ஜான் டேவிட் ஜாமீனில் இருந்த போது வேளச்சேரி பி.பி.ஓ ஒன்றில் போலி சான்றிதழ் அளித்து போலி பெயரில் வேலை செய்ததை அறிவோம். இப்போது ஜெர்மன் மாணவியை கற்பழித்த பித்தி மொஹந்தி, ஏழு வருடம் தலைமறையாய் இருந்ததாய் சொல்லப்படுகிற காலத்தில் இந்திய ஸ்டேட் பேங்கில் துணை மேலாளர் பதவியில் வேலை பார்த்து இருந்திருக்கிறார். அவரும் போலி பெயர், போலி சான்றிதழ் தான் பயன்படுத்தி இருக்கிறார். இதை விட முக்கியமாய், அவர் 2006இல் ஐ.ஏ.எஸ் பரீட்சையின் முதல் கட்டத்தில் தேர்வாகி விட்டதாகவும் தெரியவருகிறது. அவர் முழுப்பரீட்சையிலும் வென்று இதே போலி பெயரில் ஒரு ஆட்சியராக வந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் எனத் தோன்றுகிறது. உண்மையில் அப்படி நடந்திருந்தால் நமது அரசு அமைப்புகளில் உள்ள ஊழல்கள் இன்னும் பிரம்மாண்டமான முறையில் வெளிப்பட்டிருக்கும்.
நமது நாட்டில் பட்டப்படிப்பு மதிப்பிழந்து ரொம்ப நாளாகிறது. பல கல்லூரிகளில் மாணவர்கள் முதல் நாள் கட்டணம் கட்டும் போது கல்லூரிக்கு வருவது சரி, அதற்குப் பிறகு வருடம் இருமுறை தேர்வெழுதத்தான் வருவார்கள். பெரும்பாலான கல்லூரிகள் பணத்துக்காக இவர்களை அனுமதிக்கிறது. இது கூட பரவாயில்லை பித்தி போன்றவர்கள் பணமும் செல்வாக்கும் இருந்தால் சான்றிதழ்களைத் தயாரித்து ஒரு பொது நிறுவனத்தில் கூட வேலைக்கு சேர முடியும் என நிரூபிக்கிறார்கள். இங்கு இரண்டு கேள்விகள் தோன்றுகின்றன.
ஒன்று, அரசு வேலைகளில் இன்று பட்டப்படிப்பு மதிப்பெண்களுக்கு எந்த மதிப்பும் இல்லை. தேர்வு, தேர்வுக்கு மேல் தேர்வு என அரசுத்துறைகள் தேர்வு நடத்தி தான் ஆளெடுக்கின்றன. தனியார் நிறுவனங்களும் அப்படித் தான். பல தனியார் வேலைகளில் பட்டப்படிப்பில் பெறும் கல்வி பயன்படுவதில்லை. அந்நிறுவனங்கள் 6இல் இருந்து 12 மாதங்கள் வரை பயிற்சி கொடுத்து தான் பட்டப்படிப்பாளர்களை தமது வேலைக்கு தயாரிக்க வேண்டி உள்ளது. கல்லூரியில் படிக்கும் கணிதம், உயிரியல், வேதியல், இலக்கியம் ஆகியவை யாருக்கும் வேலையில் பயன்படுவதில்லை. இன்றைய சூழலில் நம் படிப்பு என்பது ஒரு மிகப்பெரிய அபத்தம்.
யாருக்குமே இந்த பட்டப்படிப்பிலோ அதில் தரப்படும் மதிப்பெண்களிலும் பயனோ நம்பிக்கையோ இல்லாத பட்சத்தில் இவை தான் எதற்கு? குறைந்த பட்ச பள்ளிப்படிப்போடு நிறுத்திக் கொண்டு 12 அல்லது 13 வயதிலேயே நாமெல்லாம் வேலை பார்க்க தொடங்கியிருக்கலாமே? எதற்கு இருபது வருடங்களை அர்த்தமில்லாத பட்டங்களுக்காக வீணடிக்க வேண்டும்? அரசு பேசாமல் இந்த பட்டப்படிப்புகளை அவசியமற்றவை என அதிகாரபூர்வமாய் அறிவித்து விடலாம். நிறைய நேரமும் பணமும் மீதமாகும்.
