Tuesday, 5 October 2010

நீட்சே: சில அறிமுகக் குறிப்புகள் 1







ஆக மொத்தத்தில் வாக்னரின் இசையின்றி என்னால் என் இளமையை சகிக்க முடிந்திருக்காது. ஏனெனில் ஜெர்மானியர்களுடன் இருக்க நான் நிர்பந்திக்கப்பட்டிருந்தேன். தாங்கவொண்னா அழுத்தத்தில் இருந்து விடுபட ஒருவருக்கு கஞ்சா தேவைப்படும். சரிதான், எனக்கு வாக்னர் தேவைப்பட்டார். ஜெர்மனி சம்மந்தப்பட்ட அனைத்துக்கும் வாக்னர் ஒரு அற்புதமான விஷமுறிவாக இருந்தார் இருந்தாலும் விஷம் தான், அதை மறுப்பதற்கில்லை. (எக்கெ ஹொமெ, ‘நான் ஏன் இத்தனை புத்திசாலியாக உள்ளேன், நீட்ஷே)

நவீன ஐரோப்பிய சிந்தனையாளர்களில் சமகால வாசகர்களிடத்தில் ஆகப்பெரிய ஒளிவட்டம் பெற்றவரான பிரட்ரிக் நீட்சேவின் இளமைக் காலம் மற்றும் குடும்ப, மூதாதையர் பின்னணி தத்துவ/ இலக்கிய ஆர்வலர்களுக்கு மற்றும் ஆய்வாளர்களுக்கு சற்றே கற்பனாவாத கிளர்ச்சி தருவதாக இருந்துள்ளது.
குறிப்பாக, “கடவுள் இறந்து விட்டார் என்று பிற்காலத்தில் பிரகடனம் செய்வதற்கு குழந்தைப்பருவத்தில் அவருக்குள் கட்டுப்பெட்டித்தனமான மதநம்பிக்கைகள் மீது ஏற்பட்ட வெறுப்பு உள்ளடங்கி வளர்ந்து பிறகு விகாரமாய் மறுப்புவாதமாய் வெளிப்பட்டதாய் பிராயிடிய பாணியில் சுவாரஸ்யமான கண்டுபிடிப்புகள் நிகழ்த்தப்பட்டன. குறிப்பாய் வில் டியூரண்ட் அவரது பிரபல நூலான தத்துவத்தின் கதையில் இதற்காக பல ஆர்வமூட்டும் பக்கங்களை ஒதுக்கினார். அந்நூலில் நீட்சே பற்றின அத்தியாயத்தின் மையநோக்கே நீட்சேவுக்கு கர்த்தர் மீது ஒரு மறைமுக மையல் இருந்தது என்பது தான். ஆனால் நீட்சேவுக்கு கர்த்தரின் சாத்வீகமும் பெண்மையும் நிரம்பிய, கருணையை வலியுறுத்தும் ஆளுமை உவப்பாக இல்லை. அதற்கு காரணம் நீட்சே உள்ளார்ந்து மென்மையான இதயமும் கொண்டவராக இருந்தார் என்பதே. தாடிக்கு பதில் தோகையாக தொங்கும் மீசை வளர்த்தாலும் நீட்சேவுக்கு திருப்தி வரவில்லை. முரட்டுத்தனமும் பராக்கிரம நோக்கும் கொண்ட ஆதிக்கவாத ஆளுமை தனக்கு இயல்பில் இல்லையே என்று அவர் விசனித்தார். நெப்போலியனும், சீசரும் அவருக்கு முன்மாதிரிகளாக, லட்சிய நாயகர்களாக இருந்தார்கள். நீட்சே தனது கர்த்தர் நெப்போலியன் போல் (நிச்சயம் ஹிட்லர் அல்ல) இல்லையே என்று வருந்தினார். ஒரு அர்த்தத்தில், கர்த்தர் பலவீனர்களின் ஆதரவாளராக இருந்தார். இவ்வாறு வலுவற்றவனுக்கு பரிந்து அவனது வசதிப்படி சமூகம் தகவமைந்தால் அச்சமூகம் மிகுதிறமையாளர்கள், இச்சாசக்தியின் வலிமை பொருந்தியவர்கள், உயர்ந்த ஆளுமையாளர்களின் எழுச்சிக்கு எதிரானதாக இருக்கும். வழிதவறிய சராசரி ஆட்டுமந்தைக்கு தோதானதாக உருவாகும் ஒரு ஜனநாயக சமூகம் சராசரியாகவே இருக்கும் என்று நீட்சே நம்பினார். இதனாலே பலவீனமான ஒதுக்கப்பட்ட மக்களை நேசிக்க, ஆதரிக்க, மீட்க முயன்ற கர்த்தரை கடுமையாக கண்டித்து அவர் இறந்து விட்டதாக நீட்சே தனது “இவ்வாறு சொன்னான் ஜாரதுஷ்ரனில் அறிவித்தார். ஆனால் கைவிடப்பட்டவர்களின் கடவுள் மீது நீட்சேவுக்கு துறக்க முடியாத ஒரு ஈர்ப்பும், ஆழமான விசுவாசமும் இருந்தது. இந்த விசுவாசத்தை நீட்சேவின் பிரக்ஞை மனம் துண்டித்து மீள முயன்று தோற்றது. நீட்சே உள்முரண்பாடு கொண்டவரானார். விளைவாக அவர் தேவைக்கதிகமான வெறுப்பு மற்றும் விரோதத்தை கிறுத்துவ மதத்தின் மீது காட்டினார். வில் டியூரண்டின் இந்த சுயமுரண்பாட்டு கண்டுபிடிப்பை மற்றொரு நீட்சேயிய ஆய்வாளரான ரோய் ஜேக்சன் தனது Teach Yourself Nietszche நூலில் மறுக்கிறார்.

