Friday, 1 October 2010
ஐ.பி.எஸ் ஐ.ஏ.எஸ் மாயை
நான் கல்லூரிக்குள் நுழைந்து ஒன்றரை வருடமாகிறது. மாணவனாயிருக்கையில் மூளை மழுங்கிய வாத்தியார்களை பொருட்படுத்தியது இல்லை. சில வேளை பரிதாபமாகவும் இருக்கும்; மாணவர்களிடத்து அப்பாடு படுவார்கள். ஆனால் பணமும் அந்தஸ்தும் பெறுவது ஒரே நேரத்தில் எத்தனை எளிதாகவும் பெரும் பிரயத்தனமாகவும் உள்ளது என்பதை கண்டுணர்ந்த பிறகு கல்லூரி வாத்தியார்களின் பொதுவான அசட்டுத்தனங்களும், அபத்தங்களும் பார்க்கையில் உதட்டில் நகைப்பும் கண்களில் ரத்தமும் வருகிறது.
என் சிற்றனுபவத்துக்கு புரிந்தமட்டில் பொதுவாக கல்லூரி ஆசிரியர்கள் தாங்கள் பெறும் பத்து மடங்கு அதிக சம்பளத்துக்கு ஒரு பகுதி அறிவுக் கூர்மை கூட வெளியே இருப்பவர்கள் அளவுக்கு கொண்டிருப்பதில்லை. பள்ளி வாத்திகளும் ஒன்றும் குறைந்தவர்கள் இல்லை. சமீபத்தில் பி.எட் படித்து வரும் என் நண்பன் கூறினான். அவன் வகுப்பில் ஒரு கேள்வி கேட்கிறார்கள். ஆசிரியர் உளவியல் படித்திருப்பது எந்த விதத்தில் பயன் தரும். இதற்கு பல மாணவர்களும் தங்களுக்கு முடிந்தவரையில் சற்றும் சம்மந்தமில்லாத பதில்கள் தருகின்றனர். இதில் ஒரு பதில் தான் முதல் பரிசுக்கு தகும். அதாவது, மாணவர்களின் ஊட்டச்சத்து தேவை பற்றி அறிவுரை வழங்க உளவியல் பயன்படுமாம். ஏன் தோசை சுட பயன்படும் என வேண்டியது தானே. என்ன கொடுமை என்றால் இந்த வகுப்பில் உள்ளவர்களில் பெரும்பான்மை பத்து வருடங்களுக்கு மேல் பள்ளிகளில் வேலை பார்த்து வரும் முப்பத்தைந்து வயதுக்கு மேற்பட்டவர்கள். எனது பொதுவான வியப்பு இவர்களின் விவேகமும், ஞானமும் பற்றியது அல்ல.எப்படி கல்வித் துறையாக பார்த்து மந்தபுத்திக்காரர்கள் படையெடுக்கிறார்கள் என்பதே. ஒரே அனுமானம் இதுவே: அரசாங்க பணியில் கல்வித்துறை வசதியான, சிக்கலில்லாத எளிய வாழ்வை உறுதியாக்குகிறது. தங்கள் மூளைத்திறன் மீது அதிக நம்பிக்கை இல்லாதவர்களும், கடும் உழைப்பில் முன்னேறும் ஈடுபாடு அற்றவர்களும் இப்படியான வேலைகளை தேர்ந்து அதற்காக குறுகிய காலம் உழைத்து வாழ்நாள் முழுமைக்கும் தங்களை நிலைப்படுத்திக் கொள்கிறார்கள். எங்கும் போல் இங்கும் உதிரிகள் இருக்கலாம். நான் பொதுவான நிலைமையை சொல்கிறேன். இப்படி என் வியப்பை கல்வித்துறையாளர்கள் பெரும்பாலும் ஆக்கிரமித்துக் கொண்டிருக்க காலம் மற்றொரு வகை அரசுப் பணியாளர்களின் லட்சணத்தை காட்டிக் கொடுத்தது.
