உடலின் மதம்
முதல் அத்தியாயத்தில் கூறியிருந்தது போல் நீட்சே தன் அப்பாவின் மரணத்துக்குப் பின்னர் பல வயதுநிலைகளில் உள்ள குடும்பத்து பெண்களின் செல்லமும் ஆதுரமுமான கவனிப்புடன் வளர்ந்தார்; குறிப்பாக அக்கா எலிசபெத் தம்பி மீது அபார பாசம் கொண்டவராக இருந்தார். இந்த மிகை ஈடுபாடின் எதிர்மறை விளைவாக பின்னர் அவர் நீட்சேவின் பைத்திய பருவத்தில் தம்பியை ஒரு கைப்பாவையாக பயன்படுத்தினார். ஹிட்லரின் வழிகாட்டி என்று நீட்சே குறித்து இன்றுவரை பொதுப்புத்தியில் நிலைத்துள்ள புரிதலுக்கு அக்கா எலிசபெத் காரணமானார். அவருக்கு தனது அதிதிறமையாள தம்பியை கட்டுப்படுத்துவதில், அவரைக் கொண்டு பெருமை அடைவதில் பெரும் விருப்பம் இருந்துள்ளது.
நீட்சேவின் அம்மா விதவையான பிறகு மறுமணம் புரியவில்லை. தாய்வழிப் பாட்டியின் மறைவுக்கு பின் அவரது சொத்துக்கள் வந்து சேர நீட்சே குடும்பத்தின் மீதான பொருளாதார பாரம் லேசானது. நீட்சே உள்ளூர் ஆரம்பபள்ளி ஒன்றில் படித்தார். இங்கு அவரது இரு ஆத்மார்த்த நண்பர்கள் வில்ஹெம் பிண்டர் மற்றும் குஸ்டாவ் கிருக். இருவரும் உறவினர்கள் (மச்சினர்கள்). நீட்சேவின் பாட்டி பிண்டர் மற்றும் கிருக்கின் குடும்பத்துக்கு நெருக்கமானவர். பிண்டர் தனது பதினான்கு வயதில் எழுதிய சுயசரிதையில் நீட்சே பற்றி குறிப்பிடுகிறார். இக்குறிப்பில் நீட்சே ஒரு தனிமை விரும்பி, பக்திமான், இளகிய மனம் படைத்தவர், அத்தோடு சுதந்திர சிந்தனையாளரும், துடிப்பானவரும் கூட. அடக்கமும், நன்றி உணர்வும் மிக்க ஒரு சிறுவனாகவும் நீட்சே இப்பதிவில் தோன்றுகிறார். எதிர்காலத்தில் பாதிரியாராக தயார் செய்து வரும் ஒரு சமர்த்து சிறுவன். சுருக்கமாக, இந்த இளமைக் குறிப்பு நீட்சேவின் வாசகனுக்கு பரிச்சயமானதற்கு முற்றிலும் முரண்பட்ட ஒரு சித்திரத்தை தரும். நீட்சே உணர்ச்சிகளை அடக்கி சுயம் மறுத்த ஒரு இறுக்கமான நபராக இளமையில் இருக்கவில்லை என்பதும், அவர் மிக இயல்பான ஆரோக்கியமான பால்யத்தை கொண்டிருந்தார் என்பதும் இங்கு கவனிக்க வேண்டியவை. நீட்சேவின் இறைமறுப்பு மற்றும் மதநிராகரிப்பு வாதம் மெல்ல மெல்ல அவரது வாசிப்பு மற்றும் சிந்தனையின் ரசவாதத்தில் இருந்து விளைந்து வந்தவை. ஒரு பாதிரியாராக தயாரித்து வந்த சிறுவன் வளர்ந்த பின் கிறித்துவை தன் இலக்காக்கி கால்பந்தாடியது ஏன், அந்த நிலைப்பாட்டை எப்படி அடைந்தான் என்பதை நாம் தொடர்ந்து கவனிக்க வேண்டும். நீட்சே மதம், பண்பாடு, மொழி-அறிவியலுக்கு அடுத்தபடியாய் பெரும் ஆர்வம் கொண்டிருந்தது இசையில். நண்பன் குருக்கின் அப்பா ஒரு இசைக்கலைஞர். அவர் நகராட்சிக் குழுவின் உறுப்பினரும், இலக்கிய ஆர்வலராகவும் இருந்தார். நண்பர்களும் மூவருக்கும் இவர் கோத்தேவின் நூல்களை வாசித்து காண்பிக்கும் வழக்கம் கொண்டிருந்தார். இவரால் தூண்டப்பட்டே நீட்சே பியோனா கற்றுக் கொள்ள தொடங்கினார்.
