Sunday, 10 March 2013

இந்து, இஸ்லாம், கிறுத்துவம்: குட்டையும் மட்டையும்



என்னுடைய ஒரு நண்பருடன் இந்துப்பத்திரிகை பற்றிப் பேசிக் கொண்டிருக்கும் போது அவர் தனக்கு சமீபமாக அப்பத்திரிகை பிடிக்காமல் போய் விட்டது என்றார். அது இந்து மதத்தை அவமானிக்கும் வகையில் செயல்படுவதாக காரணம் குறிப்பிட்டார்.
ரொம்ப யோசித்து பார்த்தும் எனக்கு சமீபமாக இந்துவில் விவேகானந்தரின் ஆணாதிக்க தோற்றம் பற்றி வந்த கட்டுரை தவிர வேறொன்றும் நினைவுக்கு வரவில்லை.
அக்கட்டுரையில் விவேகாந்தரின் பிம்பம் எவ்வாறு வீரத்தையும் வன்மத்தையும் பிரதானப்படுத்தும் வண்ணம் அமைக்கப்பட்டு பிரபலப்படுத்தப்பட்டது என பெண்ணிய பார்வையில் விமர்சித்திருந்தார்கள். காந்தி அல்லது ராம கிருஷ்ண பரமஹம்சரை ஒப்பிடுகையில் விவேகாந்தர் நெஞ்சை சற்று கூடுதலாக புடைத்து கண்களில் கூர்மை ஒளிர ஒரு போர் வீரனைப் போன்று தெரிகிறார் என்பது உண்மை தான். எப்படியும் அவரது பிம்பம் சாந்த சொரூபருக்கானது அல்ல.
இந்த விமர்சனத்தால் பல மதவாத இந்துக்களும் இந்து மதம் குறித்த கற்பனாவாதம் மிகுந்தவர்களும் மனம் காயப்பட்டு எப்படி விவேகாந்தரைப் பழிக்கலாம் என இந்துப் பத்திரிகைக்கு பல கடிதங்கள் எழுதினார்கள். இவற்றை விலாவரியாக வரிசையாக பிரசுரித்தது அப்பத்திரிகை. ஒரு பெண் எதிர்வினையாளர் விவேகானந்தர் எவ்வளவு தூரத்துக்கு பெண்ணியவாதி என நிரூபிக்க ஒரு உதாரணத்தை வேறு தந்தார். விவேகாந்தர் இந்தியாவின் விதவைகள் உள்ளிட்ட பெண்களின் கல்வியில் அபார ஆர்வம் காட்டினாராம். எப்படியாம்? அதாவது அவர் நமது பெண்கள் சத்தியவான் - சாவித்திரி போன்ற தொன்மங்களை கற்கும் படி வலியுறுத்தினாராம். இதன் மூலம் இந்தியப் பெண்கள் வாழ்வில் மேம்பட முடியும் என மேற்கண்ட பெண்மணி கூறுகிறார். இப்படி இந்த விவாதம் அசட்டுத்தனமாக நடந்து கொண்டிருக்கையில் யாரும் விவேகாந்தரின் ஆண்மைச்செருக்கு பிம்பம் ஆர்.எஸ்.எஸ்ஸால் ஏன் முன்வைக்கப்படுகிறது என்றோ சகிப்புத்தன்மையையும் ஏற்பையும் பிரநித்துவப்படுத்துகிற இந்திய சமூகம் எவ்வாறு மதத்தின் பெயரால் வெறுப்பாலும் வன்முறையாலும் மறுகட்டமைக்கப்பட்டது, அதற்கு விவேகாந்தர் எவ்வாறு பயன்பட்டார் என்றோ கேட்கவில்லை. இந்துவின் பத்தியாளர்களும் இதுகுறித்து மூச்சு விடவில்லை.
