Tuesday, 29 January 2013

போலியோவும் ஒரு பிணமும் சில சமூகக் கேள்விகளும்



இந்தியாவில் போலியோவை ஒழித்து இரண்டு வருடமாகிறது. யோசித்துப் பார்த்தால் இது ஒரு மகத்தான சாதனை. உலக அரங்கில் துவங்கிய போலியோ அழிப்பு திட்டத்தில் இந்தியா கலந்து கொண்டு கடந்த முப்பது வருடங்களுக்கு மேலாக எண்ணற்ற மருத்துவர்களின் பங்களிப்புடன் ஊர் ஊராக ஒவ்வொரு ஏழை வீடாக சென்று இலவச தடுப்பு மருந்து கொடுத்து ஒரு சமூகப் புரட்சியின் கடப்பாட்டுடன் லட்சியவாதத்துடன் செயல்பட்டிருக்கிறது. இதற்காக 2000இல் இருந்து வருடந்தோறும் சுமார் ஆயிரம் கோடி செலவழித்து வருகிறோம். நம்மூரில் இப்படி நடந்துள்ளது வியப்புக்குரிய காரியம்.


ஒன்று இந்தியாவில் இப்படியாக திட்டமிட்டு கச்சிதமாக ஒரு காரியத்தை பண்ணுவது என்பது கற்பனைக்கு அப்பாலானது. ஆனால் பொதுப்பணித் திட்டங்களில் ஆரம்பத்தில் பண்ண வேண்டியதை கடைசியில் செய்தும் கடைசியில் பண்ண வேண்டியதை ஒருக்காலும் செய்யாமல் இருக்கிற நம் இந்தியாவில் தான் நாம் இந்த போலியா ஒழிப்பு இலக்கை எட்டியிருக்கிறோம் என்பது நிச்சயமாய் சாதனை தான்.

அடுத்து போலியோ ஒரு சிறுபான்மை நோயாக இருந்தும் நாம் அதற்காக ஆயிரம் கோடி வருடந்தோறும் செலவழிக்கிறோம் என்பது. இதை வீண் செலவு என ஒரு பக்கம் அறிஞர்களும் ஆய்வாளர்களும் அரசை விமர்சிக்க அரசு தொடர்ந்து இத்தொண்டை செய்து வருகிறது. உலக அரங்கில் இந்தியாவின் அந்தஸ்தை உயர்த்த பூஜ்யம் நோய்த்தாக்குதல் என்கிற இந்த புள்ளியல் விபரம் முக்கியம். ஆனால் இது வெறும் எண்களை எட்டுவதற்கான அரசியல் சாகசம் என விமர்சிக்கிறவர்கள் இருக்கிறார்கள். வலதுசாரி சிந்தனை கொண்டவர்கள் இவர்கள். இவர்கள் தாம் மேற்கிலும் ஆசிய நாடுகளிலும் ஒருமித்து பொதுப்பணத்தை தொழில் அபிவிருத்திக்கு மட்டுமே செலவழிக்க வேண்டும் என குரல் கொடுப்பவர்கள். தொழில்வளர்ச்சி என்கிற பேரில் நடப்பது கார்ப்பரேட்டுகளுக்கு அரசியல் ஆதரவும் நிதி உதவிகளும் அளிப்பது தான்.
நம்மூரில் எண்பதுகளில் போலியோ வருடத்துக்கு நான்கு லட்சம் வரை பாதிக்கப்பட்டார்கள். தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் வந்த படங்களில் கூட நீங்கள் போலியோ பாதிக்கப்பட்ட குழந்தைகளைக் காண முடியும். எல்லா தெருவிலும் நடக்க முடியாத கால் சூம்பின ஒருத்தர் இருப்பார். போலியோ வைரஸ் ஒரு விநோதமான கிருமி. அதன் உத்தேசம் கை கால் முடம் அல்ல. எதேச்சையாக அது தாக்குகிறவர்களில் ஆயிரத்தில் ஒருவர் மட்டுமே வாதம் பாதிக்கப்படுகிறார்கள். இதனாலேயே போலியோ சிகிச்சைக்கான ஆய்வுகள் உலகளவில் பெருமளவில் நடக்கவில்லை. பாதிக்கப்பட்டவர்களுக்கான காலிப்பர் போன்ற புரோஸ்தெடிக் கருவிகளும் பரவலாக எளிதில் கிடைப்பதில்லை. விலையும் அதிகம். காரணம் ஒன்று பாதிக்கப்படுபவர் எண்ணிக்கை குறைவு. இன்னொன்று இன்றைய தலைமுறை அதில் இருந்து கிட்டத்தட்ட முழுக்க மீண்டு விட்டது. போக்கு இப்படியிருக்க நம் அரசு மட்டும் தன்னந்தனியாக ஒரு சிறு எண்ணிக்கை நோயாளிகளைக் காப்பாற்ற போராடி வந்துள்ளது என்பது நிச்சயம் பாராட்டத்தக்கது.
 

போலியோ வைரஸ் HIVஐ போலன்றி தடுக்க எளிதானது. எண்பதுகளிலேயே தடுப்பு மருந்து பயன்படுத்தப்பட்டது. ஆனால் பிரச்சாரம் பரவலாக கிராமங்களைப் போய்ச் சேரவில்லை. என் உறவுகளில் உள்ள சுமார் இருபது குழந்தைகளில் யாருக்குமே தடுப்பூசி போடவில்லை. பெற்றோர்கள் அதன் முக்கியத்துவத்தை உணரவில்லை. இந்த குழந்தைகளில் எனக்கு மட்டுமே போலியோ வந்தது. இன்றும் பலர் என்னிடம் ஏன் உனக்கு தடுப்பு மருந்து தரவில்லை எனக் கேட்கிறார்கள். அவ்வளவு எளிய விசயத்தை செய்ய ஏன் உன் பெற்றோர்கள் தவறினார்கள் என்கிறார்கள். என் பெற்றோர் ஏழைகளோ படிப்பறிவு அற்றவர்களோ அல்ல. அவர்களின் இந்த தவறுக்குப் பின் ஒரு இந்தியத்தனம் இருந்தது.

படிப்போ அந்தஸ்தோ பணமோ நமக்கு எந்த நவீனப் பண்புகளையும் தருவதில்லை. எதையும் திட்டமிட்டு கராறாக தொலைநோக்குடன் செய்வது, தர்க்க ரீதியான சிந்தனை செயல்பாடு ஆகியவை இந்திய மனதுக்கு அந்நியமானது. என் அப்பா ஆங்கிலத்திலும் தமிழிலும் ஏராளமாக வாசிக்கக் கூடியவர். தி.க சாய்வு கொண்டவர். சின்ன வயதில் இருந்தே என்னிடம் அறிஞர் அண்ணாவைப் பற்றி பேசி பேசித் தான் வளர்த்தார். ஆக அவர் பகுத்தறிவாளராக இருந்திருக்க வேண்டும். ஆனால் அப்படி இல்லை.
 

இளமையில் அவர் என்னை பல பிற்போக்குத்தனமான சிகிச்சைகளுக்கு உட்படுத்தினார். ஏனெனில் அவர் அடிப்படையில் பழமைவாதியாகத் தான் இருந்தார். இந்த முரண்பாடு கொண்ட நபர்களை ஏராளம் பின்னால் சந்தித்தேன். ஒப்பிடுகையில் என் அம்மா போன்ற குறைந்த கல்வியறிவு கொண்டவர்களின் அறியாமையை புரிந்து கொள்ள முடிகிறது. என் அம்மா எனக்கு போலியோ வரக் காரணம் நான் குழாந்தையாய் இருக்கையில் எங்கள் வீட்டில் ஒரு நாய் இருந்தது தான் காரணம் என நம்பி வருகிறார். ஆக படிப்பு உள்ளவர்களும் இல்லாதவர்களும் நம்மூரில் ஒரே மாதிரி தான் யோசிக்கிறார்கள்.

இருப்பதை இருக்கிறபடியே விட்டு விட்டால் தானே சரியாய் போகும் என்பது ஒரு இந்திய மனப்பான்மை. இந்த தர்க்க வறுமையைப் பற்றி வி.எஸ் நைப்பால் தனது India Wounded Civilization நூலில் விரிவாக அலசியிருக்கிறார். நம் பிரச்சனை படிப்போ அறிவோ அல்ல. சிந்தனையில் இருக்கிற கோளாறு தான். எதையுமே அலசக் கூடாது, ஆதாரபூர்வமாக தர்க்கரீதியாக யோசிக்கக் கூடாது என்பதில் பிடிவாதமாக இருக்கிறோம். நமக்கு வசதியான விசயங்களை நம்புவதற்கு பல கற்பனைகளை உருவாக்கி கொள்கிறோம். அதில் ஒன்று இந்தியாவில் எல்லாமே உள்ளது, நாம் பல்லாயிரம் வருடங்களாக இப்படித் தான் இருந்தோம், மேற்கத்திய ஆக்கிரமிப்பால் எல்லாவற்றையும் இழந்து விட்டோம், மீண்டும் பழம் பண்பாட்டை மீட்டால் எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வு கிடைத்து விடும் என்பது. ஒரு அறிவியல் நவமுதலாளித்துவ யுகத்தில் நாம் எவ்வளவு பின் தங்கிப் போயிருக்கிறோம் என்கிற தாழ்வுமனப்பான்மையினால் வருகிற எண்ணம் தான் இது.

இந்த எண்ணம் ஒரு மறுப்புவாதத்தை தூண்டுகிறது. என் தலைமுறையில் யாருக்கும் தடுப்பு மருந்து தரவில்லை, என் உறவினர்களும் அதை தன் குழந்தைகளுக்கு செய்யவில்லை நான் மட்டும் ஏன் செய்ய வேண்டும் என என் பெற்றோர்களை யோசிக்க வைக்கிறது. இதே எண்ணம் தான் இந்தியாவில் முன்பு அணுகுண்டு, விமானங்கள் உட்பட்ட அனைத்து தொழில்நுட்பமும் இருந்தது என படுபேத்தலாக சோ போன்றவர்களை எழுத வைத்தது. இன்னொரு புறம் நம் இளையதலைமுறையை அத்தனை நவீன வசதிகளையும் அனுபவித்தபடி நுனிநாக்கு ஆங்கிலம் பேசியபடி பெண்களையும் தாழ்த்தப்பட்டவர்களையும் மிக பிற்போக்குத்தனமாக நடத்த வைக்கிறது. நவீனத்தின் அடிப்படை விழுமியங்களான ஜனநாயகம், சம உரிமை, சுயசிந்தனை, தனிமனித முக்கியத்துவம் ஆகியவற்றை ஒழித்து ஆனால் நவீனத்தின் அத்தனை வசதிகளையும் பயன்படுத்துவதே இந்திய போக்கு. கேட்டால் எங்களுக்கு ஆயிரம் வருட பாரம்பரியம் என்று மழுப்புவார்கள். போலியோவுக்கு கூட ஆயுர்வேதத்தில் மருந்திருந்தது, அதை காணாமல் அடித்து விட்டார்கள் என்று கூட இந்த தருணத்தில் ஒருவர் கூறுவார். இந்த விவாதம் இப்படி நீண்டு கொண்டே இருக்கும்.

போன மாதம் ஒரு பெட்ரோல் பங்கில் ஒரு மிஷினரி கன்னியாஸ்திரி நன்கொடை வசூலித்துக் கொண்டிருந்தார். நான் அவரிடம் சென்று கொஞ்சம் பணத்தைக் கொடுத்து “உங்கள் மிஷினரி ஆஸ்பத்திரி தான் இரண்டு மாத குழந்தையாய் இருக்கையில் என் உயிரைக் காப்பாற்றியது. உங்களுக்கு நன்றிக் கடன்பட்டிருக்கிறேன்” என்று நெகிழ்ச்சியுடன் சொன்னேன். அந்த கன்னியாஸ்திரி புன்னகையுடன் வாங்கிக் கொண்டார். நான் யாருக்கும் என் வாழ்வில் நன்கொடை அளித்ததில்லை. வீட்டுக்கு யாராவது கும்பாபிசேகம் என்று மஞ்சள் துண்டோடு வந்தால் விரட்டி விடுவேன். காரணம் நம்பிக்கையின்மை அல்ல. எந்த சமூகப் பொறுப்பும் இன்றி வெறும் சடங்குகளோடு மட்டும் ஒட்டி உயிர்வாழும் ஒரு மதத்தின் மீதான கோபம் தான். இந்து மதம் என்பது “சம்ஸ்காரா” நாவலில் வருவது போல யாரும் அடக்கம் பண்ண விரும்பாத ஒரு பிணம். அது ஜீவனை விட்டு பல நூறு ஆண்டுகளாகிறது. ஐரோப்பாவில் புத்தொளி காலகட்டம் துவங்கினதுமே அது தன் கடைசி மூச்சை ஒருமுறை இழுத்து விட்டு விட்டது.

