமையாக கொண்டவர்கள்.
(3)     இடைப்பட்டவர்கள்.
இந்த மூன்றாவது வகையினர்தாம் “காகித மனிதர்களையும் ஒரு இடைப்பட்ட நாவலாக மாற்றி விடுகிறது.
கடைசியாக, இந்நாவலில் கெட்டவர்கள் மட்டுமே காமத்தை முழுமையாக வெளிப்படுத்துபவர்கள். நல்லவர்களிடையே ஆண் பெண் நட்பு காமமற்ற அல்லது காமம் நாசூக்காக மறைக்கப்பட்ட ஒன்றாக இருக்கிறது. மாணவர்கள் இடையே எந்த வகையில் எல்லாம் காமம் இழையோடும் என்பது பற்றின எந்த பதிவும் நாவலில் இல்லை. நாவலின் பிரதான வில்லனின் தீமைகள் காமம் சார்ந்தது என்பதாலும், மிகையான காம விழைவு வாழ்வை அழிக்கும் என்று நாவலில் ஓரிடத்தில் உபதேசிக்கப்படுவதாலும் மாணவர்களிடையே ஒரு பரிசுத்தத்தை நிலவ வைக்க பிரபஞ்சன் கட்டாயப்படுத்தப் பட்டிருக்கலாம். ஆனால் காமத்தின் தீய விளைவுகள் பற்றின பதற்றம் என்பது ஒரு மத்தியதர வாழ்க்கை மதிப்பீடு என்பதில் சந்தேகம் இல்லை.
காகித மலர்கள் பற்றின ஒட்டுமொத்த விமர்சனம் அல்ல இது. அவர் எழுதின இந்நாவல் எப்படி மதில் மேல் நின்று மியாவ் என்கிறது என்று வியக்கும் முயற்சி மட்டுமே.
Read More

Wednesday, 27 October 2010

நீட்சே அறிமுகக் குறிப்புகள் – 3


உடலின் மதம்
 

 முதல் அத்தியாயத்தில் கூறியிருந்தது போல் நீட்சே தன் அப்பாவின் மரணத்துக்குப் பின்னர் பல வயதுநிலைகளில் உள்ள குடும்பத்து பெண்களின் செல்லமும் ஆதுரமுமான கவனிப்புடன் வளர்ந்தார்; குறிப்பாக அக்கா எலிசபெத் தம்பி மீது அபார பாசம் கொண்டவராக இருந்தார். இந்த மிகை ஈடுபாடின் எதிர்மறை விளைவாக பின்னர் அவர் நீட்சேவின் பைத்திய பருவத்தில் தம்பியை ஒரு கைப்பாவையாக பயன்படுத்தினார். ஹிட்லரின் வழிகாட்டி என்று நீட்சே குறித்து இன்றுவரை பொதுப்புத்தியில் நிலைத்துள்ள புரிதலுக்கு அக்கா எலிசபெத் காரணமானார். அவருக்கு தனது அதிதிறமையாள தம்பியை கட்டுப்படுத்துவதில், அவரைக் கொண்டு பெருமை அடைவதில் பெரும் விருப்பம் இருந்துள்ளது.
நீட்சேவின் அம்மா விதவையான பிறகு மறுமணம் புரியவில்லை. தாய்வழிப் பாட்டியின் மறைவுக்கு பின் அவரது சொத்துக்கள் வந்து சேர நீட்சே குடும்பத்தின் மீதான பொருளாதார பாரம் லேசானது. நீட்சே உள்ளூர் ஆரம்பபள்ளி ஒன்றில் படித்தார். இங்கு அவரது இரு ஆத்மார்த்த நண்பர்கள் வில்ஹெம் பிண்டர் மற்றும் குஸ்டாவ் கிருக். இருவரும் உறவினர்கள் (மச்சினர்கள்). நீட்சேவின் பாட்டி பிண்டர் மற்றும் கிருக்கின் குடும்பத்துக்கு நெருக்கமானவர். பிண்டர் தனது பதினான்கு வயதில் எழுதிய சுயசரிதையில் நீட்சே பற்றி குறிப்பிடுகிறார். இக்குறிப்பில் நீட்சே ஒரு தனிமை விரும்பி, பக்திமான், இளகிய மனம் படைத்தவர், அத்தோடு சுதந்திர சிந்தனையாளரும், துடிப்பானவரும் கூட. அடக்கமும், நன்றி உணர்வும் மிக்க ஒரு சிறுவனாகவும் நீட்சே இப்பதிவில் தோன்றுகிறார். எதிர்காலத்தில் பாதிரியாராக தயார் செய்து வரும் ஒரு சமர்த்து சிறுவன். சுருக்கமாக, இந்த இளமைக் குறிப்பு நீட்சேவின் வாசகனுக்கு பரிச்சயமானதற்கு முற்றிலும் முரண்பட்ட ஒரு சித்திரத்தை தரும். நீட்சே உணர்ச்சிகளை அடக்கி சுயம் மறுத்த ஒரு இறுக்கமான நபராக இளமையில் இருக்கவில்லை என்பதும், அவர் மிக இயல்பான ஆரோக்கியமான பால்யத்தை கொண்டிருந்தார் என்பதும் இங்கு கவனிக்க வேண்டியவை. நீட்சேவின் இறைமறுப்பு மற்றும் மதநிராகரிப்பு வாதம் மெல்ல மெல்ல அவரது வாசிப்பு மற்றும் சிந்தனையின் ரசவாதத்தில் இருந்து விளைந்து வந்தவை. ஒரு பாதிரியாராக தயாரித்து வந்த சிறுவன் வளர்ந்த பின் கிறித்துவை தன் இலக்காக்கி  கால்பந்தாடியது ஏன், அந்த நிலைப்பாட்டை எப்படி அடைந்தான் என்பதை நாம் தொடர்ந்து கவனிக்க வேண்டும். நீட்சே மதம், பண்பாடு, மொழி-அறிவியலுக்கு அடுத்தபடியாய் பெரும் ஆர்வம் கொண்டிருந்தது இசையில். நண்பன் குருக்கின் அப்பா ஒரு இசைக்கலைஞர். அவர் நகராட்சிக் குழுவின் உறுப்பினரும், இலக்கிய ஆர்வலராகவும் இருந்தார். நண்பர்களும் மூவருக்கும் இவர் கோத்தேவின் நூல்களை வாசித்து காண்பிக்கும் வழக்கம் கொண்டிருந்தார். இவரால் தூண்டப்பட்டே நீட்சே பியோனா கற்றுக் கொள்ள தொடங்கினார்.

1854இல் நீட்சே இரு தனியார் ஆரம்பப் பள்ளியில் சேர்க்கப்பட்டார். அங்கு மேற்சொன்ன இரு நண்பர்களுடன் நீட்சே லத்தீனும் கிரேக்கமும் கற்கிறார். இங்கிருந்து மூவரணி டோம்ஜிம்னேசியம் என்ற உயர்நிலைப்பள்ளிக்கு சென்றது. நீட்சேவின் இயல்பான புத்திசாலித்தனம் மற்றும் கல்விச் சிறப்புகள் காரணமாக இங்கிருந்து அவருக்கு பொபோர்டா என்ற ஒரு சிறப்பான மற்றும் கராறான போர்டிங் பள்ளியில் இலவச தங்கும் வசதியுடம் இடம் கிடைத்தது. ஏற்கனவே சொல்லியது போல் நீட்சே ஒரு பெரும் படிப்பாளியாக மட்டும் அல்லாது வெளிப்புற நடவடிக்கைகளிலும் அதிக ஈடுபாடு கொண்டவராக இருந்தார். தொடர்ந்து நடை மற்றும் நீச்சல் பயிற்சி மற்றும் ஸ்கேட்டிங்கில் ஈடுபட்டதன் காரணமாக அவர் திடகாத்திரமானவராக வளர்ந்தார். இது ஒரு முக்கியமான தகவல். ஏன் என்று பார்ப்போம்.
“இவ்வாறு சொன்னான் ஜாருதஷ்டிரனில் நீட்சே மனித அறிவுக்கு உடல் தான் அடிப்படை அல்லது ஆதார பிறப்பிடம் என்கிறார். அண்ட சராசரங்களை பற்றி விசாரங்களின் போதும் நமது வேர் இந்த பௌதிக இருப்பில் தான் உள்ளது. ஜுரம் பார்க்க வெப்பமானியின் ஒரு பகுதி நாவின் மடிப்புகளில் உறங்குவது போல். அதாவது மனித அறிதல் என்பது அவனது பௌதிக குறைகளைக் கடந்து செல்ல சாத்தியப்படக் கூடிய ஒன்று தான். ஆனால் இந்த அறிதல் அசலானதாக இருக்க வேண்டுமானால் மனிதன் தன் பௌதிக இருப்பை பொருட்படுத்த வேண்டும், ஏற்றுக் கொள்ள வேண்டும். பௌதிக இருப்பில், தன் உடலில், அதிருப்தி கொள்கிறவன் ஒரு பொறிக்குள் அகப்பட்டு கொள்கிறான். சுயவெறுப்பு தான் இந்த பொறி. இந்த பொறி ஒரு சுற்றுவட்டப் பாதையாக மாறுகிறது. தப்பித்து வெளியேற அவன் தன்னையே நிந்திக்கிறான். சுற்றி சுற்றி தன்னிலே வந்து நிற்கிறான். சுவர்க்கத்தை அடைய சதா மன்னிப்புக்காக மன்றாடும் ஒரு பலவீனனாகிறான். சுவர்க்கத்தை அடைகிறானோ இல்லையோ ஒரு கச்சிதமான நரகத்தை உருவாக்கி அதை ஆராதிக்கிறான். உடலை வெறுக்கிறவன் உறக்கம் போன்ற போதை வழிகளையும் தேர்கிறான். ஜாருதஷ்டிராவில் எப்படி வெற்றிகரமாய் உறங்குவது என்று போதிக்கும் ஒரு ஞானி வருகிறார். அதாவது மத-துவேசிகள் அல்லது அவநம்பிக்கையாளர்களும் மற்றொரு சுற்றுப் பாதைக்குள் நுழைகிறார்கள். அது உறக்கம் போன்று ஏதாவது ஒன்றாக இருக்கலாம். உறக்கம் உடலை புதுப்பிக்க என்று அல்லாமல் பிரச்சனைகள் மற்றும் போதாமைகளை தள்ளிப் போடும் தப்பித்தல் முறையாக மாறுவதை நீட்சே இங்கு குறிப்பிடுகிறார். எப்படி குழலிசை காற்றால் மட்டும் உருவாவதில்லையோ அது போல் மனிதப் பயணமும் ஆவி வடிவானதோ அபௌதிகமானதோ அல்ல. அசோகமித்திரனின் சிறுகதை ஒன்றில் வரும் யோகியைப் போல் உடல்துவேசிகள் தாம் ஞானம் பெறப் போகும் நாளை கணக்கு கூட்டி காத்திருந்து காத்திருந்து சுயநிந்திக்கிறார்கள். அக்கதையில் சித்தி பெறப் போகும் தேதியை ஒரு நாளுக்கு முன்பாய் கணக்கிட்டு ஏமாற்றமடைந்து உடல் அழிகிறார் யோகி. ஆவியானவரின் விண்ணுலகுக்காக விழைபவர்கள் இரண்டு விசயங்களை கருத வேண்டும் என்கிறார் நீட்சே. முதலில் சொர்க்கம் செல்ல வழி இல்லை. அந்த சாத்தியப்பாடு மனிதனுக்கு இல்லை. அவனது நிறையும் குறையும் அவனது உடல் தான். அவனே அந்த உடல் தான். இதைக் கொண்டு எவ்வளவு தூரம் பறக்க முடியுமோ அவ்வளவு தான் மனித எல்லை. அதனால் உடலானவனுக்கு ஆவியானவர் இடத்து செல்ல மார்க்கம் இல்லை. ஆனால் முடிந்த மட்டும் உயர்ந்த ஆன்மீக வாழ்வை வாழ அவன் முயல வேண்டும். சுய இரக்கம் அற்ற தேடலாக இது அமைய வேண்டும். மாரடிப்பு பிரார்த்தனைகளோ பாதபூஜைகளோ அல்ல நீட்சே பரிந்துரைக்கும் உயர் ஆன்மீகம். உயர்ந்த மற்றும் தூய மிருகநிலையிலான கலாச்சாரத்தில் இருந்து தான் இந்த ஆன்மீக வாழ்வு சாத்தியமாகும் என்று நீட்சே நம்புகிறார். இந்த பயணம் தொடுவான எல்லையில் போய் முடியும். மனிதன் இங்கே நிறுத்திக் கொள்ள வேண்டியது தான். இந்த மாபெரும் பிரபஞசத்தை தனது சிறு உடலால் அறிய விழையும் உயிர் மட்டுமே தான் என்றும், தனது அறிதல் குறைபட்டது என்றாலும் அது தன்னைப் பொறுத்தவரையில் நிறைவானதும் சிறப்பானதும் என்றும் சுயநிர்ணயித்துக் கொண்டபின் மனிதன் என்ன செய்ய வேண்டும்? தன்னை விட விரிந்த ஆன்மீக பரப்பு கொண்ட மனிதன் எதிர்காலத்தில் உருவாக தன் காலத்தை அர்ப்பணிக்க வேண்டும். தனது குறைபட்ட ஆனால் தனதளவில் முழுமையான வாழ்வு முக்கியம் என்று அவன் புரிந்து கொள்ள வேண்டும். மகாசமுத்திரத்தில் தானும் ஒரு துளி என்ற அறிதல் மனிதனின் தனிமை உணர்வை போக்கி முழுமை உணர்வை அளிக்கும். தனது ஒவ்வொரு செயலுக்கும் ஒரு அர்த்தம் மற்றும் முக்கியத்தும் உள்ளது என்ற தீர்மான உணர்வு அவனுக்கு ஒரு நிரந்தர திருப்தியை அளிக்கிறது. எதிர்காலத்தை சமகாலத்துடன் இணைக்கும் ஒரு கண்ணி மட்டுமே தான் என்று அவன் நம்புகிறான். சுருக்கமாக, தன்னை ஒரு உடலின் விழிப்பு என்று அறிந்து கொண்ட பின் ஒரு மனிதன் செய்ய வேண்டியது தனது வாழ்வு வீணல்ல, அது எதிர்கால மானுட குல மேம்பாட்டின் விசைக்கான ஒரு சிறுதிருகல் என்று புரிந்து கொள்ள வேண்டும். அதன் பின் பிரம்மாண்ட காலக் கடிகாரத்தின் முள்ளின் பின்னுள்ள எண்ணற்ற சக்கரங்களில் ஒன்றாக மாறி விடுவான்.