பொதுவாக இந்துப் பத்திரிகை கொஞ்சம் மென்மையான வலதுசாரித்தனமும் நவமுதலாளித்துவ இடதுசாரித்தனமும் (அப்படி ஒரு சேர்க்கை இருக்கிறதென்றால்) கொண்டது. மனித உரிமைகள், ஊழல், மக்கள் பிரச்சனைகள், ஒடுக்கப்பட்டவர்கள், தலித்துகள், ஊனமுற்றவர்கள் குறித்தெல்லாம் வலுவான கட்டுரைகள் வரும். அதுவும் சமீபமாக இந்துப்பத்திரிகையில் நாம் பரவலான தீவிரமான கட்டுரைகள் நடுப்பக்கத்தில் காண முடிகிறது. இதை சமீபமாக அ.மார்க்ஸ் கூட பாராட்டி இருந்தார். விஷ்வரூபம் சர்ச்சையில் கூட எவ்வாறு இஸ்லாமியர் ஒரு கேடயமாக ஜெயா அரசால் பயன்படுத்தப்பட்டார்கள் என்பது பற்றின நல்ல கட்டுரை ஒன்றை வெளியிட்டது. ஆனால் இன்னொரு பக்கம் அது மைலாப்பூர் டைம்ஸாகவும் இருக்கும். கணிசமான பத்தியாளர்கள் ஐயங்கார்கள். திருவல்லிக்கேணி பற்றி பத்தி எழுதினால் பார்த்தசாரதி கோயிலை தாண்டி போக மாட்டார்கள். அப்பகுதியின் தனிச்சிறப்பான மசூதிகள், இஸ்லாமிய அசைவ உணவகங்கள் பற்றி மூச்சு விட மாட்டார்கள். சமிஸ்கிருதம் புறக்கணிக்கப்படுகிறது என கண்ணீர் விடுவார்கள். யாருமே கவனிக்காமல் ஒரு மூலையில் நடக்கும் சங்கீத சீஸன் பற்றி நூறு கட்டுரைகளாவது எழுதுவார்கள். இந்தியாவின் மொத்த பண்பாட்டுச் சாரமும் பரதநாட்டியத்திலும் கர்நாடக சங்கீதத்திலும் அடங்கி உள்ளது போல் சூடம் காட்டுவார்கள். இவ்வளவு தூரம் ஐயங்கார் பஜனை பண்ணின பின்னரும் மரபான இந்துக்களும் உயர்சாதிகளும் அதிருப்தி உறுகிறார்களே என வியப்புற்றேன். ஆனால் அதை விட என்னைக் கவர்ந்தது என் நண்பர் தெரிவித்த மற்றொரு அபிப்ராயம் தான்.
அவர் சொன்னார்: “ஏதோ இந்து மதத்தை அவமானப்படுத்துகிறார்கள் என்பதற்கு மட்டும் வருத்தப்படுகிறேன் என நினைக்காதீர்கள். இஸ்லாத்தைக் குறித்து விமர்சித்து எழுதினாலும் நான் இதைப் போன்றே அதைக் கண்டிப்பேன்”. இது ஏதோ தன்னை மதசார்பற்றவராக காட்டும் தந்திரம் அல்ல. அவர் மேலும் சொன்னார்: “உங்களுக்கு மதம் மீது மாறுபட்ட கருத்துக்கள் இருக்கலாம். அதை ஒரு நாவலாக கூட எழுதுங்கள். ஆனால் அதையெல்லாம் பொதுவெளியில் சொல்ல யாருக்கும் உரிமை இல்லை. மதத்தை எதிர்த்து பொதுவெளியில் பேசக் கூடாது”. இதைச் சொல்பவர் நவீன ஐரோப்பிய கல்வி அறிவு பெற்றவர்; சார்த்தர், நீட்சே, பின்நவீனத்துவம் எல்லாம் அறிந்தவர். அவரது மையக்கருத்து மதம் நம்பிக்கைக்கு உட்பட்டது, அது பொது விவாதத்துக்கு வரக் கூடாது என்பது.
இங்கு தான் நாம் மேலும் கவனிக்க வேண்டும். இது மதவாத இந்துக்களின் கருத்து மட்டுமல்ல, நம்மூர் இஸ்லாமியர், கிறுத்துவர்கள் அனைவரும் இப்படித் தான் சிந்திக்கிறார்கள். தமிழக இஸ்லாமிய வஹாபிய அமைப்புகளின் முக்கிய புள்ளிகளான ஜனாலுதீன் போன்றவர்களின் இதே தர்க்கத்தை தான் ரிசானா மரண தண்டனை விசயத்திலும் முன்வைக்கிறார்கள். மதம், அது சார்ந்த நம்பிக்கைகள், தொன்மங்கள், விதிகள் ஆகியவை விவாதத்துக்கு அப்பாற்பட்டவை என்கிறார்கள். இது சரியா, இது இன்றைய நமது கலாச்சார சகிப்பின்மையின் விளைவா என்கிற கேள்விகள் ஒரு பக்கம் இருக்கட்டும். நாம் பார்க்க வேண்டியது இந்துக்களும் இஸ்லாமியரும் தம் அடிப்படைவாதத்துக்கு ஆபத்து வரும் போது எவ்வாறு ஒரே கட்சியில் சேர்ந்து கொள்வார்கள் என்பது தான்.