நீட்சே கிட்டத்தட்ட ஒரு சனாதனவாதி. குறிப்பாக அரச குலத்தவர் மற்றும் மேற்தட்டினவரின் மேன்மைக்காக கீழ்த்தட்டு மக்கள் தங்களது வாழ்வையும் காலத்தையும் தியாகம் செய்ய வேண்டும் என்று பிரஸ்தாபித்தவர். ஆனால் வாழ்க்கை சரிதை நிபுணத்துவ விமர்சகர்களுக்கு இவ்விசயத்தில் எலும்புகளும் புதைபடிவங்களும் எளிதில் வாய்க்காது. நீட்சேவின் சுமார் 200 முன்னோர்களில் யாரும் மேற்தட்டினர் இல்லை. பெரும்பாலானோர் கறிவெட்டுபவர்களாகவும், தச்சர்களாகவும் சிறுதொழில் புரிந்தவர்கள். முக்கியமாய் நீட்சேவின் முன்னோர்கள் வரிசையில் 20 பாதிரிமார்கள் உண்டு. அவரது தாத்தா லூதரன் தேவாலயத்தில் ஆயருக்கு நிகரான பொறுப்பாளர் பதவி ஒன்றை வகித்தார். நீட்சேவின் தந்தையான கார்ல் லுட்விக் சமய வழியை தொழிலாக கொண்டவர்தான். அவர் நீட்சே பிறந்த ரோக்கென் எனும் சின்ன ஜெர்மானிய கிராமத்து லூதரன் தேவாலயத்தில் பாதிரியாராக இருந்தார். நீட்சேவின் அம்மாவின் தந்தை பக்கத்து கிராமத்தின் லூதரன் தேவாலயத்தில் பாதிரியாராக சேவை செய்தார். ஐந்தரை வயது வரை நீட்சே பாதிரியாருக்காக திருச்சபை வழங்கிய வீட்டில் தான் வளர்ந்தார். பின்னரும் கூட அவர் ஆச்சாரமான சூழலில் தான் வளர்ந்தார். இங்கு இரு விசயங்களை நாம் வலியுறுத்த வேண்டும். லூதரன் திருச்சபை புயூரிடன் திருச்சபையுடன் ஒப்பிடுகையில் சுதந்திர சிந்தனையை ஊக்குவிப்பதாகத் தான் உள்ளது. ஜெர்மானிய அறிவுஜீவி மற்றும் கலாச்சார வாழ்வின் மேம்படலுக்கு லூதரன் திருச்சபை பெரும்பங்காற்றி உள்ளது. மேலும் பண்பாட்டு சமூக முன்னேற்றத்தை ஊக்குவிக்கும் மரபை கொண்டது லூதரன் திருச்சபை. அடுத்து, இந்த மதபூர்வ சூழலில் நீட்சேவின் குழந்தைப்பருவம் மிக மகிழ்ச்சியானதாகவும் நிறைவானதாகவும் இருந்ததாகவே தரவுகள் தெரிவிக்கின்றன. நீட்சே தனது சுயசரிதை எழுத்துக்களில் தனது குழந்தைக்காலத்தில் மதக்கலகம் ஏதும் செய்யும் விழைவு இருந்ததாக சொல்வதில்லை. இவ்விசயத்தில் நான் ஏன் கிறித்துவன் இல்லை என்ற பரபரப்ப்பாக கட்டுரை எழுதின பெர்டினன்டு ரஸலுடன் வேறுபடுகிறார் நீட்சே. The Conquest of Happiness என்ற நூலில் ரஸல் கிறித்துவ மதம் தனக்குள் பால்யத்தில் ஏற்படுத்திய பாவம் பற்றின குற்ற உணர்வுகள் பெரும்சுமையாக மாறி வாழ்வை மிகக் கசப்பாக மாற்றியதாக குறிப்பிடுகிறார். கிறித்துவம் மனிதனை பலவீனப்படுத்துவதாக நீட்சே கருதினாலும் மதரீதியான கசப்பனுபவங்கள் அவருக்கு இளமையில் இருந்ததாக குறிப்பில்லை. சொல்லப்போனால் இளைய நீட்சே அவரது நண்பர்களை விட சுயகண்டிப்பும், கட்டுப்பெட்டித்தனும் மிக்கவராக விளங்கினார். அதாவது மீசை முளைக்கும் முன்னான நீட்சே மாறுபட்ட மனிதராக, குறிப்பாய் மாறுபட்ட மகிழ்ச்சியான மனிதராக, இருந்தார். நீட்சேயின் சம்பிரதாய மதம் மீதான கலகத்துக்கு அவரது ஆச்சாரமான வளர்ப்பு காரணமா என்பது இன்னும் தெளிவான பதில்கள் அற்ற கேள்வியாகவே உள்ளது.

