Saturday, 30 March 2013

சமூகம் எனும் மலைப்பாம்பு




எனக்குக் கூட சிலவேளை ஒரு தீவிரவாதியாகவோ சைக்கோ கொலைகாரனாகவோ ஆனால் என்ன எனத் தோன்றும். அப்போதெல்லாம் இன்னொரு எண்ணமும் வரும்: இந்த சமூக விரோதிகள் உண்மையில் தீவிர சமூக அக்கறை கொண்டவர்கள் என்று. என்ன தம் அக்கறையை எதிர்மறையாக காண்பிக்கிறார்கள். அழிப்பதன் மூலம் நானும் உங்களில் ஒரு பகுதி என பொது சமூகத்திடம் சொல்ல தலைப்படுகிறார்கள். அப்படிப் பார்த்தால், சமூக விரோதிகள் நீட்சேயியவாதிகளாக இருக்க முடியாது. அவர்களுக்கு சமூகத்திடம் மரியாதையும் தொடர்புறுத்தும் விருப்பமும் உண்டு. சமூகம் தமக்கு இணை என நம்புகிறார்கள். இல்லை என்றால் இவ்வளவு பிரயத்தனித்து சமூகத்தை திருத்தவோ அல்லது பழிவாங்கவோ முயல்கிறார்கள்?

இவர்களுக்கு சமூகம், வரலாறு குறித்து ஒரு கண்மூடித் தனமான நம்பிக்கை உள்ளது. ஒசாமா பின்லாடன் குறித்து படித்தவர்களுக்கு அவர் ஒரு லட்சியவாதி என புரியும். சமீபத்தில் அமெரிக்காவில் ஒரு இந்திய மாணவன் தான் படித்த வகுப்பு மாணவர்களை தாக்குவதற்காக நிமிடத்தில் ஐநூறு ரவுண்டுகளுக்கு மேல் சுடும் துப்பாக்கி ரவைகளை சேமித்து வைத்திருந்தான். ஆனால் தாக்குதலுக்கு முன்னரே மனம் சோர்ந்து தற்கொலை பண்ணி விட்டான். தனக்கு கிடைக்காது அவர்களுக்கு கிடைத்து விடக் கூடாது என்று கருதி இருக்கலாம். அல்லது அமெரிக்க சமூக அமைப்பு மீதுள்ள கோபமாக இருக்கலாம். ஆனால் இந்த சமூக அமைப்பும் ஜனங்களும் யாரையும் பொருட்படுத்துவதில்லை. சமூக இயக்கம் ஒரு குருட்டு மலைப்பாம்பு. அது அனைவரையும் முழுங்கி செரித்து நகர்ந்து மெத்தமனாய் கொண்டிருக்கும். மேற்குலகின் மீதான ஒசாமாவின் போர் ஒரு சின்ன பிம்பத்தை உருவாக்கி இருக்கிறது அவ்வளவு தான். நடைமுறை வாழ்வு அதன் பாட்டுக்கு முன் போலத் தான் இருக்கிறது. ஆனால் ஒசாமா தன்னால் வரலாற்றை மாற்றலாம் என்றெல்லாம் நம்பினார்.
ஒரு சின்ன பரிசோதனைக்கு நீங்கள் உங்கள் டீக்கடையில் அல்லது அலுவலகத்தில் யாரிடமாவது ஒரு கருத்தை சொல்ல தலைப்படுங்கள். அவர்கள் காது கொடுத்து கேட்காமல் தம் கருத்தை சொல்லத் தலைப்படுவார்கள். தம் கருத்திலும் அவர்களுக்கு அக்கறை இருக்காது. பாதியில் சொல்லிக் கொண்டிருக்கும் போது வேலை வந்தாலோ கவனம் திரும்பினாலோ எழுந்து போய் விடுவார்கள். அல்லது அவர்கள் உங்களை நலம் விசாரிக்கும் போது விலாவரியாக உங்கள் பிரச்சனைகளை பேசிப் பாருங்கள்; கொட்டாவி விடுவார்கள். அல்லது கேட்காமல் பக்கத்தில் உட்கார்ந்து இறகை சிலுப்பும் ஈயை கவனிப்பார்கள். சரி போகட்டும், பொதுப்பிரச்சனை பேசுங்கள். அது பற்றி அவருக்கு ஒன்றுமே தெரியாது என்பதை அகந்தையுடன் விளக்குவார். சரி போகட்டும், அவரது பிரச்சனையை பேசுங்கள். என்னைப் பற்றி எனக்குத் தெரியும், அதைச் சொல்ல நீங்கள் யார் என உங்களை மூக்கைத் தொட்டு சொல்வார்கள். சாம்பிளுக்கு இந்த நான்கு பேரே இப்படி இருக்கும் போது லட்சம் கோடி மக்கள் மீது ஒருவர் அக்கறை காட்டி வெடிகுண்டு வைப்பது ஏன்? ஜனங்கள் பற்றின தவறான புரிதலினால் தான். எப்போதும் போராளிகள், மீட்பர்களை அவர்களின் மக்களே சிலுவையில் அறைவது தான் நடக்கும்.