புதியதலைமுறை டி.வி பேட்டியில் ஜனாலுதீனிடம் ஒரு சுவாரஸ்யமான கேள்வி வைக்கப்பட்டது. “காதலர் தினம் உள்ளிட்ட ஐரோப்பிய கலாச்சார விசயங்களை நீங்களும் எதிர்க்கிறீர்கள். ஆர்.எஸ்.எஸ் போன்ற இந்து அமைப்புகளும் கண்டிக்கிறார்கள். எதிர்காலத்திலும் நீங்களும் அவர்களும் சேர்ந்து செயல்படுவீர்களா?”. பேட்டியாளர் ஜென்ராமின் இந்த குசும்பு மிக்க கேள்வியை ஜனாலுதீன் ரொம்ப சீரியஸாக, ஒருவித வேடிக்கையான நேர்மையுடன் எதிர்கொண்டார். “ஆம் எங்கள் இருசாராரின் எண்ணமும் நோக்கமும் ஒன்று தான். நாங்கள் இத்தகைய ஐரோப்பிய கலாச்சார தாக்கங்களை எதிர்க்கிறோம். எங்களது மரபை பாதுகாக்க போராடுகிறோம். ஆனால் சேர்ந்து செயல்பட்டால் எங்கள் சமூக மக்களுக்கு எங்கள் மீது சந்தேகம் வந்து விடும். அதனால் நாங்கள் இருவேறு முகாம்களில் இருந்து ஒரே வித போராடத்தை நடத்தி வருகிறோம்.” இந்துத்துவாவும் வஹாபியிசமும் எப்படி ஒரே புள்ளியில் இணைகிறார்கள் என்று மட்டுமல்ல இந்தியாவில் இந்துக்களும் இஸ்லாமியரும் எப்படி ஒரே மன அமைப்பை கொண்டிருக்கிறார்கள் என்பதும் கூட இங்கு சுவாரஸ்யமான ஒரு கோணம் தான்.
சாகிர் நாயிக் எனும் பேராசிரியர் பொதுநிகழ்ச்சிகளில் இஸ்லாத்தின் பலதார மணம் உள்ளிட்ட பழம் சிந்தனைகளுக்கு நவீன சமூகத்தில் இடமிருப்பதாக நியாயப்படுத்தி பேசி வருபவர். Islamic Research Foundation மற்றும் துபாயில் உள்ள Peacetvயின் ஸ்தாபகர். பிரபலமானவர். இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை இந்தியாவின் நூறு செல்வாக்கு மிக்க இந்தியர்கள் பட்டியலில் இவரையும் சேர்த்தது. தொழில்முறை மருத்துவர். தெளிவான ஆங்கிலத்தில் கால்வாசி பிழையான தர்க்கத்துடன் பேசுபவர். எப்படி ஆர்.எஸ்.எஸ் அறிவுஜீவிகள் குரான், பைபிள் இருந்தெல்லாம் பந்தாவாக மேற்கோள் காட்டுவார்களோ அதே போல் இவரும் வேற்றுமதங்களில் பண்டித்தியத்தை பரஸ்தாபிப்பதில் ஆர்வம் கொண்டவர். 2006இல் பங்களூரில் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கருடன் இருமதங்களின் ஆன்மீகக்கருத்துக்கள் குறித்து விவாதம் செய்தார். உலகம் முழுக்க மேடைகளிலும் இணையத்திலும் லட்சக்கணக்கான மக்கள் பின்தொடர்கிறார்கள். யுடியூபில் இவரது காணொளிகள் பிரபலமானவை. இவற்றில் இவரிடம் பார்வையாளர்கள் கேள்வி கேட்பதும் அதை இவர் சாமர்த்தியமாக எதிர்கொள்வதும் வழமையான பகுதி. சுவிசேச மேடை நிகழ்ச்சி போல் தோன்றும். ஊனமுற்றவருக்கு பதில் வேற்றுமதத்தை