பிற்காலத்தில் கடுமையான தலைவலியாலும், அது தொடர்பான உபாதைகளாலும் அவஸ்தைப் பட்டாலும் நீட்சே சோர்ந்து விடவில்லை. எண்ணங்களின் குளிர்பதனப்பெட்டிக்குள் முடங்கி விடவில்லை; முடிந்த வரையில் உடலுடன் ஒன்றி வாழவே முயன்றிருக்கிறார். “இவ்வாறு சொன்னான் ஜாருதஷ்டிரன் எழுதின காலகட்டத்தில் ஒரு சிறுமூட்டையுடன் மலைப்பாதை ஒன்றில் தினமும் நெடுந்தூரம் நடைபயிற்சி மேற்கொள்ள பழக்கம் கொண்டிருந்தார் அவர். அப்படியான ஒரு நடைபயிற்சியின் போது தான் ஜாருதஷ்டிரனைப் பற்றி நூல் எழுதும் சிந்தனைகள் அவருக்கு ஏற்படுகிறது என்பது ஒரு சுவாரஸ்யமான குறிப்பு. நூலில் ஜாருதஷ்டிரன் நெடுந்தூரம் நடக்கக் கூடியவனாக, உடல் களைத்தால் மட்டும் தூங்குபவனாக, உடல் பசித்தால் உண்பவனாக வருகிறான். ஒரு கழைக்கூத்தாடியின் உடலை அடக்கம் செய்ய நெடுந்தூரம் அலைந்து கானகம் வரும் ஜாருதஷ்டிரன் பின்னர் அவ்வுடலை ஓநாய்கள் புசிக்க ஒரு மரத்துளையில் விட்டு விட்டு கிளம்புகிறான். இந்த தகவல் நமது விவாதத்திற்கு மிக முக்கியமானது. அதாவது, உடல் மிகையாக துவேசிக்கப்பட வேண்டியதோ கொண்டாடப் படவேண்டியதோ அல்ல. அது ஒரு உடல் அவ்வளவு தான். ஆற்றைக் கடந்ததும் படகை விட்டு விடுவது போல் உடலின் வேலை முடிந்ததும் அதை கைவிட்டு விடலாம். பற்று போதாமையில் இருந்து அல்லவா கிளம்புகிறது. உடலின் போதாமை பற்றி விசனிக்காதவன் அநாவசிய பற்று கொள்வதில்லை. நீட்சே உடலை எப்படி புரிந்து கொள்கிறார் என்பது மிக முக்கியமான ஒரு கோணம்.
நீட்சே மனிதன் எதிர்கால மனிதனுக்காக வாழ தன்னை தியாகம் செய்ய வேண்டும் என்று ஜாருதஷ்டிரன் வழி அடிக்கடி கூறுகிறார். அதனால் ஒரு இயல்பான கேள்வி எழுகிறது. நமது நிகழ்காலத்தை எதற்காக எதிர்காலத்துக்காக, என்றோ தோன்றப் போகிறவனுக்காக தியாகம் செய்ய வேண்டும்? எதிர்காலத்துக்கு என்ன நிச்சயம் உள்ளது? இந்த கேள்விக்கு விடை காண்பதற்கு நீட்சேவின் பள்ளிக் காலத்தில் இருந்து நாம் கல்லூரிப் பருவத்திற்கு, ஒரு பேராசிரியராக அவர் பணி புரிந்த அனுபவத்திற்கு செல்ல வேண்டும். அடுத்த அத்தியாயத்தில் ...
Read More

Monday, 25 October 2010

நீட்சே: அறிமுகக் குறிப்புகள் 2

அப்பாவின் மரணத்தை எப்படி கடப்பது?



நீட்சேவின் வாழ்க்கை நிகழ்வுகளை விட அவரைக் கவர்ந்த ஆளுமைகளின் பாதிப்பு அவரது கருத்தாக்கங்கள் உருவாக எப்படி பயன்பட்டன என்பது அறிவது ஒரு புதிய வெளிச்சத்தை தருகிறது. நீட்சேவின் அதிமனிதன், அதிகாரத்தை நோக்கிய மன ஊக்கம் போன்ற பிரபலமான கருத்தியல்களை தெளிவாக புரியவும் அவரது பின்புலத்தில் உள்ள சில ஆளுமைகளையும் அவர்களின் சிந்தனைகளையும் பரிச்சயப்படுத்துவது அவசியம். குறிப்பாக
முதலில், நீட்சேவின் அப்பா லுட்விக்
அடுத்து கீழ்வரும் சிந்தனையாளர்கள் (இவர்களை வரும் அத்தியாயங்களில் பேசலாம்)

ரிச்சர்ட் வாக்னர் (ஜெர்மானிய இசை அமைப்பாளர் மற்றும் கோட்பாட்டாளர்; 1813-83)
ஆர்தர் ஷோப்பன்ஹெர் (ஜெர்மானிய தத்துவவியலாளர்; 1788-1860)
சார்லஸ் டார்வின் (விஞ்ஞானி; 1809-82)
ஜேக்கொப் புக்ஹார்ட் (கலை மற்றும் நாகரிக வரலாற்று பேராசிரியர்; ஜெர்மானியர்; 1818-97)

அதற்கு முன் நீட்சேவின் குழந்தை மற்றும் பால்ய காலம் பற்றின சில குறிப்புகள்.

அம்மாவிடம் விட நீட்சேவுக்கு அப்பாவிடம் அபரிதமான நெருக்கமும் கற்பனாவாத பந்தமும் இருந்திருக்கிறது. இதற்கு அப்பா அவரது 36வது வயதிலே இறந்து போய் விட்டது காரணமாக இருக்கலாம். ஒரு வருடத்திற்கு பிறகு நீட்சேவின் தம்பியும் இறந்து விடுகிறார். பாரம்பரிய குடும்ப அமைப்பு சிதற நீட்சேவின் அம்மா தன் குழந்தைகள், நீட்சேவின் திருமணமாகாத இரு அத்தைகள் மற்றும் தாய்வழி பாட்டியுடன் நவும்பர்க் எனப்படும் பக்கத்து ஊரில் சென்று வாழ்ந்தார். இவ்வூர் ஒரு நெடுஞ்சுவாரால் சூழப்பட்டது. நவும்பர்க்கும் அவர் பிறந்த ஊரான ரோக்கனைப் போல் குறைந்த மக்கள் தொகை கொண்ட அந்நிய பிரவேசங்கள் அதிகம் அற்ற ஊர் தான். இங்கு நீட்சே பதிநான்கு வயது வரை வாழ்ந்தார். நீட்சேவின் அப்பா கார்ல் லுட்விக் காக்காய் வலிப்பால் அடிக்கடி அவதிப்பட்டார். அவர் ஒருவித மூளை நோயால் மரணப்பட்டார். லுட்விக்குக்கு மனநோய் இருந்ததாக ஒரு கதை நிலவுகிறது. தனக்கு மிக நெருக்கமான அப்பாவின் இளம் வயது மரணம் நீட்சேவை வாழ்க்கை நிலைப்பாட்டில் வலுவான பாதிப்பை ஏற்படுத்தியதாக சொல்லப்படுகிறது. நீட்சே தான் தன் அப்பாவை போல் இளமையிலேயே இறந்து விடுவோம் என்று நம்பினார். நீட்சே தன் தொழில்வாழ்வில் வெற்றி அடைந்தாலும், அவரது கூர்மையான அறிவு மற்றும் வளமான ஆளுமைகாக நுண்ணுணர்வு கொண்டோரின் வட்டாரத்தில் புகழ் பெற்றிருந்தாலும், தோற்றத்தில் மிகுந்த கவனம் செலுத்துபவரும், திடகாத்திரமானவராகவும் திகழ்ந்த போதும் மணம் புரிந்து குடும்பம் வளர்ப்பதில் அதிக நம்பிக்கை அற்றவராக இருந்தார். திருமணத்தை அவர் ஒரு இடைக்கால லௌகீக வசதியாகத் மட்டும்தான் கருதினார். ஒரு நெடுங்காலப் பெண் துணை (அதாவது மனைவி) பற்றி நீட்சே கருத்தில் கொள்ளவே இல்லை என்பது சுவாரஸ்யமானது. நீட்சேவுக்கு தன் குறைவாயுள் பற்றி இருந்த விசித்திர நம்பிக்கை பெண்கள் மற்றும் குடும்பம் மீதான அவரது அணுகுமுறையை எந்த அளவுக்கு தீர்மானித்தது என்பது உங்கள் கற்பனை ஆற்றலை பொறுத்தது. ஆனால் நீட்சே மரணத்தை நேர்மறையாகக் கண்டார். இதை சுருக்கமாக விளக்குகிறேன்.

மரணம் என்பது அவருக்கு அதிமனிதர்களை தயாரிப்பதற்கான ஒரு தியாகமாக தெரிகிறது. உலகின் கீழ்மைகளை ஏற்றுக் கொண்டு கிறிஸ்து உயிர்த்தியாகம் செய்கிறார். இதன் பின்னுள்ள நிலைப்பாடானது உடல் அடிப்படையிலான வாழ்க்கை கீழானது என்பது. கிறித்துவம் உடலை பழிக்கும் ஒரு வலுவான தத்துவ நம்பிக்கையை கொண்டது. மேலும் நுணுக்கமாக பார்த்தால், உடலைக் கொண்டு புலன்களின் சாத்தியங்களை நம்பி நாம் அடையும் உண்மை முழுக்க பிழையானது; அதனால் உண்மையை காண நாம் மீபொருண்மை வழியை மேற்கொள்ள வேண்டும் என்றொரு தரப்பு தத்துவவாதிகள் இடையே உண்டு. இதனில் கிறித்துவத்துக்கு வேர் உண்டு.