இந்தியா போன்ற ஒரு இந்து தேசத்தில் பிறந்ததற்காக நான் ஒவ்வொரு நொடியும் வெட்கப்படுகிறேன். சிறுபான்மையினரான கிறித்துவ மிஷினரிகள் தொழுநோயாளிகள், போலியோ குழந்தைகள், அநாதைகள் என ஒதுக்கப்பட்டவர்களை அணைத்து சேவை செய்யும் போது நாம் இவர்களை கோயில் வெளியே உட்கார வைத்து சில்லறைக் காசு போட்டு புண்ணியம் சேர்க்கிறோம். நோய் என்பது கிருமியால் அல்லது கர்மாவால் வருகிறது என நன்கு படித்த இந்துக்களே வாதிக்கிறார்கள். சமீபமாக இந்து அறநிலையத்துறை ஊனமுற்றவர்கள் கோயிலுக்குள் வரக்கூடாது என்று கூட ஒரு விதிமுறையை பிரஸ்தாபித்தது. இன்னொரு புறம் இந்து நிறுவனங்கள் கரசேவகர்கள், ராமசேனைகளை உருவாக்கி விட்டு அயோத்தியா கோயில் கட்டுவதற்கான செங்கற்களை ஊர் ஊராக பூஜித்து அனுப்புகிறது. கூட்டங்கூட்டமாக சிறுபான்மை மக்களை போலீஸ் உதவியுடன் கொல்லுகிறது. திருப்பதி, திருவனந்தபுரம் பத்மநாதசாமி போன்ற கோயில்களுக்கு கோடிக்கணக்குக்கு சொத்து உள்ளது. 

சொல்லப்போனால் அரசாங்க கஜானாவை விட நம் கோயில்களின் கஜானாக்கள் பெரிது. கடந்த வருடம் பத்மநாதசாமியின் ஆயிரம் கோடி மதிப்பிலான நகைகளை பொதுசொத்தாக்க வேண்டும் என்று கோரிக்கை வந்த போது மொத்த மலையாளிகளும் எதிர்த்தார்கள். இங்கு ஜெயமோகனும் அதை எதிர்த்தார். கோயில் சொத்து என்பதே ஒரு முரண்வழக்கு. அது மக்கள் சொத்து. கோயில் ஒரு வர்த்தக நிறுவனம் அல்ல. இந்து நிறுவனங்கள் நினைத்தால் இங்கு மிகப்பெரிய பொது சேவைகளை செய்ய முடியும். இலவச மருத்துவமனைகள், பள்ளி, கல்லூரிகள் நடத்த முடியும். எதற்கெடுத்தாலும் அந்நிய நிதி கொண்டு கிறித்துவர்கள் பிரச்சாரம் செய்வதாக குற்றம் கூறும் இவர்கள் தமது நிதியை மட்டும் பதுக்குவது ஏன்? அடுத்து இங்கு ஒரு சமூகப் புரட்சி நடந்தால் அது கோயில் சொத்துக்களை கைப்படுத்தி பொதுப்பணிக்காக பயன்படுத்துவதற்காகத் தான் இருக்க வேண்டும்.

 இந்தியர்கள் தமக்கு ஒரு பண்பாட்டு நோய் இருப்பதாக ஏற்றுக் கொள்ள வேண்டும். அதன் பிறகே சிகிச்சை செய்ய முடியும். புண்ணை மறைத்துக் கொண்டே இருந்தால் அது மேலும் மேலும் அழுகிக் கொண்டே தான் போகும்.
Read More

Monday, 28 January 2013

எனது புரூஸ் லீயும் அபிலாஷின் புரூஸ் லீயும்! - சந்தோஷ்

என் சின்ன வயதில் அண்ணன்மார்கள் டெக்கும் டி.வியும் வாடகைக்கு எடுத்து ஊரில் படம் போடுவார்கள். இரவு ஆரம்பித்து விடிய விடிய ஐந்து படங்கள். எம்ஜியார், சிவாஜி, ரஜினி, கமல் என்று தெருவில் வசூலிக்கிற காசுக்கு ஏற்றமாதிரி ஜனநாயகப்பூர்வமான படம்காட்டல். மாமாக்களுக்கு தெரியாமல் அத்தைகள் கொடுக்கும் கடுகு டப்பா காசுகளுக்கு கரகாட்டக்காரன், சூரியவம்சம் போன்ற படங்களும் காலத்துக்கு ஏற்ப அதில் அடக்கம். சொக்கும் கண்களுடன் மூன்றாவது படம் தாண்டும் முன்பே பக்கத்திலிருப்பவனின் மடியில் அனந்தசயனம் கொள்வது என்போன்ற பொடிசுகளுக்கு வழக்கம். விழித்து பார்த்தால் விடிந்திருக்கும்.

டெக்கும் டிவியும் பக்கத்திலிருக்கும் படிப்பகத்துக்கோ, இளைஞர் சங்க கட்டிடத்துக்கோ இடம் பெயர்ந்திருக்கும். அங்கே அண்ணன்மார்கள் ஸ்பெஷலாக சில படங்கள் பார்த்த பிறகே வீடியோ, கடைக்கு போகும். அதற்குள் "காப்பி" குடித்து விட்டு நாங்கள் அடுத்த ரவுண்டுக்கு அங்கே ஆஜராகி விடுவோம். ஸ்பெஷல் படங்கள் என்பது நீங்கள் நினைப்பது போல அல்ல, பெரும்பாலும் ஜாக்கிஜான் அல்லது புரூஸ் லீ படங்கள் தான். 

புரூஸை விட எங்களுக்கு ஜாக்கியே விருப்ப நாயகன். எங்கே வேண்டுமானாலும் தாவி ஏறுகிற, கையில் கிடைக்கும் பொருட்களை எல்லாம் ஆயுதமாக்குகிற, விதவிதமாக முகசேஷ்டைகள் செய்தபடி சண்டையிடுகிற ஜாக்கிஜானே மனதுக்கும் (உடம்புக்கும்) உகந்தவராக தெரிந்தார். அந்த பள்ளி பருவத்தில் அதிகபட்ச‌ வன்முறையே "வெளிய வா பத்துக்கிறேன்" என்பதாகத்தான் இருக்கும். அந்த அளவுக்கே "வாழைமட்டை"  சண்டைக்காரர்களான எங்களுக்கு தமாசான ஜாக்கியின் சணடைகளில் ஈர்ப்பு இருந்தது ஆச்சரியமில்லை. புரூஸ் லீயின் சணடைகள் சீரியசானவை என்கிற நினைப்பும் கூடவே இருந்த‌தால் அவர் படங்களை பார்த்ததே இல்லை என்றும் சொல்லலாம்.

குமரி மாவட்டத்தில் தான் அதிகமான கராத்தே மற்றும் குங்ஃபூ வகுப்புகள் நடக்கிறதோ என்கிற மாயை எனக்கு உண்டு. காரணம் எந்த பஸ்டாப்பின் பக்கத்திலும் நாக்கு சுளுக்கி கொள்ளும் சைனீஸ்(ஜப்பானீஸ்?) பெயருடைய கராட்டே(குங்ஃ பூ?) வகுப்பிற்கான ஒரு பேனராவது காற்றில் புல்அப்ஸ் எடுத்தபடி தொங்கி கொண்டிருக்கும். பத்தாம் வகுப்பு படிக்கும் போது அசோகன் மாஸ்டரிடம் கிளாசுக்கு போக ஆரம்பித்தேன். அது கராத்தேவா குங்ஃபூவா என்று யோசித்தாலும் என்னால் இன்று ஊகிக்க முடியவில்லை. ஒரு ரப்பர் தோட்டத்தின் நடுவில் ஏதோ தீவிரவாதிகளின் ரகசிய பயிற்சி போல, மயங்கும் மாலை வேளைகளில் தான் வகுப்பு. பயிற்சி காரணாமாவோ என்னவோ அசோகன் மாஸ்டரின் முக அமைப்பு கூட கொஞ்சம் சைனீஸ் கட்டில் தாண் இருக்கும். அவர் கத்தி கத்தி சொல்லி தருகிற "ஊஊச்" "கியா" சத்தம் ரப்பர் மரங்களில் பட்டு எதிரொலிக்கும். 

"உடம்ப தேத்தணுமுன்னா நல்லா புரோட்டாவும் இறச்சியும் வாங்கி தின்னனும்" என்று எனக்கு அட்வைஸ் பண்ணுகிற செல்வின் ரொம்பநாட்களாக கராத்தே கற்று கொண்டிருந்தான் அல்லது கொண்டிருப்பது போல படம் காட்டுவான். புஷ்அப்ஸ் எடுத்து கறுப்பான முஷ்டிகணுக்க‌ளை காட்டி டெஸ்கில் குத்துவான். அவனுடைய மாமா ஒரு ஊரறிந்த மாஸ்டர். பெயர் ஜீ.வி பால். மண்ணெண்ணய் ஊற்றி ஓட்டுவதாகசொல்லப்படும் புல்லட்டில் அவர் பட படவென்று சாலையை கிழித்து ஓட்டிச்செல்லும்போது நாங்கள் பிரமிப்புடன் பாத்துக்கொண்டிருப்போம். ஜீ.வி பால் மீதான பிரமிப்பு வகுப்பில் செல்வின் மீதும் கொஞ்சம் புசிந்து கொண்டு இருந்தது. 

அவன் தான் புரூஸ் லீ பற்றி அவ்வப்போது கதைகளை எடுத்து விடுவான். தான் மாமாவுடன் சேர்ந்து தங்கள் சொந்த‌ வீடியோவில் புரூஸ் லீ படங்களை நினைத்த நேரத்தில் போட்டு பார்த்து கொள்ளுவார்கள். புரூஸ்லீயை யாராலும் கொல்லவே முடியவில்லை பிறகு சாப்பாட்டில் விஷம் வைத்து தான் கொன்றார்கள். அவரை எதுக்கு கொல்லணும் அப்படி  கொல்கிற அலவுக்கு அவர் கெட்டவரா என்று எந்த கேள்விகளும் எழுவதில்லை ஆனால் யாராலும் சண்டையிட்டு கொல்ல முடியாத ஆள் என்கிற பதம் மட்டுமே வசீகரமான பிரமிப்புடன் மனதில் தங்கி இருந்தது. ஆனால் சென்னைக்கு வரும் வரை புரூஸ்லீ படங்கள் பார்த்ததில்லை.

பிறகு புரூஸ் லீ படங்களை பார்த்தபோது அவருடைய சண்டையில் இருந்த‌ சீரியஸ் தன்மை ஜாக்கிஜானிடமிருந்த ஜாலியான பிள்ளை விளையாட்டு சண்டைகளிலிருந்து மாறுபட்டிருப்பது மட்டும் தெரிந்தது. அத்தோடு அதை விட்டு விட்டேன்.

2

அபிலாஷ் எழுதிய‌ புரூஸ் லீ: சண்டையிடாத சண்டை வீரன். சனிக்கிழமை இரவு ஆரம்பித்து ஞாயிறு மாலையில் படித்து முடித்து விட்டேன். எனது மகன் நூடுல்ஸ் கேட்டு அடம்பிடிக்கவும் ஷர்மி எனக்கும் ஒரு பிளேட்நூடுல்ஸ் கொடுத்தாள். இரண்டு நாட்களாக சீனாவில் சுற்றிகொண்டிருந்ததை போல பிரமையில் இருந்த எனக்கு இந்த ஒரு பிளேட் நூடுல்ஸ் அந்த பிரமையின் தொடர்ச்சியை மேலும் சற்று நேரம் நீடிக்கச்செய்து விட்டது.

அபிலாஷின் மொழி புரூஸ் லீயின் அசாத்தியமான சண்டையிலிருக்கும் அழகு போல என்னை வசீகரிக்கிறது. "மிதக்கும் மனநிலை" என்கிற ஒரு சொல்லாட்சியை முன்னுரையில் படித்த ஞாபகம். இந்த மொழி வழியாக அபிலாஷ் உருவாக்கும் புரூஸ் லீயின், குங்ஃபூவின், சண்டைக்கலையின் சித்திரங்கள் ஒரு ஜென் பெயின்டிங்கை போல தண்ணீரின் நெகிழ்வுடன் மனதில் அசைகிறது. வெறும் ஒரு வாழ்க்கைகதை வழக்கமான‌ தட்டைமொழியில் அச்சடிக்கப்பட்ட புத்தகமல்ல இது. புரூஸ் லீயின் வாழ்கையைப் பற்றி சுவாரஸ்யமாக சொல்லி செல்லும் வரிகளுக்கிடையில் சீனாவின் தத்துவம், அழகியல், வரலாற்றுப்பின்னணி, அரசியல், பண்பாடு எல்லாம் ஒரு சினிமாவின் காட்சி பின்புலம் போல விரிந்து புத்தகங்களின் பக்கங்களில் ஓடுகிற‌து.

“எனக்கு எதிரியே இல்லை. ஏனென்றால் மோதலின் போது “நான்” என்கிற பிரக்ஞையே இருப்பதில்லை” என்பார் லீ. என்பதிலிருந்து சண்டையின்  தத்துவத்தை தாவோயிசத்தின் யிங்-யாங்குடன் பொருத்தி விளக்கமளிப்பது வரை ஒரு மூங்கில் விசிறியைப்போல அடுக்கடுக்காக விரிகிறது சண்டையின் நுட்பங்களும், அதன் ஆத்மீகவயப்பட்ட தத்துவங்களும்.

ஒரு வரலாற்று நாயகனின் வாழ்க்கை கதையை மட்டும் சுவராஸ்யமாக படிக்க வேண்டும், அல்லது இன்னும் சற்று ஆழமாக சண்டைக்க‌லைகலைப்பற்றி அறியவேண்டும்ம, அல்லது அதன் ஆத்மீக, தத்துவ, வரலாற்று இன்னபிற விஷயங்களையும் அறிந்து கொள்ள வேண்டும், என்று பல்வேறு விதமாக வாசிக்க விழையும் அனைவருக்கும் இந்த புத்தகம் தனக்கான பக்கங்களை திறந்து கொள்ளும் என்றே தோன்றுகிறது.

