“ கணையாழியில் இருந்து கதை திரும்பப் பெற்ற நணப்ர் ஒருவரின் கருத்து தெரிய வந்தது. ‘கணையாழி ஒரு குறிப்பிட்ட சிலரின், அவர்கள் வேறெங்கும் வெளியிட இயலாத சுயப் பிரதாபங்களை மாதாமாதம் தாங்கி வரும் வெளியீடாக மாறி விட்டது‘ ” (அசோகமித்திரன், கணையாழி, ஏப்ரல் 1983)
“காலச்சுவடுக்கு மாதாமாதம் அனுப்பப்படுகிற ஆயிரக்கணகான கவிதைகளை ஒருவர் தவறுதலாக ஒருசேர படித்து விட்டால் பைத்தியம் பிடித்து விடும்” (சுந்தரராமசாமி ஒரு தனிப்பட்ட உரையாடலில்)
”நீங்க என்னை கண்டுக்கிறதே இல்லை” என்று ஒரு காதலியோ மனைவியோ கேட்டால் ஒரு அனுபவஸ்த காதலன் திடுக்கிடுவதில்லை: அதன் உட்பொருள் வேறு என்று தெரிவதால். தமிழக தீவிர இலக்கியர்கள் ஒரு சகபடைப்பாளியிடம் “உன் படைப்புகள் நீர்த்து போய் விட்டன” அல்லது “நீ எழுதியதையே திரும்பத் திரும்ப படியெடுக்கிறாய்” என்று சொல்வது கூட மேற்கூறியபடியான அர்த்தமற்ற சொற்றொடர் தான். அரசு அலுவலக சீல் போல் ஆயிரக்கணக்கான முறை குத்தப்பட்டு பார்த்தவுடனே மறைபொருள் புரிபடும் அளவுக்கு பிரபலம் இச்சொற்றொடர். உங்கள் படைப்பாள சகபாடி உங்கள் மீது ஏதோ கோபமாக இருக்கிறார், அவருக்கு ஒரு தனிப்பட்ட புகார் உள்ளது என்பதை புரிந்து நீங்கள் உஷாராக வேண்டும்.
இது எளிய படைப்பாளிகளின் மழுங்கின ஆயுதம் மட்டுமே. பெரும்படைப்பாளிகள் நீண்ட விமர்சனக் கட்டுரைகள் எழுதி ஒரு சகபாடியை நிராகரிக்கிறார்கள் என்றால் வாசகர்களே அதன் தனிப்பட்ட நோக்கத்தை புரிந்து கொண்டு புன்னகையுடன் வாசிக்கிறார்கள். தடுக்கி புதிதாக இப்பக்கம் வருகிறவர்கள் மட்டும்தான் சற்று குழம்பிப் போகிறார்கள். அவர்கள் ”ஏன் இப்படி அக்கப்போர் செய்கிறீர்கள்” என்று நொந்து கொள்கிறார்கள். அவ்விமர்சனக் கட்டுரையில் பெரும்படைப்பாளிகள் ஒற்றை மணிவாசகம் ஒன்றை எழுத்தாளனுக்கு எதிராக சிலவேளை ஏவுவார்கள். அது வாசகனுக்கு முழுக்க புரியாததாகவும் அதனாலே மிகவும் வசீகரமானதாகவும், இருந்தால் வாழ்நாளெல்லாம் இலக்கை துரத்தும். சு.ரா அசோகமித்திரனிடம் வன்முறை இல்லை என்றதை, சு.ரா பிரக்ஞைபூர்வமானவர் என்று ஜெ.மோ சொன்னதை உதாரணங்களாகக் கொள்ளலாம். இந்த மணிவாசகங்களை ஆய்ந்து பரிசோதிக்கும் பொறுமை மற்றும் கூர்மை வாசகர்களுக்கு இருக்காது. செவ்வியல் படைப்புகளை விட இத்தகைய வாசகங்களுக்கு ஆயுள் அதிகம்.
