ஒரு நீண்ட சுயமைதுனத்தின் முடிவு
ஒரு நீண்ட வெந்நீர் மழையில்
படிகத்துளிகளிடையே
ஆயிரமாயிரம் சிதறல்களாய் நகர்ந்து
ஒரு அரையிருள் கடற்கரையை வந்தடைவதைப்
போன்று உள்ளது.
அங்கு
தனியாக அலைகள் மோதும் சொதசொத மணலில்
நாய்கள் ஒரு ஆடைகிழிந்த பிணத்தை
கிழித்து தின்னுகின்றன
சேலைமேல் அழுக்கான சட்டையை அணிந்து
மூட்டைக்குள் தாயத்துகள் மற்றும் சுருட்டி பழைய ரூபாய் நோட்டுகளை
கொண்ட
வீடு திரும்பும் சோதிடக்காரி
என் கையைப் பற்றி அவசர அவசரமாய்
ரேகைகளை இடமாற்றி
தகவல்களை பரப்புகிறாள்.
தன் முன்மயிரை ஒதுக்கி
அதிலொன்றை பறித்து
மனதை சிடுக்கிடுகிறாள்.
பின் தன் குச்சியால் நாய்களைத் துரத்தி
ஒரு ஈரமான தாயத்தை கழற்றி
அணிவித்து காசு வாங்கிக் கொள்கிறாள்.
நாய்கள் திரும்பப் போய்
அலைநுரைகளை நக்கிக் கொள்கின்றன.
நான் ஆளரவமற்ற அந்த கடற்கரையில்
அந்த அழகிய கையை எடுத்து
மெல்ல மெல்ல மென்று உறிஞ்சியபடி
வியக்கிறேன்
ஒரு நீண்ட சுயமைதுனத்துக்குப் பின்
மனித தேகம் இவ்வளவு
இனிக்குமா என.
பிறகு
இதமான வெந்நீர் மழை
மெல்ல மெல்ல குளிரேறி
பனிக்கட்டி நகரமொன்றில்
என்னை நிறுத்துகிறது.
திறந்த வாய்க்கும்
உறைந்த கைகளுக்கும்
இடையே
அழகிய கையின்
குருதி மட்டும்
உறையாது சொட்ட,
வானம் முழுக்க குத்தீட்டிகளாய் தொங்கும்
உறைமழைக்கும்
எனக்கும் இடையே
இமைக்காத வெண்பரப்பில்
பனிக்கட்டித் துளி ஒன்று
விழுந்து உருளாது நிற்கும்
திறந்த ஒரே கண்.
நாடி துடிக்கும்,
பச்சைநரம்புகள் நெளியும்
அந்த அழகிய கையை
அருகில் கொணர முடியாது
மனம் தவிக்கையில்
தலைக்கு மேல்
தொங்கும் நீர் அம்புகள்
உலோக உரசலாய் கிலுகிலுத்து
காது நிரப்பும்.
பற்கள் கூச
எலும்புகள் விரிசலிட
மழையின் கூர்விளிம்புகள் பரஸ்பரம் மோதி
சரசரவென அதிர்ந்து அடங்கும்
இரவெல்லாம்.
விடிகாலையில்
விரல்கள் கொத்தாய் நிற்கும் முழங்கை எலும்பை
புதைத்து விட்டு
இந்த புயலில்
திரும்புகையில்
கடற்கரையில் இருந்து வீடுவரை
குப்பைகளும் பாலிதீன்பைகளும் கிழிந்து சாம்பலான துணிகளும்
ப்ளாஸ்டிக் பாட்டில்களும் பழைய காகிதங்களும்
ஆளுயரத்துக்கு எழுகின்றன
பாதைகளின் இரு பக்கமும்.
காற்றும் நீரும் ஆகாரமும்
தூசாய் தொண்டையில் சிக்கி
கசப்பாய் வயிற்றில் நிரம்புகின்றன
அப்போது
நினைத்துக் கொள்கிறேன்
அத்தனை உணவுகளிலும் பானங்களிலும்
உமிழ்நீரளவு சுவை
எதிலும் இல்லையென.
No comments :
Post a Comment