சேர்ந்த கேள்வியாளர் ஒருவர் பார்வையாளர் தரப்பில் தோன்றுவார். அவர் “உங்கள் இஸ்லாத்தில் இப்படி எல்லாம் பிற்போக்கான விசயங்கள் உள்ளனவே? இவையெல்லாம் சரிதானா?” என்கிற ரீதியில் கேட்பார். அதற்கு சாகிர் நாயக் கேள்வி கேட்டவரின் மதநூல்களில் இருந்தே சில கேள்விகள் கேட்டு திகைக்க வைப்பார். பின்னர் இஸ்லாமும் அவரது மதமும் ஒரே கோட்பாடு கொண்டவை தான் என நிரூபிப்பார். உதாரணமாக, ஒரு படித்த மேற்தட்டு இளம்பெண் “ஒரு ஆண் பல பெண்களை மணப்பது இஸ்லாத்தில் ஏற்றுக் கொள்ளப்படுகிறதே, இது நியாயமா?” எனக் கேட்கிறார். இதற்கு சாகிர் நாயிக் சிக்கினாண்டா என மனதுக்குள் கருவிக் கொண்டே “சரி உங்களுடைய ராமாயணத்தில் தசரதனுக்கு எவ்வளவு மனைவிகள் தெரியுமா?” என்பார். அப்பெண் “பத்தாயிரம்” என்பார். அதற்கு சாகிர் எக்காளப் புன்னகையுடன் “சரியாக சொல்லுங்கள்” எனக் கேட்பார், அது ஏதோ ஐ.ஏ.எஸ் பரீட்சைக்கான கேள்வி போல். அப்பெண்ணும் அசட்டுச் சிரிப்புடன் தெரியவில்லை என வழிவார். சரி வழிக்கு வந்தாயா என்ற நிறைவுடன் சாகிர் “ஒரு லட்சத்து ஆறாயிரத்து எட்டு” என்பார், உடனே அரங்கம் கைத்தட்டால் அதிரும். இதே போல் தாவீது அரசனுக்கு எவ்வளவு மனைவிகள், எம்.ஜி.ஆருக்கு எவ்வளவு மனைவிகள் என்றெல்லாம் பட்டியலிட்டு விட்டு “இஸ்லாத்தை மட்டும் ஏன் கேள்வி கேட்கிறீர்கள்?” என்பார். பார்வையாளர்கள் இது என்னவொரு அபாரமான பதில் என ஆர்ப்பரிப்பார்கள். சாகிர் நாயிக்கின் இந்த பதில் ஏதோ இஸ்லாமியர்களை உற்சாகப்படுத்த என நினைக்கக் கூடாது. அந்த அரங்கில் இருந்தவர்கள் அனைவரும் இந்துக்கள் என்றாலும் இதே போல் கைத்தட்டி ஆதரிப்பார்கள். அல்லது மௌனமாக ஏனும் ஏற்றுக் கொள்வார்கள்.
இங்கு நீங்கள் கேட்பீர்கள் பலதார மணம் நவீன விழுமியப்படி தவறு தானே என. அப்போது நீங்கள் இந்துவே அல்ல என்பார். இந்துவும் முஸ்லீமும் அல்லாதவனுடன் விவாதிக்க அவர் தயார் அல்ல. அவரது சிந்தனை எல்லைக்குள் நீங்கள் எல்லாம் இல்லை. உங்களை பரீசீலிக்க எல்லாம் தெவையே இல்லை.
சாகிர் நாயக்கினுடைய வெற்றிக்கு அவர் இஸ்லாமியரை மட்டுமல்ல இந்துக்களின் மன அமைப்பை நன்றாக புரிந்து வைத்திருக்கிறார் என்பது தான் அடிப்படைக் காரணம். மரண தண்டனை, ஆணாதிக்கவாதம் ஆகியவற்றை ஆதரிக்கிற அவரது ஒவ்வொரு கருத்தையும் இஸ்லாமியரை காட்டுமிராண்டிகள் என பொதுவில் அபிப்ராயப்படும் மேற்தட்டு மற்றும் மத்திய வர்க்க இந்துக்களும் கூட மனதார ஏற்றுக் கொள்வார்கள்.