ஒரு ஜென் கவிதையைப்போல சட்டென்று முடிந்துவிடும் புரூஸ் லீயின் வாழ்வை. கவித்துவமுமம், முரண்களும், பிடிபடாத வாழ்க்கையின் புதிர்களுடனும் சொல்லும் இந்த புத்தகத்தில் அவருடைய மரணத்தைப்பற்றிய சொற்கள் எனக்கு மிக முக்கியமாகப்பட்டது. புரூஸ் லீயின் மரணம் ஒரு தொன்மத்திற்கேயுரிய தன்மையுடன் புதிராகவே உள்ளது. ஆனால் அதைவிட அவர் வாழ்வு அளிக்கும் உணர்ச்சிகரமான சித்திரமே நமக்கு முக்கியம் என்கிறார் அபிலாஷ்.

ஒரு சினிமாவைப்பற்றி எவ்வளவு பக்கம் பக்கம் பக்கமாக‌பேசினாலும் அந்த சினிமாவை பார்க்கும்போது நாமடையும் அனுபவம் நமக்கே உரியது அது போல தான் இந்த புத்தகமும். அதை படித்து அடையும் அனுபவம் உங்களுக்கு எல்லாம் வாய்க்கப்பெற ஆசைப்படுகிறேன். அது இந்த மாதிரி வாழ்க்கைகதைகள் அபிலாஷ் போன்றவர்களால் எழுதப்படுவதே அந்த ஆளுமைகளின் வாழ்வுக்கு நாமளிக்கும் மரியாதை என்பதை உணர்த்தும். அந்த மொழியின் வழியாக புரூஸ் லீ பிறந்து மரணமடைந்து  ஒரு தொன்ம நாயகனாக எனக்குள் அமரும் மாயாஜாலத்தை இந்த புத்தகத்தை வாசித்து முடிக்கையில் நானடைந்தேன். 

நேற்றிரவு கனவில் ஒரு சின்ன பாலத்தின் மீது புரூஸ் லீ அவருக்கேயுரிய சிறிய ஆழமான கண்களால் என்னை பார்த்து கொண்டு நடந்து கடந்தார். பாலத்தின் கைப்பிடியில் அமர்ந்து சிரித்து கொண்டிருந்தார் அபிலாஷ். நன்றி அபிலாஷ் என்று சொல்ல தோன்றியது. அதற்கு தேவையில்லை என்பது போல இருந்தது அவரது சிரிப்பு.

Read More

Saturday, 26 January 2013

அடிப்படைவாதத்தின் கையில் தமிழ் இஸ்லாம்





இந்திய இஸ்லாத்தைப் பொறுத்த மட்டில் பி.ஜெ.பி மட்டுமல்ல தவ்வீத் ஜமாத் போன்ற வஹாபிய அமைப்புகளும் தீங்கானவை என்பதை சமீப காலத்தில் உணர்ந்து வருகிறோம். எப்படி இந்து மதத்துக்கு ஆச்சாரமான ஆதிக்க சாதிகள் எதிரோ அதைப் போன்று இஸ்லாத்துக்கும் இதே பிராமணியத்துடன் இயங்கும் வஹாபிகளும் எதிர் தான். குறிப்பாக நவீனம், வளர்ச்சி ஆகியவற்றுக்கும் கல்வி பண்பாட்டு மேன்மைக்கும் ஊறு விளைவிப்பவையாக இந்த சக்திகள் தத்தமது சமுதாயத்துக்கு உள்ளன.

யோசித்துப் பார்த்தால் தூய மதவாதத்தை ஏற்கும் சுதந்திரம் அனைவருக்கும் உள்ளது. நீங்கள் ஒரு ஆர்.எஸ்.எஸ் ஆகவோ ஜமாத் ஆளாகவோ இருக்கலாம். இதில் சிக்கல் இந்த அமைப்புகள் தம் சமூகத்தை இன்று உலகம் செல்லும் திசைக்கு எதிராக திருப்புகின்றன என்பது தான். இவை பெண்களுக்கு, சிறுபான்மையினருக்கு, வளர்ச்சிக்கு, ஜனநாயகத்துக்கு, தனிமனித சுதந்திரத்துக்கு, பகுத்தறிவுக்கு எதிரான சிந்தனைகளை கொண்டுள்ளன. வரலாற்றில் மிகப்பெரும் அழிவுகளை அடிப்படைவாத கோட்பாடுகள் தாம் ஏற்படுத்தி உள்ளன என்பதை அறிவோம்.
தமிழ்நாட்டில் கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக வஹாபி சிந்தனை மேலாதிக்கம் பெற்று வருவதை காண்கிறோம். இவர்களுக்கு எதிராக முற்போக்கு சிந்தனை கொண்டவர்கள் இச்சமூகத்துக்கு உள்ளே பலர் உள்ளனர். இவர்களை ஜமாத் அமைப்புகள் கடுமையாக ஒடுக்குகின்றன. எப்படி முன்னர் நிலவுடைமை சமூகத்தில் சாதிக்கு எதிராக குரல் கொடுப்பவர்கள் விலக்கி வைக்கப்பட்டார்களோ அதே போல் இன்று இந்த வஹாபிகளால் எதிர்குரலாளர்கள் மூர்க்கமாக “ஜாதிபிரஷ்டம்” செய்யப்பட்டு ஒடுக்கப்படுகிறார்கள். அவர்களுக்கு கொலைமிரட்டல்கள் விடுக்கப்பட்டு எதிராக கூட்டங்களும் பிரச்சாரங்களும் நடத்தப்படுகின்றன. முன்னர் ஹெச்.ஜி ரசூல் இஸ்லாத்தில் மது அனுமதிக்கப்படுகிறதா என்ற விவாதத்தை ஏற்படுத்தியதற்காக கடுமையாக தாக்கப்பட்டார். இத்தனைக்கும் அன்று ரசூலை கண்டித்து விமர்சகர்கள் தனிவாழ்க்கையில் மொடக்குடிகாரர்கள். ஆனால் குரானை அவர் பழித்து விட்டதாக போலி குற்றச்சாட்டு வைத்து அவரை சமூகவிலக்கம் செய்யப்பார்த்தார்கள். எதிர்ப்பாளர்களில் ரசூலின் கட்டுரையை மிகச்சிலர் தான் படித்தார்கள். சல்மான் ரஷ்டியை எத்தனை வஹாபிகள் வாசித்திருப்பார்கள்? இப்போது மனுஷ்யபுத்திரன் விசயத்திலும் இது தான் நடக்கிறது.
ரிசானாவின் தலையைத் துண்டித்தது அநியாயம் என இங்குள்ள அநேகம் இஸ்லாமியர் ஏற்றுக் கொள்வார்கள். ஆனால் இது நக்கீரன் போன்ற ஒரு பத்திரிகையில் எழுதப்படும் போது, அதுவும் வலுவான வாதங்களுடன் தாம் முஸ்லீமாக கருதும் மனுஷ்யபுத்திரனே எழுதும் போது அடிப்படைவாத இஸ்லாமியர் பதற்றமாகிறார்கள். ஷரியத் சட்டங்களை எதிர்ப்பதா என்று கொதிக்கிறார்கள். கோட்பாட்டளவில், அறத்தின் அடிப்படையில் மனுஷ்யபுத்திரன் சொன்னது தான் சரி என அனைவரும் ஏற்றுக் கொள்வார்கள். ஆனால் இந்த விமர்சனம் இந்த இஸ்லாமியர்களுக்கு தம் அடையாளத்தையும், படிநிலை அதிகாரத்தையும் கேள்விக்குள்ளாக்குவதாக அச்சம் ஏற்படுகிறது. ஜெய்னுலாப்தீன் போன்றவர்கள் வெறியேறி மனுஷ்யபுத்திரனின் உடலை குறிப்பிட்டு அவரை அவமானப்படுத்துகிறார்கள், கொலை மிரட்டல் விடுக்கிறார்கள், அதுவும் பொதுவெளியில் முகநூலில் அவ்வாறு எழுதுகிறார்கள். இது இரண்டு பிரச்சனைகளை சுட்டுகிறது.
ஒன்று இந்த அரசு இஸ்லாமிய அடிப்படைவாதிகளுக்கு மிதமிஞ்சிய சுதந்திரம் அளிக்கிறது. அவர்கள் இன்று தமக்கு எதிரானதாய் நம்பப்படும் படைப்புகள், கருத்துக்கள் எதுவும் வெளிவரக் கூடாது என வன்முறைப் போராட்டம் நடத்தி சமூகத்தில் அச்சத்தை விளைவிக்கப் பார்க்கிறார்கள். தமிழ்நாட்டில் இஸ்லாமியரை விட அதிகமான ஒடுக்குமுறையை அனுபவிக்கும் தாழ்த்தப்பட்ட மக்கள் தொடர்ந்து மதுரைக்கார படங்களில் மட்டம் தட்டப்படுவதைப் பார்க்கிறோம். அதை யாரும் எதிர்க்க முடியாது. கூடங்குளத்தில் ஒரு நியாயமான போராட்டத்தை நடத்த விடாமல் அரசு எப்படி மக்களின் ஜனநாயக உரிமையை முடக்கியது என்று பார்த்தோம். ஆனால் இந்த அடிப்படைவாத இஸ்லாமிய அமைப்புகளின் போராட்டங்களை பொறுத்த மட்டில் தமிழக அரசு கட்டுப்படுத்த தயங்குகிறது. அவர்கள் எப்படி வன்முறை மூலம் சென்னை மவுண்ட் சாலையை ஸ்தம்பிக்க வைத்தார்கள் எனப் பார்த்தோம். இது தற்போது ஒரு மோசமான போக்குக்கு வழிகோலி உள்ளது. தமக்கு மாறுபட்ட கருத்துக்களை யாரும் முணுமுணுத்தாலே மக்களின் மதவுணர்வுகளை தட்டி எழுப்பி கூட்டங்களை கூட்டி வன்முறையை காட்டி அச்சுறுத்தும் தைரியத்தை இந்த அமைப்புகளுக்கு அளித்துள்ளது. “இன்று போய் நாளை வா” படத்தில் டியூசன் வாத்தியாரை பாடமெடுக்க விடாமல் பேரனுக்கு சாப்பாடு ஊட்டும் பாட்டியை போல் தமிழ முதலமைச்சர் நடந்து கொள்கிறார். இதை பயன்படுத்தி பா.ம.க ராமதாஸின் பாணியில் மிரட்டல் அரசியல் நடத்த ஜமாத் அமைப்புகளை ஊக்குவிக்கிறது.

இன்னொரு புறம் அமைதிப் பூங்காவான இந்த மாநிலத்தில் இஸ்லாமியர் மீதான நல்ல பிம்பத்தில் வகுப்புவாத சாயம் பூசவும் பயன்படுகிறது. அதனால் தான் இந்த வஹாபி அமைப்புகளின் வளர்ச்சி இஸ்லாமியர்களின் நலன்களை பாதுகாக்க அல்ல அவர்களின் மேலும் சமூகத்தில் இருந்து அந்நியப்படுத்தவும் பி.ஜெ.பி போன்ற அமைப்புகளை இங்கு வளர்த்து விடவுமே இங்கு பயன்படப் போகிறது. தற்போது வரை இஸ்லாமிய அடிப்படைவாதிகள் தமக்குள் உள்ள “புல்லுருவிகளை” மட்டும் தான் “வேரோடு பிடுங்க” முனைகிறார்கள். ஏதாவதொரு மத நம்பிக்கை பொறுத்த சர்ச்சையில் நாளை இவர்கள் இந்து அமைப்புகளோடு மோதப்போகும் நாள் இந்த போக்கை கவனிக்கையில் வெகுதொலைவில் இல்லை என்றே சொல்ல வேண்டும். அதோடு பி.ஜெ.பியும் இங்கு வலுவாக வேருன்றி விடும். நீண்ட காலம் இடதுசாரிகள் ஆதிக்கம் செலுத்தின கேரளாவில் தான் தற்சமயம் பி.ஜெ.பி வளர்ச்சி அடைந்து வருகிறது. அந்த நிலை இங்கும் வர வேண்டுமா சொல்லுங்கள்?

இஸ்லாமிய சமூகம் பிராமணர்களைப் போன்று ஆச்சாரமானவர்களாக மத ஈடுபாடு மிக்கவர்களாக இருக்கிறார்கள். பெண்களை நடத்தும் விசயத்தில் கூட ஒரே மாதிரி தான் அடிப்படைவாதிகளாக இருக்கிறார்கள். சடங்கு புனஸ்காரங்களிலும் அப்படியே. தொடர்ந்து இருதரப்பினரும் தத்தம் வேதங்கள் இந்த நவீன வாழ்வுக்கு தேவையான அனைத்தையும் கொண்டுள்ளன என பிடிவாதமாக அறிவிக்கின்றன. நவீன சிக்கல்கள் ஒவ்வொன்றுக்கும் பூதக்கண்ணாடி கொண்டு தம் வேதபக்கங்களுக்குள் விடை தேடுகிறார்கள். உதாரணமாக ஆண்கள் ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களை மணக்கலாமா என்கிற கேள்வி வரும் போது இந்து மதத்திலும் பலதார மணம் அனுமதிக்கப்பட்டதே என்று நியாயம் சொல்லுகிறார்கள். அதாவது நீங்கள் பிற்போக்காக ஏன் இருக்கிறீர்கள் என்றால் நீங்களும் தான் பிற்போக்கு என்கிறார்கள். இது பிழையான தர்க்கம். இங்கு யாரும் இந்து மத விழுமியங்களை நவீன வாழ்வுக்கான அடிப்படையாக கொள்வதில்லை. இந்து மதத்தின் மனுதர்மம் சரியானது பின்பற்றத்தக்கது என யாரும் இங்கு மீடியாவில் தர்க்கம் செய்து எளிதில் தப்பிக்க முடியாது. இந்துக்களில் பலரே இதை கடுமையாக எதிர்ப்பார்கள். குறைந்தபட்சம் ஒரு மேலெழுந்தவாரியாக ஏனும் இந்துக்கள் இன்று நவீனத்தை நோக்கி வரத் தலைப்படுகிறார்கள். மேலும் ஒரு விவாதத்தில் தமது எதிர்தரப்பினர் அனைவரும் அடிப்படைவாதிகளே என்ற அடிப்படையில் எப்படி வஹாபிகள் பேச முடியும்? இந்துக்களில் பகுத்தறிவாளர்களும், நவீன சிந்தனையாளர்களும், ஜனநாயகவாதிகளும் இருக்கிறார்கள். அவர்கள் மதவாத அதிகாரத்தை, ஆணாதிக்கவாதத்தை எதிர்க்கிறார்கள். அவர்களுக்கு எப்படி பதில் சொல்லப் போகிறார்கள்?