1854இல் நீட்சே இரு தனியார் ஆரம்பப் பள்ளியில் சேர்க்கப்பட்டார். அங்கு மேற்சொன்ன இரு நண்பர்களுடன் நீட்சே லத்தீனும் கிரேக்கமும் கற்கிறார். இங்கிருந்து மூவரணி டோம்ஜிம்னேசியம் என்ற உயர்நிலைப்பள்ளிக்கு சென்றது. நீட்சேவின் இயல்பான புத்திசாலித்தனம் மற்றும் கல்விச் சிறப்புகள் காரணமாக இங்கிருந்து அவருக்கு பொபோர்டா என்ற ஒரு சிறப்பான மற்றும் கராறான போர்டிங் பள்ளியில் இலவச தங்கும் வசதியுடம் இடம் கிடைத்தது. ஏற்கனவே சொல்லியது போல் நீட்சே ஒரு பெரும் படிப்பாளியாக மட்டும் அல்லாது வெளிப்புற நடவடிக்கைகளிலும் அதிக ஈடுபாடு கொண்டவராக இருந்தார். தொடர்ந்து நடை மற்றும் நீச்சல் பயிற்சி மற்றும் ஸ்கேட்டிங்கில் ஈடுபட்டதன் காரணமாக அவர் திடகாத்திரமானவராக வளர்ந்தார். இது ஒரு முக்கியமான தகவல். ஏன் என்று பார்ப்போம்.
“இவ்வாறு சொன்னான் ஜாருதஷ்டிரனில்” நீட்சே மனித அறிவுக்கு உடல் தான் அடிப்படை அல்லது ஆதார பிறப்பிடம் என்கிறார். அண்ட சராசரங்களை பற்றி விசாரங்களின் போதும் நமது வேர் இந்த பௌதிக இருப்பில் தான் உள்ளது. ஜுரம் பார்க்க வெப்பமானியின் ஒரு பகுதி நாவின் மடிப்புகளில் உறங்குவது போல். அதாவது மனித அறிதல் என்பது அவனது பௌதிக குறைகளைக் கடந்து செல்ல சாத்தியப்படக் கூடிய ஒன்று தான். ஆனால் இந்த அறிதல் அசலானதாக இருக்க வேண்டுமானால் மனிதன் தன் பௌதிக இருப்பை பொருட்படுத்த வேண்டும், ஏற்றுக் கொள்ள வேண்டும். பௌதிக இருப்பில், தன் உடலில், அதிருப்தி கொள்கிறவன் ஒரு பொறிக்குள் அகப்பட்டு கொள்கிறான். சுயவெறுப்பு தான் இந்த பொறி. இந்த பொறி ஒரு சுற்றுவட்டப் பாதையாக மாறுகிறது. தப்பித்து வெளியேற அவன் தன்னையே நிந்திக்கிறான். சுற்றி சுற்றி தன்னிலே வந்து நிற்கிறான். சுவர்க்கத்தை அடைய சதா மன்னிப்புக்காக மன்றாடும் ஒரு பலவீனனாகிறான். சுவர்க்கத்தை அடைகிறானோ இல்லையோ ஒரு கச்சிதமான நரகத்தை உருவாக்கி அதை ஆராதிக்கிறான். உடலை வெறுக்கிறவன் உறக்கம் போன்ற போதை வழிகளையும் தேர்கிறான். ”ஜாருதஷ்டிராவில்” எப்படி வெற்றிகரமாய் உறங்குவது என்று போதிக்கும் ஒரு ஞானி வருகிறார். அதாவது மத-துவேசிகள் அல்லது அவநம்பிக்கையாளர்களும் மற்றொரு சுற்றுப் பாதைக்குள் நுழைகிறார்கள். அது உறக்கம் போன்று ஏதாவது ஒன்றாக இருக்கலாம். உறக்கம் உடலை புதுப்பிக்க என்று அல்லாமல் பிரச்சனைகள் மற்றும் போதாமைகளை தள்ளிப் போடும் தப்பித்தல் முறையாக மாறுவதை நீட்சே இங்கு குறிப்பிடுகிறார். எப்படி குழலிசை காற்றால் மட்டும் உருவாவதில்லையோ அது போல் மனிதப் பயணமும் ஆவி வடிவானதோ அபௌதிகமானதோ அல்ல. அசோகமித்திரனின் சிறுகதை ஒன்றில் வரும் யோகியைப் போல் உடல்துவேசிகள் தாம் ஞானம் பெறப் போகும் நாளை கணக்கு கூட்டி காத்திருந்து காத்திருந்து சுயநிந்திக்கிறார்கள். அக்கதையில் சித்தி பெறப் போகும் தேதியை ஒரு நாளுக்கு முன்பாய் கணக்கிட்டு ஏமாற்றமடைந்து உடல் அழிகிறார் யோகி. ஆவியானவரின் விண்ணுலகுக்காக விழைபவர்கள் இரண்டு விசயங்களை கருத வேண்டும் என்கிறார் நீட்சே. முதலில் சொர்க்கம் செல்ல வழி இல்லை. அந்த சாத்தியப்பாடு மனிதனுக்கு இல்லை. அவனது நிறையும் குறையும் அவனது உடல் தான். அவனே அந்த உடல் தான். இதைக் கொண்டு எவ்வளவு தூரம் பறக்க முடியுமோ அவ்வளவு தான் மனித எல்லை. அதனால் உடலானவனுக்கு ஆவியானவர் இடத்து செல்ல மார்க்கம் இல்லை. ஆனால் முடிந்த மட்டும் உயர்ந்த ஆன்மீக வாழ்வை வாழ அவன் முயல வேண்டும். சுய இரக்கம் அற்ற தேடலாக இது அமைய வேண்டும். மாரடிப்பு பிரார்த்தனைகளோ பாதபூஜைகளோ அல்ல நீட்சே பரிந்துரைக்கும் உயர் ஆன்மீகம். உயர்ந்த மற்றும் தூய மிருகநிலையிலான கலாச்சாரத்தில் இருந்து தான் இந்த ஆன்மீக வாழ்வு சாத்தியமாகும் என்று நீட்சே நம்புகிறார். இந்த பயணம் தொடுவான எல்லையில் போய் முடியும். மனிதன் இங்கே நிறுத்திக் கொள்ள வேண்டியது தான். இந்த மாபெரும் பிரபஞசத்தை தனது சிறு உடலால் அறிய விழையும் உயிர் மட்டுமே தான் என்றும், தனது அறிதல் குறைபட்டது என்றாலும் அது தன்னைப் பொறுத்தவரையில் நிறைவானதும் சிறப்பானதும் என்றும் சுயநிர்ணயித்துக் கொண்டபின் மனிதன் என்ன செய்ய வேண்டும்? தன்னை விட விரிந்த ஆன்மீக பரப்பு கொண்ட மனிதன் எதிர்காலத்தில் உருவாக தன் காலத்தை அர்ப்பணிக்க வேண்டும். தனது குறைபட்ட ஆனால் தனதளவில் முழுமையான வாழ்வு முக்கியம் என்று அவன் புரிந்து கொள்ள வேண்டும். மகாசமுத்திரத்தில் தானும் ஒரு துளி என்ற அறிதல் மனிதனின் தனிமை உணர்வை போக்கி முழுமை உணர்வை அளிக்கும். தனது ஒவ்வொரு செயலுக்கும் ஒரு அர்த்தம் மற்றும் முக்கியத்தும் உள்ளது என்ற தீர்மான உணர்வு அவனுக்கு ஒரு நிரந்தர திருப்தியை அளிக்கிறது. எதிர்காலத்தை சமகாலத்துடன் இணைக்கும் ஒரு கண்ணி மட்டுமே தான் என்று அவன் நம்புகிறான். சுருக்கமாக, தன்னை ஒரு உடலின் விழிப்பு என்று அறிந்து கொண்ட பின் ஒரு மனிதன் செய்ய வேண்டியது தனது வாழ்வு வீணல்ல, அது எதிர்கால மானுட குல மேம்பாட்டின் விசைக்கான ஒரு சிறுதிருகல் என்று புரிந்து கொள்ள வேண்டும். அதன் பின் பிரம்மாண்ட காலக் கடிகாரத்தின் முள்ளின் பின்னுள்ள எண்ணற்ற சக்கரங்களில் ஒன்றாக மாறி விடுவான்.