லட்சியபூர்வமாய் கல்வியின் பயன்கள் பற்றி நாம் பக்கம் பக்கமாக பேசினாலும் நடைமுறையில் அது வீண் சுமையாகி விட்டது. இருபது வருட உழைப்பு அர்த்தமில்லாத சில காகிதங்களாக மீதமாகும் அவலத்தை ஒவ்வொருவரும் உணர்ந்திருக்கிறோம்.
விலைவாசி உயர்வு காரணமாய் கணிசமானோருக்கு தனியார் வேலை சம்பளம் போதுமாக இருப்பதில்லை. உயரும் விலைவாசிக்கு ஏற்றாற் போல் தனியார் முதலாளிகள் சம்பளத்தை உயர்த்த மாட்டார்கள். ஆனால் அரசு செய்யும். அதனால் தான் அரசு வேலை இன்று அனைத்து தரப்பினருக்கும் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் அரசு வேலையை அடைவதற்கும் நாம் கணிசமான தொகை ஒன்றை பொறுப்பில் இருப்பவர்களுக்கு லட்சமாக தரவேண்டும். எந்த அடிப்படை தகுதியிலும் இல்லாதவர்கள் கூட பத்து இருபது லட்சங்கள் கொடுத்து அரசு வேலையை அடைவதை கண் கூடாகவே பார்க்கிறோம். சம்மந்தப்பட்டவர்கள் மட்டுமல்ல அவர்களை அறிந்தவர்கள் கூட ஊழல் செய்து வேலை வாங்குவதை ஒரு குற்றமாக பார்ப்பதில்லை. அவனுக்கு பணம் இருக்கிறது, வேலை வாங்கி இருக்கிறான், நல்லா வாழட்டும் என்கிற கணக்கில் வாழ்த்துகிறார்கள். இவ்வாறு ஊழல் என்பது நடைமுறை வாழ்வின் பகுதி என்றாகி விட்டபின் நாம் இதனை எதிர்த்து போராடுவதை விட ஏற்றுக் கொண்டு விடலாம். அதாவது தார்மீகமாக அல்ல, லௌகீகமாக, அதிகாரபூர்வமாக. வங்கிகள் கல்விக்கடன் அளிப்பதை அறிவோம். கல்வியோ வீண் என்றாகி விட்ட பின் எதற்கு கல்விக் கடன்? அதற்கு ஊழல் கடன் அளிக்கலாம். வேலை பெற்றபின் சிறுக சிறுக அடைத்து விடலாம். அது போல் அரசும் ஊழலுக்கான அதிகாரபூர்வ முகவர்களை நியமிக்கலாம். இந்த உதவாக்கரை அதிகாரிகளை விட அவர்கள் மக்களுக்கு அதிகம் பயன்படுவார்கள்.
நித்தியானந்தா போல பித்தி மொஹந்திக்கள் நமது அமைப்புகளின் சீர்கேடுகளை வெளிச்சத்துக்கு கொண்டு வர அவசியமானவர்கள். எனக்கு பித்தி மீது எந்த வெறுப்பும் இல்லை. மரியாதையே உள்ளது. அவர்கள் தான் நம் காலத்தின் நாயகர்கள்.
அவரைப் போன்றவர்கள் இன்னும் பெரிதாக ஊழல் செய்து இந்த புரையோடிய சமூக அரசியல் அதிகார அமைப்பின் கேடுகளை வெளிச்சமிட்டு காட்ட வேண்டும் (அவ்வாறு உத்தேசிக்கவிட்டாலும் கூட). நம்முடைய காலத்துக்கு தேவை சமூகப் போராளிகளும் புரட்சியாளர்களும் அல்ல, அரசை அடிக்கடி நெளிய வைக்கிற அதிகாரிகளை அம்பலப்படுத்துகிற பிரம்மாண்ட ஏமாற்றுப்பேர்வழிகள் – அனைத்து தரப்புகளிலும் இவர்கள் வெளிவந்து கொண்டே இருக்க வேண்டும். நம்முடைய புண்ணில் இருந்து வழியும் நிணத்தின் சுவையை நாமே உணரும் காலம் வர வேண்டும். இச்சமூகம் தனது தீமையின் முழுசொரூபத்தையும் நேரில் சந்தித்து தான் அது தான் என ஏற்றுக் கொள்ள தயாராக வேண்டும். ஆயிரமாயிரம் வருட அக்கறையின்மையினால் முரடுதட்டின இந்த இந்திய மத்திய வர்க்கத்துக்கு ஒரு சின்ன அதிர்ச்சி அளிக்க ஒருவேளை அது உதவக் கேடும். ஒருவேளை தான்!
No comments :
Post a Comment