ஐ.ஏ.எஸ்/ஐ.பி.எஸ் படித்து தேர்கிறவர்கள் கூர்மையானவர்கள், மகாபுத்திசாலிகள் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். நேற்றும் இன்றும் என் கல்லூரியில் ஐ.பி.எஸ்ஸில் தேர்வாகி உயர்பதவிகளில் இருக்கும் இருவரை மாணவர் பிரதிநிதி குழுவை அங்கீகரிக்கும் நிகழ்ச்சி மற்றும் ஒரு பட்டமளிப்பு விழாவுக்கு சிறப்பு விருந்தினர்களாக அழைத்திருந்தார்கள். அவர்கள் மேடையில் பேசியது கேட்டதும் மழித்து விட்ட பொமரேனியன் நாயை பார்த்தது போல் சப்பென்று ஆகிவிட்டது. இருவருக்கும் அடிப்படையான மனக்கூர்மையோ, அறிவார்ந்த அவதானிப்புகளோ இல்லை. சரளமாக பேசும் மொழியாளுமை இல்லை. அதிலும் இன்றைக்கு பேசியவர் படு மோசம். பொருளற்ற வாக்கியங்களை புறாக்கள் காட்டமிடுவது போல் உதிர்த்துக் கொண்டே இருந்தார். முழுக்க முழுக்க அபத்த உளறல். இதற்கெல்லாம் முத்திரை பதிப்பது போல் முதலாமவரை அறிமுகப்படுத்திய ஒரு பேராசிரியர் பிளேட்டோவின் லட்சிய தத்துவ அரசனோடு ஒப்பிட்டார். ஏனாம்? அவர் நன்றாக படித்த விளையாட்டு வீரராக இருப்பதால். அப்படியே கடவுள் மறுப்பாளர் என்றால் நீட்சேயோடு ஒப்பிடுவாரோ? பேராசிரிய உளறலை எல்லாம் ஒரு தமாஷாக எண்ணியது போல் என்னால் ஐ.பி.எஸ் திறமைசாலிகளின் பேச்சை பொறுத்துக் கொள்ள முடிய வில்லை. தத்துவம், இலக்கியம், வரலாறு என்று எந்த முக்கியமான துறைகளிலும் இவர்கள் ஊன்றிப்படித்தவர்கள் இல்லை என்பது தெளிவாக தெரிந்தது. நம்முடைய ஜெயமோகனையும், எஸ்.ராவையும் பேசவிட்டால் இந்த ஐ.பி.எஸ் மூளைவீங்கிகளை கோமணத்தோடு ஓட விடுவார்கள் என்பது உறுதி. சுருக்கமாக, பேராசிரியர்களை விட சற்று மேல் என்றாலும் நமது இளைய தமிழ் படைப்பாளிகள்/வாசகர்கள் அளவுக்கு கூட IQ இல்லாத இந்த யுபிஎஸ்ஸி மேதைகள் எப்படி இந்த கடினமான பரிட்சையை படித்து தேறுகிறார்கள்? யுபிஎஸ்ஸி பரிட்சைகள் உருவாக்குவது வெறும் மாயத்தோற்றமா? ஒரு அறிவுஜீவி தோற்றத்தை உருவாக்கும் அளவுக்கு கூட விசயஞானம் இல்லாதவர்களா இப்படியான பரிட்சையில் தேறுவது? ரெண்டு மணிநேரங்கள் இவர்கள் ஆற்றிய உரை என்ன இவர்கள் மொத்த வாழ்வுமே பெர்ட்னெண்டு ரஸலின் ஒரு சொற்றொடருக்கு சமானமல்ல என்பதை நிச்சயம் சொல்ல முடியும். எத்தனையோ கனவுகளோடு கல்லூரிகளில் எழுந்து வரும் ஒரு இளையதலைமுறைக்கு இவர்களா முன்மாதிரிகள்?
சர்ச்சை மற்றும் அரசியல் அடிதடிகளை முன்வைத்து தீவிர இலக்கியவாதிகளை நிராகரிக்கும் வைட்காலர் விமர்சகர்கள் இந்த யுபிஎஸ்ஸி மேதைகளின் பேச்சை, இத்தகைய அரிய வாய்ப்புகள் கிடைத்தால், கேட்டு நெஞ்சாற்றிக் கொள்ளும் படி வேண்டிக் கேட்கிறேன். ஆசிரியப் பெருமக்களையும் அரசுத்துறை மேதாவிகளையும் ஒருசேர மேடையில் பார்த்த போது “குருடனை குருடன் வழிநடத்தும் காலம்” என்ற ஷேக்ஸ்பியரின் வாசகம் நினைவு வந்தது.
Share This
Subscribe to:
Post Comments
(
Atom
)
நன்றி டெனிம்
ReplyDeleteஅபிலாஷ்,
ReplyDeleteதாங்கள் கருத்தை என்னால் முழுமையாக ஏற்க முடியவில்லை. எதோ இரண்டு நபர்களை பார்த்து விட்டு மேம்போக்காக எழுதியது போல தோன்றுகிறது. UPSC Civil Service தேர்வுகள் மதிப்பெண்களை அடிப்படையாக கொண்டதுதான். ஆனால் வெகு சிலரே தங்கள் Memory power கொண்டு தேர்ச்சி பெறுகிறார்கள். ஆனால் சிவில் சர்வீஸ் மிகவும் ஒரு கடினமான தேர்வு முறை.
அது மதிப்பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தாலும், தேர்வு எழுதுபவர்களை மிகவும் சிந்திக்கவும், அவர்களுடைய அழமான அறிவையும் பரிசோதிக்கின்றது.
பாலாஜி, அப்படி இருந்தாலும் நான் குறிப்பிட்டவர்களை போன்ற மேலோட்ட மனிதர்கள் எப்படி தேர்வு பெறுகிறார்கள்?
ReplyDelete