பிற்காலத்தில் கடுமையான தலைவலியாலும், அது தொடர்பான உபாதைகளாலும் அவஸ்தைப் பட்டாலும் நீட்சே சோர்ந்து விடவில்லை. எண்ணங்களின் குளிர்பதனப்பெட்டிக்குள் முடங்கி விடவில்லை; முடிந்த வரையில் உடலுடன் ஒன்றி வாழவே முயன்றிருக்கிறார். “இவ்வாறு சொன்னான் ஜாருதஷ்டிரன்” எழுதின காலகட்டத்தில் ஒரு சிறுமூட்டையுடன் மலைப்பாதை ஒன்றில் தினமும் நெடுந்தூரம் நடைபயிற்சி மேற்கொள்ள பழக்கம் கொண்டிருந்தார் அவர். அப்படியான ஒரு நடைபயிற்சியின் போது தான் ஜாருதஷ்டிரனைப் பற்றி நூல் எழுதும் சிந்தனைகள் அவருக்கு ஏற்படுகிறது என்பது ஒரு சுவாரஸ்யமான குறிப்பு. நூலில் ஜாருதஷ்டிரன் நெடுந்தூரம் நடக்கக் கூடியவனாக, உடல் களைத்தால் மட்டும் தூங்குபவனாக, உடல் பசித்தால் உண்பவனாக வருகிறான். ஒரு கழைக்கூத்தாடியின் உடலை அடக்கம் செய்ய நெடுந்தூரம் அலைந்து கானகம் வரும் ஜாருதஷ்டிரன் பின்னர் அவ்வுடலை ஓநாய்கள் புசிக்க ஒரு மரத்துளையில் விட்டு விட்டு கிளம்புகிறான். இந்த தகவல் நமது விவாதத்திற்கு மிக முக்கியமானது. அதாவது, உடல் மிகையாக துவேசிக்கப்பட வேண்டியதோ கொண்டாடப் படவேண்டியதோ அல்ல. அது ஒரு உடல் அவ்வளவு தான். ஆற்றைக் கடந்ததும் படகை விட்டு விடுவது போல் உடலின் வேலை முடிந்ததும் அதை கைவிட்டு விடலாம். பற்று போதாமையில் இருந்து அல்லவா கிளம்புகிறது. உடலின் போதாமை பற்றி விசனிக்காதவன் அநாவசிய பற்று கொள்வதில்லை. நீட்சே உடலை எப்படி புரிந்து கொள்கிறார் என்பது மிக முக்கியமான ஒரு கோணம்.
நீட்சே மனிதன் எதிர்கால மனிதனுக்காக வாழ தன்னை தியாகம் செய்ய வேண்டும் என்று ஜாருதஷ்டிரன் வழி அடிக்கடி கூறுகிறார். அதனால் ஒரு இயல்பான கேள்வி எழுகிறது. நமது நிகழ்காலத்தை எதற்காக எதிர்காலத்துக்காக, என்றோ தோன்றப் போகிறவனுக்காக தியாகம் செய்ய வேண்டும்? எதிர்காலத்துக்கு என்ன நிச்சயம் உள்ளது? இந்த கேள்விக்கு விடை காண்பதற்கு நீட்சேவின் பள்ளிக் காலத்தில் இருந்து நாம் கல்லூரிப் பருவத்திற்கு, ஒரு பேராசிரியராக அவர் பணி புரிந்த அனுபவத்திற்கு செல்ல வேண்டும். அடுத்த அத்தியாயத்தில் ...
ஒரு கழைக்கூத்தாடியின் உடலை அடக்கம் செய்ய நெடுந்தூரம் அலைந்து கானகம் வரும் ஜாருதஷ்டிரன் பின்னர் அவ்வுடலை ஓநாய்கள் புசிக்க ஒரு மரத்துளையில் விட்டு விட்டு கிளம்புகிறான் என்பதை படித்த போது அசோகமித்திரனின் பிரயானம் சிறுகதை நினைவுக்கு வந்தது.
ReplyDelete