இஸ்லாமிய சமூகத்தில் பிற்படுத்தப்பட்டோரும் பெண்களும் படித்து முன்னேறுவதற்கு அந்த சமுதாயம் நவீன விழுமியங்களை ஏற்றுக் கொண்டு மையநீரோட்ட வாழ்வுக்கு வருவது முக்கியம். அதற்கான மாற்றம் உள்ளிருந்து தான் வர முடியும். அந்த மறுமலர்ச்சியை இடதுசாரி தாக்கம் கொண்ட முற்போக்கான இஸ்லாமியர் தான் ஏற்படுத்த முடியும். இந்த வஹாபி போர் உண்மையில் இந்த முற்போக்கு இஸ்லாமிய சகோதரர்களுக்கு எதிரானது. அவர்களை தாக்கி அழித்த பின் தான் ஒரு பிஜெபி போன்ற மதவாத இயக்கமாக தாம் சுதந்திரமாக இயங்க முடியும் என இவ்வமைப்புகள் புரிந்து வைத்துள்ளன. நாம் ரசூல்களையும், மனுஷ்யபுத்திரன்களையும் பாதுகாக்க வேண்டும். அதற்கான தருணம் இது.
சிறுபான்மையினர் என்ற வகையில் பாதிக்கப்பட்டவர் என்ற வகையில் தமிழ் அறிவுஜீவிகள், எழுத்தாளர்கள், இடதுசாரிகள் பொதுவாக இஸ்லாமிய அடிப்படைவாதத்தை கண்டும்காணாமல் தான் இருந்து வந்துள்ளார்கள். பி.ஜெ.பிக்கு நிகராக இந்த வஹாபிகளையும் கடுமையாக எதிர்க்க வேண்டிய காலம் வந்து விட்டது.
Read More

புத்தகத்தின் முகம்



பஷீரின் “என் உப்புப்பாவுக்கு ஒரு ஆனை இருந்தது” ஒரு அழுகாச்சி நாவலானாலும் வாழ்வு குறித்த உற்சாகமும் ஏற்பும் ஒரு வெளிச்சமாக ஒவ்வொரு சொல்வழியும் பெருகுகிறது. அந்த தித்திப்பான நாவலின் மனநிலையை அப்படியே பிரதிபலிப்பதாய் அவ்வளவு பிரகாசமாக இருந்தது அட்டைப்படம். யாருடா இதை வடிவமைத்தது என்று தேடிப் பார்த்தால் உயிர்மை, காலச்சுவடு புத்தகங்களில் பல பிரபலமான அட்டைகளை வடிவமைத்த, கூர்மையான அங்கதம் கொண்ட பிளாகுகளை எழுதும் சந்தோஷ்.

பொதுவாக இலக்கிய புத்தக அட்டைப்படங்கள் என்றால் அரை இருட்டில் சாம்பல் வண்ணத்திலோ வயிற்றை கலக்க வைக்கிற மாதிரி ஒரு நவீன ஓவியத்தையோ போட்டு விடுவார்கள். அதற்கும் பிரதிக்கும் சம்மந்தமிருக்கிறதா என்று நீங்கள் தினமும் அரைநொடி யோசித்து கடுப்பாகலாம். ஆனால் சந்தோஷ் வண்ணங்கள் பூத்து விரியும் படி அட்டையை பண்ணி இருந்தார். எதேச்சையாக பண்ணினாரா படித்து விட்டு பண்ணினாரா என்று தெரியாது; ஆனால் புத்தகத்தில் பஷீர் சித்தரித்த வாழ்வுநிலைக்கு மிகப் பொருத்தமாக அமைந்திருந்தது. சந்தோஷின் வடிவமைப்பில் ஒரு நூல் எழுத ஆசை தோன்றியது.

Read More

Wednesday, 23 January 2013

உங்க புத்தகம் அதிக பாராட்டும் அங்கீகாரமும் பெற ஆறு வழிகள்



தமிழில் ஒரு இளம்படைப்பாளி அதிக பாராட்டுகளும் விமர்சனங்களும் மூத்த படைப்பாளியிடம் பெற என்னென்ன செய்ய வேண்டும்?

1. பெரிய அரசு அதிகாரியாக இருக்கணும். ஐ.ஏ.எஸ்னா நல்லது

2. பெரிய பணக்காரரா அல்லது அரசியல் செல்வாக்கு பெற்றவரா இருக்கணும்

3. சிங்கப்பூர், மலேசியா, அமெரிக்க வாழ் தமிழரா இருந்து அங்கு நிறைய கூட்டங்கள் நடத்தி மூத்த படைப்பாளிகளை கூப்பிட்டு சோறு போட்டு சரக்கு ஊத்தி ஊர்வலம் கொண்டு போய் சுத்திப் போடணும்

4. நீங்க இதையெல்லாம் செய்வீங்கன்னு நம்பிக்கை ஏற்படுத்தினாலும் போதும்

5. அழகான பொண்ணா பொறந்து கொழஞ்சு கொஞ்சு பேசணும்

6. இவ்வளவும் கூட தேவையில்லை - யாருமே படிக்க முடியாதபடி படுமொக்கையா குழப்பமா ஒரு நாவல் எழுதனும். இவன் சப்பை என்ற முடிவுக்கு வரும் மூத்த எழுத்தாளர்கள் உங்களை புகழ்ந்து தள்ளி விடுவார்கள்.
Read More