உதாரணமாக சாக்ரடீஸ் மனிதனின் உண்மையை ஒரு பிரதியெடுக்கப்பட்ட உண்மை என்கிறார். ஆதி உண்மை ஒன்று உள்ளது; அதுவே அசலானது. நமது உலகம் என்பது பிரதிகளின் உலகம்; காகிதங்கள் பறக்கும் ஒரு பெரும் ஜெராக்ஸ் கடை. கிறித்துவம் இதனால் மனிதனை விட கிறித்துவை நம்ப சொல்கிறது. மனிதப் பிறவியில் அவர் கூட தன் புலன்களை நம்புவதில்லை; பிதாவின் கட்டளைப்படி சிலுவை ஏறுகிறார். உடல் மறுப்புவாதம் கிறித்துவத்தின் ஆதார கோட்பாடு. நீட்சே ஒரு மரபான கிறித்துவப் பாதிரியாரின் குடும்பத்தில் தோன்றி வளர்ந்தாலும், கல்லூரியில் மதக்கல்வி பெற்றாலும் தத்துவத்தில் தான் அவருக்கு அதிக ஈடுபாடு. அவர் தத்துவ மரபில் நின்றபடி தான் கடவுள் இறந்து விட்டார் என்கிறார். ஆனால் நீட்சே ஒரு இறைமறுப்புவாதி அல்ல. அவர் மீபொருண்மைவாத உண்மைத் தேடலின் மறுப்பாளர். உடலை மறுப்பவர்களின் எதிர்ப்பாளர். இந்த உலகை உடலைக் கொண்டு தான் புரியவும், மேன்மையாக வாழவும், ஆன்மீகப் பரிணாமத்துக்கு வழிகோலவும் முடியும் என்று நீட்சே நம்பினார். உடலை மறுத்து, வெறுத்து, அதிலிருந்து தப்பித்து நாம் எதையும் அடையப்போவது இல்லை என்று அவரது ஜாருதஷ்டிரன் கூறுகிறான் (Thus Spake Zaruthastra). இந்த மீபொருண்மைவாத மறுப்பின் காரணமாக நீட்சே இயல்பாகவே கிறித்துவத்தை எதிர்க்க வேண்டி வருகிறது. பாவம் என்ற கருத்தாக்கத்தின் கீழ் உடலை பலவீனமாக கருதும், அப்படியான பலவீனர்களை தங்கள் தவறுகளுக்கு சதா மன்னிப்பு கோரும்படி ஊக்குவிக்கும் மனப்பான்மையை நீட்சே கண்டித்தார். இது குறித்து மேலும் விளக்கமாக நாம் பிற்பாடு பேசலாம். ஐரோப்பாவில் அக்காலத்தில் மதம் ஏற்கனவே பலவீனப்பட்டிருந்தது. இந்த பின்னணியில் நீட்சே தன் தாக்குதலை தொடுக்கிறார். ஏற்கனவே ஆன்மீக ரீதியாக பலவீனமுற்றிருந்த நவீன மனிதன் கிறித்துவப் பாதையில் தாழ்வுமனப்பான்மையில் ஆழமாக புதைகிறான்; மதம் அவனது கீழ்மைகளை பிரதானப்படுத்தி எளிய சடங்குகளின் மூலம் அவனுக்கு கற்பனை விடுதலைகளை தருகிறது. இது நிலைமை மேலும் சீரழிக்கும் ஒரு தப்பித்தல் முறை மட்டுமே என்று நீட்சே நம்பினார். நீட்சேவின் ஆன்மீக அணுகுமுறை இதற்கு நேர்மாறானது. ஷோப்பன்ஹரின் கோட்பாட்டில் இருந்து அவர் உருவாக்கியது. இது குறித்தும் நாம் விரிவாக பின்னர் பேச இருக்கிறோம். ஆனால் நீட்சேவுக்கு கிறித்துவத்தின் மீது தனிப்பட்ட காழ்ப்பு ஏதும் இல்லை என்பதை இங்கு அழுத்தி சொல்ல வேண்டும். ஒரு கம்யூனிஸ்டு தன் மதத்தை எதிர்ப்பதை போல் அவர் கோட்பாட்டு ரீதியாகவே கர்த்தரை நிராகரித்தார். இறைமறுப்புவாதியாக நீட்சேவை புரிவது பிழையானது.

சொல்லப்போனால் பெரியாரைப் போன்று மதத்தை ஒரு சமூகவிரோத அமைப்பாக நீட்சே பார்க்கவில்லை. மார்க்ஸைப் போல் போதைமருந்து என்றும் அணுகவில்லை. சமூகத்தின் மேம்பட்ட கலாச்சார வாழ்வுக்கு மதம் அவசியம் என்று நீட்சே கருதினார். ஆனால் அம்மதம் கிறித்துவத்தை போல் அல்லாது தூய மிருக நிலையை முன்னிறுத்தும் கிரேக்கர்களின் டயோனா தெய்வ வழிபாட்டை போன்று இருக்க வேண்டும். இந்த மதம் பற்றின நிலைப்பாடு நமது சாரு நிவேதிதா மதம் மற்றும் கலை பண்பாட்டு வடிவம் மீது கொள்ளும் அணுகுமுறையை கிட்டத்தட்ட ஒத்தது  இத்தனையும் நாம் விவாதித்தது நீட்சே மரணத்தை எப்படி எதிர்கொள்கிறார் என்பதை புரிவதற்குத் தான். அவர் மரணத்தை ஒரு ஆன்மீக மீட்சியாகத் தான் சித்தரிக்கிறார். அவரும் கிறித்துவத்தைப் போல் மற்றொரு சிலுவையைத் தான் வடிக்கிறார். ஆனால் அது வானில் இருக்கும் சுவர்க்க வாழ்க்கைக்காக அல்ல. பூமியில் தோன்றி பூமியிலே மரிக்கப் போகும் மேம்பட்ட அதிமனிதனுக்காக; பூமியின் தேவகுமாரனுக்காக. கிறித்துவத்தின் மித்தை நீட்சே எப்படி உள்வெளியாக திருப்பி அணிந்து கொள்கிறார் என்பது சுவாரஸ்யமானது. அடுத்து, தனது வாழ்வு சுருக்கமானது என்பதை இளமையிலேயே தீர்மானிக்கும் நீட்சே அதற்கு தரும் நேர்மறையான திருப்பமா இந்த அதிமனித கோட்பாடு? அதிமனிதனை இந்த பூமிக்கு வரவேற்று தோதான சூழல் அமைக்க மனிதன் தன் அனைத்து ஆற்றலையும், காலத்தையும் தியாகம் செய்ய தயங்க வேண்டியதில்லை; அப்படி மரிப்பவன் அதிமனிதன் மூலம் தன் சுயத்தை நீட்டிக்கிறான் என்கிறார் நீட்சே. என்றோ வரப்போகும் ஒருவனுக்காக எதற்கு வீணே சாக வேண்டும் என்று நீங்கள் கேட்கலாம். ஆனால் இங்கு மரணம் என்பது வெறும் உடல் மரணம் அல்ல. மனதின் உள்கட்டுகளை உடைத்து வெளிவருதல்; அதனால் வேண்டுமென்றால் மனம் சிதறி நிட்சேயைப் போல் பைத்தியமாதல், பாரதியை போல் சமூக நிந்திப்புக்கு உள்ளாகி சாதல். எப்படியாயினும் நீட்சேவின் சிந்தனையில் மரணம் அடிக்கடி குறிக்கிடும் எண்ணமாக இருக்கிறது. ஆனால் அவரது மரண அணுகுமுறையில் துளியும் சோர்வில்லை என்பது தான் மேலும் குறிப்பிடத்தக்கது. Ecce Homo நூலில் நீட்சே தன் அப்பாவை பற்றி இப்படி குறிப்பிடுகிறார்:

“அவர் மென்மையானவர், பிரியத்துக்குரியவர் மேலும், இவ்வுலகுக்கு ஒரு தற்காலிக பிரயாணம் மட்டுமே மேற்கொள்ளும் படி விதிக்கப்பட்ட உயிரைப் போன்று, அழியும் உடல் பெற்றவர் வாழ்வு என்பதை விட வாழ்வின் ஒரு கனிவான நினைவுறுத்தல்.
அப்பாவுக்கானதாக நீட்சே குறிப்பிடும் பண்புகள் வாழ்வுக்கானதும் என்பதை கவனியுங்கள். அழிவுக்குரிய உடலை அவர் நிந்திக்கவில்லை; வெட்கி மறுக்கவில்லை. மேன்மையாக வாழ்ந்தால் மரணத்திற்கு முன்னரும் பின்னரும் வாழ்வின் முக்கியத்துவம் குன்றுவதில்லை. காலத்தின் நெடும் இயக்கத்தில் மரணம் இடைபடும் ஒரு திரை அவ்வளவு தான். திரைக்கு அப்பால், எலும்புகளும் நிணமும் சிதறிய அழிவின் பெரும்பரப்புக்கு அப்பால் வாழ்வு மேலும் மகோன்னதமாகும் என்று அவர் நம்பினார். இந்த வாழ்வின் மீதான உவகை மற்றும் நவீன மனிதனின் பண்பாட்டு மீளெழுச்சி மீதான் நம்பிக்கை காரணமாகத் தான் நாம் அனைவருக்கும் நீட்சே பிரியத்துக்குரிய சிந்தனையாளராக உள்ளார்.
Read More

Tuesday, 19 October 2010

சிற்றிதழ் உலக விமர்சனங்கள்: மறைபொருள் கண்டறிக





  கணையாழியில் இருந்து கதை திரும்பப் பெற்ற நணப்ர் ஒருவரின் கருத்து தெரிய வந்தது. ‘கணையாழி ஒரு குறிப்பிட்ட சிலரின், அவர்கள் வேறெங்கும் வெளியிட இயலாத சுயப் பிரதாபங்களை மாதாமாதம் தாங்கி வரும் வெளியீடாக மாறி விட்டது‘ (அசோகமித்திரன், கணையாழி, ஏப்ரல் 1983)

“காலச்சுவடுக்கு மாதாமாதம் அனுப்பப்படுகிற ஆயிரக்கணகான கவிதைகளை ஒருவர் தவறுதலாக ஒருசேர படித்து விட்டால் பைத்தியம் பிடித்து விடும் (சுந்தரராமசாமி ஒரு தனிப்பட்ட உரையாடலில்)

