Friday, 29 October 2010

பிரபஞ்சனின் “காகித மனிதர்கள்”





பிரபஞ்சனின் காகித மனிதர்கள் நாவல் கல்லூரி மட்டத்தில் பேராசிரியர்களிடம் உள்ள ஊழல், வேசைத்தனம், மெத்தனம், அறிவீனம் ஆகியவர்றில் ஆரம்பித்து காவல்துறை, அரசியல்வாதிகள் என்று ஒவ்வொரு மட்டமாக மேலேறி இந்த மேன்மையான பண்புகளை அவர்களிடமும் கண்டு கண்டிக்கிறது, விமர்சிக்கிறது, சாடுகிறது. இந்நாவல் நக்கீரன் கோபாலின் உதயத்தில் வெளிவந்து பின்னர் நாவல் வடிவம் பெற்றது. நாவலில் படிக்கிறவர்களுக்கு ஒரு சின்ன குழப்பம் உள்ளது. அதாவது ஒரு விமர்சனத் தடுமாற்றம். சுருக்கமாக, வணிக நாவலா தீவிர நாவலா என்பதே அது. இந்நாவலை வணிக நாவலில் இருந்து மாறுபடுத்திக் காட்டும் சில பண்புகள் உள்ளன. முதலில் அவை.

வடிவ ரீதியாக காகித மனிதர்கள் சாவகாசமாக ஆரம்பிக்கிறது. வர்ணனைகளில் (சுஜாதா போல்) கிளுகிளுப்பு முயற்சிகள் இல்லை. முடிவில் நீண்ட உபதேசம் இல்லை; முடிவில் வலிந்து திணிக்கப்பட்ட நேர்மறைத் தன்மை கூட இல்லை. கள அமைப்பை பொறுத்த மட்டில் சாகச/உணர்ச்சிகர நாயகனை பிரதானப்படுத்த இல்லை; மத்தியதர வாழ்க்கை பின்னணி இல்லை. மையநீரோட்டத்தில் உள்ள கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் அரசியல் தலைவர்களை (குறிப்பாக எம்.ஜி.ஆரை) வலுவாக விளாசுகிறது. அடுத்து வணிக நாவலுடனான ஒற்றுமைகள்.
(அ) தர்மாவேசம். தீவிர நாவலில் இத்தன்மை செல்லுபடியாவது இல்லை. சமூக ஆய்வுகள், உளவியல், பரிணாமவியல், இருத்தலியல் தொடர்பான தத்துவங்கள் மற்றும் சொல்லாடல் அரசியல் பற்றின மொழியியல் பிரக்ஞை காரணமாக நவீன தீவிர நாவலில் எழுத்தாளன் அண்டுராயர் கழன்று போகும் அக்கறை இல்லாமல் சமூகத் தீமை நோக்கி சாடுவது இல்லை காரணம் நவீன எழுத்தாளனுக்கு மனிதனின் நன்மை மீதான நம்பிக்கையை விட அவநம்பிக்கையே அதிகம். (குறைந்த பட்ச அறவுணர்வு எழுத்தாளனுக்கு உள்ளதை நான் மறுக்கவில்லைதான்.) நம்பிக்கை மிகுதியால் தான் கோபம் வருகிறது; ஏமாற்றப்படும் உணர்வுடன் கண்டிக்கும் உரிமையும் இலவசமாக சேர்ந்து கொள்கிறது. பெரும்பாலான நவீன நாவலாசிரியர்கள் மனிதன் மேன்மையடைந்தால் மட்டுமே ஆச்சரியப்படுவார்கள்.
(ஆ) மக்கள் போராட்டம். பிரபஞ்சன் மாணவர் போராட்டத்தை பக்கத்துக்கு பக்கம் விதந்தோம்புகிறார். போராட்ட குணத்தை கைவிடக் கூடாது என்கிறார். ஆனால் எந்த போராட்டமும் அவர் நம்புவது போன்று பரிசுத்த நோக்கத்துடன் நிகழ்வதில்லை. குறிப்பாய் கல்லூரி மாணவர்களின் போராட்ட நோக்கமே வேறு. அதிகார மையத்தால் அவர்கள் தூண்டி விடப்பட்டு ஆட்டுவிக்கப்படுவதை கண்கூடாய் பார்த்திருக்கிறேன். பிரபஞ்சனுக்குள் இருக்கும் இந்த கற்பனாவாதப் போக்கு வணிகச் சூழலுக்கானது.