Sunday, 20 January 2013

Life of Pi: கடவுளுக்கும் ஒரு வங்காளப் புலிக்கும் நடுவே









யான் மார்ட்டலின் நாவலை சார்ந்து எடுக்கப்பட்டுள்ள Life of Pie சமீபத்தில் வந்த “அவதார்”, “ஹியுகோ” போன்று 3D கிராபிக்ஸில் பெரும் சாதனையை செய்கிறது. இதன் கிராபிக்ஸ் அவதாரை விட நிஜமாக தோன்றுகிறது.
படத்தில் பை பட்டேல் எனும் 17 வயது பாண்டிச்சேரி தமிழ் இளைஞர் பசிபிக் கடலில் ஒரு சிறுபடகில் ஒரு பெரும் வங்காளப் புலியுடன் திசையற்று நாட்கணக்கில் திரிய நேர்கிறது. நாவலில் அவன் மாதக்கணக்காய் கடலில் ஆதரவற்று தவிக்கிறான். ஆனால் படத்தில் எவ்வளவு காலம் என்பது குறிப்பாய் சொல்லப்படவில்லை. இந்த கடற்பயண சாகசங்கள், மன முதிர்ச்சியும் தெளிவும் ஏற்படுத்தும் அனுபவங்கள், வாழ்வின் விழுமியங்கள் மீது ஐயப்பாடுகளை எழுப்பும் குரூரங்கள் ஆகியவை தான் இப்படத்தின் முக்கிய பகுதி.
காட்சிபூர்வமாகவும் தத்துவார்த்தமாகவும் படத்தின் ஆகர்சமும் இக்காட்சிகள் தாம். படத்தின் ஆரம்பமும் துவக்கமும் இவைக்கான தயார்ப்புகள். இருந்தும் இக்காட்சிகளை மிகுந்த கவித்துவம் மற்றும் நுணுக்கத்துடன் இயக்குநர் ஆங் லீ உருவாக்கி இருக்கிறார். மையக்காட்சிகள் பார்வையாளர்களை பெரும் வியப்பளிக்க வைக்கும் போது ஆரம்ப முடிவுக் காட்சிகள் சிரிக்கவும் நெகிழவும் மனம்கசக்கவும் வைக்கிறது.
கதையை சுருக்கமாக சொல்லி விடுகிறேன். நாயகன் பை படேலின் அப்பா பாண்டிச்சேரியில் தான் நடத்தும் மிருகக்காட்சி சாலையை காலி செய்து மிருகங்களை விற்று குடும்பத்துடன் கனடாவுக்கு சென்று நிலைப்பட முடிவு செய்கிறார். மிருகங்களுடன் பையின் குடும்பம் ஒரு ஜப்பானிய கப்பலில் பசிபிக் கடலில் பயணிக்கிறது. புயல் தாக்கி கப்பல் கவிழ்ந்து படேலின் குடும்பத்தினர் இறக்க, அவன் ஒரு வரிக்குதிரை, ஒரங்கூட்டன் குரங்கு, கழுதைப்புலி மற்றும் ஒரு புலியுடன் ஒரு சிறுபடகில் கடலில் தத்தளிக்கிறான். பிற மிருகங்கள் இறந்திட பையும் புலியும் மட்டும் இயற்கையுடன் போராடி பிழைக்கிறார்கள். இறுதியில் கரையை வந்தடைய புலி வனத்துக்கு திரும்ப பை காப்பாற்றப்பட்டு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்படுகிறான்.
பை தன் கதையை முதலில் கப்பலின் பிரதிநிதிகளான ஜப்பானிய அதிகாரிகளிடம் சொல்கிறான். அடுத்து பல வருடங்களுக்குப் பின் நாற்பது வயதில் நாவலாசிரியர் யான் மார்ட்டலிடம் மீண்டும் சொல்கிறான். அவனிடம் இரு கதைகள் உள்ளன. இரண்டில் எது உண்மை என்கிற புதிர்த்தன்மை தான் இப்படத்தின் முக்கிய சுவாரஸ்யம். கதைக்குள் கதை என்கிற பிரதானமான இலக்கிய உத்தியை திரையில் ஆங் லீ அற்புதமாக கையாண்டிருக்கிறார். இலக்கிய பண்டித உணர்வு நமக்கு தோன்றாதபடி.
ஆங் லீயின் “Crouching Tiger Hidden Dragon” இந்தியாவில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. குறிப்பாக சாகச சண்டைக் காட்சிகள். காற்றில் பறந்து நிகழ்த்தப்படும் தற்காப்பு கத்திச் சண்டைகள். இச்சண்டைகளின் அழகியலும் கவித்துவமும் நம்மை மீண்டும் மீண்டும் பார்க்க வைத்தன. சண்டையிடுபவர்களின் தத்தளிப்பும் ஏற்புநிலையும் நிலையமைதியும் இவை வெறும் சண்டைகள் அல்ல என தோன்ற வைத்தது. ஆங் லீயின் படங்களின் ஆதார அக்கறை வாழ்வின்/இயற்கையின் குரூரத்தன்மையை நமது அற நம்பிக்கைகளின் அடிப்படையில் எப்படி புரிந்து கொள்வது என்பது.
சின்ன வயதில் நாம் கற்கும் அற-ஒழுக்க விழுமியங்கள் வளர வளர பொய்த்துப் போக ஆரம்பிக்கின்றன. யோசிக்கிறவர்கள் ஒன்றில் விழுமியங்களை அல்லது விழுமியங்களின் அடிப்படையான இறைநம்பிக்கையை நிராகரிக்கிறார்கள். வாழ்வின் பொதுநம்பிக்கைகளோடு தொடர்ந்து போராட தயாராகிறார்கள். இன்னொரு வகையினர் விழுமியங்களும் மரபும் தமக்கு எளிய வகையில் ஒரு பிடிப்பையும் அர்த்தத்தையும் முக்கியமாக பிறர் மீது அதிகாரத்தை செலுத்தவும் உதவுவதை அறிந்து வாழ்வு முழுக்க அவநம்பிக்கையாளர்களுடன் பொருத தயாரிகிறார்கள். ஆனால் இருதரப்பினரும் தம் நம்பிக்கைகளால் ஒரு கட்டத்தில் இறுகிப் போகின்றனர். அதனைக் கடந்து பரிசீலிக்க மறுக்கிறார்கள். Life of Piயில் பை பட்டேல் ஓரிடத்தில் சொல்கிறான்: “சந்தேகங்களும் கேள்விகளும் தான் இறைவிசுவாசத்தை வலுப்படுத்த உயிர்த்திருக்க வைக்க உதவுகின்றன”.
நாம் மேலே பேசின வகையறாக்களில் பை பட்டேல் மூன்றாவதாக வருகிறான். அவன் திறந்த அச்சமற்ற மனம் கொண்டவன். வாழ்வின் பிரவாகத்துக்கு தன்னை ஒப்புக் கொடுக்க எப்போதும் தயாராக இருப்பவன்.
படத்தில் இரு தர்க்கவாதிகள் வருகிறார்கள். ஒன்று பை படேலின் அப்பா. பை சிறுவயதில் அனைத்து மதங்களையும் பின்பற்ற விழையும் போது அவனது அப்பா அவனை கண்டிக்கிறார். எல்லா மதங்களையும் பின்பற்றினால் எதையும் புரிந்து கொள்ள முடியாது என்கிறார். ஆனால் பைக்கோ ஒரு மதத்தை தர்க்கரீதியாக அறிவது முக்கியமல்ல. மாறாக அவன் அனைத்து மதங்களிலும் வெவ்வேறு அம்சங்களை தேடுகிறான். அவனை மலையை தூக்கிப் பறந்த அனுமனின் பிரம்மாண்ட வலிமையுடன் தோல்வியையும் வலியையும் குற்றங்களையும் விரும்பி சுமந்த கர்த்தரின் மானுடநேசமும் ஈர்க்கிறது. அவன் தொடர்ந்து வாழ்வின் பொருள் குறித்த தன் கேள்விகளை எழுப்பியபடியே இருக்கிறான். இந்துமதத்தின் சடங்குகளும் தொன்மங்களும் அவனை ஆகர்சிக்கின்றன. இஸ்லாமிய பிரார்த்தனை முறைகளை விருப்பமாக பின்பற்றுகிறான். ஒரு காற்றுக்குமிழியைப் போன்று பறந்து கொண்டே இருக்கிறான். அவன் அப்பா அவனிடம் மதம் என்பது முதலில் வசீகரமாகத் தான் இருக்கும், ஆனால் அது அடிப்படையில் இருண்மை மிக்கது; மதத்தின் வெறுமைக்குள் மனிதன் தொலைந்து போவான் என அறிவுறுத்துகிறார். ஆனால் பை தன் இறைதேடலை தொடர்ந்த படியே இருக்கிறான்.
இறைநாட்டத்தை விட பையின் பிரதான பண்பு அவனது வாழ்க்கை குறித்த உற்சாகம், ஏற்புமனநிலை, நேர்மறை அணுகுமுறை எனலாம். இருளைப் போன்றே மட்டற்ற வெளிச்சமும் நம்மை குருடாக்குவது தானே. பட்டேலின் கட்டற்ற நேர்மறை நம்பிக்கை கண்ணைக் குருடாக்கும் வெளிச்சம் போல அவனை தீமையை புரிந்து கொள்ள அனுமதிப்பதில்லை. ஆனாலும் அவன் இன்னொரு பக்கம் தீமையால் ஆக்ர்சிக்கப்பட்டுக் கொண்டும் இருக்கிறான்.
அவனது அப்பாவின் மிருகக்காட்சி சாலையில் ஒரு வங்காளப் புலி உள்ளது. அதன் அசலான பெயர் Thirsty. அது தண்ணீர் குடிப்பதில் மிகுதியான ஆர்வம் கொண்டது என்பதால் அதனைப் பிடித்து மிருகக்காட்சி சாலைக்கு விற்ற ரிச்சர்ட் பார்க்கர் அதற்கு அப்பெயர் அளிக்கிறான். ஆனால் ஒரு குமாஸ்தா பெயரை எழுதும் போது இடம்மாற்றி விட ரிச்சர்ட் பார்க்கர் எனும் பெயர் புலிக்கு கிடைத்து விடுகிறது. படம் முழுக்க ரிச்சர்ட் பார்க்கர் எனும் கண்ணிய கம்பீர முறுக்கான பெயர் ஒரு அபத்த நகைச்சுவையை புலியின் தோற்றத்துக்கு அளிக்கிறது.
ஆனால் தாகம் எனும் முதல் பெயரும் உருவகம் தான். தாகம் மிக்க ஒரு புலி கடல் நடுவே தண்ணீரே கிடைக்காமல் மாட்டி தவிக்கிறது; தண்ணீரில் விழுந்து தத்தளிக்கிறது. தண்ணீரோடு போராடி பிழைக்கிறது. இப்பெயர் புலியின் தப்பித்தல் முயற்சிகளை ஒரு அகப்போராட்டமாகவும் சித்தரிக்கிறது. மிஷ்கினின் படங்களில் போல இப்படத்திலும் பெயர், இடம், குறிப்புகள் எல்லாம் உருவகத் தன்மை கொண்டவை. தடுக்கி விழுந்தால் ஒரு உருவகத்தின் மீதாக இருக்கும்; தடுக்காமல் போனாலோ ஒரு படிமத்தை தவற விட சாத்தியமுண்டு. ஆனால் மிஷ்கினின் படங்களை விட ஆங் லீயிடம் சாகசங்களும் வண்ணங்களின் அழுத்தமும் கதைவேகமும் அதிகம் என்பதால் வெளிப்படையாக அர்த்தங்களின் முள் தொண்டையில் மாட்டாது.
பையின் பெயர் கூட இவ்வாறே. பிஸின் மோலிட்டர் பட்டேல் என்பது தான் அவனது அசல் பெயர். இந்த பிசினை பள்ளியில் பிஸ்ஸிங் என்று மூச்சா என்ற பொருளில் மாணவர்கள் கேலி பண்ணுவதால் அவன் அதை சுருக்கி கணிதக் குறியீடான Pi என மாற்றுகிறான். இக்கணித குறியீடு எண்ணற்ற சாத்தியங்களை குறிக்கக் கூடியது. விமர்சகர் ரோஜர் எபர்ட் இப்பெயர் பை பட்டேலின் ஆதார உளவியலை குறிப்பதாய் சொல்கிறார். அவன் வாழ்வின் எண்ணற்ற சாத்தியங்களை தேடிச் செல்பவன். அவனுக்கு வாழ்வை ஒரு சிறு கருத்தியலாக சுருக்குவதில் விருப்பமில்லை. இவ்விசயத்துக்கு பிறகு வருவோம்.
தர்க்கவாதிகள் குறித்து பேசினோம். முதல் தர்க்கவாதியான பையின் அப்பா தன் மகனின் கற்பனாவாதத்துக்கு ஒரு முடிவு கட்ட ஒரு கொடுங்காரியத்தை செய்கிறார். பைக்கு புலி மீது பெரும் வசீகரம். அவன் புலியை கவிஞர் ராபர்ட் பிளேக் போன்று தீமையின் ஒரு அழகியல் வடிவமாக பார்க்க உத்தேசிக்கிறான். மிக அருகாமையில் இருந்து புலியை பார்ப்பதற்காக அதன் கூண்டைத் திறந்து கறி கொடுக்க முயலும் போது அவன் அப்பா வந்து அவனை காப்பாற்றுகிறார். அவனை திருத்துவதற்காக, அவன் முன்னிலையில் புலிக்கு ஒரு ஆட்டுக்குட்டியை புசிக்க கொடுக்கிறார். அந்த காட்சிபூர்வ குரூரம் அவனது கற்பனாபூர்வ குமிழை உடைக்கிறது. குமிழுக்கு வெளியே வாழ்வு எவ்வளவு அப்பட்டமாக நிணமும் குருதியும் வெறுப்புமாக உள்ளது என அவன் மெல்ல மெல்ல அறிகிறான். ஆனால் இந்த விழிப்புணர்வுக்கு அவன் தயாராக இல்லை. துடுப்பை இழந்த படகோட்டி போலாகிறான்.
யோசித்துப் பார்த்தால் பொதுவாக நாம் குழந்தைகளை வாழ்வின் மறுபக்கத்தை பார்க்க அனுமதிப்பதில்லை. வாழ்வின் தீமையை அறிவதில் இருந்து அவர்களை சதா பாதுகாக்கிறோம். ஏனென்றால் சிறுவயதில் மனிதர்களிடம் தீமை சரளமாய் தன்னியல்பாய் பொங்குகிறது. அவர்கள் அழிவை வன்முறையை வெறுப்பை கொண்டாடுகிறார்கள். பிறகு மெல்ல மெல்ல நாம் அவர்களுக்கு வாழ்வு குறித்த அற்புதக் கனவுகளை பள்ளிகள், சடங்குகள், சமூக நிகழ்வுகள் வழி அளிக்கிறோம். அவர்களை நன்னெறி கொண்டவர்களாக மாற்ற முயன்று நிஜத்தில் அவர்களுக்கு தம் இயல்பு குறித்த கூச்சத்தை குற்றவுணர்வை ஏற்படுத்துகிறோம். அடுத்து வளர்ந்த பின் அவர்கள் வாழ்வின் கறுத்த பக்கத்தை காணும் போது அதில் இருந்து தம்மை விலகுதல் மற்றும் நியாயப்படுத்தல் மூலம் காத்துக் கொள்ளும் சித்தாந்த வலு அவர்களுக்கு கிடைத்திருக்கும். ஆனால் பை படேலுக்கு அவன் தர்க்கவாதி அப்பா அந்த தயாராகும் சந்தர்பத்தை அளிப்பதில்லை.