நீங்க என்னை கண்டுக்கிறதே இல்லை என்று ஒரு காதலியோ மனைவியோ கேட்டால் ஒரு அனுபவஸ்த காதலன் திடுக்கிடுவதில்லை: அதன் உட்பொருள் வேறு என்று தெரிவதால். தமிழக தீவிர இலக்கியர்கள் ஒரு சகபடைப்பாளியிடம் உன் படைப்புகள் நீர்த்து போய் விட்டனஅல்லது நீ எழுதியதையே திரும்பத் திரும்ப படியெடுக்கிறாய்என்று சொல்வது கூட மேற்கூறியபடியான அர்த்தமற்ற சொற்றொடர் தான். அரசு அலுவலக சீல் போல் ஆயிரக்கணக்கான முறை குத்தப்பட்டு பார்த்தவுடனே மறைபொருள் புரிபடும் அளவுக்கு பிரபலம் இச்சொற்றொடர். உங்கள் படைப்பாள சகபாடி உங்கள் மீது ஏதோ கோபமாக இருக்கிறார், அவருக்கு ஒரு தனிப்பட்ட புகார் உள்ளது என்பதை புரிந்து நீங்கள் உஷாராக வேண்டும். 
இது எளிய படைப்பாளிகளின் மழுங்கின ஆயுதம் மட்டுமே. பெரும்படைப்பாளிகள் நீண்ட விமர்சனக் கட்டுரைகள் எழுதி ஒரு சகபாடியை நிராகரிக்கிறார்கள் என்றால் வாசகர்களே அதன் தனிப்பட்ட நோக்கத்தை புரிந்து கொண்டு புன்னகையுடன் வாசிக்கிறார்கள். தடுக்கி புதிதாக இப்பக்கம் வருகிறவர்கள் மட்டும்தான் சற்று குழம்பிப் போகிறார்கள். அவர்கள் ஏன் இப்படி அக்கப்போர் செய்கிறீர்கள் என்று நொந்து கொள்கிறார்கள். அவ்விமர்சனக் கட்டுரையில் பெரும்படைப்பாளிகள் ஒற்றை மணிவாசகம் ஒன்றை எழுத்தாளனுக்கு எதிராக சிலவேளை ஏவுவார்கள். அது வாசகனுக்கு முழுக்க புரியாததாகவும் அதனாலே மிகவும் வசீகரமானதாகவும், இருந்தால் வாழ்நாளெல்லாம் இலக்கை துரத்தும். சு.ரா அசோகமித்திரனிடம் வன்முறை இல்லை என்றதை, சு.ரா பிரக்ஞைபூர்வமானவர் என்று ஜெ.மோ சொன்னதை உதாரணங்களாகக் கொள்ளலாம். இந்த மணிவாசகங்களை ஆய்ந்து பரிசோதிக்கும் பொறுமை மற்றும் கூர்மை வாசகர்களுக்கு இருக்காது. செவ்வியல் படைப்புகளை விட இத்தகைய வாசகங்களுக்கு ஆயுள் அதிகம்.
அடுத்து, பத்திரிகை ஆசிரியர்கள் சந்திக்கும் தாக்குதல்கள். ஆசிரியர் படைப்பாளியாக இருந்தால் பாராட்டு மற்றும் நிராகரிப்பு என்ற பெயர்களில் அர்த்தமற்ற வாக்கியங்களை மலர்வளையங்களாய்கொண்டு மூடுவார்கள். ஒரு பத்திரிகை நடத்தும் படைப்பாளியின் படைப்புகளை ஒருவர் கடும் விமர்சனம் செய்தால் அவர் படைப்புகளை பிரசுரிக்காமல் ஆசிரியர் நிராகரித்து விட்டார் என்று உள்ளர்த்தம். ஒருவேளை பத்திரிகை ஆசிரியர் படைப்பாளி அல்லவென்றால் அப்பத்திரிகை மீது அதே விமர்சனம் சில மாற்றங்களுடன் முன்வைக்கப்படும். எனது படைப்புகள் நிராகரிக்கப்பட்ட போது நானும் இவ்வாறு உணர்ந்திருக்கிறேன். அப்பத்திரிகையை படிக்காமல் பல மாதங்கள் தவிர்த்திருக்கிறேன். நண்பரே, பிரசுரத்திற்கு பின்னுள்ள நுண்ணியக்கம் படைப்பின் தரம் பொறுத்ததல்ல என்று விளங்கிய பின் நான் இப்படி கொதிப்படைவதை நிறுத்தி விட்டேன். நமது சூழலில் பத்திரிகை ஆசிரியர்களை நண்பர்களாக்கி கொள்வது தான் பிரசுரிக்க எளிய வழி. பொதுவாக படைப்புகளுக்கு ஜுரம் பார்த்து சரியான வார்டுகளுக்கு அனுப்பும் பொறுமையும் ஈடுபாடும் பத்திரிகைகளுக்கு இல்லை. ஒவ்வொரு எழுத்தாளனும் தனக்கான ஒரு பத்திரிகை இடத்தை முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். அதற்கு இலக்கிய பயிற்சியை விட வேகமாய் ஓடி பேருந்தில் தொத்திக் கொள்ளும் சாமர்த்தியமே அவசியம். இப்படி இருக்கையை பிடித்த பின் வாசகனின் மதிப்பை அடைவது உங்கள் பொறுப்பு. அது எப்படியும் ரெண்டாம் பட்சம் தான். ஆனால் இந்த செயல் வரிசையை நேர்கீழாக மாற்றி செய்ய முயல்வது கால-ஆற்றல் வீணடிப்பு. இத்தனை தகிடுதித்தங்களும் வெறும் வேடிக்கைகள் தாம். இருப்பதிலே ஆபத்தானது அடுத்து வருவது.
பத்திரிகை ஆசிரியர், பதிப்பாளர், பெரும்படைப்பாளிகள் போன்ற உயர்தட்டு இலக்கியவாதிகள் உலக சிந்தனையாளர்கள், படைப்பாளிகள் பற்றி அடிப்படையற்ற அபிப்பிராயங்களை உருவாக்கி தூக்கி தள்ளுவண்டியில் இருத்தி நடக்க விடுகிறார்கள். பெரும்பாலும் தங்களை சந்திக்க வரும் இளம் படைப்பாளிகள்-வாசகர்களை பிரமிக்க வைக்க இப்படியான அடாவடி அவதானிப்புகளை முன்வைக்கிறார்கள். உதாரணமாக என் நண்பரிடம் ஒரு பதிப்பாளர் “சார்த்தர் ஒரு குப்பை. அவரை விட நீட்சே மேல் என்று சொல்லி இருக்கிறார். சார்த்தரையும் நீட்சேவையும் ஒப்பிடுவது ஷேக்ஸ்பியரை விட பேக்கன் மேல் என்பது போல். இருவரும் இரு தட்டுகளில் இருப்பவர்கள். சார்த்தர் ஒரு தத்துவவாதி மட்டும் அல்ல பெரும்படைப்பாளி. நீட்ஷே படைப்பாளுமை கொண்ட தத்துவவாதி, ஆனால் படைப்பாளி அல்ல. தத்துவத்தை எடுத்துக் கொண்டாலும் நீட்சேவும் சார்த்தரும் ஒரே சரடை ஒட்டி விவாதித்தவர்கள் அல்ல. Reflective consciousness உள்ளிட்ட அவரது பங்களிப்புக்கு தத்துவ வரலாற்றில் ஒரு தனி இடம் உண்டு. சார்த்தரை நிராகரிப்பவர் சாகரடீஸ் முதற்கொண்டு வரலாறு நெடுக சுய-அறிதலை விவாதித்த அத்தனை பேருக்கும் பதில் சொல்லி நிராகரிக்க வேண்டும். மேலும் நீட்ஷே ஒரு இருத்தலியல்வாதியா என்பதே சர்ச்சைக்குரியது; காண்டிண்டல் தத்துவாதிகளின் நிலைப்பாடு அது.விமர்சனத்தின் பரந்த கடலை நாவால் ஒரே நக்கில் குடித்து விட முடியாது. இப்படி நக்கிக் குடிக்க நம் பூனை ஏன் முயல்கிறது? இதற்கு காரணங்கள் மேம்போக்கான வாசிப்பு, மூளைச்சோம்பல் மற்றும் ஆவேசமாக எதைச் சொன்னாலும் ஏற்கப்படும் என்ற ஏமாற்று தந்திரம்.
அடுத்து, இப்படி அதிரடியான தட்டை வாக்கியங்களை உருவாக்கும் சோம்பல் கொண்ட புத்திசாலிகள் ஒவ்வாமை என்ற ஒற்றை சொல் மூலம் வளையம் தாவுகிறார்கள். ஜெ.மோவுக்கு ஹெமிங்வேயும் லோசாவும் ஒவ்வாமை. சாருவுக்கு ஜேன் ஆஸ்டின் ஒவ்வாமை. அவ்வளவு தான். இதை சுவாரஸியமாக படிக்கும் வாசகனுக்கு பயன் என்ன? ஒவ்வாமைக்கு எந்த விமர்சன மதிப்பும் இல்லை என்பது மட்டுமல்ல அது ஒரு மோசமான மதிப்பீட்டு பழக்கத்தையும் உருவாக்குகிறது. ஒரு பிரலபமான நடிகருக்கு பிடித்த தின்பண்டங்கள் என்ன, நடிகை எங்கே முடிவெட்டுகிறாள் என்ற பட்டியலிலே இந்த அபிப்பிராயங்கள் சேரும். தமிழ் தீவிர இலக்கிய பரப்பில் முள் குத்தாமல் சஞ்சரிக்க, சோர்வடைந்து மூச்சு வாங்கி குனியாமல் இருக்க மேற்சொன்ன ஒற்றை வாக்கிய-ஒற்றை சொல் விமர்சனங்களின் பொருள் சூன்யம் என்பது புரிந்தாக வேண்டும். நூற்றாண்டுகளாய் பிரபஞ்ச உண்மையை கண்டு பிடிக்க விழைந்த தத்துவஞானிகள் கண்டடைந்த விடை அது. தமிழின் அத்தனை அர்த்தமற்ற சொற்களையும் கடந்தவன் தான் தேர்ந்த வாசகன்.
Read More

Sunday, 17 October 2010

கண்ணாடிக்கு இரு பக்கங்கள்



நடுங்கும் மலை உச்சி
வான இருளுக்கு பனிவிளிம்பு
திறந்த ஜன்னலில் உன் முகத்தேமல்

குப்பைத் திட்டுகள் எதிரே
வரிசையாய் குத்திட்ட பின்புறங்கள்
மலைவழி பள்ளத்து நீரில் அட்டைக் கால்கள்

சாரலுக்கு பின் மழை -
ஜன்னல் கண்ணாடிக்கு இரு பக்கங்கள்
பனித்துளிகள், ஈ

குள்ள ஊனன்
படிக்கட்டை கடக்கிறான்
தத்தி ஏறுகின்றன குருவிகள்
Read More

Saturday, 16 October 2010

கதை சொல்ல வாழ்கிறேன் (மார்க்வெஸ்): அத்தியாயம் 23



“எல்லாவற்றிலும் மோசம் என்ன என்றால்”, அவள் சொன்னாள், “ நாங்கள் இவனுக்கு உதவ செய்த தியாகங்களுக்கு எல்லாம் பிறகு இவன் சட்டப்படிப்பை நிறுத்தி விட்டான்”.
ஆனால் ஒருவரை ஆட்கொள்ளும் பணிக்கான அற்புதச் சான்று இது என்று மருத்துவர் கருதினார்: அன்போடு போட்டியிட முடியக் கூடிய ஒரே சக்தி. மற்றும் எல்லாவற்றையும் விட, அனைத்திலும் மிகப்புதிரான, ஒருவர் திரும்ப எதையும் எதிர்பாராமல் தன் முழுவாழ்வையும் அர்ப்பணம் செய்ய வேண்டிய கலைப்பணி அது. “ஒருவர் பிறந்த அந்த கணத்தில் இருந்தே உள்ளுக்குள் சுமக்கும் ஒன்று அது; அதை எதிர்ப்பது ஒருவரது ஆரோக்கியத்துக்கு மிகவும் கெடு”, அவர் சொன்னார். ஒரு திருத்த முடியாத பிரீமேசனது மந்திரப்புன்னகையுடன் இறுதி ஒப்பனை பூச்சுகள் செய்தார், “ஒரு பாதிரியின் பணி இது போலத்தான் இருக்க வேண்டும்”. என்னால் ஒருபோதும் தெளிவுபடுத்த முடிந்திராத ஒன்றை அவர் விளக்கிய பாணி கண்டு அசந்து போனேன். அம்மாவும் இப்படி உணர்ந்திருக்க வேண்டும்; னெனில் அவர் என்னை மெதுவான மௌனத்துடன் நோக்கினாள்; தன் விதியிடம் சரணனைந்தாள்.
உன் அப்பாவிடம் இதை எல்லாம் சொல்ல சிறந்த வழி என்ன?”,அவள் என்னைக் கேட்டாள்.
“இப்போது நாம் கேட்டபடியே தான்”, நான் சொன்னேன்.
“இல்லை இது எந்த பயனும் தராது”, அவள் சொன்னாள். மேலும் யோசித்த பிறகு முடிவாய் சொன்னாள்: “ஆனால் நீ கவலைப்படாதே, அவரிடம் சொல்வதற்கு ஒரு நல்ல வழியை கண்டுபிடிக்கிறேன்
அவள் அப்படி செய்தாளா என்று எனக்குத் தெரியாது, ஆனால் அதுவே அவ்விவாதத்தின் முடிவாய் அமைந்தது. இரண்டு கண்ணாடித் துளிகள் போல் இரு மணிச்சத்தங்களால் கடிகாரம் மணி சொன்னது; அம்மா அதிர்ந்தாள்: “கடவுளே”, அவள் சொன்னாள், “எதற்கு வந்தோம் என்பதையே மறந்து விட்டேன்”, அவள் எழுந்து நின்றாள்.
“நாங்கள் போக வேண்டும்”.
தெருவுக்கு குறுக்கே உள்ள வீட்டின் மீதான என் முதல் பார்வைக்கு என் ஞாபகத்துடன் அவ்வளவாய் தொடர்பில்லை; என் நினைவு ஏக்கத்துடன் ஏதுமே இல்லை. ஆண்டுகளாய் ஐயமற்ற நினைவுச் சின்னங்களாய் விளங்கின இரு காவல் வாதாம் மரங்கள் வேரோடு வெட்டப்பட்டிருந்தன. சுட்டெரிக்கும் சூரியனுக்கு கீழ் எஞ்சியதெல்லாம் ஒரு பாதி ஓட்டுக் கூரையுடன் 30 மீட்டர்களுக்கு மேலாக வராந்தா, ஒரு பொம்மை வீட்டை நினைவூட்டியடி, மறுபாதி கரடுமுரடான மரப்பலகைளால் அமைக்கப்படிருந்தது. மூடப்பட்ட கதவில் அம்மா சில பொதுவான தட்டல்கள் தட்டினாள்; பிறகு சில சத்தமான தட்டல்கள்; பிறகு ஜன்னல் வழி கேட்டாள்: “வீட்டில் யாரும் இல்லையா?