சுருக்கமாக, நாயிக்கின் தர்க்கம் இஸ்லாமியரும் இந்துக்களும் எந்தவொரு நவீன விழுமியத்தையும் ஏற்றுக் கொள்ள தேவையிராத சமுதாயங்கள் என்பது. கோடானுகோடி இந்தியர்களின் அபிப்ராயமும் அது தான். சாகிர் நாயக், ஜனாலுதீன், என் இந்துத்துவா நண்பர் ஆகியோர் அடிப்படையில் அடிப்படைவாத இந்தியர்கள். இந்தியர்கள் இந்தியாவை எந்த சமகால கருத்துநிலையோடும் உடன்படத்தேவையிராத தனி இருப்பாக கருதுகிறார்கள். மூர்க்கத்துடன் தமது ஆயிரமாயிரம் வருட பாரம்பரியத்தை பாதுகாக்க முனைகிறார்கள். இந்த மாற்றத்துக்கு அப்பாற்பட்ட இந்தியா எனும் குமிழிக்குள் தான் மேற்சொன்ன இந்துக்களும் இஸ்லாமியரும் வருகிறார்கள். அவர்கள் ஓவியர் ஹுசேன், நாவலாசிரியர் ரஷ்டி ஆகியோரை தமது குமிழியை குண்டூசியால் தாக்க நினைத்ததற்காக நாடு கடத்துவார்கள். உயிருக்கு கெடு வைப்பார்கள். விஷ்வரூபம் படம் இஸ்லாத்துக்கு எதிரானது என்று ஒரு பக்கமும் இந்துமதத்துக்கு எதிரானது என இன்னொரு பக்கமும் வழக்கு தொடுப்பார்கள்.
ராமசந்திர குஹா தனது சமீபத்திய நூலான Patriots and Partisansஇல் இந்தியாவின் இளையதலைமுறையினர் எந்தளவுக்கு அடிப்படைவாதிகளாக மாறி உள்ளார்கள் என்பதை விரிவாக பேசுகிறார். மென்பொருள் படித்து ஐரோப்பிய நாடுகளில் சகல நவீன வசதிகளையும் அனுபவித்து சொகுசாக வாழும் இவர்கள் படுபிற்போக்கான அணுகுமுறையுடன் இணையத்தில் மதசார்பற்றவர்களையும் இடதுசாரிகளையும் கடுமையாக தாக்கி வருகிறார்கள். பா.ஜ.கவுக்கு இணையக்குழுமங்களில் ஆள்சேர்த்து குட்டி குட்டி ரதயாத்திரிகைகள் நடத்துகிறார்கள். சொல்லப்போனால் நன்கு படித்த மத்திய, மேற்தட்டு இளைஞர்கள் தான் பா.ஜ.க மற்றும் ஜமாத் அமைப்புகளின் சமகால பலம், எதிர்கால கரசேவகர்கள். இவர்களுக்கு ஒரே மொழி, ஒரே உணர்வு.
உண்மையில் இவர்கள் எதிர் எதிர் அணிகளில் இருக்க வேண்டியவர்களே அல்ல. நவீனத்துவமும், மதசார்பின்மையும் தான் இவர்களின் பொது எதிரிகள். இவர்கள் ஏன் மோதிக் கொள்கிறார்கள் என்ற கேள்வியை பண்பாட்டு சிந்தனையாளர் ஆஷிஸ் நந்தி கேட்டுக் கொண்டார். அவர் கொச்சினில் உள்ள இந்து-இஸ்லாமிய சமூகங்களிடையே உள்ள ஒற்றுமையை குறித்து கள ஆய்வு பண்ணினார். அப்போது அவர் ஒன்றைக் கண்டு பிடித்தார். இந்துக்களும் இஸ்லாமியரும் அயோத்திய கலவரத்தை ஒட்டி செயற்கையாக பிரிக்கப்பட்டார்கள். இயல்பில் அவர்கள் ஒற்றுமை கொண்டவர்கள். நூற்றாண்டுகளாய் ஒருவரை ஒருவர் சகித்துக் கொண்டு இங்கு வாழ்ந்து வந்திருக்கிறார்கள். அதற்குக் காரணம் ஒரு இஸ்லாமியனுக்கு சடங்குகளிலும் மத சம்பிரதாயங்களிலுமுள்ள ஈடுபாடு அதே போன்ற அக்கறையும் நம்பிக்கையும் கொண்ட மற்றொரு இந்துவுக்கு நன்கு புரியும் என்பதே என்கிறார் ஆஷிஸ் நந்தி. ஒரு இஸ்லாமியனின் தீவிர மத ஈடுபாட்டை ஒரு இந்து மறுக்கவோ எதிர்க்கவோ செய்ய மாட்டான். இரு மதத்தினரும் அதர்க்கமான மத சிந்தனையை வாழ்க்கை முறையாக ஏற்றவர்கள். நந்தியைப் பொறுத்த மட்டில் இங்குள்ள மதக்கலவரங்களுக்கு அடிப்படைக் காரணம் மதசார்பின்மைக்கு தரப்படும் அழுத்தம் தான். இதன் விளைவாக மக்கள் ஒருவர் மற்றவரின் மத ஈடுபாட்டைக் கண்டு சகிப்பின்மை கொள்கிறார்கள். ஆஷிஸ் நந்தியின் இந்த இறுதி முடிவு அபத்தமாக இருந்தாலும் அவரது வாதத்தின் அடிப்படை மிகச் சரியானது.