இரண்டாவது தர்க்கவாதி எழுத்தாளர் யான் மார்ட்டெல். அவர் பையை சந்தித்து அவனது கதையைக் கேட்டு அதனை நாவலாக எழுத வந்துள்ளார். படத்தில் நாற்பது வயது பையுடன் உரையாடும் போது அவரும் தர்க்கரீதியாக அவனது கதையை தனக்கு விளங்கிக் கொள்ள முயல்கிறார். பை இரண்டு கதைகள் சொல்கிறான். ஒன்று அவன் படகில் பயணிக்கும் போது மிருகங்களுடனான அவன் சாகசங்கள் பற்றியது.
கழுதைப்புலி பசியினால் வரிக்குதிரையை கொல்லுகிறது. பிறகு குரங்கைக் கொல்லுகிறது. அப்போது திடீடென்று படகில் கீழ்த்தளத்தில் இருந்து புலி பாய்ந்து வந்து கழுதைப்புலியை கொல்லுகிறது. இக்காட்சி மிக எதிர்பாராதவிதமாய் அமைந்து பார்வையாளர்களை உலுக்கி விடுகிறது. அதன் பயங்கரமும் தான். ஒன்றையொன்று தின்று வாழும் இயற்கை நியதி. ஆனால் பை இதனை ஒரு கருத்தியலாக காண்பதில்லை. அவன் முதலில் அப்புலியிடம் இருந்து தப்பிக்க முயல்கிறான். பிறகு அதனை உயிரோடு வைத்திருக்க பிரயத்தனிக்கிறான். ஏனென்றால் புலிக்கு உணவு தராவிட்டால் அது அவனை கொன்று விடும். மேலும் புலி உயிரோடு இருப்பதன் அச்சம் அவனை தொடர்ந்து விழிப்புடன் வைத்து நடுக்கடல் தனிமையில் அவனை மனம் பேதலிக்காமல் காப்பாற்றும். இப்படித் தான் புலியுடனான அவனது பரஸ்பர சார்பு வாழ்வு ஆரம்பிக்கிறது.
ஒரு காட்சியில் புலி நீரில் குதித்து மீன் பிடிக்கிறது. ஆனால் அதற்கு திரும்ப படகில் ஏற தெரியவில்லை. பைக்கு சிக்கல் அதனை காப்பாற்றவா அல்லது வேண்டாமா என்பது. காப்பாற்றினால் அவனுக்கு ஆபத்து வரலாம். ஆனால் அவனது தர்க்கம் கடந்த அன்பு புலியை காப்பாற்ற சொல்கிறது. காப்பாற்றின பின் அவன் புலியுடனான உறவை ஒரு படிநிலை அடிப்படையில் அமைக்க முயல்கிறான். புலியுடன் மற்றொரு வனமிருகம் போல் பொருதி அதன் அச்சத்தைக் கொண்டு அதனை அடிபணிய வைக்கிறான். புலி அவனுக்கு பணிகிறது. ஆனால் பிறரை போல அவன் புலியை ஒரு கீழ்நிலை மிருகம் போல பாவிக்க தயாராக இல்லை. அதனுடன் தோழமை பாவிக்கிறான். ஒரு கட்டத்தில் இருவரும் பரஸ்பர புரிந்துணர்வுடன் அருகருகே படகில் இருந்து நட்சத்திரங்கள் பூத்து கடலில் பிரதிலிக்கும் காட்சியை பார்த்து வியக்கிறார்கள். புலி கடலடியே ஓடும் உயிரினங்களை தீராத ஆர்வத்துடன் கவனிக்கிறது. அதற்கு காணும் இடமெல்லாம் உணவன்றி வேறில்லை. ஆனால் பட்டேலுக்கு அகண்ட முடிவற்ற வானம் ஒரு தத்துவ வெளியாக தோன்றுகிறது. தனது தனிமையும் உயிர்வாழ்தலுக்கான சவால்களும் இறைவன் தன்னுடன் நிகழ்த்தும் உரையாடல் என நினைக்கிறான்.
பொதுவாக இலக்கியத்திலும் படத்திலும் காளை, புலி இவையெல்லாம் மனித வன்மத்தின் உருவகங்களாகத் தான் வருகின்றன. ஹெமிங்வே, நம்மூரில் கி.ரா ஆகியோரின் படைப்புகளில் காளையோடு வரும் மனிதன் என்பது சமூக மனிதனும் அவனது மற்றொரு பக்கமான ஆதிஇயற்கை மனிதனும் தான். இப்படத்திலும் ரிச்சர்ட் பார்க்கர் எனும் புலி பை படேலின் ஆளுமைப் பிளவு தான். அவன் தன் தீமையை உணர்ந்து அதனை ஆட்கொண்டு அருகருகே அதனோடு அமைதியுடன் புரிந்துணர்வுடன் வாழப் பயிலும் ஒரு “விழிப்புணர்வு” பெற்ற மனிதன். ஹெர்மன் ஹெசெயின் சித்தார்த்தா நாவலின் நாயகனைப் போல. அவன் தன் தீமையை மறுக்கவோ மறைக்கவோ தேவையில்லை. அல்லது இன்றைய தமிழ் எதிர்கலாச்சாரவாதிகளைப் போல தீமையை மிகுதியாக கொண்டாடவும் போவதில்லை. இது ஒரு தர்க்க புரிதல் மட்டுமே. ஆனால் புலி நிஜமாகவே புலி இல்லையா? இப்படம் எழுப்பும் முக்கியமான கேள்வி இது.
பை மற்றொரு கதை சொல்கிறான். இக்கதை அவனை பிற்பாடு நாடி வரும் ஜப்பானிய அதிகாரிகளின் தேவைக்காக தான் உருவாக்கின கதை என்கிறான். ஆனால் எந்தளவுக்கு இது உண்மை என்பது பார்வையாளனுக்கு குழப்பமாகவே இருக்கும். ஏனென்றால் இந்த இரண்டாம் கதை மேலும் எதார்த்தமானது. எதார்த்தமே உண்மை என நம்பப் பழக்கப்பட்ட நாம் இரண்டாம் கதையை தான் நம்பத் தலைப்படுவோம். மேலும் இரண்டாம் கதை மனிதனின் ஆதாரமான குரூரத்தை சித்தரிக்கும் ஒன்று. மனிதன் பிரதானமாய் தீமையால் ஆனவன் என நம்ப விரும்பும் நவீன மனதுக்கும் இரண்டாம் கதையே நெருக்கமாக இருக்கும். இக்கதையில் கப்பல் கவிழ்ந்த பின் படகில் பை தப்பிக்கையில் கூட மிருகங்கள் ஒன்றும் இல்லை. பதிலுக்கு கூட அவன் அம்மா, காயமுற்ற கப்பல் மாலுமி மற்றும் ஒரு சமையற்காரன் பயணிக்கிறார்கள். சமையற்காரன் மாலுமியை இறக்க விட்டு அவனது உடலை மீன் பிடிக்க இரையாகவும் உணவாகவும் பயன்படுத்துகிறான். இதை எதிர்க்கும் படேலின் அம்மாவையும் அவ்வாறே செய்கிறான். கோபத்தின் உச்சத்தில் பை அந்த சமையற்காரனை கொன்று விடுகிறான். பிறகு அவன் நீண்ட நாட்கள் கடலில் தத்தளித்து இறுதியில் காப்பாற்றப் படுகிறான்.
இரண்டாம் கதையை கேட்கும் எழுத்தாளர் முதலில் வரும் கழுதைப்புலி தான் சமையற்காரன், வரிக்குதிரை காயமுற்ற மாலுமி மற்றும் ஓரங்குட்டான் குரங்கு தான் அவன் அம்மா என புரிந்து கொள்கிறார். அப்படி என்றால் புலி? புலி வேறு யாருமில்லை பையே தான் என்கிறார். அதாவது பை பட்டேல் முதலில் நடந்ததை ஒரு மிகுபுனைவு உருவகக் கதையாக மாற்றி முதற்கதையாக கூறுகிறான். இரண்டாம் கதை தான் உண்மையில் முதல் கதை. இதன் மூலம் அவன் தன் வாழ்வில் நிகழ்ந்த அதர்க்கமான நிகழ்வுகளை புரிந்து வாழ்வின் அர்த்தத்தை மீட்க முயல்கிறான்.
ஏனென்றால் அப்பா அவனை புலி ஆட்டைத் தின்பதை பார்க்க வற்புறுத்தியதில் இருந்து அவனால் முன்னிருந்த களங்கமின்மையுடன் கடவுளை அணுக முடியவில்லை. பின்னர் பதின்வயது பை இறைவனின் நன்மையை தொடர்ந்து கேள்வி கேட்ட தஸ்தாவஸ்கியை, வாழ்வின் அர்த்தமின்மையை அபத்தத்தை சித்தரித்த காம்யுவை வாசிப்பதை காட்டுகிறார்கள். பை இந்த கொடூர வாழ்வனுபவத்தை தன் சொந்த புனைவு வழி தாண்டிச் சென்று இறைவனின் இருப்பை அதன் வழி நிறுவிக் கொள்கிறான். புலியுடன் சேர்ந்து வாழ்ந்து கடல் எனும் பேராபத்தில் இருந்து தப்பிப்பது தீமை என்பது முழுக்க தீமை அல்ல என்ற புரிதலைத் தானே அவனுக்கு தருகிறது. ஆக வாழ்க்கை முழுக்க மறுப்புவாதத்திற்குள் அடங்குவதும் இல்லை.
ஆக தன் அம்மாவை கொன்ற சமையற்காரனை கொன்றது பை பட்டேல் தான். இந்த அறமற்ற செயல் அவனுக்கு விநோதமாக வாழ்வின் அடிப்படை இயல்பை புரிந்திட உதவுகிறது. மனிதன் எதையும் செய்யக் கூடியவன். அவன் தீமையின் எந்த எல்லைக்கும் செல்லலாம். அது எப்போது தீமையற்றதாய் மாறுகிறதென்றால் அவன் தன்னை வாழ்வின் நிலையோடு பொருந்தி சூழலின் பகுதியாக மாறிய நிலையில் அதனை செய்யும் போது தான். அப்போது அவன் சுழன்று அடிக்கும் கொடும் சூறாவளியின் பகுதி; ஆழிப்பேரலைகளின் சிறுதுளி. தீமையெனும் பிரம்மாண்டத்தின் பிரிக்க முடியா அங்கம். அவன் ஒரு முழுமை அடைகிறான்.
படத்தின் இரண்டு மூன்று காட்சிகள் இவ்விசயத்தை குறிப்புணர்த்தும். பை பட்டேலின் கப்பலை புயல் தாக்க அவன் மேல்தளத்தில் ஏறி காற்றோடு நிலைப்பட முயன்று தடுமாறி போராடுவான். அப்போது அவனிடம் அச்சமல்ல விளையாட்டு உக்கிரமே உச்சமாக இருக்கும். மற்றோர் இடத்தில் அவனது சிறுபடகு பெரும் மழை மற்றும் புயலும் தூக்கி வீசப்படும். அப்போதும் பை ஏறி நின்று இறைவனை நோக்கி “உனது குரலை இதன் வழி கேட்கிறேன். உன் இருப்பை இதன் வழி அறிகிறேன்” என்பான். இக்காட்சிகளில் எவ்வாறு பை பட்டேல் வாழ்வு நன்மை நிறைந்தது என்கிற மிகை நம்பிக்கையில் இருந்து தீமையை முழுக்க அதன் பிரம்மாண்டத்துடன் ஏற்கும் மனநிலைக்கு வந்து சேர்கிறான் என்பதை நாம் புரிந்து கொள்ள முடிகிறது. இது தான் இந்த கடல் சாகசத்தில், உயிர்ப்போராட்டத்தில் இருந்து அவன் அறியும் பாடம்: இந்த பாடத்தையே தனக்கு கடவுள் மீது நம்பிக்கை ஏற்படச் செய்த நிகழ்வாக அவன் நாவலாசிரியர் யான் மார்ட்டெலிடம் சொல்கிறான்.
மார்ட்டெலுக்குள்ளும் இக்கேள்விகள் உண்டு. அவரும் பையின் அப்பாவை போல நாத்திகர். எல்லா நாத்திகர்களையும் போல அவரும் வாழ்வின் தீமையை இறைவனுடன் பொருத்திக் கொள்ள முடியாது இறைவனை மறுக்கும் நிலையை வந்தடைகிறார். ஆனால் பை ஒருபடி மேலே போய் தீமை வழி இறைவனை அறிந்து கொள்கிறான். சொல்லப்போனால் இது ஒரு இந்திய வைதிக நிலைப்பாடு அல்ல. ஆங் லீயின் ஜென்மனம் தான் பட்டேலின் வழி பேசுகிறது.
யான் மார்ட்டெல் பட்டேலிடம் எது உண்மைக்கதை எனவே அறிய விரும்புகிறார். ஆனால் பை அதற்கு ஒரு எளிய விடையை தர தயார் இல்லை. பை பட்டேல் தனது இருகதைகளில் எது அதிக உண்மையானது என்பதல்ல எது அதிக ஈர்ப்புள்ளதாக இருக்கிறது என கேட்கிறான். மார்ட்டெல் அதற்கு புலியுடனான கதை என்கிறார். இறைவன் இருக்கிறான் என்பதற்கு இந்த ஈர்ப்பே உதாரணம் என்கிறான் பை. இவ்விசயம் எனக்கு அசோகமித்திரன் குறித்த ஒரு சம்பவத்தை நினைவூட்டுகிறது.
அசோகமித்திரனின் ”புலிக்கலைஞன்” எனும் பிரபலக் கதையை வாசித்த ஒரு வாசகர் அவரிடம் வந்து அருகி வரும் ஒரு நாட்டுப்புறக் கலைஞனின் கதையை பதிவு செய்தமைக்காக அவரை நெகிழ்ந்து பாராட்டுகிறார். பிற்பாடு அங்கிருக்கும் ஜெயமோகன் அசோகமித்திரனிடம் தான் இக்கதையை வேறுவிதமாய் ஒரு படைப்பாளியின் ”விஸ்வரூபத்தை” சித்தரிக்கும் கதையாக புரிந்து கொள்வதாக சொல்லுகிறார். அசோகமித்திரன் இந்த விளக்கத்தையும் ஏற்றுக் கொண்டு தன் கதையை ஒரு நாட்டுப்புற கலைஞனின் எளிய வாழ்க்கைப்பிரச்சனை பதிவாக புரிந்து கொள்ளப்படுவதில் தனக்கு எந்த மாறுபாடும் இல்லை என்கிறார். ஏனென்றால் அசோகமித்திரனுக்கு கதை என்பது வாழ்க்கைக்கு மிக நெருக்கமாக வரும் ஒரு வஸ்து. ஒரு கதையை விளக்க நியாயப்படுத்த முயலும் போது அது உண்மைத் தன்மையை இழக்கிறது. அதை ஆளாளுக்கு தேவையானபடி புரிந்து கொள்ளலாம். கதையில் முக்கியம் அது நம்மை உள்ளார்ந்து ஈர்க்கும் தன்மை. அந்த ஆழ்மன வசீகரம் கதையின் உண்மையில் இருந்து, வாழ்வின் உண்மையில் இருந்து தோன்றுவது.