Read More

Friday, 15 October 2010

மழைக்கு ஒதுங்கும் மழை


மழைக்கு ஒதுங்கும் மழை
சிறகு சேதமான பட்டாம்பூச்சி
காருக்குள் பூவுக்குள் நிலைக்காத இதழ்கள்

புதுத் தூறல். வெளியேறும் மரவட்டை.
பிரேக் போட்ட காருக்கு சற்று முன்னால்
உனக்கு சற்று பின்னால்

உன் வீட்டு முற்றத்தில் இருந்து
வானம் தொடும் பனிப்புகை
புலராப் பொழுதில் உதட்டுத்தடம் மினுமினுக்கும்

Read More

Thursday, 14 October 2010

காற்றுக்குள் மூழ்கிய இலைகள்




ஈரச்சாலையை தொடும் மரக்கிளை
விடியாப் பொழுது
புல்திண்டில் தலைசாய்க்கும் நாய்

விரைத்து நின்ற கல்நாகங்கள் மூன்று
மண்ணில் உதறின பூமாலை
வெகுகீழே மூடுபனிக்குள் தலைகள்

பூமிக்குள் ஊறிய பூமி
காற்றுக்குள் மூழ்கும் இலைகள்
பூச்செண்டுகள் விற்கும் சிறுவனின் கவனம்
சிறுகும் மலைகள்
Read More

Wednesday, 13 October 2010

ஆஸ்திரேலியாவும் கிரிக்கெட்டின் ஆதிதேவதையும்





பெரும்பாலும் டெஸ்டு ஆட்டங்கள் பொறுமையாலும், சாமர்த்தியத்தாலுமே வெல்லப்படுகின்றன. டெஸ்டு ஆட்டத்தின் ஆதார இலக்கே வலிமையை முன்னிறுத்தி பலவீனத்தை மறைப்பது தான். அதற்கான அவகாசமும், நேரமும் டெஸ்டில் உண்டு. ஒரு அணியைத் தவிர உலகின் அனைத்து நாடுகளும் சராசரிகளை கேடயமாக்கி ஒன்றிரண்டு மேதைகளை தாக்குதல் முனையாக்கி வெற்றி நோக்கி கால் இஞ்ச் அரை இஞ்ச் என்று நண்டுக்கால்களால் முன்னேறுபவை தாம். உதாரணமாக இந்தியா, இலங்கை, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா. மேற்சொன்ன எந்த அணியுமே முதல் நாளே ஆட்டத்தை தங்களுக்கு சாதகமாய் எவ்வளவு சீக்கிரம் வென்று முடிக்கலாம் என்று யோசிப்பதில்லை. ஒவ்வொரு செஷனாய் தங்கள் சீட்டுக்கட்டின் விரிப்பை கலைத்து கலைத்து அடுக்குவதே இவ்வணிகளின் தலைவர்களின் பணி. முதலில் தோல்வியை தவிர்த்தல், பின்னர் வாய் சிவக்குமென்றால் மட்டும் வெற்றிலை. ஆனால் தொண்ணூறுகளின் பிற்பகுதியில் டெய்லர் மற்றும் ஸ்டீவ் வாஹின் தலைமைகளின் கீழ் ஆஸ்திரேலியா ஒரு மாறுபட்ட தடத்தில் சென்றது. ஒரு சைக்கோ கொலைகாரனைப் போல் எதிரணிகளை கால் பதியும் இடமெல்லாம் முறியடித்து கிட்டத்தட்ட அப்படி செய்வதை விட ஒரு வேறுபட்ட நிதானமான அணுகுமுறை இருக்கவே முடியாது என்று திடமாக நம்பியது. ஒரு குமாஸ்தாவின் கோப்பைப் போல் அவர்கள் எதிரணிகளை சுலபமாக திறந்து மேலும் ஒன்றுமில்லை என்று அலுப்பில் மூடினர்.
இதற்கு காரணம் மற்றெந்த அணியையும் விட ஆஸ்திரேலியாவிடம் ஏகப்பட்ட அதிதிறமையாளர்கள் இருந்தனர் என்பதே வார்னே, மெக்ராத், கில்கிறிஸ்டு, வாஹ் சகோதரர்கள், ஹெய்டன் என்று ஒரு நீண்ட வரிசை. அப்படி ஒரே கட்டத்தில் ஒரு அணிக்கு அமைவது கால விசித்திரம். இத்தோடு இறுதிவரை தொடர்ந்து முரட்டுத்தனமாய் போராடும் அவர்களின் விடாப்பிடி ஆற்றலும் சேர்ந்து கொண்டது. பின்னர் இந்த அதிதிறமையாளர்கள் ஓய்வு பெற ஆஸ்திரேலியா சமதள வாழ்வுக்கு திரும்பியது. ரிக்கி தலைவரானார்; ஆஸி அணி திரும்பிப் பார்த்து தாம் இங்கிலாந்து, இந்தியா, தென்னாப்பிரிக்காவை விட ஒன்றும் மோசமில்லை என்று நினைத்து சமாதானம் கொண்டது. சமதள வாழ்வில் ஆஸ்திரேலிய அணி தன்னை தக்க வைக்க கடுமையாக உழைக்க நீண்ட நேரம் மௌனமாக பொறுமை காக்க வேண்டியிருந்தது. இயல்பான போராட்ட குணம் ஆஸ்திரேலியாவை இந்த மானுட அவதாரத்தின் போது அடிக்கடி சளி பிடித்து தும்மாமல் காப்பாற்றியது. ஆனால் விமர்சகர்களுக்கு இந்த வில் அம்புகளுடன் கானகத்தில் சின்ன சின்ன அரக்கர்களை கொன்று திரிந்த ஆஸ்திரேலியாவை பிடிக்கவில்லை. நேரம் கிடைத்த போதெல்லாம் “அந்த காலத்திலே என்று அலுத்துக் கொண்டார்கள். முக்கியமாக ஆஸ்திரேலியாவுக்கு ஒரு சராசரி குணம் விடாத வாசனையாக ஒட்டிக் கொண்டது. அவர்கள் தோல்வியை தவிர்ப்பது பற்றி ரொம்பவே அக்கறை கொண்டனர். இதனால் ரெண்டாயிரத்துக்கு பிறகு மிக சங்கடமான பல தோல்விகளை கண்டனர். ஆனாலும் பூர்வாங்க வாசனை கிடைத்து மூக்கு வேர்க்கும் போது ஒவ்வொரு விமர்சகனையும் ஆஸ்திரேலியா சிலிர்க்க வைத்தது. இந்த சிறப்பு குணத்தை மட்டும் அவர்கள் இழந்து விட இல்லை.
ஒவ்வொரு சராசரி அணியும் வெற்றி அடையப் போகும் போது வெற்றியை பற்றி கவலை கொள்ளும்; தோல்வியின் சறுக்கில் விரையும் போதோ தோல்வியை பற்றி கவலை கொள்ளும். தோல்வி உறுதி என்றானபின் ஒரு விடுதலை உணர்வை பெறும் அணி ஆஸ்திரேலியா மட்டும்தான். அந்நிலையில் அது தன் பிரக்ஞைக்குள் அரவை எந்திரத்தை நிறுத்தி தூய மிருக நிலைக்கு திரும்புகிறது. சவாலை எதிர்கொள்ளும் மிருகத்தை போல் தன் உடல்மொழியை மிகுந்த வன்மம் கொண்டதாக மாற்றுகிறது. பிறகு எதிரியை முடிந்த அளவுக்கு காயப்படுத்த, தளர்த்த முயல்கிறது. ஒரு சராசரி அணியைப் போல் எதிர்காலத்தை அலசி ஆராய்ந்து சோர்வடையவோ, முடிவை தீர்மானித்து சரணடைந்து தோள் உலுக்கவோ அது விழைவதில்லை. ஏனெனில் திறமைக்கு அடுத்தபடியாய் ஆஸ்திரேலியாவின் ஆளுமையின் சாரம் இந்த தூய மிருகநிலை குணம் தான்.
2010 ஜூலை மாதம் இங்கிலாந்தின் லீட்சில் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாம் டெஸ்டு ஆட்டத்தில் ஆஸ்திரேலியா ஒரு சராசரி அணியாகவே நான்கு நாட்களும் ஆடியது. பாகிஸ்தானுக்கு வெற்றி பெற நூற்று எண்பது ஓட்டங்களே இலக்கு நிர்மாணித்து ஆடி கிட்டத்தட்ட தோல்வி நிச்சயம் என்ற நிலையில் ஆஸ்திரேலியாவின் கண் முன் திடீரென சிவப்பு துண்டு காண்பிக்கப் பட்டது. “தோல்வி அக்கறை, வெற்றி பற்றின கவலை இனி தேவை இல்லை என்பதே அந்த சிவப்புத் துண்டு. இந்த தோல்வியை கடந்த மனநிலை ஒரு அணிக்கு இரண்டு காரணங்களால் தோன்றலாம். முதலில், உச்சபட்ச திறமை.தரும் தன்னம்பிக்கை. அடுத்து, தோல்வி உறுதி என்றான் பின், முட்டுசந்தை முட்டிய பின் ஏற்படும் விடுதலை உணர்வு. அதிதிறமையாளர்களை இழந்து தட்டையாகி விட்ட ஆஸ்திரேலியர் தோல்வியை நேரிடும் போது மட்டும் தங்கள் மரபான உச்சத்தை அடைகின்றனர். வருடங்கள் பின்னோட பத்தாண்டுக்கு முன்பான வலிமையை, பராக்கிரமத்தை சில மணிநேரங்களுக்கு பெறுகின்றனர். இந்த தற்காலிகமாய் உருமாறிய ஆஸ்திரேலியா அன்று பாகிஸ்தானின் மென்னியை கூடிய மட்டும் நெரித்தது. சில மூச்சுகள் இடைவெளியில் மூன்று விக்கெட்டுகளுடன் பாகிஸ்தான் பிழைத்தது. பின்னர் சன்னதம் இறங்கி ஆஸ்திரேலியா அடுத்த ஆட்டங்களில் தோசைக் கரண்டியை பற்றிக் கொண்டு மந்தமாய் நகர்ந்தது. விமர்சகர்கள் “அட என்று வியந்தனர். இம்மாதம் (அக்டோபர்) நடந்த இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் மூன்றரை நாளும் ஆஸ்திரேலியா, பாதி பரிணாம நிலையில், சொறிந்து விட்டும் பேன் பார்த்தும் பொழுதைக் கடத்தியது. கிளையை விட்டிறங்க தயங்கியது. இறுதியாய் இந்தியாவுக்கு 216 இலக்கை நிர்மாணித்து கிட்டத்தட்ட தோல்விதான் என்று எண்ணிய தறுவாயில் அது தனது தூயமிருக நிலைக்கு சட்டென்று திரும்பி நான்கு எதிரணி விக்கெட்டுகளை சாய்த்து ஐந்தாம் நாளுக்கு திரும்பியது. நான்காம் நாள் வரை இரு அணிகளும் ஒரு வழுக்குப்பாறைகள் அடந்த மலை ஏறுபவர்களைப் போல் மிகுந்த பிரக்ஞை உடன் மாறி மாறி தாக்கியும் பதுங்கியும் ஆடி வந்துள்ளனர். இனிமேல் ஏதும் இழக்க இல்லை என்ற நிலையில் ஆஸ்திரேலியா ஒரு வேறுபட்ட அணியானது. கிட்டத்தட்ட இந்தியா குழம்பிப் போனது. இரவில் கணக்குப் பார்த்து கடை அடைக்கத் தயாரான மளிகைக்கடை அண்ணாச்சியை பின்னிருந்து தோளில் தட்டி யாரோ அழைத்தது போல் திடுக்கிட்டது. இப்படியும் ஒரு அணி இருக்க முடியுமா என்று திகைத்தது. ஐந்தாம் நாள் ஆஸி 9 விக்கெட்டுகளை வீழ்த்திட இந்தியா அவிழ்ந்த ஆடையை கணநேரத்தில் பற்றி தப்பித்தது. இந்த ஆஸி அணியை எதிர்கொள்வது நெருப்பை அணைப்பது போல நண்பனானாலும் விரோதியானாலும் நெருப்பு தின்றே ஆக வேண்டும். நெருப்பான பின் ஆஸ்திரேலியாவுக்கு வேறு ஏதும் தெரியாது. கிரிக்கெட்டின் முன்கற்பு நிலை, களங்கமற்ற கனவுநிலை இப்படித்தான் இருக்க வேண்டும். முதலாம் டெஸ்டு ஆட்டத்தின் முடிவு முக்கியமல்ல. ஏனெனில் வெற்றி தோல்வியின் பாசாங்கை சில மணிநேரங்களில் ஆஸ்திரேலியா நிரூபித்து விட்டது. கிரிக்கெட்டின் ஆதிதேவதை மிகச்சில தருணங்களிலே விழித்துக் கொள்கிறாள் அப்போது கிரிக்கெட்டின் நிறம் மஞ்சளில் இருந்து சிவப்பாக மாறுகிறது.
Read More