அடுத்து, பத்திரிகை ஆசிரியர்கள் சந்திக்கும் தாக்குதல்கள். ஆசிரியர் படைப்பாளியாக இருந்தால் பாராட்டு மற்றும் நிராகரிப்பு என்ற பெயர்களில் அர்த்தமற்ற வாக்கியங்களை மலர்வளையங்களாய்கொண்டு மூடுவார்கள். ஒரு பத்திரிகை நடத்தும் படைப்பாளியின் படைப்புகளை ஒருவர் கடும் விமர்சனம் செய்தால் அவர் படைப்புகளை பிரசுரிக்காமல் ஆசிரியர் நிராகரித்து விட்டார் என்று உள்ளர்த்தம். ஒருவேளை பத்திரிகை ஆசிரியர் படைப்பாளி அல்லவென்றால் அப்பத்திரிகை மீது அதே விமர்சனம் சில மாற்றங்களுடன் முன்வைக்கப்படும். எனது படைப்புகள் நிராகரிக்கப்பட்ட போது நானும் இவ்வாறு உணர்ந்திருக்கிறேன். அப்பத்திரிகையை படிக்காமல் பல மாதங்கள் தவிர்த்திருக்கிறேன். நண்பரே, பிரசுரத்திற்கு பின்னுள்ள நுண்ணியக்கம் படைப்பின் தரம் பொறுத்ததல்ல என்று விளங்கிய பின் நான் இப்படி கொதிப்படைவதை நிறுத்தி விட்டேன். நமது சூழலில் பத்திரிகை ஆசிரியர்களை நண்பர்களாக்கி கொள்வது தான் பிரசுரிக்க எளிய வழி. பொதுவாக படைப்புகளுக்கு ஜுரம் பார்த்து சரியான வார்டுகளுக்கு அனுப்பும் பொறுமையும் ஈடுபாடும் பத்திரிகைகளுக்கு இல்லை. ஒவ்வொரு எழுத்தாளனும் தனக்கான ஒரு பத்திரிகை இடத்தை முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். அதற்கு இலக்கிய பயிற்சியை விட வேகமாய் ஓடி பேருந்தில் தொத்திக் கொள்ளும் சாமர்த்தியமே அவசியம். இப்படி இருக்கையை பிடித்த பின் வாசகனின் மதிப்பை அடைவது உங்கள் பொறுப்பு. அது எப்படியும் ரெண்டாம் பட்சம் தான். ஆனால் இந்த செயல் வரிசையை நேர்கீழாக மாற்றி செய்ய முயல்வது கால-ஆற்றல் வீணடிப்பு. இத்தனை தகிடுதித்தங்களும் வெறும் வேடிக்கைகள் தாம். இருப்பதிலே ஆபத்தானது அடுத்து வருவது.
பத்திரிகை ஆசிரியர், பதிப்பாளர், பெரும்படைப்பாளிகள் போன்ற உயர்தட்டு இலக்கியவாதிகள் உலக சிந்தனையாளர்கள், படைப்பாளிகள் பற்றி அடிப்படையற்ற அபிப்பிராயங்களை உருவாக்கி தூக்கி தள்ளுவண்டியில் இருத்தி நடக்க விடுகிறார்கள். பெரும்பாலும் தங்களை சந்திக்க வரும் இளம் படைப்பாளிகள்-வாசகர்களை பிரமிக்க வைக்க இப்படியான அடாவடி அவதானிப்புகளை முன்வைக்கிறார்கள். உதாரணமாக என் நண்பரிடம் ஒரு பதிப்பாளர் “சார்த்தர் ஒரு குப்பை. அவரை விட நீட்சே மேல்” என்று சொல்லி இருக்கிறார். சார்த்தரையும் நீட்சேவையும் ஒப்பிடுவது ஷேக்ஸ்பியரை விட பேக்கன் மேல் என்பது போல். இருவரும் இரு தட்டுகளில் இருப்பவர்கள். சார்த்தர் ஒரு தத்துவவாதி மட்டும் அல்ல