பை பட்டேல் தன் வாழ்க்கைக் கதையையே சொல்கிறான் என்பதால் இங்கு நம் வாழ்க்கையை நாம் புரிந்து கொள்வதில் எத்தனை சதவிதம் கற்பனை என்கிற கேள்வி வருகிறது. கடவுளை புரிதல், வாழ்வை அறிதல் போன்றவை கூட புற உலகை கறுப்புக் கண்ணாடி கொண்டா மஞ்சள் கண்ணாடி வழியா பார்ப்பது என்கிற தனிமனித தேர்வாக இருக்கலாம். அதனாலே பை பட்டேல் எந்த இடத்திலும் தன் அனுபவம் மூலம் இறைவனை விளக்க முயல்வதில்லை. ஆனால் மிக ஆழமாக இறைவனின் அருகாமையை தன் வாழ்வின் ஆக ஆபத்தான தருணங்களில் உணர நேர்ந்ததாக சொல்கிறான்.
நாயகனும் புலியுமாக ஒரு பாசிகளில் மிதக்கும் தீவில் அடைக்கலம் புகுகிறார்கள். அத்தீவு இரவானால் அமிலத்தன்மை பெற்று உயிர்களை புசிக்கக் கூடியது. ஒருநாள் மரமொன்றின் கனியை பறித்து திறக்கும் போது அதன் மத்தியில் இறந்து போன ஒரு மனிதனின் பல்லை அவன் காண்கிறான். இதை இறைவன் தனக்கு விடுத்த சேதியாக கருதி அவன் அங்கிருந்து தப்பிக்கிறான். இது எதேச்சையாகவும் இருக்கலாம். ஆனால் இப்படி புரிவது பையின் தேர்வு.
இளம் பையும் புலியுமாக கடலில் காணும் பிரமிப்பூட்டும் அழகியல் காட்சிகள் மிக கவித்துவமாகவும் கிளர்ச்சிதருவதாகவும் உள்ளன. குறிப்பாக ஒரு காட்சியில் பறக்கும் மீன்கள் பெருங்கூட்டமாக அவர்களின் படகை கடந்து பாய்கின்றன. அப்போது பை மன எழுச்சியுடனும் வியப்புடனும் அவற்றின் வீச்சை எதிர்த்து நின்று போராட முயல புலியோ முடிந்தளவுக்கு அவற்றை வாயில் ஏந்தித் தின்னுகிறது. அப்போது ஒரு பெரிய மீன் மாட்ட அவன் அதனை புலியிடம் இருந்து பிடுங்கி அதனை துரத்தி சின்ன பறக்கும் மீன்களை தின்னும் படி பணிக்கிறான். சுவாரஸ்யமாக படத்தின் ஆரம்பத்தில் பை முழு சைவம். இன்னொரு காட்சி மிதக்கும் தீவில் மீர்க்கெட் எனும் குட்டி கங்காரு போன்ற மிருகங்கள் மத்தியில் அவனும் புலியுமாக காலையில் விழித்தெழுவது. அப்போதும் புலி குழந்தைகள் செடி இலைகளை கிள்ளுவது போல் சில மீர்க்கெட்டுகளை துரத்தி வாயில் கவ்வி விழுங்குகிறது.
முதல் காட்சியில் வரும் பறக்கும் மீன்களின் உக்கிரமான கடலும் இரண்டாம் காட்சியில் தோன்றும் பகலில் உண்ண சுவையான வேர்களையும் இரவில் ஆளைக் கொல்லும் ரசாயனத்தன்மையும் கொண்ட பாசிகளின் மீதெழுந்த வஞ்சமான தீவும் பை பட்டேலின் மனம் தான். ஒவ்வொரு முறையும் அவன் தன் மனதோடு தான் போராடி தப்பிக்கிறான். ஒவ்வொரு முறையும் அவன் மனதில் இருந்து தனித்து நின்று அதைப் பார்க்கவும் செய்கிறான். இப்படியான மிக உளவியல் ஆழம் கொண்ட படிமங்களை இப்படம் நெடுக காணலாம்.
இவ்வளவு தத்துவ விசாரத்தையும் சித்தரிக்கும் வேளையில் படத்தின் ஆதார தொனி ஒரு மேற்கத்திய மனதினுடையதாக இருக்கிறது என்பதையும் சொல்லியாக வேண்டும். “Tree of Life” போல பல இடங்களில் கிறித்துவ போதனை படம் பார்க்கும் உணர்வு நமக்கு ஏற்படுகிறது. உண்மையில் இந்தியர்கள் கடவுளை தத்துவரீதியாக விளக்கி உணர்வு ரீதியாக ஒன்றுபட போராடுபவர்கள் அல்ல. ஒரு பேராபத்து நிகழும் போது ஏன் என ஆங்காரமாய் வினவுவதோ அது கடவுளின் சோதனை என்று அமைதியாவதோ இந்திய மனம் அல்ல. இந்திய மனம் ஒரு பேராபத்தே தன்னால் தான் நிகழ்கிறது என கருதிக் கொள்ளும். எதுவும் கடந்து போகும் என ஆழமாக நம்பும். இப்படத்தில் அப்பா, அம்மாவுடன் பட்டேலுக்கான உறவு கூட ஒரு மேற்கத்திய பாணியில் தான் அமைந்துள்ளது.
ஆங் லீயின் Brokeback Mountain எதார்த்த வகையிலான ஓரின காதலின் கதையை சொல்லும் படம். இப்படத்தில் ஓரின காமமும் சரி, அக்காதலர்களின் ஒருவனின் மரணமும் சரி எவ்விதத்திலும் ஆங் லீயால் விளக்கப்பட்டிருக்காது. காமமும் மரணமும் இயற்கையின் பெரும் சுழற்சியில் மனிதனை அடித்துப் போகும் மீளாக் கனவுகள். அப்படத்தில் உள்ள ஆழ்ந்த சோகமும் கூட கண்மூடித்தனமான ஒரு காலத்தின் முன் தனியாக நிற்கும் ஒரு மனிதன் உணரக் கூடியதே. அதனாலே ஹீத் லெட்ஜர் இப்படத்தில் தன் கொல்லப்பட்ட ஓரினக்காதலனுக்கு பழிவாங்காமல், கோபத்தில் ஆவேசப்படாமல் அமைதியாக அவன் நினைவுக்காக சில ஆடைகளை மட்டும் அவன் குடும்பத்திடம் இருந்து வாங்கி விட்டு திரும்புகிறான். “Crouching Tiger Hidden Dragonஇல்” பை படேலை போன்று தீமைக்கும் நன்மைக்கும் இடையே குழம்பி தத்தளிக்கும் ஜியா லொங் யு எனும் இளம் பெண் வருகிறாள். அவளால் நன்மையின் தரப்பில் நின்று போராடுபவர்கள் மரணிப்பதும் நடக்கிறது. இறுதியில் அவள் தனது குறைபாடு வாழ்வின் முழுமையை தீமை நன்மையோடு அப்படியே ஏற்க முடியாதது தான் என அறிகிறாள்.
Crouching Tiger Hidden Dragonஇன் மற்றொரு முக்கிய பாத்திரம் லீ மொ பாய். லி மொ பாய் ஒரு வாள் சண்டை மேதை. அவரிடம் green destiny என்றொரு அபூர்வ சக்தி கொண்ட வாள் உள்ளது. அவர் தொழில்முறையில் ஒரு சண்டை வீரர். ஆனால் மனதளவில் தன் சண்டைக்கலை மூலம் ஆழமான அமைதியை கண்டடைய முயல்கிறார்; அந்த வாள் சண்டைகளின் போது அவருக்கு வாழ்வின் அடிப்படையான யின் – யாங் பூரணத்தை அடைய உதவுகிறது. ஆனால் அதே பலதலைமுறைகளின் குருதி புரண்ட வாள் அவரை வன்முறையின் பாதையிலும் நிலைத்திருக்க செய்கிறது. வாளைச் சுழற்றாத போதெல்லாம் அவர் அமைதியற்றவராக இருக்கிறார்.
படம் முழுக்க லி மொ பாய் வன்முறை மற்றும் ஆன்ம எழுச்சியின் இரு பாதைகளிடையே தடுமாறி நிலைப்படுவதை சித்தரிக்கிறார் ஆங் லீ. அவர் தன் வாளை நாட்டின் ஆளுநரிடம் ஒப்படைத்து வன்முறை வாழ்வில் இருந்து ஓய்வு பெற முயல்வதில் படம் துவங்குகிறது. ஆனால் குருதியின் தடம் எங்கு சென்றாலும் அவரைத் தொடர்கிறது. வாள் திருடு போகிறது. அதைக் கண்டுபிடிக்கும் பொறுப்பும் ஜியா லொங் எனும் பிறழ்வுபட்ட மேதைமை கொண்ட இளம் வீராங்கனைக்கு சரியான பாதையை காட்டும் பொறுப்பும் அவரைப் பற்றிக் கொள்கின்றன. அத்தோடு அவரது குருவைக் கொன்ற ஜேட் பாக்ஸ் எனும் சூழ்ச்சிக்கார பெண்ணைக் கொன்று பழிவாங்கும் ஆவேசமும் அவரை தொடர்ந்து வாளைப் பயில வைக்கிறது. சொல்லப்போனால் அந்த வாள் தான் படம் முழுக்க பாத்திரங்களை தன் செலுத்துகிறது – அபாயங்களை, அற்புதங்களை, சுய அழிவை, சுய கண்டுபிடிப்பை நோக்கி. விதியின் புதிர்பாதையில் மாட்டிக் கொண்ட தப்பிக்க இயலாத ஆன்மாக்கள் ஒவ்வொருவரும். ஒரு வித்தியாசம் சிக்கல் வெளியே அல்ல உள்ளே இருக்கிறது என்பது; விடுதலை மனப்பொறியில் இருந்து பெறப்பட வேண்டியது என்பது. காலத்தின் பிடியில் இருந்து விடுதலையே இல்லை எனும் ஐரோப்பிய இருத்தலியம் நமக்கு பரிச்சயமானது. சார்த்தர், காம்யுவில் இருந்து ஆங் லீயின் ஆசிய மனம் இவ்வாறு தான் வேறுபடுகிறது.
மேற்சொன்ன படத்தின் துவக்கத்தில் மொ பாய் தான் ஆழமன தியானம் மேற்கொண்ட் அனுபவத்தை தன் காதலி யு ஷு லியனிடம் சொல்கிறார். அவரால் தியானத்தின் ஆழங்களுக்குள் செல்ல முடிகிறது. ஆனால் சட்டென்று தியானத்தில் இருந்து விழித்துக் கொண்டவருக்கு தனது குரு ஏன் அதுநாள் வரை அந்த தியான முறையை தனக்கு சொல்லித் தரவில்லை என புரிகிறது. எவ்வளவு ஆழத்திற்கு சென்றாலும் அவரால் பரவசத்தை அடைய முடியவில்லை. மாறாக மனம் முழுக்க கசப்பால் நிரம்பி இருக்கிறது. லி மொ பை அடிப்படையில் அமைதியாக இல்லை. அவருக்குள் தன் குருவை கொன்ற ஜேட் பாக்ஸ் மீது தீரா கோபம் உள்ளது. அதே போன்று யு ஷு லியனிடம் சொல்ல முடியாத தீராக் காதலும். யு ஷுவை ஆரம்பத்தில் மொ பாயின் நண்பன் தான் காதலித்தான். ஒரு சண்டையின் போது மொ பாயை காப்பாற்றும் பொருட்டு நண்பன் உயிரை தியாகம் செய்கிறான். பிற்பாடு யு ஷுவுக்கும் மொ பாய்க்கும் காதல் மலர்ந்தாலும் நண்பனின் தியாகம் அவர்களுக்குள் கடுமையான குற்ற உணர்வை ஏற்படுத்துகிறது. அதனால் காதலை மறைத்து ஒரு தூய்மையான நட்புறவை நீண்ட காலமாக தக்க வைக்கிறார்கள். லி மொ பாய் வெறுப்புக்கும் காமத்துக்கும் இடையே தத்தளிப்படி இருக்கிறார். அவரது இந்த உளவியல் சிக்கல் தான் அவரது மேதைமைக்கும் ஆன்மிக விழிப்புணர்வுக்கு இடையே தடையாக உள்ளது. அவரைப் போன்று ஒருவரால் இந்த சிக்கலை விடுவிக்கவே முடியாது. மரணம் தான் ஒரே தீர்வு.
ஆங் லீயின் படங்களில் ஊடாக இப்படியான தொடர்ச்சி உள்ளது. அவர் மனிதன் ஏன் வாழ்க்கை முன் தோற்றுக் கொண்டே இருக்கிறான் என்கிற கேள்வியை கேட்கிறார். அது ஏன் நம்மை காயப்படுத்திக் கொண்டே இருக்கிறது என வினவுகிறார்.
பை பட்டேல் இந்தியாவில் இருந்து கிளம்பும் போது தன் காதலியை பிரிகிறான். ஆனால் அவளிடம் திரும்ப வருவேன் என பொய் கூறுகிறான். அவளும் ஏற்கிறாள். அந்த பரஸ்பர பொய் இருவரையும் காயப்படுத்துகிறது. அவனால் மனம் திறந்து விடை பெற முடியாது போகிறது. காதல் எத்தனை வலிமையாக இருந்தாலும் காலத்தின் முன் அது நொறுங்கிப் போகிறது என அவனுக்கு புரிவதில்லை. பின்னர் அவன் கப்பல் விபத்தில் குடும்பத்தை இழக்க இறுதியாக அவர்கள் முகத்தைக் கூட காண முடியாது பெரும் கசப்படைகிறான். இறுதியாக அவன் ரிச்சர்ட் பார்க்கர் எனும் வங்காளப் புலியுடன் மிகவும் நெருக்கமாகிறான். அது அவன் உற்ற தோழனாகிறது. ஆனால் ஒரு வனத்தை அடைந்ததும் புலி திரும்ப நோக்காமல் மீள்பயணிக்கிறது. அதுவே அதன் இயல்பு. அதுவே வாழ்வின் இயல்பும் கூட. வாழ்வு முழுக்க எத்தனையோ உறவுகள் நிறைவுறாதே நம்மை விட்டு அகல்கின்றன. ஆனால் பை பட்டேலால் அதனை ஏற்க முடியாது போக அவன் கத்தி அழுகிறான். அவனை காப்பாற்றி தூக்கி செல்லும் போது அவன் தனக்கு விடைதராத புலியை எண்ணி ஆற்றாமையில் கதறுகிறான். பின்னர் இறுதிக் காட்சியில் எதிர்பாராத விதமாக 40 வயது பை பட்டேலின் குடும்பத்தை காட்டுகிறார்கள். இது நாவலாசிரியர் யான் மார்டெலுக்கு  வியப்பளிக்கிறது. ஏனென்றால் இத்தனை இழப்புகள் கசப்புகள் காயங்களுக்குப் பிறகும் அவன் ஒரு புதுக்குடும்பத்தை அடைந்து குற்றவுணர்வின்றி நிறைவான வாழ்க்கை வாழ்கிறான்.
தன்னிடம் விடைபெறாது பிரிந்த உறவுகளுக்காக சிந்த இனி அவனிடம் கண்ணீர் இல்லை. எவ்வளவு இழந்தாலும் வாழ்வு முழுமை கொள்ளுகிறது. இவ்வளவு இழந்த பின்னும் பை எல்லாவற்றையும் பெற்றவனாக இருக்கிறான். இறைவனும் சாத்தானும் இனி அவன் பகுதிகள் அல்ல. கடவுளும் புலியும் ஒரு தெளிந்த பகலையும் அடர்ந்த இருளையும் போல அவனை கடந்து போகிறார்கள்.
Read More