Sunday, 10 October 2010

கதை சொல்ல வாழ்கிறேன் (மார்க்வெஸ்): அத்தியாயம் 22




என் அம்மா கவனித்தாள்; உடனடியாக மருத்துவரின் ஆதரவை வேண்டினாள், “யோசித்து பாருங்கள் தோழரே, அவள் சொன்னாள், “அவனுக்கு எழுத்தாளனாக வேண்டுமாம்”. மருத்துவரின் முகத்தின் அவர் கண்கள் பிரகாசித்தன. “எத்தனை அற்புதமானது தோழி!, அவர் சொன்னார், “அது இறைவனின் வரப்பிரசாதம் அல்லவா”. பிறகு என்னிடம் திரும்பினார், ‘கவிதையா?
“ நாவல்கள் மற்றும் கதைகள்”, நான் பதற்றத்துடன் சொன்னேன். அவர் உற்சாகமுற்றார், “டோனா பார்பரா படித்திருக்கிறாயா?”. நிச்சயமாய், நான் பதிலளித்தேன், “அதோடு ரோமுலா கேலிகோஸ் எழுதிய எல்லாவற்றையும்”. ஒரு திடீர் உத்வேகத்தால் புத்தூக்கம் பெற்றது போல் அவர் மராகெய்போவில் உரையாற்றின போது அவரை சந்தித்துள்ளதாக சொன்னார்; அவர் தனது நூல்களுக்கு தகுதியாக தோற்றம் கொண்டராக தெரிந்தார். நிஜம் என்னவென்றால் மிஸ்ஸிஸிப்பி தொடர் நாவல்களுக்கான என் 104 டிகிரி ஜுரத்தோடு எங்கள் உள்ளூர் நாவலின் மையதையல்களை பார்க்க ஆரம்பித்திருந்தேன்.
என் பால்யகால பயங்கரமாக விளங்கின அந்த மனிதருடன் இத்தனை எளிய நட்பார்ந்த உரையாடல் நிகழ்வது எனக்கு ஒரு அற்புதமாக பட்டது. அவரது உற்சாக போக்கோடு செல்ல நானும் தலைப்பட்டேன். “லா ஜிராபா அல்லது தெரி ஜிராப்” --  எல் ஹெரால்டாவில் எனது தினசரி விமர்சன பத்தி பற்றி சொன்னேன்; பிரமாதமான எதிர்பார்ப்புகளுடன் ஒரு பத்திரிகையை மிக விரைவில் நான் பிரசுரிக்க தலைப்படும் தகவலையும் சொன்னேன். மேலும் அதிக உறுதி பெற்று, அந்த திட்டம் பற்றி அவரிடம் கூறி, அதற்கு பரிந்துரைக்கப்பட்ட பெயரைக்க் கூட சொன்னேன்: குரோனிக்கா.
தரைமுதல் கால் வரை ஆராய்ந்து பார்த்தார். நீ எப்படி எழுதுவாய் என்று எனக்கு தெரியாது”, அவர் சொன்னார், “ஆனால் இப்போதே ஒரு எழுத்தாளர் மாதிரித்தான் பேசுகிறாய். அம்மா அவசரமாக உண்மையை விளக்கினாள்: எனக்கு திடமா டித்தளத்தை தரும் பல்கலைக்கழக கல்வியை நான் தொடர்ந்து படிக்கும் பட்சத்தில், நான் எழுத்தாளன் ஆவதை யாரும் எதிர்க்கவில்லை, மருத்துவர் எல்லாவற்றையும் சுருக்கமாக முடித்து, என் எழுத்தாள தொழில் பற்றி பேசினார். அவரும் எழுத்தாளராக விரும்பினார். ஆனால் அவர் பெற்றோர் என் அம்மா பயன்படுத்தும் அதே வாதங்களைக் கொண்டு அவரை, ராணுவ வீரராக்க முடியாத பட்சத்தில், மருத்துவம் படிக்க கட்டாயப்படுத்தினார். “ஆக, பாருங்கள் தோழி, அவர் தீர்மானமாக சொன்னார், “ நான் ஒரு மருத்துவன். இங்கே இதோ நான் எத்தனை நோயாளிகள் கடவுள் விருப்பப்படியோ அல்லது என் மருந்துகளின் காரணமாகவோ இறந்து போயினர் என்பது தெரியாமல் இருக்கிறேன்”. அம்மா வாயடைத்து போனாள்.
Read More

Thursday, 7 October 2010

ஒளியின் நிழல்





இந்த விதிர்க்கும் குளிரில்


கைகட்டி சுகமாய் காத்த


சிறுநீர்





கடுங்குளிர்


சிறுக சிறுக அகலும்


ஒளியின் நிழல்





நெடுந்தொலைவு குன்றில்


மரங்கள் உயரும்


வானமற்ற கணம்





நீயும் நானும்


புகைத்த சிகரெட்டுகள் இடம் பெயரும்


பனிப்புகை மண்டிய ஏரிக்கரை
Read More

Wednesday, 6 October 2010

பல் குத்துவது எத்தனை முக்கியம்?




எனக்கு ராசி, அதிர்ஷ்டம், விதி ஆகிய பிரயோகங்களில் நம்பிக்கை இல்லை. இவற்றில் மானுட மனஊக்கம் கலந்துள்ளது. சந்தர்ப்ப சுழற்சிகளில் ஒரு குருட்டத்தன்மை இருப்பதே உண்மை. அதனால் அதிர்ஷ்டம் துரதிர்ஷ்டம் என்றெல்லாம் சொல்லும் போது ஒரு கருத்து தன்னிச்சையாக உருவாகிறது. சந்தர்ப்ப மாற்றங்கள் ஒரு பெரும் மானுட அல்ல பிரபஞ்ச நன்மையை நோக்கி செலுத்தப்படுவன என்பதே அது. எனக்கு இறுதிகட்ட பிரபஞ்ச நன்மையில் நம்பிக்கை இல்லாததால் முக்கியமற்ற அன்றாட பேச்சில் மட்டுமே இவற்றை புரட்ட தலைப்படுவேன். ஆனால் இப்போது என் வாழ்க்கைப் போக்கின் நெளிவு வளைவுகளை பேச நினைக்கையில் சற்று சங்கடமாகிறது. ஆனாலும் ’ராசியுடனே’ ஆரம்பிக்கிறேன்.


எனக்கு வேலை விசயத்தில் அதிக ராசி இல்லை. அதாவது மனநிறைவு மற்றும் மகிழ்ச்சியை பொறுத்தமட்டில். 2006-இல் மாலைமலரில் செய்த வேலை எனக்கு மிகப்பிடித்தமான முதல் பணி. ஆனால் சில மாதங்களிலேயே எங்கள் குழு கலைந்தது. நானும் கிளம்ப வேண்டியதாகியது. பிறகு கிரீம்ஸ் ரோடில் ஒரு தனியார் நிறுவனத்தில் செய்திகளை சுருக்கி எழுதும் பணி பட்டியலில் இரண்டாவது. சில மாதங்களில் லே ஆப் என்று மென்னியை பிடித்து தள்ளினார்கள். பிறகு மூன்றாவதாக தற்போதுள்ள கல்லூரி வேலை. கல்லூரி வேலையில் மகிழ்ச்சியோடு காலவசதியும் ஒரு தனிச்சிறப்பு. ஆனால் அங்கும் ஒரு சிக்கல்.
எம்.பில் படிப்பை தொலைதூர கல்வி முறையில் முடித்தேன். வெகுவாக தாமதித்து சமீபமாகத்தான் ஆய்வை சமர்ப்பித்தேன். 2009 மேமாதத்துக்குள் எம்.பில் முடிக்காதவர்களை வீட்டுக்கு அனுப்ப ஒரு அரசாணை பிறப்பித்துள்ளார்கள். ஆகையால் கல்லூரியில் இருந்தும் விரைவில் வெளியேற்றப் பட்டு விடுவேன். இதற்கு பின் இன்னொரு கதை உள்ளது. 2005இல் நேரடி எம்.பில் வகுப்பில் சென்னை கிறித்துவக் கல்லூரியில் சேர்ந்தேன். அப்பாவுக்கு புற்றுநோய் ஏற்பட்டு கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட நான் நேரடி எம்.பிலில் இருந்து விலகி உடனே வேலைக்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இல்லாவிட்டால் ஒரேயடியாக பி.எச்.டி முடித்துவிட்டுத் தான் கிளம்பியிருப்பேன். கிறித்தவக் கல்லூரி மீது அப்படி ஒரு காதல் எனக்கு. இந்த அரசாணை பற்றி எனது துறைத்தலைவர் அழைத்து சொன்ன போது எனக்கு 2005-இல் பாதி கட்டணத்தை திரும்ப வாங்கி படிப்பில் இருந்து விலக நேர்ந்த அவலம் நினைவு வந்தது. இளங்கலை முதுகலை சேர்த்து ஐந்து வருடங்கள் நான் முதல் மாணவனாக வந்தேன். முதுகலையில் தங்கப்பதக்கம் பெற்றேன். என்னை விட பத்து பதினைந்து சதவீதம் குறைவாக மதிப்பெண்கள் பெற்ற சகமாணவர்கள் வசதியாக எம்.பில் படிக்க முடிந்ததை நினைக்கும் போது அநியாயமாக பட்டது. எத்தனையோ கவனிக்காமல் விடப்படும் அன்றாட தருணங்கள் போல் இச்சம்பவங்களை கோர்த்துப் பார்க்க ஒரு கதை உள்ளதாக தோன்றியது. துரதிஷ்டத்தின் கதை. என் விதியை கொஞ்ச நேரம் நொந்த பிறகு விதியே இல்லையே என்பது நினைவு வந்தது. (பிடிக்காத சில வேலைகளில் இருந்துள்ளேன். அங்கிருந்து நானாக கழன்று கொள்ள வேண்டும். அவர்களாக அனுப்பவே மாட்டார்கள்; எத்தனை மோசமாக பணி செய்தாலும், நடந்து கொண்டாலும்.)

இது போன்ற அல்லது மேலும் மோசமான ராசி பலருக்கும் இருந்திருக்கலாம்/இருக்கலாம். கண்ணீர்க் கதைகள் அதிகம் நினைவில் தங்கி இருக்கின்றன. அவற்றை மீட்டுவதில் அகங்காரம் கொஞ்சம் சுகம் காண்கிறது. சொறிந்து சுகம் காண்பது நமது நோக்கமல்ல அல்ல என்பதால் அதற்காக நான் இத்தனையும் சொல்லவில்லை. இப்படி சந்தப்பங்களை கதைப்படுத்தும் அபத்தம் ஏன் நடக்கிறது? வாழ்க்கையில் அப்படி ஒரு கட்டமைப்பு தர்க்கம் இல்லையே! வாழ்க்கையில் எப்படி மகிழ்ச்சியாக இருப்பது என்பது பற்றி ரசல் ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார்: Conquest of Happiness. அதில் மனிதனின் ஒரு ஆதாரப் பிரச்சனையை சுட்டுகிறார். சதா வாழ்க்கையை அர்த்தப்படுத்துவது. அதுவும் அகங்காரத்தை சும்மா சும்மா தொட்டு நக்கியபடி. இது குறைபட்ட உண்மையையே நமக்கு காட்டுகிறது. அதனால் மனிதன் வாழ்க்கையை நிறைவு செய்யப்படாத ஒரு கதையாக கற்பித்து அதில் தனக்கு மிகுந்த உணர்வெழுச்சி தரும் சம்பவங்களை சேர்த்து கொஞ்சம் கொஞ்சமாய் நிரப்பி வருகிறான். பிறரிடம் அரட்டையடிப்பது இதனாலேயே சுகமான ஒன்றாக உள்ளது. ஆனால் தர்க்கரீதியான கதையாக வாழ்க்கையை புனைவு செய்வது மகிழ்ச்சிக்கு எதிரானது. பிரக்ஞையை மறந்து விட்டு மனதின் தர்க்க மாவு மிஷினை அணைத்து விட்டு பிடித்த விசயங்களில் திசை திரும்பி ஈடுபடுவதே மகிழ்ச்சியின் திறவுகோல் என்று வலியுறுத்துகிறார் ரசல். எப்படியாயினும் தர்க்கம் என்கிற அருமையான கருவியைக் கொண்டு அகங்காரத்தை முதுகு சொறிவது வீண் தான். அதற்கு தேமேவென்று ’பொழுது போக்கலாம்’.
அடிக்கடி பல்குத்த வேண்டும் தான். நமது வாழ்க்கை சேதி முக்கியம் தான். ஆனால் ஒன்றும் அத்தனை முக்கியமில்லையே!
Read More