பெரும்படைப்பாளி. நீட்ஷே படைப்பாளுமை கொண்ட தத்துவவாதி, ஆனால் படைப்பாளி அல்ல. தத்துவத்தை எடுத்துக் கொண்டாலும் நீட்சேவும் சார்த்தரும் ஒரே சரடை ஒட்டி விவாதித்தவர்கள் அல்ல. Reflective consciousness உள்ளிட்ட அவரது பங்களிப்புக்கு தத்துவ வரலாற்றில் ஒரு தனி இடம் உண்டு. சார்த்தரை நிராகரிப்பவர் சாகரடீஸ் முதற்கொண்டு வரலாறு நெடுக சுய-அறிதலை விவாதித்த அத்தனை பேருக்கும் பதில் சொல்லி நிராகரிக்க வேண்டும். மேலும் நீட்ஷே ஒரு இருத்தலியல்வாதியா என்பதே சர்ச்சைக்குரியது; காண்டிண்டல் தத்துவாதிகளின் நிலைப்பாடு அது.விமர்சனத்தின் பரந்த கடலை நாவால் ஒரே நக்கில் குடித்து விட முடியாது. இப்படி நக்கிக் குடிக்க நம் பூனை ஏன் முயல்கிறது? இதற்கு காரணங்கள் மேம்போக்கான வாசிப்பு, மூளைச்சோம்பல் மற்றும் ஆவேசமாக எதைச் சொன்னாலும் ஏற்கப்படும் என்ற ஏமாற்று தந்திரம்.
அடுத்து, இப்படி அதிரடியான தட்டை வாக்கியங்களை உருவாக்கும் சோம்பல் கொண்ட புத்திசாலிகள் ஒவ்வாமை என்ற ஒற்றை சொல் மூலம் வளையம் தாவுகிறார்கள். ஜெ.மோவுக்கு ஹெமிங்வேயும் லோசாவும் ஒவ்வாமை. சாருவுக்கு ஜேன் ஆஸ்டின் ஒவ்வாமை. அவ்வளவு தான். இதை சுவாரஸியமாக படிக்கும் வாசகனுக்கு பயன் என்ன? ஒவ்வாமைக்கு எந்த விமர்சன மதிப்பும் இல்லை என்பது மட்டுமல்ல அது ஒரு மோசமான மதிப்பீட்டு பழக்கத்தையும் உருவாக்குகிறது. ஒரு பிரலபமான நடிகருக்கு பிடித்த தின்பண்டங்கள் என்ன, நடிகை எங்கே முடிவெட்டுகிறாள் என்ற பட்டியலிலே இந்த அபிப்பிராயங்கள் சேரும். தமிழ் தீவிர இலக்கிய பரப்பில் முள் குத்தாமல் சஞ்சரிக்க, சோர்வடைந்து மூச்சு வாங்கி குனியாமல் இருக்க மேற்சொன்ன ஒற்றை வாக்கிய-ஒற்றை சொல் விமர்சனங்களின் பொருள் சூன்யம் என்பது புரிந்தாக வேண்டும். நூற்றாண்டுகளாய் பிரபஞ்ச உண்மையை கண்டு பிடிக்க விழைந்த தத்துவஞானிகள் கண்டடைந்த விடை அது. தமிழின் அத்தனை அர்த்தமற்ற சொற்களையும் கடந்தவன் தான் தேர்ந்த வாசகன்.
மிக நுண்ணியமான உண்மையை யதார்த்தமாகத் தலையில் தட்டிச் சொல்வது போல ஒரு கட்டுரை. ரசித்துப் படித்தேன். ஆனால், இந்த யதார்த்தத்தில், அடுத்த தலைமுறை தமிழ் எழுத்தாளர்கள் பேருந்தில் இடம் பிடிக்கத் தெரியாமல் தவறி விழுவது நேர்கையில் வருத்தமாக இருக்கிறது. ஒற்றைப் பேருந்துக்கு 52 இருக்கைகள்தானே ! பொங்கலுக்கு ரயில் முன்பதிவு செய்வது மாதிரி பல இலக்கிய ஊர்திகள் முன்பதிவிலேயே ஓடிக் கொண்டிருக்கிறதா என்று எனக்கு சந்தேகம் வருகிறது ....
ReplyDelete