அடுத்து நல்லவர்கள். நல்லவர்கள் மீதான நம்பிக்கை வெகுகாலம் முன்பிருந்தே செத்து விட்டது. வணிகப் பத்திரிகைகள் அதை ஏதோ ஒரு புதைபடிவ வடிவத்தில் தக்க வைக்கின்றன. பிரபஞ்சன் நாவலில் மூன்று வகை மனிதர்கள் வருகிறார்கள்.
(1)     மகா நல்லவர்கள், நாணயஸ்தர்கள், கவரிமான் வால் முளைத்தவர்கள்.
(2)     மகாகெட்டவர்கள். கெடுதியில் ஊறித் திளைப்பவர்கள். அகங்காரத்தை பிரதான தீமையாக கொண்டவர்கள்.
(3)     இடைப்பட்டவர்கள்.
இந்த மூன்றாவது வகையினர்தாம் “காகித மனிதர்களையும் ஒரு இடைப்பட்ட நாவலாக மாற்றி விடுகிறது.
கடைசியாக, இந்நாவலில் கெட்டவர்கள் மட்டுமே காமத்தை முழுமையாக வெளிப்படுத்துபவர்கள். நல்லவர்களிடையே ஆண் பெண் நட்பு காமமற்ற அல்லது காமம் நாசூக்காக மறைக்கப்பட்ட ஒன்றாக இருக்கிறது. மாணவர்கள் இடையே எந்த வகையில் எல்லாம் காமம் இழையோடும் என்பது பற்றின எந்த பதிவும் நாவலில் இல்லை. நாவலின் பிரதான வில்லனின் தீமைகள் காமம் சார்ந்தது என்பதாலும், மிகையான காம விழைவு வாழ்வை அழிக்கும் என்று நாவலில் ஓரிடத்தில் உபதேசிக்கப்படுவதாலும் மாணவர்களிடையே ஒரு பரிசுத்தத்தை நிலவ வைக்க பிரபஞ்சன் கட்டாயப்படுத்தப் பட்டிருக்கலாம். ஆனால் காமத்தின் தீய விளைவுகள் பற்றின பதற்றம் என்பது ஒரு மத்தியதர வாழ்க்கை மதிப்பீடு என்பதில் சந்தேகம் இல்லை.
காகித மலர்கள் பற்றின ஒட்டுமொத்த விமர்சனம் அல்ல இது. அவர் எழுதின இந்நாவல் எப்படி மதில் மேல் நின்று மியாவ் என்கிறது என்று வியக்கும் முயற்சி மட்டுமே.
Share This

1 comment :

  1. வணிக எழுத்துக்கும், கலையுணர்வோடு புனையப்படும் எழுத்துக்கும் (மன்னிக்கவும்... இதை விட க்ளிஷே அல்லாத பதம் கிடைக்கவில்லை) இடையில் ஒரு மெல்லிய கோடு இருப்பதை, பிரபஞ்சனின் எழுத்துக்கள் மூலமாகத் தான் தெரிய வருகிறது.

    அலட்டலில்லாத, அதிக அதிர்வில்லாதது பிரபஞ்சனின் நடை. அத்தகைய நடைக்கு மற்ற உதாரணங்கள் - 'வானம் வசப்படும்','மானுடம் வெல்லும்'.

    அனந்தரங்கரின் டைரி குறிப்பை அப்படியே உருவிவிட்டார் என்று சிலர் குற்றம் சாட்டினாலும், என்னை பொறுத்த மட்டில் அவரின் சிறந்த நாவல் 'வானம் வசப்படும்' தான்...

    ReplyDelete

Contact Us

So you think we’re the right folks for the job? Please get in touch with us, we promise we won't bite!



Designed By Blogger Templates