இந்தியாவை ஒரு மதசார்பற்ற நாடாக கருதினாலும் உண்மையில் இங்கு மதசார்பற்ற கருத்து கொண்டவர்கள் தான் அந்நியப்பட்டு நிற்கிறார்கள். எந்த ஒரு விவாதத்திலும் அவனது மொழி கட்டிப்புரண்டு சண்டை போடுபவர்களுக்கு புரிவதில்லை. அவனை இரு சாராரும் கடுமையாக வெறுக்கிறார்கள். கடந்த பத்தாண்டுகளில் அவனது வாயை மூடி வைக்க, மனசாட்சியை மௌனப்படுத்த கடும் பிரயத்தனங்கள் நடந்து வருகின்றன. அவன் தான் அனைத்து முனைகளில் இருந்து தாக்கப்பட்டு ஒடுக்கப்படுகிறான். “நான் இந்த நாட்டை விட்டு போய் விடுகிறேன்” என அவன் சொல்ல வேண்டியதில்லை. அவன் ஏற்கனவே இந்த நாட்டிற்கு வெளியே தான் இருக்கிறான். அயோத்தியாவில் யார் முதலில் கோயில் கட்டினது என்றோ ராமர் பாலத்தை எந்த காலத்தில் கட்டினார்கள் என்றோ அவன் எப்போதும் குழம்பிக் கொண்டிருக்க, எந்த அலசலும் தேவையின்றி இந்நாட்டின் இரு மதத்தினருக்கும் தம் புராணங்களில் சொல்லப்பட்டுள்ளதே முழுமுதல் உண்மை, அதற்கு மாறுபட்ட வாதமே அவசியமில்லை என தெளிவாக புரிகிறது. அவர்கள் ஆண்டாண்டு காலமாய் வாழ்ந்து பழக்கப்பட்ட கணவன் மனைவி போல் சதா வெறுப்புடன் இருக்கிறார்கள். ஆனாலும் சேர்ந்தே இருக்கிறார்கள்.
அவர்களின் நாட்டுக்கு இந்து என சொல்லில் இருந்து வந்த இந்தியா எனும் பெயர் இருப்பதும், அவர்களின் பொது எதிரியாக தோன்றும் ஒரு பத்திரிகைக்கு தெ ஹிந்து என பெயர் இருப்பதும் எவ்வளவு பொருத்தம் பாருங்கள்.
நன்றி: உயிர்மை, மார்ச் 2013
Share This

1 comment :

  1. ///மென்பொருள் படித்து ஐரோப்பிய நாடுகளில் சகல நவீன வசதிகளையும் அனுபவித்து சொகுசாக வாழும் இவர்கள் படுபிற்போக்கான அணுகுமுறையுடன் இணையத்தில் மதசார்பற்றவர்களையும் இடதுசாரிகளையும் கடுமையாக தாக்கி வருகிறார்கள்///. அப்பட்டமான உண்மை. நானும் ஒரு விக்டிம். மத அடிப்படைவாதிகள் தரும் மன உளைச்சல்களுக்கு மத்தியில் இந்த கட்டுரை கொஞ்சம் ஆறுதலாக உள்ளது. வாழ்த்துக்கள் அபிலாஷ்.

    ReplyDelete

Contact Us

So you think we’re the right folks for the job? Please get in touch with us, we promise we won't bite!



Designed By Blogger Templates