நீட்சேவின் வம்சாவளியினர் எளிய வணிகர்கள் மற்றும் சமயப்பணியாளர்கள் என்றும், நீட்சேவின் தத்துவத்தில் உள்ள வலதுசாரி மேற்தட்டு விருப்பசாய்வுக்கு காரணத்தை அவரது மரபணுவில் காண முடியாது என்றும் மேலே கண்டோம். ஆனால் நீட்சேவின் அப்பாவான கார்ல் லுட்விக்குக்கு மிகையான ராஜபக்தி இருந்திருக்க வேண்டும். அப்போதைய புருஷ்ய மன்னனின் பிறந்த நாளன்று தனது மகன் தோன்றியதால் அவனது முதல் பெயராக பிரடரிக் வில்ஹெம் என்று இட்டார் நீட்சேயின் அப்பா  நீட்சேவின் வாழ்வில் ராஜதொடர்பு அத்துடன் நின்று கொள்கிறது. நீட்சே எந்த மேட்டுக்குடி புரவலரிடமும் கூட உதவி நாடியதில்லை. மேலும் பேராசிரியர் பதவியை துறந்த பின்னர் அவர் மிச்ச வாழ்வெல்லாம் ஒரு மூட்டைக்குள் அடங்கி விடக்கூடிய பொருட்கள் மற்றும் குறைந்தபட்ச பணத்துடன் ஏறத்தாழ துறவியாகவே வாழ்ந்தார்.
நீட்சேவுக்கு ஒரு தம்பியும், தங்கையும் பிறந்தனர். அவரது வீட்டில் கூடவே இரு அத்தைகள் மற்றும் விதவையான தாய்வழிப்பாட்டியும் இருந்தனர். நீட்சே அவரது குடும்பத்து பெண்களால் பெரும் செல்லத்துடன் வளர்க்கப்பட்டார். இதன் விளைவாக அவர் ரெண்டரை வயதாகியும் பேசவில்லை. பேச ஆரம்பித்ததும் முதலில் சொன்ன சொல்லே பாட்டி என்பதே. இப்படி பெண் நிழல்களின் தாழ்வாரத்தில் அரவணைத்து வளர்க்கப்பட்டதால் நீட்சேவின் சுபாவத்தில் சற்று பெண்மை தோய்ந்திருக்க வேண்டும் என்றும் வில் டியூரண்டு நம்பினார். இந்த பெண்மைச் சாயலை மறைக்க நீட்சே பிற்காலத்தில் தன்னை முரட்டுத்தனமான ஆணாக காண்பிக்க பிரத்தனிக்கிறார். எழுத்தில் நிர்தாட்சண்ணியமற்ற கடுமையான தொனியை கொண்டு வருகிறார். நீட்சேவின் குழந்தைப்பருவம் நிச்சயம் நிலையான குடும்ப அமைப்பின் அமைதியும், பாதுகாப்பும் கொண்டு கழிந்தது. அவரது வீட்டில் ஒரு சின்ன பண்ணை நிலம், பழத்தோட்டம், பூந்தோட்டம் மற்றும் வில்லோ மரங்கள் சூழ்ந்த குளம் இருந்தன. இந்த இயற்கை செழிப்பு