Tuesday, 5 October 2010

நீட்சே: சில அறிமுகக் குறிப்புகள் 1







ஆக மொத்தத்தில் வாக்னரின் இசையின்றி என்னால் என் இளமையை சகிக்க முடிந்திருக்காது. ஏனெனில் ஜெர்மானியர்களுடன் இருக்க நான் நிர்பந்திக்கப்பட்டிருந்தேன். தாங்கவொண்னா அழுத்தத்தில் இருந்து விடுபட ஒருவருக்கு கஞ்சா தேவைப்படும். சரிதான், எனக்கு வாக்னர் தேவைப்பட்டார். ஜெர்மனி சம்மந்தப்பட்ட அனைத்துக்கும் வாக்னர் ஒரு அற்புதமான விஷமுறிவாக இருந்தார் இருந்தாலும் விஷம் தான், அதை மறுப்பதற்கில்லை. (எக்கெ ஹொமெ, ‘நான் ஏன் இத்தனை புத்திசாலியாக உள்ளேன், நீட்ஷே)

நவீன ஐரோப்பிய சிந்தனையாளர்களில் சமகால வாசகர்களிடத்தில் ஆகப்பெரிய ஒளிவட்டம் பெற்றவரான பிரட்ரிக் நீட்சேவின் இளமைக் காலம் மற்றும் குடும்ப, மூதாதையர் பின்னணி தத்துவ/ இலக்கிய ஆர்வலர்களுக்கு மற்றும் ஆய்வாளர்களுக்கு சற்றே கற்பனாவாத கிளர்ச்சி தருவதாக இருந்துள்ளது.
குறிப்பாக, “கடவுள் இறந்து விட்டார் என்று பிற்காலத்தில் பிரகடனம் செய்வதற்கு குழந்தைப்பருவத்தில் அவருக்குள் கட்டுப்பெட்டித்தனமான மதநம்பிக்கைகள் மீது ஏற்பட்ட வெறுப்பு உள்ளடங்கி வளர்ந்து பிறகு விகாரமாய் மறுப்புவாதமாய் வெளிப்பட்டதாய் பிராயிடிய பாணியில் சுவாரஸ்யமான கண்டுபிடிப்புகள் நிகழ்த்தப்பட்டன. குறிப்பாய் வில் டியூரண்ட் அவரது பிரபல நூலான தத்துவத்தின் கதையில் இதற்காக பல ஆர்வமூட்டும் பக்கங்களை ஒதுக்கினார். அந்நூலில் நீட்சே பற்றின அத்தியாயத்தின் மையநோக்கே நீட்சேவுக்கு கர்த்தர் மீது ஒரு மறைமுக மையல் இருந்தது என்பது தான். ஆனால் நீட்சேவுக்கு கர்த்தரின் சாத்வீகமும் பெண்மையும் நிரம்பிய, கருணையை வலியுறுத்தும் ஆளுமை உவப்பாக இல்லை. அதற்கு காரணம் நீட்சே உள்ளார்ந்து மென்மையான இதயமும் கொண்டவராக இருந்தார் என்பதே. தாடிக்கு பதில் தோகையாக தொங்கும் மீசை வளர்த்தாலும் நீட்சேவுக்கு திருப்தி வரவில்லை. முரட்டுத்தனமும் பராக்கிரம நோக்கும் கொண்ட ஆதிக்கவாத ஆளுமை தனக்கு இயல்பில் இல்லையே என்று அவர் விசனித்தார். நெப்போலியனும், சீசரும் அவருக்கு முன்மாதிரிகளாக, லட்சிய நாயகர்களாக இருந்தார்கள். நீட்சே தனது கர்த்தர் நெப்போலியன் போல் (நிச்சயம் ஹிட்லர் அல்ல) இல்லையே என்று வருந்தினார். ஒரு அர்த்தத்தில், கர்த்தர் பலவீனர்களின் ஆதரவாளராக இருந்தார். இவ்வாறு வலுவற்றவனுக்கு பரிந்து அவனது வசதிப்படி சமூகம் தகவமைந்தால் அச்சமூகம் மிகுதிறமையாளர்கள், இச்சாசக்தியின் வலிமை பொருந்தியவர்கள், உயர்ந்த ஆளுமையாளர்களின் எழுச்சிக்கு எதிரானதாக இருக்கும். வழிதவறிய சராசரி ஆட்டுமந்தைக்கு தோதானதாக உருவாகும் ஒரு ஜனநாயக சமூகம் சராசரியாகவே இருக்கும் என்று நீட்சே நம்பினார். இதனாலே பலவீனமான ஒதுக்கப்பட்ட மக்களை நேசிக்க, ஆதரிக்க, மீட்க முயன்ற கர்த்தரை கடுமையாக கண்டித்து அவர் இறந்து விட்டதாக நீட்சே தனது “இவ்வாறு சொன்னான் ஜாரதுஷ்ரனில் அறிவித்தார். ஆனால் கைவிடப்பட்டவர்களின் கடவுள் மீது நீட்சேவுக்கு துறக்க முடியாத ஒரு ஈர்ப்பும், ஆழமான விசுவாசமும் இருந்தது. இந்த விசுவாசத்தை நீட்சேவின் பிரக்ஞை மனம் துண்டித்து மீள முயன்று தோற்றது. நீட்சே உள்முரண்பாடு கொண்டவரானார். விளைவாக அவர் தேவைக்கதிகமான வெறுப்பு மற்றும் விரோதத்தை கிறுத்துவ மதத்தின் மீது காட்டினார். வில் டியூரண்டின் இந்த சுயமுரண்பாட்டு கண்டுபிடிப்பை மற்றொரு நீட்சேயிய ஆய்வாளரான ரோய் ஜேக்சன் தனது Teach Yourself Nietszche நூலில் மறுக்கிறார்.

நீட்சே கிட்டத்தட்ட ஒரு சனாதனவாதி. குறிப்பாக அரச குலத்தவர் மற்றும் மேற்தட்டினவரின் மேன்மைக்காக கீழ்த்தட்டு மக்கள் தங்களது வாழ்வையும் காலத்தையும் தியாகம் செய்ய வேண்டும் என்று பிரஸ்தாபித்தவர். ஆனால் வாழ்க்கை சரிதை நிபுணத்துவ விமர்சகர்களுக்கு இவ்விசயத்தில் எலும்புகளும் புதைபடிவங்களும் எளிதில் வாய்க்காது. நீட்சேவின் சுமார் 200 முன்னோர்களில் யாரும் மேற்தட்டினர் இல்லை. பெரும்பாலானோர் கறிவெட்டுபவர்களாகவும், தச்சர்களாகவும் சிறுதொழில் புரிந்தவர்கள். முக்கியமாய் நீட்சேவின் முன்னோர்கள் வரிசையில் 20 பாதிரிமார்கள் உண்டு. அவரது தாத்தா லூதரன் தேவாலயத்தில் ஆயருக்கு நிகரான பொறுப்பாளர் பதவி ஒன்றை வகித்தார். நீட்சேவின் தந்தையான கார்ல் லுட்விக் சமய வழியை தொழிலாக கொண்டவர்தான். அவர் நீட்சே பிறந்த ரோக்கென் எனும் சின்ன ஜெர்மானிய கிராமத்து லூதரன் தேவாலயத்தில் பாதிரியாராக இருந்தார். நீட்சேவின் அம்மாவின் தந்தை பக்கத்து கிராமத்தின் லூதரன் தேவாலயத்தில் பாதிரியாராக சேவை செய்தார். ஐந்தரை வயது வரை நீட்சே பாதிரியாருக்காக திருச்சபை வழங்கிய வீட்டில் தான் வளர்ந்தார். பின்னரும் கூட அவர் ஆச்சாரமான சூழலில் தான் வளர்ந்தார். இங்கு இரு விசயங்களை நாம் வலியுறுத்த வேண்டும். லூதரன் திருச்சபை புயூரிடன் திருச்சபையுடன் ஒப்பிடுகையில் சுதந்திர சிந்தனையை ஊக்குவிப்பதாகத் தான் உள்ளது. ஜெர்மானிய அறிவுஜீவி மற்றும் கலாச்சார வாழ்வின் மேம்படலுக்கு லூதரன் திருச்சபை பெரும்பங்காற்றி உள்ளது. மேலும் பண்பாட்டு சமூக முன்னேற்றத்தை ஊக்குவிக்கும் மரபை கொண்டது லூதரன் திருச்சபை. அடுத்து, இந்த மதபூர்வ சூழலில் நீட்சேவின் குழந்தைப்பருவம் மிக மகிழ்ச்சியானதாகவும் நிறைவானதாகவும் இருந்ததாகவே தரவுகள் தெரிவிக்கின்றன. நீட்சே தனது சுயசரிதை எழுத்துக்களில் தனது குழந்தைக்காலத்தில் மதக்கலகம் ஏதும் செய்யும் விழைவு இருந்ததாக சொல்வதில்லை. இவ்விசயத்தில் நான் ஏன் கிறித்துவன் இல்லை என்ற பரபரப்ப்பாக கட்டுரை எழுதின பெர்டினன்டு ரஸலுடன் வேறுபடுகிறார் நீட்சே. The Conquest of Happiness என்ற நூலில் ரஸல் கிறித்துவ மதம் தனக்குள் பால்யத்தில் ஏற்படுத்திய பாவம் பற்றின குற்ற உணர்வுகள் பெரும்சுமையாக மாறி வாழ்வை மிகக் கசப்பாக மாற்றியதாக குறிப்பிடுகிறார். கிறித்துவம் மனிதனை பலவீனப்படுத்துவதாக நீட்சே கருதினாலும் மதரீதியான கசப்பனுபவங்கள் அவருக்கு இளமையில் இருந்ததாக குறிப்பில்லை. சொல்லப்போனால் இளைய நீட்சே அவரது நண்பர்களை விட சுயகண்டிப்பும், கட்டுப்பெட்டித்தனும் மிக்கவராக விளங்கினார். அதாவது மீசை முளைக்கும் முன்னான நீட்சே மாறுபட்ட மனிதராக, குறிப்பாய் மாறுபட்ட மகிழ்ச்சியான மனிதராக, இருந்தார். நீட்சேயின் சம்பிரதாய மதம் மீதான கலகத்துக்கு அவரது ஆச்சாரமான வளர்ப்பு காரணமா என்பது இன்னும் தெளிவான பதில்கள் அற்ற கேள்வியாகவே உள்ளது.

