நகைச்சுவையில் எழுத்தில் ஆளை மட்டம் தட்டும் மட்டமான ரகத்தில் உயர்வான முறையில் எழுதுபவர்கள் இருக்கிறார்கள். தமிழில் சாருவை சுட்டலாம். அனுராக் மாத்தூரின் நகைச்சுவை இப்படிப் பட்டது.
ஜெயமோகன் மூக்கு விடைத்த அகங்கார சிரிப்பு காட்டுவார். சுஜாதா கூட முனுக் என்று தான் சிரிக்க வைப்பார். சாருவும் அனுராக் மாத்தூரும் எழுதும் போது சிரிக்கப்படுபவரை பார்த்து மகிழ்ச்சிக் கண்ணீரைத் துடைத்தபடி “அடப்பாவமே” என்று நமக்கே தோன்றும். ”The Inscrutable Americans” நாவல் இப்படி நம்மை பக்கத்துக்கு பக்கம் இடம் பொருள் பார்க்காது ஹி ஹி ஹு என்றெல்லாம் சிரிக்க வைப்பது. ரொம்ப ஜாலியான எழுத்து. அதே நேரம் ரசித்த பிற்பாடு கொஞ்சம் லஜ்ஜையும் குற்றவுணர்வும் தோன்ற வைப்பது.மாத்தூர் அமெரிக்காவில் சென்று படித்து விட்டு இந்தியா திரும்பி பத்திரிகையாளரானார். பத்திகள் எழுதினார். இதனிடையே தனது அமெரிக்க அனுபவத்தை வைத்து எழுதின நாவல் தான் முன்னது. கோபால் என்று ஒரு வடநாட்டு மேல்மத்திய வர்க்க இளைஞன் ரொம்ப ஆசையாய் பரீட்சையெல்லாம் தேறி அமெரிக்கா சென்று கெமிக்கல் இஞ்ஜினியரிங் படிக்கிறான். அங்கு அவனுக்கு நேரும் ஆச்சரியங்களை பேசுகிறது நாவல். அவனை முன்னிறுத்தி இந்திய மனப்பான்மையை கேலி பண்ணுகிறார் மாத்தூர். கோபாலின் பார்வையில் அமெரிக்க கலாச்சாரத்தை கோணல்கள், மிகைகள், அசட்டுத்தனங்களை பகடி பண்ணுகிறார். விமான நிலையத்தில் குடிவரவு அதிகாரியுடனான கோபாலின் உரையாடல் மற்றும் நியுயார்க் நகரத்தில் நளினமான சூட் அணிந்த கறுப்பின பாலியல் தரகருடனான சந்திப்பை குறிப்பாக சொல்ல வேண்டும். கோபாலின் ஆங்கிலக் குறைபாட்டை வைத்து உருவாகும் பகடி என்பதால் தமிழில் மொழிபெயர்த்தால் லெமன் ஜுஸில் அதிக சர்க்கரை சேர்த்தது போல் ஆகும்.
முதல் சம்பவத்தில் கோபாலுக்கு நட்ஸ் என்ற அமெரிக்க வசைக்கு கிறுக்கன் என்று பொருள் எனத் தெரியவில்லை. அமெரிக்கா வந்திறங்கியதும் விமான நிலையத்தில் அவனது ஆங்கிலம் புரியாமல் குடிவரவு அதிகாரி அவனை வைய அவன் நட்ஸை என்றால் முந்திரிப்பருப்பு என நினைத்துக் கொண்டு பேசி பேசி அவரை கடுப்பேற்றிக் கொண்டே போகிறான். அவர் ஒரு கட்டத்தில் களைத்துப் போய் அவனை உற்று கவனித்து வியக்கத் தொடங்கி விடுகிறார். இரண்டாவதில் பாலியல் தரகர் அவனிடம் “இங்கு நல்ல புஸ்ஸி கிடைக்கும். ஜாலியாக இருக்க வரியா” என வினவுகிறார். புஸ்ஸி என்றால் பெண்குறி. கோபால் பூனை என்று புரிந்து கொள்கிறான். அமெரிக்கா வந்ததில் இருந்தே அவன் சைவ உணவுக்காக அலைகிறான். அவன் இவரிடம் “நான் பூனை எல்லாம் சாப்பிடுவதில்லை. நான் சைவம் ஆக்கும்” என்கிறான். அவர் விடாமல் “சைவ புஸ்ஸி கூட இருக்கிறது. செம ஜாலி. வா” என்று இழுக்கிறான். அவன் கலவரமாகி அவரிடம் இருந்து விடுவித்துக் கொண்டு தன் அமெரிக்க வாழ் நண்பனிடம் வந்து சொல்கிறான் “அமெரிக்காவில் பலே முன்னேற்றம் போ. இங்கு ஒருவன் என்னிடம் சைவம் சாப்பிடும் பூனையை விற்கப் பார்த்தான்.”
நண்பன் அதற்கு “ஆமாம் இது ரொம்ப முன்னேறிய நாடு. எதையும் விற்பார்கள்” என்கிறான்.