Friday, 18 January 2013

புதுமைப்பித்தனின் அப்பா



புதுமைப்பித்தன் (தனது பூர்வீக) நிலத்தை விற்று காசாக்கிய போது அவரது சித்தப்பா சுப்பிரமணியபிள்ளை ஒரு யோசனை சொன்னார். வீணாக பணத்தை செலவு செய்து விடாமல் ஒரு ஜீப் கார் வாங்கி வாடகைக்கு விட சொன்னார். அப்போது யுத்தம் முடிகிற அல்லது முடிந்துவிட்ட பருவம். சரசமான விலைக்கு உறுதியான ஜீப் கார்கள் கிடைத்துக் கொண்டிருந்தன. எனவே அப்படி ஒன்று வாங்கினால் ஏதாவது பிரயோஜனகரமாய் இருக்கக் கூடும் என்பது அவர் எண்ணம். ஆனால் அதற்கு புதுமைப்பித்தன் சொன்ன பதில் என்ன தெரியுமா?

“”ஜீப் வாங்குவதில் ஆட்சேபணை இல்லை. ஆனால் ஒரே ஒரு நிபந்தனை வாங்கியவுடனேயே அதை என் அப்பா மேலே தான் விடுவேன். சம்மதமா?”
- தொ.மு.சி. ரகுநாதன், ப.50, ”புதுமைப்பித்தன் வரலாறு”
Read More

Sunday, 13 January 2013

குடும்பமும் குற்றமும்





சமீபத்தில் தில்லியில் ஓடும் பேருந்தில் இளம்பெண் கூட்ட வன்புணர்வு செய்து கொல்லப்பட்ட நிகழ்வின் போது போலீஸ் பிரதான குற்றவாளி ராம்சிங் குறித்து ஒரு தகவல் வழங்கியது: அவர் ஏற்கனவே குற்றங்களில் வழக்கு பதிவானவர். அவரது மனைவி இறந்து விட்டார். இதன் பொருள் அவர் பொது சமூகத்துக்கு வெளியே இருக்கும் குற்றவாளி. முக்கியமாய் அவர் குடும்ப அமைப்புக்குள் இருப்பவர்.
இத்தகவல் நமக்கு வன்புணர்ச்சியாளர்கள் அனைவரும் சமூக விளிம்பில் இருப்பவர்கள்; அவர்கள் குடும்ப அமைப்புக்குள் இல்லாததால் ஒழுக்க கட்டுப்பாடு அற்றவர்கள் என்கிற பொதுமைப்படுத்தப்பட்ட சித்திரத்தை அளிக்கிறது. ஊடகங்கள் இந்த தட்டையான பிம்பத்தை நன்கு பயன்படுத்திக் கொள்கின்றன. இத்தருணத்தில் ஒரு எம்.பி நமது பிள்ளைகளை நன்றாக ஒழுக்கம் சொல்லித் தந்து வளர்க்காதது தான் அவர்கள் குற்றவாளிகளாக மாறக் காரணம் என அறிவித்தார். ஆனால் உண்மை வேறானது.
நமது நாட்டில் அநேகமான வன்புணர்வு குற்றங்கள் குடும்பத்துக்குள் தான் நடக்கின்றன. மற்றவை பெரும்பாலும் ராணுவம், போலீஸ், நிலப்பிரபுக்கள், உயர்சாதி வெறியர்களால் கீழ்த்தட்டு மக்கள் மீதும் பலவீனர்கள் மீதும் நிகழ்த்தப்படுகின்றன. இவர்கள் அனைவரும் சமூகத்தின் மைய அமைப்பில் இருந்து வருபவர்கள் தான். சொல்லப்போனால் அழுத்தமான ஒழுக்க பிரக்ஞை கொண்டவர்கள். ஆனால் தம் ஒழுக்க நம்பிக்கையை தமக்கான ஆயுதமாக பயன்படுத்துகிறவர்கள். இது வேறொரு விவாதம். நாம் இங்கு கேட்கப் வேண்டிய கேள்வி மையநீரோட்ட சமூகமும், குடும்ப அமைப்பும் பிரதனாமாக குற்றவாளிகளுக்கு புகலிடம் அளிக்கும் இந்நிலையில் நாம் குற்றவாளிகளை நமக்கு அப்பாற்பட்ட ஒரு கற்பனையான வெளியில் அடையாளம் காண்பது ஒரு தப்பித்தல் மனநிலை அல்லவா என்பது.
தமிழ் சினிமாவில் குற்றவாளிகளை பொதுவாக விளிம்புநிலை மக்களாக இஸ்லாமியராக அல்லது கிறித்துவர்களாக காட்டுவதே மரபு. இது நமக்கு பழகி விட்டது. ஆனால் ஒரு நாயகனை anti-heroவாக காட்டும் போது அவனை எங்கே நிறுவுவது என்கிற சிக்கல் எழும்.


“நான்” படத்தில் நாயகன் எந்த ஒழுக்க அற விழுமியமும் அற்றவன். “தப்பை சரியாக செய்தால் தப்பே இல்லை” என்கிற சித்தாந்தம் தான் படத்தின் அடிப்படை. முதலில், இப்படி யோசிப்பவனை பொதுநீரோட்டத்தில் இருந்து அகற்றி காட்டுகிறார்கள். அவன் அம்மா ஒழுக்கங் கெட்டவள். அப்பா தூக்கிட்டு சாகிறார். அவன் தன் அம்மாவை கொன்று சிறை செல்கிறான். ஆக இப்படியானவனுக்கு குற்ற வாழ்க்கையன்றி வேறு வழியில்லை என்று நிறுவி விட்டு அவன் தன் தப்பை சரியாக செய்யும் தந்திரங்களை விலாவரியாக சித்தரிக்கிறார்கள். பொதுவாக நமக்கு குற்றங்களை புத்திசாலித்தனமாக செய்யும் பாத்திரங்களைப் பிடிக்கும். குறிப்பாக ஒரு சூழலின் கைதியாக அப்பாத்திரம் இருந்தால் ரசிகர்கள் அவன் குற்றத்தை ஓரளவுக்கு ஏற்றுக் கொள்கிறார்கள். “நானின்” நாயகனும் தனது கையாலாகாத நிலைமையை கண்ணீர் மல்க சொல்லி நம் இரக்கத்தை தூண்டுகிறான்.
“பிட்சா” படத்தில் திருமணத்துக்கு முன்னர் சேர்ந்து வாழும் ஜோடியாக நாயகனும் நாயகியும் வருகிறார்கள். அது குறித்த எந்த நியாயவாதமும் குற்றவுணர்வும் இன்றி எதார்த்தமாக இவ்வுறவை சித்தரிக்கிறார்கள். ஆனால் நாம் இது குறித்து ரொம்பவே பூரிப்படைய வேண்டியதில்லை. அவர்கள் இருவரும் கிறித்துவர்கள். இருவருமே அனாதை இல்லங்களில் வளர்ந்தவர்கள். பின்னர் இருவரும் சேர்ந்து நாயகனின் முதலாளியிடம் இருந்து 2 கோடி பணத்தை ஏமாற்றுகிறார்கள். அப்போது அவர்களுக்கு நெஞ்சு உறுத்தாதா? இயக்குநர் அதற்கு இப்படி நியாயம் அளிக்கிறார்: “நாம் அநாதை இல்லங்களில் எவ்வளவு கஷ்டப்பட்டு வாழ்ந்தோம். இப்படியான பணத்துக்காக எவ்வளவு ஏங்கியிருப்போம். நமக்கு இதுவரை வாய்க்காத வாழ்க்கை இப்போது இதன் மூலம் கிடைக்கவிருக்கிறது”. ஆக அனாதைகள் என்றால் எளிதில் குற்றவாளிகளாகி விடுவார்களா? அவர்களும் கிறித்துவர்களும் தாம் live-in உறவுகளில் இருக்கிறார்களா?
எதார்த்தத்தில் தமிழகத்தில் சமீபத்தில் நடந்துள்ள அநேக குற்றங்கள், கொள்ளை, கொலை உள்ளிட்டு, நன்கு படித்த இளைஞர்களால் தான் நிகழ்த்தப்பட்டன. அவர்கள் பொதுவான ஒழுக்க விழுமியங்கள் புகப்பட்டப்பட்டு நல்ல பள்ளி கல்லூரிகளில் கல்வியளிக்கப்பட்டவர்கள் தாம். அவர்களின் பெற்றோர் சமூகத்தில் நல்ல அந்தஸ்தில் இருப்பவர்கள் தாம். ஜான் டேவிட் நினைவிருக்கிறதா? அவர் சிறையில் இருந்த போது சதா ஆங்கில நாவல்கள் தாம் வாசிப்பார். பெயிலில் வந்த அவர் சென்னை வேளச்சேரியில் ஒரு பி.பி.ஓவில் வேலை பார்த்து அணித்தலைவராக உயர்வு பெற்றார். குற்றங்கள் செய்பவர்கள் அனைவரும் சைக்கோக்களோ முட்டாள்களோ அல்ல. அவர்கள் நம்மைப் போல் சாமான்யர்கள். அப்பா, அம்மா, சகோதர, சகோதரி, நண்பர்கள், கூட வேலை பார்ப்பவர்களிடம் நியாயமாக ஒழுக்கமாக நடந்து கொள்பவர்கள்.
குற்றம் ஒரு போதை அல்லது மனநிலை. அது ஒரு பண்பாடு அல்ல. மேற்கத்திய உளவியலில் இவ்வாறு குற்றவாளியை அவனது வளர்ப்போடு அடையாளப்படுத்தும் ஒரு பாணி இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் வலுப்பெற்றது. ஆனால் பின்னர் இது கடுமையான சர்ச்சைக்குள்ளானது. இன்றும் அறிஞர்கள் ஒரு முடிவுக்கு வரவில்லை. வளர்ந்த சூழலும் மரபணுவும் ஓரளவு குற்றத்தை தூண்டலாம். தூண்டாமலும் இருக்கலாம். மனிதனின் மகத்துவமே தனது சூழலை குறைப்பாட்டை கடந்து மேலெழுவது தானே. அந்த நம்பிக்கை இருப்பதனால் தான் இலக்கியத்துக்கும் தத்துவங்களுக்கும் இன்னும் மதிப்பிருக்கிறது. நம்மிடையே இந்த உரையாடல் சாத்தியமாகிறது.
மேலும் நாம் இன்று கோடானு கோடி மதிப்பிலான பொருளாதார குற்றங்களின் காலத்தில் வாழ்கிறோம். நமது தலைவர்களில், லட்சிய பிம்பங்களில், நாயகர்களில் கறைபடியாத ஒருவர் கூட இல்லை. நமது நாட்டை சூறையாடும் படித்த திறமையான தலைவர்களை மன்னித்து ஏற்று வாழுகிற மனநிலைக்கு இன்று நாம் தள்ளப்பட்டு விட்டோம். குற்றம் என்பது கொலை, கொள்ளை, வன்புணர்வு என்கிற குறுகின விளக்கம் காலாவதியாகி விட்டது. பழங்குடி மக்களை, இஸ்லாமியப் பெண்களை அல்லது ஈழப்பெண்களை ஒரு ராணுவம் வன்புணர்ந்து அழிக்கும் போது அதனை அனுப்பிய, நியாயப்படுத்திய அல்லது பாதுகாத்த ராணுவ ஜெனரல்கள் மற்றும் பிரதமர், அமைச்சர்களும் தாம் பொறுப்பாகிறார்கள். நாம் ஒரு மிகச்சிக்கலான காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
இப்போது நாம் முதலில் செய்ய வேண்டியது குற்ற அச்சைக் கொண்டு கீழிருப்பவர் நெற்றியில் ஒருவர் மாறி ஒருவர் குத்தாமல் இருப்பது தான். குற்றங்கள் மனப்பிறழ்வினால் அல்ல அதிகாரத்துக்கும் பணத்துக்காகவும் தான் பிரதானமாய் செய்யப்படுகின்றன.
தனக்குத் தேவையானதை யார் வேண்டுமானாலும் யாரிடம் இருந்தும் பறித்துக் கொள்ளலாம் என்கிற விழுமியம் இங்கு எப்படி உருவானது என்று நாம் அடுத்து வினவ வேண்டும். இந்த சமூகத்தில் மீண்டும் கொஞ்சம் லட்சியவாதம் உருவாக வேண்டும். ஒருவேளை உயர்ந்த நம்பிக்கைகளை பற்றிக் கொள்வது நம்மை இந்த சிறுமையில் இருந்து மேலெழுந்து வர உதவலாம். இன்னொரு மனிதனின் உரிமைகளை மதிக்க அது நமக்கு கற்றுத் தரலாம். குற்றங்கள் ஒருவிதத்தில் நமது சமூகத்தில் மையத்தில் உள்ள மாபெரும் வெற்றிடம் ஒன்றின் விளைவாக இருக்கலாம். வெற்றிடத்தில் பொத்தையான மனிதர்கள் மட்டுமே உலவ முடியும். நாம் அவ்வாறே மாறி வருகிறோம்.
பொத்தை மனிதர்கள்
-டி.எஸ்.எலியட்
நாங்கள் பொத்தையான மனிதர்கள்
நாங்கள் பஞ்சு திணிக்கப்பட்ட மனிதர்கள்
ஒருவரோடு ஒருவர் சார்ந்தபடி
தலைப்பகுதி வைக்கோலால் நிரப்பப்பட்டு. ஐயோ!
சேர்ந்து முணுமுணுக்கையில்
எங்கள் வறண்ட குரல்கள்
அமைதியாய் அர்த்தமற்று
காய்ந்த புற்களில் காற்றடிப்பது போல்
அல்லது எங்களது வறண்ட நிலவறையில்
கண்ணாடிச் சில்லுகளில் எலியின் பாதங்கள் போல்

வடிவமற்ற உருவம், நிறமற்ற நிறவித்தியாசம்,
முடங்கின ஆற்றல், சைகையற்ற அசைவு,

நேரடிப் பார்வையுடன் கடந்து
மரணத்தின் ராஜ்ஜியத்தை அடைந்தவர்கள்
எங்களை நினைவு கொள்வார்கள் – அப்படியே ஒருவேளை நினைத்தால் – வழி தவறிய ஆவேசமான ஆன்மாக்களாக அல்ல,
வெறும் பொத்தை மனிதர்களாக,
பஞ்சு திணிக்கப்பட்ட மனிதர்களாக.

Read More

Contact Us

So you think we’re the right folks for the job? Please get in touch with us, we promise we won't bite!



Designed By Blogger Templates