மிக்க சூழலில் சிறுவன் நீட்சே மீன் பிடித்தும், ஓடி விளையாடியும் தன் கற்பனையை வளர்த்தும் பொழுது கழித்தார். ஒப்பிடுகையில் அவரது இளமையின் பிற்பகுதி கடுமையான மைக்ரெய்ன் தலைவலி, அது தொடர்பான உடல் உபாதைகளால் நிந்திக்கப்பட்டார். இறுதியில் நண்பர்களை, காதலியை இழந்து தீவிர தனிமையால் பீடிக்கப்பட்டார். இப்படி பொதுவான இலக்கிய ஆளுமைகள் பற்றின உளவியல் சட்டகத்தை கடந்த ஒன்றாக அவர் வாழ்வு அமைந்தது. இனிமையும், உறவுகளின் பெரும் ஆதரவும் நிரம்பிய குழந்தைமையில் இருந்து கசப்பும், தனிமையும் மண்டின கீழுலகத்துக்கு அவர் வாழ்வின் பின் இருபதுகளில் பயணித்தார். ஆனால் நீட்சே தன்னை பீடித்த நெருக்கடிகள் பற்றி கூறும் போது லௌகீகமாக அன்றி அவற்றை பண்பாட்டு, தத்துவார்த்த தளத்தில் வைத்து அர்த்தப்படுத்துகிறார். முதலில் தரப்பட்டுள்ள வாக்னர் மேற்கோள் ஒரு நல்ல உதாரணம். இறுதியாக இங்கு, நீட்சேவின் வாழ்வை தெரிந்து கொள்வதன் நோக்கமென்ன என்று நாம் கேட்க வேண்டும். அது என்னவாயினும், அவரது வாழ்வை கருத்துக்களுடன் நேரடியாய் பொருத்தி அர்த்தப்படுத்துவதோ, உளவியல் பூதக்கண்ணாடி கீழ் பெருக்கிப் பார்ப்பதோ நம் பார்வையை கோணலாக்கி விடும் அபாயம் கொண்டது.
(தொடரும்)
Share This

3 comments :

  1. hi!
    neyatsay was hitlers favouraite!
    adolf followed neyatsay's writings,
    which is most powerfull will be lead the world.untill another one defeat them.

    ReplyDelete
  2. நீட்ஷே இனவாதத்தை வெறுத்தவர் ஜெகதீஷ். யூதவெறுப்பாளராக அவர் தோன்ற காரணம் நீட்ஷேவின் சகோதரி எலிசபத் செய்த குளறுபடி. நவீன விமர்சகர்கள் இதை கண்டறிந்து விளக்கியிருக்கிறார்கள்.

    ReplyDelete

Contact Us

So you think we’re the right folks for the job? Please get in touch with us, we promise we won't bite!



Designed By Blogger Templates