சரி நாம் யாருடம் தான் அக்கறை கொள்வது? இந்த உலகில் யாருமே அக்கறை காட்டாத ஒருவர் இருக்கிறார். அவரிடம். யார் அவர்? நீங்கள் தான். சுய அக்கறை சின்ன குற்றவுணர்வையும், சலிப்பையும் அதிருப்தியை தரும். ஆக உங்கள் வழியாக சமூக அக்கறை காட்ட துவங்குங்கள். நீங்கள் உங்களுக்கு செய்யும் சேவை இறுதியில் சமூக வளர்ச்சிக்குத் தான் உதவுகிறது. இருத்தலியவாதிகள் சொன்னது போல நான் தான் சமூகம். என்னை கிள்ளினால் சமூகத்துக்கு வலிக்கும். என்னை வளர்த்தால் சமூகம் வளரும்.
இந்த செவிட்டு குருட்டு சமூகத்துக்கு ஒரு மூளை உள்ளது. அதனுடன் நம்மால் உரையாட முடியும். சமூகத்தை பேசவோ கேட்கவோ வைக்க மூன்றாம் பிறை படத்தில் கமல் செய்வது போல குட்டிக்கரணம் அடிக்காமல் நாம் இந்த மூளையுடன் பேச எத்தனிக்கலாம். வரலாற்று நாயகர்களாக சுயமாய் நிறுவிக் கொண்டவர்கள் என்னதான் செய்தாலும் பேசினாலும் சமூகம் அதன் பாட்டுக்கு கவனிக்காமல் நகர்ந்து கொண்டிருக்கும் என்றேன். ஆனால் வரலாற்றுடன் அந்தரங்கமாக உரையாடிவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் தமக்கு தாமே அறியாமல் சமூகக் கருவிகளாக மாறுகிறார்கள். அவர்கள் குண்டு வைப்பதோ பிரசங்கம் செய்வதோ இல்லை. ஆனாலும் வரலாறு பிறகு அவர்களையும் தின்று செரித்தே நகரும்.
போகிற போக்கில் நாயை கல்லால் அடிப்பவர்கள் இருக்கிறார்கள். அவர்களும் உலகை மாற்ற கிளம்புபவர்களும் ஒன்று தான். ஒன்று நாய் வள்ளென்று ஓடும். இல்லையென்றால் நின்று பார்த்து உறுமும்.
Share This

2 comments :

  1. //
    சரி நாம் யாருடம் தான் அக்கறை கொள்வது? இந்த உலகில் யாருமே அக்கறை காட்டாத ஒருவர் இருக்கிறார். அவரிடம். யார் அவர்? நீங்கள் தான்.//

    சூப்பர் :-)

    ReplyDelete
  2. தீவிரவாதி - நீட்ஷே, சமூக இறுக்கங்களையும், அதன் மனநிலை பற்றிய நல்ல புரிதலை இக்கட்டுரை முன் வைக்கிறது.....

    ReplyDelete

Contact Us

So you think we’re the right folks for the job? Please get in touch with us, we promise we won't bite!



Designed By Blogger Templates