நீட்சேவின் வம்சாவளியினர் எளிய வணிகர்கள் மற்றும் சமயப்பணியாளர்கள் என்றும், நீட்சேவின் தத்துவத்தில் உள்ள வலதுசாரி மேற்தட்டு விருப்பசாய்வுக்கு காரணத்தை அவரது மரபணுவில் காண முடியாது என்றும் மேலே கண்டோம். ஆனால் நீட்சேவின் அப்பாவான கார்ல் லுட்விக்குக்கு மிகையான ராஜபக்தி இருந்திருக்க வேண்டும். அப்போதைய புருஷ்ய மன்னனின் பிறந்த நாளன்று தனது மகன் தோன்றியதால் அவனது முதல் பெயராக பிரடரிக் வில்ஹெம் என்று இட்டார் நீட்சேயின் அப்பா  நீட்சேவின் வாழ்வில் ராஜதொடர்பு அத்துடன் நின்று கொள்கிறது. நீட்சே எந்த மேட்டுக்குடி புரவலரிடமும் கூட உதவி நாடியதில்லை. மேலும் பேராசிரியர் பதவியை துறந்த பின்னர் அவர் மிச்ச வாழ்வெல்லாம் ஒரு மூட்டைக்குள் அடங்கி விடக்கூடிய பொருட்கள் மற்றும் குறைந்தபட்ச பணத்துடன் ஏறத்தாழ துறவியாகவே வாழ்ந்தார்.
நீட்சேவுக்கு ஒரு தம்பியும், தங்கையும் பிறந்தனர். அவரது வீட்டில் கூடவே இரு அத்தைகள் மற்றும் விதவையான தாய்வழிப்பாட்டியும் இருந்தனர். நீட்சே அவரது குடும்பத்து பெண்களால் பெரும் செல்லத்துடன் வளர்க்கப்பட்டார். இதன் விளைவாக அவர் ரெண்டரை வயதாகியும் பேசவில்லை. பேச ஆரம்பித்ததும் முதலில் சொன்ன சொல்லே பாட்டி என்பதே. இப்படி பெண் நிழல்களின் தாழ்வாரத்தில் அரவணைத்து வளர்க்கப்பட்டதால் நீட்சேவின் சுபாவத்தில் சற்று பெண்மை தோய்ந்திருக்க வேண்டும் என்றும் வில் டியூரண்டு நம்பினார். இந்த பெண்மைச் சாயலை மறைக்க நீட்சே பிற்காலத்தில் தன்னை முரட்டுத்தனமான ஆணாக காண்பிக்க பிரத்தனிக்கிறார். எழுத்தில் நிர்தாட்சண்ணியமற்ற கடுமையான தொனியை கொண்டு வருகிறார். நீட்சேவின் குழந்தைப்பருவம் நிச்சயம் நிலையான குடும்ப அமைப்பின் அமைதியும், பாதுகாப்பும் கொண்டு கழிந்தது. அவரது வீட்டில் ஒரு சின்ன பண்ணை நிலம், பழத்தோட்டம், பூந்தோட்டம் மற்றும் வில்லோ மரங்கள் சூழ்ந்த குளம் இருந்தன. இந்த இயற்கை செழிப்பு மிக்க சூழலில் சிறுவன் நீட்சே மீன் பிடித்தும், ஓடி விளையாடியும் தன் கற்பனையை வளர்த்தும் பொழுது கழித்தார். ஒப்பிடுகையில் அவரது இளமையின் பிற்பகுதி கடுமையான மைக்ரெய்ன் தலைவலி, அது தொடர்பான உடல் உபாதைகளால் நிந்திக்கப்பட்டார். இறுதியில் நண்பர்களை, காதலியை இழந்து தீவிர தனிமையால் பீடிக்கப்பட்டார். இப்படி பொதுவான இலக்கிய ஆளுமைகள் பற்றின உளவியல் சட்டகத்தை கடந்த ஒன்றாக அவர் வாழ்வு அமைந்தது. இனிமையும், உறவுகளின் பெரும் ஆதரவும் நிரம்பிய குழந்தைமையில் இருந்து கசப்பும், தனிமையும் மண்டின கீழுலகத்துக்கு அவர் வாழ்வின் பின் இருபதுகளில் பயணித்தார். ஆனால் நீட்சே தன்னை பீடித்த நெருக்கடிகள் பற்றி கூறும் போது லௌகீகமாக அன்றி அவற்றை பண்பாட்டு, தத்துவார்த்த தளத்தில் வைத்து அர்த்தப்படுத்துகிறார். முதலில் தரப்பட்டுள்ள வாக்னர் மேற்கோள் ஒரு நல்ல உதாரணம். இறுதியாக இங்கு, நீட்சேவின் வாழ்வை தெரிந்து கொள்வதன் நோக்கமென்ன என்று நாம் கேட்க வேண்டும். அது என்னவாயினும், அவரது வாழ்வை கருத்துக்களுடன் நேரடியாய் பொருத்தி அர்த்தப்படுத்துவதோ, உளவியல் பூதக்கண்ணாடி கீழ் பெருக்கிப் பார்ப்பதோ நம் பார்வையை கோணலாக்கி விடும் அபாயம் கொண்டது.
(தொடரும்)
Read More

Monday, 4 October 2010

மிதக்கும் கூழாங்கல்


நீந்தும்
கொக்கின்
பிம்பங்கள்

பறவை அலகின் நுனி
ஏரிக் கரை
கூழங்கல் மிதக்கும்

எட்டி எட்டியும் நிரம்பாத
இடைவெளி –
ஏரிக்கரை விளக்குக் கம்பங்கள்

அமிர்தாவில் வெளியான கவிதைகள்
Read More

Sunday, 3 October 2010

அப்பாவின் ஆல்பம்





செம்பழுப்பு மரம்


புயல்


லட்சம் இறகுகள்





ஒடுங்கின முள்-இலை மரம்


மழைக்குப் பின் நிச்சலன சாலை


திறக்க விரும்பாத அப்பாவின் ஆல்பம்





பறவை அலகின் நுனி


விரல்கள் கூசும் குளிர்


அலைநின்ற பொழுதொன்றில் கூழாங்கல்

அமிர்தாவில் வெளியான கவிதைகள்
Read More

Friday, 1 October 2010

ஐ.பி.எஸ் ஐ.ஏ.எஸ் மாயை



நான் கல்லூரிக்குள் நுழைந்து ஒன்றரை வருடமாகிறது. மாணவனாயிருக்கையில் மூளை மழுங்கிய வாத்தியார்களை பொருட்படுத்தியது இல்லை. சில வேளை பரிதாபமாகவும் இருக்கும்; மாணவர்களிடத்து அப்பாடு படுவார்கள். ஆனால் பணமும் அந்தஸ்தும் பெறுவது ஒரே நேரத்தில் எத்தனை எளிதாகவும் பெரும் பிரயத்தனமாகவும் உள்ளது என்பதை கண்டுணர்ந்த பிறகு கல்லூரி வாத்தியார்களின் பொதுவான அசட்டுத்தனங்களும், அபத்தங்களும் பார்க்கையில் உதட்டில் நகைப்பும் கண்களில் ரத்தமும் வருகிறது.
என் சிற்றனுபவத்துக்கு புரிந்தமட்டில் பொதுவாக கல்லூரி ஆசிரியர்கள் தாங்கள் பெறும் பத்து மடங்கு அதிக சம்பளத்துக்கு ஒரு பகுதி அறிவுக் கூர்மை கூட வெளியே இருப்பவர்கள் அளவுக்கு கொண்டிருப்பதில்லை. பள்ளி வாத்திகளும் ஒன்றும் குறைந்தவர்கள் இல்லை. சமீபத்தில் பி.எட் படித்து வரும் என் நண்பன் கூறினான். அவன் வகுப்பில் ஒரு கேள்வி கேட்கிறார்கள். ஆசிரியர் உளவியல் படித்திருப்பது எந்த விதத்தில் பயன் தரும். இதற்கு பல மாணவர்களும் தங்களுக்கு முடிந்தவரையில் சற்றும் சம்மந்தமில்லாத பதில்கள் தருகின்றனர். இதில் ஒரு பதில் தான் முதல் பரிசுக்கு தகும். அதாவது, மாணவர்களின் ஊட்டச்சத்து தேவை பற்றி அறிவுரை வழங்க உளவியல் பயன்படுமாம். ஏன் தோசை சுட பயன்படும் என வேண்டியது தானே. என்ன கொடுமை என்றால் இந்த வகுப்பில் உள்ளவர்களில் பெரும்பான்மை பத்து வருடங்களுக்கு மேல் பள்ளிகளில் வேலை பார்த்து வரும் முப்பத்தைந்து வயதுக்கு மேற்பட்டவர்கள். எனது பொதுவான வியப்பு இவர்களின் விவேகமும், ஞானமும் பற்றியது அல்ல.எப்படி கல்வித் துறையாக பார்த்து மந்தபுத்திக்காரர்கள் படையெடுக்கிறார்கள் என்பதே. ஒரே அனுமானம் இதுவே: அரசாங்க பணியில் கல்வித்துறை வசதியான, சிக்கலில்லாத எளிய வாழ்வை உறுதியாக்குகிறது. தங்கள் மூளைத்திறன் மீது அதிக நம்பிக்கை இல்லாதவர்களும், கடும் உழைப்பில் முன்னேறும் ஈடுபாடு அற்றவர்களும் இப்படியான வேலைகளை தேர்ந்து அதற்காக குறுகிய காலம் உழைத்து வாழ்நாள் முழுமைக்கும் தங்களை நிலைப்படுத்திக் கொள்கிறார்கள். எங்கும் போல் இங்கும் உதிரிகள் இருக்கலாம். நான் பொதுவான நிலைமையை சொல்கிறேன். இப்படி என் வியப்பை கல்வித்துறையாளர்கள் பெரும்பாலும் ஆக்கிரமித்துக் கொண்டிருக்க காலம் மற்றொரு வகை அரசுப் பணியாளர்களின் லட்சணத்தை காட்டிக் கொடுத்தது.
ஐ.ஏ.எஸ்/ஐ.பி.எஸ் படித்து தேர்கிறவர்கள் கூர்மையானவர்கள், மகாபுத்திசாலிகள் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். நேற்றும் இன்றும் என் கல்லூரியில் ஐ.பி.எஸ்ஸில் தேர்வாகி உயர்பதவிகளில் இருக்கும் இருவரை மாணவர் பிரதிநிதி குழுவை அங்கீகரிக்கும் நிகழ்ச்சி மற்றும் ஒரு பட்டமளிப்பு விழாவுக்கு சிறப்பு விருந்தினர்களாக அழைத்திருந்தார்கள். அவர்கள் மேடையில் பேசியது கேட்டதும் மழித்து விட்ட பொமரேனியன் நாயை பார்த்தது போல் சப்பென்று ஆகிவிட்டது. இருவருக்கும் அடிப்படையான மனக்கூர்மையோ, அறிவார்ந்த அவதானிப்புகளோ இல்லை. சரளமாக பேசும் மொழியாளுமை இல்லை. அதிலும் இன்றைக்கு பேசியவர் படு மோசம். பொருளற்ற வாக்கியங்களை புறாக்கள் காட்டமிடுவது போல் உதிர்த்துக் கொண்டே இருந்தார். முழுக்க முழுக்க அபத்த உளறல். இதற்கெல்லாம் முத்திரை பதிப்பது போல் முதலாமவரை அறிமுகப்படுத்திய ஒரு பேராசிரியர் பிளேட்டோவின் லட்சிய தத்துவ அரசனோடு ஒப்பிட்டார். ஏனாம்? அவர் நன்றாக படித்த விளையாட்டு வீரராக இருப்பதால். அப்படியே கடவுள் மறுப்பாளர் என்றால் நீட்சேயோடு ஒப்பிடுவாரோ? பேராசிரிய உளறலை எல்லாம் ஒரு தமாஷாக எண்ணியது போல் என்னால் ஐ.பி.எஸ் திறமைசாலிகளின் பேச்சை பொறுத்துக் கொள்ள  முடிய வில்லை. தத்துவம், இலக்கியம், வரலாறு என்று எந்த முக்கியமான துறைகளிலும் இவர்கள் ஊன்றிப்படித்தவர்கள் இல்லை என்பது தெளிவாக தெரிந்தது. நம்முடைய ஜெயமோகனையும், எஸ்.ராவையும் பேசவிட்டால் இந்த ஐ.பி.எஸ் மூளைவீங்கிகளை கோமணத்தோடு ஓட விடுவார்கள் என்பது உறுதி. சுருக்கமாக, பேராசிரியர்களை விட சற்று மேல் என்றாலும் நமது இளைய தமிழ் படைப்பாளிகள்/வாசகர்கள் அளவுக்கு கூட IQ இல்லாத இந்த யுபிஎஸ்ஸி மேதைகள் எப்படி இந்த கடினமான பரிட்சையை படித்து தேறுகிறார்கள்? யுபிஎஸ்ஸி பரிட்சைகள் உருவாக்குவது வெறும் மாயத்தோற்றமா? ஒரு அறிவுஜீவி தோற்றத்தை உருவாக்கும் அளவுக்கு கூட விசயஞானம் இல்லாதவர்களா இப்படியான பரிட்சையில் தேறுவது? ரெண்டு மணிநேரங்கள் இவர்கள் ஆற்றிய உரை என்ன இவர்கள் மொத்த வாழ்வுமே பெர்ட்னெண்டு ரஸலின் ஒரு சொற்றொடருக்கு சமானமல்ல என்பதை நிச்சயம் சொல்ல முடியும். எத்தனையோ கனவுகளோடு கல்லூரிகளில் எழுந்து வரும் ஒரு இளையதலைமுறைக்கு இவர்களா முன்மாதிரிகள்?
சர்ச்சை மற்றும் அரசியல் அடிதடிகளை முன்வைத்து தீவிர இலக்கியவாதிகளை நிராகரிக்கும் வைட்காலர் விமர்சகர்கள் இந்த யுபிஎஸ்ஸி மேதைகளின் பேச்சை, இத்தகைய அரிய வாய்ப்புகள் கிடைத்தால், கேட்டு நெஞ்சாற்றிக் கொள்ளும் படி வேண்டிக் கேட்கிறேன். ஆசிரியப் பெருமக்களையும் அரசுத்துறை மேதாவிகளையும் ஒருசேர மேடையில் பார்த்த போது “குருடனை குருடன் வழிநடத்தும் காலம்” என்ற ஷேக்ஸ்பியரின் வாசகம் நினைவு வந்தது.
Read More

Contact Us

So you think we’re the right folks for the job? Please get in touch with us, we promise we won't bite!



Designed By Blogger Templates