இன்னொரு நாள் சூப்பர் மார்க்கெட் போகிறான். இந்தியாவில் சூப்பர் மார்க்கெட் வராத காலம். கோபாலிடம் கவுண்டெரில் பில் போடுபவர் 30 டாலர்கள்” என்கிறாள். அதற்கு அவன் “ம்ஹும் 20 டாலர்களுக்கு மேல் தேறாது” என்கிறான். கூட வந்த நண்பன் ”ஓ இப்படி விலை எல்லாம் குறைத்துக் கேட்கலாமா?” அவன் ஆர்வமாகி ஒதுங்கி நின்று வேடிக்கை பார்க்கிறான். தன் கடையும் யாரும் பேரம் பேசிக் கண்டிராத அப்பெண் குழம்பி பின் வாங்க மானேஜர் வருகிறார். ”என்ன சார் பிரச்சனை?”. கோபால் படிப்படியாக “இருபத்திரண்டு தரலாம்” என்கிறான். “எனக்குப் புரியவில்லை. உங்களிடம் பணம் இல்லையா. அனைத்து வகை கார்டுகளும் நாங்கள் ஏற்றுக் கொள்வோம்”
“சரி போகட்டும் 25 டாலருக்கு மேல் கிடையாது. இதை விட்டால் வேறு கடை இல்லை என்று நினைத்தீர்களா? என்ன கொள்ளை விலை போடுகிறீர்கள்?”
மேலாளர்: “உங்களிடம் பணம் குறைகிறது என்றால் ஏதாவதொரு பொருளை திரும்ப வைத்து விட்டால் சரியாகி விடும்’
“25 தான் கடைசி ரேட்டு” என்று விட்டு கோபால் சாமான்களைத் தூக்கிக் கொண்டு கிளம்பி விடுகிறான். மேலாளரும் பில் பெண்ணும் திகைத்து நிற்கிறார்கள்.
அதே போல் கோபால் சாக்கர் விளையாட்டை மைதானத்தில் சென்று முதன்முறை பார்க்கும் அனுபவத்தையும் அட்டகாசமாக சித்தரித்திருக்கிறார். அது பந்தே இல்லை என்று நினைக்கிறான் கோபால். பந்து உருளையாக அல்லவா இருக்க வேண்டும். நீள்வட்டத்தில் இருக்கின்ற ஒன்றை எப்படி பந்து என்பது? அது சரி அமெரிக்காவில் எல்லாவற்றுக்கும் ஏறுக்கு மாறாக தானே பெயர் வைக்கிறார்கள். அமெரிக்கா என்ற பெயரைத் தந்தவருக்கும் அமெரிக்காவுக்கு எந்த பங்களிப்பும் பண்ணாதவர் தானே. அமெரிக்காவை கண்டுபிடித்தது கொலம்பஸ் என்கிறார்கள். ஆனால் அதற்கு முன்னே அந்நிலத்தை கண்டுபிடித்து அங்கு செவ்விந்தியர்கள் குடியேறி விட்டார்களே! இப்படி யோசித்து போகிறவன் சாக்கர் விளையாட்டை இவ்வாறு விவரிக்கிறான். சாக்கர் பந்து பிரம்மாண்டமான ஒரு டினோசர் முட்டை போல இருக்கிறது. இரு பக்கமும் நிற்கிற வீரர்கள் வெகுண்டெழுந்த அம்மா டினோசர்களைப் போல ஒருவர் மேல் ஒருவர் விழுந்து பாய்ந்து பிடுங்கிக் கொள்கிறார்கள். நடுங்கும் குளிரில் ஆடையெடுக்க மறந்தது போல வெறும் உள்ளாடையில் உடற்பயிற்சி அசைவுகளும் உச்சகட்ட பாலுணர்வு சைகைகளும் காட்டி துள்ளலுக்கு ஒரு தடவை பெருமூச்சு விடும் சியர்கெர்ல்ஸை நோக்கி அங்குள்ள ஆண்கள் ஏன் கிளர்ச்சியுற்று பாயாமல் ஆர்வமற்று மந்தமாய் கைத்தட்டுகிறார்கள் என வியக்கிறான். இப்படி முகம் சுளிக்கும் அவகாசம் தராமல் வரிக்கு வரிக்கு கேலி கிண்டல் எனப் போகிறது.
பொதுவாக இந்திய ஆங்கில நாவல்களில் கூட நகைச்சுவை எப்படி இருக்குமென்றால் “அவன் தன் சாக்சை கழற்றினதும் மோர்ந்து பார்த்து விட்டு பழையபடி ஷூக்குள் மறைத்து வைத்தான்” (Blue White Spread, Jha) என்பது போலத் தான். இப்படியான ஐரோப்பிய பாணி நமுட்டு நகைச்சுவையால் களைத்த வாசகர்களுக்கு மாத்தூர் உருவாக்கும் இவ்வகையான இந்தியத்தனமான அடாவடியான ஆர்ப்பாட்டமான நகைச்சுவை கொஞ்சம் ஆசுவாசமாக உள்ளது. இந்தியர்கள் அமைதியாக யோசித்து மௌனமாக சிரித்தால் அது நாய்க்கு சட்டை அணிவித்து வாக்கிங் அழைத்து போனது போல இருக்கும். இந்திய ஆங்கில புனைவாசிரியர்கள் ரொம்ப காலமாய் அப்படித் தான் நகைசுவையை கயிறு கட்டி இழுத்து போகிறார்கள். மாத்தூர் போன்றவர்கள் இப்படி திமிறுகிற நாயை கட்டு அவிழ்த்து கூட்டத்திடையே விடுகிறார்கள். அது தான் அவரிடத்தில் முக்கியமாய் கவர்கிற தன்மை.
ஆர்வத்தைத் தூண்டும் சுவையான விமர்சனம்
ReplyDelete